ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-8–
————-
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்
பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத்
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத்
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–
1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்
2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –
3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்
4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்
5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்
6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்
7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்
8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-
ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்
9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்
10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்
முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —
——-
ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —
பிரவேசம் –
கீழ்த் திருவாய் மொழியில்
தம்முடைய சம்பந்த சம்பந்திகள் அளவும் ஈஸ்வரன் விஷயீ காரத்தைக் கண்டா இவர்
தம்மோடு இவர்களுக்கு சம்பந்தம் உண்டாகைக்காக எம்பெருமானுடைய மோக்ஷ பிரதத்வத்தை
உபதேசிக்கிறார் -அணைவது அரவணை மேலில் —
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
விடாயர் மடுவிலே அவகாஹிக்குமா போலே திருவநந்தாழ்வானோடு அணைவது –
போக்யதை ஏக வேஷையாய் -நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை யுடைய பெரிய பிராட்டியாரோடே கலந்து வர்த்திப்பது –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரண பூதனாய் இருக்கும் –
தேவாதி பதார்த்தங்கள் தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும் –
மோக்ஷ பிரதநாம் –
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலைக் கழித்துத் தர வேணும் என்று இருப்பார்க்கு ப்ரதி பூவாய்க்
கடத்திக் கொடுக்கும் என்கிறார் -அணைவது அரவணை மேல்-இத்யாதியாலே
———–
நீந்தும் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –-2-8-2-
கடக்க அரிதான துக்கத்தை விளைப்பதான ஜென்மம் தொடக்கமாக மற்றும் உண்டான
அபஷய விநாஸாதிகளையும் கடக்கும் –
துக்க கந்த ரஹிதமான மோக்ஷத்துக்கு ஹேதுவாம்
பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை யுடைத்தான பொய்கையிலே போய்ப்புக்கு
முதலையாலே இடர்பட்ட ஆனையுடைய துக்கத்தை வாசனையோடு போக்கின
பூத்துக் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடைய
என் அத்விதீய நாயகனுடைய சம்பந்தம் என்கிறார் -நீந்தும் துயர்ப் பிறவி-இத்யாதியாலே —
———
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-
ஸ்ருஷ்டிக்கையே தொழிலாக இருக்கிற ப்ரஹ்மாவுமாம் –
சுடுதடி போலே இவற்றை அடைய அழித்துக் கொண்டு திரிகிற ருத்ரனுமாம் –
இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது -சம்பந்தித்த தன்னோடு திரு நாபீ கமலத்தோடு கூடின
திரு மேனியைப் பற்றி இருந்ததாயிற்று –
தன் திரு மார்பில் நித்ய ஸம்ஸ்லிஷ்டையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக ஏகார்ணவத்திலே சாய்ந்து அருளினவன் தன்னுடைய ஆனைத் தொழில்கள்
எங்கும் காணலாய் இருக்கும் என்கிறார் -புணர்க்கும் அயனாம்-இத்யாதியாலே —
—-
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
சப்தாதி விஷயங்கள் ஐந்திலும் ப்ரவணமாகக் கடவதான
ஸ்ரோத்ராதிகள் ஆகியவற்றுக்கு வஸ்யராகை தவிர்ந்து
நன்மைக்கு முடிவு இன்றிக்கே இருக்கிற நாட்டிலே புக வேண்டி இருப்பீர்
தடுமாறி முடிந்து போம்படி அஸூர வர்க்கத்தை அழியச் செய்தானுடைய பலம் முற்பட்டு
இருக்கிற கல்யாண குணங்களிலே ஸர்வ காலமும் பிரவணர் ஆகுங்கோள்
என்கிறார் -புலன் ஐந்து மேயும்-இத்யாதியாலே
————-
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
உச்சி வீடும் விடாத் துயரை விளைக்கக் கடவதான ஜென்மம் தொடக்கமாக மற்றும் உண்டான ஐந்தும்
அவற்றை உடைத்தான பதார்த்தங்களும் ப்ரவாஹ ரூபத்தாலே நித்யமாய் போருகிற இதுக்கு
அத்விதீய காரணமாய்
ஸ்ருஷ்டிக்கு கர்மீ பாவிக்கும் எல்லை யளவும் ஸாஸ்த்ர ப்ரதானாதிகளாலே ரக்ஷிக்குமவன்
ஹயக்ரீவ மூர்த்தியுமாய் கூர்மாவதாரமுமாய் –
மத்ஸ்ய அவதாரமுமாய் -ராம கிருஷ்ணாதி அவதாரங்களுமாய் –
இப்படித் தாழ நின்றவன் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகானவன்
என்னைப் பற்றி ஸூத்தனாக்கிய ஸூத்தியை யுடையவன் என்கிறார்–ஓவாத் துயர்ப் பிறவி– இத்யாதியாலே —
————-
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-
அஸூத்தரையும் ஸூத்தராக்க வல்ல ஸூதிதியை யுடையவன் –
உலகு அளந்த திருவடிகளிலே தான் இட்டு வைத்த அந்தப் பூ மாலையை சிவனுடைய முடியிலே
தானே கண்டு அர்ஜுனன் -இவனே ஸர்வேஸ்வரன் -என்று நிச்சயித்த
பசுத்த திருத்துழாய் மாலையை யுடையவன் பரத்வம் திரும்பவும் ஒருத்தரால் விவாதம்
பண்ணும் படி இருந்ததோ என்கிறார் -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்-இத்யாதியாலே –
——–
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
கடல் கரையிலே கிடந்தும் -ரிஷிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தும் –
ராவண வத அநந்தரம் லங்கா த்வாரத்திலே கையும் வில்லுமாய் நின்றும்
தன்ன தானே பூமியை மஹா பலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள அத்தை எல்லை நடந்து மீட்டுக் கொண்டும்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து
பிரளய சலிலத்துக்கு உள்ளே முழுகி அண்ட புத்தியில் சேர்ந்த பூமியைப் பிரித்து எடுத்தும் –
அத்தைத் தன்னுள்ளே ஒளித்தும்
பின்னையும் வெளிநாடு காண உமிழ்ந்தும்
மிகப் பெருத்து இருந்த தோள்களாலே ஆரும்படியாகத் தழுவியும்
ஸ்ரீ பூமிப்பிராட்டியை வ்யாமோஹம் செய்யும் சர்வாதிகனான ஸர்வேஸ்வரன் என்கிற பிச்சை ஒருவரால்
இவ்வளவு என்று பரிச்சேதிக்கலாய் இருந்ததோ என்கிறார் -கிடந்து இருந்து நின்று அளந்து-இத்யாதியாலே —
———–
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-
ஸர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து -எனக்குக் கையாளானவனை
அவன் தானே காட்டக் காணுமது ஒழிய ஸ்வ யத்னத்தால் காண்பார் யார்
அப்படிக் காணப் புக்காலும் எவ்வளவு தான் காண்பது –
அவனுடைய ஊணாகிற ஒரு செயலை ஆராயில் சர்வ லோகங்களும் ஒரு அவதானத்துக்குப் போராது –
உயர்த்தியை ஸ்வ பாவமாக உடைத்தான பரமபதம் என்ன –
முக்தாத்ம ஸ்வரூபம் என்ன -மற்றும் உண்டான தேவாதிகள் என்ன –
இவற்றை உடைத்தான எட்டு திக்கிலும் குறைவற எங்கும் வியாபித்து விடாதே நிற்கும்
என்கிறார் -காண்பாரார் எம்மீசன் கண்ணனை-இத்யாதியாலே —
————
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-
ஸர்வேஸ்வரன் ஸர்வ கதன்-என்கிற இத்தைச் சொன்ன புத்ரனைச் சீறி –
இங்கு இல்லையால் என்று இரணியன் துணைத் தன் கையாலே தட்ட
அந்தப் பிரதேசத்திலே அந்தக் காலத்தில் அவன் நசிப்பிக்கும் படியாக ஆவிர்பவித்த
என் சிங்கப்பிரானுடைய பரத்வம் ஆராயும்படியான ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருந்ததோ
என்கிறார் -எங்கும் உளன் கண்ணன்-இத்யாதியாலே –
———–
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
ஸர்வ பிரகாரத்தாலும் நன்றான பரமபதம்
பரிமித ஸூகமான ஸ்வர்க்கம்-
நிஷ்க்ருஷ்டமான துக்கமான நரகம்
இவை முடியாக -ஈரப்பாடுடையரான தேவர்கள் நடுவாக மற்றும் உண்டான த்ரியக்காதிகளுக்கும்
த்ரிவித காரணமும் தானேயாய் -இத்தை உண்டாக்கி -அதிலே –அநு பிரவேசித்து -ஜெகதாகாரனாய் நின்று
தன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்றும்படி ஸ்ரீ வைகுண்டத்தில் வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற
அழகிய திரு மேனியை உடையனான என் கண்ணனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்
என்கிறார் -சீர்மை கொள் வீடு-இத்யாதியாலே —
———
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
நிகமம்
நேத்ர பிரதேசங்கள் சிவந்து -கறுத்த திரு மேனியை யுடைய ஸர்வ சேஷியை
வண்டுகள் ஆலாபியா நின்று உள்ள சோலைகளை யுடைய வழுதி வள நாட்டை யுடைய ஆழ்வார்
ஸ்ரேஷ்டமான பண்ணிலே அருளிச் செய்த தமிழ் ஆயிரத்திலும் இந்தப் பத்தை அப்யசித்தவர்கள்
பரமபதத்தின் மேலே வ்யாவ்ருத்தி தோன்ற இருந்து
எனக்கும் என் பரிகரத்துமாகச் சமைந்து இருக்கிற பரம பதத்தை ஆளப்பெறுவர் என்று
உக்த அர்த்தத்தை நிகமிக்கிறார் -கண்டலங்கள் செய்ய-இத்யாதியாலே —
————
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -18-பாசுரம்–
அவதாரிகை –
இதில்
மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை
தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி
சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற
அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-
அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–—18 —
வியாக்யானம்–
அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே-
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்
அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற
அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி
கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது
ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –
தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக
தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று –
ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் –என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற
குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆனபோது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே
உபாயாந்தர நிரபேஷமாக
திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்
அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் –என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற
கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
பெருமாள் பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –
உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை
நித்ய சூரிகளோடு கூட்ட
மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு
இணக்குப் பார்வை போல்-(மிருகத்தை மிருகம் வைத்து கண்ணி வைத்து பிடிப்பாரை போலே
இணங்கி தாழ நின்று )-சஜாதீயராய் இணங்கி –
ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு
உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –
மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும்
பரிசுத்த ஞானரான ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –
வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய
சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-–பொசிந்து காட்டும் இங்கே
இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று
விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply