ஸ்ரீ பெரிய திருமொழி-7-4-கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

பஞ்ச சார க்ஷேத்ரம்
சாரா நாத பெருமாள் பஞ்ச சாரம் க்ஷேத்ரம்
கும்ப கோணம் கூட வாசல் திருச்சேறை வயிறு
காவேரி தாயார் பிரசித்தம்
சப்த நதிகள் -கன்னிகை விளையாட
கும்பீடு
கங்கா காவேரி -ஏற்றம்
கங்கையைக் காட்டிலும் ஏற்றம்
அரச மரத்தடியில் தபஸ்
தை பூசம் மா மதலை -சார நாதன் -ஐந்து நாச்சியார்
மார்க்கண்டேயர் -தூண்ட சோழ மன்னன் புத்ரன்
அபய ஹஸ்தம் தாமரையும் கையில்
குளக்கரையில் காவேரி சேவை
பூபாலன் -மன்னார்குடி கோயில் செங்கல் இங்கே போட
அரசனுக்கு ராஜகோபாலனாகவே சேவை
சார-பெருமாள் -நாயகி விமானம் புஷ்கரணி க்ஷேத்ரம்
வனவாச ராமர் சேவை உண்டு இங்கு

இரண்டு பதிகம் பாகவத
பயிலும் சேஷிகள் -நெடுமாற்க்கு போக்யத்வம்
இவர் நண்ணாத -போக்யத்வம் முதலில் -இதில் சேஷிகள்
இவை இரண்டுமே உயர்ந்த பதிகங்கள் -அனைத்திலும் –
பயிலும் சுடர் ஒளி சொல்லாமல் இது நெடுமாற்க்கு அடிமை என்றது
இருவருக்கும் இரண்டாவது பதிகம்-என்று மட்டும் காட்ட வந்தது –
ஸர்வதா சாம்யம் கொள்ளக் கூடாதே

கண் சோர வெங்குருதி -பிரவேசம் –

இது திருமங்கை ஆழ்வார் உடைய நெடுமாற்கு அடிமை –
(இருகால் மட்டும் அனுசந்தித்தார் என்பதுக்கே த்ருஷ்டாந்தம் )
பாகவத சேஷத்வத்தைச் சொல்லுகிற திரு மொழி யாய்த்து –

பெரிய நம்பி  ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றார் ஒருவர்
(மாறனேரி நம்பி )திரு நாட்டுக்கு நடந்தாராய்
அவரை அநு கமனம் பண்ணி  தீர்த்தமாடாதே வந்து எழுந்து அருளி இருக்க
(தீர்த்தமாடி என்றே இருக்க வேண்டும் )
இத்தை எம்பெருமானார் கேட்டு அருளி
பெரிய நம்பி பாடே வந்து
மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ என்ன
பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கடலோசையோ பாதியோ
சிறிது குறைவாகிலும் ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்று அருளிச் செய்தார்
(குல தைவம் போல் செய்ய வேண்டுமே-மனுஷ்யர் போலவாவது செய்ய வேண்டாமோ )

(அன்று தேர் போக பிறர் பெரிய நம்பியை பழிக்க அத்துழாய் பெருமாள் இடம் முறையிட
தேர் நகராமல் பின்பே சென்ற ஐதிக்யம்
இன்றும் சித்திரை தேர் பெரிய நம்பி திரு மாளிகை வாசலில் நிற்கும் )

பிள்ளை அழகிய மணவாள அரையர் கரையே போகா நிற்க
உள்ளே மா மதலைப்  பிரானை திருவடி தொழுது போனாலோ என்ன
ஆர் தான் திருமங்கை ஆழ்வார் உடைய
பசைந்த வளையத்திலே ( திரு முடியில் ) கால் வைக்க வல்லார் -என்று அருளிச் செய்தார் –

திரு நறையூரிலே  புக்கு
நம்பி அழகை அனுசந்தித்து
அங்கு நின்றும் போந்து
திருச்  சேறையிலே வந்து
மா மதலைப் பிரான் உடைய மௌக்த்யத்தை அனுசந்தித்து
அம் மௌக்யத்தின் அநு குணமான கிருஷ்ண அவதாரத்தை அனுசந்தித்து
அவ் வழியாலே அவதாரங்கள் எல்லாவற்றையும் அனுசந்தித்து
அவை எல்லாவற்றுக்கும் அடியாக திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிற படியை அனுசந்தித்து
இப்படி அவன் படிகளை அனுசந்தித்து
குணைர் தாஸ்யம் உபாகத ( தம்பி உரிமை -தாஸ்யம் உண்மை ) என்று தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு உத்தேச்யர் என்று
இங்கனே பாகவத் சேஷத்வத்தை அனுசந்தித்து பேசி அனுபவிக்கிறார் –

இத்தால் ( உகார அர்த்தமான )அனன்யார்ஹ சேஷத்வத்தை சொல்லிற்று ஆகிறது –
அதாகிறது
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆகை  இறே
ஓன்று இரண்டு கிரயம் சென்றால் மீளாது இறே –

பயிலும் சுடர் ஒளி -ததீய சேஷத்வ அனுசந்தானம்
நெடுமாற்கு   அடிமை -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
நண்ணாத வாள் அவுணர் -ததீய சேஷத்வ போக்யத்வ அனுசந்தானம்
கண் சோர வெங்குருதி -ததீய சேஷத்வ அனுசந்தானம் –

ஆர் எண்ணும் -ஜென்ம வ்ருத்த குறை உள்ளாறும்- நண்ணாத உண்டு
அந்த பிரஸ்தாபம் இங்கு இல்லை
இருகால் மட்டும் அனுசந்திப்பான் என்
ப்ரமேய பேதம் -போக்யத்வம் சேஷித்வம் சொல்லவே

————————————————

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

காண்மின்-பெருமாளை சொல்லி நம்மையும் சொல்கிறார்-

கண் சோர –
பூதனை யானவள் யசோதை பிராட்டி வடிவைக் கொண்டு வந்து கிட்டி
அவளை முடித்தான் ஆய்த்து
க்ரூரமாக நோக்கிக் கொடு வந்த  கண்கள்  சோர –

வெங்குருதி வந்திழிய-
முலைப் பால் வழியே
உதிர வெள்ளமானது
கொழித்து இழிய-

வெந்தழல் போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட  மா மதலாய் –
பிராணன் போனவாறே
ஆக்கனான ஒப்பனையும் போம் இறே –
நெருப்புப் போலே சிவந்த மயிர் முடியை உடையளான பூதனை பிணமாய்
பூமியிலே விழச் செய்தேயும்
பின்னையும் முலை உண்ணும்படி யாய்த்து மௌக்த்யம்  –
(நம் தாயா இல்லையா -விஷப்பாலா இல்லையா =உயிர் உள்ளவளா இல்லையா
என்று அறியாத மா மதலை )

வானவர் தம் கோவே என்று  –
பூதனை தாய் வடிவு கொண்டு வந்து முலை  கொடுக்க
பேய் என்று பாராதே
முலை உண்டவன் தான் யார் என்னில்
நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன் ஆய்த்து –
(தத் ப்ரஹ்ம சிஸு -கோபால விம்சதியில் ப்ரஹ்மம் முதலில் இங்கு பின்பு )

விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத் தண் சேறை எம்பெருமான் –
ஸூவர்க்கத்தில் ஸூகப் ப்ரதானனாய் வர்த்திக்கிற சந்தரன் உடைய
கீழ் வயிற்றை போழும்படியான  ஒக்கத்தை உடைத்தாய்
மணி மயமான மாடங்களால் வந்த நிரதிசய சம்பத்தை உடைத்தாய் இருக்கிற
திருச் சேறையிலே இருக்கிற ஸ்வாமி  –

தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –
திருத் துழாய் போலேயும்
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது –
உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன
இங்கு உமக்கு ஒழியாது
வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை –
(கதா புன -இளையவர்க்கு அவித்த மௌலி எனக்கும் அருள வேண்டும் -பிரார்த்தித்தார்களே –
இவரோ உமக்கு இடம் இல்லை
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை -ஆறு காலுக்கும் தலை -உமக்கு அல்ல )

(காண்மின் -உள் கருத்து –
பெருமாளுக்கும்-
நம்மைப் பார்த்தும் ததீய ஏற்றம் பிரத்யக்ஷம் என்று காட்டுகிறார் )

—————————————————

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

அமர்ந்து-அமர்த்தி -பொருந்தி வைத்து –
கூத்தர் போலாம்-கன்று குணிலா எறிந்த கழல் போற்றி -உள்ளே சிவந்த திருவடி இங்கே தானே சேவை
குஞ்சித பாதம் -நின்ற திருக்கோலம் கூத்து போல் அழகாய் இருக்குமே –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து –
அழகிய புருவத்தை உடையவளாய்-
செவ் வரியையும் கரு வரியையும் உடைத்தாய் –
ஈஸ்வரனுக்கு காலம் எல்லாம் அனுபவியா நின்றாலும் உண்டு அறுக்க
ஒண்ணாத படியான பரந்த திருக் கண்களை உடையவளாய் -(அஸி தேக்ஷிணா )
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளாய் இருக்கிற பிராட்டியை
மலை போலே இருக்கிற திரு மார்விலே வைத்து-

மல்லல் கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் –
இப்படி பிராட்டிக்கு இருப்பிடம் என்று பாராதே
தழைத்த கொம்புகளை உடைத்தாய் இருக்கிற விளாவாகிற அசுரனை
கன்றாய் வந்த அசுரனைக் கொண்டு இலக்கைக் குறித்து
எறிகைக்காக இட்ட அடி
நாலடியும் நடைச் சக்கரவத்துப் பிடிக்க வேண்டும் படியாய் இருந்தது ஆய்த்து –
மல்லல் -பெருமை –

வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் –
நித்ய வசந்தமாய்
ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற
கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய
திருவடிகளைத் தொழுவார் –

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –
நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு
இடம் காண்கிறிலேன்  –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யா சி தவ்ய-த்ரஷ்டவ்ய
கேட்டு ஆராய்ந்து இடை விடாமல் சிந்தித்து காண )

—————————————————————

விபூதியில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்
தலையால் தரித்து
மனசால் தியானிக்க
பிரகிருதி மண்டலம் இருக்கும் பாகவதருக்கு இப்பிரபாவம் உண்டோ
விண்ணவர்களை விட சிறந்தவர்கள் இவர்களே என்கிறார் –

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

மீதோடி வாள் எயிறு –
மேல் எங்கும் பரந்து
ஒளியை உடைத்தாய் இருக்கிற
எயிறானது ஒளி விட –

மின்னிலக –
மின் போலே விளங்க –

முன் விலகும் உருவினாளைக் –
மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே
துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –

அன்றிக்கே –
மீதோடி -இத்யாதி –
மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –

முன் விலகும் –
முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –

காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )
அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே
ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )

தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப் –
தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி
அறையா நின்றுள்ள திருச் சேறை யிலே
எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –

போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –
புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற
பாக்யாதிகரே –
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில்
சம்ருத்தர் ஆகிறார் –
அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள்
இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே   –

————————————————-

விண்ணுளாரிலும் சீரியர் என்று அனுசந்தித்து
அந்த ஏற்றத்தால் இவர்கள் இடத்தில் பிறந்த பரமபக்தியை அருளிச் செய்கிறார் =

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

தேராளும் –
ஆனை குதிரை காலாளுக்கு அவதி இல்லாமையாலே
தேருக்கே யாய்த்து
மெய்க் காட்டு பட்டோலை கொள்ளுவது –

வாளரக்கன் –
அவையும் மிகையாம்படி
பிரதி பஷ நிரசனத்துக்கு
கையிலே வாளே அமையும்  –

தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் –
தேவதைகளுக்கு பிரவேசிக்க வரிதான
ஊரை
பூசலிலே
சிதிலமாய்ப் போம்படி பண்ணி –

போராளும் சிலையதனால்   –
யுத்தத்தை நடத்தா நின்றுள்ள வில்லாலே –

பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் –
தீப்த பாவக சங்காச  -என்கிறபடியே
தொடுத்து விடுகிற  போது அம்பாய்
எதிரிகள் மேலே நெருப்பை எரித்துக் கொடு போய் தைக்கிற அம்பை நடத்தினவனே -என்று –

தாராளும் வரை மார்பன் –
தாழும் அருவி போலே தார் கிடப்பச் சூழும் திரு மா மணி வண்ணன்
செங்கண் மால் மூன்றாம் திருவந்தாதி -59-என்கிறபடியே
ஜகத் ரஷணத்துக்காக தனி மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவன் –

தண் சேறை எம்பெருமான்-
ரஷணத்துக்குப் பாங்கான
கலவிருக்கையை உடையவன் –

உம்பராளும் பேராளன் –
உபரிதன லோகங்களை நடத்தும்
சர்வாதிகன் –

பேரோதும் பெரியோரை –
வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )
அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –

யொருகாலும் பிரிகிலேனே  —
ஷண காலமும் பிரிய
காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும்
பிரிய ஷமன் அல்லேன் –

————————————————————

பாகவதர்களை மிகவும் ஆதரியா நின்று
பாஹ்ய குத்ருஷ்டிகள் -தங்கள் மதத்தாரை கொண்டாடி உள்ளார்கள் அன்றோ என்ன
நீங்கள் சொல்லும் இவர்களை மதியாமல்
நரசிம்மரை எல்லாமாக ஸ்தோத்ரம் செய்பவரையே கூடுவேன்

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

வந்திக்கும் மற்றவர்க்கும் –
பௌத்தர்களும்-வந்தே -என்றால் போலே
சொல்லுவார்கள் போலே  காணும்   –

மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன் –
அழுக்கு கழற்றாது இருக்கும் இது தானே
தர்மம் என்று இருக்கிற அமணர்க்கும் கூட்டு அல்லேன் –

முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால் –
சிறுக்கன் உடைய பிரதிஞ்ஞா சம காலத்திலேயே ( ஆங்கே அப்பொழுதே தோன்றிய )
முன்னே சென்று
ஹிரண்யன் உடைய மிடுக்கைப் போக்கின
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுக்கு அல்லது
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு கூட்டு அல்லேன் –
(வந்திக்கும் மற்றவர்க்கும்-உம்மைத் தொகையால் குத்ருஷ்டிகளைச் சொன்னவாறே )

நீர் தாம் இது அறிந்த படி எங்கனே -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறே
என்னுடைய ஹிருதயத்துக்கு இனியதாய் இரா நின்றதே –
அப்படி இருக்கும் போது நான் அவனுக்கு அனந்யார்ஹன் ஆக வேண்டாவோ –
பாஹ்ய குத்ருஷ்டிகள் பக்கலிலே ருசி உடையாராய் இருப்பார்க்கு
பாகவதர்கள் பக்கலிலே ருசி உண்டாமோ –

சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு-
சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய்
ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை
நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –

என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –
என்னுடைய ஹிருதயமானது
தேனூறி
எப்பொழுதும் இனிதாக நின்றது
இது வெருமனேயோ –

—————————————————-

ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திக்க இனிமை என்ன எவ்வாறு இந்நிலை பெற்றீர் என்ன
ஆபத் ரக்ஷணாதி சேஷ்டிதங்களில் ஈடு பட்டு
திருவடியே துணை என்று இருந்தேன்
திருவடி ஸ்தானம் தானே பாகவதர்
நெஞ்சும் கண்ணும் இவர்களுக்கே அற்றுத் தீர்ந்தது –

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டானேன்-
முன்பு வராக கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய் –
அண்ட பித்தியிலே சேர்ந்த பூமியை எடுத்துக் கொண்ட
ஏறின நீர்மையை உடையவனே –
என்று மாறாதே சொல்லி
அந் நீர்மையிலே தோற்று
தேவர் திருவடிகளிலே அடிமை யானேன் –

திருவடியே துணை அல்லால் துணை இலேன் –
தேவர் திருவடிகளே எனக்குத் தஞ்சம் –
வேறு ஒரு ஆஸ்ரயத்தை (அபாஸ்ரயத்தை)  உடையேன் அல்லேன் –

சொல்லுகின்றேன் –
இது சபதம் பண்ணித் தரலாம் -(அவனுக்கும் நமக்கும் )

இப்படி நீர் அத்யவசித்து சொல்லுகிறது என் கொண்டு என் என்ன –
வண்டு ஏந்து மலர்ப் புறவில் –
வண்டுகள் மாறாதே பசு மலரை உடைத்தான பர்யந்தத்தை உடைத்தான –

வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு –
வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –

இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –
கண்டி கோளே என்னுடைய நெஞ்சும்
கண் இணையும் களிக்கிற படி
ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

———————————————

பாகவதர்களை கண்டதுமே ஹர்ஷம் என்பதாலே அவனுக்கு அடிமை சித்திக்கும்
இதில் அவனுக்கு தொண்டனாதால் உள்ள பலத்தால்
ததீய சேஷத்வ எல்லைக்கு சென்றேன்
பாகவர்கள் உகக்கவே பெருமாளைப் பற்ற
இவன் அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன் –

பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே -7-4-7

பை விரியும் வரி யரவில் –
பை -என்று பணம்
நிரந்தர பகவத் அனுபவத்தாலே விகசிதமான பணங்களை உடையனாய்
சர்வேஸ்வரனுக்கு வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும் படியான
தர்ச நீயமான வரிகளை உடையவனாய்
சைத்ய சௌரப்ய மார்த்தவங்களை-பிரக்ருதியாக உடையனாய் இருக்கிற
திரு வநந்த ஆழ்வான் மேலே   –

படு கடலுள் –
படு கடலிலே -ரத்நாதிகள் படுகிற கடலிலே -என்னுதல்
ஆழத்தை உடைத்தான கடலிலே  -என்னுதல்

துயில் அமர்ந்த பண்பா என்றும் —
வீசு வில் விட்டு எழுப்பினாலும் எழுப்ப ஒண்ணாத படி
கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை உடையவனே -என்றும்

மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் –
மை பரம்பா நின்றுள்ள
அஞ்சன கிரி போலே இருக்கிற
வடிவை உடைய ஆச்சர்ய பூதனே -என்றும் –

வண்டார் நீலம்-செய் விரியும் –
வண்டுகள் மாறாத நீலமானது
செய்களிலே
பரப்பு மாற மலர்ந்து கிடக்கும் ஆய்த்து –

தண் சேறை எம்பெருமான்  திருவடியைச் சிந்தித்தேற்கு
ஸ்ரமஹரமான திருச்  சேறையிலே நிற்கிற
நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகை
அனுசந்தித்தேற்கு  –

என் ஐ யறிவும் கொண்டானுக்கு  ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –
ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான
வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் –
அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி –

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை –
அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது
என் அன்பானது –

———————————————–

பாகவத முக விலாசம் -பிரயோஜனம் என்றோ பெருமாளை காண்பது
திரி தந்தாகிலும் –தேவ பிரான் கரிய திருக்கோலம் -ஆழ்வார் முக மலர்ச்சிக்காகவே
விரோதிகள் நிறைய உள்ள தேசம் அன்றோ என்ன
உத்தரம் அருளிச் செய்கிறார் -என்று சங்கதி
வேதகப் பொன் போல் அன்றோ பாகவதர்கள் உடன் சேர்க்கை –

பாகவதர்களை நெஞ்சாலே நினைக்க
மிருத்யுவால் வரும் பயம் போம் –
பாபங்கள் உடைய நலிவால் வரும் பயத்துக்கும் அஞ்ச வேண்டா
என்கிறது –

உண்ணாது வெங்கூற்றம்  ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப்
பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே -7-4-8-

உண்ணாது வெங்கூற்றம்  –
க்ரூரமான செயலை உடைய மிருத்யு
தன்னுடைய ஆச்யத்திலே விழுந்தாலும்
கீழ் இழிச்சப் பயப்படும் –

ஓவாத பாவங்கள் சேரா –
ஒரு ஷண காலமும்  இடை விடாதே நெருங்கப் பண்ணின பாபங்கள்
பல அனுபவத்துக்காக வந்து கிட்டா –

இவை இப்படி வந்து கிட்டாமைக்கு அடி என் என்னில் –
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானைப் –
உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனை
தங்கள் சர்வ கரணங்களாலும் அனுபவிக்கும் அவர்கள் பக்கலில் அன்றோ
இவர்கள் பிரவணர் ஆய்த்து –
உபய விபூதியில் உள்ளாறும் வந்து ஆஸ்ரயிக்கிற
ஸூ குமாரமான திருவடிகளை உடையவனை –

பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னைக்
பண் பேராத படி
வண்டுகள் த்வனியா நின்றுள்ள
பரந்த பொழிலை உடைய
தண் சேறை அம்மான் தன்னை –

கண்ணாரக் கண்டு உருகி கையார தொழுவாரைக் கருதும் காலே  –
கண்களின் உடைய விடாய் தீரக் கண்டு –
அந்த ப்ரீதியாலே இறைஞ்சி உருகி என்றும் பாடம் ஆகவுமாம்-
கைகளின் விடாய் தீரும்படி தொழுவாரை நினைக்கும் கால்

உண்ணாது  வெங்கூற்றம்
ஓவாத பாவங்கள் சேரா –

———————————————————-

ஸஜாதீய புத்தி பண்ணும்படி அன்றோ பாகவதர்கள்
பாகவத அபசாரம் பண்ணும் படி
உமக்கு நிரவாதிக ப்ரீதி உண்டாக ஹேது என் என்ன
அடி தேடி காண மாட்டாமையால்
நினைக்க விரோதி தோலையும் என்றால்
நினைக்க ஒட்டாமல் அன்றோ விரோதிகள் உள்ளன என்று சொல்ல
நினைத்தால் நெஞ்சு உருகாமல் இருக்க விரோதிகள் உள்ளனவே
பெருமாள் உண்டாக்கினார் என்று கொண்டால் எங்களுக்கும் அப்படி ஆக வேண்டுமே என்பர்
என்னால் உண்டானது சொல்ல மாட்டார்
ஏதுவாக இருக்கும்
பூர்வ விருத்தம் சொல்லிக் கொண்டு எங்கனம் வந்தது என்று அறியேன் வந்ததுக்கு மகிழ்வதே க்ருத்யம்

எனக்கு இது தான் உண்டான படி எங்கனே என்கிறார் –

கள்ளத்தேன் பொய்யகத்தேன் ஆதலால் போதொரு கால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என் கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்
தள்ளத்தேன் மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –7-4-9-

கள்ளத்தேன் –
சோரேண ஆத்மா அபஹாரிணா–பாரதம் -என்கிறபடியே போந்தேன்
அநாதி காலம் ஆத்ம அபகாரம் பண்ணிப் போந்தேன்
(சூது களவு -உலகோரையும் அவனையும் ஏமாற்றுவது )

பொய்யகத்தேன் –
அது தன்னையும் தெரியாத் படி
உன்னையும் வஞ்சிக்கும் -என்கிறபடியே
(உள்ளத்தே உறையும் மாலை )என் அந்தராத்மா அறிகிறது என்று மறைத்துப் போந்தேன்

ஆதலால் போதொரு கால் கவலை என்னும் வெள்ளத்தேற்கு-
இப்படி செய்கையாலே ஒரு ஷணமும் இடை விடாதே
துக்க சாகரத்திலே-பிறப்பாகிற -சாகரத்திலே – அழுந்திப் போந்தேன்-
(கவலை-மறதி துக்கம் இரண்டும் )

என் கொலோ-
இப்படி இருக்கிற எனக்கு இப் பேறு உண்டான படி எங்கனயோ
ஆத்ம சமர்ப்பணம் பண்ணி
மெய்யான ஸ்நேஹத்தை உடையராய்
அவனை அநவரத பாவனை பண்ணிக் கொண்டு போருவார் பெரும் பேற்றை
நான் பெற்ற படி எங்கனேயோ —

விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ளத் தேன்-
விளை வயலிலே களையாக முளைத்த நீலத்தை
கர்ஷகர் ஆனவர்கள் காலாலே தள்ள
அவ்வசைவாலே நிரம்பி இருக்கிற தேன் வெள்ளம் இட்டு

மண நாறும்  தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு
அதன் உடைய பரிமளமேயாய் இருக்கிற
தண் சேறை எம்பெருமான் திருவடிகளை
என்றும் ஒக்க ஹிருதயத்தில் வைக்குமவர்களுக்கு –

இது காணீர் என்னுள்ளம் உருகுமாறே –
என்னுடைய ஹிருதயம் அழிகிற படி கண்டி கோளே –
இப் பேறு எனக்கு வந்த படி எங்கனேயோ –

———————————————–

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான் தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –7-4-10-

தண் சேறை அம்மான் தன்னை-எம்பெருமான் விஷயமாக -பாகவதர்களை பாடவே
அதுவே அவனுக்கு கைங்கர்யம்
பொன்னடி மேல் சூட்டுமின்-இத்தை அவனுக்கு சூட்டவே அவன் உகப்பானே

பூ மாண் சேர் கருங்குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் –
பூக்களை உடைத்தாகையால் வந்த அழகை
இருட்சியை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள் போலே
நடக்க வேண்டும் என்று கணிசித்த அன்னங்கள்
தனியே நடக்கில் வாயாதே என்று பார்த்து
வயலில் நின்ற பெடையோடு ஒக்க நடக்கும் ஆய்த்து-

தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்-
அப்படி செய்த விடத்தும் வாயாமையாலே லஜ்ஜித்து
தேமாவின் உடைய இனிய நிழலிலே
போய் உறங்கா நிற்கும் –

தண் சேறை அம்மான் தன்னை –

வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை தொண்டீர்
தாவி வருகின்ற மாவை உடைய தேரை
அர்ஜுனன் உடைய தேரை நடத்தி பிரதி பஷத்தை அழிக்கும் கிருஷ்ணன் போலே
நடத்தி சத்ருக்களை அழியச் செய்த ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடையைக் கொண்டு
பகவத் விஷயத்தில் ருசி உடையீர் –

தூ மாண் சேர் பொன்னடி மேல் சூட்டுமின் நும் துணைக் கையால் தொழுது நின்றே –
ஹேய ப்ரத்ய நீகமாய்
தர்ச நீயமாய்
இருந்துள்ள திருவடிகளிலே சூட்டுங்கோள்-
அது செய்யும் பொது அஞ்சலியைப் பண்ணா நின்ற கையை
உடையராய்க் கொண்டு தொழுது
இம் மாலையைச் சூட்டுங்கோள் –

பாகவத பிரபாவம் சூடுவதே பலன் -வேறே வேண்டாமே –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கண் காண் விபவவித்தாம் பாற் கடல் பள்ளியானை
எண்ணும் விண்ணில் பொலி சீர் சேறையான்-தொண்டரை நீங்காது
அவர்க்கு ஆளாய் இன்பம் முப்புலன் எய்திற்று உரை செய்
காதல் நீலன் நம் தந்தை -64-

காதல் நீலன் -அன்பர்பால் ஆராத காதல் யுடைமையை தானே திருச்சேறை பதிகத்தில் அருளிச் செய்தார்
நீலன் நம் காதல் தந்தை என்று கொண்டு-ஆழ்வார் நம் பால் ஆராத அன்பால்
நன்மை செய்யும் தஞ்சமாகிய தந்தை அன்றோ ஆழ்வார்
இங்குள்ள அடியார் விண்ணுளாரிலும் சீரியர் என்பதால் தன் மேலாராக அருளிச் செய்து
மத்திய பர்வ நிஷ்ட அக்ரேஸராக விளங்குகிறார்
பாற் கடல் பள்ளியான் விபவ வித்தாம் -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து அன்றோ –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading