மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
உள்ளம் தேறி
ஈறில் இன்பத்து இருவெள்ளம் யான்மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர்தம் பல்குழாங்கள் நீறுஎழப்
பாய்பறவைஒன்று
ஏறி வீற்றிருந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்!
பொ-ரை : அசுரர்களுடைய பல கூட்டங்கள் நிலை கெட்டு ஓடவும், அவ்விடத்தில் புழுதி எழவும், பகைவர்கள் மேல் பாய்கின்ற ஒப்பற்ற கருடப்பறவையின் மேல் ஏறி வீற்றிருந்தவனே! மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து திருவடிகளை அடைந்து அதனால் உள்ளம் தெளிந்து முடிவு இல்லாத இன்பமாகிய பெரிய வெள்ளத்திலே யான் மூழ்கினன்; இனி, எந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல்.
வி-கு : ‘மாறிப் பிறந்து அடைந்து தேறி மூழ்கினன்’ எனவும், ‘பாறி எழ ஏறி வீற்றிருந்தாய்’ எனவும் கூட்டுக. ‘மாறிமாறி, பாறிப்பாறி’ என்பன, அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளைக் காட்ட வந்தன. பாறி – பாற. வீற்றிருத்தல் – வேறொன்றற்கு இல்லாத பெருமையோடு தங்கியிருத்தல்; வீறு – வேறொன்றற்கு இல்லாத பெருமை. நீக்கேல் – எதிர்மறை முற்று.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘இப்படி, கனத்த பேற்றுக்கு நீர் செய்த நல்வினை என்?’ என்ன, ‘ஒரு நல்வினையால் வந்தது அன்று, நான் பிறந்து படைத்தது’ என்கிறார். ‘அதுவும் ஒன்று உண்டு; அந்தாதியாகப் பிறந்து போந்தேன்’ என்கிறார்.
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து – ‘சம்பந்தி சம்பந்திகளோடு உம்மை ஏற்றுக்கொள்ளுவதற்கு நீர் செய்தது என்?’ என்ன, கடலுக்குள்ளே கிடந்த ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து
கரையிலே சேருமாறு போன்று, மாறிமாறிப் பிறந்து வாராநிற்க, திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை. “பாவங்களை அனுபவித்து மீளுதல், பிராயஸ்சித்தம் பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை’ என்பார்,‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறார். அடியை அடைந்து உள்ளம் தேறி – இதனால், ‘உள்ளம் தேறி அடியை அடைந்தவன் அல்லன்: அடியை அடைந்து உள்ளம் தேறினவன்’ என்கிறார். நெடுநாள் உள்ள விஷய வாசனையாலும் பகவானைப் பற்றாத காரணத்தாலும் உள்ள மனத்தின் மயக்கம் நீங்கித் தெளிந்து. தெளிந்த அளவே அன்றியே, 1ஈறு இல் இன்பத்து இருவெள்ளம் மூழ்கினன் யான் – முடிவில்லாமல் இருக்கின்ற பெரிய ஆனந்தக்கடலிலே மூழ்கினேன். ‘திருவடி, திருவனந்தாழ்வான் இவர்கள் குமிழி நீர் உண்கிற விஷயத்திலே அன்றோ யான் மூழ்கினேன்?’ என்பார்‘யான் மூழ்கினேன்’ என்கிறார்.
‘ஆயின், உம்முடைய விரோதிகள் செய்த காரியம் என்?’ என்ன, 2‘அதற்குக் கடவாரைக் கேண்மின்’ என்கிறார் மேல்: அசுரர்தம் பல் குழாங்கள் பாறிப் பாறி நீறு எழப் பாய்பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய் – அசுர வர்க்கத்தினுடைய பல வகைப்பட்ட குழாங்களானவை பாறிப்பாறி நீறு எழுந்து போகும்படியாகப் பகைவர்கள் மேலே பாயாநின்றுள்ள3அத்விதீயமான பறவையை மேற்கொண்டு உன்னுடைய சிறப்பின் வேறுபாடு தோன்ற இருந்தவனே! பெரிய திருவடிக்கு அத்விதீயமாவது, இறைவன் கருத்து அறிந்து நடத்தலில் தலைவனாதல். இறைவன் பகைவர்களை அழித்தற்குப் பண்ணின செயல், பெரிய திருவடி திருத்தோளில் பேராதே இருந்தது இத்தனையே’ என்பார், ‘ஏறி வீற்றிருந்தாய்’ என்கிறார். உன்னை என்னுள் நீக்கேல் – ஸ்வாமியான நீ, இனி ஒரு காலமும் உன்னை என் பக்கல்நின்றும் பிரித்துக்கொண்டு போகாது ஒழியவேண்டும். இனி, இதற்கு, 1‘என்னோடே இப்படிக் கலந்த உன்னை, உன்னுடைய கலவியால் வந்த ரசம் அறிந்த என் பக்கல்நின்றும் நீக்க நினையாது ஒழிய வேண்டும்’ என்று கூறலுமாம். 2தம்முடைய இனிமையாலே ஐயம் கொள்ளுகிறார். தம் உகப்பு அவனை எதிரிட்டபடி. எந்தாய் – விரோதியைப் போக்கிக் கலக்கைக்கு அடியான சம்பந்தத்தைச் சொல்லுகிறார். எந்தாய் – என தமப்பன்.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
Leave a Reply