ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -71-80–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது 

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப-
திரு உலகளந்த விஜயத்தை அனுசநித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆர்க்க

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)(

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
ஆர்க்கைக்கு அவசரம் (நேரம்)இன்றிக்கே
அக்நியை உமிழா நின்று கொண்டு
நமுசிப் பிரக்ருதிகளை வாய் வாய் என்று
ஒடுங்குவித்தது திரு வாழி

விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் பூவாரடி நிமிர்த்த போது-
கிடந்த இடத்தே கிடந்து
விஷத்தை உமிழா நின்ற
திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
சௌகுமார்யத்தை உடையனான ஈஸ்வரன்
பூமியை அளக்கைக்கு புஷ்பஹாச ஸூகுமாரமான
திருவடிகளை நிமிர்த்த போது
இப்படி ஆனது என்கிறது –

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————–

திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது-

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திரு நாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

போதறிந்து-
ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று
சத்வோத்தர காலம் அறிந்து

வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போதரிந்து கொண்டேத்தும்-
குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு
அதில் செவ்விப் பூவை அரிந்து கொண்டு
ஏத்தா நின்றது

போது உள்ளம்-
ஹிருதயமே போரு –

அணி வேங்கடவன் பேராய்ந்து வேங்கடவன் மலரடிக்கே செல்ல போது மணி –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவேங்கடமுடையான் உடைய திரு நாமத்தைச் சொல்லி
அவன் திருவடிகளிலே புஷ்பத்தையும் அணி –
மணி வேங்கடவன் என்று சொல்லி

அணி என்று
கிரியை ஆகவுமாம்-(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -)

————————————————————————

துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்

துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திர கலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதி கொண்ட யான்
ஆதி நடு அந்தி வாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
எல்லா திருநாமங்களையும் ஆய்ந்து-ஆராய்ந்து- உரைப்பன் –
எல்லா அவஸ்தைகளிலும் –

வாய்ந்த மலர் தூவி-
கைக்கு எட்டின புஷ்பத்தைக் கொண்டு
வேண்டியபடியே பொகட்டு

வைகலும் –
காலம் எல்லாம்

ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
பிறை போலே ஏந்திய கொம்பை உடைத்தாய்
தர்ச நீயமான கண்ணை உடைத்தான
குவலயாபீடத்தை முடித்த
என்னுடைய ஸ்வாமிக்கு

இறைக்கு ஆட்பட துணிந்த யான் -ஆய்ந்து உரைப்பன் –
அவன் பிரதிபந்தகம் போக்க
நான் அடிமை செய்தேன் என்கிறார்-

(ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார் )

————————————————————————–

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே

யானே தவம் செய்தேன்
நானே தபஸ் பண்ணினவன் ஆகிறேன்

யானே தவம் உடையேன் எம்பெருமான்-
தபஸின் உடைய பலமுடையேனும் நானே
தபஸும் தபஸின் உடைய பலமும் உடையவன் நானே
என்கிறது எத்தாலே என்னில்

யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் –
விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை
சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் –
ஆகையால் –
பெரும் தமிழன்
பெரிய தமிழன் –

பெரிது நல்லேன்-
மிகவும் நல்லேன்-

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப்பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

————————————————————————–

பெரிய தமிழன் -மிகவும் நல்லேன் -என்று சொன்னீர்
ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார்

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

பெருகு மத வேழம்-
மதித்து சமைந்ததாகில் சிறிது அறிவு உண்டாம் –
மதம் பெருகா நின்று அறிவு கெட்ட சமயத்தில்

(திருமலைக்கு மேல் திருமலை -திருமலையில் கறு மலை போல்)

மாப் பிடிக்கு –
இப்படி அறிவு கெட்டத்தை
த்யான யுக்தரைப் போலே
தன் புருவம் நெறித்த இடத்தில் கார்யம் கொள்ள வற்றாகை

முன்னின்று –
அந்தேவாசிகளைப் போலே
பிடியினுடைய ஸ்வபாவத்தை அறிந்து
கண் வட்டத்திலே நின்று

இரு கண் இள மூங்கில்
இரண்டு கணு வளையச் செய்தே
பருவத்துக்கு உள்ள முற்றனவற்று இருக்கை

வாங்கி —
மூங்கிலினுடைய மென்மையும் களிற்றுன் உடைய
சாவதானத்தையும் சொல்லுகிறது(பறித்து என்று இல்லாமல் வாங்கி -ஜாக்கிரதையாக )

அருகிருந்த தேன் –
திரு மஞ்சனத்துக்கு சம்பாரித்து இருக்குமா போலே
குறைவற்று இருக்கிறபடி –

தேன் -கலந்து-
த்ரவ த்ரவ்யங்கள் இரண்டும் கலந்தாற் போலே இருக்கை(கடின த்ரவ்யம் போல் மூங்கில் இல்லாமல் த்ரவ்யமாக இளம் மூங்கில் )

நீட்டும் –
இதுக்கு கொடுக்கையே புருஷார்தமாய்
இருக்கிறபடியும்
அது அநாதரிக்கிறபடியும்(பங்குனி உத்தர திரு நாள் பிரணய ரோஷம் போல் )

திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை
வான் கலந்த என்கிறது உபமான உபமேயங்கள்
ஸூ சத்ருசமாய் இருக்கிறபடி –

(இப் பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப் பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45-என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ் வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2–என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

ஸ்ரீ ஈடு

பெருகு மத வேழம் – ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள மதத்தையுடைய யானையானது, மாப்பிடிக்கு முன் நின்று – மதித்து முன்னடி தோற்றாதே வருகிற இதனையும் தனக்குக் கையாள் ஆக்கிக்கொள்ளவற்றாய் ஆயிற்று இதனுடைய சீர்மை இருக்கிறபடி.

‘நான் இங்குத்தைக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று ஏவிற்றுச் செய்கைக்குக் காலத்தை எதிர் நோக்கி நிற்கின்றதாதலின், ‘முன்னின்று’ என்கிறது.

இரு கண் இள மூங்கில் வாங்கி – இரண்டு கண்ணேறி அதற்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இருக்கிற மூங்கிற்குருத்தை வாங்கி; என்றது, தான் மதித்து முன்னடி தோற்றாதே திரியச்செய்தேயும் பிடியின் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே குறிக்கோளோடே ஆதாரத்தோடு வாங்குதலைத் தெரிவித்தபடி.

அருகு இருந்த தேன் கலந்து – திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து. மூங்கிற்குருத்தையும் நீர்ப்பண்டத்தைப்போன்றதாக அருளிச் செய்கிறார்.

நீட்டும் – இதுதான் இரந்து கொடாநிற்க, அதனை, அது ‘உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்’ என்று நிற்குமாயிற்று.

மா பிடி -சிலாக்கியதை —பிடிங்கி -என்னால் -வாங்கி -ஜாக்ரதை ஆதரம் உடன் – த்வயார்த்தம் -ராமானுஜர் சிஷ்யர்களுக்கு -திரு மந்த்ரம் சரம ஸ்லோகார்த்தம் கலந்து அருளுவார் –

வான் கலந்த வண்ணன் வரை – மூங்கிற்குருத்தும் தேனும் கலந்தாற்போலே ஆயிற்று, மேகமும் அவன் திருநிறமும் கலந்திருக்கும்படி.

————————————————————————–

இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

வரைச் சந்தன குழம்பும்
சந்தன கிரியிலே உண்டான
சந்தனக் குழம்பும்
வான் கலனும்
தேசமான அணிகலனும்
பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும்
பரிமளம் மிக்கு தர்சநீயமான மல்லிகையும்

நிறைத்துக் கொண்டு ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்
இது எல்லாத்துக்கும் காரணமாய் நின்று
இத்தனையும் செய்தான் ஆகில்
இதற்கு மேல் செய்வது என் என்னும்
ஞானத்தை உடைய சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளையே ஏத்திப் பணிவது உறும் –

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

————————————————————————–

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகை யாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

(உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்)

சூத்திர பதார்தங்களினுடைய
காலைப் பற்றிக் கொண்டு திரிந்த உனக்கு
ஸூ ஹ்ருத்தானவனுடைய திருவடிகளைப் பற்றுகை உறும் –

(நல் நெஞ்சே விபரீத லக்ஷனையாக இங்கு வியாக்யானம் –
அப்பிள்ளை முந்துற்ற நெஞ்சே என்று கொண்டாடுகிறார் என்கிறார்)

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா
ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும்
ஆஸ்ரயணயம் தானே உறும்-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

————————————————————————–

ஆஸ்ரயணீய வஸ்து கை புகுந்த பின்பு(ஸத்ய லோகத்துக்கு வந்து அன்றோ தன்னைக் காட்டிக் கொடுத்தான் )
(த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனே
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

தபஸ் பண்ணினானும்
பலம் பெற்றானும் ப்ரஹ்மாவே
அன்யார்தமாக பிரவர்த்திகச் செய்தே
பலம் பெற்றான் என்கிறது
அநேக கை படைத்தால் உள்ள
லாபம் பெற்றான்

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
திருவடி விளக்க அபேஷிதமானவாறே
தர்ம ஜலமானத்தைக் கையிலே கொண்டு
அனைத்து திரு நாமங்களைச் சொல்லி
பின்னை திருவடி விளக்கினான்-

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

————————————————————————–

திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்–பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

பின்னின்று தாய் இரப்பக் கேளான்
ஸ்ரீ கௌசல்யை
நான் ஏக புத்ரை
உம்மைப் பிரிந்து நான் ஜீவியேன்
நீர் காட்டுக்குப் போக வேண்டா
என்று சொன்னால் கேளான் –

பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள்
அக்ரதஸ்த்தேக மிஷ்யாமி -என்று
பிரார்திப்பாள் பெரிய பிராட்டியார்

சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல்
ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப் படா நின்ற
தோள் வலியை உடையனான பிள்ளையுடைய
குணங்களுக்கு

அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர் –
அன்று அளந்தத அத்தனையும்
அக் குணத்துக்கு நேர்-

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————–

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப் போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத் திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

நேர்ந்தேன் அடிமை –
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கிட்டினேன் –

நினைந்தேன் அது ஒண் கமலம் –
ஸ்ப்ருஹணீயகமான திருவடிகளை நினைந்தேன்

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் –
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே
ஸ்நேஹத்தை உடையனாய் பரி பூர்ணன் ஆனேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக் கோலம் கண்ட பகல் –
திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு
முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம்
என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது –

(ஆர்ந்தேன் -பூர்ணம் என்றும் பொருந்தினேன் என்றும்)

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading