ஸ்ரீ வசன பூஷணம்–சூர்ணிகை–33/34/35/36/37/38/39/40–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–

அநந்தரம் பல நியம அபாவ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷன ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி-

இத்தால் கீழ் அதிகாரி நியம அபாவத்துக்கு உடலாக காட்டப் பட்டதர்ம புத்ராதிகள் தொடக்கமான பிரபத்தாக்கள் ஆனவர்கள் –
ராஜ்ய அர்த்தமாகவும் –
வஸ்த்ர அர்த்தமாகவும் –
பிராண அர்த்தமாகவும்
கைங்கர்ய அர்த்தமாகவும்
ராம பிராப்தி அர்த்தமாகவும்
சமுத்திர தரண அர்த்தமாகவும்
ராம அனுவ்ருத்தி அர்த்தமாகவும்
பிரபத்தி பண்ணுகையாலே பிரபத்திக்கு பல நியமம் இல்லை என்றது ஆய்த்து–

————————————————–

ஆக பிரபத்திக்கு தேச காலாதி நியம அபேஷை இல்லை என்ற பிரதிஞ்ஜையை உபபாதித்தார் கீழ் -விஷய நியமமே உள்ளது -என்ற பிரதிஞ்ஜையை உபபாதிக்கிறார் மேல் –

சூரணை -34
விஷய நியமம் ஆவது
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளத்தும் அர்ச்சாவதாரத்திலே –

குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை -என்றது
பரத்வாதிகள் ஐந்திலும் வைத்து கொண்டு ஸௌலப்யாதி குண பூர்த்தி உள்ள இடமே
விஷயமாகை என்ற படி –அந்த குண பூர்த்தி தான் உள்ளது எங்கே என்ன -பூர்த்தி உள்ளதும்
அர்ச்சாவதாரத்திலே என்கிறார் –
அர்ச்சாவதார விஷயே மயாப் உத்தேச தஸ் ததா உக்தா குண ந சக்யந்தே வக்தும்  வர்ஷ சதைரபி -என்று ஸ்வ தஸ் சர்வஞ்ஞனான தானே சொல்லப் புக்காலும் சொல்லி தலைக் கட்ட அரிதாம் படி இறே அர்ச்சாவதார குண பூர்த்தி இருப்பது –

—————————————————-

இக் குண பூர்த்தி உள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு அடைத்த விஷயம் என்னும் அத்தை -பிரபன்ன ஜன கூடஸ்தருடைய அனுஷ்டானத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் மேல் –

சூரணை -35
ஆழ்வார்கள் பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரத்திலே –

மயர்வற மதிநலம் அருளி பெறுகையாலே-பரத்வாதிகளை எல்லாம் கரதலாமலகமாக
கண்டு இருக்கிறவர்கள் இறே ஆழ்வார்கள் -இப்படி இருக்கிறவர்கள் பிராப்யத் த்வரா அதிசயத்தாலே பலகாலும் பிரபத்தி பண்ணுகிற அளவில் பல இடங்களிலும்  அர்ச்சாவதாரத்திலே இறே
பிரபத்தி பண்ணிற்று -ஸ்தலாந்தரத்தில் க்வாசித்  கமித்தனை இறே – எங்கனே என்னில் -ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம் ஆழ்வார் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்-
கழல்களையே சரணாக கொண்ட –
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று இப்படி பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்தில் இறே –
பிறந்தவாறும் -ஒன்றிலும் இறே அவதாரத்தில் சரணம் புக்கது –
திரு மங்கை ஆழ்வாரும் –
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரனியத்துள் எந்தாய் –
விரையார் திருவேம்கடவா நாயேன் வந்து அடைந்தேன் –
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –என்று இப்படி அர்ச்சாவதாரத்திலே இறே பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று –

மற்றை ஆழ்வார்களுக்கும்  இப்படி தத்தத்  பிரபந்தங்களில் கண்டு கொள்வது –
பிரபந்தம் பண்ணிற்றும் என்கிற இந்த ச சப்தத்தாலே -பூர்த்தி உள்ளதும் -என்று கீழ்ச் சொன்னதை சமுச்சயிக்கிறது –

———————————————-

இப்படி இவ் ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணும் இடங்களில் -பரத்வாதிகள் எல்லாம் இருக்க –
அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கு அடி -இதின் குண பூர்த்தி இறே -அந்த குண பூர்த்தி தன்னை ச பிரமாணமாக அருளி செய்கிறார் -மேல் –

சூரணை -36
பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

பூர்ணம் என்கையாலே -என்றது –
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே சர்வம் பூர்ணம் சஹோம் -என்று ஸ்ருதி சொல்லுகையாலே என்ற படி –
எல்லா குணங்களும் புஷ்கலங்கள் -என்றது -ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குணங்களோடு -ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான குணங்களோடு வாசியற சகல கல்யாண குணங்களும் -இவ் விஷயத்திலே சம்பூர்ணம் -என்றபடி

———————————————–

ஆனால்-வாசு தேவோசி பூர்ண -என்ற பரத்வத்தில் காட்டில் -இங்குத்தைக்கு ஏற்றம் என் என்ன -அருளிச் செய்கிறார்-

சூரணை-37
பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்
இருட்டறையிலே விளக்கு போலே
பிரகாசிப்பது இங்கே –

பிரபத்திக்கு அபேஷிதங்களான -என்றது -உபாயமாக பற்றும் இடத்தில் வேண்டும் அவையான -என்றபடி –
சௌலப்யாதிகளாவன-கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமும் –
மேன்மை கண்டு அகலாமைக்கு உறுப்பான சௌசீல்யமும்-
கார்யம் செய்யும் என்று விச்வசிக்கை உறுப்பான ஸ்வாமித்வமும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு உறுப்பான  -வாத்சல்யமும் —
நிகரில் புகழாய்  -இத்யாதியாலே -இந் நாலு குணத்தையும் இறே ஆழ்வார் அருளி செய்தது –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே -என்றது -பரத்வத்தில் இக் குணங்கள் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தே -பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கிற இடம் ஆகையாலே பகல் விளக்கு போலே பிரகாசம் அற்று இருக்கும் –
அர்ச்சாவதாரமான இடத்தில் தண்மைக்கு எல்லை நிலமான சம்சாரிகளுக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கையாலே -அந்தகாரத்திலே தீபம் போலே அத்யுஜ்வலமாய்
தோற்றும் என்றபடி -விஷயம் உள்ள இடத்தே இறே குணங்கள் பிரகாசிப்பது –
அங்கு உள்ளாரும்  சீலாதி குணம் அனுபவம் பண்ணுகைக்கு வருவது இங்கே இறே –
சௌலப்யம் முன்னாக அருளிச் செய்தது -கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமே பிரபத்திக்கு பிரதான அபேஷிதம் என்று தோற்றுகைக்காக —

———————————————

இக் குணங்கள் பிரகாசிப்பது இங்கே -என்றதை உபபாதிக்கிறார் –

சூரணை -38
பூர்த்தியையும் ஸ்வா தந்தர்ய த்தையும்
குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை
தான் ஆதரித்து நிற்கிற இடம் –

பூர்த்தி யாவது -அவாப்த சமஸ்த காமத்வம் -அத்தை குலைத்து கொள்கையாவது –
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும் படி சாபேஷனாய் இருக்கை-
ஸ்வாதந்த்ர்யம் ஆவது -ஸ்வாதீன ஸ்வரூபதிமத்த்வம்-அத்தை குலைத்து கொள்கையாவது
ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி  யாதிகளை உடையவன் ஆகை   –
ததிச்சயா மகாதேஜோ புங்க்தேவை பக்தவத்சல
ஸ்நானம் பானம் ததா யாத்ரம்  குரு தேவை ஜகத்பதி
ஸ்வதந்த்ரஸ் ச ஜகன்னாத ப்யஸ் வதந்த்ரோ யதா ததா சர்வ சக்திர்
ஜகத் தாதாப்யசக்த இவ சேஷ்டதே-என்ன கடவது இறே –
அர்ச்சக பராதீன அகிலாத்மா ஸ்திதி -என்று அருளி செய்தார் இறே பட்டர்-
தன் இச்சை ஒழிய இவற்றைக் குலைக்கைக்கு ஹேது இல்லாமையாலே -குலைத்துக் கொண்டு -என்கிறார் –
தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்கிற இடம்-என்றது – தான் இப்படி சுலபனாய் வந்து நின்றாள்-அரியவன் எளியவனாய் -நிற்கப் பெற்றோமே என்று
விரும்பி மேல் விழுகை அன்றிக்கே -அவ் வெளிமை தானே ஹேதுவாக உபேஷிக்கிற
சம்சாரிகளை -தான் விட மாட்டாத அளவு அன்றிக்கே -அவர்களை ஒழியச் செல்லாமை தோற்றும் படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரம் என்கை –
பூர்த்தியையும் ஸ்வாதந்த்ர்யத்தையும் குலைத்து கொண்டு நிற்க்கையாலே – சௌலப்ய சொவசீல்யங்களும்-தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்க்கையாலே-ஸ்வாமித்வ வாத்சல்யங்களும் இங்கே தோற்ற நின்றது இறே -அன்றிக்கே –
பூர்த்தியையும் -என்று தொடங்கி இவ் வாக்கியம் எல்லா வற்றாலும் – குண சதுஷ்டைத்திலும் பிரதானமான ஸுலப்யத்தையே யோட வைத்தார் ஆகவுமாம்-
அப்போது இவ் விஷயத்தினுடைய சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பிகிறார் என்று வாக்ய சங்கதியாக கடவது – கண்ணுக்கு விஷயமாம் படி நித்ய சந்நிதி பண்ணுகிற அளவு அன்றிக்கே -சர்வ பிரகார பரி பூர்ணனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கிற தன்னை சாபேஷனும் பரதந்த்ரனும் ஆக்கி கொண்டு -தன்னை அநாதரிக்கிற சம்சாரிகளை
தான் ஆதரித்து நிற்க்கைக்கு மேல்பட்ட சௌலப்யம் இல்லை இறே –
ஏவம் பஞ்ச பிரகாரோஹா மாத்மானாம் பததாமத
பூர்வஸ் மாதபி பூர்வ ஸ்மாஜ் ஜ்யாயாம்சை வோத்தரோத்த்ர
சொவ்லாப்யதோ  ஜகத்ச்வாமீ ஸோலபொஹ் யுத்தரோதர -என்று பரத்வாதிகள் ஐந்திலும்
சௌலப்யம் உண்டாய் இருக்கச் செய்தே -பூர்வ பூர்வத்தில் காட்டில் உத்தர உத்தரத்துக்கு
சௌலப்யம் அதிசயித்து இருக்கும் என்று தானே அருளிச் செய்கையாலே -சௌலப்யதுக்கு  எல்லை நிலம் அர்ச்சாவதாரம் இறே –

———————————————-

பரத்வாதிகளுடைய து-த்வர்லப்யத்தையும் -அர்ச்சாவதார சௌலப்யத்தையும்
திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

த்ருஷ்ணார்த்தனுக்கு தேசாந்தரித்தில் போக வேண்டாதபடி நிற்கிற இடம் தன்னிலே –
உண்டாய் இருக்க செய்தேயும் -கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது
குடிக்க கிடையாத பூகத ஜலம் போலே ஆய்த்து-கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு ஹிருதயத்திலே இருக்க செய்தேயும் –கட்கிலீ –என்கிறபடியே -கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே -அஷ்டாங்க யோக ரூபா யத்னத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம் –
அவனுக்கு -அண்டத்துக்கு புறம்பே பெருகி கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆய்த்து -இவனுக்கும் அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்கிறபடியே லீலா விபூதிக்கு அப்பால் பட்டு இருக்கிற பரத்வம் –
அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் அன்றியே – அண்டாந்தர்பூதமாய் இருக்க செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபமான பால் கடல் போலே ஆய்த்து -இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம்  கேட்டேயும் -என்கிறபடியே கேட்டு இருக்கும் அத்தனை அல்லது சென்று காண அரிதாம்படி இருக்கிற வ்யூஹம் –
ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பச்சாத் யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே ஆய்த்து –மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் -தத் கால வர்த்திகளுக்கு ஆஸ்ரயநீயமாய் பிற் காலத்தில் உளனான இவனுக்கு கிட்டாத படியான விபவம் –
முன்பு சொன்னவை போல் அன்றிக்கே -அவனுக்கு விடாய் கெட  பருகலாம் படி -பெருக்காற்றிலே தேங்கின மடுக்கள் போலே ஆய்த்து –இவனுக்கும் தேச கால காரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே -கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி நிற்கிற – பின்னானார் வணங்கும் ஜோதி -யான அர்ச்சாவதாரம் –
பௌமதி கேத நேஷ்வபி குடி குஞ்சேஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும்
சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறே –மடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது -அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் -அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –

——————————————————-

இப்படி ஆஸ்ரயண ருசி பிறந்தார்க்கு ஆஸ்ரயணீயத்வே சுலபமாய் இருக்கும் அளவே அன்றிக்கே -ருசி ஜநகத்வாதிகளும் -இவ் அர்ச்சாவதாரத்துக்கு உண்டு என்று இதன் வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –

சூரணை -40
இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

பிரக்ருதமான சௌலப்யாதி குண யோகத்தை உள் கொண்டு –இது தான் -என்று பராமர்சிக்கிறார் –
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாமை யாவது -ஹித அனுசானம் பண்ணுகிற ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திரங்கள் ஆனவை -அருசி பிறக்கும் படி இதர விஷயங்களை விட்டு இவ் விஷயத்தை பற்றும் படி பண்ணப் போகாமை துர் வாசன பலம் உபதேசத்தை நிரர்தகம் ஆக்கி விடும் இறே-
ஜன்மாந்திர  சகஸ்ரேஷூ யா புத்திர் பாவிதா நிருணாம் தாமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்தக-என்ன கடவது இறே –
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போருகை யாவது -சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனா யறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கி -என்றும் –
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து கண்டவா திரிந்து -என்றும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -என்றும் சொல்லுகிறபடி –
இதர விஷயங்களிலே அத்யபி நிவிஷ்டராய் -யாதேனும் பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு -பகவத் விஷயத்தில் முகம் வைக்க இசையாதே வர்திக்கை-இப்படி போரும் சேதனருக்கு – வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கை யாவது –போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன பல்ஆதரம் பெருக வைத்த அழகன் -என்கிறபடியே
ஸ்வ சௌந்தர்யாதிகளாலே -சித்த அபஹாரம் பண்ணி -தன்னைக் காண வேண்டோம் என்று இருக்கும் இருப்பைக் குலைத்து கண்ட கண் மாற வைக்க மாட்டாதபடி பண்ணுகை-
ருசி பிறந்தால் உபாயம் ஆகையாவது -இப்படி தன் லக்ஷண்ய  தர்சனத்தாலே தன்னை நித்ய அனுபவம்பண்ண பெற வேணும் என்னும் ருசி பிறந்த அநந்தரம்-ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -என்கிறபடி சம்சார நிவ்ருத்தி பூர்விகையான  ஸ்வ ப்ராப்திக்கு தானே சாதனம் ஆகை-
உபாய பரிகிரகம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கை ஆவது –தன்னை உபாயமாக பரிகிரகித்தால் உபேய சித்திக்கு ஒரு தேச விசேஷத்திலே போம் அளவும் பார்த்து இருக்க வேண்டாதே –அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாதே -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே  திரு மால் இரும் சோலை கோனே -என்றும்
சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாய் இருக்கையாலே தானே உபேயமுமாய் இருக்கை–

ஆக-
பிரபதிக்கு குண பூர்த்தி  உள்ள இடமே விஷயமாக வேணும் என்றும் –
அது தான் உள்ளது அர்ச்சாவதாரத்திலே என்றும் –
அத்தை பற்ற ஆழ்வார்கள் எல்லோரும்  பிரபத்தி பண்ணிற்று இவ் விஷயத்தில் என்றும் –
இவ் விஷயத்தில் எல்லா குணங்களும் புஷ்கலங்கள்  என்றும் –
விசேஷித்து ப்ரபத்திக்கு அபேஷித குணங்கள் விசதமாக பிரகாசிப்பது இங்கே என்றும் –
இது தான் தன்னுடைய நைர பேஷ்யாதிகளை அழிய மாறி –
தன்னை அநாதரிப்பாரை ஆதரித்தது கொண்டு நிற்கிற ஸ்தலம் என்றும் –
பரத்வாதிகள் ஒரொரு பிரகாரத்திலே துர்லபம் -இது சர்வ பிரகார சுலபம் என்றும் –
இவ்வளவே அன்றி இவ் விஷயம்
ருசி ஜநகமுமாய்
உபாய
உபேயமுமாய்
இருக்கும் என்றும் சொல்லப் பட்டது –

இத்தால் உபாய உபேயங்கள் இரண்டும் தானேயாய்-
ஸூவ-இதர விஷயங்களில் அருசிகளையும் பிறப்பித்து –
தன் விஷயத்தில் -ருசியும் ஏற்படுத்துமதாய் – சர்வ சுலபமுமாய்
தன் படிகளை அழிய மாறிக் கொண்டு -அநாதரிப்பவர்களையும் தான் ஆதரித்து —
பிரபத்திக்கு அபேக்ஷித குண உஜ்ஜவலமாய் — ஸமஸ்த குண சம்பூர்ணமாய்–
பிரபன்ன ஜன கூடஸ்தர்க்கு உபாய வர்ண விஷயமாய் இருந்துள்ள அர்ச்சா திருமேனி என்றதாயிற்று –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading