முதல் மூன்று பாதங்களால் ஸமாதி, ஸமாதியின் சாதனங்கள், ஸமாதியின் விபூதி ஆகியன சொல்லப்பட்டன. இனி ஸமாதியால் உண்டாகும் கைவல்ய நிலை குறித்து சொல்லப்படும்.
ஜந்ம = பிறவியாலும்; ஔஷதி⁴ = மூலிகைகளாலும்; மந்த்ர = மந்திரங்களாலும்; தப: = தபஸாலும்; ஸமாதி⁴ = ஸமாதியாலும்; ஜா: உண்டானவை; ஸித்³த⁴ய = சித்திகள்.
பிறவியிலேயே சிலருக்கு சித்திகள் இருக்கலாம்!
சில மூலிகைகளை உட்கொள்வதாலும், மருந்து தயார் செய்து உட்கொள்வதாலும் சில சித்திகள் அடையப்படும். இதனால் மூப்பு, நரை இல்லாமல் சிலர் இருப்பர்.
காற்றில் பறத்தல் போன்ற சில சித்திகள் மந்திர ஜபங்களால் அடையப்படுகின்றன.
விஸ்வாமித்திரருக்கு தபசால் சித்திகள் உண்டானது. நந்திகேஸ்வரர் மனுஷ உடலில் இருந்து கொண்டே தபஸால் ஈஶ்வர அனுக்ரஹம் ஏற்பட்டு மனித சரீரத்தை தேவ சரீரமாக மாற்றிக்கொண்டார். யோகிகள் ஸம்யமம் செய்து பெறும் சித்திகள் ஸமாதி சித்தி எனப்படும்.
ஜாத்யந்தர = (மனித சரீரத்துக்கு) வேறு விதமாக மாறுதல் (தேவர் முதலான சரீரத்துக்கு) ; பரிணாம: ப்ரக்ரு«த்யா பூராத = ப்ரக்ருதியின் (அனு)ப்ரவேசத்தால் உண்டாகிறது.
பிரதானம் முதல் ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்கள் வரை உள்ள தத்துவங்களை ப்ரக்ருதி என்ற பதத்தால் கிரஹித்துக் (எடுத்துக்) கொள்ள வேண்டும்.
இந்த தத்துவங்கள்தானே மானுட சரீரத்துக்கு காரணம்? தேவ சரீரத்துக்கும் அவையே காரணம். அவை எங்குமிருக்கின்றன. ஆகவே ப்ரக்ருதியின் தேவையான பகுதிகள் மனித உடலில் புகுமானால் அது மறைந்து தேவ சரீரம் உண்டாகக்கூடும். அதர்மம் முதலிய தடைகளின் நீக்கம், யோகியின் ஸங்கல்பம், யோகத்தால் உண்டான தர்மம் இவை அதற்கு நிமித்த காரணமாகும். இவை சாதாரணமாக உண்டாகாது ஆகையால் இவற்றை நாம் காண்பதில்லை.
இப்படி ப்ரக்ருதி பிரவேசம் செய்வது தர்மம் முதலியவற்றை ஒட்டியா இல்லையா? இல்லை எனில் ஏன் எங்கும் எப்போதும் அப்படி நடப்பதில்லை? அப்படி இருப்பின் அது தர்மம் முதலான புருஷார்த்தங்களை ஒட்டி என்றாகி தர்மம் முதலானவை ப்ரக்ருதியை கட்டுப்படுத்தும் என்றாகிவிடுமே?
நிமித்தம் = தர்மம் – அதர்மம்; ப்ரக்ரு«திநாம்° = ப்ரக்ருதியின் ப்ரவ்ருத்திக்கு காரணமாக; அப்ரயோஜகம்° =தூண்டுவனவாக ஆவதில்லை; து = ஆனால்; வரணபே⁴த³ = ப்ரதி பந்தக நிவ்ருத்தி (தடை நீங்குதல்); தத: = அந்த தர்மத்தினால்; க்ஷேத்ரிகவத் = விவசாயி போல (உண்டாகிறது).
விவசாயி ஒரு வயலில் நீரை நிரப்பிவிட்டு பின் மற்றொரு வயலுக்கு நீர் பாய்ச்ச அவற்றின் இடையில் உள்ள வரப்பை வெட்டிவிடுவான். வரப்பு என்ற தடை நீங்கியதும் நீரும் தானாக மற்ற வயலுக்கு பாயும். அது போல தர்மங்களால் மற்றொரு சரீரத்துக்கு மாற இருந்த பிரதிபந்தகம் (தடை) நீக்கப்படலாம். அதே போல அதர்மத்தாலும் அது நீக்கப்படலாம். (நகுஷன் தேவ சரீரம் இழந்து மலைப்பாம்பாக மாறியது)
நேரடியாக வளர்ச்சிக்கு காரணமாகாவிட்டாலும் வளர்ச்சிக்கான தடைகளை தர்மாதர்மங்கள் நீக்கக்கூடும்.
நிர்மாண = (யோகி சங்கல்பிக்கிறான்; அதை ப்ரக்ருதி தன் அஹங்கார ரூபத்தில் இருந்து அனுசரிக்கிறது. உறுப்புகளில் அது ப்ரவேசிப்பதால்) நிர்மாணிக்கப்பட்ட ; சித்தாநி = மனதுகள்; அஸ்மிதா மாத்ராத் = அஹங்காரத்தில் இருந்து. (உண்டாகின்றன.)
ஒரே நேரத்தில் பல விஷயங்களை அனுபவிக்க யோகி பல சரீரங்களை ப்ரக்ருதியின் மீதுள்ள பலத்தால் எடுத்துக்கொண்டால் பல சித்தங்கள் இருக்குமா? ஒன்றுதான் இருக்குமா? யோகியின் சங்கல்பத்தால் அஹங்காரத்தில் இருந்து உண்டான மனதுகள் பலவாகும் என்று இந்த சூத்திரம் சொல்கிறது.
அனேக சரீரங்கள் இருந்தால் அவற்றின் அபிப்பிராயம் ஒன்றாயிருக்க முடியாது; ஒரு சரீரத்தில் அனுபவித்ததை இன்னொன்றில் உள்ள மனது நினைக்க முடியாது; ஆகவே மனசை ஒன்றாகவே சொல்லவேண்டும் என ஆட்சேபித்தால் …
ப்ரவ்ரு«த்தி பே⁴தே³ = ப்ரவ்ருத்தியின் பேதங்கள்; ப்ரயோஜகம்° சித்தம் ஏகம் = தூண்டுகின்ற சித்தம் ஒன்றே; அநேகஷாம் = (யோகியால் உண்டுபண்ணப்பட்ட) அனேக சித்தங்களுக்கு;
ஒரு அரசன் பல அதிகாரிகளை நியமித்து பல வேலைகளை நடக்கச்செய்யும் போதே அனைவரும் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் செயல்பட மேற்பார்வை இட இன்னொரு அதிகாரியையும் நியமிக்கிறான். அது போல யோகி பல சரீரங்களை படைத்து அவற்றுக்கு அதிகாரி போல மனங்களையும் படைத்து எல்லாவற்றையும் அந்தந்த வேலையில் தூண்டிவிட இன்னொரு மனதையும் படைக்கிறான். இந்த இன்னொரு மனதின் தூண்டுதலாலேயே மற்ற மனதுகள் நடப்பதால் (ப்ரவிருத்திப்பதால்) ஒன்றுக்கொன்று விரோதம் சம்பவிக்காது.
தத்ர = அங்கே (சித்தி பெற்ற சித்தங்களில்); த்⁴யாந அஜம் = த்யானத்தால் உண்டான சித்தம்; அநாஶயம் = கர்ம க்லேச வாசனைகள் இல்லாததாகும்.
இதுவே கைவைல்லியத்தை அடைய தகுதியானது.
முன்னே சித்திகள் உண்டாகும் வகைகளை பார்த்தோம் இல்லையா? அவற்றில் த்யான சமாதிகளால் சித்திகளை அடைவது ஐந்தில் ஒன்றாக பார்த்தோம். ஆனால் அதுவே கைவைல்லியத்தை அடைய தகுதி உள்ளது என்கிறார்.
கர்ம = கர்மாவானது; அஶுக்லா க்ரு«ஷ்ணம்° = வெண்மையாகவும் கருப்பாகவும் இல்லாமல் (ஆகிறது) யோகி³ந: யோகிகளுடையன; த்ரிவித⁴ம் = வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது என மூவிதமாக; இதரேஷாம் = மற்றவர்களுடையன.
வெண்மை என்பது புண்ணிய கர்மாக்கள்; கருப்பு என்பது பாப கர்மாக்கள்.
ஆனால் நாம் செய்யும் கர்மாக்கள் பெரும்பாலும் இரண்டும் கலந்தே இருக்கும். இவை வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது எனலாம். யாகம் செய்தால் அவற்றில் நெல், அரிசி குத்தி எடுக்கும்போது கூட சில சிறு உயிரினங்களின் ஹிம்ஸை ஏற்படுகிறது. தக்ஷிணை, தானம் என்று புண்ணிய கர்மாக்களும் அடங்குகின்றன. ஆகவே இவை பாப புண்ணியம் கலந்ததாகவே இருக்கும்.
யோகி வெளியில் உள்ள வஸ்துக்களை விலக்கிவிட்டதால் அந்த கர்மாக்களை செய்வதில்லை. அவனால் செய்யப்படும் யோக அனுஷ்டானத்தின் பலனோ ஈஶ்வர அர்ப்பணத்தால் அவனுக்கு மோக்ஷம் ஒன்றையே பலனாக கொண்டதாகின்றது. அதனால் அவனது செய்கைகள் அஶுக்லா க்ருஷ்ணம். அதாவது அதில் புண்ணியமோ பாபமோ இல்லை. ஆகவே இதுவே மோக்ஷத்துக்கு யோக்யதை உள்ளதாகிறது.
தத: அவற்றிலிருந்து (முன் கூறிய மூவித கர்மாக்களால்) தத்³விபாக அநு கு³ணாநாம் = அந்தந்த கர்ம பலனான ஜாதி, ஆயுள், போகம் இவற்றுக்கு அனு குணமான; ஏவ = நிச்சயமாக; அபி⁴வ்யக்தி =வெளிப்படுதல்; வாஸநாநாம் = ஸம்ஸ்காரங்களுக்கு;
ஒரு கர்மா பலன் தரும்போது தேவர், மனிதர் முதலான பிறவி எது கிடைக்கும்; அதில் என்ன ஆயுள் கிடைக்கும், அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்கள் என்ன என்று மூன்று வித பலன்களை நிர்ணயித்து விடுகிறது. ஒரு ஜீவன் பல வித பிறவிகளை அடைகிறது. அந்தந்த பிறவிக்கு தகுந்தபடியே வாசனைகளும் செயல்படும், அவற்றின் வெளிப்பாடும் இருக்கும். பூனை பிறவியில் எலியை பிடித்தலே வாசனையாக வெளிப்படும். மனித ஜன்மம் எடுத்தால் தேவ போக வாசனைக்கு வெளிப்பாடு உண்டாகாது.
இந்த ஸம்ஸ்காரம் – வாசனை இதெல்லாம் என்ன?
ஜாதி தே³ஶ கால வ்யவஹிதாநாம் அபி = ஜாதி, தேசம், காலம் ஆகியவற்றால் விலகி இருந்தாலும்; ஆநந்தர்ய = தடை இல்லாதது போல வேலை செய்யும் சக்தி; ஸ்ம்ரு«தி = நினைவிற்கும்; ஸம்°ஸ்காரயோ = நினைவுக்கு காரணமான ஸம்ஸ்காரங்களுக்கும்; ஏகரூபத்வாத் = ஒரே ரூபத்தை முடையதாக இருப்பது; (இப்படியாக அங்கீகரிக்கப்படுகிறது)
சுகமோ துக்கமோ ஒரு விஷயத்தை அனுபவிப்பதால் சித்தத்தில் ஏற்படும் தர்மமோ, அல்லது அனுபவத்தின் ஸூக்ஷ்ம நிலையோ வாசனை எனப்படும். ஒரு ஜீவன் பல பிறவிகளை அடைகிறது. முன்னர் ஒரு கல்ப காலம் முன்தான் மனித பிறவி இருந்தது என்றாலும் கூட இப்போது மனிதப்பிறவி வாய்க்கையில் போன மனித பிறவியில் ஏற்பட்ட வாசனைகளே இப்போது வெளிப்படும். வெகு காலமாகிவிட்டதால் அது மறந்துவிடும் என்று இல்லை. முன் பிறவியில் தேவனாக இருந்து இருந்தால் கூட இப்போது அந்த வாசனைகள் வெளிப்படாது. சமீபத்தில் இருந்த பிறவி என்பதால் அது இப்போது வெளிப்படாது. சின்னஞ்சிறு குழந்தை (பசித்தால்) எப்படி அம்மாவின் மார்பை நாடுகிறது? முன் மனித பிறவி வாசனையே! இவ்விதமே மற்ற ஸம்ஸ்காரங்கள்.
தாஸாம் = அவற்றுக்கு (முந்தைய ஜன்ம வாசனைகளுக்கு) ; அநாதி³த்வம் =ஆதி இல்லாமல் இருப்பது என்பது; ஆஶிஷோ = எப்பொழுதும் உயிருடன் இருக்க வேண்டும்; மரணத்தை அடையக்கூடாது என்ற ப்ரார்த்தனை; நித்யத்வாத் = எல்லா ப்ராணிகளுக்கும் இருப்பதால்; (அங்கீகரிக்கத்தக்கது)
எல்லா ப்ராணிகளும் உயிருடனேயே இருக்க விரும்புகின்றன. மரணத்தை யாரும் வரவேற்பதில்லை. சிறு குழந்தையும் நழுவும் நிலை ஏற்பட்டால் கைக்கு கிடத்ததை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. இந்த பயம் முன் பிறவி இல்லாமல் ஏற்படுவதல்ல. அந்த முன் பிறவியில் இருந்திருக்க வேண்டிய மரண பயம் அதற்கு முன் ஒரு பிறவி இருந்திருக்க வேண்டுமென காட்டுகிறது. இப்படியே முன் ஜன்மம், அதற்கு முன் ஜன்மம் என்று போவதால் வாசனைகள் ஆதி இல்லாதவை -அநாதி- என்று ஏற்படுகிறது.
ஹேது = (வாசனைக்கு) ஏதுவானவை [காரணமானவை] (அவித்யா, அஸ்மிதா முதலான காரணங்கள்) ப²ல =பலனான (ஜாதி, ஆயுள், போகம் ஆகியன); ஆஶ்ரய = மனதாகிய பற்றுதலாலும் (ஆஶ்ரயத்தாலும்); ஆலம்ப³நை: = (நல்ல சப்தம் முதலான) சுகமான விஷய பற்றுதல்களாலும் (ஆஶ்ரயங்களாலும்); ஸம்°க்³ரு«ஹீதத்வாத் = இவற்றுடன் சேர்ந்தே இருப்பதால்; ஏஷாம் = இவற்றின் (ஹேதுக்களின்) அபா⁴வே = இல்லாமை ஏற்பட்டால்; தத³பா⁴வ = வாசனையின் இல்லாமையும் ஏற்படுகிறது.
வாசனைக்கு எது காரணமோ அதை நீக்கினால் வாசனையும் இல்லாமல் போகும். அவித்தையே வாசனைக்கு முக்கிய காரணம். இந்த அவித்தை முதலான ஹேதுக்கள் பற்றுதலை முக்கியமாக கொண்டவை. ஆகவே மனது, சுக விஷயங்கள் ஆகியவற்றில் பற்றை நீக்க ஹேதுக்களும் நீங்கும்.
அதீத =இறந்த கால; அநாக³தம்° = வரப்போகின்ற; ஸ்வரூபத: = (சக்தி) ரூபமாக; அஸ்தி = இருக்கிறது; அத்⁴வ பே⁴தா³த்³ = (முக்காலத்திலும்) அவஸ்தைகள் ஒவ்வொரு வஸ்துவிலும் தனித்தனியே அனுபவிக்கப்படுவதால்; த⁴ர்மாணாம்= கார்யமாகிய தர்மங்களுக்கு;
இல்லாதது உண்டாவதில்லை; இருப்பது அழிவதில்லை என்று கீதை வாக்கியப்படி (நாஸதோ வித்3யதே பா4வ: நாபா4வோ வித்3யதேஸத: ) இருக்கும் போது எப்படி வாசனைகள் அழியக்கூடும்?
சத்தான வஸ்துக்களுக்கு இல்லாமை என்பது சம்பவிக்க முடியது என்பது சரியே.
ஒரு காரியத்துக்கு காலத்தை ஒட்டி நிலைகள் 3 இருக்கிறது. அது வெளிப்பட்டு மறையும். அதற்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம். இந்த 3 காலங்களில் ஏதோ ஒன்றில் எல்லாமே இருந்து தீர வேண்டும்.
“வேதா3ஹம் ஸமதீதாநி வர்த்தனமானாநி ச அர்ஜுன ப4விஷ்யாணி ச பூதாநி” – மூன்று அவஸ்தைகளிலும் வஸ்துக்களை நான் சாக்ஷாத்காரம் செய்கிறேன் என்று ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னபடி…
காரியம் நடப்பில் இருக்கும்போது நமக்கு தெரிகிறது. உண்டாகும் முன்னும் நடந்த பின்னும் அது சக்தி ரூபமாக இருக்க வேண்டும். அப்போதுதானே அது சாக்ஷாத்கரிக்கப்பட முடியும்? சக்தி வடிவமாக காரணத்தில் ஒடுங்கி இருக்கும் இதைத்தான் பரிணாம-த்ரய ஸம்யமாத். .. (விபூதி பாதம், 16) என்று யோகிகள் சாக்ஷாத்காரம் செய்கின்றனர்.
வாசனைகள் ஸத்காரிய வஸ்துக்கள்; அவை முற்றும் நாசமாகா. இருந்தாலும் அவை நிகழ்காலத்தில்தானே நமக்கு வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன? அப்படி வெளிப்படுத்திக்கொண்டு கணக்கில்லா பரிமாணங்களை அடைகின்றன. இதுவே பந்தம் அல்லது சம்சாரம் எனப்படும்.
தத்துவ க்ஞானத்தால் “சரி, நடந்தது நடந்துவிட்டது, விடு” என்று அவற்றை இறந்த காலத்துக்கு தள்ளிவிட்டால் பந்தம் போய் விடுவதால் அவை நம்மை பாதிக்கமாட்டா. விவேகக்யாதி அடைந்த சித்தமுள்ளவனுக்கு இந்த வாசனைகள் மீண்டும் வெளிப்படா.
மோக்ஷ நிலையில் இருப்பவனுக்கு வாசனைகள் சக்தி ரூபமாகவே இருந்துவிடும்; பந்தகம் ஆவதில்லை.
முக்காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் ஸ்வரூபத்தால் இருக்குமெனில் ‘இறந்த’ மற்றும் ‘வரும்’ காலங்களில் அவற்றின் ஸ்வரூபம் என்ன?
வ்யக்த = நிகழ் காலத்திலும்; ஸூக்ஷ்மா = சென்ற காலம், எதிர்காலம் (இவற்றின் சம்பந்தத்தை அடைந்தும் இருக்கிற); தே = அவை (மஹத் தத்வம் முதல் விசேஷம் உள்ள குடம் வரை எல்லா கார்யங்களும்); கு³ணாத்மாந: = முக்குணங்களின் சொரூபமாக இருக்கின்றன.
எல்லாப்பொருட்களும் சுக, துக்க, மோஹம் ஆகியவற்றை பொருந்தியதாக உள்ளன. ஆகவே இவை சுக துக்க மோஹமான முக்குணங்களிலிருந்தே வருகின்றன. குடத்தை மண்ணாக பார்ப்பது போல சுக துக்க மோஹங்களை முக்குண வடிவமாகவே பார்க்கலாம்.
குணங்கள் நித்தியமானவை; ஆனாலும் அவற்றின் மாறுதல் அடைந்த வடிவங்களான எல்லா காரிய வஸ்துக்களும் கணத்துக்கு கணம் நாசமடைகின்றன. புருஷ தத்துவமோ பிரக்ருதியான ஸத்வம் ஆகிய குணங்களில் இருந்து வேறுபட்டது. அதிலிருந்து வந்த மஹத் போன்றவற்றில் இருந்தும் வேறுபட்டது. கூடஸ்தன் எனப்படுகிறது.
எல்லா காரியங்களுக்கும் முக்குணங்களே காரணமானால் எப்படி ஒவ்வொரு காரியங்களுக்கும் வேற்றுமை இருக்கிறது?
பரிணாம = பரிணாமங்களில்; ஏகத்வாத்³ = ஒருமை; வஸ்துதத்வம் = மஹத் முதலான தத்துவங்களில்;
ப்ரக்ருதியில் க்லேச (மனச்சலன) வாசனைகள் அநாதியாகவும் வெவ்வேறாகவும் இருப்பதால் அவற்றை ஒட்டி காரியம் வேறுபடுகிறது.
முக்குணங்கள் இருப்பினும் அவற்றில் ஒன்று பிரதானமாகவும் மற்ற இரண்டும் அங்கமாகவும் இருக்கும். ஸத்வ குணம் ப்ரதானமான போது மஹத் என்ற பரிணாமம். ரஜஸ் ப்ரதானமானபோது அஹங்காரம் என்ற பரிணாமம். தமஸ் ப்ரதானமானபோது பஞ்ச தன் மாத்ரை என்ற பரிணாமம்.
இதே போல அஹங்காரத்தில் இருந்து:
சத்வ ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து ஞானேந்திரியங்கள்.
ரஜஸ் ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து கர்மேந்திரியங்கள்.
ஸத்வம் ரஜஸ் சமமாக உள்ள அஹங்காரத்தில் இருந்து மனஸ் ஆகியன உண்டாகின்றன.
தன்மாத்திரை என்பது 5 வித தத்துவங்கள்.
1.சப்தம். 2.ஸ்பர்சம். 3.ரூபம். 4.ரஸம். 5.கந்தம்.
சப்தம் ப்ரதானமாகவும் மற்ற தன் மாத்திரைகள் அங்கமாகவும் இருக்கும்போது ஆகாசம் என்ற பரிணாமம் உண்டாகிறது.
இதே போல ஸ்பர்சம் – வாயு; ரூபம் – அக்னி; ரஸம் – ஜலம்; கந்தம் -ப்ருத்வீ; என ஊகித்தறியவும்.
இப்படி எது ப்ரதானமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தனித்துவம் உண்டாகிறது.
வஸ்து ஸாம்யே அபி = அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும்; சித்த பே⁴தா³த் = சித்தம் என்பது வித்தியாசப்படுவதால்; தயோர் = அவற்றின்; விவிக்த: = வேறுவேறான; பந்தா²: = வழிகள் (ஆக இருக்கின்றன)
பௌத்தர்களின் வாதம் என்னவெனில் ஞானத்தை தவிர்த்து ஏதுமே இல்லை. உலகில் ஒவ்வொரு கணமும் உண்டாகி அழியும் பொருட்களே இருக்கின்றன. இவற்றை அறியும் அறிவுக்கும் பொருட்களுக்கும் வேறுபாடு இல்லை. கணத்தில் தோன்றி மறையும் வஸ்துக்களே இருப்பதால் அனேக விசித்திரமானவையாக அவை தோன்றுகின்றன. ஆக ஞானத்தைத்தவிர ஏதுமே இல்லை. ஆக காரணங்களின் உண்மையான சொரூபம் முக்குணங்களே என்பது சரியில்லை.
அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும் அறிகின்ற மனிதர்களில் வேற்றுமை இருக்கிறது. அதனால் வெவ்வேறான விளைவுகள் உண்டாகின்றன.
ஒரு பெண் இருக்கிறாள். அவளைப்பற்றி அவளது கணவனுக்கு ஏற்படுவது ஸுக ஞானம். அவளது குழந்தைக்கு ஏற்படுவது பாசம். அவளது சக்களத்திமார்களுக்கு ஏற்படுவது துக்கம். அவளிடம் ஆசை கொண்ட ஒருவனுக்கு உண்டாவது மோஹம். சம்பந்தமில்லாத மூன்றாம் மனிதன் ஒருவனுக்கு ஏற்படுவது உதாசீனம். இப்படி அறியப்பட்டது ஒன்றாயிருக்க உண்டாகும் அறிவின் தன்மை வெவ்வேறாக இருக்கலாம்.
ஆகவே ஞானத்தால் அறியப்பட்டதும் ஞானமும் ஒன்று என்பது பொருத்தமில்லை. அறிவோர் இடத்து முக்குணங்களில் எது தலை தூக்குகிறது என்பதைப்பொறுத்து ஞானம் அமையும்.
ந ச = ஆகாது; ஏக = ஒரு; சித்த தந்த்ரம் = சித்தத்தின் தந்திரம் (ஒருவனது ஞானத்தால் உண்டுபண்ணதாக); வஸ்து = வெளியில் உள்ள குடம் போன்ற வஸ்து; தத³ = பின்னால் (வஸ்துவை உண்டு பண்ணிய சித்தம் வேறு விஷயத்தில் நாட்டம் கொண்டால் அறியப்பட்ட வஸ்து); அப்ரமாணகம்° = ப்ரமாணம் இல்லை என்பதால்; ததா³ கிம்° ஸ்யாத் = இல்லாமல் போகுமா என்ன?
திருஷ்டி ஸ்ருஷ்டிவாதிகள் சொல்வது என்னவென்றால் விக்ஞானத்தை விட பொருள் வேறாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ஜடம். ஞானத்தால்தான் அது தோற்றத்தை அடைய வேண்டும். மனசு என்று ஒன்று அறிவதால்தான் ஒரு பொருள் இருக்கிறது. அறிய ஒன்றும் இல்லையானால் பொருள் இல்லை. ஆகவே அறியப்படும் வஸ்துக்களும் ஞானம் இருக்கும் போது மட்டுமே இருக்கின்றன. மற்ற நேரங்களில் இருப்பதாக சொல்ல ஆதாரம் ஏதுமில்லை. எப்படி சுக துக்கங்கள் இருக்கும் போது அவை அனுபவிக்கக்கூடியவையாக இருக்கிறதோ; நாமும் அதனால் அவற்றை ஒப்புக்கொள்ளுகிறோமோ அதே போல பொருட்களையும் அனுபவத்தில் இருக்கும்போது மட்டுமே ஒப்புக்கொள்ள வேன்டும்.
இதை இங்கு பதஞ்சலி ஆக்ஷேபிக்கிறார்.
ஒரு குடத்தை பார்க்கிறோம். அதனால் அதன் இருப்பு ஏற்படுகிறது எனில் அது ஒருவர் பார்த்ததாலா, பலர் பார்த்ததாலா? ஒருவர் பார்ப்பதை நிறுத்திவிட்டால் அது இல்லாமல் போகுமா? ஒருவர் பார்த்து குடம் உண்டானால் மற்றவர் பார்க்க பார்க்க காரணம் (பொருள் உண்டாவதன் காரணம்) மாறிக்கொண்டே இருப்பதால் குடம் அழிந்து அழிந்து தோன்ற வேண்டுமே? அப்படியா நடக்கிறது? இல்லை அது ஒருவனுடைய சித்த ஆதீனம் (சித்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது) என்றால் அவன் அதை பார்ப்பதை நிறுத்த மற்றவரும் பார்க்க முடியாமல் போக வேண்டும். அப்படியும் அனுபவத்தில் இல்லை.
இதனால் வெளி வஸ்துக்கள் ஒருவரது ஆதீனத்தில் இல்லை.
ந = இல்லை; தத் = அதன்; ஸ்வாபா⁴ஸம்° = சுயமாக ப்ரகாசமாக; த்³ரு«ஶ்யத்வாத் = (நீலம் சிவப்பு போன்ற ரூபங்கள் கோபத்துடன் இருக்கிறேன், சுகமாக இருக்கிறேன் போன்ற) விருத்தி ஞானத்துக்கு விஷயமாக இருப்பதால்;
சித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசமாக இருந்தல் இல்லை. (அதனால் சித்த விருத்தியால் புருஷனை காண இயலாது.)
ஏக ஸமயே = ஒரே நேரத்தில்; ச உப⁴யாந் அவதா⁴ரணம் = இரண்டு வஸ்துக்களை க்ரஹித்தல் என்பது ஸம்பவிக்காது.
சிவப்பு பச்சை என சித்த விருத்தி விஷயங்களை அறியும். ஆனால் அது தன்னையே அறியாது. சித்த விருத்திக்கு சுய ப்ரகாசம் இல்லை. சித்தம் மற்ற விஷயங்களை அறிந்தாலும் அதை அறிய வேறு ஒன்று தேவைப்படுகிறது.
இந்த ‘வேறு ஒன்று’ இன்னொரு சித்த விருத்தி இல்லை. ஏனெனில்…
சித்தாந்தர த்³ரு«ஶ்யத்வே = (சித்த விருத்தியானது) வேறொரு சித்த விருத்தியால் க்ரஹிக்கப்படுவதாக ஆகுமானால்; பு³த்³தே⁴ர் = சித்த விருத்தி விஷயமான சித்த விருத்திக்கு; அதிப்ரஸங்க³: = முடிவில்லாமையும்; ஸ்ம்ரு«தி ஸம்°கரஶ்ச = எல்லா விருத்திகளுக்கும் ஸ்மரணமும் (ஏற்படும்.)
ஒரு பொருளை பார்க்கிறோம். இது பற்றி சித்தம் ஒன்று நினைக்கிறது. அடுத்த கணம் வேறொன்றை நினைக்கிறது. முன் வந்த எண்ணத்தை புதிதாக வந்தது கிரஹிக்குமா? இதை அடுத்து வரும் சித்த விருத்தி கிரஹிக்குமா? இப்படி நிகழும் என்று ஏற்றுக்கொண்டால் இது ஒரு முடிவில்லாத நீழல் ஆகிவிடும். எதுவும் நிர்ணயமும் ஆகாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நினைவும் ஏற்படும். நடைமுறையில் ஒரு குடத்தைப்பார்க்கும் போது அதை ஒட்டி எழுந்த நினைவுகள் ‘எல்லாமே’ நினைவுக்கு வருவதில்லையே! ஆகவே இது சரியில்லை. ஒரு சித்த விருத்தி இன்னொன்றால் க்ரஹிக்கப்படுவதில்லை.
ஒரு எண்ண ஓட்டம் நிகழும் போது ஒன்றை மறந்தே இன்னொன்று வருகிறது. ஜபம் செய்ய உட்காருகிறோம். மனசு அலை பாய்கிறது. ஜபத்தை விட்டு ‘இன்று என்ன டிபன்? அடைக்கு அரைத்துக் கொண்டு இருந்தார்களே? அப்ப அடைதான் டிபன்; அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லையே? வயிறு வலிக்கும்; அட! டாக்டர் பில் கட்ட மறந்தே போச்சு; அடுத்த வீட்டு பையனுக்கு டாக்டர் சீட் கிடைச்சு இருக்காமே..’ இந்த ரீதியில் எண்ணத்தொடர் சம்பந்தமில்லாமல் போய் கொண்டே இருக்கும். ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. சிறிது நேரம் போனால் இப்படி என்னவெல்லாம் எண்ணம் எழுந்தது என்பதும் நினைவில் இல்லாமல் போய் விடும்.
சிதே: = புருஷனுடைய; (சன்னிதான பலத்தால்) அப்ரதி ஸங்க்ரமாயா: = விஷயத்துடன், க்ரியையை முன்னிட்டு ஏற்படும் சம்பந்தம் இல்லாத; ததா³காராபத்தௌ = புருஷனுடைய பிரதிபிம்பமாக புத்தி ஆகும்போது; ஸ்வ பு³த்³தி⁴ ஸம்°வேத³நம் = புருஷனுக்கு அவனால் போக்யமான சித்த விருத்தியின் அனுபவம் உண்டாகிறது.
கிரியை செய்பவன் கர்த்தா ஆவான். (செயலை செய்பவன்). அதன் பலனை அவனே அனுபவிப்பவனாகவும் (போக்தா) ஆகிறான். புருஷனுக்கு செயல் என்பதில்லை எனில் எப்படி போக்தாவாக ஆவான்?
புத்திக்கு க்ரியையை முன்னிட்டு வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இது போல புருஷனுக்கு குடம் போன்ற வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் இல்லை. புருஷனுக்கு பரிணாமமே இல்லை. க்ரியையும் இல்லை.
ஸந்நிதி பலத்தால் புத்தியில் புருஷனின் ப்ரதி பிம்பம் ஏற்படுகிறது. இந்த புத்தியிலேயே சித்த விருத்தியின் சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த ப்ரதி பிம்பம் ஏற்படுவதையே புருஷனின் போகம் என்கின்றனர். சூரியன் அசையாதிருக்கும்போது ஜலத்தில் தெரியும் அதன் பிம்பம் ஜலம் அசைவதால் அசைவுறுவது போல புருஷனுக்கு எந்த விகாரமுமில்லை; இருந்தாலும் அப்படி விகாரம் உள்ளது போல தோன்றுகிறது.
த்³ரஷ்ட்ரு = பார்க்கிறவன்; «த்³ரு«ஶ்யோபரக்தம்° = பார்க்கப்படும் வெளி வஸ்துக்கள் உடன் கூடியிருப்பதால்; சித்தம்° = சித்தமானது; ஸர்வார்த²ம் = எல்லா வஸ்துக்களையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.
ஒரு பக்கம் காண்பவனான புருஷனுடனும் மறு பக்கம் பார்க்கப்படும் பொருட்களுடனும் சித்தம் சம்பத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே இது எல்லாவற்றையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.
ஜலத்தில் பிரதிபலித்த சந்திரன் வானத்தில் உள்ள சந்திரன் இல்லை என்பது போல சித்தத்தில் ப்ரதிபலிக்கிற புருஷன் நிஜ புருஷன் இல்லை. ஆனால் சித்தத்தில் பிரதிபலிப்பதையே புருஷனாக விவேகம் இல்லாதவர் எண்ணுகின்றனர். உண்மையில் பார்க்கிறவன் என்பது சித்தத்தில் உள்ள புருஷனின் ப்ரதிபிம்பமே. அதனால் சித்தம் எல்லாப்பொருட்களையும் காண்பித்து கொடுப்பதாகிறது.
தத்³ = அது; அஸம்°க்²யேய = எண்ணற்ற; வாஸநாபி⁴: = வாசனைகளால்; சித்தம் அபி =சித்தம் கூட; பரார்த² = தன்னிலும் வேறான ஒரு தத்துவத்துக்கு அங்கமாகிறது; ஸம்°ஹத்யகாரித்வாத் = இன்னொன்றின் உதவியை எதிர்பார்த்தே காரியம் செய்வதால்;
யோக சித்தாந்தப்படி சித்தம் எண்ணற்ற வாசனைகளுடன் கூடியது. சுக துக்கங்கள் இதிலேயே உள்ளன. அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவனுக்காகவே உள்ளது; அதாவது அவனுக்கு அங்கமானது என்பது ஒரு பார்வை. இந்த முறைப்படி, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் சித்தத்துக்குத்தான் என்று பெயர் பெறும்; வேறு ஒன்றுக்கு இல்லை; ஆகவே சித்தமே எல்லாம் செய்யுமென்றால் புருஷன் என்று ஒன்று தேவையில்லை என்பது ஒரு வாதம்.
ஆனால் சித்தமானது தன்னிலும் வேறான இந்திரியங்கள், சரீரம் இவற்றின் உதவி கிடைத்தால்தான் தன் காரியங்களை செய்து கொள்ளுகிறது. வீடு தோட்டம் ஆகியன ஒரு எஜமானனுக்காக உள்ளவை. எஜமானன் இல்லையானால் அவை சீரழிந்து இல்லாமல் போய்விடும். இதே போல சித்தம் தன்னிலிருந்தும் வேறான ஒரு தத்துவத்துக்கு போக்யம் (அனுபவிக்கப்படுவது) ஆகிறது; அந்த தத்துவமே புருஷன் எனப்படும்.
விஶேஷ த³ர்ஶிந = முன் சொன்ன யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு; ஆத்ம பா⁴வ = ஆத்ம தத்துவ விஷயத்தில்; பா⁴வநா = அறிய வேண்டும் என்ற ஆசையின்; நிவ்ரு«த்தி: = முடிவு (உண்டாகிறது)
“நான் யார்? எனக்கு மற்ற வஸ்துக்களுடன் என்ன சம்பந்தம்?” என அறிய ஆசை ஏற்படவே மிகுந்த புண்ணியம் செய்து இருக்கவேண்டும். நான் என்று அறியப்படுபவன் தேகத்தில் இருந்தும் வேறானவன்; இந்திரியங்களில் இருந்தும் வேறுபட்டவன்; புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டவன்; ஞான ஸ்வரூபன்; இப்படி விவேக ஞானத்தை ஒருவன் அடைய வேண்டும். யாருக்கு தேகம், இந்திரியங்கள் முதலானவற்றில் ஆத்ம பாவனை இருக்கிறதோ (அதாவது இவையே தான், ஆத்மா என்று நினைக்கிறானோ) அவனுக்கு மோக்ஷத்துக்கு அதிகாரமில்லை. யார் ஆத்ம தத்துவத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கே மோக்ஷத்தில் அதிகாரம் உண்டு.
யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசையின் முடிவு உண்டாகிறது. அதாவது அது நிறைவேறுகிறது- ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்கிறான்.
ததா³ = ஆத்ம தத்துவத்தை அறிந்த பின்; விவேக = புருஷன் – மற்ற வஸ்துக்கள் இடையே வித்தியாசத்தை; நிம்நம்° = பற்றிக்கொண்டதாயும்; கைவல்ய = மோக்ஷத்தை; ப்ராக்³பா⁴ரம்° = முடிவான பலனாக உடையதாயும்; சித்தம் = சித்தம் (ஆகிறது)
உலக விஷயங்களில் பற்றுள்ளதாக இருந்த சித்தம் ஆத்ம தத்துவத்தை அறிந்தபின் கைவல்லியம் என்ற மோக்ஷத்தை பலனாக அடைகிறது. தர்மமேகம் என்ற த்யானத்தில் பற்றுகொள்கிறது.
தச்சி²த்³ரேஷு = விவேக க்யாதி ரூபமான சித்த விருத்தி தாரையின் இடைவெளிகளில்; ஸம்°ஸ்காரேப்⁴ய: = வேறு விதமான சித்தவிருத்தியை உண்டு பண்ணுகிறதாயும், வாஸனா ரூபமாயும் இருக்கிற ஸம்ஸ்காரங்களில் இருந்து; ப்ரத்யயாந்தர்ணி = நான் என்னுடையது என்பதற்கு வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன.
விவேக க்யாதி ரூப சித்தவிருத்தியில் இருப்பவன் மோக்ஷத்தில் நிலைத்து இருக்கிறான். இதில் எல்லா நேரமும் இருக்கும் நிலை வரும் வரை அவன் அவ்வப்போது நடுவில் வாசனைகளால் பாதிக்கப்படுவான். அப்போது வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன. இந்த இடைக்காலத்தில் உண்டாகிற நான் எனது முதலான சித்த விருத்திகள் வ்யுத்தான ப்ரத்யயம் எனப்படும். பயிற்சி தொடர தொடர இவை குறைந்து காணாமல் போகும்.
ஹாநம் =முற்றிலும் விடுபடுதல்; ஏஷாம்° = இவற்றுக்கு (வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு); க்லேஶவத்³= க்லேசங்களை போன்றதாக: உக்தம் = சொல்லப்பட்டுள்ளது.
வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு முற்றிலும் அழிவு க்லேசங்களை போன்றதாக சொல்லப்பட்டுள்ளது. க்லேசங்கள் எப்படி அழியும்? பாதம் 2 முதல் சூத்திரம் முதல் சொன்னவற்றில் இருந்து: முதலில் க்ரியா அனுஷ்டானத்தால் அதை தேயச்செய்து, பின் விவேக க்யாதி உண்டாகி, முதிர்ச்சி அடைய ஸம்ஸ்காரங்கள் பொசுக்கப்பட்டு, பின் முற்றிலும் அழியும் என்று அறிந்தோம். அதேதான் இங்கும். விவேக க்யாதி முதிர முதிர அது வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.
ப்ரஸம்°க்²யாநே அபி = ப்ரக்ருதி- புருஷ- விவேக- ஞானத்தின் பலனான எல்லாவற்றையும் ஒன்றாக காண்பது (விவேக ப்ரசங்க்யானம்), எல்லாவற்றையும் அறிவது (ஸர்வ க்ஞாத்ருத்வம் ) முதலானவற்றில் கூட; அகுஸீத³ஸ்ய = ஆசை வைக்காதவனுக்கு; ஸர்வதா² = எப்போதும், நிரந்தரமாய்; விவேக க்²யாதே: =விவேக ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதால்; த⁴ர்மேக⁴: ஸமாதி⁴: = தர்மமேகஸமாதி ஏற்படுகிறது.
விவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது. அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது. அப்படிப்பட்டவனுக்கு எப்போதும் விவேக ஸாக்ஷாத்காரமே இருக்கிறது. வேறு ஒரு ப்ரத்யயமும் (தடையும்) ஏற்படுவதில்லை. அதுவே தர்மமேகஸமாதி ஆகும். அசுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.
தத: = அதனால் (தர்மமேகஸமாதியால்) க்லேஶ = அவித்யா முதலான 5 க்லேசங்களின்; கர்ம = புண்ணியம் பாபம் ஆகிய கர்மங்களின்; நிவ்ரு«த்தி: = முடிவும் (முழுமையாக ஏற்படுகிறது)
தர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.
ததா³ = அதனால் (தர்மமேகஸமாதியால்) ஸர்வ =எல்லா; ஆவரண = மறைப்பு; மலா = அழுக்கு; பேதஸ்ய = விலகுதல்; ஜ்ஞாநஸ்ய = ஞானத்தின்; ஆநத்யாத் = ஆநந்தத்தின்; ஜ்ஞேயம் = அறியத்தக்கன; அல்பம் = மிகக்குறைவாக (ஆகிறது)
தர்மமேக ஸமாதியில் இல்லாதபோது சித்தத்தின் நிலை என்ன?
சித்தம் முதலில் தமோ குணத்தால் மூடப்பட்டு இருந்தது. அதனால் ரஜோ குணம் மட்டுமே அதை ஏதோ சில விஷயங்களில் அதை தூண்ட முடிந்தது. சிறிது தமோ குணம் விலக பின் ஏதோ சில வஸ்துக்களை மட்டும் க்ரஹிக்கும் சக்தி பெற்றது.
தர்மமேகஸமாதியை அடைந்த சித்தத்தின் ரஜோ தமோ அழுக்குகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. சித்த தத்துவத்தை மறைத்த அவித்யை முழுதும் விலகுகிறது. ஆதலால் சித்தம் நிர்மலமாகிறது. சாதாரணாமாக அறியத்தக்க பிரபஞ்சம் மிகச்சிறிதாக ஆகிறது. எப்படி ஒரு குடம் கடலின் நீர் அனைத்தையும் அடக்க போதுமானதில்லையோ, ஒரு பூச்சி வானத்தை மறைக்க போதுமானதில்லையோ அது போல் சித்தத்தின் அறியும் திறனுக்கு தீனி போட இந்த அறியத்தக்க பிரபஞ்சம் போதுமானதில்லை. இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.
தத: =பர வைராக்கியம் ஏற்பட்ட பின்; க்ரு«தார்தா²நாம்° =செய்ய வேண்டியவற்றை செய்து முடித்த: கு³ணாநாம் = ஸத்வம் முதலான குணங்களுக்கு; பரிணாம க்ரம ஸமாப்தி: = மாறுதலின் வரிசையின் முடிவு (உண்டாகின்றது)
முக்குணங்களுக்கு வேலை இல்லையெனில் அவை பரிணாமம் ஏதும் அடையாமல் இருந்துவிடும். விவேக க்யாதி ஏற்பட்ட பின் சரீரத்தையோ இந்திரியங்களையோ அவை உண்டு பண்ணுவதில்லை. இதனால் விவேகம் அடைந்த புருஷனை பொறுத்த வரை அவற்றின் மாறுதலுக்கு முடிவு ஏற்படுகிறது.
க்ஷணப்ரதியோகீ³ = க்ஷண ஸமூஹத்தை நிமித்தமாக உடையதாகிறது; பரிணாம = மாறுதலின்; அபராந்த = முடிவினால்; நிர்க்³ராஹ்ய: = கிரகிக்க முடியாமல், ஊஹிக்கப்படுவதாக: க்ரம: = க்ரமம் என்பது;
ஒரு மாறுதலின் ரூபம் மாறுதல் முடிந்த பிறகே தெரிய வரும். இடைநிலையில் அது முழுவதுமாக தெரிய வராது. குறித்த நேரத்தில் குறிப்பிட்டதாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். அதற்கு மேல் சொல்ல முடியாது. அதனால் அது ஊகித்து அறியப்படுவதாகிவிடும். ஆகவே க்ரமம் என்பது நேரத்தை சார்ந்ததாகிறது.
யோக சித்தாந்தப்படி புருஷன் நீங்கலான எல்லாம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில வஸ்துக்களின் மாறுதல் கிரமம் நேரடியாக தெரிகிறது. சில அனுமானத்தால் அறியக்கூடும்.
மண்ணை பிசைந்து குயவன் மண் உருண்டை ஆக்குகிறான். பின் அதை குடமாக ஆக்குகிறான். குடம் உடைந்தால் ஓட்டஞ்சில்லு ஆகிறது. பின் அது பொடிந்து மண் பொடி ஆகிறது. இப்படி மாறுதல் பிரத்யக்ஷமாக தெரிகிறது. இதே போல் ஒரு துணியை வாங்கி பெட்டியில் வைத்து பல காலம் கழித்து பார்த்தால் அது வலு குறைந்து காணப்படுகிறது.
அநித்திய வஸ்துக்கள் அல்லாமல் நித்ய வஸ்துக்களுக்கும் பரிணாமம் இதே போல உண்டா என்று கேட்டால், எது நித்தியம் என்று ஒரு கேள்வி எழுகிறது. நித்தியம் இரு வகையாகும். ஒன்று கூடஸ்த நித்தியம். இரண்டாவது பரிணாமி நித்தியம். புருஷ தத்துவத்தில் பரிணாமம் இல்லை. அதனால் அது எப்போதுமே நித்தியம். ஸத்வம் முதலிய குணங்கள் பரிணாமி நித்தியம் ஆகும்.
புத்தி அநித்தியமானது; மாறுதல் அடையக்கூடியது. ராகம் முதலான இந்த மாறுதல்களுக்கு ஒரு முடிவு உள்ளது- விவேக க்யாதி ஏற்பட்டால் இவை முடிந்துவிடும். உற்பத்தி கிரமத்துக்கும் மாறான கிரமத்தில் லயம் ஏற்பட்டுவிடும். (எங்கிருந்து வந்ததோ அங்கேயே வந்த வழியிலேயே பின் நோக்கிப்போய் சேரும்) ஆனால் இப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. கல்ப கோடி காலம் ஆனால் ஒருவர் முக்தி அடைகிறார்கள். உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது.
புருஷார்த²ஶூந்யாநாம்° = இனி செய்ய வேண்டிய புருஷார்த்தங்கள் இல்லாத; கு³ணாநாம்° = (புத்தி முதலிய பரிணாமங்களை அடைந்த சத்வம் முதலான) குணங்களின்; ப்ரதி ப்ரஸவ: = தத்தம் காரணத்தில் ஏற்படும் லயத்தால் ப்ரக்ருதியில் ஒடுங்கி விடுதலானது; கைவல்யம்° =கைவல்யம் எனப்படும்; ஸ்வரூப = சொந்த ரூபத்தில்; ப்ரதிஷ்டா² = நிலை பெறல்; வா = அல்லது; சிதிஶக்தி = சத் சக்திக்கு; இதி = இவ்வாறு (யோக சாஸ்திரம் நிறைவுற்றது)
ஸத்வம் முதலான குணங்கள் புத்தி முதலிய பரிமாணங்களை அடைகின்றன. போகம், விவேக க்யாதி என்ற இரண்டு குணங்களையும் ஒரு புருஷனுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டால் அவற்றின் காரியம் அத்துடன் முடிந்துவிடும். அவை சம்பாதித்து கொடுக்க வேண்டிய புருஷார்த்தம் ஏதும் இல்லை. வேலை இல்லாததால் அவை தாம் வந்த வழியே தம் தம் காரணத்தில் லயமடைகின்றன. மனதில் உள்ள ஸமாதி நிரோதம், வ்யுத்தானம் ஆகியன மனதிலும், மனம் அஹம் தத்துவத்திலும், அஹம் தத்துவம் மஹத் தத்துவத்திலும், மஹத் ப்ரதானத்திலும் லயமாகும். ஒரு தனி நபரின் விஷயத்தில் இதுதான் மோக்ஷமாகும்.
இன்னொரு வழியில் சொல்ல சுத்த சைதன்யமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலகி, தன் உண்மையான சொரூபத்தில் நிலை பெறுதல் மோக்ஷம் ஆகும். இந்த யோக சாத்திரத்தில் சொல்லியுள்ள சாதன அனுஷ்டானத்தால் ஒவ்வொருவரும் புருஷ விவேக ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பது தெளிவு.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply