இங்கும் திருக்கண்ண புரத்துக்கும் நூறு நூறு பாசுரங்கள்
ஆச்சார்ய சம்பாவனை -இரட்டை -பெரிய பெருமாளுக்கு ஐம்பது பாசுரங்கள்
ஆறாம் பதிகம் -நாயிகா பாவம் இல்லை –
ஆனால் மடல் பிரபந்தம் நறையூர் நம்பிக்கே –
இரண்டு கல் கருட சேவை ஆண்டு தோறும் உண்டே –
கண்ணும் சுழன்று –பிரவேசம் –
வினைகள் நலியாமை நம்பு நம்பீ-என்றார்-
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட்டு இருக்க –
அத்தனை க்ரமம் பார்த்து ஆறி இருக்க ஒண்ணாத படி ஆற்றாமை விஞ்சிற்று –
சேஷ பூதன் சேஷி செய்த படி செய்யக் கண்டு இருக்கும் அது ஒழியக்
கால் கட்டி நிர்பந்திக்கக் கடவன் அல்லேன் இறே-
அம்முறை பார்த்து நிற்க ஒண்ணாத படி ஆற்றாமை கரை புரளுகையாலே
இனிச் செய்யும் அது எத்தனை -என்று பார்த்து
சரீர விஸ்லேஷத்து அளவும் இருந்து அர்ச்சிராதி மார்க்கத்திலே ஒரு தேச விசேஷத்திலே கொடு போய்
தன்னை அனுபவிப்பிக்கும் அளவும் செல்ல
அவன் வைத்த தண்ணீர் பந்தலிலே ஒதுங்குவோம் என்று பார்த்தார் –
அதாகிறது
அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூக மாஸ்வே-என்கிறபடியே
அத்தோடு போலியாக சொல்லலாய் இருக்கிற உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை இறே –
பிரஜையினுடைய ஆர்த்திக்கு உதவுகைக்காக மாதா பிதாக்கள் சேர இருக்குமா போலே
சர்வேஸ்வரனும் பிராட்டியும் கூடே வந்து சந்நிதி பண்ணுகிற
திரு நறையூரிலே புக்கு அனுபவிக்கப் பார்த்தார்-
அத்தை ஒழிய வேறு சிலவற்றை அனுபவிக்கும் இடத்தில்
அதுக்கு பரிகரம் சரீரமே-
(உகந்து அருளின நிலங்களிலே அனுபவிக்கை-இது ஒன்றே ஆத்மாவுக்கு )
சரீரம் தான் பரிணாமி ஆகையாலே ஒரு நாள் இருந்த படி இராதே
ஷணம் தோறும் வேறுபடா நிற்கும் இறே-
அந்த சரீரம் கொண்டு அனுபவிக்கும் இடத்தில் அதுக்கு விஷயம் ஸ்திரீகளே-
அவர்கள் ஆகிறார் –
இவன் பக்கல் ஏதேனும் சில உபாதியைப் பற்ற சில நாள் ஸ்நேஹித்து அது போனவாறே அவனை அநாதரித்து
உபேஷாவாதத்தைப் பண்ணி
பரிபவிக்குமவர்களாய் இருந்தார்களே -ஆன பின்பு
அவர்களை விட்டு
சர்வ அவஸ்தையிலும் சென்று பற்றலாம் படி ஸூலபனாய்
தான் சந்நிஹிதனுமாய்க் கொண்டு
சர்வேஸ்வரன் திரு நறையூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
மோஷார்த்தமாக யத்தனித்த நீ
அதில் தோள் மாறும் அளவும் செல்ல
அத்தோடு போலியாய் சொல்லலாயிருக்கிற திரு நறையூரிலே புக்கு
ஆஸ்ரயிப்போம் வா -என்று திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –
(வான் உலகம் என்று எய்வோம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அன்றோ
அவ்வளவும் திரு நறையூரில் அனுபவிக்க
துறப்பேன் இன்பம்
இப்படி கிராமமாக வர
இவரை இங்கேயே வைத்து கைங்கர்யம் -கொண்டு அருள
ஆற்றாமை விஞ்சினால் நின் ஆணை திரு ஆணை கண்டாய் -என்று நிர்பந்திக்க மாட்டாமல்
சேஷி சேஷ முறைமையை அறிந்து
இதில் ஆற்றாமை விஞ்சி கீழ் போல் இருக்க
அவன் சங்கல்பம் அறிந்து இருக்கலாம் என்று பாடுவார்
இதனால் குறை ஒன்றும் இல்லை
இனி இனி என்றும் இவரும் பல இடங்களில் த்வரிப்பார் –
திரு நறையூர் தேனே பொசிந்து காட்டியது வெள்ளம் எடுத்து ஓடுகிறது -)
——————————————–
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-
பண்ணின் மொழியார்-ராகத்தை விட இனிய பாஷை உள்ளவர்
ஒல்லை இங்கே வா -பகவத் விஷயீ காரர்-இங்கேயோ பைய நடமின்
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்-
யௌவனம் -என்று ஒரு கைம் முதல் கொண்டு
நாலு நாள் மூலை யடியே தோற்றின படி நடக்கும் அதுவும் போய்
ஒன்றைப் பார்க்கப் புக்கால் இலக்கில் தையாத படி மாம்ச பிரசுரமான கண் சுழன்று
ஆற்றுப் பெருக்கில் ருஜீ ஷாம்சம் ஒர் இடத்தில் திரளுமா போலே பீளை சேர்ந்து
அதுக்கு மேலே ஈளை கைக் கொண்டு
பின்னை சொல்லப் புக்க வார்த்தை முடிய தலைக் கட்ட மாட்டாத படி இளைத்தால் –
பண்ணில் இனிய பேச்சை உடையவர்கள்
மெள்ள நடக்கலாகாதோ -என்று ஸ்திரீகள் அநாதரிப்பதற்கு முன்பே –
காரணமான பூத பஞ்சகத்திலும் முற்பட உண்டான ஆகாசமும்
பிற்பாடு உண்டான பிருத்வி கார்யமான பர்வதமும்
ஆகாசத்தை சொன்ன இடம் காரண பதார்த்தங்களுக்கும் உப லஷணம்
பிருத்வி கார்யமான பர்வதத்தை சொன்ன இடம் கார்ய வர்க்கத்துக்கு அடைய உப லஷணம்
ஆக
இரண்டாலும் ஜகதா காரனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
வேதமும் –
இப்படி ஜகதா காரனாய்
வேத பிரதிபாத்யன் ஆனவன்
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-சாந்தோக்யம் -என்று இறே-சொல்லுகிறது –
வேள்வியும் ஆயினான்
அந்த வேதோக்தமான
சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே-
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி
வர்த்திக்கிற
திரு நறையூரை ஆஸ்ரயிப்போம்
ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –
—————————————-
பைய நடமின் என்ற இது
போகு நம்பி -6-2-2-என்றால் போல் இனிதாய் இருக்குமே
புடவைத் தலைப்பைத் தொடாதே என்று அபிப்ராயம் –
கண்ணன் அறிந்து பராங்குச நாயகி கிட்டே போனானே
இப்படி இங்கு கிட்டே வந்து அதுக்கு இந்த பாசுரம்
கண் போனாலும் ஆசை யாரை விட்டது
கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம் பால் வந்தது என்று இகழாத முன்
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-2-
கொங்குண் குழலார் கூடியிருந்து சிரித்து –
கொங்கு –
மது என்றுமாம்
அன்றிக்கே
பரிமளம் என்றுமாம்
மிக்க பரிமளத்தை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள்
முன்பு இவன் பக்கல் அர்த்தமும் யௌவனமும் உண்டான போதே
ஒருவருக்கு ஒருவர் சீறு பாறு என்று சேராது இருந்தவர்கள்
அவை போனவாறே இவனை ஷேபிக்கைக்கு
உறுப்பாக திரள இருந்து சிரித்து –
நீர் இங்கு என் -இருமி எம்பால் வந்தது என்று இகழாத முன்-
உம்மை அறியீரோ-
எங்களை அறியீரோ-
நீர் இங்கு என் செய்வதாக வந்தது-
நீர் வரும் இடமோ இவ்விடம் என்று சொல்லுகிற அநாதார உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே-
திங்கள் எரி கால் செஞ்சுடராயவன் தேசுடை-
ஜகத்துக்கு உபகாரகமான பதார்த்தங்களை உண்டாக்கின
ரஷகனான சர்வேஸ்வரன்
பரிக்ரஹித்த தேசம் ஆகையாலே
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள –
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே-
அவன் நமக்காக வந்து நிற்கிற தேசத்திலே
நாமும் புக்கு ஆஸ்ரயிப்போம் –
————————————
எல்லாம் போனாலும் ஆசை மட்டுமே உள்ளது
போகும் பொழுது கண்ணைத் திறந்து பார்த்துப் போவோம் என்று பார்க்கிறார்கள் –
அப்பொழுது இவர்கள் பாசுரம் இருக்கும் படி –
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே–6-4-3-
கோ செங்கணான் சோழன் கைங்கர்யம் –
துர் அபிமானம் ஒழிந்து ஸ்தோத்ரம் பண்ணிய தேசம்
இது மேலும் பல இடங்களில் உண்டே –
கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
பரிமளத்தால் மிக்க குழலை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
திரள இருந்து சிரித்து
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன் –
உம்முடைய பாகம்-( மூப்பு-) ஒன்றையும் புத்தி பண்ணுகிறிலீரோ –
எங்களுடைய ஒப்பனையை நீர் இனி ஏத்திக் காண்பது-
என்று இங்கனே பண்ணுகிற ஷேப உக்திகள் செவிப் படுவதற்கு முன்பே –
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழுமூர்-
துரபிமாநியான ஷத்ரியன் ஆனவன்
பக்ன அபிமானியாய் திருவடிகளிலே விழுந்து
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
ஆஸ்ரயித்து த்ருஷ்டத்தில் தனக்கு வேண்டுமவற்றைப் பெற்று
உஜ்ஜ்வலனாகிற ஊர் –
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
தளர்ந்தார் தாவளம்-( ரக்ஷகம்-) யாய்த்து
எல்லாருக்கும் தம் தாமுடைய அபேஷிதங்கள் பெற்று போகலாம்படி
அவன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்தை
நாம் போய் ஆஸ்ரயிப்போம் –
—————————————————–
எம் கோலம் என் காண்பது என்றாலும்
போகவும் மாட்டாதே
இடையிலே கிடைக்க
இடை அழகிலே சிக்குப்பட்டு இடை கழியிலே இருக்க –
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே —6-4-4-
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வஞ்சிக் கொம்பையும்
அரவையும்
வல்லிக் கொடியையும்
(மற்று உள்ள வற்றையும் )
தோற்கடிக்கும்
இடையை உடையராய்
(இடை இருப்பதை அநு மானித்தே அறிய வேண்டும் படி )
வம்புண் குழலார் வாசலடைத்து இகழாத முன் –
பரிமளிதமான குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள்
முற் காலம் இவனை விரும்பி
பின்பு வெறுவியன் ஆனவாறே
புறம்பே தள்ளிக் கதவடைப்பார்கள் –
இகழாத முன்-
இவன் தான் பின்னையும் சாபலத்தால் போகாதே புறம்பே நிற்கும்-
லஜ்ஜித்து இவன் அங்கு நின்றும் கால் வாங்கிப் போகைக்காக
இவனுக்கு போக யோக்யதையை இல்லாமையைச் சொல்லி பரிபவிப்பவர்கள் –
இப்படிப் பட்டவர்கள் பரிபவ உக்தி செவி படுவதற்கு முன்பே-
செம் பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் –
அங்கு உள்ளவை அடைய
எப்போதும் பக்வ பலமாய் இருக்கும் ஆய்த்து –
கமுகுகள் ஆனவை செம் பொன் போலே இருக்கிற
கனிகளை உண்டாக்குகிற பொழிலாலே சூழப் பட்டு இருக்கும்
(ஞான பக்த்யாதிகளால் பழுத்த ) முக்த பிராப்ய பூமி என்னும் இடம் தோற்றி இருக்கும் –
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –
சர்வ அவஸ்தையிலும் பற்றலாம்படி
விஸ்வச நீயனானவன் வர்த்திக்கிற திரு நறையூரை
நாம் ஆஸ்ரயிப்போம் –
—————————————————
கீழே வாசலடைத்து இருந்து பரிபவிக்கச் செய்தாலும்
கண்ணின் அழகைச் சொல்லிக் கொண்டாடினாலும்
நெஞ்சு நெகிழாமல் இருப்பார்களே –
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே—6-4-5-
சலம் கொண்ட சொல்-கபட யுக்திகள் –
நலங்கொள் நறையூர்-அபீஷ்ட பிரத நன்மை –
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் –
கண்ணின் உடைய மௌக்த்யத்துக்கு மானும்
துள்ளுதலுக்கு கயலும்
கூர்மைக்கு வேலும்
சிவப்புக்கு காவியும் (செங்கழு நீர்ப்பூ)
போலேயாய்
பின்னையும் இவற்றைத் தோற்பித்த கண்ணை உடையராய் –
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழா முன் –
ஒரு காலும் அனுகூல வாதம் பண்ணக் கடவர் அன்றிக்கே
சல உக்திகளைப் பண்ணக் கடவர்களான
ஸ்திரீகள் அபஹசித்து அநாதரிப்பதற்கு முன்பே –
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு நலங்கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சே –
அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட
இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
அபிமத லாபத்தாலே களித்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
ஆக
இன்னது பெற்றிலோம் என்னும் சோகம் இன்றிக்கே
உத்தேஸ்யத்தைப் பெற்று களித்து வர்த்திகலாம் படியான
நன்மையை உடைய தேசத்தை
நாம் ஆஸ்ரயிப்போம் –
————————————————
சலம் கொண்ட சொல்லார்
ஒரு கால் அல்லது ஒரு கால் சங்கம் வாராதோ என்னும் நப்பாசையால் இருக்க
அபி நிவேசம் மாறியதை சொல்லி அவமதிப்பார்கள்
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன்
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-
மின்னேர் இடையார் வேட்கையை மாற்றி இருந்து –
மின்னொடு ஒத்த இடையை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
இவன் பக்கல் அபி நிவிஷ்டைகளாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –
என்னீர் இருமி எம்பால் வந்தது என் என்று இகழா முன் –
நீ எங்கள் பக்கல் வருகைக்கு கொடு வந்த பரிசிலோ இது
இருமிக் கொண்டு எங்கள் பக்கல் என் என்று வந்தீர்
என்று இங்கனே அநாதார உக்திகளை பண்ணுவதற்கு முன்னே –
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான் –
கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
விலங்காலே எரி ஊட்டினான் -என்னவுமாம் –
அன்றிக்கே –
இலங்கு எரி ஊட்டினான் -என்னவுமாம் –
விலங்கு என்ற போது
திருவடியாலே -என்கிறது
இலங்கு என்ற போது-
முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு
வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது
பெருமாள் தோளை அண்டை கொண்டு
அத்தாலே வயிறு நிறைய புஜித்து
தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –
சகல தாபமும் ஆறும்படியான
ஜல சம்ருத்தியை உடைத்தான திரு நறையூரை
நாம் புக்கு ஆஸ்ரயிப்போம் –
பொருந்தாத ராவணனை அழியச் செய்து
விபீஷணனுக்கு புகலாய் நின்ற சக்கரவர்த்தி திரு மகனைப் போலே
நம்முடைய விரோதியை வாசனையோடே போக்குகைக்கு ஈடான
பெரு மிடுக்கனானவன் வந்து வர்த்திக்கிற திரு நறையூரிலே
போய்ப் புகுவோம் –
—————————————
புறத் திண்ணையில் கிடக்க
வருபவர் வர மாட்டார்களே
போனானோ என்று வாசலில் எட்டிப் பார்க்க
தனது மேல் அபி நிவேசத்தாலே பார்த்தார்களாக
நுதல் அழகை பார்த்து பேச
தங்கள் நைராஸ்யம் எல்லாம் தோற்ற பொல்லாங்குகளை வர்ணித்து
புறம்பாக்கும் முன் போக வேண்டுமே என்கிறார் –
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம்
சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7-
நல்லார் -வேத அத்யயனம் பண்ணி -அனுஷ்டானமும் செய்து இருக்கும் ஆச்சார்ய சீலர் –
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் –
வில்லோடு ஒத்த நுதலை உடைய
ஸ்திரீகள் ஆனவர்கள்
இவனைப் பெறா விடில் பிழையாதாரைப் போலே ஆசைப் பட்டார்கள்
இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
அது தவிர்ந்தாலும்
அது தன்னை மறைத்து இருக்கை அன்றிக்கே சிரித்து –
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம் –
முன்பு இவன் உடைய வடிவு அழகையும்
அதினுடைய ஏக ரூபதையையும் சொல்லிக் கொண்டாடிப் போந்தவர்கள்
இவன் பொல்லான் திரைந்தான் -என்று அவர்கள் உடைய புல்லிய சொல்லு
செவிப் படுவதற்கு முன்னே –
சொல்லார் மறை நான்கோதி –
பதத்தில் வர்ண க்ரம நியதத்வம் போலே யாய்த்து
வாக்யத்தில் பத க்ரம நியதத்வம் இருக்கிற படி –
ஓதி –
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சாரணத்வம் ஆகிற க்ரமத்திலே அப்யசித்து-
இது தான் காதா சித்தகமாய் இருக்கை அன்றிக்கே
யுலகில் நிலா யவர் -நல்லார் –
வேதத்துக்கு ஸ்தாபகராய் போரும் இதுவே ஸ்வ பாவமாக உடையராய் இருக்கை –
வேதத்தில் வாசனை போய்
ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே
ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –
நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
நாமும் போய் ஆஸ்ரயிப்போம் –
———————————————————
இவன் பொள்ளான் என்றவாறே
நீங்கள் தானே கண்ணால் வசப்படுத்தி மன்மதன் என்று கொண்டாடினீர்கள்
இப்பொழுது புன் சொல் என்ன
அவர்கள் இவர்களை அநாதரித்து
பார்ஸ்வத்தில் உள்ள பெண்களை பார்த்து உன்னை பார்த்தோ இவன் வந்தான்
என்று பேசும்படி இருக்கவோ –
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக்
கேண்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-8-
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார் தம்மைக் கேளுங்கள்-
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராய்
மற்றும் கண் அழகுக்கு வேண்டும் நன்மைகளை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
தாங்கள் முன்பு இவன் பக்கல் த்ரவ்யமும் யௌவனமும் உண்டான அன்று
இவன் காமன் என்று கொண்டாடிப் போந்தவர்கள்
அருகு இருந்தாரைப் பார்த்து -கேளுங்கள்-
ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் –
ஈளையோடு ஏங்கு கிழவன்-என்பதற்கு முன்னே -என்னுதல்
ஈளையோடு ஏங்கு கிழவன்-உங்கள் -கேள் -( உங்கள் காதலனா )
முன்பு என்னுடையவன் என்று ஆதரித்தவர்கள்
இப்போது ஒருவருக்கு ஒருவர் உங்களிடைய கேள் உங்களுடைய கேள் என்னா நிற்பார்கள் –
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் –
நித்ய உத்சவமும்
வைதிக சமாராதானமும்
என்றும் மாறாத ஊர் –
நாளு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
பரம பத்திலே போய் நித்ய அனுபவம் பண்ணும் அளவும் செல்ல
இப் பிரக்ருதியோடே
அத்தோடு போலியான திரு நறையூரிலே புக்கு அனுபவிப்போம் –
—————————————–
கீழே முகம் பாராமே பரி பவிக்க
அதர பழுப்புக்கு தோற்று
போகப் பார்க்க
விழுந்து கோலை பற்றி நாலா நிற்கும் அத்தனை போக்கி
அடி இட்டு கிட்டே போக முடியாமல்
சரம அவஸ்தையோ -கிட்டாமல் அணைக்காமல் போக வேண்டி உள்ளதே
அங்கு அவன் அணைப்புக்கு பாரித்து இருக்க வேண்டி இருக்க இதுவோ வேண்டியது-
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன்
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-9-
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட –
கோவைப் பழம் போலேயாய்
விளங்கா நின்று உள்ள அதரத்தை உடைய ஸ்திரீகள்
இவன் பக்கல் தாங்கள் பண்ணி வைக்கும்
ஸ்நேஹத்தைத் தவிர்த்து –
குனி சேர்ந்து வுடலம் கோலில் தளர்ந்து இளையா முன் –
முன்பு இறுமாந்து இறே இருப்பது –
இப்போது வளைவு தானே ஸ்வ பாவமாய்
நிமிர்ந்து வியாபாரிக்க ஒண்ணாத படி யாய் இருக்கும் ஆய்த்து –
அநந்தரம் ஒரு கோலை அபாஸ்ரயமாகப் பற்றும்
அத்தைத் தரிக்க பிடிக்க மாட்டாமையாலே அது தனக்கு அபாஸ்ரயம் ஆக மாட்டாது
தான் அதுக்கு அபாஸ்ரயம் ஆக மாட்டாதே
இப்படி இளைப்பதற்கு முன்னே –
பனி சேர் விசும்பில் பால் மதி கோள் விடுத்தான் இடம்-
ஆகாசப் பரப்புக்கு அடைய தானே
பிரகாசகனாய் இருக்கிற சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கினவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –
பிராட்டிக்காக பரிகிரஹித்தான் என்கிற பெருமையை உடைய
திரு நறையூரை
அவள் பரிகர பூதரான நாம் போய்
ஆஸ்ரயிப்போம்
நனி -பெருமை –
(நீளா தேவி பிரதானம் இங்கே
திரு வெள்ளறை ஸ்ரீ தேவி பிரதானம்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஸ்ரீ பூமா தேவி பிரதானம் )
————————————
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –6-4-10-
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை யிலாத முன் –
பிறை ஒத்த நுதலை உடையரான ஸ்திரீகள் ஆனவர்கள்
நம் பக்கல் பேணுதல் தவிருவதற்கு முன்னே –
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற –
மது மிக்க பொழிலாலே சூழப் பட்ட
திரு நறையூரிலே புக்கு ஆஸ்ரயிப்போம் என்று
தம் திரு உள்ளத்தோடு கூடி –
கறையார் நெடு வேல் மங்கையர் கோன் கலிகன்றி சொல் –
பிரதி பஷத்தை அழியச் செய்து
கரை கழற்ற அவசரம் இல்லாத படி இருக்கிற
நெடு வேலைக் கையிலே உடையராய்
திரு மங்கையிலே உள்ளாருக்கு நிர்வஹகரான ஆழ்வார் அருளிச் செய்த –
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன்னரசு ஆவரே –
ஸ்திரீகளும் கண்ணுக்கு இலக்கான யௌவனமும் உண்டான போதாக
இத்தை மறவாதே-
அப்யசிக்க வல்லவர்கள்
என்றும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகரான
நித்ய ஸூரிகள் உடைய தேசத்துக்கு நியாமகராகப் பெறுவார் –
(அவனோ -வான் இளவரசு -நித்ய யுவா குமாரன்)
என்றும் ஒக்க ஏக ரூபராய் இருக்கும் அவர்கள் இறே அவர்கள் –
அவன் சாம்யா பத்தி கொடுத்து வைக்கையாலே –
ஆண்மின்கள் -என்னும் படி தடங்கல் இல்லாத நியாமகராகப் பெறுவார் –
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கண்டால் பொருள் இன்பம் கொண்டாடி அற்ற காலை
கண்ட பேசி ஏசுவாராய்க் கை விட்டு தண்ணறையூர்
பற்றாத் தொழு நெஞ்சே என்னு பரகாலன் சொல்
கற்றார்க்கு இல்லை கலக்கம் -54-
அற்ற காலை –பொருள் இல்லாத போது –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply