வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே -1-3-10-
————————————————
வியாக்யானம் –
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
சர்வ பதார்த்தங்களும் உத்தேச்ய லாபத்தாலே களித்து வர்த்திக்கும் தேசமாயிற்று –
இப்படி இருக்கிற ஸ்ரீ வதரியிலே வந்து இருக்கிற சர்வாதிகனை கவி பாடிற்று-
கண்டல் வேலி –
கண்டல் என்று தாழை –
கடல் அணித்தாய் இருக்கையாலே
தாழைகள் உண்டாய் இருக்கும் இறே –
பூத்த தாழைகளை வேலியாக உடைத்தான திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ ஆழ்வார்
அருளிச் செய்த மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் –
இவற்றைக் கொண்டு –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருக்கிறவர்கள் பாடுவதாக ஆடுவதாக கூடிடில்-
நீள் விசும்பில்
நீள் விசும்பு -என்கிறது
உபரிதந லோகங்களின் உடைய சமுதாயத்தை
அதில் –
அண்டம் அல்லால் –
ஸ்ரீ பரம பதம் அல்லது அவர்க்கு ஆட்சி அறியோம் என்னுதல்
அன்றிக்கே
நீள் விசும்பு என்கிறது ஸ்ரீ பரம பதமாய்
அது அல்லால் மற்று ஓர் அண்டம் அவர்க்கு ஆட்சியாக அறியோம் என்னுதல் –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில்
இவர் அருளிச் செய்த தோஷம் ப்ரத்யஷித்து அநுபவியா நின்றோம்
அவ்வோபாதி
ஸ்ரீ பகவத் விஷயமாக இவர் அருளிச் செய்ததும் மெய்யாக இருக்கும் இறே –
ஆன பின்பு
இவர் விடச் சொன்னவற்றை விட்டு
இவர் பற்றச் சொன்னவற்றை பற்றுகை இறே
சேதனராய் இருப்பார்க்கு செய்ய அடுப்பது-
——
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
முற்ற மெய்யின் பொய் நாசமான பாசத்தின் புன்மை
உற்ற மால் ஏற்றத்தோடு உரைத்து மூப்பு -முற்று முன்
மந்த்ரம் ஈந்தோன் சேர் வதரி வணங்கு என்னு நீலன்
சிந்தையான் ஆனான் என்னும் -3-
மந்த்ரம் ஈந்தோன் -நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -4-9-2-நீலன் சிந்தையுள் எப்பொழுதும் உள்ள ஸ்ரீ வராஹாவதாரம் -ஏனம் என்றவாறு –
—————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply