ஸ்ரீ திருப்பாவை -அங்கண் மா ஞாலத்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

அவதாரிகை –

கீழ் பாட்டிலே
தங்களுடைய அபிமான சூன்யதையை
சொல்லிற்று –

இப்பாட்டில் –
அனன்யார்ஹ சேஷத்வம்
சொல்லுகிறது-

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்

அங்கண் –
அழகிய இடம் –
பிரம்மாவுக்கும் தன போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –
பீபிலிக்கும் தன போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –

மா ஞாலத்து அரசர் –
மகா ப்ருதிவியில் ராஜாக்கள் –
இப்பரப்பு எல்லாம் -என்னது -என்று அபிமானம் பண்ணுகை –
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்கிறதை
பௌண்டரீக வாசுதேவன் போலே அனுகரிக்கிற படி

அபிமான பங்கமாய் வந்து –
அபிமான சூன்யராய் வந்து -ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு வந்து –

நின் பள்ளிக் கட்டில் கீழே –
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து-
போங்கோள் என்றாலும்
பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே –

சங்கம் இருப்பார் போல் –
திரளவிருந்து அணு கோலக்கமாக இருக்குமவர்களைப் போலே
அவர்கள் போக்கற்றுப் புகுந்தார்கள் –
இவர்கள் கைங்கர்யத்துக்கு புகுந்தார்கள் –
இளைய பெருமாளைப் போலே
இவர்களையும் கிருஷ்ண குணம் தோற்பித்து
அடிமையில் மூட்டிற்று –

வந்து தலைப் பெய்தோம் –
கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம்
சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம்
ஒருபடி வந்து கிட்டப் பெறுவதே -என்கை –
விசத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே

ஆக
இந்த ராஜாக்கள் தம்தாமுடைய அபிமானங்களை விட்டும்
க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளை விட்டும்
அம்புக்குத் தோற்று உன் கட்டில் கால் கீழே
படுகாடு கிடைக்குமா போலே –

நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்
வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குணஜிதராய்க் கொண்டு வந்தோம் –

அதவா –
அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்
அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தை விட்டு
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு
அநந்ய பிரயோஜனராய் வந்தோம் -என்றுமாம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே
எங்கள் ஆற்றாமைக்கு
அலருமவை இறே இவை –
அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –

செங்கண் –
வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை –
உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே
சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –
விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும்
அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்
உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும்
என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும்
விஸ்லேஷ வ்யசனமே படுகிற
எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –

அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே
அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்

ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழியும்
என்று அந்வயம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading