இராவண வதம் முடிந்தபிறகு சீதாபிராட்டி சிறையிலிருந்து
மீண்டதையும், மூவரும் வனவாசம் முடிந்து அயோத்திக்குத்
திரும்பியதையும் கூறும் பகுதியாதலின் மீட்சிப்படலம் எனப் பெற்றது.
இராமன் இராவணற்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்த
வீடணனுக்கு ஆறுதல் கூறுகிறான். இலக்குவனை வானர வீரர்களுடன்
சென்று வீடணனுக்கு முடி சூட்டச் செய்கிறான். வீடணனுக்கு
நீதிகளை எடுத்துரைக்கிறான். சீதைக்கு நற்செய்தி சொல்லிவர
அனுமனை அனுப்புகிறான். அனுமனால் செய்தி அறிந்த சீதை
மகிழ்கிறாள். அனுமன் அரக்கியரைத் தண்டிக்க விரும்ப
சீதை அதை மறுத்துரைக்கிறாள்.
இராமன் வீடணனைச் சீதையைச் சீரொடும் அழைத்து வா என்று
அனுப்புகிறான். இருந்தவாறே வருவேன் என்றுரைத்த பிராட்டியை
இராமன் ஆணையைக் கூறி அலங்கரித்து வரச் செய்து அழைத்து
வருகிறான். இராமனது அழகுத் திருமேனி கண்ட சீதை அனுமனைப்
பாராட்டி இராமனை வணங்கி பிரிவினால் உளதாகிய ஏக்கம்
நீங்கப் பெறுகிறாள். சீதையை இராமன் கடிந்துரைத்து தீயிடைப்
புகும்படி செய்விக்கிறான். சீதை எரியிடை விளங்கலும அக்கினி
தேவன் முறையீடும், இராமனுக்கு அக்கினிக் கடவுள் பிராட்டியின்
கற்பின் மாட்சியை அறிவித்தலும் நிகழ சீதையை இராமன் ஏற்றுக்
கொள்கிறான். பிரமன் சிவன் ஆகியோர் இராமன பரம்பொருள்
என்பதை அவனுக்கு உணர்த்துகின்றனர். தயரதன வருகிறான்.
இராமனோடு உரையாடி மகிழ்கிறான். சீதையைத் தேற்றுகிறான்.
இலக்குவனைப் பாராட்டுகிறான். இராமனால் கைகேயிபால் கொண்ட
கோபம் தணிந்து சுவர்க்கம் திரும்புகிறான். தேவர்கள் இராமனுக்கு
வரம் கொடுக்கின்றனர். அரக்கர் கோமான் வீடணன் கொணர்ந்த
புட்பக விமானத்தில் அனைவருடனும் ஏறி அயோத்திக்கு இராமன்
புறப்படுகிறான். பரத்துவாச முனிவனது உபசரிப்பை இடையில்
இராமன் ஏற்கிறான். ஆச்சிரமத்தில் தங்கிய இராமன் அனுமனைப்
பரதனிடம் அனுப்புகிறான்.
இராமன் வாராமையால் துன்புற்ற பரதன் எரிபுக எண்ணுகிறான்.
எரிபுகத் துணியும் பரதனைக் கோசலைத் தாய் தடுக்கிறாள்.
அப்போது அனுமன் தோன்றி நெருப்பைக் கையால் அணைக்கிறான்.
இராமனது அடையாள மோதிரம் காட்டி இராமன் வருகையை
அறிவிக்கிறான். பரதன் மகிழ்கிறான். பரதன் கேட்க அனுமன்
தன் வரலாற்றையும்இராமன் செய்திகளையும் முறையே தெரிவிக்கிறான். பரதன்
இராமன் இருக்கும் இடம் நோக்கி அனுமனுடன் கங்கைக் கரை
சார்கிறான்.
குகன் பரத்துவாச ஆச்சிரமம் வந்து இராமனைப் பணிந்து
அவனோடு சேர்ந்து கொள்கிறான் – அனைவரும் புட்பகத்தில்
ஏறி அயோத்தி நகர்ப்புறம் சார்கிறார்கள். இராமனைப்
பரதன் காணுகிறான். விமானம் நிலத்தை அடைகிறது. இராமன்
வருகை கண்டு தாயார் முதலிய அனைவரும் மகிழ்கின்றனர்.
வணங்கற்குரியாரை முறைப்படி மற்றவர் வணங்க அனைவரும்
விமானத்து ஏறி அயோத்திக்கு வந்து சேர்கிறார்கள் என்பது
முதலிய செய்திகள் இப்படலத்துக் கூறப்பட்டுள்ளன.
———–
இராமன் வீடணனுக்கு ஆறுதல் கூறி இலக்குவனால் முடிசூட்டச் செய்தல்
9952.
‘வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!’ எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்:-1-
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு- தான் செய்த அரிய
புண்ணியத்தின் பயனால் இராமனை வந்து அடைந்தவனாகிய
வீடணனுக்கு இராமன்; நீதி மனு நெறி யாவையும் பொருந்து
கேள்விப் புலமையினோய்!- நீதி நெறிகளையும் மனு தரும்
முறைகளையும் ஆகிய யாவற்றையும் நன்கு அறிந்து பொருந்திய
கேள்வி ஞானத்தோடு கூடிய அறிவாற்றல் பொருந்திய வீடணனே!;
வருந்தல் – வருத்தமுறாதே; எனா- என்று; அறைந்து- எடுத்துக்
கூறி (அவனை ஆற்றி); இருந்தவத்து இளையோற்கு- பெரிய தவச்
செல்வத்தை உடைய இலக்குவனுக்கு; இது- (பின் வருகின்ற)
இந்தச் செய்தியை; இயம்பினான்- எடுத்துரைத்தான்.
—————-
சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.–2-
நீ- இலக்குவனே நீ; சோதியான் மகன்- சூரியன் மகனாகிய
சுக்கிரீவன்; வாயுவின் தோன்றல்- காற்றுக் கடவுளின் மகனாகிய
அனுமன்; மற்று ஏது இல் வானர வீரரொடு ஏகி- மற்றுள்ள
குற்றம் இல்லாத குரங்கு வீரர்கள் ஆகியோருடன் புறப்பட்டுச்
சென்று; நீதியானை- அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு;
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை- முதற்கடவுளாகிய
நாராயணன் தந்த வேத விதிப்படி; நெடுமுடி சூட்டுவாய்-
சிறந்த கிரீடத்தைச் சூட்டுவாய்;
———
என்று கூறி, இளவலொடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திரையோரொடும்
சென்று, தம் தம் செய்கை புரிந்தனர்.–3-
வென்றி வீரன் – இராமன்; என்று கூறி – இவ்வாறு சொல்லி;
இளவலொடு ஆரையும்- இலக்குவனோடு மற்றுள்ளவர்களுக்கும்;
விடை அருள் வேலையில் – விடை கொடுத்த பொழுது; நின்ற
தேவர்- (அது கேட்டு) அருகிருந்த தேவர்கள்; நெடுந்
திசையோரொடும் – எண்திசைக் காவலர்களுடனும்; தம் தம்
செய்கை புரிந்தனர்- சென்று தங்கள் தங்களால்
(பட்டாபிஷேகத்துக்கு) முடிந்த உதவிகளைச் செய்வாராயினர்.
———
சூழ் கடல் புனலும், பல தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். -4-
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள்- குறைவு படாத
வெற்றியைப் பெற்றுள்ள தேவர்கள்; சூழ்கடல் புனலும் பல
தோயமும்- உலகைச் சுற்றியுள்ள எழு கடல் நீரும் பிற
புண்ணிய ஆற்று நீர்களும்; நீள் முடித்தொகையும் – நீண்ட
கிரீடத் தொகைகளும்; பிற நீர்மையும்- பிற அரசர்க்கேற்ற
ஆபரணங்களின் தன்மைகளும்; பாழி துற்று- வலிமை செறிந்த;
அரி பற்றிய பீடமும் – சிங்கம் தாங்கிய பீடமாகிய
சிம்மாசனமும்; தந்தனர் – கொண்டு வந்து கொடுத்தனர்.
———-
வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன்.-5-
மான்முகன் – மானின் முகம் உடையவனாகிய மயன் என்கிற
தெய்வத் தச்சன்; வாச நாள் மலரோன் சொல- வாசனையுள்ள
அன்றலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன்
கட்டளையிட; காசும் மாநிதியும் கொடு- மணிகளையும் உயரிய
பொன்னையும் கொண்டு; கங்கை சூடு ஈசனே முதலோர் வியந்திட
– கங்காநதியைத் தலைமேற் சூடிக் கொண்டுள்ள சிவபெருமான்
முதலான தேவர்கள் அதிசயிக்கும் படி; தேசு உலா மணி மண்டபம்
செய்தனன் – ஒளி பரவுகிற அழகிய திருவோலக்க பட்டாபிஷேக
மண்டபத்தைச் செய்தமைத்தான்.
—————
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடன் கவித்தான் அரோ–6-
விண்ணுளோர் – விண்ணுலக வாசிகளான தேவர்கள்;
மெய்கொள் வேத விதிமுறை- சத்தியத்தைத் தன்னிடத்தே
கொண்டுள்ள வேதத்திற் கூறிய சடங்கு முறைகளின்படி;
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட- தெய்வத்
தன்மையுள்ள புண்ணிய தீர்த்தங்களினால் அபிஷேகம்
செய்தலைச் செவ்வையாகச் செய்ய; ஐயன் ஆணையினால்
– இராமனது கட்டளையின் வண்ணம்; இளங்கோளரி- இளைய
சிங்கத்தை ஒத்த இலக்குவன்; கையினால்- தன் திருக்கரத்தால்;
மகுடன் கவித்தான்- கிரீடத்தை வீடணன் தலைமேற் சூடினான்.
————
கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. –7-
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் – நிறைந்த
வெற்றியை உடைய வீடணன்; கரிய குன்று கதிரினைச் சூடி
ஓர் எரிமணித் தவிசில் பொலிந்து என்ன- கருநிறம் உள்ள
ஒரு மலை சூரியனைத் தலைமேல் அணிந்து கொண்டு ஒப்பற்ற
பிரகாசிக்கிற மணிக் கற்களால் ஆகிய பீடத்தில் விளங்கினாற்
போல என்று சொல்லும்படி; தமர் ஆர்த்து எழ- உறவினர்கள்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; அரியணைப் பொலிந்தான் –
சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தான்.
————
தேவர் பூ மழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்
நாவில் ஆசி நறை மலர், தூவினார்.–8-
தேவர் – தேவர்கள்; பூ மழை- மலர் மழையையும்; சித்தர்
முதலினோர் – சித்தர் முதலானோர்கள்; மேவு காதல் விரை
மலர் – மிகுந்த அன்போடு கூடிய மணமிக்க மலர்களையும்;
வேறு இலா மூவரோடு முனிவர் மற்று யாவரும் – தம்முள்
ஏற்றத்தாழ்வில்லாத மும்மூர்த்திகளும் முனிவர்களும் மற்றுள்ள அனைவரும்; நாவில்
ஆசி நறை மலர் – தமது நாவால் கூறுகின்ற ஆசீர்வாதமாகிய
மணமிக்க மலர்களையும்; தூவினார் – வீடணன் மேல்
சொரிந்தார்கள்.
————
முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான்:–9-
முடி புனைந்த- கிரீடத்தை அணிந்து கொண்ட
(பட்டாபிஷேகம் செய்து கொண்ட); நிருதர் முதலவன்
– அரக்கர் குலத் தலைவனாகிய வீடணன்; இளவலை அடி
வணங்கி – இலக்குவனைக் காலில் வீழ்ந்து வணங்கி;
அந்நெடிய காதலினோர்க்கு- அந்த பேரன்பையுடைய
இலக்குவனுக்கு; ஆண்டை- அவ்விடத்தே; உயர் நீர்மை
செய்து- உயர்ந்த உபசாரங்களை எல்லாம் செய்து;
இடிகொள் சொல்லன் – இடிமுழக்கம் போலக் கம்பீரமான
குரலை உடையவனாய்; அனலற்கு- தன் அமைச்சர்களில்
மூத்தவனாகிய அனலன் என்பானுக்கு; இது இயம்பினான்-
பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானான்.
அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் நால்வர்
வீடணன் அமைச்சர்கள்-அனலன் அவர்களுள் மூத்தவன்.
———-
‘விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று’ எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான்.–10-
(வீடணன்) விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!-
மலைகளும் வெட்கமுறும்படி அவற்றினும் பெரிதாக நெருங்கி
இருக்கின்ற தோள்களை உடைய அனலனே!; நீ யான்
இலங்கை மாநகர் வரும் எல்லை- நீ! யான் (இராமனோடு
அயோத்தி சென்று) இலங்கை நகரத்துக்குத் திரும்பி வரும் வரை;
கலங்கலா நெடுங்காவல் இயற்று- உயிர்கள் யாவும் கலக்கம்
உறாதபடி நீண்ட காவலைச் செய்வாயாக; எனா- என்று சொல்லி
(அவனை அரசப் பிரதிநிதியாக ஆக்கி); அலங்கல் வீரன் –
மாலை அணிந்த வீரனாகிய இராமபிரானது; அடி இணை
எய்தினான் – திருவடி இணைகளை வந்து அடைந்தான்.
————-
வீடணற்கு இராமன் நீதி கூறல்
9962.
குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்:–11-
அரக்கர் கோமகனோடு- அரக்கர்க்கு அரசன் ஆகிய
வீடணனோடு; குரக்கு வீரன் – வானர வீரன் என்று சிறப்பித்து
உரைக்கப்படும் அனுமன்; அரசு- வானர வேந்தனாகிய
சுக்கிரீவன்; இளங்கோளரி- வானர இளவரசாகிய சிங்கம்
போன்ற அங்கதன் (ஆகியோர்) அடி தாழ்தலும்-
(இராமபிரானது அடிகளில் வணங்குதலும்; அத்திருக்கொள்
மார்பன் புகல் புக்கவன் – அந்த இராமன் (தன்னிடத்தில்)
அடைக்கலம் புகுந்தவனாகிய வீடணனைப்; பொருக்கென-
விரைவாக; புல்லி- எடுத்துத் தழுவி;இனையன செப்பினான் –
இத்தகைய நீதிகளை எடுத்துரைத்தான்.
————-
‘உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!’ என்றான் – மறை தந்துளான்.–12-
மறை தந்துளான் – நான்கு வேதங்களையும் வெளியிட்டருளிய
இராமபிரான்; ஈறு இலாத் தருமசீல!- முடிவில்லாத அற ஒழுக்கத்தில் என்றும் நிலைத்து நிற்பவனே!; மூ உலகும் தொழ
– மூன்று உலகத்தில் உள்ளாரும் உன்னை மதித்து வணங்குமாறு;
உம்பர் தம் பெருமை- தேவர்களுடைய பெருமைக்கும்; நீதி-
அரச நீதிக்கும்; அறன் வழி- தரும வழிக்கும்; பேர்கிலாது
– (சிறிதும்) மாறுபடாமல்; இருமை ஏய் உரிமை அரசு-
இம்மைக்குப் புகழும் மறுமைக்குப் புண்ணியமும் தரத்தக்கதாக
உனக்கு உரிமையான இலங்கை அரசை; ஆளுதி- ஆள்வாயாக
என்றான்.
———-
பன்னும் நீதிகள் பல பல கூறி, ‘மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி –
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான்.–13-
தாயர் சொல் நோக்கினான்- தனது சிற்றன்னையாகிய
கைகேயியின் சொல்லை மனத்தின்கண் எப்பொழுதும் நினைத்துக்
காத்தவனாகிய இராமபிரான்; பன்னும் நீதிகள் பல்பல கூறி-
திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படும் அறவுரைகள் பற்பலவற்றை
(வீடணனுக்குச்) சொல்லி; உயர்கீர்த்தியோய் – மிக்க புகழை
உடைய வீடணனே! மற்று உன்னுடைத் தமரோடு- உன்
இனத்தவர்களோடு; மன்னி வாழ்க- நிலைபெற்று வாழ்க;
என்று உரைத்து- என்று சொல்லி; அடல் மாருதி தன்னை
நோக்கினன் – வலிமை படைத்த அனுமனை (ஒன்று
சொல்லுதற்காக)ப் பார்த்தான்.
———–
இராமன் அனுமனைச் சீதையிடம் அனுப்பல்
9965.
இப் புறத்து, இன எய்துறு காலையில்,
அப் புறத்ததை உன்னி, அனுமனை
‘துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய்’ எனச் செப்பினான்.–14-
இப்புறத்து- இவ்விடத்தில்; இன- இந்நிகழ்ச்சிகள்; எய்துறு
காலையில்- நடக்கும் பொழுது; அப்புறத்ததை உன்னி- மேல்
நடக்க வேண்டியவைகளை (இராமன்) மனத்தில் கருதி; அனுமனை
– அனுமனை அழைத்து; துப்பு உறச் செய்ய வாய் மணித்
தோகைபால் போய் – பவழத்தை ஒத்துச் சிவந்த வாயை உடைய
அழகிய மயில்போல்வாளாகிய சீதையிடம் சென்று; இப்படி
செப்புறு- இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக; எனச்
செப்பினான்- என்று கூறினான்.
————
அனுமன் சீதையிடம் கூறுதல்
9966.
வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்:
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என,
சுணங்கு நோய் முலையாட்கு இவை சொல்லுவான்: –15-
அந்தம் இல் மாருதி- அழிவற்ற சிரஞ்சீவியாகிய அனுமன்;
வணங்கி- (இராமனை) வணங்கி விடைபெற்றுச் சென்று; மாமலர்
அணங்கு சேர் கடிகாவு சென்று அண்மினான் – சிறந்த
தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டி
தங்கியுள்ள காப்பமைந்த அசோக வனத்தை நெருங்கிச் சென்று
அடைந்து; சுணங்கு நோய் முலையாட்கு- தேமல் பரவிய
நகில்களை உடைய பிராட்டிக்கு; உணங்கு கொம்புக்கு உயிர்
வரு நீர் என- காய்ந்து போன கிளைக்கு உயிர் வருதற்குக்
காரணமான நீரைப் போல; இவை- (பிராட்டிதளிர்த்தற்குக்
காரணமான) இந்தச் செய்திகளைச்; சொல்லுவான் – சொல்லத்
தொடங்கினான்.
அனுமனும் சிரஞ்சீவி
ஆதலின் ”அந்தம் இல் மாருதி” எனப்பட்டான்.
———–
‘ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்!’ –16-
ஏழை- பேதமை என்னும் அணிகலன் உடையாளே!; சோபனம்-
மிக்க மங்களம் உண்டாகட்டும்; ஏந்திழை- தரித்த அணிகலன்களை
உடையாளே!; வாழி- வாழ்வாயாக; ஆரிய சூழி யானை- மேன்மை
மிக்கவனாகிய இராமபிரான் என்கிற முகபடாம் அணிந்த யானை;
ஆழி ஆன அரக்கனை- தீமைக்கு வரம்பாகிய இராவண
ராக்கதனை; துகைத்தது- அழித் தொழித்தது; சோபனம்-
(இனி உனக்கு) மங்களம் உண்டாகட்டும் (தொடரும்
————
பாடினான் திரு நாமங்கள்: பல் முறை
கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். –17-
குன்று அன்ன தோளினான் – மலை போன்ற கோள்களை
உடையவனாகிய அனுமான்; திரு நாமங்கள் பாடினான் – இராமன்
திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு; பல்முறை கூடுசாரியின்
குப்புற்று- பல தடவை இடம் வலமாகச் சென்று குதித்து; கூத்து
நின்று ஆடி- ஆட்டம் ஆடுதலைச் செய்து; அங்கை இரண்டும் –
தன் அழகிய கை இரண்டையும்; அலங்கு உற சூடி நின்றனன்-
மாலை போல் தலைமேல் வளைவாகச் சூடிக் கொண்டு நின்றான்.
————
‘தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் எனும்
அலை கிடந்தன; ஆழி கிடந்தென,
நிலை கிடந்தது, உடல் நிலத்தே’ என்றான்.–18-
தாரணி தாங்கிய மலை கிடந்தன போல்- பூமியைத்
தாங்குகிற மலைகள் கீழே விழுந்து கிடந்தன போல; தலை
கிடந்தன – (இராவணனது) பத்துத் தலைகள் கீழே கிடந்தன;
மணித் தோள் எனும் – அழகிய தோள்கள் என்கின்ற; அலை
கிடந்தன – கடல் அலைகள் கிடந்தன;உடல்- இராவணனது
உடம்பு; நிலத்தே- பூமியின்கண்; ஆழி கிடந்தென- கடல்
கிடந்தது என்று சொல்லும் படி; நிலை கிடந்தது- அசையாமல்
கிடந்தது; என்றான் – என்று (அனுமன்) கூறினான்.
———-
‘அண்ணல் ஆணையின், வீடணனாம் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்,
பெண் அலாது, பிழைத்துளதாகும்’ என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்’ என்றான். –19-
அண்ணல் ஆணையின்- தலைவனான இராமபிரானது;
ஆணையாலும்; வீடணனாம்- வீடணன் என்று கூறப்படும்;
மறக்கண் இலாதவன்- கொடுமையற்ற அறவாளனது; காதல்
– அன்பு; தொடர்தலால் – இடைவிடாது இருத்தலாலும்; பெண்
அலாது பிழைத்து உளதாகும் என்று எண்ணலாவது ஓர்
பேர் இலது- (இலங்கையில்) பெண்மக்கள் அல்லாமல் உயிர்
பிழைத்துள்ளவர் என்று நினைக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூட இல்லை.
———–
ராட்டியின் மகிழ்ச்சி நிலை
9971.
ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள் –
பருகல் உற்ற அமுது பயந்த நாள். –20-
(அநுமன் கூறிய நற்செய்திகளைக் கேட்ட பிராட்டி) பருகல்
உற்ற அமுது பயந்த நாள் – பருகுதற்கினிய தேவர் அமுதம்
கடைந்தெடுத்த நாளில்; ஒரு கலைத் தனி ஒண் மதி- ஒற்றைக்
கலை அளவினதாகிய சந்திரன்; வருகலைக்குள் வளர்வது மானுற-
ஒவ்வொன்றாக வருகின்ற கலைகளால் தன்னுள் தானே வளர்ந்து
பதினாறு கலைகளும் நிரம்பிய முழு மதியானது போல என்னும்படி;
பொரு கலைக்குலம் பூத்தது போன்றனள்- நெருங்கிய கலைகளின்
தொகுதி நிரம்பப் பெற்று பொலிவெய்தியதைப் போன்று தழைத்தாள்.
———–
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட,
தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் –
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். –21-
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் – இராகுவால்
(விழுங்கிக்) கக்கப் பெற்ற குளிர்ந்த நிலவைப் போன்ற
தன்மை உடைய பிராட்டி (அநுமன் சொல்லால்); ஆம்பல் வாயும்
முகமும் அலர்ந்திட- ஆம்பல் மலரை ஒத்த சிவந்த வாயும்
முகமும் மேலும் ஒளி விளங்க; தேம்பும் நுண் இடை நோவ-
முன்பே தேய்ந்து வருந்தும் சிறிய இடையானது மேலும்
வருந்தும்படி; திரள் முலை- திரண்டுருண்ட நகில் தடங்கள்;
ஏம்பல் ஆசைக்கு- மகிழ்ச்சி மேலெழும் ஆசையால்; இரட்டி
வந்து எய்தினாள் – (முன்பிருந்ததை விட) இரண்டு மடங்கு
வளர்ந்து பொருந்தப் பெற்றாள்.
————-
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ,
உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ,
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ –
முந்தி ஓங்கின யாவை – முலைகொலோ? -22-
முந்தி ஓங்கின- (பிராட்டியிடத்தில்) முற்பட்டு வளர்ந்தவை;
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ- மனத்திற்குள் உண்டாகும்
மகிழ்ச்சிப் பூரிப்போ; உந்தி ஓங்கும் ஒளி வளைத்
தோள்கொலோ- தள்ளப்பட்டு மேல் எழும்புகின்ற
ஒளிபொருந்திய வளையலை அணிந்த தோள்களா?; சிந்தி
ஒடு கலை உடைத் தேர்கொலோ- அவிழ்ந்து விலகி
விடுகின்ற ஆடையை அணிந்துள்ள தேர் போன்ற
அல்குல் தடமா?; முலைகொலோ- தனங்களா?
————–
குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;-
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? –23-
கோலப் புருவங்கள் குறித்த- அழகிய புருவங்கள்
வளைந்துள்ளன;கொங்கை கொம்மை வேர் பனித்த – முலைகள்
திரண்டு வியர்வை அரும்பப் பெற்றன; மழலைப் பணிமொழி-
மழலையான இன்சொற்களைப் பேசுமவளாகிய பிராட்டி (இப்போது);
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள்- தான் மனதில்
கருதியது ஒன்றும் சொல்லுவது ஒன்றும் ஆகப் பெற்றாள்; கனித்த
இன்களி- முற்றிய இனிய மகிழ்ச்சியானது; கள்ளினின் காட்டுமோ-
கள்ளுண்டார்க்கு நிகழும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமோ.
———-
அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள் – நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள்.–24-
நெடுமனையின் மாசு துடைத்த மனத்தினாள் – உயர்ந்த
இல்வாழ்க்கையின் குற்றத்தை அறப்போக்கிய சீரிய மனத்தை
உடைய பிராட்டி; அனையள் ஆகி- மேற்சொல்லிய மகிழ்ச்சி
விம்மிதம் உடையவளாகி; அனுமனை நோக்கினாள் – அனுமனைப்
பார்த்தாள்; இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் நினைவு
இலாது நெடிது இருந்தாள்- இத்தகையதான இந்த வார்த்தையைச்
சொல்ல வேண்டும் என்கின்ற நினைவு இல்லாமல் நெடுநேரம்
சும்மா இருந்தாள்.
———-
”யாது இதற்கு ஒன்று இயம்புவல்?” என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ?’ எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: –25-
நீதி வித்தகன்- நீதி வழியில் தவறாது நடக்கும் திறமை
உடைய அனுமன்; (பிராட்டி ஒன்றும் கூறாது இருந்தமை நோக்கி
இதற்குக் காரணம்) இதற்கு யாது ஒன்று இயம்புவல் என்பது-
இந்த அநுமன் வார்த்தைக்கு என்ன பதில் கூறுவேன் என்று; மீது
உயர்ந்த உவகையின் விம்மலோ- மேல் எழுந்த மகிழ்ச்சிப்
பெருக்கினாலா? (அல்லது);தூது பொய்க்கும் என்றோ- (இந்த
அநுமன்) சொல்லிய செய்தி பொய்யாயிருக்கும் என்று கருதியோ?
எனச் சொல்லினான் – என்று சொன்னான்; (அது கேட்ட)
நங்கை நிகழ்த்தினாள்- சீதை பின்வருமாறு சொல்லலானாள்
————–
அனுமனுக்குச் சீதையின் பதில்
9977.
‘மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்,
ஏக்கமுற்று, ”ஒன்று இயம்புவது யாது?” என
நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்:
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? –26-
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்- தனக்கு
மேற்பட்டதொன்றிலாத மகிழ்ச்சிப் பெருக்கினால்; ஏக்கம்
உற்று- (என்ன பேசுவது என்று) திகைப்படைந்து; இயம்புவது
ஒன்று யாது யாது என நோக்கி நோக்கி- சொல்லும்
வார்த்தை இதுவா இதுவா என்று சிந்தித்துச் சிந்தித்து; அரிது
என நொந்துளேன்- மறுமொழி கூறுதல் இயலாது என்று மனம்
வருந்தி யுள்ளேன்; பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ?-
(ஒருவர்க்கு வரும்) நற்பேறு பெரிய மனத்தடுமாற்றத்தையும்
தரவல்லதோ?
———–
‘முன்னை, ”நீக்குவென் மொய் சிறை” என்ற நீ,
பின்னை நீக்கி, உவகையும் பேசினை;
”என்ன பேற்றினை ஈகுவது?” என்பதை
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். –27-
முன்னை- (அநுமனே!) முன்பு; மொய்சிறை நீக்குவென்
என்ற நீ – நெருக்கிடும் அரக்கர் சிறையிலிருந்து உன்னை
விடுவிப்பேன் என்று (தூது வந்த போது) சொல்லிய நீ;
பின்னை நீக்கி உவகையும் பேசினை- இப்பொழுது
சிறையிலிருந்து விடுவித்து மகிழ்ச்சி மேலிட்டு மங்கல
வார்த்தையும் கூறினாய்; என்ன பேற்றினை ஈகுவது
என்பதை உன்னி நோக்கி- (உனக்கு) என்ன பாக்கியத்தைத்
தருவது என்பதை நினைத்துப் பார்த்து (எதுவும் பொருந்தி
வாராமையால்); உரை மறந்து ஒவினேன் – பேச இயலாமல்
செயலற்றேன்.
—————
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும் – தன்மையோய்! –28-
தன்மையோய்! – சிறந்த பண்புகளை உடையவனே!; உலகம்
மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் – (நீ செய்த
உதவிக்குக் கைம்மாறாக) முன்று உலகங்களையும் உதவலாம்
என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை
அறிந்தேன்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனன்-
அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த
தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது
ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும்
– உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.
”தொழவே தகும்” என்னும் பாடம் சிறப்புடையது
—————
‘ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்:
‘யாது செய்வது?” என்று எண்ணி இருந்தனென்:
வேத நல் மணி வேகடம் செய்தன்ன
தூத! என் இனிச் செய் திறம்? சொல்’ என்றாள். –29-
வேத நல் மணி வேகடம் செய்தன்ன தூத-
துளைத்துபயோகிக்கும் நல்ல இரத்தினத்தைச் சாணையிட்டு
மெருகிட்டு துடைத்து வைத்தாற் போன்ற உத்தம குணங்களை
உடைய தூதனாகிய அனுமனே!; ஆதலான் – இக்காரணங்களால்;
ஒன்று உதவுதல் ஆற்றலேன் – பொருத்தமானதொரு பொருளை
உனக்குக் கைம்மாறாகக் கொடுக்க இயலாதவளாக ஆனேன்;
‘யாது செய்வது’ என்று எண்ணி இருந்தனென் – இனி
இவனுக்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்துச் சும்மா
இருந்தேன்; இனிச் செய்திறம் என்? சொல் – இனி நான்
செய்யும் செயல் யாது சொல்வாயாக.
————–
அனுமன் வேண்டுகோளைச் சீதை மறுத்தல்
9981.
‘எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்
மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் –
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? –
புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!’ –30-
எம்பிராட்டி- எம் தலைவியே!; புனக் களிக்குல மாமயில்
போன்றுளாய்- காட்டின்கண் மகிழ்ச்சி மிகுந்த உயர்ந்த
சாதியைச் சேர்ந்த மயிலைப் போன்றவளே!; எனக்கு
அளிக்கும் வரம்- நீ எனக்குக் கொடுத்தருளும் வரமானது;
நின் மனக்களிக்கு மற்று உன்னை அம்மானவன் தனக்கு
அளிக்கும் பணியினும் தக்கதோ?- உன்னுடைய
மனமகிழ்ச்சிக்கேற்ப உன்னை அப்பெருமை படைத்த
இராமபிரானிடத்தில் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும்
சிறந்ததான வேறு ஒன்று இருக்கிறதா?
————-
என உரைத்தது, ‘திரிசடையாள், எம் மோய்!
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்
தனை ஒழித்து, இவ் அரக்கியர்தங்களை
வினையினில் சுட வேண்டுவென், யான்’ என்றான்.–31-
என உரைத்து- என்று (அனுமன்) சொல்லி (மேலும்);
எம்மோய்- எமது தாயே!; யான் மனவினில் சுடர் மாமுக
மாட்சியாள் திரிசடையாள் தனை ஒழித்து- நன்மணிக்கற்கள்
போல ஒளிவிடும் முகமலர்ந்த தோற்றமுடையாளாகிய திரிசடை
நீங்கலாக; இவ்வரக்கியர் தங்களை- (உங்களைப் பயமுறுத்தித்
துன்பம் செய்த) இந்த அரக்கியர்களை; வினையினில் சுட
வேண்டுவன் – கொடிய செயலால் சுட்டெரிக்க விரும்புகிறேன்.
—————
‘உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, ”விழுங்குவம்” என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி’ என்னுமால். –32-
உன்னை உரை அலா உரை உரைத்து- உன்னைச்
சொலத்தகாத வார்த்தைகளால் வைது; விரைய ஓடி உராய
விழுங்குவம் என்றுளர் – வேகமாக ஓடிவந்து மேல் விழுந்து
உன்னை விழுங்கிவிடுவோம் என்றுள்ளவர்களாகிய இவ்வரக்கியரது;
வரைசெய் மேனியை- மலை போன்ற உடம்பை; வள் உகிரால்
பிளந்து- வளவிய என் கை நகத்தால் பிளந்து; மறலிக்கு இரை
செய்வேன் இனி- யமனுக்கு இரையாக ஆக்குவேன் இனிமேல்;
என்னும் – என்று சொல்லுவான்.
————–
குடல் குறைத்து, குருதி குடித்து, இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவேன்’ என்றலும்,
அடல் அரக்கியர், ‘அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச் சரண்’ என்று விளம்பலும்.–33
இவர் – இவ் வரக்கியரது; குடல் குறைத்து- குடலை வெட்டி;
குருதி குடித்து- இரத்தத்தைக் குடித்து; உடல் முருக்கியிட்டு
உண்குவேன் – உடலைத் துண்டாக்கி உண்பேன்; என்றலும்-
என்று அனுமன் கூறிய அளவில்; அடல் அரக்கியர்- வலிமை
படைத்த அரக்கிமார்கள்; அன்னை- தாயே!; நின் பாதமே
மெய்ச்சரண் – நின்னுடைய திருவடிகளே எங்களுக்கு உண்மையான
புகலிடம்; விடலம்- விடமாட்டோம்; என்று விளம்பலும்-
என்று சொல்லுதலும்.
———–
அன்னை, ‘அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்’ எனா,
மன்னும் மாருதி மா முகம் நோக்கி, ‘வேறு
என்ன தீமை இவர் இழைத்தார், அவன்
சொன்ன சொல்லினது அல்லது? – தூய்மையோய்!–34-
அன்னை- தாயாகிய பிராட்டி; நீர் அஞ்சன்மின்
அஞ்சன்மின் எனா- (அரக்கியர்களைப் பார்த்து) நீங்கள்
பயப்படாதீர்கள் என்று சொல்லி; மன்னும் மாருதி மாமுகம்
நோக்கி- நிலைபெற்ற அனுமனது சீரிய முகத்தைப் பார்த்து;
தூய்மையோய்- பரிசுத்தமானவனே; இவர் – இவ் வரக்கியர்;
அவன் சொன்ன சொல்லினது அல்லது- அந்த இராவணன்
ஏவிய சொற்களைச் சொன்னது அல்லாமல்; என்ன தீமை
இழைத்தார் – (தாமாக) என்ன தீமையை எனக்குச
செய்தார்கள்? (என்று கேட்டாள்)
————-
‘யான் இழைத்த வினையினின் இவ் இடர் –
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!–35-
தாயினும் அன்பினோய்- தாயைக் காட்டிலும் என்பால்
அன்புடையவனே!; புந்தியோய்- அறிவாற்றலிற் சிறந்தவனே!;
இவ் இடர்தான் யான் இழைத்த வினையினின் தான் அடுத்தது-
இச் சிறைத்துன்பம் யான் செய்த தீவினை காரணமாக எனக்கு
வந்து சேர்ந்தது; இவர்- இவ் வரக்கியர்; கூனியின்
கொடியார் அலரே- கூனியை விடக் கொடியவர்கள அல்லர்
அல்லவா; போன அப்பொருள் போற்றலை- நடந்து முடிந்த
அந்நிகழ்ச்சிகளை மனத்திற் கொள்ளாதே (என்றான்.)
தானே திட்டமிட்டுச் செய்தவள் கூனி. அவளையே வாழ
விட்டுள்ளபோது இராவணன் சொன்னதைச் செய்த இவர்கள் மேல்
கோபிக்கலாகுமோ என்றாளாம்.
————
எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல்!’ என்றனள் – மா மதி
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள்.–36-
மாமதி தனக்கு மாமறு தந்த முகத்தினாள் – சிறந்த
சந்திரனுக்கு பெரிய களங்கத்தைக் கொடுத்து கீழப்படுத்திய
முகம் உடையவளாகிய சீதை (அனுமனைப் பார்த்து);நீ எனக்கு
இவ்வரம் அருள்- நீ எனக்கு இந்த வரத்தைத் தருதல்
வேண்டும்; தீ வினை தனக்கு வாழ்விடம் ஆய அழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள்- கொடு வினைகளுக்குத்
தங்குமிடமாகிய கொடிய இவ்வரக்கியர்களது மனத்துக்குத்
துன்பம் செய்யாதே என்று கேட்டுக் கொண்டாள்.
———-
இராமன் வீடணனைச் சீதையை அழைத்து வருக எனல்
9988.
என்ற போதின், இறைஞ்சினன், ‘எம்பிரான்
தன் துணைப் பெருந் தேவி தயா’ எனா
நின்ற காலை, நெடியவன், ‘வீடண!
சென்று தா, நம தேவியை, சீரொடும்.–37-
என்ற போதின்- என்று பிராட்டி கூறிய அளவில் (அனுமன்);
‘எம்பிரான் தன் துணைப் பெருந்தேவி தயா’ எனா-
இராமபிரானது ஒப்பற்ற பெருந்தேவியாகிய பிராட்டியின்
ஒப்பற்ற கருணை (இருந்தவாறு என்னே) என்று சொல்லி;
இறைஞ்சினன் நின்ற காலை- வணங்கி நின்ற பொழுது;
நெடியவன்- (அங்கே) இராமபிரான்; வீடண! – வீடணனே!; நம்
தேவியை – நம்முடைய பிராட்டியை; சென்று சீரொடும்தா-
சென்று சிறப்போடும் அழைத்து வருக;
————-
என்னும் காலை, இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும் காலைக் கொணர்தி’ என்று ஓத, அப்
பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். –38-
என்னும் காலை- என்று இராமன் கட்டளையிட்ட போது;இருளும்
வெயிலும் – உடம்பால் காரிருளும், அணிகலன்களால் பகல் ஒளியும்
உடையனாய்; கார் மின்னும் காலை இயற்கைய வீடணன் – மேகம்
மின்னும் பொழுதுண்டாம் தன்மை படைத்த வீடணன்; உன்னும்
காலைக் கொணர்தி என்று ஓத- நினைக்குமாத்திரத்தே அழைத்துக்
கொண்டு வருக என்று இராமன் சொல்ல; போந்துளான் – உடனே
அசோக வனத்துக்கு வந்து சேர்ந்து; அப்பொன்னின் கால் தளிர்
துடினன்- அந்த சீதாப் பிராட்டியின் திருவடித் துளிர்களைத்
தலைமேற் சூடி வணங்கினான்.
——–
வீடணன் பிராட்டியிடம் கூறல்
9990.
‘வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் நின்னைக
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
”பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் போக்கி,
ஈண்டக் கொண்டு அணைதி” என்றான்; எழுந்தருள், இறைவி!’ என்றான்.–39-
இறைவி- தலைவியே! வேண்டிற்று முடிந்தது அன்றே- நீ
விரும்பியது நிறைவேறி விட்டது அல்லவா; வேதியர் தேவன்
நின்னைக் காண்டற்கு விரும்புகின்றான் – வேத பாரகர்களாகிய
முனிவர்களின் வழிபடுகடவுளாகிய இராமபிரான் உன்னைக்
காண்பதற்கு மிகவும் ஆசைப்படுகின்றான்; உம்பரும் காண வந்தார்
– (நீங்கள் இருவரும் ஒன்று சேரும் காட்சியைத்) தேவர்களும்
காண்பதற்குக் குழுமியுள்ளார்கள்; பூண்தக்க கோலம் வல்லை
புனைந்தனை- அணிதற்குத் தகுதியான அலங்காரங்களை
விரைவாகச் செய்வித்துக் கொண்டு; வருத்தம் போக்கி-
பிரிவினால் உளதாகிய துன்பமெலிவை அகலச் செய்து; ஈண்ட
கொண்டு அணைதி- இங்கே விரைவாக அழைத்துக் கொண்டு
வருவாயாக; என்றான்- என்று இராமபிரான் கட்டளையிட்டான்;
எழுந்தருள் – புறப்படுவாயாக; என்றான் – என்று சொன்னான். (வீடணன்)
————-
பிராட்டி வீடணனுக்கு உரைத்தல்
9991.
‘யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது அன்று – வீர!’ –40-
வீர! – வீடணனே!;யான் இவண் இருந்த தன்மை- நான் இந்த
இலங்கையில் அசோக வனச் சிறையில் இருந்த இயல்பினை; இமையவர்
குழுவும்- தேவர்கள் கூட்டமும்; எங்கள் கோனும்- எம் தலைவனாகிய
இராமனும்; அம் முனிவர் தங்கள் கூட்டமும்- அங்குள்ள
முனிவர்களுடைய குழுவும்; குலத்துக்கு ஏற்ற வான் உயர் கற்பின்
மாதர் ஈட்டமும்- தம் குலத்துக்கு ஏற்றவாறு மிக உயர்ந்த கற்பின்
மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்; காண்டல்- பார்த்தலே; மாட்சி- சிறப்புடையதாகும்; மேல் நிலை- இதன் மேலாகிய நிலைமை உடைய;
கோலம் கோடல்- அலங்கரித்துக் கொண்டு வருதல்; விழுமியது
அன்று- சிறந்தது அன்று.
——————
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், ‘நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு இது’ என்றான்;
‘நன்று’ என நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை முதலோர், –41-
என்றனள் இறைவி- என்று சொன்னாள் சீதை; கேட்ட
இராக்கதர்க்கு இறைவன்- அது கேட்ட அரக்க அரசனாகிய
வீடணன்; ‘நீலக் குன்று அன தோளினான்தன் பணியினின்
குறிப்பு இது’ என்றான்- நீலமலை போன்ற தோள்களை உடைய
இராமபிரானது கட்டளையின் குறிப்பு இக்கோலம் கோடல் என்று
சொன்னான்; நங்கை – அது கேட்ட பிராட்டி; நன்று என
நேர்ந்தாள் – நல்லதே என்று அதனை உடன்பட்டாள்; (உடனே);
வான நாட்டுத் திலோத்தமை முதலோர் – தேவர் உலகத்துள்ள
திலோத்தமை முதலாகிய தெய்வமகளிர்;சேர- ஒன்றாக; நாயகக்
கோலம் கொள்ள சென்றனர் – பிராட்டி அழகிய மேன்மையான
அலங்காரம் செய்து கொள்ள வேண்டி அவள்பால் சென்றனர்.சேர.
————
தேவ மாதர்கள் சீதைக்குச் செய்த அலங்காரம்
9993.
‘மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார்.–42-
மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி -; வேறும் உள்ள வானக
நாட்டு மாதர் யாவரும்- என்று பலவாக உள்ள தேவலோகப் பெண்கள்
எல்லாரும்; மஞ்சனத்துக்கு ஏற்ற – பிராட்டியின் அபிடேகத்துக்குப்
பொருத்தமான; நானநெய் ஊட்டப்பட்ட நவை இல கலவை தாங்கி-
கஸ்தூரிப் புழுகு தீற்றப்பட்டுச் செய்த குற்றம் இல்லாத கலவைச்
சாந்தைக் கையில் ஏந்திக் கொண்டு; போனகம் துறந்த தையல்-
(இலங்கைச் சிறையில் இருந்த காலம் எல்லாம்); உணவைத் துறந்து
விரதம் இருந்த பிராட்டியின், மருங்கு உற நெருங்கிப் புக்கார்-
பக்கத்தில் பொருந்த நெருக்கமாக வந்து சேர்ந்தனர்.
—————
காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை, அரம்பை, மெல்ல, விரல் முறை சுகிர்ந்து விட்டாள்.–43-
அரம்பை – தேவமாதர்களுள் அரம்பை என்பவள்; பெண்மைக்கு
எல்லாம் காணியை – பெண்களின் பெண்மைக் குணங்களுக்கு
விளைநிலம் எனத்தக்க பிராட்டியை; கற்பினுக்கு அணியை-
கற்பு என்னும் நற்பண்புக்கு மேலும் அழகு செய்பவளாய சானகியை;
பொற்பின் ஆணியை – அழகிற்கு உரையாணி போன்ற திருமகளை;
அமிழ்தின் வந்த அமிழ்தினை – திருப்பாற்கடலில் அமிழ்தத்துடன்
தோன்றிய அமுதம் போன்ற செந்திருவை; அறத்தின் தாயை- அறத்தை
வளர்க்கும் அன்னையாகிய பிராட்டியை; வேணியை- கூந்தலை; மெல்ல-
மெதுவாக; சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன்
என்ன – மிக உயர்ந்த வேதங்களை எல்லாம் பிரித்து வகுத்தருளிய
திருமால்போல; விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – விரல்களால்
ஒழுங்காக சிக்கெடுத்து பிரித்து சீர்செய்தாள்.
————–
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி, ஆட்டினர், உம்பர் மாதர். –44-
உம்பர் மாதர் – தேவப் பெண்கள்; பாகு அடர்ந்து-
சர்க்கரைப் பாகினை ஒத்த இன்சுவை நெருங்கி; அமுது
பில்கும் – இன்சொற்களை வெளியிடும்;பவள வாய் – பவளம்
போன்ற சிவந்த வாயின்கண் உள்ள; தரளப்பத்தி- முத்து போன்ற
பல்வரிசைகளை; சேகு அற விளக்கி- வைரமாகப் பிடித்த மாசு
நீங்க சுத்தம் செய்து; நானம் தீட்டி- வாசனைச சாந்தைப் பூசி;
மண் சேர்ந்த காசை வேகடம் செய்யுமா போல்- மண்ணிற்
படிந்து மங்கிப் போன இரத்தினத்தை சாணையிட்டுச் சுத்தம்
செய்து ஒளிவீசச் செய்வது போல; மஞ்சன விதியின் – நீராடுதற்குரிய
விதிமுறைகளின் படி; வேதத்து ஓகை மங்கலங்கள் பாடி-
வேதநூலிற் கூறிய வண்ணம் மகிழ்ச்சிக்குரிய மங்களமான
பாடல்களைப் பாடி; ஆட்டினர் – நீராட்டினார்கள்.
————–
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டதென்ன
மரு விளை கலவை ஊட்டி, குங்குமம் முலையின் ஆட்டி,
கருவிளை மலரின் காட்சிக் காசு அறு தூசு, காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் சேர்த்தார்.–45-
உரு விளை பவள வல்லி நுரை உண்டது என்ன-
அழகிற் சிறந்த பவளக் கொடி பால் நுரையால் மூடப்பெற்றது
போலும் என்று சொல்லும்படி; மரு விளை கலவை ஊட்டி-
(மேனி எல்லாம்) மணம் நிரம்பிய (வெள்ளிய) கலவைச் சாந்தை
மறையும்படி பூசி; குங்குமம் முலையின் ஆட்டி- குங்குமக்
குழம்பை முலை முழுக அப்பி; கருவிளை மலரின் காட்சிக்காசு
அறு தூசு- கருவிள மலர் போன்ற காணற்கினிய குற்றமற்ற
பொன்னாடையோடு; காமன் திரு விளை அல்குற்கு ஏற்ப
மேகலை- மன்மதனது செல்வம் விளங்கும் அல்குலைத் தாங்கும்
இடைக்குப் பொருத்தமாக மேகலை என்னும ஆபரணமும்; தழுவச
சேர்த்தார் – பொருந்தித் தழுவும்படி அணிவித்தார்.
———–
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம் பூண்
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தேம் பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து, காப்பும் இட்டார்.–46-
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன- இந்திரனது மனைவியான
இந்திராணிக்குப் பொருத்தமாக உரிய; சந்திரன் தேவிமாரின்
தகை உறு தரளப் பைம் பூண் – சந்திரனது மனைவிமார்களாகிய
நக்ஷத்திரங்களைப் போன்ற அழகு மிக்க முத்துக்களால் ஆகிய
பசும்பொன்னணியை; பூட்டி- அணிவித்து; யாணர்ச் சிந்துரப்
பவளச் செவ்வாய் – புதிய சிந்தூரம் போலவும் பவழம் போலவும்
சிவந்த வாயில்; தேம் பசும் பாகு தீற்றி- இனிய பசிய பாக்குடன்
கூடிய தாம்பூல காரத்தை உண்பித்து; மந்திரத்து அயினி நீரால்
வலம் செய்து- மந்திரத்தோடு கூடிய ஆலத்தி நீரால் சுழற்றி;
காப்பும் இட்டார் – பின் அதனால் நெற்றிக் காப்பும் இட்டார்கள்.
————
வீடணன் சீதையை அழைத்து வருதல்
9998.
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட,
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளிச் சென்றான்.–47-
அண்ணல் வீடணன் – தலைமையான வீடணன் (பிராட்டியை);
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன-வட்டமான சந்திரன் நடுவே மான் இருப்பதைப் போல;
கொண்டனர் மானம் ஏற்றி- அழைத்துக் கொண்டு
வந்தவர்களாய் விமானத்தில் ஏற்றி வைத்து; வான
மடந்தையர் தொடர்ந்து கூட- தேவப் பெண்கள் பின் பற்றி
உடன் வர; உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறம்
சூழ்ந்து ஓட- உருண்ட வடிவமைப்புடைய குரக்கு வீரரும்
ஒளிபடைத்த வாள் ஏந்திய அரக்கரும் புறத்தே சுற்றிக்
கொண்டு ஓடிவர; அண்டர் நாயகன் பால் – தேவதேவனாகிய
இராமபிரானிடத்து; அருளின் சென்றான்- அவன்
கட்டளையிட்டருளியபடி சென்று சேர்ந்தான்.
————–
இப் புறத்து இமையவர், முனிவர் ஏழையர்,
துப்பு உறச் சிவந்த வாய் விஞ்சைத் தோகையர்,
முப் புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்,
ஒப்புறக் குவிந்தனர், ஓகை கூறுவார். –48-
இப்புறத்து- இராமன் இருக்கும் இவ்விடத்து; இமையவர்
முனிவர் ஏழையர்- தேவர்கள், முனிவர்கள் பெண்கள்; துப்பு
உற சிவந்த வாய் விஞ்சைத் தோகையர் – பவளம் போற்
சிவந்த வாயினை உடைய வித்தியாதரப் பெண்கள்; முப்புறத்து
உலகினும் எண்ணில் முற்றினோர்- மூவுலகங்களினும்
மதிக்கற்பாட்டில் உயர்ந்தவர்கள் எல்லாரும்; ஓகை கூறுவார்
– மகிழ்ச்சி வார்த்தைகளைச் சொல்பவர்களாய்; ஒப்புறக்
குவிந்தனர் – தம்முள் வேறுபாடில்லாது ஒத்த தன்மையராய்த்
திரண்டார்கள்.
——————-
10000.
அருங் குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்,
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்,
நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால்,
கருங் கடல் முழக்கு எனப் பிறந்த, கம்பலை–49-
அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் – அரிய
உயர்ந்த குலத்தில் தோன்றிக் கற்புக்கு அணிகலமாக விளங்கும்
பிராட்டியை (அனைவரும்) அணுகினார்கள்; மருங்கு பின் முன்
செல வழி இன்று என்னலாய் நெருங்கினர் – (பிராட்டி
விமானத்தின்) பக்கவாட்டிலும் பின்னும் முன்னும் செல்லுவதற்கு
வழி இல்லை என்று சொல்லும் படி நெருங்கினார்கள்; நெருங்குழி
– அவ்வாறு சூழ்ந்து நெருங்கிய பொழுது;நிருதர் ஓச்சலால்-
(வழிவிலகிச் செல்ல வேண்டி); அரக்க காவலர் (பிரம்பை) வீசி
விரட்டுதலால்; கம்பலை- கூக்குரல் ஒலி; கருங்கடல் முழக்கு
எனப் பிறந்த- கரிய கடலின் அலையொலி போலப் பேரளவினதாக
உண்டாயிற்று.
———–
அவ் வழி இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம்கொடு செயிர்த்து நோக்குறா,
‘இவ் ஒலி யாவது?’ என்று இயம்ப, இற்று எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. –50-
அவ்வழி- அவ்விடத்து; இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம் கொடு- மலர்ந்திருக்கின்ற தாமரையின்
அழகைத் தன்னிடத்தே கொண்ட ஒளிபடைத்த தன் திருமுகம்
கொண்டு; செயிர்த்து நோக்குறா- கோபித்துப் பார்த்து;
‘இவ் ஒலி யாவது என்று இயம்ப- இந்தப் பேரொலி எதனால்
விளைந்தது என்று (அருகில் உள்ளாரைக்) கேட்க; கவ்வை இல்
முனிவரர் – துன்பமற்ற முனிவர்கள்; கழறினார் – இன்னது
என்று எடுத்துரைத்தார்கள்.
————
இராமன் வீடணனைக் கடிதல்
10002.
முனிவரர் வாசகம் கேட்புறாதமுன்,
நனி இதழ் துடித்திட நகைத்து, வீடணன் –
தனை எழ நோக்கி, ‘நீ, தகாத செய்தியோ,
புனித நூல் கற்று உணர் புந்தியோய்?’ என்றான். -51-
முனிவரர் வாசகம் கேட்புறாத முன் – முனிவர்கள் சொல்லிய
வார்த்தை காதில் விழுவதற்கு முன்பாகவே விரைந்து; இதழ் நனி
துடித்திட நகைத்து- அதரங்கள் மிகவும் துடிக்கும்படியாக
வெடிபடச் சிரித்து; வீடணன் தனை எழ நோக்கி- வீடணனை
நன்றாக அழுந்தப் பார்த்து; புனித நூல் கற்று உணர்
புந்தியோய்!- தூய்மையான மெய்யுணர் நூல்களை எல்லாம்
கற்றறிந்த ஞானவானே!; நீ தகாத செய்தியோ- நீ
தகுதிக்கேலாத செயல்களைச் செய்யலாமா?; என்றான்-.
———–
‘கடுந் திறல் அமர்க் களம் காணும் ஆசையால்,
நெடுந் திசைத் தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அடைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? – கருது நூல் வலாய்! -52-
கருது நூல் வலாய்- உணரப்படும் சாஸ்திரங்களில் வல்ல
வீடணனே!; நெடுந்திசைத் தேவரும் நின்ற யாவரும்- நெடிய
திக்குப் பாலகர்களாய தேவர்களும் மற்றும் ஆங்காங்கே
நின்றிருந்த எல்லாரும்; கடுந்திறல் அமர்க்களம் காணும்
ஆசையால் – கொடிய வலிமையோடு போர் நடந்த இடத்தைப்
பார்க்கும் விருப்பம் காரணமாக; அடைந்தனர் – நெருங்கித்
திரண்டுள்ளனர்; உவகையின் அடைகின்றார்களைக் கடிந்திட
யார் சொனார் – மகிழ்ச்சியால் அருகே வந்து சேர்ந்தவர்களை
அடித்து விரட்டும்படி யார் உத்தரவிட்டார்கள்.
————-
‘பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து – அண்ணல்,
அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ?
கரை செயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசுறின், விலக்குவாரோ? வேறு உலார்க்கு என்கொல்? – வீர!–53-
வீர- வீடணனே!; பரசு உடைக் கடவுள் – பரசு என்னும் மழு
ஆயுதத்தை உடைய கடவுளாகிய சிவபெருமான்; நேமிப் பண்ணவன் – சக்கராயுதத்தை ஏந்திய பரமனாகிய திருமால்;
பதுமத்து அண்ணல்- தாமரை மலரில் வீற்றிருக்கின்ற
பிரமதேவன் ஆகிய முப்பெருங்கடவுளரும்; அரசுடைத் தெரிவை
மாரை இன்றியே அமைவது உண்டோ?- தலைமைத் தன்மையுடைய
பட்டத்தரசிகளாகிய தம் மனைவியரை இல்லாமல் வருவது
உண்டா?; கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து
காண்பான் விரசுறின்- கணக்கிட முடியாத தேவர்களும்
மற்றவர்களும் தத்தம் மனைவியருடன் கலந்து போர்க்களக்
காட்சியையும் பிராட்டியையும் காண்பதற்காக நெருங்கி
வந்தால்; விலக்குவாரோ- தள்ளி அகற்றுவார்களா?;
வேறுளார்க்கு என்கொல்- இத்தகைய மேலோர்களுக்கே
கூட்டத்தில் தள்ளப்படும் நிலை இருக்குமானால் மற்ற
சாதாரணமானவர்கள் கதி என்ன ஆகும்?
——-
‘ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும், இன்னே
சாதுகை மாந்தர்தம்மைத் தடுப்பது’ என்று அருளி, செங் கண்
வேதநாயகன்தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன்.–54-
அரக்கர் கோவே! – அரக்கர்களுக்கு அரசனாகிய வீடணனே!;
ஆதலான் – ஆகையினால்; இன்னே சாதுகை மாந்தர் தம்மைத்
தடுப்பது- இவ்வாறு ஒரு தவற்றிலும் படாத சாமானிய சாது
மனிதர்களை அடித்து விரட்டுவது; உனக்கும் அடுப்பது அன்று-
உனக்கும் பொருந்துவது அன்று; என்று அருளி- என்று இவ்வாறு
சொல்லியருளி; செங்கண் வேதநாயகன்தான் நிற்ப- சிவந்த
கண்களையுடைய வேதத் தலைவனாகிய இராமன் நிற்ப; குணங்கள்
தூயோன்- குணங்களால் பரிசுத்தமானவனாகிய வீடணன் (அது
கேட்டு); அலக்கண் எய்தி- துன்பம் அடைந்து; வெய்து
உயிர்த்து- பெருமூச்சு விட்டு; கோது இலா மனனும் மெய்யும்
குலைந்தனன்- குற்றமற்ற மனமும் உடம்பும் நிலைதடுமாறப் பெற்றான்.
————–
இராமனைக் கண்ட சீதை அனுமனை நன்கு மதித்தல்
10006.
அருந்ததி அனைய நங்கை அமர்க் களம் அணுகி,
ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப் பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி
நோக்கி,
கருந் தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய
சொன்னாள்;
அருந்ததி அனைய நங்கை அமர்க்களம் அணுகி- அருந்ததியை
ஒத்த கற்பின் செல்வியாகிய சீதை போர்க்களத்தை நெருங்கி; ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப்பிணி தீருமாறு- ஆடுகின்ற
பருந்தும் கழுகும் பேயும் பசிநோய் நீங்கும்படி; விருந்து இடு
வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி – அவைகளுக்கு
உணவு புதிதாகத் தருகின்ற வில்லினால விளைக்கும் போராற்றலிற
சிறந்த இராமனது போர்க்காட்சிக கோலத்தை விரும்பிப் பார்த்து;
கருந்தடங்கண்ணும் நெஞ்சும களித்திட- கரிய அகன்ற கண்களும்
மனமும் உவகை ஏற; இனைய சொன்னாள் – பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானாள்;
———
சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் கற்பு?’ என்றாள். –56-
சீலமும் காட்டி- என்னுடைய கற்பொழுக்கத்தையும் என்
கணவற்குக் காண்பித்து; என் கணவன் சேவகக் கோலமும் காட்டி
– என் கணவனாகிய அப்பிரானது போர்க்கோலக் காட்சியையும்
யான் பார்க்கும்படிச் செய்து; என் குலமும் காட்டி- நான்
பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் நிலைநிறுத்தி; இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு- இவ்வுலகத்தையும் இராவணனால்
அழியாதபடி நிலைநிறுத்திய இவ்வனுமனாகிய குரங்குக்கு; என்
கற்பு- என் கற்பானது; நாள் அறாக் காலமும் காட்டுங்கொல்
– நாள் இடையற்றுப் போகாமல் என்றும் வாழ்வதாகிய
சிரஞ்சீவித் தன்மையையும் தருமோ?; என்றாள்- .
————–
‘எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை’ என்பது ஓர் நவைஇலாள் எதிர்,
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச் சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். –57-
என் உடல் எச்சில் உயிர் ஏகிற்றே- இராவணன்
கொணர்ந்து சிறை வைத்ததால் என் உடல் தூய்மை இழந்தது;
உயிர் எப்பொழுதோ போய்விட்டது; நச்சு இனி இலை-
விருப்பம் என்பது எதுவும் இனி எனக்கு இல்லை; என்பது ஓர்
நவைஇலாள் – என்று (சிறையிருந்த போது) சொல்லிக்
கொண்டிருந்தவளாகிய ஒரு குற்றமும் அற்ற பிராட்டி; பச்சிலை
வண்ணமும் பவள வாயுமாய்க் கைச்சிலை ஏந்தி நின்றானை-
பச்சிலை போன்ற திருமேனி நிறத்தையும் பவளம் போன்ற சிவந்த
திருவாயையும் உடையனாய்க் கையில் கோதண்டம் தாங்கி நின்ற
பெருமானை; எதிர் கண்ணுற்றாள் – எதிரே பார்த்தாள்.
————
சீதை இராமனைத் தொழுதலும் இராமன் சீதையைக் காணுதலும்
10009.
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்,
போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற, அவனி எய்தினாள். –58-
மானமீது அரம்பையர் சூழ வந்துளாள் – விமானத்தின் மேல்
தெய்வ மகளிர் சுற்றியிருப்ப வந்தவளாகிய பிராட்டி;போன பேர்
உயிரினைக் கண்ட பொய் உடல்தான் அது கவர்வுறும் தன்மைத்து
ஆம் எனல் – தன்னை விட்டுப் பிரிந்து போன பெரிய
உயிரைப் பார்த்த உயிரற்ற பொய் உடலானது அந்த உயிரைக்
கவர்கின்ற தன்மை என்பதை; ஆனனம் காட்டுற அவனி
எய்தினாள் – தன் முகமானது காட்டி நிற்க பூமியில் இறங்கினாள்.
————-
பிறப்பினும் துணைவனை, பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை, தொழுது, ‘நான் இனி
மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று” என ஏக்கம் நீங்கினாள். –59-
பிறப்பினும் துணைவனை- எப்பிறப்பு எடுத்தாலும்
பிறவிதோறும் துணையாக வருகின்றவனை; பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை- பிறவி என்கிற பெருந்துன்பத்தை
விட்டுப் பரமபதம் எய்தினாலும் அங்கேயும் இவ்வுயிர்க்குத்
துணையாக இருக்கின்ற நாயகனை;தொழுது- வணங்கி; நான் இனி
மறப்பினும் நன்று- (என் ஆசை நிறைவேறிவிட்டது ஆதலின்)
நான் இனிமேல் அப்பெருமானை மறந்து விட்டாலும் நல்லதே; என
ஏக்கம் நீங்கினாள் – என்று சொல்லி மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றாள்.
————–
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். –60-
அத் தலைவனும்- அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்;
கற்பினுக்கு அரசினை- கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக
உள்ளவளை; பெண்மைக் காப்பினை- பெண்மைக் குணங்களுக்கு
வாழ்விடமாக உள்ளவளை; பொற்பினுக்கு அழகினை- அழகிற்கு
அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை-
புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; தன்
பிரிந்து அருள்புரி தருமம் போலியை- தனி நாயகனாகிய
தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; அற்பின்- அன்பினால்; அமைய
நோக்கினான் – நன்றாகப் பார்த்தான்.
————–
இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்
10012.
சுணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு வார்வுற,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா. –61-
சுணங்கு உறா துணை முலை முன்றில் தூங்கிய- தேமல்
பொருந்திய இரண்டாகிய முலைப் பரப்பில் சோர்ந்த; அணங்கு
உறு நெடுங்கண் நீர் ஆறு வார்வுற- வருத்தமிகுதியால் உளதான
நீண்ட கண்ணீறாறு ஒழுக; வணங்கு இயல் மயிலினை- வணங்கும்
தன்மை உடைய மயில் போல்வாளை; கற்பின் வாழ்வினை-
கற்பு நிலைபெற்று வாழக் காரணமானவளாகிய பிராட்டியை; பணம்
கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா- படம் எடுத்துச்
சீறுகின்ற பாம்பைப் போலச் சினந்து பார்த்து.
—————-
10013.
‘ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ”எனை விரும்பும்”என்பதோ?–62-
ஊண் திறம் உவந்தனை- அரக்கர் ஊரில் உணவு வகைகளை
உண்ண விரும்பி நெடுநாள் இருந்தாய்; ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை- ஒழுக்கம் அழிந்து போகும்படி சாகாமல் உயிருடன்
இருந்தாய்; முறை திறம்பு அரக்கன் மாநகர ஆண்டு உறைந்து
அடங்கினை- நீதிநெறியும் அறமுறையும் திறம்பிய அரக்கனது
இலங்கை நகரில் நெடுநாள் தங்கி அவனுக்கு அடங்கியிருந்தாய்;
அச்சம் தீர்ந்து இவண் மீண்டது என் நினைவு?- பயம்
இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது திரும்பி வந்தது எது
கருதி? ‘எனை விரும்பும்’ என்பதோ? – ‘என்னை இராமன்
விரும்புவான்’ என்பது உன் நினைவா?
———–
‘உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர்அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். –63-
உன்னை மீட்பான் பொருட்டு- உன்னைச் சிறையிலிருந்து
மீட்பதற்காக; உவரி தூர்த்து- கடலை அணைகட்டி அடைத்து;
ஒளிர் மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற-
பிரகாசிக்கின்ற மின்னலைத் தோற்கடிக்கும் படைகளை உடைய
அரக்கர்கள் அடியோடு அழியும்படி;பின்னை மீட்டு- பிறகும்
மேலும் போர் செய்து மீளச்செய்து;உறு பகை கடந்திலேன்-
மிக்க அரக்கர் பகையை வென்றேனில்லை (பின் எதற்காக
என்றால்); என்னை பிழை மீட்பான் பொருட்டு இலங்கை
எய்தினேன்- என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ள
இலங்கையை அடைந்தேன்.
———–
‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை – வெறுமை நீங்கினாய்! –64-
வெறுமை நீங்கினாய் – இல்லாமையை இல்லாதவளே!;
மருந்தினும் இனிய- தேவர் அமுதினும் இனியதாகிய; மன்
உயிரின் வான்தசை அருந்தினையே- பிராணிகளின்
புலால்களைப் புசித்தாயல்லையோ; நறவு அமைய உண்டியே-
கள்ளை நன்கு உண்டாயல்லையோ; இனி இருந்தனையே-
இவ்வளவான பிறகும் உயிரோடு இருக்கின்றாயல்லையோ;
ஏற்பன விருந்து எமக்கும் உளவோ உரை- பொருத்தமான
விருந்துணவு எனக்கும் இருக்கின்றனவா? சொல்வாயாக.
————-
‘கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மை சால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்அரோ. –65-
கலத்தினின் பிறந்த மாமணியின் காந்துறு நலத்தின்
நிற் பிறந்தன நடந்த- ஆபரணங்களிற் பதிக்கப்படும்
இரத்தினம் போலப் பிரகாசிக்கின்ற நன்மையோடு பொருந்திய
குணம் செயல்களாய் நின்னிடம் முன்பு உள்ளனவாய அவை
இப்பொழுது போயின; நன்மை சால் குலத்தினில்
பிறந்திலை- மேன்மையுடைய உயர்குலத்தில் பிறந்தவளாய்
நடந்து கொள்ளவில்லை; கோள் இல் கீடம் போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்- குறிக்கோள் இல்லாத
புழுவைப் போல் மண்ணில் பிறந்தாய் என்பதை நிரூபித்து
விட்டாய்.
—————-
‘பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். –66-
பெண்மையும் – பெண்மைக் குணங்களும்; பெருமையும்-
பெருமையாகிய குன்றாச் சிறப்பும்; பிறப்பும் – நற்குடிப்
பிறப்பும் கற்பு எனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும்
சீர்மையும்; உண்மையும் – கற்பு என்கின்ற வலிமையும் சீரிய
ஒழுக்கமும், அறிவுத்தெளிவும், மேன்மையும், சத்தியமும் ஆகிய
எல்லாம்; நீ எனும் ஒருத்தி தோன்றலால் – சீதை என்னும்
நீ ஒருத்தி தோன்றியபடியால்; வண்மை இல் மன்னவன் புகழின்
மாய்ந்த- கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் கெடுவது
போல அடியோடு அழிந்தன.
————-
அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும் – குலத்தின் தோகைமார். –67-
குலத்தின் தோகைமார் – நற்குலத்தில் பிறந்த பெண்கள்;
ஐம்புலன்களை அடைப்பர் – (தம் கணவரைப் பிரிந்த காலத்து)
ஐம்புலன்களையும் பொறிவழிச் செல்லாது தடுத்து நிறுத்துவர்;
ஒழுக்கம் ஆணியா – ஒழுக்கத்தைப் பாதுகாத்தலே உறுதியாகக்
கொண்டு; சடைப்பரம் புனைந்து – கூந்தலை அலங்கரியாது
சடையாகிய சுமையாகக் கொண்டு;ஒளிர் தகையின் மாதவம்
படைப்பர் – விளங்கும் அழகோடு பெருந்தவம் செய்வர்; வந்து
இடை ஒரு பழி வந்தால் – எதிர்பாராது இடையில் ஒரு பழி
வருமானால்; அது தம் உயிரொடும் துடைப்பர் – அப்பழியைப்
போக்கத் தம் உயிரையும் போக்கிக் கொள்வர்.
————
யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்’ என்றனன் – புலவர் புந்தியான். –68-
புலவர் புந்தியான்- ஞானியர் மனத்தில் விளங்குபவனாகிய
இராமன் (சீதையை நோக்கி); யான் இயம்புவது யாது- நான்
சொல்வதற்கு என்ன இருக்கிறது?;உன் ஒழுக்கச் செய்தி-
உனது நடவடிக்கை; உணர்வை ஈடுஅறச் சேதியா நின்றது- என்
உணர்வுகளை அடியோடு வெட்டிவிட்டது; சாதியால் – (உன்
ஒழுக்கத்தை) உறுதி செய்து சாதிப்பாயாக; அன்று எனின்- அது
முடியாது என்றால்; தக்கது ஓர்நெறி போதியால் என்றனன்-
உனக்குத் தகுதியான வழியில் போவாயாக என்று கூறினான்.
————
முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார்அரோ. –69-
(அது கேட்டு) முனைவரும்- முனிவர்களும்; அமரரும்-
தேவர்களும்; மற்றும் முற்றிய நினைவு அரு மகளிரும்- வேறு
சூழ்ந்திருந்த சிறந்த பெண்களும்; நிருதர் என்று உளார்
எனைவரும் – அரக்கர் என்றுள்ள எல்லாரும்;வானரத்து எவரும்
– குரங்கினத்தைச் சேர்ந்தவர்களும்; வேறுளார் அனைவரும்-
மற்றுள்ள எல்லாரும்; வாய்திறந்து அரற்றினார்- வாய்
திறந்து அலறி அழுதார்கள்.
——–
இராமன் கடிந்துரை கேட்ட சீதை நிலை
10021.
கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஒவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். –70-
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்- பூவுலகத்தில்
அவதாரம் எடுத்து வந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்
இலக்குமிப் பிராட்டியாகிய சீதை (அவ்வார்த்தை கேட்டு);
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக- கண்கள் இரத்தமும்
நீரும் கக்கிச் சிந்த; புண்ணினைக் கோல் உறுத்தனைய
பொம்மலால்- புண்ணின்கண் அம்பு செருகியதனால் ஏற்பட்டது
போன்ற துன்பம் உடையவளாய்; உள் நினைப்பு ஓவி நின்று-
மனத்தின்கண் நினைப்பு ஒழிந்து அடங்கி; உயிர்ப்பு
வீங்கினாள் – பெருமூச்சு விட்டாள்.
———-
பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை,
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள்அரோ. –71-
பருந்து அடர் சுரத்திடை- பருந்துகள் நெருங்கியுள்ள பாலை
நிலத்தில்; பருகு நீர் நசை வருந்து அருந்துயரினால் மாளலுற்ற
மான் – உண்ணுதற்குரிய நீர் வேட்கையால் வருந்துகின்ற அரிய
துன்பத்தால் இறக்கும் தறுவாயடைந்த மானானது; இருந்தடம்
கண்டு- பெரிய நீர் உள்ள தடாகத்தைக் கண்ணாற்கண்டு;
அதின் எய்துறா வகை- அந்த தடாகத்தில் இறங்கி நீர்
உண்டு தாகம் தணியாதபடி அதிற் செல்லவொண்ணாத வண்ணம்;
பெருந்தடை உற்றென- பெரிய தடை நேர்ந்து துயரப்பட்டால்
போல; பேதுற்றாள் – மயக்கம் அடைந்தாள்.
————-
உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
‘இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு:
உற்றதால் இன்று அவம்!’ என்று என்று ஓதுவாள்;–72-
பிராட்டி) உலகினை உற்று நின்று நோக்கி – உலகினை நன்கு
கவனித்துப் பார்த்து; ஓடு அரி முற்றுறு நெடுங்கண் நீர் ஆலி
மொய்த்து உக- சிவந்த கரிய ரேகைகள் நிறைந்த நீண்ட
கண்களிலிருந்து வரும் நீர்த்துளி திரண்டு கீழ்விழ; யான்
இருந்து பெற்ற பேறு இற்றது போலும் – யான் உயிர்
வாழ்ந்திருந்து பெற்ற பாக்கியம் வீணாயிற்றுப் போலும்;
இன்று அவம் உற்ற- (என் பாக்கியம்) இன்று வீண் ஆன
தன்மையை அடைந்தது; என்று என்று ஓதுவாள் – என்று திரும்பத்
திரும்பக் கூறி வருந்துவாளானாள்.
———
மாருதி வந்து, எனைக் கண்டு, ”வள்ளல் நீ
சாருதி ஈண்டு” எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? –73-
மாருதி வந்து எனைக் கண்டு- அனுமன் இலங்கைக்கு வந்து
என்னைப் பார்த்து; வள்ளல் நீ சாருதி ஈண்டு என அமையச்
சொல்லினான் – வள்ளலே! நீ இலங்கைக்கு வர இருக்கிறாய்
என்று பொருந்த உரைத்தான்;யாரினும் மேன்மையான் –
எல்லாரினும் மேம்பட்டவனாகிய அவ்வனுமன்; சோரும் என்
நிலை- உயிர் சோரும் சிறையிருந்த என் உண்மை நிலையை;
இசைத்தது இல்லையோ- உனக்கு எடுத்துச் சொல்ல வில்லையோ;
அவன் தூதும் அல்லனோ- அவன் உன்னால் என்னிலை அறிந்து வர
அனுப்பப் பெற்ற தூதுவனும் அல்லனோ?
———
‘எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அவம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால்.–74-
உத்தம- ஆடவர் திலகனே!; இத்தனை காலமும் உழந்த
எத்தவம் எந்நலம் என்ன கற்பு ஈதெலாம்- இத்தனை
நாள்களாக நான் வருந்திச் சிறையிருந்து காத்த எந்தத்
தவம் எந்த நன்மை எத்தகைய கற்பு இவைகள் எல்லாம்; நீ
மனத்து உணர்ந்திலாமையால்- நீ உன் திருவுளத்து ஏற்றுக்
கொண்டு உணராதபடியால்; பித்து எனலாய் அவம் பிழைத்ததாம்
– பைத்தியச் செயல் என்னும்படி வீணாகி பழுதுபட்டுப் போயிற்று.
————-
பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், ”அன்று” என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? –75-
பார்க்கெலாம் பத்தினி- உலகத்தார்க்கெல்லாம் மிகச்
சிறந்த கற்பின் செல்வி; பதுமத்தானுக்கும் பேர்க்கலாம்
சிந்தையன் அல்லள் – படைப்புக் கடவுளான பிரமனாலும்
மாற்றக் கூடிய மனநிலை உடையவள் அல்லள் (என்று
பாராட்டப்படும் தன்மை உடைய); பேதையேன்- பேதமை
உடையளாகிய யான்; ஆர்க்கெலாம் கண்ணவன்- உலகில்
உள்ளார் அனைவர்க்கும் காட்டும் கண்ணாக விளங்குகின்ற
இராமன்; அன்று என்றால்- அப்படிப்பட்டவள் இல்லை என்று
சொல்வான் ஆனால்; அது தீர்க்கலாம் தகையது தெய்வம்
தேறுமோ- அக்கருத்தைப் போக்கும் தன்மையை வேறொரு
தெய்வம் அறியுமோ? (அறியாது என்றபடி.)
————-
‘பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?–76-
——–
‘ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும்’ என்றனள். –77-
வேத! – வேத வடிவினன் ஆகிய பெருமானே!; ஆதலின்-
உலகியல்பு இவ்வாறு இருத்தலின்; இனி புறத்து யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்- இனிமேல்
வெளியில் வேறு யாருக்காக என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக்
காட்ட வேண்டும்; சாதலின் சிறந்தது ஒன்று இல்லை- சாவதைக்
காட்டிலும் எனக்கு நற்பயன் தருவது வேறு இல்லை; நின் பணி
தக்கதே- நீ இட்ட கட்டளையும் அதுவே, எனக்குத் தகுதியானதே;
விதியும் அது- என் விதியும் அதுவே; என்றனள் – .
————
சீதை இலக்குவன் அமைத்த தீயை அணுகுதல்
10029.
இளையவன் தனை அழைத்து, ‘இடுதி, தீ’ என
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். –78-
வளை ஒலி முன்கையாள் – ஒலிக்கின்ற வளையல் அணிந்த
முன்கையை உடைய சீதை;இளையவன் தனை அழைத்து தீ
இடுக என வாயின் கூறினாள் – இலக்குவனைக் கூப்பிட்டு
நெருப்பை உண்டாக்கி அமைத்துத் தருக என்று வாயாற் சொன்னாள்,
அது கேட்ட; உளைவு உறு மனத்தவன்- வருந்துகின்ற மனம்
உடையவனாகிய இலக்குவன்;உலகம் யாவுக்கும் களை கணைத்
தொழ – எல்லா உலகங்களுக்கும் துன்ப நீக்கத்திற்குப் பற்றுக்
கோடாக உள்ள தமயனாகிய இராமபிரானை (இது ஏற்கத் தக்கதோ
என்னும் குறிப்பினால்) வணங்க;அவன்- அந்த இராமன்;கண்ணின் கூறினான்- தன் கண்ணின் குறிப்பினாலேயே (செய்க
என்று) நெருப்பிடக் கூறினான்.
———–
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்,
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்,
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள். –79-
ஏங்கிய பொருமலின்- அழுகின்ற விம்மலால்; இழி
கண்ணீரினன்- இறங்குகின்ற கண்ண நீரினை உடையனாய்;
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – போய்விட்ட உயிரை
உடையவனை ஒத்த இளைய பெருமாளும்; ஆங்கு- அவ்விடத்தே;
எரி – நெருப்பை; விதிமுறை அமைவித்தான் – முறைப்படி
உண்டாக்கித் தந்தான்; பதுமப் போதினாள்- தாமரைத் திருமகளாய
பிராட்டி; அதன் பாங்குற நடந்தனள்- அந்த நெருப்பின்
அருகாமையில் பொருந்த நடந்து சென்று நெருங்கினாள்.
—————-
தீயிடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக் குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய் திறந்து அரற்றின – மறைகள் நான்கொடும்,
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். –80
தேவர்க்கும் – தேவர்க்கெல்லாம் அன்னையாகிய பிராட்டி;
தீயிடை அருகுறச் சென்று தனிக் குறுகலும் – நெருப்பின் இடையே
அருகாமையில் சென்று தனியாகச் சேர்ந்த அளவில்; தரிக்கிலாமையால்
– அக் கொடுமையைப் பார்க்கவே சகியாமையால்; மறைகள்
நான்கொடும் ஓய்வு இல் நல் அறமும் உயிர்கள் யாவையும் வாய்திறந்து அரற்றின- நால் வேதமும் ஓய்விலாத
தரும தேவதையும் எல்லா உயிர்களும் வாயைத் திறந்து கதறி அழுதன.
—————
வலம்வரும் அளவையில் மறுகி, வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலம்வரல் உற்றன; அலறி, ‘ஐய! இச்
சலம்இது தக்கிலது’ என்னச் சாற்றின. –81-
வலம் வரும் அளவையில்- தீயைச் சுற்றி வரும் பொழுது;
வான் முதல் உலகமும் உயிர்களும் மறுதி ஓலமிட்டன- வான்,
மண், பாதலம் முதலாகிய உலகங்களும் அங்கங்குள்ள உயிர்களும்
மனம் மயங்கி கூக்குரலிட்டன; அலம் வரல் உற்றன- சுழற்சி
அடைந்தன; அலறி- கதறி; ஐய!- இராமனே!; இச்சலம் இது
தக்கின்று என்னச் சாற்றின- இத்தன்மையதான இத்தீமை
இவளுக்குத் தகுதியுடையதன்று என்று கூறின.
———-
இந்திரன் தேவியர் முதல ஏழையர்,
அந்தர வானின்நின்று அரற்றுகின்றவர்,
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். –82-
இந்திரன் தேவியர் முதல ஏழையர்- இந்திராணி முதலிய
பெண்கள்; அந்தர வானின் நின்று அரற்று கின்றவர் – ஆகாய
வெளியில் நின்று கூக்குரலிடுபவர்; சேயரிப் பெருஞ் சுந்தரக்
கண்களை- சிவந்த கோடுகள் பொருந்திய பெரிய அழகிய தமது
கண்களை; செந்தளிர்க் கைகளால் எற்றித் துள்ளினார் –
சிவந்த தளிர் போன்ற தம்கரங்களால் அடித்துக் கொண்டு துடித்தார்கள்.
———–
நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படி சுமந்த பாம்பு; வாய்
விடம் பரந்துளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன, சுடர்; கடல்கள் ஏங்கின.–83-
நான்முகன் முதல நாயகர் – பிரமன் முதலிய தலைமைத்
தேவர்கள்; நடுங்கினர் – அச்சமுற்றார்கள்; படி சுமந்த
பாம்பு படம் குறைந்தது – உலகைச் சுமக்கும் ஆதிசேடனாகிய
பாம்பு படம் ஒடுங்கிற்று; வாய் விடம் பரந்துளது என உலகு
வெதும்பிற்றால் – அப்பாம்பின் விடம் பரவியது என்று
சொல்லும்படி உலகம் வெதும்பியது; சுடர் இடம் திரிந்தன –
சூரிய சந்திரர்கள் உதிக்கும் இடம் மாறினர்; கடல்கள் ஏங்கின-.
———-
சீதை தீயிடைப் புகுதல்
10035.
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
‘மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன்எனின்,
சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா!’ என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். –84-
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை- பருத்து அளவின்
மிகுந்த ஆபரணங்கள் அணிந்த தனங்களை உடைய வளைக்கையளாகிய
பிராட்டி (அக்கினியை நோக்கி); தீச் செல்வா!- அக்கினி தேவனே!;
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் சினத்தினால்
சுடுதியால் என்றாள் – நான் மனத்தாலும் சொல்லாலும் களங்கம்
உற்றவளானால் கோபத்தால் என்னைச் சுட்டெரிப்பாயாக என்று
கூறினாள்; புனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்
– காட்டில் தோன்றும் துளசியை அணிந்த தன் நாயகனாகிய
இராமனுக்கும் வணக்கம் செய்தாள்.
——–
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால். –85-
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – நீந்துதற்கரிய
வெள்ள நீரிலே உயர்ந்து மேல் தோன்றும் தாமரை மலராகிய;
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – பொருந்திய தன்
வாழிடத்தையே அடைவாள் போல; பாய்ந்தனள்- (நெருப்பில்)
பாய்ந்தாள்;பாய்தலும் பாலின் பஞ்சு என அவ் எரி அவள் கற்பின்
தீயினால் தீய்ந்தது- பாய்ந்தவுடன் பால் போன்ற
வெண்மையான பஞ்சு போல அந்த நெருப்பு பிராட்டியின் கற்பு
என்னும் நெருப்பால் தீய்ந்து போனது.
———
சீதை எரியிடை விளங்குதல்
10037.
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன் – அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் கரத் துணையினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். –86-
வெந்து எரியும் மேனியான் அங்கி- கற்பு நெருப்பால்
தீய்ந்த உடம்பினனாய அக்னிதேவன்; அழுந்தின நங்கையை-
தன்னில் பாய்ந்து புகுந்த சீதையை; அங்கையால் சுமந்து-
தன் உள்ளங்கையால் தாங்கி; எழுந்தனன் – மேல் வந்தான்;
தொழும் கரத்துணையினன் – (இராமனைத்) தொழுகின்ற இணைக்
கரங்களை உடையனாய்; சுருதி ஞானத்தின் கொழுந்தினை-
வேதங்களால் உணர்த்தப்படும் மெய்ஞ்ஞானத்தின் முடிபொருளாக
விளங்கும் இராம பிரானைப் பார்த்து; பூசல் இட்டு அரற்றும்
கொள்கையான் – அடைக்கலம் வேண்டி ஒலிசெய்து கதறுகின்ற
தன்மையன் ஆயினன்.
————-
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும், பனித்த தேனொடும்
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால். -87-
ஊடின சீற்றத்தால்- தன் கணவன் தன்பால் மாறுபட்டு ஊடிய
கோபத்தால்; உதித்த வேர்களும்- தன்னிடம் உண்டாகிய
வியர்வைத் துளிகளும்; வாடிய இல்லை- உலரவில்லை;
உணர்த்துமாறு உண்டோ? – அவளது கற்பின் சிறப்பை உணர்த்த
வேறு ஒன்று உண்டோ?; சூடின மலர்கள் பாடிய வண்டொடும்
பனித்த தேனொடும் நீர் தோய்த்த போன்ற- அவள்
அணிந்திருந்த பூக்கள் தம்பால் பாடித் திரிந்த தேனீக்களோடும்
துளித்த தேனொடும் நீரில் தோய்த்து எடுத்தாற் போலக் குளிர்ந்தன.
———-
திரிந்தன உலகமும் செவ்வை நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர், நாணமும் பொறையும் நீங்கினார். –88-
திரிந்தன உலகமும் செவ்வை நின்றன- (முன்பு பிராட்டியின்
துன்பம் கண்டு) சுழன்றனவாகிய உலகங்களும் (இப்போது அது
நீங்கியதால்) நேரே நின்றன;பரிந்தவர் உயிர் எலாம்
பயம் தவிர்ந்தன- (என்ன நிகழுமோ என்று பயந்து)
வருந்தியவர்களது உயிர் எல்லாம் இப்போது பயம் நீங்கப்
பெற்றன; அருந்ததி முதலிய மகளிர் – அருந்ததி முதலான
கற்பின் செல்வியர்; நாணமும் பொறையும் நீங்கினார்
ஆடுதல் புரிந்தனர்- நாணமும் அடக்கமும் நீங்கப்
பெற்றவர்களாய் மகிழ்ச்சியால் ஆடுதல் செய்தனர்.
———-
தீக் கடவுள் முறையீடு; இராமன் வினா
10040.
‘கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் – தீயினால்,
நினைந்திலை, என் வலி நீக்கினாய்’ என,
அநிந்தனை அங்கி, ‘நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம்’ என முறையிட்டான்அரோ. –89-
அங்கி- தீக்கடவுள்; அநிந்தனை- பழிப்புக்கிடமில்லாவதனான
இராமபிரானை நோக்கி; நீ நினைந்திலை- (இவளது கற்பு கூடும்
தன்மையது என்பதனை) நீ நினையாதொழிந்தாய்; கனிந்து உயர்
கற்பு எனும் கடவுள் தீயினால் என் வலி நீக்கினாய் என- முற்ற
உயர்ந்த சீதாதேவியின் கற்பு என்னும் தெய்வ நெருப்பால் என்
வலிமையைப் போக்கிவிட்டாய் எனக் கூறி; அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான் – சோர்வில்லாத என்னையும்
நீ கோபித்தாய் போலும் என்பதாக முறையிட்டான்.
————
இன்னது ஓர் காலையில், இராமன், ‘யாரை நீ?
என்னை நீ இயம்பியது, எரியுள் தோன்றி? இப்
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்’ என்றான்.–90-
இராமன்-; இன்னது ஓர் காலையில் – நெருப்புத் தேவன்
முறையிட்ட போது; நீ யாரை, எரியுள் தோன்றி நீ இயம்பியது
என்னை?- நீ யார்? நெருப்பினுள்ளிருந்து வந்து நீ சொல்லியது
என்ன?; இப்புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்,
அன்னது ஆர் சொல்ல- இப்பழிக்கிடமாகிய ஒரு பெண்ணை
எரிக்காமல் காப்பாற்றினாய், அவ்வாறு காப்பாற்றியது யார்
சொல்லியதால்; ஈது அறைதி- இதற்குப் பதில் சொல்; என்றான்-.
———–
தீக்கடவுள் மறுமொழி
10042.
‘அங்கி, யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும் சான்றுளாய்? -91-
எவர்க்கும் சான்றுளாய்! – எல்லார்க்கும் அகத்தே நின்று
சாட்சியாக இருக்கின்ற பரம்பொருளே!; யான் அங்கி- நான்
தீக்கடவுள்; என்னை இவ் அன்னை கற்பு எனும் பொங்கு
வெந்தீ சுட பொறுக்கிலாமையால் இங்கு அணைந்தேன் –
என்னை இந்த மாதாவினது கற்பு என்று சொல்லப்படும்
மேலெழுந்த கொடு நெருப்பு சுட அதனைத் தாங்க முடியாமையால்
நெருப்பில் நின்று எழுந்து இங்கு வந்தேன்; உறும் இயற்கை
நோக்கியும்- எனக்கு உண்டாகிய தன்மையைப் பார்த்த பிறகும்;
சங்கியா நிற்றியோ ? – இவளைச் சந்தேகிக்கிறாயா?
(என்னையே சந்தேகிக்கிறாயா? எனலும் ஆம்.)
———–
வேட்பதும், மங்கையர் விலங்கினார்எனின்
கேட்பதும், பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் என்னும் மெய்ப்பொருள் –
வாள் – பெருந் தோளினாய்! – மறைகள் சொல்லுமால்.–92-
வாள் பெருந்தோளினாய் – ஒளி படைத்த பெரிய தோள்களை
உடைய இராமனே; மங்கையர் வேட்பதும் – பெண்களை மணம்
செய்து கொள்வதும்; விலங்கினார் எனின் கேட்பதும்-
அப்பெண்கள் இல்லற ஒழுக்கில் மாறுபட்டார் எனக் கருதின்
என் மூலமாக விசாரிப்பதும்; பல பொருட்கு ஐயம் கேடு உற
மீட்பதும் – எந்த ஒரு பொருளிடமும் ஏற்படும் சந்தேகத்தை
நீக்கித் தெளிவு பிறப்பித்துக் கொள்வதும்; என்வயின்-
அக்கினியாகிய என் மூலமாகவே; என்னும் மெய்ப் பொருள்
மறைகள் சொல்லும் – என்கின்ற உண்மையை வேதங்கள்
எடுத்துக் கூறும்.
———-
‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஓரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ ? –
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்! -93-
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்-
வாய்மையில் சிறிதும் தவறாத அனுமனது வார்த்தையையும்
கருதிப் பாதுகாவாதவனே!;ஐயுறு பொருள்களை ஆசு இல்
மாசு ஓரீஇ- சந்தேகித்த பொருள்களின் இடமாக குற்றம் நீக்கி
அச்சந்தேகத்தைப் போகச் செய்து; கைஉறு நெல்லியம்
கனியின் காட்டும் என் மெய் உரை கேட்டும் மீட்டியோ-
உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகக்
காட்டுகிற என்னுடைய சத்திய வார்த்தையைக் கேட்ட பிறகும்
திரும்பச் சேர்த்துக் கொள்ளாயோ.
————
‘தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று,
”ஆ!” எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? -94-
தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும் மூவகை உலகமும்-
தேவர்களும் முனிவர்களும் சர அசரங்களாகிய மூவகை உலகப்
பொருள்களும் உயிர்களும்; கண்கள் மோதி நின்று ‘ஆ’ எனல்
கேட்கிலை- கண்களை அடித்துக் கொண்டு நின்று ‘ஆ’ என்று
இரங்குகின்ற சொல் உன் காதில் விழவில்லையா?; அறத்தை
நீக்கி ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டி- தரும
வடிவாகிய நீ அறத்தைப் போக்கி பாவம் என்ற ஒரு பொருளை எங்கிருந்து
பெற்றாய்?
————
‘பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வய்யுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.’ –95-
இவள் உணர்வு சீறினால் – தெய்வக் கற்பினளாய இவள்
உணர்வு நிலை திரிந்து கோபம் அடைந்தால்; மழை பெய்யுமே-
மழை பொழியுமா? புவி பிளப்பது அன்றியே பொறை செய்யுமே?-
பூமி வெடிப்பது அல்லாமல் பொருளைத் தாங்குதல் செய்யுமா?;
அறம் நெறியில் செல்லுமே- அறம் நேரான வழியில்
நடக்குமா?; உலகு உய்யுமே- உலகம் பிழைக்குமா?; வய்யுமேல்
– (இவள்) சபித்தால்; மலர்மிசை அயனும் மாயும்-
மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகனும் இறந்து படுவான்.
————-
சீதையை இராமன் ஏற்றுக் கொள்ளல்
10047.
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரொடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான். –96-
சூடு உறும் மேனிய அலரி- கற்பனலால் வெந்த உடம்பினை
உடைய தீக்கடவுள்; பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று
– பெருமை பொருந்திய பல இத்தகைய வார்த்தைகளைத்
திரும்பத் திரும்பச் சொல்லி; ஆடுறு தேவரொடு உலகம்
ஆர்த்து எழ- களிப்பினால் ஆடுகின்ற தேவர்களொடு உலகமும்
ஆரவாரித்து உடன் வர; தோகையை- மயில் அன்னாளாய
சீதையை; மாடு உறக் கொணர்ந்தனன்- (இராமன்) அருகில் கொண்டு
வந்தான்; வள்ளல்- (அது கண்ட) இராமபிரான்; கூறுவான்-
சொல்வானாயினன்.
———–
‘அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, ”யாதும் ஓர்
பழிப்பு இலள்” என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்’ என்றனன் – கருணை உள்ளத்தான். –97-
கருணை உள்ளத்தான் – அருள் உள்ளம் வாய்ந்தவனாகிய
இராமன்; (தீக்கடவுளை நோக்கி) நீ உலகுக்கு அழிப்பு இல
சான்று- நீ இந்த உலகத்துக்கு பிறிதொன்றால் நீக்க
முடியாத சாட்சி ஆவாய்; ஆதலால்-; நீ இவளை இழிப்பு இல
சொல்லி ”யாதும் ஓர் பழிப்பு இவள் என்றனை- நீ இவளை
இகழ்ச்சிக்கு இடம் இல்லாத உயர்ந்த வார்த்தைகளாற்
பாராட்டி யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள் என்று
உறுதி கூறினை; பழியும் இன்று- இவளிடத்து பழியும் இல்லை;
(எனவே) ‘இனி கழிப்பு இலள்’ என்றனன் – ‘இனி (என்னால்
இவள் நீக்கத் தக்கவள் அல்லள்’ என்று கூறினான்.
————-
பிரமன் இராமனது பரம்பொருள் தன்மை கூறல்
10049.
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை உணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு’ என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான்.–98-
இமையவர்- தேவர்கள்; (பிரமனிடம்) புணர்த்தும்
மாயையில் பொதுவுற நின்று அவை உணரா இணர்த்துழாய்த்
தொங்கல் இராமற்கு- தானே தனது நினைவால் இவர்களிடத்தே
கூட்டுகின்ற மாயையில் மற்றவைகளைப் போலவே தானும்
ஒன்றித்து நின்று தன் பரம்பொருள் தன்மையை உணரா திருக்கின்ற பூங்கொத்தாகிய துளசி மாலையை அணிந்துள்ள
இராமனுக்கு; உண்மை ஒழிவு இன்று உணர்த்துவாய்- இராமனுக்கு
அவனது உண்மை நிலையை சிறிதும் விடுபடாமல் உணர்த்து வாயாக;
காலம் வந்துளது- அதற்குரிய காலம் வந்திருக்கிறது; என்று
இசைப்ப- என்று கூற; தணப்பு இல் தாமரைச் சதுமுகன்
உரைசெயச் சமைந்தான் – பிரியாத திருமாலின் உந்தித் தாமரையில்
தோன்றிய நான்முகன் சொல்லத் தொடங்கினான்.
————–
‘மன்னர் தொல் குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த் துணிவு
நின் அலாது இல்லை; நின்னின் வேறு உளது இலை – நெடியோய்!-99-
நெடியோய்- (நிலம் கடந்த) நெடியவனாய திருமாலே!; இராம!
– இராமனே!; நீ இதனை கேள்- நீ நான் சொல்கிற இந்த
உரையைக் கேட்பாயாக; மன்னர் தொல் குலத்து அவதரித்தனை-
அரசர்களது பழமையான சூரிய குலத்தில் தசரத குமாரனாகத்
தோன்றினாய்; ஒரு மனிதன் என்ன உன்னை உன்னலை- ஒரு
மனிதனாக உன்னை நீ கருதற்க; சொன்ன நான் மறைத்
துணிவினில் துணிந்த மெய்த் துணிவு நின் அலாது இல்லை-
எல்லாவற்றையும் எடுத்துச் சொன்ன நான்கு வேதங்களின்
முடிந்த முடிபாகிய (வேத சிரஸ் எனப்படும்) உபநிடத முடிவில்
சொல்லப் படும் முடிபொருள் நின்னை அல்லாமல் வேறு இல்லை;
நின்னின் வேறு உளது இலை- நின்னை அல்லாமல்
நின்னிடத்திருந்து நீங்கி வேறு பொருள்கள் உளது என்னும்
இருப்பினைப் பெறுவதும் இல்லை.
நீயே பரம்பொருள்; நீயே எல்லாப் பொருளும்; உன்னையல்லாது
வேறு பொருள் எதுவும் இல்லை எனவும் கூறலாம்.
———-
‘பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம். –100-
யாதினும் பழையது பகுதி என்று உளது – எல்லாவற்றினும்
பழைமை யானதாகிய மூலப்பிருகிருதி என்று உள்ள தத்துவமும்;
பயந்த- அம் மூலப் பிருகிருதியால் தரப்பட்ட; விகுதியால் வந்த
விளைவு- விகாரத்தால் உண்டான காரியங்களாகிய தத்துவங்களும்;
மற்று அதற்குமேல் நின்ற பகுதி யாவர்க்கும் அரிய
அப்புருடனும் – அந்தத் தத்துவங்களின் வேறாகக்
கண்டுணர்தற்கரியதாய் மேற்பட்டு நின்ற ஜீவாத்மாவும்; நீ –
நீயேயாவாய்; இம்மிகுதி- இந்த உலகத் தோற்றம் எல்லாம்; உன்
பெரு மாயையினால் வந்த வீக்கம் – உனது பெரிய சங்கற்பம்
(நினைவு) என்று சொல்லப்படுகிற மாயையால் உண்டான பரப்பாகும்.
—————–
‘முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன் பெருந் தன்மை தான் தெரி மறைகளின் தலைகள்
”மன் பெரும் பரமார்த்தம்” என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால், மற்று இங்கு யாரையும் அறையா.–101-
அன்ப! – எவ்வுயிர்களிடத்தும் அன்புள்ளவனே!; முன்பு பின்பு
இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன் பெருந்தன்மை
தான் தெரி மறைகளின் தலைகள்- தோற்றம், இறுதி என்கின்ற
இருபக்கத்தையும் இன்னது என்று அளவிட்டறிதற்கரிய முறைமை
யுடையதும் தன் அளப்பரும் தன்மையைத் தானே அறிய வல்லதும்
ஆகிய வேதங்களின் முடிபொருள் காட்டும் வேத சிரள் எனப்படும்
உபநிடதங்கள்; ”மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற
மாற்றம் – நிலை பெற்ற மிக மேலான பரம்பொருள் என்று
குறிப்பிடுகின்ற சொல்; நின்னை யல்லால் மற்று இங்கு யாரையும்
அறையா- (இராமனாக அவதரித்துள்ள) திருமாலாகிய நின்னை
அல்லாமல் வேறாக இங்குள்ள பிரமருத்திர இந்திராதி தேவர்களுள்
யாரையும் குறிப்பிடாது.
———
‘எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன் –
தனக்கும், பல் பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்
வினைத் துவக்குடை வீட்ட அருந் தளைநின்று மீள்வார்.–102-
எனக்கும் – பிரமனாகிய எனக்கும்; எண்வகை ஒருவற்கும்-
அட்டமூர்த்தியாக உள்ள உருத்திரனுக்கும்; இமையவர்க்கு
இறைவன் தனக்கும்- இந்திரனுக்கும்; பல்பெரு முனிவர்க்கும்
– பல பெரிய முனிவர்களுக்கும்; உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும்- உயிருடைய பொருள்களாய எல்லாவற்றுக்கும்;
நீயே பரம் என்பதை அறிந்தார் – நீயே மேலானவன்
(இறைவன்) என்கின்ற உண்மையை அறிந்த ஞானிகள்; வினைத்
துவக்கு உடை வீட்ட அரும் தளை நீன்று மீள்வார் –
இருவினைகளாகிய வலைக்குள் அகப்பட்டு மீள முடியாத அரிய
பிறவி என்னும் பெருந் தளையிலிருந்து மீண்டு வீடுபேறு அடைவார்.
இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி,
இயமானனாய், எறியும் காற்றும் ஆகி, அருநிலைய திங்களாய்,
ஞாயிறாகி, ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி” என்ற திருநாவுக்கரசர்
அருளிய நின்ற திருத்தாண்டகம்
———
‘என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த.–103-
என்னைத் தான் முதலாகிய உருவங்கள் எவையும்-
உற்பத்திக்குக் காரணமான என்னை முதலாக உடைய உயிர்
வருக்கங்கள் எல்லாம்; முன்னை தாய் தந்தை எனும் பெரு
மாயையில் மூழ்கி- பிறப்புக்கு முதலான தாய் தந்தை எனும்
சுற்றமாகிய உலக மாயையில் அழுந்தியிருக்கும் உண்மை மறந்து;
தன்னைத் தான் அறியாமையில் சலிப்ப- தம்முடைய ஆத்ம
வடிவத்தையும் அது நீயாயிருத்தலையும் தம்மால் அறிய முடியாமல்
தளர்ச்சியடைந்து துன்பம் அடைவனவாம்; அச்சலம் தீர்ந்து
ஒழிந்த உன்னைத் தாதை என்று உணர்குவ முத்திவித்து- அந்த
பொய்மை நீங்கி விலகியவாகிய சீவன்கள் உன்னையே
எல்லாவற்றுக்கும் முதலாகிய தந்தை என்று அறிவனவாம்; அவையே
வீட்டுலகத்தில் விளையும் வித்தாவனவாம்.
———–
”ஐ – அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து,அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது” என்னும் ஈது அரு மறை புகலும்;
வய்யம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை,வழக்கால்.–104-
ஐ அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து- பூதம் 5, புலன்
5, பொறி 5, கன் மேந்திரியம் 5, மகத், அகங்காரம்,
மனம் மூலப்பிருகிருதி, சீவன் 5 என்று கூறப்படும் ஐந்து
ஐந்துகளாகிய இருபத்தைந்து தத்துவங்களையும் நன்கு ஆராய்ந்து
அறிந்து; அவற்றின் மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்கு
மேல் யாதும் பொய் எஞ்சா இலது- அவற்றைச் சரீரமாகக்
கொண்டு சரீரியாக சிறிதும் குறைவு படாமல் நடத்தி மேலாய்
நின்ற இருபத்தாறாவது தத்துவமாக நின்ற உனக்கு மேல் எதுவும்
உண்மையாக இல்லை; என்னும் ஈது- என்கின்ற இவ்வுண்மையை;
அருமறை புகலும்- அரிய வேதம் எடுத்துக் கூறும்; வய்யம்
சான்று – இதற்கு இவ்வுலகமே (நின்னால் இயங்குதலின் நீ
இன்றி இயங்காமையின் சான்றாகும்;இனி சான்றுக்குச் சான்று
இலை- சாட்சிக்கு இன்னொரு சாட்சி வேண்டுதல் இல்லை
ஆதலின் இதை இனியும் நிரூபிக்க வேண்டியதின்று; வழக்கால்-
இது வழக்கும் ஆகும்.
————
‘அளவையால் அளந்து, ”ஆம்,” ”அன்று”, என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! ”உளை நீ” எனத் துணியும். –105-
துளவை ஆய் முடியாய்! – திருத்துளசியை ஆராய்ந்து எடுத்துச்
சிறந்து அணிந்த திருமுடி உடைய திருமாலே!;அளவையால் அளந்து- பிரமாணங்களால் ஆராய்ந்து அளவிட்டு
‘ஆம்’ ‘அன்று’ என்று அறிவுறும் அமைதி; உளவை யாவையும்
உனக்கு இல்லை- உண்டு என்றும் இல்லை என்றும்
அறிவுறுத்தப்படும் தன்மை உடைய நிலைகள் எவையும் உன்னிடம்
பயன்படா; இல்லையாகும்; உபநிடத்து- உபநிடதங்களில்; உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும் – நீ
எல்லாவற்றினும் மறைந்து அவையேயாய் இருந்து கொண்டிருக்கும்
களவை ஆராய்ந்து உன்னை நன்கு காண இயன்றிலது ஆனாலும் அது;
கண்ணால் ‘நீ உளை’ எனத் துணியும் – தன் ஞானக்கண்ணால் நீ
அறியவாரா விடினும் இருக்கின்றாய் என்று அறுதியிட்டுக் கூறும்.
———
‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அகல்வு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான்.–106-
அரணம் அல்லவர்க்கு- உன்னைத் தமக்குப் பாதுகாவலாகப்
பற்றாதவர்களுக்கு; உன்னை வந்து அறிவு காணாமே- உன்னை
நெருங்கி அறிவினால் அறிந்து கொள்ளாதபடி; கரணம் என்று உள
– ஐம்பொறிகள் என்றுள்ளவைகள் பெருந்தடையாக ஆகும்;
(அதனால்) இவை கடந்து அகல்வு அரிதாக- இப் பொறிகளைக்
கடந்து மேற்சென்று அறிதல் முடியாததாக; மரணம் தோற்றம்
என்று இவற்றிடை மயங்குப- இறப்பு பிறப்பு என்ற
பாசவலைக்குட்பட்டு மீண்டும் மீண்டும் தடுமாறுவர்; அன்னவை
தவிர்ப்பான் – அப்பிறப்பு இறப்புகளாகிய துன்பங்களை நீக்குதற்கு;
அவர்க்கு- அவர்களுக்கு; உன் சரணம் அல்லது ஓர் சரண்
இல்லை- உன் திருவடியிணைகள் அல்லாமல் வேறு ஓர் புகலிடம்
இல்லை.
———–
‘தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல் சால் முதல் பகுதி; மற்று அதனுள் ஆம்,பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். –107-
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை- தோன்றுதல்
என்பதாகிய தன்மை உனக்கு இல்லை (அநாதி); ஆற்றல் சால்
முதற்பகுதி நின்கணே தோற்றும் – வலிமை மிக்க
மூலப்பிருகிருதி மாயை என்கிற தத்துவம் நின்னிடத்திருந்து
வெளிப்படும்; மற்று அதனுள் ஆம் பண்பால்- பின்னர் அதின்
உள்ளிருந்து ஒன்றொன்றாக வெளிப்படும் முறையால்; காற்றை
முன்னுடைப் பூதங்கள் – காற்று, ஆகாயம் முதலாகிய
ஐம்பூதங்கள் தோற்றும்; கடைக்கால்- ஊழிமுடிவில்; அவை
சென்று வீற்று வீற்று உற்று வீவுறும் – ஒன்று ஒன்றுக்குள்
ஒடுங்கி அழிந்து போகும்; நீ என்றும் விளியாய்- நீ
எப்பொழுதும் அழியமாட்டாய்.
————-
மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இல் உலகம் –
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால்.–108-
மின்னைக் காட்டுதல் போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும்- வானம் மின்னலைக் காட்டுதல் போல
தோன்றி உடனே மறையும் இந்த உலகத்தைக் காட்டவும்;
தருமத்தை நாட்டவும்- இவ்வுலகில் தருமத்தை நிலை
நிறுத்தவும்; தனியே- உன்னின் வேறாக; என்னைக் காட்டுதி
– என்னைப் படைக்கிறாய்; இறுதியும் காட்டுதி- எனக்கு
அழிவையும் உண்டாக்குகிறாய்; எனக்கும்-;உன்னைக் காட்டலை
– உலக காரணமானவனாகிய உன் உண்மை நிலையைக்
காட்டுவாயல்லை; ஒளிக்கின்றும் இலை- மறைத்திருக்கின்றாயும்
இல்லை; மறை உரை- இவை அனைத்தையும் வேதங்கள் கூறுகின்றன.
———
‘என் உருக் கொடு இவ் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக் கொடு புகுந்து நின்று ஓம்புதி; உமைகோன்
தன் உருக் கொடு துடைத்தி; மற்று இது தனிஅருக்கன்
முன் உரு கொடு பகல் செயும் தரத்தது – முதலோய்! –109-
முதலோய்! – எல்லாவற்றுக்கும் மூலமானவனே!; என் உருக்கொடு
இவ் உலகினை ஈனுதி- பிரமனாகிய என் வடிவம் கொண்டு இந்த
உலகத்தை உண்டாக்குகிறாய்; இடையே- நடுவில்; உன்
உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி- திருமாலாகிய உன்
வடிவத்தை எடுத்துக் கொண்டு புகுந்து நின்று பாதுகாக்கிறாய்;
உமை கோன் தன் உருக்கொடு துடைத்தி- உமாதேவியின்
கணவராகிய சிவபெருமான் வடிவம் கொண்டு அழிக்கிறாய்; மற்று
இது- நீ செய்யும் இச்செயல்;தனி அருக்கன்- ஒப்பற்ற
ஒருவனாகிய சூரியன்; முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது-
கருதிய உருவம் கொண்டு காலையில் பகலை உண்டாக்கி, உச்சத்தில்
பகலை நடத்தி நிறுத்தி, தனது மறைவால் மாலையில் பகலை
முடித்தல் போல உள்ளதாம்.
———–
‘ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
”ஓங்காரப் பொருள் ஆம்” ”அன்று” என்று ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். –110-
ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்-
பிரணவப் பொருளை ஆராய்ந்தறிகின்றவர்களே உன் உண்மையான
சொரூபத்தை உணர்வாராவர் (அவர்கள்); ஓங்காரப் பொருள்
என்று உணர்ந்து இருவினை உகுப்போர்- உன்னைப் பிரணவப்
பொருள் என்ற தியானித்து இருவினைகளும் கழியப் பெற்று
முத்தி அடைவர்; ஓங்காரப் பொருளே பொருள் என்கலா
உரவோர்- பிரணவப் பொருளே பரம்பொருளாகும் என்ற
உண்மையை உணரமாட்டாத அறிவை உடையவர்கள்; ஓங்காரப்
பொருள் ஆம்- இறைவனாகிய நீ பிரணவப் பொருளாக உள்ளாய்
என்றும்; ‘அன்று’ என்று- இல்லை என்றும் தடுமாறி; ஊழி
சென்றாலும்- உகாந்த காலம் கடந்தாலும் (பிறவியிலிருந்து வீடு பெறார்.)
————–
‘இனையது ஆகலின், எம்மை மூன்று உலகையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல்” என்று அது முடித்தனன் – முந்து நீர் முளைத்த
சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன்.–111-
முந்து நீர் முளைத்த சினையின் பந்தமும் பகுதிகள்
அனைத்தையும் செய்தோன்- நிலத்திற்கு முன்னதாகிய
நீரிலிருந்து தோன்றிய முட்டை வடிவான இவ் வண்டத்தையும்
அவற்றின் பகுதியாகிய பல்வேறு யோனி பேதங்களையும்
படைத்தருளியவனாகிய பிரமன்; இனையது ஆகலின்-
பரம்பொருளாகிய நீயே இராமனாக அவதரித்தலின்; எம்மை
மூன்று உலகையும் ஈன்று இம்மனையின் மாட்சியை
வளர்த்த எம்மோயினை வாளா முனையல்!- என்னையும்
மூவுலகங்களையும் பெற்றெடுத்து இல்லற மேன்மையை
உன்னோடிருந்து அழகுற நடத்துகிற சர்வ சக்தியாகிய எம்
தாயை வீணே வெறுக்க வேண்டா; என்று அது முடித்தனன்-
என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தான்.
————
சிவபெருமான் உண்மை உணர்த்தல்
10063.
என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
‘உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள்.–112-
என்னும் மாத்திரத்து- என்று பிரமன் இராமனுக்கு உண்மை
உணர்த்திய அளவில்; ஏறு அமர் கடவுளும் இசைத்தான்-
எருதின் மேல் அமர்ந்துள்ள கடவுளாய சிவனும் (பின்வருமாறு)
உண்மை உணர்த்தினான்; உரவோய்!- வலிமை உள்ள இராமனே!;
நீ உன்னை ஒன்றும் உணர்ந்திலை போலுமால்- நீ உன்னை
இன்னவாறு என்று ஒரு சிறிதும் உணர்ந்தாயில்லை போலும்; நீ
முன்னை ஆதி ஆம் மூர்த்தி- நீ எல்லார்க்கும்
முற்பட்டவனாகிய ஆதிப் பரம்பொருள்; சீதை அம்மாது நின்
மார்பின் வந்து அமைந்தாள் மூவகை உலகின் அன்னை-
சீதை என்கிற பெண் உன் திருமார்பில் வந்து
பொருந்தியிருப்பவளாகிய மூவுலகங்களுக்கும் தாயாகிய
பிராட்டியாவாள்.
————–
‘துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது’ என்றனன் – வரதர்க்கும் வரதன்.–113-
இராமன்! – இராமனே!; தொல்லை எவ் உலகும் பிறக்கும்
பொன் வயிற்று அன்னை- பழயதாகிய எல்லா உலகங்களும்
தோன்றுதற் கிடனாகிய அழகிய உதரத்தையுடைய மகாமாதாவாகிய
இவள்; துறக்கும் தன்மையள் அல்லள்- உன்னால்
கைவிடப்படும் தன்மை உடையவளல்லள்; இப்பெய்வளை
பிழைக்கின் பல்உயிர் இறக்கும்- இப்பெண் பிழை
செய்வாளானால் எல்லா உயிர்களும் இறந்துபடும்; நீ இவள்
திறத்து இகழ்ச்சி மறக்கும் தன்மையது- நீ இவள்
விஷயத்தில் அலட்சியம் காட்டுவது மறந்து விடத் தக்கது;
என்றனன் வரதர்க்கும் வரதன்- என்று கூறினான் வரந்தரும்
கடவுளர்க்கு வரம் தரும் சிவபெருமான்.
———–
சிவன் தயரதனுக்குக் கூறல்
10065.
பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, ‘நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!’என்றான் –114-
பின்னும் நோக்கினான்- (சிவன் மேலும் செய்ய வேண்டுவதை
மனத்தால் நினைத்துப் பார்த்து; பெருந்தகைப் புதல்வனைப்
பிரிந்த இன்னலால் உயிர் துறந்து இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவன் சென்று கண்டு- மேம்பாடுடைய மகனாகிய இராமனைப்
பிரிந்த துன்பத்தால் உயிர் போகப் பெற்று சுவர்க்க லோகத்தில் இருந்த தசரதனைச் சென்று பார்த்து;
‘மொய்ம்பினோய்! நின்மைந்தனைத் தெருட்டி முன்னை
வன்துயர் நீக்குதி என்றான்- வலிமை படைத்தவனே! உன்
மகனாகிய இராமனைத் தெளிவித்து அவன் மனத்தில் உள்ள
வலிய துன்பத்தைப் போக்குவாயாக என்று கூறினான்.
————–
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான்.–115-
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்-
சிவபெருமான் கட்டளையாகிய அருளைப் பெற்ற சக்கரவர்த்தியாகிய
தயரதன்; காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்
– தன் அன்பு மகனைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட
ஓர் எண்ணத்தால்; பூதலத்திடைப் புக்கனன் – மண்ணுலகத்தில்
நுழைந்தான்; புகுதலும் – (அவ்வாறு) பூமிக்கு வருதலும்; பொருஇல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான் –
ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும் அத்தயரதனது மலர்போலும்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.;
————–
10067.
வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, தன் கண்ணின் நீர் ஆட்டி
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று இவை புகன்றான்.–116-
மன்னன்- தயரதன்; வீழ்ந்த மைந்தனை எடுத்து-
தன்னடியில் விழுந்து வணங்கிய மகனைத் தூக்கி; தன்
விலங்கல் ஆகத்தின் ஆழ்ந்து அழுந்திடத் தழுவி-
தன்னுடைய அகன்ற மார்பின்கண் நன்றாக அழுந்தும் படி
இறுக அணைத்து; தன் கண்ணின் நீர் ஆட்டி- தன்
கண்ணிலிருந்து வருகின்ற கண்ணநீரால் அவனை
முழுக்காட்டி; போழ்ந்த துன்பங்கள் புறப்பட – இதுகாறும் அவனைப் பிரிந்ததனால் ஏற்பற்ற துன்பங்கள்
வெளியேற; நின்று இவை புகன்றான்- எதிர் நின்று பின்வரும்
சொற்களைச் சொன்னான்.
———
‘அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப் பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மா மணி இன்று வாங்க. –117-
கேகயன் மகள் அன்று கொண்ட வரம் எனும் அயில்வேல்
என் இதயத்தினிடை இன்றுகாறும் நின்றது- கேகயத்தரசன்
மகளாகிய கைகேயி (அயோத்தியில் உனது பட்டாபிஷேகத்துக்கு
நாள் குறித்த) அன்று என்னிடம் பெற்றுக் கொண்ட வரம் என்ற
கூரிய வேல் என நெஞ்சகத்து இன்று வரை தங்கியிருந்தது;
என்னைக் கொன்று நீங்கலது- என்னைக் கொலை செய்து
இறக்கடித்த பிறகும் நீங்கவில்லை; இன்று உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்த மாமணி வாங்க இப்பொழுது
அகன்றது – இன்றைக்கு (உன்னை இறுகத் தழுவிய போது) உன்
சிறந்த ஆபரணங்களை அணிந்த மணம் பொருந்திய மார்பு
ஆகிய காந்தமாமணி இழுத்த படியால் இப்பொழுது (அவ்வேல்)
அகன்று போயிற்று.
———–
மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன்.–118-
சுந்தரப் பெருந்தோளினாய்- அழகிய பெரிய தோள்களை
உடைய இராமனே!; மைந்தரைப் பெற்று வானுயர் தோற்றத்து
மலர்ந்தார் என் துணைத்தாளின் பைந் துகள்களும் ஒக்கிலர்
ஆம் எனப் படைத்தாய்- நல்ல மக்களைப் பெற்று மிக உயர்ந்த
பெருமையுடன் விளங்கியவர்கள் கூட எனது இரண்டுகால்களில் உள்ள
சிறு தூசுக்கும் ஒப்பாகார் என்னும்படி நீ எனக்குச் சிறந்த பெருமையை
உண்டாக்கித் தந்தாய்; உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும்
பெற்று உயர்ந்தேன் – (தீவினையிலிருந்து) பிழைத்தவர்களுக்குப்
பெறுதற்கரிய மேல் உலகமும், புகழும் (மறுமைக்கும் இம்மைக்குமாகப்)
பெற்று (உன்னால் இருமையிலும்) உயர்ந்தேன்.
——–
‘பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்றகாட்சி;
புண்டரீகத்துப் புராதனன்தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!’ –119-
அழக- அழகனே!; நான் பண்டு தொழும் தேவரும் முனிவரும்-
நான் முன்பு வணங்குகின்ற தேவர்களும் முனிவர்களும்; எனைக்
கண்டு கொண்டு கைத்தலம் குவிக்கின்ற காட்சி பாராய்-
என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்து கைகளைக் குவித்து
வணங்குகிற காட்சியைப் பார்ப்பாயாக; புண்டரீகத்துப் புராதனன்
தன்னொடும் பொருந்தி- தாமரைத்தவிசில் உள்ள பழயவனாகிய
பிரமனோடும் கூடிச் சமானமாக; அண்டமூலத்து ஓர் ஆசனத்து
இருத்தினை- அண்டகோளத்தின் முகப்பின்கண் ஒப்பற்ற பீடத்தில்
என்ன இருக்கச் செய்தாய்.
————–
சீதையைத் தயரதன் தேற்றல்
10071.
என்று, மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக் கழல் வணங்கலும், கருணையால் தழுவி,
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும் புகழோன்;–120-
குன்றுபோன்று உள தோளினான்- மலைபோன்றுள்ள தோள்களை
உடையவனாகிய தயரதன்;என்று- என்று கூறி; மைந்தனை எடுத்து
இறுகுறத் தழுவி- மகனைத் தூக்கி நன்றாகத் தழுவிப் பின்னர்;
சீதையைக் குறுக- சீதை இருந்த இடத்தை அணுக; தன் துணைக்
கழல் வணங்கலும்- தனது இரண்டு அடிகளைப் பிராட்டி வணங்குதலும்;
கருணையால் தழுவி- அன்பு கலந்த கண்ணோட்டத்தால் அவளை
அருளி; நிகழ்த்த அரும் புகழோன் – கூறுதற்கரிய நின்ற புகழை
உடைய தயரதன்; மற்று இவை நிகழ்த்தினான்- பின்வரும்
சொற்களைச் சொன்னான்.
————
”நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு” என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். –121-
நங்கை! – சீதையே!; நின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கிபுக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல்
– உனது கற்பின் சிறப்பை உலகின் கண் நிலை நிறுத்த வேண்டி
‘நெருப்பின் கண் புகும்படியாக’ இராமன் கூறிய அதனை மனத்துக்
கொள்ளாதே; சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு, அது சரதம்-
உலகில் சந்தேகம் உற்றவர்கள் இவ்வாறு நெருப்பின் மூலமாகவும்
பிறவற்றின் மூலமாகவும் மெய்ப்பிக்கச் செய்து அதனால் ஐயம்
நீங்குதல் கண்கூடு; உலகில் இயல்பாக நடைபெறுவதே; கங்கை
நாடு உடைக் கணவனை முனிவுறக் கருதேல் – (அவ்வாறு
சாதிக்கச் செய்ததுபற்றி) கோசல நாட்டிற்கு அரசனான உன்
கணவனை வெறுக்கக் கருதாதே.
———
”’பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப் பொன்னுடைத் தூய்மை –
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ”கற்பினுக்கு அரசி” என்று, ”உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது” என்று எண்ணி, இப் பெரியோன்.–122-
”பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி-
பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம்
என உலகிற்குக் காண்பிப்பதற்காகத்தான் என்று மனத்தின்
கண் நினைத்தலே தகுதி (அதுபோல); இப்பெரியோன்-
குணங்களால் உயர்ந்த இவன்; உலகில் பின்னைக் காட்டுதற்கு
அரியது என்று எண்ணி உன்னை ‘கற்பினுக்கு அரசி’ என்று
காட்டினன் – உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல்
இயலாது என்று கருதி உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று
(இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.
——–
‘பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான்நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்’-123-
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமைப் பண்பு
இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! – பெண்ணாய்ப்
பிறந்தவர்களாகிய அருந்ததி முதலாகிய பெருமையின் எல்லை
கடந்தவர்களுக்கும் அணிகலம் போல உள்ள பெண்ணே!உனக்கு
பிறந்தகம் மண் – உனக்குப் பிறப்பிடம் இம் மண்ணாகும்;
(ஆனால்) நீ வான் நின்றும் வந்தாய்- நீ வீட்டுலகத்தின்
நின்றும் இங்கு வந்து அவதரித்தாய்; எண் பிறந்த நின்
குணங்களுக்கு இழுக்கு இனி இலையால்- உலகால் நன்கு
மதிக்கற்பாடு உடைய நின் சிறந்த குணங்களுக்கு யாதொரு
குறையும் இனி வராது.
———
தயரதன் இலக்குவனைப் பாராட்டல்
10075.
என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திரு மனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தன்னைத் தான் எனத் தழுவினன், கண்கள் நீர் ததும்ப.–124-
செம்மல்- தயரதன்; என்னச்சொல்லி- என்று இவ்வாறு
உரைத்து; அவ் ஏந்திழை திருமனத்து யாதும் உன்னச் செய்வது
ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்- அந்தச் சீதை
தன் நல்ல மனத்தில் சிறிதும் கருதுகின்ற வெறுப்பு இன்மை
நிகழ்ந்தபடியைத் தன் மனத்தில் அறிந்து மகிழ்ச்சி
அடைந்தான்; பின்னை- பிறகு; அவ் இளவலை- அந்த இளைய
பெருமாளாகிய இலக்குவனை; உள்அன்பு பிணிப்ப- மனத்தகத்துச்
சிறந்த அன்பு கட்டி இழுக்க; தன்னைத்தான் என கண்கள் நீர்
ததும்ப தழுவினன் – தானே தன்னைத் தழுவிக்கொள்வது போல
கண்களில் நீர் பெருகத் தழுவிக்கொண்டான்.
———-
கண்ணின் நீர்ப் பெருந் தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, ‘மைந்த!
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, நுமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய்.–125-
கண்ணின் நீர்ப்பெருந்தாரை- (தயரதன்) கண்களிலிருந்து
வழிகின்ற பெரிய நீர் ஒழுக்கானது; மற்றுஅவன் சடைக்கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழுதர- அந்த இலக்குவனது
சடாபாரமாகிய மண்ணிலே வெள்ளம்போலப் பெருக்கெடுத்து
இறங்கி வீழ; மைந்த! – இலக்குவனே!; நுமையனைத் தொடர்ந்து
உடன் போந்தாய்- உன் தமையனான இராமனைப் பின் பற்றி
அவனுடனே காடு சென்றாய்; (அதனால்) எண் இல் நீக்க
அரும்பிறவியும் என் நெஞ்சின் இறந்த புண்ணும் நீக்கினை-
கணக்கில்லாத நீக்குதற்கரிய உனது பிறவி நோயையும் என்
மனத்தில் மிக்கிருந்த புண்ணையும் போக்கிவிட்டாய்.
—————
10077.
‘புரந்தரன் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன்தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து, அறம் நிறுத்தினை – ஐய!’–126-
ஐய! – இலக்குவனே!; புரந்தரன் பெரும் பகைவனைப் போர்
வென்ற உன்தன் பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும்
பலரும் நிரந்தரம் புகில்கின்றது- இந்திரன் பகைவனாய
இந்திரசித்துவைப் போரின்கண் வென்ற உன்னுடைய விசாலத்து
உயர்ந்துள்ள தோள்வலிமைதான் தேவரும் பிறரும் நாடோறும்
சொல்லுவதாகும்; நீ இந்த உலகின் அரந்தை வெம்பகை துடைத்து
அறம் நிறுத்தினை- நீ இந்த உலகத்தின் துன்பமான கொடிய
அரக்கர்களாகிய பகையை அழித்து அறத்தை நிலைபெறும்படிச் செய்தாய்
——–
தயரதன் வரம் கேட்கக்கூற இராமன் வரம் கேட்டல்
10078.
‘என்று, பின்னரும், இராமனை, ‘யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர் குணத்தோய்!’ என, ‘உனை யான்
சென்று வானிடைக் கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப் பெற்றேன்; இனிப் பெறுவது என்?’ என்றான்.–127-
என்று- இலக்குவனை இவ்வாறு பாராட்டிவிட்டு; பின்னரும்-
பிறரும்; இராமனை- இராமனைப் பார்த்து; உயர்குணத்தோய்-
உத்தம குணங்களை உடையவனே! ‘யான் உனக்கு ஈவது ஒன்று
கூறுதி’ என- நான் உனக்குக் கொடுக்க வேண்டுவது ஒன்றைக்
கூறுக என்று கேட்ப (அதற்கு இராமன்); யான் உனை வானிடைச்
சென்று கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் இன்று
காணப் பெற்றேன் இனிப் பெறுவது என்? என்றான்
– நான் உன்னை விண்ணுலகத்திடத்தில் சென்று கண்டு துன்பம்
நீங்குவேன் என்று நினைத்திருந்தேன்; (ஆனால்) இன்று இங்கேயே
காணும் பேறு அடைந்தேன்; புதிதாக இனிப் பெறுவதற்கு என்ன
இருக்கிறது, என்று கூறினான்.
———————
10079.
‘ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’ என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!’ எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி.-128-
(தயரதன்,), ஆயினும் – ஆனாலும்; உனக்கு அமைந்தது ஒன்று
உரை என- உனக்குப் பொருந்திய தொன்றினைக் கேட்க என்று
சொல்ல; அழகன்- இராமன்; நீ தீயள் என்று துறந்த என்
தெய்வமும் மகனும் – உன்னால் தீயவள் என்று துறக்கப் பட்ட என்
தெய்வமாகிய கைகேயியும், பரதனும்; ‘தாயும் தம்பியும் ஆம்
வரம் தருக’ என தாழ்ந்தான் – எனக்குத் தாயும் தம்பியும்
ஆகும்படியான வரத்தைத் தருக எனக் கேட்டு வணங்கினான்; (அது
கேட்டு அவன் அருள் திறம் நினைந்து) உயிர் எலாம் வழுத்தி
– உயிர்கள் எல்லாம் அவனை வணங்கி; வாய்திறந்து எழுந்து
ஆர்த்தன- எழுந்து வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.
—————
‘வரத கேள்!’ எனத் தயரதன் உரை செய்வான்; ‘மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து, இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம்’ என்றான், தழீஇய கை தளர.–129-
வரத – இராமனே!; கேள் என- கேட்பாயாக என்று; தயரதன்
உரை செய்வான்- தயரதசக்கரவர்த்தி அவனுக்குப் பதில்கூறுவான்; மறுஇல் பரதன் அன்னது பெறுக- குற்றமற்ற
பரதன் (நீ கேட்ட வண்ணம்) என் மகனாகி உனக்குத்
தம்பியாம் உரிமை பெறுக; தான் முடியினைப் பறித்து- உனக்கு
அளிக்க இருந்த முடியினைத் தானே கூடாது என்று பிடுங்கி;
இவ்விரத வேடம் மற்று உதவிய பாவிமேல்- இம் மரவுரிக்
கோலத்தை வேறாக உனக்குத் தந்த பாவியாகிய கைகேயிபால்;
விளிவு சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர-
கோபமானது உறுதியாக என்னைவிட்டு நீங்கவில்லை என்று
இராமனைத் தழுவிக் கொண்டிருந்தகைகள் தழுவுதல் விட்டுத்
தளரக் கூறினான்.
————
கைகேயியின் பால் தயரதன் கோபம் தணிந்து விண் ஏகுதல்
10081.
‘ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ?’ என்றான், அவன் சலம் தவிர்ந்தான்.–130-
(இராமன்) ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள்
அரசை- உடலோடு கூடிய சீவாத்மாக்களைச் சிறிதும் தவறு
வராமல் பாதுகாக்கும் பெரிய அரசுரிமையை; வான் பிழைக்கு இது
முதல் எனாது- பெருங்குற்றத்திற்கெல்லாம் இது அடிப்படையான
காரணம் ஆகும் என்று கருதாமல்; ஆள்வுற மதித்து- ஏற்று ஆளக்
கருதி; யான் பிழைத்தது அல்லால்- நான் தவறு செய்தேனே
அல்லாமல்; என்னை ஈன்ற எம்பிராட்டி- என்னைப் பெற்ற
மாதாவாகிய கைகேயி அன்னையான; தான் பிழைத்தது உண்டோ?
என்றான் – அவள் தவறு செய்தது உண்டோ என்று கேட்டான்;
அவன் சலம் தவிர்ந்தான்- தயரதன் இராமன்
————-
எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
‘தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினார்க்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு’ என்றார், தேவரும் இரங்கி. –131-
எவ் வரங்களும் கடந்தவன் – யாரிடமும் வரம் வேண்டுமாறு
இல்லாது, எல்லார்க்கும் வரம் ஈபவன் ஆதலின்) எல்லா வரங்களுக்கும் அப்பாற்பட்டவனாகிய இராமன்; அப்பொருள் இசைப்ப- அவ்வாறு
கூற; ‘தெவ்வரம்பு அறுகானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ்வரங்களும் இரண்டு- வரம்பற்ற பகைவர்களை உடைய
காட்டுக்கு இராமனை அனுப்பிய கைகேயிக்கு அளித்த அந்த
வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த இவ்வரங்களும்
இரண்டு’- அவ்வரங்களின்படி நடந்து செய்து முடித்தவனாகிய
இராமனுக்குத் தந்த இந்த வரங்களும் இரண்டு; என்றார்- என்று
கூறினர்;தேவரும் இரங்கி- தேவர்களும் மனம் உருகி.
————-
வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை,மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி,விண்ணிடையே
உரவு மானம்மீது ஏகினன் – உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன்.–132-
உம்பரும் உலகும் பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து
உறுபுகழ் படைத்தோன் – தேவர்களும் உலகமும் பரவுகின்ற
சத்தியத்துக்காகத் தன்னுயிரைத் தந்து பெரும்புகழ் படைத்த
தயரதன்; இரண்டு வரம் அளித்து- இராமனுக்கு இரண்டு வரம்
தந்து; அழகனை இளவலை, மலர்மேல் விரவு பொன்னினை
மண்ணிடை நிறுத்தி, உரவு மானம் மீது விண்ணிடையே
ஏகினன்- இராமனை, இலக்குவனை, தாமரை மேல் வீற்றிருக்கும்
திருமகளாகிய சீதையைப் பூமியின்கண் நிற்கும்படிச்செய்து, வலிய
விமானம்மேல் ஏறி மேல் உலகத்திடத்துச் சென்று சேர்ந்தான்.
———
இராமன் தேவர்களிடம் வரம்வேண்டல்
10084.
கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, ”வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால், என, ‘அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக!’ என விளம்பி.–133-
கோட்டு வார் சிலைக்குரிசிலை அமரர்தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா- வளைந்த நீண்ட வில்லேந்திய
இராமனைத் தேவர்கூட்டங்கள் திரும்பவும் பார்த்து; வீர! –
வீரனே!; நீ வேண்டுவ வரங்கள் கேட்டியால்’ என- நீ
விரும்பும் வரங்களைக் கேட்பாயாக என்று கூற; (இராமன்)
‘அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில் வீட்ட மாண்டுள குரங்கு
எலாம் எழுக’ என விளம்பி- அரக்கர்கள் மிக்கு எழுந்த
போரிலே கொல்ல இறந்து போன குரங்குகள் எல்லாம் மீண்டும்
உயிர் பெற்று எழுக எனக் கேட்டு;
———
பின்னும் ஓர் வரம், ‘ வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக’ என்றான். –134-
பின்னும் ஓர் வரம்- மீண்டும் ஒரு வரம்; வானரப் பெருங்
கடல் பெயர்த்து மன்னு- வானர சேனையானது இடம் மாறிச்
சென்று நிலைக்கின்ற; பல்வனம், மால் வரைக் குலங்கள்,மற்று
இன்ன துன் இடங்கள் – பல காடுகள், பெரிய மலைக் கூட்டங்கள்,
மற்றும் இதுபோன்ற வானரம் வாழ் இடங்கள் எல்லாம்; காய், கனி,
கிழங்கோடு தேன் துற்ற இன் உண் நீர் உளவாக’- காயும்
பழமும் கிழங்குகளும் நிறைந்து, தேன்களும் நெருங்க, உண்ணுதற்கு
இனிய குடிநீரும் நிரம்பப் பெறுக; ‘என இயம்பிடுக’- என்று வரம்
தருக; என்றான்- என்று கேட்டான்.
———-
வரம் தரும் முதல், மழுவலான், முனிவரர், வானோர்
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனி புகழ்ந்து ஆங்கு,
‘அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்கு இனம் பெறுக!’ என்றனர், உள்ளமும் குளிர்ப்பார்.–135-
வரம் தரும் முதல்- வரம் கொடுக்கும் தன்மையனாய பிரமன்;
மழுவலான் – சிவன்; முனிவரர், வானோர் – முனிவர்கள்,
தேவர்கள்; புரந்தராதி மற்று ஏனையோர் – இந்திரன் முதலாக
மற்றுள்ளவர்கள்; தனித்தனி ஆங்கு புகழ்ந்து- தனித்தனியாக
இராமனை அவ்விடத்தே பாராட்டி; அரந்தை வெம்பிறப்பு
அறுக்கும் நாயக! – துன்பம் தரும் பிறவியை வேரோடு களையும்
பெருமானே!; ‘குரங்கு இனம் – குரங்குக்கூட்டம்; நினது அருளால்
– உன்னுடைய பரமகருணையால்; பெறுக’ என்றனர் உள்ளமும்
குளிர்ப்பார்- நீ கேட்ட அனைத்தையும் பெறுவதாக என்று
மனம் குளிர்ந்து கூறினார்கள்.
———-
முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புறச் செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. –136-
முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த- போர்
தொடங்கிய முதல் நாள் முதலாக இறுதி நாள் வரையும் இறந்துபோன;
அந்த வானரம் அடங்கலும் எழுந்து- அந்த குரங்குகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்து; உடன் ஆர்த்து- சேர்ந்து பேரொலி செய்து;
சிந்தை யோடு கண்களிப்புற- மனமும் கண்ணும் மகிழ்ச்சி அடைய;
செருஎலாம் நினையா- நடந்த போர்களை எல்லாம் நினைத்து;
மகிழ்ந்து வந்து தாமரைக் கண்ணனை வணங்கின- உவகையோடு
வந்து இராமபிரானைக் கும்பிட்டன.
————-
கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்:–137-
கும்பகன்னனோடு இந்திர சித்து-; வெங்குலப் போர் வெம்பு
வெஞ்சினத்து இராவணன் முதலிய வீரர் – கொடிய உயர்ந்த
போரில் சீறுகின்ற கொடுஞ்சினத்தை உடைய இராவணன் முதலிய
வீரர்களும்; அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப
– அம்பினால் இறந்து போன குரங்குகள் ஒன்று சேர வந்து
ஆரவாரம் செய்ய; உம்பர் யாவரும்- தேவர்கள் எல்லாம்;
இராமனைப் பார்த்து-; இவை உரைத்தார்- பின்
வருவனவற்றைச் சொன்னார்கள்.
———-
தேவர்கள் இராமனுக்கு உரைத்தல்
10089.
‘இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் கட்டு.–138-
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து- தேய்பிறைப்
பக்கத்து அட்டமித்திதியில் இலங்கையுள்ள இடமான சுவேலமலையில்
வந்து தங்கி; எயில் இலங்கைப் புடை அவாவுறச் சேனையை
வளைப்புறப் போக்கி- மதில் சூழ்ந்த இலங்கையைச் சுற்றிப
பக்கத்தில் விரும்பி வளைத்துக் கொள்ளும்படி சேனையைச்
செலுத்தி; படைஅவாவுறும் அரக்கர்தம் குலம் முற்றும்
படுத்து- படையின் கண் எப்பொழுதும் ஆசைப்படுகின்ற
அரக்கர்கள் குலம் முழுவதையும் கொன்று; கடை உவாவினில்-
இறுதியான அமாவாசை நாளில்; இராவணன் தன்னையும் கட்டு-
இராவணனையும் அழித்து.
————
”வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின்” எனும்படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த;
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. –139-
வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின் எனும்படி மடித்த கஞ்ச
நாள் மலர்க் கையினாய்- இவ்வுலகத்தில் வஞ்சகர்களே
இல்லை என்னும்படி அழித்தொழித்த தாமரையின் அன்றலர்ந்த
மலர்போலும் கைகளை உடைய இராகவனே!; அன்னை சொல் கடவா-
கைகேயியாகிய தாய் சொன்ன சொல்லை மீறாத; அஞ்சொடு அஞ்சு
நான்கு எனும் ஆண்டு போய் முடிந்த- பதினான்கு என்கின்ற
ஆண்டுகள் சென்று கழிந்து விட்டன; இன்று பஞ்சமிப் பெயர்
படைத்துள திதி பயந்த- இன்றைய நாள் பஞ்சமி என்னும்
பெயர் பெற்றுள்ள திதியைப் பெற்றுள்ளது.
—————-
‘இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! நீ போதியால்’ என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். –140-
‘வென்றிவீர! – வெற்றியை உடைய வீரனே!; நீ இன்று சென்று
பரதனை எய்திலை என்னின் அவன் எரியிடை பொன்றுமால்- நீ
இன்றே போய் அயோத்தியில் பரதனை அடையவில்லை ஆனால் அப்பரதன் நெருப்பில் வீழ்ந்து
உயிர்துறப்பான்; நீ போதியால்’ – நீ (விரைந்து அயோத்திக்குப்
போவாயாக; என்பது விளம்பா- என்பதைச் சொல்லி; நின்ற
தேவர்கள் நீங்கினார் – (வரம் கொடுத்து ஆண்டு) நின்ற
தேவர்கள் விலகிச் சென்றார்கள்; இராகவன் – ; நினைந்தான்
– புறப்பட எண்ணினான்.
———
வீடணன் புட்பக விமானம் கொணர்தல்
‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?’ என, ‘இன்றே
தூண்டு மானம் உண்டு’ என்று, அடல் வீடணன் தொழுதான். 141-
(இராமன்) ‘ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் ஆயின்-
பதினான்கு ஆண்டுகளும் இன்றோடு முடிந்து போகுமானால்;பரதனே
மாயின் – பரதன் இறந்து படுவானாயின்; இனி என் குலம்
மாண்டதாம்- இனிமேல் என் சூரிய குலம் முடிந்து போயிற்று
என்றே ஆகும்; ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ?’ என-
விரைந்து அயோத்திக்குச் செல்ல ஓர் வாகனம் இருக்கிறதா? என்று
கேட்க; அடல் வீடணன்- வலிய வீடணன்; ‘இன்றே தூண்டு
மானம் உண்டு’ என்று தொழுதான்’- இன்றைக்கே அயோத்தி
சென்று சேரச் செலுத்துகின்ற விமானம் உள்ளது என்று சொல்லி
வணங்கினான்.
———–
வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின் நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று’ எனப் புகன்றான்.–142-
(மீண்டும் வீடணன்)’ வள்ளல்! – இராமனே!; தனதனில் இரு
நிதியோடு வாங்கினான் – குபேரனிடத்திருந்து (இராவணன்)
பெருஞ்செல்வத்தோடு (இவ்விமானத்தைக்) கைப்பற்றிக்
கொண்டான்; ஓங்குமால்- (இவ்விமானம்) உயர்ந்து செல்ல
வல்லது;வெள்ளம் ஏழுபஃது ஏறினும், ஒல்காது- எழுபது வெள்ளம்
குரங்குச் சேனைகளும் ஏறினாலும் தளராது; ஈங்கு உளார் எலாம்
இவருவது- இங்கே உள்ளவர்கள் அனைவரும் ஏறிச் செல்லக்
கூடியது; இவரின்- இதில் ஏறினாய் ஆனால்; நீ இஞ்ஞான்று
பூங் குலாநகர் இனிது புகுதி’- நீ இன்றைக்கே பொலிவு
நிறைந்த அயோத்தி நகர்க்கு இனிமையாகப் போய்ச் சேர்வாய்;
எனப் புகன்றான்- என்று சொன்னான்.
————
‘இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு’ என்றே
மயக்கு இலான் சொல, ‘கொணருதி வல்லையின்’ என்றான்.–143-
மயக்கு இலான்- மனமயக்கமாகிய அஞ்ஞானம் அற்ற மகா
ஞானியாகிய வீடணன்; ‘இயக்கர் வேந்தனுக்கு – யக்ஷர்களின்
அரசனான குபேரனுக்கு; அருமறைக் கிழவன் – வேதத்தலைவனாகிய
பிரமன்; அன்று ஈந்த – முன்னாளில் கொடுத்ததும்; துயக்கு
இலாதவர் மனம் எனத் தூயது- குற்றமற்ற ஞானியர் மனம் போலத்
தூய்மையானதும்; சுரர்கள் வியக்க வான் செலும் – தேவர்களும்
அதிசயிக்கும்படி வானவீதியில் செல்வதும் ஆகிய; புட்பக விமானம்
உண்டு என்றே சொல-; (அதுகேட்ட இராமன்) ‘வல்லையின்
கொணருதி’- விரைவாகக் கொண்டு வருக; என்றான் –
————
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், –144-
அனந்தம் அண்ட கோடிகள் ஒத்து- கணக்கற்ற உலக
உருண்டைகள் கோடிக்கணக்காகச் சேர்ந்தாற் போலப் பெரியதாய்;
ஆயிரம் அருக்கர் விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க – ஆயிரம் சூரியர்கள் ஒருசேர வெளிப்பட்டுப்
பிரகாசித்தாற் போலத் தன் பேரொளியால் ஆகாயத்திடத்துத் திக்குகள்
எல்லாம் விளக்கமுறவும்; ஆயிரகோடி கண்டைகள் மழை எனக்
கலிப்ப- (தன்னிடம் கட்டிய) ஆயிரகோடிக் கணக்கான பெரிய மணிகள்
மழை போல ஒலிக்கவும் (புட்பக விமானத்தை) அரக்கர்தம்
கோமான் – அரக்கர்க்கு அரசனான வீடணன்; நொடியினின்
கொண்டு அணைந்தனன் – ஒரு மாத்திரைப் பொழுதில் (இராமன்
முன்) கொண்டு வந்து சேர்த்தான்.
————–
இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்
‘அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, ‘இனி நம்
வினையம் முற்றியது’ என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. -145-
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக- அத்தகைய
புட்பக விமானமானது வந்து தரையிறங்க; இனிய சிந்தனை இராகவன்
– நற்சிந்தனைகளை உடைய இராமன்; உவகையோடு – மகிழ்ச்சியோடு;
‘இனி நம் வினையம் முற்றியது’ என்று கொண்டு ஏறினன்
– இனி (பரதனைக் காத்தலாகிய) நம் செயல் நிறைவேறியது என்று
மனத்திற் கொண்டு ஏறினான்; விண்ணோர் ஆசிகள் புகன்று
புனைமலர் சொரிந்து ஆரவாரித்தனர் – தேவர்கள் வாழ்த்துரைத்து
சூடும் மலர்களைத் தூவி மகிழ்வொலி செய்தனர்.
————–
சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்
வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி’ என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான்.–146-
வான்கற்பிற்கு இணங்கர் இன்மையாள் – சிறந்த கற்பிற்குத்
தன்னோடு ஒப்பவர்கள் இல்லாது உயர்ந்தாளாகிய சீதை; வணங்கு
நுண் இடைத் திரிசடை வணங்க- வளைந்த மிகச் சிறியதாகிய
இடையை உடைய திரிசடை வந்து வணங்க; நோக்கி – அவளைப்
பார்த்து; ‘ஓர் இடர் இன்றி இலங்கைக்கு அணங்குதான் என
இருத்தி’ என்று- ஒரு சிறிதும் துன்பம் இல்லாமல் இலங்கை
நகரத்துக்கு ஒரு தெய்வப் பெண்ணாக இருப்பாயாக என்று ஆசி
கூறி; ஐயன் மாட்டு அணைந்தாள்- இராமபிரானிடம்
புட்பகவிமானத்தில் வந்து சேர்ந்தாள்; மணம் கொள் வேல்
இளம் கோளரி மானம் மீப் படர்ந்தான் – புலால் மணம்
கமழும் வேலையுடைய இளைய சிங்கமாகிய இலக்குவன்
விமானத்தின் மேல் ஏறினான்.
————
விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: -147-
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து- உலகம் உண்ட
திருமாலினது மணிகளால் அழகு பெற்ற வயிற்றை ஒத்து; அனிலன்
கண்ட வேகமும் குறைதர – வாயு தேவனது அளப்பரிய ஊழிக்கால
வேகமும் குறைவு என்னும்படி; நினைவு எனும் தகைத்தாய்- மனோ
வேகம் என்று சொல்லும் படியாக; விண்தலம் திகழ் விமான புட்பகம்
என்னும் அதன் மேல்- விண்ணிடத்தே விளங்குகின்ற புட்பக விமானம்
என்கின்ற அதன்மேல்;கொண்ட கொண்டல்- ஏறிய கார்நிறத்தண்ணல்;
தன் துணைவரைப் பார்த்து- தன் துணைவர்களாகிய விபீடணன்,
சுக்ரீவன் முதலியவர்களைப் பார்த்து; இவை குணித்தான்- பின்
வரும்சொற்களை ஆலோசித்துக் கூறலானான்.
————–
வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். –148-
விமலன் – மலமற்றவனாகிய பரம்பொருள்; வீடணன்தனை
அன்புற நோக்குறா – வீடணனை அன்பு பொருந்தப் பார்த்து; ‘தோடு
அணைந்த தார் மவுலியாய்!- இதழ்கள் நெருங்கிய மாலை அணிந்த
முடியை உடையவனே!; சொல்வது ஒன்று உளது- உனக்குச் சொல்ல
வேண்டுவது ஒன்று இருக்கிறது; நீள் அரசின் – நீண்ட இலங்கை
அரசில்; உன் மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி –
உன்பக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு இன்பத்தையே கொடுத்து; நாடு
அணைந்தவர் புகழ்ந்திட – உன் நாட்டில் உள்ளவர் அனைவரும்
புகழுமாறு; நலத்தால் வீற்றிரு- நன்மையோடு அரசு வீற்றிருப்பாயாக.
—————
‘நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால்’ எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். –149-
நான் மறை புகன்றான் – நான்கு வேதங்களையும் சொல்லிய
இராமன். நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
– நீதி வழி இதுவே என உன்னைக் கண்டு உலகம் விளங்கிக்கொள்ளும்
தன்மையான குணம் செயல்களை உடையவனே! ஆதி நான் மறைக்
கிழவன் நின் குலம் என அமைந்தாய்! – மூலமான பிரமதேவன்
உன்னுடைய குலம் என்று சொல்லும்படி தோன்றியவனே!; எதிலார்
தொழும் இலங்கை மாநகரினுள் – பகைவரும் அஞ்சி வணங்கும்
இலங்கை எனும் பெரிய நகரத்துள்; ‘இனி நீ போதியால்’ எனப்
புகன்றனன்- இனி நீ செல்வாயாக என்று சொன்னான்.
———-
‘சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க!’ எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். -150-
ஈறு இலாப் புகழோன்- முடிவில்லாத புகழை உடைய இராமன்;
‘சுக்கிரீவ!; நின் தோள் உடை வன்மையால் தசம் தொகு
சுக்கிரீவனைத் தடிந்து- உன்னுடைய தோள் பலத்தால் பத்து
என்று தொக்க அம் முடிகளை உடைய இராவணனைக் கொன்று;
வெம்படையினால் அசைந்த- கொடிய போர் ஆயுதங்களால்
தளர்ந்த; மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு-
அளவுகடந்த குரங்குச் சேனையின் களைப்பு நீங்கும் படி
திரும்பி; ஊர் புக்கு வாழ்க!’- கிட்கிந்தை புகுந்து வாழ்வாயாக;
எனப் புகன்றனன்- என்று கூறினான்.
—————-
வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். -151
வாலி சேயினை- அங்கதனை; சாம்பனை, பனசனை வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத்தலைவரை -; நெடிய காலின்-
நீண்ட காலால்; வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை- கடலைத் தாண்டித் திரும்ப வந்துரைத்த தன்
கருணையைபோன்ற அனும வீரனை; நோக்கி- பார்த்து; மற்று
இம்மொழி புகன்றான்- வேறு இந்த சொற்களை உரைத்தான்.
———
ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
‘உய்கிலேம், நினை நீங்கின்’ என்று இனையன உரைத்தார். -152-
ஐயன் இம்மொழி புகன்றிட – இராமன் இச்சொற்களைச்
சொல்ல; அவர்கள் துணுக்கமோடு – துணைவர்கள் நடுக்கத்தோடு;
மெய்யும் ஆவியும் குலைதர – உடம்பும் உயிரும் நிலைதடுமாற;
விழிகள் நீர் ததும்ப – கண்களில் நீர் குலுங்க; செய்ய தாமரைத்
தோள்இணை முடி உறச் சேர்த்தி – இராமனது சிவந்த
தாமரையனைய திருவடி இணைகளைத் தங்கள் முடியின்கண் பொருந்த
வணங்கி; ‘நின்னை நீங்கின் உய்கிலேம்’ என்று – உன்னைப்
பிரிந்தால் உயிர் வாழேம் என்று; இனையனை உரைத்தார்-
பின்வரும் வாசகங்களைச் சொன்னார்கள்.
———–
அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்
‘பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள்’ என்றனர்-உள் அன்பு பிணிப்பார். –153-
உள்அன்பு பிணிப்பார் – இராமனிடத்து அகம் நிறைந்த
அன்பினால் கட்டுப்பட்டவராய் அவர்; ‘பாரமாமதில்
அயோத்தியில் எய்தி – மிகப்பெரிய மதிலாற் சுற்றப்பட்ட
அயோத்தி மாநகரை அடைந்து; நின் பைம்பொன் ஆர மாமுடிக்
கோலமும் செவ்வியும் அழகும் – (அங்கே) உன்னுடைய
பசியபொன்னாலும் முத்தாலும் ஆகிய பெரிய முடியை அணிந்து
கொள்ளும் பட்டாபிடேகக் காட்சியும் ஒளியும் அழகும்; யாம்
சோர்விலாது காண்குறும் அளவையும்- நாங்கள்
சோர்வில்லாமல் கண்டு மகிழும் வரை; தொடர்ந்து பேரவே
அருள்’ – உன்னைப் பின்பற்றி வந்து திரும்புவதற்கு அருள்
செய்க; என்றனர்- .
————-
இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, ‘நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது’ என்று உரைத்தனன்-பெரியோன் -154-
பெரியோன்- உயர்ந்தோனாகிய இராமன்; அவன் அன்பினால்
மொழிந்த வாசகங்களும் – துணைவர்கள் தன்மாட்டுக் கொண்ட
உள்ளன்பால் கூறிய வார்த்தைகளும்; துன்பம் எய்திய
அவர்கள் நடுக்கமும்- துன்பம் அடைந்தபடியால் அவர்களுக்கு
உண்டாகிய நடுக்கத்தையும்; நோக்கி- பார்த்து;நீர்துளங்கல்-
நீங்கள் கலங்க வேண்டா; முன்பு நான் நினைத்திருந்தது அப்பரிசு
– முன்னால் நான் மனத்தில் எண்ணியது (உங்களையும் அயோத்திக்கு
உடன் அழைத்துச் செல்வதாகிய) அதையேதான்; நும் முயற்சி பின்பு
காணுமாறு உரைத்தது – உங்கள் செயலைப் பின்னால் அறியும்படி
அவ்வாறு கூறினேன்; என்று உரைத்தான் – என்பதாகக் கூறினான்.
———
ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 155-
ஐயன் வாசகம் கேட்டலும் – இராமன் கூறிய அவ்வார்த்தைகளைக்
கேட்டவுடன்; அரிகுலத்து அரசும் மொய்கொள் சேனையும்
இலங்கையர் வேந்தனும் முதலோர்- குரங்குச் கூட்டத்து
அரசனாகிய சுக்ரீவனும் நெருங்கிய குரங்குச் சேனையும் இலங்கை
அரசனாகிய வீடணனும் முதலானவர்கள்; வையம் ஆளுடை
நாயகன் மலர்ச்சரண் வணங்கி- உலகைத் தன் அடிமையாக
உடைய இராமபிரானது மலர்போன்ற அடிகளை வழிபட்டு;
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார் –
உடம்போடு அரிய சுவர்க்கம் போனவர்களைப் போலப் பெரு
மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
————-
யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்
அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, ‘வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம்’ என்று, இராகவன் இசைத்தான். 156-
இராகவன்- இராமன்; அனையது ஆகிய சேனையோடு அரசனை-
அப்படிப்பட்டதாகிய குரங்குச் சேனையோடு அரசனாகிய சுக்ரீவனை;
அனிலன் தனயன் ஆதியாம் படைப்பெருந் தலைவர்கள் தம்மை –
காற்றின் மகனாகிய அனுமன் முதலாகிய பெரிய சேனைத் தலைவர்களை;
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை- கட்டப்பட்ட நீண்ட
வாரினை உடைய வீரக் கழல் அணிந்த வீடணனை; ‘இங்கு வந்து
இனிதின் விமானம் ஏறுமின்’ என்று இசைத்தான்- இங்கே வந்து
மகிழ்வாக விமானத்தில் ஏறி அமருங்கள் என்று சொன்னான்.
————-
சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 157-
சொன்ன வாசகம் பிற்பட- (இராமன்) சொன்ன வார்த்தை
பிற்படும்படி; (தாம் முற்பட்டு அவ்வளவு விரைவாக) சூரியன்
மகனும்- சுக்ரீவனும்; மன்னுவீரரும் எழுபது வெள்ள வானரரும்-
நிலைபெற்ற அனுமன், அங்கதன் முதலிய வீரரும் எழுபது வெள்ளம்
குரங்குச் சேனையும்; கன்னி மாமதில் இலங்கை மன்னொடு
கடற்படையும் – பிறரால் கைப்பற்றப்படாத பெருமதிலை உடைய
இலங்கை அரசனாகிய வீடணனோடு அவனது கடல் போன்ற அரக்கர்
படையும்; நெடும் புட்பகம் மிசை ஒரு சூழல் துன்னினார் –
மிகப்பெரிய புட்பகவிமானத்தின் மேல் ஒரு ஓரத்தில் நெருங்கி
அமர்ந்தார்கள்.
——————
பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 158-
(புட்பகம்) பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம் மிகும் – கீழ்ஏழ்;
மேல் ஏழ் என அடுக்கிக் கூறப்படும் பதினான்கு உலகங்கள்
பலவற்றினும் உயர்த்துக் கூறப்படும் உயிர் வர்க்கங்கள்
அனைத்தும் ஏறினாலும் வெற்றிடமானது மிகுதியாக இருக்கும்;
இதன் நிலை- இந்த புட்பகவிமானத்தின் தன்மையை; முத்தர்
ஆனவர் மொழிகுவது அல்லால் – வீடு பெற்ற மெய்ஞ்ஞானிகள்
தம் ஞானத்தால் கூறுவதற்கு முடியுமே அல்லாமல்; இத்தராதலத்து
– இம் மண்ணுலகில்; இயம்புதற்கு யாரே உரியவர்-
சொல்லுவதற்கு யாரால் இயலும். (இயலாது என்றபடி)
———-
புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி
எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 159-
விழுமிய குணத்து வீரன்- சிறந்த நற்குணங்களால் பெருமை
பெற்ற இராமன்; எழுபது வெள்ளத்தோரும் இரவி கான் முளையும்
எண்ணின் வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும்
சூழ – எழுபது வெள்ளம் குரங்குச் சேனையில் உள்ளாரும் சுக்ரீவனும்
கருத்தில் சிறிதும் குறையில்லாத வீடணனும் மிகப் பெரிய அவனது
அரக்கர்படையும் சுற்றியிருப்ப; தழுவு சீர் இளைய கோவும் சனகன்
மாமயிலும் போற்ற- புகழ் தழுவும் இலக்குவனும் சானகியும் துதிக்க;
விமானத்து உம்பர் விளங்கினன் – விமானத்தின் மேல் விளக்க
முற்றுத் தோன்றினான்.
————–
அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 160-
ஐயன் புட்பகம் அண்டமே போன்றது- இராமன் ஏறியிருந்த
புட்பகவிமானம் அண்ட உருண்டையைப் போல் இருந்தது; அண்டத்து
உம்பர் – அவ் அண்டத்தின் மேலாக;எண் தரும் குணங்கள் இன்றி
முதல் இடை ஈறு இன்றி ஆகி பண்டை நான் மறைக்கும் எட்டாப்
பரஞ்சுடர் பொலிவதே போல்- நினைத்தற்குரிய குணங்கள்
இல்லாமல். பிறப்பு வளர்ப்பு அழிவு இல்லாததாய் ஆகி பழைய நால்
வேதங்களுக்கும் காணக்கிடைக்காத பரம்பொருள் விளங்கும் தன்மை
போல; புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் –
தாமரை மலர் போன்ற கண்களை உடைய வெற்றி பெற்ற
காத்தற்கடவுளாகிய திருமால் விளங்கினான்.
——————-
தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர்ச் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வெற்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந்தலைவர் தாமும்,
மானுட வடிவம் கொண்டார், வள்ளல்தன் வாய்மைதன்னால்.–161-
வள்ளல் தன் வாய்மை தன்னால்- இராமபிரானது அருள் மொழி
ஆற்றலால்; தேனுடை அலங்கல் மௌலிச்செங்கதிர்ச் செல்வன்
சேயும்- தேன் பொருந்திய மாலைசூடிய முடியணிந்த சூரியன்
மகனாய சுக்கிரீவனும்; மீனுடை அகழி வேலை இலங்கையர்
வேந்தும்- மீன் பொருந்திய கடலை அகழியாக உடைய
இலங்கைக்கு அரசனாகிய வீடணனும்; வெற்றித் தானையும்- வெற்றி பெற்ற சேனையும்; பிறரும் மற்றைப்
படைப்பெருந்தலைவர் தாமும்- மற்றவர்களும் ஏனைய
சேனைத்தலைவர்களும் (குரக்கு வடிவும் அரக்க வடிவும் நீங்கி);
மானுட வடிவம் கொண்டார்- மனித வடிவு கொண்டார்கள்.
———-
இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்
குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: –162-
மானம் – விமானம்; குடதிசை மறைந்து பின்னர்க் குணதிசை
உதயம் செய்வான்- மேற்கில் மறைந்து பிறகு கிழக்கில்
தோன்றுபவனாகிய சூரியன்; வடதிசை அயனம் உன்னி வருவதே
கடுப்ப- (தென்திசையிலிருந்து) வடக்கே நோக்கிச் செலல் கருதி
வருவதை ஒப்ப;ஒரு சிறிது தடை இன்று ஆகி- ஒரு சிறிய
தடை கூட இல்லாமல்; வான் தாவி படரும் வேலை- விண்ணில்
பறந்து செல்கின்ற சமையத்தில்;ஐயன்- இராமன்; படைஅமை
விழியாட்கு- வேலும் வாளும் போல கண்களையுடைய
பிராட்டிக்கு; இனையன பகரலுற்றான்- பின்வருவனவற்றைக்
கூறலானான். அயனம் – செலவு.
———–
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையோடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும்.-163-
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்-
வெற்றியுடைய வீடணன் கொண்டுவந்த புட்பகத்தின் மேல்; ஒன்றும்
நல் சீதையோடும் வென்று உயர் சேனையோடும்- தன்னோடு
ஒன்றிய நல்ல பிராட்டியோடும் வெற்றியால் உயர்ந்த சேனைகளோடும்;
இராமனும் விரைவின் எய்தி- இராமனும் வேகமாக அடைந்து;
உம்பரும் பிறரும் காண- தேவரும் மற்றவர்களும் கண்டு
கொண்டிருக்க; தேவிக்கு- சீதைக்கு; தென்திசை இலங்கை
ஆதி தெரியக் காட்டும் – தெற்கே உள்ள இலங்கை முதலாக
அனைத்தையும் நன்கு விளங்கக் காண்பிப்பானாயினன்.
————-
இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன் மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன்தன் வாயில்
லந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் கட்டது’ என்றான்–164-
‘இலங்கையை வலம் செய்து ஏக’ என நினைத்திடுமுன்-
இலங்கையை வலமாகச் சுற்றிக்கொண்டு செல்லட்டும் என்று
(இராமன்) மனத்தில் நினைக்கும் முன்னர் (நினைப்பறிந்தது
போல); மானம் வலம் கிளர் கீழை வாயில் வர – புட்பகம்
வெற்றி உயர்ந்த கிழக்கு வாசலுக்கு வர; (இராமன் சீதைக்கு)
‘நீலன் நலம் கிளர் கையின் பிரகத்தன் மாண்டது இவண்’ என
– குரங்குச் சேனைத்தலைவன் நீலனது நன்மைவிளங்கிய
கையினால் இராவண சேனைத்தலைவன் பிரகத்தன் மாண்டது
இவ்விடம் என்று சொல்ல; நமன் தன் வாயில் கலந்திட-
யமனது வாசலாகிய தெற்கு வாசலுக்கு விமானம் வர; ‘சுபாரிசன்
கட்டது ஈங்குக் கண்டாய்’ என்றான்- பெரும் பக்கனை
அழித்தது இங்கேதான் என்பதை அறிவாயாக என்றான் இராமன்.
———-
குடதிசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,
வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான்.–165-
குடதிசை வாயில் ஏக- விமானம் மேற்குத் திசை வாசலை
அடைய; குன்று அரிந்தவனை வென்ற விடநிகர் மேகநாதன்
இளவலால் வீழ்ந்தது’ என்முன்- மலையின் சிறகுகளை அரிந்த
இந்திரனை வென்ற கொடுவிடத்தை ஒத்த இந்திரசித்து
இலக்குவனால் இறந்தது (இங்கே) என்று சொல்வதற்கு முன்;
வடதிசை வாயில் மேவ- இலங்கையின் வடக்கு வாசலை விமானம்
அடைய; இராவணன் மவுலி பத்தும் உடலமும் இழந்தது இங்கு’
என்று உணர்த்தி- இராவணன் கிரீடத்தலை பத்தும் தன் பேருடலமும்
இழந்தது இங்கேதான் என்று சீதைக்கு அறியச் சொல்லி; வேறு
உரைக்கலுற்றான்- வேறு செய்திகள் சொல்லத் தொடங்கினான்.
————
இராமன் சீதைக்குச் சேதுவைக் காட்டல்
10117.
‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது இச் சேது கண்டாய்.–166-
நன்னுதல்! – அழகிய நெற்றியுடையாளே!; நின்னை நீங்கி –
உன்னைப் பிரிந்து; பலநாள் கழிந்த பின்றை – பலநாள் கழித்த
பிறகு; மன்னவன் இரவிமைந்தன் – வானர அரசனாய சுக்கிரீவன்;
வான் துணையாக நட்டபின்னை – சிறந்த துணைவனாக என்னோடு
நட்புச்செய்த பிறகு;மாருதி வந்து – அனுமன் தூது வந்து; உன்னைப்
பேது அறுத்து- உன்னை மயக்கத்திலிருந்தும் கலக்கத்திலிருந்தும்
நீக்கி; உனது பெற்றி சொன்னபின்- உனது இருப்பின் தன்மையை
(என்னிடம்) மீண்டு வந்து சொன்ன பிறகு; வானரேசர் தொகுத்தது
இச் சேது- வானரத் தலைவர்கள் கட்டியது இவ் அணையாகும்;
கண்டாய்- அறிவாயாக (என்றான் இராமன்).
———–
‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன்தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகலுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார்.–167-
பொன்தொடித் தெரிவை! – பொன்வளையல் அணிந்த சீதையே!;
மற்று இதன் தூய்மை எண்ணின்- இந்தச் சேதுவின்
பரிசுத்தமான தன்மையை நினைத்துப் பார்த்தால்; மலர் அயன்
தனக்கும் எட்டா- மலர் மேல் உள்ள நான்முகனாலும் நினைக்க
இயலாது; யான் என் புகலுகேன் – யான் என்ன வென்று
சொல்வேன்; கேட்டி – கேட்பாயாக; அன்பால் பெற்ற தாய்
தந்தையோடு தேசிகற் பிழைத்து- அன்புடன்தம்மைப் பெற்று
வளர்த்த தாய் தந்தையோடு ஆசார்யனிடத்திலும் தவறு செய்து;
சூழ்ந்த சுற்றமும் கெடுத்து ளோரும்- தன்னை ஆதரவாகப்
பற்றிச் சுற்றிய உறவினர்களையும் கெடுத்தவர்களும் கூட;
எதிர்ந்திடின்- (இச்சேதுவுக்கு) நேர்படுவார்களாயின்
(காண்பார்களாயின்); சுரர்கள் ஆவார் – (கண்ட அளவிலே
அவர்கள்) தேவர்கள் ஆவார்கள்.
———-
சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்
‘இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது’ என்றான். –168-
பைந்தொடி! -பசிய வளையல் அணிந்த சானகியே!;
இந்திரற்கு அஞ்சி மேல்நாள் இருங்கடல் புக்கு நீங்காக்
கந்தர சயிலம்- இந்திரனுக்குப் பயந்து முன்னாளில் பெரிய
கடலுள் புகுந்து அதை விட்டு வெளி வராத குகைகளை உடைய மலை;
தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும் கந்தமாதனம் என்று
ஓதும் கிரி- தன்னைப் பார்த்தவர்களது தீவினைகளைத்
தீர்க்கக்கூடிய கந்தமாதனம் என்று சொல்லப் படுகிற மலை;
இவண் கிடப்ப கண்டாய் – இங்கே இருப்பதைப் பார்ப்பாயாக;
அடைத்த சேது பாவனம் ஆயது’ என்றான்- (இந்த
மலைத்தொடர்பால்) கடலை அடைத்த அணை பரிசுத்தம் உடையதாக
ஆயிற்று என்று சொன்னான்.
———-
‘கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே -169-
கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி- ;
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா
– என்று கூறப்படுகிற மிகுந்த நீரினையுடைய ஆறுகள் யாவும் தம்முள்
முழுகினால் அல்லாமல் முழுகியவர்களுடைய பாவம் போகா; சங்கு
எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும் இங்கு இதின் –
சங்குகளை வீசுகின்ற அலைகளை உடைய கடலில் தடுத்துக் கட்டப்
பெற்ற இந்த அணை என்று சொல்லப்படுகிற இங்கு இதனை;
எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும்- பார்த்தவர்கள்
(சந்தித்தவர்கள்) பாவம் எல்லாம் நீங்கும்.
———–
‘நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், “சேது ஆகப்
பெற்றிலம்” என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்!’ -170-
மலர்க்கண் வந்தாய்! – தாமரை மலரின்கண் தோன்றிய
திருமகளாகிய பிராட்டியே!; நெற்றியின் அழலும் செங்கண்நீறு
அணி கடவுள்- நெற்றியின்கண் நெருப்புக் கனலும் செங்கண்ணை
உடையவனாய்த் திருநீறு பூசுகின்ற கடவுளாகிய இவனது; கற்றை
அம் சடையில் மேவு கங்கையும்- சடைத்தொகுதியில்
பொருந்தியுள்ள கங்கா நதித் தேவியும்; ‘சேது ஆகப்
பெற்றிலம்’ என்று கொண்டு பெருந்தவம் புரிகின்றாள்-
நாம் சேதுவாக ஆகப் பெறாமல் போய்விட்டோமே என்று
வருந்தி பெரிய தவத்தைச் செய்கின்றாள்; (என்றால்) மற்று
இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது- வேறான இந்தச் சேது
அணையின் தூய்மையை எவ்வாறு சொல்ல இயலும்?
————-
வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்
தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, ‘வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், “சரண்” என இயம்பிற்று’ என்றான் -171
தெவ் அடும் சிலைக்கை வீரன்- பகைவர்களை அழிக்கின்ற
வில் ஏந்திய கையினை உடைய இராமன்; சேதுவின் பெருமை
யாவும்- சேது என்னும் அணையின் பெருமை எல்லாவற்றையும்;
வெவ்விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங்கண் செவ்வாய்
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி- கொடிய விடத்தோடு
போர்செய்து (காதுவரை) நீண்டு விளங்குகின்ற கரிய கண்ணையும்
சிவந்த வாயையும் குறுகிக் குறுகித் துன்புறுகின்ற இடையையும்
உடைய மயில் போன்ற சீதைக்குச் சொல்லி வருகிறபோது; (ஓர்
இடம் காட்டி) ‘வருணன் நோனாது வந்து சரண் என இயம்பிற்று
இவ் இடை கண்டாய்’ என்றான்- வருணனானவன் என் அம்பின்
கனலைப் பொறுக்கமாட்டாமல் ஓடி வந்து அபயம் என்று என்பால் சொல்லியது இந்த இடத்தில்தான் காண்பாயாக என்று
கூறினான்.
—————-
‘இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் நாறு
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு’ என்று அருள் தர, ‘அனுமன் தோன்றிற்று
எது?’ என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்.–172-
‘இது தமிழ் முனிவன் வைகும் இயல்தருகுன்றம்- இது
தமிழ் முனிவனாகிய அகத்தியன் தங்கியிருந்து தமிழிலக்கணத்தைத்
தந்த பொதியமலை; முன் நாறு அது வளர் மணி மால் ஓங்கல்-
முன்னால் தோன்றுகின்ற அது மணம் வீசி வளர்கின்ற திருமால்
இருஞ் சோலை மலை;உட் புறத்து உயர்ந்து தோன்றும் அது
திகழ் அனந்த வெற்பு’- இடைக்கண்ணே உயரமாகத் தோன்றுகிற
அது விளங்குகிற திருவேங்கட மலை; என்று அருள் தர-
என்றிவ்வாறு இராமபிரான் உரைத்தருள் செய்ய; (சீதை) அனுமன்
தோன்றிற்று எது? என – அனுமன் தங்களைச் சந்திக்கத்
தோன்றியது எந்த இடத்தில் என்று கேட்க; அணங்கை நோக்கி
– சீதையைப் பார்த்து; இராமன் – ; இற்று என சொன்னான்
– இந்த இடத்தில்தான் என்று (ருசியமுக பர்வதத்தைக்) காட்டிச்
சொன்னான்.
———–
அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்
‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது’ என்றான் -173-
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர்
சூழ் வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை
வீட்டி- வாலி என்று கூறப்படுகிற அளவு படாத பேராற்றலோடு
கூடிய வலிமையுடையவனும் சுறாமீன்கள் சுற்றும் கடலைத்
தாண்டிச் செல்லும் வெற்றி உடையவனும் ஆகியவனை அழித்து;
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்
போல்- நூல்களிற் கூறியுள்ள இயல்பின்படி தரும நீதியை
நுட்பமாகக் கருதி அறத்தையே கருதும் சீர்மை உடைய
மேலோர்கள் போன்ற; இயல் தபனன் மைந்தன் உறைதரும்
புரம் ஈது என்றான்- இயல்பினை உடைய சூரியன் மகனாய
சுக்ரீவன் தங்கியுள்ள கிட்கிந்தை இது என்றான்.
————–
வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்
‘கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து’ என்றாள் –174-
‘ஐய! – இராமனே! கிட்கிந்தை – கிட்கிந்தா நகரம்; இதுவேல்
– இதுவாக இருக்குமானால்; கேட்டி – நான் சொல்வதைக்
கேட்பாயாக; ஆயவெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்
– தோழியர் கூட்டமான பெண்கள் இல்லாமல் தேவர்களும்
அஞ்சும்படியான போர்ச்சேனை சுற்றியிருப்ப நான் ஒருத்தி மட்டும்
இவ்விமானத்தில் அயோத்தி அடைந்தால்; எனது பெண்மை
மட்கும் – என் பெண்தன்மை பொலிவு கெடும்; (ஆதலின்) கள்
கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து’ என்றாள்
– தேன் நிரம்பிய பூங்கொத்துகள் பொருந்திய கூந்தல்
உடைய கிட்கிந்தை மகளிரை இவ்விமானத்தில் ஏற்றிக்
கோடல் செய்யத் தகும் முறைமை உடையது என்று கூறினாள்.
—————-
இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்
அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, ‘நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி’ என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ –175-
அண்ணல் அம்மொழி இரவிமைந்தற்கு உரைப்ப – இராமன்
சீதையின் அச்சொல்லை சுக்கிரீவனுக்குச் சொல்ல; அன்னான்
மெய்ம்மை சேர் அனுமன்தன்னை நோக்கி- சுக்கிரீவன்
சத்தியவானாகிய அனுமனைப் பார்த்து; ‘வீர! நீ விரைவின்
மைம்மலி குழலினாரை மரபினின் கொணர்தி’ என்ன- வீர
அனுமனே! நீ விரைந்து கருமை பரவிய கூந்தலுடைய நம்
நகரப் பெண்களை அவரவர்க்குரிய முறைப்படி கொண்டு
வருக என்று கூற; செம்மை சேர் உள்ளத்து அண்ணல்
சென்று கொணர்ந்தனன் – மனக்கோட்டம் இல்லாத
பெரியோனாகிய அனுமன் உடனே சென்று அழைத்து கொண்டு
வந்தான்.
—————
வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்
வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார்.–176-
மாருதி – அனுமன்; கரைசெயல் அரிய வண்ணம் மாதர்
வெள்ளம் – வரம்பிடமுடியாத தன்மை உடைய மகளிர் கூட்டத்தை;
வரிசையின் வழாஅமை நோக்கி – அவரவர்கட்குரிய தகுதியிற்
சிறிதும் பிறழாதபடி பார்த்து; கணத்தின் முன்னம் கொணர்ந்தனன்
– ஒரு கணப்பொழுதில் அழைத்துக் கொண்டு வந்தான்; விரைசெறி
குழலினார் தம் வேந்தனை வணங்கி- மணம் நிறைந்த கூந்தலை
உடைய அம்மகளிர் தம்முடைய அரசனாய சுக்கிரீவனை முதலில்
தொழுது; பெண்மைக் கரசியை ஐயனோடும் அடியிணை
தொழுது நின்றார்- பெண்மைக் குணங்களுக்குத் தலைமையானவளை
இராமனோடும் திருவடி இணைகளைக் கும்பிட்டு நின்றார்கள்.
—————-
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை, இனி மற்று’ என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. –177-
மங்கலம் முதலவாய மரபினின் கலப்பையாவும் –
அட்டமங்கலம் முதலாகச் சொல்லப்படும் அடிப்பட
வந்த தொன்று தொடு வழக்கமாய பொருள்கள்
எல்லாவற்றையும்; அவர் அங்கு கொணர்ந்து
– அம்மகளிர் விமானத்தின்கண் கொண்டு வந்து;
பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ –
சீதாபிராட்டியை வணங்கிச் சுற்றியிருப்ப; நங்கையும்
உவந்து – சீதையும் மகிழ்ச்சி அடைந்து; ‘மற்றுவேறு,
ஓர் நவை இனி இலை’ என்றாள்- வேறொரு
துன்பமும் இனி இல்லை என்று சொன்னாள்;பொங்கிய
விமானந்தானும் மனம் என எழுந்து போன-உயர்ந்த
புட்பகமும் மனத்தின் வேகம் போல புறப்பட்டுச் சென்றது.
அட்டமங்கலம் – பெரியோர்க்குச் செய்யும்
உபசாரப்பொருள்கள் எட்டாம். அவை, சாமரை, தீபம்,
பூர்ணகும்பம், இரட்டைக் கயல், கண்ணாடி, தோட்டி,
கொடி, முரசு என்பனவாகும்
————
கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, ‘முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது’ என்றான். –178
விசும்பில் போதா திகழ் புட்பகம் போத லோடும்-
வானத்தில் எழுந்து விளங்குகிற புட்பக விமானம் சென்ற
உடனே; (இராமன்) சூது ஆர் முலைத்தோகையை நோக்கி –
சூதாடுகின்ற கருவியை ஒத்துப் பொருந்திய நகில்களை உடைய
மயில் போல்வாளைப் பார்த்து; ‘பேதாய் – இளம்பெண்ணே!;
முன்தோன்று சூழல் கோதாவரி – முன்னே தோன்றுகிற இடம்
கோதாவரியாகும்; மற்று அதன் மாடு உயர் குன்று- அதன்
அருகில் உள்ள உயர்ந்த சிறிய மலைதான்; நின்னை – உன்னை
(என்னிடமிருந்து) பிரிவுத்துயர் பீழை பிணித்தது’ – பிரித்தலால்
உண்டாகிய பிரிவு என்னும் துயர் நோயால் கட்டியது; என்றான் –
————–
‘சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது’ எனப் பகர்ந்தான்.–179-
‘சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள் –
தலைமுடியின் கண் (நறுமணமலர்களால்) வாசனையுண்ணும்
வண்டுகள் ஒலிக்கின்ற பெண்ணே! கேட்பாயாக; இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர் தண்டகம்- இது உயர்ந்த
தன்மையுடைய உபாசனை செய்கின்ற விரதிகளும் யாகம்
செய்பவர்களாகிய முனிவர்களும் (உறைகின்ற) தண்டக
ஆரண்யம்; அதுதான் வரத்து வாசவன் வணங்குறு
சித்திரகூடம் – அதோ தோன்றுகிற இடமானது
மேன்மையுடைய இந்திரனும் வணங்கத்தக்க சித்திர கூடமலை;
இது பரத்துவாசவன் உறைவிடம்’ – (அண்மையில் காணும்)
இது பரத்துவாசமுனிவன் தங்கியுள்ள தவச்சாலையாகும்; எனப்
பகர்ந்தான் – என்று சொன்னான்.
———–
மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
‘என்னை ஆளுடை நாயகன் எய்தினன்’ என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். –180-
மின்னை நோக்கி – சீதையைப் பார்த்து; அவ்வீரன் ஈது
இயம்பிடும் வேலை – அந்த இராமன் இதனைச் சொல்லிக்
கொண்டுள்ள போது; தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து
-தனக்கு யாரும் ஒப்பில்லாத சிறந்த தவமுனிவனாகிய பரத்துவாசன்;
உணர்ந்து; தன் அகத்தின் – தன் தவச்சாலையின் கண்; ‘என்னை
ஆளுடை நாயகன் எய்தினன்’ என்னா- என்னையும் அடிமை
கொண்டருளும் பரம் பொருளாகிய பெருமான் வந்துவிட்டான் என்று
கருதி; துன்னு மாதவர் சூழ்தர- நெருங்கிய முனிவரர்கள் சுற்றிவர;
எதிர்கொள்வான் – வரவேற்க; தொடர்ந்தான் – (இராமன்);
வரும்வழியை நோக்கி வந்தான்.
————–
பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்
ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். –181-
ஆதபத்திரம், குண்டிகை ஒரு கையின் அணைத்து – குடை,
கமண்டலம் இரண்டையும் ஒரு கையில் சேரப்பிடித்துக்கொண்டு;
தண்டு ஒருகையினில் பொலிய – மற்றொரு கையில் தண்டம்
விளங்க; மாதவப்பயன் உருவுகொண்டு எதிர் வருமாபோல்-
பெரிய தவத்தின் பயன் திரண்டு ஒரு வடிவு எடுத்துக்கொண்டு
எதிர் வருவதைப் போல; போதம் முற்றிய நீதி வித்தகன் –
தத்துவஞானம் நிரம்பிய நீதி நெறியில் சதுரப்பாடு உடைய
பரத்துவாசன்; நடந்தமை- தன்னை எதிர்கொள்ள நடந்து
வருகின்றமையை;நெடியோன் நோக்கினன் – இராமன் பார்த்தான்.
————–
எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். –182-
எண்பக – நெஞ்சம் பிளவுபடும்படி; தினை அளவையும் –
தினை அளவு கூட; கருணையோடு இசைந்த நட்பு அகத்து
இலா அரக்கரை நருக்கி – அருளோடு கூடிய நட்புத்தன்மை
மனத்தில் இல்லாத அரக்கர்களைக் கொன்று; மாமேரு விட்பு
அகத்து உறை கோளரி எனப் பொலி வீரன் – பெரிய
மேருமலையின் பிறப்பிடமாய பொந்தில் உள்ளே வசிக்கின்ற சிங்கம்
போல விளங்குகின்ற வீர இராகவன்; புட்பகத்தினை புவியல்
வதிக என நினைந்தனன் – புட்பக விமானத்தைப் பூமியில்
தங்குக என்று நினைத்தான்.
————
இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்
உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். –183-
உன்னும் மாத்திரத்து – நினைக்கின்ற ஒரு மாத்திரைக்கால
அளவில்; உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் பொன்னின் நாடு
வந்து இழிந்து என புட்பகம் தாழ- உலகைச் சுமந்து
ஆகாயத்தின் மேலுயரும் தேவலோகம் கீழே இறங்கியது
என்று சொல்லும்படி புட்பகவிமானம் மண்ணில் இறங்க; என்னை
ஆளுடை நாயகன் – என்னை அடிமை கொண்டருளும் பெருமான்;
வல்லையின்- விரைவாக; எதிர்போய்- எதிர்சென்று; பன்னு
மாமறைத்தபோதனன் தாள்மிசைப் பணிந்தான்- இடையறாது
சொல்லிக்கொண்டுள்ள உயர்ந்த வேதபாரகனாகிய தவசிரேஷ்டனது
திருவடிகளின் மேல் வீழ்ந்து வணங்கினான்.
————–
அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். –184-
அடியின் வீழ்தலும் – (இராமன்) தன் அடியில்வீழ்ந்து
வணங்கியவுடன்; எடுத்து – தூக்கி; நல் ஆசியோடு அணைத்து –
நல்ல வாழ்த்துரையுடன் அணைத்துக்கொண்டு;முடியை மோயினன்
நின்றுழி – இராமனது உச்சியை மோந்து நின்ற பொழுது; முளரி
அம் கண்ணன் – தாமரைக் கண்ணனான இராமனது; சடில நீள்
துகள் ஒழிதர – சடாபாரத்தில் உள்ள நீண்ட புழுதியானது
நீங்கும்படி; நெடியோன் தனது கண் அருவி – உயர்ந்தவனாகிய
பரத்துவாசன் தன்னுடைய கண்ணிலிருந்து அருவியாக வழிகின்ற நீரை; நெடிய காதல் அம்கலசம் அது-
உயர்ந்து நின்ற தன் உள்ளத்தன்பாகிய கலசத்தால் முகந்து;
ஆட்டினான் – நீராட்டித் தூய்மைசெய்தான்.
———–
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். -185-
கருகு வார் குழல் சனகியோடு – கருமையான நீண்ட
கூந்தலையுடைய சீதையோடு; இளவல் கைதொழுதே அருகு
சார்தர- இலக்குவன் கைகுவித்து வணங்கிப் பக்கத்தில் வர;
அருந்தவன் – பரத்துவாசன்; ஆசிகள் வழங்கி –
வாழ்த்துரைகள் கூறி; உருகு காதலன் ஒழுகு கண்ணீரினன்
– மனம் கரைந்து வரும் கண்ணீர்ப் பெருக்கோடு; உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து பரிவால் உளம் களித்தனன்
– மகிழ்ச்சியோடு பருகுகின்ற தேவர் அமுதத்தை உண்டால் ஒத்து
அன்பினால் உளம் பூரித்தான்.
—————-
வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. -186-
வானரேசனும்- சுக்ரீவனும்; வீடணக்குரிசிலும் – வீடணன்
என்கின்ற நம்பியும்; மற்றை ஏனை வீரரும்- மற்றுள்ளபிற
வீரர்களும்; தொழும்தொறும் ஆசிகள் வழங்கி-
வணங்குந்தோறும் வாழ்த்து தந்து; ஆன மாதவர் குழாத்தொடும்
அருமறை புகன்று – தன்னோடு உடன் கூடிய முனிவர்
கூட்டத்தோடும் அரிய வேதங்களைச் சொல்லிக்கொண்டே; ஞான நாதனைத் திருவொடு
நன் மனைகொணர்ந்தான்- ஞானத்திரளாய் நின்ற பெருமானைப்
புருஷாகார பூதையாகிய திருமகளோடும் தன் நல்ல மனைக்கு
அழைத்துக் கொண்டு சென்றான்.
———-
பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: –187-
பன்னசாலையுள் புகுந்து – தன் தவச்சாலைக்குள்
அழைத்துக்கொண்டு புகுந்து; தபோதரின் பெரியோன்-
முனிவர்களில் உயர்ந்தோன் ஆகிய பரத்துவாசன்; நீடு
அருச்சனை பலவும் – உரிய உபசார வழிபாடுகள் எல்லாம்;
சொன்ன நீதியின் புரிந்து- சாத்திரங்களிற் சொல்லப்பட்ட
முறைப்படி செய்து; பின்- பிறகு; சூரியன் மருமான் தன்னை
– சூரியனது வழியில் தோன்றிய இராமனை; பல்முறை கண்கள்
நீர்ததும்ப நோக்கினன் – பலமுறை கண்களில் நீர் ததும்பும்
படி பார்த்தவனாய்; பின் ஓர் வாசகம் உரைத்தனன்- பிறகு
ஒரு சொல் சொன்னான்.
———-
‘முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? –188-
முனிவர், வானவர், மூவுலகத்துளோர் யாரும் -; துனி
உழந்திடத்துயர்தரு கொடுமனத் தொழிலோர் – வருந்தும்படி
துன்பங்களைச்செய்கின்ற கொடுமையான மனமும் தொழிலும்
உடையோராய அரக்கர்; நனி மடிந்திட- மிகவும் இறந்துபோக;
அலகைகள் நாடகம் நடிப்ப- பேய்கள் களத்தில் நடனம் ஆட;
குனியும் வார்சிலைக் குரிசிலே!- வளைந்த கோதண்டத்தை
ஏந்திய நம்பியே! இனி என் குணிப்பாம்? – இனி என்ன எண்ணி
உரைக்க உள்ளது?
————
‘விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய!’ -189-
ஐய! – இராமனே!; விராதனும் – கரனும் -; மானும் –
மானாகிய மாரீசனும்; விறல்கெழு – வலிமைமிக்க; கவந்தன்
தானும்- மரா மரம் ஏழும் வாலிமார்பமும் -; மகர நீரும் –
வருணன் வாராதபோது சீறியதால் கடல்நீரும்; இராவணன் உரமும்
கும்பகருணனது- ; ஏற்றம் தானும்- உயர்வும்; அராவ அரும்
பகழி ஒன்றால் – அராவிச்செய்யப்பட்ட அரிய ஓர் அம்பினாலே;
அழித்து – கொன்று செருக்கடக்கி; உலகு அளித்தாய்- உலகைக்
காப்பாற்றினாய்.
————–
சித்திர கூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை, அடைந்து, எம் இல்லின் இறுத்தமை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத்திறம் இருத்தி’ என்றான், மறைகளின் இறுதி கண்டான்.–190-
மறைகளின் இறுதி கண்டான் – வேத முடிவினை
நன்குணர்ந்தவனாகிய பரத்துவாசன்; (இராமனைநோக்கி)
வித்தக! – சதுரப்பாடு உடையவனே!; சித்திரகூடம் தீர்ந்து –
சித்திரகூட மலையிலிருந்து நீங்கி; தென்திசைத் தீமை
தீர்த்திட்டு – தெற்குத்திசையில் உள்ள அரக்கர்களாய
தீமையைப் போக்கி; இத்திசை அடைந்து – வடதிசை வந்து
சேர்ந்து; எம் இல்லம் இறுத்தமை இறுதியாக – என்
தவச்சாலையில் தங்கியமை வரையிலும்; மறந்திலேன் யான்-
நான் உன்னை ஒரு கணமும் மறக்கவில்லை; விருந்தினையாகி –
விருந்து ஏற்றுக்கொண்டு; எம்மோடு – எங்களோடு; இத்திறம்
– இன்றேபோல்; இருத்தி- இருப்பாயாக; என்றான் -.
—————
‘கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி’ என்றான்.–191-
கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி –
கையின் கண் உயர்ந்த கோதண்டம் என்னும் வில்லை வளைத்து
இழுத்து; சரத வானவர்கள் துன்பம் தணித்து- உண்மை
வாழ்வுள்ள தேவர்களது துயரத்தைப் போக்கி; உலகங்கள்
தாங்கும் – உலகமனைத்தையும் பாதுகாக்கின்ற; மரகத மேனிச்
செங்கண்வள்ளலே! – மரகத மணி போன்ற மேனியையும் சிவந்த
கண்களையும் உடைய கொடையாளனே; ‘வழுவா நீதிப் பரதனது
இயல்பும் இன்றே பணிக்குவென், கேட்டி’ என்றான்- சிறிதும்
பிசகாத நீதியை உடைய பரதன் தற்போதுள்ள தன்மையையும்
இன்றைக்கே சொல்வேன் கேட்பாயாக என்று சொன்னான்.
————
‘வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூ வினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான்.–192-
(பரதன்)வெயர்த்த மேனியன் – வியர்வை அரும்பிய
உடம்புடையான்; விழி பொழி மழையன்-கண்கள் மழைநீர்
போலக் கண்ணீர் விடுகின்றதன்மையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன் – பழைய வினைகளைக் கோபித்த
மனத்தவன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான் –
மனச சுழற்சியால் வருந்திவருந்திக் கெடுவான்; அயிர்த்து
நோக்கினும் தென்திசை அன்று வேறு அறியான் –
ஐயுற்றுப் பார்த்தாலும் (நீ சென்றுள்ள) தென் திசை தவிர வேறு
திசைகளைப் பார்க்க அறியான்; பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம்படியான் – அச்சத்துடன்
கூடிய துன்பமே உருவம் கொண்டாற் போன்ற வடிவம் உடையவன்.
————-
இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம்பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் – நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.–193-
பரதன் -; இந்தியம் களைந்து- பொறிகளைப் புலன்வழி
செல்லாது நீக்கி; இருங்கனிகாய் நுகர்ந்து – பெரிய
பழங்களையும் காய்களையுமே உண்டு; இவுளிப் பந்தி வந்த புல்
பாயலான் – குதிரை வரிசைகள் மேய்தற்குரிய புல்லையே
படுக்கையாகக் கொண்டுள்ளான்; பழம்பதி புகாது நந்தியம்பதி-
பழமையான அயோத்தியில் செல்லாது நந்திக் கிராமத்திலேயே;
நின் நாமம் அந்தியும் பகல் அதனினும்மறப்பிலன் ஆகி-
உன்னுடைய பெயரை இரவினும் பகலினும் மறவாதவனாய்;
இருந்தனன் – இருந்தான்.
————
என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின்தனைப் பிரிந்தது உண்டே, யான்’ என நிகழ்த்தினானால்.-194-
என்று உரைத்து – என்றிவ்வாறு பரத்து வாசன் சொல்லி;
அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக் குன்று
உரைத்தனைய தோளும் குலவரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும் இறுத்த வீர!-
இராவணனது நீலமலை என்று சொலத்தகுந்த இருபது
தாள்களையும் எட்டுக்குலமலைகளின் சிகரங்கள் எனக் கூறத்
தக்க மகுடம் அணிந்த பத்துத் தலைகளையும் அழித்த வீரனே!; யான்
நின்தனைப் பிரிந்தது உண்டே’? – நான் நின்னை என்றாவது
பிரிந்ததுண்டா?; என நிகழ்த்தினான்- என்று கூறினான்.
————-
இராமன் பதில் உரை
10146.
‘மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன்தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’ என்றான்–195-
‘மின்னை ஏய் உமையினானும் – மின்னலை ஒத்த
உமாதேவியை உடைய சிவனும்; விரைமலர்த் தவிசினானும்
– மணமிக்க உந்தித்தாமரையில் உள்ள பிரமனும்; நின்னையே
புகழ்தற்கு ஒத்த நீதி மாதவத்தின் மிக்கோய்! – உன்னையே
சிறப்பித்துச் சொல்லுமாறு நீதியோடு கூடிய பெருந்தவத்தில்
சிறந்தவனே!; உன்னையே வணங்கி உன்தன் அருள் சுமந்து
உயர்ந்தேன் – உன்னை வழிபட்டு உனது மனக்கருணையை
நிறையப் பெற்று அதனால் உயர்ந்துள்ளேன்; (அதனால்) மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’
என்றான் – இவ்வுலகில் என்னை ஒத்த மகன் நான் அல்லாது வேறு
யாரும் இல்லை எனும் பேறு பெற்றேன் என்று கூறினான் (இராமன்).
————
பரத்துவாசன் வரம் தருதல்
10147.
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி’ எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.–196-
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும் – அவ்வாறு இராமன்
கூறிய முகமனுரைகளைக் கேட்ட தத்துவ ஞானியாகிய
பரத்துவாசனும்; அருளின் நோக்கி – அருட்பார்வையால்
இராமனைப் பார்த்து; ‘வெவ் அரம் பொருத வேலோய்!
விளம்புகேன், கேட்டி வேண்டிற்று எவ்வரம் எனினும் தந்தேன்;
இயம்புதி’ எனலும் – கொடிய அரத்தால் அராவிச் செய்த
வேலை உடைய இராகவனே! சொல்வேன் கேட்பாயாக; நீ
விரும்பியது எந்த வரமானாலும் தந்துவிட்டேன், சொல்க என்று
கூறுதலும்; ஐயன்- இராமன்; ‘கவிக்குலம் கவ்வை இன்று ஆகி
வென்றி பெற்று வாழ்க- குரங்குக்கூட்டம் துன்பமின்றி சென்ற
இடங்களில் எல்லாம் வெற்றி பெற்று வாழ்க; (என்று கேட்டு)
தொடரும்.
—————
‘அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி
விரிபுனல் செழுந்தேன் மிக்கு, விளங்கு!’ என இயம்புக’ என்றான்.
விரியும் மாதவனும், ‘அஃதே ஆக!’ எனப் புகன்றிட்டானால். –197-
‘அரி இனம் சென்ற சென்ற அடலிகள் அனைத்தும் வானம்
சொரிதரு பருவம் போன்று – குரங்குகள் போன காடுகள்
எங்கிலும் எப்பருவத்தும் கார்காலம் போல; கிழங்கொடு கனி
காய் துன்றி விரிபுனல் செழுந்தேன் மிக்கு விளங்கு’ என
இயம்புக” என்றான் – கிழங்கும் கனியும் காயும் நெருங்கி, மிகுந்த
நீரும், தேனும் நிரம்பி விளங்கட்டும் என்று வரம் கூறுக என்று
கேட்டான் இராமன்;விரியும் மாதவனும் – அகன்று பரந்த
பெருந்தவம் உடைய பரத்துவாசனும்; ‘அஃதே ஆக’ எனப்
புகன்றிட்டான்- அப்படியே ஆகட்டும் என்று சொல்லி முடித்தான்.
ஆல், அசை.
————–
அருந்தவன், ‘ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்’ என்னா, விளங்கும் முத்தீயின் நாப்பண்
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வானநாடு சேர வந்து இறுத்தது அன்றே.–198-
அருந்தவன் – பரத்துவாசன்; ‘ஐய! – இராம!; நின்னோடு
அனிக வெஞ் சேனைக்கு எல்லாம் விருந்து இனிது அமைப்பன்
என்னா – உன்னோடு வந்துள்ள அணிவகுப்புற்ற இக்கொடிய
சேனைகளுக்கு எல்லாம் விருந்துணவு நன்குறச் செய்து தருவேன்
என்று சொல்லி; விளங்கும் முத்தீயின் நாப்பண் புரிந்து ஓர்
ஆகுதியை ஈந்து- விளங்குகின்ற வேள்வித்தீயின் நடுவே மந்திரங்களை
விரும்பிச் சொல்லி ஓர் அவிர்ப்பாகத்தைக் கொடுத்து; புறப்படும்
அளவில்- எழுந்த அக்கணத்திலேயே; திருந்திய வான நாடு சேர
வந்து இறுத்தது- இன்பங்கள் நிறைந்த சுவர்க்கலோகம் அப்படியே
கீழ்இறங்கி அங்கே தங்கியது.
————
அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறுசுவை அமைக்கும் வேலை
விரைசெறி கமலக்கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்:–199-
அரைசரே ஆதியாக அடியவர் அந்தமாக- அரசர் முதல்
தொண்டர் வரை; கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு
– கணக்கிட இயலாத இன்பங்களை நுகர்வதைப் பரத்துவாசன் பார்த்து;
அரசியல் வழாஅமை நோக்கி இராமற்கு அறுசுவை அமைக்கும்
வேலை – அரசர்க்குள்ள இயல்பில் சிறிதும் வழுவாதபடி பார்த்து
இராமனுக்கு அறுசுவை உணவைப் படைத்துக்கொடுக்கும் அச்சமயத்தில்;
விரை செறி கமலக் கண்ணன் – மணமிக்க தாமரை போன்ற
கண்ணுடைய இராமபிரான்; அனுமனை விளித்துச் சொன்னான்-
அனுமனைக் கூப்பிட்டு அருகே அழைத்துப் பின்வருமாறு சொன்னான்.
—————
இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்
‘இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்’ என்று ஏயினன், நெடியோன்;
‘நன்று’ எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். -200-
‘நெடியோன்- இராமன்; ‘மாருதி! – அனுமனே!; இன்று நாம்
பதிவருது முன்- நாம் இன்றைக்கு அயோத்திக்கு வருவதற்கு
முன்னாக; ஈண்டச் சென்று- விரைந்து போய்; தீது இன்மை
செப்பி அத்தீமையும் விலக்கி நின்ற காலையின் வருதும்’
என்று ஏயினன் – எனக்கு ஒரு தீமையும் இல்லை என்பதைப்
பரதனுக்குச் சொல்லி அவனுக்கு நேர்ந்து விடும் (தீப்புகல் ஆகிய)
தீமையையும் தடுத்து நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன்
என்று ஏவி அனுப்பினான்; (அதுகேட்ட) அவன்- அந்த அனுமன்;
‘நன்று’ எனா – அப்படியே நல்லது என்று சொல்லி; மோதிரம்
கைக்கொடு நடந்தான் – இராமன் அளித்த அடையாளமான
கணையாழியை கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
உடம்பொடு புணர்த்தலால் இராமன் கூறியதோடு கணையாழியும்
தந்தான் என்பதைப் பெற வைத்தார்.
————
தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். -201-
தந்தை வேகமும்- தன் தந்தையாகிய காற்றின் வேகமும்;
தனது நாயகன் தனிச்சிலையின் முந்து சாயகக் கடுமையும்
பிற்பட முடுகி- தனது தலைவனாய இராமனுடைய ஒப்பற்ற
கோதண்டத்திலிருந்து வெளிச் செல்லும் அம்பின் வேகமும்
பின்னிடும்படி விரைந்து சென்று; சிந்தை பின் வரச் செல்பவன்
– தன்மனம் தன்னைப்பின் தொடரும்படி செல்கின்ற அனுமன்; அச்சேயோன் வந்த வாசகம் – அந்தச்
செவ்வியனாகிய இராமன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான்
என்கின்ற வார்த்தையை; குகற்கும் கூறி- வழியில் உள்ள
குகப்பெருமாளுக்கும் சொல்லி; மேல் வான் வழிப் போனான்-
மேலே ஆகாய வழியாகச் சென்றான்.
———–
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: –202-
இன்று- இப்போது; இசைக்கு இடம் ஆய இராகவன் – புகழுக்கு
இருப்பிடமாக உள்ள இராமனது; தென்திசைக் கருமச் செயல்
செப்பினாம் – தெற்குத் திசையில் செய்த செயல்களை எல்லாம்
சொன்னோம்; அன்று- அப்போது; இசைக்கும் அரிய அயோத்தியில்
– புகழும் புகழுக்கும் அரியதாகிய அயோத்தி என்னும் மாநகரத்தில்;
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்- பொருந்தி நடந்துள்ள
நிகழ்ச்சிகளை இனிமேல் சொல்லுவோம்.
————–
நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை
நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. –203-
————-
துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; -204-
துன்பு சுற்றி உருக்கவும்- (இராமனைப் பிரிந்துள்ள) பிரிவு
என்னும் துன்பம் சூழ்ந்து உருக்குதலால்; உருக்க ஒணா என்பு
உருக்கும் தகைமையது இட்டது ஆய் – எதனாலும் உருக்கமுடியாத
எலும்பையும் உருக்கக்கூடிய தன்மை பொருந்தியதாய்; முன்பு
உருக்கொண்டு ஒருவழி முற்றுறா- முன்னொரு காலத்திலும் வடிவம்
கொண்டு ஓரிடத்தும் முழுமையாய்த் தோற்றாத; அன்பு உருக்
கொண்டது ஆம் எனல் ஆகுவான் – அன்பே ஒரு வடிவம்
கொண்டது ஆகும் என்று சொலற்குரியவனாக உள்ளான்.
———
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; –205-
நினைத்தலும் தடங்கண் இணை நீர் வர – இராமனை நினைத்த
அளவில் விசாலமான இருகண்களிலும் நீர்பெருக; இனத்த
தண்டலைநாட்டு இருந்தேயும் – கூட்டமான சோலைகள் சூழ்ந்த
தனது நாட்டின்கண் இருந்தும்; அக் கனத்த கந்தமும் காயும்
கனிகளும் வனத்த அல்ல – அந்த மேன்மையுடைய கிழங்கும்
காயும் பழங்களும் ஆய காட்டின்கண் கிடைக்கும் பொருள்களை
அல்லாமல் பிறவற்றை; அருந்தல் இல் வாழ்க்கையான் – நுகர்தல்
இல்லாத வாழ்க்கை உடையவன்.
———–
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, ‘இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும்’ என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; –206-
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – பார்த்தால்
இராமன் சென்ற தென்திசையைத் தவிர வேறு திசைகளைப் பாரான்;
ஏக்குற்று, ஏக்குற்று – ஏங்கி ஏங்கி; ‘இரவி குலத்து உளான் வாக்கில்
பொய்யான்; வரும் வரும் ‘என்று- சூரிய குலத்தில் தோன்றியவன் சத்தியம் தவறமாட்டான், சொன்னவாறு வருவான்
என்று கருதி; உயிர் போக்கிப் போக்கி உழக்கும்
பொருமலான்- உயிரை விட்டு விட்டு வருந்தும் துக்கத்தை
உடையவன்.
———-
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். -207-
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் எண்ணும்
கீர்த்தி இராமன் – பருகுகின்ற நீர்க்கும் அதனால் தளிர்க்கும்
உயிர்க்கும் உயிராக உள்ளவனாய் எல்லாராலும் மதிக்கப்படும்
புகழை உடைய இராமனது; திருமுடி மண்ணும் நீர்க்கு
வரம்புகண்டால் அன்றி – திருமுடியை நீராட்டுகின்ற
பட்டாபிடேக நீர்க்கு எல்லை கண்டால் அல்லாமல்; கண்ணின்
நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – தன்
கண்ணிலிருந்து வழிகின்ற நீர்க்கு ஓர் முடிவை ஒரிடத்தும்
ஒருபொழுதும் காணாதவன்.
—————-
இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்
அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். –208-
அனையன் ஆய பரதன் – அப்படிப்பட்டவனாகிய பரதன்;
அலங்கலின் புனையும் தம்முனார் பாதுகைப் பூசனை-
மாலையால் அலங்கரிக்கின்ற தம் தமையனாராய இராமனது
திருவடிப் பாதுகைகளின் பூசனையை; நினையும்காலை – செய்ய
எண்ணிய காலத்தில்;அவன் மனையின் வந்து எய்த மதித்த
நாள் நினைந்தனனாம்- இராமன் அயோத்தி அரண்மனைக்குத்
திரும்ப வந்து சேரக் கருதிக் கூறிய நாளைப் பற்றி நினைந்தானாம்.
———–
‘யாண்டு வந்து இங்கு இறுக்கும்?’ என்று எண்ணினான்,
‘மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக’ என்ன, வந்து எய்தினார்,
‘ஆண் தகைக்கு இன்று அவதி’ என்றார் அரோ. –209-
———–
இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்
என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். -210-
என்ற போதத்து- என்று சோதிடர்கள் சொன்ன நேரத்தில்;
செல்வத்தை வென்ற போதத்து வீரனும் வீழ்ந்தனன்- அரச
செல்வத்தை வேண்டாம் என்று உதறித்தள்ளி வென்ற ஞான
வீரனாகிய பரதனும் துடித்து விழுந்தான்; இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ்உரை – இராமன் காட்டுக்குச் சென்ற
போது கூறியதாகிய அந்த வார்த்தை (நினைவு வந்து); கொன்ற
போதத்து உயிர்ப்புக் குறைந்துளான்- தன்னைக் கொன்ற
சமயத்தில் மூச்சு அடங்கிப் போனான்.
——
மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. -211-
மீட்டு எழுந்து- உயிரினை மீட்டுத் திரும்பவும் எழுந்து;
விரிந்த செந்தாமரைக் காட்டை வென்று எழு கண் கலுழிப்
புனல் ஓட்ட- அலர்ந்த செந்தாமரைக் கூட்டத்தைத் தன்
அழகால் வென்று விளங்கும் கண்கள் கலங்கல் நீரை ஒழுகவிட;
உள்ளம் உயிரினை ஊசல் நின்று ஆட்டவும் – மனம் உயிரை
ஊசலாடச் செய்யவும்; அவலத்து அழிந்தான்- துக்கத்தில்
மூழ்கி நிலைகெட்டான்.
———–
‘எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு’ என விம்மினான். -212-
எனக்கு இயம்பிய நாளும்- எனக்கு வருவதாகக் குறிப்பிட்ட
நாளும்; என் இன்னலும் – என் துன்பமும்; தனைப் பயந்தவள்
துன்பமும் – தன்னைப் பெற்றெடுத்தவளாய கோசலையின்
துயரத்தையும்; தாங்கி- கிடக்கட்டும் என்று சுமந்து; வானத்து
வைகல் செய்யான்- காட்டின் கண் தங்கியிருத்தலைச் செய்ய
மாட்டான்; வந்து அடுத்தது ஓர் வினைக் கொடும்பகை உண்டு
– அவனை (அயோத்திக்கு வரமுடியாதவாறு) தடுக்க வந்து
சேர்ந்ததாகிய ஒரு தீவினையால் நேர்ந்த கொடிய பகை உண்டு
போலும்; என விம்மினான் – என்று மனத்தில்
கருதித்துயருற்றான். வாராமைக்குக் காரணம் தடையோ என்பது.
———-
‘மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு?’ என ஐயமும் தேறினான். -213-
மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும் – அரன், அரி, அயன்
என்னும் மூன்று மூர்த்திகள் ஆனாலும்,பூவகத்தில், விசும்பில்,
புறத்தினில் – பூமியில் விண்ணில், வேறு இடங்களில்; என்னுடைச்
சேவகற்கு- என்னுடைய தலைவனான இராமனுக்கு; எதிர் நிற்க
– எதிர்த்து நிற்பதற்கு;எவர் கிற்பர்- எவர் வல்லமை உடையவர்; என ஐயமும் தேறினான் – என்று ‘பகை உண்டு’ என்ற
சந்தேகத்திலிருந்து தெளிந்தான்.
———-
‘என்னை, “இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க” என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன்’ என்று இருந்தான் அரோ. -214-
‘என்னை ‘இன்னும் அரசியல் இச்சையன் – இன்னமும் பரதன்
அரசாளும் ஆசை உடையவனாய் உளன்; அன்னன் ஆகில் அவன்
அது கொள்க’ – அப்படியிருந்தால் அவன் அரசாட்சியைக்
கொண்டிருக்கட்டும்; என்று உன்னினான் கொல் – என்று
நினைத்திருப்பானோ; உறுவதை நோக்கினான் – இனிச்
செய்யவேண்டுவதை எண்ணிப்பார்த்தவன்; ‘இன்னதே நலன்’ என்று
இருந்தான் – நம் காட்டிலே இருப்பதே நல்லது என்று இருந்து
விட்டானாகும். அரோ – அசை.
தான் நாடாள விட்டுக்கொடுத்து வராமல் இருந்திருக்கக் கூடும் என்று
புதிய காரணத்தைக் கற்பித்துக் கொண்டான் பரதன்.
—————
உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்
‘அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். –215-
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக – அத்தனைக்
காரணங்களில் எது ஒன்று ஆனாலும் ஆகட்டும்; வனத்து இருக்க;
வையம் புகுதுக- அவன் காட்டில் இருக்கட்டும் அல்லது நாட்டுக்குள்
வரட்டும்; (அது பற்றியும் எனக்குக் கவலை யில்லை)நினைத்து இருந்து
நெடுந்துயர் மூழ்கிலேன்- பலபடியாக நினைத்து நினைத்துப்
பெருந்துன்பத்தில் மூழ்க மாட்டேன்;மனத்து மாசு என் உயிரொடும்
வாங்குவேன் – என் மனத்துன்பத்தை என் உயிரோடு நீக்கிக்
கொள்வேன்.
நான் இறந்தால் என் மனத்துன்பமும் போய்விடும் என்று கருதித்
தற்கொலைக்குத் துணிகிறான்.
————
என்னப் பன்னி, ‘இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்’ என்னலும், தூதர் போய்,
‘உன்னைக் கூயினன், உம்முன்’ எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். -216-
என்னப்பன்னி- என்று பலமுறை கூறி; ‘இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்’ என்னலும் – தம்பியாகிய சத்துருக்கனை
என்னிடம் வரச்சொன்னதாகச் சொல்லுங்கள் என்று (தூதரிடம்)
சொல்லுதலும்; தூதர் போய் – தூதர் (சத்துருக்கனிடம்) சென்று;
‘உம்முன் உன்னைக் கூஉயினன்’ எனா முனம் – உன் அண்ணனாய
பரதன் உன்னை அழைத்தான் என்று சொல்வதற்கு முன்னாலே;
மூவர்க்கும் பின் உளான் முன்னர்ச் சென்றனன்- இராமர்க்கும் பரதலக்குவர்களுக்கும் பின பிறந்தவனாய சத்துருக்கன் பரதன் முன்னர்ச்
சென்றான்.
———
தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்
தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, ‘வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று’ என்றான். –217-
தொழுது நின்ற தன் தம்பியை- வணங்கி நின்ற தன் தம்பி
சத்துருக்கனை; தோய் கணீர் எழுது மார்பத்து இறுகத்
தழுவினான் – நிறைந்த கண்ணீரால் மெழுகப் பெற்ற தன்
மார்பில் பரதன் நன்கு தழுவி; அழுது- அவலித்து; ஐய! –
அய்யனே!; வேண்டுவது உண்டு- நின்பால் நான் வேண்டிக்
கொள்வது ஒன்று உண்டு; அவ்வரம் – அந்த வரத்தை; பழுது
இல் வாய்மையினாய்! – குற்றமற்ற சத்தியம் உடையவனே!;
தரற்பாற்று- தரவேண்டும்; என்றான்-.
—————
‘”என்னது ஆகும்கொல், அவ் வரம்?” என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது’ என்றான். –218-
‘அவ்வரம் என்னது ஆகும் கொல்’ என்றியேல் – அவ்வரம்
யாதாகுமோ என்று கேட்பாயானால்; இராகவன் சொன்ன நாளில்
தோன்றிலன் – இராமன் குறித்த நாளில் வரவில்லை; யான்
மின்னு தீயிடை வீடுவென் – யான் ஒளிரும் நெருப்பின் உயிர்
துறப்பென்;என் சொல்லை மறாது மன்னன் ஆதி – என்
வார்த்தை மறுக்காமல் அயோத்திக்கு அரசனாக இருந்து
ஆள்வாயாக; என்றான் -.
———–
சத்துருக்கன் வருந்தி உரைத்தல்
கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். –219-
கேட்ட தோன்றல் – பரதன் உரை கேட்ட சத்துருக்கன்;
கிளர் தடக்கைகளால் தோட்ட தன் செவி பொத்தி- மேல்
எழுந்த நீண்ட தன் கைகளால் துளையுடைய தன் காதுகளை
மூடிக்கொண்டு; துணுக்குறா- விதிர்ப்பு எய்தி; ஊட்டு நஞ்சம்
உண்டான் என்று உயங்கினான் – பிறர் ஊட்டிய விடத்தை
உண்டவனைப் போலச் சோர்ந்தான்; நாட்டமும் மனமும்
நடுங்கா நின்றான்- கண்ணும் மனமும் நடுங்குகின்றவனாக
ஆனான்.
————-
விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, ‘நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்!’ என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். –220-
விழுந்து – கீழே விழுந்து; மேக்கு உயர் விம்மலன் –
மேலும் மேலும் விம்மி; வெய்துயிர்த்து எழுந்து- பெரிதாக
மூச்சுவிட்டு எழுந்து; அழுந்து துன்பத்தினாய்! – துன்பத்தில்
அழுந்தியவனே! நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – நான்
உனக்கு என்ன தவறு செய்தேன்; என்று அரற்றினான் – என்று
புலம்பி; கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான்- மேல சுவாலை
விட்டு உயர்கின்ற கோபம் உடையவன் ஆனான்.
——–
‘கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; “போனவன் தான் வரும் அவதி போயிற்று” என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! –221-
கான் ஆள- காட்டில் வாழ; நில மகளைக் கைவிட்டுப்
போனானைக் காத்து, பின்பு போனானும் ஒரு தம்பி – பூதேவியை
வேண்டாம் என்று உதறிச் சென்ற இராமனைக் காப்பாற்றி அநுமன்
பின்னே போனவனும் ஒரு தம்பியாகிய இலக்குவன்; போனவன்தான்
வரும் அவதி போயிற்று என்னா – காடு போன இராமன் தான்
திரும்ப வரக் குறித்த காலம் கடந்தது என்று சொல்லி; ஆனாத உயிர்
விட என்று அமைவானும் ஒரு தம்பி – அமைந்திராத ஆற்றாமை
உடைய உயிரை விட்டுவிட என்று முயல்கின்றவனும் ஒரு தம்பியாகிய
பரதன்; அயலே நாணாது யான் ஆம் இவ் அரசு ஆள்வென் –
(இவர்களுடனேயே பிறந்து) மற்றொருவனாகிய யான் இந்த
நாணமில்லாமல் அரசை ஆளுவேனாம்; இந்த அரசாட்சி என்னே –
இந்த அரசாட்சி யாதாக உள்ளது; இனிதே – மிக இனிதே.
——–
‘”மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்” என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
“என்னின் பின் இவன் உளனாம்” என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும்’ என்றான். –222-
மன்னின் பின் வளநகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே
பரதன் என்னும் சொல் நிற்கும் – இராமனாகிய அரசன் காடு
போன பிறகு அயோத்தி நகரம் புகுந்து அரசு வீற்றிருந்து
வாழ்ந்தான் இந்த பரதன் என்ற வார்த்தை உலகில் உண்டாகும்;
என்று அஞ்சி புறத்து இருந்தும் அருந்தவமே
தொடங்கினாயே- என்று பயந்து அயோத்திக்குப் புறத்தே
நந்தியம்பதியில் இருந்தும் அரிய தவத்தையே செய்யத்
தொடங்கினாய் அல்லவா?; என்னின் பின் இவன் உளனாம்
என்றே – நான் அக்கினிப் பிரவேசம் செய்து உயிரை விட்டபிறகு
இவன் பிழைத்திருப்பான் என்று; உன் அடிமை உனக்கு இருந்த
தேனும்- உன் அடியவனான என் விஷயத்தில் உனக்கு எண்ணம்
இருந்தாலும்; உன்னின் பின் இருந்ததுவும்- நீ இறந்த பிறகு
உனக்குப்பிறகு உடன் இறவாமல் உயிரோடு இருந்ததுவும்; ஒரு
குடைக்கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – நீ உள்ளபோதே
உன்னை அகற்றி ஒரு வெண் கொற்றக் குடைகீழ் நான் இருந்து
அரசாள்வதும் ஒன்றுதானே என்று கூறி வருந்தினான்.
————-
சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, ‘அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க’ என்றான். –223-
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு
நிறத்து முளரிச் செங்கண் சத்துருக்கன் அ ஃது உரைப்ப- முத்து
வடிவம் கொண்டு செய்தது போன்ற முழுமையான வெள்ளியின்
கொழுவிய வெண்மை நிற மேனியை உடைய தாமரை போலும்
கண்ணான் ஆகிய சத்துருக்கன் அந்த வார்த்தைகளைச் சொல்ல; (அது
கேட்ட பரதன்) அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை- அந்த
இராமன் நாடு வரத் தாமதிக்கின்ற காரணம்; யான் இங்கு
ஒத்திருக்கலாம் அன்றே – யான் இங்கு அரசாட்சியோடு கூடி
இருக்கின்ற தன்மையால் அல்லவா?; உலந்ததன்பின் இவ் உலகை
உலைய ஒட்டான் – நான் இறந்தபிறகு இந்த உலகத்தை வருந்தும்படி
விடமாட்டான்; அத்திருக்கும் கெடும் – அந்த மாறுபட்ட நினைவும்
அவனை விட்டுப் போகும்; உடனே புகுந்து அரசு ஆளும் – உடனே
விரைந்து அயோத்திக்குள் நுழைந்து அரசை ஆள்வான் (ஆதலின்
சத்துருக்க!); ‘போய் எரி அமைக்க’ என்றான் – நீ சென்று
நெருப்பைத் தயார் செய்வாயாக என்று சொன்னான்.
—————
செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்
அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
‘இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே!’ என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள் –224-
அப்பொழுதின் – அந்த நேரத்தில்; இவ் உரை சென்று-
பரதன் கூறிய இச்சொல் (காற்றுவாக்கில்) சென்று;
அயோத்தியினின் இசைத்தலுமே – அயோத்தி நகரத்தில்
சொல்லப்பட்டதுமே; அரியை ஈன்ற ஒப்பு எழுத ஒண்ணாத
கற்புடையாள், வெப்பு எழுதினால் அன்ன மெலிவுடையாள்-
திருமாலைப் பெற்ற உவமை சொல்ல முடியாத கற்புடையாளும்
பிரிவுத் துயரத்தினால் வெம்மை எழுதி வைத்தாற்போன்ற
தளர்ச்சியடைந்த திருமேனியுடையாளும் ஆகிய கோசலை; வயிறு
புடைத்து, அலமந்து, ஏங்கி – வயிற்றில் அடித்துக்கொண்டு,
மனம் சுழன்று, இரங்கி; மகனே! யாக்கையினை முடித்து ஒழிந்தால்
இப்பொழுதே உலகு இறக்கும் என்னா – பரதனே! நீ உன்
உடலை (எரியில் வீழ்த்து) அழித்து ஒழிந்து போனால் அக்கணமே
உலகம் முழுதும் இறந்துபடும் என்று சொல்லி; விலக்க-அவனைத்
தடுக்க; கடிது ஓடி வந்தாள்- விரைந்து ஓடி வந்தாள்.
———
மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. -225-
(அவள்) மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர்,
மற்றும் சுற்ற – அமைச்சர், சேனைத் தலைவர், அயோத்தி நகர
மாந்தர், அந்தணர் மற்றும்உள்ளோர் தன்னைச் சுற்றிவர; சுந்தரியர்
எனைப் பலரும் கை தலை மேல் பெய்து இரங்கித் தொடர்ந்து
செல்ல – மகளிர் முதல் அனைவரும் தலைமேல் கையால்
அடித்துக்கொண்டு மனமிரங்கி அவனைப் பின்பற்றிச் செல்ல;
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி
ஏத்த- இந்திரன் முதலான தேவர்களும் முனிவர்களும் பரம்
பொருளை வணங்கித் தோத்திரம் செய்ய; அந்தர மங்கையர்
வணங்க- தேவப் பெண்கள் வணங்க; அழுது அரற்றி – அழுது
பலவாறு புலம்பி; பரதனை வந்து அடைந்தாள் – பரதனை வந்து
சேர்ந்தாள்.
—————
கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.–226-
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து
ஓசிய – விரிந்து பொருந்திய நீண்ட சடை முதுகின்கண் அசைந்து
விழுந்து வளைய; மேனி தள்ள- உடம்பு தடுமாற; எரி அமைத்த
மயானத்தை எய்துகின்ற காதலனை – நெருப்பு உண்டாக்கிய
இடுகாட்டை அடைகின்ற அன்பு மகனாகிய பரதனை; இடையே
வந்து- நடுவில் புகுந்து வந்து; சொரிவு அமைப்பது அரிது ஆய
மழைக் கண்ணாள் தொடருதலும் – சொரிந்து உண்டாக்குதல்
இயலாது என்று சொல்லும்படி நீர் மழை போல ஒழுகுகின்ற
கண்ணுடைய கோசலை பின்பற்றிக் கொள்ளுதலும்; பரிவு அமைந்த
திரு மனத்தான் – அன்பால் நிறைந்தமைந்த நன்மனம் உடைய
பரதன்; துணுக்கம் எய்தா – நடுக்கமுற்று; அடிதொழுதான்-
அவள் காலில் வீழ்ந்து வணங்கினான்; அவள் புகுந்து பற்றிக்
கொண்டாள் – கோசலை அவனிடையே புகுந்து அவனை இறுகப்
பிடித்துக் கொண்டாள்.
—————-
‘மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே?’ என்றாள். –227-
மன் இழைத்ததும் – தயரதன் இறந்ததும்; மைந்தன்
இழைத்ததும் – இராமன் காடு போயதும்; முன் இழைத்த
விதியின் முயற்சியால் – முன்னால் செய்தமைத்த வினையாகிய
விதியின் விளைவால் நடந்தவையாகும்; பின் இழைத்ததும்-
பின் குறித்த காலத்தில் வாராமையும்; எண்ணில்- யோசித்தால்;
அப்பெற்றியால் – அதுபோல விதியின் விளைவே; என் மகனே!
– என் மகனாகிய பரதனே (விதியாலன்றி) என் இழைத்தனை –
நீயாக என்ன செய்யத் துணிந்தாய்? என்றாள்.
தாமாக இயல்பாக நடப்பனவற்றை விதியின் விளைவு என்றும்
நாமாக வலிந்து மேற்கொண்டு செய்வனவற்றை வினை என்றும்
வேறு பிரித்துணரலாம்.
————-
‘நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். –228-
(பரதா!) நீ இது எண்ணினையேல் நெடுநாடு எரி பாயும்
– நீ எரியில் வீழ்ந்து உயிர் துறப்பதாக நினைத்தால் இப்பெரிய
நாட்டில் உள்ளார் அனைவரும் எரி பாய்வர்; மன் அருஞ்
சேனையும் பாயும் – மன்னர்களும் அரிய சேனைகளும் பாயும்;
தாயர் எம் அளவு அன்று- தாயர்களாகிய எங்கள் அளவில்
மாத்திரம் நிற்பது அன்று; தனி அறம் தீயின் வீழும் –
ஒப்பற்ற தருமமே எரியில் வீழும்;உலகும் திரியும்- உலகம்
நிலைகெட்டுச் சுழலும்.
———-
‘தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? -229-
ஐய! – பரதனே!; தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமம் அன்றிக் கண்டிலம் கண்களால் – அற நீதியின் பயன்பாடு
என்பது உன் செயலே அல்லாமல் எங்கள் கண்களால் வேறு
காணவில்லை; அருமை ஒன்றும் உணர்ந்திலை – நின்னுடைய
அருமையை ஒருசிறிதும் உணரவில்லை; நின் பெருமை ஊழி
திரியினும் பேருமோ – உனது பெருமை ஊழிக்காலம் மாறுபடினும்
மாறுபடாது.
————
‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? –230-
எண் இல் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின்
அருளுக்கு அருகு ஆவரோ?- கணக்கற்ற கோடியளவான இராமர்கள்
ஒன்று சேர்ந்தாலும் பெருமைக்குரியவனே உன் அருளுக்குச்
சமானமாக அருகில் வைத்துக் காணவும் ஒவ்வார்; புண்ணியம் எனும்
நின் உயிர் போயினால், மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ
– புண்ணிய வடிவாகிய நின் உயிர் போனால் நிலமும் ஆகாயமும்
ஏனைய உயிர்களும் வாழா, இறந்துபடும்.
——————
‘இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய்’ என்றாள். -231-
(இராமன்) இன்று வந்திலனே எனின்- இன்று வரவில்லை
என்றால்; நாளையே வந்து உனை ஒன்றும் – நாளைக்கே வந்து
உனைச் சேர்வான்; உன்னி உரைத்த சொல் – அவன் கருதிச்
சொன்ன வார்த்தையில்; பின்றும் என்று உணரேல்-
பின்னிட்டு வாராதிருப்பான் என்று உணராதே; பிழைத்தான்
எனின் – அப்படித் தவறுவான் ஆயின்; போய் பொன்றும்
தன்மை புகுந்தது – வந்து அவனே அழியும் அபாயத்தன்மை
நேர்ந்தது (ஆகும்); என்றாள்.
———
‘ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! –232-
கலைத் தருமம் நீஅலது இல் எனும் தன்மையாய்! –
சாத்திரங்களிற் சொல்லப்படும் தருமம் நீ அல்லாமல் வேறு இல்லை
என்று கூறத்தக்க குண நலம் உடையாய்!; ஒருவன் மாண்டனன்
என்று கொண்டு – ஒரு இராமன் மாண்டான் என்பதாக மனத்தில்
கருதி (உன் உயிரை மாய்த்து அதனால்); பெரு நிலத்து –
இப்பூஉலகில்; ஊழிவாழ்- நெடுங்காலம் வாழக்கூடிய; பெறல்
அரும் இன்னுயிர்க் கருவும் மாண்டு அறக் காணுதியோ –
பெறுதற்கரிய இனிய உயிரின் தோற்றமும் அடியோடு இல்லாது
போகச் செய்யப் பார்க்கிறாயா? (அது சரியன்று)
———
‘”இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்” என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்?’ என்றாள்-மனம் தூய்மையாள். -233-
மனம் தூய்மையாள்- தூய மனம் உடைய கோசலை; மகனே! –
பரதனே!; இறக்கையும் – இறப்பதும்; சிலர் ஏகலும் – சிலர்
உலகைப் பிரிந்து செல்லுதலும்; மோகத்தால் பிறக்கையும் –
ஆசையின் காரணமாக மீண்டு பிறப்பெடுப்பதும்; கடன் – உலக
முறைமை; என்று- எனக்கருதி; பின் பாசத்தை மறக்கை வலி
ஆவது காண் – பிறகு பாசமாகிய பற்றை மறந்துவிடுதல் தான்
உள்ள வலிமை என்பதாகும் என அறிவாயாக; துறக்கை தானும் –
துறப்பது என்பதும் (அதுவே); என்றாள்.
————-
கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்
‘”மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்” எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். –234-
(அம்மா!) மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்-
என் மகன் என் சொல்லை மறுத்துப் பேசிவிட்டான் என்று கருதாதே;
எந்தை மெய்ம்மையும் இக்குலச் செய்கையும் நைந்து போக –
என் தந்தையின் சத்தியமும் இக்குலத்தின் ஒழுக்கமும் தேய்ந்து அழிய;
உயிர் நிலை நச்சிலேன் – உயிர் வாழ விரும்பவில்லை; முந்து
செய்த சபதம் முடிப்பன் – சித்திரகூடத்தில் செய்த சபதத்தை
முடிப்பேன்;
———
‘யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? -235-
யானும் – மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் வானுள்
எய்திய மன்னவன் மைந்தன் – நானும் வாய்மைக்குத்
தன்னுயிரைக் கொடுத்துச் சென்று விண்ணுலகடைந்த தயரதன்
மகன்தான்; (வாய்மை காப்பது என்பது) கானுள் எய்திய
காகுத்தற்கே கடன்?- காட்டிற்குச் சென்ற இராமனுக்கு மட்டுமா
முறைமை (எனக்கில்லையா); ஏனையோர்க்கும் – தயரதன்
பிள்ளைகளாய என் போன்றவர்களுக்கும்; இது – வாய்மை காப்பது;
இழுக்கு இல் வழக்கு அன்றோ? – குற்றம் இல்லாத முறைமை
அல்லவா (என் சபத வாய்மை காத்து தயரதன் மகன் என்று
குலத்தின் ஒழுக்கத்தை நிலை நிறுத்துவேன் என்றான்.)
———-
‘தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு’ என்றான். –236-
தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும் பாசத்து
அன்பினைப் பற்று அற நீக்கலும்- இரத்த பாசத்தால் உறவு
முறையால் உள்ளதாகிய அன்பை அடியோடு போக்கிக் கொள்ளுதலும்
ஆகிய இவை; ஈசற்கே கடன் – இராமனுக்கே செய்யும் முறைமையாகும்;
யான் அஃது இழைக்கிலேன்- நான் அதனைச் செய்யமாட்டேன்; மாசு
அற்றேன் – குற்றம் அற்றவன் யான்; இது மாண்டு காட்டுவென் –
இதனை இறந்து அனைவர்க்கும் அறிவிப்பேன்; என்றான்.
———-
அனுமன் தோன்றுதல்
என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். -237-
என்று தீயினை எய்தி – என்று சொல்லி, நெருப்பை அணுகி;
இரைத்து எழுந்து ஒன்று பூசலிடும் உலகோருடன் – கூக்குரலிட்டு
சேர்ந்து ஆரவாரம் செய்து அழுகின்ற உலக மக்களுடன்; நின்று
பூசனை செய்கின்ற நேசற்கு – சேர்ந்து நின்று விழுவதற்கு
முன்பாக அக்கினியைப் பூசிக்கின்ற அன்பனாகிய பரதனுக்கு முன்;
குன்றுபோல் நெடு மாருதி கூடினான் – மலை போன்ற
பேருருவுடைய அனுமன் வந்து சேர்ந்தான்.
———
இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்
‘ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?’ என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். –238-
(அனுமன்) அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன் –
தலைவனான இராமன் வந்தான் மேலோன் வந்தான்; மெய்யின்
மெய் அன்ன நின் உயிர் வீடினால் அவன் உய்யுமே –
சத்தியத்திற்கு உடல் போன்றுள்ள உனது உயிர் அழிந்துபட்டால்
அந்த இராமன் உயிர் வாழ்வானா?; என்று உரைத்து உள் புகா –
என்று சொல்லி உள்ளே நுழைந்து; கய்யினால் எரியைக் கரி
ஆக்கினான்- தன் கரங்களாற் பிசைந்து நெருப்பை அணைத்துக்
கரியாக ஆகுமாறு செய்துவிட்டான்.
இராமன் வந்தான் என்பதற்கு நெருப்பைக் கையால் அணைத்து
சான்றாக (கரியாக) ஆக்கினான் என்றும் பொருள் கொள்ளுமாறு
‘கரியாக்கினான்’ என்றது ஓர் நயம்.
————-
ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, ‘ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும்’ எனச் சொல்லினான். -239-
ஆக்கி- அவ்வாறு நெருப்பை அவித்துக் கரியாக்கி; மற்று
அவன் ஆய்மலர்த் தாள்களைத் தாக்கத் தன்தலை தாழ்ந்து
வணங்கி – அப்பரதனது அழகிய மலர் போன்ற திருவடிகளை
மோதும்படி நெருக்கமாகத் தன் தலையால் தாழ்ந்து வணக்கம் செய்து; கை
வாக்கின் கூடப் புதைத்து – கையால் வாயை நன்கு மூடிக்
கொண்டு; ஒரு மாற்றம் நீ தூக்கிக் கொள்ளத் தகும்’ எனச்
சொல்லினான் – ஒரு சொல் நீ ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளத்
தகுவது என்று சொன்னான்;
———
‘இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். –240-
ஐய! – பரதனே!; உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த
நாள்- உன்னை முன்பு வந்து அடைவதாகச் சித்திர கூட மலையில்
சொல்லிய நாள்; இன்னம் எண் ஐந்து நாழிகை உளது – முடிவுற
இன்னமும் நாற்பது நாழிகை உள்ளது; இன்னது இல்லை எனின்-
அப்படி இல்லை என்று மெய்ப்பித்தால்; அடி நாயினேன் – நாயிற
கடையனான யான்; இவ் எரியில் முன்னம் வீழ்ந்து முடிவெனால் –
இந்நெருப்பில் உனக்கு முன்பாக விழுந்து இறப்பேன்.
————-
‘ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! -241-
பொய் இலாய்! – சத்தியவானே; ஒன்றுதான் உளது – நான் கூற
வேண்டுவது ஒன்றுதான் இருக்கிறது; உன் அடியேன் சொலால் –
உன்னுடைய அடியேனாகிய என் சொல்லால்; நேமிச் சுடர் நெடுங்
குன்று தோன்றளவும் – வட்டமான ஒளி வடிவுடைய சூரியன்
உதயமலையில் தோன்றுகின்ற அளவு வரையும்; நின்று தாழ்த்தருள்-
தாமதித்து நின்றருளுவாயாக;இது குன்று மேல் -இராமன் இதற்குள்
வருவான் என்ற என் வார்த்தை பழுது படுமானால்; நீயும் உலகமும்
பொன்றும் – நீயும் ஏன் உலகமும் கூட அழிந்துபடும் (இது சத்தியம்)
தன்னைப் பரதனது அடியேன் என்று சொல்லி பரதனை அன்பாற்
பிணித்த அனுமனது சொற் சாதுரியம் காண்க. அவன் சொல்லின்
செல்வன் அன்றோ.
———-
‘எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: -242-
எங்கள் நாயகற்கு – எங்கள் பெருமானாகிய இராமனுக்கு; இன்
அமுது ஈகுவான் – இனிய உணவு தருவதற்காக; பங்கயத்துப்
பரத்துவன் வேண்டலால்- தாமரை மாலை உடைய பரத்துவாச
முனிவன் வேண்டியபடியால்; அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ
– அங்கே பரத்துவாச ஆச்சிரமத்தில் தங்கினானே அல்லாமல்
தாமதிப்பானா? நல்லது ஒன்று இன்னமும் இங்கண் கேட்டி-
நல்லதாகிய இன்னும் உள்ள ஒரு செய்தியை இவ்விடத்துக் கேட்பாயாக.
————–
அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்
‘அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய்’ எனக் காட்டினான். –243-
கோது அறு சிந்தையாய்! – குற்றம் அற்ற மனம் உடைய
பரதனே!; அண்டர் நாதன் அருளி அளித்துளது ஓர் பேர்
அடையாளம் உண்டு, அது உனக்கு கொண்டு வந்தனென்,
கண்டு கொண்டருள்வாய் எனக் காட்டினான் – தேவதேவனாய்
இராமபிரான் அருள் செய்து அன்பினால் தந்தது ஒரு பெரிய
அடையாளம் இருக்கிறது; அதனை உனக்காகக் கொண்டு வந்தேன்.
பார்த்துப் பெற்றுக்கொண்டருள்வாயாக’ என்று சொல்லி
கணையாழியைக் காண்பித்தான்.
——————-
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், –244-
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்- அனுமன்
காண்பித்த மோதிரம் கண்ணில் கண்ட அளவில்; ஈட்டிய
உலகுக்கும் இளைய வேந்தற்கும் – அங்கு தொகுக்கப்பட்ட
உலக மக்களுக்கும் பரதனுக்கும் அது; மூட்டு தீ வவ்விடம்
உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நல் மருந்து ஒத்தது- எரிகின்ற
தன்மையை மேலும் அதிகப்படுத்தும் வலிய விடம் ஏறப் பெற்று
முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு அது அடியோடு நீங்க
ஊட்டப்பெற்ற நல்ல மருந்தினை ஒத்ததாயிற்று.
——————
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. –245-
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன- இதுவரை அழுது
கொண்டிருந்த வாய்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – நீர் விழுகின்ற அழுத
கண்கள் வெள்ளநீர் மாறப் பெற்றன; உழுகின்ற தலை எலாம் உயர்ந்து
எழுந்தன- கீழே உழுவதைப் போலச் சாய்ந்த தலைகள் மேல் உயர்ந்து
நிமிர்ந்தன; கை எலாம் – கைகள் எல்லாம்; காலின் தோன்றலைத்
தொழுகின்ற – காற்றின் மகனாகிய அனுமனைத் தொழுகின்றன.
—————
மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி
மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
‘ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ?’ எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். –246-
தொழும் தூதனை முறை முறை தொழுது துள்ளுவான்-
மோதிரம் கொடுத்துத் தன்னை வணங்கிய தூதனாகிய அநுமானைப்
பன்முறை வணங்கித் துள்ளுகின்ற பரதன்; மோதிரம் வாங்கி, தன்
முகத்தின் மேல் அணைத்து – அநுமன் காட்டிய மோதிரத்தை
எடுத்துத் தன் முகத்தின் மேலாக அணைத்துக் கொண்டு; ஆதரம்
பெறுவதற்கு ஆக்கையோ? எனா ஓதினர் – இராமனைப் பிரிந்து
வருந்திய இவன் உடம்பு அவன் அன்பைப் பெறுவதற்குரிய வலிமை
உடைய உடம்புதானா இது என்று கூறியவர்கள்; நாண் உற-
வெட்கம் அடையும்படி;ஓங்கினான் – உடல் பூரிக்கப பெற்றான்.
—————
ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
‘ஏதிலன் ஒருவன்கொல்’ என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. –247-
ஆதி வெந்துயர் அலால்- இராமனைப் பிரிந்தது முதலே கொடிய
துன்பமே; மகிழ்ச்சி இல்லாமையாலும்; அருந்தல் இன்மையால்
– நல்ல உணவுகளை உண்ணுதல் இன்மையாலும்; ஊதுறப் பறப்பதாய்
உலர்ந்த யாக்கை போய் – ஊதினால் பறப்பதாக வற்றிப் போன
உடம்பானது போய்; ஏதிலன் ஒருவன் கொல் என்னது ஆயது-
இவன் பரதனல்ல அயலான் ஒருவன் போலும் என்று ஐயுறும்படி
ஆயிற்று; வயிரத் தோள்கள் மாதிரம் வளர்ந்தன – அவனுடைய
வலிய தோள்கள் திசையளவும் வளர்ந்தன.
—————
அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். –248-
அழும் – அழுவான்; நகும்- சிரிப்பான்; ஆழிக் கைகளால்
அனுமனை தொழும் – மோதிரம் உள்ள கையால் அனுமனைத்
தொழுவான்; எழும் – எழுவான்; வெங்களி துளக்கலால் துள்ளும்
– விரும்பும் மகிழ்ச்சி அவனை அசைப்பதால் துள்ளித் துடிப்பான்;
அழிந்து விழும் – உடனே சோர்ந்து விழுவான்; ஏங்கும்-
இரங்குவான்; போய் வீங்கும் – மேற்சென்று பூரிப்பான்;
வேர்க்கும் – வியர்ப்பான்; அக்குழுவொடும் குனிக்கும் –
மகிழும் கூட்டத்தாருடனே நடமிடுவான்; தன் தடக்கை கொட்டும்
– தனது நீண்ட கைகளைத் தட்டுவான்.
——–
‘ஆடுமின், ஆடுமின்!’ என்னும்; ‘ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்!’ என்னும்; ‘ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்!’ என்னும்; ‘பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்!’ எனும். -249-
ஆடுமின், ஆடுமின்! என்னும் – ஆடுங்கள் என்பான்;
ஐயன்பால் ஓடுமின், ஓடுமின்! என்னும் – இராமனிடம்
ஓடுங்கள் என்பான்; ஓங்கு இசை பாடுமின், பாடுமின் என்னும்
– உயர்ந்த இசைப் பாடல்களைப் பாடுங்கள் என்பான்;
பாவிகாள்- பாவிகளே!; தூதன் தாள் சூடுமின், சூடுமின்!
என்னும்- தூதனாகிய அனுமன் அடியைத் தலையில் சூடுங்கள்
என்பான்.
———-
‘வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி’ எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். -250-
வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்- இராமனுக்கு வஞ்சனை
செய்த தீய தன்மை கொண்ட கைகேயியானவர்; இனி துஞ்சுவர்
எனத் தோளைக் கொட்டும்- இனிமேல் இறந்து படுவர் என்று தன்
தோள்களைத் தட்டுவான்; குஞ்சித அடிகள் – வளைத்து மடித்த
கால்கள்; மண்டிலத்தில் கூட்டுற – வட்டமாகச் சேரும்படி;
அஞ்சனக் குன்றின் – மை மலைபோல; நின்று ஆடும், பாடும்
– நின்று கொண்டு ஆடுவான், பாடுவான்.
———-
வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! –251-
வேதியர் தமைத் தொழும் – அந்தணர்களை வணங்குவான்;
வேந்தரைத் தொழும் – அரசர்களை வணங்குவான்; தாதியர்
தமைத் தொழும் – பணி புரியும் சேடிப் பெண்களைத்
தொழுவான்; தன்னைத் தான் தொழும்- தன்னைத் தானே
வணங்கிக் கொள்வான்; ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்
நிற்கும் – எது ஒன்றையும் உணராமல் இருப்பான், நிற்பான்;
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! – அன்பு
என்பதுவும் ஓர் கள்போலத் தோன்றியதே!
———–
பரதன் அனுமனைப் பாராட்டி, ‘நீ யார்?’ எனல்
அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, ‘நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன்’ என்றான். –252-
அத்திறத்து ஆண்தகை- அத்தன்மைகளை உடைய ஆண்களிற்
சிறந்தவனாகிய பரதன்; அனுமன் தன்னை – அநுமனை; நீ
எத்திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதி – நீ எத்தன்மை உடையவன்
என்று உன்னைப் பற்றி எங்களுக்குச் சொல்லி அருளுக;
முத்திறத்தவருளே ஒருவன் ஒத்திருந்தாய் மூர்த்தி வேறு
என உணர்கின்றேன்’ என்றான் – மும்மூர்த்திகளுள் ஒருவனை
ஒத்திருக்கின்றாய்; வடிவம் மட்டும் வேறாய் உள்ளது என
ஊகித்தறிகிறேன் என்றான்.
———–
‘மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
“துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!” என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: -253-
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – அந்தணர்
வேடம் கொண்டு நெருங்கி வந்திருக்கிறாய் (ஆயினும்); இறைவரின்
ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்- மும்மூர்த்திகளுள் ஒருவன்
நீ என்று கருதுகின்றேன்; துறை எனக்கு யாது எனச் சொல்லு
சொல் என்றான் – உன் வரலாறு யாது என்று எனக்கு விரைந்து
சொல்லுக என்றான்; அறைகழல் அனுமனும் அறியக் கூறுவான் –
ஒலிக்கும் கழலை அணிந்த அனுமனும் நன்கு விளக்கிக்
கூறுவானானான்.
———–
அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்
‘காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். –254-
மன்ன! – பரதனே!; காற்றினுக்கு அரசன் பால்- வாயு
தேவனிடமாக; கலிக்குலத்தினுள் நோற்றனள் வயிற்றின் வந்து
உதித்து – குரங்குக் கூட்டத்துள் தவம் செய்தவள் வயிற்றில்
வந்து பிறந்து;நும் முனாற்கு – உம்முடைய அண்ணனுக்கு; ஏற்றிலா
அடித்தொழில் ஏவலாளனேன் – அவருடைய பெருமைக்குச்
சிறிதும் ஒவ்வாத அடிமைத்தொழில் புரியும் பணியாளன்; உரு
மாற்றினென் – வடிவை மாற்றிக்கொண்டுள்ளேன்; யான் ஒரு
குரங்கு -.
———–
‘அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு’ எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். –255-
அடித்தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்- அடிமைத்
தொழில் செய்யும் கீழான எனது சிறுமையான குரங்குடம்பை;
கடித்தடந் தாமரைக் கண்ணின் நோக்கு எனா – மணம் வீசும்
அகன்ற தாமரை மலர் போன்ற உன் கண்களால் பார்ப்பாயாக என்று;
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான் – அப்போது
எடுத்திருந்த பொய்யான மறையவர் வடிவத்தை மாற்றிப் போக்கினான்;
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான்- முடியானது
தேவர்கள் கண்களில் படும்படி மேற்பட்டு வளர்வான் ஆனான்.
—————-
வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்
வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
‘எஞ்சல் இல் அதிசயம் இது’ என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். –256-
வெஞ்சிலை இருவரும் – கொடியவில் ஏந்திய பரத
சத்துருக்கனர்களும் விரிஞ்சன் மைந்தனும் – பிரமனது மானச
புத்திரனாய வசிட்டனும்; எஞ்சல் இல் அதிசயம் இது என்று
எண்ணினார் – குறைவில்லாத ஆச்சரியப்படத்தக்க தோற்றம்
என்று கருதினார்கள்; துஞ்சிலது ஆயினும், அஞ்சனை சிறுவன்
ஆக்கையால் சேனை துண்ணென அஞ்சினது- இறக்கவில்லை
ஆனாலும் அஞ்சனாதேவியின் மகனான அனுமனது உடம்பைக்
கண்டதால் அயோத்திச் சேனை திடுக்கிட்டு பயந்தது.
————
‘ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து’ என, மன்னன் வேண்டினான். –257-
மன்னன்- பரதன் (அநுமனை); ஈங்கு நின்று யாம்
உனக்கு இசைத்த மாற்றம் – இங்கே இருந்து நாங்கள்
உனக்குச் சொன்ன வார்த்தை; தூங்கு இருங் குண்டலச்
செவியில் சூழ்வர ஓங்கல – தொங்குகின்ற பெரிய
குண்டலமணிந்த காதுகளில் சுற்றிப் பொருந்த ஓங்கி
வரமாட்டுகின்றில; ஆதலின், உலப்பு இல் யாக்கையை
– வற்றாத இப் பேருடம்பை; விரைந்து வாங்குதி – விரைந்து
சுருக்கி மாற்றுவாயாக; என வேண்டினான்- என்று வேண்டிக்
கொண்டான்;
————-
அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்
சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். –258-
ஐயன் – பரதன்; சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை – சிறிதாக்கிக் கொண்ட வடிவுடைய
வனாய் வணங்கி முன்னால் நின்ற சூரியன் மாணவனாகிய
அனுமனை; அன்பினால் – அன்புடனே (நோக்கி); பொருக்கென-
விரைவாக; வனத்திடைப் புகுந்த தன்மையை – காட்டின்கண்
நடந்த நிகழ்ச்சிகளை; என் உணர்வு உருக்கி உற உரைத்தி
என்றான் – என் உணர்வு உருகும்படி சொல்வாயாக என்று
கேட்டான்;
——————-
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பும், தான்
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான்.–259-
போர் வித்தகத் தூதனும் – போர்த் திறமையில் சதுரப்பாடு
உடைய அனுமனும்;சித்திர கூடத்தைத் தீர்ந்தபின்- பரதன்
சந்தித்த சித்திர கூடமலையை நீங்கிய பிறகு; பத்து சிரம்
உடையவனுடன் விளைந்த பண்பும்- பத்துத் தலைகளை உடைய
இராவணனுடன் நடந்த போர்ச் செயல்களையும்; தான் இத்தலை
அடைந்ததும் இறுதி ஆய- தான் அயோத்திக்குப் பரதனிடம்
வந்து சேர்ந்ததும் முடிவாக நடந்த செய்திகளை; விரிக்கும்
சிந்தையான் – விரித்துக் கூறும் மனம் உடையவனாக ஆனான்.
———–
குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். –260-
குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான் – மலை
ஒத்த கட்டமைந்த வில்லையுடைய நம்பியாகிய இராமபிரான்;
தென்திசை சித்திரகூடம் தீர்ந்தபின் – தெற்கே உள்ள
சித்திரகூட மலையை நீங்கியபிறகு; வன்திறல் விராதனை
மடித்து – வலிமையுடைய விராதனை அழித்து; மாதவர் துன்றிய
தண்டக வனத்துள் துன்னினான்- முனிவர்கள் நெருங்கியுள்ள
தண்டகக் காட்டுக்குள் சேர்ந்து தங்கினான்.
————-
‘ஆங்கு உறை தபோதனர், ”அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத் துறை, நீதியோய்!” என,
‘தீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்’ என்றான். –261-
ஆங்கு உறை தபோதனர் – அங்கே வசிக்கின்ற தவ
முனிவர்கள்; நீதியோய்! அரக்கர்க்கு ஆற்றலேம், தவத்துறை
நீங்கினம் என- நீதிச் செல்வனான இராமனே! அரக்கர் செய்யும்
துன்பத்தைத் தாங்க முடியாதவர்களாக உள்ளோம்; தவத்திலிருந்தும்
கூட விலகிவிட்டோம் (சரண்) என்று சொல்ல (இராமன்); நீர்
மனத்துயர் வாங்குமின், தீங்கு செய்பவர்களைச் செகுத்தல்
திண்ணம், வாய்மை என்றான் – முனிவர்களே உங்கள்
மனத்துன்பத்தை எடுத்து விடுங்கள்; தீங்கு செய்பவர்களை நான்
அழிப்பது உறுதி இது சத்தியம் என்று அவர்களுக்கு வாக்களித்தான்;
————
‘ஆறு நாள் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. –262-
ஆறு நால் ஆண்டு அவண் வைகி- பத்து ஆண்டுகள் அங்கு
தங்கியிருந்து; அப்புறத்து – அதன்பிறகு; ஈறு இலா முனிவரர்
ஏய ஆணையால்- அழிவில்லாத தவத்தோர் ஏவிய கட்டளைப்படி;
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை – தனக்கு சமானமில்லாத
தமிழ் முனியாகிய அகத்தியன் வாழும் காட்டை (அகத்தியாச்சிரமம்);
ஊறு இலா முனிவரன் உவந்து முன்வர நண்ணினான் –
துன்பமற்ற அகத்தியன் மகிழ்ந்து எதிர்கொள்ள அடைந்தான்.
————-
‘குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான்தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம்தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். –263-
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் – தன்
அகங்கையில் கடலை உழுந்தளவு ஆக்கிக் கொண்ட அகத்தியன்;
தடங்கணான்தனை எதிர் தழுவி – அகன்ற கண்களை உடைய
இராமனை எதிரே தழுவிக்கொண்டு; சாபமும், கடுங்கணைப்
புட்டிலும் கவசம்தானும், அத்திடம் படு சுரிகையும் சேர
ஈந்தனன் – வில்லும், விரைந்து செல்லும் அம்புகளை உடைய
தூணியும் மார்புக் கவசமும், அத்தன்மையான வன்மை பெற்ற
வாளும் ஆகியவற்றை ஒரு சேர இராமனுக்கு அளித்தான்.
————–
‘அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகைதன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் துறு பஞ்சவடியின் வைகினார். –264-
அப்புறத்து – அதன்பிறகு; எருவையின் அரசைக் கண்ணுறா-
கழுகுகளின் அரசனாகிய சடாயுவைச் சந்தித்து; துப்பு உறச் சிவந்த
வாய்த் தோகை தன்னுடன் மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன்
தானும் போய் – பவழம் எனச் சிவந்த வாயினை உடைய சீதையோடு
உண்மைப் புகழ் உடைய இலக்குவனும் இராமனும் புறப்பட்டுச் சென்று;
மைப்பொழில் துறு பஞ்சவடியின் வைகினார் – கரிய சோலைகள்
நெருங்கியுள்ள ‘பஞ்சவடி’ என்ற இடத்தில் தங்கினார்கள்.
———–
பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள்.–265-
பல்பகல் இறந்த பின்றை – பலநாள் கழிந்த பிறகு; பாதக
அரக்கி தோன்றி – கொடிய சூர்ப்பணகை அங்கே வந்து;
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி – மென்மையான
இடையுடைய சீதையைக் கோபித்து அச்சுறுத்திய போது; இளைய
வீரன் – இலக்குவன்; அல்கிய திருவைத் தேற்றி – அதனால்
மனம் சுருங்கிய (துன்புற்ற) சீதையைத் தெளிவித்து; அவளுடைச் செவியும்
மூக்கும் மல்கிய முலையும் கொய்தான் – அந்த
சூர்ப்பணகையின் காது, மூக்கு, வளர்ந்த கொங்கை
அனைத்தையும் பறித்துவிட்டான்; அவள் மறித்து கரற்குச்
சொன்னாள் – அவள் திரும்பச் சென்று கரனிடம்
முறையிட்டாள்.
————
‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள.–266-
காந்தி எரியும் மூன்று அனலே ஒப்பார் – பற்றி எரியும்
குன்று நெருப்புகளை ஒத்தவர்களாகிய; கரனொடு திரிசிராவும்,
கடில தூடணனும் – கரன், திரிசிரா, கொடிய தூடணன் ஆகிய
மூவரும்;வெஞ் சேனையோடும் எழுந்து விரவினர்- கொடிய
தங்கள் சேனைகளோடும் புறப்பட்டு இராமனோடு போரிற்
கலந்தனர்; ஐயன் செங்கை வில்லினை நோக்கும் முன்பு –
இராமன் அம்பு விடவேண்டி தன் கையில் உள்ள வில்லைப்
பார்க்கும் முன்பே; எரி தவழ் பஞ்சின் உக்கார்-
நெருப்புப் பற்றிய பஞ்சு போல இருந்த இடம் தெரியாமல்
போனார்கள்; அரக்கியும் இலங்கை புக்காள் –
சூர்ப்பணகையும் இலங்கைக்குச் சென்றாள்;
————
‘இருபது தடக் கையான்மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான்.–267-
(அவன் இலங்கை சென்று) இருபது தடக்கையான் மாட்டு
இசைத்தலும் – இருபது கைகளை உடைய இராவணன்பால் சொன்ன
அளவில் (அவன்); ஒரு பது திசையும் உட்க – பத்துத் திசையும்
அஞ்சும்படி; பொங்கி எழுந்து- கோபத்துடன்
புறப்பட்டு; வஞ்சக உழை ஒன்று ஏவி – பொய்மான் ஒன்றை
அனுப்பி; தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம்
கொண்டு- தத்துவம் தருகின்ற செவ்வி அமைந்த திரிதண்டம்
ஏந்திய முனிவர் வேடமணிந்து கொண்டு; திருவினை நிலத்தொடு
ஏந்தி – சீதையை அவள் இருந்த மண்ணொடும் சுமந்து; தென்திசை
இலங்கை புக்கான் – தெற்கேயுள்ள இலங்கை மாநகரிற் சென்று
புகுந்தான்.
——
போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனின் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் – கொன்று, இளவலோடு
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். –268-
போகின்ற காலை – அந்த இராவணன் இலங்கைக்குப்
போம்பொழுது; ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி – தன்னை
எதிர்த்த சடாயுவைப் போர் செய்து வீழ்த்தி; வேகின்ற
உள்ளத்தாளை வெஞ்சிறை அதனின் வைத்தான் – வெந்த
உள்ளமுடைய பிராட்டியைக் கொடுஞ் சிறைக்கண் வைத்தான்
(பின் இராமன்); ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று –
ஓடுகின்ற வஞ்சத் தன்மையுள்ள மானாகிய மாரீசனைக் கொன்று;
இளவலோடு – இலக்குவனோடு வந்து; பாகின்ற கீர்த்தி அண்ணல்
தந்தையைப் பரிவின் கண்டான் – பரவுகின்ற புகழ் உடைய
தலைமையோன் ஆகிய சடாயுவை அன்போடு பார்த்தான்.
————-
‘அன்னவன்தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல்தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன்தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான்.–269-
அன்னவன் தனக்கு- சடாயுவுக்கு; வேண்டும் அருங்கடன்
முறையின் ஆற்றி – செய்யவேண்டிய நீர்க்கடன்களை முறைப்படி
செய்து முடித்து;நன்னுதல் தன்னைத் தேடித்- சீதையைத் தேடிக்
கொண்டு; தென்திசை நடக்கும் ஐயன்- தெற்கே நோக்கிச்
செல்லும் இராமன்; மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம்
மாற்றி – அங்கே நிலைபெற்ற கவந்தனை உயிரும் சாபமும்
போகும்படி செய்து (பிறகு); தன்னையே மறப்பிலாத சவரி
பூசனையும் கொண்டான் – தன்னை எப்பொழுதும் மறவாத சவரி
என்னும் தவமூதாட்டியின் வழிபாட்டினையும் ஏற்றுக் கொண்டான்.
——–
‘ஆங்கு அவள்தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, ”வாலி பருவரல் கெடுப்பென்” என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன்தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான்.–270-
ஆங்கு அவள் தனது சொல்லால் – அங்கே சவரியின்
வார்த்தையால்; அருக்கன் மாமகனை அண்மி – சூரியன் மகனாய
சுக்கிரீவனை அணுகி; பாங்குற நட்டு – இதமாக நட்புச் செய்து;
‘வாலி பருவரல் கெடுப்பன்’ என்னா – வாலியாகிய துன்பத்தை
நீக்குவேன் என்று அவனுக்குச் சொல்லி; ஓங்கிய மரமும் வாலி
உரமும் ஊடுருவ எய்திட்டு – உயர்ந்து நின்ற மராமரங்கள்
ஏழினையும் வாலி மார்பினையும் உள்ளுருவிச் செல்லும்படி அம்பு
எய்து; ஆங்கு – அங்கே; அவன் தனக்கு – சுக்கிரீவனுக்குச்;
செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – செல்வத்தையும்
அரசையும் கருணையாலே கொடுத்தான்.
———-
‘கால மா மாரி நீங்க, கவயனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன் என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான்.–271-
மா மாரி காலம் நீங்க – கார்காலம் கழிந்தபிறகு; கவயனோடு
இடபன் காந்து நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன்;
நீடு வாலி மா மைந்தன்- பெருமையுற்ற வாலியின் மகனாகிய
அங்கதன்; என்று இவ் வானரத் தலைவரோடு -; கூல வான்சேனை
சூழ- வால் உடைய குரங்குச் சேனை சுற்றிவர; எங்கள் கோமான்
அடைந்தனன் – எங்கள் அரசனாய சுக்கிரீவன் (இராமனை) வந்து
சேர்ந்தான்.
————-
‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள்தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி,–272-
எழுபது வெள்ளத்துற்ற குரக்கினம் பொங்கி எழுந்து-
எழுபது வெள்ளம் என்னும் கணக்கினை உடைய குரங்குகள் சீறிப்
புறப்பட்டு; அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி- பரந்த
நீரையுடைய கடல் என்னுமாறு வந்து சேர்ந்த பொழுது; அருக்கன்
மைந்தன்- சுக்கிரீவன்; திருவை நாடி – சீதையைத் தேடி வருமாறு;
தழுவிய திசைகள் தோறும் – நான்கு திசைகளிலும்; தனித்தனி
இரண்டு வெள்ளம் – இரண்டிரண்டு வெள்ளக் கணக்கான
குரங்குகளை; இறை பொழுது தடாது மீள – சிறு பொழுதும்
தாமதியாது தேடித் திரும்பும்படி; போக்கினன்- அனுப்பினான்.
————
‘தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே.–273-
தென்திசை- தெற்கே; இரண்டு வெள்ளம் சேனையும் -;
வாலி சேயும்- அங்கதனும்; வன்திறல் சாம்பனோடு – வலிய
கரடிகளின் தலைவன் சாம்பனோடு; வாவினர் ஏவ- தாவிச்
செல்லும் குரங்கினத்தார் அனுப்ப; நாயேன் – அடியேன்; குன்றிடை
இலங்கை புக்கு- திரிகூட மலைக்கிடையில் உள்ள இலங்கையில்
புகுந்து; திருவினைக் குறித்து மீண்ட பின்றை- சீதையைக்
கண்டு வந்து சொல்லியபிறகு; வேலைப் பெரும்படை- வானர
சேனைக்கடல்; அளக்கர் வந்து இறுத்தது- கடற்கரையில் வந்து
தங்கியது.
————-
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயத்து அரக்கன் தம்பி, ”திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றனை, நின் வாணாள்” என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான்.–274-
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் – அறிஞருள்
மிக்க வீடணன் ஆகிய; அலங்கல் தோளான்- மாலை அணிந்த
தோள்களை உடையவனும்; செறிபுயத்து அரக்கன் தம்பி – இருபது
செறிந்த புயங்களை உடைய இராவணன் தம்பியும் ஆகிய; அவன் -;
(இராவணன்பால்); திருவினை விடுதி; அன்றேல் நின்வாணாள்
இறுதி உற்றனை என்று உரைப்ப – சீதையை விட்டுவிடு
இல்லையானால் நின் ஆயுளுக்கு இறுதி நேர்ந்தவனாக ஆவாய் என்று
எடுத்துச் சொல்ல; சீறிக்கறுவுற – (அது கேட்ட இராவணன் அவனை)
கோபித்துக் கொல்ல வஞ்சம் வைக்க; பெயர்ந்து போந்து –
இலங்கையிலிருந்து புறப்புட்டு வந்து; கருணையான் சரணம்
பூண்டான் – அருளாளனாகிய உன் தமயனின் திருவடிகளைத்
தலையில் சூடி அடைக்கலம் பெற்றான்.
————
‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன்தன்னை அழைத்திட, பரிவு இலாமை
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே.–275-
ஆங்கு- அங்கே; அவற்கு- வீடணனுக்கு; அவயம் நல்கி –
அடைக்கலம் தந்து; அரசொடு முடியும் ஈந்து – இலங்கை
அரசளித்துப் பட்டாபிசேகம் செய்து; பாங்கினால் – இதமாக
(தவம் செய்து); வருணன் தன்னை அழைத்திட- வருண தேவனை
அழைக்கவும்; பரிவு இலாமை – அவன் வருவதற்கு அன்பு
காட்டாமல் இருக்க அதனை; சிறிது போது தாங்கினன் – சிறிதளவு
காலம் பொறுத்தான்; (பிறகு); தாமரை நயனம் சேப்ப – தாமரைக்
கண்கள் சிவக்க கோபிக்கவே; ஓங்கும் நீர் ஏழும்- ஏழு கடல்களும்;
அன்னான் உடலமும்- வருணனது மேனியும்; வெந்த- வெந்தன;
————-
மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார்.–276-
மற்று அவன் ‘அவயம்’ என்ன மலர்ச்சரண் அடைந்த
வேலை- அவ்வருணன் அவயம் என்று சொல்லித் திருவடி மலரில்
விழுந்த பொழுது; வெற்றி வானரர்கள் பொங்கி – வெற்றியுடைய
வானர வீரர்கள் மேல் எழுந்து; வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி- மலைகளால் கடலைத் தடுத்தலை முடிவு
பெற நன்றாகச் செய்து; மொய் ஒளி இலங்கை புக்கு- ஒளி
படைத்த இலங்கை நகருக்குள் புகுந்து; பற்றினர் சுற்றி ஆர்த்தார்-
பற்றிக் கொண்டு முற்றுகை செய்து சூழ வளைத்து ஆரவாரித்தார்கள்;
வானவர் பயங்கள் தீர்ந்தார்- தேவர்கள் தம் பயங்கள் நீங்கப்
பெற்றார்கள்.
———
‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர்ஆயோர் குலத்தொடும் தலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.–277-
ஐயன் – இராமன் (இராவணனது); மலையினை எடுத்த தோளும்-
கயிலை மலையை எடுத்த இருபது தோளும்; மதமலை திளைத்த
மார்பும் – திக்கு யானைகள் போரிட்ட மார்பும்; தலை ஒரு பத்தும் –
பத்துத் தலைகளும்; சிந்தி – சிதறி வீழச் செய்து; தம்பிதன் தோளும்
தாளும் – அவன் தம்பியாகிய கும்பகருணனது தோளும் கால்களும்;
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் தலத்து வீழ –
கொல்லும் தொழில் உடைய அரக்கர்களது கூட்டத்தோடும் பூமியில்
விழும்படி; சிலையினை வளைவித்து – வில் வளைத்து அம்புகள் வீசி;
தேவர்கள் இடுக்கண் தீர்த்தான் – தேவர்களது துன்பம் போக்கினான்.
———–
‘இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள்தோறும் உடற் குறை ஆடல் கண்டார்.–278-
இலக்குவன் பகழி ஒன்றால்- இலக்குவனது அம்பு ஒன்றினாலே;
இந்திரசித்து என்று ஓதும் விலக்கு அரும் வலத்தினானும்
இளைஞரும் கிளையும் வீழ்ந்தார் – தடுக்கரிய வல்லமையுடைய
இந்திரசித்தும் அவன் தம்பியரும் உறவினர்களும் இறந்தொழிந்தனர்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் – அரக்கர்களால் கலங்கித்
திரியும் தேவர்கள்; மலர் மழை தூவி ஆர்த்து- மலரை மழை போல்
சொரிந்து பேரொலி செய்து; அன்று – அப்போர் நடந்த போது;
உலக்குநர் குழுக்கள் தோறும் – இறந்தவர் கூட்டத்தில் எல்லாம்;
உடற்குறை ஆடல் கண்டார் – கவந்தங்கள் ஆடுவதைக் கண்டார்கள்.
———-
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, ”மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள்” என்றான்.–279-
தேவரும் முனிவர்தாமும் சித்தரும் தெரிவைமாரும் மூவகை
உலகுளோரும் முறை முறை தொழுது மொய்ப்ப- (இராமனை)
நெருங்க; பூவை போல் நிறத்தினானும்- காயாமலர் மேனியுடைய
இராமனும்; வீடணப் புலவர் கோமாற்கு- வீடணன் என்னும் அரச
அறிஞனுக்கு; யாவையும் இயம்பி – எல்லா அறிவுரைகளும் கூறி;
‘மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள்’ என்றான் – இறந்தவர்
அனைவர்க்கும் நீர்க்கடன் செய்க என்று கூறினான்.
——-
நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான்.–280-
ஊன்முகம் கெழுவு வேலாய்! -பகைவரது புலால் பொருந்திய
வேலை உடைய பரதனே!; நான்முகன், விடையை ஊரும் நாரிஓர்
பாகத்து அண்ணல், மான்முகன் முதலாய் உள்ள வானவர்
தொழுது போற்ற- பிரமன், சிவன், மயன் முதலிய தேவர்கள் துதிக்க;
உம்பர் நாயகியைச் சீறி- தேவ தேவியாகிய சீதையைக் கோபித்து;
தேன் முகம் மலரும் தாரான்-தேன் நின்று பிலிற்றும் மாலையுடைய
இராமன் (பின்னர்);அரி சொல-அக்கினி தேவன் உண்மை விளக்கி உரைக்க; சீற்றம் தீர்ந்தான் –
கோபம் நீங்கப் பெற்றான்.
————–
‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்து எய்த,
அய்யனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கய்யினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
”செய்வரம் அருளுக” என்றான்; திருவின் நாயகனும் கொண்டான்.–281-
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர் கோன் – சத்தியத்தைக்
காக்க உயிரை விட்ட தயரதன்; விமானத்து எய்த –
விண்ணுலகிலிருந்து விமானத்தில் வர; அய்யனும் இளைய கோவும்
– இராமனும் இலக்குவனும்;அன்னமும் அடியில் வீழ- சீதையும்
விழுந்து வணங்க; கையினால் பொருந்தப் புல்லி- தயரதன் தன்
கைகளால் அவர்களை நன்கு தழுவி; கண்ணின் நீர்க் கலசம்
ஆட்டி – கண்களாகிய கலசத்தால் நீராட்டி; செய்வரம் அருளுக
என்றான் – நான் செய்யக்கூடிய வரம் கேட்பாயாக என்று சொன்னான்;
திருவின் நாயகனும் கொண்டான்- சீதை கேள்வனாகிய இராமனும்
அவன்பால் பின்கூறும் வரம் கொண்டான்.
———
‘ ”என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக” என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார்.–282-
(இராமனிடம் தயரதனிடம்) என்னை நன் கருணை தன்னால்
ஈன்று எடுத்து இனிது பேணும் அன்னையும் மகனும் முன்
போல் ஆகு என – என்னைத் தன் அருளால் பெற்றெடுத்துப்
பெரிதும் காத்த கைகேயியும் பரதனும் தாயும் தம்பியும் ஆகவேண்டும்
என்று கேட்க; அருளின் ஈந்து மன்னவன் போய பின்றை-
அருளால் தந்து தயரதன் புறப்பட்டுச் சென்றபிறகு; வானரம் வாழ்வு
கூர- குரங்குகளின் வாழ்வு சிறக்க; பொன் நெடுநாட்டில் உள்ளார்
– தேவர் உலகத்தில் உள்ள தேவர்கள்; பல வரம் வழங்கிப்
போனார்- பல வரங்களை வழங்கிச் சென்றார்கள்.
————
வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல்தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன்.–283-
எள்ளல் இல்லாத கீர்த்தி இலங்கை வேந்தன் வீடணன் –
இகழப் படாத புகழ் உடைய இலங்கை அரசனாகிய வீடணன்;
வெள்ளம் ஓர் எழுபத்தும் – எழுபது வெள்ளம் குரக்குச்
சேனையும்; விலங்க அரும் வீரர் ஆகி உள்ளவர் அறுபத்து எழு
கோடியும் – தடுத்தற்கரிய வீரர்கள் அறுபத்தேழு கோடிப் பேரும்;
ஒற்றை ஆழி வள்ளல்தன் மகனும்- ஓராழித் தேரானாய சூரியன்
மகன் சுக்கிரீவனும்; உள்ளம் மகிழ்வுற – அயோத்திக்கு வருவது பற்றி
மனமகிழ்வு அடைய;விமானம் ஈந்தான்- புட்பக விமானத்தைத் தந்தான்.
————
‘ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும் சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான்.–284-
ஆரியன் – மேலவனான இராமன்; பின்னை- பிறகு;
நின்னை -; அன்பினால்; நினைந்து- அன்பால் நினைத்து;
காதல் சூரியனும் மகனும் – தன்பால் அன்புடைய சுக்ரீவனும்;
தொல்லைத் துணைவரும்- பழைய நண்பர்களும்; இலங்கை
வேந்தும் – வீடணனும்; பேர் இயல் படையும் சூழ-
பேரளவினதாகிய சேனைகளும் சுற்றிவர; பெண்ணினுக்கு
அரசியோடும் – சீதையோடும்; சீரிய விமானத்து ஏறி-
சிறந்த புட்பகத்தில் ஏறி; பரத்துவன் இருக்கை சேர்ந்தான்-
பரத்துவாச முனிவனது ஆச்சிரமத்தை அடைந்தான்.
———-
‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, ”ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி என்று” துரந்தனன், தோன்றல்’ என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன்.–285-
அன்பினால் – என்பாற் கொண்ட அன்பாலே; தோன்றல்-
இராமன்; என்னை நின்பால் ஆழியும் காட்டி – நின்னிடம்
மோதிரத்தையும் காட்டி; ‘ஆன்ற துன்பு எலாம் துடைத்தி’
என்று- இதுவரை அமைந்த துன்பத்தை எல்லாம் நீக்குக என்று
சொல்லி; துரந்தனன்- விரைய அனுப்பினான்; என்று -(இவ்வாறு)
முன்பினால் இயன்ற எல்லாம் – முன்னும் பின்னும் நடந்த
நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து; முதுநீர் தாலி வன்பினால்
இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன்- கடலைத்
தாவி வலிமையாலே இலங்கை முழுவதையும் தீக்கடவுளுக்கு உணவாக
இட்ட அனுமன்; மொழிந்தனன் – சொல்லி முடித்தான்.
———-
பரதன் அனுமன் கை பற்றி கங்கை சேர்தல்
காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
‘வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ.’–286-
காலின் மாமதலை சொல்ல – காற்றின் மகனாய அனுமான்
சொல்ல; பரதனும் கண்ணீர் சோர- (அது கேட்டு) பரதனும்
கண்ணீர் சொரிய நின்று; வேலி மா மதில்கள் சூழும்
இலங்கையில் வேட்டம் கொண்ட- நீர் வேலியுடைய மதில்
சுற்றிய இலங்கையில் வேட்டையாட விரும்பிய; நீல மா
முகில்பின் ஒருவன் போனான் – நீலமேகமாய இராமன்
பின்னால் இலக்குவன் சென்றான்; நான் நின்ற நைவேன் போலும்
– நான் இங்கிருந்து வருந்துவேன் போலும்; இவைகள் கேட்பேன்
– இச்செய்திகளைக் கேட்பவனாகவே ஆனேன்; அடிமை புகழ்
உடைத்து- நான் இராமற்குச் செய்த அடிமை புகழ் உடையது
என்று வருந்திக் கூறினான்
————
என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ் செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர்.–287-
அவன்- அப்பரதன்; என்று இரங்கி ஏங்கி- இவ்வாறு கூறி
அழுது வருந்தி; இருகணும் அருவி சோர – இரண்டு
கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ச் சொரியுமாறு; வன்திறல்
அனுமன் செங்கை – வலிமை மிக்க அனுமனது சீரிய கையை;
வலக்கையால் பற்றி -தனது வலது கையினால் பிடித்துக் கொண்டு;
இருளின் ஊடு காலின் சென்றனன் – இருளின் இடையே காலால்
நடந்து சென்று; குன்றினை வலம் செய்தேரோன்- மேருமலையை
வலமாகச் சுற்றி வருகின்ற தேரினை உடைய சூரியன்; குணகடல்
தோன்று முன்னர் – கீழ்க்கடலில் உதயமாவதற்கு முன்னாலே;
செறிபுனல் கங்கை சேர்ந்தான்- நீர் நிறைந்த கங்கைக்
கரையை அடைந்தான்.
————–
சூரியன் உதயம் ஆதல்
10239.
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ, சூடும்
அராவு பன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான்.–288-
எம்பிரான்- எமது தலைவனாகிய இராமபிரான்; இராவணன்
வேட்டம் போய் மீண்டு – இராவணனை வேட்டையாடிக்
கொல்லுவதற்காக இலங்கை சென்று திரும்பி வந்து; தராதல
மகளும் பூவின் தையலும் மகிழ – பூமி என்கின்ற பெண்ணும்,
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் மகிழ்ச்சி
அடையும்படி; சூடும்- அணிந்து கொள்கின்ற; அராவு பொன்
மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி – அராவிச் செய்யப் பெற்ற
பொன்னால் ஆகிய மகுடத்துக்குப் பொருந்திய உச்சி மணியை;
குணபால் அண்ணல்- கீழ்த்திசைக் காவலன் ஆகிய இந்திரன்;
விராவுற எடுத்தால் என்ன- பொருத்தமுறத் தோன்றும்படி
மேலே தூக்கிப் பிடித்தாற் போல என்னுமாறு; வெய்யவன்
உதயம் செய்தான் – சூரியன் கீழ்த்திசையில் தோன்றினான்.
————
பரதன் வினாவும் அனுமன் விடையும்
10240.
காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக்கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
‘சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன்தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ? –289-
(பரதன்) காலை வந்து இறுத்த பின்னர்- காலைப் பொழுது
தோன்றியபிறகு; கடன் முறை – நாட்காலத்தே தான் செய்யும்
முறைமைப்படி; கமலக்கண்ணன் கோல நீள் கழல்கள் ஏத்தி –
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமபிரானது அழகிய
நீண்ட திருவடிகளை வழிபட்டு; குரக்கினத்து அரசை நோக்கி-
அனுமனைப் பார்த்து; ‘சாலவும் கலைகள் வல்லோய் – சகல
சாஸ்திர நூல்களிலும் விற்பனன் ஆகியவனே; உன்தன் மொழிக்கு
எதிர் மொழியும் உண்டோ- உன்னுடைய வார்த்தைக்கு எதிராகச்
சொல்லத்தக்க வார்த்தையும் இருக்கிறதா (ஆயினும்); மூலமே
உணரின் – அடிமுதல் நன்றாக உணர்ந்து பார்த்தால்; வாய்மை
தவறுண்டு போலும்- உன்னுடைய சொல்லில் தவறு இருக்கிறது
போல உள்ளது.
————
‘எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சுற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, ”எம்பிரான் வந்தான்” என்று உரைத்தது, வீர!’ என்றான்.–290-
வீர! – வீரனாகிய அனுமனே!; எழுபது வெள்ளம் சேனை
வானரர் – எழுபது வெள்ளக் கணக்கான சேனைகளாகிய
வானரர்கள்; இலங்கை வேந்தன் முழுமுதல் சேனை வெள்ளம்-
இலங்கையரசனாகிய வீடணனது அளவிறந்த சேனைக் கூட்டம்;
கணக்கு இல மொய்த்த என்றால்- கணக்கில்லாதன ஒன்று
சேர்ந்து நெருங்கி விட்டன என்றால்; அழுவ நீர் வேலை சுற்றும்
அரவம் இன்றாக அற்றோ- ஆழமான நீர்ப்பரப்பான கடலின் கண்
சுற்றுகின்ற பேரொலி போன்ற பேர் ஆரவாரம் இல்லாமல்
இருக்க இயலுமா? (அவ்வொலி ஏதும் இல்லாமையால்); எம்பிரான்
வந்தான் என்று உரைத்தது விழுமிது- இராமபிரான் வந்து
விட்டான் என்று நீ கூறியது நன்றாயிருக்கிறது; என்றான்.
———–
‘ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!’ என்றான்.–291-
பெரும! – அனுமனே!; பரத்துவன் உறையும் சோலை-
பரத்துவாச முனிவனது ஆசிரமச் சோலை (இங்கிருந்து); இரண்டு
ஓசனை உண்டு அன்றே – இரண்டு யோசனை தூரத்தின் கண்
உள்ளது அல்லவா? (அவ்வாறாயின்); வீசு தெண் திரை யிற்று
ஆய வெள்ளம் ஓர் எழுபத்தும் – அலை வீசும் கடற்பரப்பைப்
போலக் கணக்கிடத் தக்க எழுபது வெள்ளமாகிய சேனைகளும்;
மூசிய பழுவம் – நெருங்கக் கிடக்கின்ற அச்சோலைக் காடு;
முரற்றல் இன்றி இங்ஙனம் கிடப்பதோ?- (நம் காதில்
கட்கும்படி) ஒலி செய்யாமல் அமைதியாக இவ்வாறும் இருக்க
இயலுமா?; பேசியது அமையும் – நீ இதுவரை கூறியது மிக நன்றாய்
இருந்தது (இனியும் அதை நீட்ட வேண்டா); நம் கோன் எங்கு
உளன் – நம் தலைவனாய இராமபிரான் எங்கே இருக்கின்றான்;
என்றான்.
———-
பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், ‘சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தமையும் வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம்.–292-
பரதன் அஃது உரைத்தலோடும்- பரதன் அவ்வாறு சொல்லி
முடித்த அளவில்; மாருதியும் பணிந்து – அனுமனும் (பரதனை)
வணங்கி; சீர் சால் விரத மாதவத்து மிக்கோய்! – புகழ்
பொருந்திய நோன்பினால் உயர்ந்த பெருந்தவத்தில் சிறந்த பெரியோய்!;
வரதன் விண்ணவர் தமையும் வேண்டி ஆண்டு அளிப்ப வந்த
வரத்தினால் – வரந்தரவல்ல பரத்துவாசன் தேவர்களை வழிபட்டு ஓர்
ஆகுதியை வேள்விக்கண் அளிப்ப அதனாற் பெற்ற வரத்தின்
மேன்மையால்; தானை எல்லாம் – சேனைகள் எல்லாம்; மலரும்
தேனும் சரதமே மாந்தி மாந்தித் துயின்றது- மலரையும் தேனையும்
மிகுதியாகப் பெற்று நன்கு உண்டு மயங்கி அயர்ந்து துயின்று விட்டது
(அதனால் ஒலி இல்லை) தொடரும்.
————
‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்!–293-
எந்தாய்! – என் தந்தைக்கு ஒப்பான பரதனே!; வானவர்
கொடுக்க வந்த வரத்தினால் – தேவர்கள் அளிக்க உண்டாகிய
வரபலத்தாலே; கானகம் – காடு; மதுபம் மூசும் தேனொடு
கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துப் பொலிதலாலே
– வண்டுகள் மொய்க்கின்ற தேனோடு கிழங்கு, காய், பழம்,
பிற ஆகியவற்றால் வளம் பெற்று விளங்குவதால்; கவிக்குலம்
அவற்றை மாந்தி- குரங்குக் கூட்டம் அவைகளை உண்டு மயங்கி;
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்- முகம் கண் விழிக்காமல்
உறங்கியவாகும்; நீ துயரல் – (இராமன் வந்தானில்லையோ
என்று கருதி) நீ வருந்தாதே. தொடரும்.
———
‘இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி’ என்று உரைத்தான்; இப்பால்,
முனிவனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்:–294-
இனி ஒரு கணத்தின்- இனிமேல் ஒரு கணப் பொழுதிற்குள்;
எம் கோன் எழுந்தருள் தன்மை – இராமபிரான் இங்கே
எழுந்தருளப் போகின்ற பாங்கினை; ஈண்டு – இவ்விடத்தே;
பனிவரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான்-
நீர் பெருகுகின்ற கண்களை உடைய நீயே பார்ப்பாய் என்று
சொல்லி முடித்தான்; இப்பால் – இன்னொரு புறமாகிய
(பரத்துவாச ஆசிரமத்தே); முனிவனது இடத்தே வந்த முளரியம்
கண்ணன் வண்ணக் குனிசிலைக் குரிசில் – பரத்துவாச
ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த தாமரைக் கண்ணனாகிய அழகிய
வளைந்த வில்லை உடைய இராமபிரான்; செய்தது இற்று எனக்
குணிக்கல் உற்றாம்- செய்த செயல் இது என்று சொல்லத்
தொடங்கினோம்.
———–
குகன், பரத்துவாச ஆசிரமத்தில் இராமனைத் தரிசித்தல்
10246.
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடந் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின்,வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான்.–295-
அருந்தவன் ஆறு சுவைகளோடு அமுது இனிது அளிப்ப
– பரத்துவாசன் அறுசு வைகளோடு கூடிய உணவினை நன்றாகக்
கொடுக்க; ஐயன் கருந்தடங் கண்ணியோடும் களைகணாம்
துணைவரோடும் விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின்
– இராமபிரான் சீதாபிராட்டியோடு துன்பத்திற்குத் துணையாகிய
சுக்கிரீவ விபீடண ஆதியாகிய சகோதரர்களோடும் விருந்தினை நன்கு
அருந்தியிருந்த சமயத்தில்; கிராதர் கோன் – வேடர வேந்தனாய
குகன்; வேலை போலும் பெருந்தடந் தானையோடும்
பெயர்ந்து வந்தான்- கடல் போன்ற தனது பெரிய அகன்ற
வேடச் சேனையோடும் (சிருங்கிபேரத்திருந்து) புறப்பட்டு
அங்கு வந்து சேர்ந்தான்.
——
தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம்அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழு இலர் வலியர்அன்றோ, மக்களும் மனையும்?’ என்றான்.–296-
(குகன் இராமனைக் கண்டு) தொழுதனன் – கும்பிட்டான்;
மனமும் கண்ணும் துளங்கினன் – மனமும் கண்களும் தடுமாறப்
பெற்றான்;சூழ ஓடி அழுதனன் – இராமனைச் சுற்றி ஓடி அழுதான்;
கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் – தாமரை மலர்
போன்ற இராமனது திருவடியிணையின்கண் விழுந்தான்; மார்பில்
தம்பியைத் தழுவுமாபோல் – இராமன் மார்பின் கண்ணே
தம்பியைத் தழுவிக் கொள்வது போலத்; தழுவினன் எடுத்து-
தழுவித்தூக்கி; மக்களும் மனையும் வழுவிலர் வலியர் அன்றோ?
– உன் மக்களும், குடும்பத்தினரும் தீங்கின்றி வலியராக
உள்ளனரல்லவா?; என்றான்
——–
குகனும் இராமனும்
10248.
‘அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள்தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ,வாழ்வு மன்னோ?–297-
நாயேற்கு உனது அருள் உளது- அடியேனுக்குப் (பெறற்கரிய)
உனது பெருங்கருணை உள்ளது; அவர் எலாம் அரிய ஆய பொருள்
அலர் – மக்களும் மனையும் ஆய அவர்கள் எல்லாம் அருமையான
பொருளாக மாட்டார் அது நிற்க; நின்னை நீங்காப் புணர்ப்பினால்
தொடர்ந்து போந்து- உன்னை விட்டுப் பிரியாத மனப் பிணிப்புடனே
பின்பற்றி வந்து;தெருள் தரும் இளைய வீரன் – மெய்யுணர்வு பெற்ற
இலக்குவன்; செய்வன செய்கலா தேன்- செய்த திருத்தொண்டுகளைச்
செய்ய இயலாதவனாகிய; மருள்தரும் மனத்தினேனுக்கு வாழ்வு இனிது
அன்றோ- மயக்கமுற்ற மனம் உடைய எனக்கு வாழ்வு சுவையானது
அல்லவா? (மிக நன்றாயிருந்தது)
———–
ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான்தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி’ என்ன, புளிஞர்கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்.–298-
ஆயன பிறவும் பன்னி – இவ்வாறான வார்த்தைகள்
பலவற்றையும் திரும்பப் பலமுறை சொல்லி; அழுங்குவான் தன்னை
– வருந்துகின்ற குகனைப் பார்த்து (இராமபிரான்); ஐய! நீ இவை
உரைப்பது என்னே! – குகனே! நீ இத்தகைய வார்த்தைகளைக்
கூறல் வேண்டுமா?; பரதனின் நீ வேறு உண்டோ – பரதனும்
நீயும் எனக்கு ஒன்றல்லவா; போய் இனிது இருத்தி – சென்று
நன்கு இருப்பாயாக; என்ன – என்று சொல்லி அனுப்ப; புளிஞர்
கோன் – வேடர் தலைவனாய குகன்; இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி – இலக்குவனது பொலிவு பெற்ற திருவடிகளை
விருப்பத்தோடு வழிபட்டு; அன்னை விரைமலர்த்தாளின் வீழ்ந்தான்
– சீதாபிராட்டியினது மணம நாறும் மலர்போன்ற திருவடிகளில் விழுந்து
வணங்கினான்.
————-
இராமன் குகனை அனைவர்களுக்கும் அறிமுகம் செய்தல்
10250.
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள்தமையும் நோக்கி,
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; ‘முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்றான்;–299-
முழுது உணர் கேள்வி மேலோன் – முற்ற நண்குணர்ந்த
கேள்வி ஞானத்தினால் நிரம்பப் பெற்ற பெரியோனாகிய
இராமபிரான்; தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்
தமையும் நோக்கி மொழிகுவான் – வணங்கி நின்ற குகனைப்
பார்த்து; சுக்ரீவ வீடணாதி துணைவர்களையும் பார்த்துச்
சொல்கின்றான்; முழு நீர்க்கங்கை தழுவு இரு கரைக்கும்
நாதன் – (இவன்) நிரம்பிய நீரை உடைய கங்கையைத்
தழுவியுள்ள இரு கரைப் பகுதி நாடுகளுக்கும் தலைவன்;
உயிர்க்கு தாயினும் நல்லான் – உயிர்களுக்குத் தாயைக்
காட்டிலும் மிகவும் நல்லவன்; வழுவு இலா எயினர் வேந்தன்
– குற்றமற்ற வேடர் அரசன்; குகன் எனும் வள்ளல்
– குகன் என்னும் பெயருடைய பெரியோன்; என்றான்
———
சூரியன் மறைதல்
10251.
அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப் பால் மறைந்தனன், இரவி என்பான். –300-
அண்ணல் அஃது உரைத்தலோடும் – இராமபிரான் அவ்வாறு
(குகனை அறிமுகம் செய்து) கூறிய அளவில்; அரி குலத்து அரசன்
ஆதி- குரங்குக் குலத்துக்கு அரசனாகிய சுக்ரீவன் முதலாக;
நண்ணிய துணைவர் யாரும் -வீடணன் முதலிய துணைவர்கள்
எல்லாரும்; இனிதுறத் தழுவி நட்டார் – இனிமை பொருந்த
மனத்தாலும் உடலாலும் தழுவி நண்பு செய்தார்கள்; (இந்நிலையில்)
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல-
இடமகன்ற உலகம் எல்லாம் இருளால் மூடுகின்றவனைப் போல;
இரவி என்பான் – சூரியன் என்பவன்; வண்ண மால் வரைக்கும்
அப்பால் மறைந்தனன் – அழகிய பெரிய மேரு மலைக்கும்
பின்னால் மறையச் சென்றான்.
———
சூரியன் உதயமும் இராமன் புறப்படுதலும்
10252.
அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான்.–301-
அலங்கல் அம் தொடையினானும் – அசைகின்ற அழகிய
மாலையை அணிந்த இராமபிரானும்; அந்தியில் கடன்கள் ஆற்றி
– மாலைக்காலத்தே செய்யும் நீர்க்கடன்களை நிறைவேற்றி;
பொலங்குழை மயிலினோடு துயிலுற – பொன்னாலாய காதணி
அணிந்த மயில்போலும் சீதையோடு உறங்க; புணரிபோலும் இலங்கிய
சேனை சூழ – கடல் சூழப் பரந்து விளங்கும் சேனை சுற்றியிருப்ப;
இளவலும் எயினர் கோனும் கலங்கலர் காத்து நின்றார்-
இலக்குவனும் குகனும் சிறிதும் உறக்கத்தால் கலங்காத வராய்க் காவல்
செய்து இருந்தார். (இந்நிலையில்); கதிரவன் உதயம் செய்தான் –
சூரியன் தோன்றினான்.
————–
கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து,இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன்தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு கருணையோடும், முனி மனம் தொடரப் போனான்.–302-
கதிரவன் உதிப்ப – சூரியோதயம் ஆன அளவில்; அதிர்
பொலன் கழலினான் – ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த
திருவடியுடைய இராமன்; காலைக் கடன் கழித்து- காலைப்
பொழுதில் செய்யவேண்டிய நீர்க்கடன் வழிபாடுகளை
நிறைவேற்றி; இளவலோடும் – இலக்குவனோடும்; அவ்
அருந்தவன் தன்னை ஏத்தி – அந்த அரிய பரத்துவாச
முனிவனைத் துதித்து வணங்கி; விதிதரு விமானம் மேவி –
பிரமனால் (குபேரனுக்குக்) கொடுக்கப்பெற்ற புட்பக விமானத்தை
அடைந்து; விளங்கிழையோடும் – சீதையோடும்; கொற்றம்
முதிர் தருகருணையோடும் – வெற்றியாற் சிறந்து பெற்ற
பேரருளோடும்; முனி மனம் தொடரப் போனான் – பரத்துவாச
முனிவனது மனம் அன்பினால் தன்னைப் பின்பற்றி வரச்
சென்றான்.
———
தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்றுஅன்றே.–303-
மானம்- புட்பக விமானம்; தாவி – மேலே கிளம்பி; வான்
படர்ந்து – விண்ணில் பரந்து சென்று; தடை இலாது ஏகும் வேலை
– எதனாலும் தடைபடாமல் செல்கின்ற போது; தீவிய கன்னி ஆகிச்
– இனிய கன்னித் தன்மை உடையதாகி; செருக்கிய காமச் செவ்வி-
நிரம்பி முதிர்ந்த விரும்பத் தக்க பேரழகால்; ஓவியம் உயிர் பெற்று
என்ன – சித்திரம் உயிர் கொண்டு வந்தாற் போன்ற;உம்பர் கோன்
நகரும் ஒவ்வா- இந்திரனது அமராவதி நகரமும் ஒப்பாகாத; மா
இயல் அயோத்தி சூழும் மதில்புறம் தோன்றிற்று – திருமகள்
தங்கிய அயோத்தியைச் சுற்றியுள்ள மதிலின் புறம் தோன்றியது.
———
பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று’
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார்.–304-
பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம்
தோன்ற- பொன்னாற் செய்த மதிற்பரப்பாற் சுற்றப்பட்ட
அழகுடைய அயோத்தி நகரமானது தோன்ற; நன்மதிக்
கிழவர் தம்மை நோக்கிய ஞானமூர்த்தி – நல்ல
அறிவாற் சிறந்த துணைவர்களைப் பார்த்த ஞான வடிவினனாய
இராமபிரான்; சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா
அயோத்தி தோன்றிற்று என்னலும்- சொல்லால் கருதி
இத்தகையது என்று ஒருவராலும் சொல்ல இயலாத அயோத்தி
மாநகரம் தோன்றியது என்று சொல்லிய அளவிலே; கரங்கள்
கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – அனைவரும்
கைகளைத் தலைமேல் குவித்து எழுந்து வணங்கி நின்றார்கள்.
——–
புட்பக விமானத்தின் வருகை
10256.
அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். –305-
அன்னது ஓர் அளவையின் – அந்த சமயத்தில்; விசும்பின்
துன் இருங்கதிரவர் ஆயிரம் தோன்றினார் என- ஆகாயத்தில்
நெருங்கிய பெரிய சூரியர் ஆயிரவர் தோன்றினார்கள் என்று
சொல்லும்படி; பொன் அணி புட்பகப் பொருஇல் மானமும் – பொன்னால்
அழகு பெற்ற புட்பகம் என்னும் பெயருடைய ஒப்பற்ற விமானமும்;
மன்னவர்க்கு அரசனும் – அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி
இராமபிரானும்; வந்து தோன்றினார் – வந்து அநுமன்
கண்காணத் தோன்றினர்.
———
அனுமன் பரதனுக்குக் காட்டிக் கூறுதல்
10257.
‘அண்ணலே! காண்டியால் – அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. –306-
அண்ணலே- பரதனே!; அலர்ந்த தாமரைக் கண்ணனும் –
அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும் கண்களையுடையவனான
இராமபிரானும்; வானரக் கடலும்- வானர சேனைச் சமுத்திரமும்;
கற்புடைப் பெண் அருங்கலமும்- கற்பிற் சிறந்த பெண்டிர்க்கு
அணிகலமாய சீதாபிராட்டியும்; நின்பின்பு தோன்றிய வண்ணவில்
குமாரனும் – உனக்குப் பின்னால் பிறந்த அழகிய வில் ஏந்திய
இலக்குவனும்; வருகின்றார்களை காண்டி- என இவர்கள் வந்து
கொண்டிருப்பவர்களைப் பார்ப்பாயாக.
————
‘ஏழ் – இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்’ என்று கொண்டு, உணர்த்தும் காலையே. –307-
ஊழியான் – யுக முடிவுக் காலத்தும் நிலை பெற்றுள்ளவனாகிய
இராமபிரான்; ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்- பதினான்கு
உலகங்களிலுள்ள அத்தனையும் தன்மேல் ஏறினாலும்; புறம் பாழ் கிடப்பது – புறத்தே வெற்றிடம்
உள்ள தாயிருப்பதும்; படி இன்றாயது- தனக்குச் சமானம்
இல்லாததும் ஆகிய; ஓர் சூழ் ஒளி மானத்துத்
தோன்றுகின்றனன்- ஒப்பற்ற ஒளி சுற்றிய விமானத்தில்
காணப்படுகின்றான்; என்று கொண்டு உணர்த்தும் காலை-
என்றிவ்வாறு (அநுமன் பரதனுக்கு) தெளிவிக்கும் சமயத்தில்;
தொடரும்.
———–
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்,
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். –308-
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் மின்
ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் – பொன்மயமாக
விளங்குகின்ற மேருமலையின் குகைக்குள் நுழைந்த ஒரு மின்னல்
விளங்கும் கருமேகம் போல இராமபிரான் காணப்பட்ட உடனே;
அந்நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு – அந்த அயோத்தி நகரம்
ஆரவாரித்த பேரோசை; இராவணன் தென் நகர்க்கு அப்புறத்து
அளவும் சென்றது – இராவணனது தெற்கே உள்ள இலங்கை
நகருக்கு அப்பாலும் சென்று ஒலித்தது.
————
பரதன் இராமனைக் காணல்
10260.
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். –309-
கானிடைப் போகிய கமலக் கண்ணனை – காட்டிற்குச் சென்ற
தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமனை; தானுடை
உயிரினை – தன்னுடைய உயிராக உள்ளவனை; தம்பி – அவன்
தம்பியாகிய பரதன்; ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென நோக்கினான் – ஊன்
பொதிந்த உடம்பைப் போகவிட்டு சத்தியத்தை விரும்பி
வானுலகு சென்ற தசரத சக்கரவர்த்தியாகிய தன் தந்தையார்
திரும்பி வருவது கண்டாற் போலப் பார்த்தான்.
——–
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன் – தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். –310-
மேன்மையான் – சிறந்த குணங்களுக்கு இருப்பிடமானவனாகிய
பரதன்; முன்பு தாம் பட்ட வான்படர் – ஒருவர் தாம் முன்பு
அடைந்த மிகப் பெரிய துன்பம்; கெட்டவான் பொருள் வந்து
கிடைப்ப – தொலைத்து விட்ட சிறந்த பொருள் மீண்டும்
கிடைத்துவிட அதனால்; ஒழிந்தவரின் – நீங்கப் பெற்றவரைப்
போல; பையுள் நோய் சுட்டவன் – துன்ப நோயைத்
தொலைத்தவனாய்; மானவன் தொழுதல் உன்னி – இராமனை
வணங்கக் கருதி; மாருதி கரத்தை விட்டனன் – இதுவரை
பிடித்திருந்த அனுமனது கைகளை இப்போது பிடி நெகிழ விட்டான்.
பரதன் அநுமன் கையைப் பற்றி வந்ததாக வான்மீகம்
கூறவில்லை. கம்பரது கற்பனை இது. துன்பத்திற்குத் துணையாவாரைப்
பற்றி வருதல் உலகியல்பு ஆதலின்.
———
அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். -311-
அக்கணத்து- (பரதன் கை நெகிழ்ந்த) அவ்வளவில்; அநுமனும்
அவண் நின்று ஏகி – அநுமனும் அங்கிருந்து சென்று; அத்திக்குறு
மானத்தைச் செல்வன் எய்தி- அந்த திசையளாவிப் பரந்த
புட்பக விமானத்தை முறையாக அடைந்து; உக்கு உறு கண்ண நீர்
ஒழுகும் மார்பினான் – சிந்தி விழுகின்ற கண்ணீர் ஒழுகப் பெற்ற
மார்பை உடையவனாய்; சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான் – இராமபிரானை வணங்கி முன்னே
நின்றான்.
———-
‘உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப் பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும். –312-
திருப்பொலி மார்ப! – திருமகள் தங்கிய மார்பை
உடையவனே!; நாயினேன்- அடியேன்; உருப்பு அவிர்
கனலிடை ஒளிக்கல் உற்ற அப் பொருப்பு அவிர்
தோளனைப் பொருந்தி – வெப்பம் விளங்கும்
நெருப்பின்கண் விழுந்து உயிர் துறக்கலுற்ற அந்த
மலைபோல் விளங்கும் தோள் உடைய பரதனைச்
சென்றடைந்து; நின் வரவு செப்பினேன் –
நின்னுடைய வருகையைச் சொன்னேன்; (அதனால்
அவன் நெருப்பின் கண் விழாதொழிந்தான் ஆகவே)
உலகம் யாவையும் இருப்பன ஆயின – உலகம்
எல்லாம் உயிர்பெற்று வாழ்வனவாயின.
————
‘தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்ததால்;
ஆயினும், அன்பினாய்! யாம் செய் மா தவம்.’ -313-
மெய்ம்மையாய்! – உண்மையின் வடிவமானவனே!;
ஆயினும் அன்பினாய் – தாயைக் காட்டிலும்
பேரன்புடையவனே!; யாம் பல தீவினை செய்ய –
நாங்கள் பல தீய செயல்களைச் செய்ய; தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ – அச்செயல்கள்
நீங்காமல் கெடுதிகளை முறை முறையாகத்
தோற்றுவிப்பனவாயின; நீ அவை துடைத்து நின்று
அழிக்க நேர்ந்தது- அனுமனாகிய நீ அத்தீமைகளை
அடியோடு அழித்துப் போக்கும்படி ஆகியது; யாம்
செய் மாதவம்- நாங்கள் செய்த புண்ணியப் பயனாலே
ஆகும். (தொடரும்)
———-
என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?’ என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். –314-
என்று உரைத்து- என்று இவ்வாறு கூறி; குன்று
இணைத்தன உயர் குவவுத் தோளினான் – இரண்டு
குன்றுகள் நெருங்கினாற் போன்ற உயர்ந்து திரண்ட தோளினை
உடைய இராமன்; அனுமனை இறுகப் புல்லினான் –
அனுமனை நன்கு தழுவி; உனக்கும் எந்தைக்கும்
இன்துணைத் தம்பிக்கும் யாய்க்கும் – அனுமனாகிய
உனக்கும், சத்திய வாக்கினராகிய தசரத சக்கரவர்த்திக்கும்
என்னை உடன் பிரியாத இனிய துணையாகிய
இலக்குவனுக்கும் தாயாகிய கோசலைக்கும்; ஒன்று உரைத்து
இறுப்பது என் – நன்றியாக ஒரு வார்த்தை சொல்லி முடிப்பது
எவ்வாறு இயலும்? என்றனன்;
———–
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். –315-
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் – பெருமை
பொருந்திய சிறந்த புகழை உடைய பரதன்; ஈடு உறு வான்
துணை இராமன் சேவடி- தனக்குத்தானே சமானமாய
சிறந்த துணையாக உள்ள இராமன் திருவடி நிலைகளை;
சூடிய சென்னியன் – சென்னி மேல் அணிந்து
கொண்டவனாய்; தொழுத கையினன் – கைகளால்
வணங்கிக் கொண்டு; ஊடு உயிர் உண்டு என உலர்ந்த
யாக்கையன் – உள்ளே உயிரும் இருக்கிறது என்று
கண்டார் கருதலாம்படி வற்றிப் போன உடம்புடையவனாகி;
தோன்றினான் – (இராமன முன்னாலே) வந்தான்.
————-
இராமன் பரதனைக் கண்டு மகிழ்தல்
10267.
தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், ‘இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு’ எனா, –316-
தொல் அறச்சான்று என நின்றவன்- பழமையான
அறத்துக்குச் சாட்சியாக உள்ளவனாகிய அநுமான்; தோன்றிய
பரதனைத் தொழுது – அங்கே வந்த பரதனை வணங்கி
(இராமனுக்கு); இனைய தம்பியை- இத்தகைய உடன்பிறப்பை;
வான் தொடர் பேரரசு ஆண்ட மன்னனை – மிக
உயர்ந்த பாரம்பரியம் உள்ள பெரிய சூரிய குல ஆட்சி செய்த
அரசனை; ஈன்றவள் பகைஞனை – பெற்ற தாயாகிய கைகேயிக்கு
எதிரியாக இருந்தவனை; ஈண்டு காண்டி- இங்கே காண்பாயாக;
எனா- என்று; தொடரும்
———-
காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். –317-
மாருதி காட்டினன் – அநுமன் காட்டினான்; கண்ணின் கண்ட
அத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் –
கண்ணாலே பரதனைப் பார்த்த அந்த இதழ் மலர்ந்த மாலை அணிந்த
இராமனது தன்மையைத் தெரியச் சொல்லுவோமானால்; ஒட்டிய
மானத்துள் – வானின்றிழிந்து வந்த விமானத்தில்; உயிரின்
தந்தையார் கூட்டு உரு – உயிர் போலச் சிறந்த தன் தந்தையாகிய
தசரத சக்கரவர்த்தியின் பொருந்திய வடிவத்தை; கண்டன்ன தன்மை
கூடினான்- இலங்கையில் இராவணவதத்தின்பின் கண்டது போன்ற
தன்மையை அடையப் பெற்றான்.
——
புட்பக விமானம் கீழ் இறங்குதல்
10269.
ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். –318-
தான் உயர் புட்பகம் – மிக உயர்ந்த புட்பக
விமானமானது; ஆனது ஓர் அளவையின் – அப்படிப்பட்ட
நேரத்திலே; வானவர் திருநகர் அமரர் கோனொடும்
வருவது ஆம் என- தேவர் தலை நகராய அமராவதி
இந்திரனோடு கீழிறங்கி வருவதுபோல என்று சொல்லும்படி;
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – விண்ணில்
நிறைந்த விளங்கும் தேவர்கள் தூவுகின்ற மலர்களொடும்;
நிலத்தைச் சார்ந்தது – நிலத்திடத்தை வந்தடைந்தது.
————-
இராமன் வருகையால் அனைவரும் உற்ற நிலை
10270.
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்.–319-
(இராமன்) தாயருக்கு – தன்னைப் பிரிந்த தாய்மார்களுக்கு;
அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் –
பிரிந்து உடனே வந்தடைந்த கன்றின் தன்மையை ஒத்தவனாக
ஆனான்; மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் –
அவித்தையாகிய அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு
எல்லாம்; மனோலயம் வந்தது ஒத்தான் – மனம்
லயிக்குமிடமாகிய பரப்பிரம்மத்தோடு ஒன்றுபடும் தன்மை வந்து
சேர்ந்தாற்போல ஆனான்; ஆய் இளையார்க்குக் கண்ணுள்
ஆடு இரும்பாவை ஆனான்- தன் பிரிவால் மெலிந்து நுணுகிய பரத சத்துருக்கனராய
தம்பிமார்களுக்கு அவர்கள் கண்ணிற் கருமணியாம் பாவையாக
ஆனான். (மற்றவர்களுக்கு எல்லாம்) நோய் உறுத்து உலந்த
யாக்கைக்கு உயிர் புகுந்தாலும் ஒத்தான்- நோய் துன்புறுத்த
அதனால் வற்றிப் போன உடம்பிற்குள் மீண்டும் உயிர்வந்து
புகுந்தாற் போலும் தன்மையாக ஆனான்.
———-
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான்.–320-
எளிவரும் உயிர்கட்கு எல்லாம்- எளிமை நிலையடைந்த
உயிர்களுக்கு எல்லாம்; ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் –
பெற்ற அன்னை வந்து கிடைத்தது போல ஆனான்;அளி வரும்
மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – அன்பு
பொருந்திய மனம் உடையவர்களுக்கெல்லாம் கிடைத்தற்கரிய
தேவர் அமுதம் கிடைத்தாற் போன்றவனாக ஆனான்;உலகினுக்கு
ஒளி வரப் பிறந்தது ஒத்தான்- உலகத்திற்கு இருளை நீக்கி
ஒளி தோன்றியது போல ஆனான்; ஒண் கணார்க்குத் தெளிவு
அருங்களிப்பு நல்கும் தேம்பிழித் தேறல் ஒத்தான்- ஒள்ளிய
கண்களை உடைய மகளிர்க்குத் தெளிவற்ற மயக்கச்செருக்கு
தருகின்ற தேனினது பிழிந்த தெளிவைப் போன்றான்.
————-
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார்.–321-
அவன் அலால்- அந்த இராமனையல்லாமல்; அங்கு ஆவி
மற்று இன்மையால்- அயோத்தியில் உயிர் வேறு இல்லாமையால்;
அனையன் நீங்க- அந்த இராமபிரான் அயோத்தியைப் பிரிந்து
காடு செல்ல; காவி அம் கழனி நாடும் நகரமும் கவன்று
வாழும் மா இயல் ஒண்கணாரும் மைந்தரும் – குவளை
மலர்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த கோசல நாடும் அயோத்தி
நகரமும் கவலையால் வாடி வாழ்கின்ற மாவடு ஒத்த கண்
உடைய மகளிரும் ஆடவரும்; வள்ளல் எய்த – இராமபிரான்
மீண்டு வர; ஓவியம் உயிர் பெற்றன்ன- சித்திரம் உயிர் பெற்று
எழுந்தாற்போல; உணர்வு பெற்றார் ஓங்கினர் – அறிவு வரப்
பெற்றவர்களாய் இழந்த நலத்தைப் பெற்று உயர்ந்தனர்.
———
சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே.–322-
சுண்ணமும் – வாசப் பொடியும்; சாந்தும் – சந்தனமும்;
நெய்யும்- வாச நெய்யும்; சுரிவளை முத்தும் – வளைந்த
சங்கீன்ற முத்தும்; பூவும்- எண்ணெயும் – கலின மா விலாழியும் –
சேணம் பூட்டப் பெற்ற குதிரைகளின் நுரையும்; எண் இல் யானை
வண்ண வார் மதமும் – கணக்கற்ற யானைகளின் நிறமமைந்த
ஒழுக்காகிய மதநீரும்; நீரும் – மான்மதம் தழுவும் மாதர் கண்ண
ஆம் புனலும் – கஸ்தூரி பூசிக்குளிக்கும் மகளிரது உடலில்
வழிந்தோடும் நீரும்; ஓடிக் கடலையும் கடந்த- பெருக்கெடுத்துச்
சென்று கடலையும் தாண்டிவிட்டன;
———
இராமன் வசிட்டனை வணங்கல்
10274.
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை –
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன்தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மா தவன் தாளில் வீழ்ந்தான்.–323
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி – எல்லோரும்
அத்தன்மை உடையவர்களாய் மகிழ்ச்சிப் பெருக்கோடு விமானம்
நெருங்கிய அளவில்; அருளின் வேலை தனை இனிது அளித்த
தாயர் மூவரும் – அருள்கடலாகிய இராமனைப் பெற்ற தாய்மார்கள்
மூவரும்; தம்பிமாரும்- பரத சத்துருக்கனன் ஆதியரும்; புனையும்
நூல் முனிவன் தானும்- முப்புரிநூல் அணிந்த முனிசிரேஷ்டனான
வசிட்டனும்; பொன் அணி விமானத்து ஏற- பொன்னால் அழகு
பெற்ற விமானத்தின்கண் ஏற வர; வனைகழல் குரிசில- கட்டிய
வீரக்கழலை உடைய இராகவன்; முந்தி- முற்பட்டுச் சென்று;
மாதவன் தாளில் வீழ்ந்தான் – வசிட்ட முனிவனது திருவடிகளில்
விழுந்து வணங்கினான்.
———
எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி,
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் முன்போல், வாழ்த்தினான், ஆசி கூறி.–324-
மற்று அவ் இராமனை முனிவன் எடுத்தனன்- அங்கே இந்த
இராமனை வசிட்ட முனிவன் தூக்கினான்; அடுத்துள துன்பம்
நீங்க ஆசி கூறி – பிரிவினால் உண்டாகிய துன்பம் நீங்கும்படி
ஆசீர்வாதம் செய்து; அணைத்து அணைத்து – தழுவி; விடுத்துழி
– விடுத்தவுடன்; இளைய வீரன் – இலக்குவன்; வேதியன் தாளில்
வீழ – வசிட்டன் திருவடியில் வீழ்ந்து வணங்க; வடித்த நூல் முனியும்
– தேர்ந்த சாஸ்திர வல்லுநனான வசிட்டனும்; முன்போல் –
இராமனுக்குச் செய்தது போலவே; ஆசி கூறி வாழ்த்தினான்.
————-
இராமன் தாயரை வணங்கல்
10276.
கைகயன் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கு செங் கண்
ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத்தொழிலும் செய்தார்.–325
முந்த – முற்பட; கைகயன் தனயை கால் உறப் பணிந்து –
கேகயப் தரசன் மகளாகிய கைகேயித் தாயின் திருவடிகளில்
நன்கு வணங்கி; மற்றை மொய்குழல் இருவர் தாளும் முறைமையின்
வணங்கு – ஏனை நெருங்கிய கூந்தலை உடைய கோசலை,
சுமித்திரை, ஆகிய இருவர் திருவடிகளையும் முறையாக வணங்குகின்ற;
செங்கண் ஐயனை – சிவந்த கண்களை உடைய இராகவனை; அவர்கள் தாமும் அன்புறத் தழுவி –
அத்தாய்மார்களும் அன்பினால் அணைத்து; தம் தம் செய்ய
தாமரைக் கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார் –
தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற கண்களிலிருந்து
வருகின்ற கண்ணீரினாலே நீராட்டும் தொழிலையும் செய்தார்கள்.
————
சீதையும் இலக்குவனும் வணங்கல்
10277.
அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி!’ என்று ஆசி சொன்னார்.–326-
அன்னமும் – சீதையும்; முன்னர்ச் சொன்ன முறைமையின்
அடியில் வீழ்ந்தாள் – இராமன் வணங்கியதாகச் சொல்லிய
முறைப்படியே கைகேயி, கோசலை, சுமித்திரை ஆகிய தாய்மார்கள்
திருவடியில் வணங்கினாள்; தன் நிகர் இலாத வென்றித் தம்பியும்
தாயர் தங்கள் பொன் அடித் தலத்தில் வீழ- தனக்குச் சமானம்
இல்லாத வெற்றியை உடைய தம்பியாகிய இலக்குவனும் தாய்மார்களது
பொலிவுற்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்க; தாயரும் பொருந்தப்
புல்லி – தாய்மார்களும் நன்கு தழுவி; மன்னவற்கு நீயே இளவல்
வாழி என்று ஆசி சொன்னார்- இராமனுக்கு நீயே தம்பியாவாய்
வாழ்க என்று மங்கலம் உரைத்தார்கள்.
———–
பரதன் இராமனை வணங்கல்.
10278.
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான்.–327-
நின்ற நம்பி – அங்கு நின்ற ஆடவர் திலகனாய இராகவன்;
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி – திருவடி
நிலையாகிய பாதுகை இரண்டையும் தன் உள்ளத்து அன்பையும்
அவ்விராகவனது திருவடிக்கீழ் தங்குவதாகச் சேர்ப்பித்து; பூ அடி
பணிந்து வீழ்ந்த பரதனை – தன் மலர் போன்ற அடிகளில்
வணங்கி விழுந்த பரதனைப் பார்த்து; பொருமி விம்மி- புலம்பி
விம்மி; நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் – தன்
நாவால் சொல்லத்தகும் வாசகம் ஒன்றும் உணராதவனாய்; அழுது
சோர்வான் – புலம்பிச் சோர்ந்து; ஆலியும் உடலும் ஒன்ற
தழுவினன் – உயிரும் உடலும் ஒன்றாகுமாறு தழுவினான்.
———
தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான்.–328-
தழுவினன் நின்ற காலை- இப்படி இராமன் பரதனைத்
தழுவியபோது; தத்தி வீழ் அருவி காலும் விழு மலர்க்
கண்ணீர் மூரி வெள்ளத்தால் – தவழ்ந்து வருகின்ற அருவி
போன்ற சிறந்த மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய வலிய
நீர்ப் பெருக்கினால்; முருகின் செவ்வி வழுவுற –
இளமையழகின் சிறப்பு குலையும்படி; பின்னி – முறுக்கி; மூசு
மாசு உண்ட சடையின் மாலை – மொய்க்கின்ற அழுக்கு தின்ற
சடைக்கற்றையை; கழுவினன் – கழுவியவனாய்; உச்சி மோந்து-
பரதனது உச்சியை முகர்ந்து; கன்று காண் கறவை அன்னான்-
தன் கன்றைக் கண்ட பசுவைப் போல ஆயினன்.
————
இலக்குவன் பரதனை வணங்கல்
10280.
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் – படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான்.–329-
அனையது ஓர் காலத்து- அந்த நேரத்தில்; கனை கழல்
அமரர் கோமான் கட்டவன் படுத்த காலை- செருக்கிய
வீரக்கழல் அணிந்த இந்திரனது வென்றவனை (இந்திரசித்துவை)
அழித்தொழித்த வீரனாகிய இலக்குவன்; அம்பொன் சடைமுடி
அடியது ஆக – தனது அழகிய பொன்ம யமான சடா மகுடம்
பரதனது அடியில் விழும்படி; துனை பரி, கரி, தேர், ஊர்தி
என்று இவை பிறவும் தோலின் வினை உறு செருப்புக்கு
ஈந்தான்- விரைந்து செல்லும் குதிரை, யானை, தேர், வாகனம
என்று இவைகள் எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத் தோலாற
செய்த தொழில் திறம் அமைந்த இராமனது பாத அணிக்குத்
தந்தவனாகிய பரதனது; விரை மலர்த்தாளின் வீழ்ந்தான் – மணம்
வீசும் மலர் போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
பாதுகையை அரசாள வைத்த தன்மையை நயமாகக் குறித்தமை
உணர்ந்து இன்புறத் தக்கது.
———–
10281.
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் – ‘தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?’ என்று உலகம் நைய.–330-
(பரதன், அவனை) ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும்
சிவிறி ஓட- தாமரை போன்ற கண்களின் உள்ளே இருந்து
பெருகுகின்ற கண்ணீரானது நாலா பக்கங்களிலும் பரந்து சிதறி
ஓட; தனிமை நீங்கி காடு உறைந்து உலைந்த மெய்யோ? –
இராமனைப் பிரிந்த தனிமையிலிருந்து விடுபட்டு அவனுடனே
சென்று காட்டின்கண் அவனோடு தங்கி வருந்திய இலக்குவனது
உடம்போ; கையறு கவலை கூர நாடு உறைந்து உலைந்து
மெய்யோ- செயலற்ற பிரிவுத்துன்பம் மேலும் மேலும் மிகுதலால்
அயோத்தி நாட்டு நந்திக் கிராமத்தில் தங்கி உண்பதும்
உறங்குவதும் இன்றி வருந்திய பரதனது உடம்போ; நைந்தது?-
எது மிகவும் வருந்தியது;என்று உலகம் நைய – என்று உலகம்
இருவரையும் ஒருசேரப் பார்த்து வருந்தும்படி; தாள் தொடு
தடக்கை ஆரத் தழுவினன்- முழந்தாள் அளவு நீண்ட தன்
கைகளால் நன்றாகத் தழுவிக் கொண்டான்.
———
சத்துருக்கன் மூவரையும் பணிதல்
10282.
மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கும் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான்.–331-
மூவர்க்கும் இளைய வள்ளல்- மூவர்க்கும் இளையவனாகிய
சத்துருக்கன்; முடிமிசை முகிழ்த்த கையன் – தலைமேற் கூப்பிய
கையுடையவனாய்; தேவர்க்கும் தேவன் தாளும் – இராமன்
திருவடி; செறிகழல் இளவல் தாளும் – கட்டிய கழல் உடைய
இலக்குவன் திருவடி; பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் –
ஆகியவற்றில் மலர் மழை பொழிந்து விழுந்து வணங்கினான்;
பொருந்தப் புல்லி எடுத்தனர் – அவர்கள் அவனை நன்கு
தழுவித் தூக்கினர் (பின்னர் அவன்); வாவிக்குள் அன்னம்
அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான் – பொய்கையில் வாழும்
அன்னம் போன்ற சீதையின் மலர் போன்ற திருவடிகளில் வீழ்ந்து
வணங்கினான்.
———-
துணைவர்களை அறிமுகப் படுத்தல்
10283.
பின் இணைக் குரிசில்தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர்தம்மைக் காட்டினான்;இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார்.–332-
பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங்கையால்
வாங்கி – தன் தம்பியும் பரதனோடு இணையாக
உள்ளவனும் ஆகிய சத்துருக்கனைத் தனது நீண்ட கைகளால
எடுத்து; வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி-
பருத்த தனது இரண்டாகிய தோள்கள் முழுகும்படி
அணைத்து; அத்தம்பிமாருக்கு – அந்த பரத
சத்துருக்கனர்களுக்கு; இன் உயிர் துணைவர் தம்மைக்
காட்டினான் – இனிய உயிர் போன்ற தனது துணைவர்களாகிய
சுக்கிரீவ, வீடணர்களைக் காட்டி அறிமுகம் செய்வித்தான்; மன்
உயிர்க்கு உவமை கூர வந்தவர் – உலக உயிர்களுக்கு
உவமைச் சிறப்பு உண்டாகும்படி வந்தவர்களாய அவர்கள்;
இருவர் தாளும்- பரத சத்துருக்கனர் தாள்களை; வணக்கம்
செய்தார்- வணங்கினார்கள்.
———–
குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன்தன்னை
செருக் கிளர் நீலன்தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன், நின்றான்.–333-
மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன்- மணம்
வீசும் கட்டமைந்த மாலை அணிந்த மார்பினை உடைய பரதன்;
குரக்கினத்து அரசை – சுக்கிரீவனை; சேயை – அங்கதனை;
குமுதனை சாம்பன் தன்னை செருக்கிளர் நீலன் தன்னை-;
மற்றும் அத்திறத்தோரை – வேறு அத்தகையவர்களை;
அரக்கருக்கு அரசை- வீடணனை; வெவ்வேறு அடைவினின்-
அவரவர்க்கு உரிய முறைப்படி; முதன்மை கூறி – உபசார
வார்த்தைகள் கூறி; நின்றான்.
———–
சுமந்திரன் வருதல்
10285.
மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத்தடந் தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால்–334-
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன்- அழகிய
அகன்ற தோள்களை உடைய வெற்றியுடைய சுமந்திரன் என்னும்
முதல் அமைச்சன்; மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும்-
மந்திராலோசனைச் சபையில் இருத்தற்குரியோர்களோடும்;
வயங்கு தானைத் தந்திரத் தலைவரோடும்- விளங்கிய சேனைத்
தலைவர்களோடும்; தமரொடும் – ஏனைய சுற்றத்தினரோடும்;
தரணி ஆளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும் –
உலகை ஆளும் சிந்தூரம் அணிந்த ஆண்யானை போன்ற
மன்னர்களோடும்; சேனையோடும் தோன்றினான்.
——————-
அழுகையும், உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன், மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
‘வழு இனி உளது அன்று, இந்த மா நிலக்கிழத்திக்கு’ என்றான்.–335-
சுமந்திரன்-; அழுகையும் உவகை தானும் தனித்தனி அமர்
செய்து ஏற – அழுகையும் மகிழ்ச்சியும் தனித்தனியாக
ஒன்றோடொன்று போட்டியிட்டு மேலே மிக; எழுந்து விம்மி
தொழுதனன் நிற்றலோடும்- நின்று துடித்து வணங்கி நின்ற
அளவில்; இராமன் தழுவினன் – இராமன் தழுவினன்; மற்றைத்
தம்பியும் அனைய நீரான் – இலக்குவனும் அதுபோலவே
தழுவினன் (பின்னர் சுமந்திரன்); இந்த மாநிலக் கிழத்திக்கு-
இந்த நிலமகளுக்கு; இனி வழு உளது அன்று என்றான் –
இனித்துன்பம் இல்லை என்று மகிழ்ச்சி கூறினான்.
—————
‘ஏறுக சேனை எல்லாம் விமானமீது’ என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே.–336-
தன் போல் மாறு இலா வீரன்- தனக்கு ஒப்பாக மற்று ஒன்று
இல்லாத பெருவீரனாகிய இராமபிரான்; சேனை எல்லாம் விமானம்
மீது ஏறுக என்று கூற- எல்லாச் சேனைகளும் விமானத்தின் மேல்
ஏறட்டும் என்று கட்டளையிட; வந்துள அனிக வெள்ளம் – வந்த
சேனைப் பெருக்கு; ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள்
ஒடுங்குமா போல்- மேலும் மேலும் ஊறுகின்ற கடல் விண்ணில்
உள்ள மேகத்துள் ஒடுங்குவதைப் போல; ஏறி – விமானத்தில் ஏறி;
இளைய வீரன் இணை அடி தொழுதது- இலக்குவனது திருவடிகளை
வணங்கியது.
————
‘உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கல் மாலைப் புட்பக விமானம்’ என்றுஎன்று,
உரைசெய்து, வான் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார்.–337
வான் உளோர்கள் – தேவர்கள்; விரை செறி அலங்கல்
மாலைப் புட்பகவிமானம் உரைசெயின் – மணமிக்க மலர்
மாலை அணிந்த இந்த புட்பக விமானம் பற்றிச் சொல்லப்
புக்கால்; உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா
– உலகம் உண்டவனாகிய திருமாலின் அழகு பொருந்திய
திருவயிறும் உவமையாகாது; கரைசெயல் அரிய வேதக்
குறுமுனி கையும் ஒவ்வா – கரை காண முடியாத
வேதங்களை உணர்ந்த அகத்திய முனிவனது (கடலை அடக்கிய)
கையும் உவமையாகாது; என்று என்று- என்று கூறி; ஒண் மலர்
தூவி ஆர்த்தார் – ஒள்ளிய மலர்களைத் தூவி ஆரவாரம்
செய்தனர்.
—————
அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த.–338-
விசையுறு முரசும்- வேகமாக அடிக்கப் பெறும் முரசு ஓசையும்;
வேதத்து ஓதையும் – வேத ஓசையும்; விளிகொள் சங்கும்- சங்க
நாதமும்; இசை உறுகுரலும் – இராகம் கூடிய வாய்ப் பாட்டொலியும்;
ஏத்தின் அரவமும்- தோத்திர முழக்கொலியும்; எழுந்து பொங்கி
– மேலே புறப்பட்டுச் சென்று; திசை உறச் சென்று- நாலா பக்கமும்
அளாவி; வானோர் அந்தரத்து ஒலியின்- தேவர்கள் மகிழ்ச்சிப்
பெருக்கால் மேலே செய்யும் ஆரவாரத்தின் கண்; தீர்ந்த-
ஒலியடங்கிப் போயின;
————
கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். —
————–
அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்
அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். –
—————
‘அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. —
————–
‘ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்’ என்று கொண்டு, உணர்த்தும் காலையே.
———-
இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்
பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால்.–
———
இராமனைப் பரதன் காணுதல்
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். —
————
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான்.–
————
இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்
தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், ‘இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு’ எனா, —
———–
காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். —
—————
புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்
ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். —
———–
இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் —
————–
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். —
———–
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார்.–
———-
சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. —
————–
அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். —
———-
தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். —
————
இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்
அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் —
————-
சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்
பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். —
————
மிகைப் பாடல்கள்
‘வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-1
‘வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று’ எனப் புகன்றான். 1-2
‘மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?” எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-3
‘வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-4
வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்’ என்றான். 1-5
என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6
ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற;
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7
[இது முதல் 1-19 வரையில் ‘இமயப் படலம்’ என்றும், ‘வசந்தன் உயிர்வரு படலம்’ என்றும், சில பிரதிகளில் உள்ளன.]
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
‘ஏறும் நீர் தேரில்’ என்ன, ‘கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்’ என்னச் சொன்னார் 1-8
என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
‘பொன்றுமா வரக் காரணம் என்?’ எனப் புழுங்கா’
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி’ எனச் சொன்னான். 1-9
‘வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்’ என்று எழுதிவிட்டான். 1-10
அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
‘இக்கணம் வருவென்; வாழி! இராம!’ என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் 1-11
மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, ‘அரி! அரி’ என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12
துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, ‘வசந்தனைக் காட்டு’ என, அவனும்
உளம் கலங்கி, ‘உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து’ என்றான். 1-13
சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், ‘முனிவு எனோ?’ என்ன,
‘மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி’ என்றான். 1-14
‘வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி’ என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15
சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
‘வந்த காரியம் எது?’ என, ‘வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு’ என உணர்த்தும்: 1-16
‘என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து’ என்றான். 1-17
என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19
[வேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில் உள்ள பாடல்களுடன்
வசந்தன் வரலாறு பற்றி, (1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின் சிலவற்றையும்
இடையில் கொண்டு, இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.]
ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20
ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
‘ஏறினன், வாலி மைந்தன்’ என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
‘வாரும் தேரின்மேல்’ என, ‘கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்’ என்றார். 1-23
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
‘வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?’ என்றான். 1-24
இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
‘சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி’ என உரைத்தான். 1-25
கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26
‘இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென்’ என்றான் -‘நாளை வா’ என்ற வீரன். 1-27
[இதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.]
‘செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்!’ என்று அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
‘செல்லவே போமின்’ என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32
[இதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.]
‘மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி’
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, ‘விடை’ எனப் போனாள். 5-1
என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3
[சில பிரதிகளில், ‘சொன்ன வாசகம் பிற்பட’ (16) என்ற பாடலுக்குப் பின்
‘வசந்தன் உயிர் வரு படலம்’ தொடங்குகிறது. 16-3 என்னும் இந்த பாடலுக்கு முன்
இதன் முன்னர் தந்துள்ள 1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன.
இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.]
என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, ‘மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து’ என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5
எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான் 16-6
பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7
வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9
தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, ‘இது இராகவன் சரம்’ என நினைந்தார். 16-10
‘கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்’ என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11
‘சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்’ என்றார். 16-12
‘ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே!’ என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
‘பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!’ என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13
வந்து அடைந்து, ‘உனக்கு அபயம்’ என்று, அடியினில் வணங்கி,
“எம் தனிப் பிழை பொறுத்தி” என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-14
தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
‘”என் தனிப் பிழை பொறுத்தி” என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக’ என்றான். 16-15
அண்ணல் ஆரியன், ‘தருதி’ என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
‘திண்ணன் யாக்கை எங்கே?’ என, சாம்புவன் செப்பும்: 16-16
[இதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.]
அன்னதே என, ‘அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக!’ என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
‘பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை’ எனப் போனான். 16-20
[இதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18, என்னும் பாடல்கள் வர
‘வசந்தன் உயிர் வரு படலம்’ முடிவு பெறுகிறது]
அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29
அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
‘நன்றுதான்’ என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1
ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2
தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1
வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2
‘மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, “வானோர்
பொன்னகர் ஒக்கும்” என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3
‘வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4
‘வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் 20-5
‘மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் 20-6
‘கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7
‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8
‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9
‘இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன் தன் வாயில்
கலந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது’ என்றான். 20-10
குட திசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,
வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11
‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12
‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13
ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார் 22-1
மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2
ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1
‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2
‘குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர் 23-3
‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4
‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5
‘கண்டிலாது “ஒன்று கண்டோ ம்” என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6
‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர் 23-7
‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8
‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9
‘கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10
‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர் 23-11
‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12
கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும் கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான் கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள். 23-13
வழி அடித்து உண்போர், கேட்டால் வழி சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர், பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர், அடைந்தது …………………
……………………….தெரிசிக்கத் தீர்க” என்றான். 23-14
‘ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர், நிறையக் கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப் பிரியப்படுத்தார்,
போதம் இலாதார், “மற்றச் சமயம் பொல்லாதது” என்பார். 23-15
‘என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்,
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே போல,
தென் திசை வந்து, சேது தரிசிக்க, தீரும்’ என்றான். 23-16
ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், ‘அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க’ என,
‘நீங்கிடுக அதுவும்’ என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான். 23-17
‘பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்,
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின் படியே,
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால். 23-18
‘பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க’ எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் வழிக்கொண்டான். 23-19
என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது, மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து, என் செய்வான் 23-20
முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடரக் கண்டு, ஆங்கு,
‘அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை தொலையாது’ என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து நின்றான். 23-21
திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். 23-22
கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்,
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள் தன்னுடனே, உயர் சேனைக் கடலுடனே. 23-23
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன் தானும்,
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும், 23-24
பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன் தானும்,
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும், 23-25
நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக,
“நன்று நின் வரவு” என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து, 23-26
சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்,
‘ஏது இத் தலம்?’ எனக் குறு முனிவனைக் கேட்ப,
‘வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர்’ என்று அவன் புகன்றான். 23-27
புகன்றவன் தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய, அவனும்,
‘பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்,
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும், 23-28
‘இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன் சாய்கை,
அருத்தி இன்றியே, அகன்றது’ என்று அருள் முனி அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி,
‘கருத்து மற்று இனி உரை’ என, குறுமுனி கழறும்: 23-29
‘இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன் தன் மா நகர் எய்தினால், சாய்கை போம், உரவோய்!’
‘அந்த நீதியே செய்தும்’ என்று, அனுமனை அழைத்திட்டு,
‘எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக’ என்றான். 23-30
அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற,
‘கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண்’ என, மாருதி தாவினான். 23-31
‘போதி’ என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும், மைந்தனாம் இலக்குவன் தானும்,
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப, 23-32
ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான். 23-33
காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
‘ஆலம் உண்ட தே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே. 23-34
‘முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல் கூப்பி,
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும். 23-35
ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப. 23-36
நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு,
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
‘நன்று செய்தனை!’ என்னப் போய் நாதனைப் பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன். 23-37
[இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன]
ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான்; தோன்றா,
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் நின்றான். 23-37(அ)
நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, ‘நம் பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி’. 23-37(ஆ)
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; ‘மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை’ எனவே. 23-37(இ)
ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, தளர்ந்து வீழ்ந்தான் 23-37(ஈ)
மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து, ஈசன் வன்மை-
தனை உரைத்து, ‘இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி,
முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்’ என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார். 23-37(உ)
விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி,
‘அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என் செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி’ என்று உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை செய்தான். 23-38
அவ் இடத்து, ‘அனுமன் தந்த, கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து’ எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான். 23-39
‘எம்தன் நாதன் இவன்’ என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது,
இந்திரன், பிரமா, முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார். 23-40
‘இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக’ எனா. 23-41
என்று, இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்று சென்று, ‘செய செய! போற்றி!’ என்று,
அன்று இராச குமாரன் அறைகுவான்: 23-42
பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, ‘நீள் திரைக் கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை’ எனப் புகன்றான். 23-43
நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
‘இந்த மா மலை இரும்’ என, யாவையும் நல்கி,
‘விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும்’ என, இராமனும் அகன்றான். 23-44
போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார். 23-45
தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக் கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில் போயினனால். 23-46
சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன். 23-47
வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன் சிலையால்,
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு உரவோன்: 23-48
‘நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். 23-49
‘தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். 24-1
‘மாருதி, நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் போக்கு இற்று என்ன,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய்!’ 24-2
ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்: ‘விரிந்த கிட்கிந்தை உள்ளார்,
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி’ என்ன,
கார் நிற அண்ணல், ‘மானம் காசினி குறுக’ என்றான். 26-1
என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி’ என்ன,
சென்று அவன் சாம்பன் தன்னை, ‘திசை எட்டும் திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு’ என்றான். 27-1
என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன,
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி கூட, 27-2
சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும், கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர், இறைஞ்சி நின்றார். 29-1
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக் கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில் தாரை. 29-2
தாரையைச் சீதை புல்கி, ‘தாமரைக் கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார் உளோர்க்கு அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை அம்மா?’ 29-3
என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது,
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே, ருமையும் நின்றாள் 29-4
நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று,
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ,
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை உற்றே. 29-5
‘கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்;
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய். 30-1
‘கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை! நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம் நோக்காய். 30-2
‘மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான் வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை, கண்ட பம்பையாறு அதனைப் பாராய். 30-3
‘பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து, அறத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன் தன்னைக் கண்ட இடம் உது கண்டாயே. 30-4
‘சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்,
சவையுறு சுருட்டன் மைந்தன், சரவங்கள், முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய். 30-5
‘விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்;
‘சரதம் நான் அரசு வேண்டேன்; தட முடி சூடுக’ என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப் பாராய். 30-6
‘வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல் பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப, வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப் பாராய். 30-7
‘பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது நோக்காய்.’ 30-8
என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவிசேயும்,
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே. 30-9
என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து,
குன்று துன்றிய நெறி பயில் குட திசைச் செவ்வே
சென்று, கங்கையின் திரு நதித் தென் கரை சேர்ந்தான். 35-1
ஆர்த்து விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து,
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். 35-2
மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். 35-3
‘பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது’ என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி,
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார். 35-4
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை வியவா,
‘புறத்ததாம் உயிர் பெற்றனம்’ என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான். 35-5
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும் நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக’ எனச் செப்பி,
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார். 39-1
‘தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரைக் கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ ?’ 41-1
இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
‘எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி,
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!’ என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து அடைந்தான். 42-1
அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனை அம் பெருங் கடல் சூழ் தர, மேல் நாள்,
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். 42-2
இருந்த போது, இராமன் தன்னை இருடியும் இயம்பும்: ‘எந்தாய்!
பெருந் திறல் இலங்கை தன்னை எங்ஙனம், பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!’ என்றான். 42-3
இராகவன் அவனை நோக்கி, ‘இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன் தானும், ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது’ என்று, மீளவும் பகரலுற்றான்: 42-4
‘தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது, அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது அன்றே. 42-5
‘கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் காணா,
மறம் புகா, நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே;
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், ஐயா! 42-6
‘மறக் கண், வெஞ் சினத்தின் வன்கண், வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி நூலோய்!’ 42-7
என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, ‘நீ தக்கோய்!
வென்று மீண்டிலை ஆயின, அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ? 42-8
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
‘ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். 42-9
‘அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள்; மேல் விளம்புவது எவனோ?’
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும், இயைந்தே. 42-10
அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மாதவன் தனைத் தொழா, ‘புண்ணியப் பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ’ என்றான். 42-11
அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்: அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி,
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும்: 42-12
‘இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் செல்வத்
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்;
புராதனர்க்கு அரசே!’ என மாருதி புகன்றான். 42-13
அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
‘என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?’ என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
‘அன்னை வாசவன் திருவினைத் தந்தது’ என்று அறைந்தான். 42-14
பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், ‘நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை’ என்றான். 42-15
என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா தவனும், ‘இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவிக்
குன்று என வருக!’ என்று கூறலும், இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து, ஆங்கு வந்தார் 42-16
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்: 42-17
முனிவன் வாள் முகம் நோக்கி, ‘மெய் முழுது உணர் முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன்’ எனப் புரவலன் புகன்றான். 42-18
என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
‘நன்று, நாயகன் கருணை!’ என்று உவகையின் நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, ‘அருந் தொல்லோய்!
ஒன்று கேள்’ என, உவகையின் மாருதி உரைக்கும்: 42-19
‘செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ?’ என்று மொழிந்தான். 42-20
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்;
‘பொருந்த மா முடி புனைக!’ எனப் பொருந்துறான், போத
வருந்து தம்பிக்கு, ‘வருவென் யான்’ என்பதோர் வாக்கை. 42-21
‘சித்திரகூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை அடைந்து, எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத் திறம் இருத்தி’ என்றான், மறைகளின் இறுதி கண்டான். 42-22
‘சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங் கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி’ என்றான். 42-23
‘வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்;
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான். 42-24
இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம் பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் – நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.’ 42-25
முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் பெருமான் –
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன நிகழ்த்தும்: 42-26
என்று உரைத்து, ‘அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குல வரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின் தனைப் பிரிந்தது உண்டே, யான்’ என நிகழ்த்தினானால். 42-27
‘மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்,
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை’ என்றான் 42-28
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி’ எனலும், ஐயன்,
‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.’ 42-29
‘”அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி,
விரி புனல் செழுந் தேன் மிக்கு, விளங்குக!” என்று இயம்புக’ என்றான்;
புரியும் மா தவனும், ‘அஃதே ஆக!’ எனப் புகன்றிட்டானால். 42-30
அருந்தவன், ‘ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்’ என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்,
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 42-31
அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மாதவனும், ‘இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும்’ என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு வந்தார். 42-32
அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறு சுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்: 42-33
மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான்; அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான். 44-1
‘மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 44-2
‘அம் பவளச் செவ்வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான், என்னை, இழி குணத்து நாயேனை,
‘தம்பி’ என உரைத்த தாசரதி தோன்றானோ! 44-3
வாழி மலைத் திண் தோள் சனகன் தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
“தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் கொழுந்தி; நீ
தோழன்” என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!’ 44-4
‘துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர்; யான் இறப்பேன்’ எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். 44-5
‘வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்,
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பென்’ என்று எண்ணி,
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். 44-6
‘கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,’
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
‘அண்ணல் வந்தனன்’ என்று உரையாடினான். 44-7
உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 44-8
ஓங்கு வாலினை ஓட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். 44-9
‘கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேபுரம் உடையாய்! மிகு கோசலை களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியொடும்; அடியேம் உய்ய, வந்தானே. 44-10
‘ஆர்? உனை உரை’ என, அனுமன் கூறுவான்:
‘சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
குருடை இராமற்குத் தூதன்’ என்று எனது
ஏருடைத் தலையின் மேல் எழுதப்பட்டுளேன். 44-11
பரதனைத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது’ என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். 44-12
பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத்துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான். 84-1
நின்றவன், ‘இவ் வயின் நெடியவன் தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், சென்று’ எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 102-1
ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
‘மேய சேனைக்கு அமைப்பென் விருந்து’ எனா,
தீயின் ஆகுதி செங் கையின் ஓக்கினான். 102-2
பான நெய்யொடு, நானமும், சாந்தமும், பலவும்,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்,
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார். 102-3
கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க நிறைத்தனரால் 102-4
வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் 102-5
நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், பொலிவால். 102-6
அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 102-7
‘உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும், 102-8
‘தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்தனை;
ஆயினும், அன்பினால் யாம் செய் மா தவம்’ 102-9
என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?’ என்றனன் –
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 102-10
‘இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது அல்லால்.’ 102-11
[இதன்பின் 42-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன].
‘கொற்றவன் உடன் உண்ணுமோ?-கோது இல் மாதவனே!
வெற்றி வீரனே!’ என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 102-12
பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள் தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு,
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் உண்டனரால். 102-13
பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர் வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் உண்டனனால். 102-13(அ)
அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்;
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் மகிழ்ந்தனனால். 102-14
பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்,
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப,
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 102-15
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப் பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்,
மண்ணும், நாகரும் யாவரும், அருந்துயர் மறந்தார். 102-16
மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து, 102-17
ஆர் இருள் அகலும் காலை, அமலனும், மறையோன் பாதம்,
ஆர்வமோடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் ஆசி
சீரிது கூறி, ‘சேறி’ என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான். 102-18
விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். 102-19
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-20
இளவலை, ‘”அண்ணலுக்கு எதிர் கொண்ம்” என்று, நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை,
“கிளையொடும் ஏகு” எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய்’ என்றான். 102-21
‘”தோரணம் நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக!” எனச் செப்புவாய்’ என்றான். 102-22
பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய்’ என்றான். 102-23
என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 102-24
அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
‘வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!’ என்றிட, 102-25
‘வானையும் திசையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான்’ எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். 102-26
முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்,
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். 102-27
‘அனகனை எதிர்கொள்க’ என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 102-28
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்,
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 102-29
அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 102-30
திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 102-31
எல்லவன் மறைந்தனன் – என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 102-32
அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், ‘திருவின் நாயகன்,
எவ் வழி உறைந்தது? அச் செயல் எலாம் விரித்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்’ என்றான். 102-33
என்றலும், மாருதி வணங்கி, ‘எம்பிரான்,
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?’ 102-34
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்,
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான். 102-35
‘குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 102-36
‘ஆங்கு உறை தபோதனர், “அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்!” என,
‘நீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்’ என்றான். 102-37
‘ஆறு நால் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 102-38
‘குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான் தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம் தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். 102-39
‘அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் உறு பஞ்சவடியின் வைகினார். 102-40
‘பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள் 102-41
‘கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள். 102-42
‘இருபது தடக் கையான் மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான் 102-43
‘போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று, இளவலோடு,
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 102-44
‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 102-45
‘ஆங்கு அவள் தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, “வாலி பருவரல் கெடுப்பல்” என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் 102-46
‘கால மா மாரி நீங்க, கயவனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன், என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான். 102-47
‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி. 102-48
‘தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே 102-49
‘அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயந்து அரக்கன் தம்பி, “திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன, நின் வாணாள்” என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 102-50
‘ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு, முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 102-51
‘மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 102-52
‘மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் 102-53
‘இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார். 102-54
‘தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, “மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள்” என்றான் 102-55
‘”ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு இன்னே
சூடுக மௌலி” என்ன, சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான். 102-56
‘நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான். 102-57
‘மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த,
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கையினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
“செய்யவட்கு அருள்க” என்றான்; திருவின் நாயகனும் கொண்டான் 102-58
‘”என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக” என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார். 102-59
‘வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் –
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன். 102-60
‘ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும், சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான். 102-61
‘அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, “ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி” என்று துரந்தனன், தோன்றல்’ என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் – முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 102-62
காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
‘வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ’ 102-63
என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் 102-64
இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும், மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-65
காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக் கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
‘சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ ? 102-66
‘எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, “எம்பிரான் வந்தான்” என்று உரைத்தது, வீர!’ என்றான் 102-67
‘ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!’ என்றான் 102-68
பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், ‘சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம். 102-69
‘வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்! 102-70
‘இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி’ என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்: 102-71
அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் 102-72
தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
‘வழு இலா வலியர் அன்றோ, மக்களும் மனையும்?’ என்றான். 102-73
‘அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ?’ 102-74
ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான் தன்னை, ‘ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி’ என்ன, புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 102-75
தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; “முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.’ 102-76
அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான் 102-77
அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 102-78
கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து, இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன் தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு துணைவரோடும், முனி மனம் தொடரப் போனான். 102-79
தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 102-80
பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
‘சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று’
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார். 102-81
தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 103-1
கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன்-தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 107-1
[இதன் பின் சில பிரதிகளில் 102-7, 8, 9, 10 பாடல்கள் உள்ளன]
அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களைத்
‘தப்பு அறக் காண்பென்’ என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 111-1
அவ் வயின், ‘அயோத்தி வைகும் சனமொடும், அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும்,
இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்’ என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, விமானம் தானும். 110-2
எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 115-1
எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் ஏந்தி, வாழ்த்தினான், ஆசி கூறி. 115-2
கைகான் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங் கண்
ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 115-3
அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
‘மன்னவற்கு இளவல் நீயே; வாழி!’ என்று ஆசி சொன்னார். 115-4
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினான். 118-1
ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -‘தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?’ என்று உலகம் நைய 118-2
மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான். 118-3
ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, ‘நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?’ என்று
வாயிடை மொழிந்தான்,-மற்றை மறைகளும் காணா அண்ணல். 119-1
குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன் நின்றான். 119-2
மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 119-3
அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
‘வழு இனி உளது அன்று, இந்த மா நிலக் கிழத்திக்கு’ என்றான் 119-4
வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர்; உவந்த பின்பு
தேறிய கமலக் கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். 119-5
‘ஏறுக சேனை எல்லாம் விமான மீது’ என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே. 119-6
‘உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கள் மாலைப் புட்பக விமானம்’ என்று என்று,
உரை செய்து, வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார். 119-7
அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 119-8
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
‘வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென்’ என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. 119-9
மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத் தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த தன்மை! 119-10
இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி,
பணை முலைப் பாலும், கண்ணீர்த் தாரையும் பாய, நின்றாள்;
பிணை எனத் தகைய நோக்கின் சீதையை, பேடை அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் துறையை, கண்டாள் 119-11
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, விம்மி,
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால் முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்,
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம். 119-12
அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்;
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 119-13
வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து, உயர் வெளிப் பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார். 119-14
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கணி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 119-15
புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம் தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 119-16
நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். 119-17
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து நீக்கி,
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் 119-18
——————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply