ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/36–இராவணன் வதைப் படலம்–

தேவர் வாழ்த்துரைக்க இராமன் தேரேறிச் செல்லுதலும்,
இராவணன் இராமனை நோக்கி வருதலும், மகோதரன் இராமனால்
மடிதலும், தீ நிமித்தங்களைப் பொருட் படுத்தாது இராவணன்
துணிதலும், இராவணனின் போர்த் திறங்களும், வர வலிமையும்
சிறிது சிறிதாய் அழிய இராமன் கடவுள் அவதாரமோ என எண்ணி
யாரேயாயினும் போரிடுவது என முடிவு செய்தலும், அம்பு பட்டு
இராவணன் மயங்கிய காலை அவனைக் கொல்லுமாறு மாதலி
கூறியதை இராமன் ஏற்க மறுத்தலும், தேறிய இராவணன் கடும்
போர் புரியப் பிரம்மாத்திரத்தால் அவனை இராமன் மாய்த்தலும்,
அவன் முதுகுத் தழும்பு கண்டு இராமன் நாணியபோது வீடணன்
உண்மை கூறித் தெருட்டலும், பின்னர் பகை விடுத்து இறுதிக்
கடன் செய்யுமாறு வீடணனை இராமன் தூண்டுதலும், வீடணன்
துயரும், இராவணன் மனைவியர் புலம்பலும், மண்டோதரி
பிரிவாற்றாது புலம்பி மாய்தலும், இராவணனுக்கும் பிற
அரக்கர்க்கும் இறுதிக்கடன் செய்து வருந்திய வீடணனை
இராமன் தேற்றுதலும் இப்படலத்துப் பொருளாக அமைந்துள்ளன.

——–

தேவர்கள் வாழ்த்த, இராமன் தேரில் செல்லுதல்

ஆழி அம் தடந் தேர், வீரன் ஏறலும், அலங்கல் சில்லி
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத,
ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்,
வாழிய அனுமன் தோளை ஏத்தினார், மலர்கள் தூவி. 1-

ஆழி அம் தடம் தேர் – சக்கரங்கள் அமைந்த, அழகிய
பெரிய தேரின் மீது; வீரன் ஏறலும் – வீரனாகிய இராமபிரான்
ஏறியதும்; அலங்கல் சில்லி- ஒளி வீசும் தேருருளை; பூமியில் சுரித்த
தன்மை – புழுதியில் புதைந்த தன்மையை; நோக்கிய
புலவர்போத – பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வந்து;
(இராமபிரான் உடற்பாரத்தை வியந்தவர்களாய்); ஊழி வெங்
காற்றின் – யுக முடிவுக் காலத்தில் பொங்கும் வெப்பம்
நிறைந்த சூறாவளியைக் காட்டிலும்; வெய்ய கலுழனை –
கொடிய கருடாழ்வானை,; ஒன்றும் சொல்லார்- (நினைந்து)
புகழ்ச்சியாக யாதும் கூறாமல்; அநுமன் தோளை- (ஆற்றல்
மிக்க) அநுமனின் தோள்களை; மலர்கள் தூவி – பூக்கள்
சொரிந்து; வாழிய – வாழ்க வாழ்க என்று; ஏத்தினார்-
போற்றி செய்தார்கள்.

—————-

‘எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி
விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி
அழுக, பேர் அரக்கிமார்’ என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி
முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 2-

(தேவர்கள் மேலும்), அமரர் – தேவர்; தேர் எழுக-
இத்தேர் மேலெழுக; எல்லோம் வலியும் சுமக்க – நம்
யாவருடைய வலிமையையும் இத்தேர் ஏந்துவதாக; புக்கு
இன்றே போர் அரக்கன் பொன்றி விழுக – (இத்தேர்)
புகுவதால் இன்றைய தினமே போர் வெறி கொண்ட அரக்கனாகிய
இராவணன் அழிந்து வீழ்வானாக; வேந்தர்க்கு வேந்தன்
வெல்க- வேந்தருக்கெல்லாம் சக்கரவர்த்தியான இராமன் வாகை
சூடுவானாக; பேர் அரக்கிமார் விம்மி அழுக- அரக்கர்களின்
மனைவிமார்களான எண்ணற்ற அரக்கியர் (தம் கணவர் மாய)
விம்மி அழுவார்களாக’; என்று அமரர் ஆர்த்தனர் – என்று
கூறி தேவர்கள் ஆரவாரம் புரிந்தனர்; மூரித்திண்தேர்-
வலிமையும் திண்மையும் மிக்க இராமனின் தேர்; ஆழி முழுகி
மீதெழுந்தது என்ன- கடலில் முழுகி மேலெழுந்தாற் போன்று
(புழுதியினின்றும் பொங்கியெழுந்து); சென்றது – (போர்க்களம்
நோக்கிச்) சென்றது.

———–

இராமன் எதிரே தேரை செலுத்துமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல்

அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார் மன் நெடுந் தேர்’ என்று
உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்; பின், ‘அது கிடக்க’
என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி’ என்றான். 3-

அன்னது- அந்தத் தேரை; கண்ணின் கண்ட அரக்கனும்
– தன் கண்களால் பார்த்த இராவணனும்; ‘மன் நெடுந் தேர்
அமரர் ஈந்தார்’ – ‘நிலை பெற்ற பெரிய தேரைத் தேவர்
கொடுத்தார்’; என்று உன்னி – எனக் கருதி; வாய் மடித்து
எயிறு தின்றான் – உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
பின் – அதன்பிறகு; ‘அது கிடக்க’ – ‘அது கிடக்கட்டும்’;
என்னா- என்று (அலட்சியமாய்க்) கருதியவனாய்; தன்னுடைப்
பெருந்திண் தேரை- தன்னுடைய பெரிய வலிமையான தேரினை;
மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் – ஒளியைச்
சிந்தும் கட்டமைந்த வில்லைச் செவ்விய கைகளில் ஏந்திய
இராமபிரான் மீது; விடுதி’ – விடுவாயாக’; என்றான் – என்று
(தன் பாகனுக்குக்) கட்டளையிட்டான்.

————-

வானரர் போருக்கு ஆயத்தமாதல்

இரிந்த வான் கவிகள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்;
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல்’ என்று, அஞ்சார்,
திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம்
பிரிந்தனகொல்!’ என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 4-

இரிந்த – முன்பு சிதறியோடின; வான்கவிகள் எல்லாம் –
வானரர்கள் எல்லோரும்; ‘இமையவர் இரதம் ஈந்தார்- தேவர்கள்
(இராமனுக்குத்) தேரை நல்கினர்; அரிந்தமன் வெல்லும் –
பகைவரை அடக்கும் (ஆற்றல் மிக்க) மன்னவனாகிய
இராமபிரான் வெல்லுவான்,; என்றற்கு – என்று கருதுவதற்கு;
ஐயுறவு இல்- எவ்வித ஐயமும் இல்லை’; என்று அஞ்சார்-
என்று கூறி அச்சம் நீங்கியவர்களாய்; திரிந்தனர் –
(மீண்டும் போர்க்களம் எங்கும்) சுற்றி வந்தனர்; மரமும்
கல்லும் சிந்தினர் – மரங்களையும் கற்களையும் (அரக்கர்
மேல்) எறிந்தனர்; முழக்கின் பெற்றி – (அப்போது)
வானரர்கள் செய்த ஆரவாரத்தின் தன்மையானது;’திசையொடு
அண்டம் பிரிந்தன கொல்’ – ‘திசைகளும் அண்டங்களும்
பிளந்தன போலும்’; என்று எண்ணப் பிறந்தது – என்று
கருதும்படி எழுந்தது.

———–

வார்ப் பொலி முரசின் ஓதை, வாய்ப்புடை வயவர் ஓதை,
போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை,
ஆர்த்தலின், யாரும் பார் வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல்
தேர்க் குரல் ஓதை பொங்க, செவி முற்றும் செவிடு செய்த. 5-

வார்ப்பொலி முரசின் ஓதை – வார்க்கட்டமைந்த
முரசுகளிலிருந்து எழும் ஓசையும்;வாய்ப்புடை வயவர் ஓதை-
போரியற்றும் வாய்ப்புபெற்ற வீரர்கள் எழுப்பும் ஓசையும்;
போர்த் தொழில்களத்து – போர் நிகழுகின்ற களத்தில்;
மற்றும் முற்றிய பொம்மல் ஓதை – பிற போர்ப்படைகள்
நிரம்பி நின்று எழுப்பிய மகிழ்ச்சி ஆரவார ஓசையும்;
ஆர்த்தலின் – கூடியொலித்தலால்; யாரும் – (இரு
திறத்திலுமுள்ள) அனைவரும்; பார்வீழ்ந்து அடங்கினர்-
தரையில் விழுந்து அடங்கிப் போயினர்; இருவர் –
இராமபிரான் இராவணன் என்னும் இருவருடைய; ஆடல்
தேர்க்குரல்- அசைகின்ற தேர்களின் ஒலி; ஓதை பொங்க –
முழக்கம் மேலெழுந்து; செவி முற்றும் செவிடு செய்த –
அனைவர்தம் செவிகளையும் செவிடாக்கின.

——————-

இராமன் மாதலிக்கு தன் கருத்து கூற, அவன் அதற்கு இசைதல்

மாதலி வதனம் நோக்கி, மன்னர் தம் மன்னன் மைந்தன்,
‘காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என் தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை’ என்னச் சொன்னான் 6-

மன்னர்தம் மன்னன் மைந்தன்- (தசரதச்) சக்கரவர்த்தி
திருக் குமாரனாகிய இராமன்; மாதலி வதனம் நோக்கி – தன்
தேர்ச்சாரதியாகிய மாதலியின் முகத்தைப் பார்த்து;
‘காதலால் கருமம் ஒன்று கேட்டியால் – அன்போடு
நான் கூறும் செயல் ஒன்றினைக் கேட்பாயாக; களித்த சிந்தை
எதலன் – மிதப்பு மிக்க சிந்தனை கொண்டவனாகிய (நம்)
பகைவன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை – தன்னுடைய
மீறிய செயல்களையெல்லாம் செய்த பிறகு; என்தன் சோதனை
நோக்கி – என் தூண்டுதலைக் கவனித்து; செய்தி – (உன்
தேரோட்டும்) தொழிலைச் செய்வாயாக; துடிப்பு இலை-
(இப்போது) விரைதல் வேண்டுவதில்லை; என்னச் சொன்னான்-
என்று கூறினான்.

————

‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார்தம்
உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில்,
தெள்ளிது என் விஞ்சை!’ என்றான்; அமலனும், ‘சீரிது!’ என்றான் 7-

‘வள்ளல்! – வரையாது அருளும் இயல்புடையாய்!; நின்
கருத்தும் – உன் திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும்-
புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் –
பகைவரது உட்கருத்தையும்; மிகையும் – பகைவர் தம்
மிகுதியையும்; உற்ற குற்றமும் – (அதனால்) நேரும்
தீமைகளையும்; உறுதிதானும் – மேற்கொள்ளத் தக்க
உறுதியையும்; கள்ளமில் காலப்பாடும் – வஞ்சனையின்றி
(இயல்பாகச்) செயல்படும் கால நிலையையும் கருமமும் –
எடுத்துக்கொண்ட செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில்-
(ஆராய்ந்து) என் தொழிலைச் செய்யேனாகில்; என் விஞ்சை
– என் தேரோட்டும் கலைத்தொழில்; தெள்ளிது- மிக மிகத்
திறம்பட்டது அன்றோ?’ (ஆகாது என்றபடி!); என்றான் – என்று
கூறினான்; அமலனும் – (யாதுமோர்) குற்றமற்ற இராமபிரானும்;
செவ்விது என்றான்- (அவன் செப்பிய பாங்குணர்ந்து) ‘நன்று’
என மொழிந்தான்.

———-

வேறு இடத்துப் பொர மகோதரன் வேண்ட , இராவணன், ‘நீ இலக்குவனோடு போர் செய்’ எனல்

‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர் மேல்;
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது; இடையே, யான் ஓர்
சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு’
என்றான் – வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 8-

வான் தொடர் குன்றம் அன்ன – வானத்தை அளாவிய
மலை போன்ற (தோற்றத்தை உடைய); மகோதரன் –
மகோதரனாகிய வீரன்; எந்தாய்- எம் தலைவனே; புரந்தரன் –
இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல் – குதிரைகள் பூட்டிய
தேரின் மீது; இராமன் தோன்றினன் – இராமன் (இதோ)
காட்சி தருகின்றான்; ஏன்று – (ஒருவரை ஒருவர்) எதிர்த்து
நிற்கும்; இருவருக்கும் – உங்கள் இருவரிடையேயும்;
வெம்போர் எய்தியது – கொடிய போர் (நடக்கும் நேரம்)
நெருங்கி விட்டது; இடையே – உங்கள் இருவருக்கும் இடையே;
யான் ஓர் சான்று என – நான் ஒரு சாட்சியாக; நிற்றல்-
(வறிதே) நிற்பது; குற்றம் – பிழையாகும்; ஈண்டு –
இப்போது; விடை தருதியால் – (வேறிடத்தில் போர் புரிய)
விடை தருவாயாக’; என்றான் – என வேண்டினான்; இலங்கை
மன்னை – (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம்.

————

‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம்’ என்றான்;
வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென்’ என்று, அவனின் மீண்டான் 9-

(இவ் வேண்டு கோளைக் கேட்ட இராவணன்), அம்புயம்
அனைய கண்ணன் தன்னை – செந்தாமரை போன்ற கண்களை
உடைய இராமனை; அரியின் ஏறு – ஆண் சிங்கம் (ஒன்று);
தும்பியைத் தொலைத்தது என்ன – யானையை அழித்தது
என்னும் படியாக; யான் தொலைக்குவன் – நான்
அழித்தொழிப்பேன்; தொடர்ந்து நின்ற தம்பியை – இணை
பிரியாது நிற்கும் தம்பியாகிய இலக்குவனை; தடுத்தியாயின் –
(நீ) போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை – (எனக்கு)
வெற்றித் தேடித் தந்தவனாவாய்; என்றான் – என்று கூறினான்;
வெம்பு இயல் அரக்கன்- (சினத்தால்) வெம்பும் தன்மையுடைய
மகோதரன்; ‘அஃதே செய்வென் என்று- ‘அவ்வாறே செய்வேன்’
என்று; அவனின் மீண்டான்- இராவணனிடத்தினின்றும் திரும்பிச்
சென்றான்.

——

இராமன் தேர் அணுக, ‘அதன் எதிரே தேரை விடு’ எனச் சாரதிக்கு மகோதரன் பணித்தல்

மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம்,
ஆண்தகை தெய்வத் திண் தேர் அணுகியது; அணுகும் காலை,
மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத்
தூண்டுதி தேரை’ என்றான்; சாரதி தொழுது சொல்லும்: 10-

மீண்டவன் – இராவணன் பக்கமிருந்து திரும்பி வந்த
மகோதரன்; இளவல் நின்ற பாணியின் – தம்பி இலக்குவன்
இருந்த பக்கத்திற்கு; விலங்கா முன்னம் – நீங்குவதற்கு
முன்னர்; ஆண்டகை – ஆண்மை மிக்க இராமனுடைய;
தெய்வத்திண்தேர் – தெய்வத் தன்மை மிக்க வலிமையான
தேர்; அணுகியது – நெருங்கி வந்தது; அணுகும் காலை –
அவ்வாறு நெருங்கிய போது; மகோதரன் – மகோதரன்;
மூண்டெழு வெகுளியோடும் – பொங்கி எழுகின்ற சினத்தோடு;
முனிந்து – கோபித்து; ‘முட்டத்தூண்டுதி தேரை’ – தேரை
முட்டும்படி செலுத்துவாயாக; என்றான்- என்று கட்டளையிட்டான்;
சாரதி- தேர்ப்பாகன்; தொழுது சொல்லும்- வணங்கி உரைக்கத்
தொடங்கினான்.

————

மகோதரன் இராமனுடன் பொருது, முடிதல்

‘எண் அருங் கோடி வெங் கண் இராவணரேயும், இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்?
அண்ணல் தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய, அப் பால் செல்வதே கருமம்’ என்றான். 11-

ஐய – ஐயனே; அண்ணல் தன் தோற்றம் கண்டால் –
பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால்; எண்ணரும்
கோடி வெங்கண் இராவணரேயும் – (இந்த ஓர் இராவணன்
மட்டுமன்று) எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான கொடுங்கண்கள்
படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது- இன்று
(இராமனை) நெருங்கி வந்தாலும்; கிடப்பதல்லால்- (களத்தில்)
இறந்து கிடப்பார்களே யல்லாமல்; மீண்டும் நடப்பரோ?-
(உயிருடன்) மீண்டும் செல்ல வல்லவர்களோ? (செல்லார்)
ஆதலால்; நீ- நீ; கமலம் அன்ன கண்ணனை- தாமரை போலும்
கண்களையுடைய இராமபிரானை; அப்பால் ஒழிய – (விட்டு
நீங்கி) வேறிடம்; செல்வதே- போவதே; கருமம் – (பொருத்தமான)
செயல்; என்றான்- என்று (சாரதி மகோதரனிடம்) கூறினான்.

——–

என்றலும், எயிற்றுப் பேழ் வாய் மடிந்து, ‘அடா! எடுத்து நின்னைத்
தின்றனென் எனினும் உண்டாம் பழி’ என, சீற்றம் சிந்தும் குன்று அன
தோற்றத்தான் தன் கொடி நெடுந் தேரின் நேரே சென்றது,
அவ் இராமன் திண் தேர்; விளைந்தது, திமிலத் திண் போர் 12-

என்றலும் – என்று (சாரதி) கூறுதலும்; (மகோதரன்)
எயிற்றுப் பேழ்வாய் மடித்து – (கோரைப்) பற்கள்
தோன்றும் பிளந்த தன் வாயை மடித்து; ‘அடா – ஏடா!;
நின்னை எடுத்து – என்னை மறுத்துப் பேசிய) உன்னை
வாரியெடுத்து; தின்றனன் எனினும் – உண்டேனாயினும்;
பழிஉண்டாம்’ – அதனால் எனக்குப் பழி நேர்ந்துவிடும்’
(ஆதலால் அது தவிர்ந்தேன்); என – என்றுரைக்க; சீற்றம்
சிந்தும் – சினத்தை வெளியிடும்; குன்றன தோற்றத்தான்
தன் – மலை போன்ற உருவத்தையுடைய (மகோதரனின்); கொடி
நெடுந்தேரின் நேரே – கொடிகள் கட்டிய இரதத்திற்கு நேராக;
அவ்விராமன் திண்தேர் சென்றது – அந்த இராமபிரானுடைய
வலிய தேர் சென்றது; திமிலத் திண்போர்- முழக்கத்தையுடைய
பெரும் போர்; விளைந்தது- உண்டாயிற்று.

—————–

பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு உண்
வாட் கைக் கல் தடந் திண் தோள் ஆளும், நெருங்கிய
கடல்கள் எல்லாம் வற்றின, இராமன் வாளி வட அனல் பருக;
வன் தாள் ஒற்றை வன் தடந் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான். 13-

(அப்போரில் மகோதரனிடமிருந்த) பொன் தடந்தேரும்-
பொன் மயமான பெரிய தேர்களும்; மாவும் – குதிரைகளும்;
பூட்கையும் – யானைகளும்; புலவு வாட்கை – புலால் நாறும்
வாளேந்திய கரங்களையும்; கல் தடந் திண் தோள் ஆளும் –
கல்போல் வலிய அகன்று திரண்ட தோள்களையும் உடைய காலாட்
படைகளும்; நெருங்கிய – (கொண்டு) நெருக்கமுற்ற; கடல்கள்
எல்லாம்- படைக் கடல்கள் யாவும்; இராமன் வாளி வடவனல்
பருக – இராமபிரானின் அம்புகள் என்னும் வடவைக் கனல்
குடிக்க; வற்றின- வறண்டு (ஏதுமில்லாமல்) போயின (எனவே); ஒற்றை வன் தடந் தேரோடும்- (மிஞ்சிய) தன்
ஒரே பெரிய வலிய தேருடன்; வன்தாள் மகோதரன் – வலிய
(கால்களை உடைய) வனாகிய மகோதரன்; ஒருவன் சென்றான்-
தன்னந்தனியாக இராமபிரான் பக்கம் சென்றான்.

———-

அசனிஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல்,
குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 14-

(மகோதரன்), அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின்
மேல் – (இராமபிரானுக்கு இந்திரன் அளித்த தெய்வத் தேர்
மீது பறந்த) பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின்
மீதும்; அரவத் தேர் மேல் – ஒலிமிக்க அத்தேரின் மீதும்;
குசை உறு பாகன் தன் மேல்- கடிவாளம் பற்றிய தேர்ப்பாகன்
மாதலி மீதும்; கொற்றவன் குவவுத் தோள் மேல்-
வெற்றியாளனாகிய இராமபிரானின் மலைத் தோள்கள் மீதும்;
விசை உறு பகழி மாரி – வேகம் கொண்ட அம்பு மழையை;
வித்தினான் – விதை தூவுவது போல் பாய்ச்சினான்; (மேலும்)
விண்ணினோடும் திசைகளும் கிழிய – வானும் திசைகளும்
கிழிந்து போயிற்றென்னுமாறு; ஆர்த்தான் – முழக்கமிட்டான்;
தீர்த்தனும்- தூயவனாகிய இராமபிரானும்; முறுவல் செய்தான்
– புன்னகை பூத்தான்.

————-

வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால், கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,
செல் ஒன்று கணைகள், ஐயன் சிந்தினான்; செப்பி வந்த
சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி 15-

ஐயன் – இராமபிரான்; வில் ஒன்றால் – (மகோதரனின்)
வில்லை ஒரு கணையாலும்; கவசம் ஒன்றால் – அவன் கவசத்தை
ஒரு கணையாலும்; விறலுடைக்கரம்- வலிமைமிக்க அவன் கைகளை;
ஓர் ஒன்றால் – ஒவ்வொரு கணையாலும்; கல்லொன்று தோளும்
ஒன்றால் – கற்பாறை போன்ற தோள்களை ஒரு கணையாலும்;
கழுத்து ஒன்றால் – கழுத்தினை ஒரு கணையாலும்; செல் ஒன்று
கணைகள் கடிதின் வாங்கி – விரைவு பொருந்திய அம்புகளை
வேகமாய்; சிந்தினான்- செலுத்தினான்; அரக்கன் – இராட்சதனான
மகோதரன்; செப்பி வந்த சொல் ஒன்றாய் – (இராவணனிடம்)
செப்பி வந்த மொழி ஒன்றாகவும்; செய்கை ஒன்றாய் – செயல்
மற்றொன்றாகவும் ஆகும் வண்ணம்; துஞ்சி துணிந்தனன்- இறந்து
உடல் துண்டாகி வீழ்ந்தான்.

————–

மகோதரனது முடிவு கண்டு வருந்திய இராவணன், இராமன் எதிரே தேரைச் செலுத்தச் செய்தல்

மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்,
சேதனை உண்ணக் கண்டான்; ‘செல விடு, செல விடு!’ என்றான்;
சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரதத் திண் தேர். 16-

மோதரன் முடிந்த வண்ணம் – மகோதரன் இறந்த நிலையை;
மூவகை உலகத்தோடு – மூன்று உலகங்களோடு; மாதிரம்
எவையும் வென்ற – திசைகள் அனைத்தையும் வெற்றி கொண்ட;
வன்தொழில் அரக்கன் – கொடுமையே தன்மையாகக் கொண்ட
இராவணன்; கண்டான் – பார்த்தான்; சேதனை உண்ண-
(இந்நிகழ்ச்சி) தன் அறிவை உண்ணவே; செலவிடு, செலவிடு
என்றான் – (தன் பாகனை நோக்கி) தேரைச் செலுத்து,
செலுத்து என்றான்; துரகத் திண்தேர் – குதிரை பூட்டிய வலிய
தேர்; சூதனும் முடுகித் தூண்ட – தேர்ப்பாகனும் விரைந்து
தூண்ட; சென்றது- வேகமாக முன்னே சென்றது.

—————–

இராவணன் சேனையை இராமன் கணத்தில் நீறாக்குதல்

‘பனிப் படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித்
தனிப்படான் ஆகின் இன்னம் தாழ்கிலன்’ என்னும் தன்மை
நுனிப் படா நின்ற வீரன், அவன் ஒன்று நோக்காவண்ணம்
குனிப் படாநின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 17-

பனிப்படா நின்றது என்ன – பனி எங்கும் பொழிந்து
நின்றாற்போல; பரக்கின்ற சேனை – விரிந்திருக்கிற
(இராவணன்) படை; பாறி – சிதறி; தனிப்படான் ஆகின்-
தான் தன்னந் தனியனாகாதவரை; இன்னம் தாழ்கிலன் –
(இவ்விராவணன்) இன்னும் கீழடங்கமாட்டான்; என்னும்
தன்மை – என்னும் நிலையை; நுனிப்படா நின்ற வீரன்-
நன்கு சிந்தித்து அறிந்த வீரனான இராமபிரான்; அவன்
ஒன்றும் நோக்கா வண்ணம்- தன் செயல் ஒன்றையும் அவன்
காணாதபடி; குனிப்படா நின்ற வில்லால்- வளைந்த வில்லால்;
ஒல்லையில் – விரைவாக; நூறிக் கொன்றான் – சின்னா
பின்னமாக்கி அழித்தான்.

————

இராவணனுக்குத் துன்னிமித்தம் தோன்றுதல்

அடல் வலி அரக்கற்கு அப் போழ்து, அண்டங்கள் அழுந்த, மண்டும்
கடல்களும் வற்ற, வெற்றிக் கால் கிளர்ந்து உடற்றும்காலை,
வடவரை முதல ஆன மலைக் குலம் சலிப்ப போன்று,
சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் -தோள். 18-

அப்போழ்து – அவ்வேளையில்; அடல்வலி அரக்கற்கு-
மிகுந்த ஆற்றலையுடைய இராவணனுக்கு; அண்டங்கள் அழுந்த-
அண்டங்கள் அனைத்தும் தாழவும்; மண்டும் கடல்களும் வற்ற-
நிறைந்த கடல்கள் எல்லாம் வற்றவும்; வெற்றிக்கால் –
(எல்லாவற்றையும்) வென்று தீர்க்கும் (ஊழிக்) காற்று; கிளர்ந்து-
பொங்கி யெழுந்து; உடற்றும் காலை – துன்புறுத்தும் பொழுது;
வடவரை முதல ஆன – மேரு மலை முதலாக உள்ள;
மலைக்குலம் சலிப்ப மான- பெருமலை வரிசைகள் அசைவன
போன்று; சுடர்மணி வலயம் சிந்த- ஒளிவீசும் மாணிக்கங்கள்
பதித்த வாகுவலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன்தோள்
துடித்தன – இடதுபுறத்துப் பொன்மயமான தோள்கள் துடித்தன.

————-

உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 19-

உலகெலாம் – உலகு முழுவதிலும்; உதிரமாரி – இரத்த
மழை; சொரிந்தது – பொழிந்தது; வானம் – முகில்கள்; அதிர
இடித்தது – உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; அருவரை
பிதிர – பெருமலைகள் சிதறும்படி; அசனி – இடி; வீழ்ந்தது –
(மலைகள் மேல்) விழுந்தது; ஒளிபெறாக் கதிரவன் தனை- ஒளி
இழந்த ஞாயிற்றை; ஊர்- ஊர்கோளும்; கலந்தது- சூழ்ந்து
கொண்டது; (ஆல் – அசை)

————-

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கள் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 20-

வாவும் வாசிகள் – (இராவணன் தேரில் கட்டிய) பாயும்
குதிரைகள்; தூங்கின – தேரில் கட்டியவாறே உறங்கின;
வெஞ்சிலை – கொடிய விற்கள்; வாங்கலில்- வளைக்கப்பட்ட
போது; ஏவும் – அம்புகளும்; நாண் இடை இற்றன –
நாண்கயிற்றில் வைக்கும்போதே முறிந்து போயின; நாவும்
வாயும் உலர்ந்தன – (இராவணன்) வாய்களும் நாக்குகளும்
காய்ந்து போயின; நாள் மலர்ப் பூவின் மாலை – புத்தம்
புதிதாக அன்று மலர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மாலை;
புலால் வெறி – மாமிச நாற்றத்தை; பூத்த – தோற்றுவித்தது.

————–

எழுது வீணை கொடு ஏந்து பதாகை மேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா. 21-

எழுது வீணை கொடு – வரையப் பெற்ற வீணையைச்
(சின்னமாகக்) கொண்டு,; ஏந்து பதாகை மேல் – உயர்ந்து
நிற்கும் (இராவணன்) கொடியின் மீது; கழுகும் காகமும்
மொய்த்தன – கழுகுகளும் காகங்களும் சூழ்ந்து பறந்தன;
ஓடு இகல் ஆடல் மா – பாயும் இயல்புடைய போர் வல்ல
குதிரைகளின்; கண்கள் நீர் ஒழுகுகின்றன – கண்களில்
கண்ணீர் வார்ந்து கொண்டிருந்தன; சூழி மா – முகபடாமணிந்த
யானைகள்; தொழுவில் நின்றன போன்றன – பந்திகளில்
கட்டப்பட்டாற்போல் செயலற்று நின்றன.

—————

துன்னிமித்தங்களை மதியாது, இராவணன் பொர நெருங்குதல்

இன்ன ஆகி, இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின; தோன்றவும்,
அன்னது ஒன்றும் நினைந்திலன், ‘ஆற்றுமோ,
என்னை வெல்ல, மனித்தன்?’ என்று எண்ணுவான். 22-

இமையவர்க்கு இன்பம் செய் – தேவர்களுக்கு
மகிழ்ச்சியூட்டுகிற; துன்னிமித்தங்கள் – (இராவணனுக்கு)
கெட்ட சகுனங்களானவை; இன்னவாகி- இப்படிப்பட்டனவாகி;
தோன்றின – புலப்படலாயின; தோன்றவும் – அவ்வாறு
புலப்படவும்; அன்னது ஒன்றும் நினைந்திலன் – அவை
குறித்தும் ஏதும் சிந்திக்காதவனாய்; ‘என்னை வெல்ல
மனித்தன் ஆற்றுமோ?’ – என்னை வெல்வதற்கு (எளிய)
மனிதனால் முடியுமோ?’; என்று எண்ணுவான் – என்று
இராவணன் கருதலானான்

————

வீங்கு தேர் செலும் வேகத்து, வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல்,
தாங்கல் ஆற்றகிலார், தடுமாறித் தாம்
நீங்கினார், இரு பாலும் நெருங்கினார். 23-

வேலை நீர் ஓங்கு நாளின்- கடல் நீர் பொங்கியெழும்
(ஊழிக்) காலத்தில்; ஒதுங்கும் உலகுபோய் – இரு புறமாய்
ஒதுங்கி நிற்கும் நிலம் போல; இருபாலும் நெருங்கினார் –
இருபக்கங்களிலும் நெருக்கமாகக் கூடியவர்கள்; வீங்கு தேர்
செலும் வேகத்து- (இராவணனின்) வேகம் மிக்க தேர் ஓடும்
விரைவினால்; தாங்கல் ஆற்றகிலார் – (அவ்விரைவைத்)
தாங்குதற்கு ஆற்றாதவர்களாய்; தடுமாறி – நிலை குலைந்து;
நீங்கினார்- ஒதுங்கிக் கொண்டனர்.

—————–

இராம இராவணர் தோற்றம்

கருமமும் கடைக்கண் உறு ஞானமும்,
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும்,
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலாத்
தருமமும், எனச் சென்று, எதிர் தாக்கினார். 24-

இராவணனும் இராமபிரானும் அங்கு); கருமமும்- வினையும்;
கடைக்கண் உறு ஞானமும் – (நன்னெறியின்) கடைசியில்
எய்தும் ஞானமும் (போலவும்); அருமை சேரும் அவிஞ்சையும்-
(பொருள்களின் நிலையை) அறியாது தடுக்கும் அவிச்சையும்;
விஞ்சையும் – (அதற்கு மாறான) வித்தையும் (போலவும்);
பெருமை சால்- அளவிற் பெரிய; கொடும் பாவமும் – கொடிய
பாவமும்; பேர்கலா – (எந்நிலையிலும்) பயன்தருதலில்
தவிராத; தருமமும் என – அறமும் (போலவும்); எதிர் சென்று
தாக்கினார் – ஒருவர் மற்றொருவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.

———–

சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்,
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்,
பொர உடன்றனர் போலப் பொருந்தினர்,
இரவும் நண்பகலும் எனல் ஆயினார். 25-

சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும் – தலைகள்
ஆயிரம் படைத்த ஆதி சேடனும்; உரவு கொற்றத்து –
வலிமையும் வெற்றியும் படைத்த; உவணத்து அரசனும் – கருட
வேந்தனும்; பொர உடன்றனர் – போரிட எதிர்த்து நின்றனர்;
போலப் பொருந்தினர்- என்பது போலப் பொருந்தி நின்றனர்;
இரவும் நண்பகலும் என – நள்ளிரவும் நண்பகலும் போல;
ஏற்றனர்- (அவ்விருவரும்) இசைந்து தோன்றினர்.

——–

வென்றி அம் திசை யானை வெகுண்டன
ஒன்றை ஒன்று முனிந்தன ஒத்தனர்;
அன்றியும், நரசிங்கமும் ஆடகக்
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 26-

வென்றி அம் திசை யானை- வெற்றி மிக்க அழகிய திக்கு
யானைகள்; வெகுண்டன – சினம் கொண்டனவாய்; ஒன்றை
ஒன்று – ஒன்றோடொன்று; முனிந்தவும்- வெறுத்து நின்றன;
ஒத்தனர் – போன்றிருந்தனர்; அன்றியும் – அதுவல்லாமலும்;
நரசிங்கமும் – நரசிங்க மூர்த்தியும்; ஆடகக் குன்றம்
அன்னவனும் – பொன்மலை போன்ற இரணியனும்; பொரும்
கொள்கையார்- ஒப்பென்று சொல்லுமாறும் விளங்கினார்கள்.

————-

துவனி வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள்,
‘எவன் அ(வ்) ஈசன்?’ என்பார் தொழ, ஏற்று, எதிர்
புவனம் மூன்றும் பொலங் கழலால் தொடும்
அவனும் அச் சிவனும் எனல் ஆயினார். 27-

தொல்லை ஒரு நாள் – பண்டொரு காலத்தில்; துவனி
வில்லின் பொருட்டு – முழக்கம் நிறைந்த (இரண்டு) விற்கள்
காரணமாக; ‘எவன் அவ் ஈசன்?’ என்பார் – எவன்
உண்மையில் தலைமை சான்ற கடவுள் என அறிய விரும்பியவரான
இமையவருக்காய்; பொர – போரிட முற்பட்டு; ஏற்று –
அவ்விற்களை எடுத்து; எதிர் – ஒருவரை யொருவர் எதிர்த்து
நின்ற; புவனம் மூன்றும் பொலங்கழலால் தொடும் – மூன்று
உலகங்களையும் தன் பொற் பாதங்களால் தொட்ட; அவனும்-
அந்தத் திருமாலும்; அச்சிவனும் – அந்தச் சிவபிரானும்;
எனல் ஆயினார் – என்னும் நிலையினராகக் (இராமனும்
இராவணனும்) காட்சி தந்தார்கள்.

———–

இராவணன் சங்கம் ஊத, திருமாலின் சங்கம் தானே முழங்குதல்

கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம்
விண்டு அசங்க, தொல் அண்டம் வெடித்திட,
அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 28-

கண்ட – (இராம இராவணர் போர் நிகழ்ச்சிகளை
வானத்திலிருந்து) பார்த்த; சங்கரன் நான் முகன்- சிவனும்
பிரமனும்; கைத்தலம் – தங்கள் கரங்கள்; விண்டு அசங்க
– நிலைதிரிந்து நடுங்கவும்; தொல் அண்டம் வெடித்திட
– பழமையான பிரமாண்டப் பகுதி வெடித்துப் போகவும்;
அண்டம் – விண்வெளியில்; சங்கத்து அமரர் தம்
– திரண்ட தேவர்களின்; ஆர்ப்பெலாம் – பெரு
முழக்கங்களையெல்லாம்; உண்ட- (முன்பு தேவரை வெற்றி
கொண்ட காலத்தில்) உண்டு முடித்த; சங்கம்- தன்
சங்கினை; இராவணன் ஊதினான் – இராவணன் முழக்கம்
செய்தான்.

———

சொன்ன சங்கினது ஓசை துளக்குற,
‘என்ன சங்கு?’ என்று இமையவர் ஏங்கிட,
அன்ன சங்கைப் பொறாமையினால், அரி-
தன்ன வெண் சங்கு தானும் முழங்கிற்றால். 29-

அன்ன – அந்த (இராவணனின்); சங்கை – சங்கின்
(ஓசையைப்); பொறாமையினால்- (தான்) பொறுத்துக்
கொள்ளாமையினால்; சொன்ன – மேற்குறித்த; சங்கினது
ஓசை – (இராவணனது) சங்கின் ஒலி; துளக்குற-
நிலைகுலையும்படியாகவும்; இமையவர் – தேவர்கள்;’என்ன
சங்கு?’ என்று – இது யாருடைய சங்கு?’ என்று; ஏங்குற-
(ஐயுற்று) ஏக்கமுறவும்; அரிதன்ன- திருமாலினுடைய; வெண்
சங்கு தானும்- பாஞ்ச சன்னியம் என்னும் வெண்ணிற
வலம் புரிச்சங்கும்; முழங்கிற்று- (தானே) முழக்கம் செய்தது.
(ஆல் – அசை).

——–

திருமாலின் ஐம்படையும் அடிமை செய்ய வந்ததை இராமன் காணாதிருத்தல்

ஐயன் ஐம் படை தாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரில்
மெய்யன் அன்னவை கண்டிலன், வேதங்கள்
பொய் இல் தன்னைப் புலன் தெரியாமைபோல். 30-

ஐயன்- திருமாலின்; ஐம்படை தாமும் – சங்கு, சக்கரம்,
கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில்
செய்ய – (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு;
அயல் நின்றன – பக்கத்தில் காத்து நின்றன; (ஆனால்),
வேதங்கள் – மறைகள்; பொய்யில் தன்னை – பொய்யற்ற
மெய்யான தன்னை; புலன் தெரியாமை போல்- (மானிட
வடிவெடுத்த அவனை) அறிந்து கொள்ளாதவாறு போல; அன்னவை- அவ்வைம்படைகளை;
தேவரில் மெய்யன்- தேவர்களுள் மெய்ப்பொருளாயுள்ள
திருமால்; கண்டிலன்- காணவில்லை.

—————

மாதலி இந்திரனது சங்கை முழக்குதல்

ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடுந் தேவரும்
கூச அண்டம் குலுங்க, குலம் கொள் தார்
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 31-

(அப்போது), ஆசையும்- திசைகளும்; விசும்பும் – வானமும்;
அலை ஆழியும்- அலைகள் சூழ் கடலும்; தேசமும் – பூமிப்
பரப்பும்; மலையும் – மலைகளும்; நெடுந் தேவரும்-
பெருமையால் உயர்ந்த தேவர்களும்; கூச – நடுங்கவும்; அண்டம்
குலுங்க- அண்டம் அசைந்தாடவும்; குலம் கொள்தார்- பலவகை
மலர்க்குலமும் அமைந்த மாலையை அணிந்த; வாசவன் –
இந்திரனுடைய; சங்கை- சங்கினை; மாதலி வாய் வைத்தான்-
(தேர்ப்பாகனாகிய) மாதலி தன் வாயில் வைத்து ஊதினான்.

———–

இராவணன்-இராமன் போர்

துமில வாளி அரக்கன் துரப்பன்
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமல வாள் முக நாடியர் கண் கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 32-

அரக்கன் துரப்பன- இராவணன் செலுத்துகின்றனவாகிய;
துமில வாளி – ஆரவாரத்தோடு வரும் அம்புகள்; விமலன்
– மாசு மறுவற்ற இராமபிரான்; மேனியின் வீழ்வதன்
முன்னமே- திருமேனியில் வந்து பாய்வதற்கு முன்பாகவே;
கமல முக- தாமரை போன்ற முகமுடைய; வான் நாடியர்-
வானத்துத் தேவ கன்னிகையர்; கண்கணை- கண்களாகிய
அம்புகள்; அமலன் மேனியில் – குற்றமற்ற இராமபிரான் மேனியில்; தைத்த – தைத்தவை;
அனந்தம் – கணக்கற்றவையாகும் (ஆல் – அசை).

———–

சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெங் கண் குதிரை குதிப்பன,
ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின;
தின்று தீர்வன போலும் சினத்தன. 33-

சென்ற – போர்க்களத்துக்கு வந்த; தேர் ஓர் இரண்டினும்-
இராமபிரான்; இராவணன் ஆகிய இருவரின் ஒப்பற்ற தேர்களிலும்;
சேர்த்திய – கட்டப்பட்டிருந்த; குன்றி வெங்கண்- குன்றிமணி
போல் சிவந்த கண்களையுடைய;குதிரை- குதிரைகள்; குதிப்பன-
எதிரெதிர் பாய்வனவாயும்; ஒன்றை ஒன்று – ஒன்றோடொன்று;
உற்று- நெருங்கி; எரி உக நோக்கின- நெருப்புச் சிந்தும்படி
பார்ப்பனவாயும்; தின்று தீர்வன போலும்- ஒன்றை யொன்று
கடித்து விழுங்கி விடுவன போல; சினத்தன – கோபம்
கொண்டனவாயும் (காட்சி தந்தன).

————

கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா
இடியின் ஏறும், முறையின் இடித்தன-
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால். 34-

கொடியின் மேல் உறை- (இராவணன்) கொடி மீதிலிருந்த;
வீணையும் -; கொற்றம்- வெற்றியையுடைய; மா இடியின்
ஏறும்- (இராமபிரான்) கொடி மீதிருந்த இடியேறும்; படியும்
– பூமியும்; விண்ணும்- வானமும்;பரவையும்- கடலும்; பண்பு
அற – தம் இயல்பிற் குன்றி; முடியும்- அழிந்து விடும்; என்பது
ஓர் மூரி முழக்கினால்- என்று கூறத்தக்க ஆற்றல் மிக்க
ஓசையோடு; முறையின் இடித்தன – மாறி மாறி பேரொலி
எழுப்பின.

———–

இருவருடைய வில்லின் ஒலி

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்,
வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி;
ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு
ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால். 35-

வீழி- வீழிப்பழம் போன்ற; வெங்கண் இராவணன்- கொடிய
கண்களையுடைய இராவணன்; வில்ஒலி- வில்லின் ஓசை; ஏழு
வேலையும்- ஏழு கடல்களும்; ஆர்ப்பு எடுத்து என்னலாம்-
பேரொலி எழுப்பின என்று கூறுதற்குரியதாய் இருந்தது; ஆழி
நாதன்- சக்கராயுதம் படைத்த இராமபிரானுடைய; சிலை ஒலி-
வில்லின் ஒலியோ; அண்டம் விண்டு- விண்வெளி
பிளக்கும்படி; ஊழி பேர்வுழி – ஊழிக்காலம் வரும் போது
(உண்டாகும்); மாமழை ஒத்தது- பெரு முகில்களில் எழும்
இடியோசையை நிகர்த்திருந்தது.

———

ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ் சின வீரர் விழுந்தனர்-
ஏங்கி நின்றது அலால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 36-

ஆங்கு நின்ற- (இவ்வொலிகளைச் செவியுற்று) அவ்விடத்திலே
நின்ற; அநுமனை ஆதியாம் – அநுமன் முதலாவதாக அமைந்த;
வீங்கு வெஞ்சின வீரர- பொங்கும் கொடுங்கோபமுள்ள சிறந்த
வீரர்களும்; வீழ்ந்தனர்- தரையில் விழுந்தனர்; ஏங்கி நின்றது
அலால்- என்ன செய்வோம் என்று ஏக்குற்று நின்றதன்றி; ஒன்று
இழைத்திலர் – வேறு எதுவும் செய்யலாற்றாதவராயினர்; வாங்கு
சிந்தையர் – ஓய்ந்த உள்ளத்தினராய்; செய்கை மறந்துளார்-
செயலற்றுப் போயினர்.

———–

தேவர்களின் திகைப்பும், பூமழையும்

‘ஆவது என்னை கொலாம்?’ என்று அறிகிலார்,
‘ஏவர் வெல்வர்?’ என்று எண்ணலர் ஏங்குவார்,
போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால்,
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 37-

தேவரும்- தேவர்களும்; ‘ஆவது என்னை கொலாம்- ‘என்ன
நிகழுமோ’; என்று அறிகிலார்- என்று அறியாதவர்களாய்; ‘ஏவர்
வெல்வர்?’- ‘எவர் தாம் போரில் வெல்வர்?’; என்று எண்ணலர்-
என்று சிந்திக்க முடியாதவர்களாய்; ஏங்குவார்- ஏக்கமுறுவார்;
போவர்- (இலக்கறியாது) செல்வர்; மீள்வர்- திரும்பி வருவர்;
பதைப்பர்- உள்ளம் அஞ்சுவர்; பொருமலால் – மனம்
விம்மி; தங்கள் செய்கை மறந்தனர் – தாம் யாதும் செய்யும்
திறனற்றுப் போயினர்.

————

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம்,
பூண முந்தின, சிந்தின பூ மழை,
காண வந்த கடவுளர் கை எலாம்-
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ? 38-

திண்சரம் – (இராமபிரானுடைய) வலிமைமிக்க அம்புகள்;
சேண அந்தரம் நோக்கலும்- தொலைவிலுள்ள வானத்தைக்
குறிபார்க்கத் தொடங்கியதும்; காண வந்த கடவுளர்
கையெலாம்- காண்பதற்கு வந்த தேவர்கள் கரங்கள்
எல்லாம்; சிந்தின பூ மழை- தூவிய மலர்மாரி; பூண
முந்தின – (வானை) அழகு செய்யும்படி முன்தோன்றின;
ஆணவம் துணை- செருக்குக்குத் துணையாக;யார் உளர்
ஆவரோ?- யார் தான் இருக்க முடியும்?

———

இருவரின் வில்லின் தகைமை

நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில்
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன-
ஆண்ட வில்லிதன் வில்லும், அரக்கன் தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே. 39-

ஆண்ட வில்லி தன் வில்லும்- அனைத்துலகையும்
(அறநெறியில்) ஆளும் வில்லாற்றல் மிக்க இராமபிரான்
வில்லும்; தீண்ட வல்லர் இலாத – பிறரால் தொட்டெடுக்க
முடியாத; அரக்கன் தன் சிலையுமே- இராவணனின் வில்லும்;
நீல வான்- நீல வானத்தில்; நெடுவில் – நெடிய இந்திர
விற்கள்; இரண்டு- இரண்டு; நீண்ட மின்னொடு பூண்டு-
நீண்ட மின்னலாகிய (கயிறு) பூண்டு; எதிர் நின்றன போன்றன
– எதிரெதிர் நின்றாற் போல் விளங்கின.

————–

இராவனது சினத்தின் எழுச்சி

அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற
ஆர்ப்பும், அப் பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு
என்பபோல், குரைக்கும் வேலையும் மேகக் குழாங்களும்
இரைத்து இடிக்கின்ற, இன்றும் ஒர் ஈறு இலா. 40-

அன்று- (இராம இராவணப்போர் நடந்த) அன்று; அரக்கன் –
இராவணன்; எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும்- குரலெடுத்து
முழங்கிய முழக்கமும்; பொருப்பு மெய்- மலை போன்ற
வடிவுடைய; போர் வில் தெழிப்பும்- போர் வில்லினின்று
எழுப்பிய பேரொலியும்; உண்டே கொலாம்- (இன்றும்)
இருக்கின்றன போலும்! குரைக்கும் வேலையும்- ஒலிக்கின்ற
கடலும்; மேகக் குழாங்களும்- முகில் கூட்டங்களும்; இன்றும்
– இக்காலத்தும்; இரைத்து- பேரொலி செய்து;இடிக்கின்ற-
இடிமுழக்கம் செய்கின்றன;ஓர் ஈறு இல – அப்பேரொலிகட்கு
ஒரு முடிவே இல்லை.

——–

மண்ணில் செல்வன செல்லினும், மாசு அற
எண்ணின் சூல் மழை இல்ல; இராவணன்
கண்ணின் சிந்திய தீக் கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன. 41-

இனும் மாசு அற எண்ணின்- மேலும் குற்றமின்றிச்
சிந்தித்துப் பார்ப்போமாயின்; மண்ணில் செல்வன செல்-
மண்ணின் மீது வீழும் இடியேறுகள்; சூல் மழை அல்ல-
கருக்கொண்ட முகில்களில் பிறப்பன அல்ல; இராவணன் –
அரக்கனாகிய இராவணன்; கண்ணில் சிந்திய தீ- (இராமனுடன்
போரியற்றுங்கால்) கண்களில் கக்கிய நெருப்பு; கடுவேகத்த
– விரைந்த வேகத்தோடு; விண்ணில் செல்வன- வானில்
செல்லுவதே ஆகும்; மீண்டும் இன்று வீழ்வன – அந்நெருப்பே
இன்றும் வானிலிருந்து (இடியாக) வீழ்கிறது.

————-

மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்தொறும், நாவொடு
கால் கலங்குவர், தேவர்; கண மழைச்
சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 42-

மால் கலங்கலில் சிந்தையன்- திருமாலைக் கண்டு
கலக்கமற்ற மனம் படைத்தவனான இராவணன்; நால் மாதிரம்
கலங்க- நான்கு திசைகளும் நிலைகுலையும்படி; நகும் தொறும்
– பெருஞ்சிரிப்புச் செய்யும் போது; தேவர்- தேவர்கள்;
நாவொடு கால் கலங்குவர்- நாக்கும், பாதமும் நடுங்குவர்;
சூல்- கருக்கொண்ட; கணமழை கலங்கும்- முகில் கூட்டங்கள்
கலங்கும்; இலங்கை- இலங்கை மா நகரமும்; துளங்கும் –
நடுக்கம் கொள்ளும்.

————-

இக் கணத்தும் எறிப்ப தடித்து என,
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என,
பக்கம் வீசும் படைச் சுடர், பல் திசை
புக்குப் போக, பொடிப்பன போக்கு இல. 43-

பக்கம்- (இராவணனது இரு) பக்கங்களிலும்; வீசும்
படைச்சுடர் – ஒளி வீசுவனவாகிய ஆயுதங்களின் ஒளி;
பல் திசை புக்குப் போக- பல்வேறு திசைகளிலும்
புகுந்து செல்பவை; பொடிப்பன- (அனைத்தையும்)
சாம்பலாக்கின; போக்கு இல- தாம் அழியாதிருந்தன;
(அவைதாம்) இக்கணத்தும்- இந்த நேரத்திலே கூட;
நெக்க மேகத்து- சிதைந்த மேகத்தினிடத்து; உதிக்கும்
– தோன்றும்; நெருப்பு என – மின்னலாகவும்; தடித்து
என – இடியாகவும்; எறிப்ப- ஒளி வீசுகின்றன.

———–

இராவணன் சின மொழி

‘கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி, படியின்மேல்
எற்றுவேன்’ என்று உரைக்கும், இரைக்குமால். 44-

கொற்ற அம்பிற் கொடு- வெற்றி தரும் அம்பு கொண்டு;
கொல்லுதல் – கொல்லுதலாகிய; கோள் இலா- நோக்கு
இன்றி;சிற்றையாளனை- இச்சிறுவனை; தேவர் தம் தேரொடும் –
இந்திரன் தேரினோடும்; பற்றி – கையால் எடுத்து; வானில்
சுழற்றி- வானில் தூக்கிச் சுழற்றி; எற்று வேன்- நிலத்தின்
மேல் மோதுவேன்’; என்று உரைக்கும்- என்று (சினத்தால்
இராவணன்) கூறுவான்; இரைக்கும்- கூக்குரலிடுவான்.

—————

‘தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற,
வடித்து வைத்தன்ன மானுடன் தோள் வலி
ஒடித்து, தேரை உதிர்த்து, ஒரு வில்லொடும்
பிடித்துக் கொள்வென், சிறை’ எனப் பேசுமால். 45-

‘தடித்து – மின்னலை; வைத்தன்ன – (திரட்டி) வைத்தாற
போன்ற;வெங்கணை – கொடிய அம்பு; தாக்கு அற – தாக்கும்
வலிமை அற்றுப் போகும்படி; மானிடற்கே – இம்மனிதனுக்கு;
வலி வடித்து வைத்தது? – (ஆற்றல்) வடித்து வைக்கப்
பட்டுள்ளதோ? (இல்லை) ஒடித்து – வலிமையை அழித்து;
தேரை உதிர்த்து – தெய்வத்தேரைப் பொடியாக்கி; ஒரு
வில்லொடும் – ஒப்பற்ற அவன் வில்லோடும்; சிறைபிடித்துக்
கொள்வென் – நான் அவனைச் சிறைபிடிப்பேன்’; எனப்
பேசும் – என்று இராவணன் சினமொழி கூறுவான்.

———

இராவணன் அம்பு மாரி பொழிதலும், இராமன் தடுத்தலும்

பதைக்கின்றது ஓர் மனமும், இடை படர்கின்றது ஒர் சினமும்,
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும், உடை வெய்யோன்,
குதிக்கின்றன நிமிர் வெஞ் சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர் வெங் கணை, உரும் ஏறு என, எய்தான் 46-

பதைக்கின்றது ஓர் மனமும் – நடுக்கமுறுகின்ற ஓர் உள்ளப்
பாங்கும்; இடை படர்கின்றது ஓர் சினமும் – இடையிலே
பொங்கிப் படர்கின்ற கோபமும்; விதைக்கின்றன – எல்லாப்
பக்கங்களிலும் தூவப்படுவதாகிய; பொறி பொங்கின விழியும் –
நெருப்புத் துளிகள் எழும் கண்களும்; உடை – பொருந்திய;
வெய்யோன்- கொடியவனாகிய இராவணன்; குதைக்கின்றன-
குதை (என்னும் வில்) உறுப்பினின்றும் வெளி வரும் அம்புகள்; நிமிர்
வெஞ்சிலை குழைய- சொரிய நிமிரும் கொடிய வில் வளைத்து;
கொடும் கடும் கால்- துன்புறுத்தும் புயல் காற்றை; உதைக்கின்றன
– உற்பத்தி செய்து விடும்; சுடர் வெங்கணை- ஒளிமிக்க தீய
அம்புகளை; உரும் ஏறு என- இடியேறுகள் போல; எய்தான் –
(சிலையினின்றும்) செலுத்தினான்.

———–

உரும் ஒப்பன, கனல் ஒப்பன, ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன; மழை ஒப்பன; வானோர்
நிருமித்தன, படை பற்று அற நிமிர்வுற்றன, அமிழ்தப்
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய. 47-

(இராவணன் ஏவிய அம்புகள்), உரும் ஒப்பன- பேரிடி போன்றன;
கனல் ஒப்பன – நெருப்பை நிகர்த்தன; ஊற்றம் தரு கூற்றின் –
வலிமை மிக்க இயமனுடைய; மருமத்தினும் நுழைகிற்பன- மார்பிலும்
ஊடுருவ வல்லன; மழை ஒப்பன – மழை போலப் பெருக வல்லன;
வானோர் நிருமித்தன – தேவர்களால் உருவாக்கப் பெற்றன; படை-
எதிரிகள் ஆயுதங்கள்; பற்று அற – செறிவு அற்றுப் போக;
நிமிர்வுற்றன- மேலேற வல்லன; அமிழ்தப் பெரு மத்தினை-
அமுதம் (கடைவதற்காகத் திருப்பாற்கடலில் இட்ட) பெருமத்தாகிய
மந்தர மலையினை; முறை சுற்றிய- முறையே (கடைகயிறாகச்) சுற்றிய;
பெரும்பாம்பினும்- பெரிய பம்பாகிய வாசுகியைக் காட்டிலும்; பெரிய-
உருவத்தில் பெரியன.

————–

‘துண்டப்பட நெடு மேருவைத் தொளைத்து, உள் உறை தங்காது
அண்டத்தையும் பொதுத்து ஏகும்’ என்று இமையோர்களும், அயிர்த்தார்;
கண்டத் தெறு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச்
சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான் 48-

(இராவணன் எய்த அம்புகள்) நெடு மேருவை- உயர்ந்த மேரு மலையை; துண்டப்பட- பிளவுபடுத்தி; தொளைத்து- ஊடுருவி;
உள் உறை தங்காது – உள்ளை உறைந்து நில்லாது;
அண்டத்தையும் – விண்வெளியையும்; பொதுத்து- துளைத்து;
ஏகும் என்று – செல்லும் என்று; இமையோர்களும் – தேவர்களும்;
அயிர்த்தார்- ஐயமுற்றார்கள்; கணைக் காற்றினை – (எழும்)
அம்புப் புயலை; கருணைக் கடல்- அருட் கடலாகிய இராமன்;
கனகச் சண்டச் சரமழை கொண்டு- பொன்மயமானதும்
கொடியதுமான (தன் அம்பு) மாரியினால்; அவை இடையே அற-
அவ்வரக்கன் அம்புகள் நடுவழியில் அழிய; தடுத்தான் –
தடுத்துவிட்டான்.

————-

உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கெனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து, அவை துரந்தான்-
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்தென, கடியான். 49-

உடையான் – ஒரு தலைவன்; முயன்று உறுகாரியம் –
முயற்சியினால் செய்யும் செயலை; உறுதீவினை – அவனுக்குற்ற தீய
வினைகள்; உடற்ற- அழிக்க; இடையூறு உற- தடைகள் ஏற்பட்டு; சிதைந்தாங்கு என- (அச்செயல்) அழிந்தாற் போல;
சரம்- இராவணன் அம்புகள்;விறலும் சிந்தின- ஆற்றல் இழந்தன (ஆனால்);
கடியான் -கொடியவனான இராவணன்; தொடைஊறிய- தொடுத்தலில் சிறந்தனவும்;
தொகை தீர்ந்தன – அளவில் மிகுதியாயினவுமான; கணைமாரிகள்-
அம்பு மழையை; கடை ஊறு உறு – யுக முடிவின் பொழுது மிக்கு வருகின்ற; கணமா மழை-
அடர்ந்த கருமுகில்கள்; கால்வீழ்த்தென- கீழிறங்கின என்னுமாறு;
துரந்தான்- பொழிந்தான்.

—————

விண் போர்த்தன; திசை போர்த்தன; மலை போர்த்தன; விசை ஓர்
கண் போர்த்தன; கடல் போர்த்தன; படி போர்த்தன; கலையோர்
எண் போர்த்தன; எரி போர்த்தன; இருள் போர்த்தன; ‘என்னே,
திண் போர்த் தொழில்!’ என்று, ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 50-

(இராவணன் எய்த அம்புகள்) விண் போர்த்தன- வானை மூடின;
திசை போர்த்தன – திசைகளை மறைத்தன; மலை போர்த்தன-
மலைகளை மூடின; இமையோர் கண் போர்த்தன – தேவர்கள்
விழிகளையும் மறைத்தன; கடல் போர்த்தன – நெடுங்கடல்களையும்
தெரியாது தடுத்தன; படி போர்த்தன- நிலத்தையும் மறைத்தன;
கலையோர் எண் போர்த்தன- கலை ஞானம் மிக்கவர் எண்ணும்
கணக்கையும் பொய்ப்பித்தன; எரி போர்த்தன – நெருப்பைப் போர்த்து
வந்தன; இருள் போர்த்தன- இருளை அணைத்து வந்தன; (இதனைக்
கண்டு), ஆனையின் உரி போர்த்தவன் – யானைத் தோலை அணிந்த
சிவபெருமான்; ‘என்னே திண் போர்த் தொழில்!’- எத்துணை பெரிய
போர்க்கலை இது’; என்று திகைத்தான்- என்று மனம் மயங்கினான்.

————-

அல்லா நெடும் பெருந் தேவரும் மறை வாணரும் அஞ்சி,
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர், இருந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அது கண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான் 51-

(முன் குறித்த சிவபெருமான்) அல்லா- அல்லாத; நெடும்பெருந்
தேவரும்- உயர்ந்த பெரிய தெய்வங்களும்; மறைவாணரும்-
முனிவர்களும்; எல்லார்களும் – மற்றுள யாவரும்; கரம் கொண்டு-
தம் கரத்தால்; இருவிழி பொத்தினர் – இரு கண்களையும்
மூடிக்கொண்டனர்; இருந்தார்- செயலற்றிருந்தனர்; செல் ஆயிரம்
விழுங்கால் – ஓராயிரம் இடி ஒன்றாக விழுந்தால்; உகும்-
சிதறிப் போகும்; விலங்கு- மலைக்கு; சேனை ஒத்தது- (வானர)
சேனை நிகராயிற்று; அது கண்டு – இந்நிகழ்ச்சியைக்
கண்டு; வில்லாளனும் – விற்கலை வல்ல இராமனும்;அவை
– இராவணன் அம்புகளை; விலக்கும் தொழில் – தடுக்கும்
செயலை; வேட்டான்- விரும்பி மேற்கொண்டான்.

———–

செந் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன், சிறுவிலை நாள்,
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின, முதல்வன் வந்து
ஈந்தன வடி வெங் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெந் தீவினைப் பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 52-

முதல்வன்- அனைத்துக்கும் முதலாகிய இராமபிரான்; வந்து
ஈந்தன- போர்க்களம் புகுந்து எய்தனவாகிய; வடிவெங்கணை-
கூரிதாய் வடித்த கொடிய அம்புகள்; செந்தீவினை- அழல்
ஓம்பும் அறவினை செய்யும்; மறைவாணனுக்கு- வேதியனுக்கு;
சிறு விலை நாள்- பஞ்ச காலத்தில்; முந்து ஈந்தது – முந்திக்
கொடுத்த; ஓர் உணவின் பயன்- உயர்ந்த அன்னதானப் பயன்;
எனல் ஆயின- என்று சொல்லுமாறு வளர்ந்தன; (ஆனால்)
அரக்கன் சொரி விசிகம் – இராவணன் எய்த அம்புகள்;
அனையான் – அன்னவன்; வகுத்து அமைத்த – தேடித்
தொகுத்துக் கொண்ட; வெந்தீ வினைப் பயன் – பாவங்களின்
பயனை; ஒத்தன- ஒப்பனவாய் அழிந்தன.

———

இராம இராவணப் பெரும் போர்

நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான்,
ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்துவ, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 53-

ஆறா விறல் மறவோன் – வற்றாத வீரத்தைப் பெற்றிருக்கும்
வீரனாகிய இராவணன்; நொடி ஒன்றினின்- ஒரு நொடிப்
பொழுதில்; நூறாயிரம் வடிவெங்கணை- நூறாயிரம் கூரிய கொடிய
அம்புகளை; விடுவான்- ஏவுவான்; அவை- அவ்வம்புகளை; தனி
நாயகன்- ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; அறுப்பான்- துண்டு
படுத்துவான்; கூறு ஆயின- (அவ்வாறு) துண்டு படுத்தப்பட்டவை;
கனல் சிந்துவ- நெருப்புப் பொழிவனவாய்; குறுகிப் புனல்
குடிக்க- நெருங்கி நீரை அருந்தியமையால்; கடலும்-
சமுத்திரங்களும்; சேறு ஆயின- வற்றிச் சேறாயின; பொடி
ஆயின – புழுதி ஆயின;திடர் ஆயின- மண்மேடாகிப் போயின.

———-

வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம் போர்
வல்லான், எழு, மழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை,
தொல் ஆர் மிடல் வளை, சக்கரம், சூலம், இவை தொடக்கத்து
எல்லாம் நெடுங் கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான் 54-

வில்லால்- தன் கை வில்லால்; சரம் துரக்கின்றவற்கு-
அம்புகள் எய்கின்ற இராமனுக்கு (எதிராக); செரு அறிந்தான்
– போர்க்கலை அறிந்தவனும்; மிடல் வெம்போர் வல்லான்-
வலிமையும் கொடுமையும் மிக்க யுத்தத்தில் வல்லவனுமாகிய
இராவணன்; உடனே – மறுகணத்திலேயே; எழு, மழு, தோமரம்,
மணித்தண்டு, இரும்பு உலக்கை- எழு முதல் உலக்கை ஈறான
ஆயுதங்களையும்; தொல் ஆர் மிடல்- பழமை மிக்க
வலிமையுள்ள; வளை, சக்கரம், சூலம் – வளை முதலாகிய
படைகளையும்; இவை தொடக்கத்து எல்லாம் – இவை தொடங்கிப் பிற படைக்
கருவிகள் அனைத்தையும்; நெடுங்கரத்தால்- நீண்ட கரங்களால்;
எடுத்து எறிந்தான்- எடுத்து வீசினான்.

———–

வேல் ஆயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக்
கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒரு கோல் படக் குறைவ-
கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய
சூல் ஆயின, மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க. 55-

மழை அன்னவன்- முகில் வண்ண மேனியனான இராமன்;
தொடைபல் வகை தொடுக்க- பல்வகைப்பட்ட அம்புகளைத் (தன்
வில்லில்) தொடுத்து எய்ய; (அவை), கால் ஆயின-
காற்றாய் விரைந்தன; கனல் ஆயின- நெருப்பாய் மாறின;
உரும் ஆயின- இடியாய் ஒலித்தன; கதிய- விரைவு கொண்டன;
சூல் ஆயின- புதிய அம்புகளைக் கருவீன்றன; ஒருகோல் பட-
(அவ்வம்புகளில்) ஒன்று பட்ட மாத்திரத்தில்; வேல்
ஆயிரம்- (இராவணன் வீசிய ஆயிரம் வேல்களும்; மழு ஆயிரம்
– ஆயிரம் மழுவாயுதங்களும்; எழு ஆயிரம்- ஆயிரம் எழு
என்னும் படைக்கலங்களும்; விசிகக் கோல் ஆயிரம்-
ஆயிரம் அம்புகளும்; பிற ஆயிரம்- வேறு ஆயிரக்கணக்கான
ஆயுதங்களும்; குறைவ – அழிந்து போயின.

———–

ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை,-உடனே
பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகில்போல்
தொத்துப் படு நெடுந் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான்-
குத்துக் கொடு நெடுங் கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான் 56-

ஒத்து (இராமபிரான்) தனக்குச் சமமாக; செருவிளைக்கின்றது
ஓர் அளவின் தலை – போர் நிகழ்த்தும் ஒரு கால அளவில்;
நெடுங்குத்துக் கோல் கொடு- நெடிய அங்குசம் கொண்டு; படு களிறு ஆம் – துன்பப்படும் யானையாம்; எனக்
கொதித்தான்- என்று சொல்லும்படி மனக்கொதிப்பு உற்ற
இராவணன்;உடனே- அப்பொழுதே; பத்துச் சிலை எடுத்தான்-
பத்துக் கரங்களால் பத்து விற்களை எடுத்தவனாய்; கணை
தொடுத்தான்- அம்புகளைத் தொடுத்து; பல முகிலா- எண்ணற்ற
மேகங்கள்; தொத்துப்படு நெடுந் தாரைகள்- தொகுதி
தொகுதியாய்ப் பொழியும் நீண்ட தாரைகள்; சொரிந்தாலெனத்
துரந்தான்- சொரிவது போல் (அம்புகளை) எய்தான்.

———-

ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் நெருக்க,
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின கொடிய. 57-

ஈசன் விடு சரமாரியும்- எல்லாச் செல்வங்களுக்கும்
தலைவனாகிய இராமன் எய்யும் அம்பு மழையும்; எரிசிந்துறு-
நெருப்பைச் சொரிகிற; தறுகண் – கொடுமை மிக்க; நீசன்
விடு சரமாரியும்- இழிந்த இராவணன் எய்யும் அம்பு மழையும்;
இடை எங்கணும் நெருங்க – எல்லா இடங்களிலும் நெருக்கமாய்
விழ; தேசம் முதல் ஐம் பூதமும்- நிலம் முதலாக அமைந்த
ஐந்து பூதங்களும்; செருக் கண்டனர் செருக்கி- போர் கண்டு
உற்சாகம் மேற்கொண்டு; கூசிம் மயிர்ப் பொடிப்பு அற்றன-
புல்லரிப்பு உற்ற நிலை (மெல்ல) வாங்கின; கொடிய அனல்
ஆயின – (ஏனெனில் அம்புகளின் நெருப்பால்) அவையும் கொடிய
வெப்பம் பூண்டன.

————-

மந்தரக் கிரி என, மருந்து மாருதி
தந்த அப் பொருப்பு என, புரங்கள் தாம் என,
கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென
அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர் அரோ. 58-

(அப்பொழுது) அவ் அரக்கன் தேர்- அந்த அரக்கனான
இராவணனின் தேரானது; மந்தரக்கிரி என – மந்தர மலை
என்னுமாறும்; மாருதி தந்த அ மருந்துப் பொருப்பு என –
அனுமன் எடுத்து வந்த அந்தச் சஞ்சீவி மலை என்னுமாறும்;
புரங்கள் தாம் என – முப்புரங்கள் தாமோ என்னுமாறும்;
கந்தருப்பந் நகர் – கந்தர்வ நகரம்; விசும்பில் கண்டென
– விண்ணில் காட்சி தருகிறது என்னுமாறும்; அந்தரத்து
எழுந்தது – வானில் மேலெழுந்தது.

———

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவிப் போதலால்,
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக்
கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 59-

இலங்கை காவலன்- இலங்கையர் கோனான இராவணன்; உயர்
தேர்மிசை எழுந்து- உயர்ந்த தேரின் மீது வான்வழி எழுந்து;
பொழிந்தன சர மழை – கொட்டிய அம்பு மழையானது; உருவிப்
போதலால் – (உடலில்) பட்டு உருவிச் செல்லுதலால்; ஒழிந்ததும்
ஒழிகிலது என்ன- அழியாததும் அழிந்தது என்னும்படியாக;
இராமன் காணவே – இராமன் கண்டு கொண்டிருக்கும் போதே;
கவிக்குலம் – வானரக் குலம்; ஒல்லெனக் கழிந்தது – விரைவாக
இறந்தொழிந்தது.

————–

தேரை விசும்பில் எழவிடுமாறு இராமன் கூற, மாதலி அவ்வாறே செய்தல்

‘முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ?
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்;
எழ விடு, தேரை’ என்று இராமன் கூறினான். 60-

(இதனைக் கண்ட) இராமன் – இராமபிரான் (மாதலியிடம்);
‘மழவிடை அனைய- இளங்காளைகள் போன்ற;நம்படைஞர்
மாண்டனர் – நம் படைவீரர் இறந்தனர்; முழவு இடு தோளொடு-
மத்தளம் ஒத்த (இராவணன்) தோள்களோடு; முடியும்- மகுடமும்;
பல்தலை – பலவாகிய தலைகளும்; விழ- தரையில் விழுமாறு;
இனி விடுவேன்- இனி என் அம்புகளை ஏவுவேன்; தேரை
எழவிடு- தேரினை வானில் எழுமாறு செய்;விசும்பு சேமமோ? –
(அவனுக்கு) வானம் பாதுகாப்பாகுமோ? (இல்லை); என்று
கூறினான் – என மொழிந்தான்.

————-

‘அந்து செய்குவென்’ என அறிந்த மாதலி
உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை;
இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம்
வந்தென, வந்தது, அம் மானத் தேர் அரோ. 61-

அறிந்த மாதலி – இராமபிரான் பெருமையை அறிந்துள்ள
மாதலி; ‘அந்து செய்குவென் – ‘யான் அவ்வாறே செய்வேன்’;
என- என்று; தேர் எனும் ஊழிக்காற்றினை- தேர் என்னும்
பிரளய காலக் காற்றை; உந்தினன் – (மேலே) இயக்கினான்;
அம் மானத் தேர்- அந்தப் பெரிய தேரும்; இந்து
மண்டிலத்தின் மேல்- சந்திர மண்டலத்தின் மீது; இரவி
மண்டிலம் வந்தென – சூரிய மண்டலம் வருவது போல்;
வந்தது- (இராவணன் தேர் இருக்கும் இடத்துக்கு) வந்து சேர்ந்தது.

——————

இருவரது தேரும் சாரிகை திரிதல்

இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்;
உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின;
நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை
திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. 62-

தேரும் தேரும்- இராம இராவணாதியர் தேர்கள் இரண்டும்;
சாரிகை நேர்முறை திரிந்தன- (வானில்) நேரான முறைகளில்
சாரி திரிந்தன; (அதனால்) மழைக்குலம்- மேகக்
கூட்டங்கள்; திக்கு எலாம் – திசைகளில் எல்லாம்; இழுகி –
தளர்ந்து; இரிந்தன- கலைந்தன; உடுக்குலம் – விண்மீன்
கூட்டங்கள்; உரிந்தன – இடம் பெயர்ந்து; உதிர்ந்து
சிந்தின – பொடிப்பொடியாய்ச் சிதைந்தன; நெடுவரைக் குடுமி
– உயர்மலைச் சிகரங்கள்; நெரிந்தன – நொறுங்கிப் போயின.

————–

வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்,
அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும்,
சலம் வரும், குயமகன் திகிரித் தன்மைபோல். 63-

(அத்தேர்கள் இரண்டும்) வலம் வரும் – ஒன்றையொன்று
வலமாகச் சுற்றும்; இடம் வரும்- இடமாகச் சுற்றி வரும்; மறுகி-
பல முறையும் திரிந்து; வானொடு நிலம் வரும் – வானத்தையும்
நிலத்தையும் தொட்டு வரும்; இடம் வலம் நிமிரும்- (மற்றொரு
சமயம்) இடப்புறம் வலப்புறமாய் ஓங்கி வரும்; வேலையும் –
கடல்களும்; குலவரை அனைத்தும் – மலைக் குலங்களும்;
அண்டமும்- இந்த அண்டவெளியும்; குயவன திகிரி தன்மை
போல்- சுழலும் இயல்பினதாகிய குயவனது சக்கரத் தன்மை
போல; அலம் வரும் – சுழன்று நொந்து; சலம் வரும்-
நடுக்கமுறும்.

—————

‘எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது’ என்று
உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன,
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர்,
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார். 64-

உழுந்து உருள் பொழுதின் – உழுந்து உருளும் அச்சிறு
பொழுதுக்குள்; எவ் உலகும் சேர்வன – (அவ்விரு தேரும்)
எல்லா உலகையும் சுற்றி வரும் தன்மையன; (ஆதலால்), இது
எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர்- இதுதான் புகழ்
மிக்க இராமனின் தேர்இதுதான் அரக்கனின் தேர்; என்று –
என்று; தழும்பிய தேவரும்- பழக்கமுள்ள தேவர்களும்;தெரிவு
தந்திலர்- கண்டறிந்து சொல்ல இயலாதவராயினர்; பிழம்பின
– ஒளிவடிவங்கள்; திரிவன- சுழல்கின்றன; என்னும் பெற்றியார்
– என்று கூறும் தன்மையினராகவே இருந்தனர்.

———-

உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின்,
நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின்,
வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி
கக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. 65-

உருள்கள் தாக்கலின் – சக்கரங்கள் தாக்குதலால்; உக்கிலா
உடுக்களும்- உதிராத விண்மீன்களும்; நெருப்புச் சிந்தலின்-
(ஒன்றோடொன்று உராய்ந்து தேர்கள்) நெருப்புச் சிதறுதலால்;
நெக்கிலாமலைகளும்- உருகாத மலைகளும்; வக்கு இலாத்
திசைகளும்- பிளந்து போகாத திசைகளும்; உதிரம் வாய்வழி-
இரத்தம் வாயின் வழியே; கக்கிலா உயிர்களும்- கக்காத
உயிரினங்களும்; காண்பன இல்லை- காணக் கூடாதன ஆயின.

——————–

தேர்களின் வேகம்

‘இந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘ஏன்றவர்,
சந்திரன் உலகத்தார்’ என்பர்; ‘தாமரை
அந்தணன் உலகத்தார்’ என்பர்; ‘அல்லரால்,
மந்தர மலையினார்’ என்பர்-வானவர். 66-

வானவர்- தேவர்கள் (அத் தேரிலிருந்து போரிடுவாரை);
‘இந்திரன் உலகத்தார் என்பர் – இந்திர லோகத்தில் உள்ளார்
என்பார்கள்; (மற்றொரு சமயம்), ஏன்றவர்- போரிடுவார்;
சந்திரன் உலகத்தார் என்பர் – சந்திரமண்டலத்தில் உள்ளார்
என்பார்கள்; (இன்னொரு சமயம்), ‘தாமரை அந்தணன்
உலகத்தார் என்பர் – தாமரையில் வசிக்கும் பிரமதேவன்
உலகில் உள்ளார் என்பார்கள்; அல்லரால் – இல்லையில்லை;
மந்தர மலையினார் என்பர் – மந்தர மலையில் உள்ளார்
என்பார்கள்.

—————

‘பாற்கடல் நடுவணார்’ என்பர்; ‘பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார்’ என்பர்;
‘மேல் கடலார்’ என்பர்; ‘கிழக்கு உளார்’ என்பர்;
‘ஆர்ப்பு இடை இது’ என்பர்-அறிந்த வானவர். 67-

அறியும் வானவர்- தொலைவில் நடப்பனவும் அறியவல்லரான
தேவர்கள் (இராமனும் இராவணனும் இப்போது); பாற் கடல்
நடுவணார் என்பர் – திருப்பாற்கடலின் நடுவிலுள்ளார் என்பார்கள்;
‘பல்வகை மாக்கடலினுக்கும் அவ்வரம்பினார்’ என்பர்-
மேற்குக் கடலில் இருப்பதாகக் கூறுவர்; ‘கிழக்கு உளார்’ என்பர்
– பலவகையான பெருங்கடலுக்கும் அப்பாற்பட்ட எல்லையில்
உள்ளார் என்பர்; மேல்கடலார் என்பர் – இல்லையில்லை
கீழைக்கடலில் உள்ளார் என்பர்; ‘ஆர்க்கடை உரும்’ என்பர்- தேர்ச்சக்கரத்தின் ஆரக்கால்களில் இடி
குடி இருக்கிறது என்றும் கூறுவர்.

——————

‘மீண்டனவோ?’ என்பர்; ‘விசும்பு விண்டு உகக்
கீண்டனவோ?’ என்பர்; ‘கீழவோ?’ என்பர்;
‘பூண்டன புரவியோ? புதிய காற்று!’ என்பர்;-
‘மாண்டன உலகம்’ என்று, உரைக்கும் வாயினார். 68-

‘மீண்டனவோ’ என்பர்- (அத்தேர்கள் இரண்டும்) மீண்டும்
பூமிக்கு வந்தனவோ என்பார்கள்; ‘விசும்பு விண்டு உக –
வானம் பிளந்து விழுமாறு; கீண்டனவோ என்பர்- (இவை)
கிழித்து விட்டனவோ என்பார்கள்; ‘கீழவோ’ என்பர்-
பாதாளம் புக்கனவோ என்பார்கள்; ‘பூண்டன புரவியோ-
தேரில் பூட்டியவை குதிரைகள் தானா? (அல்லது); புதிய
காற்று என்பர்- புதுமை வாய்ந்த காற்றேயாகும் என்பார்கள்;
‘உலகம் மாண்டன’ என்று- இனி உலகம் அழிந்தது என்று;
உரைக்கும் வாயினார்- (இவ்வாறெல்லாம்) பேசுகின்ற
வாயினை உடையார்களானார் தேவர்கள்.

————

ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும்,
ஏழுடை மலையினும், உலகு ஓர் ஏழினும்,
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா,
ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 69-

(அக் குதிரைகள்)ஏழுடைக் கடலினும் – ஏழு கடல்களிலும்;
தீவு ஓர் ஏழினும்- ஏழு தீவுகளிலும்; ஏழுடை மலையினும் –
ஏழு மலைகளிலும்; உலகு ஓர் ஏழினும் – ஏழு உலகங்களிலும்;
சூழுடை அண்டத்தின் சுவர்கள்- சூழ்ந்திருக்கும் அண்டத்தின்
சுவர்களை; எல்லையா- எல்லையாகக் கொண்டு; ஊழியில்
காற்றெனத் திரிந்த- பிரளய காலத்துப் புயலாய்ச்
சுற்றித் திரிந்தன; ஓவில- ஓய்வற்றவை ஆயின.

————

அரக்கன் வீசிய படைக்கலங்களை இராமன் தடுத்தல்

உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு துளியின் பான்மைய. 70-

உடைக்கடம் ஏழினும்- ஆடையாக பூமியைச் சுற்றிய ஏழு
கடல்கள் மீதும்; உலகம் ஏழினும்- ஏழு உலகங்கள் மீதும்;
இடைப்படு தீவினும் – அவற்றிடையே உள்ள தீவுகள் மீதும்;
மலை ஓர் ஏழினும்- ஏழு மலைகள் மீதிலும்; அடைக்கலப்
பொருள் என – பாதுகாப்புப் பொருளாக (இராவணன்)
வைத்திருந்தவை என்னும்படி; அரக்கன் வீசிய படைக்கலம்-
அரக்கனாகிய அவன் வீசிய ஆயுதங்கள்; மழைபடு துளியின்
பான்மைய – மழைத்துளிகளென (விழுந்தன).

———–

ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 71-

இராவணன் எறிந்த எய்தன – இராவணன் வீசியனவும்
ஏவியனவுமான ஆயுதங்கள்; இறுத்தில- எங்கும் தங்காதனவாய்;
ஓட்டிடை- ஓடும் இடங்களில் எல்லாம்; உலகு அனைத்தையும்-
அனைத்து உலகங்களையும்; ஒறுத்து உழலும்- அழித்துத்
திரியும்; ஆரியன் – மேலோனாகிய இராமன்; அறுத்ததும்
தடுத்ததும் அன்றி – அவ்வாயுதங்களை முறித்ததும்
தடைசெய்ததும் அல்லாது; செறுத்து- சினமுற்று; ஒருதொழில்-
எச்செயலையும்; இடைச் செய்தது இல்லை – போர் நடுவில்
செய்யவே இல்லை (ஆல் – ஆசை).

————

தேர்கள் இலங்கையை அணுகுதல்

விலங்களும் வேலையும், மேலும் கீழரும்,
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும்,
கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காற்றென,
இலங்கையை எய்திய, இமைப்பின் வந்த தேர். 72-

விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்;
மேலும் கீழரும் – மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி-
சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் – பாயும் எல்லா
உலகங்களையும்; கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து
திரிந்த; ஓர் ஊழிக்காலக் காற்று- பிரளய காலப் புயல்;
இமைப்பின் வந்து – நொடிப்போதில் வந்து; இலங்கையை
எய்தின- இலங்கையை அடைந்தது. (அரோ – அசை)

———–

தேர்ப் பரிகளின் திறமை-காற்று குதிரைகளைக் குறித்தது-

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது, கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி,
எய்த்தில வியர்த்தில, இரண்டு பாலவும். 73-

வித்தகர்- திறன் மிக்கவராகிய பாகர்கள்; கடவிய- செலுத்திய;
விசயத் தேர்ப்பரி – வெற்றி (பலகண்ட) இராம இராவணர் தேரின்
குதிரைகள்; உய்த்து- செலுத்தப்பட்டு; கடலிடை மணலின்
மும்மையால் – கடற்கரைகளிலுள்ள மணல் துகள்களின்
மும்மடங்காக உள்ள; உலகு அனைத்திலும் – எல்லா
உலகங்களிலும்; உழன்ற சாரிகை மொய்த்தது – திரிந்து
சாரிகைகள் செய்து சேர்ந்தன (எனினும்); இரண்டு பாலவும் –
இரண்டு பக்கத்துக் குதிரைகளும்; எய்த்தில –
இளைப்படையவில்லை; வியர்த்தில- வியர்வை சிந்தவுமில்லை.

———–

இராமன் தேர்க்கொடியை இராவணன் அறுத்தல்

இந்திரன் தேரின்மேல் உயர்ந்த,
ஏந்து எழில் உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை,
சந்திரன் அனையது ஓர் சரத்தினால், தரைச்
சிந்தினன், இராவணன், எரியும் செங் கணான். 74-

எரியும் சிந்தையான்- வெந்து போன நெஞ்சினனாகிய;
இராவணன் – இராவணன்; இந்திரன் தேரின் மேல் உயர்ந்த-
(இராமன் ஏறி வந்த) இந்திரனது தேரின் மீது உயரே பறந்த;
ஏந்து எழில் – அழகு மிக்கதும்; உந்து அரும் பெருவலி –
தள்ளுதற்கரிய பேராற்றலுடையதுமான; உருமின் ஏற்றினை –
இடியேறாகிய (கொடியை); சந்திரன் அனையது ஓர் சரத்தினால்
– பிறைவடிவமுடைய ஒப்பற்ற அம்பினால்; தரைச் சிந்தினன்-
தரையில் விழும்படி செய்தான்.

——–

சாய்ந்த வல் உருமு போய், அரவத் தாழ் கடல்
பாய்ந்த வெங் கனல் என முழங்கிப் பாய்தலும்,
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுறத்
தோய்ந்த நீர் ஆம் எனச் சுருங்கிற்று, ஆழியே. 75-

சாய்ந்த வல் உருமு போய் – கீழே வீழ்ந்த வன்மை வாய்ந்த
இடியேறு சென்று; அரவத் தாழ் கடல் – ஓசை பெற்றுயர்
ஆழ்கடலில்; பாய்ந்த வெங்கனல் என- விழுந்த கொடு
நெருப்பாக; முழங்கிப் பாய்தலும்- பேரொலியுடன் பாய்ந்ததும்;
காய்ந்த – பழுக்கக் காய்ந்த; பேர் இரும்பின் வன் கட்டி
– பெரிய வலிய இரும்புக் கட்டியானது; காலுற – பொருந்த;
தோய்ந்த நீர் ஆம் என- தோய்க்கப்பட்ட தண்ணீர் போல;
ஆழி சுருங்கிற்று – கடல் நீர் வற்றிப் போயிற்று.

————-

இராமனது தேர்க் குதிரைகள் மீதும், மாதலிமீதும் இராவணன் அம்பு எய்தல்

எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக்
குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 76-

(அப்போது இராவணன்) எழுத்து எனச் சிதைவிலா-
(சான்றோர் கவி) எழுத்துப் போல் அழிவில்லாததாகிய; இராமன்
தேர்- இராமனது தேரின்; பரிக்குழுக்களை – குதிரைகளை;
கூர்ங்கணை – கூரிய கணைகளால்; குப்பை ஆக்கி – நிரம்பும்
படி செய்து; நேர் – நேராக; வழுத்த அரு மாதலி –
வணங்குதற்கு அரிய பெருமைமிக்க மாதலியின்; வயிர மார்பிடை
– வைரம் பாய்ந்த (உறுதியான) மார்பின் மீது, ஆறொடு ஆறு-
பன்னிரண்டு; கொடுஞ்சரம்- கொடிய அம்புகளை; அழுத்தினன்-
பாய்ச்சினான். அரோ- அசை.

—————

மாதலி மார்பில் அம்பு தைத்தமை கண்டு, இராமன் வருந்துதல்

நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு. 77-

நீல் நிற நிருதர் கோன் – கருநிறம் கொண்ட அரக்கர்
வேந்தன்; எய்த- விடுத்ததும்; இலக்குவன் கோல மார்பின்
– இலக்குவனின் அழகிய மார்பில்; வீழ் வேலினும் –
பாய்ந்ததுமான வேலைக் காட்டிலும்; நீதியின் சால்புடை-
நீதியின் நிறைவுடைய;மாதலி மார்பில் தைத்தன- மாதலியின் மார்பில்
பட்டனவாகிய; கோல் இனும் – அம்பு இன்னும்; வீரற்கு-
இராமனுக்கு; வெம்மையே விளைத்த- வருத்தத்தையே
விளைவித்தது.

———–

இராவணன் அம்புகளால் இராமன் மறைபடுதல்

மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய
உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால்,
கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். 78-

இமைப்பு இல் கண்ணினார் – இமையா நாட்டம் பெற்ற
தேவர்கள்; மண்டில வரிசிலை- மண்டிலமாக வளைத்துக்
கட்டப்பட்ட (இராவணன்) வில்லிலிருந்து; வான வில்லொடு-
இந்திர வில்போல அமையுமாறும்; துண்ட வெண்பிறை
எனத் தோன்ற – பிளவுபட்ட பிறைக்கீற்றாகத் தோன்றுமாறும்
செய்து; தூவிய- ஏவி விடப்பட்ட;உண்டை வெங்கடுங்கணை
– தொகுதி தொகுதியான கொடிய கடிய அம்புகள்; ஒருங்கு
மூடலால்- முழுமையான (இராமனை) மறைத்தமையால்;
இராமனைக் கண்டிலர் – இராமனைக் காண இயலாதவரானார்.

————-

‘தோற்றனனே இனி’ என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்;
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழுமாய்க்
காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. 79-

இராமனைக் காணாத) ஆற்றல் சால் அமரரும் –
வலிமை சான்ற தேவர்களும்; ‘இனி- இப்பொழுது; தோற்றனனே’
– தோல்வியுற்று விட்டானே; என்னும் தோற்றத்தால்- என்னும்
பிரமையால்; அச்சம் எய்தினார்- பயம் கொண்டனர்;
வேற்றவர்- பகைவர்; ஆர்த்தனர்- (மகிழ்ச்சி) ஆரவாரம்
செய்தனர்; மேலும் கீழரும்- மேலுலகிலும் கீழுலகிலும்;
காற்று இயக்கு அற்றது- காற்றின் இயக்கமும் இல்லாதாயிற்று;
அண்டம் கலங்கிற்று – அண்டம் முழுமையும் துணுக்குற்றது.

————–

அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல,
வெங் கதிர் தண் கதிர், விலங்கி மீண்டன;
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால். 80-

அங்கியும்- நெருப்பும்; தன்ஒளி அடங்கிற்று – தன்
இயல்பான ஒளி குன்றிற்று; ஆர்கலி- கடலும்; பொங்கில-
பொங்கி எழவில்லை; திமிர்ந்தன – அசைவற்றுக் கிடந்தன;
விசும்பில் – வானில்; வெங்கதிர் தண்கதிர் – ஞாயிறும்
திங்களும்; போக்குஇல – இயங்கா தொழிந்தன; விலங்கி
மீண்டன- வழி விலகித் திரும்பின; மங்குலின்- மேகங்களின்;
நெடும் புனல் மழை – நெடிதாய்ப் பெய்யும் மழை நீர்;
வறந்தது- வறண்டு போயிற்று. (ஆல் – அசை)

———–

திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின;
அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின;
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என, மேருவும் குலுக்கம் உற்றதே. 81-

குசன்- அங்காரகன்; விசைகொடு – வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
(என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள் (எட்டும்) செருக்குச் சிந்தின- தம் மதச்
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள்
இயக்கமற்றன; ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு
மேருவும் – உயர்ந்த மேரு மலையும்; குலுக்கம் உற்றது –
நடுக்கம் கொண்டது.

போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன் என்பது
கெட்ட அறிகுறியாகும்.

—————-

வானரத் தலைவனும், இளைய மைந்தனும்,
ஏனை, ‘அத் தலைவனைக் காண்கிலேம்’ எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் மீன்
எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 82-

வானரத் தலைவனும்- குரக்கரசனான சுக்கிரீவனும்; இளைய
மைந்தனும் – தம்பி இலக்குவனும்; ஏனை- பிறரும்; ‘அத்
தலைவனைக் காண்கிலேம்’ என- அந்தத் தலைவனாம்
இராமனைக் காணப் பெற்றிலேம் என்று; கானகக் கரி என-
(தலைமையானையைக் காணாத) காட்டு யானைகள் போல;
கலங்கினார்- வருந்தினார்கள்; வீரர் வேறு உளார் – பிற
வீரர்கள் எல்லாம்; கடல் மீனெனக் கலங்கினார் –
(சேதுபந்தன காலத்து) கடல் மீன்கள் போல் நொந்தனர்.

———–

இராவணன் தேர்க் கொடியை இராமன் வீழ்த்துதல்

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக்
கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால்
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன
செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 83–

இராகவன்-; எய்தன சரம் எலாம் – (இராவணனால்)
எய்யப்பட்ட அம்புகளையெல்லாம்; இமைப்பின் முந்துற –
இமைப்பொழுதின் முன்; அகற்றிக் கொய்தனன் – அழித்து
ஒழித்தனன்; நொய்தென – (பின்னர்) விரைவாக; அரக்கனை
நெருங்க – இராவணனை நெருங்குமாறு சென்று; வெங்கோலின்
கோவையால்- கொடிய அம்புத் தொகுதியால்; நொந்தன
செய்தனன் – அவன் வருந்தும்படி செய்தான்; அமரர்
தேறினார்- தேவர்கள் ஆறுதல் கொண்டனர்.

————-

தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக்
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய,
சேணுடை நிகர் கணை சிதறினன்-உணர்வொடு
ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 84-

உணர்வொடு – நல்லுணர்வோடு; ஊணுடை- தன்னை உணவாகக்
கொள்ளும்; உயிர் தொறும் உறைவுறும் ஒருவன்- உயிர்களிடம்
விரும்பி வசிக்கும் இறைவனாகிய இராமன்; தூணுடை நிரை புரை-
தூண்களின் வரிசையை ஒத்த; கரம் அவை தொறும் – பத்துக்
கைகளிலும் உள்ள; அ- அந்த; கோணுடை மலை நிகர் – வளைந்த
மலைகள் போன்ற; சிலை இடை குறைய- விற்கள் துண்டு படும்படி;
சேணுடை- தொலை தூரம் செல்வனாகிய; நிகர்
கணை – தமக்குத் தாமே நிகராகிய அம்புகளை; சிதறினன் –
தூவினான்.

‘உண்ணும் சோறு’ என்று எம்பெருமானை நம்மாழ்வார்
உரைத்தாற்போல இறைவன் ஞானிகள் அனுபவித்துண்ணும்
அன்னமாகிறான். ‘நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு
நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்’ (தேவாரம் 1204:9)
என்ற வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.

———–

கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு
அயில் விரி சுடு கணை கடவினன்-அறிவின்
துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 85-

துயில்வுழி – யோக நித்திரையின் கண்; அறிவின் உணர்
தரு – தன் மூதுணர் இயல்பால் அனைத்தையும் உணரவல்ல;
சுடர் ஒளி ஒருவன்- பேரொளிப் பிழம்பான ஒப்பற்ற இறைவன்;
(இராமபிரான்), கயில் விரிவு அற வரு- மூட்டுவாய் விரிதலில்லாத;
கவசமும் உருவி – (இராவணன்) கவசத்தையும் ஊடுருவிக்
கொண்டு; பயில் விரி குருதிகள் பருகிட- (உடலில்) விரவியுள்ள
இரத்தத்தைப் பருகுமாறு; வெயிலொடு – ஒளியோடு; அயில் –
கூர்மையும்; விரி சுடு கணை- பரவிய வெப்பம் மிக்க அம்பினை;
கடவினன்- (இராவணன் மீது) ஏவினான்.

————-

திசை உறு துகிலது, செறி மழை சிதறும்
விசை உறு மிகிழது, விரிதரு சிரனொடு
இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத்
தசை உறு கணைகொடு தரை உற விடலும். 86-

திசை உறு – திக்குகளில் பொருந்திய; துகிலது –
ஆடையுடையதும்; செறி மழை சிதறும்- அடை மழை பொழிவதும்;
விசை உறு முகிழது – வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினை
உடையதும்; விரிதரு சிரனோடு- விரிந்த தலையுடன் கூடிய; இசை
உறு கருவியின் – இசைக் கருவியான வீணையினை; இனிது உறு
கொடியை- அழகுறக் கொண்டிருப்பதுமான (இராவணன்) கொடியை; தசை உறு கணை கொடு – புலால்
பொருந்திய தன் அம்பினால்; தரை உற விடலும் – (இராமன்)
தரையில் அறுத்து வீழ்த்தியதும்.

————

படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து
இடை உறு திசை திசை இழுகுற, இறைவன்
அடையுறு கொடிமிசை அணுகினன்-அளவு இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 87-

கடையுக – கடையுகத்தின்; முடிவு எழு – முடிவில்
பொங்கியெழும்; அளவில் கடல்புரை கலுழன் – மிகப்பெரிய
கடல் போலும் பெருந்தோற்றமுள்ள கருடன்; படை உக –
(இராவணனுடைய) விற்படை குறைபட்டபோது; இமையவர்
பருவரல் கெட- தேவர் துயர் நீங்கும்படி; வந்து – பூமிக்கு
வந்து; இடை உறு – இடம் பொருந்திய; திசை திசை இழுகுற
– பல திசைகளிலும் (சிறகு) வீசி; இறைவன் –
இராமபிரானுடைய; அடையுறு – (தேரில்) அமைந்துள்ள;
கொடிமிசை – கொடிமீது; அணுகினன் – சார்ந்தனன்.

—————-

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம் வரு கலுழன்
நண்ணலும், இமையவர், ‘நமது உறு கருமம்
எண்ணலம், முனிவினின் இவறினன்’ எனவே. 88-

ஒரு பரவைக் கண்ணகன் உலகினை – ஒப்பற்ற கடல்
சூழ்ந்த இடமகன்ற உலகினை; வலம் வரு கலுழன்- வலமாகச்
சுற்றி வரும் கருடன்; பண்ணவன் உயர் கொடி என –
இராமபிரானுடைய சிறந்த கொடியாகும் என்று; நண்ணலும்-
வந்து பொருந்துதலும்; இமையவர் – தேவர்கள்; ‘நமது உறு
கருமம் எண்ணலம்’ – இனி நம் செயல்களை மட்டுமே
கருதமாட்டோம்; முனிவினன் – சினம் மிக்க கருடன்;
இவறினன் – (பெருமான் தேர் மீது) ஏறினன்; என- என்று
கூறுதலும்.

————-

இராவணன் தாமதம் என்னும் படையை விடுதலும், அப் படையின் செயல்களும்

ஆயது ஒர் அமைதியின், அறிவினின் அமைவான்
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,
ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்
தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன். 89-

ஆயது ஓர் அமைதியின் – அப்படிப்பட்ட சூழலில்;
தெறுதொழில் மறவோன் – அழிவுச் செயல் வல்ல
கொடியவனாகிய இராவணன்; அறிவினின் அறிவான்நாயகன்
ஒருவனை – உணரத்தக்கது உணரும் தலைவனான ஒப்பற்ற
இராமனை; நலிகிலது உணர்வான்- (தன் அம்புகள்) துன்பம்
செய்யாதென அறிந்தவனாகி; இருள் உறு – இருட்டை
விளைவிக்கின்ற; தாமதம் எனும் – தாமதாத்திரம் எனப்பெயர்
பெற்ற; அத்தீவினை தருபடை- கெடுதலைச் செய்யும் கணையை;
ஏயினன் – ஏவினான்.

————–

தீ முகம் உடையன சில; முகம் உதிரம்
தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய;
பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும்
வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 90-

(மேற்குறித்த தாமதாத்திரத்திலிருந்து புறப்பட்ட அம்புகளில்)
சில தீமுகம் உடையன- சில நெருப்புமிழ் முகம் படைத்திருந்தன
(சில); முகம் உதிரம் தோய் முகம் உடையன- சில அம்புகள்
குருதி தோய்ந்த முகம் கொண்டிருந்தன; சுரர் முகம் உடைய –
(சில) தேவர் முகம் படைத்திருந்தன; பேய் முகம் உடையன-
(சில) பேய்களின் முகத்தோடு இருந்தன; பில முகம் – குகைக்குள்;
நுழையும் – செல்கின்ற; வாய்முகம் – வாயும் முகமும் கொண்டன
(சில); வரி அரவு அனையன வருவ- கோடுகளுடன் கூடிய
பாம்புகளைப் போல் வந்தன.

————

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்,
இரு திசை எயிறு உற வருவன; பெரிய;
கருதிய கருதிய புரிவன; கனலும்
பருதியை மதியொடு பருகுவ-பகழி. 91-

(மேலும்) பகழி – இந்த அம்புகள்; ஒரு திசை முதல்- ஒரு
திக்கின் தொடக்க முதலாக; கடை ஒரு திசை அளவும்- (அதற்கு)
மறுதலையான) ஒரு திக்கின் முடிவு வரையிலும்; இருதிசை – இரு
திசைகளிலும்; எயிறு உற- பற்களைக் காட்டிக் கொண்டு; வருவன-
வருவன; பெரிய- மிகப் பெரிய அளவின; கருதிய கருதிய
புரிவன – நினைத்து நினைத்துச் செயல்பட வல்லன; கனலும்
– சுடுகின்ற; பருதியை மதியொடு- சூரியனைச் சந்திரனோடு;
பருகுவ- குடித்து விடும் தன்மையின.

—————

இருள் ஒரு திசை, ஒரு திசை வெயில் விரியும்;
சுருள் ஒரு திசை, ஒரு திசை மழை தொடரும்;
உருள் ஒரு திசை, ஒரு திசை உரும் முரலும்;
மருள் ஒரு திசை, ஒரு திசை சிலை வருடம். 92-

(தாமத அம்பினால்), ஒரு திசை இருள்- ஒரு திசையில் இருளும்;
ஒருதிசை வெயில்- அடுத்த திசையில் வெயிலும்; விரியும்- பரவும்;
ஒருதிசை சுருள் – ஒரு திசையில் சுழல்காற்றும்;ஒரு திசை மழை-
மற்றொரு திசையில் மழையும்; தொடரும்- தொடரும்; ஒரு திசை
உருள்- ஒரு திசையில் சக்கரமும்; ஒரு திசை உரும் முரலும்-
இன்னொரு திசையில் இடியும் ஒலிக்கும்; ஒரு திசை மருள்- ஒரு
திசையில் மயக்கமும்; ஒரு திசை சிலை வருடம்- வேறொரு
திசையில் கல்மாரியும் உண்டாகும்.

————–

இராமன் சிவனது படையை விட்டு, தாமதப் படையைத் தொலைத்தல்

இனையன நிகழ்வுற, எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட, அமரர்கள் கதற,
வினை உறு தொழிலிடை விரவலும், விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின், 93-

இனையன நிகழ்வுற- இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்
வேளையில்; கனை இருள் – செறிந்த இருட்டானது; எழுவகை
உலகும் – ஏழு உலகங்களையும்; கதுவிட- கவ்விக்கொள்ள;
உயிர் இடை கதற- அனைத்துயிர்களும் இதனிடையே வாய்விட்டலற;
வினை உறு தொழிலிடை- தீவினை நெருங்கிச் செயல்படுதலென;
விரவலும்- (துன்பம்) எங்கும் பரவுதலுற்ற போது;விமலன்- மாசறு
பண்புடைய இராமன்; நெறியுறு முறையின் – முறைப்படியான வழியில்;
நினைவுறு நகையினன்- சிந்திக்க லுற்றவனாகி;

—————

கண்ணுதல் ஒருவனது அடு படை கருதிப்
பண்ணவன் விடுதலும், அது நனி பருக;
எண்ணுறு கனவினொடு உணர்வு என, இமையில்,
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய 94-

கண்ணுதல் ஒருவனது- நெற்றிக் கண்ணனாகிய ஒப்பற்ற
சிவபிரானது; அடுபடை- வெல்லும் அம்பினை; கருதி-
எண்ணியெடுத்து; பண்ணவன் விடுதலும்- இராமபிரான் ஏவுதலும்;
அது- அவ்வம்பு; நனி பருக- தாமத அம்பினைப் பருகியதினால்;
இமையில்- இமைப்பொழுதில்; கனவினோடு- கனவுப் பொழுதில்;
எண்ணுறும் உணர்வு என- சிந்தனையாகிய உணர்வு (இல்லாமற்
போவது) போல; துண்ணெனும் நிலையினில் – அச்சம் கொள்ளும்
நிலையில்; எறிபடை- (இராவணனால்) ஏவப்பட்ட தாமதாத்திரம்;
தொலைய- அழிந்து போக.

——————

இராவணன் இராமன் மேல், ஆசுரப் படையை விடுதல்

விருந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த;
எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன்
தெரிந்த வெங் கணை, கங்க வெஞ் சிறை அன்ன, திறத்தான்,
அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 95-

விரிந்த- பரந்து சென்று; தன்படை- தன் தாமதாத்திரம்;
மெய்கண்ட பொய் என- உண்மையைக் கண்ட பொய்யினைப்
போல; வீய- அழிந்து போக; எரிந்த கண்ணினன்- நெருப்பை
உமிழ்கின்ற கண்களை உடையவனும்; எயிற்றிடை மடித்த
வாயினன் – பற்களிடையே மடித்த வாயை உடையவனுமான
இராவணன்; கங்க வெம் சிறை அன்ன- பருந்தின் கொடுஞ்
சிறகு போன்று; திறத்த- வன்மை மிக்கனவாய்; தெரிந்த
வெங்கணை- தேர்ந்தெடுத்த கொடிய அம்புகளை; அரிந்தமன்
– பகைவரை அடக்கும் இராமபிரான்; திருமேனி மேல் அழுத்தி
– திருவுடல் மீது பாய்ச்சி; நின்று ஆர்த்தான் – நின்று ஆரவாரம்
செய்தான்.

—————

ஆர்த்து, வெஞ் சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன்மேல் வரத் துரந்தனன், உலகு எலாம் தெரிய. 96-

(இராவணன்) ஆர்த்து- ஆரவாரம் செய்து; அமரர் வார்த்தை
உண்டது- வானவர் புகழுரை பெற்றதும்; இன்உயிர்களால்-
இனிய உயிர்களால்; மறலி தன் வயிற்றைத் தூர்த்தது – எமன்
வயிற்றை நிறைத்ததும்; இந்திரன் துணுக்குறு தொழிலது- தேவர்
தலைவனைத் திடுக்கிட வைத்ததுமான; வெஞ்சினத்து ஆசுரப்
படைக்கலம்- கொடுந்தன்மையுடைய ஆசுரம் என்னும் அம்பினை
உலகு எலாம் தெரிய- அனைவரும் காண; தீர்த்தன் மேல்
வரத் துரந்தனன் – புனிதன் மீது பாயும்படி ஏவினன்.

————–

ஆசுரப் பெரும் படைக்கலம், அமரரை அமரின்
ஏசுவிப்பது, எவ் உலகமும் எவரையும் வென்று
வீசு வெற்பு இறத் துரந்த வெங் கணையது, –
விசையின் பூசுரர்க்கு ஒரு கடவுள் மேல் சென்றது போலாம். 97-

இவ்வுலகை – இந்த உலகினை;ஓர் நொடி வரை- ஒரு நொடிப்
பொழுதில்; நுங்குகின்றது- விழுங்குகின்றது; என்ன – என்று
கூறும்படி; எங்கும் நின்று நின்று – எல்லா இடங்களிலும்
குவியலாய் நின்று; அலமரும் அமரர் – மனம் கலங்கிய அமரர்கள்;
கண்டுஇரைப்ப – இவ்வம்பினைக் கண்டு அஞ்சிக் குரலெழுப்பும்
போது; மங்குல் வல் உருமேற்றின் மேல் – மேகங்களில் உள்ள
ஆற்றல் மிக்க இடியேற்றின் மீது; எரி மடுத்தென்ன – நெருப்புப்
பற்றிக் கொண்டாற்போல; அங்கி தன் நெடும்படை எடுத்து –
அக்கினியாஸ்திரத்தை எடுத்து; இராகவன் அறுத்தான் –
இராமபிரான் (ஆசுரத்தை) அழித்தான்.

————–

ஆசுரப் படையை அக்கினிப் படையால் இராமன் அறுத்தல்

‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடி வரை’ என்ன,
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப,
மங்குல் வல் உருமேற்றின்மேல் எரி மடுத்தென்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 98-

கூற்றுக் கோடினும்- எமன் தவற விட்டாலும்; கோடல –
தாம் குறி தப்பாதவையும்; கடல் எலாம் குடிப்ப- கடல் நீர்
முழுவதும் குடிக்க வல்லவையும்; மேருவை- மகா மேரு
மலையை; நீற்றுக் குப்பையின் நூறுவ- பொடிப்பொடியாக்கி
அழிக்க வல்லவையும்; நெடிய காற்று- பெரும் புயல் காற்றும்;
பின் செலச் செல்வன – தம்பின் வரும்படி முன்
செல்பவையும்; உலகு எலாம் கடப்ப – உலகனைத்தும்
கடக்க முற்படுபவையுமான; நூற்றுக்கோடி அம்பு- பல
கோடி அம்புகளை; நொடியில் – நொடிப்போதில்; இராவணன்
எய்தனன் – இராவணன் ஏவினான்.

——————-

தொடர்ந்து இராவணன் பல படை துரக்க, இராமன் அவற்றைப் பிறைமுக அம்புகளால் பிளத்தல்

கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப,
நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய
காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப,
நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 99-

முனைவர்- வீரர்களில்; சிலர் – சிலர்; என்ன கைக்கடுப்போ
– இது என்ன கை வேகம்; என்பர்- என வியப்பர்; சிலர் – வேறு
சிலர்; ‘இவையும் அன்ன மாயமே- இவ்வம்புகளும் அந்த
மாயமே; அம்பல- அம்புகள் அல்ல; என்பர்- என்பார்கள்; சிலர்
– மற்றும் சிலர்; அவ்வம்புக்கு- இவ்வம்புகளுக்கு; இன்னம்
உண்டுகொல் இடம் – இன்னும் வேண்டிய இடமுண்டோ?’;
என்பர் – என அதிசயிப்பர்; சிலர்- இன்னும் சிலர்; ‘முன்னம்-
முன் எப்போதும்; இத்தனை இகல் போர் – இந்த அளவு
மாறுபாடுற்ற போரை; முயன்றிலனாம்- முயன்று இயற்றியதில்லை;
என்பர்- என எண்ணுவார்கள்.

————-

‘என்ன கைக் கடுப்போ!’ என்பர் சிலர்; சிலர், ‘இவையும்
அன்ன மாயமோ; அம்பு அல’ என்பர்; ‘அவ் அம்புக்கு
இன்னம் உண்டுகொல் இடம்!’ என்பர் சிலர்; சிலர், ‘இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம்’ என்பர்-முனிவர். 100–

முனைவர்- வீரர்களில்; சிலர் – சிலர்; என்ன கைக்கடுப்போ
– இது என்ன கை வேகம்; என்பர்- என வியப்பர்; சிலர் – வேறு
சிலர்; ‘இவையும் அன்ன மாயமே- இவ்வம்புகளும் அந்த
மாயமே; அம்பல- அம்புகள் அல்ல; என்பர்- என்பார்கள்; சிலர்
– மற்றும் சிலர்; அவ்வம்புக்கு- இவ்வம்புகளுக்கு; இன்னம்
உண்டுகொல் இடம் – இன்னும் வேண்டிய இடமுண்டோ?’;
என்பர் – என அதிசயிப்பர்; சிலர்- இன்னும் சிலர்; ‘முன்னம்-
முன் எப்போதும்; இத்தனை இகல் போர் – இந்த அளவு
மாறுபாடுற்ற போரை; முயன்றிலனாம்- முயன்று இயற்றியதில்லை;
என்பர்- என எண்ணுவார்கள்.

———–

மறைமுதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய,
பொறை சிகைப் பெருந் தலைநின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முகக் கடு வெஞ் சரம் அவை கொண்டு பிளந்தான். 101-

மறை முதல் தனி நாயகன் – வேத முதல்வனாகிய
சிறப்புடையோன்; வானினை மறைத்த- ஆகாய வீதியை மூடிய;
சிறை உடைக் கொடுஞ்சரம்- இறகுடன் கூடிய தீய அம்புகள்;
எலாம் – அனைத்தையும்; இமைப்பொன்றில் –
நொடிப்பொழுதில்; திரிய- உலுக்குலையுமாறு; பிறைமுகக் கடு
வெம்சரம் – பிறைச் சந்திரன் போன்ற உருவினவாகிய கொடிய
வெவ்விய அம்புகளால்; பொறை சிகை – பாரமான
உச்சியையுடைய; பெருந்தலைநின்றும் – பெரிய தலை முதலாக;
புங்கத்தின் அளவும்- நுனிவரை; பிளந்தான்- பிளவுபடும்படி
செய்தான்.

—————

இராவணன் விட்ட மயன் படையைக் கந்தருவக் கணையால் இராமன் போக்குதல்

அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந் தவம் ஆற்றி,
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி’ என விரைந்தான்;
மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 102-

அயன் படைத்த – பிரமனால் படைக்கப்பட்ட; பேர்
அண்டத்தின்- பேருலகங்கள் அனைத்திலும்; அருந்தவம்
ஆற்றி – கடுந்தவம் புரிந்து; பயன் படைத்தவர் யாரினும் –
நன்மையுற்றவர் எவரையும் விட; படைத்தான் – சிறப்புப்
பெற்றவனாகிய இராவணன்; ‘நான் இனி – இனி நான்;
பல்போர் வியன் படைக்கலம்- பல்வகைப் போர்
விந்தைகளும் செய்யும் புதிய அம்பினை; தொடுப்பென்’-
தொடுக்கப் போகிறேன்; என- என எண்ணியவனாய்; தயரதன்
மகன் மேல் – தசரத புத்திரனாகிய இராமன் மேல்; மயன்
படைக்கலம் துரந்தனன் – மயன் அம்பை ஏவினான்.

—————-

‘விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகைச்
சுட்டனன்’ எனத் துணுக்கமுற்று, அமரரும் சுருண்டார்;
‘கெட்டனம்’ என வானரத் தலைவரும் கிழிந்தார்;
சிட்டர் தம் தனித் தேவனும், அதன் நிலை தெரிந்தான். 103-

விட்டனன்- (இராவணன் மயன்படை) ஏவி விட்டான்;
விடுபடைக்கலம் – அவன் ஏவிய அம்பு காரணமாக; வேரொடும்
உலகைச் சுட்டனன் – உலகத்தை வேரொடும் சுட்டழித்தான்; என
– என்று; அமரரும்- தேவரும்; துணுக்கமுற்று- அச்சம்கொண்டு;
சுருண்டார் – உள்ளொடுங்கினார்; வானரத் தலைவரும் –
குரங்குப்படைத்தலைவர்களும்; ‘கெட்டனம்’- இனி அழிந்தோம்;
எனக் கிழிந்தார்- எனச் சிதறிக் கலைந்தனர்; சிட்டர் தம்-
நல்லோர்தம்; தனித்தேவனும் – ஒப்பற்ற தலைவனாகிய இராமனும்;
அதன் நிலை தெரிந்தான் – அவ் அம்பின் தன்மையை உணர்ந்து
கொண்டான்.

——————-

‘பாந்தள் பல் தலைப் பரப்பு அகன் புவியிடைப் பயிலும்
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு’ என வருகின்ற அதனைக்
காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான்-
ஏந்தல் பல் மணி எறுழ் வலித் திரள் புயத்து இராமன். 104-

‘பாந்தள் பல்தலைப் பரப்பு- ஆதிசேடனுடைய எண்ணற்ற
தலைகளின் மேல் பரந்துள்ள; அகன் புவியிடைப் பயிலும்-
விரிந்த பூமியின்மீது வாழும்; மாந்தர்க்கு வாழ்வு இல்லை-
மனிதர்களுக்கு உயிர் வாழ்வு இல்லை; என – என்னுமாறு;
வருகின்ற அதனை – வரும் அவ்வம்பினை; ஏந்தல் –
உயர்ந்தனவும்; பல்மணி – பல்வகை மணிகள் பூண்டனவும்;
ஏறுழ்வலி- மிக்க வலிமையுடையனவும் ஆகிய; திரள் – திரண்ட;
புயத்து – தோள்களை உடைய; இராமன் – இராமபிரான்;
காந்தர்ப்பம் எனும்- கந்தர்வம் எனும் பெயருடைய; கடுங்
கொடுங் கணையினால்- வலிய கொடிய அம்பினால்; கடந்தான்
– வெற்றி கொண்டான். (ஆல் – அசை)

————–

இராவணன் தண்டாயுதம் எறிய, அம்பினால் இராமன் அதைப் பொடியாக்கல்

‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத்
தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது,
உண்டு இங்கு என் வயின்; அது துரந்து உயிர் உண்பென்’ என்னா,
தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தொடு ஐந்துடைத் தலையான். 105-

‘பண்டு நான்முகன் படைத்தது’ – முன்னம் பிரமனால்
படைக்கப்பட்டதும்,; கனகன் – இரணியன்; இப்பாரைத்
தொண்டு கொண்டது – இவ்வுலகை அடிமைப்படுத்தக்
காரணமானதும்; மது எனும் அவுணன்- மது எனும் அசுரன்;
முன் தொட்டது- முன்பு ஏந்தியிருந்ததும் ஆன (ஒரு தண்டு);
இங்கு என் வயின் உண்டு- இங்கு என்னிடம் இருக்கிறது;
அது துரந்து உயிர் உண்பென்- அதனை ஏவிப் (பகைவனின்)
உயிரை உண்பேன்’; என்னா – என்று கருதி; ஐந்தொடு
ஐந்துடைத் தலையான் – பத்துத் தலைகளுடைய இராவணன்;
தண்டு கொண்டு எறிந்தான்- கதாயுதத்தால் தாக்கினான்.

————-

தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா
மேகு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது,
ஓர் உகம் தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச்
சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரத்தை. 106-

தாருகன் பண்டு – தாருகாசுரன் முன்னொரு காலத்தில்;
தேவரைத் தகர்த்தது – தேவரை ஒழிக்க உதவியாய் இருந்ததும்;
தனிமா- ஒப்பற்ற பெரிய; மேருமந்தரம் புரைவது – மேரு
மலையையும் மந்திர கிரியையும் நிகர்ப்பதும்; வெயிலன்ன
ஒளியது – சூரிய வெளிச்சம் போல் ஒளியுடையதும்; ஓர்
உகம்தனில்- ஒரு யுகக் காலமளவும்; உலகம் நின்றுருட்டினும்
– உலகம் முழுவதும் சேர்ந்து உருட்டினாலும்; உருளாத- உருட்ட
முடியாத; சீர் உகந்தது – சிறப்புக்கு உரியதும்; தானவர்
சிரங்கள் நெரித்தது – அசுரர் தலைகளை நசுக்கியதும்;

—————-

பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது, பனிப்புற்று
அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம்
தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர,
விசும்பு பாழ்பட, வந்தது மந்தரம் வெருவ. 107-

பசும்புனல் – பச்சை நிற நீரால் நிரம்பிய; பெரும் பரவை
– பெரிய கடலை; பண்டு உண்டது – முன் காலத்தில்
பருகியதும்; பனிப்புற்று – குளிர்ச்சி பொருந்தி; அசும்பு
பாய்கின்றது – நீர் கசிவதும்; அருக்கனின் ஒளிர்கின்றது-
சூரியனைக் காட்டிலும் ஒளி வீசுவதுமான அத்தண்டாயுதம்;
அண்டம் – இவ்வண்டம்; தசும்புபோல் – குடல் போல்;
உடைந்து ஒழியும் – உடைந்து தகரும்; என்று அனைவரும்
தளர- என எல்லாரும் மனம் தளரவும்; விசும்பு பாழ்பட-
வானம் பாழடையவும்; மந்தரம் வெருவவும் – மந்தர மலை
அஞ்சுமாறும்; வந்தது- வரலாயிற்று.

————–

கண்டு, ‘தாமரைக் கடவுள் மாப் படை’ எனக் கழறா,
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா,
புண்டரீகத்தின் மொட்டு அன்ன புகர் முகக் கணையால்
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான். 108-

கண்டு- இக்காட்சியைக் கண்டு; தாமரைக் கண்ணன்
– செந்தாமரைக் கண்ணனான இராமன்; அக் கடவுள்
மாக்கதையை- அத் தெய்வத்தன்மை வாய்ந்த பெருந்தண்டத்தை;
ஆயிரம் கண்ணினும்- ஆயிரம் கண்களால்; அண்டர் நாயகன்
– தேவர் தலைவனாகிய இந்திரனுக்கும்; அடங்காத – பார்க்க
முடியாத; நூறு உண்டை உடை – நூறு உண்டைகளை
உடையதும்; புண்டரீகத்தின் புகர்முகம் – தாமரையின் ஒளி
பொருந்திய முகமுள்ளதுமான அம்பினை; விட்டான்- செலுத்தி;
நூறு பட்டுளது- நூறு கூறாயிற்று எனும்படி; உதிர்த்தான் – சிதற
வைத்தான்.

———

இராவணன் மாயையின் படையை விடல்

‘தேய நின்றவன், சிலை வலம் காட்டினான்; தீராப்
பேயை என் பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென்’ என்று, இராவணன் மதித்தான். 109-

தேய நின்றவன்- அழியப் போகின்றவனாகிய; சிலைவலம்
காட்டினான்- நம் பகைவன் வில்லாண்மை காட்டுகின்றான்;
தீராப் பேயை- தீர்க்க முடியாத பேய்களைப் போன்ற (பயனற்ற);
பல – அம்புகளை; துரப்பது என்?- விடுவதனால் பயனில்லை;
இங்கு இவன் பிழையாமல் – இங்கு இப்பகைவன் (இராமன்)
தப்ப முடியாதபடி); ஆய தன் பெரும் படையொடும்-
தனக்கமைந்த படைக்கலங்களோடு; அடுகளத்து அவிய-
போர்க்களத்தில் பட்டழிய; மாயையின் படை தொடுப்பென்-
மாயாத்திரத்தைத் தொடுத்து விடுவேன்’; என்று இராவணன்
மதித்தான்- என்று இராவணன் சிந்தித்தான்.

————–

பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும்
ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி,
ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா
வீசி மேற் செல, வில் விசைத் தொடை கொண்டு விட்டான். 110-

பூசனைத் தொழில் புரிந்து- மாயாத்திரத்தைப் பூசிக்கும்
தொழிலைச் செய்து; தான் முறைமையிற் போற்றும்- தான்
ஒழுங்காக வணங்கும்; ஈசனை- சிவபிரானை; தொழுது- வழிபாடு
செய்து; இருடியும் சந்தமும் எண்ணி – ரிஷியையும்
சந்தஸ்ஸையும் நினைந்து; ஆசை பத்தினும் – பத்துத்
திசைகளிலும்; அந்தரப் பரப்பினும் – வான வெளியிலும்;
அடங்கா- அடங்காது; செல- எங்கும் செல்லுமாறு; வில் இடை
தொடை – வில்லில் (மாயாத்திரமாகிய) அம்பினை; கொடு
விட்டான்- வைத்து வீசி விட்டான்.

—————

மாயம் பொத்திய வயப் படை விடுதலும், வரம்பு இல்
காயம் எத்தனை உள, நெடுங் காயங்கள் கதுல,
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர்-அமரில்
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார். 111-

மாயம் பொத்திய- மாயை நிறைந்துள்ள; வயப்படை விடுதலும்
– வெற்றிப்படையை இராவணன் ஏவுதலும்; அமரில்- முன்பு நடந்த
போரில்; தூய கொற்றவர் – உயர் பண்பினரான இராம இலக்குவர்;
சுடுசரத்தான்- சுடுகின்ற அம்பினால்; முன்பு- முன்னர்; துணிந்தார்
– துண்டாகி விழுந்த அரக்கர்களின்; வரம்பில் காயம் எத்தனை உள
– எண்ணில்லாத காயம்பட்டு வீழ்ந்த உடல்கள் எத்தனையுண்டோ
அவை அனைத்தும்; நெடுங்காயங்கள் கதுவ- உயர்ந்த ஆகாயம்
வரை தழுவி; ஆயம் உற்று எழுந்தார் என- உயிர் பெற்று
எழுந்தாற்போல (மாயம் காட்டி); ஆர்த்தனர்- ஆரவாரம் செய்தனர்.

————

இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும்,
தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும்,
மந்திரச் சுற்றத்தவர்களும், வரம்பு இலர் பிறரும்,
அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 112-

இந்திரற்கு ஒரு பகைஞனும்- இந்திரசித்தும்; அவற்கு
இளையோரும்- அவனுக்குத் தம்பியரான அதிகாயன்
முதலியவர்களும்; பெரும் தந்திரத் தலைவரும்- பெரி
சேனைத்தலைவர்களும்; தலைத்தலையோரும் – மேலும் பல
தலைமையுடையோரும்; மந்திரச் சுற்றத்தவர்களும்-
(மகோதரன்) முதலிய அமைச்சர்களும்; வரம்பு இலர் பிறரும்
– எண்ணற்ற பிறரும்; அந்தரத்தினை மறைத்தனர்- ஆகாயம்
முழுமையும் மறைத்துக் கொண்டவர்களாய்; மழை உக
ஆர்ப்பார் – மழை சிதறும்படி ஆரவாரம் புரியலானார்.

————

குடப் பெருஞ் செவிக் குன்றமும், மற்றுள குழுவும்,
ப்டைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட,
விடைத்து எழுந்தன-யானை, தேர், பரி, முதல் வெவ்வேறு
அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அல் வழி அடைய. 113-

குடப் பெருஞ் செவிக் குன்றமும்- குடம் போன்ற பெரிய
செவிகளை உடைய மலை போன்ற கும்பகருணனும்; மற்றுள
குழுவும் – மற்றுள்ள வீரர்களும்; படைத்த மூலமாத்
தானையும் – இராவணன் முன்பு பெற்றிருந்த மூலபலப்படையும்;
முதலிய பட்ட – முதலிய மன்னர் இறந்து போன; யானை
தேர் பரி முதல் – யானை தேர் குதிரை முதலாக; வெவ்வேறு
அடைத்த ஊர்திகள்- வேறு வேறாக நிரம்பிய வாகனங்களும்;
அனைத்தும் வந்து – எல்லாம் ஒருங்கு வந்து; அவ்வழி
அடைத்த – அங்கு திரண்டு வந்தன.

——————–

ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த
காய் சினப் பெருங் கடற்படை களப் பட்ட எல்லாம்,
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன,
தேசம், முற்றவும் செறிந்தன, திசைகளும் திசைக்க. 114-

திசைகளும் திகைப்ப – நாற்றிசையிலும் உள்ளார் கண்டு
திகைக்கும் படி;ஆயிரம் பெரு வெள்ளம் என்று – ஓராயிரம்
வெள்ளம் என்று; அறிஞரே அறைந்த – அறிஞரால்
கூறப்பட்டனவும்; களப்பட்ட- களத்தில் முன்பு இறந்தனவுமான;
காய்சினப் பெருங் கடற் படை எல்லாம்- கடுஞ்சினம் மிக்க
விரிந்த கடல் போன்ற படைகள் அனைத்தும்; ஈசனில் பெற்ற
வரத்தினால்- சிவபிரானிடம் பெற்ற வரம் காரணமாக; எய்திய
என்ன- உயிர் பெற்று வந்தன என்னும் படி; தேசமுற்றவும்
செறிந்தன – எல்லா இடத்திலும் நிறைந்தன.

————–

சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த-
‘வென்றதும் எங்களைப்போலும்; யாம் விளிவதும் உளதோ?
இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின்’ என்னா,
கொன்ற கொற்றவர்தம் பெயர் குறித்து அறைகூவி. 115-

வென்றது எங்களைப் போலும்- ‘எங்களைத் தானோ
வெற்றி கொண்டது! யாம் விளிவதும் உளதே – யாம்
இறப்பதும் உண்டோ? இன்று காட்டுதும் – என்
வலிமையை இன்று காட்டுவோம்; எய்துமின் எய்துமின்-
வாருங்கள் வாருங்கள்’; என்னா- என்று; கொன்ற
கொற்றவர் தம் பெயர்- தம்மைக் கொன்ற வீரர்களின்
பெயரை;குறித்து அறை கூவி – குறிப்பாகச் சொல்லி
அறை கூவல் விட்டு; தேவரும் முனிவரும் சிந்த –
தேவர்களும் முனிவர்களும் சிதறியோட; எங்கணும்
சென்ற – (அப்படைகள்) எங்கும் செல்லலாயின.

————–

மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல்

பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய,
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய,
‘பேர் இடம் கதுவ அரிது, இனி விசும்பு’ என, பிறந்த,
பேர் இடங்கரின் கொடுங் குழை அணிந்தன பேய்கள். 116-

(மாயத்தினால்) பார் இடந்து கொண்டு- நிலத்தைத்
துளைத்துக் கொண்டு; பாம்பு எழுந்தன எனும் படிய-
ஆதிசேடன் முதலிய பாம்புகள் எழுந்து வந்தன
எனும்படியாகவும்; பாரிடம்- நிலத்தினுக்கு; மேலே
துனைந்தெழுந்தன- விரைந்து மேலெழுந்து கிளம்பின;
மலையன்ன படிய – பெரிய மலைகளென்று
கூறும்படியாகவும்; இனி பேரிடம் கதுவரிது- இனி
இப்பெரிய உலகில் உறைதலாற்றாது; விசும்பென –
விண்ணகமே பொருத்தமான இடமென; பேரிடங்கரின் –
தண்ணீரில் பெயர்ந்து திரியும் முதலைகள் போன்ற;
கொடுங்குழை – வளைந்த குண்டலங்களை; பிறந்த
பேய்கள் – (மாயத்தில்) பிறந்த பேய்கள்; அணிந்தன-
அணிந்து காட்சி தந்தன.

————–

மாயத்தினால் தோன்றியவர் பல வகைப் படைகளை ஏந்தி நிற்றல்

தாமசத்தினில் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாம் அசத்தினில் செல்கிலாச் சதுமுகத்தவற்கும்
தாமசத்தினைத் தொடர்ந்தவர், பரிந்தன தாழ்ந்தார்-
தாம சத்திரம் சித்திரம் பொருந்திய, தயங்க. 117-

தாமசத்தினில் பிறந்தவர் – மாயாத்திரத்தால்
பிறந்தவரும்; அறந்தெறும் தகையர் – தருமத்தை
அழிக்க வல்ல ஆற்றல் உள்ளவருமான மாயப்படைகள்;
தாம்- தாம்; அசத்தினில் – போலி நெறியில்;
செல்கிலா- செல்லாதவராய்; சதுமுகத்தவற்கு –
நான் முகனுக்கு; உத்தாமம் – சிறந்த; த்திரம் –
யாகத்தை;செய்பவர்- புரிபவரான முனிவர்; பரிந்தனர் தளர- மனம் நொந்து
தளர; தாமம் – ஒளி சிறந்த; சத்திரம் – படைக்கலம்; தயங்க –
மின்னிட; சித்திரம் பொருந்தினர் – விசித்திரமாக விளங்கினர்.

————–

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர்,
தாம இந்துவின் பிளவு எனத் தயங்கு வாள் எயிற்றர்,
தாம் அவிஞ்சையர், கடல் பெருந் தகையினர், தரளத்
தாம விஞ்சையர் துவன்றினர், திசைதொறும் தருக்கி. 118-

தாம் அவிந்து- தாம் முன்னர் இறந்து; மீது எழுந்தவர்க்கு
இரட்டியின் தகையர்- மீண்டும் எழுந்தவர்களாகி இரண்டாம்
முறை வந்த தன்மையுடையவரும்; தாம இந்துவின் – ஒளி மிக்க
திங்களின்; பிளவென- பிறையென; தயங்குவாள் எயிற்றர் –
மின்னும் ஒளிமிக்க பற்களை உடையவரும்; தாம் அவிஞ்சையர்
– தாம் மாயத்தன்மை மிக்கவரும்; கடல் பெரும் தகையினர் –
பெருங்கடல் போல் பரந்தவராய்; தரளத் தாம விஞ்சையர்-
முத்துமாலை அணிந்த விந்தை மிக்கோராய்; திசைதொறும்-
எல்லாப் பக்கங்களிலும்; தருக்கித் துவன்றினர்- நெருங்கினர்.

———–

தாம் மடங்கலும், முடங்கு உளை யாளியும் தகுவார்,
தாம் அடங்கலும் நெடுந் திசை உலகொடும் தகைவார்,
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார்,
தாம் மடங்கலும் கொடுஞ் சுடர்ப் படைகளும் தரித்தார். 119-

தாம் மடங்கலும் – தாவும் இயல்பினவான சிங்கத்தையும்;
முடங்கு உளை யாளியும்- வளைந்த பிடரிமயிரை உடைய
யாளியையும்; தகுவார் – நிகர்த்தவர்களும்;தாம் அடங்கலும்
– தாம் அனைவரும்; நெடுந்திசை – நெடிய திசைகளை;
உலகொடும் தகைவார் – உலகினோடும் (போரில்) தடுக்க
வல்லவர்களும்; தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்
தரும் தகையார்- தாவுகின்ற ஊழித்தீயும் கடலும் போல
ஆரவாரிக்கும் தன்மையர்; தாம்- ஒளிமிக்க; மடங்கலும் –
இடியேறுகளையும்; கொடுஞ்சுடர்ப் படைகளும்- கொடியதும் ஒளிமிக்கதுமான படைக்கலன்களையும்;
தரித்தார் – தாங்கி நின்றனர்.

————-

மாயப் படையின் விளைவு கண்டு, இராமன் மாதலியை வினவுதல்

இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன்,
‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ?
வனையும் வன் கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ?
நினைதியாமெனின், பகர்’ என, மாதலி நிகழ்த்தும்: 120-

இனைய தன்மையை நோக்கிய- இப்படிப்பட்ட நிலையைக்
கண்ட; இந்திரை கொழுநன் – திருமகள் நாயகனாகிய
(இராமபிரான்); ‘இது வினயம் மாயமோ? – இந்தச் செயல் மாயம்
தானோ?; விதியது விளைவோ? – (இல்லையெனில்) விதியில்
நேர்ந்ததுதானோ?; வனையும் – அணிந்த; வன்கழல் அரக்கர்-
பெரிய கழலினை உடைய அரக்கர்களின்; வரத்தினோ?- வர
வலம் தானோ; மற்றோ?- வேறு காரணங்களால் நேர்ந்ததோ?;
நினைதியாம் எனில்- எண்ணி அறிந்திருந்தால்; பகர் –
கூறுவாயாக; என- என்று கேட்க; மாதலி நிகழ்த்தும் – மாதலி
உரைக்கலானான்.

————–

இராமன் ஞானக் கணையால் அதனை ஒழித்தல்

‘இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,
விருப்பின், “கோடியால் விலைக்கு” எனும் பதடியின், விட்டான்-
கருப்புக் கார் மழை வண்ண!-அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன் மீள அரு மாயம். 121-

கருப்பு- கடும் பஞ்ச காலத்தில் (பெய்தற்கு முற்பட்ட);
கார் மழை வண்ண- கரிய முகில் நிற முடையாய்!; இருப்புக்
கம்மியற்கு- இரும்பினால் பணிசெய்கின்ற கொல்லனுக்கு;
இழை நுழை- நூலிழை நுழைகின்ற; ஊசி ஒன்று இயற்றி- ஓர் ஊசி
செய்து; விருப்பின்- ஆசையோடு; விலைக்குக் கோடியால்-
விலைக்குப் பெற்றுக்கொள்; எனும் – என்றுரைக்கும்;
பதடியின் – அறிவிலான் போன்று; அக்கடுந் திசைக்
களிற்றின் – அந்தக் கடுமைவாய்ந்த திசையானையின்; மருப்பு
– கொம்பினால்; கல்லிய – துளைக்கப்பட்ட; தோளவன்-
தோள்களையுடைய இராவணன்; மீள அரும் மாயம் –
தப்புதற்கு அரிதான மாயாஸ்திரத்தை; விட்டான்- எய்தான்?

————

‘வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின்,-
நோய்க்கும், நோய் தரு வினைக்கும், நின் பெரும் பெயர் நொடியின்,
நீக்குவாய்!-உனை நினைக்குவார் பிறப்பு என, நீங்கும். 122-

நோய்க்கும்- பிறவியாகிய நோயினுக்கும்; நோய்தரு
வினைக்கும் – அப்பிணியினை விளைவிக்கும் வினைகளுக்கும்
(எதிராக); நின் பெரும் பெயர்- உன் பெருமை மிக்க
திருநாமம்;நொடியின்- மொழிந்தால்; நீக்குவாய்! – (அவற்றை)
நீக்கி அருள்பவனே!; வீக்கு- அழிக்கும் தன்மையுடையதாய்;
வாயிலில்- வாயில் வைத்திருக்கின்ற; வெள் எயிற்று
அரவின் – வெண் பற்கள் கொண்ட பாம்பின்;
வெவ்விடத்தை – கொடிய நஞ்சினை; மாய்க்கும் –
அழிக்கின்றவாறு; நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின்-
உயர்ந்த மந்திரம் அளிக்கும் ஒப்பற்ற ஆற்றலைப் போன்று
(உன் அம்பின் வலிமையால் இம்மாயாஸ்திரம்); நினை
நினைக்குவார்- உன்னைத் தியானிப்பவர்; பிறப்பு என
நீங்கும்- பிறவி நீங்குவது போன்று தொலையும் (என்று
மாதலி கூறினான்)

இராமநாமத்தின் பெருமை கூறப்பட்டது.

———–

‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர்
உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும், ஓடத்
துரத்தியால்’ என, ஞான மாக் கடுங் கணை துரந்தான்-
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன். 123-

நான்மறை- நான்கு வேதங்களும்; சிரத்தின் – தன் சிரசுக்கு
நிகரான உபநிடதங்களால்;இறைஞ்சவும் தொடரவும் – வணங்கவும்
தேடவும் (இயலாதவாறு); சேயோன் – அப்பாற்பட்டு நிற்பவனாகிய
இராமன்; வரத்தின் ஆயினும் – வர பலத்தினாலாவது; மாயையின்
ஆயினும்- மாயையினாலாவது; வலியோர் உரத்தின் ஆயினும் –
வல்லமை மிக்க ஆற்றலினாலாவது; உண்மையின் ஆயினும்
– சத்தியத்தினாலாவது (எந்த வகையிலாவது இருந்தாலும்); ஓடத்
துரத்தியால்-மாயாஸ்திரம் ஓடும்படித் துரத்துவாய்; என- என்று;
ஞானமாக் கடுங்கணை – ஞானமாகிய பெருமையும் கடுமையும்
நிறைந்த அம்பினை; துரந்தான் – எய்தான்.

—————-

துறத்தல் ஆற்று உறு ஞான மாக் கடுங் கணை தொடர,
அறத்து அலாது செல்லாது, நல் அறிவு வந்து அணுக,
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது, அம் மாயை. 124-

துறத்தல் ஆற்று – (இராமபிரான்) ஏவியவழியில்; உறு –
உற்ற; மாக்கடும்- பெருமை மிக்கதும் கடுமை கொண்டதுமான;
ஞானக்கணை- ஞானாத்திரம்; தொடர- பின்தொடர; அறத்து
அலாது செல்லாத- அறத்துக்கு மாறான வழியில் செல்லும்
இயல்பு நீங்கி; நல்லறிவு வந்து அணுக- நல்லுணர்வு நெருங்கிச்
சேர்தலால்; பிறத்தல் ஆற்றுறும்- பிறப்பின் (காரணமாக)
வழிப்படும்; பேதைமை பிணிப்புற- அறியாமையின் கட்டுற்று;
தம்மை மறத்தலால்- தம் நிலை மறந்ததனால்; தந்த- ஏற்பட்ட;
மாயையின்- மாயை அழிவது போன்று; மாயம் மாய்ந்தது- அம்
மாயாத்திரம் தொலைந்தது.

————-

இராவணன் சூலம் வீசுதல்

நீலம் கொண்டு ஆர் கண்டனும், நேமிப் படையோனும்,
மூலம் கொண்டார், கண்டகர் ஆவி முடிவிப்பான்,
காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான்,
சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 125-

நீலம் கொண்டு ஆர் – நீல நிறம் வந்து பொருந்திய;
கண்டனும்- கழுத்தை உடைய சிவபெருமானும்; நேமிப்
படையோனும்- சக்கரப் படை படைத்த திருமாலும்;மூலம்
கொண்டார்- (திருமாலின் நாபிக் கமலத்தை) மூலமாகக்
கொண்ட பிரமனும்; கண்டகர்- கொடிய அரக்கரின்; ஆவி
முடிவிப்பான்- உயிரை அழிப்பதற்கு; காலம் கொண்டார் –
உரிய காலத்தை அமைத்துக் கொண்டார்; அண்டரை எல்லாம்
– தேவாதி தேவர்களை எல்லாம்; தொழில் கொண்டான்-
ஏவல் கொண்டவனாகிய இராவணன்; முன்னே கண்டன
கழிவிப்பான்- கண்ணுக்கு முன்னே காண்பனவெல்லாம்
அழித்தல் கருதியவனாய்; சூலம் கொண்டான்- ஒரு
சூலாயுதத்தை ஏந்தினான்.

————–

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர்-
கண் தா, குலம், முற்றும்’ சுடும் என்று அக் கழல் வெய்யோன்,
கண் தாகுதல் முன், செல்ல விசைத்துள்ளது கண்டான். 126-

ஆயிரம் கண்ட ஆகுலம்- ஆயிரம் கண்டம் (என்ற
ஒலிக்கருவி) என்னும் தொகுதி; முற்று ஆர்க்கின்றது-
முழுவதும் ஆரவாரிப்பதும்; கண்ணில் கண்டு-
கண்ணுற்று; ஆகுலம் உற்று- துன்பமடைந்து; உம்பர்-
தேவர்கள்; அயிர்க்கின்றது- ஐயுறுவதற்குக் காரணமானதும்;
வீரர் கண் – எதிர்த்து நிற்கும் வீரர் மாட்டுள்ள; தா-
வலிமையையும்; குலம்- குலத்தையும்; முற்றும் சுடும்-
முற்றிலுமாகச் சுட்டெரிக்கும்; என்று – எனக் கருதி; அக்
கழல் வெய்யோன் – அழகிய வீரக்கழலணிந்த கொடிய
இராவணன்;கண் தாகுதல் முன் – (பிறர்) கண் காணுமுன்;
செல்ல- செல்லுமாறு; விசைத்துள்ளது- வேகமாய்
விட்டதான (சூலாயுதத்தை);கண்டான்- இராமபிரான் கண்டான்.

—————-

எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி,
திரியாநிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட,
இரியாநிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய்,
விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா, 127-

எரியா நிற்கும் பல்தலை- எரியும் அத்திரிசூலமானது; எரி
மூன்றும் அஞ்ச- மூன்று நெருப்பும் அஞ்சுமாறு; திரியா நிற்க
– சுழன்று திரிய; தேவர்கள் ஓட- (அதுகண்டு) தேவர்கள்
ஓட்டம் பிடிக்கவும்; திரள் ஓட- (வானரர் முதலிய) கூட்டம்
சிதறி ஓடவும்;இரியா நிற்கும் எவ்வுலகும்- நிலை
குலைகின்ற அனைத்து உலகங்களிலும்; தன் ஒளியே விரியா
நிற்கும்- தன் ஒளிப்பிழம்பே பரப்பிச் செல்லும்;
ஆர்க்கும்- எவருக்கும்; விழி செல்லா நிற்கிலது-
(அதன்மீது) பார்வை செல்லாமல் நில்லாது.

மூன்று நெருப்பு – ஆகவனீயம், காருகபத்தியம், தென்திசைத்
தீ என்பன.

————–

சூலத்தை வெல்ல தேவர்கள் இராமனை வேண்டுதல்

‘செல்வாய்’ என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்;
வல் வாய் வெங் கண் சூலம் எனும் காலனை, வள்ளால்!
வெல்வாய், வெல்வாய்!’ என்றனர், வானோர், மெலிகின்றார். 128-

‘செல்வாய்’ என்ன- ‘சென்று வா’ என்று; செல்ல
விடுத்தான்- (இராவணன்) சூலத்தைச் செல்லுமாறு ஏவினான்;
வானோர் – தேவர்கள்; மெலிகின்றார் – (உடலும் மனமும்)
வாட்டமுற்றவராய்; ‘வள்ளால் இது தீர்த்தற்கு நீயே
ஒல்வாய்- வள்ளலே! இதனை அழித்தற்கு உன்னால்தான்
முடியும்;வேறு ஒருவர்க்கும் உடையாது- பிறர் எவராலும்
(இதனை) அழிக்கவொண்ணாது; வல்வாய் வெங்கண் சூலம் –
வலிய வாயுடன் கொடிதாய் வரும் சூலம்; எனும் காலனை-
எனப் (பெயர் தரித்த) கூற்றுவனை; வெல்வாய் வெல்வாய் –
வெற்றி கொள்க, வெற்றி கொள்க’; என்றனர்- என்று
வேண்டினர்.

————-

சூலத்தின்மேல் எறிந்த படைகள் பயனிலவாக, இராமன் செய்வதறியான் போல் இருத்தல்

துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன
வனையும் காலின் செல்வன,-தன்னை மறவாதே
நினையும் ஞானக் கண் உடையார்மேல் நினையாதார்
வினையம் போலச் சிந்தின-வீரன் சரம் வெய்ய. 129-

துனையும் வேகத்தால்- விரையும் வேகத்தால்; உரும் ஏறும்
துண்ணென்ன- இடியேறும் திடுக்கிடுமாறு; வனையும் காலின்
செல்வன- சூழும் காற்றெனச் செல்லுகின்ற; வீரன் வெய்ய
சரம்- இராமபிரான் ஏவிய கொடிய அம்புகள்; தன்னை மறவாதே
நினையும் – தன்னை என்றும் மறக்காது சிந்திக்கும்;
ஞானக்கண் உடையார் மேல் – ஞானக்கண் படைத்த பேரன்பாளர்
மீது; நினையாதார் வினையம்- இறைவனை நினையாத கீழ்
மக்கள் செய்யும் தீமைகள்; போலச் சிந்தின- பயன் தராது
அழிவது போன்று சிதறி விழுந்தன.

——————

எய்யும், எய்யும் தேவருடைத் திண் படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவி தந்தான்
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்,
ஐயன் நின்றான், செய் வகை ஒன்றும் அறிகில்லான். 130-

புவி தந்தான் – பூமி காக்கும் இராமபிரான்; தேவர் உடைத்
திண்படை எல்லாம்- வானோரின் வலிமை மிக்க படைக் கருவி-
களெல்லாம்; எய்யும் எய்யும் – இடைவிடாது தொடுத்தான்; அவை
– அவ்வாயுதங்கள்; பொய்யும் துய்யும் ஒத்து- பொய்ம்மையும்
(மெல்லிய) பஞ்சினையும் போன்று; சிந்தும் – (சூலத்தை வெல்லாது)
சிதறின; அய்யன்- இராமபிரான்; வய்யும் சாபம் ஒப்பு என-
வைகின்ற சாபம் போன்று; வெப்பின்- வெம்மை சான்ற சூலத்தின்;
வலி கண்டான்- வலிமையை உணர்ந்தான்; செய்வகை ஒன்றும்
அறிகில்லான் நின்றான்- யாதும் செய்தற்கறியாதவன் போன்று
(செயலற்று) நின்றான்.

—————

இராமனை நெருங்கிய சூலம் அவனது உங்காரத்தால் பொடியாதல்

‘மறந்தான் செய்கை; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான்’ என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே,
பிறந்தான் நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 131-

செய்கை மறந்தான் – (இராமபிரான்) செயலாற்றும் முறையை
மறந்து போனான் மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்-
மேலும் எதிரிகளை எதிர்த்துச் செய்ய வேண்டுவன அனைத்தையும்;
துறந்தான்- நீத்து விட்டான்; என்னா- என்று கருதி; உம்பர்-
தேவர்கள்; துணுக்கம் தொடர்வுற்றார்- அச்சம் தொடர நின்றனர்;
அறம் தான் அஞ்சிக் கால் குலைய- அறம் நடுநடுங்கி நிலை
குலைந்து போக; பிறந்தான்- மனிதனாகப் பிறந்த இராமபிரான்;
தான் அறியாதே நின்றான் – தன் தெய்வீகத்தை உணராது
நின்றான்;பிறர் அஞ்ச – (அது சமயம்) கண்டவர் அஞ்சுமாறு;
சூலம் வந்தது- சூலப்படை நெருங்கி வந்தது.

————-

சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர்
உங்காரத்தால் உக்கது, பல் நூறு உதிர் ஆகி. 132-

(அச்சூலம்) சங்காரத்தான்- அழிவைச் செய்வதற்காக; கண்டை
ஒலிப்ப- மணிகள் ஒலிக்க; தழல் சிந்த- நெருப்புச் சிதற; பொங்கு
ஆரத்தான் மார்பு எதிர்- நிரம்பிய முத்து மாலைகளை அணிந்த
இராமனது மார்பின் எதிராக; ஓடிப் புகலோடும்- விரைந்து வந்த
அளவில் (இராமன்); வெங்காரத்தான் – கொடிய வெறுப்போடு;
முற்றும் முனிந்தான் – மிகவும் கோபித்தான்; வகுளிப் பேர்
உங்காரத்தால் – பெரிய சினத்தால் உண்டாகிய உங்கார
சப்தத்தாலேயே; பல்நூறு உதிர் ஆகி உக்கது – (அச்சூலம்)
பல நூறு பொடிகளாகிச் சிந்தியது.

————

வானோரின் பெரு மகிழ்ச்சி

ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர் மாரி
தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார்,
‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம்!’ என்றனர்-வானோர், உயிர் பெற்றார். 133-

வானோர்- தேவர்கள்; உயிர் பெற்றார்- இழந்த உயிரை
மீண்டும் பெற்றவர்களாகி; ஆர்ப்பார் ஆனார் – ஆரவாரித்தார்கள்;
அச்சமும் அற்றார்- பயம் நீங்கினார்கள்; அலர் மாரி தூர்ப்பார்
ஆனார்- மலர் மழையை எங்கும் சொரிந்து தூர்த்தார்கள்; துள்ளல்
புரிந்தார்- துள்ளுதலையும் செய்தார்கள்;”தீர்ப்பாய் நீயே தீ என
வேறாய் வரு தீமை பேர்ப்பாய்” என்றனர் தொழுகின்றார் –
இந்தச் சூலத்தைத் தீர்ப்பவனாகிய நீயே எனக்கு நெருப்பென
வேறாக வருகின்ற தீமைகளையும் நீக்குவாய் ஆவாய் என்று
கூறியவர்களாய் வணங்குகின்றார்கள்.

———-

இராமனை வேத முதல்வனோ என இராவணன் கருதுதல்

‘வென்றான்’ என்றே, உள்ளம் வெயர்த்தான், ‘விடு சூலம்
பொன்றான் என்னின் போகலது’ என்னும் பொருள் கொண்டான்;
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா நின்றான்,
அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான். 134-

விடுசூலம்- நாம் விட்ட சூலம்; பொன்றான் என்னின் போகலது
என்னும் பொருள் கொண்டான் – (இராமன்) இறந்தால் அல்லாமல்
அவனை விட்டுப் போகாது என்னும் கொள்கையைக் கொண்டவனாகிய
இராவணன்; ஒன்று ஆம் உங்காரத்திடை- (இராமனது) தனித்தன்மை
வாய்ந்த உங்கார சப்தத்தால்; உக்கு ஓடுதல் காணா நின்றான் –
பொடிப் பொடியாகிப் போதலைக் கண்ணால் கண்டு நின்றவனாகி;
வென்றான் என்றே உள்ளம் வியந்தான் – இவன் நம்மை வெற்றி
கொண்டான் என்று மனத்தில் அவனை நன்கு மதித்து; அந்நாள்
வீடணனார் சொல் நினைவுற்றான்- (அனுமன் தூது வந்த பொழுதும்,
மந்திர அவையிலும்) தன் தம்பியாகிய வீடணனது அறிவுரைகளை
மனத்தில் நினைத்தான்.

————-

‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ? அல்லன்;
மெய் வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின்,
செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான்
அவ் வேத முதல் காரணன்?’ என்றான். 135-

என் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – என்னுடைய
உண்மையான மிகச்சிறந்த வரபலங்களை எல்லாம் அழிக்கின்றான்;
சிவனோ? – இவ்இராமன் சிவபெருமானாய் இருப்பானோ?
அல்லன் – அப்படி இரான்; திருமாலாம் அவனோ? –
திருமாலாகிய அவனாக இருப்பானோ?; அல்லன் – அப்படியும்
இரான்; தவனோ என்னின் – தவம் செய்து ஆற்றல் பெற்றவனாய்
இருப்பானோ என்றால்; செய்து முடிக்கும் தரன் அல்லன்-
இத்தகைய பேராற்றலைத் தவத்தால் செய்து முடிக்கு தகுதியுடையவன்
ஒருவனும் இல்லை; (ஆதலின்) அவ் வேத முதல் காரணன்
இவனோதான் – அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல
காரணமான ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?; என்றான்-
என்று கூறி வியந்து பிரமித்து நின்றான்.

————–

இராவணன் நிருதியின் படையை விடுதல்

‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன்;
இன்றே வென்றி முடிப்பென்; பெயர்கில்லேன்; நேரே
செல்வென் கொல்’ என் அரக்கன் நிமிர்வு எய்தி,
‘வேரே நிற்கும்; மீள்கிலென்’ என்னா, விடலுற்றான். 136-

யாரேனும் தான் ஆகுக- எதிர் நிற்பவன் (மேல் நாம்
நினைத்தவருள்) எவனாக இருப்பினும் இருந்து விட்டுப்
போகட்டும்; யான் என் தனி ஆண்மை பேரேன் – நான்
எனக்கேயுரிய தனியாற்றலிலிருந்தும் பெயர மாட்டேன்;
நின்றே வென்றி முடிப்பென் – (எதிர்) நின்றே என்
வெற்றியை முடிப்பேன்; புகழ் பெற்றேன்- மூவுலகிலும் நான்
வீரத்தால் புகழ் பெற்றவன்; நேரே செல்லும்- (ஒரு வீரன்)
நேருக்கு நேர் செல்வான்; ‘கொல்லும் – கொல்வான்;எனில்
தான் – என்றால்தான்; நிமிர் வென்றி வேரே நிற்கும்-
மடங்காத வெற்றியின் (புகழ்) வேர் நிலைத்து நிற்கும்;
மீள்கிலென்- (எது நேரினும்) திரும்பேன்; என்னா விடல்
உற்றான்- என்று கூறியவாறு (இராவணன்) அம்புகளை
விடுவதற்கு ஒருப் பட்டான்.

முன் பாடலில் சிறிதே தலையெடுத்த சத்துவகுணம், இராவணனின்
ராசதக் குணத்தால் மீண்டும் அடங்கி ஒடுங்கிப் போனமையை
இப்பாடல் அறிவிக்கின்றது.

————–

நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப் படை நெஞ்சில்
கருதி, தன்பால் வந்தது அவன் கைக்கொடு, காலன்
விருதைச் சிந்தும் வில்லின் வலித்து, செலவிட்டான்-
குருதிச் செங் கண் தீ உக, ஞாலம் குலைவு எய்த. 137-

நிருதித் திக்கில் நின்றவன்- நிருதியின் திசையில்
நிற்கும் திக்குப் பாலகனுடைய; வென்றிப் படை நெஞ்சில்
கருதி- வெற்றி தரும் படைக்கலத்தை நெஞ்சத்தில்
தியானிக்க; தன்பால் வந்தது- அப்படை (உடனே)
அவனிடம் வந்தது; அவன் கைக்கொடு- அந்த இராவணன்
அதனைக் கையால் ஏற்று; காலன் விருதைச் சிந்தும்-
யமனுடைய வீர விருதுகளையெல்லாம் அழித்தொழிக்க
வல்ல; வில்லில் வலித்து- (தன்) வில்லில் ஏற்றி; குருதிச்
செங்கண் தீ உக- உதிரம் போல் சிவந்த (தன்) கண்கள்
தீயுமிழுமாறும்; ஞாலம் குலைவு எய்த- உலகம் நிலை
குலையவும்; செலவிட்டான்- அந்த (நிருதிக்கணையை)
விடுத்தான்.நிருதித் திசை – தென்மேற்குத் திசை.

————-

வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச,
பெய்யும் கோடிப் பல் தலையோடும் அளவு இல்லா,
மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப, 138-

வய்யம் துஞ்சும்- (இந்த) உலகம் தங்குதற்கிடமான; வன்
பிடர் நாகம்- வலிய பிடரியையுடைய ஆதிசேடன்;மனம் அஞ்ச
– மனம் பயம் கொள்ளுமாறு; கோடிப் பல் தலையோடும்
– வரிசையாக அமைந்த தலைகளோடும்; பய்யும்- படங்களும்;
அளவு இல்லா மெய்யும்- எண்ணிக்கை கடந்த உடல்களும்;
வாயும் பெற்றன- வாய்களும் பெற்றனவும்; மேரு கிரி சால
நொய்து- மேரு மலை இவற்றோடு ஒப்பிட மிகவும் கனமற்றது;
என்று ஓதும் தன்மைய- என்று கூறத்தக்கனவாய்; நுழைகின்ற
– நுழைகின்றனவும்;

————-

வாய் வாய்தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 139-

வாய் வாய் தோறும்- ஒவ்வொரு வாயிலிருந்தும்;
மாகடல் போலும்- பெருங்கடல் நீர் போலும்; விடநீர்
போய் வார்கின்ற – நச்சுநீர் மிகுதியாக ஒழுகப்
பெற்றனவும்; பொங்கு அனல் கண்ணில் பொழிகின்ற
– மிக நெருப்பைக் கண்களில் கொட்டுகின்றனவும்; மீவாய்
எங்கும்- மேலிடம் எங்கும்; வெள் இடை இன்றி –
வெற்றிடம் இல்லாமல்; மிடைகின்ற- நெருங்குகின்றனவும்;
பேய் வாய் அன்ன- பேய்களின் வாய்களைப் போல;
வெள் எயிறு – வெண்மையான பற்கள்; பிறழ்கின்ற-
விளங்குகின்றனவும்.

————-

‘கடித்தே தீரும்; கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும்’ என்று உயிர் எல்லாம் குலைகின்ற,
‘முடித்தான் அன்றோ, வெங் கண் அரக்கன்? முழு முற்றும்
பொடித்தான் ஆகும், இப்பொழுது’ என்னப் புகைகின்ற. 140-

கடித்தே தீரும்- (இந்த நிருதிக்கணை) (இராமனைத்)
தீண்டிக் கடித்தே தீரும்; கண் அகல் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும்- (கடித்துவிட்டு) இடமகன்ற இந்த உலகத்தைக்
கடலோடும் சேர்த்துக் குடித்தே தீரும்; என்று உலகெல்லாம்
குலைகின்ற- எனக் கூறி உலகோர் நிலைகுலைவதற்கு ஏதுவாய்;
வெங்கண் அரக்கன்- அருளற்ற இந்த இராவணன்; முழுமுற்றும்
முடித்தான் – உலகம் அடங்கலும் அழித்துக் கட்டிவிடுவான்;
இப்பொழுது பொடித்தான் ஆகும் – இப்பொழுதே பொடி செய்து
விடுவான்; என்னப் புகைகின்ற- என்னுமாறு புகை கக்கி வந்தன
(அந்த நிருதிக்கணையுமிழ்ந்த நாகங்கள்)

————–

நிருதிப் படையைப் போக்க, இராமன் கருடப் படையை விடுதல்

அவ்வாறு உற்ற ஆடு அரவன் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்,
‘எல் வாய்தோறும் எய்தின’ என்னா, எதிர் எய்தான்,
‘தவ்வா உண்மைக் காருடம் என்னும் படைதன்னால். 141-

அவ்வாறு உற்ற ஆடு அரவம்- அங்ஙனம் படமெடுத்தாடும்
இயல்பான நாகங்கள்; தன் அகல்வாயில்- தம் அகன்ற
வாயினால்; மால் வரை முற்றும்- பெரிய மலைகள் முழுவதையும்;
கவ்வா நின்ற அவை கண்டான்- கவ்வத்தக்கனவாய் அவை
வருவதை (இராமன்) கண்டான்; எவ்வாய் தோறும் எய்தின-
இந்த நாகங்கள் எல்லா இடங்களிலும் வந்து அடைந்தன; என்னா
– என்றெண்ணி; தவ்வா- தவறாத; மெய்ம்மைக் காருடம்
என்னும் படை தன்னால்- உண்மையுடைய கருடாத்திரம் என்னும்
படைக்கலத்தால்; எதிர் எய்தான்- (அந்நாகக் கணைகளை
அழிக்க) எதிர்க்கணையாக விட்டான்.

———————

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,
பவணத்து அன்ன வெஞ் சிறை வேகத் தொழில் பம்ப,
சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 142-

நாகத்து இனம் – (இராவணன் நிருதிக்கணையால் விடுத்த)
நாகக் கூட்டங்கள்; எவண் எத்தன்மைத்து ஏகின என்ன-
எங்கே எவ்வாறு ஏகி மறைந்தன என்று வியக்குமாறு; பவணத்து
அன்ன வெஞ்சிறை- காற்றைப் போன்ற கொடிய சிறகுகளில்;
வேகத் தொழில் பம்ப- விசையுடன் கூடிய பறக்கும் செயல்
நிறைதலால்; சுவணக்கோலம்- பொன்மயமான நிறத்தையும்;
துண்டம், நகம், தொல் சிறை- மூக்கையும், நகத்தையும்,
முதிர்ந்த சிறகையும் கொண்ட; போர்வெல் உவணப் புள்ளே-
போரில் வெற்றியையே பெறும் கருடப் பறவையின் மயமாகவே;
வானோர் உலகு எல்லாம் ஆயின- தேவர் உலகு முழுவதும்
மாறின.

பவணம் – காற்று. பவனம் என்ற வடசொல் எதுகை நோக்கிப்
பவணம் என வந்தது.

———–

அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல்
துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன,
‘இளக்க அரும் இலங்கை தீ இடுதும், ஈண்டு’ என
விளக்கு இனம் எடுத்தன போன்ற, விண் எலாம். 143-

அளக்க அரும் புள்ளினம் அடைய- எண்ண முடியாத
கருடப் பறவைத் தொகுதி எல்லாம்; துளக்க அரும் வாய்
தொறும்- அசைத்தற்கு இயலாத வாய்கள் தோறும்; ஆர்
அழல் எரியைத் தொட்டன- பெருந் தீயையுமிழ்ந்தன;
அவை இளக்க அரும் இலங்கை தீ இடுதும் – நெகிழாத
இலங்கையை நெகிழ்விக்க நெருப்பையிடுவோம்; ஈண்டு என-
விரைவில் என்று; விண் எலாம்- விண்ணுலகத் தேவர்
எல்லோரும்; விளக்கு இனம் எடுத்தன போன்ற-
விளக்குகளின் தொகுதியை எடுத்தாற் போன்றிருந்தன.

—————

குயின்றன சுடர் மணி, கனலின் குப்பையின்
பயின்றன, சுடர் தரப் பதும நாளங்கள் வயின் தொறும்
கவர்ந்தென, துண்ட வாள்களால் அயின்றன,
புள் இனம் உகிரின் அள்ளின. 144-

குயின்ற(ன்)ன- நாகங்களின் தலையில் பதித்து வைத்தாற்
போன்ற; சுடர்மணி கனலின் குப்பையின் பயின்றன-
ஒளியுள்ள மாணிக்கங்கள் தீயின் தொகுதியைப் போன்றனவாய்;
சுடர் தர – ஒளிவீச; புள் இனம் – அந்தக் கருடப்
பறவைகள்; பதும நாளங்கள்- தாமரைத் தண்டுகளை; வயின்
தொறும்- இடந்தோறும்; கவர்ந்தென- கவர்ந்து சென்றாற்
போல; உகிரின் அள்ளின- அப்பாம்புகளைக் கால்
நகங்களால் அள்ளி; துண்ட வாள்களால் – மூக்குகளாகிய
வாள்களைக் கொண்டு; அயின்றன- கொத்தித் தின்றன.

————

ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன்,
தீயிடைப் பொடிந்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின் தோற்றத்த. 145-

ஆயிடை- அப்போது; அரக்கனும் அழன்ற நெஞ்சினன் –
இராவணனும் கொதிக்கும் நெஞ்சினன் ஆகி; தீயிடைப் பொடிந்து
எழும் உயிர்ப்பன்- நெருப்புப் பொடியாகச் சிந்துகின்ற பெரு
மூச்சுடையவனாய்; சீற்றத்தன்- வெகுளி மிக்கவனாய்; மா இரு
ஞாலமும் விசும்பும்- மிக விரிந்த இந்த உலகமும் ஆகாயமும்;
வைப்பு அற- இடமில்லையென்னும்படி; உருமின் தோற்றத்த-
இடியைப் போன்று காட்சி தரும்; சுடுசரம் தூயினன் – சுடுகின்ற
அம்புகளை வாரி வீசினான்.

—————

அங்கு அ(வ்) வெங் கடுங் கணை அயிலின் வாய்தொறும்,
வெங் கணை படப் பட, விசையின் வீழ்ந்தன;
புங்கமே தலை எனப் புக்க போலுமால்;
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல! 146-

அங்கு அவ் வெம்கடும் கணை- அப்போது இராவணன்
விட்ட கொடிய வேகங்கொண்ட அம்புகள்; அயிலின் வாய்
தொறும்- (தம்முடைய) கூரிய வாய்கள் தோறும்;வெம்கணை
படப்பட – (இராமனுடைய) கொடிய அம்புகள் படப்பட;
விசையின் வீழ்ந்தன – வேகமாகச் சில வீழ்ந்தன; துங்கவாள்
அரக்கனது உரத்தில் – (வீரத்தில்) உயர்ந்தவனான இராவணனது
மார்பில்; புங்கமே தலையெனப் புக்க- அம்பின் முனையே
தலையாகப் புகுந்து கொண்டன; தோற்றல- (அதனால் அவை)
கண்களுக்குப் புலப்படவில்லை.

————-

இராவணன் விஞ்சைகள் தளர்தலும், இராமன் வீரமும் வலியும் மிகுதலும்

ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்,
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன, விஞ்சைகள், நிலையின் தீர்ந்தன;
மிக்கன, இராமற்கு வலியும் வீரமும். 147-

ஒக்க நின்று – சரிசமமாக நின்று; எதிர் – எதிர்த்து;
அமர் உடற்றும் காலையில்- போர்புரியும் போது;
முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு-
சிவபெருமானது பெரிய கயிலை மலையைத் தூக்கிய
தோள்களையுடைய வலிமை வாய்ந்த இராவணனுக்கு;
விஞ்சைகள்- அவன் கற்று வைத்திருந்த மாய
வித்தைகள்; நெக்கன- (நினைவுக்கு வரும் தன்மைகள்)
நெகிழ்ந்தனவாயின;நிலையில் தீர்ந்தன- (ஆதலால்)
அவற்றின் தெய்வத்தன்மைகள் அகன்று போயின; இராமற்கு வலியும் வீரமும் மிக்கன- இராம
பிரானுக்கோ வல்லமையும் வீரத் தன்மையும் மிகத் தொடங்கின.

——————

பிறை முக அம்பினால் இராமன் இராவணன் தலையை அறுக்க, அது கடலில் போய் விழுதல்

வேதியர் வேதத்து மெய்யன, வெய்யவற்கு
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்,
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான்,
பாதியின் மதி முகப் பகழி ஒன்றினால். 148-

வேதியர் வேதத்து மெய்யன்- வேதம் வல்லோர்
ஓதுகின்ற வேதத்தின் உண்மைப் பொருளாயிருக்கும் இராமபிரான்;
வெய்யவர்க்கு ஆதியன்- கொடியவர்கட்கெல்லாம்
முதல்வனாயிருக்கும் இராவணனுக்கு; அணுகிய அற்றம்
நோக்கினான்- (இராவணன் தலையைக் கொய்ய இதுவே) ஏற்ற
சமயம் என்று உணர்ந்து; சாதியின் நிமிர்ந்த ஓர் தலையை-
அவன் தலைக் கூட்டத்தில் சிறந்த ஒரு தலையை; பாதியின்
மதி முகப்பகழி ஒன்றினால்- அர்த்தசந்திரக்கணை ஒன்றால்;
தள்ளினான் – (அறுத்து நிலத்தில்) வீழ்த்தினான்.

————

மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி
போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய். 149-

வீசு கால் எறி போரிடை- வீசுகின்ற தன்மையனான காற்றுக்
கடவுளோடு நிகழ்ந்த (ஆதிசேடனின்) போரில்; மேருவின்
கொடுமுடி- மேரு மலையின் சிகரம்; ஒடிந்து போய் – முறிந்து
போய்; புணரி புக்கென- கடலில் புகுந்தது போல்; ஆரியன்
சரம் பட- இராமபிரானுடைய அம்பு தாக்கியதன் விளைவாக;
அரக்கன் வன் தலை- இராவணனது வலிய தலை; அன்று-
அந்நாளில்; நெருப்பொடு போய் நீரிடை வீழ்ந்தது- தீயோடு
சென்று கடல் நீரில் போய் விழுந்தது.

————–

குதித்தனர் பாரிடை, குன்று கூறுற
மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினார்
துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினார்;
மதித்தனர், இராமனை-வானுளோர் எலாம். 150-

வான் உளோர் எலாம் – விண்ணுலக வாசிகளான தேவர்கள்
யாவரும்; பாரிடை குதித்தனர் – மண்மீது குதித்தார்கள்; குன்று
கூறுஉற மிதித்தனர் – திரிகூட மலை மூட்டு நெகிழும்படி
துகைத்தார்கள்; வடகமும் தூசும் வீசினர் – (மகிழ்வின்
மிகுதியால்) மேலாடைகளையும் இடையாடைகளையும் வீசியெறிந்தனர்;
இராமனைத் துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர் –
இராமபிரானை துதித்து, பாடி, ஆடித்துள்ளி மகிழ்ந்தனர்; மதித்தனர்
– (இராமபிரானின்) பேராற்றலை உயர்த்திப் போற்றினர்.

——————-

இராவணனது அற்ற தலை மீண்டும் முளைத்து, இராமனை ஆரவாரத்துடன் வைது அதட்டுதல்

இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் எனப் பெயர்த்தும், அத் தலை
மறந்திலது எழுந்தது, மடித்த வாயது;-
சிறந்தது தவம் அலால், செயல் உண்டாகுமோ! 151-

இறந்தது ஓர் உயிர்- இறந்துபோன ஓர் உயிர்; கருமத்து
ஈட்டினால்- (ஈட்டிய) கருமங்களின் தொகுதியால்; உடன் –
உடனே; பிறந்து உளதாம் என- (மீண்டும்) பிறந்திருப்பது
போல; பெயர்த்தும் – திரும்பவும்; மறந்திலது- (முன்
இருந்த நிலைமையை) மறவாமல்; மடித்த வாயது- (சினத்தால்)
மடித்த வாயோடு கூடியதாய்; அத்தலை எழுந்தது- அந்த
இராவணன் தலை மீண்டும் முளைத்தது;சிறந்தது தவம் அலால்
– (உலகில்) சிறந்ததான தவம் இல்லையானால்; செயல்
உண்டாகுமோ- (இவ்வாறான) அரிய செயல்கள் நிகழக் கூடுமோ?
(கூடாது).

—————-

கொய்தது, ‘கொய்திலது’ என்னும் கொள்கையின்
எய்த வந்து, அக் கணத்து எழுந்தது ஓர் சிரம்,
செய்த வெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது, தெழித்தது, மழையின் ஆர்ப்பினால். 152-

கொய்தது- கொய்யப் பெற்றதாகி; கொய்திலது-
கொய்யப் படவில்லை; என்னும் கொள்கையின்-
என்னும் எண்ணம் உண்டாகுமாறு; எய்த அக்கணத்து
– எய்த அந்தக் கணத்திலேயே; வந்து எழுந்தது ஓர்
சிரம்- (உடனே) வந்து ஒரு தலை முளைத்தது; செய்த
வெஞ்சினத்துடன்- வெளிப்படும்படியான கொடுங்
கோபக் குறியுடன்; சிறக்கும் செல்வனை-
பெருமைக்குரிய இராமபிரானை; மழையின் ஆர்ப்பது-
மழை போன்ற ஆரவாரத்துடன்; வைதது தெழித்தது-
வைது திட்டியது.

—————

கடலீல் வீழ்ந்த இராவணன் தலையும் ஆரவாரித்தல்

இடந்தது கிரிக் குவடு என்ன எங்கணும்
படர்ந்தது, குரை கடல் பருகும் பண்பது,
விடம் தரு விழியது, முடுகி, வேலையில்
கிடந்ததும், ஆர்த்தது, மழையின் கேழது. 153-

விடம் தரு விழியது- நஞ்சைக் கக்குகின்ற
கண்களையுடையதாகி; முடுகி- விரைந்து; வேலையில்
கிடந்ததும் – கடலிற் கிடந்ததான தலையும்; கிரிகுவடு
கிடந்தது என்ன- மலைச்சிகரம் குத்தி எடுக்கப்பட்டது
என்னுமாறு; எங்கணும் படர்ந்தது- எங்கும் சென்றதாகி;
மழையின் கேழது- மேகத்தின் நிறத்தைக் கொண்டு;
குரை கடல் – ஒலிக்கின்ற கடலின் நீரை; பருகும்
பண்பது – பருகுகின்ற தன்மையதாய்; ஆர்த்தது –
ஆரவாரித்தது.

மேகம் கடல்நீரை உண்ணும் தன்மையது எனும் புராண
மரபு பற்றி, இராவணன் தலைமை மேகமாக்கி, கடல் நீரினை
அது உண்டு ஆர்ப்பரித்தது என்றார்.

———-

இராவணனது கையை இராமன் அறுக்க, அதுவும் முன்போல் முளைத்தல்

‘விழுத்தினன் சிரம்’ எனும் வெகுளி மீக்கொள,
வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்த ஓர்
எழுத்தினன், தோள்களின் ஏழொடு ஏழு கோல்
அழுத்தினன்-அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 154-

அசனு ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான்- பேரிடியும்
அஞ்சக் கூடியவாறு ஆர்ப்பரிக்கின்ற இராவணன்; சிரம்
விழுத்தினன் எனும் வெகுளி மீக்கொள- தன் தலையை
(இராமன்) வீழ்த்திவிட்டான்
என்கின்ற வெகுளி மேல் ஓங்கி; வழுத்தினன்- (யாவரும்)
போற்றுமாறு; உயிர்களின் முதலில்- உயிர் எழுத்துக்களின்
முதலிலே; வைத்த ஓர் எழுத்தினன் தோள்களில்-
வைக்கப் பட்டுள்ள ஒப்பற்ற எழுத்தாகிய அகர வடிவினனான
இராமபிரானுடைய தோள்களில்; ஏழொடு ஏழு கோல்
அழுத்தினான் – பதினான்கு சரங்களைப் பதித்தான்.

”எழுத்துகளில் நான் அகரமாக இருக்கிறேன்” என்பது
”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே
உலகு” என்று வள்ளுவனார் வாக்கும் நோக்குக. (குறள்: 1)
”அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி, நாத
மாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத்
தலைமை, செயற்கையுணர்வானன்றி, இயற்கையுணர்வான்
முற்றும் உணர்தலானும் கொள்க என்ற இக்குறளுக்குப்
பரிமேலழகர் உரைத்த நயவுரையும் இங்கு நினைத்தற் குரியது.
இராமன் அகார வாச்சியனான மூல முதற் பொருளே என
மீண்டும் நினைப்பித்தவாறு.

—————

‘தலை அறின், தருவது ஓர் தவமும் உண்டு’ என,
நிலை உறு நேமியான் அறிந்து, நீசனைக்
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான். 155-

தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என –
(இராவணனுடைய) தலையை அரிந்தால் (அது மீண்டும்)
பெறுவதாகிய ஒரு வரத்தை இவன் பெற்றிருக்கிறான் என்று;
நிலையுறு நேமியான் அறிந்து- நிலை பேறுடைய சக்கரப்
படையையுடைய இராமபிரான் அறிந்து; நீசனை –
இழிந்தவனாகிய இராவணனை; கலையுறு திங்களின் வடிவு
காட்டிய – (பாதிக்) கலைகள் அமைந்த சந்திரனின் (அரை
வட்ட) வடிவைக் காட்டுகின்ற; சிலை உறு கையையும்-
வில் ஏந்திய கையினையும்; தலத்தில் சேர்த்தினான்-
(துண்டித்து) நிலத்தில் வீழச் செய்தான்.

—————–

கொற்ற வெஞ் சரம் பட, குறைந்து போன கை
பற்றிய கிடந்தது சிலையைப் பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது;
அற்ற கை, பிறந்த கை, யார் அது ஓர்குவார்? 156-

கொற்ற வெம் சரம் பட- (இராமபிரானுடைய) வெற்றி
மிகுந்த கொடிய அம்பு பட்டதனால்;குறைந்து போன கை-
வெட்டப்பட்டு விட்ட கை; பற்றிய கிடந்தது சிலையை-
பற்றிக் கிடந்த வில்லை; பாங்குற மற்று ஓர் கை பிடித்தது
போல- (கீழே விழுமுன்) மற்றொரு கை அழகாகப் பற்றிக்
கொண்டது போல; வவ்வியது- (புதிதாக முளைத்த உடனே)
பிடித்துக் கொண்டது; அற்ற கை பிறந்த கை- அறுக்கப்பட்ட
கை மீண்டும் முளைத்து விட்டதை; யார் அது ஓர்குவார்?-
(முளைத்த விரைவினால்) யாரும் அறிய இயலவில்லை?

————-

அற்ற தன் கையை எடுத்து இராவணன் மாதலிமேல் வீசித் தாக்குதல்

பொன் கயிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற,
மின் கையில் கொண்டென வில்லை விட்டிலா
வன் கையைத் தன் கையின் வலியின் வாங்கினான். 157-

ஊர்தியான் – (இராமபிரானுடைய தேர்ச்சாரதியான)
மாதலியின்; பொன் கை இற்று வலியைப் போக்குவான்
– அழகிய கையை ஒடித்து அவன் வலிமையைப் போக்கக்
கருதிய இராவணன்; முன் கையில் துறும் மயிர் – முன்னங்
கையிலே அடர்ந்துள்ள மயிர்; முள்ளில் துள்ளுற-
முள்ளைப் போல் கூச்செறிய; மின்கையில் கொண்டென-
மின்னலைக் கையிற் கொண்டாற் போன்ற; வில்லை விட்டிலா
– வில்லை விடாத; வன் கையை- (இராமனால் முன்பு)
வெட்டப்பட்ட வலிய கையினை; தன் கையின் – (இராவணன்)
தனது கையால்; வலியின் வாங்கினான்- வலிமையுடன் எடுத்து
வீசினான்.

மாதலி – இந்திரன் ஆணையால் தேரோடு வந்து
இராமபிரானுக்குத் தேர் ஓட்டும் சாரதி.

——————

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய
தளம் கிளர் தடக் கை தன் மார்பில் தாக்கலும்,
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன், வாய் வழி உதிரம் தூவுவான். 158-

விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் – ஒளி விளங்குகின்ற
வயிர வாளையுடைய இராவணன்; வீசிய தளம் கிளர் தடக்கை-
வீசியெறிந்த பருத்துக் கிளர்ந்த பெரிய கரம்; தன்
மார்பில் தாக்கலும் – தனது மார்பில் தாக்கியவுடனே; உளம்
கிளர் பெருவலி- மனத்தில் எழுகின்ற பெரு வலிமை வாய்ந்த;
உலைவில் மாதலி- தளர்வில்லாத மாதலி; வாய் வழி உதிரம்
தூவினான் துளங்கினான்- தன் வாயின் வழியாகக்
குருதியினைச் சிந்தியவனாய் நிலை குலைந்தான்.

———–

மாதலிமேல் இராவணன் தோமரம் வீச, இராமன் அதனைத் துகளாக்குதல்

மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர்
தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினன்-
தாம் அரத்தால் பொராத் தகை கொள் வாட் படை,
காமரத்தால், சிவன் கரத்து வாங்கினான். 159-

அரத்தால் பொராத் தகை கொள் வாள்படை-
அரத்தினால் அராவப் படாத (இயல்பாகக்) கூர்மை
கொண்ட வாட்படையை; காமரத்தால் சிவன் கரத்து
வாங்கினான்- சீகாமரப்பண் பாடி, சிவபெருமானது
கரங்களிலிருந்து பெற்றவனாகிய இராவணன்; மாமரத்து
ஆர் கையால் வருந்துவானை- பெரிய மரம் போன்ற
தன் கையின் தாக்குதலால் வருந்துகின்ற மாதலியை; ஓர்
தோமரத்தால்- ஒரு தோமரம் என்ற ஆயுதத்தால்;உயிர்
தொலைப்பத் தூண்டினான்- உயிரை நீக்குமாறு
செலுத்தினான்.

——————

‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு’ என,
மூண்ட வெந் தழல் சிந்த முடுக்கலும்,
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெங் கணை
தூண்டினான்; துகளானது, தோமரம். 160-

மாதலி வாழ்வு இன்றோடு மாண்டது- மாதலியின் வாழ்க்கை
இன்றோடு முடிந்தது; என- என்னும்படி; மூண்ட வெந்தழல் சிந்த
முடுக்கலும்- மூட்டிய கொடுந்தழலைச் சிந்திக்கொண்டு (தோமரப் படையை) விரைந்து இராவணன் விடுத்தபோது; ஆண்ட வில்லி-
யாவரையும் ஆட்கொள்பவனும் கோதண்டம் எனும் பெயருடைய
வில்லையுடையவனுமாகிய இராமபிரான்; ஓர் ஐம்முக வெங்கணை
தூண்டினான்- ஒப்பற்ற ஐந்து முகங்களையுடைய கொடிய
அம்பினைச் செலுத்தினான்; துகள் ஆனது தோமரம் – பொடிப்
பொடியாய்ப்போனது அந்தத் தோமரப்படை.

———–

இராவணனது தலைகளை இராமன் தொடர்ந்து அறுக்க, அவை பல இடங்களிலும் சிதறி விழுதல்

ஓய்வு அகன்றது, ஒரு தலை நூறு உற,
போய் அகன்று புரள, பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்-அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை நடத்தியே. 161-

அறிவின் தனி நாயகன்- ஞானத்தின் ஒப்பற்ற தலைவன்
ஆகிய இராமபிரான்; கை கடுமை நடத்தி – (தனது) கையில்
வேகத்தைச் செலுத்தி; ஓய்வு அகன்று- ஒழிவில்லாமல்;
ஒருதலை நூறு உற- ஒரு தலை நூறு தலைகளாக முளைக்கவும்;
அகன்று போய்- (அவையனைத்தும்) வெகு தொலையிற்போய்;
புரளப் பொருகணை ஆயிரம் தொடுத்தான்- புரளுமாறு போர்
அம்புகள் ஆயிரம் விடுத்தான்.

————–

நீர்த் தரங்கங்கள்தோறும், நிலம்தொறும்,
சீர்த்த மால் வரைதோறும், திசைதொறும்,
பார்த்த பார்த்த இடம்தொறும், பல் தலை
ஆர்த்து வீழ்ந்த-அசனிகள் வீழ்ந்தென. 162-

பல்தலை- (துண்டுபட்ட) இராவணனின் பல தலைகளும்; நீர்த்
தரங்கங்கள் தொறும்- கடலின் அலைகளிலும்; நிலம் தொறும்- பல்வகை நிலங்கள் தோறும்; சீர்த்த மால்வரை
தொறும்- சிறப்பான பெரிய மலைகள் தோறும்; திசை
தொறும் – திசைகள் தொறும்; பார்த்த பார்த்த இடம்
தொறும் – கண்ணிற் பட்ட இடங்கள் தோறும்; அசனிகள்
வீழ்ந்தென- இடிகள் வீழ்ந்தாற் போன்று; ஆர்த்து வீழ்ந்த
– ஆர்ப்பரிப்போடு வீழ்ந்தன.

———–

தகர்ந்து மால் வரை சாய்வுறத் தாக்கின;
மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன;
புகுந்த மா மகரக் குலம் போக்கு அற
முகந்த வாயின், புணரியை முற்றுற. 163-

தகர்ந்து – (இவ்வாறு இராம பாணத்தால் துண்டுபட்ட
இராவணனின் தலைகள்) பிளவுண்டு; மால் வரை சாய்வுறத்
தாக்கின- பெரிய மலைகள் சாயுமாறு (அவற்றின் மேல்)
மோதின; மிகுந்த வான்மிசை- விரிந்த ஆகாயத்தில் உள்ள;
மீனம் மலைந்தன- நட்சத்திரங்களைத் தாக்கின; புகுந்த-
(கடலிலும்) புகுந்து; மா மகரக்குலம் போக்குஅற- பெரிய
சுறாமீன் கூட்டங்கள் போகுமிடம் இன்றி; புணரியை முற்றுற
வாயின் முகந்த- கடல் நீர் முழுவதையும் வாயில் அடக்கின.

—————

வீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தோண்டுதல்

பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்,
பழுது சொல்லும் அன்றே, மற்றைப் பண்பு எலாம்?-
தொழுது சூழ்வன முன், இன்று தோன்றியே,
கழுது சூன்ற, இராவணன் கண் எலாம். 164-

பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் – பலகாலமாய்
நீளத் துய்த்துவந்த புண்ணியப் பயன் தீர்ந்து போன பின்னால்;
மற்றைப் பண்பு எல்லாம்- (புகழ் முதலிய) பிற பண்புகள்
யாவும்; பழுது செல்லும் அன்றே?- பழுது பட்டுப் போகும்
அல்லவா? தொழுது சூழ்வன- (முன்பெல்லாம்) வணங்கி வலம்
வரக்கூடிய; கழுது- பேய்கள்; முன் நின்று தோன்ற- நேராக
நின்று, வெளிப்படையாக; இராவணன் கண் எலாம் சூன்ற-
இராவணனுடைய (அறு பட்ட தலைகளில் உள்ள) கண்களையெல்லாம்
(அஞ்சாமல்) தோண்டித் தின்றன.

——————–

இராவணன் வாள் முதலியன வீச, இராமன் அவனை வெல்லும் வகை குறித்துச் சிந்தித்தல்

வாளும், வேலும், உலக்கையும், வச்சிரக்
கோளும், தண்டும், மழு எனும் கூற்றமும்,
தோளின் பத்திகள்தோறும் சுமந்தன,
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 165-

மீளி மொய்ம்பன்- மிகுவலி படைத்தவனான இராவணன்;
தோளின் பத்திகள் தோறும்- (அவன்) தோள்களின்
வரிசைகள் தோறும்; சுமந்தன- தாங்கி நின்ற; வாளும்
வேலும் உலக்கையும்- வாள், வேல், உலக்கை;
வச்சிரக்கோளும்- வச்சிராயுதம்;தண்டும் – கதாயுதமும்;
மழு எனும் கூற்றமும் – யமனைப் போன்று வருத்தும்
மழுவாயுதமும் ஆகிய படைகளை; உரும் என வீசினான் –
இடிகளைப் போல எறிந்தான்.
மொய்ம்பு – வலிமை, தோளுமாம்.

———-

அனைய சிந்திட, ஆண் தகை வீரனும்
‘வினையம் என் இனி? யாதுகொல் வெல்லுமா?
நினைவென்’ என்ன, ‘நிசாசரன் மேனியைப்
புனைவென், வாளியினால்’ எனப் பொங்கினான். 166-

அனைய சிந்திட- அத்தகைய போர்ப் படைகளை (இராவணன்)
வீசவும்; ஆண்தகை வீரனும்- ஆண்மைப் பண்புகட்கு
உறைவிடமான இராமபிரானும்;இனி வினையம் என்?- இனிப்புரிய
வேண்டிய நுட்பமான செயல் எது?; வெல்லுமா யாது- இராவணனை
வெல்லும் வழி யாது; நினைவென்- ஆராய்வேன்; என்ன- என்று;
நிசாசரன் மேனியை- அரக்கனின் உடலை; வாளியினால்
புனைவென்- கணைகளால் அலங்கரிப்பேன்; என்று பொங்கினான்
– என்று வெகுண்டெழுந்தான்.

———–

இராவணனது மேனியை முற்றும் அம்பினால் இராமன் மூடுதல்

மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்,
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான். 167-

மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்- (நிறத்தால்)
மேகத்தைத் தோல்வியுறச் செய்த மார்பிலும் தோளிலும்;
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்- நஞ்சினைத்
தோல்வியுறச் செய்த கண்களிலும் நாவிலும்; வஞ்சன் மேனியை- (வேறு பிற
உறுப்புக்களிலுமாக) வஞ்சகனான இராவணன் உடம்பினை;
வார்கணை அட்டிய- (அம்புகளை விடுத்து) நீண்ட
அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற; பஞ்சரம் எனலாம்
வகை பண்ணினான்- கூடு (தூணி) என்று கூறலாம்படி
செய்தான்.

பஞ்சரம் – கூடு. இங்கு அம்பறாத் தூணி. இராமனின் அம்புகள்
ஆயிரக்கணக்காகப் புறப்பட்டமையால், அவன் முதுகிலிருந்த
சிறிய அம்பறாத்தூணி போதாமையால் அவ்வம்புகளை வைக்க
இராவணனின் உடம்பை, பெரிய அம்பறாத் தூணியாக்கினான்
எனும் நயந்தோன்றக் கூறினார்.

———–

வாய் நிறைந்தன, கண்கள் மறைந்தன,
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன,
தோய்வுறும் கணை, செம்புனல் தோய்ந்தில,
போய் நிறைந்தன, அண்டப் புறம் எலாம். 168-

வாய் நிறைந்தன- (இராவணன்) வாய்கள் தோறும் இராமனின்
அம்புகள் நிறைந்தன; கண்கள் மறைந்தன – கண்கள் யாவும்
அம்புகளால் மறைந்தன; மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன-
மார்புக்கு மேற்பட்ட இடங்கள் யாவும் அம்புகளால்
நிறைந்தன; தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில-
உடலிற் பதிந்த வாளிகள் குருதி படு முன்னே வெளியேறிப்
போய் விட்டன; அண்டப்புறம் எலாம் போய் நிறைந்தன-
அண்டவெளியெல்லாம் (இராமனின்) அம்புகளால் நிறைந்து
கிடந்தன.

————–

மயிரின் கால்தொறும் வார் கணை மாரி புக்கு,
உயிரும் தீர உருவின் ஓடலும்,
செயிரும் சீற்றமும் நிற்க, திறல் திரிந்து,
அயர்வு தோன்ற, துளங்கி அழுங்கினான். 169-

மயிரின் கால் தொறும்- மயிர்க்கால்கள் தோறும்;
வார்கணை மாரி புக்கு- நீண்ட சரமாரி நுழைந்து;
உயிரும் தீர- உயிர்த்தல் செய்யவும் இயலாதபடி;
உருவின ஓடலும்- ஊடுருவிப் போவதனால்; செயிரும்
சீற்றமும் நிற்க- வன்மமும், வெகுளியும் (மனத்துள்)
நின்றாலும்; திறல்திரிந்து அயர்வு தோன்ற- (உடம்பின்)
ஆற்றல் கெட்டு சோர்வுண்டாகி; துளங்கி அழுங்கினான்
– நிலை குலைந்து வருந்தினான் (இராவணன்).

————

தேரில் இராவணன் உணர்வு இழந்து கிடக்க, சாரதி தேரை விலக்கி நிறுத்தலும், இராமன் அம்பு எய்தலைத் தவிர்த்தலும்

வாரி நீர் நின்று எதிர் மகரம் படர்
சோரி சோர, உணர்வு துளங்கினான்;
தேரின் மேல் இருந்தான்-பண்டு தேவர் தம்
ஊரின் மேலும் பவனி உலாவினான். 170-

பண்டு தேவர் தம் ஊரின் மேலும் – முன்பு தேவர்களின்
ஊரின் மேல் எல்லாம்; பவனி உலாவுவான்- பவனி போய்
உலா வந்தவனான இராவணன்; வாரி நீர் நின்று – கடல்
நீரிலிருந்து;எதிர்- எதிர்த்து மோதி; மகரம் பட – மகர
மீன்கள் இறந்து போகுமாறு; சோரி சோர- (தன் உடலிலிருந்து)
குருதி வடிய; உணர்வு துளங்கினான்- அறிவு கலங்கினவனாய்;
தேரின் மேல் இருந்தான்- தேரின் மீது கிடந்தான்.

————–

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்;
வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது;
‘போர்த்துப் பொய்த்தனன்’ என்று, பொலம் கொள் தேர்
பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 171-

உம்பர்கள் ஆர்த்துக் கொண்டு எழுந்து ஆடினர்
– (இராவணன் தேரின் மேல் உணர்வற்றுக் கிடப்பது கண்டு
எழுந்த மகிழ்ச்சியினால்); தேவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு
(உவகை) மேலெழுந்து கூத்தாடினர்; தீவினை வெம்பி
வேர்த்து விழுந்தது- தீவினையானது (மனம்) புழுங்கி
(அச்சத்தால்) வேர்த்து விழுந்தது; சாரதி- (இராவணனுடைய)
தேர்ச்சாரதி; போர் துப்பு ஓய்ந்தனன் – போர் புரியும்
ஆற்றலில் தளர்ந்தான்; என்று – எனக் கருதி; பின்றுவான் –
(அங்கு நிற்கப்) பின்வாங்கி; பொலம் கொள் தேர் –
பொன்மயமான (இராவணன்) தேரை; பேர்த்துப் போயினன்-
(அங்கிருந்து) திருப்பிக்கொண்டு போய் நிறுத்தினான்.

—————-

கை துறந்த படையினன், கண் அகல்
மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும்,
எய் திறம் தவிர்ந்தான்-இமையோர்களை
உய் திறம் துணிந்தான், அறம் உன்னுவான். 172-

இமையோர்களை உய்திறம் துணிந்தான்- தேவர்களைக்
காக்கத் துணிவு கொண்டவனாய் அவதரித்த இராமபிரான்; கை
துறந்த படையினன் – கையிலிருந்து நழுவிய படைக்கலத்தை
யுடையவனாய்; கண் அகல் மெய் துறந்த உணர்வினன்-
இடம் விரிந்த உடம்பில் உணர்ச்சியற்றவனாய் உள்ள இராவணன்;
வீழ்தலும்- (தேரின் மேல் மயங்கி) வீழ்ந்தவுடன்; அறம்
உன்னுவான்- போர் அறத்தை நினைவு கொண்டவனான
இராமபிரான்; எய்திறம் தவிர்ந்தான்- அம்பு விடுக்கும்
செயலை நிறுத்தி விட்டான்.

————–

இப்பொழுதே இவனைக் கொல்வாய் என்ற மாதலிக்கு, இராமன், ‘அது நீதி அன்று’ என மறுத்தல்

‘தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது;
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய்’ என, மாதலி நூக்கினான்;
ஏறு சேவகனும், இது இயம்பினான். 173-

மாதலி- மாதலியாகிய இராமனின் சாரதி (அப்போது);
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது-
இராவணன் (மூர்ச்சை) தெளிந்தால், பிறகு அவனை ஒன்றும்
செய்தல் கூடாது; ஊறு தான் உற்ற போதே- (ஆதலால்)
அவன் இடையூறு அடைந்துள்ள போதே; உயிர்தனை
நூறுவாய்- அவன் உயிரை அழித்திடுவாயாக; என
நூக்கினான்- என்று (இராமனை) தூண்டினான்; ஏறு
சேவகனும் இது இயம்பினான்- சிங்க ஏறு போன்ற
இராமபிரானும் பின்வருமாறு கூறினான்.

—————-

படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து’ என்றான். 174-

படை துறந்து மயங்கிய பண்பினான் இடை- போர்க்
கருவிகளைக் கைவிட்டு, நினைவிழந்து கிடக்கின்ற தன்மை
உள்ளவனிடத்தில்; பெறும்துயர் பார்த்து- அழிக்கக்கூடிய
துன்பம் உண்டாயிருப்பதைப் பார்த்து; இகல் நீதியின்
நடைதுறந்து- போர் நீதியின் ஒழுக்கத்திலிருந்து விலகி;
உயிர் கோடலும் நன்மையோ?- உயிரைக் கொள்வதும்
அறம் ஆகுமோ? என் கருத்து- என்னுடைய கருத்தின்படி;
கடை துறந்தது போர் – கடைப்பட்ட பண்புகளிலிருந்து
விலகுவதுதான் (தூய) போர் நெறியாகும்; என்றான்-…

————–

உணர்வு பெற்ற இராவணன், தேரைத் திரும்பி நிறுத்தியதற்காகச் சாரதியைச் சினத்தல்

கூவிரம் செறி பொன் கொடித் தேரொடும்
போவர் அஞ்சினர், அன்னது ஓர் போழ்தினின்,
ஏவர் அஞ்சலையாதவர்? எண்ணுடைத்
தேவர் அஞ்ச, இராவணன் தேறினான். 175-

கூவிரம் செறி பொற் கொடித் தேரொடும்- கொடிஞ்சியெனும்
கைப்பிடியோடு கூடிய பொன்னாலான கொடியுடன் கூடிய தேர்களோடு;
போவர் அஞ்சினர்- போகின்ற அச்சம் கொண்ட அரக்கருள்;
அன்னதோர் போழ்தினின்- அப்போது; ஏவர் அஞ்சலியாதவர்?
– (இராமபிரானுடைய அற நெஞ்சத்தை எண்ணி) யார்தாம் கை கூப்பி
வணங்காதவர்?; எண்ணுடை- மதிப்புக்குரிய; தேவர் அஞ்ச-
வானவர்கள் அஞ்சுமாறு (அப்போது); இராவணன் தேறினான்-
இராவணன் (மயக்க நிலையிலிருந்து) தெளிவுபெற்றான்.

————–

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என,
மறக் கண் வஞ்சன், இராமனை வான் திசைச்
சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப்
பிறக்க நோக்கினன், பின்னுற நோக்கினான். 176-

மறக்கண் வஞ்சன் – கொடுமை மிகும் கண்களையுடைய
வஞ்சக இராவணன்; உறக்கம் நீங்கி- மயக்கம் நீங்கி;
உணர்ச்சியுற்றான் என- மூர்ச்சை தெளிந்த அளவிலே;
வான்திசை- சிறந்த திக்குகளில்; சிறக்கும் தேரொடும்
இராமனைக் கண்டிலன்- புகழுடைய தேரோடு நிற்கும்
இராமனை கண்டான் இல்லை; பின் உற நோக்கினான்-
தன் தேர்ப் பாகனைப் பின்புறமாகப் பார்த்த அவன்; சீற்றத்
தீப்பிறக்க நோக்கினான் – சினத்தீ கொப்புளிக்க
(அவனைப்) பார்த்தான்.

—————-

‘தேர் திரித்தனை, தேவரும் காணவே;
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே; பிழைத்தாய்’ எனா,
சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 177-

தேவரும் காண- தேவர்கள் யாவரும் காணுமாறு; தேர்
திரித்தனை- தேரைத் திருப்பி ஓட்டி வந்துவிட்டாய்; வீர
விற்கை இராமற்கு- (அதனால்) வீரம் செறிந்த கோதண்டம்
ஆகிய வில்லினை ஏந்திய இராமனுக்கு; வெள் நகை பேர
உய்த்தனை- வெள்ளிய (ஏளனப்) புன்னகை எழுமாறு
செய்து விட்டாய்; எனா- என்று; சாரதிப் பெயரானைச்
சலிப்புறா- சாரதியாகப் பெயர் தாங்கியவனை
வெறுத்தவனாய்;

————-

‘தஞ்சம் நான் உனைத் தேற்ற, தரிக்கிலா
வஞ்ச! நீ பெருஞ் செல்வத்து வைகினை;
“அஞ்சினேன்” எனச் செய்தனை; ஆதலால்,
உஞ்சு போதிகொலாம்!’ என்று உருத்து எழா. 178-

தரிக்கிலாவஞ்ச!- பொறுத்துக் கொள்ள இயலாத வஞ்சம்
கொண்டவனே! தஞ்சம் நான் உனைத் தேற்ற – (என்னைக்)
காப்பவன் நீ என்று நான் உன்னைத் தெளிந்திருக்க; நீ
பெரும் செல்வத்து வைகினை- (அதனால் நான் தரும்
செல்வங்கொண்டு) நீ பெரிய வளவாழ்வு வாழ்கின்றாய்;
அஞ்சினேன் எனச் செய்தனை – இவ்வளவிற்கும்
கைம்மாறாக எதிரிக்குப் பயந்தேன் என்று (மாற்றார்) (என்னைக்)
கருதுமாறு செய்துவிட்டாய்; ஆதலால் – ஆகையால்;உஞ்சு
போதி கொல்- உய்ந்து போவாயோ நீ;என்று உருத்து எழா
– என்று கூறி (இராவணன்) வெகுண்டு எழுந்து

—————-

சாரதி தேரைத் திருப்பி நிறுத்திய காரணத்தைத் தெரிவித்தல்

வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன்
தாள் கடைக்கு அணியாத் தலை தாழ்வுறா,
‘மூள் கடைக் கடுந் தீயின் முனிவு ஒழி,
கோள் கடைக் கணித்து’ என்று அவன் கூறுவான்: 179-

வாள் கடைக் கணித்து- (இராவணன் தன்) வாளைக்
கடைக் கண்ணால் நோக்கி; ஓச்சலும்- (சாரதி மீது செலுத்த)
ஓங்கலும்; அவன் வந்து- சாரதி (நெருங்கி) வந்து; தாள்
கடைக்கு அணியா- (இராவணனின்) பாதங்களாகிய கடை
உறுப்பிற்கு அண்மையாக; தலை தாழ்வுறா- தன்
தலையினைத் தாழ்த்தி வணங்கி; கடைக்கணித்துக் கோள்
– என்னுடைய சொற்களைக் கடைக்கணித்து (ஏற்றுக்)
கொள்வாயாக; மூள் கடைத்தீயின் முனிவு ஒழி – யுகாந்த
காலத்து எழும் ஊழித்தீ போன்ற உன் சினத்தீயை அவிப்பாயாக;
என்று அவன் கூறுவான் – என்று வேண்டியவனாய் (மேலும்)
கூறுகின்றான்.

—————-

‘ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின், ஐயனே! நின் உயிர்
மாண்டது அக் கணம் என்று, இடர் மாற்றுவான்,
மீண்டது, இத் தொழில்; எம் வினை மெய்ம்மையால். 180-

ஐயனே!- தலைவனே! ஆண் தொழில் துணிவு ஓய்ந்தனை
– வீரச் செறிவு புரியும் துணிவு உன்னிடம் தளர்ந்தது; ஆண்டு
இறை ஈண்ட நின்றிடின் – அந்த இடத்தில் அருகிருந்திருந்தால்;
நின்னுயிர் அக்கணம் மாண்டது என்று- உன்னுயிர் அந்தக்
கணம் மடிந்தொழிந்து விடும் என்று கருதி; இடர் மாற்றுவான்
– (உனக்கு வரவிருந்த) துன்பத்தை மாற்றவேண்டி; மீண்டது இத்
தொழில்- தேரை மீட்டுக்கொண்டு வரும் இச்செயலை நான்
செய்தது; எம்வினை மெய்ம்மை- எம் செயல் (என்றும்)
உண்மையாவதேயாகும்.

——————–

‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி, உயிர் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்,
மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால்
காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால்.’ 181-

மாய்வு நிச்சயம் வந்துழி- மடிவது உறுதி என்று சாரதி
முடிவுக்கு வரும்போது; ஓய்வும் ஊற்றமும் நோக்கி- தேர்
மீது இருக்கும் தலைவனின் தளர்ச்சியும் வலிமையும் அறிந்து;
உயிர்ப் பொறைச் சாய்வு நீக்குதல் – உடலின் தளர்ச்சியை
நீக்கும் செயல்களைச் செய்தல்; சாரதி தன்மைத்து – தேர்
ஓட்டியின் கடமைப் பண்பேயாகும்; வாளின் மேல் காய்வு
தக்கது அன்று – வாள் கொண்டு தண்டிக்க நினைத்தல்
தக்க செயல் ஆகாது; கடைகாண்டி- இறுதியில் நான் செய்த
செயலின் உண்மை நோக்கத்தை உணர்வாயாக.

————

இராவணன் சாரதிமேல் இரக்கம் கொண்டு, தேரை மீட்கச் செய்து இராமன் எதிருறல்

என்று இறைஞ்சலும், எண்ணி இரங்கினான்,
‘வென்றி அம் தடந் தேரினை மீட்க!’ என,
சென்று எதிர்ந்தது, தேரும்; அத் தேர்மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 182-

என்று இறைஞ்சலும்- (தேரோட்டி) இவ்வாறு கூறி
இராவணனை வணங்கிய போது; எண்ணி இரங்கினான்
– (அவன் செய்தது சரியென்று) கருதி (தான் அவன் மேல்
வெகுண்டதற்கு வருந்தி அவன் மேல்) இரக்கம்
கொண்டவனாய்; வென்றி அம் தேரினை மீட்க-
வெற்றித் தேரினை மீண்டும் செலுத்துவாயாக; என-
என்று இராவணன் கூறியவுடன்; தேரும் சென்று
எதிர்ந்தது – அவன் தேரும் சென்று இராமனுக்கு எதிர்
நின்றது; அத்தேர் நின்ற வஞ்சன்- அத்தேர்மீது நின்ற
வஞ்சகனாகிய இராவணன்; இராமனை நேர்வுறா-
இராமபிரானை நோக்கி எதிர்ப்பட்டு;

குளகம். தூற்றினான் என்று அடுத்த பாடலில் வினை
முடிவு கொள்ளும்.

————–

கூற்றின் வெங் கணை கோடியின் கோடிகள்
தூற்றினான், வலி மும் மடி தோற்றினான்;
வேற்று ஓர் வாள் அரக்கன் என, வெம்மையால்
ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 183-

கூற்றின் வெங்கணை- (கொல்லும் தொழிலில்) யமனைக்
காட்டிலும் கொடிய கணைகள்; கோடியின் கோடிகள்- கோடி
கோடியானவற்றை; தூற்றினான்- இராகவன் மீது செலுத்தினான்
வேறு ஓர் வாள் அரக்கன் என்று- (இவன் முந்தைய
இராவணன் அல்லன்) வேறொரு புதிய வாள் அரக்கன்
என்னுமாறு;வெம்மையால் செரு ஆற்றினான்- கொடும் போர் புரிந்தான்;
கண்டவர் அஞ்சினார – (அப்போரைப்) பார்த்தவர்கள்
(எல்லோரும்) அச்சம் கொண்டனர்.

———-

இராமன் இராவணனின் வில்லைத் துண்டித்தல்

‘”எல் உண்டாகின் நெருப்பு உண்டு” எனும் இது ஒர்
சொல் உண்டாயதுபோல், இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம்’ எனா,
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 184-

எல் உண்டாகின் நெருப்பு உண்டு- ஒளியுண்டானால் தீயுண்டு;
எனும் இது ஓர் சொல் உண்டாயது போல்- என்கின்ற ஒவ்வொரு
சொல்தொடர் உண்டாகியிருப்பது போல; இவன் – இந்த
இராவணனுடைய; தோளிடை வில் உண்டாகின் – தோள்களிடையே
வில் கிடக்கும் வரை; வெலற்கு அரிது ஆம் எனா- வெல்ல
முடியாதாகும் என்று கருதி; செல் உண்டால் அன்னது ஓர்கணை
சிந்தினான்- இடியை விழுங்கியது போன்ற தோர் ஒப்பற்ற கணையைச்
செலுத்தினான் (இராமன்)

————

நாரணன் படை நாயகன் உய்ப்புறா, பார்
அணங்கினைத் தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை ஆர்
அணங்கை இரு துணி ஆக்கினான். 185-

நாரணன் படை- நாராயணன் அத்திரத்தை; நாயகன்- இராமபிரான்;
உய்ப்புறா- செலுத்தி; பார் அணங்கினைத் தாங்கும்- பூமகளைத்
தாங்கி நிற்கும்; பல்வகை வாரணங்களை – எட்டுத் திக்கு
யானைகளையும்; வென்றவன் வார்சிலை- வென்றவனான இராவணனின்
நீண்ட வில்லை; ஆர் அணங்கை – மிக்க அச்சம் தருவதான
அவ்வில்லை; இரு துணி ஆக்கினான் – இருதுண்டாகச் செய்தான்.

————-

அயன் படைத்த வில், ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும்,
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்,
‘பயன் படைத்தனம், பல் கவத்தால்’ என்றார். 186-

அயன் படைத்த வில்- பிரமதேவனால் உருவாக்கப் பெற்ற
வில்; ஆயிரம் பேரினான் வியன் படைக்கலத்தால்- ஆயிரம்
திருநாமங்களையுடையவனான நாராயணனின் அத்திரத்தால்; அற்று
வீழ்தலும் – அறுக்கப்பட்டு வீழ்ந்தவுடன்; உம்பர் உயர்ந்து
உயர்ந்து குதித்தனர்- தேவர்கள் (மகிழ்வின் மிகுதியால்)
எம்பி எம்பிக் குதித்தார்கள்; பல் தவத்தால் பயன் படைத்தனம்
என்றார் – (நாம் இதுவரை செய்த) பற்பல தவங்கட்கான பயனை
இன்றடைந்தோம் என்று கூறி மகிழ்ந்தார்கள்.

————-

மாறி மாறி, வரிசிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ-இருநூறு அவை
வேறு வேறு திசை உற, வெங் கணை
நூறி நூறி, இராமன் நுறுக்கினான். 187-

மாறி மாறி – (இராவணன்) ஒன்றன்பின் ஒன்றாக; வரிசிலை
வாங்கினான் – கட்டமைந்த விற்களை வாங்கிக்
கொண்டேயிருந்தான்; இராமன் – இராமபிரான்; நூறு நூறினோடு
ஐஇரு நூறு அவை – கோடி விற்களை;வேறு வேறு திசை
உற – வேறு வேறு திசைகளிற் போய் விழுமாறு; வெம்கணை
நூறி நூறி – கொடிய அம்புகளால் துகள் துகளாக்கி;
நுறுக்கினான்- பொடி செய்தான்.

நூறு நூறு – பத்தாயிரம். பத்து ஆயிரத்துடன் இருநூறான
ஆயிரத்தைப் பெருக்கினால் கோடியாவது உணர்க, அளவிறந்த
எண் தொகையினைக் கோடியெனக் கூறிவிடுதல் கவி மரபு

———-

இருப்புலக்கை, வேல், தண்டு, கோல், ஈட்டி, வாள்,
நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம்,
திருப் புலக்க உய்த்தான்-திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 188-

திசையானையின் மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் –
எட்டுத் திக்கு யானைகளின் தந்தங்களும் ஒடியுமாறு, தன்
மார்பினைக் காட்டிய இராவணன்; திரு புலக்க- (இராமன்
மார்பில் அகலாது வாழும்) திருமகளும் புலந்து சிறிது அப்பால்
(மார்பை) விட்டு ஒதுங்குமாறு; இரும்பு உலக்கை, வேல், தண்டு,
கோல், ஈட்டி, வாள்- இரும்பால் ஆன உலக்கை, வேல் கதை,
குத்துக்கோல், ஈட்டி, வாள்; நெருப்பு உலக்க வரும் கப்பணம்
– தீயைச் சிந்தி வரும் கப்பணம் ஆகிய படைக்கருவிகளையும்;
உய்த்தான்- (இராமன் மேல்) செலுத்தினான்.

————–

அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில்
குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து,
‘இவை அனைத்தும் இவனை வெல்லா’ எனா,
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 189-

அவை அனைத்தும்- (இராவணன் எடுத்த) ஆயுதங்கள்
அனைத்தையும்; அறுத்து- (தன் அம்புகளால்) துண்டித்து;
அனைத்தும்- (அவ்வாறு துண்டித்த) அனைத்தையும்; அகல்
வேலையில் – அகன்ற கடலில்; குவை எனக் குவித்தான்-
குவியலாகக் குவித்தான்; நவை அனைத்தும் துறந்தவன்-
குற்றங்கள் அனைத்தையும் நீக்கியவனான இராமபிரான்;
இவையனைத்தும் இவனை வெல்லா எனா- இப்படைக்
கருவிகள் எல்லாம் இவனை வெல்ல இயலாதவையென்று;
குறித்து நாடினான்- வேறு செய்யும் குறிப்பில் ஆராய
முற்பட்டான்.

நவையனைத்தும் துறந்தவன் – இராமன். ”சகல கல்யாண
குணங்களுக்கும் உறைவிடமானவன்.” ”குற்றங்களுக்கு எதிர்த்
தட்டானவன்” என்பார் திருவாய் ஈடு மகாப்பிரவேசம்
நம்பிள்ளை

———–

‘கண்ணினுள் மணியூடு கழிந்தன, எண்ணின்
நுண் மணலின் பல வெங் கணை;
புண்ணினுள் நுழைந்து ஓடிய, புந்தியோர்
எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று’ எனா, 190-

எண்ணின்- ஆராய்ந்தால்; நுண்மணலின் பல- நுண்ணிய
மணலினும் பலவாகி; புந்தியோர் எண்ணின் நுண்ணிய
வெங்கணை – அறிஞர்களின் (நுண்ணிய) கருத்துக்களிலும்
நுண்ணியவான பல கொடுங்கணைகள்; கண்ணின் உள் மணியூடு
கழிந்தன- கண்ணின் உள் உள்ள கரு மணியின் உள்ளே ஊடுருவிச்
சென்றன; புண்ணின் உள் நுழைந்து ஓடிய- (முன்பே பட்டிருந்த)
புண்களையே (இலக்காக) நுழைந்து ஓடின;என் செயற்பாற்று –
(இவையெல்லாம் இராவணனை ஒன்றும் செய்யவில்லையாதலின்)
இனி என்ன செய்ய வேண்டும்; எனா- என்று ஆய்ந்து.

—————-

‘நாரணன் திரு உந்தியில் நான்முகன் பார
வெம் படை வாங்கி, இப் பாதகன் மாரின்
எய்வென்’ என்று எண்ணி, வலித்தனன்,
ஆரியன், அவன் ஆவி அகற்றுவான். 191-

ஆரியன் – இராமபிரான்; அவன் ஆவி அகற்றுவான்
– இராவணனுடைய உயிரைப் போக்கக் கருதி; நாரணன் –
நாராயணனுடைய; திருஉந்தியில் நான்முகன்- நாபிக்
கமலத்தே தோன்றிய நான்முகமுடைய பிரம்மாவின்; பார
வெம்படை வாங்கி – பெருமை மிக்க கொடிய அம்பை
எடுத்து; இப்பாதகன் மாரின் எய்வென்- இந்தப்
பாவியினுடைய மார்பில் பாய்ச்சுவேன்; என்று எண்ணி
வலித்தான் – என்று கருதி, அக்கருத்திலே உறுதி கொண்டான்.

—————-

முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா,
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா,
மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 192-

முந்தி வந்து உலகு ஈன்ற முதற்பெயர் அந்தணன்-
உயிர் வருக்கத்தின் முதல்வனாகத் தோற்றம் எடுத்து,
உலகினைப் படைத்த முதல்வன் எனப் புகழ் பெற்ற
அந்தணாளன் ஆகிய பிரமதேவனுடைய; படை வாங்கி –
அத்திரத்தை எடுத்து; அருச்சியா- (அதனை) அருச்சித்து;
சிலை நாணில் தொடுப்பு உறா- வில்லின் நாணில் தொடுத்து;
சுந்தரன்- பேரழகனான பெருமான் இராமன்; மந்தரம் புரை
தோள் உற வாங்கினான்- மேரு மலை போன்ற (தன்) தோளில்
பொருந்துமாறு இழுத்தான்.

—————–

புரம் சுடப் பண்டு அமைந்தது, பொன் பணை
மரம் துளைத்தது, வாலியை மாய்த்துளது,
அரம் சுடச் சுடர் நெஞ்சன் அரக்கர் கோன்
உரம் சுட, சுடரோன் மகன் உந்தினான். 193-

புரம் சுடப் பண்டு அமைந்தது – சிவபெருமான் முப்புரத்தை
எரிக்க அமைக்கப் பெற்றதும்; பொன் பணைமரம் துளைத்தது-
அழகிய கிளைகள் கொண்ட மராமரத்தைத் துளைக்க இராமபிரான்
பயன்படுத்தியதும்; வாலியை மாய்த்துளது- இராமபிரான்
வாலியை மடிக்க எடுத்ததும் ஆகிய அந்தப் பிரம்மாத்திரத்தை;
அரம் சுட- அரமானது தாக்க; சுடர் நெஞ்சின் அரக்கர்கோன்
– மேலும் சுடர் விடும் தீச்சுடர் போன்று (துன்பம் தாக்கவும் துவளாத)
நெஞ்சினையுடைய அரக்கர்களின் தலைவனான இராவணனது;உரம்
சுட- மார்பினைத் தாக்கும் வண்ணம்; சுடரோன் மகன் உந்தினான்
– சூரிய குலத்து மகனான இராமபிரான் செலுத்தினான்.

————–

அயன்படை இராவணனது மார்பில் பாய, அவன் உயிர் இழத்தல்

காலும் வெங் கனலும் கடை காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை, மா முகம்
நாலும் கொண்டு நடந்தது, நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 194-

மாலும்- திருமாலின் அவதாரமான இராமபிரானின்;
கொண்ட வடிக்கணை- கையிலிருந்து விடப்பட்ட அந்தப்
பிரம்மாத்திரம்; காலும் வெங்கனலும் கடை காண்கிலா-
காற்றும் கொடிய தீயும் காண முடியாத (விரைவும் கொடுமையும்
கொண்டு); தன்னொடு நான்முகன் மாமுகம் நாலும் கொண்டு
– (நான்முகன்போல்) நான்கு திசைக்கும் உரிய நாலு முகங்களையும்
மேற்கொண்டு; மூல மந்திரம் மூட்டலால் நடந்தது – பிரம்ம
தேவனுக்குரிய மூல மந்திரத்தின் ஆற்றலால் இராவணனை
நோக்கிச் சென்றது.

———————–

ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம்,
பாழி மாக் கடலும் வெளிப் பாய்ந்ததால்-
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற,
வாழி வெஞ் சுடர் பேர் இருள் வாரவே. 195-

வெம்சுடர்- அந்தப் பிரம்மாத்திரத்தின் கொடிய ஒளி; பேர்
இருள் வார – பேரிருளை அகற்றி; ஊழி ஞாயிறும் – ஊழிக்
காலத்து சூரியனும்; மின்மினி ஒப்புற – மின்மினி என்னுமாறு;
மால் ஆழி வரை – பெரிய சக்கரவாள கிரிக்கு; அப்புறத்து-
அப்புறத்தே உள்ள; அப்புறம் பாழிமாக் கடலும் – நீர் நிறைந்த
வலிய பெருங் கடலுக்கும்; வெளிப்பாய்ந்தது – வெளியே பாய்ந்தது.

—————–

அக் கணத்தின் அயன் படை ஆண்தகை
சக்கரப் படையோடும் தழீஇச் சென்று,
புக்கது, அக் கொடியோன் உரம்; பூமியும்,
திக்கு அனைத்தும், விசும்பும்; திரிந்தவே. 196-

அக்கணத்தின்- அந்தக் கணத்தில்; அயன் படை – அந்தப்
பிரம்மாத்திரம்;ஆண்தகை சக்கரப் படையோடும் – ஆண்களிற்
சிறந்த குணங் கொண்டவனான இராமபிரானின் ஆழிப்படையுடனே;
தழீஇச் சென்று – தழுவிப் போய்; அக்கொடியோன் – அந்தக் கொடியவன் இராவணனுடைய; உரம் புக்கது – மார்பில் நுழைந்தது;
பூமியும் திக்கு அனைத்தும் – (அப்போது) பூமியும் திக்குகள்
அனைத்தும்; விசும்பும் திரிந்த – விண்ணுலகும் நிலை கலங்கின.

———

முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக் கோடியாராலும் வெலப்படாய்’ எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி 197-

இராகவன் தன் புனித வாளி- இராமபிரான் செலுத்திய தூய்மை
நிறைந்த பிரம்மாத்திரம்; முக்கோடி வாணாளும்-(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும்; முயன்றுடைய
பெருந்தவமும் – முயன்று பெற்றிருந்த பெருந்தவப் பயனையும்;
முதல்வன்- தேவர்களில் ஒருவனான நான்முகன்; முன் நாள் –
முன் காலத்தில்; எக்கோடி யாராலும்- (முப்பத்து முக்கோடி
தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும் அவர்களால்;
வெலப்படாய்- நீ வெல்லப்பட மாட்டாய்; எனக் கொடுத்த வரமும்
– என்று தந்த வரத்தையும்; ஏனைத் திக்கோடும் உலகு
அனைத்தும் – மற்றும் திசைகளையும், உலகங்கள் எவற்றையும்;
செருக்கடந்த புயவலியும் – போரால் வென்ற தோள் ஆற்றலையும்;
தின்று- உண்டு விட்டு; மார்பில் புக்கு- (இராவணனுடைய) மார்பில்
நுழைந்து; ஓடி- உடல் எங்கும் சுழன்று; உயிர் பருகி – உயிரைப்
பருகிவிட்டு; புறம் போயிற்று- வெளியே சென்றது.

இராவணன் பல்லாண்டுகள் கடுந்தவம் இயற்றி, ஒவ்வொரு தலையாக
அறுத்து ஒன்பது தலைகளை ஆகுதியில் இட்டுப் பெற்ற தவப்பயன்கள்
அவையாதலின் ”முயன்றுடைய பெருந்தவம்” என்றார்.
சிவபிரானிடம் மூன்றரைக் கோடி ஆயுள் பெற்றான் இராவணன்
என்றறிந்த திருமால் முனிவன் வடிவெடுத்து, மூன்றரைக் கோடியாகாது அரைகுறையென்பார்கள். முன்பு பெற்ற மூன்றரைக் கோடி ஒழிய,
அரைக்கோடி கேள் என்றான். அப்படியே நான்முகன் பெற்ற
மூன்றரைக்கோடி ஆயுள் ஒழிய இப்போது அரைக்கோடி கொடு என
இராவணன் கேட்க அப்படியே ஆகுக என்றான் சிவபிரான். ”முன்னம்
மூன்றரைக் கோடியு மொழிய நீ முதல்வ, இன்னம் ஓரரைக் கோடி நாள்
ஈந்தருள் என்ன மன்னும் மாசுணப் பாயலான் மாயம் ஈது என்னா,
உன்னும் மாமலை மகளுடன் உமாபதி நகைத்தே அன்னவாறு அரைக்-
கோடியே யளித்தனம்” என்பது உத்தரகாண்டம். (வரையெடுத்த 79-82)
இராவணன் பெற்ற ஆயுளில் அரைக்கோடியே வாழ்ந்தான். மூன்று
கோடியாயுளும் ஒழிந்தது. மீண்டும் பெற்ற வரத்தால் ஆதலின்
”முக்கோடி வாழ்நாளும்” என்றார்

———–

இராவணனைக் கொன்ற அம்பு தூ நீராடி மீண்டு, இராமனது தூணியில் புகுதல்

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசி கூறித்
தூர்க்கின்ற மலர் மாரி தொடரப் போய், பாற்கடலில் தூய் நீர் ஆடி,
தேர்க் குன்ற இராவணன் தன் செழுங் குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று,
கார்க்குன்றம் அனையான் தன் கடுங் கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா. 198-

ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும்
– இராவண வதத்தால் எழுந்த உவகை மிகுதியால் ஆரவாரம்
செய்கின்ற தேவர்களும் அந்தணாளர்களும் முனிவர்களும்;
ஆசி கூறி- ஆசிகள் கூறி; தூர்க்கின்ற மலர் மாரி
தொடரப் போய் – கொட்டுகின்ற பூ மழை (தன்னைப்) பின்
தொடர்ந்து வரச் சென்று; பாற்கடலில் தூநீர் ஆடி-
திருப்பாற்கடலில் புனித நீர் ஆடி; தேர்க்குன்ற இராவணன்
தன்- (திரும்பி) குன்றனையை தேருடைய இராவணனின்;
செழுங்குருதிப் பெரும் பரவைத் திரைமேல் சென்று –
செழித்த இரத்தம் என்னும் பெருங்கடலின் அலை மேலே சென்று;
கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணை- கரிய மலை
போன்ற இராமபிரானின் கடிய சரம்; புட்டிலின் நடுவண்-
அம்பறாத் தூணியினிடையே; கரந்தது- (இராகவனின் அந்தப்
புனிதக்கணை) ஒளிந்தது.

————

தேரிலிருந்து இராவணன் தலைகீழாக நிலத்தில் விழுந்து, முகம் பொலிவுற்றுக் கிடத்தல்

கார் நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ என, திணி தோட் காட்டின் நின்றும்,
தார் நின்ற மலைநின்றும், பணிக் குலமும் மணிக் குலமும் தகர்ந்து சிந்த,
போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க,
தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான். 199-

சிகரம் போல்வான்- (அரக்கர் இனம் என்னும் மலைக்குச்)
சிகரம் போன்றிருந்த இராவணன்;கார் நின்ற மழை நின்றும்
உரும் உதிர்வ என- கருமை நிறைந்த மழை மேகத்திலிருந்து
இடிகள் உதிர்ந்து வீழ்வதே போல்; திணி தோட்காட்டின்
நின்றும்- திண்ணிய இருபது தோள்களிலிருந்தும்; தார்
நின்ற மலை நின்றும்- மாலையணிந்த மலை போன்ற மார்பிலிருந்தும்;
பணிக்குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்த-
ஆபரணத் தொகுதிகளும் மாணிக்கத் தொகுதிகளும்
உடைந்து சிதறவும்; போர் நின்ற விழி நின்றும்- போர்க்
குணத்தோடு நின்ற விழிகளிலிருந்து; பொறிநின்று- தீப்பொறி
தோன்றி; புகையோடும் குருதி பொங்க- புகையுடனே உதிரம்
பொங்கவும்; தேர் நின்று- தேரிலிருந்து; நெடு நிலத்து-
அகன்ற பூமியின் மேல்; சிரம் முகம் கீழ்பட விழுந்தான்-
தலையுடன் கூடிய முகம் கீழ்ப்பட (குப்புற) விழுந்தான்.

————

வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய,
தெவ் மடங்க, பொரு தடக் கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா, நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும் மடங்கு பொலிந்தன, அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா. 200-

வெம்மடங்கல் வெகுண்டனைய- கொடிய சிங்கம் ஒன்று
சினந்தாற் போன்று; சினம் அடங்க- வெகுளியடங்கவும்;
மனம் அடங்க- (அடங்காத) மனம் அடங்கவும்; வினையம்
வீய – (மனத்தே நிறைந்த) சூழ்ச்சிகள் அழியவும்; தெவ் மடங்க
– பகைமை அழியவும்; பொரு தடக்கைச் செயல் ஒடுங்க-
போரிட்டுக் கொண்டேயிருந்த இருபது கரங்களும்
போர்ச்செயல் ஒழியவும்; மயல் அடங்க- (சானகி மீது
கொண்ட) மையல் மடியவும்; ஆற்றல் தேய- வலிமை தேயவும்;
உயிர் துறந்த அம் முறை துறந்தான்- உயிர் நீங்கிய அந்த
அறமுறை நீங்கிய இராவணனின் பத்து முகங்களும்; தம் அடங்கு
முனிவரையும் – தம்மைத்தாமே அடக்கிய முனிவரை யெல்லாம்;
தலை அடங்கா நிலை அடங்க- தலை தாழவும் நிலை தளரவும்;
சாய்த்த- முறியடித்த;நாளின்- நாளைவிட; மும் மடங்கு
பொலிந்தன- மூன்று மடங்கு பொலிவுற்றுத் திகழ்ந்தன.

—————

இராமன் இராவணனைப் பார்த்தல்

‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப்பொலந் தேரை’ என்ற போதில்,
மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப் பொழுதே வருதலோடும்,
மீது அலைத்த பெருந் தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும்
காதலித்த உரு ஆகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரியக் கண்டான். 201-

பொலந்தேரை இனிப் பூதலத்தது ஆக்குவாயாக- பொன்
மயமான தேரை இனி மண் மீது இறக்குவாயாக; என்ற போதின்
– என்று (இராமபிரான் மாதலிக்கு) ஆணையிட்ட போதில்; மாதலிப்
பேரவன்- மாதலி என்னும் பேருடைய அத்தேர்ச் சாரதி; கடவ
– செலுத்த; மண் தலத்தின் அப்பொழுதே வருதலோடும்-
மண்ணின் மீது (அத்தேர் படிந்து) அக்கணத்திலேயே வருகின்ற
போது; காதலித்த உருவாகி- (கண்டார்) விரும்பும் எல்லா
இலக்கணங்களும் பொருந்தப் பெற்ற உருவம் உடையவனாகி;
அறம் வளர்க்கும் கண்ணாளன்- தருமத்தை (உலகில்)
வளர்க்கப் பிறந்த கருணை யாளனாகிய இராமபிரான்; மீது
அலைத்த பெருந்தாரை- மேலே அலையெறிந்து கொண்டுள்ள
பெரிய உதிரப் பெருக்கு; விசும்பு அளப்பக் கிடந்தான் தன்
மேனி முற்றும்- விண்ணளவும் தெறிக்கக் கிடந்தவனாகிய
இராவணனது உடம்பு முழுதும்; தெரியக் கண்டான்- விளங்க
நன்றாகப் பார்த்தான்.

இராமன் பெயரே ரமிக்கச் செய்பவன் எனும் பொருளது ஆதலின்
”காதலித்த உரு” என்றார்.

——-

‘தேரினை நீ கொடு விசும்பில் செல்க’ என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர்,
பாரிடம்மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற,
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்விரன் பொருது வீழ்ந்த
சீரினையே மனம் உவப்ப, உரு முற்றும் திருவாளன் தெரியக் கண்டான் 202-

நீ தேரினை கொண்டு விசும்பில் செல்க- நீ தேரைக்
கொண்டு வானுலகிற்குச் செல்வாயாக; என்ன- என்று;
மாதலியைச் செலுத்தி- மாதலிக்கு விடை தந்து; பின்பு
பாரிடம் மீதினின் அணு கி- பிறகு மண்ணின் மேல் வந்து;
திருவாளன்- திருமகள் நாதனாகிய இராமபிரான்;
தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற- தம்பியாகிய
இலக்குவனும் படைத் தலைவர்கள் பலரும் தன்னைச் சுற்றி வர;
போரிடை மீண்டு- (இதுவரை) போர்க்களத்திலிருந்து
பின்வாங்கி; ஒருவர்க்கும் புறங்கொடா- யார்க்கும் புறமுதுகு
காட்டியறியாத; போர் வீரன் – போரிற் சிறந்த வீரனாகிய
இராவணன்; பொருது வீழ்ந்த சீரினையே- போரிட்டு வீழ்ந்து
கிடக்கும் சிறப்பினை; மனம் உவப்ப – தன் மனம் உவகையுற;
உரு முற்றும் தெரியக் கண்டான்- அவனுடைய உடல்
முழுவதனையும் நன்றாகப் பார்த்தான்.

—————

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற செல்வத்தின் பன்மைத் தன்மை
நிலை மேலும் இனி உண்டோ ? நீர்மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே
தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி,
மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால் வானரங்கள், வரம்பு இலாத 203-

வரம்பிலாத வானரங்கள் – அளவற்ற குரங்குகள்; மலை
மேல் நின்று ஆடுவபோல்- மலை ஒன்றின் மேல் நின்று
(மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல; தலை மேலும் தோள்
மேலும் தட முதுகின் படர் புறத்தும்- இராவணேசுவரனுடைய
தலைகள் மேலும் தோள்கள் மேலும், அகன்ற முதுகின்
விசாலப் பரப்பின் மீதும்; தாவி ஏறி – தாவிக் குதித்து ஏறி;
ஆடின – நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து-
இழிந்த புலைத்தன்மை யுடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு
ஒருப்படும்; பொது நின்ற செல்வத்தின்- (உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும்
தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை- இழிந்த
தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ?- இராவணன்
வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில்
உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து
அன்றே – (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேற் குமிழியின்
(நிலையிலாக்) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

————-

தோடு உழுத நறுந் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழியத் தொங்கல்
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப, பணைக் கை யானைக்
கோடு உழுத நெடுந் தழும்பின் குவை தழுவி, எழு மேகக் குழுவின் கோவைக்
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான்: 204-

தோடுழுத நறுந்தொடையல்- இதழ்களால் ஆன மணமாலைகளின்;
தொகை உழுத கிளை வண்டின்- தொகுதிகளை உழுது கொண்டிருக்கின்ற வண்டுகளையுடைய; சுழியத் தொங்கல் – தலை
மாலைகளோடு கூடிய மாலைகளின்; பாடு உழுத படர் வெரிநின் –
பக்கங்களில் படர்ந்து கிடக்கிற (இராவணன்) முதுகில்; பணி உழுத
அணி நிகர்ப்ப- அழகிய வேலைப்பாடு நிறைந்த அணிகலத்தைப்
போன்று; பணைக்கை யானைக்கோடு உழுத நெடுந் தழும்பின்
குவை- பருத்த கையையுடைய திசை யானைகளின் கொம்புகள்
உழுததனால் தோன்றிய நீண்ட தழும்புகளின் கூட்டத்தை; தழுவி-
பொருந்தி; எழு மேகக் குழுவின் கோவைக் காடுஉழுத- எழுகின்ற மேகக் கூட்டத்தின் வரிசையாகிய
காட்டில் உலாவுகின்ற;கொழும் பிறையில் – செழித்த
பிறை நிலாவின்; கறை கழன்று- களங்கம் நீங்கி;
கிடந்தன போல் கிடக்கக் கண்டான் – கிடந்தன
போலக் கிடக்கக் கண்டான் (இராமபிரான்)

————–

இராவணனின் புறப்புண் கண்ட இராமன் முறுவலித்தல்

தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும், தருக்கினோன் தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புறக் கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும், மருவ நின்ற
முளரி அம் கண்ணன், மூரல் முறுவலன், மொழிவதானான்: 205-

முளரி அம் கண்ணன்- இராவணன் உடலருகே சென்று
நின்று தாமரை போன்ற அழகிய கண்களையுடைய இராமபிரான்;
தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும்- தளிர் போன்ற
மென்மைத் தன்மை வாய்ந்த சீதையின் காரணத்தால்
(இராவணன் மேல் எழுந்த) சினமும்; தருக்கினோன் தன்-
செருக்கு மிக்க இராவணனுடைய; கிளர் இயல் உருவினோடும்
– கிளர்ச்சி தரும் அவன் வடிவத்தில்; கிழிப்புறக் கிளர்ந்து
தோன்றும் – முதுகுப் பக்கம் கிழிபட்டுத் தெளிவாகத்
தோன்றும்; வளர் இயல் வடுவின் – நீண்ட தழும்பின்;
செம்மைத் தன்மையும்- சிவந்த தன்மையும்; மருவ நின்ற-
கூடிக் கலக்க (எழுந்த); மூரல் முறுவலன்- (இகழ்ச்சியால்
எழுந்த) புன்சிரிப்புக் கொண்டவனாய்; மொழிவதானான்-
கூறத் தொடங்கினான்.

—————

‘வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும்,
பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்புக்
குன்றி ஆசுற்றது அன்றே-இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 206-

உலகம் மூன்றும் மெய்ம்மையால் – மூன்று உலகங்களையும்
உண்மையாக; வென்றியான் மேவினாலும் – வெற்றி
கொண்டவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்; பொன்றினான்-
(இன்று என் பாணத்தால்) அழிந்தான்; என்று- என்ற காரணம்
பற்றி; தோளைப் பொதுவற நோக்கும் பொற்பும்- (என்னுடைய)
தோள்களை (வெற்றிச் சிறப்பால்) சிறந்த பெருமிதத்தோடு
நோக்கிக் கொள்ள வல்ல பொலிவும்; இவன்- இந்த
இராவணன்; எதிர் குறித்த போரில் – எதிர் நின்று (இடும்)
போரில்; பின்றியான்- பின்னடைந்தவனாய்; முதுகிற் பட்ட
– முதுகுப் பக்கத்தில் பதிந்துள்ள; பிழம்பு உள தழும்பின் –
(சிவந்த) பிழம்பாக உள்ள தழும்புகளால்; குன்றி ஆசுற்றது-
குறைந்து போய், குற்றமும் அடைந்தது.

—————

‘”கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான்” என்னக் கற்கும்
வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப்
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற; ஈசனார் இருக்கை நிற்க! 207-

ஈசனார் இருக்கை நிற்க- சிவபிரான் மலையை எடுத்து
(இராவணன் பரிபவப்பட்டது ஒருபக்கம்) நிற்பினும்;
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் – கார்த்த
வீரியன் என்னும் மானுட மன்னனால் இவன் பிணிக்கப்பட்டான்;
என்னக் கற்கும் வார்த்தை உண்டு – என்று கூறப்படும் வார்த்தை உலகில்
(இவனைப் பற்றி) உண்டு; அதனைக் கேட்டு நாணுறும்
மனத்தினேற்கு- (அந்த அவமானச்) சொல்லைக் கேட்டே
வெட்கமுற்ற உள்ளமுடைய எனக்கு; போர்த்தலை –
போரிலே; புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பும்-
புறமுதுகிட்டு அதனால் வந்த புண்களால் ஏற்பட்ட
தழும்புகளும்; நேர்த்ததும் காணல் உற்ற- நேரிடையாகக்
காணல் உற்றன.

”நான் வீரர்களுள் இராமனாக இருக்கிறேன்” என்றான்
கீதையில் கண்ணன்.

—————-

‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது,
ஊண் தொழில் உகந்து, தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண,
பூண் தொழில் உடைய மார்பா! போர்ப் புறங்கொடுத்தோர்ப் போன்ற
ஆண் தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று’ என்றான். 208-

பூண் தொழில் உடைய மார்பா!- அணிகளைத் தரிக்கும்
மார்பினையுடைய வீடணனே; ஊண் தொழில் உகந்து-
உண்ணும் செயலையே விரும்பி; தெவ்வர் முறுவல்
என்புகழை உண்ண- பகைவர்கள் (இகழ்ச்சிப்) புன்னகை என்
புகழைத் தின்று தீர்க்க; போர்ப்புறம் கொடுத்தோர்ப்
போன்ற- போரில் புற முதுகிட்டவர்களைப் போன்ற; ஆண்
தொழிலோரின் – ஆண்மைச் செயலையுடைய இவ்விராவணனால்;
பெற்ற வெற்றியும்- அடைந்த வெற்றியும்; அவத்தம்-
வீணானதே; மாண்டு ஒழிந்து- இராவணன் இறந்து ஒழிந்ததனால்;
உலகில் நிற்கும் வயங்கும் இசை- (எனக்கு) உலகில்
அழியாமல் நிற்கவல்ல விளங்குகின்ற புகழும்; முயங்க மாட்டாது-
(இனி) என்பால் அடைய மாட்டாது.

—————-

இராவணனது முதுகில் வடு உற்ற உண்மையை வீடணன் விளக்கி, அவனது உயர்வைப் புலப்படுத்துதல்

அவ் உரைக்கு இறுதி நோக்கி, வீடணன், அருவிக் கண்ணன்,
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன்,
‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ!’ என்னா,
எவ் உயிர்ப் பொறையும் நீங்க இரங்கி நின்று, இனைய சொன்னான்: 209-

அவ்வுரை உரைப்பக் கேட்ட வீடணன்- (இராமபிரானின்)
அந்த உரைகளைக் கேட்ட வீடணன்; அருவிக் கண்ணன்-
அருவி நீர் போன்ற கண்ணீரையுடையவனாய்; வெவ்வுயிர்ப்
போடு நீண்ட விம்மலன்- பெருமூச்சோடும் கூடிய விம்மலையும்
உடையவனாய்; வெதும்பும் நெஞ்சன்- வெதும்புகின்ற
நெஞ்சோடும் கூடியவனாய்; செல்வ- செல்வனாகிய
இராமபிரானே; செவ்வியில் தொடர்ந்த அல்ல- செம்மையில்
கூடாத வார்த்தைகளை; செப்பலை- செப்ப வேண்டா; என்னா-
என்று கூறி; எவ்வுயிர்ப் பொறையும் நீங்க- எந்த உயிரும்
தரிக்க இயலாவாறு; இரங்கி நின்று இனைய சொன்னான் –
இரக்கத்தோடு தோன்ற நின்று இத்தகைய மொழிகளை மொழியலானான்.

—————–

‘ஆயிரம் தோளினானும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனியும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 210-

ஐய – ஐயனே! ஆயிரம் தோளினானும்- ஆயிரம்
தோள்களையுடைய கார்த்தவீரியனும்; வாலியும்- வாலியாகிய
வானர அரசனும்; அரிதின் மேயின வென்றி- அரிதில்
பெற்ற வெற்றிகள்; விண்ணோர் சாபத்தின் விளைந்த-
(இராவணனுக்கு) தேவர்கள் இட்ட சாபங்களால் விளைந்தவை;
மெய்ம்மை- இஃது உண்மை; தாயினும் தொழத்தக்காள்
மேல் – (இப்போது) உலகம் தாயினும் போற்றற்குரியவளாய்
வணங்கத்தக்க சீதையின் மேல்; தங்கிய காதல் தன்மை நோயும்- கொண்ட ஆசையும்; நின் முனிவும்
அல்லால்- உன் சீற்றமும் அல்லால்; நுவலற் பாலார் –
வீரர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் யாரேனும்;
வெல்வரோ- (இவனை) வெல்ல வல்லார் ஆவாரோ?

————–

‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல்,
பீடு உள குன்றம் போலும் பெருந் திசை எல்லை யானைக்
கோடு உளதனையும் புக்குக் கொடும் புறத்து எழுந்த புண் கோள்
பாடு உளது அன்றி, தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும்? 211-

நாடு உளதனையும் ஓடி- உலகமுள்ள எல்லை வரையிலும்
விரைந்து; நண்ணலார்க் காண்கிலாமல்- (எல்லோரையும்
வென்று முடித்து விட்டபடியால்) பகைவரைக் காண இயலாமையால்;
பீடு உள குன்றம் போலும்- (இவைகளையாகிலும் வெல்வேன்
என்று) பெருமிதம் வாய்ந்த குன்றுகள் போன்றிருந்த;பெருந்திசை
எல்லை யானைக் கோடு- எட்டுப் பெரிய திக்குகளில் காவலாக
உள்ள யானைகளின் கொம்புகளை; உளதனையும் புக்கு-
அவற்றின் நீளம் உள்ளளவும் மார்பில் அழுத்தி; கொடும்புறத்து
அழுந்து புண்ணின் – கொடிய முதுகின் வெளிப்புறம்
அழுந்தியதனால் ஆகிய புண்களின்;பாடு உளது அன்றி –
தழும்புகள் உள்ளனவேயல்லாமல்; தெவ்வர் படைக்கலம் பட்டு-
பகைவர் ஆயுதங்கள் இவன் உடம்பில் பட்டு; என்ன செய்யும்?-
என்ன செய்யவல்லவையாம்?

—————

‘அப் பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக்
கைப் பணை முழங்க, மேல்நாள், அமரிடைக் கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும், காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும், வெரிநிடைப் போய அன்றே. 212-

அப்பணை அனைத்தும் – அந்தத் தந்தங்கள் அனைத்தும்;
மார்புக்கு அணி எனக் கிடந்த- (இராவணனுடைய) மார்புக்கு
ஆபரணம் ஆக அமைந்து கிடந்தன; அவை மேனாள்- முன்
நாளில்; வீரக் கைப்பணை முழங்க- வீரசங்கம் கையில் ஒலிக்க;
அமர் இடை நிலைத்த காலன் – போரில் எதிர்த்து வந்த
யமனுடைய; துப்பு இணை வயிர வாளி விசையினும்- வலிமை
வாய்ந்த திண்ணிய அம்புகளின் வேகத்தாலும்; காலின்
தோன்றல்- வாயு புத்திரனின் மகனான அனுமானின்; வெப்பணை
குத்தினாலும்- கொடுமை மிக்க குத்தினாலும்; வெரிந் இடைப்
போய- முதுகில் ஊடுருவிச் சென்றன.

—————-

‘அவ் வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன் வயின் செல்லின், தேவ!
வெவ் விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை
அவ் விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 213-

தேவ!- பெருமானே; அவ்வடு அன்றி- அந்தத் தந்தத்
தழும்புகளேயன்றி; இவன் வயின் செல்லின் – இவனிடத்துச்
செல்வதென்றால்; வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும்
– ஈசன் உண்ட விடம் அவனையே விழுங்குவதானாலும்; பறவை
வேந்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும் –
பறவைகட்கு அரசனான கருடனை விட நாகங்கள் எல்லாம்
(கொல்ல) நெருங்கினாலும்; இந்த அண்டத்தும் புறத்தும்
ஆன்ற- இந்த உலகிலும் புற உலகிலும் (உள்ள) உயர்ந்த; தெவ்
அடு படைகள் அஞ்சாது- பகையழிக்கும் படைக்கருவிகள்
யாவும் அஞ்சாமல்; இவன் வயின் அணுகல் ஆற்றா- இவனிடம்
துன்புறுத்த அணுக வல்லமையுள்ளவை ஆகா.

——————–

‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம், ஆண்டு, ஓர்
பன்றியாய் எயிற்றுக் கொண்ட பரம்பரன் முதல பல்லோர், “என்று யாம் இடுக்கண் தீர்வது?”
என்கின்றார்; “இவன் இன்று உன்னால் பொன்றினான்”
என்றபோதும், புலப்படார், “பொய்கொல்?” என்பர்.’ 214-

வென்றியாய்!- வெற்றி வீரனே; வேலை சூழ் ஞாலம் –
கடல் சூழ் உலகை; ஆண்டு ஓர் பன்றியாய்- அக்காலத்தில்
ஒரு வராக வடிவாகி; எயிற்றுக் கொண்ட பரம்பரன் –
கொம்பில் ஏந்தி வந்த திருமால்; முதல் பல்லோர் – முதலான
பலரும்; யாம் இடுக்கண் தீர்வது என்று என்கின்றார் – நாம்
(இராவணனுடைய) துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று
என்று ஏங்கியிருக்கின்றனர்; உன்னால் இன்று இவன்
பொன்றினான் என்றபோதும் – உன்னால் இந்த இராவணன்
இன்று அழிந்தான் என்று சொன்னாலும்; பொய் கொல்-
இச்செய்தி பொய்யோ; என்பர் – என்று ஐயங் கொள்வார்;
புலப்படார் – (இறந்தான் என நம்பி) வெளித் தோன்ற மாட்டார்கள்.

——————-

இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய இராமன் வீடணனைப் பணித்தல்

‘அன்னதோ?’ என்னா, ஈசன் ஐயமும் நாணும் நீங்கி,
தன்ன தோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்;
என்னதோ, இறந்துளான் மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு, ஈண்டச்
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி’ என்றான். 215-

அன்னதோ என்னா- அப்படியோ என்று சொல்லி;
ஈசன்- இராமபிரான்; ஐயமும் நாணும் நீங்கி-
சந்தேகமும் வெட்கமும் நீங்கப் பெற்றவனாய்; தன்ன
தோள் இணையை நோக்கி- தன் இரு தோள்களையும்
(பெருமிதத்தால்) நோக்கி (பிறகு வீடணனை நோக்கி); வீடணா
– வீடணனே; இறந்துளான் மேல் வயிர்த்தல்- மாண்டு
போனவன் மேல் வைராக்கியம் கொண்டு (வாளா இருத்தல்);
தக்கது அன்று- தகுதியன்று; நீ இவனுக்கு- நீ இந்த
இராவணனுக்கு;ஈண்டு- இங்கு; சொன்னதோர் விதியினாலே
– கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி; கடன் செயத் துணிதி-
இறுதிக் கடன்களைச் செய்வாயாக; என்றான்- என்று கூறினான்.

————–

அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான்.–215-

வள்ளல்- இராமபிரான்; அவ்வகை அருளி- அவ்வாறு
(வீடணனிடம்) கூறியருள் செய்து;இரைத்துப் பொங்கி-
ஆர்ப்பரித்து (மனம்) பூரித்து; கவ்வையில் தீர்ந்தார்-
துன்பங்களிலிருந்து விடுபட்டவர்களாய்; வந்து வீழ்கின்றார்
– வந்து தொழ வருகின்ற; அனைத்து உலகங்களோடும்-
எல்லா உலகத்தில் உள்ளவர்களோடும்; உள்ள தேவர்
யாவரும் – இருக்கின்ற பல்வகைத் தேவர்களையும்; காண-
காண்பதற்காக; செவ்வையின் – நேராக; அவர் முன்
சென்றான்- அத்தேவர்கள் பால் சென்றான்; வீடணன்
இதனைச் செய்தான் – (அப்போது) வீடணன் பின்வருமாறு
செய்தான்.

————–

வீடணன் இராவணன் மேனிமேல் வீழ்ந்து அரற்றுதல்
9919.
‘போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி’ என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி,
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன.–216-

போழ்ந்தென- (நெஞ்சினை வாளால்) பிளந்தாற்போன்ற;
அரக்கன் செய்த புன்தொழில்- இராவணன் புரிந்த அற்பச்
செயல்; பொறையிற்று ஆம்- பொறுக்கத்தக்கதேயாம்;
வாழ்ந்த நீ- (இறந்துபட்ட) இவனுக்குச் செய்யத்தக்க
இறுதிக் கிரியைகளை; வரன் முறை வகுத்தி- மரபுப்படி
செய்வாயாக; என்ன- என்று; தாழ்ந்தது ஓர் கருணை தன்னால்- இரக்கமுற்றால் செல்லும் (இராமபிரானின்
இயல்பான) கருணையினால்; தலை மகன் அருள – இராமபிரான்
அருளிச் செய்ய; வீழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்தென்ன-
விழுந்து கிடந்த மலையின் மேல் (நின்ற) மலையொன்று விழுந்தது
போல; தள்ளி- (துயரம்) தள்ளியதனால்; அவன்மேல் வீழ்ந்தனன்-
இராவணன் (உடல்) மேல் வீழ்ந்தான் (வீடணன்).

இங்கு
வீடணா! இறுதிக் கடனை நீ செய்கிறாயா? இல்லை, நான்
செய்யட்டுமா? என்று பெருமான் கேட்டான் என்று நம்பிள்ளை ஈடு
கூறுவது நினைவுக்கு வருகிறது. நீ என் தம்பி. இவன் உன் அண்ணன்;
ஆகவே, இவன் எனக்கும் உறவினன் ஆவான்.என்று இராவணனுக்கு
இராமபிரான் இறுதிக் கடன் செய்ய எழுந்தபோது, உடனே வீடணன்
நீர்க்கடன் செய்ய எழுந்தான் என்று நம்பிள்ளை ஈட்டுரை கூறுவது
ஒப்பு நோக்கற்பாலது.

——————–

ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் எரியின் நெஞ்சின்
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்ற
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர.-217-

ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் – இடையறாது (பெருகி
வரும்) உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்; இரங்கி ஏங்க –
இரக்கமுற்று ஏங்கவும்; தேவரும் முனிவர் தாமும் சிந்தையின்
இரக்கம் சேர – தேவரும் முனிவர் (கூடத்) தத்தமது நெஞ்சில்
இரக்கம் கொள்ளவும்; ஆ அரும் பொறையினான் தன்
அறிவினைத் தகைக்க நின்ற – தனது பற்றற்ற உணர்வினைத்
தடுக்குமாறு நின்ற; ஆவலும் துயரும் தீர – ஆசையும் துன்பமும்
தீருமாறு; பகுவாய் ஆர அரற்றினான் – பிளந்த வாயாரப் புலம்பத்
தொடங்கினான்.

—————-

வீடணன் புலம்பல்
9921.
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? – எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! –218-

எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! –
அளவற்ற ஆற்றல்களின் உறைவிடமாயிருந்த என்
அண்ணனே! என் அண்ணனே! அசுரர்கள் தம் பிரளயமே
– அசுரர்கட்கு எல்லாம் ஊழிக்காலமாய் உருவெடுத்தவனே!;
அமரர் கூற்றே!- தேவர்கட்கு எல்லாம் எமனாய்
இருந்தவனே!; ஒரு நஞ்சும் – எந்த விடமும்; உண்ணாதே
உயிர் உண்ணாது- உண்ணாமல் ஓர் உயிரை உண்ணாது;
சனகி எனும் பெரு நஞ்சு- (இதற்கு மாறாக) சானகி
என்னும் கொடிய விடம்; கண்ணாலே நோக்கவே- (நீ)
கண்ணாலே கண்ட மாத்திரத்தில்; உன்னை உயிர்
போக்கியதே – உன் உயிரைப் போக்கியதே; நீயும்
களப்பட்டாயே- (ஒப்புயர்வற்ற பெருவீரனாகிய) நீயும்
(சாமானியன் போன்று) படுகளப் பட்டு வீழ்ந்து கிடந்தனையே;
எண்ணாதேன் எண்ணிய சொல் – எண்ணத் தெரியாதவன்
என்று (உன்னால் கருதப்பட்ட) நான் எண்ணி உரைத்த
சொற்களை;இன்று இனித்தான் எண்ணுதியோ?- இந்த
இறுதிக் காலத்தில் இப்போது தான் எண்ணுகின்றாயா?

——————

9922.
”ஓர் ஆசை ஒருவன்மேல் உயிர் ஆசைக் குலமகள்மேல் உடைய காதல்
தீர்; ஆசை பழி” என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ? – பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! –219-

ஆசைக்கரி பெயர்ந்து இரியப் புருவம் பேர்த்தாய்
– திசை யானைகள் நிலை பெயருமாறு புருவம் பெயர்க்கும்
திறல் வாய்ந்தவனே; ஓராதே – உணராமல்; ஒருவன் தன்
உயிர் ஆசைக் குலமகள் மேல்- வேறு ஒருவன் தன்
உயிர் போன்று நேசித்து வந்த ஒரு குல மகளின் மேல்;
உற்ற காதல்- கொண்ட ஆசை; தீராத வசை என்றேன்
– (என்றும்) தீராப் பழியைத் தரும் என்று கூறினேன்; எனை
முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?- (அப்போது) நீ
என் மேற் கொண்ட கோபம் (தவறு என்று) (இப்போதாவது)
தணிந்து தெளிவடைந்தாயா?; போர் ஆசைப்பட்டு எழுந்த
– போரிலே ஆசை கொண்டு எழுந்த; குலம் முற்றும்
பொன்றவும்- குலம் முழுவதும் அழிந்து படவும்; பொங்கி
நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ?- மேன்மேல் உயர்ந்து
வந்த உன் பேராசை (இப்போதாவது) ஒழிந்ததா?

———-

9923.
”அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;உலகுக்கு ஓர் அன்னை” என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே,
பொன்றினையே! இராகவன்தன் புய வலியை இன்று அறிந்து, போயினாயோ!”–220

அன்று- ஒரு காலத்தில்; எரியில் விழு வேதவதி- தீயில்
(உன்னைச் சபித்து) விழுந்த வேதவதி என்பவள்; உலகுக்கு
ஓர் அன்னை – உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தாயாகி
(சீதையென்னும்); இவள் காண்- இவளாகி வந்துள்ளாள்; என்று
– என்று; குன்று அனைய நெடுந்தோளாய்- மலை போன்ற
திண்மையுடைய பெருந்தோளனே!; கூறினேன்- நான் சொன்னேன்;
அது மனத்துள் கொள்ளாதே போய் – அவ்வுரையை மனத்துட்
கொள்ளாமல் போய்; உன் தனது குலம் அடங்க- உன்னுடைய
குலம் முழுவதும் அழிய; அமரில் உருத்து- போரில் சினந்து;
படக் கண்டும் – இறந்து மடிதலைக் கண்டும்; உறவு ஆகாதே – (நீ இராமபிரானை)
உறவாகக் கொள்ளாமல்; பொன்றினையே- இறுதி
வரையில் அவனைப் பகையாகக் கொண்டு அழிந்து
ஒழிந்தாயே; இராகவனார் புய வலியை- இராமபிரானுடைய
தோள்வலியை (நான் சொல்லும்போது அறியாமல்); இன்று
அறிந்து போயினாயோ- (சாகும்போது) அறிந்துகொண்டு
போயிருக்கிறாயோ!

———–

‘மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் யாவருக்கும் இறைவன் ஆதல்? –221-

மன்றல் மா மலரோனும்- மணமுள்ள தாமரை மேல்
வாழ்பவனாகிய பிரமதேவனும்; வடி மழுவாள் படையானும்
– கூரிய மழுவாளைப் படையாகக் கொண்ட சிவபிரானும்; ஈந்த
– கொடுத்தருளிய; வரங்கள் – வரங்கள்; ஒன்று அலாதன
உடைய – பத்தாகவுள்ள; முடியோடு- உன் தலைகளோடு
சேர்ந்து; பொடியாகி உதிர்ந்து போன- பொடிப் பொடியாக
உதிர்ந்து போயின; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும்
– (நீ சீதையை எடுத்து வந்து) அன்று இராமனின் ஆற்றலை
உணராது போனாலும்; அவன் நாட்டை அணுகா நின்ற
இன்றுதான்- அந்த பரமபதத்தை அடையா நின்ற இன்றைக்கு
ஆகிலும்; இராமன் தான் யாவர்க்கும் இறைவன் ஆதல் –
இராமனே அனைவர்க்கும் இறைவன் ஆவான் என்பதனை;
உணர்ந்தனையே- உணர்ந்தாயோ?

————

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம்

யாவருக்கும் மேலாம் முன்பன் பேரன் நாடு உற்றாயோ?
பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? ஆர், அணா!
உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? –222-

வீரநாடு உற்றாயோ?- வீரர்கள் அடையும் துறக்க நாட்டை
அடைந்தாயோ?; விரிஞ்சன் ஆம் யாவருக்கும் மேலாம்
முன்பன் பேரன் நாடு உற்றாயோ?- விரிஞ்சன் எனும்
பெயரினனாய் (உயிர்களில்) எவர்க்கும் மேன்மையும் முதன்மையும்
உடையவனான நான்முகன் ஆகிய உன் பாட்டனின் நாட்டினை
அடைந்தாயோ?; பிறைசூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
– பிறை நிலவைச் சிரத்தில் சூடும் சிவபெருமானின் கயிலாய
புரத்தையடைந்தாயோ?; அணா- அண்ணா!; உன் உயிரை
அஞ்சாதே கொண்டு அகன்றார் ஆர்?- உனது உயிரை
அஞ்சாமற் கொண்டு சென்றவர் தான் யார்?; அது எலாம் நிற்க-
அது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; மாரனார் தனியாட்டம்
தவிர்ந்தாரோ?- மன்மதனார் (உன்பால் ஆடிய) வலிய
ஆட்டத்தை (இப்போதாவது) நிறுத்திக்கொண்டாரோ; மதியம்
என்பான் குளிர்ந்தானோ?- (காம தாபத்தால் உன்னை
எரித்துக் கொண்டிருந்த) சந்திரன் (இப்போதாவது)
குளிர்ச்சி தருபவன் ஆனானோ?

————

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்” என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளே!
நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! -223-

கொல்லாத மைத்துனனை – கொல்லத் தகாத மைத்துனனை;
கொன்றாய் என்று- நீ கொன்று விட்டாய் என்று; அது
குறித்துக் கொடுமை சூழ்ந்து- அக்கொடுமையை மனத்துட்
கொண்டு புரியச் சூழ்ச்சி செய்து; பல்லாலே இதழ் அதுக்கும்
கொடும்பாவி – (சமயம் பார்த்த வண்ணம்) பற்களால்
இதழைக் கடித்துக் கொண்டிருந்த கொடிய பாவியான
சூர்ப்பணகை; நெடும் பாரப் பழி தீர்ந்தாளே!-
(தன் நெஞ்சை யழுத்திக் கொண்டிருந்த) பெரும்
பாரமாம் பழியை (இப்போது) தீர்த்துக் கொண்டாளோ?;
நம்பி- நம்பியே; நல்லாரும் தீயாரும்-
நல்லோர்களும் தீயோர்களும்; நரகத்தார்
துறக்கத்தார் – நரகத்திலா (அன்றி) சொர்க்கத்திலா
இருப்பார்கள்; நம்மோடு எல்லோரும் பகைஞரே!-
நம்மோடு அனைவரும் பகைமை பாராட்டுபவர்களே!;
எளியை ஆனாய் – (உயர்நிலையிலிருந்து) (காமத்தால்)
எளியவனாய் வீழ்ந்தவனே!; யார் முகத்தில்
விழிக்கின்றாய்?- (இப்போது) யார் முகத்தில் விழித்துக்
கொண்டிருக்கிறாய்?

———-

‘போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை,தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?’ –224-

போர்மகளை- வெற்றித் திருமகளையும்; கலை மகளை
– கலைகட்குரிய நாமகளையும்; புகழ் மகளை- கீர்த்திக்குரிய
மகளையும்; தழுவிய கை- அணைத்த உன் கரமானது;
பொறாமை கூர – பொறாமை மிகுமாறு; சீர்மகளைத்
திருமகளை – சிறப்பு வாய்ந்த மகளான திருமகளை;
தேவர்க்கும் தெரிவு அரிய – தேவர்களும் அறிய முடியாத;
தெய்வக் கற்பின் பேர்மகளை- தெய்வத்தன்மை வாய்ந்த
கற்பினால் பெயர் பெற்றவளான சீதா தேவியை; தழுவுவான்- தழுவும் ஆசையினால்;உயிர் கொடுத்து
– உயிரைக் கொடுத்து; பழி கொண்ட- பழியை வாங்கிய;
பித்தா- பித்தனே!; திசையானை பணை இறுத்த- திக்கு
யானைகளின் கொம்புகளை ஒடித்த; பணைத்த மார்பால்- பெரிய
மார்பினால்; பின்னை- பிறகு;பார்மகளைத் தழுவினையே-
மண் மகளை அணைத்துக் கிடக்கின்றாயே!

————

வீடணன் தேறுதல்
9928.
என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து,சாம்பவனாம் எண்கின் வேந்தன்,
‘குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?’ என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் மயன் பயந்த நெடுங் கண் பாவை. -225-

என்று ஏங்கி- என்று இரங்கி; அரற்றுவான் தனை
– கதறுகின்ற வீடணனை; எடுத்து- (கைகளால்) எடுத்து;
சாம்பவனாம் எண்கின் வேந்தன்- சாம்பவன் என்கின்ற
கரடிகளின் அரசன்; குன்று ஓங்கு நெடுந்தோளாய்!- மலை
போல் உயர்ந்த பெருந் தோளனே!; விதி நிலையை மதியாத
கொள்கைத்து ஆகி- விதியின் நிலைமையைக் கருதாத
கொள்கையைதாய்; சென்று ஓங்கும் – சென்று உயர்கின்ற;
உணர்வினையோ?- உணர்வினையுடையவனாய் ஆயினையோ?;
தேறாதே அழுந்துதியோ?-தெளியாமல் (துன்பத்தில்) ஆழ்கின்றாயோ?; என்ன- என்று
கூற; தேறி- தெளிவுற்றவனாய்; அப்புறத்து நின்றான்-
அப்புறமாக நின்றான்; (வீடணன்) மயன் பயந்த நெடுங்கண்
பாவை- மயனின் மகளாகிய பெரிய கண்களையுடைய மண்டோதரி;
அரக்கன் நிலை கேட்டாள் – இராவணன் (பட்ட) நிலையைக்
கேள்வியுற்றாள்.

———–

மண்டோதரியும் அரக்கியரும் இராவணன் கிடக்கும் இடம் அடைதல்

9929.
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப –
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். -226-

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்- பல
இலட்சக் கணக்கினரான இராட்சதப் பெண்கள்; புனைந்த
பூங்குழல் விரித்து- மலர் சூடிய கூந்தல்களை விரித்து;
அரற்றும் பூசலார்- கதறுகின்ற அழுகையினராய்; இனம்
தொடர்ந்து- கும்பலாகத் தொடர்ந்து; உடன் வர- கூட
வர; நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் –
நினைவும் மறப்பும் அற்ற நெஞ்சினளாகிய மண்டோதரி;
எய்தினாள் – அடைந்தாள்.

———-

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால் –
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. –227-

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு – தயையும் தருமமும்
துணையாகக் கொண்டு; இன்னுயிர் புரக்கும் நன் குலத்து ஒருவன்
– இனிய உயிர்களைப் பாதுகாக்கப் பிறந்த நல்ல குலத்துப் பிறந்த
ஒருவனை;பூண்டதோர் பரக்கழி யான் என- (அவ்வாறு
செய்யாமல்) மேற்கொண்டதொரு மிகு பழி பரந்து விரிவது
போல; அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதை-
அரக்கிமார்கள் வாயைத் திறந்து கதறுகின்ற ஓசையானது;
பரந்து நீண்டது- பரவி விரிந்தது.

————–

நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்’ எனா,
மா புரம் தவிர, விண் வழிச் சென்றார் சிலர்.–228-

நூபுரம் புலம்பிட- நூபுரம் வருந்தவும்; சிலம்பு நொந்து
அழ – சிலம்பு புலம்பிடவும்; கோபுரம் தொறும் புறம் சிலர்
குறுகினர்- (நகரவாயில்) கோபுரந்தோறும் சிலர் வெளியே
வந்தனர்; ஆபுரந்தரன் பகை அற்றது ஆம் எனா – ஓ!
இந்திரன் பகை இன்றோடு ஒழிந்தது என்று கூறி; மாபுரம்
தவிர விண் வழிச் சென்றார் சிலர்- இலங்கையிலிருந்து
(இராவணனின் தேவர் குல மகளிர்) சிலர் வானுலகுக்குச்
சென்றனர்.

————

அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். –229-

அழைப்பு ஒலி முழக்கு எழ- அழைக்கின்ற ஒலி (இடி)
முழக்கைப் போல் எழவும்; அழகு மின்னிட- அழகு மின்னல்
போன்று மின்னிடவும்; குழை பொலி நல் அணிக்குலங்கள்
வில்லிட- காதணி முதலிய அழகிய நல்ல அணிவகைகள்
(வான) வில்போன்று ஒளிரவும்; உழைபொலி- மான்போல்
திகழும்; உண்கண் – மைதீட்டப் பெற்ற கண்களிலிருந்து;
நீர்த்தாரை மீது உக- கண்ணீர்த் தாரைகள் (மண்) மேலே
விழவும்; மழைப் பெரும் குலம் என- மேகக் கூட்டங்கள் போல்; சிலர் வான்
வந்தார்- சில மகளிர் வான்வழியாக வந்தனர்.

————

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். -230-

தலைமிசைத் தாங்கிய கரத்தர்- தலை மேல் சுமந்த
கைகளையுடையவரும்; தாரை நீர்- கண்ணீர்த் தாரைகள்;
முலை மிசைத் தூங்கிய முகத்தர்- முலைமுகட்டில்
வீழுமாறு தொங்கிய முகங்களையுடையவரும்; மொய்த்துவந்து
-நெருங்கி வந்து; கடலின் அலைமிசை- கடல் அலைகளின்
மேல்; வீழ் அன்னம் போல்- (வந்து) வீழ்கின்ற அன்னக்
கூட்டங்களைப் போல; அவன் – அந்த இராவணனின்;
மலைமிசைத் தோள்கள் மேல் – மலையினும் விஞ்சிய
(வன்மைத்) தோள்களின்மேல்;வீழ்ந்து மாழ்கினார்-
நிலைகலங்கிச் சோர்ந்து விழுந்தனர்.

———–

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும் மார்பும், எங்கணும்
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதனர் அயர்த்தனர், அரக்கிமார்களே. -231-

அரக்கிமார்கள்- இராக்கதப் பெண்டிர்; குழுவினர் –
கூட்டம் கூட்டமாய்; தலையும் தாள்களும்- தலைகளும்
கால்களும்; எழு உயர் புயங்களும்- கணையமரம் ஒத்த
தோள்களும்; மார்பும்- மார்புகளும்; (ஆகிய இராவணன்
அங்கங்களின்) எங்கணும்- எல்லாவிடங்களிலும்; முறை
முறை கூறு கொண்டனர்- முறை முறையாய் பகுத்துக்
கொண்டவராகி; தழுவினர் தழுவினர் – பன்முறை தழுவி;
அழுதனர் அயர்த்தனர் – அழுது மயங்கினர்.

————-

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். -232-

வருத்தம் ஏது எனின்- (இந்த மகளிர்க்கு இது வரையில்)
துன்பம் யாது என்றால்; அது புலவி – அது இராவணனிடம்
நேர்ந்த புலவியேயாகும்; வைகலும் பொருத்தமே வாழ்வு
என – நாடோறும் (அவன் மார்பில்) பொருந்தி வாழ்வதே
வாழ்வாகும் என்று கருதி; பொழுது போக்கினார்- காலங்கழித்து
வந்த அந்த அரக்கியர்; திருத்தமே அனையவன் – (இறைவன்
படைப்பில் பலமுறை) திருத்திச் செம்மைப்பட்ட வடிவினைப்
பெற்றவன் எனக் கூறத்தக்க வடிவினையுடைய இராவணனின்;
சிகரத் தோள்கள் – தோள்களின் மேல்; ஒருத்தர் மேல்
ஒருத்தர் வீழ்ந்து- ஒருவர் மேல் ஒருவர் விழுந்து; உயிரின்
புல்லினர்- (அவன்) உயிரைத் தழுவுவதுபோல் தழுவினர்.

———–

இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர் –
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் – தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. –233-

இயக்கியர் அரக்கியர்- யட்ச மாதரும், இராக்கத
மங்கையரும்; உரகர் ஏழையர்- நாகலோகப் பெண்களும்;
மயக்கமில் சித்தியர்- மயக்கமற்ற சித்தசாதிப் பெண்டிரும்;
விஞ்சை மங்கையர்- வித்தியாதர மகளிரும்; (ஆகிய)
எவரும்- யாவரும்; தம் துயக்கிலா அன்பு மூண்டு-
தம்முடைய தளராத அன்பின் முனைப்பால்; எவரும் சோர
– அனைவரும் அறிவு சோர்ந்து;முயக்கியல் முறை கெட- தழுவும் முறையெல்லாம் தவிர்த்து;
முயங்கினார்கள் – (இராவணன் உடலைத்) தழுவினார்கள்.

———

‘அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ?’ என இரங்கி, ஏங்கினார். –234-

அறம் தொலைவுற- (தகாத காதலால்) தருமம் அழியுமாறு;
மனத்து அடைத்த சீதையை- உன் உள்ளத்துக்குள்ளே சிறை
வைத்திருந்த சீதையை; இனும் மறந்திலையோ?- இறந்த
பின்பும் மறந்தாய் இல்லையோ?; எமக்கு உன் வாய் மலர்
திறந்திலை- (அதனால்) எம் போன்றோர்க்கு உனது வாய்
மலரை நல்கினாய் இல்லை; விழித்திலை- (எம்மை) கண்
எடுத்தும் நோக்கினாய் இல்லை; அருளும் செய்கிலை- (வேறு
வகையாலும்) அருள் புரிந்தாய் இல்லை; இறந்தனையோ- (நீ)
இறந்து போனாயோ; என இரங்கி ஏங்கினார் – என்று இரங்கி
ஏங்கி அழுதனர்.

————-

மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
9938.
தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென,
உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள் – மயன் மகள், – இனைய பன்னினாள்: –235-

மயன் மகள்- மயனின் மகளும் (இராவணனின் பட்டத்தரசியும்
ஆகிய) மண்டோதரி; உரம் கிளர் மதுகையான் – மனத் திண்மை
வாய்ந்த வலியவனான இராவணனுடைய; உருவின்- உடலின் மேல்;
தரங்க நீர் வேலையில்- அலையெறியும் நீரினையுடைய கடலின்
மேல்; தடித்து வீழ்ந்தென- மின்னல் வீழ்ந்தது போல்;
உற்றனள்- வீழ்ந்தவளாய்; மரங்களும் மலைகளும் உருக-
(உருகும் இயல்பில்லாத) மரங்களும் மலைகளும் உருகுமாறு; வாய்
திறந்து- வாய்விட்டு; இரங்கினாள் – அழுதவளாய்; இனைய
பன்னினாள் – இத்தகைய மொழிகளைக் கூறினாள்.

————-

அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! –236-

அன்னேயோ! அன்னேயோ! – அம்ம!’ அம்மம்ம!;
கொடியேற்கு அடுத்தவாறு – கொடியவளான எனக்கு
வந்துள்ள நிலைமையை என்னென்பது; அரக்கர் வேந்தன்
பின்னேயோ இறப்பது- இராக்கதர் தலைவனாகிய
இராவணன் இறந்த பின்னேயோ நான் இறப்பது? முன்
பிடித்திருந்த கருத்து- முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து
வந்த கொள்கைகளில்; அதுவும் பிடித்திலேனோ? –
அதையும் கைவிட்டு விட்டேனோ?; முன்னேயோ
விழுந்ததுவும் முடித்தலையோ?- (அந்தத் தவற்றால்) எனக்கு
முன்னாலே (என் கணவரின்) மகுடத் தலைகள் விழுந்தனவோ?
படித்தலைய முகங்கள் தானோ?- மண் மேல் கிடப்பவை என்
(உயிர் அனையானின்) தலைகள் தானோ? என்னேயோ?
என்னேயோ? – என்னென்பேன் என்னென்பேன்?; இராவணனார்
முடிந்த பரிசு இதுவோ பாவம்- (உலகைக் கலக்கிய)
இராவணனார் வாழ்வு இத்தகையதாகவா முடியவேண்டும்! பாவம்!
பாவம்!

——–

வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் இடன் நாடி, இழைத்தவாறோ?
‘கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்” எனக் கருதி, உடல் புகுந்து,தடவியதோ ஒருவன் வாளி?–237-

ஒருவன் வாளி – ஒப்பற்ற இராமபிரானின் அம்பு; வெள்
எருக்கம் சடைமுடியான்- வெள்ளை எருக்கம் பூவை (முடியில்)
சூடும் சிவபெருமானுடைய; வெற்பு எடுத்த திருமேனி – கயிலை
மலையைத் தூக்கிய இராவணனுடைய அழகிய உடலின்; மேலும்
கீழும் – உடம்பின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள்
இருக்கும் இடம் இன்றி – எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்;
உயிர் இருக்கும் இடம் நாடி- உயிர் இருக்கும் இடம்
முழுவதையும் தேடி; இழைத்த ஆறோ?- ஆராய்ந்த வண்ணமோ?
கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை- தேன் குடிகொள்ளும்
மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை; மனச் சிறையில்
கரந்த காதல் – மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த
காதலானது;உள் இருக்கும் எனக் கருதி – உள்ளே (இன்னும்
எங்காவது) பதுங்கியிருக்கும் என்று எண்ணி; உடல் புகுந்து
தடவியதோ? – உடல் முழுதும் நுழைந்து (நுழைந்து) தடவிப்
பார்த்ததோ?

———–

‘ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து,வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ!–238-

ஒருவன் சிலை துரந்த சரங்கள் – ஒப்பற்றவனான இராம
பிரானுடைய வில் செலுத்திய அம்புகள்; ஆரம் போர்
திருமார்பை – முத்து மாலைகள் அணிந்த அழகிய மார்பினை;
அகல் முழைகள் என – விரிந்த குகைகள் போல; திறந்து-
பிளந்து;இவ் உலகுக்கு அப்பால்- இந்த உலகைக் கடந்து
அப்பால்; தூரம் போயின – வெகு தொலைவுக்குச் சென்று விட்டன; போரில் தோற்று- போரில்
தோற்று; வீரம் போய் – வீரம் இழந்தும்; உரம் குறைந்தும்
– வலிமையிழந்தும்; வரம் குறைந்தும்- பெற்ற வரமெல்லாம்
இழந்தும்; வீழ்ந்தனையே- (போர்க்களத்தில்) வீழ்ந்து
கிடக்கின்றாயே; இராவணனை ஓர் அம்போ உயிர்
பருகிற்று?- இராவணனாகிய உன்னை (இராமன்) விட்ட ஓர்
அம்பா உயிரையுண்டது? (நம்ப முடியவில்லை); மானுடவன்
ஊற்றம் ஈதோ.- மனிதன் ஒருவனின் வலிமை இத்தகையதோ?

—————

‘காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!–239-

காந்தையருக்கு அணி அனைய – மகளிர்க்கெல்லாம்
அணி போன்ற; சானகியார் பேர் அழகும்- சீதா தேவியின்
பெருமைக்குரிய அழகும்; அவர்தம் கற்பும் – அவர்
(பூண்டிருந்தகற்பும்); ஏந்து புயத்து இராவணனார் காதலும்
– ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதைமேல் கொண்ட
தகாத) காதலும்; அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும் – அந்தச்
சூர்ப்பணகை (இதனால்) இழந்து போன மூக்கும்; வேந்தர்
பிரான் தயரதனார் பணியதனால்- மன்னர்க்கு மன்னனான
தயரதன் ஏவலினால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும்
– கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும்;
கடைமுறையே- கடைசியில்; புரந்தனார் பெருந்தவமாய்ப்
போயிற்று- இந்திரனார் செய்த பெருந்தவத்தின் பலனாக
முடிந்துவிட்டன.

————-

‘தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும் அயனார்க்கும், செங் கண் மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?” என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ?–240-

தேவர்க்கும் – வானவர்க்கும்; திசைக்கரிக்கும் – திசை
யானைகட்கும்; சிவனார்க்கும் அயனார்க்கும்,
செங்கண்மாற்கும் – மும்மூர்த்திகட்கும்,; ஏவர்க்கும்-
மற்றும் உள்ள யாவரைக் காட்டிலும்; வலியானுக்கு –
வலியவனான உனக்கு; என்று இறுதி உண்டாம்? – என்றைக்கு
முடிவு வரப்போகிறது?;என்று ஏமாப்பு உற்றேன் – பெருமிதம்
உற்றிருந்தேன்; நீ ஆவல்கண் – நீ ஆர்வத்தோடு; உழன்ற-
வருந்திச் செய்த; அரும் தவத்தின் பெரும் கடற்கும்- அரிய
பெரிய கடல் போன்ற தவத்திற்கும்; வரம் என்று ஆன்ற
காவற்கும் – வரம் என்று சொல்லப்பெற்ற காவலாகிய
பேற்றுக்கும்; ஓர் வலியான் ஓர் மானுடவன் – (அழிவை
விளைக்கவல்ல ஒப்பற்ற வலிமையையுடைய மானிடன்; உளன்
என்னக் கருதினேனோ?- இருக்கின்றான் என நான்
நினைக்கவில்லையே!

—————

‘அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல்,தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?–241-

அரை கடையிட்டு – அரையைக் கடைசியாகக் கொண்டு;
அமைவுற்ற முக்கோடி ஆயுவும் – மூன்று கோடி ஆயுளுக்கும்;
பேர் அறிஞர்க்கேயும்- பெருமை பெற்ற அறிஞர்களாலும்;உரை
கடையிட்டு அளப்பு அரிய – வாய் வார்த்கைகளால் முடிவு காட்டி
அளக்க முடியாத; பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு- பெருவலிமை
கொண்ட (உன்) தோள் ஆற்றலுக்கு;உலப்பு இல்லை – அழிவு
இல்லை (என்று நினைத்து); தவப் பயனின் பெருமை பார்ப்பேன்
– தவங்களின் பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப்
பெருமை கொண்டிருந்தவளாகிய நான்; திரை கடையிட்டு அளப்பு
அரிய – அலைகளின் முடிவு காட்டி அளக்க முடியாத; வரம்
என்னும் பாற்கடலை – (உன்) வரங்கள் ஆகிய பாற்கடலை; சீதை
என்னும் பிரை – சீதா தேவியாகிய பிரையானது; கடையிட்டு-
இறுதியில் இடப்பட்டு; அழிப்பதனை – அழிக்கப்போவதனை;
அறிந்தேனோ- அறிந்தேன் இல்லையே!

————-

ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்;கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே!–242-

உலகு இயற்கை அறிதக்கார் அன்னார் யார்- உலகின்
இயல்பினை (முழுதும்) அறியத் தகுதியுடையவர் யார் ? (யாரும்
இல்லை); அவை- அந்த உலகம்; ஏழும் ஏழும்- பதினான்கும்;
அஞ்சும் வீரனார் – அஞ்சத்தக்க இராவணனாரும்; உடல் துறந்து
விண் புக்கார்- உடலைப் போட்டு விண்உலகம் போய்விட்டார்;
கண் புக்க வேழவில்லால்- கணுக்கள் பொருந்திய கரும்பு
வில்லால்;நாரம் நாள் மலர்க்கணை – (வண்டொழுக்கை) நாணாகக்
கொண்ட அன்றலர்ந்த மலர்களின் கணையால்; நாள் எல்லாம் தோள்
எல்லாம் – நாள் முழுவதும் தோள்கள் எல்லாம்; நைய – வருந்துமாறு;
எய்யும் – எய்கின்ற; மாரனார் தனியிலக்கை- மன்மதனின் தனிப்பட்ட
குறியை (இராவணனை);மனித்தனார் – மனிதராகிய இராமபிரான்;
வரத்தினால் அழித்தனரே – அவர் வரத்தின் மேன்மையினால்
அழித்து விட்டாரே!

—————-

மண்டோதரி உயிர் பிரிதல்
9946.
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.–243-

என்று அழைத்தனள் – என்று கூவி அழுதவளாய்; ஏங்கி –
ஏக்கமுற்று; எழுந்து- எழுந்து; அவன் – அந்த இராவணனின்;
பொன் தழைத்த- பொன் அணிகள் தழைத்துக் கிடக்கிற;
பொரு அருமார்பினை- ஒப்புரைக்க இயலாத (வீர) மார்பினை;
தன் தழைக்கைகளால் தழுவி – தன் தளிர் போன்ற (மெல்லிய)
கரங்களால் தழுவி; தனி நின்று- தனித்து நின்று; அழைத்து
உயிர்த்தான் – அழைத்தவாறு பெருமூச்சு விட்டவளாய்; உயிர்
நீங்கினாள்- உயிர் நீத்தாள்.

மாசு மறுவற்ற மண்டோதரியின் தூய கற்புப்
பெருக்கினை எண்ணி வியந்த நம் முன்னோர்கள், மண்டோதரியை தூய
பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாய்ச் சேர்த்துள்ளனர் என்பதை இங்கு
நினைக.

————

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார்.-244-

வான மங்கையர்- வானாட்டு மகளிரும்; விஞ்சையர் –
வித்தியாதரப் பெண்டிரும்; மற்றும் அத்தான மங்கையரும்-
மற்றும் அத்தானவ மங்கையரும்; தவப் பாலவர் ஆன-
தவத்தின் பக்கத்திலே சென்ற; மங்கையரும்-
முனிபத்தினியரும்;அருங் கற்புடை மான மங்கையர்தாமும்-
அரிய கற்புடைய மானுட மகளிரும்; வழுத்தினார் –
(கற்பரசியாகிய) (மண்டோதரியை) பாராட்டித் துதித்தனர்.

———

பின்னர், வீடணன் பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான்.–245-

பின்னர்- (இதற்குப்) பின்பு; வீடணன் – வீடணன்; வரன்
முறையால் – மரபு வழிப்படி;வன்னி கூவி- அக்கினியை
ஆவாகனம் செய்து; மறை சொன்ன- வேதம் விதித்துள்ள; ஈம
விதிமுறையால் – ஈமக்கடன் விதிகளின் படி; தொகுத்து-
(சடங்குப் பொருள்களாகக்) கூட்டி; இன்னல் நெஞ்சினொடு-
துயரம் மிக்க உள்ளத்தோடு; பேர் எழில் தம்முனை –
பேரழகினனாகிய தம் முன் பிறந்த அண்ணனாகிய இராவணனை; இந்தனத்து ஏற்றினான் – ஈம
விறகின்மேல் ஏற்றி வைத்தான்.

————–

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் –
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். -246-

குடம் கொள் நீரினும்- குடம் கொண்ட நீரை விட மிகுதியாக;
கண் சோர் குமிழியான் – குமிழியிட்டுக் கண்ணீரைக் கொட்டும்
வீடணன்; கடன்கள் செய்து முடித்து- இறுதிக் கடன்களையெல்லாம்
செய்து முடித்தபின்; கணவனோடு உடைந்து போன – கணவனுடனே
(தன்) நெஞ்சம் உடைந்து மாண்டு போன; மயன் மகளோடு உடன் –
மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; அடங்க- (அந்த இராவணன்
உடல்) அடங்குமாறு; வெங்கனலுக்கு – கொடுந்தீக்கு;
அவியாக்கினான் – உணவாக்கினான்.

————–

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண்குறு நீர் உகுத்து,
‘எற்றையோர்க்கும் இவன் அலது இல்’ எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். –247-

மற்றையோர்க்கும்- போரில உயிர் நீத்த மற்றைய
வீரர்கட்கும்; வரன் முறையால் வகுத்து- (நூல்கள்) கூறிவரும்
முறைப்படி வகைசெய்து; உற்ற தீக் கொடுத்து- உரிய தீக்
கொடுத்து; உண்குறு நீர் உகுத்து- உண்ணுமாறு நீர்க்
கடன்களையும் புரிந்து; எற்றையோர்க்கும் இவன் அலது இல்
எனா- எவர்க்கும் இவன் அல்லால் (வேறு துணை) இல்லை என்று
கூறத்தக்க; வெற்றி வீரன்- வெற்றியே தாங்கும் வீரனான்
இராமபிரானுடைய; குரைகழல்- ஒலிக்கும் கழல் அணிந்த
திருவடிகளை;மேவினான்- அடைந்தான் (வீடணன்).
உண்ணும் நீர் உகுத்தல் – வாசோதகம் திலோதகம் கொடுத்தல்
என்பர்.

———-

வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்
‘சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம்’ எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். –248-

வந்து தாழ்ந்த துணைவனை – (தன்முன்) வந்து அடியிற்
பணிந்த தம்பியாகிய வீடணனை; வள்ளலும்- வள்ளலாகிய
இராமபிரானும்; தெள்ளியோய்- உலகந் தெளிவுற்ற மேலோனே!;
சிந்தை வெம் துயர் தீருதி- (உன்) மனத்தே நிறையும்
கொடுந்துயரை நீக்குவாயாக; அது முந்தை எய்தும் முறைமை
ஆம்- (இறந்தோரால் எய்தும் துயர் துடைத்து ஆறுதல்
கொள்வதே) முந்தையோர் கொண்ட முறைமையாகும்; எனா –
என்று; அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான் – (வீடணன்
கொண்ட) முடிவற்ற துன்பச்சுமையை (இராமபிரான் தன்
இன்னுரைகளால்) நீக்கியருளினான்.

————–

மிகைப் பாடல்கள்

புரந்தரன் பகைவன் ஆவி போக்கிய புனிதன், வென்றி
சுரந்தருள் அனுமன், நீலன், அங்கதன், சுக்கிரீவன்,
உரம் தரு வீரர் ஆதிக் கவிப் படைத் தலைவருள்ளார்,
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர், திரியலுற்றார். 5-1

வரம் படைத்து உயர்ந்த வன் போர் வயப் படைத் தலைவரோடு
நிரம்பிய வெள்ளச் சேனை நிரு தரும், களிறும், தேரும்,
மரம் படர் கானில் தீப்போல், வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி, பொன்றினர் எவரும் அம்மா. 17-1

பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக,
தங்கிய பிணத்தின் குப்பை தடுத்தது; சமரபூமி எங்கணும்
கவந்தம் ஆட, எய்தி அங்கு அரக்கிமார்கள், தங்கள்
தம் கணவர்ப் பற்றி, தம் உடல் தாங்கள் நீத்தார். 17-2

எழும் படை வெள்ளம் எல்லாம், இரண்டு ஒரு கடிகை தன்னில், ஆங்கு
களம் பட, கமலக்கண்ணன் கடுங் கனல் பகழி மாரி வளம் படச் சிலையில் கோலி,
பொழிந்து, அவை மடித்தான்; கண்டு, உளம் கனல் கொளுந்த,
தேரின் உருத்து, எதிர், அரக்கன் வந்தான் 17-3

மூஉலகு அடங்கலும் மூடும் அண்டமேல் தாவினன்
தேரொடும், அரக்கன்; தாவியே, கூவினன்;
அங்கு அறைகூவ, கொண்டலும் மேவினன்,
அரக்கனை விடாது பற்றியே. 71-1

அண்டம் ஓராயிர கோடி எங்கணும் மண்டினர், செருத் தொழில்
மலைதல் விட்டிலர்; அண்டர்கள் கலங்கினர்;
‘அரக்கராயுளோர் உண்டு, இனிக் கரு’ என
ஓதற்கு இல்லையால். 71-2

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது,
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது,
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது,
இமையவர் அடல் வலி பருகியது, எளிமையின். 89-1

மயன் படைக்கலம் அழிந்தது கண்டு, இகல் மறவோன்,
‘சயம் படைத்தது நன்று; இவன் செருக்கினைத் தடுக்க,
பயன் படைத்துள தண்ட மாப் படைகள் உண்டு; அதனால்,
நயம் படைப்பென்’ என்று, ஒரு கதை நாதன்மேல் எறிந்தான். 104-1

அன்ன மாக் கதை விசையொடு வருதலும், அமலன்
பொன்னின் ஆக்கிய சிலையிடை ஒரு கணை பொறுத்தான்;
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய, சின்னமாக்கினன்;
அது கண்டு, அங்கு அரக்கனும் சினந்தான். 106-1

ஆயது ஆக்கிய செய்கை கண்டு, அரக்கனும் சினந்தே,
தீயின் மாப் படை செலுத்த, அப் படையினின் செறுத்தான்;
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட, அரக்கன்
ஏய அப் படை ஏவி, அங்கு அமலனும் இறுத்தான். 108-1

இரவிதன் படை ஏவினன், அரக்கன்; மற்று அமலன் சுருதி,
அன்ன திண் படைகொடு காத்தனன்; மதியின் விரவு வெம் படை
வெய்யவன் விடுத்தலும், வீரன், உரவு திங்களின்
படைகொண்டு, அங்கு அதனையும் ஒறுத்தான் 108-2

வாருதிக்கு இறை படை கொண்டு அங்கு அரக்கனும் மறைந்தான்;
நேர் உதிக்க அப் படை கொண்டு நிமலனும் நீக்க, தார்
உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி, ‘பேருவிப்பென்,
மற்று இவன் உயிர்’ எனும் உளம் பிடித்தான். 108-3

முக்கணான் படை முதலிய தேவர்தம் படைகள் ஒக்க வாரி, அங்கு
அரக்கனும், ஊழ் முறை துரப்ப, புக்கி, அண்ணலை
வலங்கொண்டு போனதும், பொடிபட்டு உக்கி,
ஓடினதும் அன்றி, ஒன்று செய்துளதோ? 108-4

இத் திறம்பட மாயையின் படை வகுத்து, எழுந்து, அங்கு
எத் திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி,
சித்திரம் பெற அடங்கிய கவிப் பெருஞ் சேனை
மொய்த்து மூடியது, அண்டங்கள் முழுவதும் மாய. 119-1

‘அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலையக்
கொண்ட காலம் ஈதோ!’ எனக் குலைகுலைந்து, அமரர்
துண்ட வான் பிறை சூடியைத் தொழ, அவன் துயரம்
கண்டு, ‘இராகவன் கடிந்திடும்; கலங்கலீர்’ என்றான். 119-2

மாயையின் படை தொலைந்திட, வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினைச் செய்கைகள் யாவையும் சிதைந்தே போயது;
எங்கணும் இருள் அற ஒளித்தது; அப் பொழுதில் காயும்
வெஞ் சினத்து அரக்கனும் கண்டு, உளம் கறுத்தான். 124-1

நெற்றி விழியான்-அயன், நிறைந்த மறையாளர்,
மற்றை அமரர், புவியில் வானவர்கள், ‘ஈர்-ஐந்து
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம்
இற்று ஒழிய ஆன்று அழியுமோ?’ என-இசைத்தான். 131-1

‘வேதம் ஒரு நாலும், உள வேள்விகளும், வெவ்வேறு
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும், நீதியொடு
கால்குலைய, நீசன் விடு சூலம் ஈது அழியும்’ என்று
இதயம் எண்ணினன், இராமன். 131-2

எவ் வகை உரகமும் இரியல் போயின, நொவ்வியல் உற்றன;
நொடிப்பது என் இனி? அவ் வயின் அரன் அணி
அடல் அராவுமே கவ்வையின் உழந்தன,
சிறையின் காற்றினே. 144-1

பிறைத் தலைப் பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன்; முளைத்தது, அங்கு அதுவும் ஆர்த்து; உடன்
மறுத்து இரு தலைதனை மாற்ற, வள்ளலும்
குறைத்திலன் எனும்படி முளைத்த, குன்றுபோல். 151-1

ஆயிரப் பதின் மடங்கு அரக்கன் மாத் தலை
தீமுகப் பகழியால் சினந்து, இராகவன்
ஓய்வு அறத் துணிக்கவும், உடன் முளைத்ததால்,
தீயவன் தவப் பெருஞ் செயலின் வன்மையால். 151-2

அண்ணலும் இடைவிடாது அறுத்து வீழ்த்தலால்,
மண்ணொடு வானகம், மருவும் எண் திசை,
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது; அமரரும் நடுக்கம் எய்தினார். 152-1

இத் திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின்
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்,
அத் திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன்-
முத் திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான், 153-1

தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட,
விடுத்த வீரன் அவ் வெய்யவன் மாத் தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான்; உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே. 160-1

ஆனபோது, அங்கு அரக்கன் அத் தேரொடும்
வான மீது எழ, மாதலி தூண்டிட, ஞான
நாயகன் தேரும் எழுந்துறப் போனது;
அண்டப்புறத்து அமர் கோலினார். 164-1

அஞ்சல் இன்றி, அமர்க் களத்து, ஆரியன்
வெஞ் சினத்தொடு வேல் அரக்கன் பொர,
எஞ்ச ஏழு திவசம் இராப் பகல்
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும், 183-1

ஆய கண்டு, அங்கு அமலன் விடும் சரம்
சாயகங்களை நூறி, தலைத்தொகை
போய் அகன்றிடச் செய்தலும், போக்கிலாத்
தீயவன் சினந்து, இம் மொழி செப்புவான்: 183-2

‘துறக்கும் என்பதை எண்ணி, சிரத் தொகை
அறுக்குமுன் முளைத்து உய்குவது அன்றியே,
மறுக்கும் என்று மனக் கொளல், மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று, என் உயிரும், நீ.’ 183-3

ஈது அரக்கன் புகல, இராமனும்,
‘தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து,
ஓது உரைக்கு எதிருற்று, என் பகழி
இப் போது உரைக்கும்’ எனக் கொடு பொங்கினான். 183-4

மாறுபடத் தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய, அன்னான்
ஏறி வரு பொன் தடந் தேர் பாகனும் பொன்றிட, பண்டு அங்கு இமையா முக் கண்
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால்-இடையே கூடித்
தேறுதல் செய்து உழல் போதில், தீவினை மாய்த்திடப் போம் நல் வினையேபோல. 200-1

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading