ஆண்டாள், இயற்கையை, மொழியை, அடியவர்களை மட்டுமின்றி ஆண்டவனையும் ஆண்டாள். ஆண்டவனால் ஆட்கொண்டாள்.
திருப்பாவை வியாக்கியானத்தின் தொடக்கத்திலேயே ஆண்டாளின் பெருமையை அருளிச் செய்கின்ற பெரியவாச்சான்பிள்ளை
`தேஹாத்மாபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கைவந்திருக்கும் ருஷிகளுக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி போரும்;
ருஷிகளுக்கும் ஆழ்வார்களுக்கும் அத்தனை வாசி போரும்;
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும்;
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்’’என்றருளிச் செய்கிறார்.
உடலையே ஆத்மாவாகக் கொண்டிருக்கும் சாமானிய மனிதர்கள் பரமாணு என்றால்,
ருஷிகள் மலை போன்றவர்கள்.
அதே போல் ருஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்;
ஆழ்வார்களில் பெரியாழ்வார் உயர்ந்தவர்;
பெரியாழ்வாரைக் காட்டிலும் ஆண்டாள் உயர்ந்தவள் என்கிறார் அவர்.
ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமி தமது நாலாயிரப்படியில் ஸ்ரீராமாயண புருஷர்களைக் கொண்டு இதனை விளக்குகின்றார்.
அவர்களைக் காட்டிலும் இராமபிரானுடைய பெருமையை உணர்ந்து கொண்ட வசிஷ்டர், விச்வாமித்ரர் முதலிய முனிவர்கள் உயர்ந்தவர்கள்;
அவர்களைக் காட்டிலும் இராமபிரானுக்குத் தொண்டு செய்த லக்ஷ்மணன் உயர்ந்தவன் (ஆழ்வார்களைப் போல).
அவனைக் காட்டிலும் இராமபிரானுடைய திருவுள்ளத்தைப் பின் சென்ற பரதாழ்வான் உயர்ந்தவன் (பெரியாழ்வாரைப் போல).
இராமபிரானையும் விட்டு பரதாழ்வானையே எல்லாமுமாகக் கொண்ட சத்ருக்னன் பரதனைக் காட்டிலும் உயர்ந்தவன் (ஆண்டாளைப் போல) என்கிறார் அவர்.
பெரியாழ்வார் பகவானுடைய நன்மையை விரும்பினார்.
ஆண்டாளோ, பாகவதர்களுடைய நன்மையை விரும்பினாள்.
எனவே ஆண்டாள் பாகவத விஷயத்தில் மிக்க ஈடுபாடு உடையவள் என்றதாயிற்று.
இதனைத் திருப்பாவை நன்கு காட்டுகிறது.
கோபிகைகளை அனுகரிக்கும் முகத்தால் ஆண்டாள் தனக்கு பாகவத விஷயத்திலுள்ள
ஈடுபாட்டை நன்கு வெளிப்படுத்தினாள்.
தான் எவரை மிகவும் விரும்புகிறாரோ அவராகவே தன்னை பாவித்துக் கொள்ளுதலே அனுகாரம் எனப்படுகிறது.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் `கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்’ என்று தொடங்கும்
திருவாய்மொழியில் எம்பெருமானாகவே தம்மை அனுகரித்துக் கொண்டு பாசுரங்கள் அருளிச் செய்கிறார்.
அதில், `திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும், திறம்பாமல் மலை யெடுத்தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும், திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்,
இனவேய் மலை யேந்தினேன் யானே என்னும், இனவேறுகள் செற்றேனும் யானே என்னும், இனவான் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,
இனவாநிரை காத்தேனும் யானே என்னும், இனவாயர் தலைவனும் யானே என்னும்’ என்று
க்ருஷ்ணாவதார சரித்திரங்களையே பலகாலும் அருளிச் செய்கிறார்.
எனவே அவருடைய அனுகாரம் அவர் மிகவும் ஈடுபட்டிருந்த க்ருஷ்ணாவதாரத்திலேயே அமைந்தது எனலாம்.
திருமங்கையாழ்வாரும் ஒரே ஒரு பாசுரத்தில் அனுகாரம் செய்திருக்கிறார்.
“வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாமென்று பேசினாள்” என்பது அப் பாசுரம்.
திருவேங்கடமலையிலிருந்து வந்து இப்போது திருக்கண்ணபுரத்தில் இருப்பவன் யானே என்கிறாள்
என்பது இப்பாசுரத்தின் பொருள்.
ஆக திருமங்கையாழ்வார் மிக மிக ஈடுபட்டிருந்த அர்ச்சாவதாரத்திலேயே அவருடைய அநுகாரம் அமைந்தது.
அதைப் போலவே ஆண்டாளுடைய அனுகாரம் அவள் மிக மிக ஈடுபட்டிருந்த பாகவத விஷயத்திலேயே அமைந்தது.
கண்ணபிரானைப் பிரிந்திருப்பதனால் உண்டாகும் துன்பத்தை ஆற்றிக் கொள்ள கண்ணபிரானைப் போலவே
அனுகாரம் செய்து தரித்த கோபிகைகளைப் பற்றிக் கூறி அவர்களைப் போலவே இவளையும்
அனுகாரம் செய்து தரிக்கும்படி கூற, இவள் அந்த கோபிகைகளைப் போலத் தானும் கண்ணபிரானை அனுகரித்து தரிக்காமல்,
அந்த கோபிகைகளைப் போலவே தன்னை பாவித்துக் கொண்டு திருப்பாவை பாடினாள்.
அவர்கள் நோற்ற பாவை நோன்பைத் தான் நோற்பதாக அனுகரித்து,
இடை நடையும், இடைமுடியும் இடைப் பேச்சும் முடைநாற்றமுமாகி விட்டாள்.
எனவே ஆண்டாள் மிக மிக ஈடுபட்டிருந்த பாகவத விஷயத்திலேயே அவளுடைய அனுகாரம் அமைந்து விட்டது.
`சங்கத் தமிழ்மாலை’ என்று ஆண்டாளே திருப்பாவையைக் கொண்டாடிச் சொல்லுகிறாள்.
இதற்கு, `திரள் திரளாக (கூடி) அனுபவிக்க வேண்டும் பிரபந்தம்’ என்று பொருள் காட்டுகிறார் பெரியவாச்சான்பிள்ளை.
எனவே பாகவதர்கள் பலர் ஒன்று சேர்ந்து திரளாக அனுபவிக்கும் பிரபந்தமாகவே அவள் திருப்பாவையை அருளிச் செய்தாள்.
அத் திருப்பாவை `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்று கொண்டாடப்படுகிறது.
வித்தாவது விதை. வேதத்திற்கு திருப்பாவை விதை என்பது இதன் பொருள்.
விதையிலிருந்து மரம் உண்டாவது போல திருப்பாவையிலிருந்து வேதம் உண்டானதாக அன்றோ பொருள் படுகிறது?
வேதமோ அநாதியானது. இன்ன காலத்தில்தான் உண்டானது என்றில்லாமல் எப்போதும் உள்ளது.
ஆனால் திருப்பாவையோ, பூமிப்பிராட்டி ஆண்டாளாக அவதரித்த காலத்தில் அருளிச்செய்தது.
ஒரு காலத்தில் அவதரித்த திருப்பாவை எப்படி எல்லாக் காலத்திலுமுள்ள வேதத்திற்கு வித்தாக முடியும் என்ற கேள்வி எழலாம்.
இங்கு ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.
விதையிலிருந்துதான் மரம் உண்டாகின்றது என்பது உண்மை தான்.
அதே சமயம் மரத்திலிருந்தும் விதை உண்டாகிறது.
அந்த விதையை விதைத்தால் மறுபடியும் மற்றொரு மரம் உண்டாகிறது.
இந்த விதத்தில் பார்க்கும் போது `வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ என்பது நன்றாகவே பொருந்துகிறது.
அதாவது வேதமாகிற மரத்திலிருந்து உண்டான விதை தான் திருப்பாவை.
மரம் மிகப் பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து உண்டாகும் விதை மிகச் சிறியதாக இருப்பது போல,
`அநந்தா வை வேதா:’ என்றபடி மிகப் பெரியதான வேதங்களிலிருந்து உண்டான
சிறிய விதை தான் முப்பதே பாசுரங்களைக் கொண்ட திருப்பாவை.
விதையை பூமியில் நட்டு, தண்ணீர் பாய்ச்சி, எருவிட்டால் அது மரமாக முளைக்கிறது.
முளைக்கின்ற மரத்தின் அத்தனை உறுப்புக்களும் அந்தச் சிறிய விதையில் சிறுவடிவில் (ஸூக்ஷ்மமாக) இருக்கிறது.
அதேபோல் திருப்பாவையிலும் வேதார்த்தங்கள் அனைத்தும் உள்ளே பொதிந்துள்ளன.
ஊன்றி நோக்கி ஆசார்யர்கள் விளக்கியருளும்போது அதில் ஸூக்ஷ்மமாகப் பொதிந்துள்ள
வேதார்த்தங்கள் அனைத்தும் வெளிப்படுகின்றன.-திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்து என்று கொண்டாடப்படுகிறது. அதாவது, வேதத்தின் ஸாரமான விஷயங்களை நாம் திருப்பாவையிலே கண்டுவிடலாம்
திராவிட வேதமான திவ்யப்ரபந்தம் உட்பட அனைத்து வேதங்களிலும் உள்ள அர்த்தங்களும்
திருப்பாவையில் பொதிந்துள்ள படியால்தான் `வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்’ எனப்பட்டது.
கோதை என்ற சொல்லுக்கு மாலை என்பது பொருள்.
பெரியாழ்வார் மாலை கட்டுவதற்காக நந்தவனத்திற்குச் சென்றபோது கிடைத்த குழந்தை ஆகையால் கோதை என்றே பெயரிட்டார்.
கோதை அருளிய சங்கத் தமிழ் மாலை என்பதனை `மாலை கட்டிய மாலை’ என்று
விளக்குகிறார் உரையாசிரியர் அழகியமணவாளப் பெருமாள் நாயனார்.
அதுவே `மாலைக் (திருமாலைக்) கட்டிய மாலை’ என்றும் விளக்குகிறார்.
பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை.
பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம்.
உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு.
‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில்
‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத் தகும்.
பாவை பாடிய பாவை என்றும்
மாலைக் கட்டிய மாலை என்றும்
புகழப்படும் ஸ்ரீ கோதா தேவி
திருப்பாவை –
மேன்மை பொருந்திய பாவையால் சொல்லப்பட்டது
பாவைக்காக -நோன்புக்காகச் சொல்லப்பட்டது
பாவையின் பொருட்டு -தோழியின் பொருட்டு சொல்லப்பட்டது
பாவையை -பெண்களை அழைத்துச் சொல்லப்பட்டது
பாவையை அடைய புருஷகாரம் பெற சொல்லப்பட்டது
பாவை மூலம் -நீளா தேவி மூலம் பகவானை அடையச் சொல்லப்பட்டது
பாவை -வழி -சரணாகதியை விளக்க ஏற்பட்டது
பாவையை அடைய -பேற்றை அடையச் சொல்லப்பட்டது
‘நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்’,
‘பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்’ எனவரும் திருப்பாவைத் தொடர்கள்
இந்நோன்பின் வரலாறு பரிபாடல் 11ஆம் பாடலில் சொல்லப்படுகிறது. ஆசிரியர் நல்லந்துவனார்.
கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்
நீயுரைத்தி வையைநதி
இப்பரிபாடற்பகுதியால், வையைக் கரையில் மார்கழி நீராடி நோற்கும் நோன்பு சங்க நாளிலே
கன்னிப் பெண்களுக்குப் பெருவழக்காயிருந்தமை தெளிவாகும்.
இந் நோன்பை ‘அம்பா ஆடல்’ என்ற பெயரால் நல்லந்துவனார் கூறுகின்றார்.
தாயோடு ஆடப்படுவதால் இப்பெயர் பெற்றது எனப் பரிமேலழகர் குறிப்பிடுவார்.
ஐந்து முதல் ஒன்பது வயது வரையுள்ள சிறு கன்னியரே தைந்நீராடி நோற்றற்குரியர் எனப் பிங்கலந்தை வரையறை செய்கிறது.
இவ்வாறாயினும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தே கன்னியர் எல்லாராலும் இந்நோன்பு
கைக்கொள்ளப் பெற்றது என்பதைத் திருப்பாவை வழியே அறிகிறோம்.
வேதார்த்தங்கள் அனைத்தையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அருளிச்செய்திருப்பதால்
தான் திருப்பாவையைத் `தமிழ்மாலை‘ என்றாள் என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
தமிழ் என்று சொல்லுக்குத் தமிழ் மொழி என்பது மட்டும் பொருள் அல்ல.
தமிழ் என்றால் இனிமை என்றும் எளிமை என்றும் கூடப் பொருள் உண்டு. `
இனிமையும் நீர்மையும் தமிழ் என்னலுமாம்‘ என்று நிகண்டுக்களில் கூறப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் `
`யாவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லாத வஸ்து,
பெற்றம் மேய்த்துண்ணும் இடைச் சேரியிலே வந்து பிறந்து எளியன் ஆனாற்போலேயும்,
உத்தம வர்ணத்திலே பிறப்புடைய ஆண்டாள் ஆயர் சிறுமியர் திரளிலே ஒருத்தியாய் அந்வயித்தாற்போலவும்
அருமறையின் பொருளான உபநிஷத்து தமிழாய் வந்து ஸர்வ ஸுலபமானபடி’‘ என்று அருளிச் செய்கிறார்.
ஸர்வேச்வரனான எம்பெருமான் தன்னை ஒரு ஆயனாகத் தாழ விட்டான்;
பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் தன்னை ஆய்ச்சியாகத் தாழவிட்டாள்;
உயர்ந்த அர்த்தங்களைக் கொண்ட உபநிஷத்தானது தன்னைத் திருப்பாவையாகத் தாழ விட்டது.
எனவே `தமிழ் மாலை’ என்பது எளிமையான மாலை என்பதனைக் குறிக்கின்றது-என்பது நாயானார் தரும் அற்புதமான விளக்கமாகும்.
————
நாராயணனே நமக்கு பறை தருவான்.
நாராயணன் தான் பரமாத்மா என்றும்,
அவருடைய பலன் -பறை – அவருக்கும் அவருக்கும் மட்டுமே நித்திய கைங்கர்யத்தை நமக்கு வழங்கும் என்றும்
அவள் சந்தேகத்திற்கு இடமின்றி, ஆழ்ந்த உறுதியுடன் கூறுகிறாள்.
அவனுடைய தாள் மட்டும் தான் உபாயம் (உபாயம்)
பிரபத்தி சுய சரணாகதியைக் குறிக்கிறது
சரணாகதி (இறைவனுடைய புனித பாதங்களில் அடைக்கலம் தேடுதல்),
பர நியாசம் (ஜீவனைப் பாதுகாக்கும் பாரத்தையும் பொறுப்பையும் இறைவனுக்கு மாற்றுதல்)
மற்றும் ஆத்மா நிக்ஷேபம் (சுய சரணாகதி) எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.
இந்த சரணாகதி உள்ளடக்கிய அங்கங்கள்
1) இறைவனுக்குப் பிரியமானதைச் செய்தல் (ஆனுகூல்ய சங்கல்பம்)
2) இறைவனுக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்ப்பது (ப்ரதிகூல்ய வர்ஜனம்)
3) அவனே காக்கும் ஒருவன் என்ற முழு நம்பிக்கை (மகா விஸ்வாசம்)
4) அவனுடைய பாதுகாப்பிற்காக மன்றாடுதல் ((கோப்த்ருவம்) வரணம்)
5) ஆத்ம நிக்ஷேபம் (தன்னைச் சரணடைதல்)
6) உதவியற்ற உணர்வு (கார் பண்யம்)
அனுகூல்ய வர்ஜனம் மற்றும் ப்ரதிகூல்ய வர்ஜனம்-அதாவது
செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் நிராகரிக்கப்பட வேண்டிய செயல்கள்)
நித்திய கைங்கர்யம் செய்ய ஏங்கி சரணடைபவருக்கு தேவையான மன அணுகு முறைகள்.
இரண்டாவது பாசுரத்தில், ஆண்டாள் கூறுகிறார்,-உய்யும் ஆறு என்று அங்கங்களுடன் கூடிய பல த்யாகம் -பிரபத்தி சொல்லிற்று-
த்வயத்தில் உள்ள ஆறு பதங்கள் என்றுமாம் -செய்யும் கிரிசைகள் கேளீரோ.
இது வாசிகம், காயிகம், மானஸம் (ஒருவரின் பேச்சு, செயல்கள் மற்றும் மனம்) மூலம் செய்ய வேண்டிய செயல்களைக் குறிக்கிறது.
அவருடைய பெருமைகளைப் பாடுவதும், பூக்களால் வணங்குவதும், அவரைப் பற்றி சிந்திப்பதும் அவரவர் விருப்பத்திற்குரிய செயல்களாகும்.
• மீண்டும் நிராகரிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் வாசிகம், காயிகம், மானஸம்
இரண்டாவது பாசுரத்தில் மீண்டும், தீக்குறளை சென்றோதோம் என்கிறார்.
இது வலி மிகுந்த அசத்தியம் பேசாமல் இருப்பதையும் நோக்கமற்ற பேச்சில் ஈடுபடுவதையும் குறிக்கிறது
இதன் பொருள் பகவத், பாகவத் அபச்சாரம், விதிக்கப்பட்ட கடமைகளை கைவிடுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. .
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்–இங்கே அனுதினத்தின் இன்பங்கள் இங்கு நிராகரிக்கப்படுகிறது.
• சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவுடன், சாதகமற்ற நடவடிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன;
ஸ்ரீமன் நாராயணன் சரணாகதி அடைந்த ஆன்மாவை சரணாகதிக்குப் பிறகு செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்து வெகுமதி அளிக்கிறார்.
ஆண்டாள் இதை அதே பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்:
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
முதல் பாசுரம் தற்செயலாக, ஸ்ரீமன் நாராயணருக்கு மட்டுமே கட்டுப்பாடற்ற அடிமைத்தனத்தைக் குறிப்பிட்டு,
ஸ்ரீமன் நாராயணரின் பாதங்களில் அடைக்கலம் தேடி, அவரை மட்டுமே உயர்ந்த இலக்காகக் கொண்டு
அஷ்டாக்ஷரத்தின் அர்த்தத்தையும் பரிந்துரைக்கிறது.
மீண்டும் இரண்டாவது பாசுரம், சரணடைந்த ஒருவர் மற்ற தெய்வங்களைத் தேடக்கூடாது என்ற
கட்டளையை தெரிவிப்பதன் மூலம் த்வய மந்திரத்தின் அர்த்தத்தை பரிந்துரைக்கிறது.
——————
திருப்பாவையும் வேதார்த்தமும்
1-மார்கழி -திருமந்த்ரார்த்தம் –
வையத்து –த்வயார்த்தம்
ஓங்கி -சரம ஸ்லோகார்த்தம்
2- அம்பரமே -உந்து -முப்பத்து மூவர்-மூன்றும் அமலன் -உவந்த -மந்திபாய் போல் -அ உ ம ஸூசிப்பித்து பிரணவ அர்த்தம்
மேல் உன் தன்னோடு உறவேல் நமக்கு எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்பதில் நசன்றாக விளக்கம்
3-உந்து -புருஷகார பூதையான பிராட்டி வைபவம் சொல்லும்
குத்து விளக்கும் -முப்புத்து மூவர் -பாசுரம் த்வயத்தில் பூர்வ உத்தர -ப்ராபகத்வ ப்ராப்ய பரமான பாசுரங்கள்
4-முப்பத்து மூவர் -பரித்ராணாயா ஸாதூன -அர்த்தம் காட்டும்
கப்பம் தவிர்க்கும் -செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் -என்பது போலாம் ஆஸ்ரித சாது ரக்ஷணமும் துஷ்க்ருத விநாசமும் சொல்லிற்று
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து’
வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை
நீதிமன்னர் நெறியினுக்கு ஓர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
மாதம் மூன்று மழைஎனப் பெய்யு மே.- விவேகசிந்தாமணி
செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறை நெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச் செலவும் இம்மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து– திரிகடுகம்
மாயனில்– போய பிழையும் -என்பதிலும் ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -அர்த்தம் விளக்கப்படுகிறது
உபநிஷத் -தத் யதா இஷீகதுலம் -என்பதே இங்கும் சொல்லிற்று
ஸோஹம் ஸோஹம் ஸோஹம் என்று சொல்லிக்கொண்டே வந்தால் ஹம்ஸ ஹம்ஸ வரும்
இதனால் உபாசகர்கள் பரம ஹம்ஸம்
தத் –த்வம் அன்று -அந்த ப்ரஹ்மம் நீ அல்ல
விருத்தே வையக்ரீ ஸூகடித ஸாமாநாதி கரணே நரஸிம்ஹத்வே பிப்ரத் வரத பிபார மாஸித ஜகத்
தபஸா கில்பிஷம் ஹந்தி”(-மனு-ஸ்ம்ருதி-1-21) – தவத்தினால் மனிதன் அசுத்தங்களை விலக்கிக் கொள்கிறான் / பாவங்களைப் போக்கிக்கொள்கிறான்.
“வித்யயா அம்ருதம் அஶ்நுதே” (-மனு-ஸ்ம்ருதி-1-21) – ஞானத்தினால் மோக்ஷம் அநுபவிக்கின்றான்.
தவத்தினால் சித்த சுத்தியை அடையும் நிலையும், ஞானத்தினால் மோக்ஷத்தை அநுபவிக்கும் பாக்கியமும், வேத அத்யாயன சிந்தனைகளினால் ஏற்படுகின்றது. ஆகையால் மநு ஸ்ம்ருதிப்படி வேதாத்யயனமே பெரும் தவமாக போற்றப்படுகின்றது.
இங்கு “தப :” என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஆலோசனை/சிந்தனை என்று பொருள்படும்.
யதா ஜாதபலோ வஹ்நிர் தஹத் ஆர்த்ராநபி த்ருமான் |
ததா தஹதி வேதக்ஞ கர்மஜம் தோஷம் ஆத்மந: || -மனு-ஸ்ம்ருதி-12-101
எப்படி பலமடைந்த அக்னி ஈரமரங்களையும் எரித்து விடுகிறதோ அதுபோல வேதமறிந்தவன் தனது கர்மங்களினால் ஏற்பட்ட தோஷங்களைப் பொசுக்கி விடுகிறான் என்கீறது. (ஆண்டாள் இதைத்தான், திருப்பாவை 5 ஆம் பாசுரத்தில் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்” என்று பாடினார்.)
பித்ருதேவ மநுஷ்யாணாம் வேதஶ்சக்ஷு ஸநாதநம் |– -மனு-ஸ்ம்ருதி-12-94-
பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேதமே நிரந்தரமான-ஞானசாதனமாயுள்ள அகக்கண்ணாக இருக்கிறது என்று திரும்பத் திரும்ப, அடிக்கடி கூறி இருப்பது வேதத்யயன சிந்தனைகளின் தனிச் சிறப்பையும் ,வேதங்களின் உயர்ந்த தன்மையையும் வெகு அழுத்தமாக நிரூபிக்கக் கூடிய வகையில் அமைந்துளது.
மேலும் அது “வேதாப்யாஸே யத்நவான் “ என்று ஒரு அந்தணனானவன் வேதாத்யயனத்தில் எப்பொழுதும் முயற்சி உடையவனாக இருக்க வேண்டும் என்றும்
வேதம் ஏவ அப்யஸேந் நித்யம் யதா காலம் அதந்த்ரித: |
தம் ஹி அஸ்யாஹு பரம் தர்மம், உபதர்மோ அன்ய உச்யதே ||– மனு-ஸ்ம்ருதி -4-147
பொருள்: – எப்பொழுதும் வேதாத்யயனத்தை நித்தியமாகச் செய்ய வேண்டும் என்றும், அது மிகவும் உயர்ந்த தர்மம் என்றும், மற்றவை அதற்கு அடுத்தபடியாகத் தாழ்ந்துள்ளவைதான் என்றும் மனுஸ்ம்ருதி பல தடவைகள், பன்முறையாக வற்புறுத்திக் கூறுகின்றது.
எனவேதான் ஸ்ரீராமாநுஜர் “வேதம் அனைத்துக்கும் வித்து” என்று திருப்பாவையைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், தானும் அனவரதம் அதையே சிந்தித்தார்.
4000 பாசுரங்களுக்கும், திருப்பாவை -29 ஆம் பாசுரமான “சிற்றஞ் சிறுகாலே” பாசுரத்தை சாரமாக அறிவித்தார். அதனை எல்லா கர்பக்ருஹங்களிலும் தினமும் சேவிக்கவும் வைத்தார். தானும் பிக்ஷைக்குச் செல்லும்பொழுது கூட அதன் பொருள்களை சிந்தித்தார்.
இவ்வாறு ஸ்ரீஆண்டாள் அருளிய பாசுரங்களுக்கு, இவ்வளவு ஏற்றம் இருந்தது என்றால் அவளும்கூட அந்தணக் குலத்தைச் சார்ந்தவள் என்பது தெளிவாகவே விளங்கும். அவற்றுள் விரசம் சிறிதும் கிடையாது என்பதும் விளங்கும்.
கட உபநிஷத்தில் உத்திஷ்டத -ஜாக்ரத -ப்ரபோத்த -நிஸாமயதா என்று
எழுந்து இருத்தல் -விழித்தல் -அறிவு பெறுதல் -பார்த்தல் -இவையும் திருப்பாவையில் உள்ளனவே
எழுந்து இருக்கும் பொழுது ஹரி நாம சங்கீர்த்தனம்
நடந்து செல்லும் பொழுது கேசவனைப் பாட வேண்டும்
சாப்பிடும் போது கோவிந்தனையும்
தூங்கும் போது மாதவனையும் -என்ற ஸாஸ்த்ர ஸ்ருதிகளை ஒட்டியே
ஹரி என்ற பேர் அரவம்
கேசவனைப் பாடவும்
கோவிந்தா உன் தன்னைப் பாடி
வங்கக்கடல் கடைந்த மாதவனை -என்று உண்டே –
ஸ்ரீ ரெங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீ ஸம் நவாமி சிரஸா யது சைல தீபம்--கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயணபுரம்
பையத் துயின்ற பரமன் அடி –வெள்ளத்தரவில் இங்கனே போந்து அருளி என்று கோயிலையும்
செல்வத் திருமாலால் -என்று திருமலையையும்
தேவாதி ராஜனை –புள்ளரையன் கோயில் -என்று பெருமாள் கோயிலையும்
ஆற்றப்படைத்தான் மகனே -என்று திருநாராயண புரத்தையும் மங்களா சாசனம் இங்கும் உண்டே
போற்றி ஆறு தடவை-மந்த்ராஸனம் இத்யாதிகள் விவஷிதம்
அறு சுவை என்றுமாம்
கார் மேனிச் செங்கண்
செங்கண் சிறுச் சிறிதே
செங்கண் திரு முகத்து —மும்முறை செங்கண் -மூன்று திருக்கண்கள் கொண்ட ந்ருஸிம்ஹன்
தபன இந்து அக்னி நயனம் -காமாஷிகாஷ்டகத்தில் தேசிகன் நரஸிம்ஹனை –
திருப்பாவையில் –திரு பத பிரயோகம் ஏழு முறை உண்டு
திருப்பாவையில் உள்ள பன்னிரு திரு நாமங்கள்
1- நாராயணன்
2-ஓங்கி உலகளந்த உத்தமன் -வாமனன்
3-தாமோதரன்
4-கேசவன் -கேசவனைப் பாடவும்
5- தேவாதி தேவன்
6-மாதவன்
7- வைகுந்தன்
8-முகில் வண்ணன்
9- பங்கயக்கண்ணன்
10-மணி வண்ணன்
11-கோவிந்தன்
12- நெடுமால் –-இவைகள்
மாயனை -நான்கு முறை
மாயனை மன்னு
மா மாயன் மாதவன்
மாயனைப்பாடு
அறை பறை மாயன் –என்று நான்கு வேதங்களின் ஸாரார்த்தம்
—————
திருப்பாவை அடிவரவில் விசேஷம்
1- மார்கழி வையத்துள் ஓங்கி நிற்கிறது –மார்க்க சீர்ஷமான ப்ரபத்தி பூ லோகத்தில் சிறந்து விளங்குகிறது
2- ஆழி மாயனைப் புள்ளும் கீசு கீசு –கிருஷ்ண கிருஷ்ண -என்று அழைக்கிறது
3- கீழ் வானம் வெள்ளென்றது –ஆச்சார்யனை அடைந்தது முதல் மோக்ஷம் அடையும் வரையுள்ள ப்ரபாத காலம் -அறிவுற்ற காலம்
4-தூமணி ஜீவன் நோற்று சுவர்க்கம் புகும்
5- கற்றுக்கறவை –ஆச்சார்யர் -கலைத்தது இளம் கன்றுக்கே -சிஷ்யனுக்கே
6- புள்ளின் வாய் கீண்டானை உங்கள் புழக்கடை தோட்டத்து -ஹ்ருதயம் -வாவியுள் காணலாம்
7-எல்லே -என்ன ஆச்சர்யம்
8-நாயகனாய் நின்றவன் அம்பரம் -ஹ்ருதய ஆகாஸம்
9-உந்து மத களிற்றன் -யானை போன்றவன் -அவனே குத்து விளக்கு -நிலையான விளக்கு
10-முப்பத்து மூவர் அமரர்க்கு முன் செல்ல ஏற்றவன் -எல்லா தேவர்களுக்கும் அரசன் –தேவாதி ராஜன்
11-அவனை –அங்கண் மா ஞாலத்து அரசர் -ஜீவர்கள் தங்களது –மாரி மலை முழைஞ்சில்-ஹ்ருதயத்தில் -அன்று த்யானித்தார்கள்
12-ஒருத்தி மாலே -நிகரற்ற ஆண்டாள் இடத்தில் மோஹம் அடைந்த திருமால்
13-கூடாரை -பாவங்களை –வெல்லும் சீர் உடையவன் அவன்
14- கறைவைகள் -ஆச்சார்யர்கள் பின் சென்று சிற்றம் சிறுகாலான -ப்ரபத்தியைச் செய்து
வங்கக்கடல் கடைந்த மாதவனால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
————–
பகவத் கீதையும் கோதா கீதையும்
1-அது உலகுக்குத் தந்தையான கிருஷ்ணனால் உபதேஸம் –
இது தாயால் உபதேஸம்
2-தேவாதி தேவனால் அது உபதேஸம்
அந்தத் தேவனுக்கும் ஆச்சார்ய பூதையான ஆண்டாளால் உபதேசம் இது
3- அர்ஜுனனை வியாஜமாக்கி உலகோர்க்கு அது உபதேசம் –
கிருஷ்ணனை வியாஜமாக்கி உலகோர்க்கு இது உபதேஸம்
4- ஷத்ரிய தர்மத்தை மறந்த அர்ஜுனனுக்கு அது
ஜகத் ரக்ஷண தர்மம் மறந்த கிருஷ்ணனுக்கு இது உபதேசம்
5- அந்த உபதேஸத்தால் பலர் மாண்டனர்
இதில் உபதேஸத்தால் அனைவரும் உஜ்ஜீவித்து திருவருள் பெற்றார்கள்
6-உபதேஸம் பெற்ற அர்ஜுனன் மறந்தான்
இங்கு யாருமே மறக்க வில்லை –சங்கமாக இருந்து அனுபவித்து பூ ஸூரர்கள் நிலத்தேவர்களாகிறார்கள்
7- சஹா –தோழனைக் குறித்து அது
தோழிகளைக் குறித்து இது -ஏல் ஏற்றுக்கொள் -ஓர் இதன் பொருளை சிந்தி -எம்பாவாய் -எனது தோழியே –
8- சரம ஸ்லோக உபதேசம் இறுதியில் அங்கு
இங்கு முதல் பாதத்தால் -மார்கழி -மார்க்க சீர்ஷம் -உயர்ந்த வழி என்று உபதேசம் –
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply