ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -3-ஸமாதி பாதம் –விபூதி பாதம்

மூன்றாம் பாதம்:

விபூதி என்பதற்கு இங்கே திருநீறு என பொருள் இல்லை; சித்தி என்பது பொருள். சாதனா மார்க்கத்தில் கொஞ்சம் ஈடுபாடும் சிரத்தையும் உண்டாகும் பொருட்டு இவை சொல்லப்படுகின்றன. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை மொத்தமாக ஸம்யமம் எனப்படுகின்றன. இந்த ஸம்யமத்தாலேயே சித்திகள் உண்டாக வேண்டும். தாரணை, த்யானம், ஸமாதி ஆகியவை இதே வரிசையில் நிகழ வேண்டும்.
(இந்த ஸம்யமத்தை நன்றாக உள்ளே வாங்கிக்கொள்ளுங்கள். இனி அடிக்கடி வரும்!)

“மனஶ்சஞ்சலம் அஸ்திரம்” என்பது மனதை விளக்குகிறது. மனதானது நிலையற்றது; அலைபாய்வது. அதுதான் அதற்கு இயல்பே. ஆகவே அது எதையாவது பற்றிக்கொண்டால்தான் நிலையாக இருக்கும். நியமம் முதலான பகிரங்க சாதனங்கள் அதை பந்தத்தில் ஆழ்த்தும் எதிலும் பற்றாமல் விரட்டின. மனதுக்கு மாறாமல், பந்தத்தை உண்டு பண்ணாத, நிர்விகல்ப ஸமாதி வரை உள்ள உத்தம பலனை அடைய எந்த வஸ்துவின் சம்பந்தம் இன்றியமையாததோ அதன் சம்பந்தம் ஏற்படுத்தும் முறையான தாரணையை இப்போது உபதேசிக்கிறது.

தே³ஶப³ந்த⁴ஶ்சித்தஸ்ய தா⁴ரணா || 1||

தே³ஶ ப³ந்த⁴ = சரீரத்தின் (உள்ளும் வெளியுமான இடத்தில்) கட்டுப்பட்டு (அசைவற்று) நிற்பது; சித்தஸ்ய = சித்தத்தின்; தா⁴ரணா = தாரணை ஆகும்.

மனதுக்கு பந்தம் தராதவை சுப ஆஶ்ரயம் எனப்படும். இது உள்ளே இருக்கலாம்: வெளியே இருக்கலாம் (ஆந்தரம், பாஹ்யம்). சாஸ்திரப்படி தயாரித்த பஞ்ச லோகத்தாலான பகவானின் மூர்த்திகளில் குரு சொல்லிக்கொடுத்தப்படி மந்திரத்தால் தேவதையை ஆவாஹனம் செய்து அதில் மனதை செலுத்துவது வெளி (பாஹ்ய) தாரணை.

இப்படி பயிற்சி செய்வதுடன் சரீரத்திலுள்ள நாபி- சக்கரம், ஹ்ருதய -புண்டரீகம், ஸஹஸ்ராரம், நாசிகையின் (மூக்கின்) நுனி, நாக்கின் நுனி ஆகிய இடங்களில் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்துவது ஆந்தர தாரணை.

தத்ர ப்ரத்யயைகாதாநதா த்⁴யாநம் || 2||

தத்ர = அங்கு; ப்ரத்யய = த்யானிக்கப்படும் வஸ்துவைப்பற்றி உண்டாகும் சித்த விருத்தியின்; ஏகதாநதா = ஒன்றேயான (வேறு விஷய கலப்பில்லாத தொடர்ச்சியான பிரவாஹமே) த்⁴யாநம் [ஆகும்]

இந்த தாரணைக்கும் த்யானத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே சித்த விருத்திதான். தாரணையில் மற்ற விஷயங்களிடத்தில் உண்டாகும் சித்த விருத்திகள் குறுக்கிடலாம். அதை கஷ்டப்பட்டு அடக்க வேண்டும். த்யானத்தில் அப்படி இராது. மற்ற சித்த விருத்திகள் எந்த முயற்சியும் இல்லாமல் விலகிப்போம்.
எப்படி தாரணை செய்வது? விஷ்ணு புராணம் சொல்லுகிறது: ப்ராணாயாமத்தால் வாயுவை வசப்படுத்த வேண்டும்; ப்ரத்யாஹாரத்தால் இந்திரியங்களை வசப்படுத்த வேண்டும்; பிறகு சுபாஶ்ரயத்தால் மனதை பந்தம் வராது காக்க வேண்டும். அம்மனதை பகவானின் சொரூபத்தில் நிலைப்படுத்துதல் ஆந்தர தாரணை. த்யானம் பெறும் வரை இதை பயிற்சி செய்து வர வேண்டும். த்யானத்தை அதற்கு முன் உள்ள யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை ஆகிய யோகத்தின் அங்கங்கள் ஏற்படுத்துகின்றன.

ததே³வார்த²மாத்ரநிர்பா⁴ஸம்° ஸ்வரூபஶூந்யமேவ ஸமாதி⁴​: || 3||

ததே³வ = அதுவே (முன் சொன்ன த்யானமே); அர்த²மாத்ர நிர்பா⁴ஸம்°=த்யானிக்கப்பட்ட வஸ்துவின் வடிவுடன் கூடிய; ஸ்வரூப ஶூந்யம் ஏவ = (சித்த விருத்தியின்) ஸ்வரூபம் இல்லாத சூன்யம் போன்றதே; ஸமாதி⁴​: = ஸமாதியாகும்.

த்யானிக்கப்படும் பொருளிலேயே (வஸ்துவிலேயே) சாதகனால் சித்தத்தை நிலை நிறுத்த முடியும்; ஆனாலும் சித்த விருத்தி கொஞ்சம் ஏற்பட்டாலும் பொருளின் (வஸ்துவின்) முழு சொரூபம் கிடைக்காமல் போய்விடும். ஸமாதி நிலையில் த்யானம் பொருளின் (வஸ்துவின்) சொரூபத்தில் முழுமையாக கலந்து விடுவதால் அதன் சொரூபம் மட்டுமே கிடைக்கும்; சித்த விருத்தியின் சொரூபம் கொஞ்சம் கூட இல்லாமல் போகும்.

வஸ்து, செயல், சாதகன் இவற்றில் …
வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.
வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.

த்ரயமேகத்ர ஸம்°யம​: || 4||

த்ரயம் = [தாரணை, த்யானம், ஸமாதி – இம்] மூன்றும்; ஏகத்ர = ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது; ஸம்°யம​: = ஸம்யமம் எனப்படும்.

ஸம்யம பயிற்சியின் பலன்:

தஜ்ஜயாத்ப்ரஜ்ஞாலோக​: || 5||

தஜ்ஜயாத் =அதை வெற்றி கொள்வதால்; ப்ரஜ்ஞாலோக​: = ஸமாதி பிரக்ஞையின் பிரகாசம் உண்டாகிறது.

ஸம்யமம் ஆனது எவ்வளுக்கெவ்வளவு நிலை பெறுகிறதோ அவ்வளக்கவ்வளவு ஸமாதியின் அறிவும் தெளிவாக உண்டாகிறது.

தஸ்ய பூ⁴மிஷு விநியோக³​: || 6||

தஸ்ய = அதன் (ஸம்யமத்தின்); பூ⁴மிஷு = மேலுள்ள நிலைகளில்; விநியோக³​: = பயன் உண்டாகிறது.
ஒரு மட்ட ஸம்யமம் கைவரப்பெற்றால் அடுத்த கட்டம் எதுவோ அதில் ஸம்யமம் செய்ய வேண்டும். கீழ் மட்ட ஸம்யமம் கைவராமல் அடுத்த மட்ட ஸம்யமம் முயற்சி செய்தல் வீணாகும்.
ஸ்தூலமான விஷயமுள்ள ஸவிதர்க ஸமாதியை சாதித்துவிட்டதும் சாதகன் அதற்கு மேலுள்ள ஸூக்ஷ்ம விஷயமான நிர் விதர்க்க ஸமாதியை விரும்புகிறான். அதில் ஸம்யமம் செய்து அதில் ஸித்தி பெறுகிறான். இதே போல சவிசார வெற்றியை அடைந்த சாதகன் நிர்விசார வெற்றியை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வர பிரசாதத்தால் மேல் நிலை அடைந்தவன் கீழ் நிலையில் ஸம்யமம் செய்தல் அவசியமில்லை. ஆனால் அவரவர் யோக அனுபவத்தால் மேல், கீழ் நிலைகளை உணர வேண்டுமே அல்லாது எந்த சாஸ்திரமும் அதை சொல்ல இயலாது.

த்ரயமந்தரங்க³ம்° பூர்வேப்⁴ய​: || 7||

த்ரயம் = (தாரணை, த்யானம், ஸமாதி இந்த) மூன்றும்; அந்தரங்க³ம்° = (ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அவசியமான) அந்தரங்க சாதனங்களாகும். = பூர்வேப்⁴ய​: = முன் சொன்னவற்றைக் காட்டிலும் (யமம் முதலானவை)
முன் சொன்ன யமம் முதலானவற்றைக் காட்டிலும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு தாரணை, த்யானம், ஸமாதி இந்த மூன்றும் அவசியமான அந்தரங்க சாதனங்களாகும்.

அஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள்:

தத³பி ப³ஹிரம்°ங்க³ம்° நிர்பீ³ஜஸ்ய || 8||

தத³பி = (தாரணை முதலான) அவையே; ப³ஹிரம்°ங்க³ம்° = பகிரங்கமானவை; நிர்பீ³ஜஸ்ய = நிர்பீஜ ஸமாதிக்கு.

தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள் ஆனாலும் அவை அஸம்ப்ரக்ஞாத பிரக்ஞாத நிர்பீஜ ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள் ஆகும்.

ப்ரக்ஞை இருக்கும் போது உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி. அதனால் அப்போது சித்தத்தின் பரிணாமம் என்ன என்று தெரிகிறது. அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் ப்ரக்ஞை இல்லை. அதனால் சித்தத்தின் பரிணாமம் அப்போது என்ன என்று தெரிவதில்லை; தெரிவதில்லை என்பதால் பரிணாமம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சித்தத்தின் நிலை என்பதால் அவை அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் உள்ளே இருப்பதாக – அந்தரங்கமானதாக – சொல்ல முடியாது.

வ்யுத்தா²நநிரோத⁴ஸம்°ஸ்காரயோரபி⁴ப⁴வப்ராது³ர்பா⁴வௌ நிரோத⁴க்ஷணசித்தாந்வயோ நிரோத⁴பரிணாம​: || 9||

(யதா= எப்போது) வ்யுத்தா²ந நிரோத⁴ ஸம்°ஸ்காரயோ: = (க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்த ஸத்வமாக ஆக உரிய நிரோத நிலையினுடைய; அபி⁴ ப⁴வ ப்ராது³ர் பா⁴வௌ = வ்யுத்தானத்தின் குறைவும், நிரோதத்தின் விருத்தியும் ஏற்படுமோ; நிரோத⁴ க்ஷண சித்தாந்வயோ = நிரோதம் ஏற்படும் கணத்தில் சித்தத்துக்கு ஏற்படும் சேர்க்கையே: நிரோத⁴பரிணாம​: =நிரோத பரிணாமம் ஆகும்.
சித்தத்தின் தர்மம் வளர்ச்சி அல்லது ஒடுங்குதல். சித்தம் வளர்ச்சிமுகமாக (வ்யுத்தானத்துடன்) இருக்கும்; அல்லது தேய் முகமாக (நிரோதத்தில்) இருக்கும். ஒன்று வளர ஒன்று குறையும். சித்தத்திற்கு வெகு காலமாக வெளிக்கிளம்பியே பழக்கம். பயிற்சியால் சித்தம் நிரோதம் அடைய, ஒடுங்குதல் என்ற தர்மம் அதிகமாகி மேலும் மேலும் அது வலுப்பட்டு தேய்முகமாகும். இதுவே நிரோத பரிணாமம்.

தஸ்ய ப்ரஶாந்தவாஹிதா ஸம்°ஸ்காராத் || 10||

தஸ்ய = நிரோதம் அடையும் சித்தத்திற்கு; ஸம்°ஸ்காராத் = நிரோத ஸம்ஸ்காரத்தில் இருந்து; ப்ரஶாந்த வாஹிதா = ப்ரசாந்தமான விக்ஷேப வாசனை இல்லாத ஸம்ஸ்கார பிரவாகம் (உண்டாகிறது)
ஸமாதி பரிணாமம்:

ஸர்வார்த²தைகாக்³ரதயோ​: க்ஷயோத³யௌ சித்தஸ்ய ஸமாதி⁴பரிணாம​: || 11||

ஸர்வார்த²தா = விக்ஷிப்த தன்மை; ஏகாக்³ரதயோ​: = ஒருமுகப்பட்ட தன்மை; (இவற்றுக்கு முறையே) க்ஷய = தேய்வும்; உ த³யோ = உதிப்பதும்; சித்தஸ்ய =சித்தத்தின்; ஸமாதி⁴ பரிணாம​: = ஸமாதி பரிணாமம் ஆகும்.

தன்னிலையில் இருந்து வெளி வரும் சித்தம் க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று நிலைகளை அடையக்கூடும்.
க்ஷிப்தம் என்பது: ரஜோ குண மேலீட்டால் வெளிப்பட்ட சித்தம் அருகாமையிலோ தூரத்திலோ உள்ள சுக துக்க விஷயங்களை சென்று அடைதலாகும்.
மூடம் என்பது: தமோ குண மேலீட்டால் இது செய்யத்தகுந்தது இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவின்றி கோபம் முதலான உணர்ச்சிகளுடன் சம்பத்தப்பட்டு காரியம், தூக்கம், சோம்பல் ஆகியவறில் நிலை பெறுதலாகும்.
சத்வ குணம் மேலிட்டு சுகமாக இருக்கும் நிலை விக்ஷிப்தம் ஆகும். இந்த விக்ஷிப்தம் யோகம் இல்லை. ஏனென்றால் தமோ ரஜோ குண மூலமுண்டாகும் நிலையற்ற தன்மைக்கு செல்லவும் கூடும்; அல்லது அது மாறி சத் வஸ்துவில் நிலை அடையவும் கூடும். மேல் சொன்ன மூன்றும் ஸர்வார்த்ததை எனப்படும்.
சத் வஸ்துவில் நிலை அடைந்து த்யானிக்கத்தகுந்த வஸ்து தவிர வேறு எதிலும் நாட்டம் செல்லாது இருப்பதே ஏகாக்ரம் ஆகும். இதுவே மோக்ஷத்துக்கு சாதனம்; இதுவே சமாதி பரிணாமம்.

ஶாந்தோதி³தௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்³ரதாபரிணாம​: || 12||

சித்தஸ்ய = சித்தத்தின்; ஶாந்த உதி³தௌ = விக்ஷேபம் போவதும் சாந்தம் உதிப்பதும்; துல்ய ப்ரத்யயௌ = இரு ஸமானமான விருத்திகளும்; ஏகாக்³ரதா பரிணாம​: = ஏகாக்ரதையின் பரிணாமங்களாகும்.

விக்ஷேபம் முற்றிலும் போவதற்கும் ஏகாக்ரதை வருவதற்கும் இடையில் எந்த நிலையும் இல்லை. (ஸூர்யன் உதிக்க இருட்டு அகலுவது போல.) நிரோத வழியில் பெருக்கு ஏற்படும்போது முன்னிருந்த நிலை போய் இன்னும் மேலான நிலை வர வர மேலும் மேலும் மேலான நிலைக்கு கொண்டு போகும் புதிய மாற்றம் (விருத்தி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது இரண்டும் தனித்தனியே ஏற்படாமல் ஒன்றாகவே ஏற்படுகின்றன. இதுவே நிரோத பரிணாமம் ஆகும்.

ஏதேந பூ⁴தேந்த்³ரியேஷு த⁴ர்மலக்ஷணாவஸ்தா²பரிணாமா வ்யாக்²யாதா​: || 13||

ஏதேந = மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே; பூ⁴தேந்த்³ரியேஷு = (ப்ருத்வீ முதலான) மஹா பூதங்களிலும், (சக்ஷு முதலான) இந்திரியங்களிலும்; த⁴ர்ம லக்ஷணாவஸ்தா² = தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய; பரிணாமா: = மாறுதல்கள்; வ்யாக்²யாதா​: = விவரிக்கப்படுகின்றன.

மனதின் பரிணாமத்தை உபதேசித்ததாலேயே ப்ருத்வீ முதலான மஹா பூதங்களிலும், கண் முதலான இந்திரியங்களிலும் தர்மம், லக்ஷணம் அவஸ்தை ஆகிய மாறுதல்கள் விவரிக்கப்படுகின்றன.

பரிணாமம் என்பது மாறுதல் அடைந்த நிலை. அவை தர்ம பரிணாமம், லக்ஷண பரிணாமம், அவஸ்தா பரிமாணம் என மூன்று வகையாகும்.

ஒரு வஸ்து எப்படிப்பட்டது என்பதற்கு அதன் அணுக்கள் காரணமாகும். இது தர்ம பரிணாமம். மண் கட்டியாக இருக்கிறது. அது குடமாகும் போது குடமும் மண்தான் என்றாலும் கட்டி என்ற இயல்பு போய் குடம் ரூபம் என்ற இயல்பாக ஆகிவிடுகிறது. இதே போல சித்தத்தின் வெளிநாட்டம் என்ற தர்மம் போகும்போது அகமுக நாட்டம் (நிரோதம்) என்பது தர்மம் -இயல்பு- ஆகிவிடும். இது தர்ம பரிணாமம்.

மேலும் ஒரு பரிணாமம் காலத்தை ஒட்டி மூன்றாகும். இந்த முக்காலங்களும் லக்ஷணமாகும். அனாகதம் என்பது வரவிருக்கிறது; வர்த்தமானம் என்பது நிகழ் காலம்; அதீதம் என்பது கடந்த காலம். இப்போது மண்ணாக இருப்பது எதிர்காலத்தில் குடமாகும் என்றால் மண்ணாக ‘இருப்பது’ வர்த்தமான பரிணாமம். இப்போது குடமாக இருப்பது எதிர்காலங்களில் உடைந்து மண்ணாகிவிடும். அது அனாகத லக்ஷணம்.

அவஸ்தை என்பது இருப்பு என்று பொருள் படும். மண் குடமாவது இன்று எனில் அது வர்த்தமான அவஸ்தை; நாளை எனில் அது அனாகத அவஸ்தை; அடுத்த கல்பத்தில் உண்டாகும் என்பது அனாகததமமான அவஸ்தை. இது அவஸ்தா பரிமாணம்.

ஶாந்தோதி³தாவ்யபதே³ஶ்யத⁴ர்மாநுபாதீ த⁴ர்மீ || 14||

ஶாந்த = ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த; உதி³த = தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள; அவ்யபதே³ஶ்ய = காரியத்துக்கு சக்தியாக இருக்கிற; த⁴ர்ம =தர்மத்தை; அநுபாதீ தொடர்ந்து அனுபவிப்பது; த⁴ர்மீ =தர்மீ என்கிற வஸ்துவாகும்.

ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த, தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள காரியத்துக்கு சக்தியாக இருக்கிற தர்மத்தை தொடர்ந்து அனுபவிப்பது தர்மீ என்கிற வஸ்துவாகும்.

தர்மீ என்பது என்ன? அது ஒரு வஸ்து. எந்த காரியம் நடக்கவும் ஒரு சக்தி பின்னால் வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் காரியம் நடப்பதில்லை. காரியம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் பின் உள்ள சக்தி அப்படியே இருக்கிறது. அந்த காரியம் நடக்க காரணமாக இருப்பது இந்த தர்மீதான். இது காரியம் நடக்காத போதிலும் மறைந்து இருக்கிறது. தகுந்த நேரம் வரும் போது அது வெளிப்படும்.

யோக சித்தாந்தப்படி காரணம் என்பது தர்மீ; கார்யம் தர்மம். மண் தர்மீ; குடம் தர்மம். காரியம் முடிந்தாலும் காரணம் எஞ்சும். குடம் உடைந்தாலும் மண் எஞ்சும்.
காரணத்தில் காரியம் சக்தி ரூபமாக மறைந்துள்ளது. சரியான நேரத்தில் வெளிப்படுகிறது. எந்த காரணத்தில் எந்த காரியம் உள்ளதென நம்மால் பிரித்து அறிய இயலாது. இப்படி சக்தியாக மட்டும் இருக்கும் நிலை அவ்யபதேச்யநிலையாகும்.

க்ரமாந்யத்வம்° பரிணாமாந்யத்வே ஹேது​: || 15||

க்ரமாந்யத்வம்° = தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது; பரிணாமாந்யத்வே = மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு; ஹேது​:= ஏதுவாகும். (நினைவாக; தெரிவிப்பதாக; அந்த விஷயமாக அறிவை உண்டாக்குவதாக.)

தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு ஏதுவாகும்.
காரணம் காரியமாகும் போது ஒரே மாதிரி மாறுவதில்லை. இது ஏன் என்றால் தோன்றும் முறையில் உள்ள வேறுபாட்டால்.

மண் பொடியாக இருக்கலாம் அல்லது உருண்டையாக இருக்கலாம். நீரின் ஓட்டம் கல்லை அரித்து அரித்து மண் பொடி உண்டாகிறது. அவை திரண்டு மண் உருண்டை ஆகலாம். இது தோன்றும் முறை – கிரமம். இந்த தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது அதன் தோற்றத்தில் -பொடியாக இருப்பதற்கும், உருண்டையாக இருப்பதற்கும் – வேறு பாட்டை உண்டு செய்கிறது.

மண்ணில்; புதைந்த மரம் கரியாகிறது. ஆனால் வேறுவிதமாக இது உண்டானால் – அதிக அழுத்தம் உண்டானால் அதுவே வைரமாக ஆகிறது. தோன்றும் முறையில் வேறுபாடு மாறுதல் என்ன என்பதை நிர்ணயிக்க காரணமாகிறது.

இதே போல் லக்ஷண பரிணாமமும் அவஸ்தா பரிணாமமும்.


PG: குதிரில் கொட்டி வைத்த நெல் அப்படியே விட்டால் காலப்போக்கில் பொடியாகிவிடுகிறது. (சூர்ணாவஸ்தை) இது எப்போது நிகழ்கிறது? எப்போதுமே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தானியத்தில் இந்த பரிணாமம் நடந்துகொண்டேதான் இருக்கும். திடு திப்பென்று தான்யம் பொடியாகிவிடுவதில்லை.

எப்போதும் நிலையாக இருப்பது தர்மீ மட்டுமே. சொரூபமோ, லக்ஷணமோ, அவஸ்தையோ மாறிக்கொண்டேதான் இருக்கும். காமம், சுகம் போன்ற சில பரிணாமங்கள் நேரில் அனுபவத்தால் தெரிகிறது. ஆனால் சில பரிணாமங்கள் பார்க்க முடியாதவை. ஆகமம், அனுமானம் போன்றவற்றால் ஊகித்து அறிய வேண்டியன.
அப்படிப்பட்ட மறைவான மாற்றங்கள் கீழ் கண்டவாறு பிரிக்கப்படுகிறது:
1. நிரோதம். 2. கர்மம். 3.ஸம்ஸ்காரம். 4. பரிணாமம். 5. ஜீவனம். 6. சேஷ்டை. 7. சக்தி.
இவ்வேழு விருத்திகளும் பரோக்ஷமானவை (காண இயலாதவை).
நிரோதம், ஸம்ஸ்காரம், பரிணாமம் பற்றி முன்பே பார்த்துவிட்டோம்.
புண்ணியமும் பாபமும் கர்மங்கள் ஆகும்.
சித்தம் முக்குண வடிவம்; அதில் ஒவ்வொரு கணமும் மாறுதல் நடப்பது அனுமானத்தாலேயே அறிய வேண்டி இருக்கிறது.
மூச்சு வருகிறது என்பதில் இருந்து உயிர் இருக்கிறது என – ஜீவனம்- ஊகித்து அறியப்படும்.
சரீரங்களின் சேஷ்டையில் இருந்து ஊகித்து அறியக்கூடிய சித்தத்தின் க்ரியைதான் சேஷ்டை. ஒருவன் முகத்தைப்பார்த்து இவன் கண்ணுல குறும்பு மின்னுது. ஏதோ குறும்பு செய்ய சிந்தனை ஓடுதுன்னு அறிகிறோம்.
கார்யங்களின் ஸூக்ஷ்ம -இருப்பே – அவஸ்தையே சக்தி.

இது வரை ஸம்யமங்களின் தர்மங்களை பார்த்தோம், இனி ஸம்யமத்தால் விஷய வசீகார ஞானம் பெறும் சித்திகள் சொல்லப்படும்.

பரிணாமத்ரயஸம்°யமாத³தீதாநாக³தஜ்ஞாநம் || 16||

பரிணாம த்ரய= (தர்ம, லக்ஷண, அவஸ்தை என்ற) மூன்று பரிணாமங்களில்; ஸம்°யமாத்³ = ஸம்யமம் செய்ய; அதீத அநாக³த = இறந்த காலத்திலுள்ளதும், எதிர்காலத்தில் உள்ளதும் (பற்றிய); ஜ்ஞாநம் = ஞானம் (கிடைக்கும்)

சித்தம் இயற்கையில் சத்வமானது. அஞ்ஞானம் என்கிற அழுக்கால் மூடப்பட்டதால் இயற்கை குணம் வெளிப்படாமல் இருக்கிறது. ஸம்யமத்தால் இந்த அழுக்கை போக்கினால் இந்திரியங்களின் உதவி இல்லாமலே சித்தம் விஷயங்களை அறிந்துகொள்ளும்.
[ஸம்யமம்? முன்னேயே பார்த்தோம். தாரணை, த்யானம், ஸமாதி – இம் மூன்றும் ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது ஸம்யமம் எனப்படும். இந்த சொல் இனி அடிக்கடி வரும். ஆகையால் சரியாக புரிந்து கொள்ளுங்கள்.]

தர்மீயை பொறுத்த விஷயங்கள் எதிர்காலத்தில் இருந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வந்து பின் இறந்த காலத்துக்கு சென்றுவிடுகிறது. தாரணை, த்யான, ஸமாதிகளால் ஸம்யமம் செய்ய முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இப்படி மேலே இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போவர். கேட்க ஆசையாக இருந்தாலும் அடைய வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸம்யமம் என்று ஒன்றைச்சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு பிரச்சினை. இது பல காலம் செய்த முறையான பயிற்சியால் உண்டாவது. There are no short cuts. யமம் முதலான வெளிமுகப் பயிற்சிகளும் தாரணை முதலான உள் முகப்பயிற்சிகளும் சரியாக செய்தால்தான் இவை சித்திக்கும். த்யானம் என்பது வெளி சிந்தனையே இல்லாமல் இருப்பது என்று சொல்லும் போது நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம். இலக்குடன் முழுக்க முழுக்க ஒன்றிவிடுவதே ஸம்யமமாகும். இது நம்மால் சாதாரணமாக முடியாது. எதில் அப்படி ஒன்றுகிறோம் என்பதைப் பொறுத்து என்ன சித்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஶப்³தா³ர்த²ப்ரத்யயாநாமிதரேதராத்⁴யாஸாத்ஸம்°கரஸ்தத்ப்ரவிபா⁴க³ஸம்°யமாத்ஸர்வபூ⁴தரூதஜ்ஞாநம் || 17||

ஶப்³த³= சப்த; அர்த² = பொருள்; ப்ரத்யயாநாம் = சப்தம், அர்த்தம் இவற்றால் புத்தியில் ஏற்படும் விருத்தி; இதரேதர அத்⁴யாஸாத் ஸம்°கர = இரண்டாலும் ஏற்படும் குழப்பம்; தத் ப்ரவிபா⁴க³ =இந்த மூன்றும் தனித்தனி என அறிந்து; ஸம்°யமாத் =ஸம்யமம் செய்ய; ஸர்வபூ⁴த ரூத ஜ்ஞாநம் = எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம் (ஏற்படுகிறது).
பசுவை கொண்டு வா என்ற சொற்களை கேட்பதாக வைத்துக்கொள்வோம். பசு என்று கேட்டதும் அந்த சப்தம் என்ன? அர்த்தம் என்ன? ஞானம் என்ன என்று கேட்டால் பசு என்பதே பதிலாகும். ஆனால் பசு என்பது ஒரு சப்தம் மட்டுமே: அதை கேட்டதும் உண்டாவது இன்ன பொருள் என்பதும் கற்பிக்கப்பட்டதே; அந்த சப்தம் இன்னதை குறிக்கிறது என்பதும் கற்பிக்கப்பட்டதே. இப்படி கற்பிப்பது சித்தத்தின் வேலை.
எல்லாம் ஒன்றாகவே இருப்பது போல தோற்றத்தை கொடுத்தாலும் அவற்றை பிரித்து தனித்தனியே ஸம்யமம் செய்பவன் உலகில் உள்ள எல்லா ப்ராணிகளின் சப்தத்தையும் அந்த சப்தத்தின் பொருளையும் ஞானத்தையும் அறிவான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் கேகய ராஜா இப்படிப்பட்ட சித்தி அடைந்திருந்ததாக கதை உள்ளது. அவன் ராணியுடன் அந்தரங்கமாக இருக்கையில் திடீரென்று சிரிக்கிறான். ஏன் என்று அவனது மனைவி கேட்கையில் கட்டிலின் கீழ் இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டதாயும் அதனால் சிரிப்பு வந்ததாயும் சொல்கிறான். அது என்ன என்று கேட்ட மனைவியிடன் “போக அங்கமான ஸத்ய ப்ரதிஷ்டை முதலியவற்றில் சித்தி அடைந்த ஒரு பெரியவர் பிராணிகள் பேசுவதை அறியும் முறையை உபதேசித்து இருக்கிறார். அதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் உயிருக்கு ஆபத்து வருமென சொல்லி இருக்கிறார்” என்கிறான். இது போல பல பழைய கதைகளிலும் காணலாம்.

ஸம்°ஸ்காரஸாக்ஷாத்கரணாத்பூர்வஜாதிஜ்ஞாநம் || 18||

ஸம்°ஸ்கார =(சித்தத்தில் உள்ள) ஸம்ஸ்காரத்தை; ஸாக்ஷாத் கரணாத் = ஸாக்ஷாத்கரிப்பதால்; பூர்வ ஜாதி ஜ்ஞாநம் = முன் பிறவி குறித்த ஞானம் (உண்டாகின்றது)

சித்தத்தில் உள்ள வாசனைகளில் ஒன்று நினைவை மட்டும் தரும். இன்னொன்று பிறப்பு, ஆயுள், சுகம், துக்கம் ஆகிய அனுபவங்களை தரக்கூடியது. கோடி கல்பங்கள் ஆனாலும் ஒருவரது செய்கைகள் அதற்கான பலனைத்தராது தேய்வதில்லை (नाभुक्तम् क्षीयते कर्म कोटि शतैरपि – நாபு4க்தம் க்ஷீயதே கர்ம கோடி ஶதைரபி). ஒருவரால் ஒரு சமயம் செய்யப்பட்ட செய்கைகள் ஸம்ஸ்கார ரூபத்தில் தன் பலனைத் தரும் வரையில் அசைவற்று இருக்கும் (कताचित् स्वक्रुतम् कर्म कूटस्तमिव तिष्टति – கதாசித் ஸ்வக்ருதம் கர்ம கூடஸ்தமிவ திஷ்டதி)
பொதுவாகவே எவன் எதில் ஸம்யமம் செய்கிறானோ அங்குள்ளவற்றை ஸம்யம பலத்தால் அவன் அறிகிறான்.
இப்படிப்பட்ட ஸம்ஸ்காரங்களில் ஸம்யமம் செய்து அவற்றை நேரில் காண்பவனுக்கு எந்த அனுபவம் இந்த ஸம்ஸ்காரத்தை கொடுத்ததோ அந்த அனுபவம் என்ன என்று தெரிகிறது. இதுவே பூர்வ ஜன்ம ஞானமாகும். யோகி இதே போல மற்றவரின் ஸம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்தால் அவருடைய பூர்வ ஜன்மத்தைப்பற்றி அறிகிறார்.

ப்ரத்யஸ்ய பரசித்தஜ்ஞாநம் || 19||

ப்ரத்யஸ்ய =ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் சித்த விருத்தியை ஸம்யமம் செய்ததால்; பரசித்த=மற்ற சித்தங்களின்; ஜ்ஞாநம் = அறிவு ஏற்படுகிறது.
பிறர் மனது எத்தகையது என்பதை அறிதலானது, ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் ஸம்ஸ்காரங்களை ஸாக்ஷாத்கரிப்பதால் ஏற்படுகிறது. அட! அதுதான் போன சூத்திரத்தில சொல்லிட்டாரே? ஏன் திருப்பி?

  न च तत्सालम्बनं तस्याविषयीभूतत्वात् ।।20।।
ந ச தத்ஸாலம்ப³நம்° தஸ்யாவிஷயீபூ⁴தத்வாத் || 20||

ஸ ஆலம்ப³நம்° = ராகம் முதலியன குடிகொண்ட; தஸ்ய = அந்த ஸம்யமத்துக்கு; அவிஷயீ பூ⁴தத்வாத் = விஷயமாக ஆகாததால்; ந ச தத் = அந்த பிறருடைய சித்தம் ஸம்யமத்தால் அறியப்பட மாட்டாது.
பிறர் சித்தம் சுத்தமாக இல்லாமையால் அதில் ஸம்யமம் செய்ய இயலாது; பொதுவாக அதை அறியலாமே தவிர அதில் ஏற்படும் சலனங்களை அறிய முடியாது.

குழப்புதா?
தெரிந்த ஏதோ ஒரு விஷயத்தில்தான் ஸம்யமம் செய்ய முடியும். தெரியாத விஷயத்தில் செய்ய இயலாது.
தன் சம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்யும் போது அதே போல் சம்ஸ்காரம் இருக்கும் பிறரின் சித்தத்தில் ஸம்யமம் ஏற்பட முடியும். அப்போது அவருடைய சித்தத்தை அறிய முடியும்.
ஆனால் தன் சித்தத்தில் ஏற்படுவதற்கு மாறான விஷயங்கள் பிறர் மனதில் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.
ஒரு காட்சியை பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் அதே மனத்தாக்கம் பிறருக்கும் ஏற்படுமேயானால் அதை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றவருக்கு வேறு மனத்தாக்கம் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.

காயரூபஸம்°யமாத்தத்³க்³ராஹ்யஶக்திஸ்தம்பே⁴ சக்ஷுஷ்ப்ரகாஶஸம்°ப்ரயோகே³’ந்தர்தா⁴நம் || 21||

காய ரூப ஸம்°யமாத் = தன் உடலின் ரூபத்தில் ஸம்யமம் செய்வதால்; தத்³ க்³ராஹ்ய ஶக்தி = அதை கிரகிக்கும் சக்தி; ஸ்தம்பே⁴ = நின்றுவிடும்; சக்ஷுஷ் ப்ரகாஶஸம்° ப்ரயோகே³ = கண்களின் ப்ரகாச சக்தி சேராமையால்; அந்தர்தா⁴நம் = கண்ணுக்கு தெரியாமல் ஆகிறது.

நம் கோட்பாடுகளின் படி ஒரு பொருளை நாம் பார்க்க வேண்டுமானால் நம்மிலிருந்து ஒரு சக்தி கிளம்பி அந்த பொருளை அடைந்து அதனுடன் சேர வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் காணப்படும். தன் உடலில் ஸம்யமம் செய்வதால் அப்படி ஒரு சக்தி தன்னுடன் சேர உடல் மறுக்கும். அதனால் அந்த உடல் பிறர் கண்களுக்குத் தெரியாது. இது போலவே எல்லா இந்திரியங்களும். ஓசை, தொடுதல், சுவை, வாசனை ஆகியவற்றில் ஸம்யமம் செய்து அவற்றை பிறருக்கு புலப்படாதபடி மறைக்க இயலும். இப்படியும் சித்திகள் உண்டு.

ஸோபக்ரமம்° நிருபக்ரஞ்ச கர்ம தத்ஸம்°யமாத³பராந்தஜ்ஞாநமரிஷ்டேப்⁴யோ வா || 22||

ஸோபக்ரமம்° = இப்போது பலன் தரும் நிலையில் உள்ளது; நிருபக்ரஞ்ச = வேறு காலத்தில்தான் பலன் கொடுக்கும், இப்போது கொடுக்காதது; கர்ம (என) கர்மம் (இரு வகையாகும்) தத் ஸம்°யமாத்³= அதில் ஸம்யமம் செய்வதில் இருந்து; அரிஷ்டேப்⁴யோ வா = (அல்லது) தோன்றும் அசுபக்குறிகளில் இருந்தோ; அபராந்த ஜ்ஞாநம் =மரணம் எப்போது என்ற ஞானம் ஏற்படுகிறது.

வெய்யிலில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக உள்ள கர்மா உடனடியாக பலனை கொடுத்துவிடும். மற்றபடி காற்று, வெய்யில் இல்லாத இடத்தில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக இல்லாத கர்மா உடனடியாக பலனை கொடுக்க முடியாது. அது அதன் காலக்கிரமத்தில்தான் கொடுக்கும். அது வரை அது சித்தத்தில் ஸம்ஸ்கார ரூபமாகவே இருக்கும். இந்த கர்மாக்கள் எப்போது பலன் தரும் என்பதை அறிவதன் மூலம் ஒருவன் தன் ஆயுளின் முடிவு காலத்தை அறிந்துகொள்ளலாம்.

சோப கர்மத்தை அறியும் யோகி அதை சீக்கிரம் அனுபவித்து முடிக்க முயற்சி செய்வான். அப்போதுதானே கணக்கு தீர்ந்து பூஜ்யத்துக்கு வந்து மோக்ஷம் கிடைக்கும்? ஏதேனும் கர்மம் அனுபவிக்க பாக்கி இருக்கும் வரை மறு பிறவி இருந்து கொண்டே இருக்கும். அதனால் யோகி பல உடல்களை எடுத்து அனுபவித்து தீர்த்துவிடுவான். ஒரே உடலால் அத்தனையும் அனுபவிக்க உடல் தாக்குப்பிடிக்காது.

யோக பயிற்சி இல்லாதவரும் தன் கடைசி காலம் நெருங்குவதை தெரிந்துகொள்ளலாம்.
கைகளால் காதுகளைப் பொத்திக்கொள்ள பிராணன்களின் சப்தம் கேட்காமை; நிமித்தமின்றி யமதூதர் போன்றோரை காண்பது; நிமித்தமின்றி சொர்கம் போன்றவற்றை காண்பது – இவை அசுப குறிகளாகும்.

மேலும் வைத்ய ரத்னாகரம் கூறுகிறது:
தனது நாக்கையும் மூக்கின் நுனியையும் இரண்டு புருவங்களின் மத்தியையும் ஆயுளின் இறுதியை எட்டியவர் காண்பதில்லை. அதாவது மரணம் சமீபித்துவிட்டால் இவற்றை காண முடியாது.
திடீரென பெருத்தும் இளைத்தும் திடீரென வேறு மாதிரி மாறி விடுபவர்களும் 6 மாதங்களுக்குள் இறப்பர்.
நல்ல குளிரால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், நல்ல சரீர புஷ்டி இருப்பினும் எந்த மனிதனின் நெற்றியில் பனி போன்ற வியர்வை உண்டாகிக் கழுத்துக் குழியில் தங்கி அங்கிருந்து மார்பு வரை வழிந்தோடுகிறதோ அவன் விரைவில் இறப்பான்.
இரவில் எரிச்சலும் பகலில் குளிரும் கண்டத்தில் சிலேஷ்மமும் (சளி) நாக்கில் வறட்சியும், கண்களில் குங்குமம் போன்ற சிவப்பும் நாக்கு கருமையடைந்து எப்போதும் நீர் வடிதலும் நரம்புகள் எப்போதும் ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் இருப்பதும் மரண காலம் நெருங்கிவிட்டதை குறிக்கும்.

மைத்ர்யாதி³ஷு ப³லாநி || 23||

மைத்ரி ஆதி³ஷு =மைத்ரீ முதலானவற்றில்; (ஸம்யமம் செய்யின்) ப³லாநி = பலவிதம் (பலவிதமான சக்திகள் உண்டாகும்)

முன்பு உலகில் சுகமாக இருக்கும் சத்துக்களிடம் மித்ரத்தன்மை வேண்டும் என்று பார்த்தோம் இல்லையா? அப்படி செய்யும் யோகி அதில் ஸம்யமம் செய்யின் உலகில் உள்ள எல்லா ஜீவர்களையும் சுகம் அனுபவிப்போராக செய்யும் திறன் உண்டாகிறது.
துக்கமுளோரிடன் உள்ள துக்கத்தை போக்க வேண்டுமென பாவிப்பவனுக்கு துக்கத்தில் இருந்தோ அதன் காரணங்களில் இருந்தோ அப்பிராணிகளை காப்பாற்றும் திறன் உண்டாகின்றது. புண்ணியம் செய்வோரிடம் திருப்தியை எண்ணுபவனுக்கு எதிலும் நடுநிலை வகிக்கும் திறன் உண்டாகின்றது. பாபிகளிடம் சித்தம் செல்வது ஸம்யமம் ஆகாது. அதனால் பலனில்லை.

ப³லேஷு ஹஸ்திப³லாதீ³நி || 24||

ப³லேஷு = (யானை, கருடன், வாயு ஆகியோரின்) பலத்தில் ஸம்யமம் செய்ய; ஹஸ்தி ப³லாதீ³நி = அவற்றின் பலம் கிடைக்கும். இயற்கையிலேயே சித்தம் மிக்க பலம் வாய்ந்தது. ஸம்யமம் சேர்ந்தால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை.

  प्रवृत्त्यलोकन्यासात्सूक्ष्मव्यवहितविप्रकृष्टज्ञानम् ।।25।।
ப்ரவ்ரு«த்த்யலோகந்யாஸாத்ஸூக்ஷ்மவ்யவஹிதவிப்ரக்ரு«ஷ்டஜ்ஞாநம் || 25||

ப்ரவ்ரு«த்த்ய லோக ந்யாஸாத் = (பாதம் 1 சூத்திரம் 36) ஜ்யோதிஷ்மதீ ப்ரவ்ருத்தியில் ஜ்யோதிசில் ஸம்யமம் செய்யின்; ஸூக்ஷ்ம வ்யவஹித = ஸுக்ஷ்மமாக உள்ளவற்றில்; விப்ர க்ரு«ஷ்ட ஜ்ஞாநம் = அறிவு உண்டாகிறது.
வெகு நுண்ணிய பரமாணு, வெகு தூரத்தில் உள்ள மஹாமேரு, வெகு ஆழத்தில் உள்ள புதையல்கள் இவற்றின் தெளிந்த அறிவு உண்டாகிறது

பு⁴வநஜ்ஞாநம்° ஸூர்யே ஸம்°யமாத் || 26||

பு⁴வநஜ்ஞாநம்° = புவனங்களைப்பற்றிய அறிவு; ஸூர்யே =சூரியனில்; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யின்.

சூர்ய மண்டலத்தில் ஸம்யமம் செய்யும் யோகிக்கு எல்லா உலகங்களையும் பற்றிய ஞானம் உண்டாகிறது.

இப்படியே எந்த இடத்தில் ஸம்யமம் செய்கிறோமோ அந்த இடத்தை பற்றி முழுதும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

புவனங்கள் ஏழு. பூமியின் சரியான நடுவில் மஹாமேரு பர்வதம் தூண் போல் உள்ளது. (north pole) மேருவின் பின் பக்கம் பூலோகம். அடியில் அவீசி நரகம். இதை அடுத்து வரிசையாக மஹாகாலம், அம்பரீஷம், ரௌரவம்,மஹாரௌரவம், கால சூத்திரம், அந்ததாமிஸ்ரம் என 6 நரகங்கள். மஹாகாலம் பூமியிலும்; அம்பரீஷம் நீரிலும்; ரௌரவம் நெருப்பிலும் மஹாரௌரவம் வாயுவிலும்; காலசூத்திரம் ஆகாசத்திலும்; அந்ததாமிஸ்ரம் தமஸ் ஆகிய இருளிலும் உள்ளன. இவற்றுக்கு பாப கர்மாக்களின் பலனை அனுபவிக்க ஜீவர்கள் செல்கின்றனர். புண்ணிய கர்மாக்களின் பலனாகிய சுகத்தை எல்லோரும் விரும்புகின்றனர்; ஆனால் புண்ணிய கர்மாக்களை செய்வதில்லை. பாப கர்மாக்களின் பலனாகிய துக்கத்தை எல்லோரும் வெறுக்கின்றனர்; ஆனால் பாப கர்மாக்களை ஆவலுடன் செய்கின்றனர்.
மேலும் மஹாதலம், ரஸாதலம், அதலம், சுதலம், விதலம், தலாதலம், பாதாலம் என 7 பாதாலங்கள் உள்ளன.

சந்த்³ரே தாராவ்யூஹஜ்ஞாநம் || 27||

சந்த்³ரே =சந்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தாரா வ்யூஹ ஜ்ஞாநம் = நக்ஷத்திரங்களின் தனித்தனியான நிலைகளின் ஞானம் ஏற்படுகிறது.

  ध्रुवे तद्गतिज्ञानम् ।।28।।
த்⁴ருவே தத்³க³திஜ்ஞாநம் || 28||

த்⁴ருவே =துருவ நக்ஷத்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தத்³க³தி = நக்ஷத்திரங்களின் சஞ்சாரம் ஜ்ஞாநம் (குறித்த) ஞானம் (ஏற்படுகிறது.)

இது வரை வெளியே உள்ளவற்றில் ஸம்யமம் செய்வதன் பலன்களை சொன்னார். இனி உள்ளே உள்ளவை. இவை ஆந்தர சித்திகள் ஆகும்

நாபி⁴சக்ரே காயவ்யூஹஜ்ஞாநம் || 29||

நாபி⁴ சக்ரே = நாபியில் உள்ள சக்கரத்தில் (ஸம்யமம் செய்ய); காய வ்யூஹ = உடலைப்பற்றிய; ஜ்ஞாநம் = ஞானம் உண்டாகிறது.
நாபிச்சக்ரம் உடலின் நடுவில் இருந்து கொண்டு உடல் முழுதும் பரவியுள்ள நாடிகளுக்கு ஆதாரமாக உள்ளது. எனவே இதி ஸம்யமம் செய்ய முழு உடலைப்பற்றிய ஞானம் கிடைக்கும்.

பசி, தாகங்களை நீக்குதல்:

कण्ठकूपे क्षुत्पिपासानिवृत्तिः ।।30।।
கண்ட²கூபே க்ஷுத்பிபாஸாநிவ்ரு«த்தி​: || 30||

கண்ட²கூபே =உள் நாக்குக்கு கீழே உள்ள கிணறு போன்ற இடத்தில் (ஸம்யமம் செய்ய); க்ஷுத் பிபாஸா = பசி, தாக; நிவ்ரு«த்தி​: = நீக்குதல் கிடைக்கிறது.

கூர்மநாட்³யாம்° ஸ்தை²ர்யம் || 31||

ஆமை போன்றது நெஞ்சுக்குழிக்கு (கண்டகூபத்துக்கு) கீழ் உள்ள நாடி. அதில் ஸம்யமம் செய்ய மனம் வெளியே சஞ்சரிக்காது. ஆமை உடலை உள்ளிழுத்துக்கொள்வது போல் மனம் உள்ளிழுக்கப்படும்.

  मूर्धज्योतिषि सिद्धदर्शनम् ।।32।।
மூர்த⁴ஜ்யோதிஷி ஸித்³த⁴த³ர்ஶநம் || 32||

மூர்த⁴ ஜ்யோதிஷி = உச்சந்தலையில் (பிரம்ம ரந்திரத்தில்) [ஸம்யமம் செய்ய]; ஸித்³த⁴ த³ர்ஶநம் = சித்த புருஷர்களின் தரிசனம் கிடைக்கிறது.

ப்ராதிபா⁴த்³வா ஸர்வம் || 33||

ப்ரதிபா என்பது முன் பின் எந்த ஆலோசனை காரணம் இன்றி மனதில் திடீரென ஏற்படும் ஒரு வித ஞானம். இதை ஆங்கிலத்தில் இன்ட்யூஷன் என்பர். தமிழில் ஊகம் எனலாம்.

ப்ராதிபா⁴த்³வா = பிரதிபையில் ஸம்யமம் செய்யின்; ஸர்வம் = எல்லாம் (தெரிய வருகிறது.)

சூரியன் உதயமாகு முன் அருணன் உதயாமாக உலகில் எல்லாம் தெரிவது போல; விவேக க்யாதி வரு முன் ஸூசகமாக சித்தத்தில் ப்ரதிபை தோன்றுகிறது. இதில் ஸம்யமம் செய்யும் யோகி மற்ற ஸம்யமங்களின் தேவை இன்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறான்.

  हृदये चित्तसंवित् ।।34।।
ஹ்ரு«த³யே சித்தஸம்°வித் || 34||

ஹ்ரு«த³யே = ஹ்ருதயத்தில் (ஸம்யமம் செய்யின்); சித்த ஸம்°வித் = சித்தத்தின் அறிவு உண்டாகிறது.

இங்கு சொல்லப்படும் ஹ்ருதயம் பௌதிக ஹ்ருதயம்தான். (மார்பில் தாமரை மொக்கு போல் தலைகீழாக தொங்கும் மாம்ஸ பிண்டம்.)

ஸத்த்வபுருஷயோரத்யந்தாஸம்°கீர்ணயோ​: ப்ரத்யயாவிஶேஷோ போ⁴க³​: பரார்த²த்வாத்ஸ்வார்த²ஸம்°யமாத்புருஷஜ்ஞாநம் || 35||

அத்யந்தா ஸம்°கீர்ணயோ​: = உண்மையில் வேறானவையான; ஸத்த்வ புருஷயோர் = சத்வ புத்தியுடையதும் ஆத்மாவுடையதும்; ப்ரத்யயா விஶேஷோ = தனித்தனியானவை என்ற ஞானம் இல்லாமையே; போ⁴க³​: =போகமாகும்; பரார்த²த்வாத் = புருஷனுக்காக ஏற்பட்ட அந்த போகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; ஸ்வார்த²= சித்த ஸ்வரூப- பிரதி பிம்ப விஷயமான; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யும் போது உண்டாகும்; புருஷஜ்ஞாநம் = புருஷனைப்பற்றிய ஞானம்.

புத்தி சத்வ, ரஜ, தமோ குண நிலைகளை உடையது. புருஷனோ இவற்றில் எதிலும் சம்பந்தப்பட்டாமல் அன்னியமானவன். இந்த ஞானம் – நினைப்பு இல்லாவிட்டால் நான் சுகமாக இருக்கிறேன்; துக்கமாக இருக்கிறேன் என்று ஜீவனுக்கு சுக துக்க அனுபவ போகம் உண்டாகிறது. இங்கு புத்தி தனக்கென்று எந்த பிரயோஜனமும் எதிர்பாராமல் வேலை செய்கிறது; அது புருஷனான ஜீவனின் போகம் அபவர்க்கம் இரண்டின் பிரயோஜனத்தை மட்டுமே எதிர் பார்க்கிறது. இதனால் புத்தி மூலம் ஏற்படும் போகம் புருஷனுடையதே.
தெளிவான புத்தியில் புருஷனின் ப்ரதி-பிம்பம் (நிழல்) ஏற்படுகிறது. புத்தி காட்டித்தரும் விஷயங்களை இந்த புருஷ நிழல் அனுபவிக்கிறது. இந்த புத்தி பரார்த்தம் என்றும் புருஷ நிழல் ஸ்வார்த்தம் என்றும் சொல்லப்படுகின்றன. இந்த புருஷ நிழலில் ஸம்யமம் செய்வது ஸ்வார்த்த ஸம்யமம். இதனால் புருஷனைப்பற்றிய ஞானம் உண்டாகிவிடும்.

தத​: ப்ராதிப⁴ஶ்ராவணவேத³நாத³ர்ஶாஸ்வாத³வார்தா ஜாயந்தே || 36||

தத​: =அதிலிருந்து (பயிற்சியால் வரும் புருஷ ஸம்யமத்தில் இருந்து); ப்ராதிப⁴ = ஊஹ மாத்திரமான ஞானமும்; ஶ்ராவண = எந்த சப்தத்தையும் கேட்பதும்; வேத³நா = தோலால் எந்த தொடு உணர்வையும் அறிவதும்; ஆத³ர்ஶா = எந்த ரூபத்தையும் கண்ணால் பார்ப்பதும்; ஆஸ்வாத³= நாக்கால் எந்த ருசியையும் அறிவதும்; வார்தா = மூக்கால் எந்த வாசனையை நுகர்வதும்; ஜாயந்தே =ஏற்படுகிறது.

“அப்பாடா! இப்படி எல்லாமே தெரிய வரும் ன்னா வேற என்ன வேணும்” என்று தோன்றுகிறதா? அதைப்பற்றி அடுத்து சொல்கிறார்.

  ते समाधावुपसर्गा व्युत्थाने सिद्धयः ।।37।।
தே ஸமாதா⁴வுபஸர்கா³ வ்யுத்தா²நே ஸித்³த⁴ய​: || 37||

தே = அவை; ஸமாதௌ⁴ = (நிர்விகல்ப) ஸமாதி விஷயத்தில்; உபஸர்கா³= விரோதிகளாக; வ்யுத்தா²நே = ஸமாதியிலிருந்து வெளி வந்த காலத்தில்; ஸித்³த⁴ய​: ஸித்திகளாவன (ஆகின்றன).
யோகத்தின் பரம ப்ரயோஜனம் நிர்விகல்ப ஸமாதியை அடைவது. அந்த வழியில் ஸமாதி கலைந்து வெளிவரும் காலத்தில் ஏற்படும் இந்த சித்திகள் ஜீவனை திசை திருப்ப வாய்புண்டு. அப்போது அவை எதிரிகள் ஆகின்றன. ஆகவே இவற்றில் நிலைத்து நிற்காமல் மேலே சாதனை செய்ய வேண்டும்.

ப³ந்த⁴காரணஶைதி²ல்யாத்ப்ரசாரஸம்°வேத³நாச்ச சித்தஸ்ய பரஶரீராவேஶ​: || 38||

ப³ந்த⁴காரண = பந்தத்துக்கு காரணமான (தர்ம அதர்மங்களுக்கு); ஶைதி²ல்யாத் = ஸம்யமம் மூலம் தளர்ச்சி ஏற்பட்டு இருப்பதினாலும்; ப்ரசார = நாடிகளில்; ஸம்°வேத³நாச்ச = ஸம்யமத்தாலும்; சித்தஸ்ய = சித்தத்தின்; பர ஶரீர ஆவேஶ​: = தன் சரீரத்தை விட வேறு சரீரத்தில் பிரவேசித்தல் (உண்டாகிறது).

இயற்கையில் எங்கும் நிறையக்கூடிய சித்தம் அந்தந்த ஜீவர்களின் தர்ம அதர்மங்களால் ஒரு உடம்பிலேயே கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம் ஆகும். ஸம்யமத்தால் கர்ம நாசமடைந்து இந்த கட்டு தளர்ந்து போனதால் பந்தம் விடுகிறது. மேலும் நாடிகளில் ஸம்யமம் செய்ய சித்தத்தின் சஞ்சார ஸ்தானம் பற்றி அறியப்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் வேறு எந்த உடலிலும் பிரவேசிக்கலாம். இது ப்ரவேசித்தல் சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன் இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே ப்ரவேசிக்கும். இதுவே பர ஶரீர ஆவேஶம் என்னும் உடலைவிட்டு உடல் பாயும் சித்தி ஆகும்

உதா³நஜயாஜ்ஜலபங்ககண்டகாகதி³ஷ்வஸங்க³ உத்க்ராந்திஶ்ச || 39||

(ஸம்யமமத்தால்) உதா³ந =உதானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ஜல = நீர்; பங்க= சேறு (பங்கஜம் = சேற்றில் முளைக்கும் [பூ]); கண்டகா = முள்; ஆதி³ஷு = முதலியவற்றில்; அஸங்க³ = சம்பந்தமின்மை; உத்க்ராந்திஶ்ச = ஆகாசத்தில் செல்லும் தன்மையும்; (உண்டாகிறது).

இந்திரியங்களின் விருத்தி உள் வெளி (ஆந்தரம், பாஹ்யம்) என இரு வகை. உருவம் சப்தம் முதலியன குறித்து ஏற்படும் அறிவு பாஹ்யம். உள்ளே வாயுக்களின் சலனத்தை ஒட்டி ஏற்படும் விருத்தி ஆந்தரம். இந்த உள் விருத்தி எல்லா இந்திரியங்களுக்கும் பொதுவானது. வாயுக்களின் சலனம் இல்லாவிடில் இந்திரியங்களும் உள் விருத்தி அடையா. மூக்கு முதல் ஹ்ருதயம் வரை சலனம் உள்ளது ப்ராண விருத்தி. ஹ்ருதயம் முதல் நாபி வரை உள்ளது ஸமான விருத்தி. இது உட்கொண்ட ஆகாரத்தை ரத்தமாக்குகிறது. (செரிமானம், சத்து உள்ளே செல்லுதல்). நாபி முதல் பாதம் வரை அபான விருத்தி. இது சரீரத்தின் கழிவுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. மூக்கின் நுனி முதல் தலையின் உச்சி வரை உதானன். இதுவே உயரக்கிளம்ப ஏதுவாகும். (ஏனைய நூல் ஒன்றில் ஹ்ருதயம் முதல் உச்சி வரை என்றூம் சொல்லி இருக்கிறது) உடல் முழுதும் நிறைந்து உள்ளது வியானன். இவை எல்லாவற்றிலும் சிறந்தது ப்ராண விருத்தியே. இவற்றில் உதானனில் ஸம்யமம் செய்து ஜெயித்தவனால் நீர், சேறு, முள் ஆகிய எதன் மீதும் பாதிப்பு இல்லாமல் நடந்து போக முடிகிறது. மேலும் மரண காலத்தில் அர்ச்சிராதி மார்கங்கள் வழியாக மேலான லோகங்களை அடையவும் இயலும். இதையே ஆகாயத்தில் செல்லும் தன்மை என்றனர். மணிப்ரபை என்ற வ்யாக்கியான நூலில் தனிஷ்டப்படி மரணத்தை அடைவான் என்று பொருள் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸமாநஜயாத்ப்ரஜ்வலநம் || 40||

(ஸம்யமமத்தால்) ஸமாந = ஸமானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ப்ரஜ்வலநம் = அக்னி போல் சரீரம் ஜ்வலிக்கிறது.
இந்த அக்னி நாபிச்சக்ரம் அருகில் உள்ளது.
இந்த சித்தி குறித்து காளிதாசன் குறிப்பிடுகிறார். “தாக்ஷாயணியின் தகப்பன் அவளை அவமதித்தான். அந்த சந்தர்பத்தில் அவள் யோகாக்னியின் மூலம் தன் பழைய சரீரத்தைவிட்டு புதிய சரீரத்தில் நுழைய பர்வத ராஜனின் பத்னியான மேனாதேவியிடம் வந்து சேர்ந்தாள்.”

ஶ்ரோத்ராகாஶயோ​: ஸம்°ப³ந்த⁴ஸம்°யாமாத்³ தி³வ்யம்° ஶ்ரோத்ரம் || 41||

ஶ்ரோத்ர =சுரோத்திரம் என்னும் இந்திரியம்; ஆகாஶயோ​: = ஆகாயம் ஆகியவற்றின்; ஸம்°ப³ந்த⁴ = ஸம்பந்தத்தில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; தி³வ்யம்° = திவ்யமானதாக (மறைந்த சப்தம், தூரத்தில் உள்ள சப்தம், சூக்குமமான சப்தம்; இவற்றை கிரஹித்தல் ) ஶ்ரோத்ரம் = கேட்கும் திறன் ஆகிறது.

இதே போல் நுகர்தல், தொடுதல், சுவை, காணல் ஆகிய இந்திரியங்களுக்கு நிலம், வாயு, நீர், ஒளி ஆகிய ஐம்பூதங்கள் ஆதாரமாகும். சப்தங்களுக்கு ஆகாசமும், வாசனகளுக்கு நிலமும், சுவைக்கு நீரும், ரூபத்துக்கு தேஜஸும் ஆதாரங்களாகும். இவற்றின் சம்பந்தத்தை ஸம்யமம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் இந்திரியங்களுக்கு -எங்கோ இருக்கும் ஒலியை கேட்பது போன்ற – அசாதாரண அதாவது திவ்யத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது.

காயாகாஶயோ​: ஸம்ப³ந்த⁴ஸம்°யமாலகு⁴தூலஸமாபத்தேஶ்சா”காஶக³மநம் || 42||

காய ஆகாஶயோ​: = உடல் ஆகாசம் இவற்றின்; ஸம்ப³ந்த⁴ = சம்பந்த; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்வதாலும்; லகு⁴ தூல ஸமாபத்தேஶ்ச = மிக மெல்லிய பஞ்சு முதலானவற்றில் தாரணா-த்யான ஸமாதிகளாலும்; ஆகாஶ க³மநம் = ஆகாயத்தில் சஞ்சரித்தல் (உண்டாகிறது)
ஒரு இடைவெளி இருக்குமிடத்தில்தான் சரீரம் இருக்க முடியும். ஆகாசமோ எங்கும் வியாபித்து இருக்கிறது. சரீரம் இருக்குமிடத்தில் ஆகாசம் இருக்கவே இருக்கும். இந்த சம்பந்தத்தில் தாரணா, த்யானம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஒருவனுக்கு பக்ஷிகள் போல வானத்தில் பறக்கும் சக்தி உண்டாகிறது. அல்லது பஞ்சு முதல் பரமாணு வரை உள்ள மிக நுண்ணிய லகுவான பொருட்களில் ஸம்யமம் செய்து லகுத்வம் என்ற குணத்தை ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சக்தி கிடைக்கிறது.

ப³ஹிரகல்பிதா வ்ரு«த்திர்மஹாவித³தே³ஹா தத​: ப்ரகாஶாவரணக்ஷய​: || 43||

ப³ஹிர் =சரீரத்துக்கு வெளியே ஏற்பட்ட; அகல்பிதா = மனத்தின் அகல்பிதை என்ற; வ்ரு«த்திர் =விருத்தி; மஹா வித³ தே³ஹா = மஹாவிததேஹா என்னும்; தத​: =சித்தியால்; ப்ரகாஶ ஆவரண = புத்தி சத்வத்தின் பிரகாசத்தை மறைக்கும் கிலேசம், கர்மம், ஆசயம் இவற்றின்; க்ஷய​: = தேய்தல் (அழிவு) (உண்டாகிறது).

தாரணை போது உடலின் வெளியே மனோ விருத்தி ஏற்படுதல் விதேஹ தாரணை ஆகும். இந்த நிலையில் மனதிற்கு உடலின் சம்பந்தம் ஏற்படுமானால் அது கல்பிதா எனப்படும். அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம் இருக்கும்போதுதான் இது ஏற்படும். அப்போதுதான் வெளி வஸ்துகளில் வ்ருத்தி ஏற்படட்டும் என்ற சங்கல்பமும் உண்டாகும்.

சரீரத்தில் நான் என்ற புத்தி விலகின போதும் கூட மனதிற்கு வெளியே வ்ருத்தி ஏற்படுகிறது. இது சரீர சம்பந்தம் இல்லாமலும் சங்கல்பம் இல்லாமலும் நடக்கும். இது அகல்பிதா அல்லது மஹாவிததேஹா எனப்படும். இந்த சித்தியடைந்த யோகிகள் பராகாசத்துக்குள் நுழைவர்.
மேலும் சத்வ புத்தி ப்ரகாச ஸ்வபாவம் உள்ளது. இதை தமஸும், ரஜஸும் ஆன கிலேசம், கர்மம், ஆசயம் ஆகியன மறைகின்றன. (பாதம் 1 சூத்திரம் 24). மஹாவிதேஹா கிடைத்தவருக்கு இது தேய்ந்து ஸர்வஜ்ஞானம் இருக்கும் தன்மை ஏற்படும்.

ஸ்தூ²லஸ்வரூபஸூக்ஷ்மாந்வயார்த²வத்த்வஸம்°யாமாத்³ பூ⁴தஜய​: || 44||

ஸ்தூ²ல ஸ்வரூப ஸூக்ஷ்ம அந்வய அர்த²வத்த்வம் = ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகிய பஞ்ச பூத சொரூபங்களில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; பூ⁴த ஜய​: பஞ்ச பூதங்களை ஜெயிக்க முடிகிறது.

ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகியன பஞ்ச பூதங்களின் ஐந்து சொரூபங்கள்.
விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடிய பகுக்க முடியாத விஷயம் ஸ்தூலமாகும். விசேஷங்கள் யாவை?
ஏழு ஸ்வரங்கள்; குளிர்ச்சி- சூடு போன்ற ஸ்பர்சங்கள்; கருப்பு, சிவப்பு முதலான நிறங்கள்; இனிப்பு, கசப்பு முதலான சுவைகள்; நல்ல வாசனை, ‘நாற்றம்’ முதலான வாசனைகள்; இவை அனைத்தும் பெயர், சொரூபம், காரியம் ஆகியவற்றால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை. ஆகையால் இவை விசேஷங்கள் எனப்படும். இவற்றில் ஐந்தும் நிலத்தில் உள்ளன. கந்தம் எனும் ரசத்தை தவிர்த்த அனைத்தும் ஜலத்தில் உள்ளன. கந்தம் ரசம் தவிர்த்த அனைத்தும் நெருப்பிலும், கந்தம் ரசம் ரூபம் தவிர்த்த அனைத்தும் வாயுவில் உள்ளன. ஆகாயத்தில் சப்தம் மட்டும் உள்ளது.
இப்படிப்பட்ட விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடியவை ஸ்தூலமாகும்.
இந்த பஞ்ச பூதங்களின் விசேஷங்களும் தர்மங்களும் விரிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன. அவை இங்கு நமக்கு தேவையில்லை.
பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகள் ஸூக்ஷ்மமாகும். இதன் பரிமாணம் (மாறிய வடிவமே) பரமாணு.
சத்வ ரஜஸ் தமஸ் குணங்கள் சேர்ந்த ப்ரக்ருதி என்பது பஞ்ச பூதங்களின் ‘பிரிக்க முடியாத’ அந்வய ரூபம். எல்லா காரியங்களிலும் இந்த குணங்கள் பிரிக்க முடியாமல் சேர்ந்திருப்பதால் இந்த பெயர்.
பஞ்ச பூதங்களில் சுக துக்க ரூபமான புருஷார்த்தம் அர்த்தவத்வம் ஆகும்.
பஞ்சபூதங்களின் இந்த ஐந்து வித ரூபங்களிலும் ஸம்யமம் செய்யும் யோகிக்கு பஞ்ச பூதங்கள் மீது ஆளுமை ஏற்படுகிறது. அவை அவன் சங்கல்பப்படி நடந்துகொள்கின்றன.

ததோ’ணிமாதி³ப்ராது³ர்பா⁴வ​: காயஸம்°பத்தத்³த⁴ர்மாநபி⁴கா⁴தஶ்ச || 45||

தத: = அதனால் (பூத ஜயத்தால்); அணிமாதி³= அணிமா முதலான; ப்ராது³ர் பா⁴வ​: =சித்திகள் கிடைப்பதும்; காய ஸம்°பத் = சரீர சம்பத்தும்; தத்³ த⁴ர்மாந் = அவற்றின் தர்மங்களால்; அபி⁴கா⁴தஶ்ச = பாதிக்கப்படாமையும்;(கிடைக்கின்றன).

அணிமா முதலான சித்திகள்:

அணிமா: அணு அளவான சரீரத்தில் இருத்தல்.
மஹிமா: ஒரு யோசனை, இரண்டு யோசனை, பர்வதம் போல் வியாபித்து இருத்தல்.
க4ரிமா: மிகவும் பளுவாக இருத்தல்.
லஹிமா: பஞ்சு போல் கனமில்லாதிருத்தல்.
ப்ராப்தி: இருந்த இடத்தில் இருந்து எதையும் அடையும் தன்மை. பூமியில் இருந்து கொண்டு சந்திரனை தொடுவது போல.
ப்ராகாம்யம்: கேள்வி ஞானம் உள்ளதிலோ நேரடியாக கண்டதிலோ தன் இச்சைக்கு தடை ஏற்படாமை. நீரில் முழுகுவது போல மண்ணில் மூழ்குவது.
ஈஶித்வம்: நம் உடலை நாம் விரும்புவது போல நகர்த்த அசைக்க முடிகிறதல்லவா? அது போல சகல பௌதிக விஷயங்களையும் தன் விருப்பப்படி அசைக்க முடிகிற தன்மை.
வஶித்வம்: பூத பௌதிக குணங்களை தன் இச்சைப்படி மாற்றுதல். விஷத்தையும் அமிர்தமாக பாவித்து கொடுக்க அது அமிர்தமாகும்.
இவையே எட்டு வித சித்திகள்.
இப்படி சத்திய சங்கல்ப சித்திகள் இருந்தாலும் ஈஶ்வர சங்கல்பத்துக்கு மாறாக செயல் பட முடியாது என்கிறார் நாகோஜி பட்டர். சந்திரனை சூரியனாக்க முடியாது; சூரியனை சந்திரனாக்க முடியாது. ஈஶ்வர சங்கல்பத்துக்கு விரோதமாக செயல் பட முனைந்தால் சித்திகளில் இருந்து நழுவி விடுவான்.
இந்த சித்திகளை பெற்றவர் பஞ்ச பூதங்களின் விரோத தர்மங்களால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அக்னியால் எரிக்கப்படாமல், காற்றினால் அசைக்கப்படாமல், மறைப்பில்லாத ஆகாயத்திலும் மறைதல், கல்லுக்குள்ளும் நுழைதல், எவ்வளவு காலமும் நீரில் வசித்தல் … இப்படி பலதையும் செய்ய இயலும்.

ரூபலாவண்யப³லவஜ்ரஸம்°ஹநநத்வாநி காயஸம்°பத் || 46||

ரூப = கண்ணுக்கு பிடித்த வடிவமும்; லாவண்ய = அழகும்; ப³ல வீர்யமும்; வஜ்ர ஸம்°ஹநநத்வாநி = வஜ்ரம் போல கெட்டியான அவயங்களின் சேர்க்கையுமே; காய ஸம்°பத் =காய சம்பத் என்ற சித்தி.

 ग्रहणस्वरूपास्मितान्वयार्थवत्त्वसंयमादिन्द्रिजयः ।।47।।
க்³ரஹணஸ்வரூபாஸ்மிதாந்வயார்த²வத்த்வஸம்°யமாதி³ந்த்³ரிஜய​: || 47||

க்³ரஹண = சப்தம் முதலானவற்றில் இந்திரியங்களுக்கு உண்டாகும் விருத்தி; ஸ்வரூப = 11 வித இந்திரியங்கள்; அஸ்மிதா = இந்திரியங்களின் காரணங்கள்; அந்வய = சத்வம் முதலிய குணங்கள்; அர்த²வத்த்வ = சுக துக்க ரூபமாக இருக்கும் புருஷார்த்தத்தில்; ஸம்°யமாத்³ =ஸம்யமம் செய்ய; இந்த்³ரிய ஜய​: = இந்திரியங்களின் ஜயம் உண்டாகிறது.
இந்திரியங்களின் சொரூபம் ஐந்து.
1. சாமான்ய,விசேஷ ரூபமான சப்தம் முதலியன. இதில் உண்டாகும் இந்திரிய விருத்தியே க்ரஹணம். அதாவது அந்தந்த விஷய வடிவங்களாகவே மாறுதல்.
2. மேற்கண்டதுடன் ஸத்வ ப்ரதானமான அஹங்காரத்திலிருந்து உண்டாகியிருத்தல் என்பதும் சேர்த்து அதன் சொரூபம்.
3. இந்திரியத்தின் மூலமான சாத்விக அகங்காரம் மூன்றாவதான அஸ்மிதையாகும்.
4. கார்யமான இந்திரியங்களில் இருக்கும் ஸத்வம் முதலான குணங்கள் அந்வயம்.
5. இந்திரியங்களில் இருக்கும் சுக துக்கங்கள் அர்த்தவத்வம்.

இவற்றில் ஸம்யமம் செய்ய இந்திரிய ஜயம் உண்டாகிறது.

ததோ மநோஜவித்வம்° விகரணபா⁴வ​: ப்ரதா⁴நஜயஶ்ச || 48||

தத: = அதனால்; மநோ ஜவித்வம்° = (உடலுக்கு) மனதைப்போல உடலுக்கு அதி வேக கதியும்; விகரணபா⁴வ​: = (ஸ்தூல சரீரத்தின் உதவி இன்றியே இந்திரியங்களுக்கு) தேச கால சம்பந்தமுள்ள வஸ்துக்களில் வ்ருத்தி லாபமும், ப்ரதா⁴நஜயஶ்ச = (தன்னிச்சையை அனுசரித்து) ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் (உண்டாகிறது)

இந்திரியங்களில் ஸம்யமம் செய்து இந்திரிய ஜயம் பெற்றது போல மனதில் ஸம்யமம் செய்து சரீரத்துக்கு அதன் வேகத்தை பெறலாம். தூர தேசம்; இறந்த, எதிர்காலங்களில் இருக்கும் விஷயங்கள்; சூக்ஷ்மமான விஷயங்கள் இவற்றில் இந்திரியங்களின் விருத்தி லாபத்தை (ஒன்றைப்பற்றிய அறிவுதானே இது?) பெறலாம். தன்னிச்சையை அனுசரித்து ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் உண்டாகிறது. இந்த மூன்று சித்திகளும் மதுப்ரதீகா எனப்பெயர் பெறும்.

இது வரை ஸம்யமத்தால் உண்டாகிறதும், நேரடியாகவோ சிரத்தையை உண்டு பண்னுகிறதாகவோ விவேகக்யாதிக்கு சாதனமாக இருக்கிற ஞானம், க்ரியை இவை ரூபமான ஸித்திகள் சொல்லப்பட்டன.

ஸத்த்வபுருஷாந்யதாக்²யாதிமாத்ரஸ்ய ஸர்வபா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° ஸர்வஜ்ஞாத்ரு«த்வம்° ச || 49||

ஸத்த்வ புருஷ = ப்ரக்ருதி, புருஷன் இவர்களின்; அந்யதா க்²யாதி மாத்ரஸ்ய = பேதத்தை குறித்த ஞான ஆவ்ருத்தியில் [அறிவுத்தேடலில்] மட்டும் (முயற்சியுள்ள யோகிக்கு); ஸர்வ பா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° = ஸர்வ பாவாதிஷ்டாத்ருதம் என்னும் எல்லா விதமான பொருட்களையும் நியமனம் செய்யும் ஆற்றலும் ; ஸர்வ ஜ்ஞாத்ரு«த்வம்° ச =எல்லா முக்காலங்களிலும் உள்ள வஸ்துகள் குறித்து ஞானமும் (உண்டாகின்றன)

ஸம்யமத்தால் சித்தத்தில் ரஜஸ், தமஸ் ஆகியவற்றை நீக்கிக்கொண்ட யோகி மேலான சித்த சுத்தியை அடைந்தவன். அதனால் வசீகார ஸம்க்ஞை என்ற பர வைராக்கியத்தை அடைந்தவன். இந்த யோகி ப்ரக்ருதி – புருஷ பேத ஞானத்தை மட்டில் பெருக்கிக்கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் யோகி ஈஶ்வரனைபோல சகல விதமான வஸ்துக்களையும் நியமனம் செய்யும் ஆற்றல் படைத்தவனாவான். முக்காலங்களிலும் உள்ள வஸ்துக்களின் விசேஷ ஞானத்தையும் பெறுகிறான். இந்த ஸித்திக்கு விசோகா என்று பெயர்.

தத்³வைராக்³யாத³பி தோ³ஷபீ³ஜக்ஷயே கைவல்யம் || 50||

தத்³வைராக்³யாத³பி= அதன் (விசோகா எனும் ஸித்தி) மீதும் (அதன் காரணமான விவேக க்யாதி மீதும்) வைராக்கியம் ஏற்பட்டால் ; தோ³ஷ பீ³ஜ க்ஷயே = அவித்தைக்கு முதலான க்லேசங்களுக்கு காரணமான ப்ராந்தி சம்ஸ்காரம் விலகி; கைவல்யம் = கைவல்யம் என்னும் சுய சொரூப பிரதிஷ்டை உண்டாகிறது. இது பர வைராக்கிய ஸம்ஸ்கார சேஷா என்ற பூமி (நிலை).
த்வைதம் போய் அத்வைதம் வந்துவிட்டது! மற்ற பொருட்களை நியமனம் செய்வது என்ற நிலை த்வைதமாக இருந்தது. இந்த நிலை மீதும் பற்றின்மை – வைராக்கியம் வர (பர வைராக்கியம்) ப்ராந்தி ஸம்ஸ்காரம் என்னும் மாயை முற்றும் விலகுகிறது.

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே ஸங்க³ஸ்மயாகரணம்° புநரநிஷ்ட ப்ரஸங்கா³த்| 51||

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே = இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்; ஸங்க³= ஆசை; ஸ்மய அகரணம்°= கர்வம் ஆகியவற்றை செய்யாதிருத்தல்; புநர் = மீண்டும்; அநிஷ்ட = இஷ்டமில்லாத; ப்ரஸங்கா³த் = சம்சார பந்தம் ஏற்படும் என்ற பயத்தால்; (யோகத்துக்கு ஏற்படும் விக்கினங்களை போக்க இதுவே உபாயம்)

யோகிகள் நால்வகை:
பிரதம கல்பிகன்: இவர் ஸம்யமத்தில் மட்டும் விருத்தியை செய்து வருவார். சித்திகள் கிடையாது (பிரச்சினையே இல்லை!) தேவர்கள் இவரை ‘கண்டு கொள்ள’ மாட்டார்கள்.

மது பூமிகன்: ஸப்ரக்ஞாத ஸமாதியில் ருதம்பரா, பரஞான அவஸ்தையுடன் மதுமதீ என்ற சித்த பூமியை அடைந்து; பஞ்சபூதங்களையும், இந்திரியங்களையும் ஸாக்ஷாத்கரித்து அவற்றை ஜெயிக்க விரும்பி அவற்றால் மது ப்ரதீகா, விசோகா, ஸம்ஸ்கார சேஷா என்ற மூன்று வித பூமிகளை அடைய விரும்புகிறவன் மது பூமிகன்.

ப்ரக்ஞாத்ஜோதி: ருதம்பரா பிரக்ஞையையும் பூதேந்திரியங்கள் ஜெயத்தையும் அடைந்து தேவர்களும் நெருங்காதபடி விசோகா, ஸம்ஸ்கார சேஷா ஸித்தியையும் சாதிக்க விரும்பி, அதனதன் சாதனத்தில் ஸம்யமம் செய்வதில் முயற்சி செய்கிற யோகி இவர். இவருக்கு இந்திராதி யோகங்கள் கிடைக்காது (அதான் தேவர்கள் நெருங்க முடியாத படிக்குன்னு சொல்லியாச்சே!)

அதிக்ராந்த பாவனீயன்: விசோகா, ஸம்ஸ்கார சேஷா பூமிகளையும் அடைந்து கடைசி சரீரத்தில் உள்ள சித்தத்தின் லயம் என்ற பலனை மட்டும் அடைய காத்து இருப்பவர். இவர் செய்ய வேண்டியன எல்லாம் செய்து முடித்தவர். இவருக்கும் இந்திராதி யோகங்கள் கிடையா!

ஆராய்ந்தால் மது பூமிகன் மட்டுமே இந்திராதி யோகங்கள் பெறுவார். (‘இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்’ என்று சொன்னது இவருக்கு மட்டுமே பொருந்துகிறது.) போகங்களில் ஆசை வரின் கீழே விழுவர். கர்வத்தை அடக்காவிடில் செய்ய வேண்டியன எல்லாம் செய்து விட்டேன் என்று நினைப்புண்டாகி மேலே யோக பூமிகள் கிடைக்காமல் போகும். ஆகவே இந்த சூத்திரம் இவரைக்குறித்தே சொல்லப்பட்டது.

க்ஷணதத்க்ரமயோ​: ஸம்°யமாத்³விவேகஜம்° ஜ்ஞாநம் || 52||

க்ஷணம் தத் க்ரமயோ​: = க்ஷணமும் அதன் கிரமுமான காலம்; ஸம்°யமாத்³ = இதில் ஸம்யமம் செய்ய; விவேகஜம்° = எல்லா வஸ்துக்களையும் பகுத்தறிவதை முன்னிட்ட; ஜ்ஞாநம் = ஞானம் (உண்டாகிறது)

க்ஷணம் என்பது ஒரு காலநிலை. ஆங்கிலத்தில் இன்ஸ்டன்ட் என்பது. அதில் முன்பாகம் பின்பாகம் என்றெல்லாம் இருக்க முடியாத அளவு நுண்ணியது. க்ஷணம் அடுத்த க்ஷணம் என்று தொடர்ந்து வரும் பிரவாகம் கிரமம். க்ஷணம் அடுத்த க்ஷணத்தில் மறைந்துவிடுகிறது. க்ஷணங்களின் சமுதாயம் நிமிஷம், மணி, வருஷம் போன்றவை. க்ஷணமும் உண்மையானதல்ல; ஆகவே அதன் சமுதாயமும் உண்மையானதல்ல. (நிரந்தரமல்ல என பொருள் கொள்க. எது நிரந்தரம் இல்லையோ அது உண்மையல்ல. தற்காலிகமே.) ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொரு வஸ்துவும் மாறிக்கொண்டே இருப்பதால், இந்த க்ஷணத்திலும் அதன் கிரமத்திலும் ஸம்யமம் செய்து சாக்ஷாத்கரித்தால் எல்லா வஸ்துக்களையும் அவற்றின் எல்லா விசேஷங்களும் உட்பட அறியப்படுகிறது. இதுவே ஸர்வக்ஞதை. இதனால் இவை எல்லாவற்றிலும் புருஷன் வேறுபட்டவன் என்ற ஞானமும் உண்டாகிறது.

ஜாதிலக்ஷணதே³ஶைரந்யதாநவச்சே²தா³த்துல்யயோஸ்தத​: ப்ரதிபத்தி​: || 53||

ஜாதி = பசு முதலிய ஜாதி; லக்ஷண = கருப்பு வெளுப்பு முதலிய லக்ஷணம்; தே³ஶைர் = முன் பின் முதலிய தேசம் (இவற்றால்) அந்யதா = வேறாக; நவச்சே²தா³த் = நிச்சயம் சம்பவிக்காதாகையால்; துல்யயோ = ஜாதி, லக்ஷணம், நேரம் ஆகியவற்றால் ஒத்திருக்கும் இரண்டு; தத​: = க்ஷண ஸம்யமத்தால் உண்டாகிற விவேகஜ ஞானத்தால்தான்; ப்ரதிபத்தி = பேத க்ஞானம் உண்டாகிறது.​
சுலபமாக புரிந்து கொள்ள :
பசுவும் கவயம் என்ற மிருகமும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். ஒரே இடத்திலும் இருக்கலாம். இவை வேறானவை என்று அவற்றின் ஜாதியால்தான் தெரியும்.
இரண்டு பசுக்கள் ஓரிடத்தில் இருக்க வெள்ளைப்பசு, கருப்பு பசு என்ற ரீதியில்தான் வேறுபடுத்தி பார்க்க முடியும்.
நெல்லி மரத்தில் உள்ள நெல்லிக்காய்கள் பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்கும். இந்த இடத்தில் முன் உள்ளது பின் உள்ளது என்றே அவற்றை வேறுபடுத்தி பார்க்க இயலும்.
இரண்டு இடங்களில் நெல்லிக்காய் வைத்து இருக்கிறது. பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது. யாரோ ஒருவர் நாம் பார்க்காத சமயம் முதல் இடத்தில் இருந்து நெல்லிக்காயை எடுத்து இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்ததை நீக்கிவிட்டால் பிறகு பார்க்கும் நாம் முதல் இடத்தில் இருந்த நெல்லிக்காய் காணவில்லை என்று நினைப்போம். ஆனால் நடந்தது வேறு என்று க்ஷணம் – கிரமத்தில் ஸம்யமம் செய்த யோகி இந்த க்ஷணத்தில் இந்த இடத்துக்கு சம்பந்தம் ஏற்பட்டது என அறிவதால் அவனுக்கு நடந்தது சரியாகத் தெரியும்.

தாரகம்° ஸர்வவிஷயம்° ஸர்வதா²விஷயக்ரமம்° சேதி விவேகஜம்° ஜ்ஞாநம் || 54||

தாரகம்° = சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றுவதாகவும்; ஸர்வவிஷயம்° = (ஸ்வரூபத்தால்) எல்லா விஷயங்களையும்; ஸர்வதா² விஷய அக்ரமம்° ச = (பிரகாரத்தால்) விஷயத்தின் வரிசை என்று இல்லாமல் ஒரே நேரத்திலும் (அறிதல்); இதி விவேகஜம்° ஜ்ஞாநம் = க்ஷணம், அதன் கிரமம் இவற்றில் ஸம்யமத்தால் உண்டான விவேகஜ ஞானத்தால் (உண்டாகிறது).
முக்காலங்களிலும் உள்ள எல்லா வஸ்துகளும் அறியப்படுவதால் அவற்றின் தோஷங்களை கவனிக்க முடிகிறது. இதனால் வைராக்கியமும் அதனால் மோக்ஷமும் கிடைக்கிறது. அதனால் இது தாரகம் எனப்படுகிறது.
சமைத்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது ஒவ்வொரு திண்பண்டமும் என குறிக்கிறது. மீதி இல்லாமல் என்று பொருள் இங்கு இல்லை. பாத்திரத்தில் இருந்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது மீதி இல்லாமல் என்று பொருள் தருகிறது. முந்தயது பிரகாரத்தால் எல்லாம். பிந்தயது ஸ்வரூபத்தால் எல்லாம். இப்படி எல்லா விஷயங்களும் என்றும் ஒவ்வொரு விஷயத்தில் முழுமையாக என்றும் குறிப்பிட ஸர்வ விஷயம், ஸர்வதா விஷயம் என சொல்லப்பட்டது.
சரி, மேற்கூறிய சித்திகள் எல்லாம் அடையப்பட்டால்தான் கைவல்யம் கிடைக்குமா? அல்லது அவை அனைத்தும் இல்லாமல் கிடைக்குமா?

ஸத்த்வபுருஷயோ​: ஶுத்³தி⁴ஸாம்யே கைவல்யம் || 55||

ஸத்த்வ புருஷயோ​: = புத்தி தத்துவத்துக்கும் புருஷனுக்கும்; ஶுத்³தி⁴ ஸாம்யே = சுத்தி விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால்; கைவல்யம் = கைவல்யம் கிடைக்கிறது.
புத்தி தத்துவத்துக்கு தோஷங்கள் ரஜஸும் தமஸும். இவை இரண்டும் விலகி விவேக க்யாதியின் பலத்தால் எல்லா விருத்திகளும் நின்று போகும். பிரதி பிம்ப பலத்தால் கற்பிக்கப்பட்ட போகம் இல்லாது போகும். இதுவே புத்தி தத்துவத்தின் சுத்தி.
தோஷம் ஏதும் இல்லா புருஷனுக்கு பிரதி பிம்ப பலத்தால் கல்பிக்கப்பட்ட போகம் போகிறதே புருஷனுக்கு சுத்தி ஆகும். இப்படி சுத்தி ஏற்படுதலே கைவல்யம் என்ற மோக்ஷம் உண்டாகிறது. இது வரை உண்டாகாத துன்பம் இனியும் உண்டாகாது இருக்குமானால் அது கைவல்யம் எனப்படும். இது புத்தி சத்வத்தில் இருந்து முற்றும் வேறு பட்ட புருஷனை சாக்ஷாத்கரிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற சித்திகள் யோக சாத்திர சாதன அனுஷ்டானத்தில் ஒரு சிரத்தை உண்டாகவே சொல்லப்பட்டன.

——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading