ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –4-கேட்க யான் உற்றது உண்டு –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

(எம்பெருமானை ஒரு கேள்வி கேட்கிறே னென்கிறார் சமத்காரமாக.
மஹா வாரஹ மூர்த்தியாகத் திருவவதரித்துப்
பூமியை எயிற்றிற் கொணர்ந்த எம்பெருமான் கனவிலெழுந்தருளிக் காட்சி தந்தவாறே
அப்பெருமானை மன மொழி மெய்களால் அன்போடு பிடித்து விழுங்கி விட்டேன்;
விஷயாந்தரங்களை யநுபவித்து ரஸித்துப் போந்த எனக்கு இவ் விஷயம் பரம ரஸ்யமாயிருந்தது;
இப்படி இருந்ததற்குக் காரணமருளிச் செய்ய வேணுமென்று கேட்கிறேனென்கிறார்.)

(நம்மாழ்வார் தம்முடைய திவ்ய ப்ரபந்தங்களிலே எம்பெருமானை நோக்கிச் சில கேள்விகள் கேட்டிருக்கிறார்;

பெரிய திருவந்தாதியில் ”அருகுஞ்சுவடுந் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிக இதுவென் பேசீர்” என்றும்,

”புவியுமிருவிசும்பும் நின்ன கத்த, நீயென் செவியின்வழி புகுந்தென்னுள்ளாய்,
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை யென்பதை யாரறிவார், ஊன்பருகுநேமியா யுள்ளு“ என்றும்,

திருவாய்மொழியில். ”இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள் வைத்தாய்,
அன்றென்னைப் புரம்போகப் புணர்த்ததென் செய்வான், குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ் திருப்பேரான்,
ஒன்றெனக்கருள் செய்ய உணர்த்தலுற்றேனே” என்றும்-இங்ஙனே சில கேள்விகள் கேட்டார்;

அவற்றுக்கு எம்பெருமான் ஒரு மறுமாற்றமும் அருளிச்செய்திலன்; அப்படிப்பட்டவன்
இவ்வாழ்வாருடைய கேள்விக்கு மாத்திரம் மறுமொழி கூறப்புகுகிறானோ?
மாட்டானென்றோ இவர் அறிந்து வைத்தும், நசையாலே கேட்கிறாராயிற்று.

‘உன்னையநுபவித்த எனக்கு நீ பரம போக்யனாயிருக்கின்றாயே, இதற்கு என்ன காரணம் சொல்லு என்று கேட்கிற
இவரது கேள்விக்கு ஸர்வஜ்ஞனான எம்பெருமான்றானும் என்ன மறுமாற்றம் அருளிச் செய்யக் கூடும்?
இவர் கேட்கிற இவரது கேள்விக்குத் தான் அர்த்தமுண்டோ?

”அண்ணிக்கு மமுதூறு மென்னாவுக்கே” என்று மதுரகவியாழ்வார் தம்முடைய ஆனந்தத்தை வெளியிடடுக் கொண்டது போல
இவர் தாமும் கேள்வியென்னும் வியாஜத்தினால் தமது பரமாநந்தத்தையே பிரகாசிப்பித்துக் கொள்ளுகிறாரத்தனை என்று உணரக் கடவது.

‘சர்க்கரையை நாக்கில் போட்டவுடனே தித்திக்கின்றதே, அதற்கு என்ன காரணம்? என்று ஒருவர் கேட்டால் அக் கேள்விக்குக் கருத்து யாது?)

கேட்க யான் உற்றது உண்டு கேழலாய் யுலகம் கொண்ட
பூக்கெழு வண்ணனாரைப் போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

பதவுரை

யான் கேட்க உற்றது உண்டு–அடியேன் (ஒரு விஷயம்) கேட்க வேண்டியதுண்டு; (மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும்)
கேழல் ஆய்–வராஹ ரூபியாகி
உலகம் கொண்ட–பூமியைக் கோட்டில் எடுத்துக் கொண்டேறின
பூ கெழு வண்ணனாரை–பூப் போன்ற மெல்லி வடிவுடையரான பெருமாளை
கனவில் போதர கண்டு –கனவில் எழுந்தருளக் கண்டு
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால்–மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களாலும்
சிரத்தை தன்னால்–ஸ்ரத்தையோடு
வேட்கை மீதுர–ஆசை மிக
வாங்கி விழுங்கினேற்கு–பிடித்து அநுபவித்த வெனக்கு
இனிய ஆறே–போக்யமா யிருக்கிற விதம் என்னே!

———————————————————————————————————————————————————–

கேட்க யான் உற்றது உண்டு –
அடியேன் தேவரீரை ஓன்று கேட்கலுற்றேன்
அத்தை அருளிச் செய்ய வேண்டும் –
அது என் இயம்புதி -என்ன –

கேழலாய் யுலகம் கொண்ட பூக்கெழு வண்ணனாரை-
புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான வடிவை
மானமிலாப் பன்றி யாக்கி –
நிலம் கோட்டிடைக் கொண்டது –

இந்தக் கழஞ்சு மண்ணும் அழிந்தால்
பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய்ச் செய்து அருளிற்றோ –
இத்தை எனக்கு அருளிச் செய்ய வேணும் –

பிரளயம் கொண்ட பூமி -தன்னை எடுக்க இறே
இவன் இதுக்கு உத்தரம் சொல்லுவது –

(பாசி தூர்த்துக் கிடந்த பார் மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே)

(கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7 )

போதரக் கனவில் கண்டு –
மிகவும் நெஞ்சிலே கண்டு –
இந்த்ரியங்களால் வ்யவச்சேதம் இன்றிக்கே
அவயவதாநேன விசதமாக கண்டு –

கனவு -மானஸ அனுபவம்

வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி –
மநோ வாக் காயங்களாலும்
ஸ்ரத்தையாலும்
மிக்க அபி நிவேசத்தை உடையவனாய் –

விழுங்கினேற்கு இனியவாறே –
விழுங்கி னேனுக்கு இனிதாய் இருந்தது –
விழுங்குகை -அனுபவிக்கை –

எவ் விஷயங்களை அனுபவித்து ரசித்துப் போந்த
எனக்கு
எவ் விஷயம் ரசிக்கிறது –

விழுங்கினேற்கு இனியவாறே —
எனக்கு இனிதான வழி என் தான் –
எவ் வழியாலே முடிக்கப் போந்த விஷயம்
எவ் வழியாலே இனிதாயிற்று –
இது இனிதான வழியை அருளிச் செய்ய வேண்டும் –

இதுக்கு அவன் என்ன உத்தரம் சொல்லுவது –
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது உடைமை மங்காமைக்கு அன்றோ –
அவ்வோபாதி மங்க ஒண்ணாது என்று
சம்சார பிரளயத்தில் நின்றும் இவரை எடுத்தான் இத்தனை இறே –

இனிய வாறு கேட்க –நான் உற்றது உண்டு -என்று அந்வயம்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading