ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -த்³விதீய: ஸாத⁴நாபாத³: —

முதல் பாதத்தில் யோகத்துக்கு வைராக்கியமும் பயிற்சியும் தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை இரண்டும் உண்டாக சித்த சுத்தி அவசியம். இது கர்ம அனுஷ்டானத்தால் கிடைக்கிறது.

கர்ம விபாகம்:
தப: ஸ்வாத்⁴யாயேஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³: || 1||
தப: ஸ்வாத்⁴யாய ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி க்ரியா யோக³:

தபஸும் ஸ்வாத்யாயமும் பலனை எதிர்பாராது செய்யப்பட்ட கர்மங்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதும் கர்ம யோகமாகும்.

தபஸ் என்பது சிலவற்றை கைக்கொண்டு கடைப்பிடிப்பது. அவை; ப்ரம்ஹசர்யம் என்ற இந்திரிய நிக்கிரஹம்; குரு சேவை; உண்மையே பேசுதல்; வாயால் பேசாதிருத்தல்; எந்த வகையிலுமே தொடர்பு கொள்ளாதிருத்தல் (காஷ்ட மௌனம்); (தொடர்பிலிருந்து முழுதும் விலகுவதான) ஆசார மௌனம்; ப்ரம்ஹச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ப்ரஸ்தன் போன்ற தனக்குரிய ஆஸ்ரம தர்மங்களை கடைப்பிடித்தல்; குளிர்-சூடு மகிழ்ச்சி-துக்கம் போன்ற இரட்டைகளை பொறுத்தல்; மிதமான ஆகாரம் ஆகியவை. இங்கே தபஸ் என்பது உடலை ஒன்றும் கொடுக்காமல் காயப்போடுவது அல்ல. அப்படி இருப்போர் யோகம் பழகுவது கடினம்.
ஸ்வாத்யாயம் என்பது சாதாரணமாக வேதத்தை கற்றலைக் குறிக்குமானாலும் இங்கே ப்ரணவம் முதலான மந்திர ஜபங்களும் மோக்ஷத்துக்கானதை குரு மூலம் கற்றலையும் குறிக்கும்.
ஈஶ்வர ப்ரணிதானம் என்பது செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கு அர்ப்பணித்துவிட்டு புண்ணியத்துக்கான கர்மாவைக்கூட நாடி செய்யாதிருத்தல்.

ஸமாதி⁴ பா⁴வநார்த²: க்லேஶ தநூகரணார்த²ஶ்ச || 2||

கர்ம யோகமானது அவித்தை முதலான கிலேசங்களின் குறைத்தலை பலனாக உடையது. இது ஸமாதியின் உற்பத்தியையும் பலனாக கொண்டது.
கர்மம் செய்ய செய்ய க்லேசங்கள் (மனச்சலனங்கள்) குறையும். ஸமாதியில் ஈடுபட ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.

அவித்³யாஸ்மிதாராக³த்³வேஷாபி⁴நிவேஶா: பஞ்ச க்லேஶா: || 3||

க்லேசங்கள் (மனச்சலனங்கள்) என்று சொன்னவை யாவை எனில் அவித்யை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாம்.

அவித்³யா க்ஷேத்ரமுத்தரேஷாம்° ப்ரஸுப்ததநுவிச்சி²ந்நோதா³ராணாம் || 4||

ப்ரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் என ஒவ்வொன்றிலும் 4 பிரிவுகளை உடைய அவித்யைக்கு அதன் மேல் உள்ள மற்ற அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றுக்கு அவித்யை உற்பத்தி ஸ்தானம் ஆகிறது.
அவித்யை முதல் க்லேசம். இதுவே பின் வரும் க்லேசங்களுக்கு மூலமாக இருக்கிறது. இதில் 4 பரிமாணங்கள் –அவஸ்தைகள்- உண்டு.

சில விஷயங்கள் கண் காது முதலிய புலன்களுக்கு பிடிபடாது. அப்படி ஒரு உருவத்துடன் உள்ளது   ப்ரஸுப்தாவஸ்தை.
அடுத்து சிலது புலன்களுக்கு பிடிபடும். ஆனாலும் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய காரணம் – முகாந்திரம் ஏதும் இல்லாததால் சும்மா இருக்கும். இந்து தனு அவஸ்தை.
ஆனால் அப்படி செய்ய விடாமல் ஏதோ பலமான தடை இருக்கிறதால் செயலில் இல்லை. இப்படிப்பட்டது விச்சேத அவஸ்தை.
புலன்களுக்கு பிடிபடும்; தான் தன் காரியத்தை நடத்த மத்த எதன் உதவியும் தேவையில்லை. அது தன் காரியத்தை தடை ஏதுமின்றி நடத்தும். இது உதார அவஸ்தை.
இந்த நான்கு பரிணாமங்களும் -அவஸ்தைகளும் – அவித்தை முதலான எல்லா க்லேசங்களுக்குமே உண்டு.
அவித்தை இல்லாமல் மற்ற க்லேசங்கள் உருவாக மாட்டா. அதனால்தான் அவித்தை க்ஷேத்திரம் அல்லது பிரசவ பூமி எனப்படும்.
ப்ரஸுப்தாவஸ்தையும் தனுவும் புலன்களுக்கு பிடிபடாதாகையால் ஸூக்ஷ்மமானவை. விச்சேதாவஸ்தாவும் உதாராவஸ்தாவும் வெளிப்படையாக ஸ்தூலமாக தெரியும்.

ப்ரக்ருதி லயம் அடைந்தவருக்கு எல்லா க்லேசங்களுமே ப்ரஸூப்தங்களாவே இருக்கும். அதாவது மறைந்து இருக்கும்; வெளிப்படாது.
யோகம் பயில்வோருக்கு க்லேசங்களை விரோதமாக பாவிப்பதால் இவை தனுவாக இருக்கும். அதாவது வெளிப்பட காரணம் வாய்பு இல்லாமல் சும்மாயிருக்கும்.
சாதாரணமாக க்லேசங்கள் விருத்தியாகி வலுப்பட்டு ப்ரஸுப்தா தனுவாகி, அது விச்சின்னமாகி பின் உதாரமும் ஆகும். அதாவது முழுமையாக வெளிப்படும். ஸ்தூலமாகி விட்ட அவஸ்தையை சுத்த சத்வகுணத்தில் பகவானின் த்யானத்தால் போக்கிக்கொள்ளலாம். வளர்ந்துவிட்ட இவற்றை சித்த நிரோதத்தால் போக்க முடியாது. ஸூக்ஷ்மமான அவஸ்தைகளை சித்த நிரோதத்தால் போக்கலாம்.
உதாரணமாக ராகத்தையும் (ஆசையையும்) அதன் விளைவான க்ரோதத்தையும் செயலுக்கு வந்த பின் பகவானை வேண்டியே போக்கிக்கொள்ள வேண்டும். இவை ஸூக்ஷ்மமாக இருந்து முளை விடும் காலத்துக்கு முன்பே சித்தத்தை கட்டுப்படுத்தி பயிற்சியால் போக்கடிக்கலாம்.

அநித்யாஶுசி து³​:கா²நாத்மஸு நித்ய ஶுசி ஸுகா²த்மக்²யாதிரவித்³யா || 5||

அநித்தியமாகவும் அசுத்தமாகவும் துக்கமாகவும் அனாத்மாவாகவும் உள்ளவற்றில் நித்தியம், சுத்தம், சுகம், ஆத்மா ஆகியவற்றை காண்பதே அவித்யா.

இந்த உலகம் அநித்தியம். என்றோ ஒரு நாள் அழியும். தேவர்களாயினும் ஒரு நாள் புண்யங்களை அனுபவித்து தீர்த்தபின் மீண்டும் மனித ஜன்மம் எடுக்க வேண்டும். இப்படி எண்ணாமல் உலகம் என்றும் இருக்கும், நித்தியம் என்றும்; அல்லது யாகங்கள் செய்து தேவனானால் நித்தியமாக சுகமாக இருக்கலாம் என்று எண்ணியும் வருவது அவித்தை. நம் உடம்பையும் புலன்களையும்தான் ஆத்மா என்று எண்ணுகிறோம். இதுவும் அவித்தை காரணமாகவே.

த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோரேகாத்மதேவாஸ்மிதா || 6||

த்³ரு«க்³ த³ர்ஶந ஶக்த்யோ: ஏகாத்மதேவ அஸ்மிதா
பொருட்களை பார்க்கின்ற புருஷன், அதற்கு உதவுகின்ற தர்சன சக்தியான ஸத்வ குண மயமான புத்தி இவை ஒன்றான உருவமுள்ள தன்மையானதாக தோன்றுவது அஸ்மிதை என்ற க்லேசமாகும்.
ஆத்மாவின் சாயல் சுத்த சத்வ புத்தியில் பிரதிபலிக்கும், இந்த பிம்பமே பார்க்கிறவர். பார்க்கப்படுவன ப்ரக்ருதியில் இருந்து உண்டானவை. இவை அனாத்மா. புருஷனையும் பார்க்கும் சத்வ புத்தியில் உள்ள பிம்பத்தையும் ஒன்றாக நினைப்பது அஸ்மிதையாகும்.
இவை இரண்டும் வேறுபட்டவை என்ற ஞானமே விவேக க்யாதி.

ஸுகா²நுஶயீ ராக³: || 7||

சுகத்தையும் அதை அடையும் சாதனத்தையும் அனுசரித்து உண்டாகிற சித்த விருத்தி ராகம் ஆகும். இது நல்லதாக- உதாரணமாக மோக்ஷத்தை அடைய வேண்டும் – என்றும் இருக்கலாம். அல்லது மலினமான விஷயங்களிலும் இருக்கலாம். ஒரு முறையோ சில முறையோ பல முறையோ அனுபவித்த சுகத்தின் நினவு வந்து, அது போன்ற சுகமும், அது ஏற்படும் சாதனமும் மீண்டும் வேண்டும் என தோன்றும். இது ஒருவனை அடிமை ஆக்கிவிடுகிறது. பின் இதை அடைய மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டப்படுவான்.
பிறர்க்கு ஏற்படும் சுகத்தை தன் சுகமாக யார் கருதுகிறானோ அவனுக்கு ராகம் ஏற்படுவதில்லை; ஒழிந்துவிடுகிறது. இது விலகினால் சித்தமும் மழை பெய்து நின்றதும் தெளியும் நீர் போல தெளிவாகிவிடும்.

து³:கா²நுஶயீ த்³வேஷ: || 8||

மோஹத்தின் காரணமாக அனுபவிக்கப்படும் துக்கம் அல்லது அதன் சாதனம் – இவற்றால் உண்டாகும் சித்த விருத்தியானது த்வேஷமாகும்.

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம். அது கிடைக்காமல் போகிறது. இன்னொருவருக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தடையாக இருந்ததின் மீதும் அதை அடைந்த மற்றவர் மீதும் த்வேஷம் உண்டாகலாம். ராகமே த்வேஷதிற்கு வித்து.
அனுபவித்த துக்கத்தின் நினைவும் தோன்றலாம்; துக்க சாதனம் பார்க்கக்கூடியதாக இருக்கலாம், அல்லது அத்ருஷ்டமாகவும் இருக்கலாம். நம்மை ஹிம்சித்தது மிருகமோ, விரோதியோ, நோயோ, விபத்தோ, மற்ற வேதனைகளோ இருக்கலாம். இந்த நினைவுகளே நம்மை மீண்டும் அவற்றை அனுபவிக்க வைக்கின்றன. த்வேஷத்தை உருவாக்குகின்றன.
இப்படி உண்டாகும் த்வேஷத்தை விலக்குவது எப்படி? தன்னைப்போல மற்ற மனிதர்களையும் பிராணிகளையும் துக்கப்பட விடக்கூடாது என்ற கருணையே த்வேஷத்தை நீக்கி சித்தத்தை தெளிய வைக்கும்.

ஸ்வரஸவாஹீ விது³ஷோ’பி ததா²ரூஃ‌டோ⁴’பி⁴நிவேஶ: || 9||

{பகுத்தறிவு இல்லாத ப்ராணிகளுக்கு எப்படியோ} அப்படியே சாஸ்திரங்களின் அனுமானங்கள் மூலம் பின்னால் வரும் முக்தியையும் முன்னால் உள்ள பந்தத்தையும் நன்கு அறிந்தவர்களுக்கும் கூட முந்தைய ஜன்மத்தின் அனுபவத்திலிருந்து உண்டாகும் வாசனையை ஒட்டி ஏற்படுவது அபிநிவேசம் ஆகும்.
முந்தின ஜன்மங்களில் ஏற்பட்ட மரண துக்கத்தை அனுபவித்ததில் ஏற்பட்ட வாசனையின் கூட்டம் ஸ்வரஸம் எனப்படும். இதுவே பண்டிதர் முதல் பாமரன் வரை எல்லாஒரையும் இனி எனக்கு மரணம் வேண்டாம் என நினைக்க வைக்கிறது. இந்த ஸ்வரஸத்தை ஒட்டி உண்டாவதே அபிநிவேசம்.
க்லேசங்களையும் அவற்றை நீக்கும் உபாயங்களை உபதேசித்தார். இவற்றை தேய்க்க கிரியா யோகங்களும் மைத்ரீ முதலிய சித்த பரிகர்மங்களுமே.

க்லேசத்தை போக்க:
தே ப்ரதி ப்ரஸவஹேயா​: ஸூக்ஷ்மா​: || 10||

அந்த ஸூக்ஷ்மமான க்லேசங்கள் தனது காரணத்தில் லயம் செய்வித்தால் போக்கத்தக்கவை.

சித்தத்தை அஸ்மிதையில் லயம் செய்ய ஸூக்ஷ்ம நிலையிலுள்ள க்லேசங்கள் விலகிவிடும். பலனைத் தரக்கூடிய க்லேசங்கள் கிரியாயோக அனுஷ்டானத்தாலும் மைத்ரீ போன்ற சித்த பரிகர்மத்தாலும் விலகும் என்று முன்னமேயே சொல்லிவிட்டார்.

இப்போது மீண்டும் ஏன் இந்த பேச்சு வந்தது?

மண்ணெண்னையை ஊற்றி வைத்த பாத்திரத்தில் அதை உடனே காலி செய்தாலும் அதன் வாசனை விடாது. அதை நெருப்பில் இட்டால்தான் வாசனையும் போகும். அது போல க்லேசங்கள் ஸ்தூலமாக இருந்து அவற்றை நீக்கிக்கொண்டாலும் அவை இன்னும் ஸூக்ஷ்மமாக இருக்கும். அவையும் விலக சித்தத்தை அதன் காரணமான அஸ்மிதையில் லயப்படுத்த வேண்டும்.
அஸ்மிதை அவித்தைதான். ஆனாலும் அதில் ஒரே அவித்தை புருஷனுக்கும் புருஷ நிழலுக்கும் உள்ள வேற்றுமையை அறியாமையே. இந்த நிலையில் இந்திரியங்கள் முதலானவை கட்டுப்பட்டாகிவிட்டது. ஆகவே சித்தம் இந்த நிலைக்கு செல்ல சூக்ஷ்ம க்லேசங்கள் விலகிவிடும்.

க்லேசத்தை முற்றிலும் போக்க:
த்⁴யாநஹேயாஸ்தத்³வ்ரு«த்தய​: || 11||

த்⁴யாந ஹேயாஸ் = (புருஷனின்) த்யானத்தினால் முற்றிலும் விலக்கத்தக்கவை (ஆகின்றன); தத்³வ்ரு«த்தய​: =(க்ரியா யோகத்தால் தேயும்படி செய்யப்பட்ட க்லேசங்களின் ஸ்தூல) வ்ருத்திகள்.
துணியில் அழுக்கு படிந்தால் அதை உதறி அலசுகிறோம். நிறைய அழுக்கு இதில் போய்விடும். அப்போதும் போகாத அழுக்கை நீக்க சோப்பு தூள் போட்டு துவைக்கிறோம். ஆனாலும் அழுக்கு முழுவதும் போவதில்லை. மீதம் உள்ள அழுக்கு அந்த துணி நாசமாகும் போதுதான் போகும்.
அது போல க்லேசத்தை நீக்க மைத்ரீ போன்ற சித்த பரிகர்மங்களாலும், மிகும் ஸ்தூல க்லேசங்கள் கிரியா யோகத்தாலும் போனாலும், மிச்சம் உள்ள ஸூக்ஷ்ம க்லேசங்கள் புருஷ த்யானத்தால் அஸ்மிதையில் லயப்படுத்துவதால் மட்டுமே போக்க முடியும்.

கர்மாசயம்:
க்லேஶமூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்டாத்³ரு«ஷ்டஜந்மவேத³நீய​: || 12||

க்லேஶ மூல​: கர்மாஶயோ த்³ரு«ஷ்ட அத்³ரு«ஷ்ட ஜந்ம வேத³நீய​:
(அவித்யையை) க்லேசங்களை காரணமாக உடைய (சித்தத்தில் உள்ள) கர்ம வாசனைகள் பார்க்கக்கூடிய இந்த ஜன்மத்திலும், பார்க்க முடியாத அடுத்த ஜன்மங்களிலும் அனுபவிக்கத்தக்கவை ஆகின்றன.
அவித்தை, அஸ்மிதை, ராகம், த்வேஷம், அபிநிவேஷம் ஆகியவற்றிலிருந்து கர்ம வாசனைகள் உண்டாகின்றன. இந்த வாசனைகள் அடுத்த பிறப்பை உறுதி செய்கின்றன. ஆயுள், போகம், இவற்றையும் தருகின்றன. அவித்தை, அஸ்மிதை ஆகிய க்லேசங்களையும் தருகின்றன.
இவற்றை விலக்குவது எப்படி?
தீவிரமாக செய்யப்பட்ட மந்திர ஜபம், தபஸ், ஸமாதி இவற்றாலோ; ஈஶ்வரன், தேவதை, மகரிஷி, மற்ற மகான்கள் இவர்களின் ஆராதனத்தாலோ புண்ய கர்ம வாசனை உண்டாகின்றது. இது அதே ஜன்மத்தில் பலன் தர ஆரம்பிக்கும். இதே போல் தீவிர வேகத்தில் பயந்தவன், வியாதியஸ்தன், ஏழை, நம்பியிருப்பவன், மஹான்கள், தபஸ்விகள் ஆகியோருக்கு செய்யப்படும் அபசாரத்தால் உண்டாகும் பாப கர்ம வாசனைகளும் அதே ஜன்மத்தில் பலனை தரும். இது போலத்தான் நந்திகேஸ்வரர் செய்த புண்ணியத்தால் மனித சரீரம் விடுத்து தேவ சரீரம் அதே ஜன்மத்தில் பெற்றார். நகுஷன் அத்ரி மகரிஷிக்கு செய்த அபசாரத்தால் அதே ஜன்மத்தில் மலைப்பாம்பானான்.
க்லேசமற்ற யோகிக்கு அடுத்த ஜன்மத்தில் பலன் தர கர்ம வாசனை இராது. அதே போல் நரகத்தின் வேதனையை அனுபவிக்கும் பிராணிக்கு புண்யம் பாபம் தரும் கர்ம வாசனை இராது.

க்லேசங்கள் செய்யக்கூடியது:
ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​: || 13||

ஸதி மூலே தத்³விபாகோ ஜாத்யாயுர்போ⁴கா³​:
க்லேச ரூபத்தில் உள்ள காரணமானது உள்ளபோது அவற்றின் பலன் உண்டாகிறது. அவை பிறப்பு, ஆயுள், போகம் ஆகியனவாகும்.
க்லேசங்கள் நீங்கி விட்டவனுக்கு கர்ம வாசனையும் அதன் பலன்களும் ஏற்படுவதில்லை. ஆசை இல்லாதவன் கர்ம பலனை அனுபவிக்கவும் இச்சை இல்லாதவனாகிறான். பயமில்லாததால் சோகமும் இராது. விவேக க்யாதி என்ற அக்னி இருப்பின் அது க்லேசங்கள் என்ற விதைகளை வறுத்துவிடும். வறுத்த நெல் முளைக்காதது போல க்லேசங்கள் இல்லாவிடில் கர்மவாசனை பலன் தராது.
கர்ம வாசனையால் ஏற்படுவது:
1.பிறப்பு: தேவ ஜென்மமா, மனுஷ்ய ஜென்மமா, விலங்கா தாவரமா என்பன. 2. ஆயுள்: எவ்வளவு காலம் தேகம் – இந்திரியங்களின் சேர்க்கை நீடிக்கும் என்பது. 3.போகம் என்பது இந்திரியங்களால் கிடைக்கும் சுக அனுபவங்கள்.
மரணம் ஏற்படும்போது வளர்ச்சியை அடைந்த அநேக கர்மங்கள் சேர்ந்தே பிறப்பை கொடுக்கின்றன. அந்த ஒரே உடலால் விசித்திரமான போகம் ஏற்படும். மேலும் கர்மங்கள் தனித்தனியாக பிறப்பு, ஆயுள், போகம் இவற்றை தனித்தனியாகவோ, சேர்ந்தோ கொடுக்கவும் கூடும்.
கர்மா மூலம் உண்டாகும் ஜென்மங்கள் பற்றி சில கேள்விகள் உள்ளன.
ஒரு கர்மம் ஒரு ஜென்மத்தை மட்டும் உண்டுபண்ணுமா அல்லது பல ஜென்மங்களை உண்டு பண்ணுமா?
இல்லை அநேக கர்மங்கள் சேர்ந்து ஒரு ஜென்மத்தை உண்டாக்குமா?
அல்லது அவை அநேக ஜென்மங்களுக்கு வழி செய்கின்றனவா?
ஒரு கர்மம் ஒரு பிறப்பை மட்டுமோ அல்லது அநேக பிறப்புக்களையோ தராது. நம் கர்மாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ஜன்மம் அல்லது பல ஜென்மங்களை தருமானால் பெரிய காத்திருப்பு பட்டியல்தான் தேவை. ஆகவே அநேக கர்மாக்கள் சேர்ந்து ஒன்றோ பலவோ ஜென்மங்களை தருகின்றன. ஒரு ஜன்மத்தில் பலன் தரும் கர்மாக்களில் பிரதானமாக ஒன்று இருக்கும். அது அப்போதே பலன் தருவது, மற்றவை இதனுள் அடங்கும். இந்த கர்மாக்களே ஆயுளையும் நிர்ணயிப்பதாக கண்டோம் அல்லவா? மரண காலத்தில் கர்மாக்கள் நேரத்தை நிர்ணயித்ததுடன் பலனை கொடுத்து தீராததால் அடுத்த ஜன்மாவையும் தருகின்றன. இதே கர்மாக்களால் அவன் அடுத்த ஜென்மத்தின் போகங்களையும் அனுபவிக்கிறான்.
பிரதான கர்மா பலமாக இருக்க மற்றவை அதற்கு எதிராக பலன் தர வேண்டியிருப்பின் தடை உண்டாகி வெகு காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கர்மா சரியாக உருவாகாமல் நாசம் ஆகவும் செய்யலாம். பிரதான கர்மாவுக்கு விரோதமாக இல்லாமல் இருப்பின் நடு நடுவே தன் பலனை கொடுத்து விடலாம். அதற்கு ஒத்துப்போனால் சேர்ந்தேவும் கொடுத்துவிடலாம்.
“புண்யே பாபம் அபநுததி” என்ற படி புண்ணியத்தால் பாபத்தின் விளைவை தடுத்துக்கொள்ளலாம்.
சில கர்மாக்கள் -ஜ்யோதிஷ்டோமம் போன்ற யாகங்களில் புண்ணியமும் பாபமும் கலந்தே வருகின்றன. யாகங்களால் சுவர்க்க வாசம் கிட்டினாலும் தேவர்களாலும் கஷ்டம் அனுபவிக்க நேருகிறது.
வரும் ஜன்மத்தில் நிச்சயமாக பலன் தரும் கர்மங்கள் மரணப்பிரகாசகம் எனப்படும். இவை இப்போது பலன் தரத்தொடங்கிவிட்ட கர்மாக்கள். மரணத்தை தருவதுடன் அடுத்து அனுபவிக்க வேண்டியவைகளுக்கு தகுந்த சூழ்நிலையையும் இவை உண்டு பண்ணிக்கொள்ளும்.
இதனாலேயே கர்மாவானது இன்ன பலன் இப்போது தரும் என்று நிச்சயித்து சொல்ல முடியாமல் இருக்கிறது.

விபாகம்:
தே ஹ்லாத³பரிதாபப²லா​: புண்யாபுண்யஹேதுத்வாத் || 14||

தே =அவை; ஹ்லாத³=சுகம்; பரிதாப =துக்கம்; ப²லா​: = பலன்கள்; புண்ய அபுண்ய ஹேதுத்வாத் = புண்ணியங்கள் புண்ணியங்கள் அல்லாதன இவற்றை காரணமாக உடையதால்.
அந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியன புண்ணியம் பாபம் இவற்றை ஹேதுவாக உடையதால் சுக துக்கங்களை தருகின்றன. புண்யம் ஆனாலும் பாபமானாலும் அவை அவற்றுக்கு தகுந்த ஜாதி ஆயுள் போகம் ஆகியவற்றை உண்டாக்க முயற்சி செய்கின்றன. இரண்டையுமே விலக்க முயற்சி செய்ய வேண்டும்.

பரிணாம தாப ஸம்°ஸ்கார து³​:கை²ர் கு³ண வ்ரு«த்தி விரோதா⁴ச்ச து³​:க²மேவ ஸர்வம்° விவேகிந​: || 15||

{गुणवृत्ति =गुणवृत्य கு³ண வ்ரு«த்தி -கு³ண வ்ரு«த்தய – பாட பேதம்.}

(பரிணாமம்) துக்க வடிவான ராகத்தின் மாறுதல் ரூபமாகவும்; (தாபம்) துக்கத்தையோ துக்க சாதனத்தையோ எண்ணும்போது த்வேஷ ரூபமாகவும்; (ஸம்ஸ்காரம்) சுகானுபவத்திலிருந்து சித்தத்தில் உண்டாகும் வாசனா ரூபமாகவும், மூவகையாக உள்ள துக்கங்களுடன் சேர்ந்திருப்பதால், குணங்களுக்கிடையே விரோதம் ஏற்படாததால் (திருஷ்ட அத்ருஷ்டமாக உள்ள விஷய சுகங்கள் ) எல்லாமே யோகத்தில் பிரவேசம் செய்த விவேகிக்கு துக்கமாகவே ஆகிறது.
ஆசை இல்லாமல் சுகத்தை நாடுவதில்லை. ஒரு விஷயத்தில் உண்டாகுமாசையே அது கிடைத்த போது சுகமாக பரிணாமிக்கிறது – மாறுகிறது. அது கிடைக்கவில்லையானால் தாபம் உண்டாகிறது. கிடைக்காமல் செய்தவரிடம் துவேஷம் உண்டாகிறது
ஒரு போதும் இந்திரியங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இயலாது. அனுபவிப்பதால் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகுமே தவிர போதும் என்று தோன்றாது. அதனால் அனுபவித்து ஆசையை தீர்க்க முடியாது. அது எரிந்து கொண்டிருக்கும் பெரு நெருப்பை நெய் கொட்டி அணைப்பது போலாகும். ஒரு விஷயத்தை அனுபவித்து உண்டாகும் சுகம் மேன் மேலும் அதை விரும்பி தேட வைக்கிறது. ஆகவே விஷய சுகம் என்பது நாம் அடைந்த காரியம் ஆனாலும், அதற்கும் ஆசை என்கிற துக்க வடிவ காரணத்துக்கும் வித்தியாசம் இல்லை.
ஆகவே உண்மையில் விஷயங்களில் இந்திரியங்கள் போகாமல் திருப்புவதே சுகம்; ஆசையை முன்னிட்டு இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதலே துக்கம்.

ஹேயம்° து³​:க²மநாக³தம் || 16||

அனாகதம் துக்கம் ஹேயம்.
வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
துக்கம் எது என்று பார்த்தோம். அதை உண்டாக்குவது எது, வரப்போகிற துக்கத்துக்கு காரணம் என்ன? அதை நீக்குவது எபப்டி என்றும் பார்க்கப்போகிறோம்.
துக்கத்தில் மூன்று வகை. முன்பே பார்த்தது போல கடந்தது அதீதம். நிகழ்வது வர்த்தமானம். வரப்போகிறது அனாகதம்.
அனுபவிக்கப்பட்ட துக்கம் முடிந்து போனது; அது பிரச்சினை இல்லை. நிகழ்வது அதற்கான நீக்கும் உபாயம் அறிந்து நீக்கினால் போய்விடும்; அறிவதற்கு முன்னே கூட நடந்து முடிந்துவிடலாம். எனவே வரப்போகும் துக்கத்தை நீக்குவதைப்பற்றிதான் சாதகன் யோசிக்க வேண்டும்; அதுவே முக்கியம். வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
இந்த ஸம்ஸாரத்துக்கு காரணம் என்ன?

ஸம்சாரத்தின் காரணம்:
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யயோ​: ஸம்°யோகோ³ ஹேயஹேது​: || 17||

த்ரஷ்டாவுக்கும் த்ருஷ்யத்துக்கும் சேர்க்கையானது வரவுள்ள துன்பத்திற்கு (காண்பவனுக்கும் காணப்படுவதற்கும் உள்ள சேர்க்கையானது ஹேயத்துக்கு) காரணமாகிறது.

புருஷனே த்ரஷ்டா (காண்பவன்). ப்ரக்ருதி புருஷனை விட வேறானது. ப்ரக்ருதியின் வடிவம் சுகம், துக்கம், மோஹம் ஆகியவை. ப்ரக்ருதியும் அதன் எல்லா காரியங்களும் த்ருச்யம் (காணப்படுவது) ஆகும். இவை அனத்துமே புத்தி மூலமாக அறியப்படுவதால் புத்தியையே காணப்படுவது எனச்சொல்லலாம். ஆகவே புருஷனுக்கும் புத்திக்கும் ஏற்படும் சேர்க்கையே ஸம்ஸாரத்துக்கு காரணமாகும்.
புத்தி புருஷனுக்கு வெகு அருகில் இருக்கிறது. காந்தக்கல் இரும்பை இழுப்பது போல புத்தி புருஷனை இழுக்கப்பார்க்கிறது. புருஷனின் நிழல் போன்ற ஒன்றை இழுத்தும் விடுகிறது. தான் வேறு, புருஷன் வேறு அல்ல என்பதாக இது காட்டுகிறது. பிரதிபிம்பமான புருஷனுக்கு இந்த புத்தி மூலம் புலப்படும் அத்தனையும் போக விஷயங்கள் ஆகின்றன. இதனால் புத்தி பார்க்கப்பட்ட விஷயமாயிற்று. உண்மையில் எதனுடனும் சேராது இருக்கும் புருஷன் த்ரஷ்டாவாகிறான். இப்படியாக ஒரு சேர்க்கை அவித்தையால் ஏற்படுகிறது. அவித்தை அனாதி – துவக்கமில்லாதது; ஆகையால் இந்த சேர்க்கையும் அனாதியே.
பிரலய காலத்தில் கூட க்லேசங்களும் கர்மமும் வாஸனைகளும் அந்தக்கரணத்துடன் ப்ரக்ருதியில் ஒடுங்குகின்றன. கோடை காலத்தில் மண்ணோடு மண்ணாக கலந்த விதைகள் மழைக்காலத்தில் மீண்டும் முளைப்பது போல சிருஷ்டி காலத்தில் இவை மீண்டும் வெளிக்கிளம்புகின்றன.
துக்கத்துக்கு காரணமான இந்த சேர்க்கையை யோக சாதன அனுஷ்டானத்தால் போக்க முடியும். செருப்பு மாட்டிக்கொண்டு நடப்பவன் காலில் முள் தைக்காததைப்போல சேர்க்கையான காண்பவன், காணப்படுவது, காணப்படும் செயலான சம்யோகம் ஆகிய மூன்றும் வெவ்வேறு என அறியும் யோகி இவை ஒன்று சேர்வதை தவிர்க்கும் வழிகளை கடைபிடித்து துக்கத்தை தொலைக்கிறான். மாறுதல் அடையும் சித்தமே தாபம் அடையும்; ஆன்மா தாபமடையாது. சித்தத்தில் பிரதி பலித்த ஆன்மாவின் நிழலே தாபமடைந்தது போல தோன்றுகிறது.
அடுத்து காணப்படுவதின் சொரூபத்தை பார்க்கலாம்.

ப்ரகாஶக்ரியாஸ்தி²திஶீலம்° பூ⁴தேந்த்³ரியாத்மகம்° போ⁴கா³பவர்கா³ர்த²ம்° த்³ரு«ஶ்யம் || 18||

ப்ரகாஶ க்ரியா ஸ்தி²தி ஶீலம்° பூ⁴த இந்த்³ரிய ஆத்மகம்° போ⁴க³ அபவர்க அ³ர்த²ம்° த்³ரு«ஶ்யம்

த்ருஷ்யம் எனப்படுவது..
புத்தியின் வளர்ச்சி (வ்ருத்தி) மூலமான பிரகாசத்தையும்; ப்ரயத்னம் (முயற்சி), சேஷ்டை ஆகிய செயல்கள் (க்ரியா) இவற்றையும்; இவ்விரண்டையும் தடை செய்யும் விஷயத்தையும் இயல்பாக உடையது.
மேலும் ஸ்தூல பஞ்ச பூதங்கள்; ஸூக்ஷ்மமான பஞ்ச தன் மாத்திரைகள்; ஞான கர்ம இந்திரியங்கள்; ஆத்மா இவற்றின் சமூகமாகவும், விஷய சுக துக்க மோக்ஷங்களின் பலன் தருவதாகவும் ஆகிறது.
புத்தி வ்ருத்தியால் உண்டாகின்ற பிரகாசம் ஸத்வ குணத்தின் இயல்பு (தர்மம்). க்ரியா ரஜோ குணத்தின் இயல்பு. இவற்றை தடை செய்வது தமோ குணத்தின் இயல்பு – தர்மம். போகமும் மோக்ஷமும் புத்தியால் அறியப்படுவன. ஆகவே அதையே சார்ந்தவை. ஒரு அரசனின் படை பெறும் வெற்றி தோல்வி அரசனையே சார்வது போல புத்தி அறிகிற விஷயங்கள் அதன் எஜமானனான புருஷனை சார்கிறது. உண்மையில் புருஷன் அசங்கன்; போக மோக்ஷத்துக்கு சம்பந்தம் இல்லாதவன்.
முக்குணங்கள் சேர்ந்து சரீரத்தை உண்டாக்கும் போது சத்வ குணம் மிகுந்தால் அது தேவ சரீரமாகும். தமோ குணம் மிகுந்தால் தாவர மிருக சரீரமாகும். இந்த மூன்று குணங்கள் இல்லாத ஜீவன் ஏதும் ப்ரக்ருதியில் இருந்து உண்டான லோகம் எதிலும் இல்லை.

விஶேஷாவிஶேஷ லிங்க³மாத்ராலிங்கா³நி கு³ணபர்வணி || 19||

விஶேஷ = ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய 16 விகாரங்கள்
அவிஶேஷ = பஞ்ச தன் மாத்திரைகள் + அஸ்மிதை
லிங்க³மாத்ர = மஹத் தத்துவம்
அலிங்கா³நி = பிரதானம் என்கிற ப்ரக்ருதி
கு³ணபர்வணி = ஸத்வம் முதலான குணங்களின் வேறு உருவங்களாக ஆகின்றன.
லிங்கம் என்பது குறி. குறிப்பில்லாமல் ப்ரக்ருதி இருக்கிறது. இதில் முக்குணங்களும் சமமாக இருக்கும். அதை இன்னது என்று குறித்து காட்ட முடியாதில்லையா? அதனால் அது அலிங்கம்.
இந்த ப்ரக்ருதியில் இருந்து உண்டாகிறது மஹத் தத்வம். மஹத் தத்துவத்துக்கு கொஞ்சமாவது அடையாளம் காட்டலாம். சத்வ குணம் மேலோங்கி மற்றவை அதற்குள் அடங்கி இருக்கும். அதற்கு மேல் அதை விளக்க முடியாது. ஆகவே அது லிங்க மாத்ரம்.
மஹத்தத்வத்திலிருந்து அஹம் தத்வம் உற்பத்தி ஆகும். அதில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் அஸ்மிதையும். இவை அதிகம் விசேஷமாக பாகு படாதவை. ஆகவே அவிசேஷம். இவற்றில் இருந்து என்னென்ன உற்பத்தி ஆகும்? ஐந்து மஹா பூதங்கள், பத்து இந்திரியங்கள், மனது ஆகிய இவை நன்கு பாகுபட்டவை. ஆகவே விசேஷம்.

உத்பத்தி கிரமம்: உயர்வு தாழ்வில்லாத குணங்கள் உள்ள ப்ரக்ருதி.
அதிலிருந்து மஹத் தத்துவம். அதிலிருந்து அஹம் தத்துவம். இதில் எந்த குணமும் மற்றவற்றில் அடங்கி இருக்கலாம்.
இந்த அஹம் தத்துவத்தில் இருந்து தமோ குணம் பிரதானமான (முக்கியமான) போது சப்த தன் மாத்திரை உண்டாகும்.(முதல் பாதம் 45 வது சூத்திரத்திலே கொஞ்சம் பார்த்தோம் இல்லையா? ஸூக்ஷ்மமானவை எவைன்னு பார்க்கும் போது) இந்த சப்த தன்மாத்திரைக்கு அசாதாரணமான லக்ஷணம் சப்தம். (இதே போல பெயரை ஒட்டி அதன் அதன் அசாதாரணமான லக்ஷணத்தை அறியலாம்.) ஒவ்வொன்றிலிருந்து எது வருகிறது எனப்பார்க்கலாம். சப்த தன்மாத்திரை> ஸ்பர்சம் > ரூபம் > ரஸம் >கந்தம். தமிழில் சொல்ல ஒலி>தொடுதல்> வடிவம்>சுவை>மணம்.
இந்த வரிசையில் பின்னோக்கிப் பார்க்க ஒன்றில் மற்றவற்றின் குணங்கள் இருக்கும். அதாவது மணத்தில் சுவை, வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். சுவையில் மணம் நீங்கலாக வடிவம், தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். வடிவத்தில் மணம், சுவை நீங்கலாக தொடுதல், ஒலி ஆகிய குணங்கள் இருக்கும். தொடுதலில் மணம், சுவை,வடிவம் நீங்கலாக ஒலி மட்டும் இருக்கும். ஒலியில் மற்ற குணங்கள் இருக்காது.
இவை அவிசேஷங்கள். ஸூக்ஷ்மமானவை.
இவற்றிலிருந்து பருப்பொருளான (ஸ்தூலமான) ஆகாசம்; அதிலிருந்து வாயு; அதிலிருந்து அக்னி: அதிலிருந்து நீர்; அதிலிருந்து நிலம் ஆகியன உண்டாகும்.
சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து மனசு உண்டாகிறது.
ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்திலிருந்து இந்திரியங்கள் (கர்ம, ஞான) உண்டாகின்றன.
அடுத்து லயக்கிரமம்.

லயக்கிரமம்: உத்பத்தி ஆன அதே கிரமத்தின் நேர்மாறான கிரமத்தில் லயம் உண்டாகும். அதாவது எது எங்கிருந்து வந்ததோ அதிலேயே லயமாகிவிடும். அதாவது நிலம் நீரிலும்; நீர் அக்னியிலும்; அக்னி வாயுவிலும்; வாயு ஆகாசத்திலும் லயமாகும். ஆகாயம் அது வந்த தமோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
இதே போல இந்திரியங்கள் ஒன்றில் ஒன்று லயமாகி அவை வந்த ரஜோ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும்.
மனசு அது வந்த சத்வ குண பிரதானமான அஹம் தத்துவத்தில் லயமாகும். இந்திரியங்கள் மனதில் லயமாகி அது அஹம் தத்துவத்தில் லயமாகும் என்றும் சிலர் அபிப்பிராயப் படுகிறார்கள்.
அஹம் தத்துவம் மஹத் இலும், அது ப்ரக்ருதியிலும் லயமாகும். இந்த ப்ரக்ருதி நிலையே இயற்கையானதால் இதுவே நித்யம். அதிலிருந்து வருபவை அவற்றின் வேலை முடிந்தபின் லயமாகி விடும் என்பதால் அவை அநித்தியம்.
எந்த நிலையானாலும் முக்குணங்களும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு உத்பத்தியும் இல்லை நாசமும் இல்லை.
ஒருவர் பல பசு மாடுகளை வைத்து இருக்கிறார். சௌகரியமாக இருக்கிறார். இப்போது இவருக்கு ஏழ்மை இல்லை. பசுக்கள் எல்லாமே ஒரு வேளை நோய் தாக்கி இறந்து போனால் அவர் ஏழ்மை அடைவார். அவரை ஏழை என்பர். ஆனால் அவர் அப்படியேதானே இருக்கிறார்? ஏழ்மை என்பது பசுக்களின் இருப்பை பொறுத்ததே தவிர அவரை பொறுத்ததில்லை. இதே போல குணங்கள் உத்பத்தி ஆகவும் இல்லை: அழியவும் இல்லை. அவை வெளிப்படும்; அல்லது சூக்ஷ்மமாக இருக்கும். அதனால அதன் தற்கால பாதிப்பை பொருத்து ஒருவரது குணம் அழிந்ததாகவோ உத்பத்தி ஆனதாகவோ சொல்கிறோம்.
இப்படி கிரமமாக ஒன்றிலிருந்து ஒன்று தத்வ ரூபமாக மாறுதல்களை அடைகின்றன. கடைசியில் கிடைத்த விசேஷங்கள் 16 உம் அதற்கு மேல் தத்வ மாறுதல் அடையா. ஆனால் அவற்றின் சொரூபம் தர்மம் லக்ஷணம் அவஸ்தை என மாறுதல் அடையும்.

த்³ரஷ்டா த்³ரு«ஶிமாத்ர​: ஶுத்³தோ⁴’பி ப்ரத்யயாநுபஶ்ய​: || 20||

த்³ரஷ்டா = காண்பவன் (புருஷன்); த்³ரு«ஶி மாத்ர​: = ஞான ஸ்வரூபமாக மட்டும் (உள்ளான்); ஶுத்³தோ⁴’பி =(எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்தனாக உள்ளான்; ப்ரத்யய =(இருப்பினும்) புத்தியை; அநு பஶ்ய: =அனுசரித்து பார்க்கிறவன் (ஆகிறான்.)

புருஷன்தான் த்ரஷ்டா. இவன் ஞான சொரூபன்; அதாவது புருஷனின் தர்மம், ஞானம் என்று இல்லை; அவனேதான் ஞானம். இவனுக்கு மாறுதல் (பரிணாமம்) இல்லை என்றாலும் புத்திக்கு அவை உள்ளன. சப்தம் முதலான விஷயங்கள் புத்திக்கு எட்டாது போனால் நாம் அவற்றை அறியமாட்டோம். விதிவிலக்காக ஏதோ ஒரு சமயம் மட்டும் ஸம்பிரக்ஞாத ஸமாதியின் காலத்தில் உள்ள ஸூக்ஷ்ம விஷயங்களையும் ஸமாதி கலைந்து எழும் (வ்யுத்தான) காலத்தில் உள்ள ஸ்தூல விஷயங்களையும் புருஷன் அறிவான். ஆகவே புருஷன் வேறு, புத்தி வேறு.
மேலும் புத்தி கர்மம், க்லேசம், வாசனை, இந்திரியம் ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு புருஷார்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆகவே புத்தி பிறருக்காக ஏற்பட்டது, பரார்த்தம் எனப்படும். புருஷன் வேறு யாருக்காகவும் ஏற்படவில்லை. சாந்தம், கோரம், மூடம் என புத்தி முக்குணங்களாக உள்ளது. ஆனால் இந்த புத்தியின் விருத்தியில் புருஷன் பிரதி பிம்பமாக பிரகாசப்படுத்துவானே தவிர அவன் புத்தியைப் போல விஷயத்தை ஒட்டி எந்த மாறுதலையும் அடைய மாட்டான். ஆனால் அந்த விஷய வடிவமாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறான். இதுதான் 1-4 இல் “வ்ருத்தி ஸாரூப்யம் இதரத்ர” எனப்பட்டது. இருந்தாலும் நடைமுறை சௌகரியத்துக்காக புருஷனை காண்பவனாக (த்ரஷ்டாவாக) பல இடங்களில் சொல்லப்படும்.

தத³ர்த² ஏவ த்³ரு«ஶ்யஸ்யா”த்மா || 21||

த்³ரு«ஶ்யஸ்ய = த்ருஶ்ய வஸ்துவினுடைய; ஆத்மா = சொரூபம்; தத்= த்ரஷ்டாவின்; அர்த² ஏவ = அபவர்க்கத்தையும் போகத்தையுமே பிரயோஜனமாக உடையது.
த்ரஷ்டாவான புருஷனுக்கு போகம், அபவர்க்கம் என்ற முக்தி ஆகியவற்றை ப்ரக்ருதி உண்டு பண்ணுகிறது. பார்க்கிறவன் இல்லாமல் பார்க்கப்படும் பொருளுக்கு பிரயோசனம் இல்லை. ஆகவே த்ரஷ்டா (பார்க்கிறவன்) இருப்பதால்தான் த்ருஷ்யம் (பார்க்கப்படும் பொருள்) இருக்கிறது.

க்ரு«தார்த²ம் ப்ரதி நஷ்டமப்ய நஷ்டம்° தத³ந்ய ஸாதா⁴ரணத்வாத் || 22||

த்ருஷ்யமானது, க்ருதார்த்தம் =முக்தி அடைந்த ஒருவனைக்குறித்து; நஷ்டமபி = நாசமானாலும்; தத³ந்ய = அவனைவிட வேறான; ஸாதா⁴ரணத்வாத் = சாமான்யர்களுக்கு; அநஷ்டம்° = நாசமாகாமல் ஆகும்.

த்ரஷ்டா இருப்பதால்தான் த்ருஷ்யம் இருக்கிறது என்றால் ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் அவன் பார்த்த பொருட்கள் எல்லாம் அழிந்துவிடும் என்றில்லை. ப்ரக்ருதி ஒன்றுதான் என்றாலும் சீவர்கள் அனேகர். எவன் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டானோ, எவன் முக்தியை அடைந்து விட்டானோ அவனுக்கு ப்ரக்ருதியால் ஆக வேண்டியது ஏதுமில்லை. அதனால் அவனைப்பொறுத்த வரை மட்டுமே அவை நாசமாகின்றன. மற்றவர்களுக்கு அவை இருக்கவே இருக்கும். அவர்களுக்கு ப்ரக்ருதி செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கும். முக்தனை பொறுத்த வரை அதனால் பிரயோசனம் ஒன்றுமில்லை.

ஸ்வஸ்வாமி ஶக்த்யோ​: ஸ்வரூபோபலப்³தி⁴ ஹேது​: ஸம்°யோக³​: || 23||

ஸ்வ (சக்தி) = த்ருஷ்யமாக இருக்கும் தன்மை; ஸ்வாமி ஶக்த்யோ​: = த்ரஷ்டாவாக இருக்கும் தன்மை (இவற்றுக்குரிய யோக்யதை உடைய); ஸ்வரூப = பற்பல வடிவமான புத்தியின் த்ருஷ்ய சொரூபம் , ஸ்வாமியின் த்ரஷ்டா சொரூபம்; உபலப்³தி⁴ = போகம், முக்தி (அபவர்க்கம்) இரண்டின் தோற்றத்துக்கு; ஹேது​: = காரணமாக இருப்பது; ஸம்°யோக³​: = ஸம்யோகம் ஆகும்.

இதுவே பலவாறாக ஸ்வ-ஸ்வாமி பாவம், த்ருஷ்யமாயும், த்ரஷ்டாவாயும் இருத்தல்; போக்யமாயும்- போக்தாவாகவும் இருத்தல் எனப்படுகிறது.

ப்ரக்ருதிக்கோ அதனால் ஏற்பட்ட புத்திக்கோ சுயமாக யோக்யதை ஏதுமில்லை. அவை ஜடமாகும். புருஷன் தன் அருகில் உள்ள புத்தியால் காண்பிக்கப்படும் விஷயங்களை பிரகாசப்படுத்துகிறான். (வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான்) அதனால் அவற்றுக்கு ஒரு யோக்யதை உண்டாகிறது. அவை நுகர் பொருட்கள் (போகம்) ஆகின்றன. இவற்றால் – இந்த போகங்களால், புருஷன் நுகர்வோன் (போக்தா) ஆகிறான். எப்படி எனில் நுகர்தல் (போகம்) ஏற்பட்டதே புருஷனின் சக்தியால்தான். இப்படி பரஸ்பரம் ஒரு யோக்யதை உண்டாக்கப்படுகிறது. இப்படி எது உண்டாக்குகிறதோ, அந்த காரணமே ஸம்யோகம் ஆகும்.

தஸ்ய ஹேதுரவித்³யா || 24||

தஸ்ய =அதன் (முன் சொன்ன த்ருச்ய-த்ரஷ்டா ஸம்யோகத்தின்) ஹேது = காரணம்; அவித்³யா = அஞ்ஞானம்.
அந்த காரணம் என்னவென்றால் அஞ்ஞானம்.
புருஷனுக்கும் ப்ரக்ருதிக்கும் நான் என்ற வேறுபாடு தோன்றும் போது அது பிரமை (பிரமம்)[பிரம்மம் இல்லை!] ஆகிறது. இந்த பிரமை உள்ள சித்தம் ப்ரலய காலத்தில் ப்ரக்ருதியில் ஒடுங்கும் (லயமாகும்). சிருஷ்டி காலத்தில் வெளிப்பட்டு புருஷனின் நுகர்பொருள் (போக்யம்) ஆகிறது. இப்படி ஸம்யோகம் ஆகும்போது அவிவேகிக்கு பந்தம் ஏற்படுகிறது. அவித்தை விலகி, அதனால் ஏற்பட்ட ஸம்யோகமும் விலகின விவேகிக்கு பந்தம் ஏற்பட காரணம் இல்லை. அதனால் முக்தி அடைகிறான். அவிவேகிக்கு பந்தம் உள்ளதால், அவித்யையின் வாசனை இருப்பதால் ப்ரக்ருதியில் லயமானாலும் முக்தி ஏற்படாது. விவேகக்யாதி, தர்மமேக ஸமாதி ரூபத்தை அடையும் போதுதான் சித்தம் வறுபட்ட விதை மீண்டும் முளைக்காதது போல வாசனைகள் நீங்கி வளர்ச்சி அடைதலை நீங்கும். அப்போது புருஷன் மட்டுமே இருப்பதால் அந்நிலை மோக்ஷம் ஆகும்.

தத³பா⁴வாத் = ஸம்°யாகா³பா⁴வே ஹாநம்° தத்³த்³ரு«ஶே​: கைவல்யம் || 25||

தத³பா⁴வாத் = அது நிகழ்வதால் (வாசனையுடன் கூடிய அவித்யை நாசமாவதால்) ஸம்°யாக³= புத்தி புருஷன் சம்பந்த ரூபமான ஹேயத்துக்கு; அபா⁴வ: = நாசம்; ஹாநம்° தத்³ = அந்த ஹானமே த்³ரு«ஶே​: = புருஷனுக்கு; கைவல்யம்= முக்தி ஆகிறது.

வாசனையுடன் கூடிய அவித்யை விவேக – க்யாதியால் நாசமடைகிறது. அவித்தையால் ஏற்பட்ட புத்தி சம்பந்தமும் விலகிவிடுகிறது. அப்போது புருஷன் எத்தகைய சம்பந்தமும் இன்றி தன் சொரூபத்தில் இருப்பான். இதுவே கைவல்யம் என்கிற முக்தி.

விவேகக்²யாதிரவிப்லவா ஹாநோபாய​: || 26||

விவேகக்²யாதி: = ப்ரக்ருதி சம்பந்தமில்லாத புருஷனை சாக்ஷாத்கரிப்பது; அவிப்லவா = (மித்யாக்ஞான வாசனையால்) தடை செய்யப்படாத; ஹாந உபாய​: = மோக்ஷத்துக்கு காரணமாகிறது.
ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்று அறிவதே விவேகக்யாதி. இது சாஸ்திர அப்யாஸத்தால் உண்டாகும். இருப்பினும் வெகு கால பழக்கத்தால் இது நாசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விவேக க்யாதி ஏற்பட்டதும் இதை அடிக்கடி மனனம் செய்து நிலைநாட்டி விட்டால் எல்லா விஷயங்களிடத்திலும் வைராக்கியம் ஏற்படும். புருஷன் பால் ஈர்க்கப்பட்ட சித்தம் அதையே ஆவ்ருத்தி செய்து வளர்த்துவரும். இந்த த்யான மகிமையால் இயங்கு சக்தியான புருஷ பிரதி பிம்பத்தை அனுபவிக்கலாம். இது வாசனைகளால் ஏற்படும் பொய்யறிவை நாசமாக்கும். பிராரப்தமான சரீரம் தொலைந்து போகும். இனி துக்கமே ஏற்படாத மோக்ஷம் கிடைக்கும்.

தஸ்ய ஸப்ததா⁴ ப்ராந்தபூ⁴மி​: ப்ரஜ்ஞா || 27||

தஸ்ய = விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு; ஸப்ததா⁴ = ஏழு விதமான; ப்ராந்தபூ⁴மி​: = இருப்புக்களை உடைய நிலைகள்; ப்ரஜ்ஞா= அறிவானது.
விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு அறிவானது ஏழு விதமான இருப்புக்களை உடைய நிலைகள் ஆக ஆகிறது.
சர்வ சாதாரணமாக பிரக்ஞையுடன் இருக்கிறோம் என்கிறோம். அதாவது அறிவு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வாசனையால் தடை செய்யப்படாத நிலைத்த விவேகக்யாதி உண்டானதும் ஆத்ம ஸ்வரூபத்தைத்தவிர வேறு தோற்றம் எதுமில்லாமல் அவித்யை விலகிவிட்ட யோகிக்கும் கூட இது செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏழு விதம் இருக்கிறது.
இதில் காரியத்தை விடும் பிரக்ஞைகள் நான்கு. சித்தத்தை விடும் பிரக்ஞைகள் மூன்று.

காரியத்தை விடும் பிரக்ஞைகள்: அறிய வேண்டும் என்ற இச்சை (ஜிக்ஞாஸா), விலக்க வேண்டும் என்ற விருப்பம் (ஜிஹாஸா), புதிதாக ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பம் (ப்ரேப்ஸா), புதிதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் (சிகீர்ஷா) .
யோகிக்கு உண்டாகும் அறிவு அறிய வேண்டும் என்ற இச்சையை போக்கிவிடும். புதிதாக எதையும் அவன் அறிய வேண்டியது இல்லை.
விலக்க வேண்டும் என்ற விருப்பம் நீங்கும். எல்லாவற்றையும் விலக்கிவிட்ட பின் விலக்க ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
கைவல்ய நிலை அடைந்தபின் வேண்டியன எல்லாம் அடையப்பட்டுவிட்டதால் அடைய வேண்டுவதும் வேறு ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
விவேக க்யாதியை சம்பாதித்து கொண்டுவிட்டதால் செய்வன எல்லாம் செய்தாகிவிட்டது; செய்ய வேண்டுவதாக புதிதாக ஒன்றுமில்லை. இது நான்காவது பிரக்ஞை.

காரியங்களை விட்டா போதுமா? மனசால செய்கிறவற்றையும் விட வேண்டும் இல்லையா?

சித்தத்தை விடும் பிரக்ஞைகள்: “என் புத்தி ஸத்வமானது; அது செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது” என சித்தத்தை விடுதல் முதலாவது.
மலை உச்சியிலிருந்து நழுவும் கற்பாறைகளுக்கு பிடிப்பு இல்லாமல் போவது போல புத்தி முதலிய குணங்களுக்கும் காரணத்தில் லயமாவதால் நாசமடைகின்றன. அவற்றால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் அவை மீண்டும் உத்பத்தி ஆக மாட்டா. இது இரண்டாம் ப்ரக்ஞை.
யோகி குணங்களை கடந்து சொரூபத்தில் மட்டில் இருக்கிறான். சித்துடன் ஒரே ரஸமாக ஆகிறான். இது சித்தத்தை விடும் மூன்றாம் ப்ரக்ஞை.
இந்த மூன்றாம் ப்ரக்ஞை உண்டாக சாதனங்கள் என்ன?…

யோகா³ங்க³நுஷ்டா²நாத³ஶுத்³தி⁴க்ஷயே ஜ்ஞாநதீ³ப்திராவிவேகக்²யாதே​: || 28||

யோகா³ங்க³= யோக அங்கமான (யமம் முதலான எட்டையும்); அநுஷ்டா²நாத்³ = பழகுவதால்; அ³ஶுத்³தி⁴ = (அவித்யா, அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம், புண்ணியம், பாபம் ஆகிய) அசுத்திகளின்; க்ஷயே = தேய்தல்; ஆவிவேக க்²யாதே​: = விவேக க்யாதி உண்டாகும் வரையுள்ள ; ஜ்ஞாந தீ³ப்தி = ஸம்ய ஞானத்தின் ஒளியானது (உண்டாகிறது.)
யமம், நியமம் முதலான சாதனங்களை எவ்வளவுக்கெவ்வளவு அநுஷ்டிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவித்யை முதலான அசுத்திகள் தேய்கின்றன. இதனால் ஞானத்தின் பிரகாசமும் அவ்வளவு அதிகமாகிறது. விவேகக்யாதி உண்டாகும் வரை இது பெருகிக்கொண்டே போகிறது. (சத்வம் முதலான குணங்கள் புருஷன் இவற்றின் ஸ்வரூபத்தை இன்னதென்று அறிதலே விவேகக்யாதி)
கோடரி மரத்தை சிதைப்பது போல தர்ம அனுஷ்டானம் அஞ்ஞானத்தை சிதைக்கிறது.
வேறு காரணமின்றி தர்மமே சுகம் உண்டாக காரணமாம்.

இப்படிப்பட்ட தர்ம வ்ருத்திக்கு காரணங்களை பட்டியலிடலாம்: உத்பத்தி; ஸ்திதி; அபிவ்யக்தி; விகாரம்; ப்ரத்யயம்; ஆப்தி; வியோகம்; அன்யத்வம்; த்ருதி.
உத்பத்தி காரணம்: விக்ஞானத்தில் இன்னது என்று பகுத்து அறிய முடியாத நிலையை போக்கி நிகழ் கால இருப்பை உண்டு பண்ணுவதால் மனதே விஞ்ஞானத்தின் உத்பத்திக்கு காரணம்.
ஸ்திதி காரணம்: உடம்பின் ஸ்திதிக்கு ஆகாரம் காரணமாகும். அதே போல மனதின் ஸ்திதிக்கு புருஷார்த்தம் காரணம். அஹம் தத்துவத்தில் இருந்து மனது வந்தது. எந்த புருஷார்த்தத்தையும் கருதாத வரை மனது நிலையாக இருக்கும். அர்த்த காமத்தை கருதும் போது அது நிலையில் இருந்து நழுவிவிடும். நிலையாக இருப்பது மனசுக்கு இன்றியமையாதது.
அபிவ்யக்தி காரணம்: தானாகவோ இந்திரியங்கள் மூலமோ கருப்பு வெளுப்பு போல ரூபங்களின் பேதத்தை கண்டு கொள்வது அபிவ்யக்தி ஆகும். அரிசி முதலாவை அன்னமாக விகாரமடைய அக்னி காரணமானது போல் சப்தம் முதலானவை மனதின் விகாரத்துக்கு காரணமாகும்.
விகார காரணம்: கண்டு என்ற முனிவருடைய தவத்தை கலைக்க ப்ரம்லோசா என்ற அப்சரஸ் அனுப்பப்பட்டாள். அவள் அவருக்கு சமீபத்தில் வல்லகீ என்ற தன் வீணையில் இசை எழுப்ப முனிவரின் மனது இந்திரியங்களின் வழியே சென்று விகாரமடைந்தது.
ப்ரத்யய காரணம்: புகையை காணும்போது அக்னி உள்ளதென தெரிகிறது. அக்னியின் ஞானத்துக்கு புகை பற்றிய அறிவு காரணமாகிறது. இதுவே ப்ரத்யய காரணம்.
ஆப்தி காரணம்: கிடைப்பது. ப்ர சேர்த்து ப்ராப்தி என்பர். யோகாங்கங்களை அனுஷ்டிப்பது விவேகக்யாதி கிடைப்பதற்கு (ப்ராப்திக்கு) காரணம். அதுவே அசுத்திக்களை போக்குவதால் அசுத்திகளின் வியோகத்துக்கும் கூட (அழிதல்) காரணம் ஆகும்.
அன்யத்வம்: வேறாக ஆக்குதல். ஒரு தங்க நகையை தட்டான் அழித்து வேறு நகையாக்கும்போது அது அன்யத்வம் ஆகும்.
த்ருதி காரணம்: இந்திரியங்கள் நிலைத்து நிற்க சரீரம் காரணமாகிறது.
இந்த 9 வித காரணங்களில் யோகானுஷ்டானம் அசுத்தி வியோகத்திற்கும் ஞான ப்ராப்திக்கும் காரணமாகிறது.

இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

யம நியமாஸந ப்ராணாயாம ப்ரத்யாஹார தா⁴ரணா த்⁴யாந ஸமாத⁴யோ’ஷ்டாவங்கா³நி || 29||

யமம், நியமம், ஆஸநம், ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், தா⁴ரணா, த்⁴யாநம், ஸமாதி⁴ ய: = இவை; அஷ்டா = எட்டு; அங்கா³நி = (யோக பயிற்சியின்) அங்கங்களாகும்.

அஹிம்°ஸாஸத்யாஸ்தேயப்³ரஹ்மசர்யாபரிக்³ரஹா யமா​: || 30||

அஹிம்°ஸா = அஹிம்சை, ஸத்ய = ஸத்யம், அஸ்தேயம், ப்³ரஹ்மசர்யம், அபரிக்³ரஹா (ஆகியன) யமா: = யமம் எனப்படும்.

அஹிம்சை என்பது எப்போதும் மன மொழி மெய்களால் எந்த பிராணிக்கும் துரோகம் – தீங்கு செய்யாமல் இருத்தல். இதுவே யோக சாதனங்களுள் மிகச்சிறந்ததாகும்.

வாக்கும் மனசும் உண்மையிலேயே நிற்பது ஸத்யம். பிறருக்கு தீங்கு ஏற்படாமல் பேசுவது என்பது ஸத்யம். இது மிக நுட்பமானது.

ஒரு காலம் ஒரு மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருந்தார். ஸத்யதபஸ் என்று பெயர். எக்காலமும் உண்மை பேசுவது என்பது அவர் கொண்டிருந்த ஒரு விரதம். ஒரு நாள் இவர் தவம் கலைந்து எழும் வேளை சில திருடர்கள் அரச மாளிகையில் களவாடி காட்டு வழியே ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரிஷி தவம் செய்து கொண்டிருந்த வழியே ஓடினர். கடும் கோபத்துடன் துரத்தி வந்த அரச சேவகர்கள் ரிஷியைப்பார்த்து “திருடர்கள் இவ்வழியே போனார்களா?” என்று கேட்க ரிஷியும் திருடர்கள் போன வழியை காட்டிக்கொடுத்தார். அந்த வழியே போன சேவகர்கள் திருடர்களை பிடித்து அடித்தனர். அதில் ஒரு திருடன் அடி தாங்காது இறந்தான். இந்த ஜீவன் இறக்க யார் காரணம் என விசாரித்த பெரியோர்கள் ரிஷியே காரணம் என தீர்ப்பளித்தனர். ரிஷி மௌனமாக இருந்திருந்தால் திருடர்களை பிடித்திருக்க மாட்டார்கள்; அடித்திருக்க மாட்டார்கள்; ஒரு ஜீவனும் இறந்து போயிருக்காது என்பது வாதம். ஹிம்சை தருமானால் உண்மையை சொல்லாதிருப்பதே ஸத்யம்.

ஸத்யம் ப்3ரூயாத் ப்ரியம் ப்3ரூயாத் ந ப்3ரூயாத் ஸத்யம் அப்ரியம்|
ப்ரியம் ச நாந்ருதம் ப்3ரூயாத் ஏஷ த4ர்மஸ் ஸநாதந: || -மஹா பாரதம்.

பிறருக்கு தீங்கிழைக்காத உண்மையே பேச வேண்டும். உண்மையானாலும் பிறருக்கு தீங்கிழைக்குமானால் மௌனத்தை அநுஷ்டிக்கவேண்டும். பிறருக்கு ப்ரியமாக இருக்கும் என்று பொய் சொல்வதும் தகாத செயல். இது மஹாபாரதத்தில் வரும் கதை. இப்படி செய்வதே வேத சாஸ்த்திரங்களில் சொல்லிய புராதனமான தர்மமாகும்.

சாஸ்திர சம்மதம் இல்லாமல் பிறர் சொத்தை கைப்பற்றுதலே ஸ்தேயம் என்ற திருட்டு. இதை விலக்குவதே அஸ்தேயம். ஒருவனுக்கு கொடுக்க மனமில்லாத போது பல காரணங்கள் காட்டி அவனைக் கட்டாயப்படுத்தி அவனது பொருளை பெற்றுக்கொள்வதும் திருட்டாகும்.

முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.

சங்கர் லிகிதர் என்று இரு சகோதரர்கள். பாஹுதை என்ற நதிக்கரையில் தனித்தனியே பூக்களும் கனி மரங்களும் உள்ள ஆசிரமங்கள் அமைத்து தீவிர ஆசார அனுஷ்டாங்களுடன் தவம் செய்து வந்தனர். ஒரு நாள் தம்பி லிகிதர் அண்ணனை பார்க்க சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். பசி மேலிட்ட தம்பி அண்ணனின் ஆசிரமத்தில் இருந்த பழ மரத்தில் இருந்து பழங்களை கொய்து சாப்பிட்டார். அப்போது திரும்பி வந்த அண்ணன் “நீ செய்தது தவறு. மரத்தின் சொந்தக்காரனுக்கு தெரியாமல் பழங்களை பறித்து உண்டது திருட்டுக்கு சமம். நீ அரசனிடன் சென்று தகுந்த தண்டனை பெற்று வா” என்றார். தம்பியும் பதிலுக்கு வாதம் செய்யாமல் நேரே அரசனிடம் சென்று நடந்ததைச் சொல்லி தண்டனை தரும்படி கேட்டார். அரசனும் “இது ஒன்றும் குற்றமில்லை. தண்டனை தேவையில்லை” என்று கூற லிகிதர் அதை ஒத்துக் கொள்ளவில்லை. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்த அரசன் சாத்திரப்படி தண்டனை விதித்து ‘கைகளை வெட்டுங்கள்’ என உத்தரவிட்டான். தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. வெட்டுப்பட்டு மணிக்கட்டுக்கு கீழ் ஒன்றுமில்லாத கைகளுடன் அண்ணனிடம் சென்று நடந்ததை தெரிவித்தார். அண்ணன் “நல்லது. நீ நதிக்கு சென்று நீராடி அர்க்யம் கொடுத்து தர்ப்பணம் செய்து வா” என்றார். கைகள் இல்லாமல் எப்படி அர்க்யம் கொடுப்பது என்று கூட கேட்காமல் நதிக்கு சென்று குளித்து நீரில் கைகளை விட்டு ஏந்த வெட்டுப்பட்ட கைகள் மீண்டும் வளர்ந்துவிட்டன. மகிழ்ச்சியுடன் மீதி கடன்களை முடித்து ஆச்ரமம் திரும்பினார் லிகிதர். முளைத்த கைகளை கண்டு சங்கரும் மிகவும் சந்தோஷப்பட்டு தம்பியை உணவளித்து போற்றினார்.
ஆகையால் பிறர் சொத்துக்கு ஆசைப்படலாகாது.

ரஹஸ்ய இந்திரியத்தை அடக்குவது ப்ரம்மசர்யம் ஆகும். யோகாங்கானுஷ்டானம் செய்பவ்வன் ஸ்த்ரீக்களை ஆவலுடன் பார்ப்பதும் அவர்களுடன் நெருங்கி பழகுவதும், ஆவலுடன் தொடுவதும் கூடாது. அது ப்ரம்மசர்ய அனுஷ்டானத்துக்கு இது பங்கம் ஏற்படுத்தும். ஆகவே அவசியம் விலக்க வேண்டும்.

அபரிக்ரஹம் என்பது விஷயங்களில் ஆசை கொள்ளாதிருத்தல். சாஸ்திர சம்மதமான வழியிலும் எதிர்பாராதும் சில சமயம் நமக்கு சில பொருட்கள் கிடைக்கலாம். இதில் ப்ரதிக்ரஹம் என்பது சாஸ்திரம் அனுமதிப்பது. அதாவது செய்த ஒரு வேலைக்கு பதிலாக ஒரு பொருளை பெற்றுக்கொள்வது. இருந்தாலும் கொடுக்கும் நபரைபொறுத்து இதில் பாபம் சம்பவிக்கக்கூடும்.

ஒரு மஹான் பசியுடன் ஒரு ஊருக்குச் சென்றார். அங்கிருந்த ஒருவன் அவரை வரவேற்று உணவளித்தான். மகிழ்ச்சியுடன் உண்டு திண்னையில் சிரம பரிகாரம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு சித்தத்தில் கலக்கம் ஏற்பட்டது. நீர் வைக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரத்தை துணியில் மறைத்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியே தப்பிப்போனார். சற்று நேரம் சென்றபின் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து யோசனை செய்தார். “நம் செய்தது தவறில்லையா? ஏன் இப்படி மனசு கெட்டுப்போயிற்று? நம் தவம் எங்கே? ஆகையால் இதை திருப்பி கொடுத்துவிட்டு விசாரித்துக்கொண்டு வர வேண்டும்”. இப்படி சிந்தனை செய்து அந்த வீட்டுக்கு திரும்பினார். அந்த தம்பதிகளோ மஹான் வீட்டுக்கு வந்து உணவருந்தியதை நினைத்து ஆனந்தத்துடன் இருந்தார்களே தவிர பாத்திரம் தொலைந்ததை கூட அறியவில்லை. மஹான் பாத்திரத்தை கொடுத்துவிட்டு “உண்மையை சொல்லுங்கள் நீங்கள் எப்படி ஜீவனம் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார். வெல வெலத்து போன வீட்டுக்காரர் தான் இரவில் திருடி ஜீவனம் செய்வதாக ஒத்துக்கொண்டார். மாஹானும் ப்ராணாயாமத்தால் தோஷத்தை போக்கிக்கொண்டு தன் நல்ல வழிக்கு போய்விட்டார்.
யோகியானவன் சாஸ்திரப்படி பெற்றாலும் உண்மையில் தோஷமுள்ளவனின் வஸ்து யோகியைக் கெடுத்துவிடும். கொடுப்பவன் தோஷமில்லாதவனா என்று கூடிய வரை ஆராய்ந்தே எதையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.

ஜாதிதே³ஶகாலஸமயாநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம் || 31||

ஜாதி, தே³ஶ, கால, ஸமய, அநவசி²ந்நா​: ஸார்வபௌ⁴மா மஹாவ்ரதம்.

ப்ராஹ்மணன் முதலிய ஜாதியாலும்; தீர்த்தம் முதலான இடத்தாலும்; சதுர்தசீ போன்ற காலத்தாலும்; ப்ராம்ஹணனுக்கு உணவிடுதல் போன்ற அநியத காலங்களாலும் எவ்விதத்திலும் தடை செய்யப்படாதவையாக எல்லா பூமிகளிலும் அல்லது அவஸ்தைகளிலும் தொடர்ந்து வருவதாக உள்ளது மஹா விரதமாகும்.

சிலர் சில விஷயங்களை கடை பிடிக்கிறார்கள். இன்னிக்கு வெள்ளிக்கிழமை- அசைவம் சாப்பிட மாட்டேன் என்பார்கள். அது போலவே காசிக்கு /கயாவுக்கு/ தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறேன், இன்னிக்கு அமாவாசை என்று பலவற்றை சொல்லி அசைவம் சாப்பிடுவதில்லை என்பர். இது ஒரு நோக்கத்தில் நல்லதுதான். ஆனால் இது யோகாங்கமான அஹிம்சை இல்லை. யோகாங்க அஹிம்சை இப்படி ஒரு ஜாதி, இடம், காலம் போன்ற எந்த விசேஷமும் இல்லாமல் தடையற்ற எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் காட்டப்படும் அஹிம்சையாகும். இதே போல மற்ற ஸத்யம், பிறர் சொத்தை அபகரிக்காமை (அஸ்தேயம்), ப்ரஹ்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவற்றில் கொள்ள வேண்டும். இப்படி ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் எந்த காலமும் எந்த இடத்திலும் அனுஷ்டிக்கப்படுவது மஹா விரதமாகும்.

ஶௌசஸம்°தோஷதப​:ஸ்வாத்⁴யாயேஶ்வரப்ரணிதா⁴நாநி நியமா​: || 32||

ஶௌசம், ஸந்தோஷ, தப​, ஸ்வாத்⁴யாய, ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி (ஆகியவை) நியமா​: = நியமங்களாகும்.

ஶௌசம் என்பது மண், நீர், பசுக்களின் சாணம் இவற்றால் வெளியே சுத்தம் செய்வதும், மதம், அசூயை முதலிய மன அசுத்தங்களை நீக்குவதும் ஆகும்.
ஸந்தோஷம் என்பது தெய்வாதீனமாக கிடைத்ததை தவிர அதிகமானவற்றில் ஆசை கொள்ளாதிருத்தல்.
தபம் என்பது குளிர்-வெப்பம், பசி – தாகம், போக்கு-வரவு போன்ற இரட்டைகளை பொறுத்துக்கொள்வது.
ஸ்வாத்யாயம் என்பது ப்ரணவ ஜபம் செய்தல்; அல்லது மோக்ஷ சாதகமாக சாஸ்திரங்களை அத்தியயனம் செய்தல். ஈஶ்வர ப்ரணிதாநாநி என்பது தான் செய்யும் எந்த செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பது.
முன்பு யமத்தில் செய்யக்கூடாதன (don’ts) சொல்லப்பட்டது. நியமத்தில் செய்ய வேண்டியன (do s) சொல்லப்பட்டது. இவற்றை செய்யும் காலத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை விலக்குவது எப்படி?

விதர்கபா³த⁴நே ப்ரதிபக்ஷபா⁴வநம் || 33||

விதர்கபா³த⁴நே = (ஹிம்சை முதலான யோகானுஷ்டான விரோதிகளால்) இடையூறுகள் நேரும் போது; ப்ரதி பக்ஷ பா⁴வநம் = அவற்றுக்கு எதிரான பாவனையே இருக்க வேண்டும்.

நல்ல செயல்கள் செய்வதெனில் அவற்றுக்கும் இடையூறுகள் நேரும் அல்லவா? சில சமயம் பொய் சொல்லியே தீர வேண்டும் என்பது போல அனைத்து செய்யக்கூடாதனவும்ம் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டாலாம். அப்போது இடையூறுகளுக்கு எதிரான விஷயங்களையே மனதில் பாவிக்க வேண்டும். தீய செயல்களை செய்வதை நாம் அடியோடு விட்டுவிட்டோம். இனி அவற்றை செய்வது உண்ட உணவை வாந்தி எடுத்து அதை மீண்டும் உண்பது போல ஆகும் என எண்ண வேண்டும். இப்படிச்செய்ய அவற்றின் மீதுள்ள நாட்டம் விலகிவிடும்.
இந்த இடையூறுகளைக் குறித்து விரிவாக காணலாம்.

விதர்கா ஹிம்°ஸாத³ய​: க்ரு«தகாரிதாநுமோதி³தா லோப⁴க்ரோத⁴மோஹபூர்வகா ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா து³​:கா²ஜ்ஞாநந்தப²லா இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் || 34||

விதர்கா = இடையூறுகள்; ஹிம்°ஸாத³ய​: = ஹிம்சை முதலானவை; க்ரு«த = தன்னால் செய்யப்பட்டவை; காரித = பிறரால் செய்யப்பட்டவை; அனு மோதி³தா = ஒருவனுக்கு நிகழ்ந்த ஹிம்சையை நல்ல வேளையாக நடந்தது என மகிழ்ச்சியுடன் எண்ணுவதுமாகும்; லோப⁴ க்ரோத⁴ மோஹ பூர்வகா= லோபம், க்ரோதம், மோஹம் இவற்றை காரணமாகக் கொண்டவை; ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா = மெதுவாகவும், நடு நிலையாகவும், அதிகமானதாவும்; து:க அஜ்ஞாநந்த பலா = (நரகம் முதலான) துக்கத்தையும், அக்ஞானத்தையும், முடிவில்லாத பிராந்தி, சந்தேகம் முதலியவற்றை பயனாக கொண்டவையாகவும் ஆகின்றன; இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் = இப்படியாக விதர்க்க விரோதியை எண்ண வேண்டும்.

விதர்க்கங்கள் மும்மூன்று விதங்கள். இவை ஒவ்வொன்றும் மும்மூன்று விதங்கள். ஆக இவை 81 வகைகள்.
ஒருவன் தானே ஹிம்சை செய்யலாம். தூண்டிவிட்டு பிறரால் செய்யலாம். இல்லை தெய்வாதீனமாக நடந்த ஹிம்சை ஒன்றை எண்ணி “நல்லா வேணும்” என்று சந்தோஷப்படுவதாக இருக்கலாம். (க்ருதம், காரிதம், அனுமோதிதம் என்ற ஹிம்சைகள். )

இப்படி செய்கிற ஹிம்சைகள் மனம், சொல், உடலால் இருக்கலாம்.

இப்படி தானே செய்கிற ஹிம்சைக்கு தூண்டுதல் ஆசையாக இருக்கலாம் (அதன் பெயர் லோபம்). தனக்கு தீங்கிழைத்தவன் மீதுள்ள கோபத்தால் செய்வது குரோதம். ஹிம்சை செய்வதால் தனக்கோ மற்றவர்களுக்கோ லாபம் ஏற்படும் என நினைத்து செய்தல் மோஹம். இப்படி லோபம், குரோதம், மோஹம் என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். இது போன்றவை வேகாரிதம் ஆகும். இப்படி இதே போல பிறர் மூலம் தூண்டிவிட்டு செய்வது, நடந்ததை எண்ணி மகிழ்வது இவற்றிலும் மும்மூன்றாக மொத்தம் 9 விதம்.

இவை தீவிரத்தை பொறுத்து மிதம், மத்தியமம், அதி மாத்ரம் என மூன்றாகும். இவை ஒவ்வொன்றும் மீண்டும் மெதுவில் மெது, மெதுவில் மத்தியமம் என்பது போல மும்மூன்று விதமாகும். ஆக மொத்தம் 81. இப்படியாக ஹிம்சைகள் வரும்போது அவற்றை விரோதியாக பாவித்து பிரதி பக்ஷ பாவனம் செய்ய வேண்டும்.

இப்படியான ஹிம்சையை செய்ய நரகம் முதலான துக்கமும், பசு போன்ற பிறவி எடுத்து அக்ஞானமும், அல்லது இதே பிறவியில் அறிவு மயக்கம், சம்சயம் முதலானவையும் உண்டாகும் என எண்ணுபவனுக்கு இந்த தடைகள் விலகி விடுகின்றன. இவ்விதமாகவே அஸத்யம், ஸ்தேயம், அப்பிருமச்சரியம், பரிக்கிரஹம், அசௌசம், அஸந்தோஷம், அதபஸ், அஸ்வாத்யாயம், ஈச்வர பிரணிதானம் செய்யாமை ஆகியனவும் தனித்தனியாக 81 வித தடைகளாக ஆகும். இப்படி நேரும் போதெல்லாம் அவற்றின் விளைவை -துக்கம் அக்ஞானம், முடிவற்ற துன்பம் ஆகியனவற்றை -எண்ணிப்பார்ப்பவன் இந்த தடைகளில் இருந்து தப்பிக்க ப்ரதிபக்ஷ பாவனம் செய்கிறான்.

இப்படி தடைகளை தாண்டி இடையூறு ஏதுமின்றி யோகாங்க அனுஷ்டான சாதனை செய்வோருக்கு ஸித்திகள் ஏற்படுகின்றன.

அஹிம்°ஸாப்ரதிஷ்டா²யாம்° தத்ஸந்நிதௌ⁴ வைரத்யாக³​: || 35||

அஹிம்°ஸா =அஹிம்சையில்; ப்ரதிஷ்டா²யாம்° = நிலைத்து நின்றவுடன்; தத்ஸந்நிதௌ⁴ = அவன் சந்நதியில்; வைர த்யாக³​: = விரோதத்தை விட்டுவிடுவதானது உண்டாகிறது.
எவன் இந்த 81 வகை ஹிம்சைகளையும் விரோதியாக பாவித்து விலக்கி அஹிம்சையை கடைபிடிக்கிறானோ அவன் முன்னிலையில் இயற்கையாக விரோதம் காட்டும் உயிர்கள் கூட (பூனை- எலி; பசு – புலி; பாம்பு -கீரி) பரஸ்பரம் சினேகத்துடன் பழகும்.

ஸத்யப்ரதிஷ்டா²யாம்° க்ரியாப²லாஶ்ரயத்வம் || 36||

ஸத்ய = ஸத்தியத்தில்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன் (முன்னிலையில் அவன் வாக்குக்கு ); க்ரியா = கிரியை; ப²லா = பலனை; ஶ்ரயத்வம் = அடையும் தன்மையுடையதாகிறது.
81 வகை அஸத்தியங்களையும் விலக்கி சத்தியமானது நிலைநாட்டப்பட்டால் (ஸத்தியப்பிரதிஷ்டை இருப்பவன்) சொல்வது பலிக்கும். ஒரு கடைநிலை நபரைப்பார்த்து நீ நல்லவனாவாய் என்றால் அப்படியே நல்லவனாகி விடுவான். நீ சொர்க்கம் போவாய் என்றால் அப்படியே சொர்க்கத்துக்கு போய்விடுவான். இப்படி புதிதாக ஒரு கிரியை அல்லது பலனை தர வல்லவன் சத்ய பிரதிஷ்டை உள்ளவன்.

அஸ்தேய ப்ரதிஷ்டா²யாம்° ஸர்வரத்னோபஸ்தா2னம் ||37||

அஸ்தேய = பிறர் சொத்தில் ஆசை கொள்ளாதிருத்தல்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன்(க்கு); ஸர்வ ரத்னோபஸ்தா2னம் = பூமியிலுள்ள எல்லா ரத்தினங்களும் எதிர்படுகின்றன

ப்³ரஹ்மசர்யப்ரதிஷ்டா²யாம்° வீர்யலாப⁴​: || 38||

ப்³ரஹ்மசர்ய ப்ரதிஷ்டா²யாம்° = பிரம்மசர்யத்தில் நிலை பெற்றவனுக்கு (ரகசிய இந்திரியத்தை அடக்கி வீர்யத்தை வீணாகாமல் செய்பவனுக்கு) வீர்ய = ஒப்புயர்வற்ற ஸாமர்த்தியம்; லாப⁴​: = கிடைக்கிறது.
(இந்த ப்ரம்மச்சரிய பிரதிஷ்டை இல்லாதவர் செய்யும் மந்திர உபதேசம் வீணாகிறது. இக்காலத்தில் மந்திரங்கள் பலிப்பதில்லை என உபதேசம் பெற்றவர் எண்ணுகின்றனர்)

அபரிக்³ரஹஸ்தை²ர்யே ஜந்மக தா²ந்தாஸம்°போ³த⁴​: || 39||

அபரிக்³ரஹஸ்தை²ர்யே = பரிக்ருஹம் செய்யாதவனுக்கு; ஜந்ம கதா²ந்தா = முன் பிறவிகளின்; ஸம்°போ³த⁴​: = தன்மையும் தெளிவும் உண்டாகிறது.
சாதாரணமாக யாரும் ஏதும் இலவசம் என்று கொடுத்தால் ‘அப்பாடா’ என்று வாங்கி வைத்துக் கொள்கிறோம். அது தவறு. ஒரு பொருளை ஒருவரிடம் வாங்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் (அத்ருஷ்டமாக) சிலதையும் வாங்கிக்கொள்கிறோம். இதனால் விஷயம் அறிந்த பெரியோர்கள் யாரிடமும் எதுவும் கேட்டோ, தானாக வந்தாலுமோ கூட அப்படியே பெற்றுகொள்ள மாட்டார்கள். இப்படி வாங்கிக்கொள்வது பரிகிரஹம் ஆகும். அபரிக்ரஹம் அப்படி வாங்காமல் இருப்பது.

ஶௌசாத்ஸ்வாங்க³ஜுகு³ப்ஸா பரைரஸம்°ஸர்க³​: || 40||

ஶௌசாத் = சுத்தத்தில் (நிலை பெற்றவனுக்கு) ; ஸ்வாங்க³= ஸ்வ அங்க= தன் உடலில்; ஜுகு³ப்ஸா = வெறுப்பும்; பரை = மற்றவர் சரீரத்துடன்; அஸம்°ஸர்க³​: = சேராமையும் (உண்டாகிறது)
[பிற கலாசாரங்கள் கைகுலுக்குவதையும், கட்டித்தழுவுவதையும் ஆதரித்தாலும் ஹிந்து கலாசாரத்தவர் சாதாரணமாக அப்படி செய்ததில்லை. அப்படித்தான் ஸ்ருதிகளும் சாஸ்திரங்களும் விதித்து உள்ளன. பிற சரீரங்களை தொடாமல் பழகி பின் தன் சரீரத்தின் மீதும் வெறுப்பு உற்று இனி சரீரம் வேண்டாம் என வைராக்கியம் கொண்டு முக்திக்கு முயற்சிக்க வேண்டுமென தாத்பர்யம்.]

ஸத்த்வஶுத்³தி⁴ஸௌமநஸ்யைகாக்³ரதேந்த்³ரியஜயாத்மத³ர்ஶநயோக்³யத்வாநி ச || 41||

ஸத்த்வஶுத்³தி⁴ = மனதின் அழுக்கு நீங்குவதும்; ஸௌமநஸ்ய = (அதன் மூலம்) நல்ல மனமாக தெளிவு அடைவதும்; ஐகாக்³ர = குவிக்கப்பட்ட ; இந்த்³ரிய= இந்திரியங்களின்; ஜய = ஜெயிப்பதும்; ஆத்ம த³ர்ஶந = ஆன்மாவை தரிசிப்பதற்கு (ஆத்ம ஞானத்துக்கு) யோக்³யத்வாநி ச = யோக்யனாக உள்ள தன்மையும் கூட [பவந்தி= உண்டாகின்றன.]
நீர், சவுக்காரம், மண் இவற்றால் உடலில் உண்டாக்கிக்கொள்வது பாஹ்ய சௌசம். மனதில் உள்ள காமம் குரோதம் முதலியவற்றை போக்குவது ஆந்தர சௌசம். 40 இல் வெளி சுத்தம் சொல்லப்பட்டது. இங்கே உள் சுத்தம் சொல்லப்படுகிறது. ஆந்தர சௌச ப்ரதிஷ்டை அடைந்தவனுக்கு சித்தத்தின் காம க்ரோதாதிகள் நீங்குகின்றன. இதனால் சித்தம் தெளிந்து இந்திரியங்கள் தன் வசப்படும். அப்படி ஆகும்போது மனது ஆத்மக்ஞானத்தை அடைய யோக்கியதையை அடைகிறது.

ஸம்°தோஷாத³நுத்தம​: ஸுக²லாப⁴​: || 42||

ஸம்°தோஷாத்³= கிடைத்தது போதுமென்ற எண்ணத்தில் இருந்து; அநுத்தம​: =நிகரற்ற; ஸுக²லாப⁴​: = சுகம் கிடைக்கிறது.
தெய்வாதீனமாக கிடைத்ததில் திருப்தி அடைந்து அதைவிட உயர்ந்தவற்றில் ஏற்படக்கூடிய ஆசையை கொள்ளாதிருத்தல் சந்தோஷம் எனப்படும். அப்படிப்பட்ட சந்தோஷத்தில் நிலைபெற்றவனுக்கு ஈடு இணையில்லா சுக லாபம் உண்டாகிறது.
ஆசையை ஒழிப்பதால் உண்டாகும் சுகத்தின் பதினாறில் ஒரு பங்குக்கு கூட “உலகில் விஷய அனுபவத்தால் உண்டாகும் சுகமும், தேவ லோகத்தில் கிடைக்கும் சுக2மும் ஈடு ஆக மாட்டா”
யச்ச காமம் சுக2ம் லோகே யச்ச திவ்யம் மஹத்சுக2ம்| த்ருஷ்ணாக்ஷய ஸுக2ஸ்யைதே நார்ஹத: ஷோடஷீம் கலாம் ||
தன் யௌவனத்தை தானம் செய்த புரூவிடம் தந்தை யயாதி சொல்கிறார்:
யா துஸ்த்யஜா து3ர்மதிபி: யா ந ஜீர்யதி ஜீர்யத:| தாம் த்ருஷ்ணாம் ஸம்த்யஜத் ப்ராக்ஞா ஸுகே2நைவ அபி4பூர்யதே ||
கெட்ட புத்தி உள்ளவர்களுக்குத்தான் ஆசையை விட முடியாது. கிழவனானவனுக்கு இந்திரியங்கள் கிழத்தனத்தை அடைவது போல ஆசையும் கிழத்தனத்தை அடைய வேண்டும். புத்திமானான புருஷன் ஆசையை விலக்கினால் அவனுக்கு சுக நிறைவு ஏற்படும்.

காயேந்த்³ரியஸித்³தி⁴ரஶுத்³தி⁴க்ஷயாத்தபஸ​: || 43||

காய -உடலின்; இந்த்³ரிய = இந்திரியங்களின்; ஸித்³தி⁴ = சித்தியானது; அஶுத்³தி⁴ = அசுத்தியின்; க்ஷயாத் = தேய்தலால்; தபஸ​: தபஸால் (உண்டாகிறது)

தபஸால் தமோகுணத்தின் காரியமான ஆவரணம் முதலியன தேய்ந்ததும் சரீர சித்திகளான அணிமா முதலியவைகளும் இந்திரிய சித்திகளான தொலை தூரத்தில் ஒலிப்பதை கேட்டல் (தூர ச்ரவணம்) முதலானதும் உண்டாகின்றன.

ஸ்வாத்⁴யாயாதி³ஷ்டதே³வதாஸம்°ப்ரயோக³​: || 44||

ஸ்வாத்⁴யாயாத்³ = சுய அத்யாயத்தினால்; இஷ்ட தே³வதா =இஷ்டர்களின், தேவதைகளின்; ஸம்°ப்ரயோக³​:= தரிசனமும் கிடைக்கிறது.
ஸ்வாத்⁴யாயம் என்பது தன் வேத பாகத்தையோ, ப்ரணவம் அல்லது தனக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரங்களையோ அல்லது மோக்ஷ சாதனமான நூல்களையோ தினசரி பயின்று வருதல். இதை திடமாக செய்ய இஷ்டர்கள் எனப்படும் மகரிஷிகளுடைய தரிசனமும் தேவதைகளின் தரிசனமும் கிடைக்கிறது. அவர்கள் இவனுக்கான காரியங்களையும் செய்கின்றனர் என்று பாஷ்யங்கள் சொல்கின்றன.

ஸமாதி⁴ஸித்³தி⁴ரீஶ்வரப்ரணிதா⁴நாத் || 45||

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.
இறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.

இது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.

ஸ்தி²ரஸுக²மாஸநம் || 46||

ஸ்தி²ர = ஸ்திரமான, அசைவையுண்டாக்காத; ஸுக²ம் =சுகத்தை தருவதுமானது; ஆஸநம் =ஆசனமாகும்.
இவை பலவிதமாக சொல்லப்படுகின்றன. இவற்றில் (வாசஸ்பதி மிஸ்ரர் வ்யாக்கியானத்தை ஒட்டி) சிலதை பார்க்கலாம்:
1.பத்மாஸனம். 2.பத்ராஸனம்.3.ஸவஸ்திகம். 4.தண்டகாஸனம். 5. ஸோபாஸ்ரயம். 6. பர்யங்காஸனம்.7.க்ரௌஞ்ச நிஷதனம். 8.ஹஸ்தி நிஷதனம். 9.உஷ்ட்ர நிஷதனம். 10. ஸமஸம்ஸ்தானம். 11. ஸ்திர ஸுகம்.
பத்மாஸனம் என்பது இரண்டு பாதங்களையும் இரு துடைகள் மீது வைத்து உட்காருதல்.
இரண்டு குதி கால்களையும் வ்ருஷணத்தின் சமீபத்தில் சேர்த்து வைத்து அதன் மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொள்ளுதல் பத்ராஸனம்.
இடது காலை மடக்கி வலது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் அதேபோல வலது காலை மடக்கி இடது துடை, முழங்கால் இவற்றின் இடையிலும் வைத்துக்கொள்ளுதல் ஸ்வஸ்திகம்.
பூமியில் உட்கார்ந்து கால்களை நீட்டி இரண்டு குதி கால்களையும் காலில் உள்ள விரல்களையும் ஒன்று சேர்த்து செய்வது தண்டாஸனம்.
பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் சேர்த்து இடுப்பை சுற்றி ஒரு வஸ்திரம் அல்லது பட்டு முதலியவற்றால் சுற்றிக்கட்டிக்கொள்வது ஸோபாச்ரயம். முழங்காலில் கையை வைத்துப் படுத்துக் கொள்ளுதல் பர்யங்காஸனம். க்ரௌஞ்சம் என்ற பட்சி பூமியில் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி தானுமிருப்பது க்ரௌஞ்ச நிஷ்தனம். யானை பூமியில் படுத்தால் போல் தான் இருப்பது ஹஸ்தி நிஷதனம். பூமியில் படுத்த ஒட்டகத்தைபோல இருப்பது உஷ்ட்ர நிஷதனம் பூமியில் உட்கார்ந்து இரண்டு முழங்கால்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைத்துக்கொள்வது ஸம்ஸம்தானம். எப்படி இருந்தால் உடலுக்கு நிலையான சுகம் ஏற்படுமோ அப்படி இருப்பது ஸ்திரசுகம்.

ப்ரயத்நஶைதி²ல்யாநந்த்யஸமாபத்திப்⁴யாம் || 47||

ப்ரயத்ந ஶைதி²ல்ய= சரீரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர எடுத்துக்கொள்ளும் முயற்சியை குறைத்துக்கொள்வதும்; அநந்த்ய = ஆதிசேஷனிடத்தில்; ஸமாபத்திப்⁴யாம் = மனதைச் செலுத்துவதும்; (ஆசன ஜயத்துக்கான சாதனங்கள்.)

கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு இல்லே?! ஏதேனும் செய்ய முடியலைன்னு சொன்னா இன்னும் முயற்சி செய்ன்னு சொல்வதே சாதாரணமாக பார்ப்பது. இங்கே மாறாக சொல்கிறார். ஆசனம் சரியா வரல்லியா, ரொம்ப முயற்சி செய்யாதே! மஹா விஷ்ணுவோட ஆசனமா இருக்கிற ஆதி சேஷனை வேண்டிக்கொள் என்கிறார்.

ததோ த்³வந்த்³வாநபி⁴கா⁴த​: || 48||

தத: = அதனால் (ஆசன ஜயத்தால்); த்³வந்த்³வ = (குளிர் சூடு போன்ற) இரட்டைகளால்; அநபி⁴கா⁴த​: = பீடை உண்டாவதில்லை.
சாதாரணமாக நம் வாழ்க்கையில் இந்த இரட்டைகளை நிறையவே பார்க்கலாம். துக்கம் சுகம்; சூடு குளிர் , இது போல. அதாவது ஒரு விஷயத்தின் இரு முனைகள். சில விஷயங்கள் – சூடு போல- ஒரு நீண்ட அளவில் எங்கே வேண்டுமானலும் இருக்கலாம் இல்லையா? நமக்கோ ஒரு குறிப்பிட்ட அளவே பிடிக்கும். காப்பியில் சர்க்கரை இவ்வளவுதான் இருக்கணும், அப்போதுதான் நமக்கு பிடிக்கும் என்று இருக்கலாம். அப்படி இல்லாமல், கூடுதலோ குறைவோ எவ்வளவு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இருப்பதையே இரட்டைகளால் பீடை என்றது. குளிர் காலமானாலும் வெயில் காலமானாலும் ஒரே மாதிரி பாவிக்கிறதும் இதேதான்.

இப்படி ஒரு சித்தி ஏற்பட்டபின் செய்யக்கூடியது ப்ராணாயாமம்.

தஸ்மிந்ஸதி ஶ்வாஸப்ரஶ்வாஸயோர்க³திவிச்சே²த³​: ப்ராணாயாம​: || 49||

தஸ்மிந்ஸதி = அப்படி ஆசன ஜயம் ஏற்பட்டபின்; ஶ்வாஸ = வெளிக்காற்றை உள்ளிழுத்தலான சுவாசம்; ப்ரஶ்வாஸயோர் = உள்ளிருக்கும் வாயுவை வெளிவிடுதல் ஆகியவற்றின்; க³தி = கதியை விச்சே²த³​: தடை செய்யும்; ப்ராணாயாம​: =பிராணாயாமத்தை (செய்ய வேண்டியதாகும்).

மூச்சை உள்ளிழுப்பது, வெளிச்செலுத்துவது, இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது. இந்த மூன்றும் இயற்கையாக நிகழ்வன. இப்படி இயற்கையாக நிகழ்வதை நிறுத்துவது பிராணாயாமம்.
இங்கேயும் நமக்கு கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். யோகா குரு மூச்சை இழு, பிடி, விடு என்று கற்று கொடுத்து இருக்கலாம். ஆனால் பாதஞ்சல சாஸ்திரத்தில் மேலும் பல வகைகள் உண்டு. மூச்சை இயல்பாக எடுக்கும் நேரத்தில் எடுக்காமல் இருப்பதும், வெளிவிடும் நேரத்தில் வெளிவிடாமல் இருப்பதும் கூட ப்ராணாயாமமே! (சோதனை செய்து பார்க்காதீங்க. குரு முகமாகவே பயில வேண்டும்.)

ஸ து பா³ஹ்யாப்⁴யந்தரஸ்தம்ப⁴வ்ரு«த்திர்தே³ஶகாலஸம்°க்²யாபி⁴​: பரித்³ரு«ஷ்டோ தீ³ர்க⁴ஸூக்ஷ்ம​: || 50||

ஸ = அந்த ப்ராணாயாமத்தின்; து பா³ஹ்யாப்⁴யந்தர = உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் விருத்தி உடையதாகவும்; ஸ்தம்ப⁴ வ்ரு«த்திர் = வெளியே அனுப்பாமலும் உள்ளே இழுக்காமலும் அப்படியே நிறுத்துவதாகவும் {ஆகும்.} தே³ஶ கால ஸம்°க்²யாபி⁴​: = (அந்த மூன்று வித ப்ராணாயாமங்கள்) நிற்கின்ற தேச, கால, மாத்திரை (duration) ஆகியவற்றால்; பரித்³ரு«ஷ்டோ = பார்க்கப்பட்டதாக; தீ³ர்க⁴ = நீளமாகவும்; ஸூக்ஷ்ம​: =ஸூக்ஷ்மமாகவும் (ஆகின்றது.)

பிராணாயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம். இது உள்முக வளர்ச்சி (ஆப்யந்தர விருத்தி). வெளிச்செலுத்துவது ரேசகம். இது வெளிமுக வளர்ச்சி (பாஹ்ய விருத்தி). இந்த இரண்டுக்கும் நடுவில் மூச்சை உடலில் அப்படியே நிறுத்துவது கும்பகம். ஸ்தம்பித்து நின்றேன் என்கிறோமல்லவா? தூண் போல நிற்பது. உடலில் காற்று அப்படி நிற்பதால் இது ஸ்தம்ப விருத்தி. இவை மூன்றும், இவற்றின் தேசம் காலம், கால அளவு இவற்றைப் பொறுத்து நெடியதாகவும், நுட்பமானதாயும் ஆகின்றன. பிராணாயாமத்தில் வழக்கமாக மூச்சை விடுவதை, இழுப்பதை விட அதிக காலமும் தூரமும் விட, இழுக்க பழக வேண்டும். அதே போல மூச்சு நிற்கும் காலத்தையும் அதிகமாக்க வேண்டும். [குரு இல்லாமல் இதை பயிற்சி செய்ய வேண்டாம். வேண்டுமென்றே மேல் தகவல்கள் தரவில்லை.] பயிலப்பயில வாயு அதிக நேரம் நிற்பது தீர்க்க நிரோதம் எனப்படும். இது பின்னர் சூக்ஷ்மமாகிவிடும். மூச்சு ஓடுகிறதா இல்லையா என்று அறிவதே கடினமாகும் படி மெலிதாக ஆகும்.

பா³ஹ்யாப்⁴யாந்தரவிஷயாக்ஷேபீ சதுர்த²​: || 51||

பா³ஹ்யாப்⁴யாந்தர = வெளியிலும் உள்ளேயும் போயிருக்கிற; விஷய = [தேசமாகிய] விஷயத்தின்; ஆக்ஷேபீ = அறிந்து செய்யும் ப்ராண நிரோதம்; சதுர்த²​: = [துரீயம் என்னும்] நான்காவதாகும்.
வெளியே வாயு நிற்குமிடம் வெளி தேசம்; உள்ளே நிற்கும் நாபிச்சக்ரம் முதலான இடங்கள் உள் தேசம். இன்ன தேசத்தில் வாயு நிற்கிறது என்ற அறிவுடன் செய்வது துரீய பிராணாயாமம் ஆகும்.
இது கும்பக பிராணாயாமம் போலவே இருக்கிறதே என்றால்:
இப்படி செய்ய வேண்டும் என அறிந்து கும்பக பிராணாயாமத்தை உடனே செய்ய முடியும். இதில் மூச்சை இழுக்கிறோம், வெளி விடுகிறோமே தவிர வேறு விஷய நிச்சயம் இல்லை. இந்த உள்ளே வெளியே என்பது என்ன என்று சரிவர தெரிந்த பின்னரே துரீய பிராணாயாமத்தை செய்ய இயலும். இதற்கு பலத்த முயற்சி தேவை.

தத​: க்ஷீயதே ப்ரகாஶாவரணம் || 52||

தத​: = அதனால்; (பிராணாயாமத்தை பயிற்சி செய்வதால்) க்ஷீயதே = தேய்கின்றன (அழிகின்றன); ப்ரகாஶாவரணம் = பிரகாச ஆவரணம் = பிரகாசத்தை மூடி இருப்பது (சுத்த சத்வ மயமான சித்தத்தில் உள்ள பாபங்களும் அவித்தை முதலான தோஷங்களும்);
பிராணாயாமத்தின் உத்தம பலன் கிடைக்கு முன்னே நடுவாந்திர பலனான சித்த தோஷங்களும் சித்த காரியமான பாபங்களும் அழிதல் கிடைக்கிறது

தா⁴ரணாஸு ச யோக்³யதா மநஸ​: || 53||

தா⁴ரணாஸு = (ஸூக்ஷ்ம லக்ஷ்ய) தாரணைகளில்; ச யோக்³யதா =கூட யோக்யதையும்; மநஸ​: = மனதுக்கு (உண்டாகிறது)
பிராணாயாமத்தினால் தாரணைக்கு மனது தயாராகிறது.
இது வரை கூறிய யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களால் சுத்தம் செய்யப்பட்ட மனதை உடையவனுக்கு ப்ரத்யாஹார பலன் உண்டாகிறது. ப்ரத்யாஹாரம் எனில்…

ஸ்வவிஷயாஸம்°ப்ரயோகே³ சித்தஸ்வரூபாநுகார இவேந்த்³ரியாணாம்° ப்ரத்யாஹார​: || 54||

ஸ்வவிஷயா = தமது விஷயங்களில்; ஸம்°ப்ரயோகே³ = (சப்தம் முதலானவற்றுடன்) சம்பந்தம் விலகியபோது; சித்த ஸ்வரூபாநுகார இவ =சித்தத்தின் சொரூபத்தை அனுசரிப்பது போல; இந்த்³ரியாணாம்° = இந்திரியங்களின்; ப்ரத்யாஹார​: = ப்ரத்யாஹாரமாகும்.

சப்தம் முதலானவை மோகம், ராகம் முதலானவைகளை உண்டு பண்ணக்கூடியவை. இவற்றில் இந்திரியங்கள் செல்லும்போது அது யோகத்துக்கு இடையூறாகும். முன் சொன்ன யமம், நியம, ஆஸன, ப்ராணாயாமங்களை சரியாக செய்து வருபவருக்கு சித்தம் தன் இயல்பான சத்வ தன்மையை அடையும். இப்படி தெளிவதால் வெளி விஷயங்களிடத்தில் பற்று குறைந்து விடும். இந்திரியங்களும் சித்தத்தைப்போலவே சத்வமாகிவிடும். இந்த்ரியங்கள் விஷயங்களை நாடாததால் மனதும் தூய்மையாக இருக்கும். மனம் தத்துவத்தை நாடி நிற்குமானால் இந்திரியங்கள் தம் பால் அதை இழுக்கா. இதுவே ப்ரத்யாஹாரம் எனப்படும்.

தத​: பரமா வஶ்யதேந்த்³ரியாணாம் || 55||

தத​: = அதனால்; பரமா =மேலான; வஶ்யதா = வசப்பட்டு இருக்கும் தன்மை; இந்த்³ரியாணாம் = இந்திரியங்களுக்கு உண்டாகின்றது.

இந்திரியங்கள் சித்தத்துக்கு வசப்பட்டபின் அதை விட்டு விலகாமல் இருப்பதே மேலான தன்மை ஆகும். இது ப்ரயாஹாரத்தினால் அடையப்படுகிறது.

இது வரை யோகத்துக்கு பகிரங்க சாதனங்களான யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களைப் பற்றி சொல்லப்பட்டது. வரும் மூன்றாம் பாதத்தில் யோகத்துக்கு அந்தரங்க சாதனங்களான தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சொல்லப்படும்.

இரண்டாம் பாதம் நிறைவுற்றது.
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading