ஆண் பாவனையில் -பர உபதேச பதிகம்
அதாள பாதாள த்தில் இருந்து ஹிமாச்சல உச்சிக்கு வந்து அருளிச் செய்கிறார் இதில்
கீழே பாவியேன் ஆவியை அடுக்கின்றது கிலேசம்
இங்கு உய்யும் வகை கண்டேன் -என்று களிக்கிறார் -அதுக்கு சங்கதி –
தொண்டீர் உய்யும் -பிரவேசம் –
ஆதித்யனும் வந்து உதிக்கிறிலன்-
நாழிகையும் கல்பகத்தில் காட்டிலும் நெடிதாய்ச் செல்லா நின்றது –
அநுகூல பதார்த்தங்களும் பாதகமாய் நின்றன
ஒரு துணை காண்கிறிலேன் –
சத்தையும் கூட அழியும் அளவாகா நின்றது –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுமோ -அறிகிறிலேன் -என்றார் கீழில் திரு மொழியில் –
சம்சார ஸ்வ பாவத்தாலே இவை தான் ஒருபடிப் பட்டு நில்லா விறே-
ஆகையால்
ஆதித்யனும் ஒரு கால் வந்து உதிக்கவும் கூடும் இறே –
இவை ( ஆதித்யாதிகள் -பாதகங்கள் எல்லாமே ) தான் அகஞ்சுரிப் பட்டவாறே
( புர பிரான் ) சொன்ன வார்த்தையும் செவிப்படும் –
அவன் வந்திலன் என்று நீர் நம்மைச் சொன்னவிடம் தப்பைச் சொன்னீர் –
நாம் திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறது ஏதுக்காக-
ஆஸ்ரித அர்த்தமாக அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது –
நமக்காக என்று நீர் அறிந்திலீர் ஆகில் நமக்கு ஒரு குறைகளும் இல்லை –
நினைத்த அன்றே எல்லாம் செய்கைக்கு ஒரு தட்டும் இல்லை என்று இருந்தீர் ஆகில்
இனி அவ்வருகு உள்ளவை எல்லாம் தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்க அமையாதோ என்று
அவன் சமாதானம் பண்ண –
சமாஹிதராய்
ஆழ்வார் தம் இடையாட்டத்தில் தாம் கை வாங்கி இருந்தார் –
அவனோ வந்து உதவுகிறிலன்-
இது எவ்வளவாய் வந்து தலைக் காட்டுகிறதோ -என்று
ஒரு நீர்ச் சாவியாய் கிடக்கிற அநுகூல வர்க்கத்தைப் பார்த்து –
நீங்கள் இங்கனே நோவு பட வேண்டா
நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு உண்டு -என்ன –
அதாகிறது
சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்-
போருங்கோள் என்கிறார் –
துன்பத்தில் தமியேன் என்றவர் நல்லது கண்டதும் இனியது தனி அருந்த மாட்டாரே –
கண்டு கொண்டுகந்த -கண்ண புரம் நாம் தொழுதுமே -என்கிறார்
——————————————-
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டு கொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-
சிறிதே முனிந்த திரு மார்பன்-அல்பம் கோபித்த வீர ஸ்ரீ உடையவன்
நோக்கம் கண்டான்–ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக பிராட்டிமார் கடாக்ஷம் –
தொண்டீர் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் என்று-( 3-3-1 )
பாரித்து கொண்டு இருக்கிறவர்களே –
உய்யும் வகை கண்டேன் –
அசந்நேவ ச பவதி-(தைத்ரியம் ) -என்னும் நிலை கழிந்து
அவனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் –
அது எது என்றால் –
கண்ண புரம் நாம் தொழுதுமே –
துளங்கா வரக்கர் துளங்கா முன் –
இதுக்கு முன்பு அச்சம் இருக்கும் படி
புதியது உண்டு அறியாத ராஷச ஜாதியானது அஞ்சும்படியாக –
திண் தோள் நிமிரச் சிலை வளையச் –
பிரதி பஷம் என்றால் சலியான தோளானது நிமிரும் படியாகவும்
வில்லானது வளையும் படியாகவும் –
சிறிதே முனிந்த –
ஜகத் உப சம்ஹாரத்தோடே தலைக் கட்டும் அளவன்றிக்கே
ராஷச ஜாதி அளவிலே முனிந்தான் ஆயிற்று –
சங்கல்ப்பத்தால் இவை எல்லாம் உண்டாக்குமவன் சீறினால்
பின்னை எல்லாமாக ஒன்றாக அழியும் இத்தனை –
திரு மார்பன் –
வீர ஸ்ரீக்கு குடி இருப்பான மார்வை படைத்தவன் –
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
அச் சேர்த்தியிலே அடிமை செய்ய வேண்டும்
என்னும் அதுவும் உண்டாகப் பெற்றதாயிற்று –
(மிதுனத்தில் கைங்கர்யம் என்றும்
புருஷகார பாவமும் உண்டு என்றும் இரண்டு நிர்வாகங்கள் )
வண்டார் கூந்தல் மலர் மங்கை-
தொழுவார் குற்றம் காண்கைக்கு அவசரம் இல்லாத படி
மயிர் முடியாலே அவனை துவக்கும் பெரிய பிராட்டியார் –
வடிக் கண் மடந்தை –
ஒரு மயிர் முடி வேண்டாதே
தன் நோக்காலே
அவனை ஓடி எறிந்திட்டு வைக்கும்
கண்ணை உடைய ஸ்ரீ பூமிப் பிராட்டி –
மா நோக்கம் கண்டான் –
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி
உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –
கண்டு கொண்டுகந்த -கண்ண புரம் நாம் தொழுதுமே –
அவனும்
நாமும் இவர்களும் சேர வர்த்திக்கைக்கு
ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த
திருக் கண்ண புரத்தை
தொழுவோம் –
———————————————————–
அது பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செயல் அன்றோ –
நாம் அதற்கு பிற்பாடர் ஆனோமே -என்ன
அது வேண்டா –
அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார் –
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-2-
கருந்தாட் சிலை-வைரம் பாய்ந்த -அசைக்க மாட்டாத திடமான சிலை –
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற வன்று புள்ளூர்ந்து –
சர்வதா நாம் அனுகூலித்தாலும்
பொருந்தாமையிலெ நிலை நின்ற
ராஷச ஜாதியானது யுத்தத்திலே முடியும்படியாக
திருவடியை மேல் கொண்டு –
(அன்று நேர்ந்த நிசாசரர் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்
ந மே த்வேஷ்யா ந ப்ரியா-சமோஹம் சர்வ பூதேஷு என்று அவன் இருந்தாலும்
வெட்டிக் கொண்டு போவார்களும் உண்டே -ந நமேயம் என்று இருப்பார்கள் அன்றோ
சரணம் அடைந்தவர்களின் வாசி பார்க்காமல் -சமமாக ப்ரீதியுடன் பார்க்குமவன் )
பெரும் தோள் மாலி தலை புரளப்
மிக்க தோள் வலியை உடைய மாலி தலையானது
புரளும்படியாக
பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை -இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக்-
அவனை ஒழிந்த மற்று உள்ள ராஷசர்கள்
புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு
போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை
கையிலே பிடித்தவனுடைய ஊரான
திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –
————————————————————
முதல் பாட்டில் ப்ரஸ்துதமான ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது-
கருந்தாட் சிலை-கீழே
இதில் கல்விச் சிலை
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-
வல்லி இடையாள் பொருட்டாக -ஸீதா திருக்கல்யாணத்தை பொருட்டே அனைத்து சேஷ்டிதங்களும்
ஸீதா மத்யே ஸூ மத்ய -பிரணவமே நடந்து காட்டியதே –
இடையே இல்லாத பிராட்டி இடையிலே சென்றாள் -என்றபடி
மதிள் நீர்-நீரே துர்க்கமாக
வெஞ்சமத்துள்-ககனம் -கடல் -ராம ராவண யுத்தம் -இவற்றுக்கு இவையே ஒப்பு
வல்லாளரக்கர் குலப்பாவை -தாடகை
கல்விச் சிலை-தனுர் வித்யை கற்கும் பொழுது
தனுர் வித்யை காந்தர்வ வித்யை ஆயுர் வித்யை அர்த்த சாஸ்திரம் உப அங்கங்கள்
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை –
கொடி போன்ற இடையை உடைய பிராட்டிக்காக கடலை
அகழாக உடைத்தாய்
மதிளை உடைத்தான இலங்கையில் உள்ளாருக்கு
நான் நியாமகனல்லேனோ
என்று இருக்கிறவனை –
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் –
தேரை அழித்து-வில்லை முறித்து -அவன் முதுகு காட்டும்படி பண்ணி
எளிவரவு படுத்தின படியை சொல்லுகிறது –
யுத்தத்தில் இன்று போய் நாளை வா -என்றான் இறே-
நீ இளைத்த சமயத்தில் உன்னை அழிக்கை போராது காண் –
ஆஸ்வாஸ்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை
ஆஸ்வசிப்பிக்குமா போலே
நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இறே –
(ராவணன் இடம் தோற்கும் பாக்யத்தை ராமன் இழந்தான் –
வெறும் கை வீரனாக இருக்கும் வாய்ப்பை இழந்தான் ராவணன் )
பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் மேல் அருளுகிறார்
(ஊண ஷோடஸ வருஷ –12 வயசிலே -இன்னும் 16 ஆகவில்லை என்றது –
யுத்த யோக்யதைக்கு 16 வயசு ஆக வேண்டுமே )
வல்லாளரக்கர் குலப்பாவை வாட –
வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக
கண் காட்டி யானவள் முடியும்படியாக –
(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –
கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ )
முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
ருஷியினுடைய யாகத்தை –
ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –
——————————————————————————–
சக்ரவர்த்தி திரு மகனின் வீர ரஸா அனுபவம்
அவ்வளவு அன்றிக்கே
கடலை வற்ற அடிக்க -கோல் எடுத்தால் தான் ஆடும் -தொடுத்த சிலை –
குரங்கைக் கொண்டு பணி கொள்வது -கல்லை மிதக்கப் பண்ணுவதான-
பரத்வ செயல்கள் -ஜடாயு மோக்ஷம் -விபீஷண பட்டாபிஷேகம் போல் இவையும்
அத்புத செயல்கள் -இவற்றில் ஈடுபடுகிறார்
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-4-
கொல்லை விலங்கு-அரண்யங்களில் உள்ள கிளைகளில் தாவித் திரியும் குரங்குகள்
தொல்லை-பழையதான
மல்லை முந்நீர் அதர்பட –
மல்லை -என்று மிகுதி
ஜல ராசியாய் மூன்று வகைப் பட்ட ஜலத்தை உடைத்தான
(ஆற்று நீர் வேற்று நீர் ஊற்று நீர்கள் )
கடலானது வழி பட –
அப்ரமேயோ மஹோததி -என்று ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது வழிப் பட –
வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்-
தர்ச நீயமான வரிகளை உடைத்தாய்
பிடித்த பிடியிலே எதிரிகள் அஞ்சும்படியான வெம்மையை
உடைத்தான வில்லை வளைத்து –
கொல்லை விலங்கு பணி செய்யக் –
ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே
என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர்
செய்யக் கடவ கைங்கர்யத்தை
இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –
கொடியோன் இலங்கை புகலுற்றுத்-
அவன் பண்ணின க்ரௌர்யத்தை திரு உள்ளத்தாலே
முன்னோட்டுக் கொண்டு கொடியோன் என்கிறார் –
ஜனகனும் ஜனநியும் ஓர் இடத்தில் இருக்கப் பொறாத க்ரௌர்யம் இறே –
இலங்கை புகலுற்று–மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்ய-கல்லால் கடலை அடைத்தானூர்-
தொல்லை மரங்கள் புகப் பெய்து –
இதுக்கு முன்பு பறியுண்டு அறியாத பழைய மரங்கள் அடைய
பறியுண்டு போம்படி அதிலே பிரவேசிப்பித்து
துவலை நிமிர்ந்து வான் அணவக்-
அடைக்கிற போதை திவலைகள் ஆனவை கிளர்ந்து
ஆகாச அவகாசத்தை
இடம் அடைக்க –
கல்லால் கடலை அடைத்தானூர் –
நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு
கடலை அடைத்த சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான
கண்ண புரம் நாம் தொழுதுமே –
—————————–
அத்புத ரஸா அனுபவம் கீழ்
அவ்வளவு அன்றிக்கே
சக்ரவர்த்தி ரௌத்ர ரஸம் அனுபவிக்க கோலி
முன்பும் பின்பும் உண்டான வித்யா பிரதான -ஹம்ஸ -ஹயக்ரீவ அவதாரங்கள் -சாந்தி ரஸ
போக பிரதான கிருஷ்ண-காமன் பயந்தான் -ஸ்ருங்கார ரஸம் சேர்த்து அனுபவிக்கிறார்
ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால்
தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று-
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—-8-6-5-
உலகு சூழ்ந்த -பாட பேதம் –
ஆமையாகி யரியாகி அன்னமாகி –
கூர்ம ரூபமாய்
ஹயக்ரீவமாய் -சிம்ஹம் என்றுமாம் –
இழந்த வேத சஷூஸ்சை மீட்டுக் கொடுக்கைக்காக அன்னமாய் –
அந்தணர் தம் ஓமமாகி –
ப்ராஹ்மணர் ஹவிஸ்ஸூகளைக் கொள்வான் தானே இறே-
ஊழியாகி –
காலமே சேஷித்து இருந்துள்ள காலமாகி –
ஒருவனும் இல்லாத அன்று தான் உளனாய் இருக்கும் இறே –
(ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லாத அன்று )
உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் –
ஓங்கின திரைகளை உடைத்தான உவரியான கடலாலே சூழப் பட்டு இருப்பதுமாய்
ஒருவராலும் பிரவேசிக்க அரிதான மதிளை உடைத்தான –
உலகு -என்ற பாடம் ஆகில் –
லோகத்தை சூழ்ந்த பெரிய கடல் என்றபடி –
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து-
இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய தலைகளை அறுப்பது
தோள்களை துணிப்பதாக கொண்டு
போது போக்காக கொன்ற படி –
முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
நாட்டைத் தன் வடிவாலே பகட்டித் திரிகிற காமனுக்கும்
உத்பாதகனான
கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசம் –
—————————————————————-
கீழ் பாட்டுக்களில் தொண்டர்களுக்கு உபதேசம்
இனி பிரஸ்துதமான அவதார ரசங்களை தமது நெஞ்சுக்கு உபதேசம் –
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-6-
செந்தீ -முன்பு வெளுத்து -ராவணனுக்குப் பயந்து –
ஆகவே செந்தீ என்று விசேஷணத்துடன் அருளிச் செய்கிறார்
வாணற்க்கு அருள் புரிந்து-கிருபையால் இரண்டு கரங்களை விட்டு வைத்தான்
வருந்தாது இரு நீ மட நெஞ்சே –
பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து
நாம் என் படக் கடவோம் என்று கிலேசியாதே
நிர் பயமாய் இருக்கப் பார் –
சாதுவான நெஞ்சே –
உன்னையே பார்த்து
பகவத் பிரபாவம் ஒன்றையும் பாராத நெஞ்சே –
(முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே )
நம் மேல் வினைகள் வாரா –
பாபங்களை கூடு பூரித்து வைத்து வருந்தாது இருக்கும் படி எங்கனே -என்னில்
நாம் பண்ணினவை அன்றோ -என்று
அவை நம் பக்கல் வந்து கிட்ட வற்றோ
ந்யஸ்த பரரை நலிய மாட்டா விறே-
(புண்ய பாபங்கள் ஈஸ்வர ப்ரீதி அப்ரீதி காரியமே -தானே வாராவே )
நயவேன் -இத்யாதி -முதல் திருவந்தாதி -64
ஆரே இத்யாதி -மூன்றாம் திருவந்தாதி -27-சொல்லிக் கொள்வது –
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–முதல் திருவந்தாதி-64–
ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —மூன்றாம் திருவந்தாதி –27-
அவன் எறட்டுக் கொண்டு போக்க எங்கே கண்டோம் என்னில் –
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் –
பிராட்டி தன் பிரதி பந்தத்தை போக்குகைக்காக
தான் யத்தனித்தது உண்டோ –
(சொல்லினால் சுடுவேன் -அது ராமன் வில்லுக்கு மாசு ஆகுமே )
பிரதிபந்தம் பிரபலமான தனையும் அவனுக்கு கார்யம் செய்தோமாம் படி என்றோ அவன் படி
மால்யவான் போல்வார் சொன்ன ஹிதத்துக் கேளாதே
ராஷசர் உடைய இலங்கையை –
செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள் –
முன்பு ராவண பயத்தாலே பாகாதிகளுக்கு (தளிகைப் பண்ண வேண்டும் அளவு மட்டுமே )
வேண்டுவது சஞ்சரித்து
உடம்பு வெளுத்து இருக்கக் கடவ
அக்னி தன்னிறம் பெற்று புசிக்கும் படியாக
சிவந்து -சீறி-
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து –
அநேகம் தோள் படைத்தோம் என்று அபிமாநித்து இருக்கிற
பாணன் உடைய தோள்கள் ஆயிரத்தையும் துணித்து
அவனுக்கு தேக யாத்ரை நடத்தும்படியாக
இரண்டு கையைக் கொடுத்தான் ஆயிற்று –
பின்னை மணாளனாகி –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் –
முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –
——————————————————–
துஷ்டமான ஒரு யானையைக் கொன்றதை கீழே அருளிச் செய்து
அந்த பிரசங்கத்தில்
அனுகூலமான யானையை-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்ததையும்
ராவணனை நிரசித்து ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பட்டாபிஷேகம் செய்து அருளியவற்றையும் அனுபவிக்கிறார்
இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை யார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-
கலைமா–கலை மான் -மாய மான் -மாரீசன் –
இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு –
இலைகளால் மிக்கு இருப்பதாய்
பரப்பு மாறப் பூத்து
தர்ச நீயமான பொய்கையிலே போய் புக்கு
ஒரு ஜல சரசத்வத்தாலே நெருக்குண்டு –
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
மதித்திக் கொடு திரிகிற ஆனையானது
விழுக்காடு அறியாதே வேற்று நிலத்திலே புக்கு அகப்பட்டு
தன் வியாபாரம் அற்று முதலையினுடைய வ்யாபாரமேயாய்
அத்தாலே நடுங்கிக் குலைய
அவ்வஸ்தையிலே வந்து உதவினான் –
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி –
ராவணன் பண்ணின பிராதி கூல்யம்
தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –
முன் -கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு
ஹேதுவாய்க் கொண்டு
வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –
—————————————————
கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு
திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம் சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று
பிராப்ய ஆபாசங்களையும் விட்டு சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –
எனக்கு அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே
சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை
உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்
(கீழே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் 16000 தேவ வருஷம் போராடி –
நாமும் சம்சார சாகரம் உண்டே -ஐந்து இந்திரியங்கள் ஐந்து முதலைகள் -ஜனனம் மரணம் -அநாதி காலம் புரிய வைக்க –
கிலேசப்பட்டு ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு த்வரித்து வந்து உதவியதை அருளிச் செய்து
ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி –
முன்பே வந்தால் ஆணை இட்டு விலக்குவார்களே –
வாய் வார்த்தையாகவே சர்வம் கிருஷ்ண மயம் சொன்னாலும் யானே என் தனதே என்று அன்றோ இருக்கிறோம்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -இத்யாதி –
ப்ராப்ய ஆபாசங்களாகத் தோற்றும் அனைத்தையும் விட்டு சரண் அடைந்த பின்பு உதவியது
எனக்கு அவ்வளவும் இல்லையே -அஹங்காரம் ஒட்டிக் கொண்டு ஆபாசங்களையும் விடாமல் இருக்க –
சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -நின்றவா நில்லா ஸ்வ பாவமாய் இருக்க -எங்கனம் வந்து உதவுவான்
பாஞ்சாலிக்கு விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் காலாலும் கையாலும் கொன்று நின்ற கிருஷ்ணன் படி
அதுவாய் இருக்க -பூதனாதிகளும் இவளுக்கு விரோதி என்றே திரு உள்ளம் –
ஆபத்தில் புடவை சுரக்கவும் -செற்றாரை நிரசிக்கவும் இவன் வளர்ந்து இருக்க வேண்டுமே –
இதனால் உனக்கும் அருளுவான் என்று திரு உள்ளத்தைத் தேற்றுகிறார் இரண்டு பாட்டுக்களாலும் –
விரோதி நிரசனம் ஸ்வாபாவிகம் -அவனுக்கு என்கிறார் –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பல பால்ய சேஷ்டிதங்களை அருளிச் செய்கிறார் இதில் )
மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—8-6-8-
யரும் துயர் -அனுபவித்து போக்க ஒண்ணாத துயர்
காலார் மருதும்-இரண்டு வேரூன்றி இருந்த மருத மரங்கள்
கழுது-பூதனை
கழுதை -தேனுகாசுரன்
மல்லர்-விசேஷணம் வைக்க வேண்டாதபடி க்ரூரர் –
மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ –
முன்பு பண்ணின பாபங்களை அனுசந்தித்து
என் படக் கடவோம் -என்று
பிச்சேறின நெஞ்சே
அனுபவித்து தலைக் கட்ட ஒண்ணாத துக்கங்களிலே நீ கிலேசியாது இரு –
(மனம் – அசேதனம் -சேதன சமாதியில் பேசுகிறார் -மனம் சிந்தனைக்கு உண்டான கருவியே )
(அவனுக்கு நேரே விரோதிகள் இல்லையே
ஆஸ்ரிதர்கள் வயிறு எரியும் படி அன்றோ அவன் படி
பாஞ்சாலி விரோதிகள் போல் ஐந்து இந்த்ரியங்களால் வரும் விரோதிகளையும் போக்கி அருளுவான் )
என் கொண்டு வருந்தாது இருப்பது என்றால் –
வலி மிக்க காலார் மருதும் காய் சினத்த கழுதும் கதமாக் கழுதையும் –
அவன் படி இது அன்றோ –
மிக்க பலத்தை உடைத்தாய்
வேரூன்றி இருந்து உள்ள மருதும்-
மிக்க சீற்றத்தை உடைத்தாய் இருக்கிற பூதனையும் –
(காய்தலும் கோபம் சினமும் கோபமும் -மிக்க கோபம் என்றபடி )
கோபத்தை உடைத்தாய் இருந்துள்ள குதிரையும் –
கழுதையும் –
(பூதனை முதலில்
கத மா -கேசி இறுதியில் வந்த விரோதிகள்
நாரதர் பயப்படும் படி அன்றோ கேசி
அபதானங்கள் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய படியே அருளிச் செய்கிறார் -க்ரமம் படி அல்லவே )
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து —
பெரிய வடிவை உடைத்தான வ்ருஷபங்களும்
மதத்தை உடைத்தான ஆனையும் –
மலை துள்ளினால் போலே கிளர்ந்து வருகிற மல்லர் உடைய பிராணங்களும் –
இவற்றை அடைய நிரசித்து –
(விசேஷணம் மல்லருக்கு பாசுரத்தில் இல்லா விட்டாலும் வியாக்யானத்தில் மல்லருடைய குரூரம் காட்டி அருளுகிறார் )
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
முலை வரவு தாழ்ந்தது என்று சீறி நிமிர்த்த
திருவடிகளுக்கு
இலக்காய் சகடாசுரன் துகளாய்ப் போம்படி பண்ணினவன் –
—————————————————
கீழே சங்கதி இதுக்கும் உண்டே
கீழ் பாசுரம் பால சேஷ்டிதங்கள்
சகடாசுரன் பங்குனி ரோகினி ஏழு மாதம்
குன்று ஏந்தியது ஏழு திரு நக்ஷத்திரத்தில்
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-
(கன்றால்-தேனுகாசுரன்-பதவுரையில் காட்டி –வத்ஸ கபிஸ் தாஸுரன் -என்றே சொல்வர் இருவரையும் )
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த –
மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி
கொடி போலே அழகிய இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும்
அழியச் செய்த –
(ஏழு – கர்பம் பிறவி -ஸப்த அவஸ்தைகள்
கொம்புகள் புண்ய பாப ரூப கர்மங்கள் )
வானோர் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நித்ய ஸூரிகள் பரிய இருக்கும் மேன்மையை உடைய தன்னை கிடீர்
தன்னைப் பேணாதே இவற்றின் காலிலே பொகட்டது-
(அஸ்தானே பய சங்கிகள் -உறகல் உறகல் -இத்யாதி )
மா மாயன் —
ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் –
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் –
தன்னைப் பேணாதே
கால் நடையே
கழுத்திலே ஓலை கட்டி
பாண்டவர்களுக்காக துரியோதனன் பக்கலிலே தூது போனவன் –
திரிகால் சகடம் சினம் அழித்துக் –
ஊருகிற காலை உடைத்தான சகடத்தின் உடைய
சினத்தை போக்கி –
கன்றால் விளங்காய் எறிந்தானூர் –
இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய்
ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் –
கண்ண புரம் நாம் தொழுதுமே –
————————————-
கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10-
(இரு -இரண்டு – பூமி -ஸ்வர்க்கம் -பெரிய என்றுமாம்
அருள் மாரி இவர் இன்ப மாரி -நம்மாழ்வார்
47 திவ்ய தேசம் மங்களா சாசனங்கள் இவர் மட்டுமே செய்த அருள் வண்மை உண்டே
இமையோர் இறைஞ்ச வாழ்வாரே-மாதவன் தமர் என்றும்
குடந்தை எம் கோவலன் அடியார் என்றும்
என்று பரஸ்பர நீச பாவம் இவர்களுக்கு உண்டே )
கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்-
நீர் கொண்டு எழுந்த காள மேகங்கள் வந்து தோயும்படி
ஓங்கின மாடங்களை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே
என் ஸ்வாமியைக் கவி பாடிற்று –
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன் –
பெரிய பிராட்டியார் உடைய முழு நோக்குக்கு இலக்கான படியாலே
அருள் மாரி -என்றது தன்னையே திரு நாமம் உடையாரானார் ஆயிற்று –
ஜல சம்ருத்தியை உடைத்தான திருவாலி நாட்டை யுடையவர் –
மரு வார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் –
என்றும் ஒக்க உண்டாய்
குறைவற வர்ஷிப்பதான புயல் உண்டாகில் ஆயிற்று
இவர் கைக்கு ஒப்புச் சொல்லல் ஆவது –
என்றும் ஒக்க குறைவறக் கொடுக்கிறவர்க்கு
காதா சித்கதமாக தோற்றி ப்ராதேசிகமாக வர்ஷிக்கிறது ஒப்பாக மாட்டாதே –
(புயல் மேகம் -மருவார் -என்று காலத்தோடு பொருந்தி பூர்ணமாய் )
திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த இத் திரு மொழியை வல்லார் –
இரு மா நிலத்துக்கு அரசாகி –
பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்களை எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –
யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே —
இவ்வளவிலே போகாதே
பரம பதத்திலே போய் புக்கு
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -( 10-9-)-என்கிறபடி
நித்ய ஸூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-
வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –
————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply