கண்ணித் தண்அம் துழாய்முடிக் கமலத் தடம்பெருங்
கண்ண னைப்புகழ்
நண்ணித் தென்குரு கூர்ச்சட கோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வுஇல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர்பத்து இசையொடும்
பண்ணில் பாடவல் லார்அவர் கேசவன் தமரே!
பொ-ரை : குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையையுடைய திருமுடியினையும் தாமரை போன்ற விசாலமான பெரிய கண்களையுமுடைய இறைவனது நற்குணங்களிலே தாம் ஈடுபட்டு. அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறனாகிய ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த எண்ணத்தில் தப்பாத அந்தாதியாக அமைந்த ஆயிரம் பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களையும் இசையோடும் பண்ணோடும் பாடுவதற்கு வல்லார் எவர்? அவர் கேசவன் தமர் ஆவர்.
வி-கு : கண்ணனை – வேற்றுமை மயக்கம். ‘சடகோபன், மாறன்’ என்பன இரண்டும், ஆழ்வாருடைய திருப்பெயர்கள். ‘இசையொடும் பண்ணில்’ என்று அருளிச்செய்வதால் இசை வேறு, பண் வேறு என அறியலாம். இவ்விரண்டன் வேறுபாட்டினை வியாக்கியானத்திற் காண்க.
ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்; அவர்களுக்குக் குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் பிரயோஜனம் அற்றவைகள்; இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்,’ என்கிறார்.
கண்ணி தண் அம் துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை – இப்போதாயிற்று மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு தரித்ததும், திருக்கண்கள் மலர்ச்சி பெற்றதும். புகழ் நண்ணி – இறைவன், தம் பக்கல் செய்த காதலாகிய குணத்திலே மூழ்கி. தென்குருகூர்ச் சடகோபன் மாறன் – ஒன்று திருப்பெயர்; ஒன்று பகைவர் கூட்டத்துக்கு யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது. எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – இறைவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து, அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச்செய்த ஆயிரத்தில் இப் பத்து. இசையொடும் பண்ணில் பாட வல்லார்- இதில் ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள். பண்ணாவது, கானம். இசையாவது, குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை. 1‘தொனியாலும் திறத்தாலும்’ என்றபடி. அவர் கேசவன் தமரே – அவர்கள் யாரேனுமாகவுமாம், 2குலம் சரணம்
கோத்திரம் முதலானவைகள் பயன் அற்றவைகள்; 1‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.
(11)
முதற்பாட்டில், எம்பெருமான் ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று கொண்ட ஐயத்தைப் போக்கினார்; இரண்டாம் பாட்டில், அது போன பின்னர் அவனுக்கு உண்டான புதுக்கணிப்பைச் சொன்னார்; மூன்றாம் பாட்டில், தமக்கு அவன் செய்த கொடையினைச் சொல்லி ஈடுபட்டார்; நான்காம் பாட்டில், ‘அவன் உமக்குப் பண்ணின உதவி எது?’ என்ன, ‘இதர விஷய வைராக்கியம்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், இதர விஷயவைராக்கியம் முன்னாக ஆத்துமா உள்ள வரையிலும் உள்ள அடிமையிலே அதிகரித்த நான் இனி ஒருநாளும் விடேன்’ என்றார்; ஆறாம் பாட்டில, ‘அடியார்கட்கு உதவுவாய் ஆன பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு முறை இல்லை’ என்றார்; எட்டாம் பாட்டில், இதற்குத் தாம் செய்த உபாயம் இன்னது என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இவர் அகவாய் அறிய வேண்டும்’ என்று ஓரடி பேர நிற்க, ‘இனிப்போக ஒண்ணாது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘நாம் போகாதொழிகிறோம்; நீர்தாம் போகாதொழிய வேண்டுமே?’ என்ன, ‘முக்காலத்திலும் எல்லா விதமான பந்துவுமான உன்னை விடக் காரணம் இல்லை’ என்றார்; முடிவில், இது கற்றார்கட்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டுஉன்னைத் தான்விடேன்
என்றுரைக்க
வன்மைஅடைந் தான்கேச வன்.
2. ‘விப்ரர்க்குக் கோத்ர சூத்ர சரண கூடஸ்தர், பராசர பாரா சர்ய போதாயநாதிகள்;
(பிரபந்நர்கட்கு) பிரபந்ந ஜந கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்’ ‘கோத்ரமாவது,
அபத்ய சந்ததி; அந்த கோத்ரந்தான் அநேகமாய்த் தத்தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப
பரத்வாஜ வத்ஸப் பிரப்ருதிகள் பலரும் உண்டாகையாலே ‘பராசராதிகள்’ என்கிறது. சூத்ர
கூடஸத்தர், போதாயநாதிகள்; சூத்ரமாவது, கர்ம அநுஷ்டாந பிரதிபாதகமான கல்பம்:
அது தானும் பலவாய்த் தத்தத் கர்த்தாக்களான ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும்
உண்டாகையாலே, ‘போதாயநாதிகள்’ என்கிறது. சரணங்களாவன, வேதசாகைகள்; சர்வ
சாகைகளுக்கும் பிரதான பிரவர்த்தகன், பாராசர்யனாயிருக்கச்செய்தேயும், பின்பு தத்தத்
சாகைகளுக்குத் தனித்தனி பிரவர்த்தகரான கடக கலாப கண்வாதிகளும்
உண்டாகையாலே‘பாராசர்யாதிகள்’ என்கிறது’ எனவரும் ஆசார்ய ஹ்ருதய சூத்திரமும்,
அதன் வியாக்கியானமும் (பிரதமப் பிரஹரணம். சூத். 35) ஈண்டு உணர்தல் தகும்.
‘சாத்திரம் மறைதெரி முனிவர் தன்மையிற்
காத்திரம் மாறிஅக் காவல் வேந்தரும்
கோத்திரம் சூத்திரம் குடிஉரைத்துளார்
வேத்திர கீயமா நகரின மேயினார்.’
(வேத்திரகீயச்சருக் 33.)
என்றார் வில்லிபுத்தூராழ்வார்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply