திருநட்சத்திரம் : சித்திரை, அஸ்வினி
அவதார ஸ்தலம் : சாலக்ராமம் (கர்நாடகம்)
ஆச்சார்யன் : எம்பெருமானார்
அவர் பரமபதம் அடைந்த இடம்: சாளகிராமம்
படைப்புகள் : யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்திரம், ராமானுஜ அஷ்டோத்தர சதா நாமாவலி-
ராமானுஜார்ய ஸச் சிஷ்யம் சாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் சாளக்ராமார்யம் ஆச்ரயே
இரு திருமணங்கள் –
1-ஸ்ரீமத்,யாமுநாசார்யரிடமிருந்து உபய வேதரந்தங்களின் கருத்தை அறியப் பெற்றவராய், (பவிஷ்யத் ஆசார்யரைக் கண்டுபிடித்து, தர்ஸன ப்ரசாரத்தை அவரிடம் ஒப்பிக்க வேண்டும் எனும்) அவருடைய ஆஜ்ஞையை நிறைவேற்ற வேண்டும் என்னும் ஒரே குறிக்கோளை
உடையவராய், தமது இரு ஸஹோதரிகளுக்கும் தகுந்த வரன்களைத் தேடுகினறவராய், திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்தம், புஷ்பம் முதலான திருவாராதனத்திற்கு உறுப்பான உபஹாரங்களை ஸமர்ப்பித்துக் கொண்டு, திருமலையிலே திருமலை நம்பி என்னும் ஆசார்யர்
வாழ்ந்து வந்தார்-
2-இவ்வாறிருக்கையில், நற்குடிப் பிறந்தவர்களாய், வேத,வேதாங்கங்கள் கற்றவர்களான – மதுர மங்கலத்தில் நித்ய வாஸம் செய்யும் கமல நயன பட்டரும், ஸ்ரீபெரும்பூதூரில் நித்ய வாஸம் செய்யும் கேஸவ ஸோமயாஜியும் அவ்விரு ஸஹோதரிகளில் ஒவ்வொருத்தியை மணம் புரிய விரும்பி, திருமலை நம்பியிடம் வந்தார்கள்–
3-தமது திருவடிகளில் வணங்கிப் பிரார்த்திக்கப்பட்ட திருமலை நம்பி, மிக வுகந்தவராய், அவ் விருவரையும் தக்க வரன்களாக நிச்சயித்து, சங்க,சக்ர தாரணம், மந்த்ரோபதேஸம் முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களை அவர்களுக்குச் செய்து வைத்தார்–
4-கேஸவ ஸோமயாஜி யானவர் அந்த ஸஹோதரிகளில் மூத்தவளான பூமி தேவியை மிக வுகந்து மணம் புரிந்து கொண்டார். அவ்வண்ணமே இளையவளான ஸ்ரீ தேவியைக் கமல நயன பட்டர் மணம் புரிந்து கொண்டார். இத் திருமணங்களாலே திருமலை நம்பியும் அவ் விரு மணவாளப் பிள்ளைகளும் ஆநந்த மடைந்தனர்-
5-அதன் பிறகு, திருமலை நம்பியின் அனுமதி பெற்று, மனைவியரோடு கூடிய அவ் விருவரும் தம் தம் ஊருக்குச் சென்று,நல்லொழுக்கம் உடையவர்களாய்,ஸ்ரீய:பதியை ஆராதிப்பவர்களாய், அவனடியார்களிடம் அன்பு பூண்டவர்களாய், மனைவியரோடு நெடுங் காலம் இன்புற்று வாழ்ந்து வந்தனர்–
ஸ்ரீராமாநுஜர் அவதாரம்
6-7-அதன் பிறகு, உலகிற்கே மங்கள மளிக்கும் பிங்கள வருஷத்தில், சிறப்புற்ற சித்திரை மாஸத்தில், சுக்ல பக்ஷத்தில் பஞ்சமி திதியில் திருவாதிரை நக்ஷத்திரத்தோடு கூடிய வியாழக்கிழமை யன்று நன்மை மிக்க ஸிம்ஹ லக்னத்தில், மறை முடிகளின் முடிவை நிலை நாட்டுவதற்காகவும், வேதத்திற்குப் புறம்பான பாஹ்ய மதங்களும், வேதத்திற்கு அவப் பொருள் சொல்லும் குத்ருஷ்டி மதங்களும் அழிவதற்காகவும் கேஸவ ஸோமயாஜியின் மனைவியான பூ தேவியிடம் ஆதிஸேஷ அம்ஸத்தை உடையவராய், ஒளி மிகுந்த ஒரு மஹா புருஷர் திருவவதரித்தார்-
8-திருமலை நம்பியும் ஸ்ரீபெரும்பூதூருக்கு எழுந்தருளி அற்புதனான மருமகனைக் கடாக்ஷித்து, அவரது ரக்ஷையின் பொருட்டு சங்கம் சக்ரம் முதலான பஞ்சாயுதங்கள் கொண்ட ஐம்படைத் தாலியை அணிவித்து, ராமாநுஜன் என்னும் திருநாமத்தையும் இட்டருளினார்-
9-திருமலை நம்பியின் கடாக்ஷங்களாலே வளர்ந்த அக் குமாரனுக்கு அப்த பூர்த்தியையும், ( சிகை வைத்தலாகிற) சௌளத்தையும், ஸத்வகுணம் மிகுந்த ஐந்தாம் வயஸ்ஸில் அக்ஷராப்யாஸத்தையும்
தந்தையான கேஸவ ஸோமயாஜி செய்தருளினார்-
10-தமது தந்தையாலே உபநயனம் செய்விக்கப் பெற்ற ஸ்ரீராமாநுஜரும், வேத,வேதாங்க, ஸாஸ்த்ரங்களைக் கற்கின்றவராய் சிறந்த ப்ரஹ்ம தேஜஸ்ஸையும், மிகுந்த பெருமைகளையும், இன்புறும் நல்லொழுக்கங்களையும் உடையவராக இருந்தார்–
11-அதற்குப் பின், ஒரு கன்னியை மணம் புரிந்து இல்லறம் மேற் கொண்டவராய், பூர்வ பக்ஷ ஸாஸ்த்ரங்கள் வாசிப்பதற்காகக் காஞ்சியில் வாழ்ந்த மாயாவாதி, (அத்வைதி) ஸந்யாஸியான யாதவ ப்ரகாஸரை அடைந்தார்–
12-ஒரு நாள் யாதவர் “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம்” (சாந் 3-14-1) [இவ் வுலகனைத்தும் ப்ரஹ்மமே] என்னும் வேத, வாக்யத்திற்குப் பொருள் கூறுகையில், அதன் பொருளை உணராத யாதவர் அவப் பொருள்
உரைத்தவுடன், ராமாநுஜர் உண்மைப் பொருளைக் கூறி, வேதார்த்த, ஸாரத்தை அவருக்கு அறிவுறுத்தினார்–
ஆளவந்தார் கடாஷித்தல்-
13-ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த யாமுநாசார்யர் எனும் மஹா புருஷரான ஆளவந்தார், ராமானுஜர் காட்டிய அவ் வேதப் பொருளைக் கேள்வி யுற்று, அந்தரங்க, சிஷ்யர்களோடு கூடக் காஞ்சிக்கு எழுந்தருளி, பெருந் தேவித் தாயாரோடு கூடிய பேரருளாளனை வணங்கினார்-
14-அதன் பிறகு, சிஷ்யர்களால் சூழப் பெற்ற யாதவரையும், அவர்களிடையே ஒளி வீசும் ராமாநுஜரையும் கண்டு, “இந்த யாதவர் ராமாநுஜருக்கு ஸிஷ்யரா யிருக்கவே தக்கவர் ” என்று திரு வுள்ளம் பற்றினார் ஆளவந்தார்-
15- “ஸ்ரீ வைஷ்ணவர்கள் பல்கிப் பெருகுவதற்காக ராமாநுஜரைக் கடாக்ஷிப்பீர்” என்று மிகுந்த பக்தியுடன், பெருந் தேவியோடு கூடிய ஸரண்யனான தேவப் பெருமாளை ஸரணமடைந்தார் யாமுநாசார்யர்-
16-“இப்போது நாம் ராமாநுஜரோடு வார்த்தை யாடினால், அவர் பாடம் படிப்பதற்கு இடையூறு ஏற்படும் ” என்று கருதிய ஆளவந்தார், அவரோடு வார்த்தை சொல்லாமலே ஸிஷ்ய வர்க்கங்களோடு கூட
ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி விட்டார். ராமானுஜரும் யாதவரிடம் பாடம் படித்து வந்தார்–
பிஸாசமோட்டுதல்
17-அந்த நாட்டு அரசனுடைய பிள்ளை பிஸாசத்தால் பிடிக்கப்பட்டு, எவர் செய்யும் மந்திரத்திற்கும் கட்டுப்படாதிருந்த வளவில்,அரசன் ‘இப் பிஸாசம் யாதவருடைய மந்திரத்தாலே விரட்டப்படும்’
என்று செவி யுற்று, யாதவரை வரவழைத்தான்-
18-அந்தரங்க, ஸிஷ்யர்களோடு கூடிய யாதவனைக் கண்டு சிரித்து, அவனை மிகவும் அவமானப் படுத்தி, பிஸாசமானது ராமாநுஜரை ஸரண மடைந்து, அரசனின் பிள்ளையையும், தனது பெரும் பாவத்தையும் ஒருங்கே விட்டது–
19-அத்யத்புதமான அச் செய்தியைக் கண்ட அரசன் ராமாநுஜருக்கு விஸேஷமாகப் பரிசளித்தான். ராமாநுஜரும் தனது ஆசார்யரான யாதவரிடம் அந்தப் பரிசை மிகுந்த அடக்கத்தோடு கொடுத்தார்-
யாதவரின் பொறாமை
20-அதற்குப் பின் காஞ்சியை அடைந்த யாதவரும் ராமாநுஜரிடம் பிரீதி யுடையவர் போலிருந்து கொண்டு, நெஞ்சில் பொறாமை யுடையவராய், அது முதற் கொண்டு அவரது கருத்தைப் பரீக்ஷிப்பதில்
நாட்டம் கொண்டவராய், அவரோடு வேதாந்த வாக்யார்த்த விசாரங்களைச் செய்து வந்தார்-
கப்யா ஸ்ருதிக்குப் பொருளுரைத்தல்-
21-ஓரு சமயம் – “கப்யாஸம் பூண்டரீகம் ஏவம் அஷிணீ ” என்றுபரமாத்மாவின் திருக் கண்களை வர்ணிக்கும் சாந்தோக்ய வாக்யத்திற்கு,”குரங்கின் ஆஸன வாய் போல் சிவந்த தாமரைபோன்ற கண்களை உடையவன் பரம புருஷன்” என்று யாதவர் அவப் பொருள் கூறுகையில், யாதவருக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த ராமாநுஜரின் துன்பக் கண்ணீர் விழுந்து யாதவரின் தொடையைச் சுட்டது. அதைக் கண்ட யாதவர் நிமிர்ந்து பார்த்துப் பரபரப்படைந்தார்-
22-“கண்ணீர் வருவது எதனாலே?” என்று கேட்ட யாதவருக்கு,ஸூர்யனால் மலர்ந்த (அல்லது பருத்த தண்டை உடைய, அல்லது ஆழமான நீரில் முளைத்த) தாமரை போன்ற கண்ணை யுடையவன்
பரம புருஷன்’ என்ற அழகான பொருள்களிருக்க, குரங்கின் ஆஸந வாயாகிற நிஹீந (தாழ்ந்த) த்ருஷ்டாந்தம் சொன்னதாலே வருந்திக் கண்ணீர் விட்டேன்” என்று சொல்லி, ஜைமிந் யுபாக்யானத்தையும் கூறிய ராமாநுஜரை, “நீ இனி இங்கே படிக்க வேண்டாம்” என்று
உரைத்தார் யாதவர்–
யாதவரின் சதி
23-அதன் பிறகு, துஷ்ட புத்தியையுடைய யாதவர், அந்தரங்கர்களோடு கூடிச் சதி யாலோசனை செய்து, ராமாநுஜரையும் தந்திரோபாயங்களாலே மயக்கி, கங்கா ஸ்நானத்தின் பொருட்டுக் காஸி யாத்திரை செய்யும் வியாஜத்தை யிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு, அவரைக் கொலை செய்வதற்காகப் புறப்பட்டார்-
24-நல்லொழுக்க முடையவராய், ராமாநுஜரோடு கூடப் படித்து வந்த நண்பராய், அவருடைய சிறிய தாயாரான ஸ்ரீதேவியின் பிள்ளையான கோவிந்த பட்டரும், யாதவருடைய கெட்ட எண்ணத்தை நடுக் காட்டில் ராமாநுஜருக்கு அறிவித்து அவரை நிறுத்தி, தான் யாத்திரை செய்யும் யாதவரோடு தொடர்ந்து சென்றார்-
பெருந்தேவி நாயகனின் கருணை-
25-ராத்ரியிலே நடுக் காட்டில் அகப்பட்ட ராமாநுஜரும், மிக வருந்திய நெஞ்சினராய், பெருந்தேவியோடு விளங்கும் தீன ரக்ஷகனான பேரருளாளனை ஸரணமடைந்தார்.
26-தனது மனத்துக்கினிய பெருந்தேவியோடு கூடிய வரதராஜனும் வேடருருவை தரித்து வந்து “ராமாநுஜரே! காஞ்சியை எளிதில் அடைவோம்” என்று கூறி, அவருக்கு முன்னே வழி காட்டிச் சென்று, ராமாநுஜரிடம் வேண்டிப் பெற்ற சாலைக் கிணற்று நீரை தேவியோடு கூடப் பருகி மறைந்தான்-
27-விடியற்காலை வேளையான அப்போது அத்தி கிரியின் புண்ய கோடி விமானம் மிக அருகில் தெரிவதைக் கண்டு, நீர் பருகியவன் பேரருளாளனே என்று அறுதி யிட்டு, ராமாநுஜர் பேராச்சரிய மடைந்தார்–
சாலைக் கிணற்று நீர்க் கைங்கர்யம்-
28-அருகிலிருக்கும் நல்லதொரு குளத்தில் ஸ்நானம் ஸந்த்யா வந்தனம் முதலான காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பெருங் தேவியையும், பேரருளாளனையும் ஸேவித்துப் பேரானந்தம் கொண்டவராய், அவ் விரதன் விரும்பிப் பருகிய சாலைக் கிணற்று நீரை தினந் தோறும் தாமே சுமந்து சென்று அளித்து அவனை உகப்பித்து வந்தார்–
கோவிந்தர் உள்ளங் கை கொணர்ந்த நாயனரானது–
29-யாதவரின் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட கோவிந்தரும் கங்கையில் நீராடும் போது தமது உள்ளங்கையில் சிவ லிங்கத்தைப் பெற்றவராய், தமது கிராமமான மதுர மங்கலத்திற்குச் சென்று அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, காளஹஸ்திக்குச் சென்று, அங்குள்ள சிவாலய கார்யங்களை நிர்வஹிப்பவராய் அங்கு வஸித்து வந்தார்–
ராமாநுஜர் யாதவரை அடியோடு கை விடுதல்-
30-காஞ்சிக்கு வந்து சேர்ந்த யாதவரும், ராமாநுஜரைக் கண்டு,அவர் திரும்பி வந்த விதத்தையும் கேள்விப்பட்டு, அவரை அழைத்து மயக்கி, மறுபடியும் தமது சிஷ்யர்களோடு சேர்த்துப் பாடம் சொல்லி வந்தார்-
31-“ஸதேவ ஸோம்யேத,மக்ர ஆஸீதேகமேவாத்விதீயம்” (சாந் 6-2-1] என்னும் உபநிஷத் வாக்யம் ஸஜாதீய விஜாதீய ஸ்வத பேத மற்ற சிந்மாத்ர வஸ்துவைச் சொல்லுகிறது என்னும் அவப் பொருளை ஒரு நாள் யாதவர் உரைத்தவுடன், அந்த வாக்யம் உலகிற்கு நிமித்த உபாதாந ஸஹகாரி காரணங்கள் மூன்றுமான ஸகல சேதந சேதந ஸகல கல்யாண குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தையே சொல்லுகிறது
என்னும் பொருந்திய பொருளை அவருக்கு அறிவுறுத்தி, ராமாநுஜர் யாதவரிடம் படிப்பதை அடியோடு கை விட்டார்-
ஆளவந்தார் பெரியநம்பியை அனுப்புதல்-
32-33-பேரொளி வீசும் ரத்தினம் போன்றவரான ராமாநுஜர் யாதவராகிற குரங்கின் கையிலிருந்து விடுபட்டு, அத்திகிரி யருளாளனின் நெஞ்சுக்கு இனியவ(ஹ்ருத்ய)ரானார் என்று கேள்விப்பட்டு உகந்த
யாமுநாசார்யர் (ஆளவந்தார் )ராமாநுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருவதற்காகத் தமது சிஷ்யரான பெரிய நம்பியை அனுப்பினார். காஞ்சிக்குச் சென்ற அப் பெரியநம்பியும், தமது ஆசார்யர் அருளிய
ஸ்தோத்ர ரத்னத்தை அநுஸந்தித்து ராமாநுஜரை உகப்பித்து, (அவரால் ஸத்கரிக்கப் பெற்றுத்) தாமும் மிகவுகந்தார்-
ஆளவந்தார் பரமபத,ப்ராப்தி-
34-பெரியநம்பியோடு கூடிய ராமாநுஜாசார்யரும், ஆளவந்தாரை ஸேவிப்பதற்கு ஸ்ரீரங்கம் செல்லா நிற்கும் போது, வட திருக்காவேரிக் கரையிலேயே மிகுதியான ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹத்தைக் கண்டார்-
35-(ஆளவந்தார் திருக் குமாரரான) திருவரங்கப் பெருமாளரையர் முதலான அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள், அவ் விருவரையும் பார்த்து, ஆளவந்தார் பரமபத மடைந்ததை அவர்களுக்கு விண்ணப்பித்து ஒருவாறு ஆறுதலடைந்தவர்களாய், ஆளவந்தாருடைய திருவிரல்கள் மூன்று மடங்கி யிருப்பதையும் காட்டினார்கள்–
திருவிரல்கள் நிமிர்தல்-
36-திருவிரல்கள் மடங்கி யிருப்பதற்குக் காரணமான ஆளவந்தாருடைய மூன்று மனக் குறைகள் பற்றிக் கேள்விப்பட்ட ஸ்ரீராமாநுஜர்,அவருடைய மனக் குறைகளைத் தீர்ப்பதற்காக) “(1) வ்யாஸருடைய
ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு பாஷ்யமெழுதி விவரிப்பேன் (2) அவருடைய தகப்பனாரான பராஸரரின் பெயரையும், (3) நம்மாழ்வாரின் திரு நாமத்தையும் இருவர்க்கு இடுவதன் மூலம் அவர்களுக்கு நன்றி செலுத்துவேன்” என்று ப்ரதிஜ்ஞை செய்து, அவரது திருவடித் தாமரை யிணையை வணங்கினார்-
37-அக்கணத்திலேயே, ஆளவந்தாருடைய மடங்கிய மூன்று விரல்களும் முன் போல் நிமிர்ந்தன. அதைக்கண்ட அனைவரும் “இவரே வைதிக ஸித்தாந்தத்தை நிலை நிறுத்துமவர்களுக்குத் தலைவராவார் என்பது உறுதி” என்று உரைத்தார்கள்-
ஆறு வார்த்தைகள்–
38-அதற்குப்பின் (ஆளவந்தாரை உயிரோடு ஸேவிக்காத மனக் குறையாலே) அரங்க நகரப்பனை ஸேவிக்காமலே காஞ்சிக்குத் திரும்பிய ராமாநுஜர், வரதராஜனை வணங்கி, அவருக்குச் சாலைக்
கிணற்று நீரை அளித்தல் முதலான கைங்கர்யங்களைச் செய்கின்றவராய், ஒரு சமயம் “நாம் இனிச் செய்ய வேண்டியது என்ன” என்று சிந்தித்தார்-
39-அக் காஞ்சியி லிருந்தவராய், வர்ணாஸ்ரமாசாரங்களைத் தாமும் அநுஷ்டித்துப் பிறரையும் அனுஷ்டிக்கச் செய்பவராய், வரதனுக்கு அந்தரங்கராய் ( திரு வாலவட்ட கைங்கர்யம் செய்யும் ) திருக் கச்சி நம்பியைப் பார்த்து, “நம்பியே! நான் நெஞ்சில் கொண்டுள்ள அர்த்தங்களைத் தேவப் பெருமாளிடமிருந்து அறிந்து, அவை பெருமாள் உகந்தவையா என்பதை எனக்குச் சொல்லுவீர்” என்று பிரார்ததித்தார்-
40-41-(1) “ஸ்ரீமானான நானே பரதத்வம். (2) உலகிற்கும் எனக்கும் பேதம் உண்டு’ என்பதே என் மதம் (3) என்னை ஸரண மடைவதே என்னைப் பெறுவதற்குக் கண்ணழிவற்ற உபாயம்.(4) அப்படி ஸரணமடைந்தவர்களுக்கு அந்திம காலத்தில் என் நினைவு தேவை யில்லை. (5) இப் பிறப்பின் இறுதியிலேயே ( அவர்களுக்கு ) மோக்ஷம் உறுதி (6) பெரிய நம்பியே ராமாநுஜரால் ஆசார்யராக ஆஸ்ரயிக்கத் தக்கவர்“- என்னும் ஆறு வார்த்தைகளையும் வரதராஜப் பெருமாளிடமிருந்து பெற்ற ரஹஸ்யவாதியான திருக்கச்சிநம்பி அவ்வார்த்தைகளை ராமாநுஜருக்கு ரஹஸ்யமாகக் கூறி, அதனால் “ராமாநுஜ மாந்யர் ” [ராமாநுஜராலும் கெளரவிக்கப்பட்டவர்] என்னும் பெயரைப் பெற்றார்-
பெரிய நம்பியை ஆஸ்ரயித்தல்
42-ராமாநுஜரும் பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக ஸ்ரீரங்கத்திற்குச் செல்கின்றவராய், வழியில் மதுராந்தகத்திலே ஸ்ரீ பூமி நீளா தேவிகளோடு கூடிய கருணாகரனையும், ஸீதையோடு கூடிய ஏரி காத்த
ராம பிரானையும் ஸேவித்தார்-
43-ஆளவந்தாரின் மற்ற சிஷ்யர்களால் (ராமாநுஜரை ஆட்கொள்ளும்படி) நியமிக்கப் பெற்று மதுராந்தகத்தை அடைந்திருந்த பெரிய நம்பியையும் அங்கேயே தெய்வச் செயலாலே ஸேவித்து,
அவருடைய திருவடித் தாமரை யிணையை வணங்கி, ஆனந்தக் கண்ணீர் நிறைந்தவரானார் ராமாநுஜாசார்யர்–
44-ஒருவர்க்கொருவர், தங்களுக்கு ஏற்பட்ட நியமனத்தை விசாரித்து அறிந்து உகந்த பின், அந்த மதுராந்தகம் கோயிலிலே, மகிழ மரத்தின் நிழலுடைய அவ் விடத்தையே பரமபதமாக தியானித்து,
பெரிய நம்பியை ராமாநுஜர் ஆசார்யராக அடைந்தார்–
45-(1) சங்க,சக்ராங்கனம், (2) ஊர்த்வ புண்ட்ர தாரணம், (3)தாஸ்ய நாமம்,(4)யாக ஸம்ஸ்காரம், (5) மந்த்ர ரத்னமாகிற த்வயத்தையும் (திருவஷ்டாக்ஷரம் முதலிய) மற்ற மந்திரங்களையும் பொருளோடு
உபதேஸித்தலாகிற மந்த்ர ஸம்ஸ்காரம் என்னும் பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் பெரிய நம்பி ராமாநுஜருக்கு அங்கேயே செய்தருளினார்-
க்,ரந்த உபதேஸம் –
46-அத்தகைய பெருமை படைத்த திவ்ய தேஸமாகிற மதுராந்தகத்திலிருந்து, சிஷ்யரான ராமாநுஜரோடு காஞ்சியை அடைந்த ஆசார்யரான பெரிய நம்பி, பொருந்திய பெயரை யுடைய வரத ராஜப் பெருமாளை வணங்கி, ராமாநுஜருடைய இருப்பிடத்தை அடைந்தார்-
47-மிகவுகந்த அப்பெரியநம்பி, நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களில் முதல் மூன்று ஆயிரங்களையும், வ்யாஸருடைய ப்ரஹ்ம ஸூத்ரங்களின் பொருளையும் ராமாநுஜருக்கு உபதேஸித்தார். மனைவியோடு கூடிய அவரை, ராமாநுஜரும் அவருகந்த கைங்கர்யங்களைச் செய்து ஆராதித்து வந்தார்-
ஸந்யாஸாஸ்ரம ஸ்வீகாரம்-
48-ஒரு காரியத்தை முன்னிட்டு ராமாநுஜர் ஸ்ரீபெரும்பூதூருக்குச்) சென்றிருந்த போது, அவரது பத்னியாலே ஜாதியில் தாழ்வைக் காட்டி அவமதிக்கப் பெற்றுக் கோபமடைந்த தனது பத்னியைப் பெரிய நம்பி கோபித்தார்-
49-அதற்குப் பின், பெரிய நம்பி தமது மனைவியையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம சென்று விட்டார். (ஸ்ரீ பெரும்பூதூரிலிருந்து திரும்பி வந்து) அச் செய்தியைக் கேள்விப்பட்ட ஆசார்ய பக்தி மிக்க ராமாநுஜரும் மிகக் கோபங் கொண்டவராய், தமது மனைவியைத் தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்–
50-இல்லறத்தில் வைராக்யமடைந்த அந்த ராமாநுஜர் மனைவியைக் கைவிட்டு, ஸ்ரீ தேவராஜப் பெருமாளை வணங்கி, அவரிடமிருந்தே ஸந்யாஸாஸ்ரமத்தை ஏற்றுக் கொண்டார். அப்பெருமானும் அவருக்கு-யதிராஜர் ‘ என்னும் திரு நாமத்தை அளித்தான் –
51-அதற்குப் பின், யதிகட்கிறைவரான ராமாநுஜர், த்ரிதண்டத்தை யுடையவராய், ஸிகை,, யஜ்ஞோபவீதம், காஷாயம் ஆகியவற்றோடு கூடியவராய், மந்த்ர ரத்னமான த்வயத்தை அநுஸந்திப்பவராய், வர்ணாஸ்ரமாசாரங்களின்படி நடப்பவராக விளங்கினார்–
52-அக் காஞ்சியிலேயே, கூரத்தாழ்வானும், ஸ்ரீ வாத்ஸ்யக் குலத்தலைவரான நடாதூராழ்வானும், வாதூல குலத் தலைவரான முதலியாண்டானும் ராமாநுஜரை ஆஸ்ரயித்தனர். ராமாநுஜரான யதிராஜர் அவர்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்வித்தார்-
யாதவ ப்ரகாஸர் ஆஸ்ரயித்தல்-
53-ஆளவந்தாருடைய கடாக்ஷத்தால் ஸூத்தி, யடைந்த யாதவ ப்ரகாஸரும் யதிராஜ சிஷ்யராகி கோவிந்த ஜீயர்’ என்னும் திருநாமம் பெற்று, ஸந்யாஸிகளின் தர்மங்களை விளக்கும் ‘யதி தர்ம ஸமுச்சயம் ‘ எனும் நூலை இயற்றினார்–
ஸ்ரீரங்க நிர்வாஹத்தை ஏற்றுக் கொள்ளல்-
54-ஒரு சமயம், திருவரங்கப் பெருமாளரையர், காஞ்சிக்குச் சென்று வரதனை வணங்கி, அவரிடமிருந்து ராமாநுஜரை வரமாகப் பெற்று அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்தைக் குறித்துப் புறப்பட்டார்–
55-56-அதற்குப் பின் கூரத்தாழ்வான் முதலான அந்தரங்க ஸிஷ்யர்களோடு கூடிய யதிகட் கிறைவர், மதுராந்தகத்திலிருக்கும் பெருமாளை வணங்கி, ஸ்ரீரங்கத்திற்கு வந்து பெரிய பெருமாளை ஸேவிக்க
விருப்பங் கொண்டவராய் எழுந்தருளும் போது, ரங்கநாதனின் ஆஜ்ஞையாலே எதிர் கொண்டழைத்தவர்களாலே, (பெருமாளுடைய ) மாலை முதலானவற்றலே பஹுமானம் செய்யப் பெற்றவராய், பெரிய பிராட்டியாரையும், பிறகு பெரிய பெருமாளையும் வணங்கி, ஸ்ரீரங்க ஸ்ரீகார்ய நிர்வாஹத்திற்குத் தலைவரானார் —
உபய விபூதி ஸாம்ராஜ்யமடைதல்-
57-(அரங்கனால் அளிக்கப் பெற்ற) உபய விபூதி ஸாம்ராஜ்யத்தைப் பெரியநம்பியின் கடாக்ஷத்தால் கிடைத்ததாக எண்ணி, அவரது திருவடித் தாமரையிணையை வணங்கி, அவருக்கு வஸப் பட்டவராய் விளங்கினார்–
திருக்கோட்டியூர் நம்பியிடம் உடையவர் திருமந்த்ர சரம ஸ்லோகார்த்தங்களைப் பெறுதல்-
58-அதற்குப் பின், பெரிய நம்பியின் நியமனத்தாலே திருக் கோட்டியூர் நம்பியின் திருவடிகளை வணங்கி, திருமந்த்ரார்த்தையும்,கீதா சரம லோகார்த்தத்தையும் அவரிடமிருந்து உபதேஸம் பெற்று, திருக்கோட்டியூரிலேயே பலருக்கு அவற்றை உபதேஸித்தார் எம்பெருமானார்–
எம்பெருமானார் தரிசனம்-
59-அதற்குப் பின் அத் திருக்கோட்டியூர் நம்பியும் ராமாநுஜரின் திருவுள்ளத்தில் பொங்கும் கருணையை அப்போதே அறிந்து, யதிகட்கிறைவரை எம்பெருமானார் ‘ என்று கொண்டாடி மிகவுகந்தவராய் “இந்த தர்ஸனம் உமது பெயராலே ‘எம்பெருமானார் தரிசனம் ‘ என்றே பெயர் பெற்று விளங்கும்” என்று கூறினார். அதனாலேயே இது ஸ்ரீராமாநுஜ தர்ஸனம் என்று பெயர் பெற்று விளங்குகிறது–
திருவரங்கப் பெருமாளரையரிடம் உபதேசம் பெறுதல்–
60-அதற்குப் பின் யதிராஜரான ராமாநுஜர் (ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி) ஆசார்யரான பெரிய நம்பியை வணங்கினார். மறுபடியும்,திருவரங்கப் பெருமாளரையரிடமிருந்து சில அர்த்த, விஸேஷங்களைப் பெற வேணும் என்று அவர் ராமாநுஜரை நியமித்தார்-
61-அதன்படியே, நம்மாழ்வாரின் கடைசி ப்ரபந்த மான திருவாய்மொழியையும், அதன் ஸாரார்த்தத்தையும், மற்ற ஆழ்வார்களின் ப்ரபந்தங்களையும், (ஆளவந்தார் அருளிய) ஸ்தோத்ர ரத்னம், சதுஸ் :ஸ்லோகீ என்னும் இரு ஸ்தோத்ரங்களையும், அவற்றின் பொருளையும் அவரிடமிருந்து பெற்று மறுபடியும் பெரிய நம்பியை அடைந்தார் –
திருமாலை யாண்டானிடம் அருளிச் செயலர்த்தம் பெறுதல்-
62-மறுபடியும் தமது ஆசார்யரான பெரிய நம்பியால் நியமிக்கப் பெற்ற பேரறிவாளரான யதிராஜர், நாலாயிரத்தில் நாலாவதாயிரமான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி, திருமங்கை யாழ்வாருடைய பெரிய திருமொழி தொடக்கமான இரண்டாமாயிரம், மற்றும் முதலாயிரம், இயற்பா ஆகிய அனைத்தின் பொருளையும் திருமாலை யாண்டானிட மிருந்து கற்றார் —
63-அப்படிக் கற்கும் போது, சிற்சில விடங்களில் ‘இப்படியும் அர்த்தமிருக்கலாம்’ என்று யதிராஜர் அவரிடம் கூறினார். அதைக் கேட்ட திருமாலை யாண்டான் திருக்கோட்டியூர் நம்பியிடமும், பெரிய
நம்பியிடமும் ‘ஆளவந்தார் அருளாத அர்த்தங்களை இவர் இப்படி விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியாகச் சொல்லுகிறாரே!’ என்று குறை பட, ‘இவர் சொன்னவையும் ஆளவந்தாரால் வேறு உருக்களில் அருளிச் செய்யப் பட்டவையே யாகும். ஆளவந்தார் திருவுள்ள முகக்காதது இவர் நெஞ்சில் தோன்றாது’ என்று அவர்களால் கொண்டாடவே பட்டார் யதிராஜர்–
ஸ்ரீரங்க வாஸம்
64-இவ் வண்ணமாக ரஹஸ்யார்த்ததங்களோடு கூடிய உபய வேதாந்தங்களையும் ஆசார்யர்களிடமிருந்து கற்று, கூரத் தாழ்வான் ஸ்ரீவத்ஸ குல திலகரான நடாதூராழ்வான் முதலான சிஷ்யர்களோடு, மிக வுகந்து திருவரங்கத்தில் வாழ்ந்தார் யதிராஜர்-
ஆச்சான் ஆஸ்ரயித்தல்; பிள்ளானைக் கடாக்ஷித்தல்-
65-66-அதற்குப் பின், ஆத்ரேய குலத்துதித்த ப்ரணதார்த்திஹரர் என்னும் கிடாம்பி யாச்சான் யதிராஜரின் திருவடியில் ஆஸ்ரயித்தார். தனது அத்தைக்கும், (ராமா நுஜரின் மாமாவான) திருமலை
நம்பிக்கும் பிள்ளையான பிள்ளானைக் காட்டிக் கொடுத்து, அப்பிள்ளானுடைய இயல்வான நல்லொழுக்கத்தையும், யதிராஜ பக்தியையும், அவருக்குக் கைங்கர்யம் செய்வதில் விருப்பம் முதலானவற்றையும் விண்ணப்பித்து, “ இந்த யதிராஜரையே திருவேங்கடமுடையானாக
நினைத்து அடைவாயாக ” என்று திருமலை நம்பி தனக்குச் சொன்ன வார்த்தையையும் ஆச்சான் ராமாநுஜருக்குக் கூறினார்–
67-இளம் வயதினரான அப்பிள்ளானைக் கடாக்ஷித்து, அப்போதே ஆச்சானுக்கு எல்லா மந்திரங்களையும், அவற்றின் பொருளையும் உபதேஸித்தார். அதனாலேயே அவரும் யதிராஜருடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிவுடன் நோக்குமவரானார்–
ஆச்சானுக்கு மடைப்பள்ளி கைங்கர்ய நியமனம்-
68-அப்போது ஒரு ஸமயம், தம்மிடம் விரோதங்கொண்ட சிலர் விஷங்கலந்த பிக்ஷையை இடுவித்ததை அறிந்த யதிராஜர், மூன்று தினங்கள் உபவாஸமிருந்தார். அதைக் கேட்டவுடன திருக் கோட்டியூர் நம்பியும், பெரிய நம்பியும் திருக்கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு விரைவில் வந்து சேர்ந்தார்கள்–
69-அப்போது எதிர் கொண்டு அழைக்க வந்த யதிராஜர் (நடுப்பகலில் காவேரி மணலில்) அவர்களைக் கீழே விழுந்து வணங்கா நிற்க (அவர் திருமேனியில் பரிவாலே கிடாம்பி யாச்சான் பதற), உமது
திரு மேனியில் பரிவுடைய இந்தக் கிடாம்பியாச்சானால் பரிஸோதிக்கப் பட்ட பிக்ஷையையே நீர் தினந் தோறும் கொள்வீர்’ என்று நம்பிகளிருவரும் யதிராஜர்க்கு நியமித்தனர். அவரும் அப்படியே செய்து வந்தார்–
கோவிந்த ப ட்டர் திருந்திய செய்தி–
70-(தனது சிறிய தாயார் பிள்ளையான) கோவிந்த, பட்டர் கருத்தைத் திருத்துவதற்காகத் திருமலை நம்பியிடம் யதிராஜரால் அனுப்பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள், அங்கு சென்று திரும்பி வந்து, “கோவிந்தபட்டர்(உள்ளங்கைகொணர்ந்த நாயனாராயிருந்த நிலை போய்) சிவ லிங்க ஸம்பந்த ம் கழியப் பெற்று, திருமலை நம்பியின் திருவடித் தாமரையில் வண்டு போலே யானார்” என்னும் செய்தியை யதிராஜருக்குத் தெரி வித்தனர் ––
க்ரந்தங்கள் அருளல்–
71-அதற்குப்பின், யதிராஜர் வேதார்த்த,ஸங்க்ரஹத்தையும் ப்ரஹ்ம ஸூத்ர வ்யாக்யானங்களான வேதாந்தஸார தீபங்களையும், கீதா வ்யாக் யானமான கீதா பாஷ்யத்தையும் அருளி, கூரத்தாழ்வான் முதலான சிஷ்யர்களுக்கு உபதேஸித்தார்-
72-ஆதி யந்த மற்ற வேத,வாக்யங்களுக்கு முரண்படாத பொருளை விளக்குவதன் மூலம் வ்யாஸருடைய ப்ரஹ்ம ஸுத்ரங்களுக்கு உண்மைப் பொருளை விளக்கும் ஸ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்து, ஆளவந்தாரின் மநோரதமான தமது பொறுப்புகளில் முதலாவதை நிறை வேற்றினார் யதிராஜர்-
73-அதற்குப் பின் ஒரு பங்குனி உத்திரத் திருநாளிலே ஸ்ரீரங்க, நாயகியும், ஸ்ரீரங்க நாதனும் சேர்த்தியிலே பேரானந்தத்தோடு திருமஞ்சனம் கண்டருளியபின் அவர்களை ஸரணமடைந்து, அதை
விளக்கும் கத்ய த்ரயத்தையும் அருளிச் செய்தார் யதிராஜர்–
74-ஸ்ரீபாஷ்ய கீதாபாஷ்ய ஸார தீப வேதார்த்த ஸங்க்ரஹங்களால் தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிந்தவனாய், மூன்று கத்யங்களாலும் ஸ்ரீமந் நாராயணனை ஸரணமடைந்தவனாய், அந்த ஸ்ரீய:பதிக்கே கைங்கர்யம் செய்யும் அதிகாரிக்கு, அந்த லக்ஷ்மீ பதியை அடையும் வரையில் செய்ய வேண்டிய நித்ய கைங்கர்யங்களை நித்ய கரந்தம் என்னும் நூலின் மூலம் தெரிவித்தார் யதிராஜர்-
திருமலை நம்பியிடம் ஸ்ரீ ராமாயணம் கேட்டது-
75-அதற்குப் பின் பல சிஷ்யர்களோடு கூடியவராய், காஞ்சீ மார்க்கமாக பக்தியோடு திருவேங்கட மலைக்குச் சென்ற யதிராஜர் திருமலை நம்பியாகிற ஆசார்யரால் எதிர் கொண்டழைக்கப்பட்டு, அவரை
வணங்கினார்–
76-அவருடைய கடாக்ஷத்தாலே அலர் மேல் மங்கை யுறை மார்பனை ஸரணடைந்து, அத் திருமலையிலேயே ஒரு வருஷம் வாழ்ந்து அத் திருமலை நம்பியிட மிருந்து பலவிதமான அரும் பொருள்கள் நிறைந்த ஸ்ரீராமாயணத்தை உபதேஸம் பெற்றார்-
பிள்ளானையும் கோவிந்த பட்டரையும் பெறுதல்-
77-78-திருமலை நம்பியின் பிள்ளைகள் இருவரும், அவராலே நியமிக்கப் பெற்று யதிராஜரை ஆஸ்ரயித்து, அவரிடமிருந்து எல்லா அர்த்தங்களையும் உபதேஸம் பெற்றனர். அவர்களில் கடைசிப்
பிள்ளையான ( திருக் குருகைப் பிரான் ) பிள்ளானைத் திருமலை நம்பி யதிராஜருக்கு அபிமான புத்ரராக அளித்தார். யதிராஜரும், நம்பியால் அளிக்கப் பெற்ற அப்பிள்ளானையும், தானே யாசித்துப் பெற்ற (தனது சிறிய தாயார் பிள்ளையான) கோவிந்த பட்டரையும் அழைத்துக் கொண்டு காஞ்சீ மார்க்கமாகவே ஸ்ரீரங்கத்தை அடைந்தார்–
எம்பாரும் பட்டரும்-
79-அந்த கோவிந்த பட்டர் விஷய வைராக்யமுள்ளவரா யிருப்பதைக் கண்டு, அவருக்கு ஸந்யாஸாஸ்ரமத்தையும் (தனது பெயரைச் சுருக்கி) எம்பார்’ என்னும் திருநாமத்தையும் அளித்தார் எம்பெருமானார் -ஸ்ரீ ரங்க நாதனுடைய அருளாலே கூரத்தாழ்வானுக்குப் பிள்ளையாகப் பிறந்தார் பிஞ்சாய்ப் பழுத்தவரான பட்டர்-
இரண்டாவது யாமுநாசார்ய மநோ ரத பூர்த்தி–
80-அந்த பட்டருக்கு பராஸரர் என்னும் (பராஸர மஹர்ஷியின்) பெயரை அளித்து, அவரால் இயற்றப் பெற்ற ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும் அரங்கேற்றி, ஆளவந்தாரின் இரண்டாவது மநோ ரதத்தை நிறைவேற்றினார் யதிராஜர்-
பிள்ளான் ஜ்ஞாந புத்ரராதல்–
81-ஒருசமயம், தமது மடத்தினுள்ளே யிருந்து கொண்டு, திவ்ய ப்ரபந்தத்தில் ஒரு பாசுரத்திற்குப் பொருளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த யதிராஜரைக் கண்டு, திருமலை நம்பியின் பிள்ளையான
பிள்ளான் அவர் ஆராய்ந்து முடிவு கட்டிய பொருள் என்று உரைத்தார்–
82-தாம் முடிவு கட்டிய பொருளும், அவர் கூறிய பொருளும் ஒன்றா யிருப்பதைக் கண்ட யதிராஜரும் மிகவும் ஆஸ்சர்ய மடைந்தவராய்,‘நாதமுனிகளின் (ஜ்ஞான)வம்த்ஸத்தில் உதித்த பெருமையால்
இவர் இப்பொருளை அறிந்தார்’ என்று எண்ணி, ‘எனது ஜ்ஞாந புத்ரரே!’ என்று அவரை அணைத்துக் கொண்டார்-
ஆறாயிரப்படி அருளல்-
83-யதிராஜரான ராமாநுஜாசார்யருக்கு ஜ்ஞாந புத்ரர் என்றும் அவருடைய பாதுகை யென்றும புகழ் பெற்றவரான (திருக் குருகைப் பிரான்) பிள்ளான், நம்மாழ்வாருடைய கடைசிப் பிரபந்தமான திருவாய்மொழிக்கு (ஆறாயிரப்படி) வ்யாக்யானம் அருளிச் செய்தார்-
மூன்றாவது யாமுநாசார்ய மநோ ரத பூர்த்தி–
84-பிள்ளான்’ என்று பெயர் பெற்றிருந்த அவருக்கு, நம்மாழ்வாரின் திருநாமமான ‘திருக் குருகைப் பிரான்’ என்னும் பெயரை இட்டு, அவர் அருளிய ஆறாயிரப்படி வ்யாக்யானத்தையும் அரங்கேற்றி, ஆளவந்தாரின் மூன்றாவது மநோ ரதத்தையும் நிறை வேற்றினார் யதிராஜர் —
யஜ்ஞ மூர்த்தி அருளாளப் பெருமா ளெம்பெருமானர் ஆனது–
85-அதற்குப் பின், யதிராஜருக்கும், யஜ்ஞ மூர்த்தி எனும் அத்வைதிக்கும், “இவ் வாதத்தில் தோற்பவர் ஜயிப்பவருடைய மதத்தைப் பின் பற்ற வேணும்” என்னும் நியமத்துடன், ஸ்ரீரங்கத்தில் பதினெட்டு நாள் வாதப் போர் நிகழ்ந்தது–
86-ஸ்வப்நத்தில் ( தமது ஆராதன மூர்த்தியான) வரதராஜப் பெருமாளால் கடாக்ஷிக்கப் பட்ட யதிராஜர் (பதினெட்டாவது நாள்) மாயவாதி மதத்தின் தலைவரான யஜ்ஞ மூர்த்தியை வாதத்தில் ஜயித்தார் (அருளாளப் பெருமாளின் கடாக்ஷத்தாலே தம்மால் வாதத்தில் ஜயிக்கப்பட்ட காரணத்தாலே) அவருக்கு அப் பெருமாளின் திரு நாமத்தையும், தமது பெயரையும் சேர்த்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ‘ என்னும் திருநாமத்தை இட்டார் யதிராஜர்-சிஷ்யராகி அவரும் மிக வுகந்தார்-
பரமத நிரஸநம்-
87-அதற்குப் பின் யதிராஜர் திக் விஜயம் செய்ய எண்ணி பல சிஷ்யர்களோடு புறப்பட்டு ஆங்காங்கு சென்று புற மதத்தினர் அனைவரையும் ஜயித்து, (காஷ்மீர தேஸத்தில்) ஸரஸ்வதீ பீடத்தை
அடைந்தார்–
ஸ்ரீபாஷ்யகாரரானது-
88-அங்கு அவருடைய ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்தை ஸிரஸா வஹித்த ஸரஸ்வதீ தேவி “இதுவே ஸ்ரீ பாஷ்யம்; மிகச் சிறந்த பாஷ்யத்தைச் செய்த நீர் இனி ஸ்ரீ பாஷ்யகாரர் என்றே புகழ் பெறுவீர்” என்று கூறி, அந்த ஸ்ரீபாஷ்ய ஸ்ரீகோஸத்தையும், தனது ஆராதன மூர்த்தியான ஹயக்ரீவரையும் அவரிடம் அளித்தாள்–
89-அடிபணிந்து ஸ்ரீ கோஸத்தையும் ஹயக்ரீவரையும் ஏற்றுக் கொண்டு, குலக்ரமப்படி திருவாராதனப் பெருமாளா யிருந்த வரதராஜனோடு அவரையும் தினந்தோறும் ஆராதித்துக் கொண்டு, புற மதங்களை ஜயித்துத் திருவேங்கட மலைக்கு மறுபடியும் எழுந்தருளினார் எதிகட்கிறைவர்-
அப்பனுக்குச் சங்காழி அளித்தது-
90-பக்தனான தொண்டைமான் சக்ரவர்த்தியிடம் சங்க, சக்ரங்களைக் கொடுத்திருந்ததைப் பற்சாகக் கொண்டு, ‘ஸ்ரீநிவாஸன் சிவனே யொழிய விஷ்ணுவல்ல’ என்று சைவர்கள் வாதம் புரிய முற்பட அப்பெருமான் விஷ்ணுவே என்பதை நிலை நாட்டினார் யதிராஜர்–
91-92-(அப்படியும் சைவர்கள் பிடிவாதம் பிடித்தமையால் அனைவரும் சேர்ந்து நிச்சயித்து) ஸங்க சக்ரங்களையும், சூலத்தையும் கர்ப்ப க்ருஹத்தினுள் வைத்துக் கதவைச் சாத்தி, எல்லோரும் ஒன்றா யிருந்து காவல் காத்து, காலையில் ஒன்றாகவே கதவைத் திறந்து உள்ளே புகுந்து திருவேங்கடமுடையானைக் கண்டனர். சூலத்தை ஒடித் தெறிந்து, ஸங்க, சக்ரங்களை தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாஸனைக் கண்ட சைவர்கள் உடனே ஓடி விட்டார்கள். யதிராஜரோடு திருமலை நம்பியும் மிக வுகந்தார்–
புறமதத்தவரின் பொறாமை-
93-திருமலை நம்பியால் பரிபூர்ணமாகக் கடாக்ஷிக்கப்பட்ட யதிராஜர் எல்லா சிஷ்யர்களோடும் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி,வேதாந்த ஸித்தாந்தத்தை நிலை நாட்டுவதில் வல்லவரானார். புற மதத்தவர்கள் அதனால் பொறாமை கொண்டனர்-
சோழ ராஜாவின் உபத்ரவம்-
94-அதற்குப்பின் அப் புற மதத்தவர்களால் துர்போாதனை செய்யப் பட்ட சோழராஜா, ” சிவனைக் காட்டிலும் மேலானவன் இல்லை’ என்று ஏட்டில் எழுது” என்று நல்லவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் இதற்காக யதிராஜரை அழைத்து வரத் தன் வேலைக் காரர்களை அனுப்பினான். ஸிஷ்யர்கள் மூலம் இச் செய்தி ஸ்ரீ ரங்கத்தை எட்டியது-
95-இதைச் செவியுற்ற கூரத்தாழ்வான் காஷாயத்தையும் த்ரி தண்டத்தையும் தரித்தவராய், பெரிய நம்பியோடு கூட ராஜ சபைக்குச் சென்றார் -நடாதூராழ்வான் முதலானாரோடு கூடியவராய்
யதிராஜரும் வெள்ளை வஸ்த்ரம் சாத்திக் கொண்டு மேற்கு திக்கை நோக்கிப் புறப்பட்டார்-
96-அப்படிச் செல்லும் போது, ஓரிடத்திலிருந்த சில சிஷ்யர்களால் ஸமர்ப்பிக்கப்பட்ட காஷாயத்தையும் த்ரி தண்டத்தையும் ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்ட முறையில் மறுபடியும் ஏற்றுக் கொண்டு, முறைப்படி எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார் யதிராஜர்-
மேல் நாட்டு அரசன் ஆஸ்ரயித்தல்-
97-மேல் நாட்டை (மைஸூரை) அடைந்த யதிராஜரை, அந்த தேஸத்து அரசனும், சில அந்தணர் தலைவர்களும் ஆஸ்ரயித்தனர். (அவ்வரசனை வசப் படுத்தி யிருந்த) ஜைனர்களும் யதிராஜரால் தோற்கடிக்கப்பட்டு (அரசனால்) நிரஸிக்கப்பட்டனர். இதனால் எம்பெருமானாருடைய மஹா ப்ரபாவமும் வெளிப்பட்டது–
திரு நாராயண புர ப்ரதிஷ்டை-
98-அங்கு யதிராஜரின் கனவில் தோன்றிய திருநாரணன், “யாதவாத்பூரியில் பூமிக்கு அடியில் இன்ன அடையாளமுள்ள இடத்தில் நான் இருக்கிறேன். என்னை அங்கு ப்ரதிஷ்டை செய்வாய்;
(ஊர்த்வ புண்ட்ரத்திற்கான) வெள்ளை மண்ணையும் எடுத்துக் கொள்வாய்” என்று அவரிடம் அருளினான்–
99-அப்போது யதிராஜரும் மிக வுகந்தவராய், கல்யாண ஸரஸ்ஸில் நீராடிப் பரிசுத்தி பெற்றவராய், அவ் வடையாளங்களைக் கொண்டு (திரு நாரணனோடு கூடிய) விமானத்தைக் கண்டு பிடித்து, அக் கோயிலிலே (மூல மூர்த்தியான)திருநாரணனை ப்ரதிஷ்டை செய்தார் –
செல்வப் பிள்ளையைக் கொண்டு வருதல்-
100-வெள்ளை மண்ணையும் ஸிஷ்யர்களைக் கொண்டு எடுத்து தரித்துக் கொண்டு, திருநாரணனின் உத்ஸவ விக்ரஹமான ராம ப்ரியரைத் தேடி டில்லிக்குச் சென்று, டில்லி அரசனின் பெண்ணின் அந்த:புரத்தி லிருந்த அப்பெருமாளை ‘என் செல்வப் பிள்ளாய்! வருக என்று கூவினார்–
101-ஓடி வந்து மடியில் ஏறிய ராமபிரியரை அழைத்துக் கொண்டு வந்து திருநாராயணபுரத்தில் உத்ஸவ மூர்த்தியாகச் சேர்த்து, அந்தச் செல்வப் பிள்ளையான திருநாரணனுக்கு உத்ஸவம் முதலானவற்றைச்
செய்து இன்புற்றார் எதிராஜர். அப் பெருமாளைத் தேடி வந்த டில்லி அரசனின் பெண், அவரோடு அங்கேயே ஒன்று பட்டு மறைந்தாள்-
தர்ஸன த்யாகமும் க்ருமி கண்ட மரணமும்-
102-பெரிய நம்பியும், கூரத்தாழ்வானும், தர்ஸனத்திற்காக (மதத்திற்காக) தர்ஸனத்தை (கண்ணை) இழந்ததைக் கேள்விப் பட்டு மிக வருந்திய யதிராஜர் ( பெரிய நம்பி பரமபதமடைந்த போதிலும்
கூரத்தாழ்வான் க்ஷேமமாயிருப்பதையும், சோழ அரசன் விரைவிலேயே (அஸஹ்யாபசார பலமாகக் கழுத்தில் புழுத்து) துர் மரணம் அடைந்ததையும் கேள்விப்பட்டு, (ஸ்ரீரங்கச் செல்வத்திற்கு உபத்ரவம் நீங்கியது காரணமாக) ஆனந்தமடைந்தார் –
யது கிரி யதி கிரி யானது–
103-அதற்குப்பின்பே-கல்யாண தீர்த்தம் பொருந்திய பெயர் பெற்றது. அந்த நகரமும் திருநாராயண புரமாயிற்று. அங்குள்ள யதி பதியும் ஸம்பத்குமாரர் (செல்வப் பிள்ளை) ஆனார். யதிராஜரின்
ஜய ஸ்தானமாக ஆயிற்று அவ்வூர்- மேலும் ஸ்ரீமானான யதிராஜர் தமது திருவடிகளை ஆஸ்ரயித்த ஜனங்களின் ஹிதத்திற்காக தனது அர்ச்சா மூர்த்தியை (மூலவரை) அவர்களுக்கு அளித்தார். அதனால்
அந்த யாத வாத்ரி யதி கிரி என்றும் பெயர் பெற்றது-
ஸ்ரீரங்கத்தை அடைதல்-
104-செல்வப் பிள்ளையையும், யது,கிரி நாச்சியாரோடு கூடிய திருநாரணனையும் வணங்கி, அங்குள்ள சிஷ்யர்களை (திரு நாரணனை ரக்ஷிக்கும்படி) நியமித்து விட்டு, சில அந்தரங்க ஸிஷ்யர்களோடு
கூடிய யதிராஜர் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று மிகவுகந்து, ஸ்ரீரங்க நாதனை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார். அப்போது அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கான திருவத்யயநோத்ஸவம் (ஆழ்வார் திருநகரியிலிருந்து ஆழ்வார் எழுந்தருள இயலாமையால்) தடைபட்டு விட்டது என்று அவரிடம் கூறினர் ––
ஆழ்வார்கள் ப்ரதிஷ்டையும், அத்யயநோத்ஸவமும்-
105-106- அந்த ஸ்ரீரங்கத்திலேயே ஸ்ரீமானான யதிராஜர் நம்மாழ்வார் விக்ரஹமொன்றைப் ப்ரதிஷ்டை செய்வித்து, அவரைக் கொண்டு ஸ்ரீரங்க, ராஜனுக்கு இருபது நாள் அத்யயனோத்ஸவத்தைச் செய்வித்து, பிற் காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும், தன் விஷயமான
இராமாநுச நூற்றந்தாதியையும் சேர்த்துத் திருவரங்கன் செவி சாத்தும்படி செய்து, அந்த மற்றை யாழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கும் விக்ரஹ ப்ரதிஷ்டையும் செய்து வைத்தார்–
கோயிலண்ணரானது-
107-அது போலவே மிகச் சிறப்புற்ற திவ்ய தேஸங்கள் அனைத்திலும், ஆழ்வார்களுடையவும், ஆண்டாளுடையவும் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்வித்து அத்யயநோத்ஸவமும் நடக்கும்படி செய்து, (ஆண்டாள் பாரித்தபடியே) நூறு தடாவில் வெண்ணெயும், நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் திருமாலிருஞ்சோலை அழகர் உகக்கும்படி ஸமர்ப்பித்து, யதிராஜர் ஆண்டாளின் கடாக்ஷத்தாலே ‘கோயிலண்ணர் ‘ என்று அழைக்கப் பெறும் ஸந்மானத்தைப் பெற்றார்-
கோவிந்த ராஜ ப்ரதிஷ்டை-
107-(க்ருமி கண்டனால் இடிக்கப்பட்ட). தில்லைத் திருச்சித்திர கூடத்திலிருந்து ரஹஸ்யமாக எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்தா ராஜப் பெருமாளின் உத்ஸவ மூர்த்தியை வேங்கடமலை அடி வாரத்திலே
ப்ரதிஷ்டை செய்து, நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களையும் ப்ரதிஷ்டை செய்து ஸிஷ்ய ஸமூஹங்களோடு கூடிய யதிராஜர் திருவரங்கரத்திற்குத் திரும்பிச் சென்ற பின், மற்ற மதங்களைப் பற்றியிருந்த ஜனங்களைத் தனது அடியார்களாக்கிக் கொண்டு, சிஷ்யர்களுக்கு முறைப்படி
ஒவ்வொரு கைங்காயத்தைப் பிரித்துக் கொடுத்து, கவலை நீங்கப் பெற்றவராய் இன்புற்றார்—
ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தல்-
108-எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகளையும், அவரிலும் முக்கியமானவராக நால்வரை ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதிகளாவும், அந் நால்வரிலும் தனது ஜ்ஞாந புத்ரரான பிள்ளானை உபய வேதாந்த
பாஷ்ய ஸிம்ஹாஸநாதிபதியாகவும், யதிகளுக்குச் சக்ரவர்த்தியான ராமாநுஜாசார்யர் நியமித்தருளினார்-
ஸிஷ்ய ஸம்ருத்தி-
109-அந்த எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதி பதிகளோடும், எழுநூறு ஸந்யாஸிகளோடும், பன்னீராயிரம் பரமை காந்திகளோடும் ஆஸ்சர்யமான ஸிஷ்ய ஸம்ருத்தி பெற்றவராய் எழுந்தருளி யிருந்த யதிராஜர் பெரியவர்களான கூரத்தாழ்வான் முதலியாண்டான் முதலானார், தம்பியான எம்பார், தனது ஜ்ஞான புத்ரரான பிள்ளான் ஆகிய அனைவரையும் கடாக்ஷித்து மற்ற சிஷ்யர்களையும் அவர்களுடைய அபிமானத்தில் ஒதுங்கி யிருக்கும்படி கடாக்ஷித்து மிகவும் உகந்தார்-
மூன்று திருமேனிகளை அளித்தல்-
110-ஸாஸ்த்ரங்களில் சொன்ன ஆசாரத்தின் படியே நடப்பவர்களாய், நல்லொழுக்கமுடையவர்கள் என்று புகழ் பெற்றவர்களான ஸிஷ்ய ஸமூஹங்களோடு கூடிய யதிராஜர், சில சிஷ்யர்களால் பிரார்த்திக்கப் பட்டவராய், (உத்ஸவ மூர்த்திகளான) தனது அர்ச்சா விக்ரஹங்கள் மூன்றைத் தழுவி, அவற்றை முறையே ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீபெரும்பூதூரிலும், திருநாராயண புரத்திலும் ப்ரதிஷ்டை செய்ய வேணடியவை என்று சொல்லி அவர்களுக்கு அளித்து உலகனைத்தையும் ரக்ஷித்து வருமவராய், தமது கடாக்ஷத்தாலே அடியேனையும் ரக்ஷிக்கக் கடவாராக –
கலி கோலாஹலத்தைத் தவிர்த்தது –
111-இப்பார் முழுவதிலிருந்தும் என்னை விரட்டி, நான் தங்குவதற்கு இடமில்லாமல் நீர் செய்ததால், நான் எனக்குச் சமயம் வாய்க்கும் போது, உமது மதத்தையும் கலக்குவேன் என்று ஆணை யிடுகிறேன்” என்று கலி புருஷன் சொன்ன வார்த்தையைக் கேட்டு, ஆதி புருஷனான ஸ்ரீய:பதியை ஸரணடைந்து, ‘எனது மதம் தடை யற்றதாய் வாழக் கடவது’ என்று பிரார்த்தித்த யதிராஜர் என்னைத் தமது கடாக்ஷங்களால் ரக்ஷிக்கக் கடவர்-
யதிராஜருக்குப் பல்லாண்டு-
112-(தனது அந்திமதசையில் ) குல தெய்வமான தேவப் பெருமாளையும், ஸரஸ்வதி அளித்த ஹயக்ரீவனையும், ஜ்ஞாந புத்ரரான பிள்ளானுக்கு அளித்து, மூவுலகிலும் சிறப்புற்ற புகழையுடைய மஹா ப்ரபாவரான யதிராஜர், ஆளவந்தார். அவரது சிஷ்யர்களான பெரிய நம்பி, பெருமை பெற்ற திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், திருமாலை யாண்டான் ஆகிய ஆசார்யார்களோடு என்றும் வெற்றி பெறுவாராக–
நான் (வடுக நம்பி) பெற்ற பேறு-
113-தனது அந்தரங்க ஸிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த ஸ்ரீமானான யதிராஜர் மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கர்யத்தில் நியமித்தருளினார்; இது என்ன ஆச்சரியம்! அத்துடன் தன்னடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும், தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க!
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடுக நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply