ஸ்ரீக்ருஷ்ணாஷ்டாகமும் மிகத் தொன்மை வாய்ந்தது. புனிதமானது, புனித மளிக்க வல்லது.
வஸுதேவஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தநம் |
தேவகீ பரமாநந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் |||–1-
வஸுதேவர் குமாரனும், தாயான தேவகிக்கு மிக்க ஆநந்தம் விளைவிப்பவனும், கம்ஸன் சாணூரன் முதலானாரை முடித்தவனும் ஜகத் குருவுமான ஸ்ரீக்ருஷ்ணனைத் தொழுகிறேன்..
வஸு-பெருநிதி; வஸுதேவன்- நிதி எடுத்தவன்,நிதியை யுடையவன். வஸுதேவனும் தேவகியும் தவமியற்றிப் பெற்ற ஒப்பில்லா நிதி க்ருஷ்ணன். பெற்ற உடனே இழந்து நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் பெறும்படி இவர்கள் சரித்திரம் அமைந்தது. தேவ தேவ ஸ்வரூபத்தைக் காட்டிக் கொண்டு வந்து பிறந்த க்ருஷ்ணனைக் கண்டு பெற்றோர் அடைந்த ஆநந்தத்தைப் பரமாநந்தம் என்று சொல்வது மிகை யாகாது.
தேவம் -சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த (திருவாய் 3-5-5) தேவ தேவன்.
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் (திருமொழி 2-3-1)
சாணூரன்-கம்ஸன் பரிகரமான மல்லன். வேழம், பாகன், மல்லன்-இவர்களை முடித்து இவர்களை ஏவிய தன் மாமன் கம்ஸனையும் முடித்தவன் க்ருஷ்ணன்.
க்ருஷ்ணம் -கரியான். கரிய நிறமுடையவன். தேவகிக்கு மகனாய் அவதரித்த போது இட்ட பெயர் என்று ப்ரஸித்தம்.-க்ருஷ்ணன் என்பது எம்பெருமானின் பல திருநாமங்களில் முக்கியமான தொன்றாம். ஆனந்தத்துக்கிருப்பிடம்-ஸ்ருஷ்டயாதி லீலைகளால் ஆநந்தப்படுமவன். க்ருஷ்ணாவதாரத்தில் தன்னேராயிரம் பிள்ளைகளுடன் விளையாடி மகிழந்தவன். பூமியை மகிழச் செய்பவன் என்று ஒரு பொருள் கூறுவர். * மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான். (திருவாய் 9-1-10)-பூமிக்கு பாரமவது கம்ஸன் சிசுபாலன் துர்யயோதனாதிகள் போன்ற தீய புத்தி யுடையயோர். நிலமங்கை துயர் தீர்த்துய்யப் பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்தவம்மான (திருமொழி 8-8-9) (இவரித்த– எதிரிட்டு நின்ற). பூமிக்கு ரக்ஷகள் என்றதாயிற்று.-கோவிந்த நாமத்தின் பொருளும் இதுவே.
ஜகத்குரும்-குரு-அஜ்ஞாந விருளை அழிக்கும் ஆசாரியன்.-இன்னும் பல பொருள்களுண்டு. ஆதி குருவாய் முதலில் அவதரித்தவன். *யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை-எவன் பிரமனை முதலில் பிறப்பித்து அவனுக்கு வேதங்களை உபதேசித்து அவனால் உலகில் பரவச் செய்கிறானோ -என்கிறது. க்ருஷ்ணனது பால லீலைகளில்
முதலிடம் பெறுவது பூதனாவதம். அவள் மார்பில் தடவி வந்த கொடிய விஷத்தை விடப் பாலமுதா அமுது செய்திட்ட மாயன்(திருவாய் 1-5-10). “ஸ்தந்யம் தம் விஷ ஸம்மிஸ்ரம் ரஸ்ய மாஸீத் ஜகத் குரோ!-” (ஹரி வம்ஸம்) விடநஞ்சமுலை சுவைத்த-மிகு ஞானச் சிறுகுழவி (திருவாய் 4-8-9). இவனே அகல் ஞாலத் தவரறிய நெறி யெல்லா மெடுத் துறைத்த நிறை ஞானத்தொரு மூர்த்தி (திருவாய் 4-8-6). அர்ஜுனனை வ்யாஜமாக வைத்து ஸகலோபநிஷத் ஸாரமான பகவத் கீதையில் அகல் ஞாலத்தவர் அறிய எடுத்துரைத்தவன் – இந்த நெறியில் ஸாரம் “மா மேகம் ஸரணம் வ்ரஜ” நீ வரித்த ஆசாரியனாய் நெறி யெல்லாம் எடுத்துரைக்கும் என்னைச் சரணம் பற்று. ஜகதாசாரியன் க்ருஷ்ணனே. வந்தே-
ஸேவிக்கிறேன் தொழு தெழுகிறேன்.
–
அத்ஸீ புஷ்ப ஸங்காஸம் ஹார நூபுர ஸோபிதம் |
ரத்ந கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் |||–2-
பூவைப் பூ வண்ணனாய் கருநீல திருமேனியில் உசித ஸ்தானங்களில் அழகிய திருவாபரணங்களை அணிந்து விளங்கும் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும். திருவடிகளில் நூபுரம்-தண்டை (சிலம்பு)
சலங்கை போன்றவை. திரு மார்பில் வன மாலை முத்து ஸரங்கள், சங்கிலி, ரத்ந ஹாரங்கள் முதலியவை. திருக் கைகளில் ரத்னங்களிழைத்த கை வளைகள்; தோள் வளைகள். “சோபிதம்” திருவாபரணங்களால் இவன் சோபிக்கிறானோ? (விளக்க மடைகிறானோ?) இவன் திரு மேனியில் உள்ளமையால் அவை ப்ரகாச மடைகின்றனவா? எனில், “இவனே ஆபரணங்களுக் கழகு கூட்டுமவன்”
என்றே சொல்ல வேண்டும். திரு மேனிக்குப் பரபாக ரஸா வஹமாய் அமைந்தவை ஆபரணங்கள். எம்பெருமான் அணியும் திருவாபரணங்களை “கிரீட மகுட சூடாவதம்ஸ மகர குண்டல க்ரைவேயக
ஹார கேயூர கடக ஸ்ரீவத்ஸ கௌஸ்துப முக்தாதாம உதர பந்தந பீதாம்பர காஞ்சீ குண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண” என்று பிரிவாக அருளிச் செய்துள்ளமை (சரணாகதி கத்யம்) காணலாம்.
இவை “நிரதிசய ஸுகந்த-நிரதிசய ஸுகஸ்பர்ஸ நிரதிசய ஓளெஜ்ஜ்வல்ய” என்று விசேஷிக்கப் படுகின்றன. பரிமளம் மிக்கவையாகவும் திரு மேனியில் உறுத்தாதபடி ம்ருதுவாகவும், ப்ரகாசமாகவும் உள்ளவை இத் திரு வாபரணங்கள்-
–
குடிலாலக ஸம் யுக்தம் பூர்ண சந்த்ர நிபாநநம் |
விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் |||–3-
சுருண்டு விளங்கும் அழகிய குழல்களை (கூந்தல்) உடையவனும்-முழு மதியை யொத்த திருமுக மண்டல முடையவனும் திருச் செவிகளில் ஒளி வீசும் மகர குண்டலங்களை யணிந்தவனுமான
கருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
–
மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர் புஜம் |
பர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் |||–4-
மந்தார மலரின் பரிமளம் (தன் திரு மேனியில்) வீசுபவனும், அழகிய புன்முறுவல் பூத்தவனும், நான்கு திருத் தோள்களை யுடையவனும், திரு முடியில் மயில் பீலியைத் திரு வாபரணமாகத் தரித்தவனுமான
க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
மந்தார மலர் தெய்வீக மணமுடையது.-இச்சா க்ருஹீத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹமாகையால் (தன் ஸங்கல்ப மடியாகக் கொணர்ந்த விண்ணாட்டிலுள்ள திருமேனி) இனிய மணம் திரு மேனிக்கு இயல்பானது. நின் முக வொளி திகழ முறுவல் செய்து (திருவாய் 6.2.9) என்கிறபடி பெண்களைத் தன் வசப் படுத்து முபாயம் யாவரையுமே மகிழ்விக்கும். சதுர் புஜம்- ராம க்ருஷ்ணாதி மநுஷ்யா வதாரங்களில் சதுர்பூஜம் உண்டா? எனில் உண்டு என்பதே உண்மை. பிறந்த போது இருந்த ரூபமிறே. “உப ஸம்ஸரரூப மேதத் சதுர்புஜம்” என்று பெற்றோர் வேண்டியபடி (நியமித்தபடி
என்னவுமாம்) மறைத்து வைத்தான். கண்ணன் “அப் பூச்சி” காட்டித் தன் பால ஸகாக்களை அச்சுறுத்துவது திருவாழி சங்கம் தரித்த நான்கு கையனாகக் காட்டி என்று வ்யாக்யானம். (மெச்சூது சங்கமிடத்தான்-பெரியா- 2-1-1). கீதை விஸ்வரூபாத்யாயத்தி விஸ்வரூபங் கண்டு பயந்த அர்ஜுனன் வேண்டுவது: (11-46) “கிரீடிநம் கதிநம் சக்ர ஹஸ்த மிச்சாமி த்வாம் த்ரஷ்டுமஹம் தததைவ | தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே |-பயங்கரமான ஆயிரங்கை யுடைய இந்த விஸ்வ ரூபத்தை மறை -திருவாழி முதலான திவ்யாயுதம் தரித்த சதுர்புஜனாகவே வேணும். ஆஸ்ரிதர்க்கு உகந்து காட்டும் ஸௌம்ய ரூபம் இது *நான்கு தோளன்-ஒண்சங்கதை வாளாழியான் ஒருவன் அடி னுள்ளானே (திருவாய் 8-8-1)
—
உத் புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் 1
யாதவாதாம் ஸிரோ ரத்நம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்–5-
அப்போதலர்ந்த தாமரை இதழை யொத்த அகன்ற திருக் கண்கள் யுடையவனும், நீருண்ட கார் மேகம் போல் அழகிய திருமேனி யுள்ளவனும் யாதவ குலத்துக்கு ஸிகாமணி போன்றவனுமான க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
ஆழ்ந்த நீரில் உண்டான உருண்ட தண்டின் நுனியி தாமரை மலர் காலை ஸூரியனது கிரணங்களால் அலர்த்தப்பட்ட மலர்ந்த தன் செவ்விய அகன்ற இதழை ஒத்த கண்களை யுடையவன் -புண்டரீகாக்ஷன். “பத்ம பத்ராக்ஷம் – தாமரை மலரிதழ் போன்ற விசாலமான கண்கள். எம்பெருமானின் பரத்வத்தை நிரூபிக்கும் அடையாளம், *ஆயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்! (திருவாய் 6-2-10) என்பது இவன் பிறந்த யாதவக் குடிக்குமொக்கும்.
–
ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஸோபிதம் |
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும் ||–6-
திருவரையில் சாத்திய பீதாம்பரத்தினால் (பட்டு வஸ்த்ரம் விளங்குமவனும் ப்ரிய மஹிஷியான ருக்மிணீ தேவியுடன் கேளிக்கைகளில் (சொக்கட்டான் போன்ற விளையாட்டுகளில் ) ஈடுபட்டவனும் திருத் துழாயின் நறு மணம் கமழும் திருமேனி யுடையவனுமான் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
பெருமானரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசிரே (நாச்.திரு. 13-1); பீதக வாடை யுடை தாழ வீதி யார வருவான் (14-7); *பிதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து (பெரியா. 5-2-8) என்றெல்லாம் பேசும்படி திருவரையில் விளங்கும் பட்டு வஸ்த்ரம். திருத் துழாய் மணம் எம்பெருமானுக்கு இயற்கை யானது. *பாலனாய் ஏழுலகுண்டு-ஆலிலை அன்ன வசம் செய்யு மண்ணலார் தாளிணை மேலணி தண்ணந்துழாய் (திருவாய் 4-2-1) என்று ப்ரளயார்ணவத்தில் தனியனாய் ஆலினிலை மேலிருப்பிலும் தாளிணை மேலணி தண்ணந்துழாய் இருப்பதாகவே ஆழ்வார் காண்பது. தோளிணை மேலும் நன் மார்பின் மேலும்-சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான் (திருவாய் 1-9-7) என்று நறுந் துழாயால் எப்போதும் அலங்கரிக்கப் பெற்றவன்..
க்ருஷ்ணாவதாரத்தில் பெரிய பிராட்டியார் ருக்மிணியாக வந்தவதரித்து கண்ணனை மணந்தது ப்ரஸித்த சரிதம். வாய்த்த போதெல்லாம் பல விளையாட்டுகளில் ஈடுபட்டு இப் பிராட்டியை மகிழ்விப்பன். த்ரௌபதி பேராபத்தில் சிக்கி “ஹா க்ருஷ்ணா! கோவிந்தா!” என்று கதறி யழுத போது ருக்மிணீ கேளி ஸம்யுக்தனாக விருந்தவனை கௌரவ ஸபைக்கு நேரில் செல்லாமல் தேவி தடுத்து
விட்டதாக சரித்திரம், ஸங்கல்ப மாத்ரத்தினால் மான ஸம்ரக்ஷணம் பண்ணி ரக்ஷித்து விட்டான்.
–
கோபிகாநாம் குசத் வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் |
ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–7-
இளவாயர் மாதரின் மார்பகத்துக் குங்குமக் குழம்பு தன் மார்பில் படிந்த அடையாள முள்ளவனும், ஸ்ரீதேவிக்கு (மஹாலக்ஷ்மிக்கு) இருப்பிடமானவனும் வில்லாளிகளில் சிறந்தவனுமான க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! (திருப்பாவை 19) என்பது மற்ற இளவாயர் மகளிரிடமும் ஒக்கும். விஷ்ணோம் ஸ்ரீரநபாயிநி-பிராட்டியுடன் பிரியாத சேர்க்கை “ஸ்ரீநிகேதம்” என்பதால் பேசப்பட்டது. ராமாவதாரத்தில் போலே க்ருஷ்ணாவதாரத்திலும் பகவான் சிறந்த வில்லாளனாக விளங்கினான். விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும் (திருமொழி 2-3-1) என்று ஆழ்வார் கண்ணன் கம்ஸனின் பெரிய வில்லை அநாயாஸமாக முறித்ததைப் பேசுகிறார்.
—
ஸ்ரீவத் ஸாங்கம் மஹோரஸ்கம் வந மாலா விராஜிதம் |
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||–8-
தனது அகன்ற திரு மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மறுவை அடையாளமாக உடையவனும், வன மாலை எனும் திருவாபரணத்தால் விளங்குபவனும், திருவாழி திருச்சங்களையும் தரித்த தேவனை (பரம புருஷனை)-க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.
எம்பெருமானின் அகன்ற திரு மார்பு ‘ஸ்ரீவத்ஸம்’ என்று ப்ரகாசமான திரு மறுவால் அழகு செய்யப்படுகிறது.*திருஆரமார்வ தன்றோ அடியேனை ஆட் கொண்டதே (அமலனாதி-5).
*அகலகில்லேன் இறையு மென்று அலர் மேல் மங்கை யுறை மார்பா!(திருவாய் 6-10-10) என்று பிராட்டிக்கு ப்ரியமான இருப்பிடம். பல திருவாபரணங்களுடன் மிகச் சிறந்த ஆபரணமான வன மாலையும் திரு மார்பில் ப்ரகாசிக்கிறது. இவன் கைக் கொள்ளும் திவ்யாயுதங்கள் இவனுக்கு மேலும் அழகூட்டுகின்றன. *கைகழலா நேமியான்; கைகழலா வெண் சங்கத்தான் என்னும்படி இரண்டைச் சொன்னது. மற்றவையையும் சொன்னதாகக் கொள்க.
–
கிருஷ்ணாஷ்டகமிதம் புண்யம் ப்ராதுருத்தாய யா படேத் 1
கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநய்யதி ||
ஸ்துதிப்பவர்க்குப் பலனுரைக்கிறது -ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த சிறந்த ஸ்துதியை காலையில் -சிற்றஞ் சிறு காலையில் -எழுந்து அனுசந்திப்பவனுக்கு எண்ணற்ற பிறவிகளில் செய்து சேமித்துள்ள பாபங்கள் ஒரே நொடியிலே தீயினில் தூசாகும் –
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ V.V.ராமானுஜ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –-
Leave a Reply