ஸ்ரீ பெரிய திருமொழி-3-7—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

ஆழ்வார் பிரபாவம் சொல்ல வந்த திரு மொழி இது
உண்ணும் சோறு -நம்மாழ்வார் பிரபாவம் சொல்லியது போல்
தன ஜீவனம் பார்த்து போனவள் எனது ஜீவனத்தைக் கொண்டு போக வேண்டுமோ
தன்னுடைய நிதி வைத்த மா நிதி தேடிப் போனால்
அழுத முகமும் கழற்றி வைத்துப் போகக் கூடாதா -புலம்பி
தனியே போனது அது -திண்ணம் என் இளமான் புகுவது திருக்கோளூர்
இங்கோ இவன் கைப்பிடித்துப் போக -இலங்கைக்கு போவார்களோ -சங்கை –
தனித்துப் போனவள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் போவது திண்ணம் –
வினவ வந்தவர்களுக்கு திருத் தாயார் சொல்வது இது –

கள்வன் கொல்– பிரவேசம் –

தூது விட்டு தூதுவருக்கு சொன்ன பாசுரம்
நெஞ்சிலே ஊற்று இருந்து
அத்தை பாவித்து பாவநா பிரகர்ஷத்தாலே
அவன் தான் முன் நின்றானாகக் கொண்டு
அவனுக்கு வார்த்தை சொல்லும்படி பிறந்த தசா விசேஷம்
அவன் திரு உள்ளத்திலே பட்டு –
அது பொறுக்க மாட்டாதவன் ஆகையாலே
தானே வந்து முகம் காட்டி -இவளைக் கூட கொண்டு போக –

(இதுவே ஐந்தாம் பாசுரம் முதல் அவனே முன் நின்றானாகக் கொண்டு -ஓராண் வழியாக வந்த விஷயம்
பிரயோஜனாந்தர பரர்களுக்குச் செய்தோமே -நடந்து காட்ட -பல்லாண்டு போற்றி
ஆறு தடவை ஆண்டாள் அருளிச் செய்தது போல் )

ஆதி வாஹிகரை -(தாண்டி அதி க்ரமித்து கூட்டிப் போகிறவர்கள் )-வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
பெரிய திருவடியை வரக் காட்டிக் கொண்டு போம் சிலரை –
நயாமி பரமாம் கதிம் -என்று தானே கொடு போம் சிலரை –
அப்படியே தானே வந்து-
அத்தவாளத் தலையாலே மறைத்துக் கொண்டு போக-

அந்தரமாக காத்துக் கொடு போந்த திருத் தாயார் உணர்ந்து -வந்து
படுக்கையில் இவளைக் காணாமையாலே
போன அவள் படிகளையும்
தனக்கு அவளை ஒழியச் செல்லாமையும்
எதிர்தலை இப்படி பட வேண்டி இருக்கிற இவள் உடைய
வைலஷண்யத்தையும்
தன் இழவையும் சொல்லி கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

அவன் இவளைக் கொடு போகையாவது என் –
ஸ்வாபதேசத்தில் ஓடுகிறது என் என்னில் –
மானச அனுபவமாய் இருக்கச் செய்தே
பாஹ்ய சம்ச்லேஷம் போலே இருக்கப் பண்ணிக் கொடுத்த
தொரு வைச்யத்தைச்-(விசதம்-விளக்கம் ) சொன்னபடி இறே

(கீழே வந்ததாக நினைத்து மகள் பாசுரம்
இதில் தாயாருக்கு மானஸ அனுபவம் -மானஸ அனுபவம் முதிர்ந்து உள்ள அவஸ்தை )

ஸ்த்திதே மனஸி
நின்றவா நில்லா மனதும்
ஓர் இடத்திலே நிற்கப் பெற்று

ஸூஸ் வஸ்தே சரீரம் –
அபசயாத்மகமான சரீரமும் அங்கே இங்கே சிதிலமாகாதே ஒருபடிப்பட்டு

தாது சாம்யே-
தாதுக்களும் ஓன்று முடங்கி ஓன்று நிமிருகை அன்றிக்கே
சாம்யாவஸ்தையை பஜித்து

சதி யோ நர
இப்படி சரீரத்திலே ஒரு லாகவம் பிறந்து
சத்வம் உத்ரிக்தமான சமயத்தில்
ஆரேனும் ஒருவன் ஆகவுமாம்
தான் கீழ் சம்சாரியாய் நின்ற நிலையையும்
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாக இருப்பதொரு கைம்முதல்
தன் பக்கலில் இன்றிக்கே இருக்கிற படியையும்

(ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
விஸ்வரூபம் -அஜன் -)
அவனைப் பற்றியே கழிக்க வேண்டும்படி இருக்கிற படியையும்
இதில் நின்றும் கரை ஏற்றுக்கைக்கு ஈடான சக்தியும் பிராப்தியும்
அவன் பக்கலிலே உண்டாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து
அவன் பக்கலிலே பர ந்யாசத்தைப் பண்ணுவது

பின்னை பேற்றுக்கு இவ்வளவு அமையுமோ என்னில்
( இவ்வளவும் வேணுமா -இவ்வளவே போதுமா -)
சரீரத்தை பற்றி இருக்குமவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவம் பண்ணுமா போலே
விஸ்வரூபம் -அஜன் –
இவற்றுக்கு வருவது தனதாம்படி விசேஷ சரீரனுமாய்-விஸ்வ சரீரனுமாய் –
இவன் தன்னை ஒரு கால் அனுசந்தித்தால்
பின்பு இவனைப் போலே மறைக்கக்கு அடியான கர்ம
நிபந்தனமான கலக்கம் இன்றிக்கே இருக்குமவன்
ஆகையாலே அவ்வளவே அமையும்

இப்படி ஒரு நாள் அனுசந்தித்தவன்
பிரகிருதி வச்யனாய் -பின்பு தன் தேக யாத்ரையிலே அந்ய
பரனாய் திரிந்து பின்பு ஸ்ம்ரிக்கைக்கு கூட யோக்யதை இல்லாதபடி
காஷ்டாபாஷா சந்நிபனாய் கிடக்கும் அன்று
இவனைப் போல் ஒரு கால் ஸ்மரித்தால் பின்பு விஸ்வமரிக்குமவன்
அன்றிக்கே நான் ஸ்மரித்த படியே இருப்பன்-
(அஹம் ஸ்மராமி -மறக்காமல் இருக்கிறேனே-நினைவு கிருபாதீனம் -நமக்கு மறப்பு கர்மாதீனம் )

மத் பக்தம்
ஸ்மரிக்கைக்கு யோக்யதை இல்லாத வன்று
ஸ்மரித்திலன் என்று விடும் அத்தனை துராராதனையோ
அவன் பற்றிற்று –
(அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் -தேவப்பெருமாளின் ஆறு வார்த்தைகளில் நாலாவது-ஸூராதனன் அன்றோ)

அஹம் ஸ்மராமி –
ஐஸ்வர்ய காமனுக்கும் -ஆத்ம ப்ராப்தி காமனுக்கும் -பக்தி காமனுக்கும் அந்திம ஸ்ம்ருதி உண்டு
இவன் முதலிலே துடங்கி சர்வ பர ந்யாசம் பண்ணினவன் ஆகையாலே இவனுக்காக நான் நினைப்பன் –

நயாமி பரமாம் கதம் –
இப்படி நினைத்து நானே கை தொடனாய் வந்து கொடு போவேன்
ஸ்லோக த்வயம் -எம்பெருமானுடைய சர்வ ஸ்வமும் இறே இவை –

ஆளவந்தார் ஸ்ரீ பாதத்திலே வர்த்தித்த வைஷ்ணவன் அந்திம சமயத்தில்
பட்ட கிலேசத்தைக் கண்டு
பெரிய நம்பிக்கும் எம்பெருமானாருக்கும் நடந்த சம்வாதத்தை நினைப்பது
(மாறனேர் நம்பி விஷயமாக -அங்கு அந்திம ஸ்ம்ருதி பற்றி இல்லையே
வேறே ஒன்றாகவும் இருக்கலாம்)
(உடம்பு நோவு சாத்தி கிலேசம் படும் ஸ்ரீ வைஷ்ணவர்
நினைவு இல்லாவிட்டாலும் கூட்டிப் போவதாக அருளிச் செய்கிறான் ஒழிய கஷ்டம் இல்லாமல் என்று இல்லையே
முதுகைக் கடைந்து ஆத்மா 101 நாடி மூலம் போவது உண்டே )

மத்பக்தம் என்கிற இடமும்
பக்திமானையே சொல்லிற்று ஆனாலோ பிரபன்னனை சொல்லிற்று ஆனாலோ
என்கைக்கு நியாமகர் யார் என்ன
அவனுக்கு அந்திம ஸ்ம்ருதி விதிக்கிற சாஸ்திரம்-வீணாகப் போகக் கூடாதே
பிரபன்னனுக்கு வர்ஜனம் தேவப்பெருமாள் வார்த்தையே பிரமாணம் –

(அரும்பத விளக்கம்
ஸ்தித
மனஸ் ஸ்வஸ்தமாக
முன்பு விஷய ப்ரவணராய் இருந்தமை தோற்றும்
மனம் மாறி பகவத் ஸ்மரணம் வந்த நிலைமையைச் சொன்னவாறே
மாம் -கண்டவற்றை நினைப்பதை மாறி -விஸ்வரூபம் ச மாம் -என்னைப் பற்றி உபாயமாக
அஜம் விஸ்வரூபம் -சக்தி -பிராப்தி இரண்டையும்
ஸ்ம்ர்த்தா -இப்படி நினைப்பவன் -கீழே கழிந்த நாள்களுக்கு வருந்தி –
இவனது சக்தி பிராப்தி நினைந்து உபாயமாக இருப்பதை நினைத்து
ஒவ் ஒன்றுக்கும் ஸ்மர்த்தா கூட்டிக் கொள்ள வேண்டும்
நிர்பயம் நிர்பரம்–அனுசந்தானம் வேண்டும் –
தம் -ஸக்ருத்தாக நினைத்து மறந்து இருப்பவன் -யோ நர -ஒரு தடவை நினைக்கும் ஏதோ மனுஷ்யன்
மத்பக்தம் என்று தேவதாந்தரங்களை வியாவர்த்திக்கிறார்
பரந்யாசம் பண்ணுகையால் அந்திம ஸ்ம்ருதி நானே ஏறிட்டுக் கொள்கிறேன்
நயாமி -கள்வன் கொ ல் வந்து என்று இருப்பதால் இந்த ஸ்லோக விளக்கம் இதில் – )

—————————————————————————————–

கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மடமானினைப் போதாவென்று
வெள்ளி வளைக்கை பற்றப் பெற்ற தாயாரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ–3-7-1-

கள்வன் கொல்-கள்வனோ உடையவனோ அறியேன்
ஆயர் உகந்தது வெள்ளி தானே தங்கம் இல்லையே –

கள்வன் கொல்
சோரேண என்று இவனுடைய ஆத்மா அபஹாரத்தோபாதி யாய்
இருக்கிறதாயிற்று
உடையவன் தன்னுடைய உடைமை கொண்டு போனதும் –
என்னது என்று போந்த வாசனையாலே
(திரு கள்வனூர் -ஸ்ரீ காஞ்சி)

கொல்
உடையவன் உடைமை கொண்டு போனானே யாகிலும்
காணும் பொழுதே எடுத்துக் போகையாலும் –
கள்ளன் என்ற இது மமகாரத்தின் ஊற்றத்தாலே-
(மம ஸூ தா -மமகாரம் விட்டவனுடைய மமகாரம் இது குண சம்பூர்ணத்தால் சொல்ல வைத்ததே )

யான் அறியேன் –
காத்துக் கிடக்கிற தான் அறியாள் ஆகில்
கொண்டு போனவனைப் போலே காணும் கேட்பது –
அறியாய் ஆகிலும் அறிந்த அம்சத்தை சொல்லல் ஆகாதோ என்ன –

கரியான் ஒரு காளை வந்து –
பிள்ளை யமுதனார் கூடு கிடக்க வாளை யுருவிக் கொடு போவாரைப் போலே
தாயார் அணைத்துக் கொடு கிடக்க கொண்டு போனான் -என்று நிர்வஹித்தார் –
அத்தை பட்டர் கேட்டு அருளி
அத்தனை பணிப் பட வேண்டாம் காண்
சில கள்ளர் விளக்குகளையும் பிடித்து
பிள்ளை பிள்ளை என்கிற அளவிலே கொண்டு போமோ போலே
கொண்டு போனான் காண்-என்று அருளிச் செய்தார்-
(தீ வெட்டிக் கொள்ளைக்காரன் போல் தெரிந்தே தூக்கிப் போனான் )

ஒரு வாய் புகு நீரிலே புக்காரைப் போலே நிறத்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இன்னான் என்று நிர்த்தரிக்க மாட்டாதே
ஒரு -என்று சொல்லும் இத்தனையே யாயிற்று
(கஸ் ஸ்ரீ-கச்சித் – என்னுமா போல் )

காளை –
போன இடம் அவன் குற்றம் அன்று என்கிறாள் -அவன் பருவத்தின் குற்றம்
இவள் போன இடம் பழி என்று  குற்றமாக சொல்லுகிற இவள் தனக்கு
ஒரு பிராப்தி இன்றிக்கே இருக்கச் செய்தே 
அப் பருவத்தை சொல்லும்படி இறே அது இவள் தன்னையும் துவக்கினபடி –
போன மகள் தானும் இது பழி அன்று நினையாமை இல்லை –
அநர்த்தம் பார்த்து மீள ஒண்ணாத படியான பருவத்தின் குற்றம் என்கிறாள் –

வைரூப்யத்தை விளைத்து விட்டார்கள் என்று முறைப்பட சென்றவள் இறே
தருணவ் ரூப சம்பன்னவ் ஸூகுமாரவ் மஹா பலவ் புண்டரீகாக்ஷ விசாலாஷவ் இத்யாதி -என்றவள் இறே 
பின்பு சொன்னவை பூர்வ வாசனையே அனுவர்த்தித்த படியாலே
அன்றாகில்
தான் பட்டதை முறைப் படுகிறதுக்கு இதுவே உபயோகியாய் சொல்லுகிறாள்
நடுவு பிறந்தவற்றையும் சம்போதத்தில் நடுவு பிறந்த விமர்த்ததோ பாதியாக நினைத்து இருந்தாள்

வந்து 
கரியான் காளை 0நிறமும் பருவமும் இவை யானால் 
சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் போலே
தான் இருந்த இடத்தில் பெண் பிறந்தார் அடையச் சென்று விழ வேண்டும்படி இருக்க
வரவும் அத்தலை யானால் இவள் போகாது இருப்பாளோ 
ஆரேனும் ஆகவுமாம் பர-பகவத் – லாபம் உண்டாகில்  அத்தலையில் வரவு அல்லது இல்லையே
(வந்து உனதடியேன் -ஆண் பாவத்தில் அருளிச் செய்தார் )

வள்ளி மருங்குல் என்தன் மட மானினைப் போதாவென்று
அவனைக் கொண்டு வந்த விச்வாமித்ரனை சொல்லுகிறது –
இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது-
அவனுக்கு அநேகத்தை சொல்லி வைத்து இவளுக்கு
அழகை சொல்ல அமைந்து இருக்கிறது இறே
மாலுக்கு -என்று துடங்கி அவனுக்கு அநேகத்தை சொல்லி வைத்து
இவளை- கொங்கு அலர் ஏரக் குழலி -என்னுமா போலே

என் தன் மட மானினை
என் மகளாவது முக்தையாவது-
தன் சௌகுமார்யத்தை யாதல்
ஸ்த்ரீத்வத்தை யாதல்
போகிற வழியில் அருமை யாதல்
இவை ஒன்றையும் நினைக்க மாட்டாத முக்யதை கிடீர் –

என் தன் –
அவன் வந்து கொடு போகப் புக்கவாறே -என் மகள் -என்று
தானும் ஒரு தலை பற்றுகிறாள் –

போதாவென்று –
உக்தம் அர்த்தம் இமிம் சர -என்றான் ஆயிற்று
(நான் சொன்ன படி நட பெருமாள் இளைய பெருமாள் சம்வாதம் போல் )

கரியான் காளை வந்து போதரே
போதரே -என்றதாயிற்று –
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு இவன் பண்ணும் கர்ம ஞானம் போலே
அவன் தான் இவளைப் பெறுகைக்கு பண்ணின
சாதனா அனுஷ்டானம் இருக்கிறபடி –

வெள்ளி வளைக்கை பற்றப்-
உக்தியிலே துவக்குண்டு சப்தையாய் நின்றாள்
அவ்வளவிலே வந்து கையைப் பிடித்தான் –
ந பிரமாணீ க்ருத பாணீர் பால்யே பாலேந பீடித்த -என்கிறபடியே
(அக்னி பிரவேசம் பண்ணும் சீதாபிராட்டி வார்த்தை )
பிடித்த பிடியிலே -அங் கண்ணன் உண்ட என்னுயிர்க் கோதிது-திருவாய்மொழி
என்னும்படியாயிற்று பிடித்தது
முன்பு நெடுங்காலம் தாய் பக்கல் பண்ணின வாசனை
முதலடியிலே வந்து அழியும்படி-கழியும்படி – யாயிற்று பற்றின பற்று

இடைச்சிகள் பொன்னையும் மாணிக்கத்தையும் அழிய மாறி
வெள்ளி வளை யாயிற்று இடுவது-

பற்றின பற்றில் ஊற்றம் எவ்வளவு போரும் என்னில்
பெற்ற தாயாரை விட்டகன்று –
நான் வளர்த்துக் கொடுத்த தாயோ நினைத்த போது பொகட்டுப் போகைக்கு
(யசோதை வளர்த்ததால் அக்ரூரர் வந்ததும் போனது போல் அன்று இல்லையே
நெடுமால் -தேவகியை பார்க்க நீண்ட நினைவு )

இட்டு –
பொகட்டு போகா நின்றாலும் பொகட்டொம் என்ற அனுதாபமும் நெஞ்சிலே கிடக்கவுமாம் இறே –
சில அதேதனங்களைப் பொகட்டு போமா போலே பொகட்டு

அகன்று –
தான் விட்டாலும் நமக்கு தொடர்ந்து சென்று பற்ற ஒண்ணாத படி கை கழியப் போய்-

அள்ளலம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ –
இவ் ஊர் எல்லை கழிந்தால் பின்னை மாறி இடுமடி
பூவின் தலையிலே யாம்படியான தேசம் ஆயிற்று –
பாதாருந்துதமே பங்கஜரஜ -என்னும்படியாலே
அது தான் இவளுக்கு பாதகம் ஆகிறது
( பட்டர் -திரு ஆபரணம் சாத்த தோழிகள் கண்ணால் பார்க்கவே அவயவங்கள் சிவந்தனவே )

அணி யாலி
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு வாலி

புகுவர் கொலோ
இருவரும் இரண்டு முக்தர் -அறியா பருவம் -ஆயிற்று –
மாயா மிருகத்தை பிடித்து தா என்பாரும்
அதைப் பிடிப்பதாக அதன் பின்னே போவாரும் –
லங்கத்வாரத்திலே சென்று நிற்கலாகாதோ என்று நில்லாதே
உத்தேச்ய பூமியிலே-பகலே – புக்கார்களோ அல்லர்களோ
இருவரும் ஒருவருக்கு ஒருவராய் ஆழல்-ஆழங்கால் – ஆயிற்று-

சேர்த்தி புறப்பாடு திருநாராயண புராத்தில் உடையவரும் தானே எழுந்து அருளுவார் –
அவர்களை சந்நிதி எழுந்து அருளப் பண்ணிய பின்பு தானே தனது சந்நிதிக்கு எழுந்து அருளுவார்

—————————————————————————–

கீழ் பாட்டில் ஸூவ்ந்தர்யாதிகளைக் காட்டி மயக்கி என்னை இட்டு விட்டுப் போனான்
அங்கனம் அன்றிக்கே –
சொக்குப் போடி -தூத வியாபாரங்கள் அம்மான் பொடி -மந்திரப்பட்டாளோ -என்று
அசல் அகத்தாருக்குச் சொல்வது போல் இப்பாசுரம்

பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-2-

பண்டு இவன் ஆயன் நங்காய் !
பண்டு இவன் சக்கரவர்த்தி திருமகன் என்னுமா போலே இப்போதை அவஸ்தை –
வெண்ணெய் களவு காணப் புக்கு அக்களவு தலைக் கட்ட மாட்டாத இளிம்பன்
கிடீர் என் மகளை இப்படி செய்தான் –
(பெண் பிள்ளையை கொண்டு நடந்த சமர்த்யன்
இப்பொழுது சக்ரவர்த்தி திரு மகன் போல்
பண்டு இடக்கை வலக்கை அறியாத இடையன் )

அங்கன் இன்றிக்கே
காடு வாழ் சாதி இப்போது நாகரிகன் ஆனான் (ஆலி நகரி வாழ்பவன் )

படிறன் புகுந்து –
பண்டு காணாமல் களவு காணும் இத்தனை
இப்போது பஸ்யதோஹரன் ஆனான்

என் மகள் தன் தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து-
சௌந்தர்யாதிகளால் தோற்ப்பிக்கை அன்றிக்கே
பிரணயதாரையில் மௌக்த்த்யத்தாலே தோற்ப்பிப்பதே
(கீழே கரியான் காளை -இங்கு கலவியில் )

அவன் பின் –
பேதை நின்னைப் பிரியேன் இனி 9-3-3-என்றவன் பின்பு
தோற்கும்படி சில வியாபாரங்களை பண்ணினான்
அத்தனை அல்லது
போரு -என்று அழைத்திலன்
காணாம்ருதமான அம்மான்பொடியை இட்டு கொண்டு போன படி-
(வாய் அமுது கொடுத்து –திருப்பவள வாய் தான் தித்தித்தது இருக்குமோ )

கெண்டை யொண் கண் மிளிரக் –
அபூர்வ தர்சனங்களாலே கண்ட பதார்த்தங்களை இவை என்ன என்ன –
வினவு கண்ணாலே கேட்கை –

கிளி போல் மிழற்றி –
கண்ணால் கேட்டு கேளாதவற்றை வாயாலே கேட்டு
(கண்ணிலே நவரசமும் காட்டலாமே இங்கு வாயாலே சிலவும் கண்ணாலே பலவும் கிடக்கிறாள் )

நடந்து –
அவனுக்கு முன்னோக்கிப் போக ஒண்ணாதபடி அவன் பின்னே நடந்து
(இவள் அழகு மயக்க பின்னேயே பார்க்கும்படி )

வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ
ந சபுன ஆவர்த்ததே என்று புகுந்து
திர்யக்குகளும் கூட மீளாத ஊரிலே புகுவர் கொலோ
தனக்காக ஆசைப் பட வேண்டா என்கிறார்
(வண்டுகளும் அமரும்படியான திவ்ய தேசம் )

————————————————-

கண்கள் மிளிர கிளி போல் நடந்து போக
கூட போகும் பொழுது வழியில் உள்ளவற்றைக் கேட்டுக் கொண்டே
எவ்வாறு நடந்தாய் எம்மிராமாவோ
அவ்விடம் சூரப்ப ணகை வந்த ஆபத்தை நினைத்து திருத்தாயார் அஞ்சுகிறான்

அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய் ! அரக்கர் குலப்பாவை தன்னை
வெஞ்சின மூக்கரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல்லடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-3-

நங்காய் -அசல் அகத்து பெண்ணே
அரக்கர் குலப்பாவை தன்னை-சூர்ப்ணகை -பிரபன்ன குலப்பாவை போல்
தோளி-மூங்கில் போன்ற தோள் உடைய என் பெண் –

பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து
ஒரு ஸ்திரியை விரூபை ஆக்கினவன் உடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையாலே –
இத் தலைக்கு ஒரு குண ஹானியாய் தோற்றா நின்றது –
இது ஆழ்வார் அருளிச் செய்யக் கூடாது
இது எங்கனே சேரும்படி -என்று ஆச்சானைக் கேட்க
துடிப்பு இருக்க கை வேக வேணுமோ
எம்பெருமானார் தானே அருளிச் செய்து வைத்தார் இறே -என்ன
அருளிச் செய்த படி என்ன -என்று கேட்க –
முன்பு ஒரு புணர்ந்து உடன் போக்கிலே பிறந்த பிரமாதத்தை கேட்டு
அத்தை நினைத்து இப்பொழுது பயப்படுகிறாள் -என்று அருளிச் செய்தார் –
(உடன் போக்கு -அகத்துறை
சூர்ப்பணகை வந்து கர தூஷணாதிகள் -நாசிக் பஞ்சவடியில் -அனர்த்தம்
இவர்கள் போக்கிலும் என்ன பிரமாதம் வருமோ என்று எம்பெருமானார் நிர்வாகம் )

மெய்யே அஞ்சுவன் –
அது பூத காலத்திலே
இது வர்த்தமான காலத்திலே என்று தோற்றுகிறது இல்லை
ஏக காலத்தில் போலே பயம் ஆகா நின்றது –

பஞ்சிய மெல்லடி –
இது படுக்கையில் இருக்கிலும் பயப்படும் வேண்டும்படி
மிருதுவான காலை உடையவள் –
(கையில் இருக்கிலும் பாடபேதம்)

எம் பணைத் தோளி –
சுற்றுடைமை பசுமை ஒழுகு நீட்சி -இவை
எல்லா வற்றாலும் மூங்கில் போன்று இருந்துள்ள
தோளை உடையவள் –

பரக்கழிந்து-
பழி அஞ்சாதே
பரக்கழிவு-மிகவும் கழிவு என்றுமாம்

வஞ்சி இத்யாதி
தனக்கு உபமானம் உள்ள தேசத்து
ஏறப் புகுமோ-
வஞ்சி கொம்பும் மூங்கிலும்

———————————————————

நீ எதுக்கு அஞ்சுகிறாய்
ரகு குலத்தில் பிறந்த திலகன் அன்றோ -அஸஹாய வீரன் அன்றோ என்று அசலகப் பெண் ஆஸ்வாசப்படுத்த
பேய் முலை நஞ்சு -அஞ்ச சொல்ல -உண்டு -சொல்லி உள்ளே பெண் சொன்னது போல்
விரோதிகளை கிழங்கு எடுப்பவன் என்ன
இவன் ரகு குலத் திலகனோ
இடையனோ
நீங்கள் ஷத்ரியன் என்று என்னை ஆசுவாசப்படுத்த சொல்கிறீர்கள்
நான் அறிய மாட்டேன்
ஆனாலும் இளையவன்
பிறந்தது ஷத்ரியன் -வளர்ந்தது ஆயன் அன்றோ –

ஏது அவன் தொல் பிறப்பு ? இளையவன் வளை யூதி மன்னர்
தூதுவனாயவனூர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

ஏது அவன் தொல் பிறப்பு ?
ஷத்ரிய ஜென்மமோ இடையர் ஜென்மமோ அறிகிலேன் –
(ருக்மிணி நீளா அம்சம் நப்பின்னை -இருவருக்குமான ஒரு பிறவியில் இரண்டும் கொண்டவன் அன்றோ )

இளையவன்-
பாலிசன் -விளைவை அறியாதே ஒன்றைச் செய்யுமவன்

வளை யூதி –
தான் நின்ற இடத்தை-(கோபிமார்களுக்கு ) வெளி இடுமவன்

மன்னர் தூதுவனாயவனூர் –
உகவாதார் இருந்த இடத்தே -வெறும் கையே செல்லுமவன் உடைய ஊர்

அவன் ஊர் சொல்லுவீர்காள் ! சொலீர் அறியேன் –
ஷத்ரிய ஜன்மத்திலே பிறந்தார் என்று ஆசைப்படுவார்
இடையனாய் பிறந்தான் என்று ஆசைப் படுவாராய்
ஆசைப்படா நின்றீர் கோள்
எனக்கு இரண்டும் தோற்றுகிறது இல்லை –

மாதவன் தன் துணையா நடந்தாள்-
ஆழம் காலை மிதப்பு என்று புத்தி பண்ணினாள்
அளவுடையவர்கள் அகப்பட்ட விஷயம் என்றால்
தனக்கு நிலம் அன்று என்று மீள அறியாதே போனாள்-
(அகலகில்லேன் தண்ணீர் தண்ணீர் என்னும்படி இருக்க
பிராட்டி -மா -கூட சென்ற பொழுது காது மூக்கு அரிய பெற்றாள் சூர்ப்பணகை )

தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாலி புகுவர் கொலோ ?
அவ் ஊரில் பூக்கள் அலர்ந்த போது
தேன் வெள்ளத்தாலே வண்டுகளுக்கு இழிந்து பானம்
பண்ணப் போகாது
கழிய அலர்ந்து மது வெள்ளம் அரையாறு பட்டால் ஆயிற்று
வண்டுகளுக்கு பானம் பண்ணல் ஆவது
கழிய அலர்ந்த பூக்கள் தேடி வண்டுகள்
மது பானம் பண்ணும் திரு வாலியிலே புகுவர் கொலோ

போது- புதுப் பூ -அப்போது அலர்ந்த பூ –
செம்மல் -பெருமையும் பழைமையும் பூவும்-

——————————————————-

மாயவன் தன் பின் நடந்தாள் என்று வயிறு பிடிப்பது என்ன
அழகைக் கண்டு பிரணயித்தவத்தில் நசையால் நடந்தாள் என்கிறார்கள் –

தாய் எனை என்று இரங்காள் தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை யகன்ற இவள்
வேயன தோள் விசிறிப் பெடையன்ன மென நடந்து
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-5-

மாயனை மாதவனை–ஆச்சர்ய ஸ்ரீ யபதி-திருவே மாலா -மாலே திருவா நித்ய சங்கை

தாய் எனை என்று இரங்காள் –
தாய் வயிறு எரியும் என்று இரங்குகிறிலள்

தடந்தோளி தனக்கமைந்த மாயனை –
அவனுடைய சர்வ அங்க சௌந்தர்யமும்
இவள் உடைய தோள் அழகு ஒன்றுக்கும் போரும் அத்தனை –
(நம்பியைக்காண ஆயிரம் நயனம் வேணும்
கொம்பினைக் காணும் தோறும் க்ஷணம் தோறும் நயனம் வேணும் )

மாதவனை மதித்து என்னை யகன்ற இவள் –
பிரணய தாரையில் ஸ்தோத்ரியன் என்னும் இத்தை
ஒன்றையும் நினைத்து என்னை கை விட்ட இவள்

வேயன தோள் விசிறிப் –
மூங்கில் போன்று இருந்துள்ள தோள் வீசி
(இடைப்பெண்கள் கையை வீசியே நடப்பார்கள் அன்றோ )

பெடை யன்ன மென நடந்து –
வெறும் அன்னம் எனில் ஆண் நாறும் என்று -பெடை யன்னம் -என்றாள்
(ஆண் நாறும் -பும்ஸ்த்வ கந்தம் வீசும்)

போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் கொலோ ?
இருவரும் கூட ஜல கிரீடை பண்ணி வர்த்திக்கலாம்
தேசத்தில் புகுவர் கொலோ-

—————————————————————–

கீழ்ப் பாட்டின் விவரணம் இது-

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
எனக்கு தஞ்சமான துணை என்று கொண்டாடி
வளர்த்தேன் -என்று ஒரு சற்றும் இரங்கிற்று இலள்

தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் –
ஸ்நேஹம் இல்லை யாகிலும் நோவு பட்டாரை ஐயோ என்று
இரங்குவர்கள் இறே -அதுவும் செய்திலள்-

வன் துணை வானவர்க்காய் –
தேவர்களுக்காக தன்னைப் பேணாதே
அம்புக்கு இலக்காகுகை வன் துணை யாவது –

வரம் செற்று –
தேவர்கள் கொடுத்த வரங்களையும் அழித்து-
தங்கள் தலையால் உள்ளவை எல்லாம் அழித்தால் ஆகாதே
அவன் துணை யாவது
(வர பலம் வாள் பலம் நம்பி அன்றோ எதிர்த்தான் பையல்
விராமன் -வரம் கொடுத்தவன் பெற்றவன் வரம் மூவரும் ஒய்வு எடுக்க வைத்தவன்
நமக்கு நாமே தேடிக் கொள்ளும் நன்மை கழுத்துக் கட்டி அன்றோ
தேவர்களுக்கு வரங்களை ஒழித்து தான் ரஷிக்கிறான் )

அரங்கத்து உறையும் இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?
நிரதிசய போக்யனுமாய்
சுலபனுமாய்
(வைகுந்தத்து உறைவான் இல்லையே
அமுத ஏரி -அளப்பரிய ஆரமுது ஸ்ரீ வைகுண்டம்
அரங்கத்து அந்தணன் )
ரஷகனுமானவன் உடன் கூட
ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளுகிற போது
திரு அயோத்யை கோடித்தாற் போலே
திரு வாலியையும் கோடிக்கப் பண்ணி
புகுகிறார்கள் இறே-

இவர்கள் மிதுனமாகப் புகுவதே திருவாலிக்கு அலங்காரம்

——————————————————-

கீழே தாயுக்கு இரங்காமல்
லோக விக்ராந்த சரணம் -அனைவரையும் சந்தஜ்ய -பிதரம் மாதரம்
எதுக்கு வருந்துகிறாய்
விட்டுப் பற்ற வேண்டிய விஷயம் அன்றோ அவன்
புல்கு பற்று அற்றே
பற்று அற வேண்டுமே -நீர் நுமது என்னும் இவை வேர் முதல்
அறிந்து தானே பெண்
நான் அப்படி நினைப்பவள் அல்லவே
நாங்கள் பரதந்த்ரர்கள்
கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்போமோ
தாய் என்று விட்டுப் போக அவள் பெயர் வைத்து சாக்கு
உண்மையில் அடியோம் அன்றோ
பகவத் சம்பந்தம் உள்ளவர்கள் கௌரவிக்கப் படுபவர்கள் அன்றோ -பிள்ளையோ சிஷ்யரோ –

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால்
மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?–3-7-7-

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்–அன்னையும் அத்தனும் என்று பழி
இட்டு உண்மையில் அடியோமுக்கு இரங்கிற்றிலள்

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
போக நினைத்தால் பழி இட்டுப் போக வேணுமோ –
அடியோமான எங்களை தாயும் தமப்பனும் என்று
பேரிட்டு இரங்கிற்றிலள் –
நியாம்யரை நியாமகர் என்று பேரிட்டுப் போக வேணுமோ –

பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் –
இங்கே இருவரைக் கை விட்டால்
அங்கே இருவரைப் பற்ற வேணும் இறே
நம்மை விடுகைக்கு அடி அங்கு
அனுபாவ்ய விஷயத்தின் உடைய பெருமை யாகாதே

மின்னியும் வஞ்சியையும் வென்றிலங்கும் இடையாள் நடந்து –
மின்னையும்
வஞ்சிக் கொம்பையும்
தோற்பிக்கும் இடையை உடையவள் நடந்து

புன்னையும் அன்னமும் சூழ் புனலாலி புகுவர் கொலோ ?-
சங்கேச ஸ்தலம் -சம்போ ஸ்தானங்கள் ஆளும் தன்னிடம் உள்ள
ஊரிலே புகுவர் கொலோ-

—————————————————-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழும் கோதை தன்னைப்
பெற்றிலேன் முற்றிழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்றெல்லாம் கை தொழப் போய் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-8-

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற –
சிறு கூட்டிலே நின்று பேசா நின்ற மிருது ஸ்வபாவமான
பூவையையும் விட்டகன்ற

செழும் கோதை தன்னைப் –
லிலோ உபகரணங்களை விட்டு
அவனைப் பற்றின பின்பு உடம்பிலே பிறந்த பௌஷ்கல்யம்

பெற்றிலேன் முற்றிழையை-
முன்னே போக விட்டு
கடைப் பணியும் கொக்கு வாய் கூட்டமும்
கண்டு பின்னே போகப் பெற்றிலேன்

பிறப்பிலி பின்னே நடந்து –
உனக்கு இது குண ஹானி என்று சொல்லி
மீட்கைக்கு ஒரு பிறப்பு உடையவன் அன்றிக்கே
இருக்கிறவன் பின்னே நடந்து

மற்றெல்லாம் கை தொழப் –
தாயான குற்றத்தாலே எனக்கு ஒருத்திக்கும் இறே
தொழ ஒண்ணாதது
அல்லாதார்க்கு எல்லாம் தொழுது பின்னே போகலாம் இறே
(எல்லாம் பந்தும் பூவையும் கூட தொழும் படி)

போய் வயலாலி புகுவர் கொலோ ?
தன்னை காண்பார்க்கு
காட்சிக்கு கொடுக்க இடம் உள்ள தேசத்தில் புகுமோ
அங்கன் அன்றிக்கே
எல்லா போகங்களும் உண்டாம் படியான தேசம் என்னவுமாம்-

——————————————————–

கிருத யுகம் கர்தம பிரஜாபதி– திரு இருந்த நகரம் ஸ்ரீ புரம்–ஆலிங்கனம் -நான்காவது யுகம்
உபசரிவசு -தேர் மேலே ஓடி-தவறாக -அடுத்த த்ரேதா யுகம்
த்வாபர வஜ்ரகோஷன் -சங்கபாலன் மந்திரி வைரமேகன் -சங்க பாலன் -அடுத்த யுகம் மோக்ஷம்
நீலன் -குமுதவல்லி நாச்சியார் –
வேத ராஜ பெருமாள் -வயலாலி மைந்தன் கல்யாண ரெங்கநாதன்
நீணிலா முற்றம் –

பெற்றாரையும் உற்றாரையும் விட்டு
லீலா உபகரணங்களையும் விட்டு
பிறந்தகம் லீலா உபகரணம் விட்டு
பெருமாள் உடன் சேர்ந்து இருந்தால் சுவர்க்கம்
இல்லை என்றால் நரகம்
சக்ரவர்த்தி தாச தாசீ கணங்களைக் கொடுக்க -இளைய பெருமாள் கூடப் போக வேண்டியவள்
தனித்துப் போனதால் பாவியேன் -ஓராண் வழியால் வந்த அர்த்தம் இதுவே-

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-

காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
ஈஸ்வரனைக் காட்டில் பிராட்டி
அஸி தேஷணை-என்னும் ஏற்றத்தை உடையாள் ஆனாப் போலே
பிராட்டியில் ஏற்றம் இவளுக்கு -காவியங்கண்ணி -என்று
இருவரையும் சேர அனுபவிக்கிற கண் இறே இவளுடைய கண்கள் –
(அத் திரு அவனைப் பற்றும் இத் திரு இருவரைப் பற்றும் )

பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து –
என் வயிற்றில் பிறக்கை இறே இவளுக்கு
தனியே போக வேண்டிற்று-

தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் –
நடையாலே பிச்சேற்ற வல்லள்

நெடுமாலொடும் போய் –
நடைக்கு பிச்சேறி வ்யாமோஹிக்குமவள்

வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?-
ஸூநா ஸூநி கரியைப் பண்ணி விளையாடலாம்
தேசத்திலே புகுவர் கொலோ-

———————————————–

தாய் மனம் நின்று இரங்கத் தனியே நெடுமால் துணையா
போயின பூங்கொடியாள் புனலாலி புகுவர் என்று
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே–3-7-10-

தாயார் வயிறு எரிந்து இரங்கா நிற்க –
தாய் மனம்-இத்யாதி –
தாயார் வயிறு இரங்கி அஞ்சா இருக்க –
என்னிலும் காட்டில் வயாமோஹத்தாலே கலங்கி இருக்கிறவன்
துணையாகப் போன
விலஷணையான பெண் பிள்ளை
ஜல சம்ருத்தியை உடைத்தான
திருவாலியிலே புகும் என்று
பிராட்டி பேச்சாலே யாகை யன்றிக்கே
திருத் தாயார் பேச்சாம்படி

பகவத் விஷயத்திலே ப்ராவண்யராய்
பிரதி பஷத்திலே சினத்தை உடையராய்
அத்தை துணிக்க வல்ல வேலை உடையரான
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த

பத்தும் மேவிய நெஞ்சுடையார்க்கு தஞ்சமாவது விண்ணுலகே –
இப்பத்தும் சஹ்ருதயமாக கற்க வல்லாருக்கு பரம பதம் நிச்சிதம் –
தாயார் தனி வழியே போனாள் என்று பயப்பட வேண்டா –
ஆதி வாஹிக கணத்தோடு
தானே வழி காட்டிப் போம்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கள்ளக் குறளன் நெஞ்சுள் செல்லும் தோற்றத்தை
உள்ளத்துள் தேற்றமாக்க ஓர்ந்ததனை தெள்ளி தாத்தான்
ஆலி யம்மானுக்கு அற்ற தன்மை யுரை ஆலி நாடன்
ஞாலத்து நந்தா விளக்கு -27-

கள்ளக் குறளனாய் திரு வாமநவதாரமும் திருவாலி அம்மானும் தர்மி ஐக்யத்தால் ஒருவரே
தாய் மனம் நின்று இரங்கத் தனியே பெருமாள் துணையா புனலாலி புகுந்தாள்-பல சுருதி பாசுரத்தால்
அவனுக்கே அற்றுத் தீர்ந்தமை விவஷிதம்
அர்ச்சாவதார சேவையால் இந்த லோகத்தில் ஆழ்வார் நந்தா விளக்காக நம்முடைய
அஞ்ஞான அந்தகாரங்களை அடியோடு நீக்கி அருளுகிறார் –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading