திருவுக்கும் திருவாகிய –பிரவேசம் –
அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ் –
அது தானேயாய் நிற்கப் பெறாதே
பாதகமான இந்த்ரியங்கள் விடாதே அணித்தாய் நின்று
நலிகிறபடியை அனுசந்தித்து அஞ்சி
நம் ஆழ்வார் -உண்ணிலாவில் -பட்ட கிலேசத்தை அடையப் பட்டு
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகைக்கு
மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாகத்
தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்லிக் கொண்டு
சரணம் புகுகிறார் –
————————————————————
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-
திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்த ருடைய சம்பத்துக்கு நிதான பூதையான
பிராட்டிக்கு சம்பத்து ஆனவனே –
தெய்வத்துக்கு அரசே-
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –
செய்ய கண்ணா –
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே –
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-
அழகிய வடிவை உடைத்தாய் –
நிரவதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனே –
லஷ்மீ பதி என்னுதல் –
நித்ய சூரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் -என்னுதல் –
கை சலியாமல் திரு வாழியைக் கையிலே பிடிக்க வல்லவன் -என்னுதல்
இவை இ ரே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்
உலகுண்ட வொருவா-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே
தளர்ந்தார் தாவளம் ஆனவனே –
திரு மார்பா –
உன்னைத் தளர்ந்தார் தாவளம் ஆக்குமவளைத்
திரு மார்விலே உடையவனே –
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால்-
ஏக விஷயத்தில் சேஷத்வம் குலைந்தது கிடாய் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து
உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை –
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது –
ரஷகனான உன்னில் காட்டிலும்
பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே
ஒருவர் இருவர் இன்றிக்கே
சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள
ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து
என்னை நெருக்கி
ஒரு ஷணமும் கால் வாங்குகிறன இல்லை –
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் –
என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று
இவை தனித் தனியே அலைத்து நெருக்க
அவற்றுக்கு அஞ்சி வந்து
சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே
சரணம் புகுந்தேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –
—————————————————————–
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2-
பந்தார் மெல்விரல் –
தன்னொடும் உடனே வந்தாய் –
சர்வேஸ்வரன் உடன் கலக்கும் போதும் அகப்பட
ஒரு ஷணமும் விடாதே
பந்தை உடையளாய்
அப்பந்தும் உட்பட பொறாத விரல்களை உடையளுமாய் –
நல்வளைத் தோளி பாவை பூ மகள் –
தர்ச நீயமான வளைகளை உடைய
திருத் தோள்களை உடையளாய்
தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடு கூடி வந்தாய் –
அரவிந்தப் பாவையும் தானும் -என்கிறபடியே
சபரிகரனாய் கொண்டாய்த்து வந்து புகுந்தது –
என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ்வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி
விலக்காமை உண்டானவாறே
ஆவா சந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே
வந்து புகுந்தான் ஆய்த்து-
மால் வண்ணா –
கறுத்த நிறத்தை உடையவனே –
மழை போல் ஒளி வண்ணா –
கறுத்து இருக்கை அன்றிக்கே
மேகம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே –
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே –
ஆர்த்த ரஷணத்துக்கு ஈடான சர்வஞ்ஞத்தை உடையவனே –
இத்தால்
வேதார்த்த தத்வ ஞானத்தை உடையவனே -என்றபடி –
நெடுமாலே –
அவ்வேதங்களாலே சொல்லப் படுகிற ஆதிக்யத்தை உடைய சர்வாதிகனே –
அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் –
வேறேயும் சில ரஷகர் உண்டாய்
அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகள் ஒழிய
வேறு ஒரு புகல் உடையேன் அல்லேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ
தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
————————————————————-
நொய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-3-
நொய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற
திவ்ய ஆயுதங்களை உடையவனே –
நொய் -கூர்மை
ஆர்தல் -மிகுதி
கூர்மை மிக்க திரு வாழி-
அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை உடையவனே –
அடியேனைச் –
தேவருக்கு யோக்யனாய் இருக்கிற என்னை –
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் –
லோகத்திலே செய்யாத வற்றை எல்லாம் செய்தாய் –
உன் திருவடிகளில் கைங்கரியத்தை
நினையாத லோகத்திலே வைத்தாய் –
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து -பொய்யால் ஐவர் என் மெய் குடியேறப்-
ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும்
கிட்ட அரிய விஷயங்களை லபிக்கைக்கும் ஆக
க்ருத்ரிம ரூபத்தாலே
நான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி
என் சரீரத்திலே வந்து குடி புகுந்தன வாய்த்து —
போற்றி வாழ்வதற்கு அஞ்சி-
அவற்றை ஆராதித்துப் பின் சென்று
வர்த்திக்கும் அதற்க்கு அஞ்சி
நின்னடைந்தேன்-
நிருபாதிக சேஷியான உன்னைக் கிட்டினேன் –
ஐயா-நின்னடி யன்றி மற்று அறியேன்-
நிருபாதிக பந்துவே –
உன் திருவடிகளை ஒழிய
வேறு ஒரு புகல் உடையேன் அல்லேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே-
நிருபாதிக பந்தம் தோற்ற
வந்து நிற்கிறவனே –
———————————————————————
பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மது சூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதி வராஹம் முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-4-
பரனே –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவனே –
பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே-
பஞ்சவன் என்றும்
பவுழியன் -என்றும்
சோழர்கள் பேர் –
ஒரோ ராஜ்யங்களுக்கு கடவராய்
ஐஸ்வர்ய பிரதானராய் இருக்கிற ராஜாக்கள்
தம்தாமுடைய அபிமத அர்த்தமாக வந்து ஆஸ்ரயித்து
அவை பெற்றுப் போம்படிக்கு ஈடாக நிற்கிற பரனே –
அவர்களுக்கு ஆஸ்ரயநீயனாய் உள்ளவனே –
மாதவனே –
அவர்கள் உடைய அபிமதங்களை தலைக் கட்டிக் கொடுப்பிக்கும்
புருஷகாரத்தை உடையவனே –
மது சூதா-
அவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்கு ஈடான
விரோதி நிரசன சீலன் ஆனவனே –
மற்றோர் நற்றுணை -நின்னலால் இலேன் காண்-
தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும்
துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை உடையேன் அல்லேன் –
நரனே நாரணனே –
ஆஸ்ரித அர்த்தமாக
அவர்கள் உன்னை பெறுகைக்கு பண்ணும் தபஸ்சை
நீ அவர்களை பெறுகைக்காக பண்ணுமவனே-
திரு நறையூர் நம்பீ –
திரு நறையூரிலே வந்து நிற்கிற
கல்யாண குண பூரணனே –
எம்பெருமான்-
அங்கே பிராட்டியும் நீய்மாய் நிற்கிற நிலையைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே-
உம்பர் ஆளும் அரனே –
மேல் உண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு
அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரித தேவா ருத்ரோ ப்ரஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -ஏன்னா நின்றது இ றே –
ஆதி வராஹம் முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே
வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய்
வந்து அவதரித்து
கண்ணுக்கு இலக்காய் நின்று நோக்கினவனே –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அது தன்னை பழம் கதை யாக்கி
இப்போது
திருவழுந்தூரிலே வந்து நிற்கிறவனே –
—————————————————
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டான் உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்ரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்று எனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-5-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
ஹிரண்யாஸூரன் ஆனவன் வீர ஸ்வர்க்கத்துக்கு
ஏறிப் போம்படியாக
கொடிய யுத்தத்திலே
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –
அஹங்கார மமகாரங்களாலே தடித்த வடிவை உடையானவனுடைய மார்வைச் சென்று பற்றி
இரண்டு பிளவாம் படி பண்ணி –
இத்தால் அது சிறுக்கன் அறியச் செய்த செயல் இ றே-
அங்கன் உபகார ஸ்ம்ருதியும் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்கும்
உதவினபடியைச் சொல்லுகிறது –
பண்டான் உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா
பண்டு ஆன் -பசுக்களை உய்ய
முன்பு பசுக்களும் இடையரும் பிழைக்கும் படி கைக்கு எட்டிற்று
ஒரு பெ ரு மலையை எடுத்து ரஷித்தநீர்மையை உடையவனே –
பரனே-
இப் பிரஜா ரஷண தர்மத்திலே உனக்கு
அவ்வருகு ஒருவரும் இல்லாதபடி இருக்கிறவனே –
பவித்ரனே –
அசுத்தரை சுத்தி யாக்கும் சுத்தியை உடையவனே –
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் –
இக்கலி யுகத்தின் உடைய தன்மையை அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வை முக்யத்தைப் பண்ணுவித்து –
விஷய பிராவண்யத்தைப் பிறப்பித்து –
முடிக்கும் சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –
கருமமாவதும் என்று எனக்கு அறிந்தேன்-
எனக்கு ஹிதமாவதும்
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கும் அதுவே
என்று அறிந்தேன் –
அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன்
அண்டத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –
அன்றிக்கே –
இடையருக்கு நிர்வாஹகன் ஆனவனே -என்றுமாம் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ பிரகலாதனுக்கும்
இடையருக்கும்
பசுக்களுக்கும்
உதவினபடியே பிற்பாடருக்கும் உதவுகைகாக
அன்றோ இங்கு வந்து நிற்கிறது –
————————————————
தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச்சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேதா துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-
தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச் –
அறத் தோயாத இனிய தயிரையும் நெய்யையும்
பொருந்தி அமுது செய்ய –
சொன்னார் சொல்லி நகும் பரிசே-
வாய்க்கு போந்தார் போகும் படி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே
மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ -என்றும்
ஒன்றை இட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்றும்
நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தான் ஆய்த்து –
பெற்றதாயால் ஆப்புண்டு இருந்து –
யசோதை பிராட்டியால் கட்டுண்டு –
அழுது ஏங்கும் தாடாளா –
பிரதி கிரியை அற்று போக மாட்டாதே
நின்ற வேண்டப் பாட்டை உடையவனே –
தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்-
பூமி அந்தரிஷங்களில் உள்ளார்
ஸ்வ யத்னத்தால் காணப் பார்க்கும் அன்று
அவர்களுக்கு தூரஸ்தன் ஆனவனே –
நீர் இங்கனே பதறுகிறது என் –
காலம் வந்து கார்யம் செய்ய வேண்டாவோ என்ன –
கிரேத திரேதா துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் –
கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ உனக்கு –
காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பாடருக்கும்
இழவாமைக்கு அன்றோ நீ இங்கு வந்து நிற்கிறது –
———————————————————–
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —7-7-7-
கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் –
எல்லாரும் ரஷை பெற்று ஜீவிக்க வேணும் என்று இருக்கிற
இவன் பக்கலிலே துர் அபிசந்தியைப் பண்ணினான் ஆய்த்து-
கம்சன் -அவன் பண்ணின அபிசந்தி
அவன் தன்னோடு போம்படி கோபித்து
கம்சனானவன் பீதனாம் படி முனிந்தாய் -சீறினாய் –
கார் வண்ணா –
கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையவனே –
கடல் போல் ஒளி வண்ணா –
கடல் போலே சர்வ பதார்த்தங்களுக்கும் ரஷகனாய்
அத்தோடு ஒத்த நிறத்தை உடையவனே –
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் –
அசூராவேசத்தாலே மிருத்யு போலே வந்த ருஷபங்கள்
ஏழின் உடைய கொம்பையும் முறித்து
அவற்றை ஜெயித்தாய் –
எந்தாய்-
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாய்-
அந்தரம் ஏழும் ஆனாய் –
உபரிதன லோகங்கள் ஏழையும்
உடையவன் ஆனவனே –
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால்
ஆற்ற ஒண்ணாத படியாக போகங்களை
புஜிக்க வேண்டும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க
அவர்களுக்கு அஞ்சி
உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
—————————————————————————
நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்து அக்காவலைப் பிழைத்துக்
குடிபோந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —7-7-8-
நெடியானே-
சர்வாதிகனான சர்வேஸ்வரனே –
கடியார் கலி நம்பீ –
பரிமளத்தை உடைத்தாய்
அரண் பெற்று இருக்கிற –
ஆர் கலி உண்டு -கடல்
அதிலே சாய்ந்து அருளின
கல்யாணகுண பூரணனே –
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்து –
பரம பதத்தே இருந்து
அங்கு உள்ளார் நினைக்கும் நினைவை
இங்கேயே இருந்து உன்னையே நினைத்து இருக்கும் என்னை –
நெஞ்சிலே நன்மை இன்றிக்கே
பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற
பருவத்தை உடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –
அக்காவலைப் பிழைத்துக் குடிபோந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி –
எனக்கு கூறையும் சோறுமாய் இருக்கிற
இத் திருவடிகளைத் தந்து அருளி –
தோட்டமில்லவள்-என்கிறபடியும்
எல்லாம் கண்ணன் -என்கிறபடியும் –
கூறை சோறாக நினைத்து இருப்பது இவை யாய்த்து இவர் –
அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ
ராஜபுத்ரனாய் பிறந்து
முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாக இருக்கிற என்னை
நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம்படி
கடற்கரை வெளியிலே வந்து நின்றாப் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்டவன்று
வந்து கிட்டலாம் படி அன்றோ –
—————————————————————
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தான் வென்று குமைத்துப்
போவார் நான் அவரைப் பொறுக்கிலேன் புநிதா புட்கொடியா நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-9-
கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் –
நீ சேஷியாமாவது தவிர்ந்து
இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து
என் சரீரத்திலே குடி புகுந்தது –
கூறை சோறு இவை தான் வென்று குமைத்துப் –
நான் கூறையும் சோறுமாக நினைத்து இருக்குமது ஒழிய
வேறு சிலவற்றைத் தா என்று என்னை நெருக்கி
ஒரு ஷணமும் கால் வாங்குகிறிலர்கள்-
நான் அவர்கள் நலிவைப் பொறுக்க மாட்டுகிறிலன்-
புநிதா –
என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை உடையவனே –
புட்கொடியா –
இவை எல்லாவற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே –
நெடுமாலே-
ஆஸ்ரிதர் பக்கல் மிக்க வ்யாமோஹத்தை உடையவனே-
தீவாய் நாகணையில் துயில்வானே –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனே –
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி
சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த வாழ்வான் மேலே சாய்ந்து அருளினவனே-
திருமாலே –
அப்படுக்கையில் சாய்வது
இருவருமான சேர்த்தியோடே யாய்த்து –
இனிச் செய்வது ஓன்று அறியேன் ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய்-
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன் –
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே
கிருபையைப் பண்ணி அருள வேணும் –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
கிருபை பண்ணுகைக்கு வந்து நிற்கிற இடம் அன்றோ இவ்விடம் –
———————————————————————–
அன்னம் மன்னு பைம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலிநாடன் மங்கைக் குலவேந்தன்
சொன்ன விந்தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே —–7-7-10-
அன்னம் மன்னு பைம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள் நித்ய வாஸம் பண்ணுகிற
பரந்த பூவை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று ஊடினால்
உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்க்கு வேண்டும் பரப்பு போந்து இருக்குமாய்த்து
பூவின் பெருமை –
அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் —
திரு அழுந்தூரிலே மேற்கு பார்ச்வத்திலே
நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை –
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலிநாடன் மங்கைக் குலவேந்தன் –
ஒரு நாளும் அழியாத மிடுக்கை உடைத்தான
தோள்களை உடைய ஆழ்வார்
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார் –
திருமங்கையில் உள்ளாருக்கு பழையதாக
ராஜாவாக உள்ளார்
சொன்ன விந்தமிழ் –
சொன்ன இனிய தமிழான –
நன் மணிக் கோவை-
இந்த ரத்ன மாலையை –
தூய மாலை இவை பத்தும் வல்லார் –
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப்பத்தையும்
அப்யசிக்க வல்லவர்கள் –
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –
சில காலம் ராஜாக்களாய்
லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக் கீழே இருந்து
நிரவதிக ப்ரீதி உக்தராகப் பெறுவார் –
இந்த்ரிய அவஸ்தையை அனுசந்தித்து அஞ்சினவர்
இத்தைப் பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் -பாகவத சேஷம் ஆக்குகைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்தத்திலே புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-
ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –
—————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply