அவதாரிகை –
முதல் பாட்டில் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
சங்கரஹேண சொன்ன-பிராப்ய பிராபகங்களை-
இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது –
அதில் இப்பாட்டாலே –
நாட்டார் இசைகைக்காக -நோன்பு -என்று ஒரு வ்யாஜத்தை இட்டு புகுந்தோம் இத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் அது அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யமே -என்று
தங்களுக்கு உத்தேச்யமான புருஷார்த்த சித்திக்கு –
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் -பிராப்தியையும் -முன்னிட்டு –
நீயே உபாயமாக வேணும் -என்று அபேஷித்து
இதுக்கு ஷாமணம் பண்ணிக் கொண்டு
பிராப்ய பிரார்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
மேலில் பாட்டாலே -பிராப்ய பிரார்தனம் பண்ணா நின்றதாகில்
இங்குப் பண்ணுகிறது என் என்னில்
பிராபகம் பிராப்ய சாபேஷம் ஆகையாலே சொல்லுகிறார்கள் –
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
பதவுரை
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோகி உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆச்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய்
வியாக்யானம் –
கறவைகள் –
அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –
பின் சென்று –
நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை –
எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் –
பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –
கானம் சேர்ந்து –
தம் தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு நன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்-
புல் உள்ள காட்டிலே வர்த்தித்தோம் இத்தனை –
இருப்பாலே நன்மையை விளைவிக்கும் தேசத்திலே வர்த்தித்திலோம்-
காட்டிலே வர்த்தித்தோம் -என்றுமாம் –
சேர்ந்தோம் –
ஊரில் கால் பொருந்தாத படி இ றே காட்டில் பொருந்தின படி –
உண்போம் –
வைச்யருக்கு -கோ ரஷணம் தர்மம் ஆனால் -தத் அனுரூபமாக காட்டிலே வர்த்திக்கையும்
வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி தர்ம ஹேது ஆகிறது என்ன –
காட்டில் வர்த்தித்தாலும் -வீத ராகராய் -வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி
சரீரத்தை ஒறுத்து அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோம் அல்லோம் –
கேவலம் சரீர போஷண பரராய் வர்த்தித்தோம் இத்தனை –
இத்தால் –
வ்ருத்தியில் குறை சொல்லிற்று
இது இறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அனுஷ்டித்த கர்ம யோகம்-என்கிறார்கள் –
அறிவொன்றும் இல்லாத –
இப்போது இல்லை யாகில் விடுங்கோள்-
விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த
ஞானம் தான் உண்டோ -என்னில்
அதுவும் இல்லை –
ஒன்றும் –
பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை –
தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை –
பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே –
இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் –
அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்
ஆக
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –
ந தர்மோஷ்டமி ந பக்திமான்
நோன்ற நோன்பிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி –
இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை
அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –
ஆய்க் குலத்து –
அறிவு உண்டு என்று சங்கிக்க ஒண்ணாத குலம் –
கீழ் சொன்ன உபாய ஹானி தோஷம் ஆகாதே குணமாம் படியான ஜன்மம் –
எங்கள் ஜன்மத்தைக் கண்டு வைத்து அறிவு உண்டு என்று சொல்லுகிற நீ அறிவு கேடன் -இத்தனை –
ஆனால் விடும் அத்தனையோ -என்ன –
உன் தன்னைப் பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம் –
பேற்றுக்கு உடலான புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ வென்ன –
அங்கன் சொல்லலாமோ எங்களை –
புண்யத்துக்கு சோறிட்டு வளர்கிறவர்கள் அன்றோ –
சாஷாத் தர்மமான உன்னை –
ராமோ தர்ம விக்ரவான் –
பிறவி பெறும் தனை –
நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்
அவர்களைப் போலேயோ நாங்கள்
ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே
எங்களோடு சஜாதீயனாய் வந்து
அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –
புண்ணியம் யாம் உடையோம் –
புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –
நாமுடையோம்
சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில்
இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான
ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் –
நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ
அறிவொன்றும் இல்லை
புண்ணியம் யாம் உடையோம்
என்பதாய்க் கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணா நின்றி கோள்-என்ன
கண்டிலையோ –
இது தானே அன்றே அறிவு கேடு
ஆனால் விடும் அத்தனையோ -என்ன
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி
உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ
சர்வ நிரபேஷன் -என்கை
எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ
உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –
எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –
எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து
இத்தால்
உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –
கோவிந்தா –
நீங்கள் என்னைப் பூர்ணனாக பேசின படியால்
வேண்டி இருந்தோமாகில் செய்தல் -இல்லையாகில் தவிர்த்தல் அன்றோ -என்ன
நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –
எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து
எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ
நாங்கள் அபேஷிக்கிறது –
இத்தால்
சௌலப்யம் சொல்லுகிறது
குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று
ஓன்று உண்டாகில் அன்றோ
என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது என்ன
அதுவோ –
உன் தன்னோடு உறவு –
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -என்ன
அது கொண்டோ
ஆனால் ஒரு குட நீரோடு போகிறது -என்ன –
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –
எங்களாலும் விட ஒண்ணாது –
இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –
இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு -என்ன –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -என்ற
பிரமாணத்தைக் கொண்டு -என்ன –
அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் அன்றோ என்ன –
ஆனால் நீ எங்கள் கையிலே தந்த மூலப் பிரமாணத்தில் முதல் எழுத்தைப்
பார்த்துக் கொள்ளாய் -என்கிறார்கள் –
அதாவது
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –
நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே
நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்-
தயா பூர்ணனான உன்னோடு
தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –
அறியாத -இத்யாதி
கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –
அறியாத
அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –
பிள்ளைகள்
பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –
அன்பு –
பிரேமத்தாலே வந்த அஞ்ஞானம் –
இந்த ஹேதுக்களால் வந்த அறியாத் தனம் பொறுக்க வேணும் –
ப்ரேமாந்தரைக் குற்றம் கொள்ளுகையாவது –
ஒரு படுக்கையிலே இருந்து -கால் தாக்கிற்று கை தாக்கிற்று -என்கை இறே-
உன் தன்னை -இத்யாதி
கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திருநாமம்
சொல்லுகை குற்றம் இறே
நாராயணன் -என்றார்கள் கீழ் –
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்தே மேன்மை சொல்லுகை குற்றம் இறே –
இறைவா –
தன கை கால் தப்புச் செய்தது என்று
பொடிய -விரகு -உண்டோ –
உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –
இறைவா –
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –
ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே –
நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –
நீ தாராய் பறை –
விலக்காமை பார்த்து இருக்கும் நீ
எங்கள் அபேஷிதம் செய்யாய் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply