ஸ்ரீ பெரிய திருவடி பிரபாவம் /ஸ்ரீ திருவரங்கன் ஸ்ரீ நம்மாழ்வார் உலா —

ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ பெரிய திருவடிக்குத் தனி ஏற்றம்.
இங்கு கோவில் மதில் மேல் வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும்
சுவாதி நட்சித்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கும்
அந்த வடகிழக்கு மூலையில் தனியாக கருடருக்கு என சந்நிதி உள்ளது
அங்கே கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன

முற்காலங்களில் நித்யமும் அந்த தீபஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம்
இக்காலத்தில் எப்போதாவது தான் ஏற்றுகிறார்கள்
சுவாதி நட்சத்திரம் அன்று கண்டிப்பாக ஏற்றுவார்கள்

இந்த வடகிழக்கு மூலையில் உள்ள கருடனுக்கு தினமும் ஆறு காலப் பூஜையும் நடக்கிறது

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அவதார உற்சவம்
இங்கு 10 நாட்கள் விமர்சையாக நடக்கும்

இங்குள்ள கல்மண்டபத்தில் அந்த
10 நாட்களும் ஶ்ரீவைஷ்ணவ திவ்ய பிரபந்த சேவாகால கோஷ்டி நடைபெறும்

அந்த வேளைகளில் பக்கத்துக் கிராமங்களிலிருந்து ஆண்பெண் என பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள்
தீவீரமாக விரதமிருந்து இந்த கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்
அதுமட்டுமல்லாமல் தினமும் பலரும் வந்து நேர்த்திகடனாக சிதறு தேங்காய் உடைக்கின்றனர்
அதாவது சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனகளை நிறைவேற்றும் பக்தர்களின் கோரிக்கையை
நிறைவேற்றும் வரப்பிரசாதி இந்த கருடன் என்கின்றனர்
(மக்கள் உடைத்து சிதறும் தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்காகவே
தனியாக பணியாட்களும் ஒரு தனி கொட்டகையும் ஊரில் உள்ளது)

அது சரி மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இந்த கோவில் கருடனுக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்?

பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் முகமதியர்களின் படையெடுப்பின் போது
திருக்குருகூர் நம்மாழ்வாரைக் காப்பாற்ற அக்கோவிலின் அர்ச்சகர்கள்
ஆழ்வார் விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கு பயணம் சென்றனர்

அந்த சமயத்தில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணமல் போக ஒவ்வொரு முறையும்
கருடன் பறவையாக வந்து ஆழ்வார் விக்ரஹத்தை காட்டிக் கொடுத்தாராம்

அதாவது

அர்சகர்கள் விக்ரஹத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது கேரளாவில் திருக்கணாம்பி
இன்றய கோழிக்கோடு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து வந்தனர்

ஶ்ரீரங்கததின் மீது முஸ்லீம் மன்னன் ஊலுக்கான் நம் சோ சொல்லும் முகமது பின் துக்ளக் என்னும் மன்னன் படையெடுத்து வந்ததால்
ஶ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளையும் உபய நாச்சிமார் களையும் காப்பாற்ற வேண்டி
பிள்ளைலோகாசார்யர் என்னும் ஶ்ரீவைஷ்ணவர் எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கி வந்தார்

அப்படி வந்த சில காலங்களிலேயே ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தினார்

அதனால் அவருடைய சீடர்கள் நம்பெருமாளையும் நாச்சியார்களையும் எடுத்துக்கொண்டு
ஊர் ஊராக செல்லும் வழியில் கேரளாவின் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்

இந்த இடத்தில் தான் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு தம் வட்ட மனையையும் முத்துச் சட்டையையும் அளித்தார்

இரண்டு கோவில் மனிதர்களும் மீண்டும் தங்களது விக்ரங்களை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில்
திருக்குருகூர அர்சகர்கள் இனி பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி நம்மாழ்வாரை
கேரளாவின் முத்திரிப்பூ மலை அடிவாரத்தில் ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் பத்திரப்படுத்தி
வைத்துவிட்டுத் திருநகரிக்கு திரும்பி விட்டனர்

போர் மேகம் மறைந்த பின் ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச்
சென்ற அந்த அர்சகர்களுக்கு ஆழ்வாரை மறைத்து வைத்திருந்த இடம் தெரியாமல் தவித்தனர்

அப்போதும் ஆழ்வார் மறைந்திருக்கும் இடத்தின் அருகிலிருந்து ஒரு கருடபட்சி கூவி அர்சகர்களுக்கு காட்டிக்கொடுத்தது

அர்சகர்கள் மிகுந்த சிரம ப்பட்டு மீண்டும் ஆழ்வாரை எடுத்து கொண்டு ஆழ்வாரின் திருநகரிக்கு வந்தனர்

இதனிடையே ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து உரு மாறி ஒரே வனமாகி விட்டது
அங்கு பல விதமரங்களும் அதனுடன் பல புளிய மரங்களும் வளர்ந்து விட்டன
ஆழ்வார் 16 ஆண்டுகள் தவம் இருந்த புளியமரம் எது என்று திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் அவர்களது
சிஷ்யர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை

அந்த நேரத்திலும் ஒரு கருடபட்சி வந்துதான் உறங்காபுளியை வனத்தில் வட்டமிட்டு காட்டிக் கொடுத்தது
அதன் மூலம் வனத்தில் இருந்த கோவிலையும் கண்டுபிடித்து கோவிலை புணர்நிர்மாணம் செய்து
நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து மறுபடியும் முறைப்படி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

கருடாழ்வார் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்ததால்
அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று
இவ்வூரில் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது

நம்மாழ்வார் திருநட்சித்திரம்-வைகாசி விசாக உற்சவத்தின் ஐந்தாம் திருநாள்
அன்று இரவு நவ திருப்பதி திவ்ய தேசங்களின் எம்பெருமான்கள் அவரவர் கருட வாகனத்தில் எழுந்தருள்வது
கண்கொள்ளாத தரிசனம் ஆகும்.
நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும்,
அவரது உத்தம சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலியிலும் எழுந்தருள்வார்கள்.

திருக்குருகூரும் திருப்பதியை போல் ஒரு புராதனமான வராக ஷேத்திரம்
இந்த ஊரில் ஆதியில் வந்து கடாட்சித்தவர் லட்சுமி வராகரான ஞானப்பிரான் ஆவார்.
அவருக்குப் பின்னால் இவ்வூருக்கு வந்தவர் தான் ஆதிநாதப் பெருமாள் (பொலிந்து நின்ற பிரான்)
திருமலை போல பின்னால் வந்த ஆதிநாதபெருமாள் இவ்வூரில் பிரபலமடைந்தார்
எனவே இக்கோவில் ஆதிநாதப் பெருமாள்/ஆழ்வார் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கோவிலில் ஆதிநாதருக்கு வலப்புறம் ஞானப்பிரான் சந்நிதி உள்ளது

ஞானப்பிரான் சந்நிதிக்கு எதிரில் உள்ள கோவிலின் சந்நிதிக் கருடன் நான்கு கரங்களுடன் இருக்கிறார்
இரண்டு கரங்களில் சங்கு சக்கரங்களை ஏந்தியவாறும் இடது பக்க கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும்
வலது கீழ்க்கரத்தில் நாகனை ஏந்தியவாரும் காட்சி தருகிறார்

பொதுவாக அனைத்து திவ்யதேச மற்றும் உள்ள பெருமாள் கோவில்களிலும் கருடன்
இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செய்தவாறு இருப்பார்
ஒரு சில கோவில்களில் கரங்களில் சங்கு சக்கரம் தரித்திருந்தாலும் பொதுவாக
இரு கரங்களையும் அஞ்சலி செயத்வாறே தான் பெருமாள் கொவில்களில் இருப்பார்
இந்த ஒரு கோவிலில் மட்டுமே இவ்வாறு நான்கு கரத்தானாக காட்சி தந்துள்ளார்
காரணம்:-

பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்க கடலுக்குள் செல்லும் முன் தம் சங்குசக்கரங்களை
கருடனிடம் கொடுத்ததால் கருடன் அவற்றை ஏந்திக்கொண்டு இங்கு வராகப்பெருமாள் முன் நிற்கிறார் என்பர்
நமக்கு சந்தர்பம் கிடைத்தால் ஒரு முறை சுவாதி யன்று ஆழ்வார்திருநகரி சென்று கருடனை ஆழ்வாரை
உறங்காபுளியை ஆதிநாதரை ஞானப்பிரானை சேவித்து ஆசிகளைப் பெறுவோம்

———–

கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.
கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம்.
அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.
நவ நாகங்களில் ஆதிசேஷனை இடது கால் நகத்திலும்,
குளிகனை கழுத்தின் பின்புறத்திலும்,
வாசுகியை பூணூலாகவும்,
தட்சகனை இடுப்பிலும்,
பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை இரண்டு காதணிகளாகவும்,
சங்கசூடனை தலைமுடியிலும் அணிந்திருப்பார் கருடன்.

ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் இவர் தான்.
பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து
பாற்கடலில் வைத்தவரும் கருடன் தான்.
கருடனே பெருமாளுக்கு ஆசனம், கருடனே பெருமாளுக்கு வாகனம்,
அதுவும் தவிர அவரே தான் பெருமாளுக்கு வெற்றிக் கொடியும் ஆவார்.
கோவில் நுழைவாயிலுக்குள் சென்றவுடன் த்வஜ ஸ்தம்பம் உள்ளதே அது தான் கருடக் கொடி

வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறார்.
பறவைகளில் நான் கருடனாக உள்ளேன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.
அந்த நாளே கருட பஞ்சமி என்று கொண்டாடப் படுகிறது.
சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.
பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான்.
தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கஸ்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன்.
அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.
ஒரு முறை கருடன் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவத்தில் இருந்த வாலகில்ய முனிவர்களை காப்பாற்றியதால்,
எதையும் எளிதில் சுமப்பவன் என்ற பொருளில் கருடன் எனப் பெயர் சூட்டினர்.

ஸ்ரீ கருட பகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.

கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார்.
சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள்.
இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு.
எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன்.
இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும்,
கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன்.
தன் கையில் அமிர்த கலசம் கிடைத்தும் சுய நலத்திற்காக பயன்படுத்தாமல்,
தன் தாயை மட்டும் விடுவித்து மீண்டும் தேவர்களிடம் ஒப்படைத்தவர் கருடன்.

கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-

1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி – மான் போன்ற பார்வை
3.தாரா – குருக்குப்பார்வை
4.மதுரா – அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ – பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா – கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா – வெற்றியைத் தரும் பார்வை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது
வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு.
இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம்
கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் ஸ்தானம் ஆகிறது.

கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன்
தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும்
திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாகவும் புராணம் கூறுகிறது.

தாயை விடுவிக்க அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன்,
அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார்.
அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக் கொண்டு
வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும்,
கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல
மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.

பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில்
கருடாழ்வார் சர்ப்பத்துடனும்,அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளும் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும்,
கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் தீர்க்கும் கல் கருட பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
இவர் தான் பெருமாளுக்கும் தாயாருக்கும் இங்கு திருமணம் நடத்தி வைத்தார்.
இத்தலத்தில் கல் கருடன் சாளக்கிராம சிலை வடிவில் பெருமானின் மூலஸ்தானத்துக்குக் கீழ் உள்ள
மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
உற்சவ காலங்களில் கல் கருடன் வாகன மண்டபத்திற்கு வரும் போது கருடனைச் சுமப்பவர் நால்வர் மட்டுமே.
வெளியில் வந்தவுடன் எடை கூடி 16 பேர் தூக்குவார்களாம்.
சிறிது தொலைவு சென்ற பிறகு 32 பேர் கருடனை சுமப்பார்களாம்.
கோயில் வாயிலை அடைந்ததும் 64 பேர் சுமப்பார்களாம். பெருமானைத் தாங்கி வரும் கல் கருடனுக்கு வியர்த்துக் கொட்ட,
வஸ்திரங்கள் அனைத்தும் வியர்வையால் நனைத்து விடும்.
கருட சேவை முடிந்து கல் கருடன் தனது சன்னதிக்கு வரும் போது படிப்படியாக கருடனின் எடை குறைந்து விடும்.
இந்த கல் கருடனுக்கு 7 அல்லது 11 வியாழக்கிழமைகள் 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட
கடுமையான சர்ப்ப தோசங்கள் நிவர்த்தியாகும். கனவுகளில் சர்ப்பங்கள் வருவது நிற்கும்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து
உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு டி.எஸ்.ஆர். பெரியதெருவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்
அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இது ஒரு கண்கொள்ளா காட்சியாகும்.
இதைமுன்னிட்டு
சாரங்கபாணிசுவாமி,
சக்கரபாணிசுவாமி,
ராமசுவாமி,
ஆதிவராகசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
பாட்ரசாரியார் தெரு கிருஷ்ணசுவாமி,
வெங்கடராயர் அக்ரகாரம் பட்டாபிராமசுவாமி,
சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி,
மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி,
புளியஞ்சேரி வேணுகோபால்சுவாமி,
கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி,
மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி,
அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி ஆகிய கோவில்களின் உற்சவ பெருமாள்கள்
கருட வாகனத்தில் எழுந்தருள
நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளி 12 கருட சேவை நடைபெறும்.

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் மயிலாடுதுறை மாவட்டம்,
சீர்காழி அடுத்துள்ள நாங்கூர் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 11 கருட சேவை
உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும்
ஆண்டுக்கொரு முறை தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

கருட காயத்ரி மந்திரம்:

‘ஓம் தத் புருஷாய வித்மஹே ஸூவர்ண பட்சாய தீமஹி தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம்.
கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார்.

இவருக்குரிய இன்னொரு ஸ்லோகம்:

அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ண தேஹம்
ஸகல விபுத வந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:

அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே,
இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.

———–

ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம்
திருஆணை நின் ஆணை கண்டாய் போல்
பக்திசா நியதா வீர திருவடி மேல் ஆணை
உம்முடைய அருளாலும் பெருமாள் அருளாலும் கடலைத் தாண்டுவேன் -கார்ய சித்திக்காக ஜாம்பவான் மேல் ஆணை
பல்லாண்டு கைங்கர்ய சித்திக்காக ஜடாயு -ஆயுஷ்மன் -மேல் ஆணை
தொழும் காதல் யானை -கஜேந்திரன் ஆணை

———–

1323-1371-48 வருஷம் ஸ்ரீ ரெங்கநாதன் உலா
பரிகாபி வருஷம் வைகாசி -17 -திருவரங்கம் திரும்பி வந்த நாள் -கோபணார்யர் -விஜயநகர செய்து அருளிய கைங்கர்யம்
1323-மார்ச் ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து
1323 ஏப்ரல் முதல் ஜூலை வரை மதுரை யானைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடி
1323-1325-திருமாலிருஞ்சோலை
1325-1326-கோழிக்கோடு
1326-1327-திருக்கணாம்பி -திருக்கடம்பபுரா இப்பொழுது இதற்குப் பெயர்
1327-1328-1343-புங்கனூர் வழியாக மேலக்கோட்டை சென்று 15 ஆண்டுகள் அங்கேயே
1344-1370-திருமலையில் -26-ஆண்டுகள்
1371- செஞ்சி -அழகிய மணவாள கிராமம் -ஸ்ரீ ரெங்கம் –

ஸ்வஸ்தி ஸ்ரீ பந்து ப்ரியே சகாப்தே ஆநீயா நீல ஸ்ருங்கத் யுதி ரசித ஜகத்
ரஞ்ச நாதஞ்ஜ நாத்தரலே செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்ஜித் ஸமய மத நிஹத்யோத்
தனுஷ்கான் துலுஷ்கான் லஷ்மீப்மாப்யாம் உபாப்யாம் ஸஹ் நிஜ நகரே ஸ்தாபயந்
ரெங்கநாதம் ஸம்யக் வர்யாம் ஸபர்யாம் புநரக்ருத யசோ தர்பனோ கோபணார்யா -கல்வெட்டு சொல்லும்-

புகழ் நிறைந்த கோபணார்யார் -கறுத்த கொடி முடிகளின் தேஜஸ்ஸாலே உலகை ஈர்க்கும் திருமலையில் இருந்து
ரெங்கநாதனை எழுந்து அருளப் பண்ணி வந்து தனது தலைநகரான செஞ்சியில் சிறிது காலம் ஆராதித்து
ஆயுதம் ஏந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீ தேவி பூ தேவி உபயநாச்சியார்களோடே கூட
திருவரங்கப் பெரு நகரில் ப்ரதிஷ்டை செய்து சிறந்த திருவாராதனங்களை மறுபடியும் முன் போலவே நடத்தி வைக்கச் செய்தார் –

தேசாந்திரியாக எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் மறுபடியும் தம்முடைய யதாஸ்தானமாகிய
திருவரங்கத்துக்கு எழுந்தருளிய விவரம் பற்றி, கோயில் ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில்
உள்ள கல்வெட்டுச் செய்தி (கல்வெட்டு எண்: 286)பின்வருமாறு தெரிவிக்கிறது.

முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக பிள்ளைலோகாசார்யரால் தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்து கொண்டு
செல்லப்பட்ட அழகிய மணவாளப் பெருமாளின் அர்ச்சா திருமேனி, விஜயநகர மன்னரான வீரகம்பண்ணன் காலத்தில்
செஞ்சியை ஆண்டு வந்த மன்னனான கோபணார்யன் என்பவரால், திருமலையிலிருந்து செஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டு,
அங்கிருந்து பரிதாபி வருடம் வைகாசி மாதம் 17-ம் நாள் (பொ.ஆ.1371) திருவரங்கத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு
பிரதிஷ்டை செய்து திருவாராதனங்களும் நடைபெறச் செய்தார்”..!

விஸ்வேசம் ரெங்கராஜம் வ்ருஷப கிரி தடாத் கோபனோ ஹோணி தேவ
நீத்வா ஸ்வாம் ராஜதா நீம் நிஜ பல நிஹ தோத் ஸிக்த
தவ்லுஷ்க ஸைந்ய க்ருத்வா ஸ்ரீ ரெங்க பூமிம் க்ருத யுக சஹிதாம் —
ஸம்ஸ் தாப்யாம் ஸரோஜோத்பவ இவ குருதே ஸாது சர்யாம் ஸபர்யாம் –கல்வெட்டு

புவிக்கு அரசனான கோபணன் உலகுக்கு அரசனான ரெங்க ராஜனை திருமலைத் தடத்தில் இருந்து
தனது தலை நகருக்கு எழுந்து அருள்ச செய்து தனது சேனைகளால் துலுக்கர் சேனையை அடித்து விரட்டியவனாய்
கிருதயுகத்தில் பிராமணாள் ஆராதிக்கப்பட்ட போது இருந்தது போல்
ப்ரதிஷ்டை செய்து நல்ல திருவாராதனங்களை செய்வித்தான் –

பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும்
தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில் தான் அழகிய மணவாளன் எழுந்தருளி யிருந்தார்.
(ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி
நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது?
பொது மக்கள் ஒன்று கூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?)
திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகிய மணவாளன் என்பதைத்
தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை.
(ஆயிரக் கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு
முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை.
அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை
(திருமஞ்சனம் செய்த பிறகு அழகிய மணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனித நீர்)
சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான்.
அவன் இட்ட பெயரே இன்று வரை வழங்குகிறது. நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.

——————

ஸ்ரீ சடகோபன் உலா

நம்பெருமாள் கோழிக்கோட்டில் எழுந்தருளி இருந்தபோது
அருகிலிருந்த திவ்யதேசத்து எம்பெருமான்களும் நம்மாழ்வாரும் நம்பெருமாளுடன் வந்தனர்.
நம்மாழ்வாரை நம்பெருமாள் பெருமகிழ்ச்சியோடு கண்டு அவரைத் தம்மோடும் நாச்சிமாரோடும்
ஒரே ஆசனத்தில் எழுந்தருளப் பண்ண அர்ச்சகருக்கு நியமித்தார்.

நம்பெருமாள் ஆழ்வாருக்குத் தமது முத்துச் சட்டையையும் பிற பஹுமானங்களையும் உவந்தளித்தார்.
பெருமாள் ஆழ்வாரோடு இருப்பதை பெரிதும் உகந்தார்.
பின் அவர்கள் கோழிக்கோட்டை விட்டு நீங்கி தேனைக்கீடாம்பை (திருக்கணாம்பி) சென்று சேர்ந்தனர்.
அங்கிருந்து புறப்படும்போது நம்பெருமாள் ஆழ்வாரை அங்கேயே இருந்துவிட்டு,
அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்குப்போகும்படி ஆணையிட்டார்.

ஆழ்வாரின் கைங்கர்யபரர்கள் அவரை இன்னமும் கேரளாவின் உட்பகுதிக்குத் தென்மேற்குப் பகுதிக்குப் பாதுகாப்பாக
எழுந்தருள பண்ணி சிறிது தூரம் சென்றபின் ஒரு மலைத் தாழ்வரையில் ஒரு பெட்டியில் வைத்து
அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டனர்.
இது நடந்தபின் கொள்ளையர் வந்து இந்த கைங்கர்ய பரர்களைக் தாக்கி கொள்ளையடித்து சென்றனர்.

இக் கைங்கர்யபரர்களில் தோழப்பர் என்பார் ஒருவர் இருந்தார். இவர் ஆழ்வாரிடம் பேரன்பு கொண்டவர்.
மற்றவர்கள் தப்பி சென்றபின் தோழப்பர் திருமலை ஆழ்வாரிடம் சென்று (அப்போது அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால்)
அவரிடம் ஆழ்வார் செய்திகளைக் கூறினார். உடனே திருமலை ஆழவார் கேரள அரசனுக்குத் தகவல் தந்து,
கேரளா மன்னன் அரசு மரியாதைகளோடு தோழப்பரை வரவேற்று அவரோடு சில சைன்யங்களையும் அனுப்பினான்.
தோழப்பர் கீழே பள்ளத்தில் ஒளித்துப் பாதுகாக்கப் பட்ட ஆழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ண இறங்கினார்.
இந்த உயர்ந்த குணத்தாலே தோழப்பர் ஆழ்வாரோடு ஒக்க மரியாதை செய்யப்பட வேண்டும்.
ஆழ்வார் தோழப்பர் என்னப்பட வேண்டும். தினமும் வகுளாபரண பட்டரோடு திருமஞ்சனம் காண வேணும்.
தோழப்பர் ஆழ்வார் தோழப்பர் என்று அழைக்கப் படுவதோடு
அவர்க்கு ஆழ்வார் திருமஞ்சனக் காலங்களில் அருளப்பாடு மரியாதையும் ஏற்படுத்தப் பட்டது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மரப் பலகையில் அமர்ந்து கீழே இறங்க,
மலை முகட்டில் அடியார்கள் அவரை ஆழ்வாரோடு மேலே தூக்க நின்றார்கள்.
தோழப்பர் ஆழ்வார் அங்கு ஆழ்வார் இருந்த பெட்டியைக் கண்டு, அங்கு தான் கண்டதை ஒரு ஓலையில் எழுதி,
அப்பெட்டியையும் ஓலையையும் வைத்து மேலே அனுப்பினார்.
பின்பு இரண்டாம் முறை சங்கிலியைக் கீழே இறக்க, தான் அதில் ஏறி அமர,
பலகை மேலே ஏறும்போது துரதிர்ஷ்டவசமாக அந்தச் சங்கிலி அறுபட்டு தோழப்பர்
அப்படியே அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து பரமபதித்தார்.
தோழப்பரின் திருமகனார் இது கண்டு மிகவும் கலங்கி நிற்க, அங்கிருந்த கைங்கர்யபரர்கள் அவரைத் தேற்றி,
“இனி நீர் ஆழ்வாரின் ப்ரிய புத்ரர் ஆவீர், உமது தந்தையாருக்கு ஏற்பட்ட அனைத்து கௌரவங்களையும் பெறுவீர்” என்றனர்.
ஆழ்வார் முந்திரிப்பு எனும் இடம் சேர்ந்து அவர்க்கு ஸம்ப்ரோக்ஷணைகள் நடந்து ஐந்து நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார்.

ஆழ்வாரின் மாஹாத்ம்யம் அறிந்து கள்ளர்கள் தாம் கொள்ளை கொண்டதைத் திரும்பவும் சமர்பித்தார்கள்.
கைங்கர்யபரர்களும் திரும்ப வந்தபின் ஆழ்வார் திருக்கணாம்பி சேர்ந்து சில நாள்கள் அங்கேயே எழுந்தருளி இருந்தார்.
திருமஞ்சனம், திருவாராதனம், உத்ஸவாதிகள் மிக விமரிசையாக நடந்தன.
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருவட்டாறு போன்ற திவ்ய தேச நம்பூதிரிகளும் போத்திகளும்
அடிக்கடி வந்து சேவித்து ஆழ்வாரைப் பிரிய மனமில்லாதவர் ஆயினர்.

இவ்வளவில் திருமலை ஆழ்வார் பிள்ளை லோகாசார்யர் மங்களாசாசனத்தில், கூர குலோத்தம தாசர் ஆசியால்
ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று இருக்கும்போது ஆழ்வார் திருக்கணாம்பியில் இருப்பது அறிந்து
அவரை சேவிக்கவும் ஆழ்வார் திருநகரிக்கு மீட்டு வரவும் மிக்க ஆசை உள்ளவரானார்.

திருநகரி காடு மண்டியது கண்டு வருந்தி ஆழ்வார் கிளம்பியபோது பலரும் ஊரை விட்டு வெளியேறியதால்
இவரே காடு திருத்தி நாடாக்கும் பணியும் மேற்கொண்டு ஆழ்வார் திருநகரி ஊர், கோயில் சுற்றுப்புறங்கள் யாவும்
நன்கு நிர்மாணம் செய்து காடு வெட்டி குரு என்று புகழ் பெற்றார்.
பிறகு ஆழ்வாரை ஆழ்வார் திருநகரிக்கு மீண்டும் எழுந்தருளப் பண்ணி திருப்புளி அடியில் அவர் சந்நிதி ஏற்படுத்தி
ஆழ்வாராலேயே சடகோப தாசர் என்று அன்போடு அழைக்கப் பட்டார்.
திருமலை ஆழ்வாரும் அதை ஏற்று அன்போடு திருவாய்மொழிப் பிள்ளை எனும் பெயரும் பெற்றார்.
மேலும் திருநகரியின் மேற்குப் பகுதியில் பவிஷ்யதாசார்யன் ஸன்னிதியை நிர்மாணித்து,
அதைச் சுற்றி ராமானுஜ சதுர் வேதி மங்கலத்தையும் (நால் வேத விற்ப்பன்னர்கள் கொண்ட திருவீதிகள்) நிர்மாணித்தார்.

இந்த பவிஷ்யதாசார்யன் விக்ராஹமே மதுரகவி ஆழ்வார் தாமரபரணி ஆற்று நீரைக் காய்ச்சிய போது
கிடைத்த எம்பெருமானார் விக்ரஹமாகும்.
அவர் எதிர் பார்த்தது உபதேச முத்திரையோடு ஆழ்வார் விக்ரஹமாதலால் அஞ்சலி முத்திரையோடு கிடைத்த திருவுருவம் வியப்பளிக்க,
ஆழ்வார் சனாதன தர்மத்தை மீண்டும் நிலை நாட்ட வரப்போகும் ஆசார்யன் இராமானுசன் இவரே என அறுதியிட்டார்.
ஆழ்வார் தம் திருநகரியை விட்டு வெளியேறியபோது இவ்விக்கிரஹம் திருப்புளியாழ்வாரடியில் மண்ணில் புதையுண்டது,
திருவாய்மொழிப் பிள்ளையாலே புனருத்தாரணத்தின் போது கண்டெடுக்கப்பட்டது..

ஸம்ப்ரதாயத் தலைமை ஏற்று திருவாய்மொழிப் பிள்ளை மீண்டும் ஊர் திருத்தியபின் ஆழ்வார் புனர் பிரவேசம் செய்தார்.

இவ்வாறாக நம்மாழ்வார் கோழிக்கோடு சென்று திருநகரி திரும்பி,
திருவாய்மொழிப் பிள்ளையின் அரிய பெரிய கைங்கர்யத்தால் சம்ப்ரதாயம் பாக்கியம் பெற்றது.

————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading