அவதாரிகை –
அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளதை நேராகக் கொண்டு போனான்
என்கிறாள் –
——————————————-
மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கையும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே
புனலரங்க மூரென்று போயினாரே–25-
பதவுரை
மின் இலங்கு திரு உருவும்-மின்னல் போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்-பெரிய திருத் தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்-குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப் புடைத்த திருக் கைகளும்
கண்ணும்–திருக் கண்களும்
வாயும்–திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே–தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத் துழாய் மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு–தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்–மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி–ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்–என்னுடைய அழகையும்
என் நிறைவும்–என் அடக்கத்தையும்
என் சிந்தையும்–என் நெஞ்சையும்
என் வளையும்–என் கை வளைகளையும்
கொண்டு–அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு–என்னை அடிமை யாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த–பொன் போல் மலர்ந்த
நறு–பரிமளம் மிக்க
செருந்தி பொழிலின் ஊடே–ஸுர புன்னைச் சோலையினிடத்தே யிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்–நீர் வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய் விட்டார்!.
மின் போலே விளங்கா நின்றுள்ள திரு மேனியும்
பெரிய திருத் தோள்களும்
குவலயா பீடம் என்னும் யானையை நிரசித்த திருக் கைகளும்
திருக் கண்களும்
திரு அதரமும்
தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று மிக்க பரிமளத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையின் கீழே
திருத்தோள் அளவும் வரத் தாழ்ந்து விளங்கா நிற்பதாய் ஓன்றோடு ஓன்று பொருந்தி இருந்துள்ள திரு மகரக் குண்டலங்களையும் காட்டி
என்னுடைய சவுந்தர்யத்தையும் ஸ்த்ரீத்வத்தையும்
என்னுடைய மனசையும் வளையையும் கொண்டு
என்னை அடிமையும் ஆக்கிக் கொண்டு
பொன் போலே அலர்ந்ததாய் பரிமளிதமான பூவை யுடைத்தான செருந்திப் பொழிலிலே
ஜல ஸம்ருத்தியை யுடைய ஸ்ரீ ரெங்கம் நம்மூர் என்று சொல்லிப் போய் விட்டார் –
——————————————————–
மின்னிலங்கு திருவுருவும் –
மின் போலே விளங்கா நின்றுள்ள திருமேனியும்
கார் வண்ணம் திருமேனி -என்றும் –
கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்
ஔதார்யத்தையும்
ஸ்ரமஹரதையையும் பற்றி -சொல்லிற்று -கீழ்
இங்கு -அநபிபவ நீயதையைப் பற்றச் சொல்கிறது –
(எதிர் விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது.)
ஆனாலும் வடிவுக்கு நிறம் அது வன்றோ -என்னில் –
காளமேகத்தை அருண கிரணத்தாலே வழிய விட்டினால் போலே
திரு வாழி ஆழ்வானுடைய தேஜஸ்ஸூ-திரு மேனி எங்கும் ஒக்கப் பரவி இருக்கையாலே சொல்லுகிறது –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழி -என்னக் கடவது இறே –
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி –என்றார் இறே கீழே
தமஸ பரம உதாரா சங்க சக்ர கதா தரா ஸ்ரீ வத்ஸ வஷ நித்ய –தாரை சதுஸ் ஸ்லோஹி-என்கிற பெரிய மேன்மையைக் காட்டின படி –
மின்னிலங்கு திருவுருவும் –
கிட்டின போது -பெரு வயிற்ற கரு முகிலே -என்றாள்
பேர நின்றவாறே பளபளத்து தோற்றின படி –
(கார் வண்ணம் திரு மேனி என்றும்
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
என்று சொல்லி வைத்து
இங்கே மின் இலங்கக் கூடுமோ என்பதுக்கு பரிஹார த்ரயம்
1-பிரதமம் கார் வண்ணம் இத்யாதி
2-த்விதீயம் காளமேகத்தை இத்யாதி
3-வடிவுக்கு நிறம் அது என்றாலும் என்று அன்வயித்துக் கொள்வது
த்ருதீயம் கிட்டின போது இத்யாதி )
பெரிய தோளும்-
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
அவயவாந்தரந்களிலே போக ஒட்டாத படியான போக்யதையும் (தோள் கண்டார் தோளே கண்டார் )
காவல் துடிப்பையும் சொல்கிறது –
ஒதுங்குவார்க்கு நிழல் மிக்கு இருக்கை –
(ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ )பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா (கிமர்த்தம் ந விபூஷிதா ) -என்கிறபடியே
வீர சிஹ்னத்தையும் -போக சிஹ்னத்தையும் உடைத்தான தோள் -என்கை –
சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை—ஶம்ஸிபி
கை வளையும் மேகலையும் காணேன் -என்று விரோதி நிவர்த்தகவத்தையும்
நான்கு தோளும் -என்று போக்யதையையும்
இவள் தானே சொன்னாள் இறே
(சகாஸதம் ஜ்யாகிண கர்க்கஶைஶ் ஶுபை:
சதுர்பிராஜாநு விளம்பிபிர் புஜை: |
ப்ரியாவதம்ஸோத்பல கர்ண பூஷண
ஶ்லதாலகாபந்த விமர்த்த ஶம்ஸிபி: ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 33 –
வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்;
மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில்
இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –)
(இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே
தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம் )
(மேல் ஒவ்வொன்றுமே போக்யமாயும் ரக்ஷகமாயும் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்)
கரி முனிந்த கைத் தலமும் –
குவலயா பீடத்தை வேண்டாம் என்ற கையும்
கம்சனையும் சாணூர முஷ்டிகர்களையும் நிரசிக்கிற போதை வியாபாரம் எல்லாம் இதுக்கு வேண்டிற்று இல்லை இறே
இத்தால் வீர சிஹ்னத்தையும்
போக சிஹ்னத்தையும் உடைத்தான கை -என்கை –
புகர்ச் செம் முகத்த களிறட்ட பொன்னாழிக் கை -என்கிறபடியே
(நுகர்ச்சி உறுமோ மூ வுலகின் வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே–8-10-6-)
கையும் –
அறுகாழியோடு கூடி இருக்கிற கையாலே இறே குவலயா பீடத்தை நிரசித்தது –
எய் வண்ண வெஞ்சிலையே -துணையா -என்று வீர சிஹ்னத்தையும்
கை வண்ணம் தாமரை -என்று போக சிஹ்னத்தையும் காட்டினாள் –
கண்ணும் –
கிட்டினாரை ஓடி எறியும் கண்ணும்
கண் இணையும் அரவிந்தம் -என்றாள் இறே –
வாயும் –
அழகுக்கு தோற்று அனன்யார்ஹமானாரை குறித்து
தான் அனன்யார்ஹம் ஆனமை தோற்ற
சாந்த்வவாதம் பண்ணும் திருவவதாரம் –
வாய் கமலம் போலும் -என்றாள் இறே –
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே –
இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது
தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான
திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –
மலரின் கீழே தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி –
வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து
பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள
திரு மகரக் குழையும் காட்டி –
பிரிந்ததுக்கு மேலே –
திருவடி திருத் தோளிலே ஏறி
இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே )
தனக்கு உள்ளதை அடையக் காட்டி
இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –
இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-
சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து சர்வ ஸ்வா பகாரம் பண்ணினான் -என்கிறாள் –
என்னலனும் –
என்னுடைய சௌந்த்ர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதி ரூபங்களையும்
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்ம குணங்களையும் –
(நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கி நிற்பது.
மடமாவது, எல்லாமறிந்தும் அறியாது போலிருத்தல்.
அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல்.
பயிர்ப்பாவது, பர புருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.)
நலம் -குணம் –
என்னலம் -ஒருவராலும் அழிக்க ஒண்ணாத நலம் –
எதிர்த் தலையை தான் அழிக்கும் இத்தனை ஒழிய
தன்னை ஒருத்தராலும் அழிக்க ஒண்ணாத படி இருக்கை –
என்னிறைவும் –
என்னுடைய ஸ்த்ரீத்வமும் –
எதிர்த் தலையில் பும்ஸ்வத்தை அழிக்கும் படி இறே இவளுடைய ஸ்த்ரீத்வம் இருப்பது –
நிறைவு -அடக்கம் –
என் சிந்தையும் –
அதுக்கடியான மனசையும் –
என் வளையும் கொண்டு –
தான் போனால் ஆஸ்வாச ஹேதுவாய் இருக்கிற வளையும் கொண்டு –
என்னை ஆளும் கொண்டு –
என் சர்வத்தையும் அபஹரித்து கொண்டு போகை அன்றியே
சுமையாளும் நானே யாக வேணுமோ –
ஒரு வனத்தே புக்கு நேராக ஒடுக்கி அவன் தலையிலே சுமையை வைத்துக் கொண்டு போமா போலே
அங்கன் இன்றியே
அவனோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தை
அடிமையாக நினைத்து இருக்கையாலே
என்னை அடிமை கொண்டான் -என்கிறாள் -ஆகவுமாம் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல் -என்னக் கடவது இறே –
(கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திரு மார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே)
அங்கன் இன்றியே
சர்வ ஸ்வத்தையும் அபஹரித்திக்கொண்டு போகா நின்றால்
தன் உடைமையை தானே கொண்டு போகிறான் ஆகில்
நீ என் (எனக்கே சொத்து )என்னும்படி என்னை அனன்யார்ஹம் ஆக்கியும் போனான் -என்கிறாள்-
(“என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே
‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என் சிந்தையும் என் வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்;
இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க,
என்னுடையவற்றை அவர் கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி.)
(உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று –
போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைப்பது மேன் மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று.
அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி –
(நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்;)
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே-புனலரங்க மூரென்று போயினாரே
சர்வ ஸ்வாபகாரம் பண்ணினோம் –
சத்தை கிடக்க வேணுமே என்று ஊரைச் சொல்லிப் போந்தான் -என்கிறாள் –
தன் சௌகுமார்யத்துக்கு அனுரூபமாக சோலை யூடே போனான்
பொன் போலே அலர்ந்து பரிமிளிதமாய் இருந்துள்ள பூவை உடைத்தான
செருந்திப் பொழிலினூடே ஸ்ரமஹரமான கோயில் நம்மூர் என்று போயினர் –
திருநகரி யினின்றும் கோயில் அளவும் செல்ல பொழிலாய்க் கிடந்ததோ என்னில் –
ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால் -கண்டவிடம் எங்கும்
தளிரும் முறியும் ஆகாதோ -என்று பட்டர் அருளிச் செய்வர் –
பிரிந்தார் இரங்கும் நிலத்தில் மரம் செருந்தி (ஸூர பின்னை மரம் )இறே –
போயினாரே –
முன்பே கால் கடைக் கொண்டு பெற வேண்டும்படி காண் -போகிறபோது அவர் பின்புறம் இருந்தபடி –
புனலரங்கம் –
ஸ்ரமஹரமான தேசம் –
நித்ய சம்ஸ்லேஷம் பண்ணலாம் தேசம் –
போயினாரே –
பரம பந்துவாய் இருந்து வைத்து இப்படி செய்தார் காண் என்னும் இன்னாப்பாலே
பிரியாதே கூட இருத்தல் –
போகிற போது கூடக் கொண்டு போதல் –
செய்ய வேண்டாவோ -என்கிறாள் -ஆகவுமாம் –
பொன்னித்யாதி –
புஷ்பாபசயம் பண்ணுகைக்கும்
ஜல க்ரீடை பண்ணுகைக்கும்
ஏகாந்தமான தேசம் நம்மூர் என்று போயினர் -என்னவுமாம் –
பொழிலினூடே புனல் –
மேல் செருந்தியாய் கீழ் நீராய் இருக்கை –
போகிற போதை அவர் பின்பு இருந்த படி காணப் பெற்றது இல்லை காண் –
விக்கிரம சோழ தேவன் -உங்கள் தலைமகள் பிரிந்த இடத்தில் சொன்ன கவி என் என்ன –
அவள் எலும்பும் சாம்பலும் உடையவன் -என்றாள்
இவள் -மின்னிலங்கு திருவுருவம் -என்றாள் என்ன
தன் காலிலே துகை யுண்டவனை தோழிக்கு சொல்லா நிற்க
திருவுரு -என்பதே —
இவள் தலைமை வுடையவள் –
அவள் -பிணம் தின்னி -என்றாள் –
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply