ஸ்ரீ பெரிய திருமொழி-8-5—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

மாலைப்பூசல் -மல்லிகை கமழ் தென்றல் திருவாய் மொழி போல் இதுவும்
அவன் ஆஜ்ஜை படியே அனைத்தும் -ஸூர்யனும் இவள் விசனம் காண மாட்டாமல் அஸ்தமிக்க –
விரஹ தாபத்தால் அருளிச் செய்யும் பதிகம்
சீதாபிராட்டி -10 மாதங்கள்
பரத்தாழ்வான் 14 ஆண்டுகள்
தேவகிப்பிராட்டி -10 மாதங்கள்
கோபிமார் இவன் மாலையில் முன் வரிசையில் காணாமல் பின் வருவதால் பட்ட நோவு
மல்லிகை கமழ் தென்றல் -(9-9-)
பூர்வர்-இரவு பொழுது பிரிந்த வியசனம் என்று நிர்வகிக்க –
எம்பெருமானார் -அவ்வளவு நேரம் தங்க மாட்டாத ப்ரக்ருதி -மாலைப் பூசலே என்று நிர்வகித்தார்

ஒவ் ஒரு கோபிகள் நிலைக்கும் ஒரு பாசுரம்
ஒன்பதாவது பாசுரத்தில் தான் திருக்கண்ண புரம் பிரஸ்தாபம் வரும்
நாகை அழகியர் பதிகத்திலும் பத்தாவது பாசுரத்தில் மட்டுமே இதே போல் உண்டு –
மாசறு சோதி -5-3- மடலூர முடியாமல் இரவு வர -ஊர் எல்லாம் துஞ்ச நீள் இரவாய் நீண்டது
கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் போல் இங்கும் இருள் மூட
கோபிமார் அனைவரும் பட்ட பாடு இவள் ஒருத்தியும் படுகிறாள் –

தந்தை காலில் -பிரவேசம் –

அங்குத்தை சம்பந்தம் உள்ளது  ஒன்றைக் கொண்டு வந்து
என்னை ஆஸ்வசிப்பிக்க வேண்டும் என்று
சில தும்பிகளை போக விட்டாள் –
அவையும் போய் அவனைக் கொடு வந்தால்
தானும் அவனுமாக அனுபவிப்பதாக இவள் இலையகல
பாரித்து கொண்டு இருந்தாள் –
அவன் வந்திலன்-

அதுக்கு மேலே பாதக பதார்த்தங்கள் மிகைத்து
அவற்றுக்கு ஆடல் கொடுத்து பதார்த்த தர்சனம் பண்ணிப்
போது போக்க ஒண்ணாத படி
கண்ட விடம் எங்கும் இருள் மூடி
ஹிதம் சொல்வாரும்
அழைப்பாரும் தேட்டமாம் படியாய் விழுந்தது –

தானும் ராத்ரியும் பாதக பதார்த்தங்களுமேயாய்
நோவு பட்டு
திருவாய்ப் பாடியிலே கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
ஒரு சந்தையில்   பட்ட பாட்டை
இவள் ஒருத்தியும் பட்டு கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

(தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன-8-5-2–என்றபடி -பாதிக்கும் அவர்களைச் சொன்னபடி
சப்தாதி விஷயங்களே விரஹ தாபம் உண்டாக்கும் அவன் இல்லாமல் -)

———————————————————-

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தட வந்து வலி செய்வது ஒழியாதே  —8-5-1-

தமியேன்-தனியேன்
இணைக் கூற்றங்கள் -சந்திரனும் மாருதமும் இங்கு

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று –
பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன்
தன்னால்  வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த
முக்த்தன் உடைய ஸ்வபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு
வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று –
(நீர் இருக்க –என் நெஞ்சம் தூது விட்ட பிழை -யார் இடத்தில் கூறுவேன் –
என்னையும் மறந்து தன்னையும் மறைந்ததே -)

திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை –
நெஞ்சு கை தாராத சமயத்திலே அவன்
அருளாது ஒழியுமே–(மூன்றாம் -19-)என்று
அவன் அருள் பெறுவதாக அவசரம் பார்த்து இருந்தேன் நான் –
அவ்வருளின் கார்யம் பலியாமையே யன்றிக்கே
த்வேஷ கார்யமே தலைக் கட்டிற்று –

அந்தி காவலன்-
பாடி காப்பாரே களவு காணுமா போலே
ராத்திரி தத்வத்துக்கு நிர்வாஹகனான சந்தரன் உடைய  –

அமுதுறு பசுங்கதிர் அவை சுட –
விஷம் பாதகமானால் அம்ருதத்தை இட்டு பரிஹரிக்கலாம்
அம்ருதம் பாதகம்  ஆனால் பின்னை பரிஹரிக்கல் ஆவது இல்லை –
அம்ருத கிரணங்கள் ஆனவை நெருப்பை முகந்து எறட்டினால் போலே சுட   –

அதனோடு மந்த மாருதம் –
அது தான் அமையும் ஆயிற்று பாதகத்தில் உறைப்புக்கு –
அத்தோடு கூட அளவுபட சஞ்சரியா நின்றுள்ள
தென்றலானது தோற்றிற்று –

வனமுலை தட வந்து –
அவனுடைய கர ஸ்பர்சம் யாதோர் இடத்தில் உண்டாம்
அவ்விடம் எங்கும் புக்கு ஸ்பரசித்துக் கொடு வாரா நின்றதாயிற்று –

வலி செய்வது ஒழியாதே  –
அத் தென்றல் தனக்கு நாம் இத்தனை நலிந்தோம் ஆகில்
இனி ஓர் அளவிலே விட அமையாதோ என்று
தயை பிறந்து கை வாங்குமாம் இறே –
அதன்றிக்கே இடை விடாது நலியா நின்றதாயிற்று –
ராவணன் பண்ணின பிராதி கூல்யத்துக்கும் ஓர் அவதி உண்டாயிற்று இறே
இது பண்ணுகிற பிராதி கூல்யத்துக்கு ஓர் அவஸானம் காணாது ஒழிகிறது –

(சப்தாதி விஷயங்களில் ஸ்பர்ச பாதகம் இதில் சொல்லிற்று )

———————————————————

கிருஷ்ணனுடைய அநிஷ்ட நிரஸனம் -தந்தை காலில் விலங்கு அறுத்த
அந்த செயலில் ஈடுபட்ட -கோபிமார் அவஸ்தை
இதில் தோளும் தோள் மாலை அழகில் ஈடுபட்ட கோபி அவஸ்தை

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

விசும்பு இயங்கும்-ஆகாசத்தில் மயங்கிற்று -அஸ்தமித்தது

மாரி மாக்கடல்  –
புறம்பு ஒரு ரஷகர் உள்ளாத அளவில்
அணைத்து அல்லது நிற்க ஒண்ணாத படியான வடிவு படைத்தவன் –
மாரி போலேயும்
கடல் போலேயும்
இருக்கிற வடிவை உடைத்தானவன்  –

வளை வணர்க்கு இளையவன் –
அவ் வடிவு அழகோபாதியும் பெற்று அல்லது நிற்க ஒண்ணாதே
இருக்கிறது காணும் அவன் முன் பிறக்கப் பிறந்ததுவும்

வளை வணர்க்கு இளையவன் -சங்கு போல் நிறத்த
இத்தை இட்டு விசேஷித்து-
பல தேவர் –வெளுத்த ஸாத்விக -ஸூத்த ஸ்வ பாவர் -இவருக்கு பவ்யன் –
இவனோ மாரி மாக்கடல் -திருமேனி போல் திரு உள்ளமும் கறுத்து இருக்க வேண்டுமோ –

கிருஷ்ணஸ்ய அதி மநோ ஹரி ப்ரேம கர்ப்ப சந்தே சைரித்யாதி (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-)
கிருஷ்ணனைப் பற்றி கோபிகளுக்கு சொல்லி ஆஸ்வாஸம் செய்த நம்பி மூத்த பிரான்
கிருஷ்ணன் தீம்பாலே புண்பட்ட நெஞ்சை ஆற்றி
இருவரையும் சேர விடுவான் இறே –
ஹா ராமா ஹா லஷ்மணா–(ஸூந்தர )என்னுமா போலே –

வரை புரை திரு மார்பில் -தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது –
ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே
அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே
இரண்டருகும் அருவி விழுந்தால் போலே
இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே
போன நெஞ்சானது
ஒரு கால் மீளுகை அன்றிக்கே
அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை  உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –

தோர் துணை  காணேன் –
போன நெஞ்சம் மீண்டது இல்லை –
நாயகனோ பொகட்டுப் போனான் –
இனி துணை யாவர் உண்டோ –

ஊரும் துஞ்சிற்று-
நீ தான் ஓர் ஊரிலே அன்றோ இருக்கிறது
அவ் ஊரில் உள்ளாரோ என்னில்
அவர்கள் அபஹ்ருத சித்தராய் இருக்கிறார்கள் சிலர் அல்லர்களே
ஆகையால் நித்ரா காலங்களிலே உறங்கத் தட்டில்லை –

ஆக –
அழைப்பாரும்
ஹிதம் சொல்வாரும் இல்லை யாயிற்று –

உலகமும் துயின்றது –
அத்தோடு சேர்ந்த லோகங்களும் அடைய உறங்கிற்று –

ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்றுத் –
ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –
தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ
அவன் போனாலும்
அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-

திசைகளும் மறைந்தன-
அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –

செய்வது ஓன்று அறியேனே –
புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –
அகவாய் குடி போயிற்று –
நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –

———————————————————-

கீழ் இரண்டு பாட்டிலும் நெஞ்சு இழந்தார் படி
இங்கு குழல் ஓசையில் ஈடுபட்டு வளை இழந்த கோபிமார் தசையில் பேசுகிறாள் –

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை  யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்   அஞ்சேல் என்பார்  இல்லையே—8-5-3-

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் –
கிருஷ்ணன் பிரிகிற போது -பிரியேன் -பிரியில் ஆற்றேன் -என்று
பிரிந்து போனான் –
அங்கன் இன்றிக்கே இவை சடக்கென பிரிந்து கொடு நின்றது –
(ஆயன் மாயத்துக்கும் மேல் அன்றோ இவற்றின் மாயம் )

அனு ராகேண சைதில்யம் உபயாந்த்யா ஸூ கரேஷூ வலயான்யபி ஆஸூ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-18)-என்னுமா போலே
ஆஸூ சைதில்யம் உபயாந்தி –
கடுகப் பிரிந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –
கைப் பட்டார் அடைய விட்டுப் போகிற காலம் ஆகாதே –
(கைப் பட்டார்-வளையல்களும் உற்றாரும் )

இறை நில்லா –
இறையும் நில்லா –
அவன் போன பின்பு ஒரு ஷணமும் தங்கிற்று இல்லை –

பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
முதலிலே பூதனை கையிலே அகப்பட்டு
நம்மை நலியப் பார்த்தவன் (அவன் ஆபத்து இவரை அன்றோ நலியும் )
இன்றாக நம் பக்கலில் இரங்குமோ –
அடியிலே தொடங்கிற்று இலனோ அவன் பெண் பிறந்தாரை நலிய –

தூய மா மதிக் கதிர் சுடத் –
மறு வற்ற சந்தரன் உடைய
கிரணங்கள் ஆனவை நெருப்பை எறட்டுச் சுட –

துணை யில்லை  யிணை முலை வேகின்றதால் –
அவிப்பார் இன்றிக்கே ஒழிந்ததே
தான் கண்டபடியே வேவா நின்றதாயிற்று –

ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்   –
இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும்
அழித்து கொடு வந்து
தோற்றா நின்றதாயிற்று
(கோபப்பட வேண்டிய நெஞ்சையும் ஈடுபட வைத்து )

இடையன் ஊதுகிற குழல் –
பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
(ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் இவன் உண்ட வெண்ணெய் என்னும் போல் )

அஞ்சேல் என்பார்  இல்லையே–
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –

—————————————————————

கீழ் குழல் ஓசையில் ஈடுபட்ட கோபி அவஸ்தை
இதில் சங்கு ஒலியில் ஈடுபட்ட கோடி அவஸ்தை –

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே —8-5-4-

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில் மயங்க –
எப்போதும் ஒக்க மதித்து இருக்கையாலே
துறட்டியாலே குத்துண்டு
அறாக் கயமான புண்ணை-
தலையிலே உடைத்தாய் இருக்கிற ஆனைகளை மேற் கொண்டு
தங்கள் கருத்திலே நடத்த வல்லராய்
பெரு மிடுக்கராய்
வீரக் கழலை உடைய ராஜாக்கள்
யுத்தத்திலே மயங்கும் படியாக  –

வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் —
சகோஷோ தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயாநி -என்கிறபடியே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்தே வைத்தூதி
பிரதி பஷத்தை அழியச் செய்த மிடுக்கனும் வருகிறிலன்-

ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே (தென்றல் )
இனிக் கிருபை பண்ணி மீளில்
நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் –
கிளர்த்தியை உடைத்தாய் இருந்துள்ள கடலிலே நீரில் அசைந்து வாரா நின்றுள்ள
வெளுத்த திரையால் உண்டான திவலை யாகிற நுண்ணிய பனி என்று சொல்லப் படுகிற –

தழல் முகந்து இள முலை மேல் இயங்கு மாருதம் –
நெருப்பை முகந்து விரஹ சஹம் அல்லாத
முலையிலே எறட்டுக் கொண்டு
சஞ்சரியா நின்றுள்ள தென்றல் ஆனது –

விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –
ஓர் அளவில் ஸ்திரீ வதம் அன்றோ
இது ஆமோ என்று மீளில்
பாதகரே ரஷகராக வேண்டும் தசை காணும் –

ராவணா நீ என்னை பெருமாள் உடன் சேர்க்க வல்லையே -என்றாள் இறே பிராட்டி
நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

———————————————————–

கீழே பூமிப் பிராட்டி பாரம் போக்க வெண் சங்கு ஏந்தியவன் -ஈடுபட்ட கோபிமார் தசை
இதில் பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்வாஸ கரமான கணையாழி –
பர்த்தாராம் இவ -அணைத்து – மகிழ்ந்த செயலில் ஈடுபட்ட கோபிமார் தசை

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-

ஆழியான்-கணை யாழி உடைய சக்ரவர்த்தி திரு மகன்
வாழ்கின்ற வாவியை-ஜீவித்து அவனை அணைக்க நசை கொண்ட ஜீவன்

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –
பிறரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்யுமவன்  கிடீர்
விஸ்வசித்து ஆசையோடு இருக்கிற எனக்கு உதவாது ஒழிகிறான்

இலங்கையை மலங்குவித்த-
இலங்கையை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணின –

ஆழியான்-
கைகேயி யினுடைய வரத்திலே
அகப்படாதது கையிலே அறுகாழி  ஒன்றுமே போலே –

நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட
அதினுடைய பல ரூபமான
பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –

தோழி நாம் இதற்கு என் செய்தும் –
இனி இரண்டு அபலைகள் இருந்து
நோக்கிக் கொள்ளவோ –

துணை இல்லை –
அவன் இருந்தான் ஆகில்
அப்பொழுதை பிழைக்கவுமாம் இறே –

சுடர் படு முது நீரில் ஆழ
ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க

வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –
ஆஸ்வாச கரனான அவனை இழந்து
பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற
பிராணங்களை முடிப்பதாக
அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

——————————————————————

கையும் அறுகாழியில் ஈடுபட்ட கோபி தசை கீழே
கையும் வில்லுமாய் இருந்து கடலைக் கலக்கிய சாரங்க பாணி இடம் ஈடுபட்ட கோபி இதில் –
சஸ்திரம் தரித்தவரில் நான் ராமனாக இருக்கிறேன் என்றான் அன்றோ கீதாச்சார்யர் –
வில்லிறுத்து மெல்லியல் தோய்ந்தாய்
வில்லாண்டான் -போதும் போதும் என்று நிறுத்துவதே ஆண்மை

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே —8-5-6-

த்ரி ஜாமா -மூன்று ஜாமங்கள் -என்று இருக்கும் இரவோ
ஊழி-கல்பம் -1000 சதுர்யுகம் -விட பெரியதாக உள்ளதே

முரியும் வெண்டிரை முது கயம் –
கிளர்ந்து சஞ்சரியா நின்றுள்ள
வெளுத்த நீரை உடைத்தான
முது கயம் உண்டு -பழையதான கடல் -அது

தீப்பட –
நெருப்பு கொளுத்தி எரிய
விக்கிரம சோழ தேவர் -இது என்ன வைக்கோல் போர் தான் –

முழங்கு அழல் ஏறி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன்-
த்வனி உண்டாம்படி நெருப்பு எரியா நின்றுள்ள
தீப்த பாவக சங்காசை -(யுத்த )-என்கிறபடியே
நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய்
தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்

என் செய்கேன் –
இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ –
எரியும் வெங்கதிர் துயின்றது –
தன்னுடைய பிரகாசத்தாலே
பதார்த்த தர்சனத்தை பண்ணுவித்து
(பதார்த்தம் – சொல்லுக்கு பொருளாக -பதம் அர்த்தம் -காட்டும் ஸூர்யன் )
ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனான ஆதித்யனும் போய் அஸ்தமித்தான்-
ஈஸ்வர பார தந்த்ர்யத்தையே முடிய அனுஷ்டித்து
ஓர் அளவிலே தோற்றாதே
நித்ரையிலே அந்ய பரனானான் –
(ஜயத்ரதன் -ஆழி கொண்டு மறைத்து -அஸ்தமித்தது போல் காட்டி- பின்பும் தன்னைக் காட்டினான் அன்றோ )

பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா –
லோக த்ருஷ்டியான தான் கண் உறங்கினால்
என் கண் உறங்க ஆகாதோ
(த்யுமணி -ஆகாசம் உலகம் இவற்றுக்கு கண் ஸூரியன் )

கரிய நாழிகை  –
தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே
அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்

அன்றிக்கே
கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்

அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது –
கரிய நாழிகை -அந்தி  காலம் –

ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –
இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-

பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  –
இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

—————————————————

பிராட்டிக்காக கடலைக் கலக்கியது மாத்திரம் அன்றிக்கே
கடலைக் கடைநதும் -அடைத்ததும் -சேஷ்டிதங்களில் அகப்பட்ட கோபி தசை இதில்
அஜிதன் திரு நாமம் கடைந்தவனது –
சக்ரவர்த்தி திருமகன் அடைந்தான் –

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
பிராட்டிக்காக கடைந்து –
அவள் தனக்காக அடைத்து –
இலங்கைக்கு நிர்வாஹகன் ஆனவன் உடைய
வரை போலே திண்ணியதான மார்விலே

மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்-
அம்பு தைத்து துடிக்கும்படி –
யுத்தத்திலே கொலை அம்பை நடத்தின
சர்வ ஸ்வாமி யானவனும்  வருகிறிலன் –

இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி (ஓசையும்) யடும் –
விளங்கா நின்று கொண்டு
சுடுகிற கிரணங்களை உடைய
பால சந்த்ரனோடே
வ்ருஷபத்தின் உடைய கழுத்து மணி ஓசையும்
முடியா நின்றது
இவை தான் போரும் இறே பாதகத்துக்கு

அதுக்கு மேலே –
ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய்-
இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள
குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –
(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )

இனி விளைவது ஓன்று அறியேனே    –
நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

—————————————————————–

பிராட்டிக்கு அரியன செய்து -பண்டை நாள் படியே -கீழ் அனுபவம்
லோகத்தில் மரியாதா பங்கம் பிறவாமைக்காக மழு ஏந்தி ரக்ஷணத்தில் ஈடுபட்ட கோபி தசை இதில்

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனி வெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனிவெய்த
பிராமணரை முன்னாக கொண்டு நடக்க கடவதான
ஷத்ரிய மரியாதை யானது குலைய
அத்தாலே
ஜமதக்னி பகவான் சீற
அது ஹேதுவாக இதுக்கு நிமித்த பூதரான ஷத்ரியரை இருப்பதொரு கால் –

மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
மழுவாலே துணித்து பொகட்ட மிடுக்கை உடைய
ஸ்ரீ  பரசுராம ஆழ்வானும் வருகிறிலன் –

ஷத்ரிய மரியாதையை குலைக்கையாலும்
பிதாவை பரிபவிக்கையாலும்
ராஜ வம்சத்தை திரட்டி வைத்து
அறுத்து பொகட்டான் ஆயிற்று –

ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித் தழுவு நள்ளிருள் தனிமையில் –
கூடுகளின் உள்ளே வந்து பாயா நின்றுள்ள
நுண்ணிய பனிக்கு
ஒடுங்குகிற பேடையை அடங்கும்படியாக சிறகை விரித்து
பஷிகள் அணைக்கிற காலத்திலே –

பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்
கொடியதோர் கடு வினை அறியேனே –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே
அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –

இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர்
அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –

(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )

——————————-

கோபிமார்கள் தசைகளை அடைந்து நோவு பட்டாள் கீழ் எல்லாம்
இப்பொழுது சிலை இலங்கு பொன்னாழி பிராட்டி படியே அடைந்து நோவு படுகிறாள்
ஆகவே திருக்கண்ண புர பிரஸ்தாபம் இதில் –

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல்  பாவியேன் ஆவியை யடுகின்றதே —-8-5-9-

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த –
திண்ணியதாய் -அரணாகப் போரும்படியான
மதிளை யுடைய திருக் கண்ண புரத்திலே
எழுந்தி அருளி இருக்கிறவன் உடன்  ஸ்வப்ன கல்பமாம் படி
அவன் தந்த –

மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை –
மானச மாத்ரமாய்
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லாமையாலே
அது உள்ளே வந்து புகுர
அத்தாலே ஈடுபட்டு கையில் வளை கழலும் படியாக இருந்த என்னை –
(சிலை இலங்கு -தெள்ளியீர் போல் இங்கும் வளைகள் பிரஸ்தாபம் )

சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும் –
சீற்றத்தையும் பெரிய வடிவையும் உடைத்தான
வ்ருஷபத்தின் உடைய
கழுத்திலே உண்டாய்
கண்ணுக்கு ஆபாசமாய் கார்யத்தில் முடித்து விட வற்றான
மணியினுடைய த்வநியானது
என்னுடைய ஹிருதயத்தை  சிதிலமாக்கா நின்றது –

அனந்தல் அன்றிலின் அரி குரல்  –
அனந்தலை உடைத்தான அன்றிலின் உடைய
தழு தழுத்த பேச்சானது –

பாவியேன் ஆவியை யடுகின்றதே —
கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி
மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தர்மி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –

(இராப்பத்து -ஆயிரம் கால் தாண்டி ரிஷப கதி- உண்டே மணி ஓசையும் கேட்கலாம்
தர்மம் -ஆழ்வார் குணம் தர்மி -ஆழ்வார் ஜீவன் )

————————————————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-

ஆர்வத்தால்-கரை புரண்ட அபி நிவேசத்தால் –

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து –
பிராப்த யௌவனைளான திரு வாய்ப்பாடியிலே பெண்கள்
கிருஷ்ணன் திருவடிகளை ஆசைப் பட்டு
கிட்டாமையாலே –

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த –
அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீடை
புத்தி பண்ணி
அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  –

கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார் –
நிரந்தரம் மேக சஞ்சாரம் உடைத்தான
பரந்த பொழிலை உடைய
திரு மங்கையில் உள்ளாருக்கு ரஷகராய் உள்ள ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி
அருளிச் செய்த இத் திரு மொழியை அப்யசிக்க  வல்லார் –

ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  –
பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து
நித்ய விபூதியில் நித்ய ஸூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் (தைத்ரியம் )-என்கிறபடியே
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு
பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத  பேற்றைப் பெறுவர் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-

வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading