ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –18 –இளைப்பினை இயக்கம் நீக்கி–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு
காணப் போகாது –
என்கிறது –

(அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய
ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்
தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.

“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ் செய்தார் வெள்கிநிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்றருளை யீந்த“ என்கிறபடியே
பல்லூழி யூழிகாலமாகத் தவம் புரிந்து வருந்தி நின்றவர்களெல்லாம் வெட்கப்பட்டு நிற்கும்படியாக
ஸ்ரீ கஜேந்திராழ்வான் போல்வார் திறத்திலே பரம க்ருமை செய்தருள்பவனான எம்பெருமானுடைய
ஸ்வபாவத்திற்கு இணங்க இப் பாட்டுக்கு இங்ஙனே உரையிடுதல் மிகப் பொருந்தும்.)

—————————————————————

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-

பதவுரை

இளைப்பினை இயக்கம் நீக்கி–க்லேசங்களினுடைய ஸஞ்சாரத்தைத் தவிர்த்து (ஓர் ஆஸனத்தில்)
இருந்து–அசை வின்றி யிருந்து
முன் இமையை கூட்டி–மேல் இமையைக் (கீழிமையோடே) சேர்த்து
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி–அளவிறந்த பஞ்சேந்திரியங்களைப் பட்டி மேய வொட்டாதபடி தடை செய்து
அவர் கண்–எம்பெருமான் விஷயத்திலே
துளக்கம் இல் சிந்தை நெய்து அன்பு வைத்து–இடை வீடில்லாத ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான பக்தியைப் பண்ணி
ஆங்கு–அந்த நிலைமையிலே
சுடர் விட்டு தோன்றலும்–ஜ்வலித்துக் கொண்டு தோன்றுமளவிலே
விளக்கினை–விளக்காகிய எம்பெருமானை
விதியில்–சாஸ்திர விதிப்படியே
காண்பார்–காண வேணுமென்றிருக்கிற உபாஸகர்கள்
மெய்ம்மையே–உள்ளபடியே
காண்கிற் பாரே–காண வல்லவராவரோ? (காண கி்ல்லார் என்றபடி)

—————————————————————

இளைப்பினை இயக்கம் நீக்கி-
அவித்யா அஸ்மிதா ராக த்வேஷா அபிநிவேஸா க்லேஸா –
என்றும் சொல்லுகிற
கிலேசங்கள் உடைய சஞ்சாரத்தைத் தவிர்த்து –

(இளைப்பாவது க்லேசம்; க்லேசமாவது ஐவகைப்படும்.-
க்லேசமிதா ராகத்வேஷாபிநிவேசா‘ க்லேசா“ என்று பாதஞ்சல தர்சனத்தில் சொல்லப்பட்டது;
அவித்யை யாவது அஜ்ஞாநம்.
அஸ்மிதையாவது அஹங்காரம்.
ராகமாவது இச்சா விசேஷம்;
த்வேஷமாவது பகை;
அபிநிவேசமாவது மரண பயம். (என்று குஸுமாஞ்சலியில் விவரணம் செய்யப்பட்டுள்ளது.)

இருந்து –
காற்றைப் பிடித்து இருத்துமா போலே இறே –
நாத்யுச்ச்ர்தம் -இத்யாதியில்
சொல்லுகிறபடியே ஓர் ஆசனத்தே இருந்து –

முன் இமையைக் கூட்டி –
சம்ப்ரேஷ்ய நாஸி காக்ர ஸ்வம் திஸஸ் ச அநவலோகயந்  –
என்னும்படியே
உள்ளே பார்க்கில் அனுபூத விஷயங்கள் தோற்றும் –
நடுவே இருக்கை –

(ஸூசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திர மாஸந மாத்மந-
நாத்யுச் ச்ரிதம் நாதிநீசம் சேலாஜிந குஸோத்தரம்—৷৷6.11৷৷

தத்ரைகாக்ரம் மந க்ருத்வா யதசித் தேந்த்ரிய க்ரிய—-
உபவிஸ் யாஸநே யுஞ்ஜ்யாத் யோகம் ஆத்ம விஸூத்தயே–৷৷6.12৷৷

ஸமம் காய ஸிரோக்ரீவம் தாரயந் அசலம் ஸ்திர—
ஸம் ப்ரேக்ஷ்ய நாஸி காக்ரம் ஸ்வம் திஸஸ் ச அநவலோகயந்—৷৷6.13৷৷

ப்ரஸாந்தாத்மா விகத பீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித—.
மந ஸம்யம்ய மச் சித்தோ யுக்த ஆஸீத மத் பர—৷৷6.14৷৷

பரிசுத்தமான இடத்தில் தனக்கு -மரம் முதலியவற்றால் செய்யப் பெற்று -நிலையாய் இருப்பதாய் –
மிக உயர்ந்ததாய் இராததாய் -மிகத் தாழ்ந்ததாயும் இராததாய் -தர்ப்பம் மான் தோல் பட்டுத்துணி ஆகியவற்றால்
மேல் மேலே விரிக்கப் பெற்றதான ஆசனத்தை உறுதியாக நிலை நிறுத்தி அவ் வாசனத்தில் உட்கார்ந்து
மனத்தை ஒரு முகப்படுத்தி சித்த கிரியைகளையும் இந்திரிய கிரியைகளையும் பட்டி மேயாதபடி அடக்கியவனாய் –
சம்சார பந்தம் நீங்குவதற்காக ஆத்ம தர்சனத்தைச் செய்யக் கடவன் –

உடல் கழுத்து தலை ஆகியவற்றை நேராகவும் அசையாததாகவும் நிலையாகவும் தரித்துக் கொண்டும்
திசைகளைப் பாராமல் தன் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டும் மிகவும் ஸந்தோஷம் அடைந்த
மனத்தை உடையவனாய் பயம் அற்றவனாய் ப்ரஹ்ம சர்யத்தை உடையவனாய் மனத்தை அடக்கி
என்னிடம் வைத்தவனாய் கவனம் உள்ளவனாய் என்னிடத்தில் ஈடுபட்டவனாய் இருக்கக் கடவன்)

அளப்பில் ஐம்புலன் அடக்கி –
அளவிறந்த இந்த்ரியங்களை பிரத்யக்காக்கி –

அன்பு அவர் கண்ணே வைத்து துளக்கமில் சிந்தை செய்து-
அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமான
பக்தியைப் பண்ணி –

(தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி என்றவாறு.)

தோன்றலும் சுடர் விட்டு –
சுடர் விட்டு தோன்றலும் –
இப்படி சுடர் விட்டு தோன்றும்
ஜ்ஞானத்தாலே –

விளக்கினை –
வேத விளக்கினை –
வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –

மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை
காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –

அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
உபாசித்துக் காண்பாருக்கு
காணலாம் -என்றுமாம் –

அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading