மூலவர் -திருவேங்கடமுடையான் -ஸ்ரீ நிவாஸன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முகமண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை -பத்மாவதித் தாயார்
விமானம் –ஆனந்த நிலய விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி -ஸ்வாமி புஷ்கரிணி -கோனேரி தீர்த்தம் –பாப விநாசினி –ஆகாச கங்கை –
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார் –பூதத்தார் –பேயார் –திரு மழிசையாழ்வார் –நம்மாழ்வார் –குலசேகராழ்வார்
–பெரியாழ்வார் –ஆண்டாள் –திருப் பாண் ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்
வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷனை முடித்து இங்கு ஒய்வு எடுத்த படியால் -இது ஆதி வராஹ க்ஷேத்ரம் –
ப்ருகு முனிவர் பெருமானைத் திரு மார்பில் உதைக்க லஷ்மி கோபப்பட்டு கோல்ஹா பூரில் த்வம் செய்யச் சென்றாள்-
திருமால் லஷ்மியை அடைய இங்கு வந்து த்வம் புரிந்தார் –
ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வ்ருஷாத்ரி –முதல் யுகம் /அஞ்சனாத்ரி / சேஷாத்ரி –வாயு -ஆதி சேஷன் / க்ரீடாத்ரி -விளையாட்டு
-நாராயணாத்ரி -கருடாத்ரி -/ வேங்கடாத்ரி -கலி யுகம்
ஆகாச ராஜன் சகோதரர் தொண்டைமான் சக்கரவர்த்தி
தாரிணி தேவி -ஆகாச ராஜன் மனைவி -பெயர் –
வகுள மாலிகை – இன்றும் மடப்பள்ளி நாச்சியார்
சுகாச்சார்யார் -திருச் சுகவனூர் –
10 புராணங்களில் ஸ்ரீ நிவாஸன் மஹாத்ம்யம் உண்டே-
மூலவர் ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, ஸ்ரீ கல்யாண வேங்கடவர், ஸ்ரீ போக ஸ்ரீநிவாசர்
தாயார் ஸ்ரீ அலர்மேல் மங்கை
தீர்த்தம் ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி, ஸ்ரீ சேஷாச்சல ஸ்வாமி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
மண்டலம் வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருப்பதி
நாமாவளி ஸ்ரீ அலர் மேல் மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ
————————-
ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்
“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.
———————————
ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்
மொத்தம் -202-பாசுரங்கள் மங்களாசாசனம்
———
ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –
கடியார் பொழில் வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –
———–
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-
மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-
காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-
மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-
கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-
நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-
பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-
மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-
————
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-
ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-
மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-
வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–
மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-
————–
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -திருச்சந்தவிருத்தம்–48-
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம்60-
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –-திருச்சந்தவிருத்தம்-81-
குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்–நான்முகன் திருவந்தாதி 34-
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி –39-
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்–நான்முகன் திருவந்தாதி 40-
காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -நான்முகன் திருவந்தாதி -41-
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நான்முகன் திருவந்தாதி 42–
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு–நான்முகன் திருவந்தாதி -43-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-
புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-
வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி -46-
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் –நான்முகன் திருவந்தாதி -47-
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-நான்முகன் திருவந்தாதி -48-
வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-நான்முகன் திருவந்தாதி -90-
———————
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–
————–
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம் –
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-
வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-
எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-
அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-
கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-
எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-
நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-
பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-
கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-
தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-
வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-
உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-
பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-
பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-
துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-
மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-
வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே-5-3-4-
வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-
சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-
மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-
ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே —7-3-5-
எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-
பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-
பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-
சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே —10-10-5-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –
வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-
காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேண்கடமே திருக்கோவலூரே –சிறிய திருமடல் – 69
என்னும் மலர்ப் பிறையாலேய்ந்த – மழைக் கூந்தல் தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் –பெரிய திருமடல் – 6
தெந்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் – 124
——————-
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —திருவிருத்தம் -8-
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-
கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-
ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –
உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –
கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–-திருவாய்மொழி – -1-8-3-
எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண் வேங்கடம்
மேகின்றாய்! தண் துழாய் விரை நாறு கண்ணியனே!–2-6-10-
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய ஒருவர்க் கென்றெ தொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.–2-7-12-
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-
அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-
சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-
வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாள்வரை–3-3-10-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே–6-6-2-
நிறங் கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங் கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கை யவனுக்கு என்
பிறங் கிருங் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-
பீடுடை நான் முகனைப் படைத்தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே–6-6-4-
பண் புடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே–6-6-5-
கற்பகக் காவன நற் பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத் தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புருவக் கொடி தோற்றது மெய்யே–6-6-6-
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையரவின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே–6-6-8-
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே–6-6-9-
பொற்பமை நீண் முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே–6-6-10-
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே–6-10-1-
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் லசுரர் குல மெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே–6-10-2-
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திரு வேங்கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே–6-10-3-
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்து மாறு புணராயே–6-10-4-
புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மர மிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந் நாளே–6-10-5-
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே-6-10-9-
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
இன்றிப் போக இரு வினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-
—————–
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-
வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37–
ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-
இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–
பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று -40—
உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-
படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
———————
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-
நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-
—————————-
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –
மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-
சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–
பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-
புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-
தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-
விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-
புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-
களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-
குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-
சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-
முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-
வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.
இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.
இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி
திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி
துவாபர யுகத்தில்- அஞ்சனாத்ரி
கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)
இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்
7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.
பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.
பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.
கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.
அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)
திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.
தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.
என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.
இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.
திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.
இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.
அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.
இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.
இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.
திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.
ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.
வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.
பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.
அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.
பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.
ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.
முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.
தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.
2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்
மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.
உற்சவர்- கல்யாண வெங்கடேஸ்வரர்.
தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.
1. சுவாமி புஷ்கரிணி 2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை 4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம் 6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம் 8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம் 10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம் 12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம்.
இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.
விமானம்- ஆனந்த நிலைய விமானம்
காட்சி கண்டவர்கள்- எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.
3ம் பிரிவு- திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்- தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்- பத்ம ஸரோவரம்.
சிறப்புகள் 1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.
அந்த 7 மலைகள் எவையெனில்
1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி- வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.
5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.
திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும். சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.
தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்
குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.
இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.
அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.
மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.
இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,
வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.
இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.
திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.
தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.
இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.
இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.
இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.
இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்
திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.
அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.
தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்
திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.
1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்
மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.
2. தும்புரு தீர்த்தம்
பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
3. இராமகிருஷ்ண தீர்த்தம்
தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.
4. ஆகாச கங்கை
தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.
5. பாண்டு தீர்த்தம்
வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.
6. பாபவிநாசன தீர்த்தம்
இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
ஸ்வாமி புஷ்கரிணி
தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.
வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்– என்கிறார் இளங்கோவடிகள்.
இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பதின்மருள் ஒன்பதின்மரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்தது திருவேங்கடம். ‘ஏதமில் ஆயிரம்’, ‘கெடலில் ஆயிரம்’, ‘பொய்யில் பாடல் ஆயிரம்’, ‘ஆணை ஆயிரம்’, ‘வழுவிலாத ஒண்தமிழ்கள் ஆயிரம்’, ‘அழிவில்லா ஆயிரம்’, ‘பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்’, ‘மெய்ந்நாவன் மெய்யடியான்’ என்பன போன்றவைகளால் ஆழ்வார்களுடைய ஸ்ரீ சூக்திகள் ‘வாய்மொழி’ என்பது பெறுதும்.
‘சித்த சித்தொ டீச னென்று செற்று கின்ற மூவகைத்
தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்’–என்றார் வில்லிபுத்தூராழ்வார்.
‘நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே’
‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’
‘இன்பப் பாவினை’
‘மன்னு மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை’
‘அமரர்கள்தம் தலைவனை அந்தமிழ் இன்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
பயிலரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினை’
என்பன போன்ற வாய்மொழியின் பொருளை ஓலைப்புறத்தே கேட்டுப் போகாதே எல்லாரும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி அவ்விறைவன் வந்து நிற்கின்ற இடம் இத்திருமலை என்பதனை நாம் நினைவிற்கோடல் வேண்டும். பாஷைகளுக்கு எல்லை நிலம் அன்றோ திருவேங்கடம்?
‘திலகம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!’
குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.’
‘சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.’
‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.’
என்பன போன்ற திருவாய்மொழிகள் திருமலையின் சிறப்பினைக் கூறுவனவாம்.
பிற தமிழ் நூல்களும் உரைகளும் :
I
‘வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து’–என்பது தொல்காப்பியம்.
‘நீணிலம்கடந்தநெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,’ என்பது அச்சூத்திரப்பகுதிக்கு 1நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரை.
‘இனி, அவர், ‘தமிழ் நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கொடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’–என இளங்கோவடிகள் -காடுகாண் காதை
‘வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்று
இந்நான் கெல்லை தமிழது வழக்கே.’–என்றார் சிகண்டியாசிரியர்.
‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம்என்று
இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்’–என்றார் காக்கை பாடினியார்.
‘பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்.’–அகநானூறு, செய். 211.
‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு’–என்றார் இளங்கோவடிகள்.–சிலப். வேனிற்காதை)
‘வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கு ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோற் பூத்து நின்ற
உடைசுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ.’–என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.–(நாடவிட்ட படலம். 29)
அரவணைச்செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லைத்
திருமலை கண்டு உணர்ந்தோர் செறிவினைத் தொடர்அ றுக்கும்
பெருமலை கண்டு இறைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவறும் ஏம கூடப் பொருப்பினை இனிது கண்டான்.’–என்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்.–(சீகாளத்திப் புராணம்)
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.’–என்றார் பாரதியார்.
புடையது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்’ என்றார் ஆசிரியமாலையுடையார்.
‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.’–என்றார் ஐயனாரிதனார்.–(புறப்பொருள் வெண்பா மாலை)
‘தேனோங்கு நீழல் திருவேங் கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’–என்றார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.-(பெருந்தேவனார் பாரதம்)
வலங்கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை
விலங்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட் கனையது பொய்க்குமோ?’-என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.
மற்றும், கம்பராமாயணம் நாட விட்ட படலத்தில், 27, 28, 29 ஆகிய மூன்று செய்யுள்களும், ஆறு செல் படலத்தில் 33,.34, 35, 37 ஆகிய நான்கு செய்யுள்களும் இத்திருமலையின் சிறப்பினையே கூறுவனவாம்.
‘உபசாந்த சித்த குருகுல பவபாண் டவர்க்கு வரதன்மை
யுருவோன் ப்ரசித்த நெடியவன் ருஷிகேசன்
உலகீன்ற பச்சை உமைஅணன் வடவேங் கடத்தி லுறைபவன்
உயர்ந்த சக்ர கரதலன் மருகோனே!’–என்றார் அருணகிரிநாதர்.-(திருப்புகழ். ‘இபமாந்தர் சக்ரபதி’ என்ற செய்யுள்.)
தென்னாதெ னாஎன்று வண்டுமுரல் திருவேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே’
‘திணரார்மேகமெனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே!’-என்ற திருவாய் மொழியினையும்,
‘லக்ஷணோபேதமாய் இருப்பது ஒரு யானை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின் ‘மழகளிற்றினம் சேர் 1என்கிறார். அங்கு நிற்கிறதும் ‘சோலை மழகளிறே ‘யன்றோ? இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி,’ என்ற வியாக்கியானத்தையும் படிக்கும்போது,
‘புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்’ -(புறம். 389)
‘வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை’ (அகம். 27)
‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
கருங்கால் மராத்துக் கொழுங்கொம்பு பிளந்து
நெடும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுகொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நன்னாட்டு வேங்கடம்’–(அகம். 83)என்னும் பாடற்பகுதிகள் நினைவிற்கு வாராதிரா.
கோயில் திருமலை பெருமாள் கோயில் என்றும், போகமண்டபம் புஷ்பமண்டபம் தியானமண்டபம் என்றும், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாகத் திருவேங்கடத்தை வைத்து நம் வைணவப் பெருமக்கள் வழங்கி வருகின்றதனை நாம் பார்க்கின்றோம்.
‘விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசைச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண்காட் டென்றென் னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்.’
என்று திவ்வியதேச யாத்திரை செய்யப் போந்த ஓர் அந்தணன் கூறுவதாக அவன் கூற்றில் வைத்து, மேலே கூறிய முறை பிறழாமல் தம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதால், கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று வழங்கும் வழக்கு நம் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழங்கி வருகின்ற பெரு வழக்காகும் என்று தெளிதல் தகும்.
‘ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
மூற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.’(அகம். 85)
‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்.’-(அகம். 213)
என்ற செய்யுட்பகுதிகளால் திருவேங்கடத்தைத் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆண்டு வந்தமை புலனாகின்றது. அவ்வரசர் பெருமான் திருவேங்கடமுடையானிடத்தில் ஈடுபட்டுப் பரமவைஷ்ணவனாய் ஒழுகி வந்தான் என்றும், அவனுக்குப் பகைவர்களால் துன்பம் நேர்ந்த காலத்துப் பக்தவத்சலனும் அடியார்க்கு எளியனுமான அப்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளை விடுத்து அவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினான் என்றும், அது காரணமாகவே சில காலம் திருவாழி திருச்சங்குகள் இல்லாமலே இருந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது.
திவ்வியகவி பிள்ளைப் பெருமாளய்யங்காரும் தாம் பாடிய திருவேங்கடத்தந்தாதியில் இவ்வரலாற்றினையே அகப்பொருள் துறையில் அமைத்துத்
‘தனித்தொண்டை மானிலத் தேபுரி
வார்க்கருள் தாளுடையாய்!
தொனித்தொண்டை மான்நெடு வாய்பிளந்
தாய்!துங்க வேங்கடவா!
முனித்தொண்டை மான்கையில் சங்காழி
நல்கிஎன் மூரற்செவ்வாய்க்
கனித்தொண்டை மான்கையில் சங்காழி
கோடல் கருமம்அன்றே.’–என்று நயம்படப் பாடியிருத்தல் காணலாகும்.
தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–
(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)
எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.
திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.
—————————————————-——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply