ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–327/328/329/330/331/332/333/334/335/336/337/338/339/340–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

இருவரும் இரண்டையும் அந்யோந்யம் நடத்தும் க்ரமம் என் என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு இரண்டையும் நடத்தும் இடத்தில் -தன் ஸ்வரூப அநு குணமாக
ஆச்சார்ய முக உல்லாசமே புருஷார்த்தம் என்று நினைத்து -தன்னுடைய கிஞ்சித் காராதிகளாலே -தன் ஆசார்யனுக்கு சர்வ காலமும் பிரியத்தை நடத்திப் போரக் கடவன் –

மங்களா சாசன பரனாகையாலே-இவ் விபூதி ஸ்வாபத்தால் திரு உள்ளத்தில் ஒரு கலக்கம்
வாராது ஒழிய வேணும் என்றும் -அப்படி ஏதேனும் ஓன்று வந்த காலத்தில் -இத்தைப் போக்கிக் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் -என்கை –

ஆசார்யன் மாறாடி நடத்துகை யாவது -ஹித ஏக பரனாகையாலே -இவனுக்கு ஸ்வரூப ஹானி வாராதபடிக்கு ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ஸ்காலித்யம் பிறவாமல் நியமித்து சர்வ காலமும்  நல் வழி நடத்திக் கொண்டு போருகையாகிற ஹிதத்தை தான் நடத்தி  த்ருஷ்டத்தில் சங்கோசத்தாலே இவன் மிகவும் நலங்கும் அளவில் இருந்த நாளைக்கு இவன் நலங்காமல் இவையும் அவனுக்கு உண்டாம்படி திரு உள்ளம் பற்றி அருள வேணும் என்று அர்த்தித்து  ஈஸ்வரனைக் கொண்டு பிரியத்தை நடத்தக் கடவன் என்கை —

———————————————

இப்படிச் செய்து போரும் இடத்தில் இருவருக்கும் இரண்டும் சம பிரதானமாய் இருக்குமோ –
என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ் ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

அதாவது –
சிஷ்யன் சேஷ பூதன் ஆகையாலே சேஷியான ஆசார்யனுடைய ப்ரீதியில் ஊற்றமாய் போரும் –
ஆசார்யன் பரம க்ருபாவான் ஆகையாலே -தன்னுடைய சிஷ்யனான இவன் சம்சாராத் உத் தீர்ணனாய் உஜ்ஜீவிக்கையிலே ஊற்றமாய் போரும் என்கை –
ஆகையால் சிஷ்யனுக்கு பிரிய கரணமும்- ஆசார்யனுக்கு ஹித கரணுமுமே- பிரதானம் -என்று கருத்து –

———————————————

கீழ்ச் சொன்னவற்றால் பலிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுடைய பிரிய கரணமும்
ஆசார்யன் சிஷ்யனுடைய ஹித  கரணமும்
பிரதானமாக நடத்திப் போருகையாலே -சிஷ்யனான இவன் ஆசார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமாக போருகை ஒழிய –
அநிஷ்ட கரணாதிகளாலே நிக்ரகத்துக்கு விஷயம் ஆகைக்கு இடம் தான் முதலிலே இல்லை என்கை –

ஆகையாலே -என்று உகப்பிலே ஊன்றிப் போரும் என்று சொன்னது ஒன்றையும் அநு வதிக்கிறதாகவுமாம்-

—————————————-

பிரகிருதி சம்பந்தத்தோடு இருக்கிறவனுக்கு -எப்போதுமொரு படி பட்டு இருக்குமோ –
காலுஷ்யங்கள் உண்டாகாதோ -அதடியாக நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது –
அந்த நிக்ரஹம் இரண்டு தலைக்கும் -எங்கனே யாகக் கடவது -என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -330-

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

அதாவது –
அநிஷ்ட கரணாதிகள் அடியாக ஆச்சார்ய நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் தசையில் -அந்த நிக்ரஹம் சிஷ்யனான இவனை யபதே பிரவர்த்தன் ஆகாத படி நியமித்து நல் வழி நடத்துக்கைக்கு உறுப்பாகக் கொண்டு -ஹித ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலே -இப்படி நம்மை நிக்ரஹிப்பதே என்று -இவன் நெஞ்சு உளைதல்- இவனை இப்படி நிக்ரஹிக்க வேண்டுகிறதே என்று ஆசார்யன் நெஞ்சு உளைதல் – செய்கை அன்றிக்கே -நிக்ரஹ விஷயமான இவனுக்கும் -நிக்ரஹ ஆஸ்ரயமான ஆசார்யனுக்கும் -அங்கீகார்யம் -என்கை

—————————————–

நிக்ரஹம் உபாதேயம் ஆகில் -நிக்ரஹ காரணமும் உபாதேயம் ஆகாதோ என்ன -அது
த்யாஜ்யம் என்கிறார் –

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம்
த்யாஜ்யம் –

அதாவது –
நிக்ரஹம் உபாதேயம் என்று நினைத்து மீளவும் தத் காரணத்தைச் செய்ய ஒண்ணாது –
யாதொரு காரணத்தாலே நீரிலே நெருப்பு எழுமா போலே -தன் விஷயத்தில் குளிர்ந்து தெளிந்து இருக்கிற -ஆச்சார்ய ஹிருதயத்தில் நிக்ரஹம் எழுந்து இருந்தது -அந்த காரணத்தை மறுவலிடாதபடி இட வேணும் -என்கை-

————————————————

கீழ்ச் சொன்ன ஆச்சார்ய நிக்ரஹம் ஹித ரூபம் என்று வைதமாக உபாதேயமாம்
அளவன்றிக்கே -இவனுக்கு பிராப்ய கோடி கடிதமாய் இருக்கும் என்னும் அத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

அதாவது ஸ்வ ஆசார்யன் ஸ்வ விஷயத்தில் -ஹித ரூபேண பண்ணுகிற நிக்ரஹம் தான் –
ஸ்வ விரோதி நிவ்ருத்திக்கு உறுப்பாகையாலே-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –
செய்யேல் தீவினை -இத்யாதிகளில் சொல்லுகிற
பகவந் நிக்ரஹம் போலே புருஷார்த்த கோடியிலே அந்தர்பூதம் -என்கை-

ஆசார்யன் அர்த்த காமங்களிலே நசை அற்றவன் ஆகையாலே -அவை ஹேதுவாக பொறுக்கவும் வெறுக்கவும் பிராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தானாகில் அதுவும் பிராப்ய அந்தர்கதமாக கடவது -என்று இது தன்னை மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே –

———————————————-

கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண-பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

அதாவது –
உஜ்ஜீவன பரனான ஆசார்யன் உஜ்ஜீவ விஷுவாய் வந்து -உபசத்தி பண்ணி –
உகப்பிலே ஊன்றிப் போகிற -சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை -பிரேம அதிகமாகவும் –
ஒரு பழுது வாராதபடி ஏகாக்ர சித்தனாய் கொண்டு -உபதேசாதிகளாலே நோக்கிக் கொண்டு போரக் கடவன் –

பிரிய பரனான சிஷ்யன் -தன்னுடைய உஜ்ஜீவன பரனாய்-தன் ஸ்வரூப ரஷணமே
நோக்கிக் கொண்டு போருகிற ஆசார்யனுடைய திருமேனியை -உசித கைங்கர்யங்களாலே சர்வ காலமும் -ஏகாக்ர சித்தனாய் நோக்கிக் கொண்டு போரக் கடவன் -என்கை –

——————————————-

இப்படி இருவரும் இரண்டும் பேணினால் -இரண்டு தலைக்கும் பலிக்கும் அத்தை -அருளிச் செய்கிறார் –

சூரணை -334-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கரமுமாய் இருக்கும்

அதாவது –
ஆச்சார்யரானால் (ஆச்சார்யாக இருந்தால் என்றபடி )சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணுகையும் – சிஷ்யனால் ஆசார்யனுடைய தேகத்தை பேணுகையும் -ஸ்வ அசாதாரணங்கள்-ஆகையாலே -இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் –

அஹம் அன்னம் -என்கிறபடியே – அவனுக்கு போக்கியம் ஆகைக்கு யோக்யமாய் வைத்து அநாதி காலம் அப்படி விநியோகப்படப் பெறாமல் கிடந்த இவன் ஸ்வரூபம் –தாத்ருச விநியோக அர்ஹமாய் திருந்தும்படி பேணிக் கொண்டு போருகையும் –நன்கு என்னுடல் அங்கை விடான் -என்கிறபடியே -அவனுக்கு விட்டுப் பிடிக்க சஹியாத படி போக்யமாய் இருக்கிற ஆச்சார்ய விக்ரஹத்தைப் பேணிக் கொண்டு போருகையும் – பகவானுக்கு  மிகவும் உகப்பு ஆகையாலே – இவை தான் வஸ்து கதயா பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் -என்கை –

———————————————

இப்படி வியவஸ்திததமாக வேணுமோ-ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணத்திலும்-
சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணத்திலும் அந்வயம் உண்டானால் வரும் அது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

அதாவது –
தன்னுடைய தேக யாத்ரையில் தான் உபேஷகனாய் இருக்க –
சிஷ்யன் இதுவே நமக்கு ஸ்வரூபம் என்று தன்னுடைய தேகத்தை பேணிக் கொண்டு போருகை ஒழிய  தன்னுடைய தேகத்தை தான் ரஷிக்கை யாகிற இது -ஆசார்யனுக்கு -ஆசார்யத்வம்  ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –

தான் ஆசார்யன்  பக்கலிலே ந்யஸ்த பரனான பின்பு -தன் ஸ்வரூபத்தை அவன் பேணிக் கொண்டு போரக் கண்டு இருக்கை ஒழிய தான் தன் ஆத்ம ரஷணம் பண்ணுகை யாகிற இது -சிஷ்யனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி -என்கை –

ஆகையால்-மறந்தும் -சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணமும்- ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணமும் கர்த்தவ்யம் அன்று -என்றது ஆயிற்று –

———————————————-

இனி ஆசார்யனும் சிஷ்யனும் தம் தாமுக்கு வியவஸ்திதங்களான ஆத்ம ரஷண-தேக ரஷணங்களைப் பண்ணும் இடத்தில் அவஸ்யம் பரிஹர நீயங்களான விரோதிகளை அருளிச் செய்கிறார்-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

அதாவது
ஹித பரனான ஆசார்யன் -ஸ்வ உபதேசாதிகளால் (அனுஷ்டானம் கடாக்ஷம் )சிஷ்ய ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -நான் ரஷித்துக் கொண்டு போகிறேன் -என்கிற அஹங்காரம் 
ஆச்சார்ய பரதந்த்ரம் ஆகிற தன் அதிகார விரோதி –

பிரிய பரனான சிஷ்யன் -த்ரவ்யாதிகளாலே ஆச்சார்ய தேக ரஷணம் பண்ணும் இடத்தில் –
என்னுடைய த்ரவ்யங்களாலும் கரணங்களாலும் இப்படி ரஷித்துக் கொண்டு போகிறேன் -என்கிற மமகாரம் -சரீர அர்த்த பிராணாதிகள் எல்லாம் ஆச்சார்ய சேஷம் என்று இருக்கக் கடவ -தன் அதிகாரி விரோதி -என்கை –

————————————–

ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தம் தாமுடைய தேக ரஷண தசையில் பிரதிபத்தி
விசேஷங்களை வகுத்து அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத் -என்கிறபடியே சிஷ்ய சர்வமும் -அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை -அவனது என்னும் நினைவு அன்றிக்கே -தன்னது என்றே வாங்கி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் -என்றது –
தனக்கு ஓர் உடைமை இன்றிக்கே -சகலமும் ஆச்சர்ய சேஷம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக விநியோகம் கொள்ளும் அவற்றை -ஆசார்யன் உடைமை என்று பிரதிபத்தி பண்ணி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

——————————————-

ஆசார்யன் தேக ரஷணத்தில் வந்தால் சிஷ்யன் தனக்கு உள்ளது எல்லாம் அங்குற்றை உடைமை என்னும் நினைவாலே கொடுக்கையும் – ஆசார்யனும் தாத்ருச வஸ்துவை வாங்குகையும் ஒழிய -சிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்துவை இருவரும் கொள்ளவும் கொடுக்கவும் கடவர்கள் அல்லர் என்கிறார் –

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் -என்றது -இவன்
மதியம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை மறந்தும் -அங்கீகரிக்கக் கடவன் அல்லன் -என்கை –

சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் -என்றது –
ஸ்வகீயம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை -அஹங்கார மமகார ஸ்பர்சம் உள்ளவை விஷம் என்று வெருவி இருக்கும் -ம்ருது பிரக்ருதியான ஆசார்யனுக்கு விஷத்தை இடுமா போலே சமர்ப்பிக்கக் கடவன் அல்லன் -என்கை –

—————————————

அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் -தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –

என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

—————————————

இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் – அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க – இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் – இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான – கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading