ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் பாற் கடல்

மூலவர் -ஷீராப்தி நாதன் -ஆதி சேஷ சயனம் –தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -கடல் மகள் நாச்சியார் -ஸ்ரீ பூமா தேவி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -பொய்கையார் -பூதத்தார் -பேயார் -திரு மழிசையாழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
-பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடிகள் -திருமங்கை ஆழ்வார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இறங்கி வந்து வா ஸூ தேவ சங்கர்ஷண -ப்ரத்யும்ன – அநிருத்தர்கள் -நான்காக வ்யூஹித்து
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனம் –சங்கர்ஷணன் சம்ஹாரத்தையும் ப்ரத்யும்னன் ஸ்ருஷ்ட்டியையும் -அநிருத்தன் -ரக்ஷணத்தையும் –
கேசவாதி பன்னிரு திரு நாமங்களை இந்த நால்வருக்கும் –
கூப்பீடு கேட்க்கும் இடம் -விபவங்கள்- இங்கே இருந்து தான் நடக்கும்

ஸ்ரீ திருப் பாற் கடல்
மூலவர் ஸ்ரீ ஷீராப்தி நாதன், ஸ்ரீ பாற் கடல் வண்ணன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், ஸ்ரீ பூமா தேவித் தாயார்
தீர்த்தம் ஸ்ரீ அம்ருத தீர்த்தம், ஸ்ரீ திருப் பாற்கடல்
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஷீராப்தி நாதாய நமஹ

———-

மங்களா சாசன –52-பாசுரங்கள் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –
ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –
ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா!
பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே

——

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி
தெண்டிரைக் கடற் பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோ ராசையினால்

—————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன்
ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு

————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல் ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே!
பௌவநீரராவணை படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.
நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த பற்பநாபனல்லையே?
பௌவநீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
பௌவநீரணைக் கிடந்து உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து
கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
வேலை நீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்து,
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!
நாகத் தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு வல்லவாறு ஏத்த

—————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்த பின்னை

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

பரமனே! பாற்கடல்கிடந்தாய்! நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!
திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங்கடல் கிடந்தாய்! நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
பள்ளியாவது பாற் கடலரங்கம்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கருமணியை
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த தேவர்கள் நாயகனை
பங்கத்தாய்! பாற் கடலாய்! பாரின் மேலாய்! பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

எப்போதும் வரை மேல் மரதகமே போல திரமேல் கிடந்தானை

————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம் புரிவார் புகழ் பெறுவர்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான்

—————

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

சங்கோதப் பாற் கடலான் பாம்பணையின் மேலான்
செவிதெரியா நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான்.
பாற்கடலும்வேங்கடமும் பாம்பும்பனிவிசும்பும்- –பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவார்க்குக் கோயில்

————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

பாற் கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே.
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-
இரைக்குங் கடற் கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்–போரேறே.
விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்
நம் பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலுந்திருவுடையார் யவரேலுமவர் கண்டீர் பயிலும் பிறப்பிடைதோறு எம்மையாளும் பரமரே
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா! வணங்குமா றறியேன்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே

——————————————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் ஆறு பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா! உன்மேல்
கன்றினுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய் போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவர்களே.–3-3-7-

பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய்யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே.–4-10-5-

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே.–5-1-7-

அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற்பொருட்டே.–5-2-10-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
தனிக் கடலே! தனிச் சுடரே! தனி யுலகே! என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே. –5-4-9-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே. –5-4-10-

———–

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட் காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக் குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை –2-

குண்டு நீருறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய்! உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.–நாச்சியார் திருமொழி–4-2-3-

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோராசையினால் என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித் தாவியையாகுலஞ்செய்யும்
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ? ஆழியும்சங்குமொண்தண்டும்
தங்கியகையவனைவரக்கூவில் நீ சாலத்தருமம்பெறுதி.–4-5-7-

————-

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை யுற்றவரைப் பெருந்திரு மார்வனை மலர்க் கண்ணனை
மாலை யுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்தரங்க னெம்மானுக்கே
மாலை யுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்ற தென் நெஞ்சமே.–பெருமாள் திருமொழி –2-8–

ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு வுடையேனாவேனே–4-4-

——————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே! –திருச்சந்தவிருத்தம் – 17

விடத்த வாயொராயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடத்து வீள்விலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர ராவணை
படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.–திருச்சந்தவிருத்தம் – 18

வானிறத்தொர் சீயமாய் வளைந்த வாளெயிற்றவன்
ஊன் நிறத் துகிர்த் தலம் அழுத்தினாய்! உலாய சீர்
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக் கடல் கிடந்த பற்ப நாபனல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 23

படைத்த பாரிடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பௌவ நீர்
படைத்தடைத் ததிற்கிடந்து முன் கடைந்த பெற்றியோய்!
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புக
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே! –திருச்சந்தவிருத்தம் – 28

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீரணைக் கிடந்து
உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து அதன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தியாயினாய்!
ஒருத்தரும் நினாது தன்மை இன்ன தென்ன வல்லரே.–திருச்சந்தவிருத்தம் – 29

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளுமுய்ம்மினோ.–திருச்சந்தவிருத்தம் – 81

விடைக்குலங்களேழடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்
படைத்தடைத்ததிற்கிடந்து முன் கடைந்து, நின்றனக்கு
அடைக்கலம் புகுந்த வென்னை யஞ்சலென்ன வேண்டுமே. –திருச்சந்தவிருத்தம் – 92

அடக்கரும் புலன்கள் ஐந்தடக்கி ஆசையாமவை
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கணின்ற என்னை நீ
விடக்கருதி மெய் செயாது மிக்கொராசை யாக்கிலும்
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.–திருச்சந்தவிருத்தம் – 95

தூயனாயுமன்றியும் சுரும்புலாவு தண் துழாய்
மாய! நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு, வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!–திருச்சந்தவிருத்தம் – 110

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்–நான்முகன் திருவந்தாதி – 36-

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75-

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.–நான்முகன் திருவந்தாதி – 79

————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே–திருமாலை – 15

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடுந் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற் கடல் கிடந்தாய்!
நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-6-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணமென்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-9-

பள்ளியாவது பாற் கடலரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணனென்றெண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே! –1-8-2-

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிரணவும் திரு வெள்ளியங்குடி யதுவே.–4-10-4-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள்
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே–4-10-10-

கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரதகத்தை மறை யுரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே–4-6-1-

செங்கமலத் திரு மகளும் புவியும் செம் பொன் திருவடியினிணை வருட முனிவரேத்த
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கு மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே–7-8-1-

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே!
வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே!–8-10-7-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய்! மதிள் கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!
பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழி தருகேனே.–திருநெடுந்தாண்டகம் – 9-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி யழுந்தூர் நின்றுகந்தஅம்மான்! என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை இறையே தோன்றநக்கு
மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவிஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே. –திருநெடுந்தாண்டகம் – 15–

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

வேதனை வெண்புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்குமநாதனை ஞாலம் தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே. –திருவிருத்தம் – 79

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல் வினை யெம்பால் கடியும்
நீதியாய்! நிற் சார்ந்து நின்று.–பெரிய திருவந்தாதி – 34

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென்று ஆரே?
இரைக்குங் கடற்கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை. –பெரிய திருவந்தாதி – 77

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா எறுடனேழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரமே ழெய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய்ப் பொன் முடியம் போரேறே. திருவாய்மொழி–2-5-7- –

உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந் தீவினைகளை நாசஞ்செய்து உன்து
அந்தமிலடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய்? உன்னைச் சிந்தை செய்து செய்தே.–2-6-5-

பயிலுஞ் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற் கடல் சேர்ந்த பரமனை
பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே. –3-7-1-

மணந்த பேராயா! மாயத்தால் முழுதும் வல் வினையேனை யீர்கின்ற
குணங்களை யுடையாய்! அசுரர் வன்கையர் கூற்றமே! கொடிய புள்ளுயர்த்தாய்
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா!
வணங்குமாறறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே.—8-1-8-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே.–8-2-8-

திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வனொருவனே.–10-7-8-

———–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

உரை மேற் கொண்டு என்னுள்ளமோவாது எப்போதும்
வரை மேல் மரதகமே போல – திரை மேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப்பூமி
யிடந்தானை யேத்தி யெழும். —முதல்திருவந்தாதி – 25

————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம்
புரிவார் புகழ் பெறுவர் போலாம் – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்—இரண்டாம் திருவந்தாதி – 3

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப் பலரும்
தேவாதி தேவ னெனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன். –28-

—————–

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

நன்கோதும் நால் வேதத்துள்ளான் நறவிரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் – சங்கோதப்
பாற் கடலான் பாம்பணையின் மேலான் பயின்றுரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான். –மூன்றாம் திருவந்தாதி – 11

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரி யுருவமானான் – செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நற வேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்.–மூன்றாம் திருவந்தாதி – 31

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன். -32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.–61

ஆங்கு மலரும் குவியுமாலுந்திவாய்
ஓங்கு கமலத்தின தொண் போது – ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி யென்றும் பார்த்து –மூன்றாம் திருவந்தாதி – 67-

இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி
அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன்
என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல்
வடிவம்.

கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின – வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக – சங்கர்ஷணனும்
வடக்கு – பிர்த்யுமனனாகவும்
மேற்கு – அநிருத்தனாகவும் திகழ்கிறார்.

பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு
கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள்
எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக்
கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது
வழக்கமாம்.

ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள்
மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம்.

சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.

மூலவர்–பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு நோக்கிய சயனம்
தாயார் —  கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி
தீர்த்தம் -அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
விமானம்–   அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மனும் சிவனும்

இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின் வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன் (உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம் என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார்.

இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும்.

திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.

1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்-திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன்-   திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன்-    திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன்-    திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன்–     உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

(இ – ள்.) தொழும்பு ஆய – (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் –
நல்ல சூது – நல்ல உளவை,
அறிந்து கொண்டேன் -; (அதாவது), – செழும்பாய் அலை – செழித்த பாய்கின்ற அலைகளினால்,
முத்தம் சிந்தி – முத்துக்களைக் கொழித்து,
முழங்கும் – ஒலிக்கின்ற,
திருப்பாற்கடலான் – திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது,
தாள் – திருவடிகளை,
சேர்ந்தார் – உபாயமாக அடைந்த பாகவதர்களது,
அடி – திருவடிகளை,
சேர்ந்து இருப்பாற்கு – தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு,
இடர் – பிறவித்துன்பங்களையெல்லாம்,
அடல் ஆம் – ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ – று.)

பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய
உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம்.
அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், “நல்லசூது’ என்றார்.

எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்;
“வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும்,
உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை”.

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading