ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
———–
அதிகாரம் —12-ஸாங்கப்ரபதநாதிகாரம்-
(ப்ரபத்தியை எப்படிச் செய்வது —அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறை )
அதிகாரத்திலிருந்து
ஆபீஷ்ட்டே துஸ்ஸாதே ஸ்வத இதரதோ வா க்வசன தத்
பரந்யாஸம் யாச்சா அந்விதம் அபிவதந்தி ப்ரபதநம்
இத : பச்சாத் அஸ்மத் யதந நிரபேக்ஷண பவதா
ஸமர்த்ய : அஸௌ அர்த்த : து இதி மதி விசேஷம் ததாவிது :
வ்யாக்யானம்
விரும்பும் பலன் ஒன்றை சுய முயற்சியில் பெற முடியாத சமயத்திலும்
வேறு எந்த முயற்சியிலும் பெற முடியாத போது, அந்தப் பலனை
அடைய ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது –ப்ரபத்தி
இது ஆசார்யர்கள் கூறுவது
இந்த க்ஷணம் முதல், என் பொருட்டு இந்தச் செயலை எனக்காக
முடித்தருள்க—அடியேன் இதற்காக எவ்வித முயற்சியும் செய்ய மாட்டேன்
என்கிற மன உறுதி என்றும் சொல்லலாம்
அதிகாரத்திலிருந்து
முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கி ஸ்வரூபமாவது ஆபரணத்தை உடையவனுக்கு
அவன் தானே ரக்ஷித்துக் கொண்டு பூணக் கொடுக்குமாப்போலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம் .
அதாவது ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய் ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப் பற்ற
ஆத்மாத்மீய ரக்ஷண வ்யாபாரத்திலும் ஆத்மாத்மீய ரக்ஷண பலத்திலும்
ஸ்வாநீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயமில்லாதபடி பர ந்யாஸ ப்ரதானமான அத்யந்த பாரதந்த்ரிய விசிஷ்ட்ட சேஷத்வாநு
ஸந்தான விசேஷம்
வ்யாக்யானம்
அங்கங்களுடன் கூடிய அங்கியானது ஆத்ம ஸமர்ப்பணம் . இது முமுக்ஷுக்கள் கைக் கொள்வது .
அவ்விதம் ஆத்ம ஸமர்ப்பணம் செய்யும்போது ,ப்ரபத்தியிலோ அதன் பலனிலோ தனக்கு எவ்வித
ஸ்வதந்த்ரமும் இல்லை என்கிற எண்ணம் வேண்டும்.
ஆத்ம ஸமர்ப்பணம் என்பது, ஒருவன் தன்னுடைய ஆபரணத்தை
பாதுகாப்பு கருதிக் கொடுத்து வைத்து ,பிறகு அதன் சொந்தக்காரன்
திரும்பி வந்தவுடன் அவனிடம் அந்த ஆபரணத்தைத் திரும்ப
ஒப்படைப்பதாகும் .
ப்ரணவத்தின் முதல் எழுத்தான ”அ ” மூலம் கூறப்படுபவன் ;எல்லோருக்கும்
எஜமானன் ;எல்லாவற்றையும் காப்பவன் –இந்த ஸர்வேச்வரனிடம்
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையுமான காப்பாற்றுகிற பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தாமே அப்பொறுப்பை ஏற்பதோ,
அதன் பலனை ஏற்பதோ இல்லாமல் பற்று அற்று இருத்தல். இந்த நிலை
எஜமானன் –அடிமை எனப்படுகிறது.நம்மைக் காக்கும் பொறுப்பு
முழுவதையும் அவனிடம் ஒப்படைப்பது மிக விசேஷம்.
அதிகாரத்திலிருந்து
பரந்யாஸத்தை அநுஷ்டிக்கும் முறை
ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் என்று சோதிதமான இவ்வநுஸந்தான
விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :
சேஷியாய் ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும்படிக்கு ஈடாக
அநந்யார்ஹ அநந்யாதீந சேஷபூதனாய் அத்யந்த பரதந்த்ரனான நான் ஆத்மாபிசாயம் ந மம என்கிறபடியே
எனக்குரியனல்லேன்; ஒன்றை நிரூபாதிகமாக என்னது என்னவும் உரியனல்லேன் ;
ஸ்வயம் ம்ருத் பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வ ரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே
என்கிறபடியே என்னையும் என்னதென்று பேர் பெற்றவையும் நானே
ஸ்வதந்த்ரனாயும் ப்ரதான பலியாயும் ரக்ஷித்துக் கொள்ள யோக்யனுமல்லேன்;
ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத் ப்ரேக்ஷிதம் ஸதா
என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஆத்மாத்மீயங்களும் அவனதே ;
”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ” என்கையால்
இவற்றினுடைய எல்லாவற்றையும் ரக்ஷண பரமும்
” ந ஹி பாலநஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” என்கிறபடியே ஸர்வ ரக்ஷகனான அவனதே ;
தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே
என்கிறபடியே ரக்ஷண பலமும் ப்ரதான பலியான அவனதே என்று பாவிக்கை
வ்யாக்யானம்
ஸாத்யகி தந்த்ரம் சொல்கிறது
ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் =தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஒப்படைப்பது —கடைப்பிடிக்கப்படும் முறை
ஆத்மாவை ஒப்படைப்பவன், ”நான் எம்பெருமானை முழுதும் நம்பி நான் அவனின் அடிமை ;அவனுக்காகவே உள்ளேன் ;
என்னுடைய அடிமையானது வேறு ஒருவருக்குமில்லை ;நான் வேறு யாரையும் நம்பவில்லை;
ஆதலால், எல்லாவற்றுக்கும் யஜமானனும் எதையும் சார்ந்து இல்லாமலிருப்பவனுமான எம்பெருமானுக்கு ,
தனது ப்ரயோஜனத்துக்காகவே , என்னைக்காக்கும் பொறுப்பு உள்ளது என்று எண்ணுதல் வேண்டும்.
ஸாத்யகி தந்தரம்
இந்த மந்த்ரத்தாலே ஒருவன் , தன்னுடைய ஆத்மாவை என்னிடம் ஸமர்ப்பிக்க வேண்டும் .
இங்ஙனம் செய்யவேண்டியதை, என்னிடத்தில் செய்தவன் க்ருதக்ருத்யன் ( செய்யவேண்டியதைச் செய்தவன் ) ஆவான்.
தனது என்கிற ”ப்ராந்தி ” அநாதியாய் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து
வருகிறது. ”தனது இல்லை ”என்கிற எண்ணம் எந்த ஜன்மத்தில் வருகிறதோ
‘அது,’ஸ்வ ஸம்பந்த த்யாகம் ”.
மஹாபாரதம்
ஆத்மாபி சாயம் ந மம = என்னுடைய ஆத்மா என்னைச் சார்ந்ததல்ல;என்பதைப் போல,
என் ஆத்மா என்னுடையதல்ல; வேறு எதனையும் என்னுடையது என்று
சொந்தம் கொண்டாட உரிமையுமில்லை
ஸ்வயம் ம்ருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந :
ஸ்வரக்ஷணே அபி அசக்தஸ்ய கோ ஹேது : பரரக்ஷணே
ஆத்மாத்மீய ரக்ஷணம் = ஜீவன், மண்கட்டி போன்றவன்;தன்னைக் காத்துக்கொள்ளும்
திறனற்றவன் ;எம்பெருமானையே நம்பி இருப்பான் –இப்படி இருப்பவன் ,மற்றவர்களைக்
காப்பது இயலாதது .ஆகவே , தன்னையும் ,தன்னைச் சேர்ந்தவர்களையும் ,சுயமாகக்
காக்கும் திறனற்றவன்.பகவானின் அருள் வேண்டும் .
ஆத்மா ராஜ்யம் தனம் சைவ களத்ரம் வாஹநாநி ச
ஏதத் பகவதே ஸர்வம் இதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா
உபரிசரவஸு என்பவன் ஒரு அரசன் —அவன் சொன்னதாவது—ஆத்மா ,ராஜ்யம்,
பொருட்செல்வம் ,மக்கள் மனைவி, வாஹனங்கள் போன்ற யாவும் எம்பெருமானுக்காகவே
உள்ளன. இவ்விதம் , அறிவாளிகள் கூறுவதைப்போல என்னுடையது என்று
நினைக்கிற எல்லாமும் பகவானுக்கே உரியது
உபரிசரவஸு =வஸு என்கிற அரசனுக்கு ,இந்த்ரனால் வானத்தில் செல்லும் விமானம்
கொடுக்கப்பட்டிருந்தது;அதனால், வஸு என்கிற அரசன், உபரிச்ரவசு ஆனான்
லக்ஷ்மீ தந்த்ரம்
”ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹி ஆத்ம நிக்ஷேப உச்யதே ”
ஆத்மாவையும் அதைச் சேர்ந்தவற்றையும்/சார்ந்தவற்றையும் காப்பாற்றும் பொறுப்பை
பகவானிடம் ஸமர்ப்பிப்பதே ”ஆத்ம நிக்ஷேபம் ‘ எனப்படும். ஆதலால், எல்லாவற்றையும்
காக்கும் பொறுப்பு , எல்லாவற்றையும் காப்பாற்றும் அவனைச் சேர்ந்தது
விஷ்ணு புராணம்
”ந ஹி பாலந ஸாமர்த்யம் ருதே ஸர்வேச்வரம் ஹரிம் ” =எல்லாவற்றையும் நியமிக்கும்
அந்த ஸ்ரீ ஹரி தான், எல்லோரையும் காக்கும் திறன் உள்ளவன்;அந்தத் திறன் வேறு யாருக்கும் இல்லை .
லக்ஷ்மீ தந்த்ரம்
தேந ஸம்ரக்ஷ்யமாணஸ்ய பலே ஸ்வாம்யவியுக்ததா
கேசவார்ப்பண பர்யந்தா ஹி ஆத்மநிக்ஷேப உச்யதே
பகவானால் காக்கப்படும் ஆத்மாவை ,பலனில் கூடத் தனக்கு உரிமையில்லை என்கிற உறுதியுடன்
கேசவனிடம் ஸமர்ப்பிப்பதே , ”ஆத்ம நிக்ஷேபம் ” இப்படி, ஸமர்ப்பணம் செய்வதால் உண்டாகும்
பலனும் அவனுடையதே என்கிற எண்ணம் வேண்டும்.
சிபிச் சக்ரவர்த்தியை, புறா சரணம் என்று அடைகிறது.என்னை ரக்ஷித்துக்கொள்ளச் சக்தியில்லை ;நீயே
அதற்கு வழி செய்யவேண்டும் என்றுதானே கேட்க முடியும்
! சிபி, தன்னுடைய தொடையிலிருந்து மாம்ஸத்தை அறுத்துக் கொடுத்து புறாவைக் காப்பாற்றினான்.வேறு
வழி செய்ய முடிந்தால் அதையும் செய்திருப்பான்.
அதிகாரத்திலிருந்து
அதிகாரிகள்–விசேஷங்கள்
முமுக்ஷு மாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம்
அமிஞ்சிநே பர ந்யாஸ : த்வதிக : அங்கிதயா ஸ்தித :
அத்ர ரக்ஷா பர ந்யாஸ : ஸமஸ்ஸர்வே பலார்த்திநாம்
ஸ்வரூப பல நிக்ஷேபஸ்த்வதிகோ மோக்ஷ காங்க்ஷிணாம்
முமுக்ஷுக்கள் தங்களுடைய ஸ்வரூபம், பலன் இவற்றை சமர்ப்பணம் செய்கின்றனர்.
தன்னைக் காக்கும் பொறுப்பையும் ஸமர்ப்பிப்பது, முமுக்ஷுக்களுக்கு மேலும் ஒரு அங்கியாகிறது.
மோக்ஷத்தை விரும்புபவர் ஸ்வரூபம், பலன் தன்னைக் காக்கும் பொறுப்பு யாவற்றையும் சமர்ப்பணம்
செய்கின்றனர்
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தியின் பலனும் பகவானுக்கே
பலார்த்தியாய் உபாயாநுஷ்டானம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்குப்
ப்ரதான பலியானபடி எங்ஙனேயெனில் —-அசித்தின் பரிணாமங்கள் போலே சித்துக்குத்
தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வ சேஷியான தனக்கு உகப்பாயிருக்கையாலே
ஈச்வரன் ப்ரதான பலியாயிருக்கிறான். அசேதனமான குழமண்ணை அழித்துப் பண்ணியும்
ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்ஜரத்தில்
வைத்துப் பால் கொடுத்தும் வேண்டினபடி பறக்க விட்டும் அதின் உகப்பு கண்டு உகக்கிறதோடு
வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு
வ்யாக்யானம்
ப்ரபத்தியின் பலனையும் ஈச்வரன் எப்படி அடைகிறான் என்பது சொல்லப்படுகிறது
அசித்துக்கு உண்டான தன்னால் தரப்பட்ட மாற்றங்களால் மகிழ்வதைப்போல ,
சித் என்கிற ஜீவனுக்குத் தன்னால் தரப்பட்ட புருஷார்த்தங்களால் பகவான் மகிழ்கிறான் .
இதன் காரணம், அனைத்துக்கும் அவ எஜமானனாக இருப்பதால்.
குயவன் ,மண்ணைக் குழைத்து ஒரு மண் பொம்மை செய்கிறான் .பிறகு , அதை
வேண்டாம் என்று அழிக்கிறான். வேறு ஒரு பொம்மை செய்கிறான். அதற்கு வஸ்த்ரம்
சாற்றுகிறான். ஆபரணம் பூட்டுகிறான் .அவையெல்லாம் அந்தப் பொம்மைக்குப்
புருஷார்த்தம் இல்லை. குயவனுக்கு உகப்பு. அதைப்போலவே பகவான் உகப்படைகிறான்.
1.கிளி, கூட்டில் இருக்கும்போது கிளியின் அழகு, பேசும் திறமை கிளியின் சொந்தக்காரனுக்கு
உகப்பு. 2. பால் அளித்து வெளியில் பறக்கும்படி விடுவது கிளிக்குக் களிப்பு.3. ஆனால், கூட்டில்
அடைப்பது வருத்தம். ஆனால் இந்த மூன்றிலும் , கிளியின் சொந்தக்காரனுக்கு உகப்பு.
அதிகாரத்திலிருந்து
ஆத்ம ஸமர்ப்பணம்
ஆன பின்பு இங்கு
ஸ்வநிர்பரத்வ பர்யந்த ரக்ஷகைகார்த்ய பாவநம்
த்யுக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம்
வ்யாக்யானம்
ஆத்ம ஸமர்ப்பணம் என்பது
1. தன்னுடைய ஆத்மா என்பது ,தன்னைக் காப்பாற்றுகிற பகவானுக்காகவே உள்ளது
2. ஆத்மா குறித்த தனது பொறுப்பு கிடையாது
3.இப்படி ஸமர்ப்பணம் செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் தனக்கல்ல
இவ்வாறு உறுதியிட்டுச் செய்வது ஆத்மஸமர்ப்பணம்
அதிகாரத்திலிருந்து
ஸ்வரூப ஞானம் இல்லாதவருக்கு ஸ்ரீ ஆளவந்தார் சொல்வது
ஸ்தோத்ரத்தில்
வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :
என்கிறதுக்குத் தாத்பர்யமென்னமெனில் —-முத்திரையிட்டிருக்கிற ராஜாவின் கிழிச்சீரை
ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜா கைக்கொள்ளுமென்று உள்ளிருக்கிற
மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே
மீளக்கொடுக்குமாப்போலே தேஹாத்யத்ரிக்த ஆத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை
விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம்
பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மபஹார சைர்யத்தால்
உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்குமென்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம்
வ்யாக்யானம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் கூறுகிறார் ( 52 )
வபுராதிஷு யோ அபி கோ அபி வா குணத : அஸாநி யதாததாவித :
ததயம் தவ பாதபத்மயோரஹமத்யைவ மயா ஸமர்ப்பித :
( ப்ரபத்தி பண்ணுகிற நான் என்று சேர்த்து வாசிக்க–)
த்ரேகம் முதலான ரூபமான வஸ்துக்களிலே ஏதேனுமாகவும் ஆத்மகுணங்களிலே
ஏதேனும் உடையவனாகவும் ஆகக்கடவேன் .என் ஸ்வரூபங்களை நான் உள்ளது உள்ளபடி
அறியாமலிருக்கலாம்.அறியாமலே,ப்ரபத்தி அதிகாரியாகையாலே ஏதேனும் ஒரு
ஸ்வரூபஸ்வபாவம் உடைய நான் , உனது திருவடித் தாமரைகளில் இப்போதே
என்னாலே ஸமர்ப்பிக்கப்பட்டேன்
ஆத்ம விசாரம்
தேஹமே ஆத்மா என்பர் ; தேஹம் இருந்தும் அறிவு இல்லையென்றால் ,இந்த்ரியம்
ஆத்மா என்பர் ;கண் , காது முதலிய இந்த்ரியங்கள் பலவாக ஒரே தேஹத்தில்
இருப்பதால், ஒரே ஆத்மா என்பதற்காக ”மனஸ் ” ஸே ஆத்மா என்பர் ; ப்ராணவாயுவால்
ஜீவிப்பதால் அதையே ஆத்மா என்பர் ;இப்படிப் பலவிதமாகச் சொல்வர் .
ஆதலால் எனக்கு ஸ்வரூப நிச்சயம் ஏற்படவில்லை . இதனால், குண விஷயத்திலும்
நிச்சயமில்லை.பக்தியோகம் செய்பவர்கள் ஆத்மா நித்யமா அநித்யமா அணுவா விபுவா
உடல் அளவா ஜடமா , ஸ்வயம்ப்ரகாஸமா ஞானம் என்கிற நிலை உள்ளதா ,இல்லையா
என்று ஆத்ம ஸ்வரூபத்தைத் தேடுகிறார்கள்.
எனக்கு அதெல்லாம் தேவையில்லை .நான் ப்ரபத்தி பண்ணுகிறேன்.உனக்கே
நான் சேஷன் என்று ,இதை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்.எந்த ஸ்வரூபம்
ஆனாலும் ,எந்த ஸ்வபாவம் உனக்கே சேஷம்.
இந்த ச்லோகத்தால் ஆத்மாவை உள்ளபடி சாஸ்த்ரப்படி அறியாதவர்கள் ப்ரபத்தி
பண்ணிக்கொள்ளலாம் பகவானுக்கே சேஷன் ; நான் ஸ்வதந்த்ரனல்லேன் என்பது
முக்யம் .
இந்த சேஷத்வம் , ஸ்வரூப நிரூபகம் என்று ஸ்ரீ பாஷ்யகாரருக்கு , திருக்கோட்டியூர்
நம்பி அருளினார் என்று சொல்வர்.இந்தச் ச்லோகம் அதற்கு மூலம் .
முதலில் ஆத்மாவைத் தெரிந்துகொண்டு தானே ,பகவானுக்கு சேஷன் என்பதை
அறியவேண்டும் என்றால், அஹம் —–என்பதே போதுமானது. சேஷத்வ ஜ்ஞானம்
மட்டும் போதுமானது .
ஒரு உதாரணத்தால் விளக்குகிறார்
ஒருவன் நடந்து செல்லும் போது வழியில் அரசாங்க முத்ரையுடன் உள்ள மூட்டை
விழுந்து கிடப்பதைக் காண்கிறான் என்று வைத்துக் கொண்டால் , அவன் அந்த மூட்டைக்குள்
இருக்கும் உயர்ந்த கற்களை அறிய வில்லை யென்றாலும் ,அரசாங்க முத்ரையுடன்
இருப்பதால், அதை , அரசனிடம் கொடுக்க முயற்சிப்பான் அல்லவா ! அதைப் போல,
உடலைக் காட்டிலும் வேறுபட்டதான ஆத்மாவின் ஸ்வரூபம் ஸ்வபாவம் இருப்பு ஆகியவற்றை
அறியாத போதிலும் ஒருவன் தனக்குள்ள அற்பமான அறிவைக் கொண்டு மட்டுமே
ஆத்மாவைப் பகவானிடம் ஸமர்ப்பித்தால் , இதனாலேயே, கணக்கில்லாக் காலமாக
ஆத்மாவை அபஹரித்த காரணத்தால் இவன் பெறும் தண்டனையைப்
பகவான் நீக்கி விடுகிறான் . சாஸ்த்ரங்களில் உள்ள இந்தக் கருத்தே ஸ்ரீ ஆளவந்தார்
திருவுள்ளத்தில் இருந்தது.
அதிகாரத்திலிருந்து
ஆத்ம ஸமர்ப்பணம் குறித்து ஸ்ரீ ஆளவந்தாரின் தாத்பர்யம்
இதுக்கு மேல் மம நாத யாஸிதி என்கிற ச்லோகத்தில் இஸ் ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுசயம்
பண்ணிற்றும் ஸ்வரூபாதி விவேகமின்றிக்கே ஸமர்ப்பிக்கப்புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை
ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே , ”என்னது ” என்கிற அபிமானத்தோடே
ஸமர்ப்பிக்கில் ஆத்மபஹாரசைர்யம் அடியற்றதாதாதென்கைக்காகவத்தனை ; அல்லது
சாஸ்த்ர சோதிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யமாக்கினபடியன்று .
ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகமில்லையேயாகிலும் ,”ந மம ”
என்று ஸ்வ ஸம்பந்தம் அறுக்கையே அஹமபி தவைவாஸ்மி ஹி பர : என்னும்படி
பர ஸமர்ப்பண ப்ரதானமான சாஸ்த்ரார்த்தத்தில் சாரமென்றதாயிற்று
வ்யாக்யானம்
52 வது ச்லோகத்தில் ,உன் திருவடிகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்றதும் ,
பகவான் கேட்கிறானாம் —
இதுவரை யாருக்கு சேஷனாய் இருந்தாய் ? ஸ்வதந்த்ரமாகவும் இருந்தாய்.இப்படி
உம் இஷ்டப்படி இருந்துவிட்டு ,இப்போது உம்முடைய ஸ்வாதந்தர்யத்தை ஏன் விடுகிறீர் ?
எனக்கு மட்டும்தான் ஸமர்ப்பணம் என்கிறீர் .பிராட்டிக்கும் எனக்குமாக , ஆக இருவருக்குமாக
இந்த ஸமர்ப்பணம் இல்லையென்றால் இதற்கு நான் எப்படி சம்மதிப்பது ?
பல பேருக்கு சேஷமாக இருந்தீர். ஸ்வதந்த்ரமாக இருந்தீர். –இப்போது, உன்
திருவடித் தாமரைகளில் என்னை ஸமர்ப்பிக்கிறேன் என்பதை மாற்றினால் —-
உமக்கு ஸ்வாதந்த்ரியம் இருப்பது , ”மயா ” என்கிற உம்முடைய சொல்லாலே வெளியாகிறதே —
அதற்குப் பதில் 53 வது ச்லோகம் —-
அடியேன் அப்படிக் கருதவில்லை—அந்தச் சொல்லுக்கு அது பொருள் அல்ல !
மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் ஸகலம் தத்த்தி தைவ வ மாதவ |
நியத ஸ்வம் இதி ப்ரபுத்த தீ : அதவா கிந்நு ஸமர்ப்பயாமி தே ||
நாதனே—பகவானே—–எந்தப் பொருள் எனதாக உள்ளதோ நான் எதுவாக இருக்கிறேனோ
அது எல்லாமே பிராட்டியுடன் சேர்க்கை உனக்கே தானே ! பகவானே ! எப்போதும்
உடைமை சொத்து இவ்வாறு தெளிவான அறிவை உடைய நான் அந்த அறிவுக்குப்
பின்னால் கூட உனக்கு எதைத் தான் எனதாகக் கொண்டு நானாக ஸமர்ப்பிப்பேன் ?
நானும் , என்னைச் சேர்ந்த சேதநாசேதந வஸ்துக்களும் என் பரம் முதலானவையும்
எல்லாமே உனக்கும் பிராட்டிக்கும் என்றும் பொதுவாக சேஷமாக இருப்பதை
நான் முன்னமேயே உணர்ந்து இருக்கிறேன் நான் செய்தது எல்லாம் சேதனனான என்னை
உனக்கு அதீனமாக்கினேன்
ஸ்வாத் மாநம் மயி நிக்ஷிபேத் —-என்று என்னைப் பார்த்து ,எப்படிச் செய்ய வேண்டும்
என்று கட்டளை இட்டாயோ அவ்வாறே செய்தேன் .
54 வது ச்லோகத்தில் —-இங்கு சிலகாலம் வாழ்ந்து இருந்து , அதன்பிறகு திருவடியை
அடைவதற்கு இணங்க அந்த இடைப்பட்ட காலத்தில் —சில க்ஷேமங்களை
வேண்டுகிறார்—–பக்தி —இப்படி—-
55 வது ச்லோகத்தில் பாகவத பக்தி வேண்டுகிறார்
56ல் பாகவத கடாக்ஷம் வேண்டுகிறார்
57 ல் அநிஷ்ட நிவ்ருத்தி
58 ல் பகவத அபசார ,பாகவத அபசாரம் செய்தவன் , ஆசாரம் இல்லாதவன் ,
பரிஹாரம் செய்ய வல்லவன் அல்லேன் , உனது கருணை முதலிய குணங்களால்
ஈர்க்கப்பட்டு ,அச்சமின்றி ஆசைப்படுகிறேன், அருள்வாயாக என்கிறார்
59 ல் நான் வேண்டியும் , நீ அளிக்கவில்லை என்று பிறர் பழிக்க , நீ, இடம்கொடாமல்
என்னைத் திருத்தி அருள்க என்கிறார்
60ம் ச்லோகம்
பிதா த்வம் மாதாத்வம் , தயித நயஸ்த்வம் ப்ரிய ஸுஹ்ருத் த்வமேவ , த்வபந்து :
கு ருரஸி கதிஸ் சாஸி ஜகதாம் |
த்வதீயஸ் த்வத் ப்ருத்ய : தவபரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச ஏவம் ஸதி அஹமபி
தவைவாஸ்மி ஹி பர : ||
ஜகதாம் த்வம் ஏவ பிதா = எல்லா உலகங்களுக்கும் நீயே பிதா. மாதா = தாய்
தயித தநய : =பிரியமான புத்ரன் .ப்ரிய ஸுஹ்ருத் =இஷ்டமான மித்ரன்
பந்து = உறவு . குரு = இருள் நீக்கும் ஆசார்யன் . கதி = எல்லோருக்கும் கதி .
அஹம் த்வதீய =நான் உனக்கு சேஷன் . த்வத் ப்ருத்ய = உன்னால் வளர்க்கப்படவேண்டியவன்
தவ பரிஜந : = உனக்கு ஊழியன் . த்வத் கதி = உன்னையே பேறாக உடையவன்
ப்ரபந்ந ச = ஸரணாகதி செய்தவன் . ஏவம் ஸதி = இப்படி இருக்கும் போது
அஹம் அபி தவ ஏவ பர அஸ்மிஹி =நானும் உனக்கே பரமாகிறேன் –உன்னால் ரக்ஷிக்க வேண்டியவனாக
இருக்கிறேன்
அதிகாரத்திலிருந்து
த்வயத்தில் பர ஸமர்ப்பணம்
இப்படி சேஷத்வாநுஸந்தான விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில்
உபாய பரமான பூர்வ கண்டத்தில் மஹா விச்வாஸ பூர்வக கோப்த்ருத்வவரண கர்ப்பமான
சரணசப்தோபலிஷ்ட க்ரியா பதத்திலே சேர்ந்து அநுஸந்திக்கப் ப்ராப்தம்
வ்யாக்யானம்
த்வயத்தின் முதல் பகுதியில் ,தன்னை ரக்ஷிக்கப் பகவானைச் சரணமடை என்று சொல்லப்படுகிறது.
இது, அவனது அடிமை என்பதையும், அவனுக்காகவே உள்ளேன் என்பதையும் குறிக்கிறது.
”ப்ரபத்யே ” –இது ”சரணம் ” என்கிற பதத்துடன் இருப்பதால், ”சரணம் என்பதற்கு ”காப்பாற்றுக ”
என்னும் வேண்டுதலுடன் தொடங்கி மஹாவிச்வாஸத்தை உள்ளடக்கியுள்ளது
அதிகாரத்திலிருந்து
இப்படி, இவை ஆறும் இம்மந்த்ரத்திலே விமர்சதசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள்போலே ஸாங்கமான ப்ரதானம்
ஏகபுத்தயாரூடமாம் . ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதானாநுஷ்டானம்
ஸக்ருத் கர்த்தவ்யமாயிற்று . அநேக வ்யாபார ஸாத்ய தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான
பாணமோக்ஷம் க்ஷணக்ருத்யமாகிறாற்போலே இவ்வாத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணமிருக்கும்படியென்று
ச்ருதிஸித்தம்
வ்யாக்யானம்
இங்ஙனம் இந்த ஐந்து அங்கங்களும் ஒரு அங்கியும் ,ஆக ஆறும் தனித்தனியே அநுஸந்தித்தாலும்
ஒரே பொருளை அளிக்க வல்ல வாக்யமாகும்.
இது, ஆத்மரக்ஷ ஸமர்ப்பணம் –ஒரு முறை செய்தாலே போதுமானது.
அம்பை எய்யும் ஒருவன் ,அமபை எடுப்பது , நாண் ஏற்றுவது,குறி பார்ப்பது என்று பல செயல்களைச்
செய்தாலும் ,அம்பு எய்தல் ஒரு நொடியில் முடிகிறது.இதைப்போலவே , எம்பெருமானைச்
சரணமடைதல் ஒருநொடிப்போதில் பூர்ணமாகிறது
முண்டகோபநிஷத் சொல்கிறது —- ( 2–2–4 )
ப்ரணவோ தனு : சரோஹ்யாத்மா ,
ப்ரஹ்ம தல்லக்ஷ்ய முச்யதே |
அப்ரமத்தேன வேத்தவ்யம்
சரவத் —தன்மயோ பவேத் ||
ப்ரணவமே —வில்.
ஆத்மாவே —-அம்பு
ப்ரஹ்மமே —அதன் குறி
அம்பைப் போல ,கொஞ்சங்கூடக் கவனம் பிசகாமல் எய்யப்பட வேண்டும்.
அப்படி எய்தால் , லக்ஷ்யத்துடன் ஒன்றுபட்ட நிலை வரும்
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி மந்த்ரங்களில் ,பரஸமர்ப்பணமே ப்ரதானம்
இப் பர ஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதானமாக அநுஸந்தேயமென்னுமிடத்தை
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி
என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பர ஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன் தானே தெளிய வருளிச் செய்தான்
வ்யாக்யானம்
நம்மைக் காப்பதாக உறுதி செய்கிற எம்பெருமான், ஸாத்யகி தந்த்ரத்திலே,
ப்ரபத்தி மந்த்ரங்களில் பர ஸமர்ப்பணமே அநுஸந்திக்கப்படுவதாகச்
சொல்கிறான்
அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்
மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய : க்ருதக்ருத்யோ பவிஷ்யதி
லக்ஷ்யத்தில் –இலக்கு –தைத்த அம்பு, இலக்கோடு ஒன்றி விடுவதைப்போல ,
பகவானிடத்தில் ப்ரணவத்தினால் ஸமர்ப்பிக்கப்பட்ட ஜீவாத்மா, பகவானுடன்
ஒன்றி முக்தி நிலையைத் த்யானிக்க வேண்டும்.
இந்த மந்த்ரம் ”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணத்தைச் சொல்கிறது. இதை அம்பை
எய்வதற்கு ஒப்பிடுகிறது.அம்பை எடுப்பது, வில்லில் நாணேற்றுவது, அம்பைத்
தொடுப்பது,இழுப்பது , குறி பார்ப்பது என்று பற்பலச் செயல்கள் ஒன்றன் பின்
ஒன்றாகச் செய்யப்பட்டாலும் ,அம்பை விடுவது ஒரு நொடியில் நடந்து விடுகிறது.
அதைப் போல,ப்ரபத்திக்கு ஸர்வ அங்கங்கள் இருந்த போதிலும்
”ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் ” நொடியில் முடிகிறது.( பகவானுக்குச் சேஷமாகவே
த்யானம் செய்யவேண்டும் —-என்று பொருள் )
இப்படிச் செய்ய வேண்டியத்தை என்னிடம் செய்தவன், செய்யவேண்டியத்தைச்
செய்துள்ளான் –என்று கருத்தாகும்
அதிகாரத்திலிருந்து
அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தி முறை
இதில் ஸாங்காநுஷ்டாநமாயற்றது கர்த்ருத்வ த்யாக மமதா த்யாக பல த்யாக
பலோபாயத்வ த்யாக பூர்வகமான ஆநுகூல்ய ஸங்கல்பாதி அர்த்தாநுஸந்தானத்தோடே
குருபரம்பரோபசத்தி பூர்வக த்வ்ய வசந முகத்தாலே ஸ்வரூப பல ந்யாஸ கர்மமான
ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை
வ்யாக்யானம்
ஐந்து அங்கங்களுடன் அங்கியை அநுஷ்டித்து தன் பொறுப்பை பகவானிடம்
அளிப்பது என்பதற்கு முன்பு,
தானே எல்லாமும் என்கிற எண்ணத்தையும்
எல்லாமே, எனது என்கிற எண்ணத்தையும்
பலன்களில் உள்ள பற்றையும்
பலனைக் கொடுக்குமுபாயத்தைத் தானாகவே பின்பற்றுவதாக எண்ணும் எண்ணத்தையும்
கை விட வேண்டும்.
பிறகு,பகவானுக்கு ஏற்றவனாக நடந்துகொள்வேன் ( ஆநு கூல்ய ஸங்கல்பம் )என்னும் உறுதி
போன்றவற்றை உள்ளபடி உணர்ந்து அதன்வழி நிற்க வேண்டும்.
தொடர்ந்து குரு பரம்பரையைத் த்யானித்தபடி இருக்க வேண்டும்.
த்வயமந்த்ரம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்
தன்னைக் காக்க வேணும் என்று பர ஸமர்ப்பணம் என்பது—
1.ஸ்வரூபத்தை அர்ப்பணிப்பது மற்றும்
2.பரஸமர்ப்பணம் மூலமாகக் கிடைக்கும் பலனையும் அர்ப்பணிப்பது
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தியில் உள்ள த்யாகங்களின் காரணம்
இக் கர்த்ருத்வ த்யாகத்துக்கு நிபந்தனம் தன் கர்த்ருத்வமும் அவனடியாக வந்ததென்று தனக்கு
யாவதாத்மபாவியான பகவதேக பார தந்த்யர்த்தை அறிகை .
மமதா த்யாகத்துக்கும் பல த்யாகத்துக்கும் நிபந்தனம் ஆத்மாத்மீயங்களுடைய
ஸ்வரூபாநுபந்தி பகவதேக சேஷத்வஞானம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தனம் சரண்ய
ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டானம் ப்ரதான பலத்துக்கு வ்யவஹித காரணமாகையும்
அசேதநமாகையாலே பலப்ரதாந ஸங்கல்பாச்ரயமல்லாமையும்
வ்யாக்யானம்
ஜீவாத்மாவாகிய நாம், பகவானையே சார்ந்து இருக்கிறோம் என்கிற சிந்தனை நமக்கு வரும் போது,
நாமே நமது செயல்களைச் செய்கிறோம் என்கிற கர்வம் நீங்கும்.
இந்தக் கர்வம் நீங்கியதும், செயல்களை செய்வது என்பது பகவான் கொடுத்த திறமை என்கிற
ஜ்ஞானம் வரும்.
இந்த ஜ்ஞானத்தால், என்னுடையது, ப்ரபத்தியின் பலன்மீது ஆசை ,யாவும் ,நீங்கி தானும்
தன்னைச் சார்ந்தவையும் பகவானுக்காகவே அவனுடைய அடிமையாக இருக்கிறோம்
என்கிற எண்ணமுண்டாகும்
இந்த எண்ணம் வந்ததும், ப்ரபத்தி என்பது அசேதனமாக உள்ளது; அது, நேரிடையாகவோ
மறைமுகமாகவோ மோக் ஷபலன் அளிக்கும் ஸங்கல்பம் கொண்டதல்ல; அந்தப் பலனை
அளிக்க பகவானே உபாயம் என்கிற ஜ்ஞானம் ஏற்படும் .
அதிகாரத்திலிருந்து
பகவான், பலனுக்கு நேர் உபாயம்
ஈச்வரன் பலோபாயமாகிறது ஸஹஜ ஸௌஹார்த்தத்தாலே கரண களேபர ப்ரதானம்
தொடங்கி த்வயோச்சாரண பர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதி காரணமான தானே
ப்ரஸாத பூர்வக ஸங்கல்ப விசேஷ விசிஷ்டனாய்க் கொண்டு அவ்யவஹித
காரணமாகையாலும் உபாயாந்தர சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தானத்திலே
நிவேசிக்கையாலும் இங்ஙனிருக்கும்படி தர்மி க்ராஹகமான சாஸ்த்ரத்திலே
அவகதமான வஸ்து ஸ்வபாவமாகையால் , இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க
வொண்ணாது
வ்யாக்யானம்
பகவான், மனிதர்களின் அவயவங்கள் வளரும் காலம் முதலாக த்வயத்தைச் சொல்லும்
காலம் வரை,அனைத்துக்கும் காரணமாகிறான்.அவன் ஸத்யஸங்கல்பன்;கருணா ஸமுத்ரம் .
கருணையை வெளிப்படுத்த ஆவலோடு உள்ளான் .மோக்ஷத்துக்கு நேர்க் காரணமாக
இருக்கிறான்.மற்ற உபாயங்களைச் செய்ய இயலாதவர்களுக்கு ,இவனே உபாயமாக
இருக்கிறான்.இவைகளை சாஸ்த்ரங்கள் மூலம் அறியலாம். சாஸ்த்ரங்கள் , மேலே சொல்லப்பட்ட
குணங்களை உடையவன் என்றும், வேறு எந்தக் காரணங்களாலும் மறுக்க இயலாது
என்றும் அறுதியிட்டுக் கூறுகின்றன
அதிகாரத்திலிருந்து
ஸ்ரீ நடாதூரம்மாள் சொல்லும் ப்ரபத்தி
இது ஸாங்காநுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு : —
”அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன் .
இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் . ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன் .
தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதலில்லை .தேவரீரையே
உபாயமாக அறுதியிட்டேன்.தேவரீரே உபாயமாக வேணும் .அநிஷ்ட நிவ்ருத்தியிலாதல்
இஷ்ட ப்ராப்தியிலாதல் எனக்கினி பாரமுண்டோ ? என்று
வ்யாக்யானம்
நடாதூரம்மாள், ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் முறையைச் சுருக்கமாகச் சொல்கிறார்
(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் )
கணக்கற்ற காலமாக உனக்குப் பிடிக்காதவற்றைச் செய்து ஸம்ஸாரத்தில் உழன்றேன்.
இன்று முதல், உனக்கு விருப்பமானதை மட்டும் செய்வேன்;உனக்கு வருத்தமேற்படும்
எதையும் செய்ய மாட்டேன்;உன்னை அடைய என்னிடம் எந்தக் கைமுதலுமில்லை ;
உன்னையே உபாயமாக அண்டினேன் ; எனக்குக் கஷ்டங்களை வருவதைத் தவிர்ப்பது,
ஸுகத்தை உண்டாக்குவது என்கிற செயல்களில் என் பொறுப்பு ஏதுமில்லை;
அவை யாவும் உன்னுடையதே
அதிகாரத்திலிருந்து
அங்கங்களை அநுஷ்டிப்பது
இவ்விடத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள் உபாய பரிகரமாய் ஸக்ருத்தாயிருக்கும் .
மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடே போகிற விடமும் உபாய பலமாய்
யாவதாத்மபாவியாய் இருக்கும். இவற்றில் ப்ராதிகூல்ய வர்ஜனமும் அம்மாள்
அருளிச் செய்தபடியே ஆநுகூல்ய ஸங்கல்பம்போலே ஸங்கல்ப ரூபமானாலும்
ஸக்ருத் கர்த்தவ்ய மென்னுமிடம் ஸ்பஷ்டம் . அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி என்கிறபடியே
அபிஸந்தி விராமமாதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதலானாலும் அதில்
ப்ரதம க்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாய்க்கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது
ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :
வ்யாக்யானம்
உபாயத்தின் அங்கமாக பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருப்பது ,
விருப்பமானதைச் செய்வது என்பவைகளை கடைப்பிடித்தாலே இவை அவன் ஆத்மா உள்ளவரை
நீடிக்கும்.
பகவானுக்கு விருப்பமில்லாததைச் செய்யாதிருத்தல் என்பதை ப்ரபத்தி சமயத்தில் ஒருமுறை
செய்தாலே போதுமானது.
லக்ஷ்மீ தந்த்ரம் ( 50–215 )
அபாயேப்யோ நிவ்ருத்த : அஸ்மி –ஸம்ஸாரத்தில் தள்ளக்கூடிய பாவங்களிலிருந்து
விலகினேன்
விருப்பம் இல்லாதவற்றைச் செய்யாமலிருப்பது –அவற்றின் தொடர்பு இல்லாமலிருத்தல்
அவற்றைச் செய்யாமல் இருப்பதில் உறுதி—இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்.
இருந்தாலும் , இது ஒரு அங்கமே .பிறகு, விருப்பமில்லாதவற்றை விலக்குதலென்பது
ப்ரபத்தியின் பலனாகவே ஆகும்.இதையே விச்வாஸத்திலும் நிலைநிறுத்தலாம் .
ப்ரவ்ருத்தி :அநுகூலேஷு நிவ்ருத்தி: ச அந்யத : பலம்
ப்ராரப்த ஸுக்ருதாச்ச ஸ்யாத் ஸங்கல்பே ச ப்ரபத்தி :
ப்ரபத்தி செய்து கொண்ட பிறகு பகவானுக்கு உகப்பைச் செய்வதும் ,உகப்பில்லாததைத்
தள்ளுவதும் ப்ரபன்னனின் பூர்வ ஜந்ம புண்யத்தாலும் ,ப்ரபத்தி சமயத்தில் செய்து கொண்ட
சங்கல்பத்தாலும் –அவற்றின் பலனாக அமைகிறது .
ப்ரபத்தி செய்தபிறகு ப்ரபந்நன் இவ்வுலகில் ஜீவிக்கும் காலத்திலும் ப்ரபத்தி
பலனைக் கொடுக்கிறது. எப்படியெனில் , பகவானுக்கு உகப்பில்லாததை விலக்குதல்
உகப்பானதைச் செய்தல் –தானாகவே ப்ரபத்தியின் பலனாகவே ப்ரபந்நன் செய்கிறான்
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி அநுஷ்டிப்பது
ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும் ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையும்
சேரப் பலமாகக் கோலிப் ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்
வ்யாக்யானம்
எல்லாமறிந்த நிபுணத்வம் உள்ளவர்கள் இவ்வுலகில் வாழும்வரை தொய்வின்றிக் கைங்கர்யம்
செய்யவேணுமென்றும், பலன் தரத் தொடங்கி விட்ட கர்மாக்கள் முடிந்து ,உடலை விடும்
நேரத்தில் மோக்ஷம் அடைய வேணுமென்றும் ப்ரபத்தி செய்வர்
அறவே பரமென்று அடைக்கலம் வைத்தனரென்று நம்மைப்
பெறவே கருதிப் பெருந் தகவுற்ற பிரானடிக் கீழ்
உறவே இவனுயிர் காக்கின்ற ஒருயிருண்மையை நீ
மறவேலென நம் மறை முடி சூடிய மன்னவர்
வ்யாக்யானம்
நமது ஆசார்யர்கள் வேத ஸாம்ராஜ்யத்தின் மன்னர்கள்;இவர்கள் ,அவர்களது
சிஷ்யர்களாகிய நம்மை, கருணா மூர்த்தியான ,கணக்கில்லாக் காலமாக
நம்மை ரக்ஷிப்பேன் என்று உறுதியுடன் இருக்கிற பகவானின் திருவடியில்
சேர்த்து நம்மை ரக்ஷிக்கும் பொறுப்பை நம்மிடமிருந்து நீக்கி, பகவானே
ரக்ஷிக்கவேண்டும் என்பதாக, ரக்ஷிக்கப்பட வேண்டிய பொருளாகச்
ஸமர்ப்பிக்கின்றனர் .
நமக்கு,”அந்தர்யாமியாக உன் ஹ்ருதயத்தில் உள்ள பகவான் எப்போதும்
உன்னை ரக்ஷிப்பான் ” என்று உபதேசிக்கின்றனர்
யுக்ய ஸ்யந்தந ஸாரதி க்ரமவதி த்ரயந்த ஸந்தர்சிதே
தத்வாநாம் த்ரிதயே யதார்ஹ விவித வ்யாபாரஸந்தாநிநி
ஹேதுத்வம் த்ரிஷு கர்த்துபாவ உபயோ : ஸ்வாதீநதைகத்ர தத்
ஸ்வாமி ஸ்வீக்ருத யத் பர :அயம் அலஸ : தத்ர ஸ்வயம் நிர்பர :
சித் , அசித் , ஈஸ்வரன் —-குதிரை, ரத்தம், ரதசாரதி
இப்படி இந்த மூன்றும் தன்மை செயல்கள் இவைகளில் ஒத்திருக்கின்றன,
என்று வேதாந்தங்கள் சொல்கின்றன .
இவற்றில் செயலாற்றுதல் சித் மற்றும் அசித்திடமும் , செயலற்ற தன்மை
ஈச்வரனிடமும் காணப்படுகின்றன.ஆதலால், யஜமானான எம்பெருமானால்,
காப்பாற்றும் பொறுப்பு ஏற்கப்படுவதால் ஜீவன் ( சித் ) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்
பொறுப்பு இல்லாதவனாகிறான்
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –12 வது அதிகாரம் —- ஸாங்கப்ரபதநாதிகாரம் —நிறைவு
——————-
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply