ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
———–
அதிகாரம் –13—க்ருதக்ருத்யாதிகாரம்–(ப்ரபத்தி செய்த பிறகு ,ப்ரபன்னனின் நிலை )
அதிகாரத்திலிருந்து
ஸமர்த்தே ஸர்வஜ்ஞ ஸஹஜ ஸஹ்ருதி ஸ்வீக்ருத பரே
யத் அர்த்தம் கர்த்தவ்யம் ந புநரிஹ யத் கிஞ்சித் அபி ந :
நியச் சந்தஸ் தஸ்மிந் நிருபாதி மஹாநந்த ஜலதெள
க்ருதார்த்தீ குர்ம : ஸ்வம் க்ருபணம் அபி கைங்கர்ய தநிந :
வ்யாக்யானம்
பகவான் எல்லாவற்றையும் செய்யும் சமர்த்தன்; எல்லாவற்றையும் நன்கு
அறிந்தவன்;அனந்த கல்யாண குண பரன் ;நமது ப்ரபத்தியை அங்கீகரித்த பிறகு
இந்த மோக்ஷம் என்கிற பலத்துக்காக எதையும் செய்யவேண்டியதில்லை.
ஆதலால், நாம் க்ருதக்ருத்யர் . ஆத்மாவை, பகவானை அனுபவித்தல் என்கிற ஆனந்தத்தில்
நிலை நிறுத்தி யுள்ளோம்
இப்போது ,பகவானுக்கு கைங்கர்யம் என்கிற தனம் ப்ராப்தமாகையால் க்ருதார்த்தம்
ஆபாச புருஷார்த்தங்களை எல்லாம் விட்டோம். மஹா புருஷார்த்தங்களைப் பெறுகிறோம்.
இதையும், பலப்பல ஜன்மங்களில் பக்தி முதலிய உபாயங்களில் இறங்கி கால தாமதம்
செய்யாமல் க்ஷண கால ஸாத்யமான ப்ரபத்தியாலே பெறுகிறோம் என்கிற மகிழ்ச்சி
அதிகாரத்திலிருந்து
ப்ரபத்தி செய்தவனை,”செய்யவேண்டியத்தைச் செய்தவன் ” என்று அழைப்பது ஏன் ?
இவ்வுபாய விசேஷ நிஷ்டன் ப்ராப்திக்கு அநந்தர காலம் தொடங்கித் தான் இதுக்குக்
கோலின பலத்தைப் பற்றத் தனக்குக் கர்த்தவ்யாம்சத்தில் அந்வயமில்லாமையாலும்
கர்த்தவ்யாம்சம் ஸக்ருதநுஷ்டானத்தாலே க்ருதமாகையாலும் ,ஸ்வதந்த்ரனாய்
ஸத்ய ஸங்கல்பனான பலப்ரதன் ”மா சுச : ” என்று அருளிச் செய்கையாலும்
தனக்குப் பிறந்த பரந்யாஸரூப தசையைப் பார்த்து நிர்பரனாய் ;
”மாமேகம் சரணம் வ்ரஜ ” என்கிறபடியே ஸித்தோபாயத்வேந ஸ்வீக்ருதனான
ஸர்வேச்வரன் , ”அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி ” என்று
பலப்ரதாந ஸங்கல்பத்தைப் பண்ணுகையாலே இப்படி விச்வஸநீயனுமாய்
ஸமர்த்தனுமாய் உபாய பூதனுமான ஈச்வரனைப் பார்த்து பலஸித்தியில்
நிஸ்ஸம்சயனுமாய் , நிர்பயனுமாய் ,கடையேற விட்ட அந்ய புருஷார்த்தங்களையும்
காம்பற விட்ட உபாயாந்தரங்களையும் அகிஞ்சநன்அயத்நமாக மஹா நிதியைப்
பெறுமாப்போலே தான் பெறப் புகுகிற பரம புருஷார்த்தத்தையும் பார்த்து
ஹஷ்டமநாவாய் ;
தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந :
என்கிற ச்லோகத்தின்படியே ப்ரஜாபதி பசுபதி என்றாற்போலே பேரிட்டுக் கொண்டிருக்கிற
ஸஜாயதீயரான க்ஷேத்ரஜ்ஞரைப் பற்ற ஓரோர் அவஸரங்களிலே கைக்கூலி போலே
சில உபாதிகளடியாக எழுதா மறையிலே ஏறிட்டுக் கிடக்கிற அடிமை தீட்டும்
முதல் மாளாதே பொலிசை யிட்டுப் போகிற தனிசு தீட்டும் கிழித்தவனாகையாலே
பஞ்சமஹா யஜ்ஞாதிகளான நித்ய நைமித்தகங்களில் அவர்கள் பேர் சொல்லும் போது
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே
இத்யாதிகளில் மஹர்ஷிகள் அறுதியிட்டபடியே ராஜஸேவகர் ராஜாவுக்குச் சட்டை மேலே
மாலையையும் ஆபரணத்தையும் இட்டாலும் சட்டையில் துவக்கற்று ராஜாவின் ப்ரீதியே
ப்ரயோஜனமாகத் தெளிந்திருக்குமாப்போலவும் யஜ்ஞ அக்ரஹர அத்யாயாதிகளிலும்
ஸ்ரீ ஹஸ்தகிரிமஹாத்ம்யத்திலும் ஸாக்ஷா தர்ப்யாவரோதம் ஜைமிநி :என்கிற
ஸூத்ரத்திலும் சொல்லுகிறபடியே தேவர்கள் பித்ருக்கள் என்கிற சட்டைகளோடு
துவக்கற அவ்வோ சப்தங்கள் அவயவ சக்தி பௌஷ்கல்யங்களாலே ஈச்வரன் பக்கலிலே
நாராயணாதி சப்தங்கள் போலே நிற்கிற நிலையையுங்கண்டு அவற்றினுடைய
உச்சாரணாதிகளில் ச்வேததீபவாஸிகளான சுத்தயஜாதிகளுக்குப் போலே தன்
பரமைகாந்தித்வம் குறையாதே நிற்கிறபடியை நிரூபித்துத் தன் வர்ண ஆச்ரம நிமித்த
குணாத்யதிகாரத்துக்கு அநுரூபமாக அடிமை கொள்ள ஸங்கல்பித்திருக்கிற சாஸிதாவான
சேஷியினுடைய சாஸ்த்ரவேத்ய ஆஜ்ஞாநுஜ்ஞா பரிபாலநரூப கைங்கர்யமுகத்தாலே
ப்ரத்யக்ஷ விதித பரமபுருஷாபிப்ராயரான முக்தரைப்போலே கிஞ்சித்கரனாய்க் கொண்டு
முக்த துல்யனாய் , உபாய பூர்த்தியாலே க்ருதக்ருத்யனென்றும் , புருஷார்த்த பூர்த்தியாலே
க்ருதார்த்தனென்றும் சாஸ்த்ரங்களாலும் தந்நிஷ்டராலும் கொண்டாடப்பட்டிருக்கும்
வ்யாக்யானம்
ப்ரபத்தி உபாயத்தில் இழிந்தவன் ,இந்த உபாயத்தைத் தொடங்கியதுமுதல் ,அதன் பலனைப்
பெறுவதற்கு, வேறு எதையும் செய்யவேண்டியதில்லை.ஒருமுறை இப்பிரபத்தி செய்ததிலேயே
யாவும் அடங்கியுள்ளது .
ஸ்வதந்த்ரன், எண்ணிய செயலை முடிப்பவன், ப்ரபத்தி பலனை
அளிப்பவன் —ஸர்வேச்வரன் ஸ்ரீமத் பகவத் கீதையில் ( 18–66 ) ,
”மா சுச : ” –கவலைப்படாதே என்கிறான்
இவற்றால்,ப்ரபந்நன் ,தனது பாரங்களைப்
பகவானிடம் ஸமர்ப்பித்து விட்டதால், கவலையில்லாமல் உள்ளான்.
மோக்ஷத்துக்கு என்று வேறு ஒன்றும் செய்யவேண்டாம். வேறு புருஷார்த்தங்களை விட்டபடியால்
அதற்கான காம்ய கர்மாக்களைச் செய்யவேண்டாம். காம்யம் என்றால்–தேவதாந்த்ரம் —
தேவதாந்த்ர கர்மாக்கள். காம்யங்கள் வேண்டாத போது, அதற்கு என்று இருக்கிற
நித்ய—நைமித்திக கர்மாக்கள் வேண்டாம். ஆனால், சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட
நித்ய கர்மாநுஷ்டானங்கள் கட்டாயம் செய்தாகவேண்டும். இது தேவதாந்த்ர பூஜை அல்ல.
வைதீக கர்மாக்கள் , தேவதாந்த்ர கர்மாக்கள் ஆகாது.
ப்ரபத்தி செய்துகொள்வதற்கு முன்பு கவலைகள் —சோகம் இருந்திருக்கலாம்
ஆனால், ப்ரபத்திக்குப் பிறகு சோகிக்கலாகாது.
{ இந்த சோகம் –கர்மாக்களை அநுபவித்துத் தீர்க்க வேண்டும் ,எப்படி இதைத் தீர்ப்பது,
நிவ்ருத்திக்குப் பிறகு தானே மோக்ஷம் , பகவான் நம்மை எப்படி அநுக்ரஹிப்பான்
என்றெல்லாம் நினைத்து கவலை–சோகம் }
இப்படியாக உபாயமாக இருக்கிற பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையில்
என்னை மட்டும் சரணமாக அடைவாயாக என்கிறான். மற்றும் இதற்கான பலனைத்
தானே அளிப்பதாயும் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவதாகவும் உறுதி
அளிக்கிறான் .
இப்படி , நம்பத் தகுந்த , எதையும் தங்கு தடை யின்றி க்ஷண காலத்தில் செய்யும்
வல்லவனான , உபாயமாக உள்ளவனான பகவானிடம் ,இப்ப்ரபந்நன் , சந்தேகங்களை
விடுத்து, பயத்தைத் துறந்து, மற்ற புருஷார்த்தங்கள் அவற்றின் வாஸனை யாவையும்
விட்டொழித்து, ஆனந்தமடைகிறான்.
எவ்வித முயற்சியும் இன்றி, பரம ஏழைக்குப் பெரும் செல்வம் கிடைத்தால் மகிழ்வதைப்போல்
ப்ரபந்நன் ,பரமபுருஷார்த்தத்தை அடைவது எண்ணி மகிழ்கிறான்
ஸ்ரீமத் பாகவதம்
தேவர்ஷி பூதாத் மந்ருணாம் பித்ருணாம் ந கிங்கரோ நாயம்ருணீ ச ராஜந்
ஸர்வாத்மநா ய :சரணம் சரண்யம் நாராயணம் லோககுரும் ப்ரபந்ந :
எல்லோராலும் அடையத்தக்கவனும் , எல்லோருக்கும் ஆசார்யனுமான நாராயணனைச்
சரணமடைந்தவன், தேவர், முனிவர் , மனிதர், பித்ருக்கள் என்கிற எவருக்கும்
அடிமையில்லை. கடன்பட்டவனுமல்ல . நித்ய நைமித்திக கர்மாக்களில், ப்ரஜாபதி,
பசுபதி என்கிற நாமாக்களை சொன்னாலும், வர்ணாச்ரம தர்மப்படி வேதங்களுக்குக்
கடன்பட்டவர்களாக அந்தக்கடனுக்கு வட்டி செலுத்துவதைப்போலத் தொண்டு செய்தாலும்,
ப்ரபந்நன் –ப்ரபத்தி செய்தவனுக்கு இந்தக் கடன் சீட்டு கிழிக்கப்பட்டதாகிறது .
பஞ்சமஹா யஜ்ஞங்களில் இவர்களின் பெயர்களை சொன்னாலும், அவை எம்பெருமானையே
சொல்வதாகும்.
மஹாபாரதம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந்
ஸர்வ பூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே
எந்தப் பரமைகாந்திகள், பித்ருக்களையும் , தேவதைகளையும் ,ப்ராஹ்மணர்களையும் ,
அக்னியையும் கூறி யாகம் செய்கிறார்களோ, அவர்கள் அந்த பித்ராதிகளுக்கு
அந்தர்யாமியான விஷ்ணுவையே ஆராதிக்கிறார்கள்.
பரமைகாந்திகள் அல்லாதவர்கள், பரமாத்மாவை அறியாதவர்கள் செய்யும் யாகாதிகள்கூட
விஷ்ணுவுக்குச் செய்யும் ஆராதனமே .ஆனால், பரமாத்மாவை இவர்கள் அறியாததால்,
ஸ்பஷ்டமாக இவர்களுக்குப் புரிவதில்லை.
ராஜாவின் சேவகர்கள் , ராஜாவின் உடலில் உள்ள வஸ்த்ரத்தின்மீது ( சட்டை ) ஆபரணங்கள்
அணிவித்தாலும், அவை, ராஜாவுக்கே அணிவித்ததைப்போல ஆகிறதல்லவா !
யஜ்ஞ அக்ரஹரம்
யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் –மஹாபாரதம்—-சாந்தி பர்வம்
வேத வ்யாஸர் , தன்னுடைய சிஷ்யர்களான ஸுமந்து , ஜைமினி , பைலர் ,வைசம்பாயனர்
சுகப்ரஹ்மம் ஆகிய 5 சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.
கல்பத்தின் துவக்கத்தில் நாராயணன் ப்ரக்ருதியையும் , ப்ரஹ்மாவையும் ,பஞ்சபூதங்களையும்
மரீசி ,, மநு முதலிய எட்டுப் போரையும் ச்ருஷ்டித்தார் .
ப்ருஹ்மா —-வேதங்கள், வேதாந்தங்கள் , யஜ்ஞம் , அதன் அங்கம் ,ருத்ரன், இவைகளைச்
ச்ருஷ்டித்தார் . ருத்ரன் , 10 ருத்ரர்களை ச்ருஷ்டித்தார்.
ப்ருஹ்மா , தேவர்கள் தேவரிஷிகளிடம் உலகை அமைக்க வேண்டிய பொறுப்பைக் கொடுத்தார்.
ஆனால், அவர்களோ பொறுப்புக்களை நிறைவேற்ற இயலவில்லை என்று ப்ருஹ்மாவிடம்
சொன்னார்கள். அதற்கான சக்தியைப் பெறுவதற்கு, ப்ருஹ்மா இவர்களுடன் திருப்பாற்கடலுக்குச்
சென்று , கைகளை உயரத் தூக்கி ஒற்றைக் காலால் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார்கள்.
அப்போது, ”நீங்கள் என்னை ஆராதித்த பலனை விரைவில் அடைவீர்கள் ;எல்லோரும்
தினந்தோறும் யாகம் செய்து அதில் எனக்கு ”ஹவிஸ் ” அளியுங்கள் . நான் உங்களுக்கு
ச்ரேயஸ்ஸைக் கொடுக்கிறேன் ” என்று அசரீரி ஒலித்தது .இதைக்கேட்டு மகிழ்ந்த
தேவர்கள் வைஷ்ணவ யாகத்தைச் செய்தார்கள்.
பாரதத்தில், யாகங்களில் முக்யமான பாகத்தைக் பகவான் ஸ்வீகரிக்கிறான் என்பதை
விரிவாகச் சொல்வது யஜ்ஞ அக்ரஹர அத்யாயம் —
ப்ரஹ்ம —ருத்ராதி தேவர்கள் தாங்கள் செய்யும் லோக நிர்வாகத்தைச் சரியாகச்
செய்வதற்கு, பகவானை வேண்டினார்கள். அவர், ”வைஷ்ணவ யாகம் ”செய்யும்படியும்
அதில், அவரவர்கள் தங்களுக்கு முடிந்தவரையில் தன்னை ஆராதிக்கும்படியும்
யார் யார் எவ்வளவு தூரம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு , யாகத்தில் உங்களுக்கும்
பங்கு கிடைக்கும் .ப்ரவர்த்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் இரண்டில் மோக்ஷம் தவிர
வேறு பலன்களுக்குப் ப்ரவர்த்தி தர்மம் என்கிறவற்றைச் செய்பவர் –உங்களை ஆராதிப்பர் .
அவர்கள் அளிப்பவை, உங்களைப் புஷ்டியாக்கி நிர்வாஹம் செய்ய உதவும்.
ப்ரஹ்மா ருத்ரன் இருவரும் இந்த வரப்ரதான சக்தியை விசேஷமாகப் பெறுவார்கள்.
முமுக்ஷுக்கள், நிஷிகாம்யமாக நிவ்ருத்தி தர்மமாகச் செய்வர் —
அதனால், அதில் நானே ஆராதிக்கப்படுகிறேன் —–
ஹஸ்தகிரி மஹாத்ம்யம்
ப்ருஹ்மா செய்த அச்வமேத யாகத்தில் அக்நி மத்தியில் இருந்துகொண்டு,
எம்பெருமானே வரதனே எல்லா ஹவிஸ்ஸையும் ஸ்வீகரித்தார்
தேவதைகள், ப்ருஹ்மாவிடம் ” தேவரீர் , எங்கள் பெயரைச் சொல்லி ஹவிஸ்ஸை
அக்நியில் சேர்க்கும்போது , அந்த ஹவிஸ்ஸுக்கள் எங்களுக்கு வரவில்லையே –”
என்று கேட்டார்கள். அதற்கு, ப்ருஹ்மா , ”நான் ஒருபோதும் உங்களை ஆராதிக்கவில்லை.
முமுக்ஷுக்கள் செய்யும் கர்மாக்களில், பகவானே நேரில் ஹவிஸ்ஸை ஸ்வீகரிக்கிறான் ”என்றார்
ப்ரஹ்ம ஸூத்ரம் ( 1–2–29 )
அக்நி போன்ற சொற்கள் எம்பெருமானையே குறிக்கிறது. அதனால், விரோதமில்லை என்று
ஜைமினி கூறுகிறார்
தேவர்கள் , பித்ருக்கள் என்னும் சொற்கள் பகவானின் சட்டை போன்று உள்ளவர்களைக்
குறிக்கவில்லை; பகவானையே குறிக்கிறது.
ச்வேத த்வீபத்தில் உள்ளவர்கள் நாராயணன் என்கிற திருநாமத்தில் ”நார ”
என்கிற சப்தம் செய்தாலும், அது அவன்மீது மட்டுமே உறுதியான பக்தியை வெளிப்படுத்துமோ
அதைப்போன்று, ப்ரபந்நன் தனது கர்மாக்களைச் செய்யும்போது ப்ரஜாபதி , பசுபதி
என்று சொன்னாலும் எந்தத் தோஷமும் அண்டுவதில்லை.அவரவர் வர்ணாச்ரமத்துக்கு
ஏற்ப அவரவர்களை ,பகவான் சேவகனாக மகிழ்வுடன் ஏற்கிறான்.ஆதலால், சேஷியான
அவனுக்குக் கைங்கர்யம் செய்வது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டதாகும்.
முக்தர்கள், எவ்விதம் பகவானின் திருவுளத்தை நேரிடையாகவே அறிந்து கைங்கர்யம்
செய்கிறார்களோ அவ்விதமே ப்ரபந்நனும் சிறிது சிறிதாகக்கைங்கர்யம் செய்ய
முயற்சிப்பான்.இவன், சரியான உபாயத்தைச் செய்ததால் ”க்ருதக்ருத்யன் ” என்றும்,
தான் அடையவேண்டிய புருஷார்த்தத்தை அடைந்துவிட்டதால் ”க்ருதார்த்தன்”
எனவும் மெச்சப்படுகிறான்.
அதிகாரத்திலிருந்து
சரணாகதி கத்யம் –உதாரணம்
இவனுடைய இந்தக் க்ருதக்ருத்ய அநுஸந்தானத்தை அதஸ்த்வம் தவ தத்த்வதோ
மத்ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சய : ஸுகமாஸ்ஸ்வ என்று சரணாகதி கத்யத்திலே
நிகமித்தருளினார் . இதுக்குக் கருத்து —அநாதிகாலம் அஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான
பகவந்நிக்ரஹத்திலே ஸம்ஸரித்துப்போந்த நமக்கு அவஸர ப்ரதீக்ஷை பகவத்
க்ருபையடியாக உண்டான ஸதாசார்ய கடாக்ஷ விஷயீகாரத்தாலே வந்த த்வயோச்சரண
அநுச் சாரணத்தாலே ப்ரபத்த்யநுஷ்டானம் பிறந்தபின்பு சரண்ய ப்ரஸாதநங்களில்
இதுக்கு மேல ஒன்றில்லாமையாலே நிக்ரஹ ஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத்
தீர்த்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல ஸர்வ சேஷியான ஸ்ரீ ய :பதி
தன் பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்பரனாயிரு—-என்கை. இது,
மா சுச : ” என்கிற சரண்ய வாக்கிலும் தீர்ந்த பொருள்
வ்யாக்யானம்
இந்தக் க்ருதக்ருத்யன் , தான் செய்யவேண்டியத்தைச் செய்துவிட்டதால் ,அடைவதை
எம்பெருமானார் ,சரணாகதி கத்யத்தில்
அந்மதம் நோக்த பூர்வம் மே ந ச வக்ஷ்ய கதாசன ராமோ த்விர்நாபி பாஷதே ,
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யா ச தே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ :
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச :
இதி மயைவஹ்யுக்தம் || அதஸ்த்வம் தவ தத்வதோ மத்
ஜ்ஞான தர்ஸந ப்ராப்திஷு நிஸ்ஸம்சய :ஸுகமாஸ்வ ||
கணக்கில்லாக் காலமாக பகவானின் கட்டளையை ,நமது அறியாமை காரணமாக,
மீறி நடந்ததால், அதற்கான தண்டனையான ஸம்ஸாரத்தில் உழன்று துக்கப்படுகிறோம்;
கஷ்டப்படுகிறோம்.நம்மைக் கரையேற்றச் சரியான சந்தர்ப்பத்தை பகவான் ஏற்படுத்தி,
ஆசார்யனானின் கடாக்ஷம் கிட்டச் செய்கிறான். ஆசார்யனின் கிருபையால், த்வய
அநுஸந்தானம் செய்து ப்ரபத்தி செய்துகொள்கிறோம் . அடுப்பில், களைந்து வைக்கப்பட்ட
நீரில் உள்ள அரிசி கொதிக்கும்போது, அதை அக்நி பக்குவப்படுத்தி கீழிருந்து
மேலுக்குக் கொண்டுபோய்விடுகிறது;மேலே போனதும் கொதிக்கும் சப்தம் நின்றுவிடும்.
இந்த சப்த சக்தி –நாராயணாதி ஸப்தங்கள் — ஸம்ஸாரியான நம்மை, மேலே, பகவானிடம்
கொண்டு சேர்க்கும்வரை இருக்கும்;
பெரிய பெருமாள் திருவாய் மலர்வதாக , சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ உடையவர் சொல்வது—
இதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.; யாம் பொய் கூறியதில்லை;இனியும் கூறமாட்டோம் .
ஸ்ரீ ராமன் இரண்டுவிதமாகச் சொல்லமாட்டான். ”ஒருக்காலே சரணம் என்பார்க்கும்
உமக்கே தொண்டன் என்பார்க்கும் எல்லாரிடமிருந்தும் அபாயம் அளிக்கிறேன் ;
இது என் வ்ரதம்.
உரிய சாதனங்களைச் செய்ய இயலாத நீர் ,என்னைச் சரணமாக அடைவீராக . நான்,
உம்மைச் , சகல பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் . சோகத்தை விடும் —-
ஆதலால் நீர் சந்தேகமும் அறிவில் குழப்பமும் இல்லாமல் ஆசார்ய அநுக்ரஹத்தால்
வந்த எம்மைப் பற்றிய ஜ்ஞானம் மாறாமல், குறையாமல், தொடர்ந்து இருப்பதிலும்
எம்மை நேரில் தரிசிப்பது போன்ற நினைவிலும் எம்மை அடைவதிலும் ,சந்தேகம்
சிறிதும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பீராக—-” என்று பெரிய பெருமாள்
திருவாய் மலர்ந்து அருள்கிறார்
பெரியபிராட்டியின் நாயகனான பெரியபெருமாள், நம்மைத் தூய்மையாக்கி
தனது கைங்கர்யத்தில் இழியச் செய்கிறான்.இப்படியாக பகவான் நம்மைக்
காப்பான் என்கிற நம்பிக்கையுடன் ப்ரபந்நன் எவ்வித வருத்தமில்லாமல்
இருக்கவேண்டும் –இதையே ,கீதையில் மா சுச :” என்கிறான்–
அதிகாரத்திலிருந்து
க்ருதக்ருத்யன் –யார்
இவனுக்குப் ப்ரபத்திக்கு முன்புற்ற சோகம் அதிகாரத்திலே சொருகுகையாலே முன்பு
சோகித்திலனாகில்அதிகாரியல்லாமையாலே காராணாபாவாத் கார்யபாவ : என்கிற
ந்யாயத்தாலே உபாய நிஷ்பத்தி உண்டாகாது. உபாயஸ்வீகாரம் பண்ணினானாகத்
தன்னை நினைத்திருந்த பின்பு சரண்யோக்தியிலே நெகிழ்ச்சி உடையவனாய்
சோகித்தானாகில் கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ : என்கிற ந்யாயத்தாலே
பூர்ணோபாயநல்லாமையாலே பலம் உபாயபூர்த்தி ஸாபேக்ஷமாய்க்கொண்டு
விளம்பிக்குமென்று அறியலாம். முன்பு ப்ரஸக்த சோகனாய் பின்பு ”மா சுச : ”
என்று ப்ரதிஷேகிக்கிறபடியே வீதசோகனானவன் க்ருதக்ருத்யனென்று அறியலாம்
வ்யாக்யானம்
ஸம்ஸாரத் துன்பங்கள், ஆத்ம ஸ்வரூபத்துக்கு விரோதமாக நடப்பது–இவற்றால் ஏற்படும்
வருத்தம், ப்ரபத்திக்குத் தகுதியானவாக ஆக்குகிறது.இவ்வருத்தம் இல்லையெனில்,
ப்ரபத்திக்கு அருகதை இல்லை எனலாம். இதையே, காராணாபாவாத் கார்யபாவ :
என்கிறார்கள். காரணம் இல்லையெனில் , கார்யம் இல்லை. ப்ரபத்திக்குப் பிறகும்,
நம்பிக்கைக்கு குறைவால், வருத்தம் நீடிக்கக்கூடும். கார்யபாவாத் ஸாமக்ரஞ்ய பாவ :
கார்யம் இல்லையெனில், காரணம் இல்லை. இவர்களுக்கு, ப்ரபத்தி பூர்த்தியாகாது.
ப்ரபத்தி பூர்த்தியாகாதவரை ,அதன்மூலமாக எதிர்பார்க்கும் பலனும் தள்ளிப்போகும் .
எவன், ப்ரபத்திக்கு முன்புவரை வருத்தத்தில் அல்லல்பட்டு, ப்ரபத்திக்குப் பிறகு
”மா சுச : ” என்கிற பகவானின் ஆறுதல் வார்த்தையை, மனதில் ஏத்தி, வருத்தமில்லாமல்
வசிக்கிறானோ , அவனே க்ருதக்ருத்யன் ஆகிறான் .
அதிகாரத்திலிருந்து
மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வாங்கருத்தோர்
அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரித் திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே
பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யஸநம் க்ருதம்
பரிமித ஸுக ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத்
பவதி ச வபுவ்ருத்தி : பூர்வம் க்ருதை : நியதக்ரமா
பரம் இஹ விபோ : ஆஜ்ஞாஸேது : புதை : அனுபால்யதே
வ்யாக்யானம்
யார் = மன்னவர்—-நமக்கு அரசர்கள்
யார் = விண்ணவர் —–தேவதைகளைப் போல நம்மால் ஆராதிக்கத் தகுந்தவர்
யார் = வானோரிறை —நித்ய ஸூரி களுக்கு ஸ்வாமியான பகவான்
யார் = ஒன்றும் வான் கருத்தோர் —-வசிக்கும் பரமபதத்திலேயே ஆசையுடையவர்கள்
யார் = அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் —நல்லது,கெட்டதுகளைப்
பிரித்து அறிபவர்கள் ,செய்யவேண்டிய
யாகங்கள் யாவும் செய்துமுடித்தனர்
இவர்கள்
அன்புடையார்க்கு என்ன வரம் தரவென்ற —தன்னிடம் பக்தி உடையோர்க்கும்
அவர்களைச் சேர்ந்தோர்க்கும்
மோக்ஷம் கொடுத்த பின்பும்,இன்னும்
என்ன வரம் கொடுக்கலாம் எனச் சிந்திக்கிற
நம் அத்திகிரித் திருமால் —ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருக்கும் நம் பேரருளாளனால்
முன்னம் வருந்தி—–முன்பு ப்ரயாசைப்பட்டு
அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே –ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களாக
ஏற்றுக் கொள்ளப்பட்ட நமக்கு முக்கியர்களான ப்ரபந்நர்கள்
தன்னிடம் பக்தியுள்ளவர்கட்கு ,என்ன வரம் அளிக்கலாம் என்று எண்ணியபடி
ஹஸ்திகிரியில் எழுந்தருளியுள்ள பேரருளாளன், தன்னால் காக்கப்படவேண்டியவர்கள் என்று
அவர்களை ப்ரபன்னர்களாக்குகிறான் இப்படிப்பட்ட ப்ரபன்னர்கள் , நமக்கு அரசர்
போன்றவர்கள்; தேவர்களைப்போல நம்மால் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்;
நித்யஸூரிகளின் தலைவனான எம்பெருமானின் வைகுண்டத்தில்வஸிக்க ஆர்வமுடையவர்கள்
நல்லது , கெட்டது அறியக்கூடிய அன்னம் போன்றவர்கள்; இவர்கள் செய்யவேண்டியத்தைச்
செய்து முடித்தவர் ஆவர்
ஸம்ஸாரத்திலிருந்து விடுபட, விரோதியை அழிக்கும் பகவானின் திருவடிகளில் ப்ரபத்தி
செய்யப்பட்டது.அல்ப பலனைக் கொடுக்கும் காம்ய கர்மாக்களை விட்டொழித்து,
ப்ரபத்திக்குப் பிறகு பகவானின் கட்டளையாகிற நித்ய, நைமித்திக கர்மாக்களைச்
செய்வது ஸ்வரூபம் அறிந்த ப்ரபன்னர்களின் கடமையாகும்.
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –13 வது அதிகாரம் —-க்ருதக்ருத்யாதிகாரம் — நிறைவு
——————-
கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம : ||
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உருப்பத்தூர் ஸூந்தர ராஜன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply