ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/34–இராவணன் தேர் ஏறு படலம்–

எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்

பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
‘”ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக!” என்று, ஆனை மணி முரசு எற்றுக!’ என்றான் 1

பூதரம் அனைய மேனி – மலை போன்ற உடலையும்;
புகைநிறப் புருவச் செந்தீ – புகைபோல் கரிய புருவங்களையுடைய
செந்தீ போன்ற; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை- மகோதரன்
எனும் பெயருள்ள ஒருவனை; முறையின் நோக்கி- முறைக்கு ஏற்பப்
பார்த்து; இறந்திலாதது ஏதுஉளது- சாவாத சேனை எது உள்ளது?; இலங்கையுள் இருந்த சேனை –
இலங்கைக்குள் இருந்த படை; யாதையும் எழுக என்று –
எல்லாவற்றையும் எழுக என; ஆனை மணி முரசு எற்றுக
என்றான்- அழகிய முரசத்தை யானைமீது ஏற்றி அடிப்பிடிக்க
என்றான்.

—————

சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்

எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,
சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,
வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2-

ஏற்றின முரசினோடும் – முழக்கிய முரசத்துடன்; ஏழ்இரு
நூறுகோடி – பதினான்கு நூறுகோடி;கொற்றவாள் நிருதர் சேனை-
வெற்றி பொருந்திய அரக்கர் படை; குழீஇயது- திரண்டது; வற்றிய
வேலை என்ன- நீர்வறண்டு போன கடல் போல; இலங்கையூர்
வறளிற்றாக – இலங்கை நகர் வறுமையுடையதாக ஆயிற்று;
கொடித்திண் தேரும் – கொடிகள் கட்டிய தேரும்; சுற்றுறு
துளைக்கைம்மாவும் – சுற்றிச் சுழலும் துளைக் கையையுடைய
யானையும்; துரகமும் பிறவும் தொக்க – குதிரையும் பிற படை
யாவையும் சேர்ந்த;

———–

ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3-

ஈசனை – எல்லாச் செல்வங்களும் உடையவனும்; இமையா
முக்கண் ஒருவனை – இமைக்காத மூன்று கண்களை உடையவனும்
ஆன சிவபெருமானை; இருமைக்கு ஏற்ற – இம்மை மறுமைக்குகந்த;
பூசனை முறையின் செய்து – பூசைகளை முறைப்படி செய்து; திருமறை புகன்ற தானம்- சிறந்த வேதங்கள்
கூறும் தானங்களை; வீசினன் இயற்றி- வீசிக் கொடுத்து; மற்றும்
– மேலும்; வேட்டன வேட்டோக்கு எல்லாம்- விரும்பியவற்றை விரும்பியவர்க்கெல்லாம்; ஆசு அற நல்கி – குற்றமின்றிக் கொடுத்து;
ஒல்காப் போர்த்தொழிற்கு- தளராத போர்வினைக்கு அமைவது
ஆனான்- பொருந்தியவன் ஆனான்.

———

இராவணன் போர்க்கோலம் பூணுதல்

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4-

அருவி அஞ்சனக் குன்றிடை – நீரருவி கொண்ட கரிய
மலையிலே; ஆயிரம் அருக்கர் உருவினோடும்- ஆயிரம் சூரியர்
வேற்று உருவத்தோடு; வந்து உதித்தனர் ஆம் என ஒளிர- வந்து
தோன்றினர் ஆம் என்று ஒளி வீச; கருவிநான் முகன் வேள்வியில்
– (உலகங்களைப் படைக்கக்) கருவியான பிரமன் வேள்வியிலே;
படைத்ததும் – தோற்றுவித்ததும்; சுட்டிச் செருவில் – போரில்
சுட்டிய; இந்திரன் தந்த- தேவேந்திரன் அளித்த; பொன்கவசமும்
சேர்த்தான்- பொற்கவசமும் அணிந்தான்.

————–

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5-

வாள் வலம்பட- உடைவாளை வலமாகப் பொருந்தச் சேர்த்தி;
மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – மந்தரமலையைச் சூழ்ந்த
(வாசுகி எனும்) பாம்பு போல; தாள் வலந்து ஒளிர் –
முயற்சியால் சுற்றப்பட்டு ஒளி வீசும்; தமனியக் கச்சொடும்
சார்த்தி – பொன்னாலான கச்சிலே சேர்த்தி; வலந்தன
கோள் குவிந்தன – வலம் வரும் கிரகங்கள் குவிந்தன; ஆம்
எனும் கொள்கை- ஆகுமென்ற கொள்கை; மீள்வு இல் – மீளுதல்
இல்லாத; கிம்புரி – கிம்புரி போன்ற வட்டவடிவமைந்த; மணிக் கடி சூத்திரம்
வீக்கி – இரத்தினத்தாலமைந்த கடி சூத்திரத்தைக் கட்டி.

—————-

மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6-

மறை விரித்துள்ள- வேதங்களை விரித்தாற்போல; மாடுறு
மானமாக் கலுழன் – அருகிலிருந்த பெருமை மிகுந்த பெரிய
கருடன்; சிறை விரித்தன்ன கொய்சகம்- சிறகை விரித்தாற்
போன்ற கோசிகத்தின்; மருங்குறச் சேர்த்தி – இடத்திலே
சேர்த்து; முறுக்கிய கோசிக மருங்கில் – முறுக்கமைந்த
வெண்பட்டாடையை இடையிலே; முறை விரித்தன்ன- முறையாக
விரித்தாற் போல; பிறை விரித்தன்ன – பிறையை வெளியிட்டாற்
போல; வெள்எயிற்று அரவமும் பிணித்து – வெண்மையான
பற்களையுடைய பாம்பைக் கட்டி.

————

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7-

மழைக் குலத்தொடு- மேகக் கூட்டத்தின் உறையும்; வான்உரும்
ஏறு எல்லாம் வாரி – மேலான இடிகள் எல்லாவற்றையும் வாரி;
இழைத் தொடுத்தன அனைய- செவ்விய முறையில் தொகுத்தமைத்தது
போன்ற; வாள் உடை மணி ஆர்த்து – வாளையும் உடையையும்,
மணியையும் கட்டி; முழைக்கிடந்த வல் அரிஇனம் – குகையில்
உறங்கும் வலிய சிங்கக் கூட்டம்; முழங்குவ போல்வ – முழங்குவதைப்
போன்றன; தழைக்கும் மின்ஒளிப் பொன்மலர்ச் சதங்கையும் சாத்தி
– மிகுகின்ற மின்னல் போன்ற ஒளியுடைய பொன்மலர் போன்ற
சதங்கைகளையும் அணிந்து.

—————

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை,
யாரும் புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8-

உரும் இடித்த போது – இடி இடித்த போழுது; அரவுஉறு
மயக்கம்- பாம்பு அடைந்த கலக்கம்; வான்உலகின் இருநிலத்தடை
– விண் உலகிலும் பெரிய பூமியிலும்; எவ்வுலகத்திடை – எந்த
உலகத்திலும்; யாரும் புரிதரப்படும் – யாவரும் அடையுமாறு
ஒலிக்கும்; பொலங்கழல் இலங்குறப் பூட்டி – பொற்கழல்களை
விளங்கும் வகையில் அணிந்து; சரியுடைச் சுடர் சாய்நலம் –
சரிந்த உடையில் சுடர் வீழ்வதால் உண்டாகும் அழகு; சார்வுறச்
சாத்தி – மேலும் விளங்க அணிந்து.

—————

நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென,
இலங்கும் கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9-

நால் அஞ்சு ஆகிய கரங்களில் – இருபது கைகளில்;
நனந்தலை அனந்தன் – பெரிய தலையையுடைய அனந்தனின்;
ஆலம்சார் மிடற்று அருங்கறை கிடந்தென – நஞ்சு தங்கிய
கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; இலங்கும் – விளங்குகின்ற;
கோலம்சார் நெடுங்கோதையும் – அழகுமிக்க நீண்ட
தோற்கட்டும்; புட்டிலும் கட்டி – விரற்புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் என – நீண்ட நாவுடைய பாம்பு போல;
கங்கணம் தழுவ- கங்கணத்தை அணிந்து;

————–

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10-

——–

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11-

———

வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப்
பலவாய் ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12-

முத்தக் குடை இமைப்ப – முத்துக்கள்
தொங்கும் வெண்கொற்றக் குடை விளங்கவும்.

———–

பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13-

பகுத்த பல்வளக் குன்றினில் – வகை செய்யப்பட்ட
பலவளங்களுடைய குன்றில்; முழை அன்ன பகுவாய் – குகை
போன்ற பிளந்தவாயிலே; வகுத்த வான்கடைக் கடைதொறும்-
வகுக்கப் பெற்ற பெரிய கடைவாய் தோறும் கடை வாய்தோறும்
வளைஎயிற்று ஈட்டம்- வளைந்த பற்களின் கூட்டம்; மிகுத்த
நீலவான் மேகம் சூழ்- மிகுதியாகவுள்ள நீல நிறமுள்ள பெரிய
மேகங்கள் சூழ்ந்த; விசும்பிடை- வானத்தில்; தசும்பூடு உகுத்த
– பாலிகைக் கலன்களில் தூவிய; செக்கரின் பிறைக்குலம்-
சிவந்த வானில் பிறைக் கூட்டம்; முளைத்தன ஒக்க –
முளைத்தவற்றை ஏத்திருக்க.

————–

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14-

ஒத்த தன்மையின் ஒளிர்வன – இயைந்த தன்மையோடு
ஒளிவீசுவன; தரளத்தின் ஓதம் தத்துகின்றன – முத்துக்களின்
ஒளி அலை வீசுகின்றன; வீரபட்டத் தொகை தயங்க –
வீரபட்டத் தொகை விளங்குவதால்; ஒத்த ஒடைய முரண் திசை
முழுமத யானை – சிறப்பால் ஒத்த முகபடாம்களை முரண்பட்ட
எட்டுத் திக்குகளிலும் உள்ள நிரம்பிய மதம் பொழியும்
யானைகளின்; பத்து நெற்றியும் – பத்து நுதல்களும்; சுற்றிய
பேர்எழில் படைக்க – சூழ்ந்த பெருமைமிக்க அழகை
உண்டாக்கவும்.

———

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித்
தலங்கள் உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15-

புலவிமங்கையர்- புலக்கும் பெண்டிர்; பூஞ்சிலம்பு அரற்று
அடி நோக்கி- அழகிய சிலம்புகள் ஒலிக்கும் அடியை நீக்கி;
தலைமை கண்ணினர் – தலைமையைக் கருதுகின்றவர்களை;
தாழ்கிலா மணிமுடித்தலங்கள்- வணங்காத இரத்தினம் பதித்த
திருமுடி சூட்டிய இடங்கள்; உலகம் ஒன்றினை விளக்குறும்-
உலகம் ஒன்றை விளங்கச் செய்யும்; கதிரினை ஓட்டி –
சூரியனைத் தனக்கீடாகாதென ஓடச் செய்து; அலகு இல் எவ்
உலகத்தினும்- அளவற்ற எந்த உலகத்திலும்; வயங்கு இருள்
அகற்ற- விளங்கும் இருளை நீக்கவும்.

————–

நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16-

நாகம் – சுவர்க்க லோகமும்; நானிலம் – மண்ணுலகமும்;
நான்முகன் நாடு என நயந்த – பிரமலோகம் என விரும்பிய;
பாகம் மூன்றையும்- மூன்று பகுதிகளையும்; வென்று கொண்டு-
வெற்றி பெற்றுக் கைக்கொண்டு; அமரர் முன்பு அணிந்த –
தேவர் முன்னர் புனைந்திருந்த; வாகைமாலையும் – வெற்றி
மாலையும்; மருங்குற- அம்மாலையின் பக்கத்தே; வரிவண்டொடு
அளவி- கோடுகளை உடைய வண்டுகளொடு சேர்த்து; தோகை
அன்னவர் விழிதொடர் – மயில் போன்ற இள மகளிர் கண்கள்
பின்தொடரப் பெற்ற; தும்பையும் சூட்டி – தும்பை மலர்
மாலையும் அணிந்து.

————

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17-

அகழும் வேலையை- கடலை; காலத்தை – காலப் பொழுதை;
அளக்கர் நுண்மணலை – கடலின் நுண்ணிய மணலை; நிகழும்
மீன்களை – கடலில் வாழும் மீன்களை; விஞ்சையை – கல்வியை
ஒப்பாக; நினைப்பது என்- நினைப்பது எதற்காக; நின்ற இகழ்வு
இல் பூதங்கள் இறப்பினும் – நிலைத்து நின்ற இகழ்ச்சி இல்லாத
பூதங்கள் ஒழிந்தாலும்; இறுதி செல்லாத புகழ் என – அழிவற்ற
புகழைப் போல; சரம் தொலைவு இலாத் தூணியின்பூட்டி –
அம்புகள் என்றும் அமைந்த அம்பு அறாத் துணியைத் தன் முதுகுப்
புறத்தே கட்டி.

————-

‘வருக, தேர்!’ என, வந்தது-வையமும் வானும் உரக தேயமும்
ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச் சொருகு பூ அன்ன
சுமையது; துரகம் இன்று எனினும், நிருதர்
கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18-

வையமும் வானும் உரகதேயமும் – மண்ணுளோரும்
விண்ணுளோரும் நாகலோகத்தோரும்; ஒருங்கு உடன் இவரினும்
– ஒருசேர ஏறினாலும்; உச்சிச் சொருகுபூ அன்னசுமையது –
உச்சிப் பூப்போன்ற எளிய சுமையை உடையது; துரகம் இன்று
எனினும் – குதிரைகள் இல்லாவிடிலும்; நிருதர் கோமகன்
நினைத்துழி ஓர் இமைப்பில்- இராவணன் நினைத்த போது இமை
நொடிக்கும் நேரத்தில்; செல்வது – செல்லும் ஆற்றலுடைய தேர்;
‘வருக தேர்’ என வந்தது – வருக தேர் என்று சொல்லியவுடன்
வந்தது.

————-

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன் பாய்
வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர் வாய்
மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்
நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19-

அமுதொடு வந்தவும்- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்தனவும்;
அருக்கன் பாய்வயப் பசுங் குதிரையின் வழியவும் – சூரியன்
குதிரைகளின் மரபில் தோன்றியவும்; படர்நீர் வாய் மடுக்கும்
மாவடவையின் வயிற்றின் – பரவிய நீர் எங்கும் பரவியுள்ள
வடவாமுகாக்னி வயிற்றிலே; வன்காற்றின் நாயகற்கு
வந்துதித்தவும் – கொடிய காற்றுக் கடவுளாம் வாயு தேவனுக்குத்
தோன்றியனவுமாகிய; ஆயிரம்பரி நலத்தின் பூண்டது –
ஆயிரம் குதிரைகள் அழகாக கட்டப்பட்டது.

————–

பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20-

பாரில் செல்வது – நிலத்தில் செல்வது போலவே;
விசும்பிடைப் படர்வது- வானிலே செல்வது; பரந்த நீரில்
செல்வது – பரப்பமைந்த நீரிலே செல்வது; நெருப்பினும்
செல்வது- தீயிலும் செல்வது; நிமிர்ந்து போரில் செல்வது
– தன்னிகரின்றி போரிலே செல்வது; பொன்முகட்டிடை –
பொன்னால் அமைந்த வானில்; விரிஞ்சன் ஊரில் செல்வது-
பிரமன் ஊரிலும் செல்வது; ஓர் இமைப்பின் எவ்வுலகத்தும்
செல்வது- ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது.

—————

எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21-

எண்திசைப் பெருங்களிற்றிடை – எட்டுத் திசையிலுள்ள
பெரிய யானைகளின் கழுத்தில் கட்டிய; மணியென இசைக்கும்-
மணிகள் போல ஒலிக்கின்ற; கண்டை ஆயிர கோடியின்
தொகையது – கண்டை எனும் வாச்சியம் ஆயிரம் கோடித்
தொகையை உடையது; கதிரோன் மண்டிலங்களை – சூரிய
மண்டிலங்களை; மேருவில் குவித்தென – மேருமலையில்
குவித்தாற் போன்று; வயங்கும் அண்டம் – விளங்கும்
அண்டத்தை; விற்கும் நன்காக இனம்- விலையாகக்` கொளும்
உயர்ந்த இரத்தினங்களின் கூட்டம்; அடங்க, குயிற்றியது-
முழுவதும் இழைக்கப் பெற்றது.

————-

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22-

முனைவர் வானவர் முதலினர் – முனிவரும், தேவரும்
முதலானவரும்; அண்டத்து முதல்வர் – உலகில் முதன்மை நிலை
பெற்றவரும்; எனைவர் ஈந்தவர் – எப்படிப் பட்டவரும்
கொடுத்திட்டனவும்; இகலினில் இட்டவும் – போரில்
தோற்றுக் கொடுத்திட்டனவும்; இயம்பா வினையின் – சொல்ல
முடியாத கொடிய போர்ச்செயலின்; வெய்யன படைக்கலம் –
கொடியனவாம் படைக்கருவிகள்; வேலை என்று இசைக்கும் –
வேலை எனக் கூறப்பெறும்; சுனையின் நுண்மணல் தொகையன-
நீர்ச் சுனையிலுள்ள மணலின் தொகையை உடையவாகி; தொக்க
சுமந்தது – திரண்டவற்றைச் சுமந்தது.

————

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23-

கண்ணன் நேமியும் – (அத்தேர்) திருமாலின் சக்கரமும்;
கண்ணுதல் கணிச்சியும் – சிவபெருமானின் மழுப்படையும்;
கமலத்து அண்ணல்- தாமரையில் வாழும் பிரமனின்; குண்டிகைக்
கலசமும் – குண்டிகையாம் பாத்திரமும்; அழியினும் அழியாத்
திண்மை சான்றது – அழிந்தாலும் தான் அழியாத வலிமை
நிறைந்தது;தேவரும்- வானவரும்; உணர்வரும் செய்கை உண்மை
எனப் பெரியது – அறிய முடியாத தன்மை உடைய உண்மையைப்
போலப் பெரியது; வென்றியின் உறையுள்- வெற்றிக்கு உறைவிடம்.

————-

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24-

அனைய தேரினை – அப்படிப்பட்ட தேரை; அருச்சனை
வரன் முறை ஆற்றி – போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து;
இனையர் என்பது ஓர் கணக்கு இலா – இவ்வளவு பேர் என்ற
ஒரு கணக்கு இல்லாத; மறையவர் எவர்க்கும் – வேதியவர்
எவர்க்கும்; வினையின் நல் நிதி முதலிய அளப்பரும்- அளிக்க
வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத;
வெறுக்கை – செல்வங்களை; நினையின் – நினைக்க முடியாதவாறு;
நீண்டதுஓர் பெருங்கொடை – மிக்க ஒப்பற்ற பெரிய
செல்வத்தை அளிப்பதாக; அருங்கடன் நேர்ந்தான் – அரிய
கடமையைச் செய்து நிறைவேற்றினான்.

————–

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25-

தொழுது ஏறினான்- (அந்தத் தேரை இராவணன்) வணங்கி
ஏறினான்; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும்
தியங்கினார் – இந்திரன் முதலான தேவர்களும் அறிவு
சோர்ந்து; மயங்கினார் திகைத்தார் – மயங்கினராய்
திகைப்படைந்தனர்; வேறு நாம் செயும் வினை இலை –
வேறாகச் செய்கின்ற செயல் இல்லாமையால்; மெய்யின்
ஐம்புலனும் – உடலிலுள்ள ஐந்து புலன்களும்; ஆறினார்களும்
– அடங்கப் பெற்ற முனிவர்களும்; உலகு எலாம் அனுங்க
அஞ்சினர் – உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர்.

————–

இராவணனின் சபதம்

‘மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்’ என்றான் 26-

மன்றல் அம்குழல் சனகி – நறுமணம் மிக்க அழகிய
கூந்தலையுடைய சீதை; தன் மலர்க்கையால் வயிறு கொன்று –
தனது மலர் போன்ற கைகளால் வயிற்றை அலைத்து; அலந்தலைக்
கொண்டு – அலைச்சலைக் கொண்டு;நெடுந்துயரிடைக் குளித்தல்
– ஆழ்ந்த துன்பத்தில் மூழ்குதல்; அன்று இது என்றிடின் –
அல்லது இது நடக்காது என்று கூறினால்;மயன்மகள் அத்தொழில்
உறுதல் – மண்டோதரி அச்செயல்களை அடைதல் ஆம்;
தலைப்படின் – நான் போர் செய்யப் புகுந்தால்; இன்று
இரண்டின் ஒன்று – இன்றைக்கு இந்த இரண்டு செயல்களில்
ஒன்றை; ஆக்குவென் என்றான் – நடைபெறச் செய்வேன் என
இராவணன் கூறினான்.

————–

இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்

பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27-

பலகளம் தலை மௌலியோடு இலங்கலின்- பலகழுத்துக்களின்
மீது தலைகள் அரசு முடிகளோடு விளங்கலின்; பல்தோள் அலகு
அளந்து அறியா- பல தோள்கள் அளவால் அளந்தறிய முடியாமல்;
நெடும் படைகளோடு அலங்க – நெடிய படைக்கலன்களோடு
ஒளிர்ந்து நிற்க; விலகு அளம் தருகடல் – விலகியுள்ள
உப்பளத்தை அளிக்கும் கடலால் சூழப்பட்ட; தரை விசும்பொடு
வியப்ப- உலகத்தோர் வானோர் ஆச்சரியப்பட; உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் –
மூன்றுலகைத் தன் அடிகளால் அளந்த திருமால் வளர்ந்தது போல; என
உயர்ந்தான் – என்று கூறும்படி வளர்ந்தான்.

————-

விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28-

விசும்புவிண்டு இருகூறுற – வானம் பிளந்து இருபங்காக;
கல்குலம் வெடிப்ப- மலைகள் வெடித்திட; பசும்புண் விண்டென
– பசிய புண்கள் மேலும் பிளந்தது போல; பகலவன் பசும்பொன்
தசும்பு நின்று இடைந்து இரிந்திட – கதிரவன், பசிய பொற்குடம்
போல இருந்து தன் இடத்திலிருந்து திரிந்திட; மதி தகை அமிழ்தின்
அசும்பு – சந்திரனின் பண்பாகிய அமுதத் துளிகளை; சிந்திநொந்து
உலைவுற – சிந்தி வருந்தித் துன்பமடைய; தோள்புடைத்து
ஆர்த்தான் – தோளைத் தட்டி இராவணன் ஆரவாரம் செய்தான்.

————-

‘நணித்து வெஞ் சமம்’ என்பது ஓர் உவகையின் நலத்தால்,
திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;
மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29-

வெஞ்சமம் நணித்து- கொடிய போர் அண்மை நிலையில் வந்து
விட்டது; என்பது ஓர் உவகையின் நலத்தால் – எனும் ஒப்பற்ற
மகிழ்ச்சியின் நன்மையால்; திணித்தடங்கிரி வெடித்து உக – வலிய
பெரிய மலை வெடித்துப் பொடியாகி விழ; சிலையை நாண்
தெறித்தான் – வில்நாணைத் தெறித்தான்; மணிக் கொடுங்குழை
வானவர் – அழகிய வளைந்த குழைகளை அணிந்த தேவர்கள்;
தானவர் – தானவ குலத்தினரது; மகளிர் – பெண்டிர்; துணுக்கம்
எய்தினர் – அச்சமுற்றனர்; மங்கல நாண்களைத் தொட்டார்-
(அதனால்) எங்கே தங்கள் தாலி மங்கலக் கயிறு அறுபட்டுப்
போகுமோ எனத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர்.

—————-

போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
‘பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது’ என்பது ஓர் மெய்யான். 30-

சுரிக்கும் மண்டலம் – வானில் சுழலும் சூரிய, சந்திர
மண்டலம்; தூங்கு நீர்ச் சுரிப்பு உற வீங்க – மிகுந்த
நீருள்ள கடலிலே சுழற்சி உண்டாகிப் பொங்கவும்; இரைக்கும்
பல்லுயிர் யாவையும் – ஆரவாரிக்கும் எல்லா உயிர்களும்;
நடுக்கமுற்று இரிய – நடுங்கி நிலை கெடவும்; அனந்தன் –
ஆயிரந் தலைகள் கொண்ட அனந்தன் எனும் பாம்பு; புரி
பரித்திலன் – உலகைத் தாங்க முடியவில்லை; படர் சுடர்
மணித்தலை பலவும் – விரிகின்ற ஒளியுடைய மணிகள் பூண்ட
பல தலைகளும்; மீது விரித்து எழுந்தனன் – மேலே படம்
விரித்து எழுந்தனன்; என்பது ஓர் மெய்யான் – என்று
தோன்றும் வகையில் ஒப்பற்ற உடலை உடையவன் ஆனான்
(இராவணன்).

————–

தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
‘ஊன்றினான் செரு’ என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31-

சுரர்களோடு அசுரரே தொடங்கி- தேவர்களுடனே அசுரர்
தொடங்கி; மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய –
மூவுலகிலும் உள்ளவர் யாவரும் அழிய; செரு ஊன்றினான்-
போரில் மனம் வைத்தான்; என்று உயிர் உமிழ்தர உதிரம்
கான்று – என உயிர்கள் அழியவும் இரத்தம் கக்கவும்;
நாட்டங்கள்- கண்கள்; வடஅனற்கு இருமடி கனல- வடவைத்
தீக்கு இருமடங்கு கொடுமையாய்த் தீ வீச.

———–

உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32-

உலகில் தோன்றிய மறுக்கமும் – இவ்வுலகில் தோன்றிய
கலக்கமும்; இமைப்பிலர் உலைவும்- தேவர்களின் வருத்தமும்;
மலையும் வானமும் வையமும்- மலைகளும் விண்ணும் பூமியும்;
மறுகுறு மறுக்கும் – சுழலும் சுழற்சியும்; அலைகொள்
வேலைகள் அஞ்சின- அலைகள் மிகுந்த கடல்கள் பயந்தனவாய்;
சலிக்கின்ற அயர்வும் – சலிப்புறுகின்ற தளர்ச்சியும்; தலைவனே
முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்- சுக்கிரீவன் முதலிய
தடுக்கப்படாத வலிமையை உடையவர் எல்லோரும் பார்த்தனர்.

————-

‘பீறிற்றாம் அண்டம்!’ என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
‘மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?’ என எழுந்தார். 33-

அண்டம் பீறிற்றாம் – இவ்வுலகம் கிழிந்தது; என்பது ஓர்
ஆகுலம் பிறக்க – என்று எண்ணுமாறு ஒரு தடுமாற்றம் எழ;
வேறிட்டு ஓர் பெருங்கம்பலை – வேறுபட்ட ஒரு பேரொலி;
பம்பி மேல் வீங்க – நெருங்கி மேலும் மிக; மாறிப் பல்பொருள்
வகுக்குறும் காலத்து- அழிந்திடப் பல பொருள்களைப் படைக்கப்
பெறும் பொழுதில்; மறுக்கம் ஏறிற்று – கலக்கம் மிகுதியாயிற்று;
என்னை கோலோ- என்ன காரணமோ; என எழுந்தார் – என்று
இராமன் படையில் எழலானார்.

———–

இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்

கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும்,
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34-

கடல்கள் யாவையும் – கடல்கள் எல்லாம்; கல்மலைக்
குலங்களும் – கல்வடிவான மலைக் கூட்டங்களும்; காரும் –
மேகமும்; திடல்கொள் மேருவும் – வலிமை மிகுந்த
மேருமலையும்; விசும்பிடைச் செல்வன சிவண – வானத்தில்
செல்வனவற்றை ஒத்திருக்க; அடல் கொள் சேனையும்- வலிமை
கொண்ட அரக்கர் படையும்; அரக்கனும் – இராவணனும்; தேரும்
வந்து ஆர்க்கும் – தேரும் வந்து ஒலிக்கும்; கடல்கொள்
பேர் ஒலிக்கம்பலை என்பதும் கண்டார் – கடல் போல
ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார்.

————–

இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்

‘எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்’ என்றனன், வீடணன், விரைவான். 35-

கொற்றவ !- வெற்றிகொண்ட இராமனே!; இராவணன் எழுந்து
வந்தனன் – இராவணன் (தன் படையுடன்) புறப்பட்டு வந்தான்;
வீடணன் விரைவான் – விரைந்து வந்த வீடணன்; இராக்கதர்
தானைக் கொழுந்து முந்தி வந்து உற்றது – அரக்கர் படையின்
முன்னணிப்படை முன்னர் வந்தடைந்தது; நம்பலம் குலுங்குற்று
அழுந்துகின்றது – நம்படை நடுங்கி மூழ்குகின்றது; அமரரும்
அஞ்சி விழுந்து சிந்தினர் – தேவர்களும் பயப்பட்டுக் கீழே
விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் – எனக் கூறினான்

———–

மிகைப் பாடல்கள்

ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,
‘வாள் அமர் முடிப்பென் இன்றே’ என மணித் தவிசு நீத்தான். 2-1

உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை
கேள்வன் அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு
ஆழி முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1

அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1

ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-
ஐந் தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading