பேய்த் தாயை முலை யுண்ட பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோ குலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே—2-5-4-
மானோக்கின்-போதரிக் கண்ணினாய்
—————————————————–
வியாக்யானம் –
பேய்த் தாயை முலை யுண்ட பிள்ளை தன்னை-
பேயானவள் தாய் வடிவு கொண்டு வரத்
தாய் பக்கல் பண்ணக் கடவ விருப்பத்தை
அவள் பக்கலிலே பண்ணி –
அவள் முலையை உண்ட மௌக்யத்தை உடையவனே –
(பிள்ளை என்னாமல் பிள்ளை தன்னை -தானான தன்மையில் )
பிணை மருப்பில் கரும் களிற்றை-
பிணைத்த மருப்பை உடைய கரும் களிறு போலே
இனிய சேஷ்டிதங்களை உடையவனை –
பிணை மருப்பு -என்கிற இத்தால்
செருக்காலே மிகைத்து திரியும் படியை சொல்லுகிறது –
பிணை மானோக்கின் –
மான் பேடை போலே இருக்கிற நோக்கை உடைய
ஆய்த் தாயார் உண்டு -இடைத்தாயார் -யசோதை பிராட்டி –
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை –
அவள் ஸ்பர்சித்த வெண்ணெயும் தயிரையும்
அமுது செய்து ஆஸ்ரித ஸ்பர்சமுடைய த்ரவ்யமே
தனக்கு தாரகமாக-(அமர்ந்த) இருந்த செயலாலே
லோகத்தை அடைய எழுதிக் கொண்டவனை –
அந்தணர் தமமுதத்தை-
அச் செயலாலே ப்ராஹ்மண ஜாதிக்கு
தாரகமானவனே –
குரவை முன்னே கோத்தானை-
சிலர் காணக் கடவது அன்றிக்கே இருக்கிற இத்தை
எல்லார் கண் முகப்பே திருக் குரவை கோத்தவனை-
குடமாடு கூத்தன் தன்னை –
இப்படி சிலர் கண்டு போகை அன்றிக்கே
கண்டு காணாதாரும் காணும்படியாக காட்டினவனை –
கோ குலங்கள் தளராமல் குன்றமேந்திக் காத்தானை –
பசுத் திரள்கள் ஆனவை வர்ஷத்தில் நோவு படாதபடி
தோற்றிற்று ஒரு மலையை பிடுங்கி நோக்கினவனை-
எம்மானை –
தன்னுடைய ரஷணத்தைக் காட்டி என்னை
அனன்யார்ஹனாக எழுதிக் கொண்டவனை –
கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அவனை ரஷகன் என்று அறியப் பெற்றேன் –
எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார்-
———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply