ஸ்ரீ பெரிய திருமொழி-4-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் பிரசித்தி -உத்சவர் திருநாமத்தாலே
நாங்கை –கோஷ்ட்டி நான்கில் இதுவும் ஓன்று

போதலர்ந்த பிரவேசம் –

தனக்கு அசாதாரணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய பிரதிபந்தகத்தைப் போக்கி –
அரு வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து-3-10-1-
அவர்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணுகைக்காக அரிமேய விண்ணகரிலே சந்நிஹிதன் ஆனான் என்றார் –
அநந்ய ப்ரயோஜனர்களுக்கு கீழே –
அவ்வளவு அன்றிக்கே
பிரயோஜனாந்த பரர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் -இந்திரனும் இமையவரும் -திருப் பாற் கடலில் போலே
அபிமதங்களைக் கொடுக்கைகாக சர்வேஸ்வரன் வந்து வர்த்திக்கிற தேசம்
திருத் தேவனார் தொகை என்கிறார்-

தேவர்கள் கூட்டமாக வந்து கேட்டுப் பெற்றுப் போகிறார்கள் இங்கு
மண்ணி ஆறு காவேரி ஆறு நடுவிலே இந்த திவ்ய தேசங்கள் –

பாற் கடல் கடைய
வந்த பிராட்டி அமர்ந்த மாதவன் அன்றோ இவன்
தொகையாக திருக் கல்யாணத்துக்கு வந்தவர்கள்
தெய்வ நாயகன் மூலவர்
சோபன விமானம்

———————————————————————-

போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தட மண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

மாதவன் -சுவையன் திருவின் மணாளன் -ராசிக்ய பூர்த்தி –
தேதென=தென்ன தென்ன என்று ரீங்கரிக்கும்
கீழே வணங்கு மட நெஞ்சே
இதில் க்ஷேத்ர மஹாத்ம்யம்
பிராட்டி ஆகர்ஷித்து நம்மை சேர்த்து விடுவாளே –

போதலர்ந்த –
காலத்தே அலர்ந்த என்னுதல்
பூக்கள் அலர்ந்த என்னுதல்

பொழில் சோலைப் புறம் எங்கும்-
செறிந்த பொழிலை உடைத்தான பர்யந்தங்கள் எங்கும்

பொரு திரைகள்-
தன்னில் தான் பொரா நின்று உள்ள திரைகள் ஆனவை

தாதுதிர வந்தலைக்கும் –
அப் பொழிலில் தாது உதிரும்படியாக
வந்து அலை எறிகிற –

தட மண்ணித் தென் கரை மேல் –

மாதவன் தான் உறையுமிடம்-
ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
பிராட்டியும் தானுமாக திருச் சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே
( குபேரன் போலவும் இந்திரன் சசி தேவி உடன் போலவும் என்று ரிஷி கரி பூசி அருளுகிறார்
அங்கு ஒரே ஸம்வத்சரம்
இங்கே தானே மன்னி நித்யவாஸம் )

வயல் நாங்கை –
வயலை உடைத்தான திரு நாங்கூரிலே

வரி வண்டு –
வரியை உடைத்தான வண்டானது

தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே
தேதென என்று இசை பாடா நின்றுள்ள
திருத் தேவனார் தொகை

தென்ன தென்ன என்று இங்கனே சொல்லக் கடவது
ஆளத்தி வைக்கையைச் சொன்னபடி

—————————————————————-

நிழல் வாய்ப்பு நீர் வாய்ப்பு
பரம ரசிகன் என்றவர்
அவ்வளவும் அன்றிக்கே
சர்வ வியாபகனானவன் ஆஸ்ரயணத்துக்காக -நித்ய வாசம் செய்து அருளுகிறார் –

யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே–4-1-2-

ஷத்ரிய விசுவாமித்திரர் -வசிஷ்டர் ப்ரஹ்ம தண்டம் வைத்து ஓட விரட்டியது போலே
இங்குள்ள ப்ராஹ்மண உத்தமர்கள் பாண்டிய மன்னனை வெல்லுமவர்
யாவரும் யாவையுமாய்–சேதனர்கள் எல்லாரையும் அசேதனங்கள் எல்லாவற்றையும் –
ஆய்–பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் – விஸிஷ்ட அத்வைதம்
எழில் வேதப் பொருள்களுமாய்-தனியாக சொன்னது -கீழே ப்ரத்யக்ஷமாக -இங்கு
இந்திரியங்களுக்கு அப்பால் பட்டுள்ள பல வற்றையும் சொன்ன படி
ஆத்மாக்களை -அனைவரையும் சொன்னபடி -சேதனர் கீழே தேவாதிகள் பிராகிருத மண்டலத்தில் பார்க்கலாம்
கட படாதிகளை கீழே சொல்லி -திவ்ய கோபுராதிகளையும் சொன்னபடி
புனர் யுக்த தோஷம் வாராமல் -இருக்க -கீழே பிரத்யக்ஷம் –
இங்கு கோ வணி வர்த்த நியாயம் -குடை பிடித்த மாணவன் -போல்
கடாதிகள் -தேவாதி சரீரங்களை அதிஷ்டமாகக் கொண்ட ஆத்மாக்களையும் சொன்னபடி
அதீந்த்ரத்வ ப்ரதிபாத்யம் -எழில்
மூவருமாய் முதலாய மூர்த்தி–இருவர் அவர் இணைவனாம் முதல்வனும் தானே

யாவரும் யாவையுமாய் –
யாவருமாய் யாவையுமாய்
பிரத்யஷ போக்யமாய் இருக்கிற
சேதன அசேதனங்கள் அடங்க தான் என்ற சொல்லுக்குள் அடங்கும்படி
இவற்றை பிரகாரமாகக் கொண்டு
தான் பிரகாரியாய் இருப்பவனுமாய்

எழில் வேதப் பொருள்களுமாய் –
தேஹா திரிக்தமான ஆத்ம வஸ்து
காரண அவஸ்தமான சித் அசித்துக்கள்
கல்யாண குணங்கள்
பகவத் ஸ்வரூபம்
இவற்றை பிரதிபாதிகக் கடவ வேதைக சமதிகம்யமான அர்த்தங்களும் தானாய்

(லோகத்தில் ஷர அக்ஷர இரண்டு வித ஜீவாத்மா ஸ்ரீ கீதை
கண் முன்னால் பார்க்கும் பத்த ஜீவர்களை
முக்த நித்யர்களையும் சொன்னபடி
அழிய கூடிய சரீடத்துக்குள் அகப்பட்டுள்ள ஜீவாத்மா -தாத்பர்ய சந்திரிகை
காரண அவஸ்தமான சித் அசித்துக்கள்-மஹதா திகள்
பகவத் ஸ்வரூபம் -ரூபம் -பொருள்களுமாய் என்பதால் ஸ்வரூபம் தானே அனைத்து ரூபங்களுமாகும்
ஸ்வ அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹங்களைச் சொன்னபடி )

மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான
ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-
(மூவருமாய்–ப்ரஹ்மாதிகள் அவனுக்கு பிரகாரம் போல் அவனது ரூபங்களை குணங்களும் பிரகாரம் )

மூர்த்தி சப்தம்
ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய்
பிரதானமானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-

மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார்
மாவின் மேல் வரும் -குதிரை முதுகிலே வருபவராய்
திண்ணிய ஆயுதங்களை உடையராய்
இருக்கிற ராஜ லோகத்தை எதிரே புறப்பட்டு ஓடி
வெற்றி கொள்ளக் கடவராய் இருக்கிற ப்ராஹ்மணர் –

மன்னு நாங்கைத்-வர்த்திக்கிற திரு நாங்கூரிலே
ஒண் திறல் தென்னன் ஓட வடவர சோட்டம் கண்ட திண் திறல் ஆளர் -4-5-6-
என்னக் கடவது இறே

அவ் ஊரில் உள்ளாரை உடைய பிள்ளை என்கிறவன் -அங்குத்தை ஆலயத்தைக் கவிபாட என்று வர
அவனை எதிரே சென்று அடித்தோட்டி பின்னை பாடப் பெறாதே போந்தான் -என்று ஒரு பிரசித்தி உண்டு இறே –

தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே
தேவர்களும் தம்தாமுடைய அதிகாரார்த்தமாக வந்து ஆஸ்ரியா நிற்பதாய்
பொழிலை உடைத்தான
திருத் தேவனார் தொகையே

——————————————————————-

ஸ்தூல சித் அசித் -விசிஷ்டம்-ஸூஷ்ம சித் அசித் -விசிஷ்டம் கீழே அருளிச் செய்து
இங்கு நித்ய விபூதிக்கும் அங்குள்ள நித்ய முக்தர்களும் பிரகாரம் என்று விசேஷித்து விளக்குகிறார்
பரமாகாசத்தில் -பரமபதம் -அங்கு ஸ்ரீ வைகுண்டம் -அதில் திரு மா மணி மண்டபம் –

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-3-

மண்ணாடும் -த்ருஷ்டாந்தமாக இங்கு
இங்கு பிரகாரமானவோ பாதி விண்ணாடும் விண்ணாட்டில் உள்ளாறும் பிரகாரம் –
அக்குளத்தில் மீன் என்னும் பொழுது சீதா பிராட்டி போல் என்று இளைய பெருமாள் சொன்னது போல் –
ஆனாத-அழிவு இல்லாத ஆய்விட்டது என்று சொல்ல முடியாதே –

வானாடும் மண்ணாடும் –
பரம பதமும் சம்சாரமும்
அவ்வவ தேசங்களே அன்றிக்கே அவற்றில் உண்டான பல ஆத்மாக்களுக்கும்
தான் என்ற சொல்லுக்கு உள்ளே தனக்கு பிரகாரமாய் அடங்கும்படி இருக்கிற சர்வேஸ்வரன்

மற்றுள்ள பல்லுயிரும் தானாய வெம்பெருமான் –
தானும் குடும்பமுமாய் கல நெல் ஜீவிப்பான் ஒருவனை
உனக்கு என்ன வேணும் என்றால் –
எனக்கு கல நெல் வேணும் -என்னும் இறே
தன் அபிமானத்துக்கு உள்ளே அடங்குகையாலே
அப்படியே தானே அதுக்கு எல்லாம் அபிமானியாய் இருக்கிற சர்வேஸ்வரன்

தலைவன் அமர்ந்து உறையும் இடம் –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய்
புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி
இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –
(நிர்வாகக -நிர்வாக்ய நிபந்தன-சாமானாதி கரண்யம் )

ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள் –
ஆன -மாண்டு போன அப்படி ஆகாததனாய் -அழியாததாய் –
அழியாத நிரவதிக சம்பத்தை உடையராய் இருக்கிற ப்ராஹ்மணர் வர்த்திக்கிற திரு நாங்கூரிலே

தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –
தேன் மிக்கு இருந்துள்ள -என்னுதல்
வண்டுகள் நெருங்கி இருந்துள்ள -என்னுதல்

——————————————————–

இப்படி உபய விபூதி நாதன்
இங்கு நித்ய வாசம் செய்து அருளும் காரணம் இதில்
தேவர்கள் தொகையாக வந்தமையை அருளிச் செய்கிறார் இதில் –
பாற் கடல் கடைய
வந்த பிராட்டி அமர்ந்த மாதவன் அன்றோ இவன்
தொகையாக திருக் கல்யாணத்துக்கு வந்தவர்கள்
தெய்வ நாயகன் மூலவர்
சோபன விமானம் –

இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-4-

எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் –எப்பொழுதும் வேதங்களை சம்பூர்ணமாக கற்றவன் –
திரு நாபி கமலம் பிறப்பிடமாக உடைய பெருமை உண்டே

இந்த்ரனும் இமையவரும் –
இந்த்ரனும் தேவர்களும்

முனிவர்களும் –
சனகாதிகளும்

எழில் அமைந்த –
எழில் அமைந்து இருப்பானாய்

சந்தமலர்ச் சதுமுகனும் –
சந்தஸ்சை யுடையானாய்
தாமரை மலரைப் பிறப்பிடமாக உடையனாய்
சதுர்முகனும்

கதிரவனும் சந்திரனும் –
விபூதியில் தலை வலித்தார் அடங்கலும்-

பெரும் தலையர் –
தாம் தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈஸ்வரோஹம் என்று இருப்பவர்கள்

(பெரும் தலைவர்கள்
அஹங்காரிகள்
வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடாதிகள் உண்டே இவர்களுக்கு )

எந்தை எமக்கு அருள் என்ன-
எங்களுக்கு ஸ்வாமியான நீ
எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன

நின்று அருளும் இடம் –
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்

எழில் நாங்கை சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே
சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற
தேசம் ஆய்த்து –

————————————————————

ஆபத்சகன்
தேவர்கள் ஆஸ்ரயிக்க இது அன்றோ காரணம் –

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரை மேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே —–4-1-5-

திரட்டும்-ராசி ராசியாக திரட்டிக் கொண்டு வரும் மண்ணி ஆறு –

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
ஆகாசம்
கடல்கள்
திவீபங்கள்
குலகிரிகள்
இவை எல்லா வற்றையும்

உண்ட பிரான் உறையும் இடம் –
பிரளய ஆபத்திலே
திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்

ஒளி மணி சந்தகில் கனகம்
ஒளியை உடைத்தான மணிகள்
சந்தனம்
அகில்
பொன் -இவற்றை

தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மணித் தென் கரை மேல்
தெளிந்த திரைகள் வரத் திரட்டுகிற திகழ்
மண்ணித் தென் கரை மேல்

திண் திறலார் பயில் நாங்கைத் திருத் தேவனார் தொகையே —
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள்
நெருங்கி வர்த்திக்கிற தேசம்

—————————————————————

ஆபத் ஸகத்வத்தை வேதங்களாலும் சொல்லி முடிக்க முடியாத
வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவன் -நான் மறையும் தொடராத-பாலகனாய்-
பாலகனையே சொல்லி முடிக்க முடியாத
பாலகனாய் இருக்கும் பொழுதே பரமன் அன்றோ இவன்
கோவிந்தா நாமம் புடவை சுரந்தது என்றால் நாராயண நாமம் வைபவம் சொல்ல வேண்டுமோ
தாமோதரனை கூட அறிய முடியாத ஒருவன் அன்றோ –

ஞாலம் எல்லாம் அமுது செய்து நான் மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே—–4-1-6-

ஞாலம் எல்லாம் அமுது செய்து –
பூமிப் பரப்பை அடைய அமுது செய்து

நான் மறையும் தொடராத –
சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான

பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதி மாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய்
ஒரு பவனான ஆலிலையிலே
கண் வளர்ந்து அருளுகிற
சர்வாதிகன் வர்த்திக்கிற தேசம்

சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
தட மண்ணித் தென் கரை மேலே
சாலி வளம் பெருகா நிற்பதாய்

சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே
வயலை உடைத்தான
திரு நாங்கூரிலே

—————————————————

லோகங்களுக்கு ஆபத் சஹன்
பாலகனுக்கு உதவிய விருத்தாந்தம் இதில்
நரசிம்ம
ராகவ சிம்ம
யாதவ சிம்ம
மூன்று பாடல்கள்

ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே–4-1-7-

ஏடேறு பெரும் செல்வ-மூன்று அர்த்தங்கள் வியாக்யானத்தில் உண்டே
ஏட்டிலே எழுதி பார்க்க வேண்டும் படி செல்வம்
குற்றம் அற்ற பெரிய ஐஸ்வர்யம்
ஏடு ஏறிப் போம் படியான ஐஸ்வர்யம்-ஏடு காணாதே ஐஸ்வர்யம் சொல்லி முடிக்க
சேடேறு-வளர் இளம் பொழில் போல் இளமை வளரும் –

ஓடாத நாட்டில் நடமாடாத
சேடேறு -இளைமை வளரா நின்றதாய்

ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
நாட்டில் நடையாடாத
நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து
ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்

வாடாத வள்ளுகிரால் -வாடக் கடவதல்லாத
கூரிய திரு உகிராலே

பிளந்து அளைந்த மாலதிடம் –
ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே
தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து
பின்னை அளைந்து இருந்த வ்யாமோஹம்

ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
அவ் ஊரில் ப்ராஹ்மணர் உடைய சம்பத்தைக் கண்டு விடும் அது அன்றிக்கே
புத்தகத்திலே எழுதிப் பார்க்க வேண்டும்படி யாய்த்து இருப்பது ஸ்ரீ ராமாயணம் போலே

ஏறுகை -போகை
ஏடு -குற்றம்
குற்றம் அற்ற பெரிய ஐஸ்வர்யம்
அன்றிக்கே
ஏடு ஏறிப் போம் படியான ஐஸ்வர்யம்
ஏடு ஏறுகையாவது -ஏடு மாண்டு போகை

சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே
இளைமை மிக்க பொழில் தழுவி இருந்துள்ள
அன்றிக்கே
மலரை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட
வளர் இளம் பொழில் -திருவாய்மொழி -2-10-1-என்னுமா போலே
(வளர வளர முதுமை வரும்து அன்றிக்கே இளமை மிக்கு இருக்குமாம் )

————————————————-

ஆண் பிள்ளைக்கு உதவியது மாத்ரம் அன்றிக்கே
தனது பத்னிக்கு உதவியது -சக்ரவர்த்தி திருமகன் அனுபவம்

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8

வாராளும் இளம் கொங்கை என்றும் -பாட பேதம்-ஆரும் -தாங்கப் படுமதாய்

வாராரும் இளம் கொங்கை –
தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய

மைதிலியை மணம் புணர்வான் –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-

காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்

ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
அழகு மிக்கு இருந்துள்ள
நிரவதிக சம்பத்தை உடைய
ப்ராஹ்மணர் வர்த்திக்கிற நாங்கை தன்னில்

சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே
அழகு மிக்க மலரை உடைத்தான
பொழிலாலே சூழப் பட்ட
ஊரில் சம்பத்தை கோள் சொல்லிக் கொடுக்கும் ஆய்த்து சோலை

———————————————————–

ஒரு பெண் கொடி ரக்ஷணம் கீழே
மதுரா நகரத்து ஸ்திரீகளுக்கு தன்னை கொடுத்து அருளிய ரக்ஷணம் இதில்
களிறு தரு புணர்ச்சி அவர்களுக்காக-கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழ–

கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம் பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே–4-1-9-

கூத்தன்–திவ்ய சேஷ்டிதங்களை உடையவன் –

கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழக்
பெரிய மஸ்தகத்தை உடைத்தான மத்த கஜம்
பாகனோடு கூட

கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
நட்டாற்றில் கோரை போலே நடுங்கி விழும்படியாக
அதன் கொம்பை குப்பைக் கீரை போலே
அனாயாசேன பிடுங்கிப் பொகட்ட
மனோ ஹாரியான சேஷ்டிதத்தை
உடையவன் வர்த்திக்கிற தேசம்

நகர ஸ்திரீ கலா லாப மது ஸ்ரோத்ரேண பச்யதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
களிறு தரு புணர்ச்சி அவர்களுக்காக

வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே
செவ்வியிலே அலறுகிற செண்பகத்தின் மணம்
மதிளையும் அத்தை வளைந்த சோலையையும்
உள்ளடக்கி இருக்கிற தேசம்

———————————————————————————–

காரார்ந்த திரு மேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே–4-1-10-

காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
மேகம் போல் ஸ்ரமஹரமான வடிவை உடைய
கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசமான

சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
அழகு மிக்க பொழிலை உடைத்தான
திரு நாங்கூரிலே திருத் தேவனார் தொகை மேல்

கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
சத்ருக்கள் பக்கல் வேல் கொண்டு வியாபாரிக்கும் இடத்தில்
தலைமை பெற்று இருக்குமா போலே யாய்த்து
கவி பாட்டிலும் தலையாய இருக்கும்படி

இப் பத்தையும் அப்யசிக்க வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
நன்மை மிக்க
அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
நலம் அந்தம் இல்லாத நாடு அன்றோ –
திருவடி திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய்
நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒரு நாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

போதமர் மா வானவர் வேட்ப வழங்கித் தான்
கோது அற்று எங்கும் கரந்து பாருண்டு ஆல் மீது துயில்
நான்கை தேர்வானார் தொகையான் நல்கும் அருள் என்னு நீலன்
பால் மனமே செய் சேவகம் -31-

போதமர் மா -அலர்மேல் மங்கை
கரந்து -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் -எல்லாப் பொருளும் தன்னுள் நின்றாலும்
கோது அற்று உறைவது -வியாப்ய கத தோஷம் தட்டாமல்

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading