ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள் -ஸ்ரீ திருவரங்கம்-

ஸ்ரீரங்கம்

மூலவர் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ அழகிய மணவாளன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ பெரிய பிராட்டியார் =
தீர்த்தம் ஸ்ரீ சந்திரபுஷ்கரணி
விமானம் ஸ்ரீ ப்ராணாவாக்ருதி விமானம்
நாமாவளி ஸ்ரீ ரங்க நாயகீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் – ஸமேத ஸ்ரீ ரங்க நாதாய நமஹ

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–

அம்பச்யாபரே புவனச்ய மத்யே நாகச்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் சுக்ரேண ஜ்யோதீம்ஷி
ஸ மனுப்ரவிஷ்ட  பிரஜாபதி சரதி கர்பே அந்த ….வேத வாக்யம்..

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் ….பிரபந்தம்..–ஏவம் பஞ்ச பிரகாரோகம்..அவன் வாக்கியம் .

பகல் ஓலக்கம் இருந்து கருப்பு உடுத்து சோதித்து காரியம் மந்திரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ..ஆசார்ய ஹ்ருதயம்..
பரம் வ்யூகம்  விபவம் ஹார்த்தம் அர்ச்சை  ..இவை ஐந்தையும் இப்படி சொல்லும் ..

நீர்மைக்கு எல்லை அர்ச்சை ….
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் சகோம்….

ஆஸ்ரித காரிய ஆபாத குணங்கள் — ஞான சக்தி பிராப்த்தி பூர்த்திகளும், ஆச்ரயண சௌகர்ய ஆபாதாக குணங்கள்–
வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய சௌலபாதிகளும்.. புஷ்கலங்கள் ..

ஆராமம் சூழ்ந்த அரங்கம் வேர்பற்றான திவ்ய தேசம் ..
அதனால் ஸ்ரீமந் ஸ்ரீ ரெங்க ச்ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்தய  என்று நித்யம் பிரார்த்திக்கிறோம்
வேரில் நீரிட்டால் செடி வாழுமா போல..

வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் என்று
சகல திவ்ய தேச பெருமாளும் பள்ளி கொள்ளும் இடம் இதுவே
பதின்மர் பாடும் பெருமாளும் இவனே
திரு வேம்கடமுடையான் இரு மருங்கிலும் பால் கொடுத்து இரட்டை குழந்தைகளை ரஷிக்கும் மாத்ரு போல்வான்  .

கோயில்  திரு மலை பெருமாள் கோயில் –மூன்றையுமே திரு விருத்தத்தில் நம் ஆழ்வார் மங்களா சாசனம் செய்வதால் –

பொரு நீர் திருவரங்கா அருளாய் – 28-
மாயோன் வட வேங்கடநாட -10 –
பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-
விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுது- – 26-

திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:–ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

ஸ்ரீ ரெங்க மந்த்ரம்–

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜ முகுளோத்பா ஸமானே விமானே

காவேரீ மத்ய தேசே ம்ருது தர பணீராட் போக  பர்யங்க பாகே |

நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட சிரஸ்:பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்

பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் ||-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01

ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப் போல-விளங்குகின்ற விமானத்தில், திருக் காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடி வருடப் படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!

திருவரங்கனும் மா முனிகளும் —

திருவரங்க சோலை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்  மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை -திரு மாலை -14
வண்டு -மயில் -மேகம் குயில் பதங்கள் மா முனியையும் -அரங்கனையும்
குறிப்பனவாக அமைந்து உள்ளன
வண்டினம் முரலும் சோலை-
1-நம் ஆழ்வார் எம்பெருமானை -வண்டாக –தூயிவம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று அருளுகிறார் –
2-மலர்கள் வண்டுகளின் வரவை எதிர்பார்த்து வாசனையை தினம் தோறும் வீசி நிற்கும்
அது போலே ஆழ்வாரும் ஆர்வுற்று இருக்க -அவரினும் முன்னம் பாரித்து தான் அவரை முற்றப் பருகினான்
3-ஆறு கால்கள் கொண்ட வண்டு -ஷட் பதம் –பகவான் இடத்தில் பக -சப்தம் ஆறு கல்யாண குணங்களைக் குறிக்கும்
ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்

4- லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தனச்தப கசஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ  ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே — ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் 1-10-
திருமகளாம் கற்பகக் கொடியின் வாராளும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில்
சுழன்று வரும் அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக் கமலத்து
அமர்ந்து களித்திடுக
மா முனிகள் -வண்டு –
வண்டுகளை வட  மொழியில் –த்விரேப -அதாவது இரண்டு ர எழுத்துக்களை தன பெயரில்
கொண்டுள்ளது -ப்ரமர -என்பது -இது போல் வர வர முனி என்ற பெயரிலும் இரண்டு ரே பம் உள்ளது –
பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் வர வர முனி சதகம் –
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் ப்ரபத்யே — 1- எம்பெருமானார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் –
மஹ தாஹ்வய பாத பத்மயோ
மஹது த்தம் சித யோர் மது வரதம் — 43- -பேயாழ்வார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் சடா ராதி ஸ்ரீ மத் வத ந சரஸீ ஜாதமிஹரே
ததீய ஸ்ரீ பாதாம்புஜ மதுகர தஸ்ய வசஸாம் – 53-  நம் ஆழ்வார் திருவடித் தாமரைகளில்  படிந்த வண்டு என்றும் –
தமநுதி நம் யதீந்த்ர பத பங்கஜப் ருங்க வரம்
வர முனி மாஸ்ரயாஸய  விஹாய தத் அந்ய ருசிம் -85 -எம்பெருமானார் திருவடித் தாமரைகளில்
படிந்த வண்டாகிய மா  முனிகளை -நெஞ்சே ஆஸ்ரயி -என்று அருளிச் செய்து இருப்பது
நோக்கத் தக்கது
ஆச்சார்ய ஹிருதயம் -சூரணை -152-
என் பெறுதி என்ன ப்ரமியாதி உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் ஸாரம்  கிரஹித்து –
வண்டுகள் வகுளம் முதலிய சாரமாம் தேனைப் பருகுதல் இயல்பே –
மா முனிகளும் வகுளாபரணர்  சொல் மாலைகள் சாரம் கிரஹித்து -திருவாய் மொழி நூற்றந்தாதி -அருளி –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்று தாமே அருளி செய்துள்ளாரே -மயிலினம்  ஆலும் சோலை –
ப்ரலய  சமய ஸூ ப்தம் ஸ்வம்  சரீரை கதேசம்
வரத  சித சிதாக்யம் ச்வேச்சயா விச்த் ரு ணா ந
கசிதமிவ கலாபம் சித்ர மாதத்ய தூந்வன்
அநு சிகிநி ஸி கீவ க்ரீடசி ஸ்ரீ ஸ மஷம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் – 2-44-
பேரருளா -தோகை விரிக்கின்ற பொறியார்  மஞ்சை பேடை மயில் முன் -அணி மா நடம் பயின்று
ஆடுவது போலே -ஊழி காலத்து உறக்கம் கொண்டவை போல் நின் திரு உடம்பில் ஒரு கூறாய்
ஒன்றி நின்ற -அனைத்தையும் மழுங்காத ஞானத்தினால் -பல்வகை பெரு விறல் உலகமாய்ப் பரப்பி
திருமடந்தை முன்பே நீ விளையாடுதீ –
மயில் தன்  உடலில் அடங்கிய கலாபத்தை விரிப்பது போன்று –மா முனிகளும் தமது திரு உள்ளத்தில்
கிடந்த கலைகளை வியாக்யானம் அருளும் பொழுது விரித்து சிறந்தனர் –
மயில்கள் ஆலித்தல் அழைத்தல் போன்று மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு
கொண்டு ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வெய்திய  மெய்யடியார் யாவார் –

கொண்டல் மீதணவும் சோலை  –
சிஞ்சேதி  மஞ்ச ஜனம் இந்தி ரயா தடித்வான்
பூஷா மணித் யுதிபி ரிந்த்ரத  நுர்த தா ந
ஸ்ரீ ரெங்க தாமனி தயாரதச நிர்பரத்வாத்
அத்ரவ் சயாலுரிவ ஸீ தல காள மேக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – 1-82-
பூ மன்னு  மாது என்னும் மின்னில்  பொலிவதாய் –
இழை பலவற்றில் பதித்த பன் மணிகளின் ஒளி யாகிற ககன  வில் ஓன்று ஏந்தியதாய் –
நல்லருள் என்னும் நீர் நிரம்ப பெற்றமையால் –
திருவரங்க  பெரு நகருள் வரை மேல் –
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை  மேவி –
பள்ளி கொள்ளுவதான குளிர்ந்து உறைகின்ற
கார்முகில் அடியேனை யும் நனைத்து அருளுக –
இதனை அடி யொற்றி  திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
காவிரிவாய்ப்  பாம்பணை  மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் யரங்கர் பொன்னடியே தஞ்சமென பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற  இருவரினும்  சீரியரே -திருவரங்க கலம்பகம் – 100-

குயிலினம் கூவும் சோலை –
கயல் துளு காவிரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று –
குயிலுக்கு வட மொழியில் –வநபிரிய -என்று பெயர் உண்டு –
சோலையில் விருப்புடையது -என்று இதற்குப் பொருள் –
அரங்கனும் வனப் பிரியனே -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் இருப்பதால் –
குயில் மா மரம் ஏறி மிழற்றும் இயல்பு உடைத்தாதலின் -மா -வின் இடத்தில் இதற்கு பெரிய
விருப்பு  உணரப்படும்-அரங்கனோ எனில் –அல்லி  மலர்மகள் போக மயக்குகள் ஆகியும்
நிற்கும் அம்மான் -என்றபடியே -மா -திரு மா மகள் இடம் பேரன்பு உடையவன்

குயில் பஞ்சம ஸ்வரத்தில் இனிமையாக பாட வல்லது
பாரத பஞ்சமோ வேத-என்று மகா பாரதம் புகழ் பெற்றது போலே
ஐந்தாம் மறை  என்னும்படியான ஸ்ரீ ஸூத்திகளை அருளிச் செய்த மா முனிகள் குயிலினை ஒப்பார் –
மேலும் -ஸ்வை ராலாபை ஸூ லபயசி தத் பஞ்சமோபாய தத்தவம் -வரவர முனி சதகம் – 11
எறும்பி அப்பா அருளியது போல் -பஞ்சமோபாயத்தை  உணர்த்தி அருளியவர் –
குயில் பரப்ருதம் -மா முனிகளும் பராபிமானத்தில் -எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கியவர்

இதம் ஹி ரெங்கம் -ஆதி சங்கரர் -இங்கே பிறந்தால் வேறு பிறவி இல்லை
ராஜ தானி -எல்லா ஆச்சார்யர்களும் வாழ்ந்து கைங்கர்யம் செய்த திய்வய தேசம்
54 சந்நிதிகள் -நடை அழகு –கஜ சிம்ம புலி ஏறு சர்ப்பம் -1323 -1378 -வெளியே சென்று -திருமலையிலே ஸ்ரீ ரெங்க மண்டபம் –
பங்குனி உத்தரம் சேர்த்தி -சேர குல வாலி சேர்த்தி -ஸ்ரீ ராம நவமி -உறையூர் சேர்த்தி -மூன்றும் உண்டே –

ரங்கவிமான ரகஸியம்
ரங்க விமானம்-மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே!-திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே
இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.

நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் – தெற்கு – வடக்கில்
ஐந்து கலசங்கள் – ஐம்பூதங்கள் – கிழக்கு – மேற்காக
ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.
மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.

ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –

1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி

வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்

2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி

ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-

4- கருவூல நாச்சியார்

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது

5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்

அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்

6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்

பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்

காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு

பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்

7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு

8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்

9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி

10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்

வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்

11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை

12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்

————

திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்த அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,-முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” –(முமுஷுப்படி-142).

ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!

வன் பெரு வானகம் முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற
திருவாளன் திருப்பதி
வடிவுடை கடலிடம் கட்கிலீ (காகுத்தா) என்னும் அவற்றில் இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்தம் பிரதானம் —சூரணை-159-

(அவற்றில் -நான்கிலும் உள்ள நான்கு குணங்களுக்குள் -பல குணங்களுக்குள் ஸுவ்ஹார்த்தம் பிரதானம் என்றபடி
நாம் விழித்து இருக்கும் போதும் அவனை மறந்து உள்ளோம் -அவன் உறங்குவான் போலே யோகு செய்து
நம்மை உஜ்ஜீவிக்க விரகு காணும் ஸுவ் ஹார்த்தம் கொண்டவன் அன்றோ )

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

———————————–

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்

கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 

உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் –2-7-2-
சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.–2-7-8-
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2)-2-9-11
கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*–3-3-2-
மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 
தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)–4-8-1-
பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.-4-8-2-
மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 
திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே–4-8-3-
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 
கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.-4-8-4
பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 
குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.–4-8-5-
கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.–4-8-6-
கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 
தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.–4-8-7-
வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.–4-8-8-
குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 
குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.–4-8-9-
பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)–4-8-10-
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)-4-9-1-
தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)–4-9-2-
கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 
இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.–4-9-3-
பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 
புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.-4-9-4-
ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 
சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.–4-9-5-
மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 
பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.–4-9-6-
குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 
எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.–4-9-7-
உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே–4-9-8-
தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 
சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.–4-9-9-
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 
இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.–4-9-10-
கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)–4-9-11-
துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)–4-10-1-
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 
போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!-4-10-2-
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்* 
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!–4-10-3-
ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-4-
பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-
தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-6-
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-7-
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-8-
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-9-
மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)–4-10-10-
——-

ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  –11-1-
எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 
எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*–11-2-
பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 
செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)–11-3-
மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 
பிச்சைக் குறையாகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*  –11-4-     
பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 
நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே* –11-5-
கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.–11-6-
உண்ணாது உறங்காது*  ஒலிகடலை ஊடறுத்துப்* 
பெண் ஆக்கை யாப்புண்டு*  தாம் உற்ற பேது எல்லாம்* 
திண்ணார் மதில் சூழ்*  திருவரங்கச் செல்வனார்* 
எண்ணாதே தம்முடைய*  நன்மைகளே எண்ணுவரே* –11-7-
பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)    –11-8- 
கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 
அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   –11-9-
செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2) –11-10-  
———–

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)-1-1-
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! -1-2-
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே–1-3-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே–1-4-
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே –1-5-
அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே–1-6-
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே–1-7-
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே–1-8-
தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித்*  திருப்புகழ்கள் பலவும் பாடி* 
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்*  மழை சோர நினைந்து உருகி ஏத்தி*  நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*  பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!–1-9-
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)–1-10-
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)–1-11-
தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*
ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)–2-1-
தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  –2-2-
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே–2-3-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-
பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*
மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே–2-5-
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*
தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-
கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே–2-7-
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  –2-9
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10–
மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)–3-1-
நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா*  அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே–3-2-
மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
நாரணன்*  நரகாந்தகன் பித்தனே–3-3-
உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே–3-4-
தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்*  தன் பித்தனே–3-5-
எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே-3-6-
எத் திறத்திலும்*  யாரொடும் கூடும்*  அச்
சித்தந்தன்னைத்*  தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே–3-7-
பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்
பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே–3-8-
அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)–3-9-
தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் படைத்தவனே* 
யாவரும் வந்து அடி வணங்க*  அரங்கநகர்த் துயின்றவனே* 
காவிரி நல் நதி பாயும்*  கணபுரத்து என் கருமணியே* 
ஏ வரி வெஞ்சிலை வலவா*  இராகவனே தாலேலோ (2)–8-10-
————–

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்

அரங்கனே! .தரங்கநீர்*  கலங்க அன்று குன்றுசூழ்,* 

மரங்கள் தேய மாநிலம் குலுங்க*  மாசுணம் சுலாய்,*
நெருங்கநீ கடைந்தபோது*  நின்றசூரர் என்செய்தார்?* 
குரங்கையாளுகந்த எந்தை!* . கூறுதேற வேறிதே.*–21-
கொண்டைகொண்ட கோதைமீது*  தேன்உலாவு கூனிகூன்,* 
உண்டைகொண்டு அரங்கஓட்டி*  உள்மகிழ்ந்த நாதன்ஊர்,*
நண்டைஉண்டு நாரைபேர*  வாளைபாய நீலமே,* 
அண்டைகொண்டு கெண்டைமேயும்*  அந்தண்நீர் அரங்கமே. –49-
வெண் திரைக் கருங்கடல்*  சிவந்துவேவ முன்ஒர்நாள்,* 
திண் திறல் சிலைக்கைவாளி*  விட்டவீரர் சேரும்ஊர்,*
எண் திசைக் கணங்களும்*  இறைஞ்சிஆடு தீர்த்தநீர்,* 
வண்டுஇரைத்த சோலைவேலி*  மன்னுசீர் அரங்கமே. –50- 
சரங்களைத் துரந்து*  வில் வளைத்து இலங்கை மன்னவன்,* 
சிரங்கள் பத்துஅறுத்து உதிர்த்த*  செல்வர் மன்னு பொன்இடம்,*
பரந்து பொன்நிரந்துநுந்தி*  வந்துஅலைக்கும் வார்புனல்,* 
அரங்கம்என்பர் நான்முகத்து அயன்பணிந்த*  கோயிலே.  –51-
பொற்றைஉற்ற முற்றல்யானை*  போர்எதிர்ந்து வந்ததைப்,* 
பற்றிஉற்று மற்றதன்*  மருப்புஒசித்த பாகன்ஊர்,*
சிற்றெயிற்று முற்றல்மூங்கில்*  மூன்று தண்டர் ஒன்றினர்,* 
அற்றபற்றர் சுற்றிவாழும்*  அந்தண்நீர் அரங்கமே.  –52-
மோடியோடு இலச்சையாய*  சாபம்எய்தி முக்கணான்,* 
கூடுசேனை மக்களோடு*  கொண்டுமண்டி வெஞ்சமத்து-
ஓட*  வாணன் ஆயிரம்*  கரங்கழித்த ஆதிமால்,* 
பீடுகோயில் கூடுநீர்*  அரங்கம்என்ற பேரதே.  -53-
இலைத்தலைச் சரம்துரந்து*  இலங்கை கட்டழித்தவன்,* 
மலைத்தலைப் பிறந்துஇழிந்து*  வந்துநுந்து சந்தனம்,*
குலைத்துஅலைத்து இறுத்துஎறிந்த*  குங்குமக் குழம்பினோடு,* 
அலைத்துஒழுகு காவிரி*  அரங்கம்மேய அண்ணலே.–54-
மன்னு மாமலர்க் கிழத்தி*  வையமங்கை மைந்தனாய்,* 
பின்னும் ஆயர் பின்னைதோள்*  மணம்புணர்ந்து அதுஅன்றியும்,*
உன்னபாதம் என்ன சிந்தை*  மன்னவைத்து நல்கினாய்,* 
பொன்னி சூழ் அரங்கம்மேய*  புண்டரீகன் அல்லையே?–55
சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*
கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  –93-
பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*
உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)–119-
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
——————–
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)–1-
பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)–2-
வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகனதாகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*–3-
மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*
இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  –4-
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*
தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!–5-
மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே! –6-
புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*
தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   –7-
வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 
குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!  –8-  

மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*
அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,*
கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.--9-

நாட்டினான் தெய்வம் எங்கும்*  நல்லதோர் அருள் தன்னாலே.* 
காட்டினான் திருவரங்கம்*  உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,* 
கேட்டிரே நம்பிமீர்காள்!*  கெருட வாகனனும் நிற்க,* 
சேட்டை தன் மடியகத்துச்*  செல்வம் பார்த்து இருக்கின்றீரே.  –10-
ஒருவில்லால் ஓங்கு முந்நீர்*  அடைத்து உலகங்கள் உய்ய,* 
செருவிலே அரக்கர் கோனைச்*  செற்ற நம் சேவகனார்,*
மருவிய பெரிய கோயில்*  மதில் திருவரங்கம் என்னா,* 
கருவிலே திருவிலாதீர்!*  காலத்தைக் கழிக்கின்றீரே.  –11-
நமனும் முற்கலனும் பேச*  நரகில் நின்றார்கள் கேட்க,* 
நரகமே சுவர்க்கம் ஆகும்*  நாமங்கள் உடையன் நம்பி,*
அவனது ஊர் அரங்கம் என்னாது*  அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,* 
கவலையுள் படுகின்றார் என்று*  அதனுக்கே கவல்கின்றேனே!  –12
எறியுநீர் வெறிகொள் வேலை*  மாநிலத்து உயிர்கள்எல்லாம்,* 
வெறிகொள் பூந்துளவ மாலை*  விண்ணவர் கோனை ஏத்த,*
அறிவிலா மனிசர் எல்லாம்*  அரங்கமென்று அழைப்பராகில்,* 
பொறியில்வாழ் நரகம் எல்லாம்*  புல்லெழுந்து ஒழியுமன்றே?–13-
வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  –14-
மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல,
பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான்,
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை,
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15
சூதனாய்க் கள்வனாகித்*  தூர்த்தரோடு இசைந்த காலம்,* 
மாதரார் கயற்கண் என்னும்*  வலையுள் பட்டு அழுந்துவேனை,*
போதரே என்று சொல்லி*  புந்தியுள் புகுந்து தன்பால்- 
ஆதரம் பெருக வைத்த*  அழகனூர் அரங்கம் அன்றே? –16-
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்*  விதியிலேன் மதியொன்றில்லை,* 
இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறை-இறை உருகும் வண்ணம்,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு*  என் கண்ணினை களிக்கு மாறே!      –17-
இனிதிரைத் திவலை மோத*  எறியும்தண் பரவை மீதே,* 
தனிகிடந்து அரசு செய்யும்*  தாமரைக் கண்ணன் எம்மான்,*
கனியிருந்து அனைய செவ்வாய்க்*  கண்ணனைக் கண்ட கண்கள்,* 
பனிஅரும்பு உதிருமாலோ*  என்செய்கேன் பாவியேனே!  –18-
குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)–19-
பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*
தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  –20-
பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*
அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? –21-
பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 
ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானும்மல்லன்,*
மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 
பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். –22-

கங்கையிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*
எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!–23-

வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழி லரங்கந் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்*  கமலநன் முகமும் கண்டு*
உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவனென் றுணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்*  கள்ளத்தே கழிக்கின் றாயே!–24-

குளித்துமூன் றனலை யோம்பும்*  குறிகொளந் தணமை தன்னை,*
ஒளித்திட்டே னென்க ணில்லை*  நின்கணும் பத்த னல்லேன்,*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக் கருள்செய் கண்டாய்*  அரங்கமா நகரு ளானே!–25-

போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!–26-

குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
தரங்கநீ ரடைக்க லுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,*
மரங்கள்போல் வலிய நெஞ்சம்*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே*  னயர்க்கின் றேனே!–27-

உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*
நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!–28-

ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!–29-

மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!–30-

தவத்துளார் தம்மி லல்லேன்*  தனம்படத் தாரி லல்லேன்,*
உவர்த்தநீர் போல*  வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*
துவர்த்தசெவ் வாயி னார்க்கே*  துவக்கறத் துரிச னானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய்*  அரங்கமா நகரு ளானே!–31-

ஆர்த்துவண் டலம்பும் சோலை*  அணிதிரு வரங்கந் தன்னுள்,*
கார்த்திர ளனைய மேனிக்*  கண்ணனே! உன்னைக் காணும்,*
மார்க்கமொன் றறிய மாட்டா*  மனிசரில் துரிச னாய,*
மூர்க்கனேன் வந்து நின்றேன்,*  மூர்க்கனேன் மூர்க்க னேனே.–32-

மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*
ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.–33-

உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!–34-

தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*
ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.–35-

மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!–36-

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*
எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!–37-

மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*
காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!–38-

அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*
முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!–39-

திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!–40-

வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*
ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?–42-

பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!–42-

அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*
நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!–43-

பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)–44-

வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*
துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)–45-

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)–1-
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.–2-  
சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  –3-
மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.–4-
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.–5-
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி’*
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. –6-
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   –7-
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.–8-
ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. –9- 
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)–10-
—————-

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)–2-
மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 
அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)–3-
சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.–4-
பாரமாய*  பழவினை பற்றுஅறுத்து,*  என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்*  வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன்*  அரங்கத்து அம்மான்,*  திரு-
வார மார்பத‌ன்றோ*  அடியேனை ஆட்கொண்டதே*–5-
துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.–6-
கையினார்*  சுரி சங்கனல் ஆழியர்,*  நீள்வரை போல்-
மெய்யனார்*  துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
ஐயனார்,*  அணிஅரங்கனார்*  அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ!*  என்னைச் சிந்தை கவர்ந்ததுவே–7-
பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍- 
பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!–8-
ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)–9-
கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)–10-
————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.   –(2)-5-4-1-
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.-5-4-2-
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 
வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே. –5-4-3-   
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 
துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.   –5-4-4-     
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 
உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.–5-4-5-
கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.   –5-4-6-  
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 
மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே–5-4-7-
ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே–5-4-8-
சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  -5-4-9–
அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 
நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.–5-4-10-
வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!’ என்கின்றாளால்* 
மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!–5-5-1-
கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?’ என்னும்*  மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!–5-5-2-
மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-3-
தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!–5-5-4-
பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-5-
தாது ஆடு வன மாலை தாரானோ?’ என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்’ என்னும்*  பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? –5-5-6-
வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? –5-5-7-
உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!’ என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   –5-5-8-
பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?’ என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-9-
சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.–5-5-10-
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-
ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 
தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே. –5-6-3-
வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 
பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  -5-6-4-
நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  –5-6-5-  
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 
வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  –5-6-6-
சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.    –5-6-7-
துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே–5-6-8-
பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   –5-6-9-
ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.      –5-6-10-
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-1-
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-2-
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  –5-7-3-
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     –5-7-4-
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  –5-7-5-  
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. –5-7-6-
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.-5-7-7-
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-8-
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.  -5-7-10-   
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே–5-8-1-
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-2-
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-3-
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-4-
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-5-
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .5-8-6-
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-7-
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. –5-8-8-
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-9-
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.–5-8-10-
தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே–6-6-9-
உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.–7-3-4-
தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    –8-2-7-
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை   நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே  -9-9-2-
கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.–11-3-7-
அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)–11-8-8
இம்மையை மறுமை-தன்னை*  எமக்கு வீடுஆகி நின்ற,* 
மெய்ம்மையை விரிந்த சோலை*  வியன் திருஅரங்கம் மேய,*
செம்மையை கருமை தன்னை*  திருமலை ஒருமையானை,* 
தன்மையை நினைவார் என்தன்*  தலைமிசை மன்னுவாரே   –திருக்குறுந்தாண்டகம் – 7
ஆவியை அரங்க மாலை*  அழுக்குஉடம்பு எச்சில் வாயால் 
தூய்மைஇல் தொண்டனேன் நான்*  சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறுஎன்று*  அஞ்சினேற்கு அஞ்சல்என்று 
காவிபோல் வண்ணர் வந்து*  என் கண்ணுளே தோன்றினாரே. –திருக்குறுந்தாண்டகம் – 12
இரும்புஅனன்றுஉண்ட நீரும்*  போதரும் கொள்க,*  என்தன்- 
அரும்பிணி பாவம் எல்லாம்*  அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என்  கண்இணை களிக்குமாறே.   –திருக்குறுந்தாண்டகம் – 13-
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-
பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்*  பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*  எம்பெருமான் திருவரங்கம் எங்கே?’ என்னும்* 
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
கட்டுவிச்சி சொல்’, என்னச் சொன்னாள் ‘நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?’–திருநெடுந்தாண்டகம் – 11
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*  நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ!  என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*  அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*  இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே!     –12-
முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?–18-
முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   –21-
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே? –23-
இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!–24-
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே! –25-

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்

தண் அம் துழாய்*  வளை கொள்வது யாம் இழப்போம்,*  நடுவே-
வண்ணம் துழாவி*  ஓர் வாடை உலாவும்,*  வள் வாய் அலகால்-
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்*  
எண்ணம் துழாவுமிடத்து,*  உளவோ பண்டும் இன்னன்னவே? –திருவிருத்தம் – 28
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   –7-2-1-
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?–7-2-2-
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?–7-2-3-
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? –7-2-4-
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!–7-2-5-
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. –7-2-6-
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே–7-2-7-
கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?-7-2-8-
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)-7-2-9-
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே–7-2-10-
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)–7-2-11-
————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்

ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 

இன்று மறப்பனோ ஏழைகாள்* – அன்று-
கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை.–முதல்திருவந்தாதி – 6-
———–

ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

————–

ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62

——————-

நான்முகன் திருவந்தாதி

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  – சொல் நின்ற-
தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   
——————

சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் அருளிச் செய்த நூற்று எட்டுத் திருப்பதி அந்தாதி —

ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –

சீதரனே யயன் விபீடணன் தர்மன் சிவன் பரவித்
தீதல புன்னைச் சசி வாவி வேத ஸ்ருங்கம் திகழ்
ஒதரு மானத்து அரங்க மின்னூடு தெற்கு ஓர்ந்து துயில்
மாதவன் அரங்கத்து அரங்கர் சொல் வரன் அருளே –

தர்மன் -தர்ம வர்மன்
புன்னை தலவிருஷம்
சசி வாவி -சந்த்ர புஷ்கரணி
வேத ஸ்ருங்கம் திகழ் ஒதரு மானம் -வேத ஸ்ருங்கம் எனும் ப்ரணவாக்ருதி விமானம்
அரங்கமின் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்
சேவை சாதிக்கும் திக்கு -தெற்கு
சயனத் திருக்கோலம்

எட்டு ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்களில் முதன்மையானது ஸ்ரீமந் நாரயணன், அரங்கனாய் அருளும் திருவரங்கம்.
(மற்றவை – ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி எனும் திருவேங்கடம், முக்திநாத், திருநைமிசாரண்யம்,
தோதாத்திரி எனும் வானமாமலை, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத்).

எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தினையே தனது பெயராகக் தாங்கி, ” திருச் சீரங்கன் பள்ளி ” என அழைக்கப்பட்டது.
பின்னர் அதுவே நாளடைவில் மருவி “திருச்சிராப்பள்ளி” என்றானது

ஏழு மதில்களும் ஏழு உலகங்களின் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
இவற்றை தன்னுள் அடக்கி காட்சி தருகின்றது 8 – வது திருச்சுற்று.
இச் சுற்றில்தான் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் பிரதான நுழைவு வாயிலாக நம்மை வரவேற்கின்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் -13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட, 236 அடி உயர மிகப் பிரம்மாண்டமான இக் கோபுரம்,
மன்னர் கிருஷ்ண தேவ ராயரால் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இது “ராயர் கோபுரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆசியாவிலேயெ மிக உயரமான கோவில் கோபுரம் என்ற பெருமையுடைய இக் கோபுரம் பல இன்னல்களை தாண்டி,
ஆந்திர அஹோபில மடத்தின் 41 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் பெரும் முயற்சியால் 1987 – ல் நிறைவடைந்தது.

ஸ்ரீரங்கத்தின் ஏழு திருமதில்களும் – 7 வது திருமதிலின் பெயர் பூலோகமாகும்.
இதற்கு ராஜ வீதி, சித்திர வீதி, மாட வீதி எனப் பல பெயர்கள் உண்டு.
இங்கு ் கண்ணன் சந்நதயும், ஆஞ்சனேயர் திருக்கோவிலும், வானமாலை மண்டபமும் காணப்படுகின்றன.
7 மதிகளை உள்ளடக்கிய 8 வது சுற்றுக்கு “அடயவளைத்தான் சுற்று” என்று பெயர்.
2 வது திருமதிலின் பெயர் “புவர்லோகம்”. இச் சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது.
பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் இதற்கு உத்திர வீதி என்ற பெயரும் உண்டு.
ஸ்ரீமான் இராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்தை நிர்வகித்ததும், மணவாள மாமுனிகள் தன் அவதார ரகசியத்தை
உத்தம நம்பி எனும் தன் சீடருக்கு காட்டியருளியதும் இங்குதான்.
அஹோபில மடமும், யானை கட்டும் மண்டபமும் இங்கேயே உள்ளன.

ஸூவர்லோகம் என்பது 3 வது திருமதில். நான்முகன் கோட்டை வாசல், அகளங்க சோழன் கட்டியதால்
அகளங்கன் சுற்று என்றும் அழைக்கப்படகிறது. தாயார் சந்நதியும்,, ஆண்டாள் சந்நதியும்,
அழகிய மேட்டு சிங்கர் எனும் நரசிங்கப் பெருமாள் சந்நதியும், எட்டு கரங்களுடன் வரப்பிரசாதியாய் காட்சி தரும் சக்கரத்தாழ்வார் சந்நதியும்,
பேரழகு வாய்ந்த வேணு கோபால கிருஷ்ணர் சந்நதியும், வசந்த மண்டபமும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

கம்பர் பெருமான் தன் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் தாயார் சந்நதியின் எதிரே அமைந்துள்ளது.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியன்று துவங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடைபெறும்.
அரையர் சேவையும் இங்கிருந்தே துவங்கும். இராமானுஜரின் “தானான திருமேனி” உள்ளதும் இங்குதான்.
அரங்கனுக்கு மலர் கைங்கர்யம் செய்திட்ட தொண்டரடிப்பொடியார், பிள்ளை லோகாச்சார்யார், திருப்பாணார்,
கூரத்தாழ்வார் போன்றோரது சந்நதிகளும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

“திரு அந்திக் காப்பு” நடைபெறுவதும் இவ்விடமே. பெருமாள் வீதி் உளா முடித்து வந்ததும்,
சிறு குடத்தின் மீது கிண்னம் ஒனறு வைத்து, அச் சிறியதொரு கீன்ணத்தில் நெய்யிட்டு திருவிளக்கேற்றி
அரங்கனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வே திரு அந்திக் காப்பு எனும் விஷேஷ நிகழ்வு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் அமைந்துள்ளது் இத் திருசுற்றிலேயே.

நடுநாயகமாய் விளங்கும் மஹர்லோகம் எனும் 4 வது சுற்று. இதனை கட்டுவித்த திருமங்கையாரின் பெயர் தாங்கி
“திருமங்கை மன்னன் சுற்று” என்று அழைக்கப்படுகின்றது. ஆலிநாடன் வீதி என்ற பெயரும் உண்டு.
இதன் நுழை வாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். அரங்கனை தன் இருகைகள் கூப்பித் தொழுதவாறு,
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அருளும் 20 அடி உயர கருடாழ்வாரின் சந்நதி இத் திருச்சுற்றிலேயே அமைந்திருக்கின்றது.

கருட சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள பரமன் மண்டபச் சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை.
முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சந்நதிகளும்,
வேறெங்கும் காண இயலாத தன்வந்திரி ப்கவான் சந்நதியும், சந்திர புஷ்கரணியும் அமைந்துள்ளது
இத் திருச்சுற்றின் தனிப் பெரும் சிறப்புகள். சொர்க்க வாசல் திறக்கப்டுவதும் இவ்விடமே.
திருக்கோவில் பிரசாத விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.

ஜநோலோகம் என்பது 5 வது திருச்சுற்றின் பெயர். முன்னொரு சமயம் ஆரியர்கள் எனும் வட நாட்டு அந்தணர்கள்
இத் திரு வாயிலை காவல் புரிந்து வந்ததால் இதற்கு ஆர்யபடவாசல், குலசேகரன் திருச்சுற்று எனறும் அழைக்கப்படுகின்றது.
விஜய நகர மன்னர்களால் உருவாக்கப்பட்ட, 108 தங்கத் தகடுகள் பதித்த கொடிமரமும், உள் கோடை மண்டபமும்,
பரமபத வாசலும் இங்கேயே அமைந்துள்ளன. ஊஞ்சள் உற்சவம் நடைபேறுவதும் இவ்விடமே.

தபோலோகம் என்பது 6 வது திருச்சுற்றின் பெயர். மன்னன் ராஜ மகேந்திர சோழனால் கட்டப்பட்டதால்
இதற்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்ற பெயரும் உண்டு. இதன் நுழைவாயிலுக்கு “நாழிகேட்டான் வாசல்” என்ரு பெயர்.
இங்கு துலுக்க நாச்சியார் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்கும் அறை,
யாக சாலைகள் போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள கிளி மண்டபம் திருமங்கையாரால் கட்டப்பட்டது.

கற்பூர படியேத்தம் எனும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று
இச் சுற்றிலேயே நடைபெறும். ஒரு சமயம் இந் நிகழ்ச்சியை காண வேண்டி விஜய ரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் வர,
அதற்குள் வைபவம் நிறைவுற்றது. தவறாது இதனை காண வேண்டும் என்ற பேராவலில் விஜயரங்க நாயக்கர்
இங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்து அடுத்த ஆண்டு இந் நிகழ்ச்சியை கண்டுகளிததே தன் நாடு திரும்பினார்..

சத்தியலோகம் எனும் முதலாம் திருச்சுற்றை உண்டாக்கியது சோழ மன்னன் தர்ம வர்மன்.
இதன் நுழை வாயிலுக்கு திரு அணுக்கன் திருவாசல் என்று பெயர். கருவறை எனும் மூலவர் சந்நதியில்,
பேரழகுடன் சத்தியலோக பெருமாள் ஆதிஷேஷ அனந்தனின் மீது சயனித்திருப்பது இங்குதான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்க மண்டபம் என்று் பெயர்.
இங்குள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாய் கொண்டு வணங்கப்படுகின்றது.

ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, வேறெங்கும் காண இயலாத வண்னம் தன் இரு புறமும் சுக்கிரீவனையும்,
அங்கதனையும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் 20 அடி உயர கருடாழ்வார்,
உடையவர் ஸ்ரீமான் ராமானுஜர் சந்நதிகள் இச் சுற்றல் உள்ளன. மூலவரை தரிசித்த பின்னர் தரிசிக்க வேண்டிய
“ப்ரணவாக்ருதி விமானம்”, அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் தங்க விக்ரஹம்” போன்றவை ஸ்ரீரங்கத்தின் சிறப்புகள்.

அழகிய சிங்க பெருமாள் அங்கீகரித்த கம்ப ராமாயணம் – கம்பர் பெருமான் தனது கம்ப ராமாயணத்தை இவ்விடமே இயற்றினார்.
கம்பர் மணடபம் தாயார் சந்நதிக்கருகே அமைந்துள்ளது.
கம்பர் தனது ராமாயணத்தில் ஹிரண்யணை வதம் செய்த வரலாற்றை விளக்குகின்றார்.
அது சமயம் இங்கிருந்த பல சமய வல்லுனர்கள் ராமாயணத்தில் ஹிரண்ய சம்ஹாரம் வருவதால்,
இவ்விடம் ராமாயண அரங்கேற்றத்தினை ஏற்கமாட்டோம் என மறுதலித்தனர்.
அவ்வாறயின் எம்பெருமான் முன்பு இக் காவியத்தை அரங்கேற்றுவோம்.
எம்பெருமான் ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் இதனை ஏற்போம்” எனக் கூறி கம்பர் பெருமான்
தனது ராமாயணத்தினை இத் திருக்கோவிலில் அரங்கேற்ற, அது சமயம் சந்நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அழகிய சிங்க பெருமாள் ” கம்பரின் ராமாயண காவியத்தினை யாம் அங்கீகரித்தோம் ” என
சிம்ம கர்ஜனையுடம் பெரு முழக்கம் செய்து ஏற்றுக் கொண்டார்..

ஆழ்வார்களும், ஸ்ரீரங்கமும் – ஆழ்வார்களுக்கும் , ஸ்ரீரங்கத்திற்குமான பிணைப்பு மிக தாத்பரியமானது.
பங்குனி மாத திருவிழாக்களின் பொழுது, அரங்கன் உறையூர் சென்று கமலவல்லியை மணம் புரிந்ததை அறிந்த
ஸ்ரீரங்கத்து பிராட்டியார் அவனுடன் பிணக்கு கொண்டு தவடைப்பார். அது சமயம் நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்திடுவார்.
இந் நிகழ்ச்சி ப்ரணய கலஹம் என திருவரங்க பங்குனி மாத உற்சவங்களில் கொண்டாடப்படுகிறது.

திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு திருமதில் எழுப்பினார். திருநறையூர் சாரநாதன் மீது திருமடல் பாடினார்.
தமக்கு மதில் எழுப்பியதால் மகிழ்ந்த அரங்கன், திருமங்கையாரை அழைத்து தீர்த்தம், சடாரி, மாலை, பரிவட்டம் போன்றன தந்து
“எமக்கும் மடல் உரைக்கலாகாதோ ” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாரோ “மதில் இங்கே மடல் அங்கே ” என்றாராம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் அரங்கனுக்காக சிறு நந்தவனம் ஒன்றமைத்து அனுதினமும் அரங்கனுக்கு பூமாலை சாற்றி வந்தார்.
திருமங்கையார் கோவிலுக்கு திரு மதில் எழுப்பிக் கொண்டிருந்த சமயம் அது. இடையில் நந்தவனம் குறுக்கிட,,
அதனை ஒதுக்கி விட்டு மதில் எழுப்பலானார். மகிழ்ந்த தொண்டரடியார் தனது மலர் கொய்யும் ஆயுதத்திற்கு,
திருமங்கையின் பெயர்களில் ஒன்றான “அருள்மாரி” எனப் பெயரிட்டு நன்றி கூர்ந்தார்

பெரியாழ்வார் அரங்கனுக்கு தன் பெண்ணையே கொடுத்தார். திருமங்கையார் திருமதில் கொடுத்தார்.
தொண்டரடிப்பொடியாரோ தினம் தினம் மலர் கொடுத்தார். திருப்பாணர் அவன்தன் திருவடி கலந்தார்.
மதுரகவியார், அரங்கனுக்காக அவன் விரும்பியவாறு நம்மாழ்வாரை இவ்விடம் கொணர்ந்தார்.
நம்மாழ்வார் பெருமானுக்கும், பிராட்டிக்கும் ஆண்டுதோறும் சமாதானம் செய்கின்றார்.
என்னே அரங்கனின் மாண்பும், ஆழ்வார்களின் பிணைப்பும்.

திருவரங்கத்தில் அனைத்தும் பெரியவைகளே – திருக்கோவில் மிகப் பெரிது.
அதனாலேயே பெரியகோவில் ஆயிற்று. 20 அடி உயர கருடாழ்வார் மிகப் பிரம்மாண்டம். 7 மதில்களும் சுற்றி அமைந்துள்ள தூண்களும் பெரியன.
அரங்கன் பெரிய பெருமாள். தாயார் பெரிய பிராட்டி. இங்கிருந்த நம்பிகள் பெரிய நம்பி.
இங்கு சமர்ப்பிக்கும் தளிகை பெரிய தளிகை. வாத்யம் பெரிய மேளம். பக்ஷசணங்கள் பெரிய திருப்பணியாரங்கள்.
பெண் கொடுத்தவர் பெரியாழ்வார்.

இரு புறம் ஓடும் நதிகளான காவிரியும், கொள்ளிடமும் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனங்கள். 11 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற பாசுரங்கள் 247.
ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் 13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட 236 அடி உயர ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.
மூலவரை தரிசித்து வெளி வந்த பின்னர் தரிசிக்க வேண்டிய “ப்ரணவாக்ருதி விமானமும்”
அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் விக்ரஹமும்” ஸ்ரீரங்கத்தின் தனிப் பெறும் சிறப்புகள்

கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்:

சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading