சிவபெருமான் ஏவ, இந்திரன் தேர் அனுப்பினான்; அவனுடைய
தேரோட்டியாகிய மாதலி தேர் கொண்டு வந்தான். தேரின்
சிறப்பைக் கவிக்கூற்றால் உணர்கிறோம். அரக்கர் மாயையால்
வந்த தேரோ என முதலில் இராமன் ஐயப்பட்டான். பின்னர்
உண்மை தெரிந்து, தேவர் அனுப்பிய தேரில் ஏறினான் பெருமான்.
இவை இப்படலம் கூறும் செய்திகள்.
——-
இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்
தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து பணிமீது அமளி, ‘அஞ்சல்’ என, அந் நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1-
முறை – முறையே; தொழும் கையொடு – (இராவணன்
வருவதைக் கண்டு அஞ்சிய வானரர்கள் இராமனை நோக்கி)
வணங்கிய கைகளோடு; வாய் குழறி – அச்சத்தால் பேச்சுக் குழறி;
மெய் துளங்கி – உடம்பு நடுங்க; கவிசேனை – வானர சேனை;
விழுந்து இடு பூசல் மிக – நிலத்திலே தடுமாறி விழுந்து
எழுப்புகின்ற பேரொலி பெருகிட; இராமன்- அந்த ஆரவாரத்தைக்
கேட்ட இராமன்; விண்ணோர் அழுந்து படு பால் அமளி
அந்நாள் – (முன்பொரு காலத்திலே) தேவர்கள் துன்பத்தில்
அழுந்திய போது எழுப்பிய ஆரவாரத்தைக் கேட்ட திருப்பாற்கடலில்
இருந்த அந்தக் காலத்தில்; ‘அஞ்சல்’ என எழுந்தபடியே-
(தேவர்களைப் பார்த்து) ‘அஞ்சாதீர்கள்’ என அபயம் கூறி
எழுந்தருளியது போலவே; கடிது- விரைவாக; எழுந்தனன்- (வானர
சேனை அச்சம் தவிருமாறு) இராமபிரான் எழுந்தான்.
——————-
கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
‘மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம்
இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று’ என இசைத்தான். 2-
கடக்களிறு எனத் தகைய கண்ணன் – மதம் கொண்ட
ஆண்யானை எனத் தக்க கண்ணன் (இராமன்); ஒரு காலன்-
ஒப்பற்ற இயமனுடைய; விடக் கயிறு எனப் பிறழும் வாள்-
நஞ்சு போன்ற பாசக் கயிறு போல விளங்குகின்ற உடைவாளை;
வலன் விசித்தான் – வலப் புறத்திலே கட்டிக் கொண்டான்;
‘மடக் கொடிதுயர்க்கும்- (உடைவாளைக் கட்டிக் கொண்ட
இராமபிரான்) இளங்கொடி போன்றவளாகிய சீதையின்
துயரத்திற்கும்; நெடுவானின் உறைவோர் தம் – நீண்ட
வானுலகில் வாழ்கின்ற தேவர்களுடைய; இடர்க்கலினுக்கும்-
துன்பமாகிய கடலுக்கும்; ‘இன்று முடிவு’ என இசைத்தான்-
‘இன்றோடு முடிவு வந்தது’ என்று கூறினான்.
————-
தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ?
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3-
தன் அக வசத்து – தன்னுள்ளே; உலகு தங்க –
உலகங்களெல்லாம் தங்கியிருக்க; ஒரு தன்னின் – ஒப்பற்ற
தன்னினும்; பின்னக அசத்த பொருள் இல்லை- வேறுபட்டதும்
சக்தியற்றதுமான வேறு எப்பொருளும் இல்லை; என – என்பது
போல; பெரியோனை – இராமபிரானை; மன்ன, க(வ்)வ –
நிலைபெற்றுக் கவ்வுமாறு; சத்து உற வரிந்தது என என்கோ?-
உண்மை பொருந்த கட்டப்பட்டது என்று சொல்வதா?; இன்ன கவசத்தையும் – பிணித்து இராமன் மேனியைப் பற்றிய
கவசத்தையும்; ஓர் ஈசன் எனலாம்- ஒரு பரம்பொருளே
எனலாம்.
———-
புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4-
கூற்றின்- இயமதருமனின்; புழுங்கி எரி அட்டில் எனலாய-
நன்றாக எரிகின்ற அடுப்பு என்று சொல்லத்தக்க; அங்கையின்
– அழகிய கரங்களிலே; புட்டிலொடு கோதைகள் – விரல்
உறைகளையும் கை உறைகளையும்; அடக்கிக் கட்டி- முற்றிலும்
(கை) மறையும்படி கட்டிக் கொண்டு; உலகின் பொருள் என-
உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் அடங்குமாறு போல;
கரை இல் வாளி – அளவற்ற அம்புகளைக் கொண்டுள்ள; வட்டில்
– அம்பறாத் தூணியை; புறம் அயல் வைத்து- முதுகுப் பக்கத்திலே;
வயங்குற வரிந்தான்- விளங்கும்படி வைத்துக் கட்டினான்;
—————–
இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்
‘மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர்
ஈண்ட விடுவீர், அமரில்’ என்று, அரன் இசைத்தான். 5-
அமரர்- தேவர்களே!; மூண்ட செரு- மூண்டுள்ள இந்தப்
போர்; இன்றளவில் முற்றும்- இன்றோடு முடிந்துவிடும்; இனி
வெற்றி ஆண்தகையது- இனிமேல் வெற்றி ஆண்மையாளனான
இராமனுக்கே உரியது; உண்மை- இதுவே உண்மை; இனி
அச்சம் அகல்வுற்றீர்- இனிமேல் அச்சம் உங்களை விட்டு
நீங்கப் பெற்றீர்கள்; மணி பூண்ட- மணிகள் கட்டியதும்; வய
மா- வலிமை கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டதும்; ஆழி-
சக்கரங்கள் உடையதுமான; நிமிர்- உயர்ந்த; பொலந்தேர்
– பொன்தேரினை; ஈண்ட விடுவீர்- (இராமபிரானுக்கு)
விரைவில் அனுப்புவீர்களாக; என்று அரன் இசைத்தான்-
என்று சிவபெருமான் கூறினான்.
————–
இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்
தேவர் அது கேட்டு, ‘இது செயற்கு உரியது’ என்றார்;
ஏவல் புரி இந்திரனும், ‘அற்று’ என இசைத்தான்;
‘மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக்
கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி’ என்றான். 6-
தேவர் அது கேட்டு- தேவர்கள் சிவபிரான் சொன்னதைக்
கேட்டு; ‘இது செயற்கு உரியது’ என்றார்- ‘இச் செயல்
செய்வதற்கு உரியது என்று (இந்திரனிடம்) சொன்னார்கள்;
ஏவல் புரி இந்திரனும்- சிவபிரான் ஏவியதைச் செய்யும்
இந்திரனும்; அத்தொழில் இசைந்தான்- அந்தச் செயலைச்
செய்ய ஏற்றுக்கொண்டான்; மூ உலகும் முந்தும்- மூன்று
உலகங்களிலும் ஏற்பட்டுச் சிறப்பதாயும்; ஓர் கணத்தில்
முற்றி- ஒரு கணத்தில் (அந்த மூவுலகங்களையும்) முழுவதாகச்
சுற்றிவருவதாயும்; கோவில் புரிவேன்- சிறப்புள்ள தேரை
இராமனுக்கு ஏற்ற கோவிலாகச் செய்வேன்; பொரு இல் தேர்
கொணர்தி – ஒப்பற்ற தேரினைக் கொண்டு வருக; என்றான்-
என (மாதவியாகிய தன் சாரதியிடம்) கூறினான்.
———
மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு
மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7-
மகோததி வளாவும் – பெருங்கடல் சூழ்ந்துள்ள; பூதலம்
எழுந்து படல் தன்மைய- பூவுலகமே எழுந்து இயங்குவது போன்ற
தன்மை கொண்ட; பொலம் தேர் – பொன்மயமான தேரை; மாதலி
கொணர்ந்தனன் – மாதலி கொண்டு வந்தான்; சீத மதி
மண்டலமும் – குளிர்ச்சி கொண்ட சந்திர மண்டலமும்; ஏனை
உளவும் – மற்றும் (மேல் மண்டலத்தில்) உள்ளனவும்; திண்
பாதம் என – தன்னுடைய வலிமையான பாதம் என்று சொல்லும்
படியாக; நின்றது – (தேவர்கள் அனுப்பிய தேர் நின்றது;
விசும்பில் படர்ந்தது – (தன் உயரத்தால் ஆகாயத்தின் மேல்
பரவியது.
—————–
குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8-
குலக்கிரிகள் ஏழின் வலி கொண்டு – ஏழு குல மலைகளின்
வலிமையைத் தன்னிடம் கொண்டதாய்; உயர் கொடிஞ்சும் –
உயர்ந்த கொடிஞ்சு என்னும் உறுப்பையும்; அலைக்கும் உயர்
பாரின் வலி – (அலைகளால் இடையறாமல்) அலைக்கப்படுகின்ற
நிலவுலகத்தின் வலிமை (கொண்டதுபோன்ற); ஆழியினின்
அச்சும் – சக்கரத்தில் பொருந்திய அச்சினையும்; கலக்கு
அற வகுத்தது – இடைவெளி இல்லாமல் நெருக்கமாகக் கோக்கப்
பட்டது அந்த தேர்; கதத்து அரவம் எட்டின் – சினம் கொண்ட
எட்டுப் பெருநாகங்களையும்; வலக் கயிறு கட்டியது – வலிமை
கொண்ட கயிறாகக் கொண்டு கட்டப்பட்டது, அந்த தேர்;
வானை முட்டியது – (அத்தேர்) வானத்தையே முட்டிக்கொண்டு
நின்றது.
————–
ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9-
மீண்டனவும் மேலனவும் – கடந்தவையும்
வரப்போவனவுமாகிய; ஆண்டினொடு – ஆண்டையும்; நாள்,
இருது, திங்கள் இவை என்னா – கிழமை, பருவம், மாதம்
என்ற இவற்றின் காலப் பகுதிகளையும்; விரி தட்டில் பூண்டுளது
– விரிந்த தேர்த்தட்டிலே குறிக்கப்பட்டுள்ளது; தாரகை மணி –
நட்சத்திர மணிகள் கொண்டு கோத்த; பொரு இல் கோவை-
ஒப்பற்ற மாலைகளையும்; புனை தாரினது – அழகு செய்யப்பட்ட
மாலைகளையும் உடையது; குன்றின் நின்றுளது – மலைபோலப்
பெருமிதமாகப் போர்க்களத்திலே வந்து நின்றது.
————
மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் கோது அற
வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் மீது உறு
பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம்
அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10-
மாதிரம் அனைத்தையும் – எல்லாத் திசைகளையும்; மணிச்
சுவர்களாக- அழகிய சுவர்களாகக்கொண்டு;கோது அற வகுத்தது
– (அந்தத் தேர்) குற்றமற உருவாக்கப்பட்டது; மழைக் குழுவை
எல்லாம் – மேகக் கூட்டம் அனைத்தையும்; மீது உறு பதாகை
என – (தேர்) மேல் கட்டப்பட்ட பெரிய கொடிகளாகக் கொண்டு;
வீசியது- ஆடச் செய்தது; மெய்ம்மைப் பூதம் அவை
ஐந்தின் – அழியா நிலை கொண்ட ஐந்து பூதங்களினுடைய;
வலியின் பொலிவது – வலிமையோடு அழகாக அமைவது.
———–
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து,
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11-
மரத்தொடு மருந்து – மரங்கள் மற்றும் பூண்டுகள் என;
உலகில் உள யாவும் வாரி – உலகில் உள்ள எல்லாப்
பொருள்களையும் வாரி எடுத்து; தரத்தொடு தொடுத்த –
உயர்தரம் கொண்டு தொடுக்கப்பட்ட; கொடி தாங்கியது-
கொடியைத் தாங்கியிருப்பது; சங்கக்கரத்தொடு தொடுத்த
கடல்- கூட்டமாயுள்ள அலைகளோடு பொருந்திய கடலானது;
மீது நிமிர் காலத்து – மேலே பொங்கி வருகின்ற (ஊழிக்)
காலத்து; உரத்தொடு கடுத்த கதழ் ஓசை – வலிமையொடு
விரைவுகொண்டு உக்கிரமாக எழுப்பும் ஓசையே; அதன் ஓதை-
அந்தத் தேரின் ஓசையாகும்.
————–
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்,
அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12-
பண்டு- முன்னம் ஆதியிலே;அரிதன் உந்தி அயன் வந்த-
திருமாலின் உந்தியில் நான்முகன் தோன்றுதற்கு இடமாகிய;
பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய – பழமையான
தாமரை மொட்டைப் போன்ற; மொட்டினது – மொட்டு என்னும்
உறுப்பினை உடையது (அந்தத் தேர்); பூதம் உண்டவை
வயிற்றிடை ஒடுக்கி- பூத விகாரங்களாகிய உயிரிகளையெல்லாம்
தன் வயிற்றுள் ஒடுக்கி; உமிழ்கிற்போன்- (மீண்டும் படைப்புக்
காலத்தில்) உமிழ வல்லவனாகிய திருமாலின்; அண்டச மணிச்
சயனம் ஒப்பது அகலத்தில் – ஆதி சேடனாகிய அழகிய
படுக்கையை அகலத்தில் ஒத்திருப்பது.
————–
வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர்
மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும்.–13
(அந்தத் தேரானது) வேதம் ஒரு நாலும்- நான்கு வேதங்களும்;
நிறை வேள்விகளும் – நிறைவுடைய வேள்விகளும்; வெவ்வேறு
ஓதம் அவை ஏழும் – தனித்தனியாக உள்ள கடல்கள் ஏழும்;
மலை ஏழும் – ஏழு (குல) மலைகளும்; உலகு ஏழும் – ஏழு
உலகங்களும்; பூதம் அவை ஐந்தும் – ஐந்து பூதங்களும்; எரி
மூன்றும்- மூவகை அக்கினிகளும்; நனி பொய் தீர் மா தவமும்
– மிகவும் பொய்ம்மையினின்று நீங்கிய பெருந்தவமும்; ஆவுதியும் –
(தேவர்க்கு வழங்கப்படும்) ஆகுதிகளும்; மற்றும்- மேலும்…
————
அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14-
பொலந்தேர் – பொன்மயமான அந்தத் தேர்; அருங்
கரணம் ஐந்து – இந்திரியங்கள் ஐந்து; சுடர் ஐந்து – ஐந்து
நெருப்புகள்; திசை நாலும் – மேலவற்றோடு நான்கு திசைகள்;
ஒருங்கு அரணம் மூன்றும்- ஒருங்கே இணைந்து செயல்பட்ட
மூன்று மதில்கள்; உழல் வாயு ஒரு பத்தும் – திரிகின்ற பத்து
வகைக் காற்றும்; பெரும்பகலும் – பெரிய பகற்காலம்; என்று
இவை – எனக் குறிக்கப்பட்ட இவை; பொரும் பரிகள் ஆகி-
போர்க்குணம் உடைய குதிரைகளாகி; நனி பூண்டது- நன்கு
பூணப்பட்டது.
வேதம் நான்கு, பூதம் ஐந்து, கரணம் ஐந்து, புலன் ஐந்து,
திசை நாலு இவை தெளிவு எஞ்சியவற்றின் விரிவு வருமாறு;
வேள்விகள் ஐந்து: கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத
வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி. கடல்
ஏழு: உவர்நீர்க் கடல், நெய்க்கடல், கருப்பஞ்
சாற்றுக்கடல், தேன் கடல், மலை ஏழு: கயிலை, இமயம்,
மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம் இவற்றோடு
கந்த மாதனத்தைச் சேர்த்து மலை எட்டு எனவும் உண்டு. உலகு
ஏழு: பூலோகம், தவலோகம், சத்தியலோகம், மகாலோகம், சன
லோகம், தவ லோகம், சத்திய லோகம். எரி மூன்று (வேள்வித்தீ):
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி சுடர் (நெருப்பு)
ஐந்து நான்கு திசையில் நான்குடன் மேலே உள்ள கதிரவனைச் சேர்த்து
பஞ்சாக்கினிகள் என்பர்; இராகம், கோபம், காமம்,
சடம், தீபனம் ஆகியவை பஞ்சாக்கினிகள் எனலும் ஒன்று.
அரணம் மூன்று: பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால்
ஆகிய திரிபுர மதில்கள். தச வாயுக்கள்: பிராணன், அபானன்,
சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,
தேவதத்தன், தனஞ்சயன் என்பன.
————
மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்
வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி’ என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15-
வந்ததனை- அவ்வாறு வந்த தேரை; வானவர் வணங்கி-
தேவர்கள் வணங்கி; (மாதலியை நோக்கி) ‘வலியோய்!-
வல்லமை உடையவனே!; நீ எந்தை தர வந்தனை- நீ எம்
தலைவனாகிய இந்திரன் அனுப்பியதால் வந்திருக்கிறாய்;
எமக்கு உதவுகிற்பாய் – எங்களுக்கு உதவும் ஆற்றல்
உடையவன் நீ; வென்றி தந்தருள்வை- வெற்றி தந்தருள்வாயாக’;
என நின்று – என்று சொல்லி நின்று; தண்மென் பூச்
சிந்தினர்கள்- குளிர்ந்த மெல்லிய மலர்களைச் சொரிந்தனர்;
மாதலி….; கடாவி – தேரைச் செலுத்திக் கொண்டு; நனி
சென்றான்- விரைந்து சென்றான்.
————–
‘வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது’ என, வானொடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16-
நெடுந்தேர் – அந்தப் பெரிய தேர்; வினைப்பகை விசைக்
கொடு – ஆன்மாவின் பகையாகிய வினையின் வேகத்தைக்
கொண்டு; விசும்பு உருவி- ஆகாயத்தை ஊடுருவிக்கொண்டு; மான
மனத்தின் விசை பெற்றுளது- பெருமைக்குரிய மன வேகத்தைப்
பெற்றதாய்; வந்தது – வந்து சேர்ந்தது; என – என்று
பெருமைப்படுத்தி; வானோடு அனைத்து உலகமும் தொழ- வானுலகத்தோடு எல்லா உலகங்களும் வணங்கும்படியாக;
அமலன்பால் அடைந்தது – குற்றமற்றவனாகிய இராமனிடம்
வந்துசேர்ந்தது; நினைப்பும் இடை பிற்பட- எண்ணம்கூடப்
பின்னடையும்படியாக; நெடுந்தேர் – அந்தப் பெரிய தேர்;
நிமிர்ந்தது- உயரமாக வந்து நின்றனது.
———
தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்
‘அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா;
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17-
அலரி- சூரியனுடைய; தனி ஆழி புனை தேர் இது எனில்,
அன்று – ஒற்றைச் சக்கரம் பூண்ட தேர்தான் இது எனின் அப்படி
இல்லை; உலகின் முடிவில் – உலகங்களின் அழிவுக் காலத்தில்
எழுகின்ற; பெரிய ஊழ் ஒளி இது அன்று – பெரிய ஊழிக்
காலத்தில் தோன்றும் தீயின் ஒளிகொண்டது இது அன்று;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று- நிலைபேறுடைய பெரிய
மேரு மலையும் அன்று; நெடிது – மிகவும் உயரமானது இது;
(அம்மா என்ற சொல் வியப்புக் குறிப்பானது); தலைவர் ஒரு
மூவர் – தலைவர்களாகிய ஒப்பற்ற மும்மூர்த்திகளின்; தனிமானம்
இதுதானோ- சிறந்த விமானம் இதுதானோ?
———–
‘என்னை இது நம்மை இடை எய்தல்?’ என எண்ணா,
மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, ‘வந்தாய்,
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?’
என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18-
‘என்னை இது நம்மை இடை எய்தல்’- இந்தத் தேர்
நம்மிடம் எய்தியது ஏன் எப்படி?’; என எண்ணா – என்று
எண்ணி; மன்னவர்தம் மன்னன் மகன் – மன்னர் மன்னனாகிய
இராமன்; மாதலியை – மாதலியை நோக்கி; பொன்னின் ஒளிர்
தேர் இது கொடு – பொன்போல் ஒளிவீசுகின்ற இந்தத்
தேரைக் கொணர்ந்தது; யார் புகல- எவர் கட்டளைப்படி?’;
என்றான் – என்று வினவினான்; அன்னவனும் – அந்த மாதலியும்;
அன்னதனை ஆக உரை செய்தான் – இராமனை கேட்ட
செய்தியைப் பொருந்துமாறு சொன்னான்.
————
மாதலியின் மறுமொழி
‘முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்,
அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19-
‘எந்தாய் – என் தந்தையே!; முப்புரம் எரித்தவனும் –
திரிபுரம் எரித்த சிவபெருமானும்; நான்முகனும் – பிரமனும்;
முன் நாள் அப் பகல் – முதல் நாளாகிய படைப்புக்
காலத்தில்; இயற்றி உளது – செய்தது (இத்தேர்); ஆயிரம்
அருக்கர்க்கு ஒப்பு உடையது – தன் ஒளிச் சிறப்பால் ஆயிரம்
சூரியர்களுக்கு நிகரானது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா –
ஊழிக்காலம் மாறும்போதும் அழிவிலாததாகி; இத்தேர் வருவது
– வந்துள்ள இந்தத் தேர்; இந்திரனது- இந்திரனுக்கு உரியது.
———-
‘அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20-
புண்டரிக – (கண், கரம், கால் போன்ற உறுப்புகளால்)
தாமரையானே!; இதுபோல்வன அண்டம் அளப்பு இல – இந்த
அண்டம் போல அளவற்ற அண்டங்களை; அடுக்கிக் கொண்டு
பெயரும் – தன்னிலே அடுக்கிக்கொண்டு இயங்கவல்லது; குறுகும்,
நீளும்- தேவைப்படும்போது அளவிலே குறுகும் அல்லது நீளும்;
உவமிக்கின் அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும்
ஒக்கும்- உவமை சொல்ல வேண்டுமாயின் அந்த அண்டங்களை
அனைத்தையும் பற்றி உண்டவனாகிய திருமாலின் வயிற்றையும்
ஒக்கும்; நின் சரம் எனக் கடிது போம் – உன்னுடைய அம்பு
போல் வேகமாகப் போகும்.
————
‘கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே,
எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21-
‘எந்தாய்…; கண்ணும் மனமும் கடிய காலும் இவை
கண்டால் – கண், மனம், விரைவாக இயங்குகின்ற காற்று ஆகிய
இவற்றைக் கண்டால்; விசையால் – அவற்றினும் விரைவாக;
உண்ணும் – (இந்தத் தேர்) உண்டுவிடும் (அதாவது அவற்றை
வேகத்தால் தோற்கடிக்கும்); உணர்வு பின் படர ஓடும்- அறிவுகூட
தன் பின்வருமாறு இது முன்னேறி ஓடும்; விண்ணும் நிலனும் என
விசேடம் இலது – (இயங்குவதற்கு) ஆகாயம் நிலம் என வேறுபாடு
இல்லாதது; எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் அஃதே –
எண்ணப்படுகின்ற பெரிய நீரிலும் நெருப்பிடையிலும் அதுவே
(அதாவது, இத்தேரின் இயக்கத்துக்கு நீர் நெருப்பு என்ற வேறுபாடு
இல்லை).
—————-
‘நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின்
பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத்
தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22-
உலகு செய்தோய் – உலகங்களைப் படைத்தவனே!; நீரும்
உளவே அவை ஓர் ஏழு – ஏழு கடல்களும் உள்ளன அன்றோ?;
நிமிர்கிற்கும் பாரும் உளவே அதின் இரட்டி- கடல்மேல்
நிமிர்கின்ற உலகங்களும் ஏழு கடல்கள் போல இரண்டு
மடங்காக பதினான்கு உள்ளன அன்றோ?; அவை – அந்தக்
கடல்களும் உலகங்களும்; பண்பின் பேரும் ஒரு காலை – தம்
இயல்பிலிருந்து ஒரு காலத்திலே மாறுபடும்; இது அலால் –
இந்தத் தேரைத் தவிர; ஒரு காலும் இடை பேராத் தேரும்
உளதே- ஒரு காலத்திலும் தன் இயல்பிலிருந்து நிலை பெயராத
தேரும் இருக்கிறதோ?’ (இல்லை).
———-
‘தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது’ என்றான்,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23-
முதல்வ! – தலைவனே!; தேவரும் முனித்தலைவரும்
சிவனும்மேல்நாள் மூ உலகு அளித்த அவனும் –
தேவர்கள், முனிவர்களின் தலைவர்கள், சிவபிரான், பண்டொரு
காலத்தில் மூன்று உலகங்களையும் படைத்த நான்முகன்
ஆகியோர்; முன் நின்று ஏவினர்- முன் வந்து ஏவினார்கள்;
(அவர்களின் கட்டளையை ஏற்றுச்) சுரர்க்கு இறைவன்-
தேவர்களின் அரசனான இந்திரன்; ஈந்துள (து) இது –
கொடுத்ததாகும் இந்தத்தேர்’; என்றான் – என்று
சொல்லியவனாய்; மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி –
குதிரையின் மனப்போக்கினைப் பொருத்தமாக உணர்ந்து
(தேர் செலுத்த வல்ல) மாதலி; வலித்தான் – சொலக்கருதி
உறுதிபடச் சென்னான்.
————–
இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில் பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்
ஐயன் இது கேட்டு, ‘இகல் அரக்கர் அகல்
மாயச் செய்கைகொல்?’ எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24-
ஐயன் – இராமபிரான்; இது கேட்டு – மாதலி உரைத்த
இதனைக் கேட்டு; ‘இகல் அரக்கர் அகல் மாயச் செய்கை
கொல்’ என- ஒருகால் இது பகைவராகிய அரக்கர்களின் பெரிய
மாயையால் விளைந்த செயலோ என்று; சிந்தையில் சிறிது
நினைந்தான் – மனத்திலே ஓரளவு எண்ணினான்; ‘அவன்
உரைத்தது மெய்’ என வேண்டி – அந்த மாதலி உரைத்தது
உண்மையே எனப் புலப்பட வேண்டி இடை பூண்ட- தேரிலே
கட்டப்பட்ட; மொய் உளை வயப் பரி- செறிந்த பிடரி மயிர்
கொண்ட வலிய குதிரைகள்; முது வேதம் மொழிந்த –
பழமையான வேதங்களை ஓதின.
————-
இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்
‘இல்லை இனி, ஐயம்’ என எண்ணிய இராமன்,
நல்லவனை, ‘நீ உனது நாமம் நவில்க!’ என்ன,
‘வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்’ எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25-
‘இனி ஐயம் இல்லை- இனிமேல் ஐயம் ஏதும் இல்லை; என
எண்ணிய இராமன் – என்று தெளிவுற்று எண்ணிய இராமன்;
நல்லவனை – நற்பண்புடைய மாதலியை நோக்கி; ‘நீ உனது
நாமம் நவில்க’ என்ன – நீ உனது பெயரைச் சொல்லுக என்று
கூற; வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர் என- வலிய இத் தேரினை ஏறிச் செலுத்துவதற்குரிய
மாதலி என்று என் பெயரைச் சொல்லுவார்கள் என்று; தொழுது
– வணங்கி; நெஞ்சினொடு சொன்னான்- மனமாரக் கூறினான்.
————–
மாருதியையும் இளவலையும் நோக்கி, ‘உம் கருத்து யாது?’ என, அவர்களும், ‘இதில் ஐயம் இல்லை’ என்றல்
மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, ‘நீர்
கருதுகின்றதை நிகழ்த்தும்’ என, நின்றான்;
ஆரியனை வணங்கி, அவர், ‘ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது’ என்றனர், தெளிந்தார். 26-
மாருதியை நோக்கி – அனுமனைப் பார்த்து; இள வாள்
அரியை நோக்கி – பின்னர் இளைய ஒளி வீசும் சிங்கம் போன்ற
இலக்குவனைப் பார்த்து; ‘நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என
– ‘நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு;
நின்றான் ஆரியன் – தலைவனாகிய இராமன் (தேரில்
ஏறிவிடாமல்); தாமதித்து நின்றான்; தெளிந்தார் – ஐயம்
தெளிந்தவராகிய அவர்கள்; ‘ஐயா, ஐயம் இலை – தலைவனே!;
ஐயமே இல்லை;இது புரந்தரனது தேர்- இது தேவேந்திரனுடைய
தேர்தான்; என்றனர்…
————–
மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் – இராமன். 27-
நிலத்து விழுந்து புரள் தீவினை- தரையிலே விழுந்து புரளத்
தொடங்கிவிட்ட தீவினை; வெதும்ப- வாடவும்; தொழுந்தகைய
நல்வினை களிப்பினொடு துள்ள – வணங்கத் தக்க நல்வினை
மகிழ்ச்சியால் துள்ளவும்; துயரத்து அழுந்து அமரர் அந்தணர்
– துயரத்தில் அழுந்திக்கிடந்த தேவர்கள் அந்தணர்
ஆகியோரின்; கை முந்துற்று எழுந்து தலை ஏற – கைகள்
முந்திக்கொண்டு அவர்கள் தலைமேல் ஏறவும்; இராமன் இனிது
ஏறினன் – இராமபிரான் இந்திரன் அனுப்பிய தேரின்மீது இனிதே
ஏறினான்.
————–
மிகைப் பாடல்கள்
இத் தகையன் ஆகி, ‘இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென்’ என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்,
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1
—————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply