மூலவர் -ப்ரஹ்லாத வரதன் -லஷ்மி நரசிம்மன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -காபில நரஸிம்ஹர்
தாயார் -அம்ருத வல்லி -செஞ்சு வல்லி
விமானம் -குகை விமானம்
தீர்த்தம் -பாப விநாசினி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்
நவ நரசிம்ஹ க்ஷேத்ரம் –ஆஹா பலம் -என்று பகவானின் பலத்தையும் -அஹோ பிலம் -என்று மலையின் திடத் தன்மையையும் –
கருடன் பிரார்த்திக்க நரசிம்ஹப் பெருமாள் ஹிரண்ய கசிபுவை அழித்த தோற்றத்துடன் உக்ர ஸ்தம்பம் என்ற இடத்தில் சேவை
இவ்விடத்தில் தான் தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ஹப் பெருமாள் தோன்றினார் -மாலோலனாய்ப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
மேல் இருந்து ஸேவித்தாள் கருட வடிவில் திருமலையை சேவிக்கலாம் -கருடனை தார்ஷ்யன் -என்று சொல்லுவார் -ஆகவே இது தாரஷ்யாத்ரி –
அஹோபில — வராஹ –பாவனா –கராஞ்ச –சத்ரவட –பார்கவ –ஜ்வாலா –மாலோல –யோகானந்த -நரசிம்ஹர்கள் சேவை சாதிக்கிறார்கள் –
ஜ்வாலா பாவனா நரஸிம்ஹர் மேலே சேவிக்க கொஞ்சம் சிரமம் -அஹோபில ஜீயர் நன்றாக சேவிக்க ஏற்பாடு –
அல்லி மாதர் புல்க நின்ற –சிங்க வேழ் குன்றம்
தற்போது உள்ள பெயர் ஸ்ரீ அஹோபிலம்
மூலவர் ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன், ஸ்ரீ லஷ்மி நரசிம்மன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ 8 நரஸிம்மர்கள்
தாயார் ஸ்ரீ அம்ருதவல்லி,ஸ்ரீ செஞ்சுலட்சுமி
தீர்த்தம் ஸ்ரீ இந்திர,ஸ்ரீ பாபவிநாச தீர்த்தங்கள்
விமானம் ஸ்ரீ குகை விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ அஹோபிலம்
நாமாவளி ஸ்ரீ லக்ஷ்மீ நாச்சியார் ஸமேத ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ
————
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-
நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-
இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், மலையின் மேல் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலையடிவாரத்திலிருந்து
பிலம் என்றால் குகை அஹோ என்னும் சொல் சிம்மத்தை குறிப்பது. ஆதலின் வடமொழியில் அஹோபிலமாயிற்று. சிங்கவேள் என்று தூயதமிழால் சுட்டப்பட்டு குன்றத்தையும் சேர்த்து சிங்கவேள் குன்றமாயிற்று. மலைமேல் உள்ள கோவில் சுமார் 10 கி.மீ. தூரமாகும்.
கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய
காட்டுப்பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம்
செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல்
கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக
9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும்
பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.
மலையடிவாரக் கோவில்- இதனைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வர்.
மூலவர்- பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- அமிர்தவல்லி, செஞ்சுலெட்சுமி
உற்சவர்-நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான 9 மூர்த்திகள். 8 உற்சவ மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான
உற்சவமூர்த்தி மட்டும்தனியாக உள்ளார். இங்குள்ள உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக சேவை சாதிக்கிறார். இவர் சுயம்பு.
மாலோல உற்சவர் அஹோபில மடத்தில் அழகிய ஜீயர் சுவாமிகளின் நித்திய திருவாராதன விக்ரகமாக உள்ளார்.
தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்.
விமானம்- குகை விமானம்
காட்சி கண்டவர்கள்- கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர்.
மலையின் மேல் உள்ள கோவில்
மூலவர்- அஹோபில நரசிம்மர்
தாயார்- லட்சுமி
தீர்த்தம்- பாவநாசினி
விமானம்- குகை விமானம்
காட்சி கண்டவர்கள்= பிரகலாதன். கருடன், இங்குதான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.
இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின்
மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.
1. அஹோபில நரசிம்மன்
2. வராக நரசிம்மன்
3. பாவந நரசிம்மன்
4. காரஞ்ச நரசிம்மன்
5. சக்ரவட நரசிம்மன்
6. பார்க்கவ நரசிம்மன்
7. ஜ்வாலா நரசிம்மன்
8. மாலோலா நரசிம்மன்
9. யோகாநந்த நரசிம்மன்
இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை
விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில்
வளர்ந்துவர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம் விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும்வரை இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும்
சொல்வர். பெருமாளுக்கு இவ்விடத்து வேடவர் சம்பந்தமிருந்ததை “களைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கை படம்
பிடித்திருக்கிறார்.
இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச்
சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் 1 1/2 மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம சேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் 2 மைல் தொலைவு சென்றால்
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்த தூண். நரசிம்மன் தூணிலிருந்து வெளிப்பட்ட இடம் உள்ளது. இங்கு தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். அல்லது
பிரம்மோத்ஸவம் நடைபெறும் சமயமான மாசி மாதம் சென்றால் கூட்டமாகச் செல்லும் பக்தர் குழாத்துடன் செல்லலாம். பொதுவாகவே இங்கு மலைமேல்
உள்ள எல்லா நரசிம்மர்களையும் சேவிப்பது கடுமையான செயலாகும். கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறவேண்டிய
இடங்கள் மட்டுமின்றி காட்டுமிருகங்கள் நடமாடக்கூடிய பகுதிகளும் உண்டு.
மலையடிவாரக் கோவிலுக்கு முன்பு சுமார் 85 அடி உயரமுள்ள ஒரே கல்லாலான தூண் ஒன்று உள்ளது. இதற்கு ஜெயஸ்தம்பம், வெற்றித்தூண்
என்பது பெயர். இது பூமிக்கடியில் சுமார் 30 அடிவரை தோண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ள தென்ற விபரத்தை அறியும்போது பேராச்சர்யமாக உள்ளது.
மிகுந்த பக்திசிரத்தையோடு இந்த தூணின் முன்புறம் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞைகள் (வேண்டுகோள்கள்) வெற்றிபெற்று விடுவதாக ஐதீஹம்.
சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து
வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ராமபிரான் எண்ணிச் சென்றார்.
அஹோபிலமடம் வைணவசமய வளர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இடம்வகிக்கிறது. வானமாமலைபோல் திருவரங்கம் போல் திருமலைபோல் வைணவ
சம்பிரதாய வளர்ச்சியில் அஹோபிலமடம் முதன்மையும் முக்கியத் துவமும் வகிக்கிறது. அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் எண்ணற்ற
கோவில்களும், நூலகங்களும், கல்விக் கூடங்களும் மத சம்பந்தமான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அஹோபில மடங்களுக்கு தலைமைப் பீடம்
இதுதான். இங்கு தற்போது பெரிய மடங்களும் விசாலமான மண்டபங்களும், உயர்ந்த கட்டிடங்களும் நிறைந்து அஹோபிலம் களைகட்டி நிற்கிறது.
வடகலை சம்பிரதாயப்படி இயங்கிவரும் இந்த அஹோபில மடத்தின் ஒவ்வொரு ஜீயர் சுவாமிகளும் ஒரு குறிப்பிடத்தக்கப் பெரும் பணியைச்
செய்திருக்கின்றனர். இந்த மடத்தின் அழகிய சிங்க ஜீயர் சுவாமிகள்தான் ஸ்ரீரங்கம் தெற்கு ராய கோபுரத்தின் நின்றுபோன பணியைத் துவக்கி அதனை ஆசியாவிலேயே பெரிய கோபுரமாக்கி அரங்கனுக்குச் சமர்ப்பித்து அழியாப் புகழ்படைத்து
பெருஞ்சாதனை புரிந்துவிட்டார்.
அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து
அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி
தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த
ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை
வைத்துக்கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை
ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத்தான் தாம் செல்லும் இடங்களுக்கு
எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்தபோது
இந்த பெருமாளும் திருவரங்கம் வந்துவிட்டார்.
அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலைமேல் உள்ள
நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்திலிருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை சிமிண்டினால்
மூடப்பட்டுள்ளது. அங்கு ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இங்குள்ள பெரியவர்களின் சொல்.
ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சில காபாலிகள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக்
காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.
வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-
(இ – ள்.) கேழ் கிளரும் – நிறம்விளங்குகின்ற,
அங்கம்வேள் – அழகிய தேகத்தையுடைய மன்மதன்,
குன்ற – சாம்பலாயழியும்படி,
அழல் – (தனது நெற்றிக்கண்ணைத்திறந்து) கோபித்த,
சரபத்தை – (சிவபிரானது அவதாரமாகிய) சரபமென்னும் விலங்கை,
பிளந்த – பிளந்துஅழித்த,
சிங்கவேள்குன்றத்தினார்க்கு – சிங்கவேள்குன்றமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய நரசிங்கப்பிரானுக்கு,
வாழ் குமரன்மேல் – கடவுளினருள்பெற்ற பிரகலாதனென்னும் சிறுவனிடத்து,
ஓர் முகத்து – ஒருபால்,
சூழ் கருணையும் – நிறைந்த பேரருளும், –
கனகம் வஞ்சகன்மேல் – (அவனதுதந்தையான) வஞ்சனைக்குணமுடைய இரணியன்மீது,
(ஓர்முகத்து – ஒருபால்),
முனிவும் – கடுங்கோபமும்,
தோன்றிய – உண்டாயின; (எ – று.) ஏ, ஆல் – ஈற்றசைகள்.
தனதுமெய்யடியானான பிரகலாதனை இரணியன் வருத்தியதுபற்றி அன்னான்மீது பெருஞ்சினமும்,
பெற்றதந்தை தன்னைப் பலவாறாக நலியவும் அந்நிலையிலும் தனது மெய்யன்பு மாறாமலிருந்ததுபற்றிப்
பிரகலாதாழ்வான்மீது திருவருளும் நரசிங்காவதாரமூர்த்திக்கு ஒருங்கே தோன்றின வென்க;
இவ்வாறு ஒன்றற்குஒன்று மாறான குணங்களை ஒருங்கே எம்பெருமான்கொண்டது, அப்பிரானது ஆஸ்சர்யகுணயோகத்தை விளக்கும்.
சரபம் – இரண்டுதலைகளையும் சிறகுகளையும் கூரியநகமுள்ள எட்டுக்கால்களையும் மேல்நோக்கிய
கண்களையு முடைய தொரு மிருகவிசேடம்; இதனைப் பறவையென்றலு முண்டு.
இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந் திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்க மாதலாலும்,
ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடையபுருஷோத்தமனது அவதாரமான திவ்யஸிம்ஹ மாதலாலும், இது சரபத்தைக் கொன்றிட்டது.
இரணியனென்ற பெயர் பொன்னிறமானவ னென்று பொருள்படுதலால், அதன்பரியாயநாமமாக ‘கனகன்’ என்றார்;
இரணியம் கனகம் என்பன – பொன்னின் பெயர்கள். முதலடியில் முறைநிரனிறைப்பொருள்கோள் காண்க.
சிங்கமாகிய யாவரும் விரும்பப்படுகின்ற கட்டழகுடைய பெருமான் எழுந்தருளிய திருமலையாதலால்,
சிங்கவேள்குன்றம் என்று இத்தலத்திற்குப் பெயர்; ‘சிங்கவேழ்குன்றம்’ என்று வழங்குதலு முண்டு;
அப்போதைக்கு நரசிங்கமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்ற ஏழுகுன்றங்களையுடையது எனப்பொருள் காண்க;
இதுவே அஹோபில மெனப்படும்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply