ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –
ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-
————–
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-
1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –
2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –
3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –
4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –
5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –
6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –
7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்
8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –
9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்
10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை
ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –
———
இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-
த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –
1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்
2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்
3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்
4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்
5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்
6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்
7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்
8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்
9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –
10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்
எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –
————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-
முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே
அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி
முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்
இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –
மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –
நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்
ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –
ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –
எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்
பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்
இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –
—————————
ஸ்ரீ ஆதேஸ உபநிஷச் சாயை –ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் —
பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் இவர் ஒல்லை -1-என்றும் ஒல்லை -10 -என்றும்
அருளிச் செய்த கருத்தை அறிந்து திருமேனியோடே வந்து ஆஸ்ரயிக்கும் படி
எம்பெருமான் திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்
———-
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-
கிளர் ஒளியின் இடையில் பிறந்த ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே –
வளரா நின்றுள்ள படிகளை யுடைய ஆச்சர்ய சக்தன் நித்ய வாசம் பண்ணுகிற லோயிலாகிற
வளர வளர இளகிப் பதித்து வரும் பொழில்களாலே சூழப் பட்ட திருமாலிருஞ்சோலையை
அநர்த்தம் வாராது ஒழிய வேண்டில் கிட்டுமதே இவ்வாத்மாவுக்கு சதிர்
என்கிறார் -கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்-இத்யாதியாலே –
———-
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-
சதிரையும் இளமையையும் உடைய மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றும் மதியாதே
திருக்கையின் ஸ்பர்சத்தாலே எப்பொழுதும் ஓக்க முழங்கா நின்றுள்ள ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருக்கையிலே யுடையராய்
அந்த அழகாலே -அழகர் -என்று சொல்லப்படுமவர் கோயில் இருக்கிற
சந்திரன் தவழ்ந்து ஏறா நின்றுள்ள சிகரத்தை யுடைய திருமலையில் பதியை –
ஸ்வரூப அனுரூபமாக ஏத்தி உஜ்ஜீவிக்கும் இதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்
என்கிறார் –சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது–இத்யாதியாலே –
——–
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3-
ப்ரயோஜன அநாஸ்ரயமானவற்றைச் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை காண் நெஞ்சே —
வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற அழகை யுடையவர் அவ்வடிவு அழகை
ஸர்வ ஸ்வ தானம் பண்ணி வர்த்திக்கிற கோயிலாய் இருக்கிற
போக்யதா ப்ரகர்ஷத்தாலே நெஞ்சை இருளப் பண்ணும் திருமால் இருஞ்சோலையோடு
சம்பந்தித்த மலையை அடைவது -அது ஒன்றுமே கர்தவ்யம்
என்கிறார்-பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே -இத்யாதியாலே —
————
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4-
கர்மமாகிற வலிய பாசத்தை ஸ்வ யத்னத்தாலே கழித்து –
ப்ராப்யமான கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவித்துத் தலைக்கட்டப் போமோ –
கர்மமாகிற வலிய பாசங்களைக் கழிக்கைக்காகவும் –
கைங்கர்யங்களைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்
பெரிதான கோவர்த்தன பர்வதத்தை எடுத்தவன் -அந்தப் பெருமையோடே வந்து
நித்ய வாஸம் பண்ணுகிற கோயிலாக இருக்கிற
வாரா நின்றுள்ள மேகங்கள் தவழும் திருமாலிருஞ்சோலை யாகிற திருமலையை
ஆஸ்ரயிக்குமதுவே செய்ய அடுத்து என்கிறார் -கரும வன்பாசம் கழித்து உழன்று-இத்யாதியாலே —
———–
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-
திரண்ட பலத்தாலே ப்ரயோஜனாந்தர ப்ராவண்யம் ஆகிற மஹா பாபத்தைக் கூடு பூரியாதே
ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள திருவாழியை
ஆயுதமாக யுடையவன் வந்து வர்த்திக்கிற கோயிலாகிற
மறுவற்றுத் தெளிவை யுடைத்தாய் தர்ச நீயமாய் ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போமிதுவே
பகவத் ப்ரத்யா சத்தி வேண்டி இருப்பார்க்கு வருத்தமற லபிக்கலாம் நல் விரகு
என்கிறார் –திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது–இத்யாதியால் –
————-
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-
இது நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்
ப்ரயோஜனாந்தரங்களிலே ப்ராவண்யம் செய்யாதே
உறிகளிலே சேமித்துக் கள்ளக் கயிறு உருவி வைத்த வெண்ணெயை தெய்வம் கொண்டதோ
என்னலாம் படி களவு கண்டு அமுது செய்தவன் வந்து வர்த்திக்கிற தேசமாய் இருக்கிற
ரஷ்ய ரக்ஷகங்கள் தன்னிலே பிரியாதே வார்த்தைக்கும் மாலிருஞ்சோலையை
நெஞ்சிலே அடிபடும் படியாக அநுஸந்திக்குமதுவே நன்மை யாவது
என்கிறார் -கிறியென நினைமின்-இத்யாதியாலே –
———–
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7-
நான் சொல்லுகிற வார்த்தையை நன்மை என்று புத்தி பண்ணுங்கோள்
பிரிவால் வரும் கிலேச அனுபவம் பண்ணாதே வராஹ கல்பத்தின் ஆதியிலே மஹா வராஹமாய்
அண்ட புத்தியில் சேர்ந்து உரு மாய்ந்த பூமியை எடுத்துக் கொண்டு ஏறின
நிருபாதிக ஸூஹ்ருத்து நித்ய வாசம் பண்ணும் தேசமாய் இருக்கிற நிர்மலமான ஞான லாபத்தை உண்டாக்கும்
திருமாலிருஞ்சோலையை அனுகூலமான முறையிலே கிட்டிப் பரிசர்யை பண்ணுதல்
ஸ்ரேஷ்டம் என்கிறார்–நலமென நினைமின்– இத்யாதியால்
———–
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-
ஸர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பாகத் தந்த மனுஷ்ய சரீரத்தைக் கொண்டு
பலத்தை உண்டாக்கி -பின்னை அவனை ஆஸ்ரயிக்கை இன்றிக்கே
இதர விஷய ப்ராவண்யத்துக்கு உடலாக்கி -அநர்த்தப் படாதே
பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசமாய் இருக்கிற
நித்ய ஸூரிகளாதான திருமாலிருஞ்சோலையை அனுகூல புத்தி களைப் பண்ணி
பரிசர்யை பண்ணுதல் நியாயம் என்கிறார் -வலம் செய்து-இத்யாதியால் —
———-
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-
நான் சொல்லுகிற இதுவே முறை என்று புத்தி பண்ணுங்கோள்
உங்களால் போக்கிக் கொள்ள ஒண்ணாத மஹா பாபங்களைப் பரிஹரிக்க வேண்டி இருந்தீர்களாகில்
பேய்ப் பெண்ணான பூதனையை முடித்தவன் நித்ய வாசம் பண்ணுகையாலே ஸ்லாக்யமான கோயிலாய் இருக்கிற
இள யானைக் கன்றுகள் இனம் இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையைத் தொழ வேணும் என்னும்
மநோ ரதத்திலே துணிவதே இவ்வாத்மாவுக்கு விஜய ஹேது என்கிறார் -வழக்கென நினைமின்-இத்யாதியாலே —
————
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-
நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று ஆத்ம அபஹாரத்தையும் துர் உபதேசத்தையும் செய்யாத படியாக
வேதார்த்தத்தை விஸதீ கரித்த கீதா உபநிஷத் ஆச்சார்யன் வர்த்திக்கிற கோயிலாய்
பேடையை உற்ற மயில் சேர்ந்துள்ள திருமாலிருஞ்சோலை யாகிற பூ மலரா நின்றுள்ள திருமலையைக் கிட்டுமதுவே
இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாய்த் தலைக்கட்டுமிது -அல்லாதவை எல்லாம் வியர்த்தம்
என்கிறார் -சூதென்று களவும் சூதும்-இத்யாதியாலே —
———-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
நிகமம் –
ப்ரயோஜனப்படும் என்று இந்த லோகங்களை உண்டாக்கினவனுடைய கல்யாண குண விஷயமாக
அஞ்ஞான கந்தம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்து தத்வ ஞானம் கொள்ளும் படி சொன்ன
ஓர் ஆயிரத்தில் இப்பத்தான் அருளே நிரூபகமான அவன் திருவடிகளை ஸம்ஸார சம்பந்தத்தை
வாசனையோடு போக்கிச் சேர்த்து விடும் என்று யுக்த அர்த்தத்தை
நிகமிக்கிறார்-பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்– இத்யாதியாலே
——–
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -20-பாசுரம்–
அவதாரிகை –
இதில் சர்வ பிரகாரத்தாலும் திருமலையை ஆஸ்ரயிக்கையே
புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்
ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி
தெற்குத் திருமலையிலே தான் நிற்கிற படியை
இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும்
அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து
ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி
பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —
கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி——–20-
வியாக்யானம்–
கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய்
கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –
வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி
கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
திருமால் இரும் சோலை மலைக்கே –
தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற
அநர்த்தம் இன்றிக்கே
அவன் வர்த்திக்கிற திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள்
என்று அருளிச் செய்யும் –
தளர்வு -மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு
அறவே –அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு
தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து –சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –
இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் –கிளர் ஒளி இளமை –என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது –கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்
ஸ்வ அனுபவ கர்ப்ப
பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை
மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஆச்சார்யா ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாயபரமாக நாயனார் அருளிச் செய்கிறார்
நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது
ஆகையால் திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பரர அநர்த்தம் கண்டு
பரோபதேசம் பண்ணுகையாலே
நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான
யசஸை யுடைய ஆழ்வார் திருவடிகளிலே –
முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே
நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே
நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply