திரு நெடும் தாண்டகம்–24–இருக்கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை

பெரிய திருவடி கொண்டு போனான் ஆகில் –
யஸ்யை தே தஸ்ய தத் தனம் -என்கிறபடியே

(ஆதி பர்வம் -யயாதி அரசே -மனைவி வேலையாட்கள் மகன் இவர்களுக்குத் தனியாக செல்வம் இல்லையே
இவர்கள் அண்டி இருக்கும் புருஷன் -ஸ்வாமி -யுடைய செல்வங்களே)

1-அவன் தான் உனக்கு பவ்யனாய் இருந்தானாகில் –
அவனுக்கு சேஷ பூதனான பெரிய திருவடி உனக்கும் சேஷமாய் அன்றோ இருப்பது
அது கிடக்க
2-மகிஷி வர்க்கத்துக்கு ஸ்வரூபேண தாஸ பூதனாய் அன்றோ அவன் இருப்பது –
இரண்டாலும் அவனை நீ போகல் என்று நீ நியமிக்க குறை என் -என்ன

(தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் )

அவன் ஒருவனுமே ஆகில் அன்றோ அது செய்யலாவது
நித்ய விபூதியில் உள்ளார் அடங்க வந்து சூழ்ந்து கொண்டார்கள்
அவர் தாம் பண்டு போல் அன்றியே
வடிவில் பௌஷ்கல்யத்தாலும் -மேன்மையினாலும் –அநபிபவ நீயராய் இருந்தார் –

அத்தாலே –
சென்று கிட்டவும்
வார்த்தை சொல்லவுமாய்
இருந்தது இல்லை காண் -என்கிறாள் –

————————————————————————————

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர்–பிரளய காலத்தில் உலகங்களை யெல்லாம் அமுது செய்த பெரிய திரு வாயை யுடைய வரும்,
இங்கே வந்து-இவ்விடத்தே வந்து
பொரு கயல்-ஒன்றோடொன்று போர் செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்-எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப–நீர்த் துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து–விரஹ வேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்-விளங்குகின்ற ஓசையை யுடைய
நீர் நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெரு வயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந் தவத்தர் அரு தவத்து முனிவர் சூழ-பரம பக்தி யுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்-ஒரு திருக் கையிலே
சங்கு-திருச்சங்கையும்
மற்றொரு கை–மற்றொரு திருக் கையிலே
ஆழி-திருவாழியையும்
ஏந்தி-தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று-நீர் வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்-அகன்று போனார்;
(அதுவே காரணமாக)
இரு கையில்-(எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா-இந்தச் சங்கு வளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்–என்ன மஹா பாபமோ!.

ஸமஸ்த லோகங்களையும் பிரளய காலத்திலே அமுது செய்த பெரிய வாயை யுடையவர்
இவ்விடத்தே வந்து ஒன்றோடு ஓன்று பொரா நின்றுள்ள மத்ஸ்யங்களை ஒத்த என் கண்களிலே நீர்த் துளிகள் ப்ரவஹிக்கும் படி துக்கத்தை விளைத்து
ஒளியையும் சப்தத்தையும் நீரையும் யுடைய மஹா சமுத்திரத்தை அவகாஹித்துப் பருகினதாய்
இடமுடைத்தான வயிற்றை யுடைத்தான காளமேகத்தின் நிறத்தை வடிவு அழகிலே ஒத்து இருப்பவர்
பரம பக்தி உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் மஹா தபஸ்ஸிகளாய் மனன சீலர்களாக ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு திருக்கையிலே பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும்
மற்ற ஒரு திருக்கையிலே திருவாழி ஆழ்வானையும் தரித்தவராய்
தாம் பிரிந்தால் நான் தரித்து இருக்கைக்காக
ஜல ஸம்ருத்தியை யுடைய ஸ்ரீ ரெங்கம் தம்மூர் என்று சொல்லி நம்மைப் பிரிந்து போனார்
அவர் போன போதே எனது இரண்டு கைகளிலும் சங்கு வளைகளானவை கழன்று போயின
என்ன மஹா பாபமோ –

————————————————————————————-

தாம் போகை அன்றிக்கே
தாம் போனால்
ஆஸ்வாச ஹேதுவாய் இருக்குமவையும்
எனக்குத் துணையாகாத படி காண் பண்ணிப் போய்த்து

கையில் சங்கு நில்லா –
அவன் போன போதே ஆற்றாமை குடி புகுந்தது –
கையில் வளையைப் பார்த்தாள் –
வளை அவனுக்கு முன்னே போய் நின்றது
அவன் போனாலும் அவன் போக உபகரணங்கள் கிடந்ததாகில் அத்தைப் பார்த்து தரிக்கலாம் இறே –

அவன் கையின் கார்ஸ்யத்தால் வந்ததோ என்று
மற்றை கையைப் பார்த்தாள் –
இரு கையில் சங்கிவை நில்லா –
அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது –
ஆகையாலே –இரு கையில் சங்கிவை நில்லா –என்கிறாள் –

இவை நில்லா –
1-அவன் நில்லாது ஒழிந்தால் -இவையும் நில்லாமல் ஒழிய வேணுமோ –
சேஷியாகையால் அவன் போகிறான் –
எனக்கு சேஷமான இவையும் போக வேணுமோ –

2-சேதனன் ஆகையால் இத் தலையில் ஒரு குறை கண்டு போகலாம் அவனுக்கு –
அசேதனமான இவையும் போக வேணுமோ –

3-வந்து கலந்தவன் ஆகையால் போகிறான் அவன்
சஹஜமான இவையும் போக வேணுமோ –

இவை நில்லா –
4-நம் கைக்கு அடங்காதவன் ஆகையால் போந்தான் அவன்
நம் கைக்கு அடங்கின இவையும் போக வேணுமோ –

இவை நில்லா
5-அவன் நிற்கிலும்
இவை நிற்கிறனவில்லை

நில்லா
போகேல் என்ன போனால் போலே
பல கால் எடுத்து எடுத்து கையிலே இடக் கழலுகையாலே –நில்லா -என்கிறாள் –

(அக்ரூரர் உடன் சென்று கோபிமார்களைப் பிரிந்த பின்பு கையில் வளையல்களும் போயினவே -ஸ்ரீ மத் பாகவதம்)

வெல்லே –
என்னே -சித் அசித் விபாகம் அற மத் சம்பந்தமே அமையும் ஆகாதே உதவாது ஒழிகைக்கு –
மமேதம் -என்ன அமையும் ஆகாதே உதாவது ஒழிகைக்கு –
அவன் உதவாது ஒழிகைக்கு ஹேது மத் சம்பந்தமே இறே –

பாவம் –
அவன் போனான் ஆகில் போகிறான் கைப் பட்டதும் போகைக்கு அடி என் பாவமே இறே –

எல்லே பாவமே –
அவன் புண்யத்துக்கு ஓர் அவதி இல்லாதவோபாதி
என் பாவத்துக்கும் ஓர் அவதி கண்டிலோமே –
தானே வந்து கலந்தவனை அனுபவிக்கப் பெறாத பாவத்துக்கு மேலே
ஆஸ்வாச ஹேதுவான இவையும் உதவாது ஒழியும்படி இறே என் பாப அதிசயம் –

இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம் –
தன்னைக் கலந்து பிரிந்து போகிற போது
அவன் வடிவில் பிறந்த புதுக் கணிப்பு சொல்கிறாள் –
இத்தலை வெறும் தரையாம்படி விவரணமாய் இறே கிடந்தது –

இலங்கு இத்யாதி –
இவளை வெறும் தரையாக்கின பிரகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் சொல்கிறது –
பெரும் வயிற்ற என்னும் அளவும் செல்ல –

இலங்கொலி நீர் இத்யாதி –
லாவணாதி களாலே அளாவின ஒளி அன்றிக்கே
ஸ்வாபாவிகமான ஒளியையும் காம்பீர்யத்தையும் உடைத்தான நீரை உடைய மகா சமுத்ரத்தை
வெறும் தரையாகப் பருகின தொரு காள மேகம் போலே காண்
போகிற போது அவர் வடிவு இருந்தபடி –

என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் -என்கிறபடியே
என் வடிவில் ஒளியும் காம்பீர்யமும் அவர் பக்கல் குடி கொண்டது என்னும்படி
காண் அவர் வடிவு இருந்தபடி –

பெரும் பௌவம் என்று சப்த த்வீபங்களையும் விளாக்குலை கொண்ட ஸூத்த ஜல சமுத்ரத்தை சொல்லுகிறது –

மண்டி யுண்ட –
மணலோடு பருகின -என்னுதல் –
பெரிய அபிநிவேசத்தோடே மேல் விழுந்து பருகின -என்னுதல் –
இவளோடு சம்ஸ்லேஷிக்க வருகிற போதையில் அபிநிவேசமும்
இத்தலையில் சௌந்தர்ய சாகரத்தை அற்ற சாரம் ஆக்கினபடியும் வடிவிலே தோற்றி இருக்கிறபடி –

பெரு வயிற்ற
இத்தலையில் உள்ளது நேராக க்ரஹித்த பின்பும் அபிநிவேசம் மாளாதே இருந்தபடி –

கரு முகிலே ஒப்பர் வண்ணம் –
இத்தால் ஸ்வரூப கதனம் பண்ணுகிறது அன்று –
தாத் காலீனமான அழகைச் சொல்லுகிறது –
ஒரு காள மேகத்தை மின் தழுவினாப் போலே
ஸ்வா பாவிகமான எழிலுக்கு மேலே
இத் தலையில் எழிலும் அங்கே குடி கொள்ளுகையாலே வடிவு இரட்டித்து இருக்கிறபடி –

(கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே;
இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடி கொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி.
பரகால நாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க.
மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல
அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி.
அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று.)

மண்டி யுண்ட –
பாவியேன் மேகம் முகக்கும் கடல் ஆகாதோ -பெய்யும் தரையாகப் பெற்றிலேன்-

பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ –
1-வடிவில் பௌஷ்கல்யம் இருந்தபடியும்
2-பரிகரவத்தை இருந்தபடியும்
3-மேன்மை இருந்தபடியும்
நீ காணப் பெற்றிலை காண் –

பெரும் தவத்தர் இத்யாதி –
ஒருவர் இருவராய் சென்று கிட்டுகிறாரோ –
அம்ருதத்தை அமரர்கள் சூழ நின்று காக்குமா போலே காண்
என்னைப் பிரிந்த சமனந்தரம் பரிகரம் வந்து சூழ்ந்து கொண்ட படி இது காண் -என்கிறாள் –
பக்த்தைர் பாகவதைஸ் ஸஹ-என்றும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்கிறபடியே
நித்ய ஸூரிகளை சொல்கிறது –

(வைகுண்ட து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ )

(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)

(புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.)

பெரும் தவத்தர் –
பகவத் பிரேமத்தால் அதிசயித்தவர்கள் –
வணக்குடை தவ நெறி -என்று பக்தியை தபஸ் சப்தத்தால் சொல்லக் கடவது இறே –

(பிணக்கற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புற நெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே-1-3-5-)

அரும் தவத்து முனிவர்
அவனும் அவர்களுமாய் கொண்டு பரிமாறும் பரிமாற்றமே
தங்களுக்கு போகமாய் இருக்கும் ஏற்றம் உண்டு இறே அவர்களுக்கு –

சூழ
அதுவுமாம் இறே
தங்களுடைய சேஷத்வத்தையும்-அவனுடைய ஸ்வாமித்வத்தையும் உணர்ந்து இருக்குமவர்கள் பரிவராய்க் கொண்டு
ஒருவர் கிட்ட ஒண்ணாத படி எங்கும் ஒக்க சூழ்ந்து நிற்கையாலும் கிட்டப் போய்த்தில்லை –

(சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே)

(கடலில் அமுதந் தோன்றின வன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்து கொண்டாப் போலே காண் என்னைப் பிரிந்து போகிற போது
அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்து கொண்டது.
வைகுண்ட து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ – என்று
சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள்.
அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச் சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே?)

(கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே–5-5-10-)

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
பரிகரத்தை ஒரு படி நீந்திச் சென்றோமே யாகிலும் கிட்ட ஒண்ணாதபடி காண் –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்கிறபடியே
அவர் தாம் அநபிபவ நீயராய் இருக்கிறபடி –

ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று இறே மேன்மைக்கு எல்லை –
வடிவார் சோதி வலத்து  உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்ற
பெரியாழ்வாரைப் போலே காணும் இவர்களும் மங்களா சாசனம் பண்ணுகிறபடி –

(நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே–5-5-7 )

(அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே )

ஒரு கையில் சங்கு -இத்யாதி
என் கையைப் பிடித்த கையும்
என் காலைப் பிடித்த கையும் காண்
அவர்களுக்கு பிராப்யம் ஆயத்து -என்கிறாள் –

அக் கைக்கு என் அவயவங்கள் பிராப்யம் ஆனால் போலே காண் -அவர்களுக்கு அக் கை பிராப்யமாய் இருந்தபடி –

கலந்த போதை நீர்மை போலே காண்
பிரிந்த போதை மேன்மை இருந்தபடி –
அப்போதை நீர்மைக்கு எல்லை இல்லாதாப் போலே காண்
போகிற போதை மேன்மைக்கு எல்லை யற்று இருந்தபடி –

(நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனை யன்றி
அணுகிச் சென்று வாய் திறக்க வழி யுண்டாயிருந்ததோ வென்கிறாள்.)

உலகுண்ட பெரு வாயர் –
இத்தால் பிரளய ஆபத் சகனைச் சொல்லுகிறது -அன்று
வந்து கலந்தான் சக்கரவர்த்தி திருமகன் ஆகையாலே தத் ஸ்வ பாவத்தைப் பற்றிச் சொல்கிறது –
பிரளய காலத்தில் ஜகத்துக்கு தம்மை ஒழிய செல்லாதாப் போலே காணும்
என்னோடு கலக்க வருகிற போது அவர் வந்த படி -என்கை –

(பிரளய காலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மை யொழியச் செல்லாமையிருந்தாப் போலே
என்னை யொழியச் செல்லாதவரா யன்றோ அவர் ஸம்ஸ்லேஷிக்க வந்த போதில் இருந்தபடி என்கை.)

(பரஞ்சோதி -மேன்மை மிக்கு பல்லாண்டு மங்களா ஸாஸனம் பண்ண வேண்டும் படியும் –
நித்ய ஸூரீகள் ஆசைப் படும்படி மேன்மையின் எல்லை இங்கு -கீழ் நீர்மைக்கு எல்லையாக வந்து ஸம்ஸ்லேஷித்து
இருந்த பெருமாள் –ஸீதா பிராட்டியாகவே இவளுடைய பாவநா ப்ரகர்ஷம்)

இங்கே வந்து-
அவர் வரவாலே அவரை அனுபவிப்பது என்னும் இடம் தோற்றுகிறது –
விஷயீ கரிக்கைக்கு அவதரித்தால் போலே போகமும் அவர் வரவாலே என்கை -(பரகத ஸ்வீகார மேன்மை)

என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து –
அவர் வந்து கலந்ததனால்
நான் பெற்ற பேறு இது காண் என்கிறாள் –

பொரு கயல் கண்
ஒன்றுக்கு ஓன்று உபமானம் ஆவது ஒழிய
வேறு உபமான ரஹீதமான கண்கள் –

கயல் கண் -என்று
சம்ஸ்லேஷ தசையில் ஹர்ஷத்தால் வந்த அலமாப்பைச் சொல்லுகிறது –

நீர் அரும்ப
சோக ஸ்ருவுக்கு இலக்காய்த்து -என்கிறாள்

அரும்ப
விரஹ அக்னியால் உள் உலர்ந்து கிடக்கிறபடி –

(கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹ சோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும்.
உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர் பெருகுவதெங்ஙனே?)

புலவி தந்து
தன்னை கிட்டினாரை-வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனம் -என்கிறபடியே
ஆனந்திப்பிக்க கடவ
அவன் காண் எனக்கு துக்கத்தை விளைத்தான் –

(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெரு மான்றனை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3 )

தந்து –
அவர் தம்முடைய கிழிச் சீரையினின்றும் அழித்துத் தந்த தனம் இது காண் -என்கிறாள் –
தான் சாதித்துத்தது ஓன்று அன்றியே ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபையால்
ஸம்ஸ்லேஷத்தில் இன்பமும் விஸ்லேஷத்தில் துன்பமும் வந்த பேறு அன்றோ

(இங்கே வந்து தந்து -பரகத ஸ்வீ காரம்)

புனலரங்க மூரென்று போயினாரே –
தாம் போனால் நான் தரித்து இருக்க வேணும் என்று
பார்த்து –நம்மூர் -கோயில் என்று போனார்-

(அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே
அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப் போனார் காண்;
பிரிவில் நான் தரித்திருக்க வேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று
அழகும் போன போதை யழகும் தோழீ! நீ காணப் பெற்றிலையே! என்றாளாயிற்று.)

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து என் –பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட -பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ -ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
புனலரங்க மூரென்று போயினாரே –இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்—–என்று அந்வயம்

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading