ஏழு நாங்கூர்
நான்கு நாங்கை
நாக பூரி
நாகம் யானை திக் யானையால் ஐராவதம் பூஜித்த திவ்ய தேசங்கள்
பதரி -சேவிக்க- மணி மாட கோயில் -நர நாரணனே !-3-8-1-
கருட சேவைக்கு பதினோரு பெருமாளும் இங்கே
ஒரே பதிகம் -தாய் பதிகம் பார்த்தன் பள்ளி
மாடக்கோயில் அமைப்பு
அஷ்டாக்ஷரம் மந்த்ரம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கு தனி சந்நிதி
ப்ரஹ்மஹத்தி தோஷம் போக்க –11-திருக்கோலம் சேவை
இந்திரன் துர்வாசர் -ஐராவத யானை சாபம்
இந்திரனுக்கும் தர்சனம்
இந்திர ருத்ர புஷ்கரணி
நாகம் வணங்கிய புரி நாகா பூரி
அளத்தற்கு அரியான் உத்சவர் திரு நாமம்
தானான உத்சவம் வேடு பறி
தான் உகந்த உத்சவம் மங்களா சாசனம்
தமர் உகந்த உத்சவம் திருக்கார்த்திகை
நந்தா விளக்கு -பிரவேசம் –
பகவத் விஷயத்தில் தமக்கு பிறந்த பிராவண்ய அதிசயத்தை
பார்ஸ்யர் பேச்சாலே அனுபவித்தார் -3-7-
அதாகிறது
மாதா பிதாக்களுக்கு ஆகாதே
வயலாலி மணவாளனுக்கேயாய் இருக்கிற இருப்பைத்
திருத் தாயார் பேச்சாலே
அனுபவித்தாராய் நின்றார் கீழ் -3-7-
இப்படி திருவாலியில் புக்கு அனுபவித்த இடத்திலும்-ஆராமையாலே –
ஆற்றாமையில் – தமக்கு பிறந்த பிராவண்யம்
உகந்த விஷயத்தை கண்ணாலே கண்டு
ஸ்பர்சாதிகளை அபேஷிக்குமா போலே
அனுபவிக்கையில் மூட்ட -அப்போதே பெறாமையாலே
திரு உள்ளம் ( சேதன அவஸ்தையில் ) பதற –
திரு உள்ளத்தைக் கொண்டாடி அப்பேறு பெறும் தனையும்
இங்கேயே அனுபவிக்கைக்காக அன்றோ
உகந்து அருளின நிலங்கள் -என்று
பிரயோஜனாந்த பரர்களான தேவர்களுக்கும்
தாம்தாம் அபிமதங்கள் அபேஷிக்கலாய்
அவ்வோ காலங்களில் இழந்தார் எல்லாருக்கும்
எல்லா இழவுகளையும் தீர்க்கைக்காக
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
அங்கே சென்று அனுபவி என்று திரு உள்ளத்தை
அனுசாசிக்கிறார்-நிகமிக்கிறார் –
விருத்த -நடந்து முடிந்த -வரத்திஷ்யமான -நடக்கும் அனுபவம் -சங்கதி இப்படி
நர நாரணனாய் யுலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -10-6-1-
ஆண்டாள் -நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணனே நரனே – நாச்சியார் திரு மொழி
——————————————————————–
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் -மெய் மதிக் கடலே -ஸ்வரூப நிரூபகம் –
நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் ! நர நாரணனே ! கரு மா முகில் போல்
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மண மல்கு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-1-
கந்தாரம்-தேவ காந்தாரி ராகம் –
ப்ரஹ்மாதிகள் எங்கள் அபிமதங்கள் செய்ய வேணும் –
என்று பிரார்திக்கிற
திரு மணி மாடக் கோயிலிலே நெஞ்சே நீயும் சென்று அனுபவி -என்கிறார் –
நந்தா விளக்கே ! –
விச்சேதியாத விளக்கு
பிரபா பிரபாவான்களாய் இருக்காய் இறே
விளக்காகிறது -நித்யமாய்
ஸுயம் பிரகாசமாய் –
ஜ்ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் -என்ற படி –
(ஞானத்தை–குணமாகவும் ஸ்வரூபமாகவும் கூட்டுவது – -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் –
அவனே ஞானமாகவும் உள்ளான் ஞானம் உடையவனாயும் இருப்பான் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டும் உண்டே
ஆத்மாவும் இதே போலவே -ஆனால் கர்மத்தால் மழுங்கும் தர்ம பூத ஞானம் )
அளத்தற்கு அரியாய் ! –
விபுவத்தாலும்
மற்றும் உண்டான குண விபூதியாதிகளாலும்
அபரிச் சேத்யன் ஆனவனே
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-என்கிறாராக-என்று ஆழ்வான் பணிக்கும்
இப்படி இருக்கிறவன் தான்-
நர நாரணனே !
நர நாராயண ப்ராதுர்பாவத்தாலே தன்னை வெளி இட்ட படி —
கருமா முகில் போல் –
அப்போதைக்கு- ( உபதேசம் பண்ணும் பொழுது ) அனுபவ யோக்யமான வடிவு
அன்றிக்கே
கீழ் சொன்ன ஸ்வ பாவங்களில் காட்டில்
ஆகர்ஷகமாய் மேகம் போலே
ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி
எங்களை அனந்யார்ஹம் ஆக்கினவனே-
எந்தாய் ! எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்
தேவானாம் தானவானாம் ச சாமான்ய மதிதை வதம் -என்கிற
சம்பந்த சாமான்யத்தைப் பார்த்து
அசுரர்களுக்கு அருள் செய்கை தவிர்ந்து
அனுகூலராய் அநந்ய சரணரான எங்களுக்கே
பிரசாதத்தைப் பண்ணி அருள வேணும் என்று
தேவர்கள் வந்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
ஆஸ்ரயிக்கிற ஸ்தானம்–
(விஷ்ணு பத்தி உடையவர் தேவர் அனன்யர் அசுரர்
இவர்கள் அனன்ய சரண்யர் -அனன்ய பிரயோஜனர் இல்லா விட்டாலும் )
எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாட-
பார்த்த பார்த்த இடம் எங்கும் காந்தாரம் என்கிற பண்ணை
அந்தேனை உண்டு
தர்சநீயமான வடிவை உடைத்தாய் -தேன் என்று பேரை உடைத்தான
வண்டுகள் ஆனவை மதுபானம் பண்ணி இசை சொல்ல –
மாடே களி வண்டு –
அதனுடைய பர்யந்த்தே சம்ச்லேஷத்தால் ஹ்ருஷ்டமாய்
களிக்கிற வண்டுகள் ஆனவை –
மிழற்ற –
நிரம்பா மென் சொல்லாலே ஆலத்தி வைக்க
நிழல் துதைந்து –
அவற்றுக்கு போக யோக்யமாம் படி நிழலைச் செறியப் பண்ணி
பாடுவாருக்கு-காவணம் –பந்தல் -பரிசு – ஆசனம் =இட்டு கொடுப்பாரைப் போலே
மந்தாரம் நின்று மண மல்கு –
மந்தாரம் என்று கல்ப வருஷத்திலே ஒரு விசேஷம்
எல்லா காலமும் நின்று மணத்தை மிகவும் உண்டாக்கி நின்றுள்ள –
மணம் நல்கும் என்னவுமாம் –
பாடுவாருக்கு பரிசில் கொடுப்பாரைப் போலே
தன் கந்த த்ரவ்யங்களைக் கொடா நின்றது
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !
இப்படிப் பட்ட திரு நாங்கூரில்
திரு மணி மாடக் கோயிலை ஆஸ்ரயி என்கிறார்-
———————————————————————-
ப்ரஹ்மாதிகள் பிரயோஜனாந்தர பரர்கள் ஆஸ்ரயிக்கும் அளவு அன்றிக்கே
அநந்ய ப்ரயோஜனனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன்-என்கிறார் இதில் –
முதலைத் தனிமா முரண் தீர அன்று முது நீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம் விண்ணனவும்
பதலைக் கபோதத்தொளி மாட நெற்றிப் பவளக் கொழுங்கால பைங்கால் புறவம்
மதலைத் தலை மென்பெடை கூடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே—3-8-2-
விதலை–விசனம் -துக்கம்-
பதலை-கலசம் கும்ப வரிசை –
மதலை-பிள்ளைத்தூண் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தைப் போக்கினவன்
திரு மணி மாடக் கோயிலிலே நின்ற அருளினான்
நெஞ்சே -உன் துக்கம் எல்லாம் கெட
அங்கே சென்று அனுபவி -என்கிறார்
முதலைத் தனிமா முரண் தீர அன்று –
முதலையினுடைய உபமான ரஹிதமாய்
கரை காண ஒண்ணாத மிடுக்கு அறும்படிக்கு ஈடாக
முது நீர்த் தடத்துச் –
பழையதான நீரை உடைத்தது என்று பிரசித்தம் இறே –
செங்கண் வேழம் உய்ய –
மிடுக்கை உடைத்தாய் இருக்கச் செய்தே
தன்னிலம் அல்லாமையாலே
அம் மிடுக்கு கொண்டு வியாபாரிக்க ஒண்ணாதபடியால்
வந்த சீற்றத்தாலே சிவந்த கண்ணை உடைத்தான
ஆனை உய்யும்படி
செங்கண் -என்று
செயல் அறுதியாலே சிவந்த கண்ணை உடைய ஆனை -என்றுமாம்
சென்று அதற்கே உதவி
கை கழிந்தது என்று மீளாதே ஆபத்திலே உதவி
விதலைத் தலைச் வினை தீர்த்த அம்மானிடம்-
விதலைப் படுகிற அளவிலே
அதனுடைய வியசனத்தைப் போக்கின
சர்வேஸ்வரனுடைய ஸ்தானம்
(ஆனை யின் துயரம் தீர புள் ஊறித் தோன்றினாயே
மழுங்காத சோதி மறையாதபடி )
வினை தீர்க்கையாகிறது -அது நினைத்தபடியே
திருவடிகளில் பூவைப் பணிமாறலாம் படி சென்று முகம் காட்டுகை
விண்ணனவும் பதலைக்க போதததொளி மாட நெற்றிப்
ஸ்வர்க்கத்திலே சென்ற ஒக்கத்தை உடைத்தாய்
கும்ப நிரைகளையும்
கபோத ஒழுங்குகளையும் உடைத்தாய்
பொன்னாலும் ரத்னங்களாலும் சமைக்கையாலே
ஒளியை உடைத்தான மாடத்தின் உடைய நெற்றி உண்டு –
புலி முகங்களில் பதலை என்று கும்ப நிரை
பவளக் கொழுங்கால பைங்கால் புறவம் –
பவளம் போலே சிவந்து
கொழுவிதான காலை உடைத்தாய்
பசுமையை உடைத்தான புறாவானது
மதலைத் தலை –
பிள்ளைத் தூண்களின் தலையிலே
மென்பெடை கூடு –
சம்ச்லேஷிக்கவும் பொறாத மிருதுவான
பேடையோட கூடக் கலந்து வர்த்திக்கிற திரு
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-
————————————————
கொலைப் புண் தலைக் குன்ற மொன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர் செய்து கொங்கு ஆர்
இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மானிடம் ஆளரியால்
அலைப் புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்ட மண்டத் திரை யுந்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-3-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையைப் போக்க –
அத்தாலே ப்ரீதியான பிராட்டி கர வதத்தின் பின்பு அணைத்தது போல் அணைக்க
அவளோட்டை வரும் சம்ச்லேஷத்தை பெற்ற எம்பெருமான்
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் நெஞ்சே –
அப்போது சென்று அனுபவி என்கிறார் –
கொலைப் புண் தலைக் குன்ற மொன்று –
கொலைத் தொழிலையும்
புண்ணாராத் தலையையும் உடைய குன்றம் போலே இருக்கிற
ஆனை உண்டு -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் –
துறோட்டி இட்டுக் கொத்துகையாலே புண்ணாம் -என்னுதல்-
காட்டானை யாகையாலே ஆனைகளோடு பொருது புண்ணாய் இருத்தல் –
ஜாதிப் பண்பு ஆகையால் சொல்லிற்று ஆகவுமாம்-
உய்ய அன்று –
அது இடர் பட்ட அன்று அது உஜ்ஜீவிக்கும்படியாக
கொடு மா முதலைக்கு இடர் செய்து –
க்ரௌரத்தையும் மிக்க பலத்தையும் உடைத்தாய்
முதலைக்கு துக்கத்தைப் பண்ணி
கொங்கு ஆர் இலைப் புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட-
பிரஜைகள் உடைய துக்கத்தைப் போக்கி தாய் பாடே
முகம் பெறுவாரைப் போலே –
கொங்கார் –
கொங்கு என்று தேன் ஆதல் பரிமளம் ஆதல் –
தேனாலே மிக்கு இருப்பதாய் –
இலைப் புண்டரீகத்து –
ஸ்ரமஹரமான இலையை உடைத்தான
தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய –
அவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட-அம்மானிடம்-
பெரிய பிராட்டியாரோட்டை சம்ச்லேஷ சுகத்தை –
தன்னுடைய பிரேமம் உண்டு -ஸ்நேஹம்
அத்தோடு கூட அனுபவித்த சர்வேஸ்வரனுடைய ஸ்தானம் –
ஆளரியால் அலைப்புண்ட யானை
ஆண் பிள்ளைத் தனத்தை உடைத்தான சிம்ஹன்கள் ஆனவை
அகிலும் ஆனைகளைப் பிடித்து அலைத்திட்டு-
அலைக்கை –
கொல்லுகை –
மருப்பும் -அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி –
அவ்வளவில் ஆறு நீர் வந்து கொம்புகளை பறித்துக் கொண்டு போயிற்று –
அதில் மச்தகத்தில் நின்று முதிர்ந்த அழகிய முத்துக்களும்
வெண் சாமரங்களையும் கொண்டு –
பொன்னி -மலைப்பண்ட மண்டத்திரை யுந்து
காவிரி யானது சொல்லிச் சொல்லாத மலைச் சரக்குகளையும்
கொண்டு வந்து
கொள்ளைச் சரக்கை கொடுப்பாரைப் போலே
திரைகளாலே கொண்டு வந்து கொடா நின்றதாயிற்று –
அப்படிப்பட்ட திரு நாங்கூர்
திருநாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !
——————————————————————
சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் இடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி யாறங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே !–3-8-4-
அன்று–த்ரேதா யுக ஆரம்பத்தில் பாதாள லோகத்தில் இருந்து வந்த மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய
மால்யவான் மாமா தாத்தா -அவனுக்கும் முன்பே மாலி சுமாலி
முத்தீயர்-குளித்தும் மூன்று அனலை -மனு இவற்றைத் தாய் தந்தை குரு என்று கொண்டு வளர்க்க வேண்டும்
மாலி சுமாலி தொடக்கமான ராஷசரை அடைய
பண்டு இலங்கையிலே வென்ற சர்வேஸ்வரனே
திரு மணி மாட கோயிலிலே வந்து நின்று அருளினான் -நெஞ்சே
அங்கே சென்று அனுபவி -என்கிறார்-
சிறையார் உவணப் புள் ஓன்று ஏறி –
சிறை என்று சிறகு
கமன சாதனமான சிறகு குறைவற்று இருந்துள்ள –
உவணப் புள்
உவணமாகிற புள்
உவணம் என்று பெரிய திருவடிக்கு பேர் –
புள் என்று பருந்து ஜாதிக்கு பேர் –
ஓன்று ஏறி –
அத்விதீயமான புள்ளை ஏறி –
அன்று திசை நான்கும் நான்கும் இரிய –
எட்டு திக்குகளும் இரியும் படியாக-சிதறி ஓடும்படியாக
செருவில் –
யுத்தத்தில் –
கறையார் நெடு வேல் அரக்கர் -இரிய-மடியக் –
கறை கழுவ ஒண்ணாத படியாய்
நெடிதான வேலை உடைய ராஷச ஜாதி மடிய –
இரிய-ஒளித்துப் போவாரும்
மடிய-முடிவாரும் ஆகை-
கடல் சூழ் இலங்கை-
கடலாலே சூழப் பட்டு இருப்பதாய்
புற்றுக்கள் பாம்பு அறாதே இருக்குமா போலே
துர்வர்க்கங்கள் சேரும்படியான இலங்கையை
கடந்தான் –
மாலி சுமாலி மால்யவான் துடக்கமானவரை
பெரிய திருவடிமேலே எழுந்து அருளி
நிரசித்தத்தாக சொல்லக் கடவது இறே
(உத்தர காண்டத்தில் அகஸ்தியர் பெருமாளுக்கு சொல்லுவார் )
கடந்தான் இடந்தான் –
அவ்வூரை ஜெயித்தவன் இடம் தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வியாறங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப்-
பிராப்தமான படியே என்னுதல் –
வேத்தோத்தமான க்ரமத்தில் வளர்க்கின்ற
அக்னி த்ரயங்களை உடையராய் –
நால் வேதர் –
அப்படியே நாலு வேதத்தை உத்தரிப்பாராய்
பஞ்ச மகா யஞ்ஞாத்ய அனுஷ்டானங்களில் —
சப்த ரசங்களையும் உள்ளபடியே அறிந்து இருக்கும் பிராமணர்
புகழ் எய்து நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என்மனனே !-
இப்படிப் பட்ட விலஷணமானவர்கள்
ஆஸ்ரியா நின்றார்கள் என்கிற புகழை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-
——————————————————–
பரத்வ பிரகாசமான பெரிய திருவடி மேல் கீழே
பூதாநா தொடக்கமான பிள்ளைச் சேவகத்தில் திரு உள்ளம் குடி போய் அருளிச் செய்கிறார்
இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத் தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான்
குழை யாட வல்லிக் குலமாட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-5-
தாமரைப் பொய்கை புக்கான்-மேலே பாசுரத்தில் எதற்க்காகப் புக்கான் ஜல க்ரீடை-வஸ்திர அபஹரணம்
காளியன் புக்கு தூஷித்து கிடக்க- இத்யாதி உண்டே
பிரதி கூல வர்க்கத்தைப் போக்கி
இடைப் பெண்களோடு சம்ஸ்லேஷித்தவன்
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினவன்
நெஞ்சே அத் தேசத்தை ஆஸ்ரயி-என்கிறார்-
இழையோடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு –
இழை என்று ஆபரணம்
ஆபரணங்கள் ஆடா நின்றுள்ள கொங்கைத் தலை
நஞ்சை உண்டு
பூதனை பேய் வடிவை மாற்றி யசோதை பிராட்டி வடிவாக ஒப்பித்து வர
அந்த ஆபரணங்களாலே அலங்க்ருதமான முலையிலே நஞ்சை உண்டான் ஆயிற்று-
இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து-
கன்றாய் நின்ற அசுரனைக் கொண்டு
விளங்காயாய் நின்ற அசுரனை எறிந்து
இருவரையும் தங்களிலே முடியும்படி பண்ணி –
தழை வாடவன் தாள் குருந்தம் ஒசித்துத்-
அசுர ஆவேசத்தாலே உயிரை உடைத்தாய் இருந்த
மரமானது
இவன் கிட்டச் சென்றவாறே தழை வாடிற்று ஆயிற்று –
வலிய தாளை உடைத்தான குருந்தை முறித்து
(பிரதிகூலமாக இருந்ததால் வாடுமே ஸ்பர்சத்தால் )
தடந்தாமரைப் பொய்கை புக்கான் இடந்தான் –
தனக்கும் பெண்களுக்கும் ஜலக் கிரீடை பண்ணுகைக்கு யோக்யமான இடத்தை
காளியன் புக்கு தூஷித்து கிடக்க
அங்கே போய் புக்கான் ஆயிற்று
பெண்கள் நீராடப் புக்க இடத்தையும் உடைத்தாய்
தாமரையையும் உடைய பொய்கையிலே புக்கு
அவர்கள் துகிலை வாங்கின படி ஆகவுமாம் –
அவன் வர்த்திக்கிற தேசம்
குழை யாட வல்லிக் குலமாட –
தழைகளாயும் பூம் கொடிகளாயும் மந்த மாருதத்தாலே அசைந்து வர
மாடே குயில் கூவ –
பர்யந்தங்களில் சோலையில்
புஷ்பங்கள் உடைய பரிமளத்தால் ஆரவாரம் பண்ணி
முக்தர் சாம கானம் பண்ணுமா போலே குயில்கள் கூவா நின்றன ஆயிற்று –
நீடு கொடி மாடம் மல்கு –
நெடிய கொடிகளை உடைத்தான மாடங்களாலே
நெருங்கி இருப்பதாய்
மழை யாடு சோலை மயிலாலு நாங்கூர் –
உயர்ந்த சோலையின் தலையிலே மேகங்கள் சஞ்சரிக்க
அவற்றைக் கண்டு வர்ஷாவாகக் கொண்டு
சோலையில் வர்த்திக்கிற மயில்கள் ஆனவை
ஆடத் துடங்கும் –
இப்படிப் பட்ட திரு நாங்கூரில்
மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே
——————————————–
முதல் பிள்ளைச் சேவகம் என்பதால் பூதநா நிரஸனம் பின்னாட்டுகிறது
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-
மேதி-எருமை
பூதனையை அப்போதே பிராணன் போம்படி முலை உண்ட சர்வேஸ்வரன்
திருமணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச –
பண்ணோடு ஒத்த மொழியை உடைய
இடைச்சிகள் அஞ்சும்படி
வஞ்சப் பகுவாய்க் கழுதுக்கு இரங்காது –
வஞ்சத்தை உடையளாய்
பயாவஹமாம் படி ஜாதி உசிதமான பெரிய வாயை உடையளான-
கழுது-உண்டு -பேய் -அதுக்கு இரங்காதே
இரங்குகை யாவது – நோவு படுபவையாய் -அதின் கையில் தான் நோவு படாதே –
அவள் தன் உண்ணா முலை –
விஷம் ஆகையாலே வேறு சிலர் உண்டார் இல்லை இறே –
அப்படிப் பட்ட முலை –
மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தானிடம் –
விஷத்தை வாங்குகை அன்றிக்கே
அது ஆஸ்ரயமான பிராணனையும் கூட ஒரு காலே
அமுது செய்தவன் வர்த்திக்கிற தேசம் –
ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழை தின்று வைகிக் கழு நீரில் மூழ்கிச்
உயர்த்தியை உடைத்தாய்
பசுமையை உடைத்தாய்
தாளையும் உடைத்தாய்
கண் குறுகின கரும்பின் உடைய கழை உண்டு
தலையாடி அத்தை தின்று
தாங்கள் அல்லாதபடி மயத்தின் கையாலே சஞ்சரிக்க மாட்டாமை
இவ்விடம் தன்னிலே இடம் வலம் கொண்டு விடாய் ஆறி
பின்னைப் போய் அந்த உஷ்ணம் மாறும் படி
செங்கழுநீர் பணையிலே புக்கு முழுகி
செழு நீர்த் தடத்து மண் ஏந்து இள மேதிகள் வைகு –
அழகிய நீரை உடைத்தாய் இருக்கிற
தடாகத்திலே புக்கு முழுகி கோட்டு மண் கொண்டு
அத்தை சுமந்து கிளரும் ஆயிற்று
மகா வராஹம் கிளர்ந்தால் போலே
வைகு நாங்கூர்
பின்னை அடித்து ஏறவிடவும் போராதபடி
அவ்விடம் தன்னிலே கிடக்கும் ஆயிற்று
அப்படிப் பட்ட திரு நாங்கூர்
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே
இவ்விடத்தை பிள்ளை விழுப்ப அரையரும் ஆப்பானும்
கூட அனுசந்தித்து
இரண்டு இடத்திலே -வைகி -என்று உண்டாய் இருந்தது
இது செய்யும்படி என் என்று பட்டரை கேட்க –
சௌகுமார்யத்தாலே இரண்டு இடத்திலும் கிடந்தது
என்று அருளிச் செய்தார்-
——————————————————–
பூதநா ஸ்தான விஷம் அமுதம் என்னும்படி காளியன்
தானே போய் நிரசித்த சேஷ்டிதம் அனுபவிக்கிறார் இதில்
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த அம்மானிடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண் நெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-7-
நுளைப் பாவையர்-குறத்தியர்
எனச் சென்று- வெள்ளை நெல்லுக்கு முத்து வாங்கலையோ என்று கூவிச் செல்லும்
காளியனால் வந்த ஆபத்தை போக்கின எம்பெருமான்
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-
தளைக் கட்டவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு
தளைத் தாமரையும் -கட்டவிழ் தாமரையும் –
மொட்டுத் தாமரையும் அலர்ந்த தாமரையும்
தங்குகிற பொய்கைக் கரையிலே புக்கு -என்னுதல்
பொய்கையின் உள்ளே புக்கு என்னுதல் –
அடங்கா விடங்கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதனுச்சி தன் மேல் அடி வைத்த –
அடங்காதே கிளர்ந்து எழா நிற்பதாய்
விஷத்தை உமிழா நின்றுள்ள அரவம் உண்டு -காளியன் –
அது இளைக்கும்படி வ்யாபரித்து அத்தோடே விளையாடி –
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் -என்று
பிரார்த்திக்கும் படியான திருவடிகளை
அதின் தலையிலே யாயிற்று வைத்தது –
அம்மானிடம் –
இப்படி சர்வ ரஷணங்களையும் பண்ணும் சர்வேஸ்வரன்
வர்த்திக்கிற தேசம்
(அடி வைத்த-கொல்லாமல் ரக்ஷித்து அருளினான் )
மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் –
சந்தரன் ஆனவன் ஜகத் ரஷணதுக்காக சஞ்சரிக்கிற
கொடிகளிலே துவக்குண்டு போகப் பெறாதே
அவற்றோடு விளையாடும் ஆயிற்று
இப்படி இருக்கிற கொடிகளை உடைத்தான
மாளிகைகளாலே சூழப் பட்ட தெருவிலே
செழு முத்து வெண் நெற்கு எனச் –
பொகடுகிற நெல் அமையும்
அழகிய முத்து என்னா நின்றார்கள் –
வெண் நெல்
செந்நெல் வேண்டா -வெண் நெல் அமையும் என்னா நின்றார்கள்
சென்று –
வந்து கொள்வார் இல்லை மிகுதியால்
கொண்டு சென்று விற்கும் இத்தனை ஆயிற்று
முன்றில் –
முற்றில் -வாசல்களிலே
வளைக்கை நுளைப் பாவையர் மாறு –
இடைச்சிகள் ஒப்பித்து தயிர் கடையுமா போலே
நுளைச்சிகளும் ஒப்பித்து ஆயிற்று முத்து விற்கப் போவது –
இப்படி அலங்க்ருதைகளான நுளைச்சிகள்
முத்து விற்கைக்கு சஞ்சரிக்கிற திரு நாங்கூர்
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே
—————————————————
ஐந்தாம் பாட்டில் பிரஸ்த்துதமான தாமரை புக்கான்
கீழ் பொய்கை புக்கு வஸ்திர அபஹரணம் இதில்
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் வேல் நெடுங்கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-8-
திருவாய்ப்பாடியிலே பெண்களோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணின கிருஷ்ணன்
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான்
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார்-
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் –
துளையார் என்று துளை மிக்கு இருக்க
அதாவது சுருண்டு கறுத்து மிருதுவான குழலை உடையராய்
கரையிலே பரியட்டங்களை இட்டு வைத்து
முழுகி ஏறும் பருவமாய் இருந்துள்ள இடைப் பெண்கள் உடைய –
துளையா நிற்கிற என்றுமாம் –
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –
அவர்கள் அரையிலே இட்டு வைத்த பர்யட்டங்களை
மசி மயிலீ கூறை தாராய்–நாச்சியார்-3-9- -என்னும்படி
வாரிக் கொண்டு போய் குருந்திலே ஏறியும்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேல் -என்னும்படி சிற்றில் சிதைத்தும்
முற்றா இளையார் விளையாட்டோடு –
விளையாட்டுக்கு அவ்வருகு கார்யம் கொள்ள ஒண்ணாதபடி
பருவத்தை உடையவர்கள்
யௌவனம் ஊசாடாத பருவம்
அவர்களோடு உண்டான விளையாட்டோடு கூட
காதல் வெள்ளம் விளைவித்த அம்மானிடம் –
அவர்களுக்கு பிரேம சாகரத்தை விளைத்த சர்வேஸ்வரன்
உடைய வாசஸ் ஸ்தானம்
வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று மடவார்-
வேல் போலே கூர்மை உடைத்தான
நெடிதான கண்களை உடையவராய்
முளைக்கிற வளவாய் ஒளியை உடைத்தான தந்த பந்திகளையும்
உடையராய் ஸ்திரீகள் ஆவார் –
பயிற்று மொழி கேட்டிருந்தும் –
அவர்கள் முத்தமிடீர் -என்றாப் போலே சில வார்த்தைகளை
சொல்லிக் கற்ப்பிப்பர்களே
அவற்றைக் கேட்டு இருந்தேயும் -அவை கிடக்கச் செய்தே
வேத வாக்கியங்களை இவர்கள் சொல்ல அத்தைச் சொல்லும் என்றுமாம்
முதிராத இன் சொல் வளைவாய கிள்ளை
கற்பிக்கிறவர்கள் பேச்சு போலே அன்று இறே
இவற்றின் உடைய பேச்சு -வேதம் சொல்லும் – –
இப்படி இருக்கிற திரு நாங்கூர்
மறைபாடு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-
——————————————————
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ணும் -இவனே ஸ்ரீ கிருஷ்ணன்-
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா ! விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஓன்று உடையாய் ! என நின்று இமையோர் பரவும் இடம் பைந்தடத்துப்
பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத் தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடையோட நின்று மது விம்மு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-9-
நப்பின்னை பிராட்டிக்காக எருது ஏழு அடர்த்த செயலையும்
திவ்ய ஆயுதங்கள் உடைய சேர்த்தி அழகையும்
சொல்லி தேவர்கள் ஏத்த
திரு மணி மாடக் கோயிலிலே நின்று அருளினான் –
நெஞ்சே அங்கே சென்று அனுபவி -என்கிறார் –
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா !
நப்பின்னை பிராட்டி யோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதிபந்தகமான ருஷபங்கள் ஓடும்படி வென்று –
அவளுடைய மிருதுவான தோளை விரும்பின
வ்யாவ்ருத்தமான செயல்களை உடையவனை –
விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஓன்று உடையாய் !
திரு நிறத்துக்கு பரபாகத்தோடு
விளங்கா நின்றுள்ள சுடரை உடைய
திரு ஆழி ஆகிய திவ்ய ஆயுதத்தோடு கூட
அத்விதீயமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவனே
என நின்று
இப்படி சொல்லா நின்று கொண்டு
இமையோர் பரவும் இடம் –
ப்ரஹ்மாதி தேவர்கள் விடாதே ஸ்தோத்ரம் பண்ணுகிற இடம் –
பைந்தடத்துப் பெடையோடு செங்கால அன்னம் துகைப்பத்
அழகிய பொய்கைகளிலே மது பானம் பண்ண இழிந்த
சிவந்த காலை உடைய அன்னமானது
பேடையோடே இழிகையாலே
மது பானத்தாலே முன்னடி தோற்றாமையாலே-
ஆஸ்ரயத்தை பேணிப் பரிமாற அறிகிறன இல்லை
அத்தாலே துக்கப் பட்ட
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடையோட நின்று மது விம்மு –
திரண்ட தாமரைப் பூவின் நடுவே
செங்கழுநீரின் மது வெள்ளமானது
மடையாலே போகா நிற்கச் செய்தேயும்
அதினுடைய மிகுதியாலே உள்ளே நின்று
விம்மா நிற்கும் ஆயிற்று –
திரண்ட புண்டரீகங்களின் நடுவே அன்னங்கள் துகைக்க
நடுவு நிற்கிற செங்கழு நீரானது மது வெள்ளம் இடா நிற்கும்
திரு நாங்கூர்
நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே-
—————————————————
வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டைய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களியானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே–3-8-10-
இத் திருமொழிக்கு கற்றாருக்கு பலம் சொல்லுகிறது –
வண்டார் பொழில் சூழ்ந்து –
சோலை என்று பேர் மாத்ரமாய்
பாத்து பானம் பண்ண இழிந்த வண்டேயாய்க் கிடக்கும் ஆயிற்று –
அழகாய நாங்கூர் மணி மாடக் கோயில் நெடுமாலுக்கு –
தர்ச நீயமான திரு நாங்கூரில்
திரு மணி மாடக் கோயிலிலே
நித்ய வாஸம் பண்ணுகிற சர்வேஸ்வரனுக்கு
என்றும் தொண்டைய தொல் சீர் –
நித்ய கைங்கர்யத்தில்
அதிகரிக்கையாலே வந்த
நிரதிசய சம்பத்தை உடையராய் –
வயல் மங்கையர் கோன் கலியன்-
நல்ல வயலை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலி செய் தமிழ் மாலை வல்லார் –
ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த
தமிழ் தொடை யாகிற இத் திரு மொழியைக் கற்றார்
கண்டார் வணங்கக் களியானை மாதே-
அனுகூல பிரதி கூல சீலர் என்று வாசி அன்றிக்கே
லோகமாக தங்கள் காலிலே வந்து விழும்படி
மத்தகத்தின் மேல் ஏறி
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலராய் –
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்து வந்து
பூமிக்கு தாங்களே நிர்வாஹகராய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகாண்டு விரும்புவரே
ஆகாசத்திலே சென்று கிட்டும் படியாக
முத்துக் குடையின் கீழே
கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு விரும்பப் படுவர்
நிரதிசய ப்ரீதி உடையார் ஆவார்கள் –
ஐஸ்வர்யத்தை புருஷார்த்தமாக சொல்லுவான் என் என்று
நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஈச்வரனே ஆகிலும் ஒரு கால் பிறந்து
அபிஷேகம் பண்ண அமையும் பாகவத சேஷம் ஆகலாம்
ஆகில் என்று காணும்
திரு மங்கை ஆழ்வார் இருப்பது -என்று அருளிச் செய்து அருளினார்-
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நந்தா இன்பம் நம்ப உம்பர் களிறு காத்து
வந்த பேய் அரக்கர் மாய்த்து ஆய்ச்சியர் -தம் துகில் கொள்
பின்னை மணாளன் மணி மாடக் கோயில் அடைமின்
என்னு நீலன் காக்கும் சலம் -28-
வானோர் -குறையாத இன்பம் எமக்கு அருளாய் -என்று வந்து இறைஞ்சுவர்
சலம் -கபடமான எண்ணம்
நம்பும் -ஆசைப்படும்
வணங்கு என் மனனே என்றாலும் பரோபதேசமாக கொள்வது நன்று –
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply