ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –11-தொண்டெல்லாம் பரவி நின்னை-ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

(என்னுடைய மனத் துயரங்களை நானே தீர்த்துக் கொள்ளப் போமோ?
நீயே அருள் புரிய வேணுமென்று எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கிறார்–)

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரம சோதி நின்னையே பரவுவேனே -11-

பதவுரை

எந்தாய்–எம்பெருமானே!,
தொண்டு எல்லாம்–எல்லாவகையான அடிமைகளையும்
பரவி–(செய்யவேணும் செய்ய வேணுமென்பதாக) வாயாரப் பேசி
நின்னை தொழுது–உன்னை வணங்கி
அடி பணியும் ஆறு கண்டு–திருவடிகளிலே பணி விடை செய்யும் படிகளை மநோ ரதித்து
தான் கவலை தீர்ப்பான் ஆவதே–நான் மனக் கவலை தீர்த்துக் கொள்ள முடியுமோ?
பணியாய்–அருளிச் செய்ய வேணும்;
அண்டம் ஆய்–அண்டங்களிலுள்ளாரெல்லார்க்கும் தலைவனாய்
எண் திசைக்கும் ஆதி ஆய்–எட்டுத் திசைகளிலுள்ள தேவதை கட்கும் காரண பூதனாய்
நீதி ஆன பண்டம் ஆம்–முறைமையான செல்வமாயிருப்பவனான
பரம சோதி–பரஞ்சோதியே!
நின்னையே–உன்னையே
பரவுவேன்–ஸ்தோத்ரம் பண்ணுவேன்.

——————————————————————–

தொண்டெல்லாம் பரவி-
செய்யும் அடிமை எல்லாம் அடைவு கெடப் பேசி –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும்படியே –

(பவாம்ஸ்மு ஸஹ வைதேஹயா கிரிஸாந ஷுரம்ஸ்யதே, அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வபத சச தே-அயோத்யா -31-25)

(ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-)

நின்னைத் தொழுது –
உன்னைக் கண்டு வைத்து
அடைவு கெட தொழப் போமோ –

அடி பணியுமாறு கண்டு –
தப்பாமே மநோ ரதித்து –
அடி பணியுமாறு கண்டு –திருவடிகளிலே வணங்குகிற பிரகாரத்தை மநோரதித்து –

நான் கவலை தீர்ப்பான் ஆவதே –
தன்னாலே மநோ துக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே -கொள்ளப் போமோ –
மனக் கவலை தீர்ப்பார் அவரே இறே-

பணியாய் எந்தாய் –
நிர்வாஹகனான நீயே அருளிச் செய்யாய் –

அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான –
அண்டாந்த வர்த்திகளுக்கும் நிர்வாஹகனாய்
எட்டுத் திக்கில் உள்ள தேவதைகளுக்கும் காரணமாய் –
முறை தப்பாதபடி –

பண்டமாம்-
தனமாம் –
பண்டம் -என்பது -தனம் –
இவ் வாத்மாவுக்கு தனம் ஆனவனே –

பரம சோதி-
பரஞ்சோதி சப்த வாச்யனானவனே –

நின்னையே பரவுவேனே –
உன்னையே அடைவு கெட ஸ்தோத்ரம் பண்ணும் இத்தனை-

(சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே“-என்கிறபடியே
எமக்கு ப்ராப்தமான செல்வம் தேவரீரே யென்றவாறு.)

(இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தின் கருத்தை இங்குக் காண்க.)

———————————————————————————– –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading