ஸ்ரீமந் நிகமாந்த மகாதேசிகன் அருளிய தேசிகப் பிரபந்தம் உலகத்து உயிர்களனைத்தும் நற்கதி பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு நாள் தோறும் பாராயணம் பண்ணுவதற்கு ஏற்றவாறு அருளிச்செய்த 24 பிரபந்தங்களில் 19 பிரபந்தங்கள் தான்
இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. ஆழ்வார்கள் அருளிய 24 பிரபந்தங்களும் ‘அருளிச்செயல்’ என்ற பெயருடன் வழங்குவது போல ஸ்ரீதேசிகன் உலகம் உய்வதற்காக அருளிச் செய்த பிரபந்தங்கள் தேசிகப் பிரபந்தம் என்ற பெயரால் வழங்கப் படுகின்றன.-தத்துவங்களின் ஸ்வரூபம், ரகஸ்யங்களின் அர்த்தம், உபாயம் பலன். ஆசாரம், அனுஷ்டானம், ஆகார நியமம் முதலிய பல விஷயங்கள் இதில் மிக அரிய பாக்களில் வெளியிடப்படுவதால் ஸத் ஸம்ப்ரதாய கிரந்தங்களுள், ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் தலை சிறந்து விளங்குகிறது. வேதத்திற்கும் வேதாந்தத்துக்கும் போல் வரையறை யன்றி, எல்லாச் சாதியாரும், பெண் பாலரும் அனுசந்தித்து நல் வாழ்வு பெற வேண்டுமென்ற கருணை யுள்ளத்தோடு இந்தப்பிரபந்தங்களை ௮ருளிச் செய்தார். தத்துவ, ஹித புருஷார்த்தங்களை இனிய சொற்களிலே கலந்து பிரபத்தி என்னும் தேனைக் குழைத்து இப்பிரபந்தங்களாகிய அழுதத்தைத் திரட்டி உலகுக்கு வழங்கினார் நம் ஆசார்ய வள்ளல். வேறு தெய்வத்தை நாடாத ஏகாந்திகளும், வேறு பயனையும் நாடாத பரம ஏகாந்திகளும் இந்தப் பிரபந்தங்களைத் தினமும் அனுசந்தித்து இதன் கருத்துக்களில் ஈடுபட்டுப் போற்றுகின்றனர்.-ஸ்ரீ தேசிகன் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா வெனப்படும் விளக்கொளி யெம்பெருமான் ஸந்திதிக்கு அருகில் உள்ள தூப்புல் என்ற புண்ணிய பூமியில் கி.பி. 1268-ல் புரட்டாசி மாதத் திருவோண நன்னாளில் அவதரித்தார். தவப் புதல்வராகப் பிறந்தார். ஆழ்வார்களும், ஸ்ரீ பாஷ்யகாரர் (இராமானுசர்] வரையிலுள்ள மஹாச்சார்யார்களும் அருளிய திவ்ய ஸூக்த்திகளின் கருத்தையும், மதக் கொள்கைகளையும், ரஹஸ்யார்த்தங்களையும் மேலும் விரிவாய் அறிந்து சேதனர்கள் இன்புற்று வாழ்வதற்கு வேண்டி ஸ்ரீ பாஷ்யகாரரது அவதாரமே என்று புகழும்படி ஸ்ரீ தேசிகனை அவதாரப் படித்தி அருளினான் ஸர்வேஸ்வரனான எம்பெருமான் எனலாம்.
ஸ்ரீமந் அநந்தஸுரி என்னும் வைணவ சீலருக்கும் அவரது தர்ம பத்நியாகிய தோதாரம்மாவுக்கும் அருந்தவப் புதல்வராய்ப் பிறந்தவருக்கு, திருவேங்கட முடையானது திருநட்சத்திரத்திலேயே அவதரித்த காரணத்தால் ஸ்ரீ வேங்கடேசன் என்று திருநாமம் சூட்டினர் பெற்றோர். இராமானுஜரது சிஷ்யரான கிடாம்பியாச்சான் என்பவரின் சிஷ்யரான கிடாம்பி அப்புள்ளான் தன் சகோதரி மகனான தேசிகருக்கு மதம், தத்துவம், ஞானம் முதலியவைகளில் சிறந்த பயிற்சி கொடுத்தார். இவரும் ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம் கசடறக் கற்று உபய வேதாந்தங்களிலும் (தமிழ் – சமஸ்கிருதும்) ஒப்புயர்வற்ற ஞானத்தோடு விளங்கினார். அப்புள்ளாரும்-ஸ்ரீமத் நாத முனிகள் வாயிலாக வந்து ஆளவந்தாரால் வளர்க்கப் பட்டு ஸ்ரீ பாஷ்யகாரரால் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மேலும் ஒளி விடுமாறு பாதுகாத்துப் பாசுரம் செய்ய தமக்குப் பரம்பரையாய் வந்த கருட மந்திரத்தை உபதேசித்தார் தேசிகருக்கு.பெற்றோர்கள், நியமனப்படி திருமங்கையார் என்னும் அழகுத் திருவுருவை மணந்தார். பேரருளாளன் திருவருளால் அவருக்கு நாயனாராச்சான் பிள்ளை என்ற திருக்குமாரன் அவதரித்த போதிலும், இல்லற வாழ்க்கையில் மிக்க ஈடுபாடின்றி இல்லற தர்ம அனுஷ்டானங்களை மட்டும் வழுவாது நடத்தி வந்தார். தனது அருமைக் குமாரனுக்கு ‘வரதன்’ என்ற சிறப்பு நாமமிட்டு உரிய காலத்தில் அந்தந்த ஸம்ஸ்காரங்களையும் (சடங்குகளையும்) உபநயனத்தையும் செய்து வித்யாப்யாசத்தையும் செய்வித்தார். இவரும் தம் தகப்பனார் ஸந்நிதியிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கால க்ஷேபம் செய்து தீபத்தில் தோன்றிய பிரதிதீபம் போல் விளங்கினார்.-அப்புள்ளார் தம் அந்திம காலத்தில் ஸ்ரீ தேசிகனை அழைத்து நீ பாஷ்யகாரருடைய பாதுகைகளையும், தாம் உபயோகித்து வந்த திருவாழி திருச்சங்கையும் கொடுத்து, தேசிகன் திருமுடியில், தன் திருவடிகளை வைத்து அனுக்ரஹித்துத் தாம் திருநாட்டுக்கு எழுந்தருளினார். பிறகு சில நாள் சென்றவுடன் தேசிகன் திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளி, அங்குள்ள தெய்வ நாயகனையும், பிராட்டியையும் மங்களஸாஸனம் செய்து அங்குள்ள ஒளஷதாத்ரி என்ற மலையில் ஏறி ஸ்ரீ நரசிம்ஹன் ஸந்நிதிக்கு எதிரில் ஒரு அச்வ மரத்தடியில் கருட மந்திரத்தை ஜபித்தார். அதனால் மகிழ்ந்த கருட பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து யோக நிலையில் இருக்கும் ஒரு ஹயக்ரீவ விக்ரகத்தையும் கொடுத்து விட்டு மறைந்தார். தேசிகன் ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து, அவரையே தியானித்துக் கொண்டிருந்தமையால் மிகவும் மகிழ்ந்த ஹயக்ரீவன் நேரில் எழுந்தருளி, ஞானமும் பிரவசன சக்தியும் மென்மேலும் பெருகுமாறு தன்னுடைய திருவாய் அமுதத்தை இவருக்கு அளித்தார். அதன் பின்னர் தேசிகர் ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாசத்,தேவநாயக பஞ்சாசத், அச்யுத சதகம் முதலிய ஸ்தோத்திரங்களையும், மும்மணிக்கோவை, நவமணிமாலை முதலிய தமிழ் பிரபந்தங்களையும் அருளிச்செய்து அவ்வூரிலேயே சித்தாந்த உபந்யாசம் நடத்திக் கொண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தார். அதன் பின்னர் காஞ்சியில் பேரருளாளரைச் சேவிக்க விரும்பி வரும் வழியில் முதலாழ்வார்களுக்கு எம்பெருமான் சேவை சாதித்த திருக் கோவலூருக்குச் சென்று திருவிக்ரமப்பெருமாளைச் சேவித்து, பின் காஞ்சி சென்று, பெருமாளையும், தாயாரையும் பரிபூர்ணமாக அனுபவித்து நியாஸ சதகம், வரதராஜ பஞ்சாசத் முதலிய ஸ்தோத்ரங்களையும், அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம், முதலிய பிரபந்தங்களையும் அருளிச் செய்தார். அருகே யுள்ள திருவெஃகா, திருப்புட்குழி, முதலிய தேசத்துப் பெருமான்களையும், மங்களா சாஸனம் செய்து, யதோக்தகாரி ஸ்தோத்ரம் முதலிய பல ஸ்தோத்ரங்களையும் அருளிச் செய்து ஸம்பிரதாயப் பரிசுத்த முதலிய சில்லரை ரஹஸ்யங்களையும், வேதாந்த கிரந்தங்களையும் அருளிச் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பாஷ்யகாரருக்கு ஸரஸ்வதி தேவியால் அளிக்கப்பட்ட ஹயக்ரீவர் விக்ரகம், அப்புள்ளாரின் சந்ததி வழியாய் இவருக்குக் இடைத்தது. அதையும் சேர்த்து ஆராதித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபந்யாசம் செய்து கொண்டிருநதார். பின்பு திருக் கடிகை முதலிய திவ்ய தேசங்களைச் சேவித்துக் கொண்டு திருமலைக்கு எழுந்தருளி, அவ்வெம்பெருமானைப் பூரணமாய் அனுபவித்து அவனது தயையை வேண்டித் தயா சதகம் என்ற ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தார். பின்னர் அங்கிருந்து வடக்கிலுள்ள பிருந்தாவனம், திருவயோத்தி, சாளக்ராமம், பத்ரியாஸ்ரமம் முதலிய திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் செய்து திரும்பி, திருவல்லிக்கேணி, திருவெவ்வுள் முதலியவற்றையும் சேவித்து மகிழ்ந்தவராய், ஸ்ரீபெரும்புதூரில் எம்பெருமானாரைக் கண்டு களித்து மீண்டும் காஞ்சி வந்து சித்தாந்தப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
ஸ்ரீ பகவத் ராமானுஜ சித்தாந்தத்தை நாடெங்கும் பரவச் செய்து, சேதனர்களது வாழ்வை வளப்படுத்த, ஸ்ரீரங்கமே வசதியான இடம் என எண்ணியதால் அங்கேயே நெடுங்காலம் வசிக்க விரும்பினார். உபய வேதாந்த ஸம்ப்ரதாயம் தமக்குப் பிற்காலத்தில் நல்ல பிரசாரம் அடைவதற்குச் சிறந்த வழியாக பகவத் தியாந ஸோபாநம், தசாவதார ஸ்தோத்ரம், முதலிய ஸ்தோத்ரங்களையும், தத்துவ ரத்நாவளி, ஸர்வார்த்த ஸித்தி, நியாயப் பரிசுத்தி, நியாய சித்தரஞ்சனி, ஈஸ்வர மீமாம்சை சததூஷணை, தத்துவ மாத்ருகை போன்ற பல வேதாந்தக் கிரந்தங்களையும் அருளிச் செய்ததால் இவர் செய்யும் பேருபகாரத்தைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதன் இவருக்கு ‘வேதாந்தசார்யார்’ என்ற விருதை அளித்தார். ஸ்ரீரெங்கநாச்சியார் இவருக்கு ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ‘ என்ற விருதை அளித்தருளினார். அங்குள்ள மகா வித்வான்கள் ‘கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருதைச் சமர்ப்பித்து மகிழ்ந்தனர்.ஒரு கால் கிருஷ்ண மிச்ரன் என்ற ஒரு வித்வான் ஸ்வாமியிடம் வாதம் செய்தபோது, ஸ்வாமி தம்முடைய மேதா விலாசத்தால் அவனை ஜயிக்க, அவனும் ஸ்வாமியின் பெருமையை வியந்து பணிந்து சென்றான். அப்பொழுது அவதரித்தது ‘ஸங்கல்ப ஸூர்யோதயம் என்னும் அற்புத நாடகக் கிரந்தம் என்று தெரிகிறது.-இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த பின்னர் தென்னாட்டிலுள்ள திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, ஸ்ரீவரமங்கை (நாங்குனேரி) முதலிய திவ்ய தேசங்களைச் சேவித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில், கோதா பிராட்டியாரைத் தொழுது, கோதா ஸ்துதியை அருளிச் செய்து திருப் புல்லாணி முதலிய திவ்ய தேசங்களையும் வணங்கி, குருகூரில் ஆழ்வாரைத் திருவடி தொழுது, திருவனந்தபுரம் முதலிய மலை நாட்டுத் திருப்பதிகளையும், சோழ நாட்டுத் திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்து, திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளித் தம் கடமைகளை அனுஷ்டித்து வந்தார்.-அங்கும் அவரது வல்லமையைப் பரீட்சிக்கக் கருதிய ஒரு கொத்தன், கோணலான கற்களையே எடுத்துக் கொடுக்க ஸ்வாமி தம் வல்லமையால் அவற்றையே பயன்படுத்தி மிக அழகிய திருக்கிணற்றை அமைத்து அவனது செருக்கை அடக்கி அவன் தன்னைப் பணியுமாறு செய்தார். இன்றும் அக் கிணறும் ஸ்ரீதேசிகன் திருமேனித் திருவடிகளின் ஸ்பரிசம் பெற்ற திருமாளிகையும் எல்லாராலும் சேவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள் சைன மதத் தமிழ்ப் புலவர்கள் பலர் பல்வேறு மதத்தினர்களையும் துணை கொண்டு ஸ்வாமியிடம் வாது புரிய வந்தனர். ஸ்ரீதேசிகனும் அடியவர்க்கு மெய்யனான திரு முன்பே அவர்கள் அனைவரையும் வாதத்திலே தோற்கடித்து, அவர்களது வாதப் போக்கையும், அவர்களைக் கண்டித்த முறையையும் தொகுத்துப் ‘பரமத பங்கம்” என்னும் ரஹஸ்யமாக அமைத்தருளினார் என்பது பரம்பரைச் செய்தியாகும்.-சீடர்களின் வேண்டுகோளுக்கிணங்கி காஞ்சிக்குத் திரும்பியவர், காஞ்சியில் ஒரு பாம்பாட்டி ஸ்வாமி முன் வந்து தன் பெட்டியிலிருந்த பாம்புகளை வெளியே ஓட விட்டான். சில கோடுகளை ஸ்வாமி பூமியில் கீறவே பாம்புகளால் அவற்றைத் தாண்ட முடியவில்லை. ஒரு கொடிய பாம்பு மட்டும் அவற்றைத் தாண்டி ஸ்வாமியை அணுக, அவரும் கருட மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஆகாயத்திலிருந்து கருடன் பறந்து வந்து எல்லாப் பாம்புகளையும் தூக்கிச் சென்று விட்டான். பாம்புப் பிடாரன் தனக்குத் தோல்வி நேர்ந்தது மட்டுமன்றித் தன் ஜீவனோபாயமான சர்ப்பங்களையும் இழக்க நேரிட்டதற்கு வருந்தி ஸ்வாமியைப் பணிந்து பிரார்த்திக்க, ஸ்வாமியும் மனமிரங்கி கருட தண்டகத்தை இயற்றி அனுஸந்தித்தார். உடனே கருடன் அந்த ஸர்ப்பங்களை யெல்லாம் திரும்பக் கொண்டு வந்து போட்டார். பிடாரன் மகிழ்ந்து, ஸ்வாமியை ஸர்வ சித்தி வல்லவர் என்று கொண்டாடிப் பாம்புகளை எடுத்துச் சென்றான்.-காஞ்சியில் பேரருளாளரது உத்சவ காலத்தில் பெருமாளுக்கு முன்னால் திவ்யப் பிரபந்தத்தை அனுசந்தித்தல் சாஸ்த்ர விரோதமென்று பலர் ஆட்சேபித்த பொழுது, ஸ்வாமிகள் திவ்யப் பிரபந்தம் பரம வைதிகமே யென்று ஸ்தாபித்து, உத்சவத்தைத் தடையின்றி நடத்தச் செய்தார். இவ் வெற்றிக்கு அறிகுறியாகப் பேரருளாளன், தன் திருச்சின்னங்கள் இரண்டினில் ஒன்றைத் தேசிகனுக்கு மனமுவந்து அருளினான். இந்த வரலாற்றினைத் தழுவியே இன்றும் பேரருளாளனுக்கு ஒற்றைத் திருச்சின்னமே சேவிக்கப்படுகின்ற தென்று பணிப்பர் பெரியோர்.காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், திருக்கோவலூரில், இரவில் ஒரு கடலை வியாபாரி வீட்டில் தங்க நேர்ந்தது.ஸ்ரீ ஹயக்ரீவனுக்குச் சுத்த தீர்த்தத்தை நிவேதனம் செய்து தாம் உபவாசமிருந்தார். நள்ளிரவில் அந்த வைசியர் ஓடிவந்து சுவாமியிடம், ஒரு வெள்ளைக் குதிரை தம் வீட்டிற்குள் புகுந்து கிடங்கிலுள்ள கடலையை மேய்வதாகவும், தம்மால் அடக்க முடியவில்லையென்றும் முறையிட்டார். ஸ்ரீ ஹயக்கிரீவனே அவ்வாறு செய்வதாக அநுமானித்த தேசிகர், வைசியரிடம் கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்லி முழுவதும் குதிரை வடிவு கொண்டிருந்த ஹயக்கிரீவனுக்கு நிவேதனம் செய்ய குதிரையும் மறைந்தது.வைசியரும் மிகச் சிறந்த பக்தரானார். இந் நிகழ்ச்சியால் அவருக்குப் பெருஞ்செல்வம் குவிந்தது.“உன்னை, விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான வித்வானாக ஆக்குகிறேன்’ என்று கூறிய தன் நண்பர் வித்யாரண்யரிடம், எனக்குப் பணமும் பதவியும் தேவையில்லை.-எனக்குக் காஞ்சி வரதராஜரருளும் அருட்செல்வமே, அமைதியையும் ஆனந்தத்தையும், அளிக்கவல்லது என்று கூறி விரும்பித் தாமே வறுமையை ஏற்றுக் கொண்டவர் இவர். அப்பொழுது இவர் அருளிய வைராக்ய பஞ்சகம் என்ற ஐந்து ஸ்லோகங்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகும். அந்த வைராக்ப பஞ்சகப் பொருள் சுருக்கம் வருமாறு:நல்ல ஞானத்தைப் பெற்றவர்களும் தம் வயிற்றை வளர்க்க, அரசர்களிடம் சென்று அவர்களைப் போற்றிப் புகழ்ந்து தம் ஸ்வரூபத்தைக் கெடுத்துக் கொள்கிறார்களே. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள, வயலில் சிந்தியுள்ள தானியமே போதுமே. நீரைக் கொண்டு கூட உயிர் தரித்து விடலாமே. உடலை மறைக்க ஒரு கந்தல் துணி போதுமே. இப்படியிருக்க இவற்றிற்காக, நல்ல அறிஞர்களும் கூடக் கெட்டுப் போகிறார்களே. மல்லிகை மலர் எம்பெருமானுக்கே உரியதாவது போல, நம் வாக்கும் எம்பெருமானைத் துதிப்பதற்கே யமைந்தது. யாம் மானிடம் பாட வந்த கவியோமல்லோம் என்கிறார். இறையருள் செல்வம் என் வசம் இருக்கும் பொழுது நான் ஏன் வேறொரு செல்வத்தை நாட வேண்டும். ‘சரீரபத நாவதி’ என்று தொடங்கும் நாலாவது ஸ்லோ கத்தில் ‘தநம்’ என்ற எழுத்துக்களை பதினோரு தடவை உபயோகித்திருக்கிறார். நானோ என் தந்தையோ பொருள் சம்பாதிக்கா விட்டால்கூட என் பாட்டன் பிரம தேவன் சம்பாதித்த செல்வமான பேரருளாளன் அத்திகிரி உச்சியில் உள்ளது. வேறு இழியும் செல்வத்தை நான் நாட வேண்டாம் என்கிறார். பிதாமஹன் என்ற சொல் பாட்டனர், பிரமன் என்ற இரு பொருளில் இச்சுலோகத்தில் அமைந்துள்ளது. தேசிகப் பிரபந்தம் மிக அரிய பாக்களால் வெளியிடப்படுவதால், ஸத் ஸம்பிரதாயக் கிரந்தங்களுள் தலை சிறந்ததாக விளங்குகிறது. இவர் தமிழில் மட்டுமின்றி சமஸ்கிருதம், பிராகிருதம் மணிப் பிரவாளம் ஆகிய மொழிகளிலும், நன்றாக எழுதும் திறமைசாலி. அவர் எழுதிய சஙகல்ப ஸூர்யோதயா என்ற வடமொழி நாடகம் ஜீவாத்மா, பரமாத்மாவைப் போய் அடைவதற்கு மேற் கொள்ள வேண்டிய முயற்சிகளைக் கூறுகிறது. எத்தனை விதமான,ஆசை, கோபம், அகங்காரம் போன்ற தடைகளைத் தாண்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். ‘யாதவாப்யுதயம்” என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார மகிமையை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள ரகரியத் திரயசாரம் , சத தூஷணி போன்ற நூல்கள் வைணவ பக்தி இலக்கியத்தின் மாட்சியினைப் பல வகையிலும் காட்டுகின்றன. அவரது இலக்கிய கருவூலத்தின் மணிமுடிகளாக விளங்குவது பாதுகா ஸகஸ்ரம், தயா சதகம் என்ற இரண்டுமே யாகும். பாதுகா ஸகஸ்ரம் என்ற கவிதை பகவான் ஸ்ரீரெங்கநாதனது பாதுகை மகிமையையும், அவரது பாதுகையான நம்மாழ்வாரது அளவு கடந்த பக்திப் பிரவாகத்தையும் கூறுவதால், காலக் கிரமத்தில் உப கண்டத்தில் அழிக்க அழியாத பக்திச்சுரங்கமாக மாறும் தகுதி பெற்றவை. திவ்ய தம்பதிகளை ஸ்ரீதேசிகன் அனுபவித்த முறைகளை நாமும் அறிந்து இன்புறலாம்.ஸ்ரீ தேசிகன் அருளிய 19 தமிழ்ப் பிரபந்தங்கள் முறையே அமிருதரஞ்சனி, அதிகார சங்கிரகம் அமிருதா சுவாதினி, பரமபத சோபானம், பரமத பங்கம், மெய்விரத மான்யம் (அத்திகிரி மான்ய முதல் ஆறு பிரபந்தங்களில் பேரருளாளன் புகழ் பாடுகிறார்.-அவரது அருளிச் செயல்கள் அருத்த பஞ்சகம், அடை.க்கலப்பத்து,ஸ்ரீவைணவ தினசரி, திருச் சின்னமாலை, பன்னிருநாமம், திருமந்திரச் சுருக்கு, த்வயச் சுரக்கு சரம சுலோகம், கீதார்த்த சங்கிரகம், மும்மணிக்கோவை, நவமணிமாலை, பிரபந்த சாரம், ஆகார நியமம் முதலியனவாகும். ஸ்ரீதேசிகன் திருக் குமாரரான நமினாராச்சாியார், ஸ்ரீ தேசிகன் பிள்ளையந்தாதி என்னும் பிரபந்தத்தைப் பாடியருளினார். . ஸ்ரீதேசிகப் பிரபந்தத்தைத் தொகுத்துக் கொடுத்த ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமிகள் ஒவ்வொரு பிரபந்தத்தலும் அமைந்துள்ள விஷயங்களைச் சுருக்கி பிரபந்தார்த்த ஸங்கிரகம் என்ற பகுதியில் கூறி யுள்ளார்கள். -தம வாயிருந்து தாமேயான ஸர்வார்த்தங்களையும் கூறும் ஸ்ரீதேசிகனது ‘ஆபால கோபாலம்’ அனைவரும் படித்தறிந்து அனுபவிக்கக் கூடியது. அவரது காவ்ய கிரந்தங்கள்; தர்க்க வேதாந்த சாஸ்திரநூல்கள், வாத கிரந்தங்கள் என்று வடமொழியில் அருளிச் செய்யப்பட்டுள்ள அனைத்திலுமுள்ள பயன்படக் கூடிய ஸாரார்த்தங்கள் அனைத்தும் இத் தமிழ்ப் பிரபந்தங்களில் அடங்கியிருப்பதால் இதை ஒரு ஸர்வார்த்த சித்தி என்றே கருதலாம். ஆகவே தான் இவரைத் தமிழ்க் கடவுள் என்று பிற மதத்திலுள்ளவர்கள் கூடப் புகழ்கின்றனர்.தமது உபய வேதாந்தாச்சார்யத்தை ஸ்தாபித்துக் கொண்டதும் அதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் உபய வேதாந்தாச்சார்யர்களாக இன்றளவும் விளங்குவதும் இப்பிரபந்தத்தின் பெருமையினாலேயே. வடமொழியில் உள்ள கவிதை நயங்களை யெல்லாம் தமிழ்க் கவிதையிலும் உட்புகுத்தி எண்ணிறந்த காவிய சித்திரங்களை உண்டாக்கி அளித்துள்ளார். ஆகவே இப்பிரபந்த நூல் ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டுமின்றி தமிழறிஞர்கள் அனைவருமே படித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்றாகும். அமிருத ரஞ்சனி-இதில் ஸ்ரீ தேசிகன் ஆச்சாரியாரது அருள்பெற்றுத் தாம் உய்ந்து போனதைக்கூறி சேதனம், அசேதனம் ஈஸ்வரன் என்னும் மூன்று தத்துவங்களின் ஸ்வரூபத்தைப் பிரித்துக் காட்டி, திருமந்திரம், த்வ யம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களின் அர்த்தத்தையும் சுருக்கி வெளியிடுகிறார்.“காரணமாய் உயிராகி அனைத்துங் காக்கும் கருணை முகில் கமலையுடன் இலங்குமாறும்
நாரணனாய் வடிவான வுயிர்களெல்லாம்
நாமென்று நல்லடிமைக் கேற்குமாறும் தாரணி நீர் முதலான மாயை காலம்
தனிவான் என்றிவை உருவாந் தன்மை தானும்
கூரணி சேர் மதி யுடைய குருக்கள் காட்டக்
குறிப்புடன் நாம் கண்டு வகை கூறினோமே.–என்று வைணவத்தில் ஆச்சார்ய ஸ்தானம் எவ்வளவு சிறப்பானது என்பதைக் குறிப்பிடுகிறார். இதனை அடுத்து வரும் அதிகார ஸங்க்ரஹம் என்ற பகுதியில் பத்து ஆழ்வார்கள் மதுரகவிகள். எட்டு ஆச்சார்யர்கள் இவர்களைப் புகழ்ந்து பேசித் தனியே எம்பெருமானார், ஆளவந்தார், நாதமுனிகள் என்னும் ஆச்சார்யர்கள் நம் ஸித்தாந்தத்துக்கு செய்த உபகாரத்தைக் கூறிக் கோயில், திருமலை, பெருமாள் கோயில் ஆகிய திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வொரு பாசுரமிட்டு ஸ்ரீ ரெங்கநாதனின் திருவடிகளின் பெருமையை ஒரு பெரிய பாசுரத்தால் விளக்கி ஆச்சார்யர்களின் உபகாரத்தை அனுசந்தித்து முடிக்கிறார்.
பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார், தண்
பொருநல் வருங்குருகேசன், விட்டுச் சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டரடிப் பொடி, மழிசை வந்த சோதி
வையமெலாம் மறை விளங்க வாள்வேலேந்தும்
மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்றும்
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யானடை வேன் அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளாற் பெரும்புதூர் தந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி, சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே–என்றும் ஆழ்வார்களையும், ஆச்சாரியர்களையும் புகழ்ந்து பாடியவர், திருவரங்கப் பெரிய கோயிலையும் விண்ணுயிர் வெற்புடை வேங்கடத்தையும் புகழ்ந்து
ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனெல்லாஞ் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில்தாமே
என்றும்
கண்ணனடி யிணை யெமக்குக் காட்டும் வெற்பு
கடுவினைய ரிரு வினையுங் கடியும் வெற்பு
திண்ண மதுவீடென்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்பு
பொன்னுலகிற் போக மெல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே”-என்றும்
உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற்றணு வினுய்த்த கணையால்
அத்திவரக்கன் முடி பத்து மொரு கொத்தென உதிர்த்த, திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெண்ணெய் வைத்ததுணுமத்த
விடமாம்
அத்திகிரி, பத்தர் வினை, தொத்தறவனுக்கும் மணி யத்திகிரியே–என்றும் பாடியுள்ளார். இத்தனை அற்புதமான பாசுரங்கள் அருளிய தேசிகன் இறுதியில் தன்னடக்கமாக வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத் தெழுதியது. ஓலை யிட்டனம் நாமிதற்கே
கொள்ளத் துணியினும் கோதென்றி கழினுங், கூர் மதியீர்,
எள்ளத்தனையுகவர்து இகழாதெம் மெழில் மதியே’–என்று பாடியிருப்பது அவரது சீலத்தையும் பக்தியையும் காட்டுகிறது.இனி அமிருத சுவாதினியில் திருமந்திரம் முதலிய மூன்று ரஹஸ்யங்களின் தாத்பர்யம். இராமாயணத்தின் சாரமான காக சரணாகதி, விபீஷண சரணாகதி முதலியனவும் வராகப் பெருமானுக்கும், பூமிப் பிராட்டிக்கும் நடந்த உரையாடலின் விளைவாக எழுந்த வராக சரம ஸ்லோகத்தின் பொருள், அஞ்சலியின் பெருமை, ஏனைய ரஹஸ்யங்களின் சுருக்கமும் கூறப்பட்டு இறுதியில் பாஷ்யகாரரின் கீர்த்தியைக் கூறி அமலனடிப்பிரானின் ஸாரார்த்தத்துடன் முடிவடைகிறது.
நின்னருளாங் கதியின்றி மற்றொன்றில்லேன்
நெடுங் காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்
உன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன் –
மன்னிருளாய் நின்றநிலை யெனக்குத் தீர்த்து வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேனுன்னை
இன்னருளாலினி யெமக்கோர் பரமேற்றாமல்
என் திருமாலடைக்கலங் கொள் என்னை நீயே!–என்றும்
பாண் பெருமாள் பெருமையினைக்
காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரைநீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியென் றியம்ப நின்றோம்
நாண் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும்
நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே–என்றும் அருளியுள்ளார்.
இதனை அடுத்து வரும் பரமபத சோபானம் (படி) என்ற பகுதியில் பரமபதமெனும் மிக்க உயரத்திலுள்ள ஓர் இடத்தை அடைவதற்கு ஒன்பது படிகளை அமைத்துள்ளார். அவைமுறையே.
1) தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்,
2) ஸம்ஸாரத்தில் வெறுப்பு,
3) உலக சுகங்களில் ஆசை அறுதல்,
4) தன் பாபங்களின் விளைவால் இனி வர இருக்கும் நரகானுபவத்தை எண்ணி அஞ்சுதல்,
5) எம்பெருமான் மோக்ஷத்தை அருள்வதற்குக் காரணமான உபாயங்களை அனுஷ்டித்தல்
6) இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறுதல்,
7) அர்ச்சராதி மார்க்கத்தால் (புண்ணியம்
செய்தவர்கள் செல்லும் பாதை)செல்லுதல், 8) ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய லோகம் சேர்தல்,
9) அங்குள்ள ஸர்வேஸ்வரனைக் கண்ணாரக் கண்டு களித்து அந்த நித்யானத்தத்திலேயே எப்பொழுதும் மூழ்கிக் கடத்தல்
என்ற விஷயங்களையும் சுருக்கமாக வெளியிட்டுள்ளார். இதன் விரிவுரையை இவர் எழுதிய ரஹஸ்ய கிரந்தத்தில் காணலாம்.
மாளாதவினை யனைத்தும் மாள நாம் போய்
வானேறி மலர்மகளாரன்பு பூணும்
தோளாத மாமணிக்குத் தொண்டு பூண்டு
தொழுதுகந்து தோத்திரங்கள் பாடியாடிக்
கேளாத பழமறையின் கீதங்கேட்டுக்
கிடையாத பேரின்பம் பெருக நாளும்
மீளாத பேரடிமைக் கன்பு பெற்றோம்
மேதினியில் இருக்கின்றோம் விதியினாலே–என்று பாடி அருளியுள்ளார். இனி பரமதபங்கம் என்ற பகுதியில் திருவெயிந்தையில் அந்நிய மதத்தினருடன் வாதம் புரிந்து வெற்றி பெற்று, அம் மதங்களில் உள்ள தோஷங்களையும் வைணவத்தின் மேன்மையையும் பற்றி எழுதப்பட்ட ரகஸ்யத்தின் ஒவ்வொரு அதிகாரத்தையும் சுருக்கிப் பாசுரங்களாகத் தொகுக்கப்பட்ட பரமபத பங்கம் என்ற பிரபந்தமாகத் தோன்றியது. இதில் அன்னிய மதங்களில் பொதுவாய் உள்ள தோஷங்களை வெளியிட்டு சார்வாகமதம், பெளத்தம், அத்வைதம், ஜைனம், பாஸ்கர யாதவ மதம் போன்ற எல்லா மதங்களின் முக்கியக் கொள்கைகளைச் சுருக்கிக் கூறிக் கண்டித்து பாஞ்சராத்திர சாஸ்திரத்தின் பெருமையைப் பேசி,சரணாககி ஸ்வரூபத்தின் பெருமையையும் பலனையும் எடுத்துக் காட்டி முடிவில் தமக்கு அருள் புரிந்த திருவாழி ஆழ்வானுடைய திருக்கரங்களின் பெருமையையும் பேசித் தலைக் கட்டுகிறார்.
கோதவமொன்றில்லாத தகவே கொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று ஓர்
தூதுவனாய் யொருகோடிமறைகளெல்லாம்
தொடர்ந்தோடத்தனி யோடித் துயரந்தீர்த்த
மாதவனார் வடகொங்கில் வானியாற்றின்
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்
போது, இவை நாம் பொன்னயிந்தை நகரில் முன்னாள்
புணராத பரமதப் போர்பூரித்தோமே –என்கிறார்.
இனி ஸ்ரீதேசிகன் பேரருளாளன் மீது அத்திகிரி மான்யம், மெய்விரத மான்மியம், அருத்த பஞ்சகம், அடைக்கலப்பத்து போன்ற ஆறு பிரபந்தங்களைப் பாடுகிறார். மெய்விரதமான்மியம் என்ற பகுதியில் ஸ்ரீ பாஷ்யத்தின் பதினாறு பாதங்களின் ஸாரார்த்தங்களையும் ஒரே பாசுரத்தில் அமைத்து அருளிச் செய்துள்ளார்.பேரருளாளனின் திருமேனி அழகையும், இரு பிராட்டிமாருடன் அவன் காட்சி யளிப்பதையும், தக்க எடுத்துக்காட்டுகளுடன் வர்ணித்திருப்பது படித்துச் சுவைத்து அனுபவித்தால் தான் தெரியும்.அருத்த பஞ்சகத்தில் முக்தியைப் பெற விரும்புபவன் முக்கியமாய் உணர வேண்டியதான ஐந்து பொருள்களைக் கூறுகிறார். -அவை யாவன
1] தம்மால் அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம், எம்பெருமானை அடையவிடாமல், இதுவரை உள்ள இடையூறுகள், மோக்ஷத்திற்காகச் செய்யும் உபாயங்கள் முக்கிய பலமாகிய பகவத் அனுபவம் என்பனவாம். அடைக்கலப்பத்து என்ற பகுதியில் பேரருளாளன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்தமையைப் பத்துப் பாசுரங்சளில் விளக்குகிறார். ஸ்வநிஷ்டை, உத்தி நிஷ்டை, ஆசார்ய நிஷ்டை., பாகவத நிஷ்டை என்று சரணாகதி பாகுபாடு பெற்றதைக் கூறி முடிவில் சரணமடைந்து தலைக் கட்டுகிறார்.அடுத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் தினந்தோறும் செய்ய வேண்டிய காரியங்களான ஐந்தும் கூறப்பட்டுள்ளன அவை யாவன.-அபிகமனம்; அதாவது அன்று முழுதும் நடக்க வேண்டிய காரியங்கள் தடையின்றி நடந்தேறப் பிரார்த்தித்துப் பிரபத்தி பண்ணுவது.அடுத்து உபாதானம்; அதில் பகவானது ஆராதனத்துக்கு வேண்டிய பொருள்கள் முக்கியமாக மனது சுத்தமடைய ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் அருளிய ஸ்ரீ ஸக்தி காலக்ஷேபத்தில் ஈடுபடுதல்,பின்னர் வருவது இஜ்யை, இதில் பாஞ்சராத்ர சாஸ்திரத்திலும் ஆஹ்நிகங்களிலும் சொல்லிய முறைப்படி பகவானுக்குத் திருவாராதனம் செய்தல், அடுத்து ஸ்வாத்யாயம் என்பது. இதில் வேதாந்த பாடங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுதல், இறுதியாக யோகம் என்பதில் பகவான் திருவடிகளில் இரவும் பகலும் தான் தலையை வைத்திருப்பதாய்த் தியானம் செய்து சயனித்தல் என்று ஐந்து கார்யங்களையும் பேரருளாளன் விஷயமாக்கி வெளியிடுகிறார்.அடுத்துவரும் திருச்சின்னமாலையில் பேரருளாளன் சந்நிதியில் எழும் திருச்சின்னத்தின் ஓசையில் மயங்கிய தேசிகன் முதல் ஆறு பாசுரங்களில் திருமந்திரத்தின் ஸாரார்த்தத்தையும் 7, 8 பாசுரங்களில் த்வயத்தின் விசேஷார்த்தத்தையும் 9-வது பாசுரத்தில் சாம ஸ்லோகத்தின் முக்கயார்த்தத்தையும் வெளியிட்டு இறுதியில் பேரருளாளன் பெருமை பேசி ஆச்சார்யோபதேசத்தின் ஸாரமடங்கிய இப்பிரபந்தத்தின் இனிமையை சிற்றின்பத்தில் பற்றில்லாமல் வேறு இச்சையின்றி ஈடுபடுவோரே அனுபவிக்க முடியும் என்று கூறி முடிக்கிறார்.இதை அடுத்துவரும் பன்னிரு நாமம், பேரருளாளன் விஷயமே. கேசவன் முதல் தாமோதரன் வரையில் உள்ள பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, அந்த அந்தத் திருமண் காப்புகளில் அவ்வவ் வெம்பெருமான்களின் திருமேனி நிறம், அவர்கள் அணிந்திருக்கும் ஆயதங்கள், அவர்கள் தலைவராய் வீற்றிருக்கும் திசை,நம் சரீரத்தில் அவர்கள் வசிக்கும் பாகம் முதலியவற்றைக் கூறுவதால் புண்ட்ரம் (நாமம்) தரிக்கும் பொழுது இப்பிரபந்தம் அவசியம் பாராயணம் செய்ய வேண்டும்.
“கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்குறு துணை பன்னிருநாமம் பயில்பவர்க்கு
முத்திக்க மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்
தித்திக்கு மெங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவற்கே-என்ற பாசுரத்துடன் முடிக்கிறார்.
இனி வரும் மூன்று பிரபந்தங்களால் முறையே திருமந்திரம் த்வயம். சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் அர்த்தத்தை நம் தேசிசுன் விளக்கி யருள்கிறார். திருமந்திரத்தைப் பதம் பதமாக,அதாவது, 1) அகாரம் 2) அதன் மேல் உள்ள நான்காம் வேற்றுமை
உருபு, 3) உகாரம், 4) மகாரம் நமபதம், நார பதம், அயன பதம், அதன் மேலுள்ள நான்காம் வேற்றுமை உருபு ஆகியவற்றின் பொருளை முறையே கூறி, இவ் வர்த்தங்களெல்லாம் நிதியைப் போல் ஆச்சார்யர்களால் சேமித்து வைக்கப் பட்டவை என்கிறார்.
அடுத்து த்வயச் சுருக்கு. த்வயம் இரண்டு பாகமாக உள்ளது.-முதற்பாகம் ௨பாயத்தையும், இரண்டாம் பாகம் பலனையும் வெளியிடுகிறது. அம்மந்திரத்தின் அர்த்தத்தைச் சுருக்கி வெளியிடுவதால் த்வயச் சுருக்கு எனப் பெயர் பூண்டது. மந்திரத்தைப் பத்துப்
பதமாகப் பிரித்துக் கூறிப்பின் அப்பத்து அர்த்தங்களையும் ஒரு பாசுரத்தில் சேர்த்துக் கூறி முடித்திருக்கிறார்.
தன தன்றிவையெனத் தானென்றென மறைசொன்ன வெலாம்,
எனதென்றும் யானென்று மெண்ணுதலால் வருமீனமெலாம்,
மனதொன்றியின்று நமவென்றதே கொண்டு மாற்றுதலால்
தனதன்றி யொன்றுமிலாத் தனித்தாதை சதிர்த்தனனே--என்பது சுருங்கியபொருள். இதை அடுத்து சரம சுலோகச் சுருக்கு.
முதற்பாசுரத்தில் சரம ஸ்லோகத்தின் முழுத் தாத்பர்யத் (சரணாகதிதத்துவம்) தையும் அருளிச் செய்து பின் பத்துப் பாசுரங்களில் பாகங்களுக்கு வியாக்கியானமும் செய்தருளுகிறார்.
கல்லாரகலும் கருமமுஞானமுங் காதலும் மற்
றெல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்
வல்லார் முயல்க, வலியிழந்தாரென்றனைத் தொழுகென்று
எல்லாத் தருமமுரைத்தவன் இன்னடி சேர்ந்தனமே-என்பது திரண்ட பொருள்.
கீதார்த்த சங்கிரகம் என்ற பகுதியில் பதினெட்டு அத்யாயங்கொண்ட கீதையின் ஒவ்வோர் அத்யாயத்தின் சாரத்தையும் ஒவ்வோர் ஸ்லோகத்தில் ஆளவந்தார் எழுதி யுள்ளவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துத் தனித் தனியாக 21 பாசுரங்களில் எழுதி யுள்ளார்.இவ்வாறு கீதை மொழிந்தருளிய வேதாந்த தேசிகனார் இதை அடுத்து மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தில் முதலில் பிராட்டியின் பெருமையையும், ஸ்ரீசப்தத்தின் ஆறு பொருள்களையும் பேசித் தெய்வநாயகனுடைய திருக் கல்யாண குணங்களைப் புகழ்ந்து எல்லாப் பொருளாயும் எல்லாப் பந்துவாயும், இருப்பவன் அவனே என்று காரணத்துடன் கூறி அவனது பக்தர்கள் அவனுக்குச் சமமானவர் என்று வெளியிடுகிறார் தேசிகன். மொத்தம் முப்பது பாசுரங்கள் இருக்க வேண்டிய இப்பிரபந்தத்தில் பத்துப் பாகரங்களே காணப்படுகின்றன. அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்று மூன்று வகைப் பாக்களால் இப்பிரபந்தம் அமைக்கப்பட்டு மூவகை மணிகளால் அமைந்த ஹாரம் போலிருத்தலின் இதற்கு மும்மணிக் கோவை என்ற பெயர் வந்தது என்று தெரிகிறது.அடுத்து வரும் நவமணிமாலை (நவரத்னமாலையென்றும் வழங்கப்படுவதுண்டு ) வெண்பா முதலிய பாக்கள் ஒன்பது அமையப் பெற்ற இப்பகுதியில் முதலில் திருவயிந்திரபுரத்து எம்பெருமானின் பெருமை பேசிப்பின் அவன் எடுத்த பத்து அவதார வரலாற்றையும், பிரம்மா, கருடன், அனந்தாழ்வான், பூமி தேவி முதலியோர் தீர்த்த உருக்கொண்டு அவன் அருள்பெற்று அங்கிருக்கும் வரலாற்றையும் கூறி, மாசி மாதத்தில் கடற்கரையில் நடக்கும் உத்சவத்தையும் புகழ்ந்து, தம்முடைய அந்திம காலத்தில் தமக்கு அபயமளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவன் தன்னைப் பாடப் பணித்ததையும் கூறி முடிக்கிறார்.
மஞ்சுலாவு சோலை சூழயிந்தை மன்னு மன்னுசீர்
வரையெடுத்து நிரையளித்த மாசில் வாசுதேவனே
செஞ்சொலன்பர் சிந்தை கொண்டு திதிலாத தூதனாய்த்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ! தெய்வ நாயக!
வெஞ்சொலாளர் காலதூதர் வீசுபாசம் வந்தென்மேல் விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்கு முன்னர் நீ
அஞ்சலஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டும், அச்சுதா
அடியவர்க்குமருளியக்குமடியவர்க்கு மெய்யனே-என்று பாடிய பின் இறுதிப் பாசுரத்தில்
அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத, னடியினை மேல் அடியுரையாலைம்பதேத்திச்
சிந்தை கவர் பிராகிருதம் நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை யூசலேசல்
பரவு நவமணிமாலை இவையுஞ் சொன்னேன்.
முந்தை மறை மொழிய வழி மொழிநீயென்று
முகுந்தனருள் பெற்ற பயன் பெற்றேன் நானே-என்று தான் முகுந்தனருளால் பாடிய பாசுரங்களைத் தொகுத்துக் கூறுகிறார். பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல், பரவு நவமணி மாலை இவையுஞ் சொன்னேன் என்று அருளியிருப்பதால் அவர் அருளிய மும்மணிக்கோவையில் இருபது பாசுரங்களும் பந்து, கழல் முதலிய ஐந்து பிரபந்தங்களும் மறைந்து விட்டன எனத் தெரிகிறோம்.
பிரபந்தசாரம் என்ற இறுதிப்பகுதியில், ஆழ்வார்கள் அவதரித்த ஸ்தலம், மாதம், நட்சத்திரம், அவர்கள் பெருமை, அருளிச் செய்த பிரபந்தங்களின் பெயர், அவற்றின் பாசுர எண் அவற்றின்சாரம் இவற்றை வெளியிட்டு இறுதியில் இரு பாசுரங்களில்
ஆழ்வார்கள் திருநாமத்தையும் அவர்கள் அருளிய பாசுர எண்களையும் கூறி ஒரு பாசுரத்தில் ஒரே கோஷ்டியாக அவர்சுளை அனுபவித்து ‘தமிண் மறையோன்’ என்று தன்னை பெருமையாகப் பேசி
இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவருக்கு எம்பெருமான் கருணை யால் சகல நன்மைகளும் உண்டாகுமென்று கூறி முடிக்கிறார்.
ஆழ்வார்களது பிரபந்தத்தின் சாரமாக அமைந்திருப்பதால் இது
இப் பெயர் பெற்றுள்ளது.
எண்ணின் முதலாழ்வார்கள் மூன்று நூறும் 300
எழில் மழிசைப்பிரான் இரு நூற்றொரு பத்தாறும் 216
உண்மை மிகு மாறன் மறையாயிரத்தோடு 1296
உற்ற இரு நூற்றுத்தொண்ணூறுமாறும் 11 வண்மையுடை மதுர கவிபத்துமொன்றும்
வஞ்சியர் கோன் நூற்றைந்தும், பட்டநாதன் 105
பண்ணியல் நானூற்றேழுபத்துமூன்றும் 473
பார்க்கோதை நூற்றெழுபத்துமூன்றே 173
பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும் 55
பாணர்புகல் பத்துடனே பரகாலன் சொல் 10
அத்தனுயர் வேங்கடமாற்காயிரத்தொடு 1253
ஆன இரு நூற்றோரைம்பத்து மூன்றும் 108
முத்தி தரும் எதிராசர் பொன்னடிக்கே மொழிந்த வமுதர் பாடல் நூறுமெட்டும் எத்திசையும் வாழ
இவர் பாடி வைத்த இவை நாலாயிரமும் அடி யோங்கள் வாழ்வே 4000
என்றும் தொகுத்துத் கொடுக்கிறார். ஆகவே நாலாயிரப் பிரபந்தத்தில் இராமானுச நூற்றந்தாதியையும் அடக்கியே பெரியோர் கணித்துள்ளனர் எனத் தெரிகிறோம்.
ஆகார நியமம்: தேசிகரின் கடைசித்தமிழ் பிரபந்தம் ஆகார நியதி பற்றிக் கூறுகிறது. ‘ஆகாரத்தில் இருவகையாம் நன்றுந்தீதும்,
அருமறை கொண்டெதிராசரிவை மொழிந்தார் என ஆரம்பித்து,
ஆகாரத்தில் சுத்த மில்லா விட்டால் மனம் தெளிவடைவதில்லை.
மனந் தெளியாதபோது எந்தவொரு நல்ல காரியத்தையும் சிந்திக்கவோ செயல் படுத்தவோ முடியாது. ஆகவே முனிவர்கள் சாஸ்திரங்களில் கூறிய முறையைத் தழுவி, உண்ணத் தகாத பதார்த்தங்களை எடுத்துக் காட்டி அவற்றை விலக்குமாறும் உண்ணத் தக்கபதார்த்தங்களையும் கூறி விளக்குகிறார்.
மாலமுது செய்யாமல் வந்தவெல்லாம்
வருவிருந்தில் வழங்காமல் வைத்தவெல்லாம்
காலமிது வன்றென்று கழிந்தவெல்லாம்
கடையில் வருங்கறி முதலாக்கழுவாவெல்லாம்
நூலிசையா வழிகளினால் வந்தவெல்லாம்
சீலம்பிலாச் சிறியோ ராக்கினவு, நல்லோர்
செல மலங்கள் பட்டனவுந்தின்னார்தாமே
என்று கூறியவர், உண்ண வேண்டியவை களையெல்லாம் கூறும் பொழுது,
தாதை நல்லாசிரியன் முதற்றமையனெச்சில்
தரணிசுரர் சோமத்திலருந்து மெச்சில்
மாதர் கட்குக் கணவனிதமான வெச்சில்
மயிர் புழு நூல் விழுந்தாலும் புனிதம்
என்றார். இவரைப் பற்றிப் புகழ்ந்து இவர் புதல்வர் நாயினாராச்சாரியார் அந்தாதித் தொகையில் பிள்ளையந்தாதி பாடியுள்ளார். அதில் தேசிகன் பெருமைகளை யெல்லாம் நன்கு விளக்கியுள்ளார். அவர் ஆராய்ந்து கண்ட சித்தாந்தம், திருவேங்கடமுடையானே தேசிகனாக அவதரித்துள்ளான். தேசிகன் குணங்களைப் பாடி அவரை மனத்து இருத்தினால் பாபங்கள் பறந்து போகும். அவரது ௮ருளன்றி உபாயமில்லை என்பதாம். சுவாமி திருமேனி பல்லாண்டு
வாழும்படி வாழ்த்தி இந்தப் பாசுரத்தைச் சேவிப்பவர் முடிவில் தேசிகன் திருவடிகளில் விளங்கப் பெறுவர் என்று பலன் கூறி முடிக்கிறார்.
தொண்டருகக்குத் துணையடி வாழி, நின் தூமுறுவல்
கொண்ட முகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
வண்டிரு நாமமும் வாழி மணிவட முப்புரிநூல்
கொண்ட சீர் தூப்புற்குலமணியே வாழிநின்வடிவே.–என்று வாழ்த்துகிறார். நாலயிரப் பிரபந்தத்தைப் போல் தேசிகப்
பிரபந்தத்திலும் சாத்துமுறைப் பாடல்கள் உள்ளன.
நானிலமுந்தான் வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்
வஞ்சப்பரசமயம் மாற்றவந்தோன் வாழியே.
மன்னுபுகழ்ப்பூதூரான் மனமுகப்போன் வாழியே.
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே.
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே.
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே.
திருடிலைமால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே.
தஞ்சப்பர கதியைத் தந்தருள்வோன் வாழியே.
தண்டமிழ்த் தூப்புல் திருவேங்கடவன்றாள் வாழியே.
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply