கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்த ராஜகோபுரத்தை கட்டியவனுக்காக ஆரவாமுதன் வேறொரு கடனை நிறைவேற்றினான். அது என்ன கடனென்று ராஜகோபுரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த கோயிலில் பணியாற்றும் பட்டாச்சார்யாரிடம் கேட்டபோது கண்களை மூடிக் கொண்டார்.
கோபுரத்து மாடங்களில் புறாக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தன. மெல்ல சிரித்து சொல்லத் தொடங்கினார். ‘‘ஆரவாமுதன். உச்சரிக்கும் போதே உள்ளத்தில் அமுதூறும் அழகான திருப்பெயர். ஆதலாலே ‘‘ஆரா அமுதன் எனும் நாமமே இப்படி மயக்குவிக்கிறதே.
தொண்டையில் சிக்கிக் கொண்ட பிரதிமையைப்போல் எனக்குள் மையம் கொண்டாயோ’’ என ஆழ்வார்கள் உன்மத்த அவஸ்தையில் திளைத்த திவ்யதேசமே, கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாள் கோயில். எல்லோரும் தீபாவளியன்று பெருமாளை கொண்டாடுவர்.
நரகாசுரனை வதம் செய்த நாளன்று நரக சதுர்த்தி என மாலவனாம் கிருஷ்ணனை ஆராதிப்பர்.
ஆனால், கும்பகோணம் சார்ங்கபாணி எனும் ஆராவமுதன் தானே மகனாய், தந்தையாய், பரம்பரையில் ஒருவனாக அமர்ந்து சிராத்தம் எனும் திதி செய்தான். அதுவும் ஊர் கூடி தீபாவளியில் களித்திருக்க உள்ளம் கனிந்து ஒரு அடியவனுக்காக திவச அன்னம் கொடுத்து ஆற்றுப்படுத்தினான்,
ஆரவாமுதன். அது யதேச்சையாக ஐப்பசியும், தீபாவளியும், அமாவாசையும் ஒன்றாக சங்கமிக்கும் நாளில் நிகழ்ந்தது.அது நாயக்கர்களின் காலம்.
தென் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
காஞ்சிக்கும், வந்தவாசிக்கும் அருகேயுள்ள நாவல்பாக்கம் எனும் தலத்தில் அய்யா குமாரதாதா தேசிகன் எனும் மகான் வளர்ந்து கொண்டிருந்தார். முக்காலமும் வேதத்தை ஓதினார். கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுத்தார். வேள்விகள் செய்து நாட்டின் வளத்தை பெருக்கினார்.
ஞானத் தாகத்தோடு அருகே நின்றவர்களுக்கு பாசுரங்களையே தீர்த்தமாகக் கொடுத்தார். தாகம் தணிந்து சாந்தமுற்றோர்களை நாலா திக்கும் அனுப்பினார். வைகுந்தனின் வாசத்தை விண்ணுலகம் வரை பரப்புங்கள் என பயணிக்க பாதை காட்டினார்.
‘‘கட்டிக்கவே துணியில்லை. இதுல கோபுரம் கட்டுவானா இவன்’’ தெருவோடு போகிறவன் சொன்னான்.அவன் காதில் விழவில்லை.
ஏன் நான் உங்களையே நினைத்தேன் என்று புரியாத உணர்வு அவன் முகத்தில் படர்ந்தது.
இதற்கெல்லாம் எனக்கு ஏதேனும் தகுதி உள்ளதா என உடல் விதிர்த்துப் போட்டது.
இரண்டடி நடுக்கத்தோடே கைகளைக் கட்டிக் கொண்டு தள்ளி நின்றான். ஞான சூரியன் விடாது உள் வரை ஊடுருவியது.
உயிரை உரசியது. நெடுமரம் தானாக விழுவதைபோல அவர் திருவடியில் தடேரென்று விழுந்தான். பாத தூளியை சிரசில் ஏற்றான்.
தலைதூக்கி வானம் பார்க்க, சிரித்துக் கொண்டே மகான் நகர்ந்தார். வயதான சிங்கமொன்று கம்பீரம் குறையாது நடப்பது போன்றிருந்தது
அவர் நடந்துபோவது.முதல் தரிசனம் லஷ்மி நாராயணனை முற்றிலும் மாற்றியிருந்தது.
முன்னிலும் அதீத தெளிவும், அமைதியும் அவனுக்குள் குடி கொண்டிருந்தது.
அவருக்கு அருகேயே சென்று கைங்கர்யங்களை செய்யும் பாக்கியத்தை பெற்றான். உள்ளுக்குள் கனிந்தான்.
வெகுநாட்களாக மனதுள் இருந்த தனது வேட்கையை வெளிவிட்டான். இடுப்பில் அங்கவஸ்திரத்தைக் கட்டிக் கொண்டு
வினயமாக வாய்பொத்தி குனிந்து அவரிடம் பேசத் தொடங்கினான்.
‘‘தேவரீர்… எனக்கு மாதா, பிதா எல்லாமும் ஆரவாமுதன்தான். நான் நினைவு தெரியாத நாள்லயே கும்பகோணத்துக்கு பெருமாள் அழைச்சுண்டதா சொல்றா. என் அம்மா, அப்பாக்கு ஒரு மாளிகை கட்டித் தருவேனோல்லியோ. அது மாதிரி எனக்கு எல்லாமுமா இருக்கற பெருமாளுக்கு ராஜகோபுரம் கட்டித்தரணும்ங்கிற ஆசை இருக்கு. பெருமாள்கிட்ட விண்ணப்பித்திண்டிருக்கேன். தேவரீரும் அருள் செய்யணும்’’ என்று அழுதான்.
வேறெதுவும் பேசத் தோன்றாது நமஸ்கரித்து நிமிர்ந்தான்.‘‘நான் போய் சொல்றேன். அவனும் உனக்கு எல்லாம் செய்வான்.
உனக்குப் பிறகும் உனக்காக செய்வான்’’ என்று அவன் பேசிய மொழியிலேயே பதிலுரைத்தார். ஆனந்தமாக சென்றான்.
இரண்டொரு நாளில் ஆராத துயர செய்தியொன்று இடியாக அவனுக்குள் இறங்கியது. தனது ஆச்சார்யனான அய்யா குமாரதாதா தேசிகன் வைகுந்தத்திற்கு ஏகிவிட்டார் என்பதே அது. திருவுடலை தரிசிக்கக்கூட மனதில் பலமில்லாது தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
பிரம்ம மேத சம்ஸ்காரங்கள் எனப்படும் மாபெரும் ரிஷிக்குரிய ஒரு மரியாதையுடன் நாயக்க மன்னர்கள் சூழ திருவுடலுக்குரிய கிரியைகள் செய்தனர்.
பத்து நாட்களும் விதம் விதமான தானங்களை விஜயராகவ நாயக்கர் அளித்தார். பதினோராவது நாள் விடியற்காலை இருளில் கோயிலின் ஒரு மூலையிலிருந்து விசும்பல் சத்தம் வெளிப்பட்டது. ஒரு தூணோரம் லஷ்மி நாராயணன் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.
‘சார்ங்கா… இப்போது என்னவர்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த ஆச்சார்யன் இல்லை.
குருநாதர் நான் சென்ற பிறகு என்று அன்று கூறினாரே. இந்த மூடனுக்கு புரியவில்லையே’ என கோயில் தூணில் சாய்ந்தபடி கண்மூடி கிடந்தான்.
‘‘குடந்தையிலுள்ளோர் லஷ்மி நாராயணன் என்ன பண்ணப் போறான்’’ என்ற அளவுக்கு குருவாகவும், சிஷ்யராகவும் பேசினார்கள்.
அந்த அளவு குருவை நெஞ்சு முழுதும் நினைத்துச் சுமந்தான். அவர் பரமபதம் பதித்த பதினோராவது நாள் சூரியன்
குருவின் கிருபை எனும் கிரணங்களை சுமந்து வியாபித்தான். நாயக்க மன்னன் பரிவாரங்களோடு வந்தான்.
ஒரு வயதான அந்தணர் லஷ்மி நாராயணனை சுட்டிக்காட்டி பேசினார். மன்னன் ஆச்சரியத்தில் விழி விரித்தார்.
விஜயராகவ நாயக்கர் லஷ்மி நாராயணனுக்கு அருகே சென்றார். அவனின் தோள் தொட்டு ‘‘என்ன பாக்கியம் செய்திருக்கிறாய். உன்னிடம் நிறைய பேசியிருப்பாரே. உன்னிடம் என்ன கேட்டார்.’’‘‘அவருக்கென்று கேட்க எதுவுமில்லாத நிலையில் இருந்தார்.
ஏதேனும் வேண்டுமெனில் நாம்தான் கேட்க வேண்டும். நான் கேட்டேன் மன்னா…’’
‘‘என்ன கேட்டாய்’’ தன்னையேகூட கொடுக்கும் அளவுக்கு அருகே சென்றார்.‘‘ராஜகோபுரம் கட்டித் தர அருள் புரியவேணும் என வேண்டிக் கொண்டிருந்தேன்’’.நாயக்கருக்கு ‘சுருக்’ என்றிருந்தது. நான் செய்ய வேண்டியதை இவன் ஆசைப்பட்டிருக்கிறானே.
ஆழ யோசித்தபடி குனிந்திருந்த மன்னர் நிமிர்ந்தார். கண்களில் குளமாக நீர் தேங்கி நின்றது. நாராயணா… என விளித்தார். கண்ணீர் கன்னம் வழிந்தது.
‘‘நீயே வானம் தொடும் அளவுக்கு கோபுரம் கட்டு. இந்தா… என சகல தானங்களையும், பொற்கட்டியுமாக கொடுத்தான். குருவருளும், குடந்தை ஆரவாமுதனின் அருளும் சேர்ந்து கொட்டியது. கோபுரமாக உயர்ந்தது. பதினோராவது நாள் கிரியையான ஏகோதிஷ்டகம் என்றழைக்கப்படும் நாளன்று கொடுக்கப்பட்ட தானத்தால் நிமிர்ந்த ராஜகோபுரமாக இருந்ததால் பதினோரு நிலைகள் இடம் பெற்றிருந்தன.
லஷ்மி நாராயணர் வயோதிகரானார். சார்ங்கணின் கைங்கர்யத்தில் இளைஞனைப்போல இருந்தார்.
குடந்தை மக்கள் தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தூணோரமாக அமர்ந்தார். கண் மூடினார்.
காம்பினின்று உதிரும் மலர்போல உயிர் தனியே பிரிந்தது. ஊர் மக்கள் தகனக் கிரியைகளை செய்தனர்.
திதி எப்படி கொடுப்பது என்று யோசித்தனர். அப்படியே மறந்தும் போயினர். ஆனால், சார்ங்கபாணி எழுந்து அமர்ந்தான்.
ஆத்ம சக்தியாக சூட்சுமத்திற்குள் உறைந்திருந்த உயிர் திரட்சியை கண்டார். அது சரியாக பயணித்து அதற்குரிய உலகத்திற்குள் செல்ல வேண்டுமே என சாத்திரப் பார்வையில் பார்த்தார். மனித உருவில் கோயிலில் அமர்ந்தார்.
கைகளில் தர்ப்பைப்புல் ஏந்தி, பஞ்சபாத்திர உத்தரணியில் தீர்த்தமும், எள்ளும் எடுத்துக் கொடுத்து திவச அன்னங்கள் சமைத்து பிண்டம் வைத்து திதி கொடுத்தார். இவை யாவும் எவரும் கவனியாமலேயே நிகழ்ந்தன.
மறுநாள் கோயிலின் கருவறையை திறந்த பட்டாச்சார்யார் அதிர்ச்சியடைந்தார்.
உற்சவ மூர்த்தியான பெருமாள் ஈர வஸ்திரத்துடன், அபர காரியங்களின் போது பூணுலை வலமிருந்து இடம் அணிவது போல அணிந்து,
ஆங்காங்கு தர்ப்பைப்புல்லும், எள்ளும் இறைந்திருந்தன. ஆபரணங்கள் எல்லாமும் சிதறிக்கிடந்தது.
ஒரு திதி செய்தவர்களுடைய முகம் எந்த அலங்காரமுமில்லாமல் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது.
பட்டாச்சார்யார் மயங்கினார். சுற்றியுள்ளோர் உடல் விதிர்த்தபடி நடுங்கி நின்றனர். அசரீரி ஒலித்தது.
‘‘லட்சுமி நாராயணான என் பக்தனுக்கு இனி நானே வருடா வருடா திதி கொடுப்பேன். சிராத்தம் செய்து வைப்பேன்.
திவச அன்னங்கள் கொடுத்து பசியாறச் செய்வேன். ஒவ்வொரு ஐப்பசி அமாவாசையன்றும் இது போன்று நிகழும்’’ என்றார்.
தொடர்ந்து இதை செய்ய வேண்டுமென அருளாணையிட்டார்.
நீத்தாருக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லையென எண்ண வேண்டாம். என் பக்தன் என்னோடு நெருங்கிய ஸ்நேகம் கொண்டவன்.
பூவுலகை விட்டு மறைந்தாலும், வைகுந்தம் வரையில் அவனைதாங்கிச் செல்வேன் என உறுதியோடு சொன்ன தலம் குடந்தை.
சகலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பெருமாளின் கருணையை நினைத்து உருகினர். இன்றும் தீபாவளி அமாவாசையன்றும்,
ஐப்பசி மாதம் அமாவாசை இணைந்து வரும் திதியில் சார்ங்கபாணி பெருமாள் சிராத்தம் கொடுக்கிறார்.
கோயிலுக்குள்ளேயே கோமளவல்லித் தாயார் சந்நதிக்கு எதிரேயே குமாரதாதா தேசிகன் தனிச் சந்நதியில் குடி கொண்டிருக்கிறார்’’ என்று உணர்ச்சி பாவத்தோடு கண்களில் நீர் துளிர்க்க சொல்ல, ராஜகோபுரத்துப் புறாக்கள் ஜிவ்வென்று கூட்டமாக சிறகடித்து மேலே கிளம்பியது.
திதி கொடுக்கப்படும் தேசிகர் சந்நதிற்கு அழைத்துச் சென்றார்.‘‘இங்கதான் திதி கொடுக்கறது வழக்கம்.
இப்போ நினைச்சாலும் அந்த சரித்ரம் உள்ளத்தை உருக்கும். பாராயணத்திற்குரிய ஒரு சரித்ரம்னுதான் நினைக்கிறேன்.
ஏன்னா… கேட்கறச்சேயே பக்தி திடப்படறது. அந்த காலத்துல இதை கதையா சொல்றச்சே கதறி அழுதவா உண்டு.
பெருமாளுக்கு சிராத்தம் செய்யறச்சே யாரும் பார்க்க முடியாது. கோயிலையே சாத்திடுவோம்.
நாங்க மட்டும் மூணு நாலு பிராமணர்களா தேசிகன் சந்நதிகிட்ட உட்கார்ந்துண்டு பண்ணுவோம்.
பெருமாள் நாமத்தை மட்டும் சொல்லி சிராத்தம் செய்வோம். திவச சாப்பாடுதான் அன்னிக்கு வைப்போம்.
சாதாரண மனுஷாளுக்கு சொல்ற மந்த்ரங்கள் கிடையாது. ஏன்னா… பண்றவரே பெருமாளா இருக்கறச்சே அவர் திருநாமம்தான் முக்கியம்.
எல்லாத்தையும் முடிச்சுட்டு கோயிலை திறப்போம். கிட்டத்தட்ட நானூத்தி அம்பது வருஷத்துக்கும் மேல இது நடந்துண்டு வரது.
சிராத்தத்தை தான் பண்றேங்கற விஷயத்தை தவிர, எங்கேயோ இருந்த பிஞ்சு பக்தனுக்காக, அதையும் தாண்டி குருவை பிடிச்சுண்டா போதும் என்னை அடைஞ்சுடலாம்கறதைதான் இந்த கதை சொல்றது’’ என முத்தாய்ப்போடு முடித்தபோது தேசிகர் சந்நதியில்
காய்ந்திருந்த தர்ப்பைப் புல்லிலும் பச்சை வாசனை கூடித்தான் இருந்தது.
3-ஸ்ரீ நம்பெருமாள் கண்டு அருளும் மா முனிகள் திரு நாடு அலங்கரித்த மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசி திதி
தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில்,
மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார்.
மாசில்லாத மணவாள மாமுனிகள் மாசி கிருஷ்ணபக்ஷம் துவாதசியன்று திருநாட்டுக்கு எழுந்தருளினார்.
அவர் வசித்து வந்த திருமலையாழ்வார் கூடம் நிரம்பி வழிந்தது. உத்திர வீதிகளெங்கும் நெற்றியில் பளீரென
திருமண், திருச்சூர்ணம் துலங்க ஸ்ரீவைஷ்ணவர்கள் அலைப் பொங்கியது.
ஜீயர் நாயனார் மன்னுலகு சிறக்க வந்த மாமுனிகளின் சரம கைங்கர்யத்திற்கு பொறுப்பேற்கின்றார்.
சீடர்கள் குழாமுடன் திருக்காவேரி எழுந்தருளி நீராடி பெரிய திருமஞ்சனக் குடத்தில் கங்கையிற் புனிதமான
காவிரியின் நன்னீர் சேந்தி சகலவிதமான மங்கள வாத்யங்கள் முழங்க, அலங்காரமாக திருமஞ்சன குடத்தினைக் கொண்டு வருகின்றனர்.
ஜீயரின் விமல சரம திருமேனியினை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப் பண்ணுகின்றனர்.
நான்கு உத்திரவீதிகளிலும் அலைப்போன்று ஆர்ப்பரித்து நின்ற ஸ்ரீவைணவர்கள் புருஷசூக்தத்தினை
தழுதழுத்தக் குரலுடன் பாராயணம் செய்கின்றனர்.
அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப வானம் மூட்டமிட்டு கதிரவன் சற்றே மறைந்து மெல்லிதாக பூமாரி பொழிகின்றது.
திருமஞ்சனம் முடிந்து திருவொற்றுவாடையினால் திருமேனியை ஒரு குழந்தை குளித்து முடித்தபின்பு
துவட்டுவது போன்று கவனமாக ஒத்தி ஒத்தி துவட்டுகின்றனர்.
திருப்பரிவட்டம் சாற்றுகின்றனர்.
த்வாதசோர்த்வ புண்டரங்களை திருமேனியில் சாற்றுகின்றனர். காந்தி வீசும் விசாலமான நெற்றியில்
விசாலமான அத்திருமண்காப்பும். ஸ்ரீசூர்ணமும் தேஜஸ்ஸோடு விளங்கியது.
ஜீயரை திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்தருளப் பண்ணுகின்றனர். அனைத்து ஸ்ரீவைணவர்களும்
‘எம்பெருமானாரை சேவியாத குறையெல்லாம் இவரையடைந்து தீர்ந்தோம் நாம்! இப்போது இவ்வவதாரமும் தீர்த்தம் பிரஸாதித்துப் போவதே!”
என்று மிகவும் துக்கித்து கண்ணீர் மல்க கதறுகின்றனர்.
ஒவ்வொருவராக அவர்தம் திருவடியினை தம் தம் சிரஸ்ஸிலும் நெஞ்சிலும் ஒற்றிக் கொள்கின்றனர்.
‘அத்தன் மணவாள யோகி அடியிணையைச் சித்தப் பெருங்கோயில் கொண்டருளி” என்றபடி
அவரது திவ்யமங்கள சொரூபத்தினை தம் தம் திருவுள்ளங்களில் கடைசிமுறையாக தேக்கிக் கொண்டு
வைத்தக் கண் வாங்கதே விமல சரம விக்ரஹ அனுபவத்திலே விக்கித்தவாறு இருக்கின்றனர்.
உத்தமநம்பி மூலமாக அரங்கன், ‘தாம் அரைச்சிவக்கச் சாற்றிக் கழித்த பீதகவாடையான சிகப்புப் பட்டினையும்,
அவன் திருமார்பணிந்த வனமாலையையும்’ ஒரு பொற் தட்டிலே வைத்து கோயில் மரியாதையுடனே,
சகல வாத்ய கோஷங்களுடனே, சகல பரிகரர்களையும் உடன் அனுப்பி, மடத்து வாசலுக்கு அனுப்பி,
கோயிலின் மூலஸ்தானத்தில் தான் மட்டும் தனித்திருந்து துக்கித்து அதனால் அவனது திருமேனி கறுத்து வாடியபடியிருக்கின்றான்.
மாமுனிகளின் மடத்து வாசலில் ஜீயர் நாயனார் உட்பட அனைத்து முதலிகளும் அரங்கனிடமிருந்து வந்த
கோயில் மரியாதையினை எதிர்கொண்டு, சாஷ்டாங்கமாக வீழ்ந்துசேவித்து அங்கீகரித்து
‘உடுத்து களைந்த பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்துழாய் மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டரான
ஜீயருக்கு அவற்றைச் சூட்டி அலங்கரிக்கின்றனர்.
கோயிலார்கள் அனைவருமே சோகார்த்தராய் ஜீயரை சேவிக்கின்றனர்.
திருச்சூர்ண பரிபாலனம் நடக்கின்றது.
பின்பு எண்ணெய் சுண்ணங்கொண்டாடுகின்றனர். (சிறிது எண்ணெய் அவரது சிரஸ்ஸில் தேய்த்து, தேய்த்த கையிலுள்ள
மீதமுள்ள நல்லெண்ணையை கொப்பரையிலுள்ள எண்ணெயோடு கலந்து அனைவருக்கும் பிரஸாதிப்பது)
நறுமணம் வீசும் அனைத்து ஜாதி புஷ்பங்களினாலும் பல்லக்கை அலங்கரித்து அதனில் அவரது திருமேனி ஏறியருளப் பண்ணுகின்றனர்.
அரங்கனது ஸ்ரீமாந்தாங்குவோர் அனைவரும் காவிவண்ண ப்ரபன்னபாகையுடன் கவனமுடன் பல்லக்கினை எழுந்தருளப் பண்ணுகின்றனர்.
சத்ர, சாமர, தாள வ்ருந்தாதிகள் பணிமாற, மத்தளங்கள், சங்க, காஹள பேரிகள் தொடக்கமான ஸகல வாத்யங்களும் ஒரு சேர முழங்க,
பொய்யில்லாத பெரிய ஜீயர் – கர்வம் அறியாத கர்மவீரன் – சாத்வீகமே உருவெடுத்த சத்தியன் –
அரங்கனே அடியவனாய் வந்தும் அகங்காரம் சற்றும் கொள்ளாத அழகிய மணவாளன் – கைங்கர்யத்திற்காகவென்ற
சம்ஸாரம் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட ஸௌம்ய ஜாமாத்ரு முனி, பூவுலகு நீங்கி புறப்படுகின்றார்.
அவரது விமல சரம திருமேனி வருகையையொட்டி உத்திர வீதி, சித்திரை வீதியெங்கும் கொடிகள் அழகாக
ஒரு சீரான க்ரமத்தில் நாட்டப்பட்டு நடுநடுவே மகரதோரணம் போன்று தோரணங்கள் கட்டப்பட்டு, வீதியெங்கும் நீர் தெளித்து,
சுத்தமாக மொழுகி, கோலமிடப்பட்டு, நடுநடுவே புஷ்பங்களை சொரிந்து, அங்காங்கு கமுகு, குலையுடன் கூடிய வாழைமரங்கள் நட்டு,
மஹாஞானியின் கடைசி வருகைக்காகக் காத்திருந்தது.
அடியார்கள் சூழ அரங்கநகரே பிரிவாற்றமையினால் அழுதது. மாமுனிகளின் புஷ்பகவிமானம் ஊர்ந்தது.
பின்னால் ஸ்ரீவைணவர்கள் அனைவரும் கையில் கரும்புடன் இராமானுஜ நூற்றந்தாதி முதலாக அனுசந்திக்கின்றனர்.
ஜீயரின் திருமேனி முன் பொரியும் புஷ்பமும் சிதறுகின்றது. ‘தர்ஸநத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்;”
என்று ஒற்றை திருச்சின்னம் பணிமாற, ஸூமங்கலிகள் அனைவரும் கையில் மங்கள தீபமேந்தி நிற்க,
எட்டு திருவீதிகளிலும் மாமுனிகள் கடைசியாக அனைவருக்கும் ஸேவை தந்து வலம் வருகின்றார்.
வடக்கு வாசல் வழியே தவராசன் படுகையிலே ‘மகிழாதிகேசவன் தன்னடிக் கீழாக” என்கிறபடியே
அங்குள்ள ஆதிகேசவ பெருமாளின் திருவடிக் கீழாக தென்பாலில், ஆளவந்தார், இராமானுஜர் ஆகியோருக்கு
செய்த கிரமம் போன்று யதி ஸம்ஸ்கார விதி யடங்க திருப்பள்ளிப்படுத்துகின்றனர்.
பூமிதேவியானவள் ஜனகனின் திருமகளான சீதையை தம் மடியிலே வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற்போன்று,
மாமுனிகளான இவரையும் தம் மண்ணால் மூடி தம் மடி மீது கிடத்தி அணைக்கின்றாள்.
சீயரெழுந்தருளி விட்டார் செகமுழுதும்
போயிருள் மீளப் புகுந்ததே தீய
வினைநைய வெம்புலனா வீடழிந்து மாய்வோ
ரனைவார்க்குமேதோ வரண்?
என்று சிஷ்யர்கள் அனைவரும் மிகவும் துக்கித்து, தங்களுடைய திருமுடியினை விளக்குவித்துக் (தலைச்சவரம்) கொண்டு,
வடதிருக்காவிரியில் நீராடி மீண்டும் மடத்துக்கு எழுந்தருளுகின்றனர்.
நம்மாழ்வார் மோட்சம் முடிந்து நம்பெருமாள் ஆஸ்தானம் அடைந்த பின் வெறிச்சோடும் திருமாமணி மண்டபம் போன்று,
ஜீயரின்றி வெறித்துப் போய் கிடந்த திருமலையாழ்வார் கூடம் கண்டு மீண்டும் அழுகின்றனர்.
நானெதென்னும் நரகத்திடையழுந்திப்
போனவிந்த காலமெல்லாம் போதாதோ? – கானமலர்
மாலையணிதிண்டோன் மணவாள மாமுனியே
சால நைந்தேன் உன் பாதம் தா!–என்றும்
புண்ணாராக்கை தன்னுள் புக்குழலும் தீவினையேன்
தண்ணாருமென் கமலத்தாளணைவதென்று கொலோ
பண்ணரு நால்வேதம் பயின்றுய்யும் பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மாமுனியே–என்றும்
மண்ணுலகம் சிறக்க வந்த மாமுனிகளை நினைத்து நினைத்து திருமிடறு தழுதழுப்ப விண்ணப்பஞ்செய்து,
தமக்குத் தானே ஒருவாறு தேறி ஜீயரின் திருவத்யனன கைங்கர்யத்தினைப் பெருக்கச் செய்கின்றனர்.
தீர்த்த பிரஸாதங்களை ஸ்வீகரித்து ஜீயர் அவரவர்க்கிட்ட பணி செய்ய திரும்புகின்றனர் அனைவரும்.
பெரியபெருமாள், ஜீயர் நாயனாருக்கு தீர்த்தம் பிரஸாதம் திருப்பரிவட்டம் ஸ்ரீசடகோபம் எல்லாம் சாதித்து,
ஜீயர் நாயனாரை ”ஸ்ரீரங்கராஜரையும் மடத்தையும் நோக்கிக்கொண்டு போரும்” என்று நியமிக்கின்றார்.
இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாந அந்தர்பூதரெல்லோரும் சற்றே ஆறுதலடைந்தவர்களாய், ஜீயர் நாயனாரை
பெரிய ஜீயரைக் கண்டாற் போல கண்டு அநுவர்த்தித்து, ஆஸ்ரயித்து ஸேவித்துக் கொண்டிருந்தார்கள்.
———————-
ஜயது யஶஸாதுங்கம் ரங்கம் ஜகத் த்ரய மங்களம்
ஜயது ஸுசிரம் தஸ்மிந் பூமா ரமாமணி பூஷணம்
வரத குருணா ஸார்த்தம் தஸ்மை ஶுபாந்யபி வர்த்தயந்
வரவரமுநி: ஸ்ரீமாந் ராமாநுஜோ ஜயதுக்ஷிதௌ
பெருமையினால் உயர்ந்து மூவுலகுக்கும் மங்களாவஹமான ஸ்ரீ திருவரங்கமானது பெருமையுற்று விளங்க வேணும்;
அத்திருப்பதியிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீ கௌஸ்துபத்தையும் திவ்யாபரணமாக உடைய ஸ்ரீ எம்பெருமான்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்க வேண்டும்;
அந்த ஸ்ரீ ரங்கநாதனுக்காக ஸ்ரீ வரதகுருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும் மேலும் உண்டாக்குபவரான
ஸ்ரீ ராமாநுஜரின் அபராவதாரரான ஸ்ரீ மணவாளமாமுனிகள் இப்புவிதனில் விளங்க வேண்டும்.
“சேற்றுக் கமல வயல் சூழரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப் பூதலத்தே
மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே ”
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த
மனனுலகம் வாழ மணவாள மா முனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.
Leave a Reply