ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –3-பாயிரும் பரவை தன்னுள் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –
முதல் பாட்டிலே -சொன்ன வணக்கத்தைச் சொல்லுகிறார் –

(தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும்
திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்;
விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய
திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;-அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.)

————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே -3-

பதவுரை

பாய் இரு பரவை தன்னுள்–பரந்து ஆழ்ந்த திருப்பாற் கடலிலே
பரு வரை–பெரியதான (மந்தர) மலையை
திரித்து–சுழலச் செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து–தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட–அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை–உபகாரகனும்
எம் பிரானை-எமக்கு ஸ்வாமி யானவனும்
இரு–மிகப் பெரிய
வேய் சோலை சூழ்ந்து–மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற–ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப் பெற்ற
மாயிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய–நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை–மிடுக்கனுமான ஸர்வேஸ்ரனை
வணங்கினேன்-வணங்கப் பெற்றேன்.

——————————————————————-

பாயிரும் பரவை தன்னுள் –
பா -என்று பரப்பு –
இருமை -பெருமை –
இவை இரண்டாலுமாக-
ஆழத்தையும் அகலத்தையும் சொன்னபடி –

பரு வரை திரித்து –
கடலைக் கண் செறி இட்டாப் போலே
பெரிய மந்த்ர பர்வதத்தை நட்டு –
அம்ருதம் கிளரும் அளவும் தானே திரியும்படியாக வைத்த நொய்ப்பம் –

வானோர்க் காயிருந்து அமுதம் கொண்ட அப்பனை –
தனக்கே இருப்பார் அதமர் இறே –
நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் -போலே

தன்னை பரார்த்தம் ஆக்கி வைக்குமவன் இறே –
பொது நின்ற பொன் அம் கழல் -என்றும் –
சர்வ லோக சரண்யாய -என்றும் சொல்லுகிறபடியே
எல்லார்க்கும் தன்னைப் பொதுவாக்கி இறே வைப்பது –

ஆசை இல்லாதார் இழந்து விடும் அத்தனை –

(அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து–மூண்டாம் திருவந்தாதி)

(சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே)

(”அமுதம் தந்த” என்ன வேண்டி யிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க.
கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன் பேறாக நினைத்திருந்ததனால்.)

அப்பனை –
உபகாரகனை –
பிரயோஜனாந்தர பரரான அந்தர ஜாதிகளுக்காக
தன்னை அழிய மாறி
அநேகம் வடிவு கொண்டு
உபகரிக்குமவனை –

யெம்பிரானை-
தன்னுடைய அம்ருதம் –

வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற –
மூங்கில் குழாங்களாலே சூழ்ந்து
விஸ்தர கிரணனான ஆதித்யன்
திருமலை ஆழ்வார் மேலே தன் சாயை படாமே அகல சஞ்சரிக்கிற –

மாயிருஞ்சோலை மேய –
திருமால் இரும் சோலை என்கிற திரு நாமத்தை உடைய
திருமலையிலே பொருந்தி இருக்கிற –

மைந்தனை வணங்கினேனே –
தம்மை அடிமை கொண்ட பருவம் –
இவரை அடிமை கொள்வதாக திருமலையிலே எழுந்து
அருளி நின்ற பின்பு
வடிவு இளகிப் பதித்த படி –

அப்பனை
என்று கீழே ஒரு முதுமை சொல்லி
இப்போது மைந்தனை -என்கிறார் – இறே –

அப்பனை -மைந்தனை என்றது அரும்பினை அலரை-என்னுமா போலே  –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading