ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/30–மூலபல வதைப் படலம்–

சேனைத் தலைவர்களுக்கு இராவணன் இட்ட கட்டளை

‘வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு வழி சென்று,
ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; நீயிர் போய், ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறீர்’ என்று அறைந்தான் –
தானவப் பெருங் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் 1-

தானவப் பெருங் கரிகளை – அசுரராகிய பெரிய யானைகளை;
வாள் கொண்டு தடிந்தான் – வாளினைக் கொண்டு
துணித்தவனாகிய இராவணன் (சேனைத் தலைவர்களை நோக்கி);
யான் ஒருவழி சென்று – நான் ஒரு புறமாகப் போய்; வானரப்
பெருஞ்சேனையை – வானரப் பெரும்படைகளை; ஊன் அறக்
குறைத்து – உடல்கள் சிதையும்படி வெட்டி; உயிர் உண்பென்-
உயிரைக் குடிப்பேன்; நீயிர் ஒருங்கே போய் – நீங்கள்
யாவரும் ஒன்றாகச் சென்று; மற்றவர் ஆன இருவரை – வானரர்
தவிர இராம இலக்குவராகிய இருவரை; கோறிர்-
கொல்லுவீர்களாக; என்று அறைந்தான்- என்று கட்டளை இட்டான்.

——–

என உரைத்தலும், எழுந்து, தம் இரத மேல் ஏறி,
கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா,
‘வினையம் மற்று இலை; மூல மாத் தானையை விரைவோடு
இனையர் முன் செல, ஏவுக!’ என்று இராவணன் இசைத்தான் 2-

என உரைத்தலும் – மேற்கண்டவாறு இராவணன் கட்டளை
இட்டவுடனே; எழுந்து- புறப்பட்டு; தம் இரதம் மேல் ஏறி –
தங்களுக்குரிய தேர்களில் ஏறி; கனை திரைக் கடல் சேனையைக்
கலந்தது காணா- ஒலிக்கும் கடல்மேல் பரந்த தம் சேனைகளோடு
அரக்கத் தலைவர்கள் சென்று சேர்ந்ததைக் கண்டு; வினையம்
மற்று இலை – இனிச் செய்யத்தக்க பணி வேறு இல்லை; மாமூலத்
தானையை – பெரிதாகிய மூல பல சேனையை; இனையர் முன்
விரைவோடு செல ஏவுக என்று – இப்போது போருக்குப்
போகின்ற இவர்களுக்கு முன்னே வேகமிகச் செல்லும்படியாக
ஏவுவீர்களாக என்று; இராவணன் இசைத்தான் – இராவணன்
(மேலும்) கட்டளை இட்டான்.

————–

இராவணனும் தேர்மீது ஏறி, இராமன் சேனையைத் தாக்குதல்

ஏவி அப் பெருந் தானையை, தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லிஅம் தேர் மேல்,
காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒரு புறம் போனான் 3-

அப்பெருந்தானையை ஏவி – அந்தப் பெரிய மூலபலச் சேனையை
இராமனை எதிர்த்தழித்திடுமாறு ஏவியபின்; தேவர்
மெய்ப்புகழ் தேய்த்தவன் – தேவர்களின் மெய்யான புகழை
அழித்தவனாகிய இராவணன்; வேட்டு- போர் செய்தலை
விரும்பி; சில்லி அம் தேர்மேல்- சக்கரங்கள் கொண்ட
அழகிய தேர் மீது; தானும் எழுந்தான் – தானும் ஏறியவனாய்;
காவல் மூவகை உலகமும் – தன் ஆட்சியில் உள்ள மூன்று
உலகத்தவரும்; முனிவரும்- முனிவர்களும்; கலங்க – மனம்
கலங்கும்படியாக; பூவை வண்ணத்தன் சேனைமேல்- பூவைப்
பூவின் நிறம் கொண்டவனாகிய இராமனுக்கு உதவியாக வந்த
சேனையை எதிர்த்து; ஒரு புறம் போனான் – (மூலபலப்படை
ஒருபுறம் போக) தான் வேறு ஒரு பக்கம் போனான்;

————-

மூலபலச் சேனையின் இயல்பு

‘எழுக, சேனை!’ என்று, யானை மேல் மணி முரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் அத் தானை 4-

வழு இல் வள்ளுவர்- தம் கடமையில் குற்றம் இல்லாத
(முரசறையும்) வள்ளுவன்மார்; யானை மேல் மணி முரசு ஏற்றிக்
– யானை மீது இருந்த அழகிய முரசுகளை அறைந்து; எழுக சேனை
என்று – சேனைகள் எழுவதாக என்று; குவலயம் முழுதும் தழுவி –
உலகம் முழுவதையும் அளாவி; விண்ணையும் திசையையும் தடவும்
மாத்தானை- ஆகாயத்தையும் திசைகளையும் வருடுகின்ற பெரிய
(மூலபலச்) சேனையானது; வல்லை- விரைவாக; ஈண்டியது என்பர்
– கூடியது என்பர்.

—————–

அடங்கும் வேலைகள், அண்டத்தின் அகத்து; அகல் மலையும்
அடங்கும், மன் உயிர் அனைத்தும்; அவ் வரைப்பிடை அவைபோல்,
அடங்குமே, மற்று அப் பெரும் படை அரக்கர்தம் யாக்கை,
அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்? 5-

அண்டத்தின் அகத்து வேலைகள் அடங்கும் – அண்டத்தின்
எல்லைக்குள்ளே கடல்கள் அடங்கி நிற்கும்; அகல் மலையும் மன்
உயிர் அனைத்தும் அடங்கும் – பெரியனவாய் விரிந்த மலைகளும்
நிலைபேறுடைய எல்லா உயிர்களும் (அவ்வாறே) அண்டத்தின்
எல்லையுள் அடங்கி நிற்கும்; அவ் வரைப்பின் அவை போல்
– அந்த (அண்டத்து) எல்லையுள் அவை அடங்குதல் போல;
அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால்-
யாவும் அடங்குமாறு ஓங்கிய திருமாலின் வாமன உருவினுள் யாவும்
அடங்கிவிடும் தன்மை கொண்டதுபோல் அல்லாமல்; அப்பெரும்படை
அரக்கர் தம் யாக்கை அடங்குமே- அந்தப் பெரிய படை கொண்ட
அரக்கர்களின் பேருருவம் அடங்கிவிடுமோ? (அடங்காது என்றபடி).

———–

மூலபலப் படை வீரரின் தன்மை

அறத்தைத் தின்று, அருங் கருணையைப் பருகி, வேறு அமைந்த
மறத்தைப் பூண்டு, வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்,
நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர், நெருப்புக்கு நெருப்பாய்,
புறத்தும் பொங்கிய பங்கியர், காலனும் புகழ்வார்; 6-

அறத்தைத் தின்று – (அந்த மூலபலத்தைச் சேர்ந்த அரக்க
வீரர்கள்) அறத்தையே உணவாகத் தின்று; அருங் கருணையைப்
பருகி – (அந்த உணவுக்கு ஏற்ப) அரிய கருணையையே நீராகக்
குடித்து; வேறு அமைந்த- (அறத்துக்கு) மாறாக அமைந்ததாகிய;
மறத்தைப் பூண்டு – மறநெறியையே மேற்கொண்டு; வெம்
பாவத்தை மணம் புணர் மணாளர்- கொடிய பாவத்தையே மணம்
செய்து சேரும் மாப்பிள்ளைகளாய்; நிறத்துக் கார் அன்ன
நெஞ்சினர்- நிறத்தினால் மேகத்தை ஒத்த கரிய நெஞ்சகத்தை
உடையவர்களாய்; நெருப்புக்கு நெருப்பார் – சேர்ந்தவர்களை
எரிக்கும் இயல்புடைய நெருப்புக்கு நெருப்புப் போன்ற
சினமுடையவர்களாய்; புறத்தும் பொங்கிய பங்கியர் –
(அகத்தில் உள்ள சின நெருப்புக்கு அடையாளமாய்) வெளியே
விரிந்து தோன்றும் செம்முடியுடையவராய்; காலனும் புகழ்வார்
– (கொல்லுதலில்) யமனாலும் புகழப்படுவோராய் விளங்கினர்.

———–

நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி,
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி,
தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி,
மூண்ட வான் மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர்; 7-

நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி-
தங்கள் நீண்ட கால்களால் கடல் நீரை அப்பாற் செல்லும்படி
போக்கி; வேண்டும் மீனொடு மகரங்கள் – வேண்டிய அளவு
மீன்களோடு மகரப்பெரு மீன்களையும்; வாயிட்டு விழுங்கி –
வாயில் போட்டு விழுங்கி; தூண்டுவான் உரும் ஏற்றினை –
(மேகங்களால்) உண்டாக்கப்படுகின்ற பேரிடிகளை; செவிதொறும்
தூக்கி – காதுகளிலெல்லாம் தொங்க விட்டுக்கொண்டு;
மூண்டவான் மழை – திரண்டெழுந்து வருகின்ற பெரிய
மேகங்களை; உரித்து உடுத்து – பிய்த்து ஆடையாக
உடுத்துக்கொண்டு; உலா வரும் மூர்க்கர்- எங்கணும் உலவி
வருவர் அந்த முருடர்கள்.

————-

மால் வரைக் குலம் பரல் என, மழைக் குலம் சிலம்பா,
கால் வரைப் பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைங் கழலார்;
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர்;
நால் வரைக் கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார்; 8-

மால்வரைக் குலம் பரல் என- பெரிய மலைக் கூட்டங்களே
உட்பரலாக அமைய; மழைக்குலம் சிலம்பா- மேகக் கூட்டங்களே
காலில் அணியும் சிலம்புகளாக; கால் வரை- கால்களாகிய
பெருமலைகளில்; பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங்கழலார்-
பெரிய பாம்பு கொண்டு கட்டிய பசும் பொன் கழல் அணிந்தவர்கள்
(அவ் அரக்கர்கள்); மேல்வரைப் படர் கலுழன் – விண்ணக எல்லை
வரை பறந்து செல்லும் கருடனால் எழுப்பப்படுகின்ற; வன் காற்று
எனும் விசையோர் – வலிய காற்றுப் போன்ற வேகத்தை
உடையவர்கள்;நால் வரைக் கொணர்ந்து – தொங்கி அசைகின்ற
(துதிக்கை கொண்ட) மலையனைய யானைகளைக் கொண்டுவந்து;
உடன் பிணித்தால் அன்ன நடையார் – ஒன்றாகக் கட்டியது
போன்ற நடையை உடையவர்கள்.

—————

உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின், உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்;
தண்ணின் நீர் முறை தப்பிடின், தடக் கையால் தடவி,
விண்ணின் மேகத்தை வாரி, வாய்ப் பிழிந்திடும் விடாயர்; 9-

உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின்- உண்ணுதற்கு
உரிய தசைகள் உரிய நேரத்தில் கிடைக்காமல் போனால்; உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார்- மண்
மீது நிற்கின்ற பெரிய யானைகளை உடனே வாய்க்குள் போட்டுக்
கொள்கின்ற பசியை உடையவர்கள் (அந்த அரக்கர்கள்); தண் இன்
நீர் முறை தப்பிடின் – குளிர்ந்த இனிய நீர் குடிப்பதற்கு உரிய
நேரத்தில் கிடைக்காமல் தடைப்பட்டால்; தடக் கையால் தடவி
– பெரிய கைகளால் ஆகாயத்தைத் தடவி; விண்ணின் மேகத்தை
வாரி – அவ் ஆகாயத்திலே படர்கின்ற மேகத் திரள்களை அள்ளி;
வாய்ப் பிழிந்திடும் விடாயர் – தங்கள் வாயிலே பிழிந்திடுகின்ற
நீர் வேட்கை உடையவர்கள் அவர்கள்.

———

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து, வேல் நிலை காண்பவர்; இந்துவால் யாக்கை
சொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றி
அறைந்து, கற்ற மாத் தண்டினர்; அசனியின் ஆர்ப்பர்; 10-

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை – திண்ணெனச் செறிந்த
மந்தரம் முதலிய மலைகளை; உருவ எறிந்து- ஊடுருவும்படியாக
தங்கள் வேலால் தாக்கி; வேல் நிலை காண்பவர் – தாங்கள்
ஏந்திய வேற்படையின் கூர்மையைப் பரிசோதித்து அறிபவர்கள்
அந்த அரக்கர்கள்; இந்துவால் யாக்கை சொறிந்து- சந்திரனைப்
பற்றி தங்கள் உடம்பைச் சொறிந்து; தீர்வு உறு தினவினர் – தங்கள்
உடல் தினவைத் தீர்த்துக் கொள்பவர்கள்; மலைகளைச் சுற்றி
அறைந்து – கையில் அகப்படும் மலைகளைச் சுழற்றி மோதி; கற்ற
மாத் தண்டினர் – பயிற்சி செய்யும் கதாயுதங்களைப்
பயன்படுத்தியவர்கள்; அசனியின் ஆர்ப்பர் – இடிபோல
முழங்குவார்கள்;

—————

சூலம் வாங்கிடின், சுடர் மழு எறிந்திடின், சுடர் வாள்
கோல வெஞ் சிலை பிடித்திடின், கொற்ற வேல் கொள்ளின்,
சால வான் தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன்,
மால், சிவன், குமரன், என்று, இவரையும் கடப்பார்; 11-

சூலம் வாங்கிடின்- சூலாயுதத்தைக் கையில் எடுத்தாலும்;
சுடர் மழு எறிந்திடின்- ஒளி வீசும் மழுவாயுதம் கொண்டு
தாக்கினாலும்; சுடர் வாள் கோல வெஞ்சிலை பிடித்திடின் –
ஒளிர்கின்ற வாளினையும் அழகிய கொடிய வில்லையும் கையில்
பிடித்தாலும்; கொற்றவேல் கொள்ளின்- வெற்றி வேலைக்
கையிலே கொண்டாலும்; சால வன் தண்டு தரித்திடின் – மிக
வலிய கதாயுதத்தைத் தாங்கினாலும்; சக்கரம் தாங்கின்-
சக்கராயுதத்தைத் தாங்கினாலும்; காலன், மால், சிவன்,
குமரன் என்று இவரையும்- யமன், திருமால், சிவபிரான்,
முருகன் என்ற இவர்களையும்; கடப்பார்- போரில் வென்று மேம்படுவர் அவ்
அரக்கர்கள்.

————–

ஒருவரே வல்லர், ஓர் உலகத்தினை வெல்ல;
இருவர் வேண்டுவர், ஏழ் உலகத்தையும் இறுக்க;
திரிவரேல், உடன் திரிதரும், நெடு நிலம்; செவ்வே
வருவரேல், உடன், கடல்களும் தொடர்ந்து, பின் வருமால் 12-

ஓர் உலகத்தினை வெல்ல ஒருவரே வல்லர்- ஓர் உலகத்தை
வெல்ல வேண்டுமாயின் அவ் அரக்கர்களில் ஒருவரே அதற்கு
வேண்டிய வல்லமை உடையவர்; ஏழ் உலகத்தையும் இறுக்க இருவர்
வேண்டுவர் – ஏழு உலகங்களையும் அழிப்பதற்கு அவர்களில் இருவர்
தேவைப்படுவார்கள்; திரிவரேல் நெடுநிலம் உடன் திரிதரும்-
அவர்கள் ஓர் இடத்தில் நில்லாமல் திரிந்து கொண்டிருப்பாராயின் பெரிய
நிலவுலகம் அவர்களுடனே சேர்ந்து திரியும்; செவ்வே வருவரேல்-
நேராக அவர்கள் வந்தால்; கடல்களும் உடன் தொடர்ந்து பின்வரும்
– கடல்களெல்லாம் ஒன்றாகத் தொடர்ந்து அவர்கள் பின்னே வரும்.

—————

நால் வகைச் சேனைகளின் அளவும் அணியும்

மேகம் எத்தனை, அத்தனை மால் கரி; விரிந்த
நாகம் எத்தனை, அத்தனை நளிர் மணித் தேர்கள்;
போகம் எத்தனை, அத்தனை புரவியின் ஈட்டம்;
ஆகம் எத்தனை, அத்தனை அவன் படை அவதி. 13-

மேகம் எத்தனை அத்தனை மால் கரி- மேகங்கள் எத்தனை
உண்டோ அத்தனை பெரிய யானைகள்; விரிந்த நாகம் எத்தனை
அத்தனை தேர் – எங்கணும் பரவியுள்ள யானைகள் எத்தனையோ
அத்தனைக்கு ஈடான தேர்கள்; நனி நாளாப் போகம் எத்தனை
அத்தனை புரவியின் ஈட்டம் – நெடுநாளாகி விளைந்த
(நெல்மணிகள்) விளைச்சலில் எத்தனையோ அத்தனை குதிரைகளின்
கூட்டம்; ஆகம் உற்றன எத்தனை அத்தனை அனிகம் – உடல்
பெற்ற உயிர்கள் எத்தனையோ அத்தனை காலாட்படை வீரர்கள்
(என்று அளவிறந்தன அரக்கரின் நால்வகைப் படைகள்)

———–

இன்ன தன்மைய யானை, தேர், இவுளி, என்று இவற்றின்
பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும்,
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த
சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் தெரிந்தால் 14-

இன்ன தன்மைய – இத்தன்மைகளைக் கொண்ட; யானை தேர்
இவுளி என்று இவற்றின் – யானை, தேர், குதிரை ஆகிய இவற்றின்;
மெய் முற்றும் தெரிந்தால் – உடல் முழுவதையும் ஆராய்ந்து
பார்த்தால்; பன்னு பல்லணம் பருமம் – சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற (குதிரை மீது உள்ள) தவிசும், (யானை மேல் இடும்
ஆசனமாகிய) இருக்கையும்; மற்று உறுப்பொடு பலவும் – மற்றும் உள்ள
பலவேறு உறுப்புகளும்; பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு
அல்லது – பொன்னும் நல்ல பெரிய மணிகளும் கொண்டல்லது;
புனைந்த சின்னம் உள்ளன இல்லன – வேறு செய்த அடையாளக்
குறிகள் கொண்டவை இல்லையாம்.

————-

இப் பெரும் படை எழுந்து இரைந்து ஏக, மேல் எழுந்த
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீத் தூர்ப்ப,
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரி மதம் தழுவ,
உப்பு நீங்கியது, ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி. 15-

இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக – அரக்கரின்
இந்தப் பெரிய படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு ஆரவாரம்
செய்து போகும்போது; ஓங்கு நீர் வீங்கு அலை உவரி-
பெருகிவரும் நீர் கொண்டதும் பொங்கும் அலைகள் கொண்டதுமான கடல்; மேல் எழுந்த துப்பு உதிர்ந்தன
தூளியின் படலம் மீத் தூர்ப்ப- மேல் எழுந்து பரவியதும்
பவளம் தூளாகி உதிர்ந்தது போன்றதுமான தூசிப் படலம்
(கடற்பரப்பின்) மேற்பரப்பின் மீது வீழ்ந்து தூர்த்தமையால்;
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது- இயல்பான கரிய
நிறத்தை இழந்தது; கரி மதம் தழுவ- சேனையில் உள்ள
யானைகளின் மத நீர் கலந்ததால்; உப்பு நீங்கியது-
உவர்ப்புச் சுவை நீங்கியது.

———–

மலையும், வேலையும், மற்று உள பொருள்களும், வானோர்
நிலையும், அப் புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப
உலைவுறாவகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர் ஒருமைத்
தலைவன் வாய் ஒத்த – இலங்கையின் வாயில்கள் தருவ 16-

தருவ- (மூலப் படையை) வெளியே விடுக்கின்ற; இலங்கையின்
வாயில்கள் – இலங்கையின் வாசல்கள்; மலையும் வேலையும்
மற்று உள பொருள்களும் – மலைகளும் கடல்களும் மற்றும் உள்ள
பொருள்களும்; வானோர் நிலையும்- தேவர் உலகமும்; அப்புறத்து
உலகங்கள் யாவையும்- அப்பால் உள்ள எல்லா உலகங்களும்;
நிரம்ப – திருவயிறு நிறையும்படியாக; உலைவுறாவகை உண்டு-
சிதைவுறாமல் உண்டு; பண்டு உமிழ்ந்து- முன்பு உமிழ்ந்தருளிய;
பேர் ஒருமைத் தலைவன் வாய் ஒத்த- பெரியவனும் தனிப்
பெருந் தலைவனுமாகிய திருமாலினது திருவாயினைப் போன்று
காணப்பட்டன.

————

கடம் பொறா மதக் களிறு, தேர், பரி, இடை கடவ,
படம் பொறாமையின் நனந் தலை அனந்தனும் பதைத்தான்;
விடம் பொறாது இரி அமரர்போல குரங்குஇனம் மிதிக்கும்
இடம் பொறாமை உற்று, இரிந்து போய், வட வரை இறுத்த 17-

கடம் பொறா மதக்களிறு- கன்னத்திலிருந்து தடையின்றிப்
பெருகும் மதநீர் கொண்ட ஆண்யானைகள்; தேர், பரி, மிடை,
காலாள்- மற்றும் தேர்கள், குதிரைகள், நெருங்கியுள்ள
காலாட்படை ஆகியவற்றைச் சுமைமிகுதியை; படம் பொறாமையின்
– ஆயிரந் தலையிலுள்ள படங்களால் தாங்கமுடியாமையால்;
அனந்தனும் பதைத்தான் – ஆதிசேடன் கூடத் துடித்தான்; விடம்
பொறாது – பாற்கடல் கடைந்த போது எழுந்த ஆலகால
நஞ்சினைக் காணவும் பொறாமல்; இரி அமரர்போல்- ஓடிய
தேவர்களைப் போல; குரங்கு இனம் மிதிக்கும் இடம்
பொறாமையின்- குரங்குகள் தாம் நின்ற இடத்தில் நிலைக்க
முடியாமல்; இரிந்துபோய்- ஓடிச்சென்று; வடதிசை இறுத்த-
திசையின் வடகோடியில் தங்கின.

—————

ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
எழு வேலையும், இடு வலை; அரக்கரே இன மா;
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்;
தோழம் மா மதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தார். 18-

ஆழி மால் வரை வேலி சுற்றிட- சக்கரவாளமாகிய பெரிய
மலையே வேலியாகச் சுற்றி நிற்கும்படி; வகுத்து அமைத்த –
நடுவில் வகுத்து அமைக்கப்பட்ட; ஏழு வேலையும் – ஏழு கடல்கள்
கொண்ட இடம்; இடு வலை- இடப்பட்ட வலை வீசுதலுக்கு உரிய
இடம்; அரக்கரே மா இனம்- அரக்கர்களே விலங்குகளின்
கூட்டம்; காலனும் விதியும் வெவ்வினையுமே மள்ளர் – யமனும்
பிரமனும் கொடிய ஊழ்வினையுமே (வேட்டையாடும்) வீரர்கள்;
மாமதில் இலங்கை தோழம்- பெரிய மதில்களைக் கொண்ட
இலங்கையே கொட்டில்; மால் வேட்டம் மேல் தொடர்ந்தார்
– அந்த இலங்கையில் மயக்கம் ஊட்டும் (போர்)
வேட்டையைத் தொடர்ந்தார்கள்.

———-

ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ?
கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் கலிப்போ?
போர்த்த பல் இயத்து அரவமோ? – நெருக்கினால் புழுங்கி
வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொலிந்தது, மேன்மேல் 19-

நெருக்கினால் புழுங்கி – நெருக்கத்தில் வெந்து; வேர்த்த
அண்டத்தை வெடித்திட- வேர்த்திடுகின்ற அண்டகோளம்
வெடித்திடுமாறு; மேன்மேல் பொடிந்தது- மேலும் மேலும்
விளங்கித் தோன்றியது; ஆர்த்த ஓசையோ – வீரர்கள்
ஆரவாரித்து எழுப்பிய ஓசையோ? அலங்கு தேர் ஆழியின்
அதிர்ப்போ – அசைந்து செல்லும் தேர்ச் சக்கரங்களின்
ஓசையா? கார்த்திண் மால் கரி முழக்கமோ – கருநிறமும்
திண்மையும் கொண்ட பெரிய ஆண்யானைகள் பிளிறிய ஓசையா?
வாசியின் கலிப்போ – குதிரைகளின் ஓசையா? போர்த்த பல்
இயத்து அரவமோ?- இத்தனை ஓசைகளையும் உள்ளடக்கிய
பல்வகை இசைக் கருவிகளின் ஓசையா?

———-

வழங்கு பல் படை மீனது; மத கரி மகரம்
முழங்குகின்றது; முரி திரைப் பரியது; முரசம்
தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப்
புழுங்கு வெஞ் சினச் சுறவது – நிறைபடைப் புணரி. 20-

நிறை படைப் புணரி – இடமெலாம் பரவி நிறைந்த
சேனையாகிய கடல்; வழங்கு ப ல் படை மீனது- பகைவரை
நோக்கிச் செலுத்தப்படுதற்கு உரிய படைக்கலங்களாகிய மீன்களைக்
கொண்டது; முழங்குகின்றது மத கரி மகரம்- பிளிறுகின்ற
யானைகளாகிய திமிங்கலங்களை உடையது; முரி திரைப் பரியது-
கரையில் மோதிச் சிதைகின்ற அலைகளாகிய குதிரைகளைப்
பெற்றது; முரசம் தழங்கு பேரொலி கலிப்பது – போர் முரசுகள்
ஒலிப்பதால் எழுகின்ற சத்தத்தைக் கொண்டது; தறுகண் மா
நிருத – அஞ்சாமை கொண்ட பெரிய அரக்கராகிய; புழுங்கு
வெஞ்சினச் சுறவது- மன வேக்காடுடைய கொடிய சினங்கொண்ட
சுறாமீன்கள் உடையது.

———-

தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் தானை
பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரி படு மதத்தின்
அசும்பின் சேறு பட்டு, அளறு பட்டு, அமிழுமால், அடங்க;
விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. 21-

தசும்பின் பொங்கிய- குடம் போல ஓங்கிய; திரள் புயத்து
அரக்கர் தம் தானை- திரண்ட தோள்களையுடைய அரக்கரின்
சேனை; பசும்புல் தண் தளம் மிதித்தலின் – பச்சைப் புல்லால்
குளிர்ந்துள்ள தரையை மிதித்துப் போவதாலும்; கரிபடு மதத்தின்
– யானைகளிலிருந்து பொழியும் மதநீர்ப் பெருக்கத்தாலும்;
அசும்பின் சேறுபட்டு- வழுக்கு நிலத்துச் சேறுபோல;
அளறுபட்டு – நெகிழும் சேறு உண்டாவதால்; அடங்க அமிழும்
– எல்லாம் புதைபட்டுவிடும்; (ஆனால்) விசும்பின் சேறலின்-
(சேற்றில் அமிழ்வதற்குத் தப்பி) யாவரும் விண்வழியே சென்றதால்;
அவ் விலங்கல் மேல் இலங்கை- அந்தத் திரிகோண மலை
மேல் இருந்த இலங்கை; கிடந்தது- (அமிழாமல்) இருந்தது.

————-

தேவர்கள் சிவபெருமானிடத்து முறையிடுதல்

படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர் வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர், நெடுந் திசை முழுதும்;
வெடியைப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த
கொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார் 22-

வானவர்- தேவர்கள்; படியைப் பார்த்தனர்- நிலவுலகத்தைப்
பார்த்தார்கள்; பரவையைப் பார்த்தனர – கடலிடத்தைப்
பார்த்தார்கள்; படர் வான் முடியைப் பார்த்தனர் – எங்கெங்கும்
பரவியுள்ள ஆகாயத்தின் உச்சியைப் பார்த்தார்கள்; நெடும் திசை
முழுதும் பார்த்தனர்- நீண்ட திசைகள் முழுவதையும் பார்த்தார்கள்;
வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்- (அரக்கர் சேனை
இல்லா இடம்) ஒழிந்ததால் பார்ப்பதற்கு ஒரே ஒரு வெற்றிடத்தைக்கூட
அவர்கள் காணவில்லை; மிடைந்த கொடியைப் பார்த்தனர் –
நெருங்கிச் செறிந்த கொடிகளைப் பார்த்தார்கள்; வேர்த்தனர்
குலைந்தார்- அச்சத்தால் உடல் வேர்த்தவராய் மனம் குலைந்தார்கள்.

———–

‘உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா,
அலகு இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல்,
விலகு நீர்த் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
அலகு இல் பல் உருப் படைத்தனவோ?’ என அயிர்த்தார் 23-

உலகில் நாம் அலா உரு எலாம்- உலகத்தில் நம்மைத்
தவிர உள்ள எல்லா உருவங்களும்; இராக்கத உருவா- அரக்கர்
உருவாகி; அலகு இல்பல் படை பிடித்து – அளவில்லாத பல
வகைப் போர்க்கருவிகளை ஏந்தி; அமர்க்கு எழுந்தவோ- போர்
செய்வதற்குப் புறப்பட்டு வந்தனவோ? அன்றேல் – அவ்வாறு
இல்லையென்றால்; விலகு நீர்த்திரை- விலகிச் செல்லுகின்ற நீர்
அலைகளையுடைய; வேலை ஓர் ஏழும் போய் – ஏழு கடல்களும்
சென்று; விதியால் – முறைப்படி; அலகுஇல் பல் உருப்
படைத்தனவோ – அளவில்லாத பல வடிவங்களை
உண்டாக்கினவோ? என அயிர்த்தார் – என்று ஐயப்பட்டனர்.

———–

நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர், ‘நம்ப!
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர்; யார், இவர் பெருமை பண்டு அறிந்தார்?
முடிந்தது, எம் வலி’ என்றனர், ஓடுவான் முயல்வார். 24-

வானவர்- தேவர்கள்; நடுங்கி- (அச்சத்தால்) நடுங்கி,
ஓடுவான் முயல்வார் – ஓடத் தொடங்கியவர்கள்; நஞ்சு அடை
கண்டனை- நஞ்சு தங்கிய கழுத்துடைய சிவபிரானை (அடைந்து)
நம்ப – (எம்) தலைவனே; யாம் கரந்து ஒடுங்கி உறைவிடம்
அறிகிலம் – நாங்கள் (இந்த அரக்கரிடமிருந்து தப்பி) மறைந்து
ஒடுங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை அறிகிலேம்; உயிரைப்
பிடுங்கி உண்குவர் – நாங்கள் மறைந்து ஒடுங்கி
விடவில்லையென்றால் எம் உயிரைப் பறித்து உண்டுவிடுவார்கள்;
இவர் பெருமை- இவ் அரக்கர்களின் பெருமையை; பண்டு
அறிந்தார் யார்- முன்பு தெரிந்தவர்கள் யார்? (எவரும்
இல்லை); முடிந்தது எம் வலி என்றனர்- எங்கள்
வலிமையெல்லாம் அழிந்தது என்றனர்.

————-

‘ஒருவரைக் கொல்ல, ஆயிரம் இராமர் வந்து,
ஒருங்கே இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால், என் ஆம்?
நிருதரைக் கொல்வது, இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ?
பொருவது, இப் படை கண்டு, தம் உயிர் பொறுத்து அன்றோ?’ 25-

ஒருவரைக் கொல்ல- இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல
வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர் ஒருங்கே வந்து- ஆயிரம்
இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இரு பதிற்றிரண்டு ஆண்டு
– இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; நின்று அமர் செய்தால் என்
ஆம்- புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர்
செய்தாலும் என்ன விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட
முடியாது); நிருதரைக் கொல்வது- அரக்கர்களைக் கொல்வதென்பது;
இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – நிற்பதற்குப்
போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு
அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில்
நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை என்பதாம்.) பொருவது
– போர் செய்வதென்பது; இப்படை கண்டு- இந்தப் படையைக் கண்ட
பிறகும்; தம் உயிர் பொறுத்து அன்றோ?- தங்கள் உயிரைத்
தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ?

————-

தேவர்களின் அச்சத்தை சிவபெருமான் போக்குதல்

என்று இறைஞ்சலும், மணி மிடற்று இறைவனும், ‘இனி, நீர்
ஒன்றும் அஞ்சலிர்; வஞ்சனை அரக்கரை ஒருங்கே
கொன்று நீக்கும், அக் கொற்றவன்; இக் குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம்’ எனப் புகன்றான் 26-

என்று இரைஞ்சலும்- மேற்குறித்தவாறு முறையிட்டுத்
தேவர்கள் வணங்கிய அளவில்; மணி மிடற்று இறைவனும் –
நீல மணியை ஒத்த நிறம் கொண்ட கழுத்தினையுடைய சிவபிரான்;
இனி நீர் ஒன்றும் அஞ்சலிர்- இதுவரை அஞ்சியிருந்தது
போதும் இனிமேல் நீங்கள் சிறிதும் அஞ்சாதீர்கள்;
அக்கொற்றவன் – அந்த வெற்றி கொள்ளும் இராமன்;
வஞ்சனை அரக்கரை ஒருங்கே கொன்று நீக்கும் –
வஞ்சகராகிய அரக்கர் அனைவரையும் கொன்று நீக்குவான்;
இக்குலம் எல்லாம் பொன்றுவிப்பது- இந்த அரக்கர்
குலம் முழுவதையும் கொல்லுவதாகிய; ஓர் விதி – ஒப்பற்ற
ஊழ்வினை; தந்தது- இவர்களை இங்கே கொண்டு வந்து
சேர்த்திருக்கிறது; எனப் புகன்றான்- என்று கூறினான்.

————

மூலபலப் படையைக் கண்டு, வானரங்கள் அஞ்சி ஓடுதல்

புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட, பொருமி,
‘இற்றது, எம் வலி’ என விரைந்து இரிதரும் எலிபோல்,
மற்றை வானரப் பெருங் கடல் பயம் கொண்டு மறுகி,
கொற்ற வீரரைப் பார்த்திலது; இரிந்தது, குலைவால் 27-

புற்றின் நின்று வல் அரவு இனம் புறப்பட-
புற்றுகளிலிருந்து வலிய பாம்புக்கூட்டங்கள் புறப்படக் கண்டு;
பொருமி – பொருமிக்கொண்டு; எம் வலி இற்றது- எங்கள்
ஆற்றல்அழிந்தது;என- என்று சொல்லிக்கொண்டு; விரைந்து இரிதரும்
எலிபோல் – விரைவாக ஓடுகின்ற எலிக்கூட்டம் போல;
மற்ற வானரப் பெருங்கடல்- மற்று அங்கு உள்ள வானர
சேனையாகிய பெரிய கடல் (கடல் போன்ற பெரிய வானர
வீரர்கள்); பயம் கொண்டு மறுகி- அச்சம் கொண்டு
கலங்கி; கொற்ற வீரரைப் பார்த்திலது- வெற்றிக்கு
உரிய இராம இலக்குவராகிய வீரர்கள் தம் பக்கல்
இருக்கிறார்கள் என்பதைக் கருதிப்பார்க்கவில்லையாய்;
குலைவால் இரிந்தது – மன நடுக்கத்தோடு ஓடியது.

—–

அணையின்மேல் சென்ற, சில சில; ஆழியை நீந்தப்
புணைகள் தேடின, சில; சில நீந்தின போன;
துணைகளோடு புக்கு, அழுந்தின சில; சில தோன்றாப்
பணைகள் ஏறின; மலை முழைப் புக்கன, பலவால். 28-

சில சில அணையின் மேல் சென்ற – மூல பலச் சேனையைக்
கண்டு ஓடிய வானரங்களில் சிலசில தாம் கட்டிய அணைமேல் தப்பி
ஓடின; சில ஆழியை நீந்தப் புணைகள் தேடின- வேறு சில
வானரங்கள் கடலை நீந்திக் கடப்பதற்குத் தெப்பம் தேடின; சில
நீந்தின போன- மேலும் சில வானரங்கள் கடலில் நீந்திச் சென்றன;
சில துணைகளோடு புக்கு அழுந்தின- மற்றும் சில வானரங்கள்
துணைவந்த வானரங்களோடு கடலில் மூழ்கின; சில தோன்றாப்
பணைகள் ஏறின – இன்னும் சில வானரங்கள் பார்ப்போர்க்குத்
தெரியாத மரக்கிளைகளில் ஏறிக்கொண்டன; பல, மலை முழை
புக்கன- பல வானரங்கள் மலைக்குகைகளுக்குள் புகுந்தன.

————-

‘அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர்; அடைய
உடைத்துப் போதுமால், அவர் தொடராமல்’ என்று, உரைத்த;
‘புடைத்துச் செல்குவர், விசும்பினும்’ என்றன; ‘போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர்’ என்றன, பயத்தால் 29-

அடைத்த பேர் அணை நமக்கு உயிர் அளித்தது- கடலைத்
தூர்ப்பதற்காக நாம் அமைத்த பெரிய அணை இப்போது நமக்கு
உயிர் அளித்தது; அவர் தொடராமல் அடைய உடைத்துப் போதும்
– நம்மைப் பிடிப்பதற்கு அந்த அரக்கர் தொடர்ந்து வர முடியாமல்
அணை முழுவதையும் உடைத்துக் கொண்டே போவோம். விசும்பினும்
புடைத்துச் செல்குவர் என்றன – தப்பி ஓடுகின்ற நம்மை ஆகாய
வழியிலும் வந்து அடித்துப் போடுவார்கள்; போதோன் படைத்த
திக்கு எலாம் பரந்தனர் – தாமரை மலரில் உள்ள நான்முகன்
படைத்த எல்லாத் திசைகளிலும் அவ் அரக்கர்கள் பரவியுள்ளனர்;
என்றன பயத்தால்- பயங்கொண்டமையால் இவ்வாறு (வானரங்கள்)
கூறின.

———-

அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்;
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும்; எறி நீர்
விரியும் வேலையும் கடந்தனர்; நோக்கினன், வீரன். 30-

அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன் அவனும்-
குரங்குகளின் அரசனாகிய சுக்கிரீவன், அனுமன், அங்கதன்,
ஆகியோர்; இறைவனைப் பிரியகிற்றிலர் – தலைவனாகிய
இராமனைப் பிரிய முடியாதவர்களாய்; பின்றார் நின்றனர்-
பின்னிட்டு ஓடாமல் நின்றனர்; மற்றையோர் யாவரும்
இரியலுற்றனர்- வானரர் படையில் இருந்த மற்றவர்
எல்லோரும் ஓடலாயினர்; எரிநீர் விரியும் வேலையும்
கடந்தனர்- அலை வீசும் நீர் பரந்த கடலையும்
தாண்டிச்சென்றனர்; வீரன் நோக்கினான்- இந்த நிலையை
வீரனாகிய இராமன் பார்த்தான்.

————

மூலபலச் சேனைப் பற்றி வீடணன் இராமனுக்கு எடுத்துரைத்தல்

‘இக் கொடும் படை எங்கு உளது? இயம்புதி’ என்றான்;
மெய்க் கொடுந் திறல் வீடணன் விளம்புவான்: ‘வீர!
திக்கு அனைத்தினும், ஏழு மாத் தீவினும், தீயோர்
புக்கு அழைத்திடப் புகுந்துளது, இராக்கதப் புணரி. 31-

இக்கொடும்படை எங்கு உளது, இயம்புதி என்றான்-
‘இதுவரை இல்லாமல் திடீரென இப்போது தோன்றியுள்ள இந்தக்
கொடிய படை எங்கே இருப்பது என்று இராமன் கேட்டான்; மெய்க்
கொடுந்திறல் வீடணன் விளம்புவான் – சத்தியமாகிய வலிய
ஆற்றலனாகிய வீடணன் விளக்கமாகச் சொன்னான்; வீர-
வீரனே; இராக்கதப் புணரி – இந்த அரக்கராகிய கடல்; திக்கு
அனைத்தினும் – எல்லாத் திசைகளிலும்; ஏழு மாத் தீவினும்
– ஏழு பெரிய தீவுகளிலும்; தீயோர் புக்கு அழைத்திட- இலங்கை
அரக்கர் புகுந்து அழைத்திடலால்; புகுந்துளது- இலங்கைக்கு
வந்துள்ளது.

————

‘ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்நின்று ஏறி,
ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும் உளதால்;
வாழி மற்று அவன் மூல மாத் தானை முன் வருவ;
ஆழி வேறு இனி அப் புறத்து இல்லை, வாள் அரக்கர் 32-

ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின் நின்று ஏறி – ஏழு
எனக் கணக்கிடப்படுகின்ற நிலவுலகின் கீழ் உள்ள
பாதாளத்திலிருந்து ஏறி; ஊழி முற்றிய கடல் எனப் புகுந்ததும்
உள- பிரளய காலத்தில் உலகத்தைச் சுற்றி வளைக்கின்ற
கடல்போல இங்கு வந்து புகுந்துள்ள படைக்கூட்டமும்
இச்சேனையுள் உண்டு; முன் வருவ- இப்போது வருவதில் முன்னே
வருவது; அவன் மூல மாத்தானை – இராவணனின் மூலபலப்
படையாகும்; வாள் அரக்கர் ஆழி- வாளேந்திய கொடிய
அரக்கராகிய கடல்; இனி அப்புறத்து வேறு இல்லை-
இதற்குமேல் அப்பால் வேறு இல்லை.

———–

‘ஈண்டு, இவ் அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க;
மாண்டு வீழும் இன்று, என்கின்றது என் மதி; வலி ஊழ்
தூண்டுகின்றது’ என்று, அடி மலர் தொழுது, அவன் சொன்னான். 33-

அவன்- வீடணன்; அடிமலர் தொழுது- இராமபிரானின்
திருவடி மலரில் விழுந்து வணங்கி; இவ் அண்டத்துள் இராக்கதர்
எனும் பெயர் எல்லாம்- இந்த அண்டம் முழுவதிலும் இராக்கதர்
என்று பெயர் கொண்ட கூட்டம் முழுவதும்; தீவினை முன்நின்று
முடுக்க- அவர்கள் செய்த, தீவினை முனைந்து நின்று விரைந்து
உந்துவதால்; ஈண்டு – இங்கே; மூண்டு வந்தது- ஏற்பட்டு வந்து
சேர்ந்திருக்கிறது; இன்று மாண்டு வீழும் என்கின்றது என்
மதி – இன்றைக்கு இவ் அரக்கர் சேனை முழுவதும் இறந்து விழும்
என்று என் அறிவு சொல்கிறது; வலி ஊழ் தூண்டுகின்றது-
வலிமையான் ஊழானது இங்கு வந்து இறக்க அவர்களைத்
தூண்டுகின்றது. என்று சொன்னான்.

—————

வானர வீரரை அழைத்து வருமாறு அங்கதனை இராமன் ஏவுதல்

கேட்ட அண்ணலும், முறுவலும் சீற்றமும் கிளர,
‘காட்டுகின்றனென்; காணுதி ஒரு கணத்து’ என்னா,
‘ஓட்டின் மேற்கொண்ட தானையைப் பயம் துடைத்து, உரவோய்!
மீட்டிகொல்?’ என, அங்கதன் ஓடினன் விரைந்தான். 34-

கேட்ட அண்ணலும் – மேற்கண்டவாறு வீடணன் கூறியதைக்
கேட்ட இராமபிரான்; முறுவலும் சீற்றமும் கிளர- புன்சிரிப்பும்
கோபமும் பொங்கிவர; காட்டுகின்றனென்- என் (வீரச்செயல்)
இப்படிப்பட்டது என்பதைக் காட்டுகின்றேன்; ஓர் கணத்தில்
காணுதி – (என் சீற்றத்தின் விளைவால் இச்சேனை முழுவதும்
அழிவதை) ஒரு கண நேரத்தில் காண்பாயாக; என்னா- என்று
(வீடணனிடம்) சொல்லிவிட்டு; உரவோய் – வலிமை மிக்க வீரனே!
ஓட்டின் மேற்கொண்ட தானையை – ஓட்டம் பிடித்த சேனை
வீரர்களை; பயம் துடைத்து- அவர்கள் கொண்ட அச்சத்தைப்
போக்கி; மீட்டி- திரும்பக் கொண்டு வருவாயாக; என- என்று
இராமபிரான் சொல்ல; அங்கதன் ஓடினன் விரைந்தான் –
அங்கதன் விரைந்து ஓடினான்.

————-

அங்கதனுக்கு படைத்தலைவர்கள் தாம் ஓடியதற்கு உற்ற காரணத்தை உரைத்தல்

சென்று சேனையை உற்றனன், ‘சிறை சிறை கெடுவீர்!
நின்று கேட்டபின், நீங்குமின்’ எனச் சொல்லி நேர்வான்;
‘ஒன்றும் கேட்கிலம்’ என்றது அக் குரக்கு இனம்; உரையால்
வென்றி வெந் திறல் படைப் பெருந் தலைவர்கள் மீண்டார் 35-

சென்று சேனையை உற்றனன்- (இராமபிரான் ஏவிய வண்ணம்)
அங்கதன் ஓடிக்கொண்டிருந்த வானர சேனையை அடைந்தான்; சிறை
சிறை கெடுவீர் – கண்ட கண்ட பக்கமெல்லாம் சிதறி ஓடுகின்றவர்களே!
நின்று கேட்டபின் நீங்குமின்- (நான் சொல்லப்போவதை) நின்று
கேட்டபிறகு ஓட வேண்டுமென்று நினைத்தால் பிறகு செல்லுங்கள்!
எனச் சொல்லி நேர்வான் – எனச் சொல்லி அவர்களை
நெருங்கினான்; அக்குரக்கு இனம்- அங்கதன் கூறியதைக் கேட்ட
அந்தக் குரங்குக் கூட்டம்; ஒன்றும் கேட்கிலம் என்றது- நீ
சொல்வது எதையும் கேட்க மாட்டோம் என்று சொல்லியது; உரையால்
– அங்கதன் சொன்ன சொல்லால்; வென்றி வெந்திறல் – வெற்றியை
விளைக்கின்ற கொடிய ஆற்றல் கொண்ட; படைப் பெருந் தலைவர்கள்
மீண்டார் – சேனையை நடத்துகின்ற பெரிய சேனைத்தலைவர்கள்
(மட்டும்) திரும்பி வந்தார்கள்.

————-

மீண்டு, வேலையின் வட கரை, ஆண்டு ஒரு வெற்பின்
ஈண்டினார்களை, ‘என் குறித்து இரிவுற்றது?’ என்றான்;
‘ஆண்ட நாயக! கண்டிலை போலும், நீ அவரை?
மாண்டு செய்வது என்?’ என்று உரை கூறினர், மறுப்பார் 36-

மீண்டு- அங்கதன் சொல்லால் திரும்பி; வேலையின்
வடகரை ஆண்டு ஒரு வெற்பின்- கடலின் வடக்குக்
கரையிலே இருந்த ஒரு மலையிடத்தில்; ஈண்டினார்களை
– நெருங்கி வந்த படைத்தலைவர்களை நோக்கி; என்
குறித்து இரிவுற்றது என்றான் – எதனை நினைத்து இப்படி
ஓடினீர்கள் என்று அங்கதன் கேட்டான்; மறுப்பார் –
அங்கதனின் கருத்தை மறுப்பவர்களாய்; ஆண்ட நாயக –
எங்களை ஆளாகக் கொண்ட தலைவனே; நீ அவரைக்
கண்டிலை போலும்- நீ அந்த அரக்கர்களை (சரியாகப்)
பார்க்கவில்லை போல் தெரிகிறது (பார்த்திருந்தால் நீயும்
எம்மோடு ஓடி வந்திருப்பாய்); மாண்டு செய்வது என்
– வீணாக உயிர் விடுதல் சாதிக்கக்கூடியது என்ன?; என்று
உரை கூறினர்- என விடை சொன்னார்கள்.

————

‘ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்,
செருவின் உற்றவை, கொற்றவ! மறத்தியோ? தெரியின்,
பொரு இல் மற்றவர் இற்றிலர், யாரொடும் பொருவார்;
இருவர் வில் பிடித்து, யாவரைத் தடுத்து நின்று எய்வார்? 37-

கொற்றவ- மன்னனே! இந்திரசித்து என உள்ளவன்
ஒருவன்- இந்திரசித்து என்னும் பெயர் கொண்ட ஒருவன்;
உள நாள்- இருந்த வரையுள்ள காலத்தில்; செருவின்
உற்றவை மறத்தியோ- போரிலே நாம் அடைந்த
(வேதனைகளையெல்லாம்) மறந்துவிட்டாயோ; தெரியின் –
இப்போதுள்ள நிலையை ஆராய்ந்து பார்த்தால்; பொரு இல்
மற்றவர்- ஒப்பற்றவர்களாயுள்ள மற்ற அரக்கர்கள்; இற்றிலர் –
(இறந்து போன இந்திர சித்துக்கு) வன்மையால் குறைந்தவர்களல்லர்; யாரொடும்
பொருவார்- எவருடனும் போர் செய்வார்கள்; இருவர் வில்
பிடித்து- (அரக்கர்கள் அத்தனை பேரும் எவருடனும் போர்
செய்வாராயின்) இராம, இலக்குவர் இருவர் மட்டும் வில்லைப்
பிடித்து; யாவரைத் தடுத்து நின்று எய்வார் – இத்துணை
அரக்கர்களில் எவரைத்தான் தடுத்து நின்று அம்பு எய்வார்கள்.

—————

‘புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர்
வரங்கள் தந்து, உலகு அளிப்பவர் யாவரும், மாட்டார்,
கரந்து அடங்கினர்; இனி, மற்று அவ் அரக்கரைக் கடப்பார்
குரங்கு கொண்டு வந்து, அமர் செயும் மானுடர் கொல்லாம்? 38-

புரம் கடந்த அப் புனிதனே முதலிய புலவோர் யாவரும்-
முப்புரத்தை அழித்து வென்ற தூய சிவபிரான் முதலிய தேவர்கள்
எல்லாரும்; உலகு அளிப்பவர் – உலகங்களைக் காப்பவர்கள்;
வரங்கள் தந்து- (இந்தப் பொல்லா அரக்கர்களுக்கெல்லாம்)
வரங்களை வழங்கி; மாட்டார்- (அதனால் தங்கள் கடமையாகிய
உலகு காத்தலைச்) செய்ய மாட்டாராய்; கரந்து அடங்கினர்-
(அரக்கர்களை எதிர்த்து ஒழிக்க மாட்டாமல்) மறைந்து அடங்கிப்
போய்விட்டார்கள்; இனி- இதற்கு மேல்; அவ் அரக்கரைக்
கடப்பார் – அந்த அரக்கர்களை வெல்லப் போகிறவர்கள்;
குரங்கு கொண்டு வந்து – தங்களுக்குத் துணையாகக் குரங்குப்
படையைக் கொண்டுவந்து; அமர் செயும் மானுடர்கொல்-
போர் செய்கின்ற இந்த இரண்டு மனிதர்கள் தாமா? (முடிகிற
காரியமாக இல்லையே!)

————–

‘ஊழி ஆயிர கோடி நின்று, உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும்,
சூழ ஓடினார்; ஒருவனைக் கொன்று, தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே! 39-

உருத்திரனோடும் – அழித்தற் கடவுளாகிய உருத்திர
மூர்த்தியோடு; ஆழியானும்- சக்கராயுதம் ஏந்திய திருமாலும்;
அயனொடு புரந்தரன் அவனும்- பிரமனோடு இந்திரனும்; ஆயிர
கோடி ஊழி நின்று- ஆயிரங்கோடி ஊழிக் காலமாக; சூழ ஓடினர்
– இவ்வரக்கர்களைச் சுற்றிச் சுற்றி ஓடினவர்களாய்; ஒருவரைக்
கொன்று- இந்த அரக்கர்களிடையே ஒரே ஒருவரை மட்டிலுமாவது
கொன்று; தம் தோளால் வீழுமா செய்ய வல்லரேல்
– தங்களுடைய தோள்வலிமை கொண்டு செத்து விழுமாறு செய்யும்
வல்லமை உடையவராயின்; வென்றியின் நன்றே – பிற
வெற்றிகளையெல்லாம் விடப் பெரியதாகும்.

——————-

‘என் அப்பா! மற்று, இவ் எழுபது வெள்ளமும், ஒருவன் தின்னப்
போதுமோ? தேவரின் வலியமோ, சிறியேம்?
முன் இப் பார் எலாம் படைத்தவன், நாள் எலாம் முறை நின்று,
உன்னிப் பார்த்து நின்று, உறையிடப் போதுமோ, யூகம்? 40-

என் அப்பா- என் தந்தை போன்றவனே! இவ் எழுபது
வெள்ளமும் – இந்த எழுபது வெள்ளம் வானரசேனை முழுவதும்;
ஒருவன் தின்னப் போதுமோ – அரக்கரில் ஒருவனுக்கேனும்
தின்பதற்குப் போதுமா? சிறியேம்- வடிவாலும் வலிமையாலும்
சிறியவர்களாகிய நாங்கள்; தேவரின் வலியமோ?- பல்வகைப்
பேராற்றல் கொண்ட தேவர்களைவிட வலிமை உடையவர்களா?
(இல்லை) முன் இப் பார் எலாம் படைத்தவன் – முன்னே
இந்த உலகமெல்லாம் படைத்த பிரமன்; நாள் எலாம்- தன்
வாழ் நாளெல்லாம்; முறை நின்று உன்னிப் பார்த்து நின்று
– முறையாகக் கவனமாகப் பார்த்து நின்று கணக்கிட்டாலும்;
யூகம் – நம் வானரசேனை; உறையிடப் போதுமோ-
உறையிடுவதற் காவது போதுமானதாகுமோ? (ஆகாது).

———-

‘”நாயகன் தலை பத்து உள; கையும் நால்-ஐந்து” என்று
ஓயும் உள்ளத்தேம்; ஒருவன் மற்று இவண் வந்து, இங்கு உற்றார்
ஆயிரம் தலை; அதற்கு இரட்டிக் கையர்; ஐயா!
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால்! 41-

நாயகன் – இந்த அரக்கர்களின் தலைவனுக்கு; தலை பத்து
உள- பத்துத் தலைகள் இருக்கின்றன; கையும் நால் ஐந்து-
கைகள் இருபது; என்று ஓயும் உள்ளத்தேம் – என்று நினைக்கும்
போதே தளர்ந்து போகும் உள்ளம் உடையவர்களாய் இருக்கிறோம்;
மற்று அவன் ஒருவன்- பத்துத் தலையும் இருபது கைகளும்
உடைய அவன் ஒருவன்தான்; இங்கு வந்து உற்றார்-
(தலைவனாகிய இராவணன் அப்படி இருக்க) இங்கே போருக்கு
வந்துள்ள அரக்கர் ஒவ்வொருவருக்கும்; ஆயிரம் தலை-
ஆயிரம் தலைகள்; அதற்கு இரட்டிக் கையர்- அதற்கு இரண்டு
மடங்கு கைகள் (இரண்டாயிரம் கைகள்); ஐயா- ஐயனே!; பாயும்
வேலையின்- அலை மோதுகின்ற கடலின்; கூலத்து – கரையிலே
உள்ள; மணலினும் பலர் – மணலை விட அதிகமானவர்கள்.

———–

‘கும்பகன்னன் என்று உளன், மற்று இங்கு ஒருவன்,
கைக் கொண்ட அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி;
உம்பர் அன்றியே, உணர்வு உடையார் பிறர் உளரோ?
நம்பி! நீயும் உன் தனிமையை அறிந்திலை; நடந்தாய் 42-

நம்பி!-; கும்பகன்னன் என்று ஒருவன் மற்று இங்கு உளன்-
கும்பகர்ணன் என்று பெயர் கொண்ட ஒருவன் இங்கு இருந்தான்;
கைக்கொண்ட அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் – அவன் கையில்
எடுத்தெய்த அம்பைக்கூடத் தாங்கிக் கொள்ளக்கூடிய வலிமை
இல்லாதவர்கள் ஆனோம் நாம்; அவன் செய்தது அறிதி – அவன்
செய்த போரின் கொடுமையை நீ அறிவாய்; உம்பர் அன்றியே
– தேவர்களைத் தவிர; உணர்வுடையார் பிறர் உளரோ- நல்லது
இதுவே என உணரக் கூடியவர்கள் வேறு எவரேனும் இருக்கிறார்களா?
(இல்லை); நீயும் உன் தனிமையை அறிந்திலை

————–

‘அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா;
கனியும் காய்களும் உணவு உள; முழை உள, கரக்க;
மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்? 43-

அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும்- அனுமன்
வலிமையும் நம் மன்னனாகிய சுக்கிரீவனது வலிமையும்; இருவர்
தனுவின் ஆற்றலும்- இராமன், இலக்குவன், ஆகிய இரண்டு
பேரின் வில் ஆற்றலும்; தம் உயிர் தாங்கவும் சாலா – தங்கள்
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கே போதா (இப்படிப்பட்ட
நிலையில் நாமெல்லாம் பிழைத்திருக்க முடியுமா?); கனியும்
காய்களும் உணவு உள- உண்பதற்குப் பழங்களும் காய்களும்
இருக்கின்றன; கரக்க முழை உள- மறைந்து கொள்ள குகைகள்
இருக்கின்றன; வையம்- இந்த உலகத்தை; மனிதர் ஆளின் என்
இராக்கதர் ஆளின் என்- மனிதர்கள் ஆண்டால் என்ன,
அரக்கர்கள் ஆண்டால் என்ன (அதைப் பற்றி நாம் ஏன்
கவலைப்பட வேண்டும்?)

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற
பழமொழி பிறந்த சூழலை இப்பாட்டு உணர்த்துகிறது.

———-

‘தாம் உளார் அலரே, புகழ் திருவொடும் தரிப்பார்?
யாம் உளோம் எனின், எம் கிளை உள்ளது; எம் பெரும!
“போமின் நீர்” என்று விடை தரத் தக்கனை, புரப்போய்!
“சாமின் நீர்” என்றல் தருமம் அன்று’ என்றனர், தளர்ந்தார் 44-

எம் பெரும!- எங்கள் தலைவனே! தாம் உளார் அன்றே
புகழினைத் திருவொடும் தரிப்பார்- தாம் உயிரோடு
இருப்பவர்கள் தாமே புகழைச் செல்வத்தோடு தாங்கியிருப்பார்கள்?
யாம் உளோம் எனின்- நாங்கள் உயிரோடு இருந்தால்தான்;
எம் கிளை உள்ளது – எங்கள் சுற்றமும் இருப்பதாகும்; புரப்போய் –
எங்களைப் பாது காப்பவனே; போமின் நீர் என்று
விடைதரத் தக்கனை- இந்தப் போர்க்களத்தை விட்டு நீங்கள்
செல்லுங்கள் என்று விடை கொடுத்து எங்களை அனுப்புதற்கு
உரியவனாகிய நீ; சாமின் நீர் என்றால் தருமம் அன்று-
நீங்கள் யாவரும் (இங்கே அரக்கரால்) சாவீராக என்று
கூறுதல் அறமாகாது; என்றனர் தளர்ந்தார்- என்று மனம்
தளர்ந்தவர்களாய்க் கூறினர்;

————

அங்கதன் சாம்பனை நோக்கி, ‘ஓடுவது தகாது’ என உரைத்தல்

‘சாம்பனை வதனம் நோக்கி, வாலிசேய், “அறிவு சான்றோய்!
பாம்புஅணை அமலனே மற்று இராமன்” என்று, எமக்குப் பண்டே
ஏம்பல் வந்து எய்தச் சொல்லித் தேற்றினாய் அல்லையோ, நீ?
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய்! 45-

வாலி சேய்- வாலியின் மகனான அங்கதன்; சாம்பனை
வதனம் நோக்கி – சாம்பவானின் முகத்தைப் பார்த்து; ஆம்பல்
அம பகைஞன் தன்னோடு அயிந்திரம் அமைந்தோன்
அன்னாய்- ஆம்பற் பூவுக்குப் பகைவனாகிய சூரியனோடு
இலக்கணம் கற்றறிந்த அனுமனை ஒத்தவனே! அறிவு சான்றோய்!
– அறிவால் நிறைந்தவனே; பாம்பு அணை அமலனே மற்று
இராமன் என்று- பாம்புப் படுக்கையில் எழுந்தருளியுள்ள
திருமாலே இராமன் என்று; எமக்குப் பண்டே- முன்பே
எங்களுக்கு; ஏம்பல் வந்து எய்தச் சொல்லி- மகிழ்ச்சி வந்து
சேரும் வகையாகச் சொல்லி; தேற்றினாய் அல்லையோ நீ-
தெளிவித்தவன் நீ அல்லவா?

‘உன்னை நீ அறிகிலை அடியனேன் உனை முன்னமே
அறிகுவேன் (8784) என்று இராமபிரான் இன்னான் என்று தான்
முன்பே அறிந்துளதாக இராமபிரானிடமே சாம்பவான் கூறும்
இடம் ஒன்று உண்டு.

—————

‘தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி, இத் தெருள் இலோரை
ஆற்றுவாய் அல்லை; நீயும் அஞ்சினை போலும்! ஆவி
போற்றுவாய் என்ற போது, புகழ் என் ஆம்? புலமை என் ஆம்?
கூற்றின்வாய் உற்றால், வீரம் குறைவரே இறைமை கொண்டார்? 46-

தெரிந்து தேற்றுவாய் – நிலைமையை நன்றாகத் தெரிந்து
கொண்டபின் கலக்கமுற்றவர்களைத் தேற்றுவாய்;
தெளிவிலோரைச் சொல்லால் தெருட்டுவாய்- அறிவிலே
தெளிவில்லாதவர்களை உன் தெளிவான சொல்லால் தெளிவு
படுத்துவாய்; ஆற்றுவாய் அல்லை- அப்படிப்பட்ட நீயே
இப்போது எதிரிகளின் ஆற்றலைத் தாங்க முடியாதவனாகி
விட்டாய்; நீயும் அஞ்சினை போலும்- நீ கூடப் பயந்து
விட்டாயோ? ஆவி போற்றுவாய் என்றபோது – வீரத்தையும்
குறிக்கோளையும் போற்றாமல் உன் உயிரையே பெரிது எனப்
போற்றுகிறாய் என்றால்; புகழ் என் ஆம் – புகழ் என்ன
ஆகும்? புலமை என் ஆம்- அறிவுதான் என்னாகும்? இறைமை
கொண்டார்- தலைமைப் பண்பு கொண்டவர்; கூற்றின் வாய்
உற்றால் – யமன் வாயில் அகப்பட்டு விட்டால்; வீரம்
குறைவரே- வீரத்தில் குறைவு படுவார்களோ? (வீரத்தில்
குறையார் என்பது இயல்பு)

————

‘அஞ்சினாம்; பழியும் பூண்டாம்; அம் புவி யாண்டும், ஆவி
துஞ்சுமாறு அன்றி, வாழ ஒண்ணுமோ, நாள்மேல் தோன்றின்?
நஞ்சு வாய் இட்டாலன்ன அமுது அன்றோ? நம்மை, அம்மா,
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே! 47-

அஞ்சினாம் – நாம் இப்போது அஞ்சியவர்களானோம்;
பழியும் பூண்டாம்- ஆகையால் பழியையும் மேற்கொண்டு
விட்டோம்; அம் புவி யாண்டும்- அழகிய இந்தப் பூமியில்
எங்குச் சென்றாலும்; துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ-
சாவைத் தவிர வாழமுடியுமா? நாள் மேல் தோன்றின்- சாவு
வருதற்குரிய நாள் நம் முன்னே வந்து தோன்றினால்; நஞ்சு
வாய் இட்டாலன்னது அமுது அன்றோ – நஞ்சினை
வாயிலிட்டது போல்வதாகிய அமுதம் அல்லவா? நம்மைத்
தஞ்சம் என்று அணைந்த- நம்மை பற்றுக்கோடு என்று கொண்டு சேர்ந்த; வீரர்- இராம
இலக்குவர் ஆகிய வீரர்கள்; தனிமையின் சாதல் நன்றே-
நாம் துணையாக நிற்காமல் விலகிவிட்டதால் அவர்கள்
தனிமையில் சாவது; இது நல்லதாகுமா?

————

‘தானவரோடும், மற்றைச் சக்கரத் தலைவனோடும்,
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி –
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ?
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும்? – மேலோய்! 48-

மேலோய்!- நீ எங்களிலே யாவரினும் மேம்பட்டவனே!
தானவரோடும் மற்றைச் சக்கரத் தலைவனோடும்-
அசுரர்களோடும் சக்கராயுதம் ஏந்திய திருமாலோடும் சேர்ந்து;
வானவர் கடைய மாட்டா மறிகடல்- தேவர்கள் கடைய
முடியாமல் தளர்ந்த போது அலைகள் மறித்துவிழும் அந்தக்
கடலை; கடைந்த வாலி ஆனவன்- கடைந்த வாலி
என்பவன்; அம்பு ஒன்றாலே- இராமன் செலுத்திய ஒரே
அம்பினால்; உலந்தமை நீ அயர்த்தது என்?- இறந்ததை
நீ மறந்தது ஏன்? மீன் அலர் வேலைபட்டது- மீன்கள்
நிறைந்து விளங்குகின்ற கடல்பட்ட துன்பத்தை; உணர்ந்திலை
போலும் – (நேரே கண்டிருந்தும் அதனில் விளங்கும்
இராமபிரான் சிறப்பினை மனத்தில் பதியுமளவுக்கு)
உணரவில்லை போலும்.

———-

‘எத்தனை அரக்கரேனும், தருமம் ஆண்டு இல்லை அன்றே;
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ?
பித்தரைப் போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்திலது’ என்னச் சொன்னான், அவன் இவை உரைப்பதானான்: 49-

எத்தனை அரக்கரேனும் – எதிர்த்து வந்துள்ள அரக்கர்கள்
மிகவும் பலராக இருந்தாலும்; ஆண்டுத் தருமம் இல்லை அன்றே-
அந்தப் பக்கத்தில் தருமம் இல்லையன்றோ? (எனவே அவர்களுக்கு வெற்றி கிடைக்காது) அத்தனை அறத்தை- மிகப்
பெரிதாகிய தருமத்தை; பாவம் வெல்லும் என்று அறிந்தது
உண்டோ- பாவம் வென்றுவிடும் என அனுபவத்தில் அறிந்தது
உண்டா? (இல்லையே); பித்தரைப் போல- அறிவும் மனமும்
குழம்பிய பயித்தியக்காரர்களைப் போல; நீயும் இவருடன்
பெயர்ந்த தம்மை- நீ கூட இவர்களோடு நீங்கிவந்த பாங்கு;
ஒத்திலது- உன் தகைமைக்கு ஏற்றதாகப் பொருந்தவில்லை;
என்னச் சொன்னான் – என்று அங்கதன் கூறினான்; அவன்
இவை உரைப்பதானான் – அதைக் கேட்ட சாம்பவான் இவற்றை
(வரும் சொற்களை)ச் சொல்லலானான்.

————

சாம்பவான் மறுமொழி

நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து, பின்னர்,
‘தூண் ஒத்த திரள் தோள் வீர! தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான், நிற்கத்தான், அக் கறை மிடற்றவற்கும் ஆமே?
கோணற் பூ உண்ணும் வாழ்க்கைக் குரங்கின்மேல் குற்றம் உண்டோ? 50-

சிறிது போது நாணத்தால் நலங்கினன் இருந்து- சிறிது
நேரம் சாம்பவான் வெட்கத்தால் கலங்கியிருந்து; பின்னர்
– பிறகு (அங்கதனை நோக்கி); தூண் ஒத்த திரள் தோள் வீர!
– தூண்போலத் திரண்ட தோள் கொண்ட வீரனே! தோன்றிய
அரக்கர் தோற்றம்- பேரளவிலும் பெரிய உருவிலும்
தோன்றியுள்ள அரக்கர்களின் அஞ்சத்தக்க காட்சியை;
காணத்தான் நிற்கத்தான்- பார்க்கவோ பார்த்தபின் துணிவுடன்
நிற்கவோ; அக்கறை மிடற்றவற்கும் ஆமே- நஞ்சுக் கறை
கொண்ட அந்த நீலகண்டனானும் முடிகிற காரியமா (முடியாதே)
அப்படியிருக்க) பூ உண்ணும் வாழ்க்கை – பூக்களைத் தின்று
வாழும் எளிய வாழ்க்கையுடைய; கோணற் குரங்கின் மேல்
குற்றம் உண்டோ- கூனி நிற்பதை இயல்பாகவே கொண்ட
குரங்குகளிடம் குற்றம் உண்டா? (இல்லை)

—————–

‘தேவரும் அவுணர்தாமும் செருப் பண்டு செய்த காலம்,
ஏவரே என்னால் காணப்பட்டிலர்? இருக்கை ஆன்ற
மூவகை உலகின் உள்ளார்; இவர் துணை ஆற்றல் முற்றும்
பாவகர் உளரோ? கூற்றை அஞ்சினால், பழியும் உண்டோ? 51-

தேவரும் அவுணர் தாமும் – தேவர்களும் அசுரர்களும்;
பண்டு செருச் செய்த காலம் – முன்பு போர் செய்த காலத்தில்;
என்னால் காணப் பட்டிலர் ஏவரே – என்னால்
காணப்படாதவர்கள் யார்? இருக்கை ஆன்ற மூவகை உலகின்
உள்ளார் – நிலை பெறுதல் மிக்க மூன்று உலகிலும் வாழ்வோரில்;
இவர் துணை ஆற்றல் முற்றும் பாவகர் உளரே- இந்த
அரக்கர்கள் அளவுக்கு ஆற்றல் நிரம்பிய கொடியவர்கள்
இருக்கிறார்களா?; கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ –
யமனுக்குப் பயந்தால் அந்த மரண அச்சம் காரணமாகப் பழி
உண்டோ?

———-

‘மாலியைக் கண்டேன்; பின்னை, மாலியவானைக் கண்டேன்;
கால நேமியையும் கண்டேன்; இரணியன் தனையும் கண்டேன்;
ஆல மா விடமும் கண்டேன்; மதுவினை அனுசனோடும்
வேலையைக் கலக்கக் கண்டேன்; இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ ? 52-

மாலியைக் கண்டேன் – மாலியைக் கண்டவன் நான்; பண்டை
மாலியவானைக் கண்டேன் – பழங்காலத்து மாலியவானையும்
பார்த்தவன் நான்; கால நேமியையும் கண்டேன்- கால
நேமியையும் பார்த்திருக்கிறேன்; இரணியன் தனையும் கண்டேன்
– இரணியனையும் பார்த்திருக்கிறேன்; ஆலமாவிடமும் கண்டேன்
– ஆலகாலமாகிய பெரு நஞ்சையும் நான் பார்த்துள்ளேன்; மதுவினை
அனுசனோடும் வேலையைக் கலக்கக் கண்டேன்- மது என்ற
அரக்கனோடு அவன் தம்பியாகிய கைடபன் ஆகிய இருவரும்
கடலைக் கலக்கியதையும் பார்த்திருக்கிறேன்; இவர்க்கு உள
மிடுக்கும் உண்டோ – இங்கே தோன்றியுள்ள அரக்கர்களுக்கு
உள்ள வலிமை நான் மேலே சொன்ன அரக்கர்களுக்கு உண்டோ?
இல்லை; அவர்கள் அத்தனை பேரையும் விட இவர்கள் வலிமை
மிக்கவர்கள்.

———

‘வலி இதன் மேலே, பெற்ற வரத்தினர்; மாயம் வல்லோர்;
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர்; உள்ளம் நோக்கின்,
கலியினும் கொடியர்; கற்ற படைக்கலக் கரத்தர்; என்றால்,
மெலிகுவது அன்றி உண்டோ , விண்ணவர் வெருவல் கண்டால்? 53-

வலி இதன் மேலே- இத்தகைய வலிமைக்கு மேலே; பெற்ற
வரத்தினர் – தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களையும்
உடையவர்கள்; மாயம் வல்லார்- வலிமை வரம் ஆகியவற்றோடு
மாயங்களிலும் வல்லவர்கள்; ஒலி கடல் மணலின் மிக்க
கணக்கினர் – ஒலிக்கின்ற கடலில் உள்ள மணலை விட மிகுந்த
எண்ணிக்கை உடையவர்கள்; உள்ளம் நோக்கின்- இவர்களுடைய
மனம் எத்தகையது என்று பார்த்தால்; கலியினும் கொடியர் –
கலி புருஷனை விட கொடியவர்கள்; படைக்கலங்கற்ற கரத்தர்-
போர்க் கருவிகளைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற கைகளை
உடையவர்கள்; என்றால்- என்று இவ்வாறானால்; விண்ணவர்
வெருவல் கண்டால் – இவர்களை நினைத்தும் பார்த்து
தேவர்களே அஞ்சுவதை நோக்கினால்; மெலிகுவது அன்றி
உண்டோ – எளியவர்களாகிய நாங்களெல்லாரும் தளர்வது தவிர
வேறு வழி உண்டா?

————

‘ஆகினும், ஐயம் வேண்டா; அழகிது அன்று; அமரின் அஞ்சிச்
சாகினும், பெயர்ந்த தன்மை பழி தரும்; நரகில் தள்ளும்;
ஏகுதும், மீள; இன்னும் இயம்புவது உளதால்; ஐய!
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும்? 54-

ஐய- ஐயனே! ஆகினும்- எங்கள் செயல் இப்படியாகி
விட்டாலும்; வேண்டினார்க்கு என – நம் உதவியை வேண்டி
வந்தவர்களுக்காக; அமரின் சாகிலம்- போரில் ஈடுபட்டுச்
சாகாதவர்களாய்; அஞ்சிப் பெயர்ந்த தன்மை –
அரக்கர்களுக்கு அஞ்சி விலகி வந்து விட்ட தன்மை; பழி
தரும் – நமக்குப் பழியைத் தரும் (மேலும்); நரகில் தள்ளும்
– மறுமையிலே நகரத்தில் தள்ளி விடும்; ஏகுதும் மீள-
(எனவே, பழியிலிருந்தும் நரகிலிருந்தும் தப்புவதற்காக)
மீண்டும் போர்க்களம் போகிறோம்; இன்னும் இயம்புவது
உளது- மேலும் சொல்லவேண்டிய ஒன்று இருக்கிறது; எய்தி –
போர்க்களத்தை அடைந்து; மேகமே அனையான் கண் முன்-
மேகம் போன்றவனாகிய இராமபிரானுக்கு முன்னே சென்று;
எங்ஙனம் விழித்து நிற்றும் – எப்படி விழித்து நிற்கப்
போகிறோம்?

———–

சாம்பனுக்கு அங்கதன் தேறுதல் மொழிகள் உரைத்தல்

‘எடுத்தலும், சாய்தல்தானும், எதிர்த்தலும், எதிர்ந்தோர் தம்மைப்
படுத்தலும், வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற, மேல் நாள்;
அடுத்ததே அஃது; நிற்க; அன்றியும் ஒன்று கூறக்
கடுத்தது; கேட்டும் ஈண்டு, இங்கு இருந்துவீர், ஏது நோக்கின் 55-

எடுத்தலும் சாய்தல் தானும்- பகைவரை எதிர்க்கும்போது
அவரினும் மிகுதலும் அவரிடம் தோற்பதும்; எதிர்த்தலும் –
பகைவர்களை எதிர்த்துத் தாக்குப்பிடித்து நிற்றலும்; எதிர்ந்தோர்
தம்மைப் படுத்தலும்- எதிர்த்தவர்களைக் கொல்லுதலும்; வீர
வாழ்க்கை பற்றினார்க்கு – வீர வாழ்க்கையை
மேற்கொண்டவர்களுக்கு; மேல் நாள்- பழங்காலத்திலிருந்தே;
உற்ற- பொருந்தி வருவனவேயாகும்; அஃது அடுத்ததே-
அப்படி வருவது பொருத்தமே; நிற்க – அஃது அப்படி ஒரு புறம்
இருக்க; அன்றியும் – மேலும்; ஒன்று கூறக் கடுத்தது- ஒரு
செய்தியைச் சொல்ல என் நெஞ்சம் விரைகிறது; கேட்டீர் கருதி
நோக்கின் நீரும் கருத்துளீர்- எண்ணிப் பார்த்தால் உமக்கும் பெரும்
ஆராய்ச்சி உடையதாகும்.

————-

‘ஒன்றும் நீர் அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கே சென்று,
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து,
கொன்று போர் கடக்கும் ஆயின்; கொள்ளுதும் வென்றி; அன்றேல்,
பொன்றுதும், அவனோடு’ என்றான்; ‘போதலே அழகிற்று’ என்றான். 56-

ஐய! ஒன்றும் நீர் அஞ்சல்- நீர் சிறிதும் அஞ்சல்
வேண்டா; யாம் எலாம் ஒருங்கே சென்று நின்றும் – நாம்
எல்லோரும் ஒன்று சேர்ந்து போய் அரக்கர்களை எதிர்த்து
நின்றால் கூட; ஒன்று(ம்) இயற்றல் ஆற்றேம்- அரக்கர்களை
அழிப்பதில் எதுவும் செய்ய முடியாதவர்கள் நாம்; நேமியான்
தானே நேர்ந்து- சக்கரப் படை கொண்ட திருமாலாகிய
இராமனே எதிர்த்து நின்று; கொன்று போர் கடக்குமாயின் –
அரக்கர்களைக் கொன்று வென்றானானால்; கொள்ளுதும் வென்றி
– நாம் வெற்றி பெறுவோம்; அன்றேல்- அப்படி இராமபிரான்
வெல்லாவிடின்; அவனோடு பொன்றுதும்- அந்த இராமனோடு
நாமும் சாவோம்; என்றான்- எனச் சாம்பவான் சொன்னான்;
போதலோ புகழ் அன்று என்றான்- போர்க்களத்தை விட்டுப்
போவது புகழாகாது என்றும் அவன் சொன்னான்.

————

சேனைத் தலைவர் மீண்டு வருதல்

‘ஈண்டிய தானை நீங்க, நிற்பது என்? யாமே சென்று,
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம்; போதும்’ என்னா,
மீண்டனர் தலைவர் எல்லாம், அங்கதனோடும்; வீரன்
மூண்ட வெம் படையை நோக்கி, தம்பிக்கு மொழிவதானான்: 57-

ஈண்டிய தானை நீங்க நிற்பது என்- நெருங்கிய சேனை
நிற்க நாம் விலகி நிற்பது ஏன்; யாமே சென்று- நாமே புறப்பட்டு;
பூண்ட வெம்பழியினோடும் போந்தனம்- மேற்கொண்ட கொடிய
பழியோடு வந்து விட்டோம்; போதும் என்னா – (இனிப் பழி
துடைக்க இராமனிடம்) போவோம் என்று முடிவு செய்து;
அங்கதனோடு தலைவர் எல்லாம் மீண்டனர் – அங்கதனோடு
சேர்ந்து வானரப் படைத்தலைவர்கள் யாவரும் திரும்பி வந்தனர்;
மூண்ட வெம் படையை நோக்கி – எதிர்த்தெழுந்த கொடிய
அரக்கர் சேனையைப் பார்த்து; வீரன் – இராமன்; தம்பிக்கு
மொழிவதானான் – இலக்குவனுக்குச் சொல்லலானான்.

———–

‘அத்த! நீ உணர்தி அன்றே, அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது,
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை?
ஒத்தது; ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால். 58-

அத்த நீ – அத்தனே நீ; அரக்கர் தான் அவுணரே தான் –
அரக்கர் என்றாலும் அவுணர்களே என்றாலும்; எத்தனை உளர்
என்றாலும்- எத்தனை பேர் என்னை எதிர்த்துப் போர் செய்ய
உள்ளார் எனினும்; யான் சிலை எடுத்தபோது- நான் வில்லை
எடுத்த சமயத்தில்; தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என-
தொகுதியாகப் பெருகி எரியும் நெருப்பில் விழுந்துவிட்ட பஞ்சு
போல; தொலையும் தன்மை- தோற்று அழிந்து போகும்
தன்மையை; உணர்தி அன்றே- தெரிந்திருக்கிறாய் அல்லவா?;
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று – என் போர்த்திறமைக்கு
ஈடாக எழக்கூடிய இடையூறு உண்டு என; உணர்விடை உதிப்பது
அன்று- என் உணர்விலே எழுவதில்லை.

————-

மாருதியுடனும் சுக்கிரீவனுடன் சென்று, வானரத் தானையைக் காக்குமாறு இலக்குவனுக்கு இராமன் உரைத்தல்

‘காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால், கவியின் சேனை
போக்கு அறப் போகித் தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்;
தாக்கி, இப் படையை முற்றும் தலை துமிப்பளவும், தாங்கி,
நீக்குதி, நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் 59-

காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால்- தங்களைக்
காப்பவர்கள் எவரும் இல்லை என்று உணர்ந்த கலக்கத்தினால்;
கவியின் சேனை – குரங்குப் படையில் உள்ள வீரர்கள்;
போக்கு அறப் போகி – புகலிடம் இல்லாமல் ஓடி; தம்தம்
உறைவிடம் புகுதல் உண்டு – தத்தம் வாழும் இடங்களை
அடைய நேரிடும் (அப்படி அவர்களைக் கதியற்றவர்களாக்குவது
நமக்கு இழுக்கு); இப்படையை – இந்த அரக்கர் சேனையை;
தாக்கி முற்றும் தலை துமிப்பளவும் – எதிர்த்துத் தாக்கி
முழுவதையும் தலைகளைத் துண்டித்து வரும் வரை; தாங்கி –
பாதுகாத்து; ஆங்கு – அந்த வானரர் இருக்கும் இடத்திற்கு;
நிருதர் நெருக்குவார் – அரக்கர்கள் நெருக்குவாராகி;
நெருங்கா வண்ணம் – குறுகாதபடி; நீக்குதி- அரக்கர்
சேனை வீரர்களை நீக்குவாயாக.

———–

‘இப் புறத்து இனைய சேனை ஏவி, ஆண்டு இருந்த தீயோன்,
அப் புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன், அயலே வந்து,
தப்பு அறக் கொன்று நீக்கில், அவனை யார் தடுக்க வல்லார், –
வெப்புறுகின்றது உள்ளம், – வீர! நீ அன்றி, வில்லோர்? 60-

வீர – வீரனே! இப்புறத்து- இங்கே; இனைய சேனை ஏவி –
இத்தகைய அரக்கர் படையை வருமாறு கட்டளை இட்டு; ஆண்டு
இருந்த- அங்கே இருந்த; தீயோன் – கொடியவனும்; அமைந்த
சூழ்ச்சி அறிந்தவன் – பொருத்தமான தந்திரம் அறிந்தவனும் ஆகிய
இராவணன்; அப்புறத்து அயலே வந்து – அந்தப் பக்கத்தில்
வானர சேனை உள்ள இடத்துக்குப் பக்கமாக வந்து; தப்பு அற –
தப்புதல் இன்றி; கொன்று நீக்கின் – குரக்குப் படையைக்
கொன்று தீர்த்தால்; அவனை- அந்த இராவணனை; நீ அன்றி –
நீ அல்லாமல்; வில்லோர்- வில் ஏந்திய வீரர்களில்; யார்
தடுக்கத் தக்கார்- யார் தடுக்கத் தகுதி உடையவர்கள்?
உள்ளம் வெப்பு உறுகின்றது- (இந்த நிலையை எண்ணினால்)
மனம் வெதும்புகின்றது.

————-

‘மாருதியோடு நீயும், வானரக் கோனும், வல்லே,
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் தனிமை பேணிச்
சோருதிர் என்னின், வெம் போர் தோற்றும், நாம்’ என்னச் சொன்னான், வீரன்;
மற்று அதனைக் கேட்ட இளையவன் விளம்பலுற்றான்: 61-

வீரன் – இராமன்; மாருதியோடு வானரக் கோனும் நீயும்-
அனுமனோடு சேர்ந்து சுக்கிரீவனும் நீயும்; சேனை காக்க-
வானரப் படையைக் காப்பதற்கு; வல்லே- விரைவாக; பேருதிர்
– புறப்படுங்கள்; என்னுடைத் தனிமை பேணி – என் தனிமையைப்
பெரிதாகப் போற்றி; சோருதிர் என்னின் – தளர்வீர்களானால்
(அந்தத் தளர்வினால் தாமதிப்பீர்களானால்); நாம் வெம் போர்
தோற்றும்- நாம் இந்தக் கொடிய போரிலே தோற்றுப் போவோம்;
என்ன சொன்னான் – என்று சொன்னான்; அதனைக் கேட்ட
இளையவன் விளம்பலுற்றான் – இராமபிரான் சொல்லிய அதனைக்
கேட்ட தம்பியாகிய இலக்குவன் சொல்லலானான்.

————–

இலக்குவன் இசைந்து செல்ல, அனுமன் இராமனுக்கு அடிமை செய்ய விரும்பி வேண்டுதல்

‘அன்னதே கருமம்; ஐய! அன்றியும், அருகே நின்றால்,
என் உனக்கு உதவி செய்வது – இது படை என்ற போது,
சென்னியில் சுமந்த கையர், தேவரே போல, யாமும்
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி?’ 62-

(இலக்குவன் அதனைக் கேட்டு) ஐய அன்னதே கருமம்
– அதுதான் செய்யவேண்டிய செயல்; அன்றியும்- அது
மட்டுமின்றி; இது படை என்ற போது- அரக்கர் படை
இத்தகையதாக இருப்பதால்; தேவரே போல்- (போரில்
உதவிக்கு வராமலே தூர நின்று பார்த்திருக்கும்) தேவர்களைப்
போல; சென்னியில் சுமந்த கையர்- தலைமேல் கை
வைத்திருப்பவராகி; பொன்னுடை வரிவில் ஆற்றல்-
உனது பொன்னாலாய கட்டமைந்த ஆற்றலை; புறம் நின்று
காண்டல் போக்கி- வெளியிலிருந்து பார்ப்பதை நீக்கிவிட்டு;
உனக்கு உதவி செய்வது என் – உனக்கு நாங்கள்
செய்யக்கூடிய உதவி யாது?

———–

என்று அவன் ஏகலுற்ற காலையின், அனுமன், ‘எந்தாய்!
“புன் தொழில் குரங்கு” எனாது, என் தோளின்மேல் ஏறிப் புக்கால்,
நன்று எனக் கருதாநின்றேன்; அல்லது, நாயினேன்
உன் பின் தனி நின்றபோதும், அடிமையில் பிழைப்பு இல்’ என்றான் 63-

என்று அவன் ஏகலுற்ற காலையின்- மேற்குறித்தவாறு
இலக்குவன் சொல்லி வானர சேனையை நோக்கிப் போகத்
தொடங்கிய போது; அனுமன் – அனுமன் (இராமனை நோக்கி)
எந்தாய் – எம் பெருமானே! புன் தொழில் குரங்கு எனாது –
அற்பச் செயல் திறம் கொண்ட குரங்குதானே என்று
புறக்கணிக்காமல்; என் தோளின் மேல் ஏறிப் புக்கால்-
என் தோளின் மீது ஏறிப் போர்க்களம் புகுந்தால்; நன்று
எனக் கருதா நின்றேன்- நல்லது என்று நினைக்கின்றேன்;
அல்லது- அவ்வாறு செய்யாவிடினும்; நாயினேன் உன் பின்-
அடியனேன் உனக்குப் பின்புறமாக; தனி நின்றபோதும்-
தனியாக நின்றாலும்; அடித் தொழில் பிரியேன் –
திருவடிக்குரிய பணி செய்வதிலிருந்து பிரியாதவன் ஆவேன்;
என்றான்.

————

இலக்குவனுக்கு ஏற்ற துணை நீயே என இராமன் உரைக்க அனுமன் இசைந்து இலக்குவனை தொடர்தல்

‘ஐய! நிற்கு இயலாது உண்டோ ? இராவணன் அயலே வந்துற்று,
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால்,
மொய் அமர்க் களத்தின் உன்னைத் துணை பெறான் என்னின், முன்ப!
செய்யும் மா வெற்றி உண்டோ ? சேனையும் சிதையும் அன்றே? 64-

ஐய! நிற்கு இயலாது உண்டோ – உன்னால் செய்ய
முடியாதது என ஏதாவது உண்டா?; இராவணன் அயலே
வந்துற்று – இராவணன் வானர சேனையின் பக்கம் வந்து
சேர்ந்து; எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன்
தன்னோடு – அம்புகளை எய்கின்ற வில் ஏந்திய
இலக்குவனை; ஏற்றால்- எதிர்த்து நின்றால்; மொய் அமர்க்
களத்தின்- செறிந்த அந்தப் போர்க்களத்தில்; உன்னைத்
துணை எனப்பெறான் என்னில் – உன்னைத் தனக்கு
துணையாகப் பெறாமற் போனால்; முன்ப – வலிமை
மிக்கவனே; செய்யும் மா வெற்றி உண்டோ- இலக்குவன்
விளைக்கக் கூடிய பெரிய வெற்றி உண்டோ; சேனையும்
சிதையும் அன்றே- மேலும், வானரப் படையும் சிதைந்து
போகுமன்றோ?

———–

‘ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான் தன்
போரைக் கொண்டு இருந்த முன் நாள், இளையவன் தன்னைப் போக்கிற்று
ஆரைக் கொண்டு? உன்னால் அன்றே, வென்றது அங்கு அவனை? இன்னம்
வீரர்க்கும் வீர! நின்னைப் பிரிகலன், வெல்லும் என்பேன் 65-

ஏரைக் கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்
தன்- அழகோடு கூடியமைந்த குடுமியை உடைய இந்திரசித்து
என்பவனுடைய; போரைக் கொண்டு இருந்த முன்நாள் –
போரினை மேற்கொண்ட முன் நாளில்; இளையவன் தன்னைப்
போக்கிற்று- இலக்குவனை அனுப்பியது; ஆரைக் கொண்டு-
யாரை முன்னிட்டுக் கொண்டு போருக்கு அனுப்பியது? அங்கு
அவனை வென்றது உன்னால் அன்றே- அவனை வெற்றி
கொண்டது உன்னால்தான் அல்லவா? வீரர்க்கு வீர! –
வீரர்களுக்கெல்லாம் வீரனே! நின்னைப் பிரிகலன்- உன்னை
விட்டுப் பிரியாதவனாயின்; வெல்லும் என்பேன்- (இலக்குவன்
இனியும்) வெல்வான் என்று உறுதியாகச் சொல்வேன்.

————-

‘சேனையைக் காத்து, என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த
யானையைக் காத்து, மற்றை இறைவனைக் காத்து, எண் தீர்ந்த
வானை இத் தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி’ என்றான்;
ஏனை மற்று உரைக்கிலாதான், இளவல்பின் எழுந்து சென்றான். 66-

சேனையைக் காத்து- வானரப் படையைப் பாதுகாத்து;
திருநகர் தீர்ந்த- அயோத்தியாகிய செல்வ நகரை விடுத்து;
என் பின்னே போந்த- என்னைத் தொடர்ந்து (காட்டுக்கு)
வந்த; யானையைக் காத்து – களிறு போல்வானாகிய
இலக்குவனைப் பாதுகாத்து; எண் தீர்ந்த வானை – மன
எண்ணத்தின் எல்லையைக் கடந்த விண்ணுலகத்தை; இத்
தலத்தினோடும்- இந்த நிலவுலகத்தோடும்; மறையொடும்
– வேத நெறியோடும்; வளர்த்தி என்றான்- வளர்ப்பாயாக
என்று இராமபிரான் கூறினான்; ஏனை மற்று உரைக்கிலாதான்
– இராமன் சொன்னதற்கு மறு மாற்றமாக வேறு ஒன்றும்
சொல்லமாட்டாதவனாகிய அனுமன்; எழுந்து இளவல் பின்
சென்றான்- புறப்பட்டு இலக்குவன் பின்னால் போகலானான்.

————-

இலக்குவனுக்குத் துணையாக வீடணனையும் இராமன் அனுப்புதல்

‘வீடண! நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி, வெம்மை
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி, கொற்றம்
நீடுறு தானைதன்னைத் தாங்கினை, நில்லாய் என்னின்,
கேடு உளது ஆகும்’ என்றான்; அவன் அது கேட்பதானான் 67-

வீடண- விபீஷணா! நீயும் உன் தம்பியோடு ஏகி – நீயும்
உன் தம்பியுடன் சென்று; வெம்மை கூடினர்- கொடுமையால்
மிக்க அரக்கர்கள்; செய்யும் மாயம் தெரிந்தனை கூறி –
செய்கின்ற மாயங்களை ஆராய்ந்து சொல்லி; கொற்றம் நீடு
உறு தானை தன்னை- வெற்றி நிலை பெறுகின்ற (நம்) சேனையை;
தாங்கினை நில்லாய் என்னின் – தாங்கி நிற்க மாட்டாயென்றால்;
கேடு உளது ஆகும் – கெடுதல் உண்டாகும்; என்றான் – என
இராமன் கூறினான்; அவன் அது கேட்பதானான் – வீடணன்
அதைக்கேட்டு நடந்தான்.

—————-

சுக்கிரீவன் முதலியோரும் இலக்குவனுடன் சென்று, வானரத் தானையைக் காத்தல்

சூரியன் சேயும், செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன்,
ஆரியன் பின்பு போனான்; அனைவரும், ‘அதுவே நல்ல
காரியம்’ என்னக் கொண்டார்; கடற்படை காத்து நின்றார்;
வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம்; 68-

சூரியன் சேயும் – அனுமனுக்கும் வீடணனுக்கும் இராமன்
இட்ட கட்டளை கேட்டு நின்ற சுக்கிரீவனும்; செல்வன் சொற்றதே
எண்ணும் சொல்லன் – இராமபிரான் என்ன சொன்னானோ
அதனையே நினைக்கின்ற தன்மை உடையவன் ஆதலால்; ஆரியன்
பின்பு போனான் – (இராமன் வாயால் சொல்லுமுன்பே)
இலக்குவன் பின் போனான்; அனைவரும் அதுவே நல்ல காரியம்
என்னக் கொண்டார் – அவன் செய்கையைப் பார்த்த எல்லாரும்
அதுவே நல்ல செயல் என முடிவு கட்டினவராய்; கடற்படை காத்து
நின்றார் – கடல்போல் பரந்த வானரப் படையைக் காத்து நின்றார்கள்
(எனவே யாவரும் போய்விட இராமன் தனியே மூல பலத்தை எதிர்க்க
நின்றான்.); வீரியன் பின்னர்ச் செய்த செயல் எலாம்
விரிக்கலுற்றாம் – வீரனாகிய இராமன் அதன்மேல் செய்த
செயல்களையெல்லாம் விரித்துரைக்கலானோம்.

————-

இராமன் வில் ஏந்தி, முன்னணியில் வந்து பொருதல்

வில்லினைத் தொழுது, வாங்கி, ஏற்றினான்; வில் நாண் மேருக்
கல் எனச் சிறந்ததேயும், கருணை அம் கடலே அன்ன
எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச்
சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி, 69-

மேருக்கல் எனச் சிறந்ததேனும் – இராமபிரானின் மார்பு
மேரு மலைபோல் திண்மையால் சிறந்ததேயாயினும்; கருணை அம்
கடலே அன்ன- கருணையாகிய கடலினையே போன்றதும்; எல்
ஒளி மார்பில் – விளங்குகின்ற ஒளி பொருந்தியதும் ஆகிய
மார்பில்; தீராக் கவசம் இட்டு – அழியாத கவசம் அணிந்து;
இழையா வேதச் சொல் எனத் தொலையா – எவராலும்
செய்யப்படாத வேத மந்திரம் போல் என்றும் வற்றாத; வாளித்
தூணியும் புறத்துத் தூக்கி – அம்பறாத் தூணியையும் முதுகிலே
தொங்க விட்டு; வில்லினைத் தொழுது வாங்கி – வில்லை
வணங்கி வளைத்து; வில் நாண் ஏற்றினான்- அந்த வில்லிலே
(இராமன்) நாண் ஏற்றினான்.

————

ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனைத்
தூசி வந்து அண்ணல்தன்னைப் போக்கு அறவளைந்து சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலும், விண்ணோர் ஆக்கை
கூசின, பொடியால்; எங்கும் குமிழ்த்தன, வியோம கூடம் 70-

நூற்றின் சேனை வட்டம் – நூறு யோசனை தூரப் பரப்பில்
வட்டமாக; இடைவிடாது உறைந்த சேனைத் தூசி வந்து –
சற்றும் இடைவெளியில்லாமல் தங்கிய அரக்கர் படையின் முன்னணிப்
படையானது புறப்பட்டு; போக்கு அற அண்ணல் தன்னை வளைத்துச்
சுற்றி- தப்ப முடியாமல் இராமபிரானை வளைத்துச் சூழ்ந்துகொண்டு;
வீசின படையும் அம்பும் மிடைதலும் – வீசிய படைக்கலங்களும்
அம்பும் செறிந்தமையால்; விண்ணோர் யாக்கை கூசின – தேவர்கள்
உடல்கள் கூசின; பொடியால் – (போர்க்களத்து மோதுதலால் எழுந்த)
தூசுகளால்; வியோம கூடம் – ஆகாயமாகிய கூடம்; எங்கும்
குமிழ்த்தன- எவ்விடத்தும் சிலிர்ப்பு அடைந்தன.

———-

தேவர், முனிவர், முதலாயினார் இராமனை ஏத்தி, ஆசி மொழிதல்

‘கண்ணனே! எளியேம் இட்ட கவசமே! கடலே அன்ன
வண்ணனே! அறத்தின் வாழ்வே! மறையவர் வலியே! மாறாது
ஒண்ணுமே, நீ அலாது, ஓர் ஒருவர்க்கு இப் படைமேல் ஊன்ற?
எண்ணமே முடித்தி!’ என்னா, ஏத்தினர், இமையோர் எல்லாம் 71-

இமையோர் எல்லாம்- தேவர்கள் எல்லோரும்; கண்ணனே –
எமக்குக் கண்ணானவனே! எளியேம் இட்ட கவசமே-
எளியவர்களாகிய எங்களுக்குப் பாதுகாவலாக இடப்பட்ட கவசமே;
கடலே அன்ன வண்ணனே- கடல்போல் (நீல) நிறம் உடையவனே;
அறத்தின் வாழ்வே- தருமத்திற்கு வாழ்வாய் இருப்பவனே;
மறையவர் வலியே- வேதியர்க்கு வலிமையானவனே; நீ அலாது-
உன்னைத் தவிர; இப்படைமேல் ஊன்ற – இந்த அரக்கர் படையை
எதிர்த்து நிற்க; ஓர் ஒருவர்க்கு மாறாது ஒண்ணுமே – வேறு
ஒருவருக்கு மாறாமல் முடியுமா? எண்ணமே முடித்தி – உன் அவதார
எண்ணத்தை முடிப்பாயாக; என்னா ஏத்தினர் – என்று
இராமபிரானைத் துதித்தனர்.

—————–

முனிவரே முதல்வர் ஆய அறத் துறை முற்றினோர்கள்,
தனிமையும், அரக்கர் தானைப் பெருமையும், தரிக்கலாதார்,
பனி வரு கண்ணர், விம்மிப் பதைக்கின்ற நெஞ்சர், ‘பாவத்து,
அனைவரும் தோற்க! அண்ணல் வெல்க!’ என்று ஆசி சொன்னார். 72-

முனிவரே முதல்வர் ஆய அறத்துறை முற்றினோர்கள் –
முனிவர்கள் முதலியோராகிய அறநெறியில் நிரம்பியவர்கள்;
தனிமையும்- (இராமபிரானது) தனிமையையும்; அரக்கர் தானைப்
பெருமையும்- இராக்கதர்களின் சேனைப் பெருக்கத்தையும்;
தரிக்கலாதார் – பொறுக்க இயலாதவர்களாய்; பனிவரு கண்ணர்
– நீர் சொரியும் கண்ணினராயும்; விம்மிப் பதைக்கின்ற
நெஞ்சினர் – விம்மலுற்று நடுங்குகின்ற நெஞ்சினராயும்; பாவத்து
அனைவரும் தோற்க – பாவத்தின் சார்பிலுள்ள (அரக்கர்) எல்லாரும்
தோற்றிடுக; அண்ணல் வெல்க- தலைவராகிய இராமபிரானே
வெல்க; என்று ஆசி சொன்னார் – என வாழ்த்தினார்கள்.

————–

இராமன் தனியே நின்று பொரும் ஆற்றல் கண்டு, அரக்கர் வியத்தல்

‘இரிந்து சேனை சிந்தி, யாரும் இன்றி ஏக, நின்று, நம்
விரிந்த சேனை கண்டு, யாதும் அஞ்சல் இன்றி, வெஞ் சரம்
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையான்
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று! மாலி பொய்க்குமோ? 73-

இரிந்து சிந்தி – ஓடிச் சிதறி; யாரும் இன்றிச் சேனை
ஏக – போர்க்களத்திலே எவரும் எஞ்சி நிற்காமல் வானர சேனை
முழுவதும் போய்விட; நின்று- உறுதியாகப் போர்க்களத்திலே
நிலைத்து நின்று; விரிந்த நம் சேனை கண்டு யாதும் அஞ்சல்
இன்றி- பரந்துள்ள நம் அரக்கர் சேனையைக் கண்டு சிறிதும்
பயம் இல்லாமல்; வெஞ்சரம் தெரிந்த சேவகம் திறம்பல்
இன்றி – பகைவரை அழித்தலில் கொடிய கணைகளைத்
தேர்ந்தெடுத்து எய்யும் வீரர்க்குரிய நெறியிலிருந்து
பிறழாமல்; நின்ற செய்கையான் – போரிலே உறுதியாக
நிற்கும் வீரச் செய்கை உடைய இந்த இராமன்; புரிந்த
தன்மை வென்றி – போர் விரும்பும் தன்மையால் பெறும்
வெற்றி; மேலும் நன்று – மேன்மேலும் சிறப்புடையதே யாகும்;
மாலி பொய்க்குமோ – மாலியவான் சொன்னது பொய்யாகுமா
(ஆகாது என்று அரக்கர் வியந்தனர்).

————

‘புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர்; பொருந்தினார்,
பரந்த தேவர்; மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள்,
விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான்;
கரந்திலன், தனித்து ஒருத்தன் நேரும், வந்து, காலினான் 74-

புரங்கள் எய்த புங்கவற்கும் தேர் உண்டு- முப்புரங்களை
எய்த மேலானவனாகிய சிவனுக்கும் தேர் இருந்தது; பரந்த
தேவர் பொருந்தினார் – பெருகிய தேவர்களும்
(வாகனங்களைப்) பொருத்தியவர்களே; பண்டை நாள் நம்மை
வேர் அறுத்த மாயன் – முன்னாளில் நம் குலத்தை வேரோடு
அழித்த திருமால்; விண்ணுளோர்களோடு – தேவர்களோடு;
புள்ளின் மீது விரைந்து மேவினான் – வாகனமாகிய (கருடப்)
பறவையோடு வேகமாக வந்தான்; தனித்து ஒருத்தன் –
(அவர்களெல்லாம் அப்படி வாகனங்களோடு வர) இந்தத் தனி
ஒருவன்; கரந்திலன் – ஒளியாதவனாய்; காலினான் வந்து நேரும்
– காலால் நடந்து வந்து எதிர் நிற்கிறான்;

—————

‘தேரும், மாவும், யானையோடு சீயம், யாளி, ஆதியா
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால்;
“வாரும், வாரும்” என்று அழைக்கும் மானிடற்கு, இம் மண்ணிடைப்
பேருமாறும் நம்மிடைப் பிழைக்குமாறும் எங்ஙனே?’ 75-

தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா- தேர்,
குதிரை, யானைகளோடு சிங்கங்கள் யாளி முதலானவையும்; மேரு
மானும் மெய்யர் – மேரு மலை போன்ற பெரிய உடல்
கொண்டவர்களுமாய்; ஏழின் வேலை மேலவா நின்ற- ஏழு
கடல்களுக்கும் அதிகமான பரப்போடு அமைப்போடு (படைகள்
பெருகி) நின்றன; (எனினும்) வாரும் வாரும் என்று அழைக்கும்
மானுடற்கு- போர் செய்ய வாருங்கள் என்று அழைக்கும்
மனிதனுக்கு எதிராக; இம்மண்ணிடைப் பேருமாறும் – (போர்
செய்து) இந்த உலகத்திலே தப்பிப் போகும் வகையும்; நம்
முழைப் பிழைக்குமாறும் – நம்மிடையே உள்ளவர்கள் உயிர்
தப்பிப் பிழைக்கும் வகையும்; எங்ஙனே- எப்படி?

—————

இராமன் நாண் எரிதலும், அரக்கரிடையே துன்னிமித்தம் தோன்றுதலும்

என்று சென்று, இரைந்து எழுந்து, ஓர் சீய ஏறு அடர்த்ததைக்
குன்று வந்து சூழ் வளைந்த போல், தொடர்ந்து கூடலும், ‘நன்று இது!’
என்று, ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன்
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலைவாய் 76-

என்று சென்று- மேற்கூறியபடி அரக்கர்கள் மேலே சென்று;
இரைத்து அடர்த்து – ஆரவாரம் செய்து தாக்க முனைந்து; ஓர்
சீய ஏறு அடர்ந்ததை – ஓர் ஆண்சிங்கம் தாக்க வந்ததை;
குன்று சூழ் வளைந்தபோல் – மலைகள் சூழ்ந்து
வளைத்துக்கொண்டது போல்; தொடர்ந்து கூடலும்- அரக்கர்
சேனை மேன்மேல் கூடியதும்; வேதநாதன் – மறைகளின்
தலைவனாகிய இராமபிரான்; ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும்
தன் வென்றி வில்லை – ஏழு உலகங்களையும் ஏழு மலைகளையும்
ஒத்ததாகியதும் வெற்றிக்கே உரியதுமான தன் கோதண்டம்
என்ற வில்லினது; நாண் எறிந்த வேலைவாய் – கயிற்றினை
இறுக்கித் தெறித்தபோது (தொடரும்)

———-

கதம் புலர்ந்த, சிந்தை வந்த, காவல் யானை; மாலொடு
மதம் புலர்ந்த; நின்ற வீரர் வாய் புலர்ந்த; மா எலாம்
பதம் புலர்ந்த; வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின், வென்ற வென்றி சொல்ல வேணுமோ? 77-

காவல் யானை சிந்தை வந்த கதம் புலர்ந்த- காவலாக
வந்த அரக்கர் சேனை யானைகளின் மனத்தில் எழுந்த கோபம்
உலரப் பெற்றன; மாலொடு மதம் புலர்ந்த- மதத்தோடு மத
நீரும் உலர்ந்தன; நின்ற வீரர் வாய் புலர்ந்த-
ஓடிவிடாமல் நின்ற அரக்க வீரர்களின் வாய்கள் உலர்ந்தன;
மா எலாம் பதம் புலர்ந்த- குதிரைகளெல்லாம் தங்கள் வேகம்
இழந்தன; வாள் அரக்கர் பண்பு சால் வீதம் வேகமாகப் புலர்ந்தது- வாள் ஏந்திய அரக்கர்களின்
வீரப் பண்பு மிக்க போர்வேகம் விரைவாகக் குறைந்தது;
என்னின் – என்றால்; வென்ற வெற்றி சொல்ல வேணுமோ-
இராமபிரான் வென்ற வெற்றியின் சிறப்பைத் தனியே
சொல்லவேண்டுமா? (வேண்டியதில்லை).

————-

வெறித்து இரிந்த வாசியோடு, சீய மாவும் மீளியும்,
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம்
முறித்து எழுந்து அழுந்த, யானை வீசும் மூசு பாகரைப்
பிறித்து இரிந்து சிந்த, வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால், 78-

வெறித்து இரிந்த வாசியோடு- அஞ்சி மருண்டு ஓடிய
குதிரைகளோடு; சீய மாவும் – சிங்கமாகிய விலங்குகளும்;
மீளியும் – பேய்களும்; செறித்து அமைந்த சில்லி என்னும்
ஆழி கூடு தேரெலாம் – நன்கு செறிவுற அமைக்கப்பட்ட
சில்லி என்னும் சக்கரங்கள் சேர்ந்த தேர்களையெல்லாம்;
முறித்து எழுந்த – முறித்து முன்னேறி ஓடின; முற்கை யானை
– முன்னே (தொங்கும்) துதிக்கையுடைய யானைகள்; வீசும் மூசு
பாகரை- (அங்குசம்) வீசி நெருங்குகின்ற பாகர்களை; பிறித்து
இரிந்து சிந்த- பிரித்து ஓடிச் சிதறும்படியாக; ஓர் ஆகுலம்
வந்து பிறந்தது- ஒரு துயரம் வந்து தோன்றியது.

———–

‘இந் நிமித்தம் இப் படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர்
துன்னிமித்தம்’ என்று கொண்டு, வானுளோர்கள் துள்ளினார்;
அந் நிமித்தம் உற்றபோது, அரக்கர் கண் அரங்க, மேல்
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேத நாதன் வீசினான் 79-

இந் நிமித்தம் – இப்போது ஏற்பட்டுள்ள இந்த
உற்பாதங்கள்; இப் படைக்கு- இந்த அரக்கர் சேனைக்கு;
இடம் துடித்து அடுத்தது ஓர் துன்னிமித்தம்- இடப் புறம்
துடித்து, அதன் பின் தொடர்ந்து வந்த தீய நிமித்தமாகும்; என்று
கொண்டு- என்று கருதி;வானுளோர்கள் துள்ளினார் – விண்ணுலகத்துத் தேவர்கள்
மகிழ்ச்சியால் துள்ளினார்கள்; அந்நிமித்தம் உற்றபோது
– அந்தத் தீய சகுனம் உண்டான போது; அரக்கர் கண்
அரங்க – அரக்கர்கள் கண் கலங்கும்படி; வேத நாதன் –
வேதங்களுக்குத் தலைவனாகிய இராமன்; மேல்மின் நிமிர்த்தது
அன்ன – விண்ணில் தோன்றும் மின்னலை நிமிர்த்தி
அமைத்தது போன்ற; வாளி வீசினான்- அம்புகளை எய்தான்.

———

ஆளி மேலும், ஆளின் மேலும், ஆனை மேலும், ஆடல் மா
மீளி மேலும், வீரர் மேலும், வீரர் தேரின் மேலும், வெவ்
வாளி மேலும், வில்லின் மேலும், மண்ணின் மேல் வளர்ந்த மாத்
தூளி மேலும் ஏற ஏற, வீரன் வாளி தூவினான். 80-

ஆளி மேலும் – அரக்கர் படையில் வந்த சிங்கங்களின்
மீதும்; ஆளின் மேலும் – காலாட்படை வீரர்கள் மீதும்; ஆனை
மேலும் – யானைகள் மீதும்; ஆடல் மா மேலும்- ஆடுகின்ற
குதிரைகள் மீதும்; மீளி மேலும் – பேய்கள் மீதும்; வீரர்
மேலும் – வீரர்கள் மேலும்; வீரர் தேரின் மேலும் –
வீரர்கள் செலுத்தி வந்த தேரின் மேலும்; வெவ் வாளி
மேலும் – அரக்கர் ஏவிய கொடிய அம்புகளின் மீதும்;
வில்லின் மேலும் – அந்த அம்புகளை எய்த விற்களின்
மேலும்; மண்ணின் மேல் வளர்ந்த மாத்தூளி – போர்க்கள
நிலத்தில் மேலும் மேலும் பெருகிய பெருந் தூசிப்படலம்;
மேலும் ஏற ஏற- மேன்மேல் ஏறிப் பெருகும்படியாக; வீரன்-
இராமபிரான்; வாளி தூவினான்- அம்புகளை (எங்கெங்கும்)
சிதறினான்.

———–

மலை விழுந்தவா விழுந்த, மான யானை; மள்ளர் செத்
தலை விழுந்தவா விழுந்த, தாய வாசி; தாள் அறும்
சிலை விழுந்தவா விழுந்த, திண் பதாகை; திங்களின்
கலை விழுந்தவா விழுந்த, வெள் எயிற்ற காடு எலாம் 81-

மான யானை- பெருமை மிக்க யானைகள்; மலை விழுந்த
வா விழுந்த- மலைகள் விழுந்ததுபோல விழுந்தன; தாய வாசி-
தாவிச் செல்லும் குதிரைகள்; மள்ளர் செந்தலை விழுந்தவா
விழுந்த- அரக்க வீரர்களின் சிவந்த (குடுமியுடைய) தலைகள்
விழுந்ததுபோல விழுந்தன; திண் பதாகை- வலிய கொடிகள்;
தாள் அறும் சிலை விழுந்த வா விழுந்த- அடிப்பகுதி
அறுபட்ட விற்கள் விழுந்ததுபோல் விழுந்தன; வெள் எயிற்ற
காடு எலாம் – யானைத் தந்தங்களும் அரக்கர்களின்
கோரைப் பற்களும் ஆகிய தொகுதிகள்; திங்களின் கலை
விழுந்தவா விழுந்த- சந்திர கலைகள் விழுந்தது போல்
விழுந்தன.

———-

வாடை நாலு பாலும் வீச, மாசு மேக மாலை வெங்
கோடை மாரி போல வாளி கூட, ஓடை யானையும்,
ஆடல் மாவும், வீரர் தேரும், ஆளும், மாள்வது ஆனவால்;
பாடு பேருமாறு கண்டு, கண் செல் பண்பும் இல்லையால் 82-

வாடை நாலு பாலும் வீச- வாடைக் காற்று நான்கு
பக்கங்களிலும் வீச; மாக மேக மாலை- வானத்திலுள்ள மேகக்
கூட்டங்கள்; வெங்கோடை மாரி போல – கொடிய கோடைக்
காலத்து மழை போல; வாளி கூட- இராமபிரான் விடுக்கும்
கணைகள் மிகுதியாகப் பெருகுவதால்; ஓடை யானையும்-
முகபடாம் அணிந்த யானைகளும்; ஆடல் மாவும்- வெற்றி
தரும் குதிரைகளும்; வீரர் தேரும்- வீரர்கள் செலுத்துகின்ற
தேர்களும்; ஆளும் – காலாட்படை வீரர்களும்; மாள்வது
ஆனவால் – இறந்து பட்டன(ர்); பாடு பேருமாறு கண்டு-
எல்லாப் பக்கங்களிலும் (குருதி வெள்ளம்) பெருகி
ஓடுகின்றதைக் கண்டு; கண் செல் பண்பும் இல்லை- கண்ணின்
பார்வை செல்கின்ற பண்பும் இல்லை.

————-

விழித்த கண்கள், கைகள், மெய்கள், வாள்கள், விண்ணினுள்
தெழித்த வாய்கள், செல்லலுற்ற தாள்கள், தோள்கள், செல்லினைப்
பழித்த வாளி சிந்த, நின்று பட்ட அன்றி, விட்ட கோல்
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே 83-

செல்லினைப் பழித்த வாளி சிந்த- மேகத்தைப் பழித்தது
போல இராமபிரான் அம்புகளைப் பொழிந்திட; விழித்த
கண்கள் – அரக்கரின் திறந்த கண்களும், கைகளும்;
விற்கள், வேல்கள், வாள்கள் – வில், வேல், வாள்
முதலியவைகளும்; விண்ணினுள் தெழித்த வாய்கள்-
ஆகாயத்தில் பரவும்படி உரப்பிய வாய்களும்; செல்லலுற்ற
தாள்கள் – போர்க்களத்தை விட்டுப் போய் நடக்கும்
கால்களும்; தோள்கள் – தோள்களும்; நின்று பட்ட அன்றி-
நின்ற நின்ற இடங்களிலேயே அழிந்தனவே தவிர; விட்ட
கோல் – அரக்கர்கள் இராமனை நோக்கிச் செலுத்திய
அம்புகளோ; அழித்த ஆயுதங்கள் – செலுத்திய (மற்றுள்ள)
ஆயுதங்களோ; ஒன்று செய்தது கண்டதில்லை-
இராமபிரானுக்கு ஒரு கெடுதலையும் செய்யக் கண்டதில்லை.

—————

தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும், முன்; துணிந்து
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும்; மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும்; எங்ஙனே, கலந்து நேர்
தடுத்து வீரர்தாமும் ஒன்று செய்யுமா, சலத்தினால்? 84-

தொடுத்த வாளியோடு வில் துணிந்து முன் விழும்- நாணிலே
இணைக்கப்பட்ட அம்போடு விற்கள் கணை விடுபடுமுன் துண்டுபட்டு
விழும்; துணிந்து எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும்
– அரக்க வீரர்கள் துணிவுடன் எடுத்த வாள்களோடு தோள்களும்
துண்டுபட்டு விழும்; மற்று- மேலும்; கடுத்த தாள்கள் உடன்
கண்டம் ஆகும்- விரைந்து இயங்கும் கால்கள் உடனே துண்டு
பட்டு விழும் (இவ்வாறு இராமபிரான் ஏவும் கணைகள்
செயல்படுதலால்); வீரர் தாமும்- அரக்க வீரர்கள்; கலந்து
நேர் தடுத்து – எதிர்நின்று (இராமபாணங்களை) விலக்கி;
சலத்தினால் – சினத்தினால்; ஒன்று செய்யுமா எங்ஙனே-
ஏதேனும் ஓர் எதிர்ச்செயல் செய்வது எப்படி?

———–

குரம் துணிந்து, கண் சிதைந்து, பல்லணம் குலைந்து, பேர்
உரம் துணிந்து, வீழ்வது அன்றி, ஆவி ஓட ஒண்ணுமோ –
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்,
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே? 85-

துணிந்த ஒன்றை- இராமபிரான் தன் அம்புக்கு இலக்காக
முடிவு செய்த ஒன்றை; சரம் நூறு- அம்புகள் நூற்றுக்கணக்கில்;
சென்று சென்று தள்ளலால் – மேலும் மேலும் சென்று விழச்
செய்வதால்; வரம் துணிந்த வீரர் – வரங்களின் வலிமையால்
இராமனையே எதிர்க்கத் துணிந்த அரக்க வீரர்கள்; போரின்
முந்த உந்து வாசி- போர்முனை நோக்கி முன்னேறும்படி
செலுத்துகின்ற குதிரைகள்; குரம் துணிந்து- குளம்புகள்
சிதையப் பெற்றும்; கண் சிதைந்து- கண்கள் சிதையப்
பெற்றும்; பல்லணம் குலைந்து – (குதிரையின் மீதுள்ள)
இருக்கை சிதைவுற்றும்; பேர் உரம் துணிந்து- பெரிய மார்பு
சிதைவுற்றும்; வீழ்வதன்றி- மடிந்து விழுவதைத் தவிர; ஆவி
ஓட ஒண்ணுமே- உயிரோடு ஓட முடியுமா? (முடியாது என்றபடி)

————

ஊர உன்னின், முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்,
பேர ஒல்வது அன்று; பேரின், ஆயிரம் பெருஞ் சரம்
தூர, ஒன்று நூறு கூறுபட்டு உகும்; துயக்கு அலால்,
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே? 86-

தேர்கள் ஊர உன்னின்- பகையரக்கர்களின் தேர்கள்
மெல்லவாவது போக நினைத்தால்; முன்பு- அப்படிச் செல்ல
முற்படும் தேர்களின் முன்புறத்தில்; பட்டு உயர்ந்த வெம்
பிணங்களால் – இறந்து உயரமாகக் குவிந்து கிடக்கின்ற
பிணங்களால்; பேர ஒல்வது அன்று- போக முடிவதில்லை
(பிணக் குவியல்களே தடை); பேரின் – தடையையும் மீறி
மேலே சென்றால்; ஆயிரம் பெருஞ்சரம் தூர- இராமபிரான்
செலுத்தும் ஆயிரம் பெருங் கணைகள் பெருகுதலால்; ஒன்று
நூறு கூறுபட்டு உகும் – ஒவ்வொன்றும் நூறு துண்டுகளாகி விழும்; துயக்கு
அலால்- இதனால் மனச்சோர்வே அன்றி; தேர்கள் என்று
வந்த பாவி- தேர்கள் எனச் சொல்லப்பட்ட பாவிகள்; என்ன
செய்கை செய்யுமே – என்னத்தைத்தான் செய்துவிடும்! (மனங்
கலங்குவதன்றிச் செய்யத்தக்கது ஒன்றுமில்லை).

————

எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும், வல்ல யாவரும்,
கிட்டின், உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற, கேள்வியால்;
முட்டும் வெங் கண் மான யானை, அம்பு உராய, முன்னமே
பட்டு வந்தபோல் விழுந்த; என்ன தன்மை பண்ணுமே? 87-

எட்டு வன் திசைக்கண் நின்ற யாவும்- எட்டுத்
திசைகளிலும் காவலுக்கு அமைந்த வலிய யானைகள் எல்லாமும்;
வல்ல யாவரும்- அவற்றைப் போல வன்மை மிக்க யாவரும்; கிட்டின்
– போரிலே மோதினால்; உய்ந்து போகிலார்கள் என்ன – உயிருடன்
பிழைத்துப் போக முடியாதவர்கள் ஆவர் என்று சொல்லும்படி;
கேள்வியால் நின்ற- புகழோடு நின்ற அரக்கர் சேனையின் யானைகள்;
முட்டும் வெங்கண் மான யானை- பகைவரைத் தாக்கும், கொடிய
பார்வை கொண்ட மான உணர்வுடைய (அந்த) யானைகள்; அம்பு
உராய- இராமபிரான் செலுத்திய அம்புகள் உராய்ந்த அளவிலேயே;
முன்னமே பட்டு வந்த போல் விழுந்த- ஏற்கெனவே இறந்து
வந்தவை போல விழுந்தன; என்ன தன்மை பண்ணுமே- இராமனுக்கு
எதிராக அவை என்னதான் பண்ண முடியும்!

————–

வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று
ஏவின், உண்டை நூறு கோடி கொல்லும் என்ன, எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும், எண் மயங்கும்; அன்ன போரின் வந்து
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே? 88-

வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் – பொய்கையில்
உள்ள தாமரை போன்ற கண் கொண்ட இராமபிரான்; வாளி ஒன்று
ஏவின்- அம்பு ஒன்றைச் செலுத்தினால்; உண்டை நூறு கோடி
கொல்லும் – அப்படி ஏவிய ஓர் அம்பின் படைவகுப்பு நூறு கோடி
உயிர்களைக் கொல்லும்; என்ன – என்பதாக; எண்ணுவான்-
(மாண்ட உயிர்களைக்) கணக்கிடுவோ னாகிய; பூவின் அண்டர்
கோனும்- பூவில் உதித்தவனும் தேவர் தலைவனுமாகிய
பிரமனும்; எண் மயங்கும்- எண்ணிக்கை கணக்கிடுவதில்
திகைப்பான்; அன்ன போரில் வந்து – அந்தப்
போர்க்களத்துக்கு வந்து; ஆவி கொண்ட காலனார் கடுப்பும்-
உயிர்களைக் கவர்ந்த யமனுடைய வேகமும்; அன்னது ஆகுமே-
(இராமபிரான் கணை செலுத்திய) அந்த வேகம் ஆகுமோ? (ஆகாது)

———–

கொடிக் குலங்கள், தேரின் மேல, யானை மேல, கோடை நாள்
இடிக் குலங்கள் வீழ் வெந்த காடுபோல் எரிந்தவால் –
முடிக் குலங்கள் கோடி கோடி சிந்த, வேகம் முற்றுறா
வடிக் குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால்! 89-

வடி வாளிக் குலங்கள்- கூர்மையான அம்பின் கூட்டங்கள்;
வாயினூடு தீயினால் ஓட- அந்த அம்புகளின் முனையில் எழும்
தீயோடு பாய்தலால்; முடிக்குலங்கள் கோடி கோடி சிந்த-
அரக்க வீரர்களின் தலைகளின் கூட்டம் கோடிக்கணக்கில்
சிதைவு படவும்; வேகம் முற்றுறா- கோடிக்கணக்கில் தலைகளை
வீழ்த்திய பிறகும் தம் வேகம் முடிவு பெறாமையால்; தேரின்
மேல யானை மேல- தேர்கள் மீதும் யானைகள் மீதும்
விளங்கியனவாகிய; கொடிக் குலங்கள் – கொடிகளின்
கூட்டங்கள்; கோடை நாள் – கோடைக் காலத்தில்;
இடிக்குலங்கள் வீழ- இடிக் கூட்டங்கள் விழுதலால்; வெந்த
காடுபோல்- எரிந்தொழியும் காடுபோல்; எரிந்த- தீப் பற்றி
எரிந்தன.

—————

அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து,
உற்ற வேகம் உந்த ஓடி, ஓத வேலை ஊடுற,
துற்ற வெம்மை கைம்மிக, சுறுக்கொளச் சுவைத்தால்,
வற்ற நீர் வறந்து, மீன் மறிந்து, மண் செறிந்தவால். 90-

அற்ற- சிதைந்துபோன; வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள்-
வேல், வாள் முதலான ஆயுதங்கள்; மீது எழுந்து- மேல்
நோக்கிப் பாய்ந்து; உற்ற வேகம் உந்த ஓடி- மிகுந்த
வேகம் செலுத்துதலால் மேலே சென்று; ஓத வேலை ஊடுற- நீர்ப்
பெருக்குடைய கடலிலே ஊடுருவி; துற்ற வெம்மை கைம்மிக-
நெருங்கிய வெப்பம் மிகுதலாலும்; சுறுக்கொளச் சுவைத்ததால்
– சுறுக்கெனும் ஓசையுடன் கடல்நீரை உறிஞ்சிச்
சுவைத்ததாலும்; நீர் வற்றி வறந்து – கடல் நீர் வற்றி
வறண்டிட; மீன் மறிந்து – மீன்கள் மடங்கி; மண் செறிந்த
– கடலடி நிலத்திலே செறிந்து விட்டன.

———-

போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி, பொங்கினார்
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால்,
நீர் எரிந்த வண்ணமே, நெருப்பு எரிந்த, நீள் நெடுந்
தேர் எரிந்த, வீரர்தம் சிரம் பொடிந்து சிந்தவே. 91-

போர் – போர்க்களத்திலே; அரிந்தமன் – பகைவர்களை
அடக்குவோனாகிய இராமன்; துரந்த- செலுத்திய; புங்க வாளி
– மேலான அம்புகள்; பொங்கினார் ஊர் எரிந்த நாள்-
எதிர்த்தெழுந்த அசுரர்களின் திரிபுரம் எரிந்த காலத்தில்; துரந்தது
என்ன- (சிவபிரான்) செலுத்திய அம்பு என்னும்படி; மின்னி
ஓடலால்- ஒளி வீசிப் பாய்வதால்; நீர் எரிந்த வண்ணமே- நீர்
பற்றி எரிந்தது போலவே; நெருப்பு எரிந்த – நெருப்புப் பற்றி
எரிந்தன; வீரர் தம் சிரம் – அரக்க வீரர்களின் தலைகள்;
பொடிந்து சிந்தவே – பொடியாகிச் சிதறும்படி; தேர் எரிந்த-
தேர்கள் பற்றி எரிந்தன.

————–

பிடித்த வாள்கள் வேல்களோடு, தோள்கள் பேர் அரா எனத்
துடித்த; யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்தம்
மடித்த வாய்ச் செழுந் தலைக் குலம் புரண்ட, வானின் மின்
இடித்த வாயின் இற்ற மா மலைக் குலங்கள் என்னவே 92-

பிடித்த வாள்கள் வேல்களோடு – கையில் பிடித்த
வாள்களோடும் வேல்களோடும்; பேர் அரா என- பெரிய
பாம்புகளைப் போல; தோள்கள் துடித்த- (அரக்க
வீரர்களின்) தோள்கள் துடித்தன; யானைமீது இருந்து-
யானைகள் மேல் அமர்ந்து; போர் தொடங்கு சூரர் தம்-
போர் செய்யத் தொடங்கும் வீரர்களின்; மடித்த வாய்ச்
செழுந் தலைக்குலம்- மடித்த வாயோடு கூடிய பெரிய
தலைத் தொகுதிகள்; வானின் மின் இடித்த வாயின் –
விண்ணிலிருந்து வரும் மின்னல் தாக்கிய இடத்தில்;
இற்ற – பிளவுற்ற; மாமலைக் குலங்கள் என்ன- பெரிய
மலைக் கூட்டங்கள் போல; புரண்ட- புரண்டன.

————-

கோர ஆளி, சீயம், மீளி, கூளியோடு ஞாளியும்,
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் –
நார ஆளி, ஞால ஆளி, ஞான ஆளி, நாந்தகப்
பார ஆளி, வீர ஆளி, வேக வாளி பாயவே. 93-

நார ஆளி – அன்பினால் ஆள்பவனும்; ஞால ஆளி-
உலகங்களை ஆள்பவனும்; ஞான ஆளி – ஞானத்தை
ஆள்பவனும்; நாந்தகப் பார ஆளி – நாந்தகம் என்ற
வாளின் பாரத்தை ஆள்பவனும்; வீர ஆளி – வீரத்தை
ஆள்பவனுமாகிய இராமபிரானின்; ஏக ஆளி பாய
– ஒரே அம்பு பாய்ந்ததனால்; கோர ஆளி – பயமூட்டும்
யாளிகளும்; சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – சிங்கம்,
வலிய பேய்கள் மற்றும் (செந்) நாயும்; போர ஆளினோடு – போர்க் களத்தில் வந்த வீரர்களோடு;
தேர்கள் நூறு கோடி பொன்றும்- நூறு கோடி தேர்கள்
அழியும்.

————-

ஆழி பெற்ற தேர் அழுந்தும்; ஆள் அழுந்தும்; ஆளொடும்
சூழி பெற்ற மா அழுந்தும்; வாசியும் சுரிக்குமால்-
பூழி பெற்ற வெங் களம் குளம் பட, பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள் அரோ. 94-

பூழி பெற்ற வெங்களம் – புழுதி பரவிய கொடிய
போர்க்களத்தில்; குளம் பட – குளங்கள் உண்டாகும்படியாக;
பேர் ஊழி பெற்ற ஆழி என்ன- பெரிய யுகமுடிவுக் காலத்துக்
கடல்போல்; பொழிந்த சோரி நீரினுள் – பொழிந்த
இரத்தமாகிய வெள்ளத்தில்; ஆழி பெற்ற தேர் அழுந்தும்-
சக்கரங்களோடு கூடிய தேர்கள் அழுந்திப் போகும்; ஆள்
அழுந்தும் – காலாட்படை வீரர்கள் அழுந்திப் போவர்;
ஆளொடும்- மேலே அமர்ந்து செலுத்தும் பாகரோடு; சூழி
பெற்ற மா அழுந்தும் – நெற்றிப் பட்டம் அணிந்த
யானைகள் மூழ்கும்; வாசியும் சுரிக்கும் – குதிரைகளும்
மூழ்கும்.

————-

அற்று மேல் எழுந்த வன் சிரங்கள் தம்மை அண்மி, மேல்
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார்;
‘சுற்றும் வீழ் தலைக் குலங்கள் சொல்லு கல்லு மாரிபோல்
எற்றும்’ என்று, பார் உளோரும் ஏங்குவார், இரங்குவார் 95-

அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்- உடம்பிலிருந்து
துண்டு பட்டு மேல்நோக்கி எழுந்த வலிய தலைகள்; தம்மை
அண்மி – தங்களை நெருங்கி; மேல் ஒற்றும் என்ன- தங்கள்
மேல் ஒட்டும் என்று; விண்ணுளோர் அங்கும் இங்கும்
ஒதுங்குவார் – தேவர்கள் அங்கும் இங்குமாக ஒதுங்கிக்
கொண்டார்கள்; சுற்றும் வீழ் தலைக் குலங்கள்- சுற்றிலும்
எங்கெங்கும் விழுகின்ற தலைகளின் தொகுதிகள்; சொல்லு கல்லின் மாரிபோல் – சிறப்பாகச்
சொல்லப் படுகின்ற கல் மழை போல்; எற்றும் என்று – மோதித்
தாக்கும் என்று;பாரின் எங்கும் வாழுவார் – மண்ணுலகெங்கும்
வாழ்கின்றவர்கள்; இரங்குவார் – வேதனைப்பட்டார்கள்.

————

மழைத்த மேகம் வீழ்வ என்ன, வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வ என்ன, மண்ணின் மீது துன்னுமால் –
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஒளியால்,
விழித்து எழுந்து, வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் 96-

அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன- உலகங்களை யெல்லாம்
அழித்து ஒடுக்குகின்ற ஊழிக்கால மழைபோல; வாளி ஒளியால்-
இராமபிரான் எய்த அம்புகளின் வரிசையால்; விழித்து எழுந்து
– கண்கள் திறந்தபடியே (விண்ணின்மீது) எழும்பி; வானினுக்கு
மொய்த்த பொய்யர் மெய் எலாம் – ஆகாயவெளியிலே
நெருங்கிச் செறிந்த பொய்யர்களாகிய அரக்கர்களின்
உடம்புகளெல்லாம் மழைத்த மேகம் வீழ்வ என்ன- மழைநீர்
நிரம்பிய மேகங்கள் விழுபவை போலவும்; வாடையின் கழித்து
வந்து – வாடைக் காற்றினால் சுழன்று வந்து; வான மானம்-
ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள்; வீழ்வ என்ன- விழுபவை
போலவும்; மண்ணின் மீது துன்னும்- நிலத்தை வந்து அடையும்.

————–

அரக்கர் செய்த போர்

தெய்வ நெடும் படைக் கலங்கள் விடுவர் சிலர்; சுடு கணைகள் சிலையில் கோலி,
எய்வர் சிலர்; எறிவர் சிலர்; எற்றுவர் சுற்றுவர், மலைகள் பலவும் ஏந்தி;
பெய்வர் சிலர்; ‘பிடித்தும்’ எனக் கடுத்து உறுவர்; படைக் கலங்கள் பெறாது, வாயால்,
வைவர் சிலர்; தெழிப்பர் சிலர்; வருவர் சிலர்; திரிவர் சிலர் – வயவர் மன்னோ. 97-

வயவர் சிலர் தெய்வ நெடும் படைக்கலங்கள்
விடுவர்- அரக்க வீரருள் சிலர் தெய்வ வரங்களால்
பெற்ற பெரிய போர்க்கருவிகளை ஏவுவர்; சிலர்-
அவர்களிலே மற்றும் சிலர்; சிலையில் சுடு கணைகள்
கோலி எய்வர் – வில்லில் வெப்பம் உமிழும் அம்புகளைப்
பொருத்தி எய்வார்கள்; சிலர் எறிவர்- மேலும் சிலர்
கிடைத்த கருவிகளைக் கொண்டு எறிவார்கள்; மலைகள்
பலவும் ஏந்தி எற்றுவர், சுற்றுவர்- இன்னும் சில அரக்கர்
பல மலைகளைக் கையால் ஏந்தித் தாக்குவர், மேலும்
கைக்கொண்ட மலைகளைச் சுழற்றுவர்; சிலர் பெய்வர்-
வேறு சிலர் (அந்த மலைகளை) பொழிவர்; (சிலர்) பிடித்தும்
எனக் கடுத்து உறுவர்- மற்றுள்ள சில அரக்கர்கள் அப்படிப்
பெய்யப்பட்ட மலைகளைப் ‘பற்றுவோம்’ என விரைவாக மலை
வருமிடத்தை அடைவார்கள்; படைக்கலங்கள் பெறாது சிலர்
வாயால் வைவர் – எவ்வித போர்க் கருவிகளும் பெறாத சிலர்
வாயால் திட்டுவார்கள்; சிலர் தெழிப்பர் – மேலும் சிலர்
அதட்டுவார்கள்; வருவர் சிலர், திரிவர் சிலர்- மற்றும்
சிலர் புதிதாகப் போர்க்களத்துள் வருவர்; படைக்கலம் பெற்றிடாத
வேறு சிலர் போர்க்களத்தில் இங்குமங்குமாகத் திரிவார்கள்.

—————

ஆர்ப்பர் பலர்; அடர்ப்பர் பலர்; அடுத்து அடுத்தே, படைக் கலங்கள் அள்ளி அள்ளித்
தூர்ப்பர் பலர்; மூவிலைவேல் துரப்பர் பலர்; கரப்பர், பலர்; சுடு தீத் தோன்றப்
பார்ப்பர் பலர்; நெடு வரையைப் பறிப்பர் பலர்-பகலோனைப் பற்றிச் சுற்றும்
கார்ப் பருவ மேகம் என, வேக நெடும் படை அரக்கர் கணிப்பு இலாதார் 98-

கணிப்பு இலாதார் – கணக்கிட முடியாதவராகிய;
பகலோனைப் பற்றிச் சுற்றும் கார்ப்பருவ மேகம் என-
சூரியனைச் சூழ்ந்து சுழலும் கார்கால மேகம் போல; வேக
நெடும் படை அரக்கர் – வேகமாகச் செல்லக் கூடிய
படையிலுள்ள அரக்கர்களில்; பலர் ஆர்ப்பர்- பலர் போர்
முழக்கம் செய்வார்கள்; பலர் அடர்ப்பர்- பகைஞரை நெருங்கிப் போர் செய்வார்கள்;
பலர் அடுத்தடுத்தே படைக்கலங்கள் அள்ளி அள்ளி-
மற்றும் பலர் போர்க்கருவிகளைத் தொடர்ந்து எடுத்து;
தூர்ப்பர்- நிரப்புவார்கள்; பலர் மூவிலை வேல் துரப்பர்
– பலர் திரிசூலத்தைச் செலுத்துவார்கள்; பலர் கரப்பர்-
பலர் ஒளிந்து கொள்வார்கள்; பலர் சுடுதீத் தோன்றப்
பார்ப்பர் – பலர் தன் கண்களிலே சுடும் நெருப்புப்
புலப்படும்படியாகப் பார்ப்பார்கள்; பலர் நெடுவரையைப்
பறிப்பர் – பலர் பெரிய மலைகளைப் பெயர்த்து
எடுப்பார்கள்.

————-

இராமனின் வெற்றி விளக்கம்

எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும், பிடித்தனவும், படைகள் எல்லாம்
முறிந்தன, வெங் கணைகள் பட; முற்றின, சுற்றின தேரும், மூரி மாவும்;
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடுந் தலைகள் உருண்டன; பேர் இருளின் நீங்கி,
பிறிந்தனன் வெய்யவன் என்னப் பெயர்ந்தனன்-மீது உயர்ந்த தடம் பெரிய தோளான். 99-

எறிந்தனவும், எய்தனவும், எடுத்தனவும், பிடித்தனவும்
படைகள் எல்லாம் – வீசி எறியப்பட்டவை, எய்யப்
பெற்றவை, கைகளில் பிடிக்கப்பட்டவை ஆகிய பல்வேறு
போர்க்கருவிகளெல்லாம்; வெங்கணைகள் பட முறிந்தன-
இராமபிரானின் கொடிய அம்புகள் தாக்கியதால்
ஒடிந்தொழிந்தன; சுற்றின தேரும் – சுழன்று சூழ்ந்த
தேர்களும்; மூரி மாவும் – வலிய யானைகளும், குதிரைகளும்;
முற்றின- வாழ்வின் முடிவைப் பெற்றன; நெறிந்தன
குஞ்சிகளோடும் நெடுந்தலைகள் உருண்டன- செறிந்து
வளர்ந்தனவாகிய தலைமுடிகளோடு (அரக்க வீரரின்) பெரிய
தலைகள் உருண்டன; பேர் இருளின் நீங்கிப் பிறந்தனன்
வெய்யவன் என்ன- செறிவுற்ற இருளைவிட்டு நீங்கிப் பிற
சூரியனைப் போல; மீது உயர்ந்த தடம் பெரிய தோளான்-
மிக உயர்ந்தனவும் அகன்றனவும் ஆகிய பெரிய தோள்களை
உடைய இராமபிரான்; பெயர்ந்தனன்- அரக்கர் கூட்டத்திலிருந்து
வெளியேறினான்.

————-

சொல் அறுக்கும் வலி அரக்கர், தொடு கவசம் துகள் படுக்கும்; துணிக்கும் யாக்கை;
வில் அறுக்கும்; சரம் அறுக்கும்; தலை அறுக்கும்; மிடல் அறுக்கும்; மேல் மேல் வீசும்
கல் அறுக்கும்; மரம் அறுக்கும்; கை அறுக்கும்; செய்யில் மள்ளர் கமலத்தோடு
நெல் அறுக்கும் திரு நாடன் நெடுஞ் சரம் என்றால், எவர்க்கும் நிற்கலாமோ? 100-

செய்ய மள்ளர் – வயல்களில் இறங்கும் உழவர்கள்;
கமலத்தோடு நெல் அறுக்கும்- தாமரையோடு நெற்பயிரை
அறுவடை செய்கின்ற; திருநாடன் – தெய்வத்தன்மை பொருந்திய
(கோசல) நாட்டவனாகிய இராமபிரான் ஏவிய; நெடுஞ் சரம்-
நெடிய அம்புகள்; சொல் அறுக்கும் வலி அரக்கர்-
சொல்லின் எல்லைக்கு முடிவு கட்டும் வலிமையுடைய
அரக்கர்கள்; தொடும் கவசம் – கட்டியுள்ள கவசங்களை; துகள்
படுக்கும்- தூளாக்கும்; யாக்கை துணிக்கும்- உடல்களைத்
துண்டாக்கும்; வில் அறுக்கும் – விற்களை அறுத்திடும்;
தலை அறுக்கும்- தலைகளை அறுக்கும்; மிடல் அறுக்கும்-
வலிமையை அழிக்கும்; அடல் அறுக்கும் – (அரக்கர்களின்)
கொல்லுதல் தொழிலை அழிக்கும்; மேல் மேல் வீசும் கல்
அறுக்கும் – தொடர்ந்து (அரக்கரால்) வீசப்படுகின்ற
பெருங்கற்களை நொறுக்கும் ; மரம் அறுக்கும் –
(தாக்குதற்கு அரக்கர் ஏந்தும்) மரங்களை அறுக்கும்; கை
அறுக்கும் – அவற்றை ஏந்தியுள்ள கைகளைத் துணிக்கும்;
என்றால் – இப்படி இராமன் கணை செயல்பட்டது என்றால்;
எவர்க்கும் நிற்கலாமோ- எவரேனும் (இராமனை) எதிர்த்து
நிற்க முடியுமா? (முடியாது)

———–

‘கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,கழுத்து இழந்தும்,பருமக் கட்டின்
மேல் இழந்தும்,மருப்பு இழந்தும், விழுந்தன’ என்குநர் அல்லால், வேலை அன்ன
மால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, கதம் இழந்து, மலைபோல் வந்த
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை-நெடுஞ் சுரர்கள் எல்லாம். 101-

நெடுஞ் சுரர்களெல்லாம்- தரத்தால் பெருமையுடைய தேவர்கள்
யாவரும்; கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து
இழந்தும் – கால், வால், தும்பிக்கை, கழுத்து ஆகியவற்றை
இழந்தும்; பருமக் கட்டின் மேல் இழந்தும் – மேல் இருந்த
அம்பாரியை இழந்தும்; மருப்பு இழந்தும் விழுந்தன-
தந்தங்களை இழந்தும் இறந்து விழுந்தன; என்குநர் அல்லால்-
என்று பேசினார்களே தவிர; மலை போல் வந்த தோல்-
மலைகளைப் போன்ற வடிவுகொண்ட யானைகள்; மால் இழந்து-
கோபம் அழிந்து; மழை அனைய மதம் இழந்து- மழைபோல்
சொரியும் மதநீர் ஒழுகுதலை இழந்து; இழந்த தொழில் ஒன்றும்
சொல்லினர்கள் இல்லை – இழந்துவிட்ட செயல் எதையும்
சொல்லவில்லை.

————–

வேல் செல்வன, சத கோடிகள்; விண்மேல் நிமிர் விசிகக்
கோல் செல்வன, சத கோடிகள்; கொலை செய்வன, மலைபோல்
தோல் செல்வன, சத கோடிகள்; துரகம் தொடர் இரதக்
கால் செல்வன, சத கோடிகள்; ஒருவன், அவை கடிவான்! 102-

(அரக்கர் ஏவி, இராமன் மேல்) செல்வன சத கோடிகள் வேல்
– செலுத்தப்படுகின்றவை நூறு கோடி வேல்களாகும்; விண் மேல்
நிமிர் விசிகக் கோல் சத கோடிகள் செல்வன- வானம்
நோக்கி உயரப் பாய்ந்த அம்புக்கோல்கள் நூறு கோடியாகும்;
கொலை செய்வன மலைபோல் செல்வன – கொலை
செய்கின்றவை யாவும் மலை போன்றனவாயும் செல்லுகின்றனவாகிய;
தோல் சதகோடிகள் – யானைகள் நூறு கோடியாகும்; துரகம்
தொடர்- குதிரைகள் பூட்டப் பெற்று; கால் செல்வன இரதம்
சதகோடி – சக்கரங்களால் இயங்கும் தேர்கள் நூறு கோடியாகும்;
அவை கடிவான் ஒருவன் – மேலே குறித்த நூறு கோடிகள்
கணக்காயினவற்றை ஒழிப்பவன் (இராமன்) ஒருவன்.

———————-

ஒரு வில்லியை, ஒரு காலையின், உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள், முடிவு இல்லவர், சர மா மழை பெய்வார்;
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய,
திருவில்லிகள் தலை போய் நெடு மலைபோல் உடல் சிதைவார். 103-

உலகு ஏழையும் உடற்றும் முடிவில்லவர் பெரு வில்லினர்
– ஏழு உலகங்களையும் எதிர்த்துப் போரிட வல்லவர்களும் பெரிய
விற்கள் ஏந்தியோருமாகிய கணக்கற்ற அரக்கர்கள்; ஒரு
வில்லியை- வில்லை ஏந்தித் தனியொருவனாயுள்ள இராமனை
எதிர்த்து; சர மா மழை பெய்வார் – பெரு மழையாக அம்புகளைப்
பெய்தனர்; பொருவில்லவர் – போர் செய்யும் அந்த
வில்லேந்திகளின்; கணை மாரிகள் பொடியாம் வகை- அம்பு மழை
தூளாகும் வண்ணம்; பொழிய- (இராமபிரானும்) வில் மழை
பொழிதலினால்; திருவில்லிகள் – (வீரச்) செல்வம்
இல்லாதவர்களாகிய அரக்கர்கள்; தலைபோய் – தலைகள்
அறுபட்டு; நெடு மலை போல் உடல் சிதைவார் – பெரிய மலை
போன்ற தங்கள் உடல்கள் அழிந்தனர்.

————-

‘நூறாயிர மத யானையின் வலியோர்’ என நுவல்வோர்,
மாறு ஆயினர், ஒரு கோல் பட, மலைபோல் உடல் மறிவார்;
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம் புனல் அவை புக்கு,
ஏறாது, எறி கடல் பாய்வன, சின மால் கரி இனமால் 104-

நூறாயிரம் மத யானையின் வலியோர்- லட்சம் மத
யானைகளின் வலிமை கொண்டவர்கள்; என நுவல்வோர்-
என்று (சிறப்பித்துச்) சொல்லப்படுவோராகிய அரக்கர்கள்; ஒரு
கோல் பட – (இராமபிரான் ஏவிய) ஓர் அம்பு பட்டவுடன்;
மாறு ஆயினர்- தம் வீரம் மாறுபட்டவராய்; மலை மேல்
உடல் மறிவார்- மலை போன்ற உடல்கள் மடங்கப் பெற்றனர்;
ஆயிரம் ஆறு உள ஆகுவ- (மேலும்) ஆயிரம் (குருதி) ஆறுகள்
உண்டாயினவாக; வழி செம்புனல் அவை புக்கு- களத்தில் வழிந்த இரத்தம் ஆகிய
ஆறுகளிலே கலந்து; சின மால் கரி இனம்- சினமும் மதமும்
கொண்ட யானைக் கூட்டங்கள்; ஏறாது – (அந்தக்
குருதியாற்றின் கரை) ஏறமுடியாமல்; எறி கடல் பாய்வன-
அலைகள் மோதும் கடலிலே போய்க் கலந்தன.

———–

மழு அற்று உகும்; மலை அற்று உகும்; வளை அற்று உகும்; வயிரத்து
எழு அற்று உகும்; எயிறு அற்று உகும்; இலை அற்று உகும், எறி வேல்;
பழு அற்று உகும், மத வெங் கரி; பரி அற்று உகும்; இரதக்
குழு அற்று உகும்;-ஒரு வெங் கணை தொடை பெற்றது ஓர் குறியால். 105-

ஒரு வெங்கணை- (இராமன் ஏவிய) ஒப்பற்ற ஒரு கொடிய
அம்பு; தொடை பெற்றது ஓர் குறியால்- தொடுக்கப்பட்டதாகிய
ஓர் இலக்கினால்; மழு அற்று உகும் – மழுக்கள் சிந்தி விழும்;
மலை அற்று உகும்- அரக்கரால் எறியப்பட்ட மலைகள் சிதறி
விழும்; அற்று உகும் வளை- சிந்தி விழும் வளை என்னும்
கருவிகள்; அற்று உகும் வயிரத்து எழு- வயிரம் போல் உறுதி
வாய்ந்த எழு என்னும் கருவிகள் உடைந்துவிழும்; அற்று உகும்
அயில்- வேல்கள் உடைந்துவிடும்; எழுவேல்- ஓங்கி
எழுகின்ற வேல்களின்; இலை அற்று உகும்- (கூரிய) இலை
போன்ற பகுதி சிதைந்துவிழும்; மத வெங்கரி- மத நீர்
பொழியும் கொடிய யானைகள்; பழு அற்று உகும்- விலா
எழும்பு முறிந்து விழும்; பரி- குதிரைகள்; அற்று உகும் -;
இரதக் குழு- தேர்களின் கூட்டம்; அற்று உகும் -.

———-

ஒரு காலையின், உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வரு காலனும், அவன் தூதரும், நமன் தானும், அவ் வரைப்பின்
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்;
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர், அயர்த்தார் 106-

ஒரு காலையின்- ஒரே நேரத்தில்; உலகத்து உறும் உயிர்
யாவையும் உண்ண- உலகில் வாழும் எல்லா உயிர்களையும்
கவர்வதற்கு; வரு காலனும் – வருகின்ற இயமனும்; அவன்
தூதரும் – இயம தூதர்களும்; நமன் தானும் – நமன்
என்பவனும்; அவ் வரைப்பின்- அப்போர்க்களத்தில்; இரு
கால் உடையவர் – இரண்டு கால்கள் மட்டுமே உடையவராய்;
யாவரும் திரிந்தார்- அவர்கள் எல்லாரும் திரிகின்றவர்களாகி;
இளைத்திருந்தார் – தளர்ச்சி அடைந்தார்கள்; அருகு ஆயிரம்
உயிர் கொண்டு – பக்கத்தே ஆயிரக் கணக்கான உயிர்களைக்
கவர்ந்துகொண்டு; தம் ஆறு ஏகலர் – தமக்குரிய வழியில்
போகாமல்; அயர்த்தார்- உயிர் கவர்தலாகிய தம் தொழிலை
மறந்தார்கள்.

————–

அடுக்குற்றன மத யானையும், அழி தேர்களும், பரியும்
தொடுக்குற்றன விசும்பூடு உறச் சுமந்து ஓங்கின எனினும்,
மிடுக்குற்றன கவந்தக் குலம் எழுந்து ஆடலின், எல்லாம்-
நடுக்குற்றன, பிணக் குன்றுகள், உயிர்க்குற்றன என்ன 107-

அடுக்குற்றன (அழி) மத யானையும் – அடுக்கடுக்காக,
வந்து அழிந்த மத யானைகளும்; அழி தேர்களும் – அழிந்த
தேர்களும்; பரியும்- அழிந்த குதிரைகளும்; தொடுக்குற்றன-
ஒன்றொடொன்று தொடர்புடையனவாய்; விசும்பு ஊடுற-
ஆகாயத்தினூடு சென்று; சுமந்து ஓங்கின- மிக உயரமாய்க்
குவிந்து விட்டன; எனினும் – இப்படிப் பிணங்களாய்க்
குவிந்துவிட்டாலும்; மிடுக்குற்றன கவந்த குலம்- வலிமையான உடல்வாகு கொண்ட கவந்தங்களின்
கூட்டம்; எழுந்து ஆடலின்- குதித்தெழுந்து ஆடுவதால்;
பிணக்குன்றுகள் எல்லாம்- பிண மலைகளெல்லாம்; உயிர்
நண்ணின என்ன- மீண்டும் உயிர் பெற்றுவிட்டதைப் போல்;
நடுக்குற்றன- அதிர்ந்தன.

———–

பட்டார் உடல் படு செம்புனல் திருமேனியில் படலால்,
கட்டு ஆர் சிலைக் கரு ஞாயிறு புரைவான், கடையுகநாள்,
சுட்டு, ஆசு அறுத்து உலகு உண்ணும் அச் சுடரோன் எனப் பொலிந்தான்;
ஒட்டார் உடல் குருதிக் குளித்து எழுந்தானையும் ஒத்தான் 108-

பட்டார் உடல் படு செம்புனல் – இறந்துவிட்ட
அரக்கர்களின் உடலிலே தோன்றிய குருதி; திருமேனியில்
படலால்- தெய்வீக உடம்பிலே பட்டதால்; கட்டு ஆர்சிலைக்
கருஞாயிறு புரைவான்- உறுதி பெறக் கட்டப்பட்ட
வில்லாளியும் கரிய சூரியனைப் போல்வானுமாகிய
இராமபிரான்; யுகக் கடை நாள் – ஊழிக் காலத்தின்
கடைசி நாளில்; சுட்டு – எரித்து; ஆசு அறுத்து- பற்றுக்
கோடானவற்றை அழித்து; உலகு உண்ணும்- உலகங்களை
உண்ணுகின்ற; சுடரோன் எனப் பொலிந்தான்- சூரியனைப்
போல அழகுற விளங்கினான்; ஒட்டார் உடல் குருதி குளித்து
எழுந்தானையும் ஒத்தான்- பகைவர்களின் குருதியிலே மூழ்கி
எழுந்த பரசுராமனைப் போலவும் இருந்தான்.

————–

தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட, சிரம் போய் மாய,
தமர் மடிகின்றனர் எனவும், மறம் குறையா, காயத்திடை
உயிர் உண்டிட, உடன் மொய்த்து எழு களியால் ஈ
ஒத்தன நிருதக் குலம்; நறவு ஒத்தனன் இறைவன் 109-

தீ ஒத்தன உரும் ஒத்தன- நெருப்பையும் இடியையும்
ஒத்தனவாகிய; சரம் சிந்திட- அம்புகளை இராமபிரான்
செலுத்தியதால்; சிரம் போய் மாய- தலை அறுபட்டு
மாய்தலால்; தமர் மடிகின்றனர் எனவும் – தம்மைச்
சார்ந்தவர்கள் இறக்கின்றனர் என்பதை உணர்ந்தும் கூட;
மறம் குறையா- தங்கள் வீரத்தில் குறையாமல்; காயத்திடை
உயிர் உண்டிட- உடலில் உள்ள உயிரை இராமபாணங்கள்
உண்ணும்படியாக; எழு களியால்- பொங்குகின்ற மன
எக்களிப்போடு; நிருதக் குலம் – அரக்கர் கூட்டங்கள்;
உடன் மொய்த்து – ஒருங்கே மொய்த்து; ஈ ஒத்தன-
தேனீக்களைப் போன்று இருந்தன; இறைவன்- தலைவனாகிய
இராமன்; நறவு ஒத்தனன்- தேன் அடையினைப் போன்றவன்
ஆனான்.

————

மொய்த்தாரை ஒர் இமைப்பின்தலை, முடுகத் தொடு சிலையால்
தைத்தான்; அவர், கழல்-திண் பசுங் காய் ஒத்தனர், சரத்தால்;
கைத்தார் கடுங் களிறும், கனத் தேரும், களத்து அழுந்தக்
குத்தான், அழி குழம்பு ஆம்வகை, வழுவாச் சரக் குழுவால் 110-

மொய்த்தான்- தன்னை சூழவந்து நெருங்கிய அரக்கர்களை;
ஓர் இமைப்பின் தலை- ஒரு நொடி நேரத்தில்; முடுகத் தொடு
சிலையால்- விரைவாக அம்பு தொடுக்கும் வில்லினைக்
கொண்டு; தைத்தான்- (இராமபிரான்) தைத்தான்; அவர்
சரத்தால் – அவ்வாறு அம்புகளால் தைக்கப்பட்ட
அரக்கர்கள்; திண் பசுங் கழல்காய் ஒத்தனர்- திண்ணிய
பசிய கழற்சிக்காய் போன்று காட்சியளித்தனர்; கைத்தார்
நெடுந்தேரும்- வெறுப்புக் கொண்ட பகைவர்களுடைய பெரிய
தேர்களையும்; கடுங்களிறும்- விரைவுடைய யானைகளையும்;
வழுவாச் சரக் குழுவால் – இலக்குத் தப்பாத அம்புக்
கூட்டத்தால்; அழி குழம்பால் வகை- மிகுத்துப் பெருகும்
குழம்பாகும் வகையில்; களத்து அழுந்தக் குத்தான்-
போர்க்களத்திலே புதையும்படி சிந்தினான்.

———–

பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்;
புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்;
எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர்; விழுந்தார்,
சொரிந்தார் குடல்; துமிந்தார் த்லை; கிடந்தார், எதிர் தொடர்ந்தார். 111-

பிரிந்தார் பலர் – தம் குழுவிலிருந்து பிரிந்தவர்கள் பலர்;
இரிந்தார் பலர்- ஓடினவர்கள் பலர்; பிழைத்தார் பலர் -;
உழைத்தார் (பலர்)- வேதனை அடைந்தார்கள் பலர்; புரிந்தார்
பலர்- அவருள்ளும் போர் தொடர்ந்து செய்வர்கள் பலர்;
நெரிந்தார் பலர்- உடல் நெரிந்தவர்கள் பலர்; புரண்டார் பலர்,
உருண்டார் பலர் எரிந்தார் பலர்-; கரிந்தார் பலர்- உடல்
கருகியவர்கள் பலர்; எழுந்தார் பலர் – போர்க்களத்தில்
விழுந்தவர்களில் மீண்டும் எழுந்தவர்கள் பலர்; விழுந்தார்
– அப்படி எழுந்தவர்கள் மீண்டும் விழுந்தனர்; குடல்
சொரிந்தனர் (பலர்)- குடல் சொரியப் பெற்றவர்கள் பலர்; தலை
துமிந்தார் (பலர்) – தலை வெட்டப் பட்டவர்கள் பலர்; எதிர்
தொடர்ந்தார் – இராமனை எதிர்த்துத் தொடர்ந்து போர்
செய்தவர்கள்; கிடந்தார் – மேற்குறித்தபடி வீழ்ச்சி அடைந்தார்கள்.

—————–

மணி குண்டலம், வலயம், குழை, மகரம், சுடர் மகுடம்,
அணி கண்டிகை, கவசம், கழல், திலகம், முதல் அகல,
துணியுண்டவர் உடல், சிந்தின; சுடர்கின்றன தொடரும்
திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண 112-

திணி கொண்டலினிடை- செறிந்த மேகங்களினிடையே;
மின் குலம் மிளிர்கின்றன சிவண – மின்னல் கூட்டங்கள் ஒளி
விடுவன போல்; சுடர்கின்றன தொடரும்- ஒளிர்வனவாய்த்
தொடர்ந்துள்ள; மணி குண்டலம்- இரத்தின மணி இழைத்த
குண்டலங்கள்; வலயம் – தோளில் அணியும் (வாகு) வலயம்;
மகரம் குழை – மகரக் குழைகள்; சுடர் மகுடம்- ஒளி வீசும்
கிரீடங்கள்; அணி கண்டிகை- அழகிய கண்டிகை; கவசம்,
கழல், திலகம் முதல- கவசம், வீரக் கழல், வெற்றித்
திலகம் முதலாகிய; கலம் – அணிகள்; சிந்தின-
சிதைவுற்றன.

————

முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தின் –
தன்னே உளன்; மருங்கே உளன்; தலைமேல் உளன்; மலைமேல்
கொன்னே உளன்; நிலத்தே உளன்; விசும்பே உளன்; கொடியோர்,
‘என்னே ஒரு கடுப்பு!’ என்றிட, இருஞ் சாரிகை திரிந்தான் 113-

முன்னே உளன், மின்னே உளன்- முன்னாலே இருக்கிறான்,
பின்னாலே இருக்கிறான்; முகத்தே உளன்- அணிவகுப்பின் முற்
பகுதியிலே இருக்கிறான்; அகத்தின் தன்னே உளன்- போர்ப்
படைகளின் உட்பகுதியிலே இருக்கிறான்; மருங்கே உளன்-
பக்கத்திலே இருக்கிறான்; தலைமேல் உளன் – நம்
தலைக்குமேல் இருக்கிறான்; மலைமேல் கொன்னே உளன்-
மலை மீது பெருமை தோன்ற இருக்கிறான்; நிலத்தே உளன்-
பூமியில் காணப்படுகிறான்; என்னே ஒரு கடுப்பு- இப்படி
எல்லா இடங்களிலும் காணப்படும் இவனது வேகம் இருந்தவாறு
என்னே; கொடியோர் என்றிட- என்று வியப்போடு கொடிய
அரக்கர் கூறிடுமாறு; இருஞ்சாரிகை திரிந்தோன்- (இராமன்)
பெருஞ்சாரிகை சுற்றினான்.

———–

‘என் நேரினர்; என் நேரினர்’ என்று யாவரும் எண்ண,
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான்,
ஒன்னார் பெரும் படைப் போர்க் கடல் உடைக்கின்றனன்
எனினும், அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான். 114-

பொன் நேர் வரு வரிவில் கரத்து- பொன்னை ஒத்ததாய்
கட்டமைந்த வில்லினைக் கையிலே கொண்ட; ஒரு கோளரி
பொருவான்- ஒரு சிங்கம் போன்றவனாகிய இராமன்;
ஒன்னார்- பகைவர்களுடைய; பெரும் படைப் போர்க்கடல்
உள் நின்றுளன் எனினும்- பெரிய போர்ப் படையாகிய கடலுக்கு
நடுவிலேயே நின்றானென்றாலும்; ‘என் நேரினன்; என்
நேரினன்’ என்று யாவரும் எண்ண- என் எதிரில் உள்ளான்
என்று எல்லோரும் நினைக்கும் படியாக; அல் நேரலர் உடனே-
இருட்டினைப் போன்ற பகைவர்களுடனேயே; திரி நிழலே எனல்
ஆனான்- திரிகின்ற நிழல் போன்றவனானான்.

——————-

பள்ளம் படு கடல் ஏழினும், படி ஏழினும், பகையின்
வெள்ளம் பல உள என்னினும், வினையம் பல தெரியா,
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான், உருப் பிறந்தார்
உள் அன்றியும், புறத்தேயும் உற்று, உளனாம் என உற்றான் 115-

பள்ளம் படு கடல் ஏழினும்- பள்ளமாக உண்டாகிய ஏழு
கடலிலும்; படி ஏழினும்- ஏழு உலகங்களிலும்; பகையின்
வெள்ளம் பல உள என்னினும்- பகை கொண்ட சேனைப்
பெருக்கம் பலவாக இருந்தாலும்; வினையம் பல தெரியா-
வஞ்சங்கள் பலவற்றை அறிந்து; கள்ளம் படர்- கள்ளத்தனம்
நிறைந்த; பெரு மாயையின் கரந்தார்- பெரிய மாயைகளால்
தங்கள் உருவங்களை மறைப்பவராகிய; உருப் பிறந்தார்-
உடலோடு பிறந்த அரக்கர்களின்; உள் அன்றியும்-
மனத்தில் மட்டுமல்லாமல்; புறத்தேயும் உற்று உளனாம் என-
வெளியேயும் வந்துள்ளான் என்று கருதும்படியாக; உற்றான்-
(இராமபிரான்) போர்க் களத்திலே நின்றான்.

————-

நானாவிதப் பெருஞ் சாரிகை திரிகின்றது நவிலார்,
போனான், இடை புகுந்தான், எனப் புலன் கொள்கிலர், மறந்தார்,
‘தானாவதும் உணர்ந்தான், உணர்ந்து, உலகு எங்கணும் தானே
ஆனான்; வினை துறந்தான்’ என, இமையோர்களும் அயிர்த்தார். 116-

நானாவிதப் பெருஞ்சாரிகை திரிகின்றது நவிலார்- பல்வேறு
விதமான பெரிய சாரிகை திரிவதைச் சொல்லாதவராய்;
போனான் இடை புகுந்தான் என- போர்க்களத்துள் போன
இராமன் அரக்கர் சேனையிடையே புகுந்துவிட்டான் என்று;
புலன் கொள்கிலர் மறந்தார்- அறிவால் கொள்ளமாட்டாதவராய்
இராமபிரானின் செயலை மறந்தாராகி; தானாவதும் உணர்ந்தான்
– இந்த இராமபிரான் தானே பரம்பொருள் என்பதை உணர்ந்து
விட்டான் போலும்; உணர்ந்து- அவ்வாறு உணர்ந்து கொண்டு;
உலகு எங்ஙனும் தானே ஆனான்- உலகங்கள் எல்லாவற்றிலும்
தானே கலந்துவிட்டான்; வினை துறந்தான் – (பரம்
பொருளுக்குரிய நிலையை அடைந்துவிட்டதால்) அவதாரத்துக்கு
உரிய செயலை விட்டுவிட்டான் போலும்; என இமையோர்களும்
அயிர்த்தார்- எனத் தேவர்களும் ஐயப்பட்டனர்.

————

சண்டக் கடு நெடுங் காற்றிடை துணிந்து எற்றிட, தரைமேல்
கண்டப் படு மலைபோல், நெடு மரம்போல், கடுந் தொழிலோர்
துண்டப் பட, கடுஞ் சாரிகை திரிந்தான், சரம் சொரிந்தான் –
அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான், நிமிர்ந்து அகன்றான். 117-

அண்டத்தினை அளந்தான் என- எல்லா அண்டங்களையும்
அளந்த விக்கிரமாவதாரப் பரமன் என்று சொல்லும்படியாக;
கிளர்ந்தான் – எழுச்சி பெற்றவனாகிய இராமபிரான்;
நிமிர்ந்து அகன்றான்- நிமிர்ந்து போர்க்களத்தின் பல
பக்கங்களையும் அடைந்தவனாய்; கடுந்தொழிலோர் – கொடுஞ்
செயல் உடையவர்களாகிய அரக்கர்கள்; கடு நெடுஞ் சண்டக்
காற்று- விரைவுடன் வீசுகின்ற நெடிய சண்ட மாருதக்
காற்றானது; இடை- நடுவே புகுந்து; துணிந்து எற்றிட – பிளந்து
மோதுதலால்; தரை மேல் – மண்ணின் மீது; கண்டப்படு
மலைபோல்- துண்டாகி விழும் மலை போலவும்; நெடு மரம்
போல்- பெரிய மரங்களைப் போலவும்; துண்டப்பட- துண்டு
துண்டாகும்படி; கடுஞ் சாரிகை திரிந்தான்- விரைவாகச்
சாரிகையிட்டான்; சரம் சொரிந்தான் – (சாரிகை திரிந்த
வேகத்துடனேயே) அம்புகளைப் பொழிந்தான்.

————-

களி யானையும், நெடுந் தேர்களும், கடும் பாய் பரிக் கணனும்,
தெளி யாளியும், முரட் சீயமும், சின வீரர்தம் திறமும்,
வெளி வானகம் இலதாம்வகை விழுந்து ஓங்கிய பிணப் பேர்
நளிர் மா மலை பல தாவினன், நடந்தான் – கடல் கிடந்தான் 118-

களி யானையும்- மதங்கொண்டிருந்த யானைகளும்; நெடுந்
தேர்களும் கடும் பாய் பரிக் கணமும்- உயரமான தேர்களும்
விரைவுடன் பாய்ந்து ஓடுகின்ற குதிரைக் கூட்டமும்; தெளி
யாளியும்- தாக்கும் முறையில் தெளிவு கொண்ட யாளிகளும்;
முரட்சீயமும்- முரண் படுகின்ற சிங்கங்களும்; சின வீரர்
தம் திறமும் – கோபங்கொண்ட வீரர்களின் பகுதியும்;
வானகம் வெளி இலதாம் வகை- வானத்திலே இடைவெளியே
இல்லாத வகையில்; விழுந்து ஓங்கிய- செத்து விழுந்து
உயர்ந்த; பிணப்போர் நளிர் மா மலை பல- பிணங்களென்ற
பேர் கொண்ட குளிர்ந்த பெரிய மலைகள் பலவற்றை; கடல்
கிடந்தான்- திருப்பாற் கடலில் பள்ளி கொண்டிருந்தவனாகிய
இராமன்; தாவினன் நடந்தான்- தாண்டி நடந்தான்.

——————–

அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்,
அம்பரங்களொடும் களி யானையும், அம்பு
அரங்க, அழுந்தின, சோரியின்,
அம்பரம் கம் அருங் கலம் ஆழ்ந்தென. 119-

அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்- ஆகாயத்தைத்
தொடுகின்ற கொடிச் சீலையும்; அம்பரங்களொடும் களி
யானையும்- அம்பாரிகளோடு மத யானைகளும்; அம்பு அரங்க-
(இராமன் ஏவிய) கணைகள் அழுத்துதலால்; சோரியின் அம்பரம்
கம்- இரத்தக் கடலாகிய நீரிலே; அருங்கலம் ஆழ்ந்தென-
அரிய கப்பல்கள் மூழ்கியதென்னும்படி; அழுந்தின- மூழ்கின.

————

கேட கங்கண அம் கையொடும் கிளர்
கேடகங்கள் துணிந்து கிடந்தன;
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே. 120-

கேட- அழித்தல் தொழிலையுடைய; கங்கண அம்கையொடும்-
கங்கணம் அணிந்த அழகிய கையோடு; கிளர் கேடகங்கள்-
சிறந்து விளங்கும் கேடயங்கள்; துணிந்து கிடந்தன-
துண்டுபட்டுக் கிடந்தன; கேடு அகம் கிளர்கின்ற-
கேடுகளைத் தன்னிடத்தே நிரம்பப் பெற்றுள்ள; களத்த-
போர்க்களத்திலே; நன்கு ஏட- நன்றாக (தும்பை
மலர்களின்) இதழ்கள் கொண்ட; கங்கள்- தலைகள்; மறிந்து
கிடந்த – உருண்டு கிடந்தன.

———-

அங்கதம் களத்து அற்று அழி தாரொடும்
அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்-
புங்கவன் கணைப் புட்டில் பொருந்திய
புங்க வன் கணைப் புற்று அரவம் பொர. 121-

புங்கவன்- உயர்ந்தவனாகிய இராமனுடைய; கணைப் புட்டில்
பொருந்திய- அம்பறாத்தூணியில் இருந்த; புங்கம் வன் கணை
– கூர்மையான நுனியினை யுடைய வலிய அம்பாகிய; புற்று அரவம்
பொர- புற்றிலுள்ள பாம்பு தாக்கியதால்; அங்கதம் களத்து
அற்று- தோள்வளை கழுத்தோடு அறுபட்டு; அழிந்தாரொடும்-
இறந்து பட்டவர்களோடு; களத்து – போர்க்களத்திலே; அம்
கதம் அற்று- (வீரர்க்கு) அழகு தருவதாகிய கோபமும்
அழிந்து; அழிவுற்ற- அரக்கர் சேனைகள் அழிவுற்றன.

———

தம் மனத்தில் சலத்தர் மலைத் தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ,
தெம் முனைச் செரு மங்கை தன் செங் கையால்
அம்மனைக் குலம் ஆடுவ போன்றவே. 122-

தம் மனத்தில் சலத்தர்- தங்கள் மனத்திலே வஞ்சனை
உடையவராகிய அரக்கர்களின்; மலைத் தலை- மலை போன்ற
தலைகள்; வெம்மை உற்று- இராமபிரானது கொடுமை உற்றதால்;
எழுந்து- உடலிலிருந்து தனியாக எழுந்து; ஏறுவ மீளுவ- மேலே
போய்க் கீழே வருவதைப் பார்த்தால்; தெவ் முனைச் செரு
மங்கை- போர்க்களத்துக்கு வந்த போர் மகள்; தன்
செங்கையால்- தன்னுடைய சிவந்த கைகளால்
(எறியப்படுகின்ற); அம்மனைக்குலம் ஆடுவ போன்ற-
அம்மனைக் காய்களின் கூட்டம் மேலும் கீழுமாய் ஆடுகின்றவை
போல் காணப்பட்டன.

————

கயிறு சேர் கழல் கார் நிறக் கண்டகர்
எயிறு வாளி படத் துணிந்து, யானையின்
வயிறு தோறும் மறைவன, வானிடைப்
புயல் தொறும் புகு வெண் பிறை போன்றவே. 123-

கயிறு சேர் கழல் – கயிற்றினால் காலில் கட்டப்பட்ட
கழலினையுடைய; கார் நிறக் கண்டகர் – கரிய நிறங்கொண்ட
அரக்கர்களின்; எயிறு – பற்கள்; வாளிபட- இராமன் ஏவிய
அம்புகள் பட்டதால்; துணிந்து- துண்டுபட்டு; யானையின் வயிறு
தோறும் மறைவன- யானைகளின் வயிறுகளிலெல்லாம் மறைந்தவை;
வானிடை – ஆகாயத்தில் உலவும்; புயல் தொறும் –
மேகங்களிலெல்லாம்; புகு வெண்பிறை போன்ற – புகுகின்ற
வெள்ளைப் பிறை போன்றிருந்தன.

————

வென்றி வீரர் எயிறும், விடா மதக்
குன்றின் வெள்ளை மருப்பும், குவிந்தன-
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால். 124-

குவிந்தன – குவிந்தனவாகிய; வென்றி வீரர் எயிறும்-
வெற்றி (தேடிய) அரக்க வீரரின் பற்களும்; மதம் விடாக்
குன்றின் வெள்ளை மருப்பும்- மத நீர் ஒழுகுதல் நீங்காத
குன்றுகளாகிய யானைகளின் வெள்ளைத் தந்தங்களும்; என்றும்
என்றும் அமைந்த இளம்பிறை -ஒவ்வொரு நாளும் தோன்றுகின்ற இளம்பிறைகள்; ஒன்றி-
பலவும் ஒன்றாக; உக்கவும் ஒத்த – சிதறியவை போன்றன.

———–

ஓவிலார் உடல் உந்து உதிரப் புனல்
பாவி வேலை உலகு பரத்தலால்,
தீவுதோறும் இனிது உறை செய்கையர்,
ஈவு இலாத நெடு மலை ஏறினார். 125-

ஓவிலார்- ஒழிதல் இல்லாதவராகிய அரக்கர்களின்; உடல்
உந்து உதிரப் புனல்- உடல்களிலிருந்து பெருகிய இரத்தமாகிய
நீர்; பரவி – பரவி; வேலை உலகு பரத்தலால் – கடல்
சூழ்ந்த உலக முழுவதிலும் பரவுதலால்; தீவுதோறும் இனிது உறை
செய்கையார்- தீவுகள் தோறும் இனிமையாக வாழ்கின்ற
செயலுடையவர்கள்; ஈவு இலாத- ஒழிவு இல்லாத; நெடு மலை
ஏறினார்- உயரமான மலைகள்மீது ஏறினார்கள்.

———-

விண் நிறைந்தன, மெய் உயிர்; வேலையும்,
புண் நிறைந்த புனலின் நிறைந்தன;
மண் நிறைந்தன, பேர் உடல்; வானவர்
கண் நிறைந்தன, வில் தொழில் கல்வியே. 126-

மெய் உயிர்- உடல்களில் இருந்த உயிர்கள்; விண் நிறைந்தன-
விண்ணுலகில் நிறைந்தன; வேலையும் புண் நிறைந்த புனலின்
நிறைந்தன- கடல்களும் அரக்கரின் புண்களில் பெருகிய குருதி
நீரால் நிறையப் பெற்றன; பேர் உடல் மண் நிறைந்தன- அரக்கரின்
பெரிய உடல்கள் நிலவுலகை நிரப்பின; வில் தொழில் கல்வி-
வில்லையாளும் செயல்முறைக் கலை கண்டு; வானவர் கண்
நிறைந்தன- தேவர்களின் கண்கள் நிறைந்தன.

————-

செறுத்த வீரர் பெரும் படை சிந்தின,
பொறுத்த சோரி புகக் கடல் புக்கன,
இறுத்த நீரின் செறிந்தன, எங்கணும்
அறுத்து, மீனம் உலந்த அனந்தமே. 127-

செறுத்த வீரர் – சினம் கொண்ட வீரர்கள் தாங்கியிருந்த;
பெரும் படை சிந்தின- பெரிய படைக்கலங்களாகிய ஆயுதங்கள்
சிதறினவாய்; பொறுத்த சோரி புக- தங்களைத் தாங்கி (ஈர்த்துச்
சென்ற) இரத்தம் புகுந்ததால்; கடல் புக்கன – தாமும் (அதாவது
போர்க்கருவிகளும்) கடலிலே புகுந்தனவாகி; நீரின்- அந்தக்
கடலிலே; இறுத்த செறிந்தன- தங்கினவும் செறிந்தனவுமாகிய;
மீனம் – மீன் முதலிய உயிர்களை; எங்கணும் அறுத்த-
எல்லாப் பக்கங்களிலும் அறுத்தமையால்; உலந்த அனந்தமே-
இறந்தவை எண்ணற்றனவாகும்.

———–

வன்னி ஏனைய தலைவர்களை நோக்கி வெகுண்டு கூறுதல்

‘ஒல்வதே! இவ் ஒருவன், இவ் ஊகத்தைக்
கொல்வதே, நின்று! குன்று அன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின், வெண் பலை
மெல்வதே!’ என வன்னி விளம்பினான். 128-

ஒல்வதே- தனியாக நிற்கும் இந்த ஒருவனுக்கு இத்துணை வலிமை
இருக்கமுடியுமா! இவ் ஒருவன் நின்று இவ் யூகத்தைக் கொல்வதே
– இந்த ஒருவன் தனியாக நின்று அணி வகுத்துள்ள இந்த
வியூகத்தை அழிப்பதா; குன்று என யாம் எலாம் – மலைபோல
ஓங்கி நிற்கும் நாமெலாம்; வெல்வது ஏதும் இலாமையின் –
வெல்லுவதற்கு யாதொரு வழியும் இல்லாமையால்; வெண் ப(ல்)லை
மெல்வதே- வெள்ளைப் பல்லை மென்று கொண்டிருப்பதா? என
வன்னி விளம்பினான்- என்று வன்னி என்ற அரக்கர் படைத்தலைவன்
மொழிந்தான்.

————–

‘கோல் விழுந்து அழுந்தாமுனம், கூடி யாம்
மேல் விழுந்திடினும், இவன் வீயுமால்;
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்!
மால் விழுந்துளிர் போலும், மயங்கி, நீர்! 129-

கோல் விழுந்து அழுந்தாமுனம்- இந்த இராமனுடைய
அம்பு நம் மேல் விழுந்து நாம் அழுந்துவதற்கு முன்பே; யாம்
கூடி மேல் விழுந்திடினும்- நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து
இவன்மேல் விழுந்தாலும்; இவன் வீயும்- இவன் அழிவான்; மழை
கால் விழுந்தன்ன காட்சியீர்- மேகம் கால் இறங்கியிருப்பது
போன்ற தோற்றம் உடையவர்களே! நீர் மயங்கி- நீங்கள்
செய்வது அறியாமல் கலங்கி; மால் விழுந்துளிர் போலும்-
மயக்கத்திலே அழுந்தியிருக்கிறீர்கள் போலும்,

———-

‘ஆயிரம் பெரு வெள்ளம் அரைபடத் தேய
நிற்பது; பின், இனி என் செய? பாயும்,
உற்று, உடனே’ எனப் பன்னினான்,
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான். 130-

நாயகற்கு ஓர் உதவியை நல்குவான்- தன் தலைவனாகிய
இராவணனுக்கு ஓர் உதவி செய்பவனாகி; ஆயிரம் பெருவெள்ளம்-
மிகப் பெரிய அளவினதாகிய ஆயிர வெள்ளம் அரக்கர் சேனை;
அரைபட – அரைக்கப்படுவதால்; தேய நிற்பது- அழிந்து
மெலியும் நிலையிலே இருக்கிறது; பின்பு இனி என் செய-
இந்த நிலை அடைந்தபின் மேலே என்ன செய்வது? உடனே
உற்று – உடனடியாகப் (ஊக்கம்) பெருகி எழுந்து; பாயும்-
இராமன் மேல் பாயுங்கள்; எனப் பன்னினான்- என்று (வன்னி)
கூறினான்.

—————–

அரக்கர் படை உருத்து எழ, இராமனும் சரமழை சிந்துதல்

உற்று, உருத்து எழு வெள்ளம் உடன்று எழா,
சுற்றும் முற்றும் வளைந்தன, தூவின-
ஒற்றை மால் வரைமேல் உயர் தாரைகள்
பற்றி மேகம் பொழிந்தென, பல் படை. 131-

உருத்து எழு வெள்ளம்- சினந்த எழுந்த பெருஞ்சேனை
வெள்ளம்; உடன்று எழா- மாறுபாடு கொண்டு எழுந்து; உற்று –
இராமனை அடைந்து; சுற்றும் முற்றும்- சூழ்ந்து முழுவதாக;
வளைந்தன – வளைத்துக்கொண்டு; ஒற்றை மால் வரைமேல்-
தனியேயுள்ள ஒரு பெரிய மலைமீது; மேகம் பற்றி உயர்
தாரைகள் பொழிந்தன- மேகம் பொழிந்தது போல; பல்
படை தூவின- பலவகைப் படைக்கலங்களைத் தூவின

—————

குறித்து எறிந்தன, எய்தன, கூற்றுறத்
தறித்த தேரும் களிறும் தரைப் பட,
மறித்த வாசி துணித்து, அவர் மாப் படை
தெறித்துச் சிந்த, சர மழை சிந்தினான். 132-

குறித்து எறிந்தன எய்தன- அரக்கர் குறிபார்த்து வீசிய
படைக்கலங்கள் மற்றும் எய்த அம்பு முதலியவைகளும்; கூறு
உற- துண்டாகிட; தறித்த தேரும்- வெட்டப்பட்ட தேரும்;
களிறும் – யானைகளும்; தரைப்பட- நிலத்தில் சாய்ந்திட;
மறித்த வாசி துணித்து- குறுக்காகப் பாய்ந்த குதிரைகளை
வெட்டி; அவர் மாப் படை தெறித்துச் சிந்த- இப்படியாக
அந்த அரக்கர்களின் பெரிய சேனை சிதையும்படி; சர மழை
சிந்தினான்- இராமன் அம்பு மழையைத் துவினான்.

———–

வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்,
பேய் விளிப்ப நடிப்பன, பெட்புறும் தீ
விளித்திடு தீபம் நிகர்த்தவால். 133-

வாய் விளித்து எழு பல் தலை வாளியில்- (விரைந்து
பாய்ந்து செல்வதால்) நுனிப்பகுதியில் ஓசை எழுப்பி்ப் பாயும்
பன்முக அம்பிலே; போய் விளித்த பொங்கு உடல் –
வலியச் சென்று இறந்து போன வீரர்களின் குருதி
பொங்கிப்பாயும் உடல்கள்; பேய் விளிப்ப நடிப்பன –
பேய்கள் மகிழ்ச்சியால் ஆரவாரித்து கூத்தாடுபவை;
பெட்புறும்- (திகைக்கும் மாலுமிகளுக்கு) விருப்பம் மிகுகின்ற;
தீ விளிப்புறு தீபம் நிகர்த்த- தீச்சுடரால் அழைத்திடும்
(கலங்கரை) விளக்குகளைப் போன்றிருந்தன.

—————

நெய் கொள் சோரி நிறைந்த நெடுங் கடல்
செய்ய ஆடையள், அன்ன செஞ் சாந்தினள்,
வைய மங்கை பொலிந்தனள், மங்கலச்
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள். 134-

நெய்கொள் சோரி நிறைந்த- கொழுப்புச் செறிந்த
குருதியால் நிறைந்த; நெடுங்கடல்- பெரிய கடலாகிய;
செய்ய ஆடையள்- சிவந்த ஆடை அணிந்தவளாயும்;
அன்ன செஞ்சாந்தினள்- அதே நிறமுடைய சாந்தினை
அழகுறப் பூசியவளாகவும்; மங்கலச் செய்ய கோலம்-
கணவனோடு சேரும் மங்கலச் செயலுக்குரிய சிவந்த
கோலத்தினை; புனைந்தன்ன செய்கையாள்- பூண்டு
கொண்டது போன்ற செயல் உடையவளாகவும்; வைய
மங்கை – நிலமகள்; பொலிந்தனள்- அழகாக
விளங்கினாள்.

————

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,
அப்புத்தான், என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,
தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால். 135-

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு, அப்பு
என்று உரைத்தன ஆழிகள்- உப்பு, தேன், கள், ஒள்ளிய
தயிர், பால், கருப்பஞ்சாறு, தண்ணீர் என்று உரைக்கப்பட்ட
ஏழு கடல்களும்; இன்று- இப்போது; ஓர் தனுவினால்-
(இராமனுடைய) ஒப்பற்ற வில்லினால்; துப்புப் போல்-
பவழம் போல் உள்ள; குருதிப் புனல் சுற்றலால்- இரத்த
நீரால் சூழப்பட்டதால்; அவ் உரை தப்பிற்று- தனித்தனி
ஏழு கடல்கள் என்று சொல்லப்பட்ட பழைய பேச்சுத்
தவறாகிவிட்டது.

—————–

ஒன்றுமே தொடை; கோல் ஒரு கோடிகள்
சென்று பாய்வன; திங்கள் இளம் பிறை
அன்று போல் எனல் ஆகியது அச் சிலை;
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர்? 136-

ஒன்றுமே தொடை- (அம்பு) தொடுத்தல் ஒரு தடவைதான்;
கோல் ஒரு கோடிகள் சென்று பாய்வன- (ஆனால்) கோடிக்
கணக்கான அம்புகள் அந்த ஒரு தடவையிலேயே பாய்ந்தன;
அச்சிலை- இராமனது அந்த வில்; இளம்பிறை அன்றுபோல்
எனல் ஆகியது- அன்றைய சிறிய பிறை என்று சொல்லுமாறு
அமைந்தது; எதிர்த்த இராக்கதர் என்று மாள்வர்-
எதிர்த்துப் பொருத அரக்கர்கள் என்றுதான் செத்து
ஒழிவரோ?

——————

அரக்கர் சேனை கடும்போர் புரிந்து, இராம பாணத்தால் மடிதல்

எடுத்தவர், இரைத்தவர், எறிந்தவர், செறிந்தவர், மறங்கொடு எதிரே
தடுத்தவர், சலித்தவர், சரிந்தவர், பிரிந்தவர், தனிக் களிறுபோல்
கடுத்தவர், கலித்தவர், கறுத்தவர், செறுத்தவர், கலந்து, சரம் மேல்
தொடுத்தவர், துணிந்தவர், தொடர்ந்தனர், கிடந்தனர் – துரந்த கணையால். 137-

எடுத்தவர்- படைக்கலங்களை எடுத்தவரும்; இரைத்தவர் –
ஆரவாரம் செய்தவர்களும்; எறிந்தவர்- படைக்கலங்களை
இராமனை நோக்கி எறிந்தவர்களும்; செறிந்தவர்- ஒருங்கே
கூடி வந்தவர்களும்; மறங்கொடு எதிரே தடுத்தவர்-
வீரத்தோடு எதிர்த்து வந்த கணைகளைத் தடுத்தவர்களும்;
சலித்தவர்- போரை முடிக்க இயலவில்லையே என மனம்
சலித்தவர்களும்; சரிந்தவர்- ஆற்ற மாட்டாமல்
நிலத்திலே சரிந்தவர்களும்; பிரிந்தவர் – தம் உடன்
வந்தோரிடமிருந்து பிரிந்து வந்தவர்களும்; தனிக் களிறு
போல் கடுத்தவர் – தனியாக வந்த யானைபோல்
விரைந்தவர்களும்; கலித்தவர் – செருக்கியவர்களும்;
கறுத்தவர்- சினம் கொண்டவர் களும்; செறுத்தவர்-
சீறியவர்களும்; கலந்து – நெருங்கி வந்து; சரம் மேல்
தொடுத்தவர்- அம்புகளை (இராமன்) மேல் தொடுத்தவர்களும்
(ஆகிய அனைவரும்); துரந்த கணையால்- இராமபிரான்
செலுத்திய அம்புகளால்; துணிந்தவர்- வெட்டப்பட்டவராய்;
தொடர்ந்தனர் கிடந்தனர்- அணியணியாகக்
கிடந்தார்கள்.

————–

தொடுப்பது சுடர்ப் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய்ப்
படுப்பது, வயப் பகைஞர் ஆயிரரை அன்று, பதினாயிரவரை;
கடுப்பு அது; கருத்தும் அது; கட்புலன் மனம் கருதல் கல்வி இல; வேல்
எடுப்பது படப் பொருவது அன்றி, இவர் செய்வது ஒரு நன்றி உளதோ? 138-

தொடுப்பது ஆயிரம் சுடர்ப் பகழி- இராமபிரானால்
தொடுத்துச் செலுத்தப்படுகின்ற ஒளிமிக்க அம்புகள் ஆயிரம்;
நிரைத்தவை- வரிசையாகத் தொடுக்கப்படுகின்ற அவை; துரந்த
துறைபோய்ப் படுப்பது- செலுத்தப்பட்ட இலக்குகளை அடைந்து
அழிப்பது; வயப் பகைஞர் ஆயிரரை அன்று- வலிமை மிக்க
பகைஞர் ஆயிரம் பேரை அன்று; பதினாயிரவரை- பதினாயிரம்
பேரையாகும்; கடுப்பு அது- செலுத்தப்படும் வேகம் அது;
கருத்தும் அது- செலுத்திய இராமனுடைய கருத்தும் அதுவே; கட்
புலன் மனம் கருதல் கல்வி இல – அம்புகள் வேகமாகச்
செல்வதைக் கண்டறிவதற்கு கண்ணுக்கோ விளைவைக் கருதிப்
பார்ப்பதற்கு மனத்துக்கோ பயிற்சி இல்லை; வேல் எடுப்பது
– அரக்கர்கள் இராமனைத் தாக்குவதற்கு வேற்படையை எடுப்பது;
படப் பொருவது அன்றி – தாங்கள் இறப்பதற்கு போர்
செய்வதைத் தவிர; இவர் செய்வது ஒரு நன்றி உளதோ- இந்த
அரக்கர்கள் செய்து கொள்ளக்கூடிய வேறு நல்ல செயல் உளதோ?
(இல்லை).

————-

தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடைக் குழை தொகுத்து,
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும்; அவை உண்ணும் உயிரை;
ஆசைகளை உற்று உருவும்; அப் புறமும் ஓடும்; அதன் இப் புறம் உளார்,
ஈசன் எதிர் உற்று, உகுவது அல்லது, இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ? 139-

தூசியொடு நெற்றி, இரு கையினொடு பேரணி, கடைக்குழை-
தூசிப்படை, நெற்றிப் படை, இரு பக்கங்களில் நிற்கும்
கைகோட்படை, பேரணிப் படை, பின்னணிப் படை ஆகிய அத்துணை
வகையான படைகளையும்; ஊசி நுழையா வகை தொகுத்து- அந்த
அரக்கர் படைநடுவே ஊசிகூட நுழையமுடியாதவாறு ஒரே இடத்தில்
கூட்டி வளைத்து; சரத்து அணி வகுக்கும் – அம்புகளை
(இராமபிரான்) வரிசையாகச் செலுத்தினான்; அவை உயிரை
உண்ணும்- அந்த அம்புகள் (ஒரே இடத்தில் கூட்டியதோடு)
அரக்கரின் உயிரைப் போக்கிவிடும்; ஆசைகளை உற்று உருவும்
– (செறிந்து கூடிய அரக்கரைக் கொன்றதோடு) மேலும் திசைகளை
அடைந்து திசைகளை ஊடுருவும்; அதன் இப்புறம் உளார்-
அம்புகள் பாய்ந்த திசைகளின் எல்லைகளுக்கு இந்தப்
பக்கத்தில் இருந்த அரக்கர்கள்; ஈசன் எதிர் உற்று-
இறைவனாகிய இராமன் முன்பு வந்து; உகுவது அல்லால்- தங்கள்
உயிரைச் சிந்துவதைத் தவிர; இகல் முற்றுவது ஓர் கொற்றம்
எவனோ?- பகையினை முடிப்பதாகிய ஒரு வெற்றி பெறுவது எது?

————–

ஊன் நகு வடிக் கணைகள் ஊழி அனல் ஒத்தன; உலர்ந்த உலவைக்
கானகம் நிகர்த்தனர் அரக்கர்; மலை ஒத்தன, களித்த மத மா;
மானவன் வயப் பகழி வீசு வலை ஒத்தன; வலைக்குள் உளவாம்
மீன குலம் ஒத்தன, கடற் படை, இனத்தொடும் விளிந்துறுதலால். 140-

ஊன் நகு- தசைகள் விளங்கிய; வடிக் கணைகள்-
கூர்மையான அம்புகள்; ஊழி அனல் ஒத்தன- ஊழிக்காலத்தில்
(அனைத்தையும் எரித்தழிக்கும்) தீயை நிகர்த்தன; அரக்கர்
உலர்ந்த உலவைக் கானகம் நிகர்த்தனர் – அரக்க வீரர்கள்
காய்ந்து பட்டுப்போன காட்டை நிகர்த்தனர்; களித்த மத
மா- வெறி கொண்ட மதம் பொழியும் யானைகள்; மலை ஒத்தன-
மலைகளைப் போன்றிருந்தன; மானவன் வயப்பகழி- மனு
குலத்தவனாகிய இராமன் ஏவிய வலிமை மிக்க அம்புகள்; வீசு
வலை ஒத்தன- (கடலுள்) வீசப்படுகின்ற வலையை நிகர்த்தன;
கடற்படை- கடல் போலப் பெருகிய அரக்கரின் படைகள்;
இனத்தொடும் விளிந்து உறுதலால்- இனத்தோடு (கூட்டமாக)
இறந்துபடுவதால்; வளைப் புனலுள் வாழ் மீன்குலம் ஒத்தன-
சங்குகள் நிரம்பிய கடலிலே வாழ்கின்ற மீன் கூட்டங்களை
நிகர்த்தன.

——–

ஊழி இறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன், இராமன்; உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர், அரக்கர், பொருவார்;
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி, இறுதிக்கணின் எழும்
ஆழியையும் ஒத்தனன்; அம் மன்னுயிரும் ஒத்தனர், அலைக்கும் நிருதர். 141-

இராமன் ஊழி இறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன்-
ஊழிக் காலத்து முடிவிலே விரைந்து வீசும் சண்ட மாருதத்தைப்
போன்றவனானான்; பொருவார் அரக்கர்- அவனோடு போர்
செய்கின்றவராகிய அரக்கர்கள்; பூழி என உக்கு உதிரும்-
புழுதி யெனச் சொல்லும்படியாகப் பொடிபட்டு உதிர்கின்ற;
மால் வரைகள் ஒத்தனர்- பெரிய மலைகளைப் போன்றவர்
ஆனார்; ஏழ் உலகமும் உற்று- ஏழு உலகங்களையும்
அடைந்து; உயிர்கள் யாவையும் முருக்கி- எல்லா
உயிர்களையும் அழித்து; இறுதிக்கண் எழும்- யுக முடிவிலே
பொங்குகின்ற; ஆழியையும் ஒத்தனன்- கடலைப் போன்றவன்
ஆனால் (இராமன்); அலைக்கும் நிருதர்- உயிரினங்களைத்
துன்புறுத்தும் அரக்கர்கள்; அம் மன் உயிரும் ஒத்தனர்-
(ஊழிக் காலத்து அழிகின்ற) அந்த நிலையான உயிர்களை
ஒத்தவர் ஆனார்.

————–

மூல முதல் ஆய், இடையும் ஆய், இறுதி ஆய், எவையும் முற்றும் முயலும்
காலம் எனல் ஆயினன் இராமன்; அவ் அரக்கர், கடைநாளில் விளியும்
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர்; குரை கடல் எழும்
ஆலம் எனலாயினன் இராமன்; அவர் மீனம் எனல் ஆயினர்களால். 142-

மூல முதல் ஆய்- எல்லாவற்றுக்கும் மூல காரணமாகி;
இடையும் ஆய் – ஆதியாக மட்டுமின்றி நடுவும் ஆகி; இறுதி
ஆய் – முடிவும் ஆகி; எவையும் முற்றும் முயலும்- யாவையும்
முடிவாக முயல்கின்ற; காலம் எனல் ஆயினன் இராமன்- இராமன்
கால தத்துவம் என்று விளக்கப்படும் நிலையை உடையவன்
ஆனான்; அவ் அரக்கர்- அந்த அரக்கர்கள்; கடைநாளில்
விளியும்- ஊழிக்கால இறுதியில் அழிகின்ற; கூலம் இல் சராசரம்
அனைத்தினையும் ஒத்தனர் – அளவில்லாத சராசரங்கள்
யாவற்றையும் ஒத்தனர்; இராமன் குரை கடல் எழும் –
ஒலிக்கின்ற கடலிலே தோன்றிய; ஆலம் எனலாயினன்- ஆலகால
நஞ்சு போன்றவனானான்; அவர்- அந்த அரக்கர்கள்; மீனம்
எனல் ஆயினர்கள் – அந்தக் கடலில் உள்ள மீன்கள்
போன்றவராயினர்.

———–

வஞ்ச வினை செய்து, நெடு மன்றில் வளம் உண்டு, கரி பொய்க்கும் மறம் ஆர்
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர், அரக்கர்; அறம் ஒக்கும் நெடியோன்;
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன்; அடுத்து அதனை நக்கிநரையும்,
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும், ஒத்தனர், அரக்கர், படுவார். 143-

அரக்கர் வஞ்ச வினை செய்து- வஞ்சகச் செயல்களைச்
செய்து; நெடு மன்றில் வளம் உண்டு- பெருமை வாய்ந்த நீதி
மன்றத்துக்குரிய பொருளைக் கவர்ந்துண்டு; கரி பொய்க்கும்
– பொய்ச்சான்று பகரும் (பொய்ச்சாட்சி சொல்லும்);
மறம் ஆர் நெஞ்சம் உடையோர்- பாவம் பொருந்திய மனம்
கொண்டோரின்; குலம் ஒத்தனர்- கூட்டத்தைப் போன்றவர்
ஆனார்கள்; நெடியோன் அறம் ஒக்கும் – இராமபிரான் அறத்தினை நிகர்த்தான்;
(நெடியோன்) நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன்- இராமபிரான்
நஞ்சு மயமாகிய பெருங்கடலைப் போன்றவனானான்; படுவார்
அரக்கர்- சாகின்றவர்களாகிய அரக்கர்கள்; அதனை அடுத்து
நக்குநரையும் – அந்த நச்சுக்கடலை அடைந்து
நக்குகின்றவர்களையும்; பஞ்சம் உறு நாளில்
வறியோர்களையும்- பஞ்சம் பெருகுகின்ற காலத்தில் விழும்
ஏழைகளையும்; ஒத்தனர்-.

————

வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின், அவ் வேலையும் இலங்கை நகரும்,
பள்ளமொடு மேடு தெரியாதவகை சோர் குருதி பம்பி எழலும்,
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால்,
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார். 144-

வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின்- நூறு வெள்ள
அளவு கொண்ட அரக்கர் சேனை அழியும் அந்த நேரத்தில்;
அவ் வேலையும் இலங்கை நகரும்- இலங்கையைச் சூழ்ந்த
அந்தக் கடலும் இலங்கை நகரமும்; பள்ளமொடு மேடு
தெரியாத வகை – பள்ளம் எது மேடு எது என்று
தெரியமுடியாதபடி; சோர் குருதி பம்பி எழலும்- சொரிகின்ற
இரத்தம் பரவி எழுந்ததால்; உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும்
அறியாது- இலங்கையின் உட்பகுதி மதில் எது, இலங்கையின்
வெளிப்பகுதி எது என ஒன்றும் அறிய முடியாமல்; கள்ள நெடு
மான் விழி அரக்கியர்- வஞ்சகம் கொண்டதும் மான் போன்ற
மருட்சி கொண்டதுமான கண்ணுடைய அரக்க மாதர்கள்;
கலக்கமொடு – மனம் கலங்கியதோடு; கால்கள் குலைவார் –
கால் தடுமாறினவர்களாய்; அலறி ஓடினார்கள்- அலறிக்கொண்டு
ஓடினார்கள்.

———–

நீங்கினர், நெருங்கினர் முருங்கினர்; உலைந்து உலகில் நீளும் மலைபோல்
வீங்கின, பெரும் பிணம் விசும்பு உற; அசும்பு படு சோரி விரிவுற்று,
ஓங்கின, நெடும் பரவை, ஒத்து உயர எத் திசையும் உற்று, எதிர் உற;
தாங்கினர், படைத் தலைவர், நூறு சத கோடியர், தடுத்தல் அரியார். 145-

நீங்கினர் நெருங்கினர் முருங்கினர்- இராமனை விட்டு
நீங்கினராய் (இழுக்கு நினைந்து மீண்டும்) அவனை நெருங்கி
அழிந்தனர் (அரக்கர்); உலைந்து – சிதைவுற்று; உலகில்
நீளும் மலைபோல்- நிலவுலகிலே நீண்டு கிடக்கும் மலைபோல;
விசும்பு உற- ஆகாயத்தை அளாவி; பெரும் பிணம் வீங்கின-
பெரிய பிணங்கள் பெருகிக் குவிந்தன; அசும்பு படு சோரி
விரிவுற்று – (வீழ்ந்தவர் உடலிலிருந்து) ஊற்றெடுக்கும்
இரத்தம் பெருகி; நெடும் பரவை ஒத்து- பெரிய கடல்களைப்
போல; உயர- பெருக்கு அதிகமானதால்; எத்திசையும் உற்று-
எல்லாத் திசைகளையும் அடைந்து; எதிர் உற- கடல்கள்
யாவும் ஒன்றையொன்று எதிரெதிர் சேர; ஓங்கின-; நூறு சத
கோடியர்- பதினாயிரம் கோடியராகிய; படைத்தலைவர்-
அரக்கரின் படைத்தலைவர்கள்; தடுத்தல் அரியார்-
இராமனைத் தடுத்து நிறுத்த முடியாதவராய்; தாங்கினர்-
எதிர்த்தனர்.

—————-

தேரும், மதமாவும், வரை ஆளியொடு வாசி, மிகு சீயம், முதலா
ஊரும் அவை யாவையும் நடாயினர், கடாயினர்கள், உந்தினர்களால்;
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின்
தூரும் வகை தூவினர்; துரந்தனர்கள், எய்தனர், தொடர்ந்தனர்களால். 146-

தேரும், மத மாவும், வரை, ஆளியொடு, மிகு சீயம் முதலா-
தேர் மதங்கொண்ட யானை, மலையில் வாழும் யாளி, வலிமை
மிக்க சிங்கம் முதலிய; ஊரும் அவை யாவையும் – ஏறிச்
செல்கின்ற அவை எல்லாவற்றையும்; நடாயினர் கடாயினார்கள்,
உந்தினர்கள் – இயக்கி நடத்திச் செலுத்தினார்கள்;
காரும் – மேகமும்; உரும் ஏறும்- பேரிடிகளும்; எரி
ஏறும்- பெரு நெருப்பும்; நிகர் வெம்படையோடு- ஒத்த
கொடிய படைக்கலங்களோடு; அம்பு- அம்புகளை; கடிதின்
தூரும் வகை தூவினர் – விரைவாக நிறையும்படி
இறைத்தார்கள்; துரந்தனர்கள், எய்தனர்- மேலும் அவற்றை
விரைவோடு செலுத்தியவர்களாய் குறிநோக்கிச்
செலுத்தியவர்களாய்; தொடர்ந்தனர்கள்- தாம் மேற்கொண்ட
தாக்குதலைத் தொடர்ந்தார்கள்.

————

‘வம்மின், அட, வம்மின்! எதிர் வந்து, நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும்
தம்மின்!’ என இன்னன மொழிந்து, எதிர் பொழிந்தன, தடுப்ப அரியவாம்,
வெம் மின் என, வெம் பகழி, வேலை என ஏயினன்; அவ் வெய்ய வினையோர்,
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர், தனித் தனிஅரோ 147-

‘வம்மின் அட வம்மின்’- வாருங்கள் அட! வாருங்கள்;
எதிர் வந்து- என எதிரே வந்து; நுமது ஆருயிர் வரங்கள்
பிறவும்- உங்களுடைய அரிய உயிரையும் வரங்களையும் இன்னும்
மற்றவற்றையும்; தம்மின் – என்னிடம் தந்து விடுங்கள்; என
இன்னன மொழிந்து- என்று இத்தகைய சொற்களைச் சொல்லி;
எதிர் பொழிந்தன- அரக்கர்களை எதிர்த்துப் பெய்தனவும்;
தடுப்பு அரியவாம்- தடுத்து நிறுத்துதற்கு அரியவாயினவும்
ஆகிய; வெம் பகழி – கொடிய அம்புகளை; வெம் மின் என-
வேக்காடு மிக்க மின்னலைப் போலவும்; வேலை என- கடலைப்
போலவும்; ஏயினன் – (இராமபிரான்) ஏவினான்; அவ் வெய்ய
வினையோர் தம் இனம் அனைத்தையும் – அந்த கொடிய
வினைப்பயனை அனுபவிப்போராகிய அரக்கர் கூட்டம்
முழுவதையும்; முனைந்து தனித்தனி எதிர் தடுத்தனன்-
ஊக்கத்தோடு தனித்தனியே எதிர் தடுத்தனன் இராமன்.

—————–

இமையோர் சிவனிடம் முறையிடுதல்

அக் கணையை அக் கணம் அறுத்தனர் செறுத்து, இகல் அரக்கர் அடைய,
புக்கு அணையலுற்றனர், மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார்,
திக்கு அணை வகுத்தனர் எனச் செல நெருக்கினர், செருக்கின் மிகையால்;
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால்: 148-

இகல் அரக்கர் அடையப் புக்கு- பகைமையுள்ள அரக்கர்கள்
எல்லாரும் சேரவந்து; அணையலுற்றனர் – இராமபிரானை
நெருங்கியவர்களாய்; அக்கணம்- அந்தக் கணத்திலேயே;
அக்கணையை – இராமபிரான் செலுத்திய அந்த அம்பினை;
செறுத்து- சினந்து; அறுத்தனர் – சிதைத்தனர்; மறைத்தனர்
– இராமனைச் சூழ்ந்து மறைத்தார்கள்; புயற்கு அதிகம் வாளி
பொழிவார்- மேகம் (மழை பொழிவதைவிட) மிகுதியாக
அம்பினைப் பொழிவாராகி; திக்கு அணை வகுத்தனர் என-
திசைகளுக்கு ஓர் அணை அமைத்து விட்டனர் என்னும்படியாக;
செருக்கின் மிகையால்- ஆணவ மிகுதியால்; செல நெருக்கினர்
– மிகவும் நெருக்கினார்கள்; இமையோர்- (இதனைக் கண்ட)
தேவர்கள்; முக்கணனை உற்று- சிவபெருமானை அடைந்து; அடி
வணங்கி- திருவடிகளை வணங்கி; இவை மொழிந்தனர்கள்-
(பின்வரும்) இவற்றைச் சொன்னார்கள்.

அடைய – முழுமையாக, திருவரங்கத்தில் எல்லா மதில்களையும்
உள்ளடக்கிக் கடைசியாகவுள்ள மதிலை அடைய வளைந்தான் என்று
சொல்லும் வழக்கினை நினைக.

—————

‘இராமனே வெல்வன்’ எனச் சிவபெருமான் அருளுதல்

‘படைத் தலைவர் உற்று ஒருவர் மும் மடி இராவணன் எனும் படிமையோர்;
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை; வளைத்தனர் கிளைத்து, உலகு எலாம்
அடைத்தனர்; தெழித்தனர், அழித்தனர்; தனித்து உளன் இராமன்; அவரோ,
‘துடைத்தனர் எம் வெற்றி’ என உற்றனர்; இனிச் செயல் பணித்தி-சுடரோய்! 149-

சுடரோய்- ஒளி மேனியனே! படைத்தலைவர் ஒருவர் மும்மடி
இராவணன் எனும் படிமையோர் உற்று- படைத்தலைவர்,
ஒவ்வொருவரும் மும்மடங்கு இராவணர்கள் என்று சொல்லத்தக்க
உருவம் உடையவராய் வந்து; கிடைத்தனர் – இராமனை
நெருங்கியிருக்கின்றார்கள்; அவர்க்கு ஒரு கணக்கு இலை-
அப்படி நெருங்கி விட்ட அரக்கர்களுக்கு ஒரு கணக்கு இல்லை;
வளைத்தனர் கிளைத்து- இராமனைச் சூழ்ந்து கொண்டு
கிளர்ந்தெழுந்து; உலகு எலாம் அடைத்தனர்- உலகம்
முழுவதையும் அடைத்துக்கொண்டு; தெழித்தனர், அழித்தனர்-
அதட்டிக் கொண்டு அழிக்கத் தொடங்கி விட்டார்கள்;
தனித்துளன் இராமன் – இராமன் தன்னந் தனியாக இருக்கிறான்;
அவரோ- அந்த அரக்கர்களோ; துடைத்தனர் எம் வெற்றி
என உற்றனர்- (எமக்குக் கிடைத்துவிட்டதென்று நாங்கள்
எண்ணிக்கொண் டிருந்த) வெற்றியை அழிக்கின்றனர்; இனிச்
செயல் பணித்தி – இனி நடக்கப்போகும் நிகழ்ச்சிகள் இவையெனக்
கூறுக என (கலங்கிக்) கூறினர்.

—————

‘எய்த கணை எய்துவதன் முன்பு, இடை அறுந்து, இவர்கள் ஏழ் உலகமும்
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர், முனிந்தனர்களால்;
வைது கொலின் அல்லது மறப் படை, கொடிப் படை, கடக்கும் வலிதான்
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது’ என்றனர், திகைத்து விழுவார். 150-

எய்த கணை- இராமனால் எய்யப்பட்ட அம்பு; எய்துவதன்
முன்பு- இலக்கினை அடைவதற்கு முன்பே; இடை அறுத்து- நடு
வழியிலேயே முறித்து; இவர்கள் – இந்த அரக்கர்கள்; பெய்த
கணை மா முகில் என – இராமனை எதிர்த்துச் செலுத்திய
அம்புகள் பெரிய மேகத்திரள் என்று சொல்லும்படியாக; புடை
வளைத்தனர் – பக்கங்களில் சூழ்ந்தவர்களாய்; போய்ப்
பிடித்தனர்கள்- முன்னேறிப் பிடித்துக்கொண்டனர்; வைது கொலின்
அல்லது- இவ் அரக்கர்களைச் சாபம் இட்டுக் கொன்றால்
அல்லாமல்; மறப்படை கொடிப்படை – வீரப்
படைக்கலங்களாலோ கொடி ஏந்தி நடக்கும்
காலாட்படைகளாலோ; கடக்கும் வலி- வெல்லும் வல்லமை;
செய்ய திருமாலொடு உனக்கும் அரிது- செம்மை நெறி
பேணும் திருமாலுக்கும் உனக்கும் இல்லை; என்றனர்- என்று
கூறி; திகைத்து விழுவார்- திகைத்துத் தளர்ந்தனர்.

—————-

‘அஞ்சல்! இனி, ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும், அத்தனைவரும்,
பஞ்சி எரி உற்றதென, வெந்து அழிவர்; இந்த உரை பண்டும் உளதால்;
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும், நல் அறம் நடக்கும் அதனை
வஞ்சம் உறு பொய்க் கருமம் வெல்லினும், இராமனை இவ் வஞ்சர் கடவார். 151-

அஞ்சி அயரன்மின்- நீங்கள் அஞ்சித் தளராதீர்கள்;
அவர் எத்தனையர் ஆயிடினும்- அந்த அரக்கர்கள் எத்தனை
பேராக இருந்தாலும்; அத்தனைவரும்- அத்தனை பேர்களும்;
பஞ்சி எரி உற்றதென – பஞ்சில் நெருப்புப் பற்றியதைப்
போல; வெந்து அழிவர்- எரிந்து சாவார்கள்; இந்த உரை
பண்டும் உளது – இந்தச் செய்தி பழங்காலத்திலிருந்து
இருப்பதுதான்; நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும்- நஞ்சு
அமுதத்தை மிகவே வென்றாலும்; நடக்கும் நல் அறம் அதனை-
நடைபெறுகின்ற நல்ல அறத்தை; வஞ்ச வினை பொய்க் கருமம்
வெல்லினும் – வஞ்சகச் செயல்களும் பொய்ம்மைச்
செயல்களும் வென்றாலும்; இராமனை இவ் வஞ்சகர் கடவார்-
இராமபிரானை இந்த வஞ்சகர்கள் வெல்ல மாட்டார்கள்.

————–

‘அரக்கர் உளர் ஆர் சிலர், அவ் வீடணன் அலாது, உலகின் ஆவி உடையார்?
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது; இனி நீர்
கரக்க, முழை தேடி உழற்கின்றிலிர்கள்; இன்று ஒரு கடும் பகலிலே
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும், இவரை. 152-

அவ் வீடணன் அலாது- அந்த வீடணனைத் தவிர; உலகில்-
இந்த உலகத்தில்; அரக்கர் சிலர் ஆவி உடையார் உளர் ஆர்
– அரக்கருள் சிலராய் உயிருடையவர்களாய் இனி இருக்கப்
போகிறவர்கள் யார்? (யாரும் இரார்); இரக்கம் உளது
ஆகின் – இரக்கம் என்ற ஒரு தத்துவம் இருப்பது
உண்மையாயின்; அது நல் அறம் எழுந்து வளர்கின்றது- அதனால்
நல்ல அறம் உயர்ந்து வளர்வதாகிறது; இனி நீர் கரக்க-
இனிமேல் நீங்கள் ஒளிந்து கொள்வதற்கு; முழை தேடி-
குகைகளைத் தேடி; உழல்கின்றிலிர்கள் – துன்பப்பட
வேண்டியதில்லை; இன்று ஒரு கடும் பகலிலே- இன்றைய கடும்
பகலிலேயே; குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய- வானரங்களின்
முதல் தலைவனாகிய சுக்கிரீவனை அடிமையாகக் கொண்ட; கோள்
உழுவை- குறிதப்பாத புலியாகிய இராமன்; இவரைக் கொல்லும்
– இந்த அரக்கர்களைக் கொல்வான்.

————

என்று பரமன் பகர, நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்,
நின்று நிலை ஆறினர்கள், வானவரும்; மானவனும் நேமி எனல் ஆம்
துன்று நெடு வாளி மழை, மாரியினும் மேலன துரந்து, விரைவின்
கொன்று, குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன் அரோ. 153-

என்று பரமன் பகர- மேற்கண்டவாறு சிவபெருமான் கூற;
நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்- பிரமனும் அந்தக்
கருத்தே சரி என உடன்பட; வானவரும்- தேவர்களும்; நின்று –
(மனத்தால் உறுதிபட) நின்று; நிலை ஆறினர்கள்-
(கலங்கிய) நிலை மாறி ஆறுதல் அடைந்தனர்; மானவனும்- மனு
வமிசத்தவனான இராமனும்; நேமி எனல் ஆம்- சக்கராயுதம்
என்று சொல்லத்தக்க; வென்றி நெடு வாளி மழை- வெற்றி
விளைப்பனவும் நெடியனவுமாகிய அம்புகளாகிய மழையினை;
மாரியினும் மேலன துரந்து- மேகத்தை விட அதிகமாக விரையச்
செலுத்தி; விரைவின் கொன்று – விரைவாக அரக்கரைக்
கொன்று; வரைகள் மானு(ம்) தலை- மலைகளை ஒத்த தலைகளை;
மா மலை- (மலைகளின் அடுக்காகிய) பெரிய மலையாக;
குவித்தனன்…

————–

மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி, இறுவர் உயிர்-
பகர அரிய பதம் விரவ, அமரர் பழ
நகரம் இடம் அருக, அனையர் நலிவு பட. 154-

மகர மறி கடலின்- மகர மீன் நிறைந்த கடலைப்போல;
வளையும் வய நவையர் நிருதர்- இராமபிரானைச் சூழ்ந்து
கொண்ட வலிமையுடைய குற்றம் நிறைந்த அரக்கர்கள்; சிகரம்
அனைய உடல் சிதறி- மலைபோன்ற தங்கள் உடல் சிதறுண்டு;
நலிவு பட- சிதறியிட; பகர அரிய பதம் விரவ- உயர்த்திச்
சொல்லுதற்கு அரிய வீரசுவர்க்க பதத்தில் சேர்தலால்; அமரர் படி
நகரம்- தேவர்கள் வாழும் தேவருலகத்தில்; இடம் அருக-
இடமில்லாமல் போகும்படியாக; உயிர் இறுவர்- உயிர் முடிந்தனர்
(இறந்தனர்).

—————–

உகளும், இவுளி தலை துமிய – உறு தலைகள் அகழி அற,
வலிய தலைகள் அறு தலைவர் துகளின்
உடல்கள் விழ, உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ. 155-

உறு கழல்கள்- வலிமை மிகு கால்கள்; தகளி அற- அகல்
விளக்குப் போல் துண்டாகிட; வலிய தலைகள் அறு தலைவர் –
வன்மை மிக்க தலைகள் அறுபட்ட வீரத் தலைவர்களின்;
உடல்கள் துகளின் விழ- உடல்கள் (தரைப்) புழுதியிலே விழ;
உயிர்கள்- அவர்களின் உயிர்கள்; சுரர் உலகின்- தேவர்
உலகத்தில் உள்ள; மகளிர் வன முலைகள் தழுவி- பெண்களின்
அழகிய மார்பினைத் தழுவி; அகம் மகிழ- மனம் மகிழ; இவுளி
தலை துமிய – அவர்கள் ஏறிவந்த குதிரைகள் தலை
துண்டிக்கப்பட்டு; உகளும்- (தரையிலே) புரளும்.

———–

மலையும், மறி கடலும், வனமும், மரு நிலனும்,
உலைவு இல் அமரர் உறை உலகும், உயிர்களொடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி
அலையும் அரியது ஒரு திசையும் இலது, அணுக. 156-

மலையும்- மலைகளும்; மறி கடலும்- (அலைகள்) மடங்கி
வரும் கடல்களும்; வனமும் வறு நிலமும்- காடுகளும் வெற்று
நிலமும்; உலைவு இல் அமரர் உறை உலகும்- அழிதல் இல்லாத
தேவர்கள் வாழும் உலகமும் ஆகிய இத்துணை இடங்களிலும்;
உயிர்களொடு- அரக்கரின் உயிர்களுடன்; தலையும் உடலும்-
அவர்களுடைய தலைகளும் (தலைகளற்ற) உடல்களும்; இடை தழுவு-
இவற்றினிடையே இணைத்து; தவழ் குருதி அலையும்- ஓடுகின்ற
இரத்தக் கடலும்; அரியது ஒரு திசையும் – இல்லாத ஒரு பக்கம்
கூட; அணுக- ஒதுங்குவதற்கு; இலது- இல்லை.

—————–

அரக்கரின் அழிவும், அமரர்களின் மலர் மழையும்

இனைய செரு நிகழும் அளவின், எதிர் பொருத
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய,
அனைய படை நெளிய, அமரர் சொரி மலர்கள்
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய, 157-

இனைய செரு நிகழும் அளவின்- இத்தகைய போர் நடக்கும்
போது; எதிர் பொருத- இராமனுக்கு எதிராகப் போர் செய்த;
வினையமுடை முதல்வர் எவரும்- வஞ்சனை கொண்ட (அரக்கர்)
தலைவர்கள் எல்லோரும்; உடல் விளிய- ஒருங்கே அழிந்ததனால்;
அனைய படை- அந்த (அரக்கர்) சேனை; நெளிய – தளர்ந்திட;
அமரர் சொரி மலர்கள் நனைய- (மகிழ்ச்சி கொண்ட) தேவர்கள்
சொரிந்த மலர்களின் அரும்புகளிலிருந்து; விசையின் எழு துவலை
மழை நலிய – வேகமாக எழுந்து பொழிகின்ற (தேன்) மழை
வருத்துவதால்.. (தொடரும்)

————-

சிதறி ஓடிய அரக்கர் படையைத் தடுத்து, தலைவர்கள் வேகத்துடன் பொருதல்

இரியல் உறு படையை, நிருதர், இடை விலகி,
எரிகள் சொரியும் நெடு விழியர், ‘இழுதையர்கள்!
திரிக, திரிக!’ என உரறு தெழி குரலர், கரிகள்,
அரிகள், பரி, கடிதின் எதிர் கடவ. 158-

இரியல் உறு படையை- களத்தை விட்டு ஓடுகின்ற சேனையை;
எரிகள் சொரியும் நெடு விழியர் – நெருப்பைக் கக்கும் பெரிய
விழிகள் உடையவராய்; நிருதர் – அரக்கர்கள்; இடை விலகி-
ஓடுவோர்களுக்கிடையே குறுக்கே தடுத்து நின்று; இழுதையர்கள் –
அறிவில்லாதவர்களே! ‘திரிக திரிக’ என- மீண்டும் திரும்புக திரும்புக
என்று; உரறு தெழி குரலர் – முழங்கி அதட்டுகின்ற குரல்
உடையவர்களாய்; கரிகள், அரிகள், பரி – யானைகளையும்
சிங்கங்களையும் குதிரைகளையும்; கடிதின்- விரைவாக; எதிர் கடவ-
(மீண்டும்) இராமனுக்கு எதிராகச் செலுத்த… (தொடரும்)

————-

உலகு செவிடு பட, மழைகள் உதிர, உயர்
அலகு இல் மலை குலைய, அமரர் தலை அதிர,
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய,
விலகியது, திமிலம் விளையும்வகை விளைய. 159-

உலகு செவிடு பட – உலகங்கள் செவிடாகவும்; மழைகள்
உதிர- மேகங்கள் உதிரவும்; அலகு இல் உயர் மலை குலைய-
அளவில்லாதனவும், உயரமானவையுமாகிய மலைகள் நிலை குலையவும்;
அமரர் தலை அதிர- தேவர்களின் தலைகள் அதிரவும்; இலகு
தொடு படைகள்- ஒளியோடு விளங்குபவையும் தொடுக்கப்படுபவையுமாகிய படைக்கலங்கள்; இடியொடு உரும்
அனைய- இடியோசையோடு கூடிய மின்னல் போல் அமைந்திட;
திமிலம் வளையும் வகை விளைய- பேரொலி வளைந்து நிற்கும்
வகை உண்டாகும்படி; விலகியது- இராமபிரானைக் குறுக்கே
தடுத்து நின்றது.

—————

‘அழகிது, அழகிது!’ என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட,
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி
மழைகள் முறை சொரிய, அமரர் மலர் சொரிய, 160-

‘அழகிது, அழகிது!’ என – (அரக்கர் படை ஆரவாரத்தோடு
தன்னைச் சூழ்ந்ததைக் கண்டு) ‘அழகாய் இருக்கிறது அழகாய்
இருக்கிறது’ என்று சொல்லி; அழகன் – இராமன்; பழகும்
அதிதியரை- புதிதாகப் பழகுகின்ற விருந்தினரை; உவகையொடு
எதிர்கொள் பரிசுபட – மகிழ்ச்சியோடு எதிர்சென்று
வரவேற்கும் தன்மை தோன்ற; விழைவின் எதிர- ஆசையோடு
எதிரேற்குமாறு; அதிர்- எதிரிகளை அதிரச் செய்கின்றனவும்;
எரி கொள்- நெருப்பினைப் போல் எரிதல் தன்மை கொண்டனவும்
ஆகிய; விரி பகழி மழைகள்- பரந்து செல்லுகின்ற அம்பு
மழைகளை; முறை சொரிய- முறைப்படி சொரியவும்; அமரர்
மலர் சொரிய- தேவர்கள் மலர் மாரி சொரியவும்; (தொடரும்.)

————–

தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ,
சினவு பொரு பரிகள் செறிவ அணுக, உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர, எழு
கனக வரை பொருவ, கதிர் கொள் மணி இரதம். 161-

தினகரனை அணவு கொடிகள்- கதிரவனையே தீண்டுகின்ற
கொடிகள்; திசை அடைவ- திக்குகளின் எல்லையை
அடைந்தனவாக; சினவு, பொரு பரிகள்- சினம் கொண்டனவும்
போர் செய்கின்றனவுமாகிய குதிரைகள்; அணுக செறிவ-
எதிராளிகளை நெருங்கிச் செறிந்தனவாக; கதிர்கொள் மணி
இரதம்- ஒளி கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட தேர்கள்;
உயர் அனகனொடும் – உயர்ந்தவனும் குற்றமற்றவனுமாகிய
இராமபிரானோடு; அமரின் முடுகி எதிர- போரில் விரைந்து
எதிர்ப்பதற்கு; எழு- எழுகின்ற; கனக வரை பொருவ- பொன்
மலையாகிய மேருவைப் போல் அமைந்தன.

————–

பாறு, படு சிறகு கழுகு, பகழி பட,
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி,
வேறு படர் படர, இரவி சுடர் வலையம்
மாறு பட, உலக நிரைகள் அளறு பட. 162-

பாறு- பருந்துகளும்; படு சிறகு கழுகு- பெருஞ் சிறகுகளைக்
கொண்ட கழுகுகளும்; பகழி பட- அம்புகள் தாக்குவதால்; நீறு
படும் இரத நிரையின்- சிதைந்து தூளாகின்ற தேர்களின்
வரிசையில்; உடல் தழுவி- உடல்கள் பட்டு; வேறு படர் படர
– வேறு வழிகளில் செல்லவும்; இரவி சுடர் வலையம்-
கதிரவனது ஒளி வட்டம்; மாறு பட- நிலை குலையவும்; உலகின்
மலைகள் – உலகத்து மலைகளெல்லாம்; அளறு பட- சேறு
ஆகிடவும் (தொடரும்)

————–

அருகு கடல் திரிய, அலகு இல் மலை குலைய,
உருகு சுடர்கள் இடை திரிய, – உரனுடைய
இரு கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் முறை திரிய. 163-

உரனுடைய- வலிமை கொண்ட; இரு கை ஒரு களிறு-
இரண்டு கரங்கள் கொண்ட யானை போன்றவனாகிய இராமன்;
திரிய- போர்க்களத்திலே சாரி திரிந்தமையால்; அருகு கடல்
திரிய – (தொலைவில் உள்ள ஏழு) கடல்களும் ஒன்றுக்கொன்று
அருகு வந்து திரிந்திடவும்; அலகு இல் மலை குலைய-
அளவற்ற மலைகள் நிலை குலையவும்; உருகு சுடர்கள் இடை
திரிய- உரு(க்)குகின்ற வெப்பச் சுடர்க் கோள்கள் வானிடையே
நிலை மாறவும்; உலகு முழுதும்- எல்லா உலகங்களும்; குயவர்
விடு திரிகையென- குயவர்கள் இயக்குகின்ற சக்கரம் போல;
முறை திரிய- தமக்குரிய முறையான தடங்களிலிருந்து மாறவும்;
தொடரும்.

—————-

சிவனும், அயனும், எழு திகிரி அமரர் பதி
அவனும், அமரர் குலம் எவரும், முனிவரொடு
கவனம் உறு கரணம் இடுவர் – கழுது இனமும்,
நமனும், வரி சிலையும், அறனும், நடன் நவில. 164-

கழுது இனமும்- பேய்க் கூட்டங்களும்; நமனும்- யமனும்;
வரி சிலையும்- கட்டு அமைந்த வில்லும்; அறனும்- அறக்
கடவுளும்; நடன் நவில- (மகிழ்ச்சியால்) நடனமாடும்
படியாக; சிவனும் அயனும் எழு திகிரி அமரர் பதி அவனும்-
சிவபிரான், நான்முகன், பகையை அழிக்க எழும் சக்கரப்படை
ஏந்திய தேவர் தலைவனாகிய திருமால் ஆகியோரும்; அமரர்
குலம் எவரும்- தேவர் கூட்டத்தைச் சேர்ந்த எல்லோரும்;
முனிவரொடு- முனிவர்களோடு சேர்ந்து; கவனம் உறு- வேகம்
மிகுந்த; கரணம் இடுவர்- (மகிழ்ச்சியால்) குட்டிக்கரணமிட்டுக்
கூத்தாடினர்.

——————

தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி? முதல் அறிவின்
மூவர் தலைகள் பொதிர் எறிவர், ‘அற முதல்வ!
பூவை நிறவ!’ என வேதம் முறை புகழ. 165-

தேவர்- வானவர்கள்; திரிபுவன நிலையர்- மற்றும் மூன்று
உலகங்களிலும் வாழ்பவர் ஆகியோரில்; செரு இதனை- இந்தப்
போரின்; இறுதி- முடிவு எப்படி இருக்குமென; ஏவர் அறிவுறுவர்
– யார்தான் அறிவார்கள்? (அவர்களுள் எவரும் அறியார்
என்பதாம்); முதல் அறிவின் மூவர்- எல்லாவற்றுக்கும்
காரணமாய் விளங்கிய அறிவு வடிவினராகிய மும்மூர்த்திகள்;
தலைகள் பொதிர் எறிவர்- தலை நடுக்கம் கொண்டவராகிட;
அற முதல்வ- அறத்தின் நாயகனே; பூவை நிறவ- காயாம்
பூவின் (நீல) நிறம் கொண்டவனே! என வேதம்முறை புகழ-
என்று வேதம் முறைப்படி புகழ்ந்திட; (தொடரும்).

———–

எய்யும் ஒரு பகழி, ஏழு கடலும், இடு
வெய்ய களிறு பரியாளொடு இரதம் விழ,
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர்
கைகள் என, அவுணர் கால்கள் கதி குலைவ. 166-

எய்யும் ஒரு பகழி- இராமபிரான் எய்யும் ஓர் அம்பானது;
ஏழு கடலும் இடு – ஏழு கடல்களிலும் சேரும்படி குறி
வைக்கப்பட்ட; வெய்ய களிறு பரி ஆளொடு இரதம் விழ-
கொடிய யானைகள், குதிரைகள், காலாட்களோடு தேர்களும்
விழும்படி; ஒய்ய ஒரு கதியின் ஓட- வேகம் கொண்ட
போக்கிலே ஓட; உணர் அமரர் – அதனை உணர்ந்த
தேவர்களின்; கைகள் என- கைகளைப் போல; அவுணர்
கால்கள் கதி குலைவ- அரக்கர்களின் கால்கள் நிலையில்
திரிந்தன.

——————

அண்ணல் விடு பகழி, யானை, இரதம், அயல்
பண்ணு புரவி, படை வீரர், தொகு பகுதி
புண்ணினொடு குறிகள் புள்ளி என, விரைவின்
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ. 167-

யானை, இரதம், அயல் பண்ணு புரவி, படை, வீரர்-
யானைகள், தேர்கள், இவற்றில் பக்கத்தில் உள்ளதைப்
பருமம் முதலியன கொண்டு தயார் நிலையில் உள்ள குதிரைகள்
காலாட்கள் ஆகியவை; தொகு பகுதி – கூடியுள்ள அணி வகுப்பிலே;
புண்ணின் இடு குறிகள் – புண்களால் இடப்படுகின்ற
அடையாளங்கள்; புள்ளி என- புள்ளிகள் ஆகும் என்னும்படியாக;
விரைவில் எண்ணுவன அனைய- விரைந்து எண்ணுகின்றவை போல;
அண்ணல் விடு பகழி – இராமபிரான் செலுத்துகின்ற அம்புகள்;
எல்லை இல நுழைவ- முடிவில்லாதனவாய் படைகளூடே நுழைந்தன.

—————–

அரக்கர் தப்பிச் செல்லாவண்ணம் இராமன் சர மதில் அமைத்தல்

‘சுருக்கம் உற்றது படை; சுருக்கத்தால் இனிக் கரக்கும், உற்று
ஒரு புறத்து’ என்னும் கண்ணினால்,
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்திட்டான் அரோ. 168-

சுருக்கம் உற்றது படை- அரக்கரின் படை குறைந்து விட்டது;
சுருக்கத்தால்- படையின் அளவு குறைந்து விட்டதால்; இனி ஒரு
புறத்து உற்றுக் கரக்கும்- இனி ஒரு புறமாகச் சென்று
ஒளிந்து கொள்ளும்; என்னும் கண்ணினால்- என்ற
கருத்தினால்; அன்று- அப்போதே; அரக்கருக்குச் செல்வு
அரிதாம் வகை- அரக்கர்கள் தப்பிப் போக முடியாத
வகையாக; சரக் கொடு- அம்புகளைக் கொண்டு; நெடு மதில்
சமைத்திட்டான் – பெரிய மதிலை அமைத்துவிட்டான்
(இராமன்)

——

மாலியை, மாலியவானை, மால் வரை போல் உயர்
கயிடனை, மதுவை, போன்று உளார்,
சாலிகை யாக்கையர், தணப்பு இல் வெஞ் சர
வேலியைக் கடந்திலர், உலகை வென்றுளார். 169-

உலகை வென்றுளார் – உலகையே வெற்றி கொண்டவர்களும்;
மாலியை, மாலியவானை, மால்வரை போல உயர் கயிடனை
மதுவைப் போன்று உளார் – மாலி, மாலியவான், பெரிய
மலைபோல் உயர்ந்த கயிடபன் மது ஆகியோரைப் போன்று
உள்ளவர்களும்; சாலிகை யாக்கையர்- கவசம் அணிந்த உடல்
உடையவர்களுமாகிய அரக்கர்கள்; வேலியைக் கடந்திலர்-
இராமபிரான் இட்ட அம்பு வேலியைக் கடந்து போகவில்லை
(இயலவில்லை)

———–

மாண்டவர் மாண்டு அற, மற்றுளோர் எலாம்
மீண்டனர், ஒரு திசை – ஏழு வேலையும்
மூண்டு அற முருக்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட, சுருங்கித் தொக்கபோல். 170-

மாண்டவர் மாண்டு அற- இறந்தவர்கள் இறந்து ஒழிந்தவராக;
மற்றுளோர் எலாம்- அதன்மேலும் உள்ளவர்கள் எல்லாரும்;
மூண்டு அற முருக்கிய – பொங்கிப் பெருகி எல்லாவற்றையும்
அழிக்கின்ற; ஊழிக் காலத்தில் – உலகங்களின் முடிவுக்
காலத்தில்; தூண்டுறு சுடர் சுட- மூண்டு பெருகி வரும் (வடவை
முகத்) தீ; சுட- சுடுவதால்; ஏழு வேலையும்- ஏழு கடல்களும்;
சுருங்கித் தொக்கபோல் – அளவிலே சுருங்கி (ஒரு
சிற்றிடத்தில்) கூடியதுபோல; ஒரு திசை மீண்டனர்- ஒரு
திசையிலே வந்து சேர்ந்தனர்.

—————–

‘புரம் சுடு கடவுளும், புள்ளின் பாகனும்,
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்,
உரம் சுடுகிற்கிலர்; ஒருவன் நாமுடை
வரம் சுடும்; வலி சுடும்; வாழும் நாள் சுடும். 171-

புரம் சுடு கடவுளும்- முப்புரம் எரித்த சிவனும்; புள்ளின்
பாகனும்- (கருடப்) பறவையைச் செலுத்தும் திருமாலும்; அரம் சுடு
குலிசவேல்- அரத்தினால் அராவிக் கூர்மைப்படுத்தப் படுகின்ற
வச்சிராயுதத்தை ஏந்தியுள்ள; அமரர் வேந்தனும்- தேவர்
தலைவனாகிய இந்திரனும்; உரம் சுடுகிற்கிலர் – நம் வலிமையை
அழிக்க இயலாதவர்களானார்கள்; ஒருவன்- இப்போது இங்கே உள்ள
தனி ஒருவன்; நாம் உடை வரம் சுடும்- தெய்வங்களிடமிருந்து நாம்
பெற்ற வரங்களின் வலிமையை அழிக்கிறான்; வாழும் நாள் சுடும்-
வாழ்நாளையே அழிக்கிறான்.

—————-

‘ஆயிர வெள்ளம் உண்டு; ஒருவர், ஆழி
சூழ் மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்;
மேயின பெரும் படை இதனை, ஓர் விலால் “ஏ”
எனும் மாத்திரத்து எய்து கொன்றனன். 172-

ஆயிரம் வெள்ளம் உண்டு- அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம்
அளவில் உண்டு; ஒருவர்- அப்படையில் உள்ள ஒவ்வொருவரும்;
ஆழி சூழ் ஞாலத்தை மறிக்கும் வன்மையோர்- கடல் சூழ்ந்த
உலகமே எதிர்த்து வந்தாலும் தடுத்து நிறுத்திப் போர் செய்யும் ஆற்றல்
உடையவர்கள்; மேயின பெரும்படை இதனை- போர்க்களத்துக்கு
வந்த இந்தப் பெரிய படையை; ஓர் வி(ல்)லால் – ஒரே ஒரு வில்லைக்
கொண்டு; ஏ எனும் மாத்திரத்து – ”ஏ” என்று சொல்லிமுடிக்கும்
கால அளவிலே; எய்து கொன்றனன்- (ஒருவனே) கணை செலுத்திக்
கொன்று விட்டான்.

————–

‘இடை, படும், படாதன இமைப்பிலோர்
படை; புடைபட, வலம்கொடு விலங்கிப் போகுமால்;
படை படும் கோடி ஓர் பகழியால் பழிக்
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால். 173-

இமைப்பிலோர் படை- தேவர்களின் படை; இடை-
போர்க் களமாகிய இடத்திலே; படாதன படும்- எம் அரக்கர்
சேனையில் (வேறெங்கும்) படாத துன்பத்தை அடையும்; புடைபட-
அடிபடுவதால்; வலங்கொடு- வலப்புறமாகச் சுற்றிக்கொண்டு;
விலங்கிப் போகும்- விலகிப் போய்விடும்; படை படும்
கோடி- அரக்கர் சேனை கோடிக்கணக்கில் இருந்தும்; ஓர்
பகழியால் கடைபடும்- இராமன் விடுக்கும் ஒரு அம்பினால்
(வாழ்வின்) இறுதியை அடைகின்றது; அரக்கர்தம் பழி பிறவி
கட்டம்- அரக்கரின் இழி பிறவியை நீக்கிக்கொண்டோம்.

————

‘பண்டு உலகு உய்த்தவனோடும், பண் அமை
குண்டையின் பாகனும், பிறரும் கூடினார்;
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால். 174-

பண்டு உலகு அளித்தவனோடும்- முன்பு உலகங்களைப்
படைத்தவனாகிய பிரமனோடும்; பண் அமை குண்டையின்
பாகனும் – ஆசனம் அமைந்த இடபத்தைச் செலுத்தும்
சிவபிரானும்; பிறரும் கூடினார்- மற்றவர்களும்
கூடியிருக்கின்றனர்; விசும்பினின்று – ஆகாயத்திலிருந்து;
ஆர்க்கின்றாருழை- ஆரவாரம் செய்கின்ற தேவர்களிடையே;
கண்டிலம்- (மும்மூர்த்திகளில் ஒருவனாகிய திருமாலைக்)
காணவில்லை; இவன்- இந்த இராமன்; நெடு மாயக்கள்வன்-
பெரு மாயைகள் வல்ல (அந்தத்) திருமாலே போலும்

————

‘கொன்றனன், இனி ஒரு கோடி கோடி மேற்று;
அன்று எனின், பதுமம் மேற்று; ஆகில் வெள்ளம் ஆய்
நின்றது; நின்று இனி நினைவது என் பெற?
ஒன்று என உணர்க’ என, வன்னி ஓதினான்: 175-

இனி- இப்போது; ஒரு கோடி கோடி மேற்று கொன்றனன்
– ஒரு கோடி கோடிக்கு மேலான அரக்கரை (இராமன்)
கொன்றுவிட்டான்; அன்று எனின் பதுமம்- கோடி கோடி அன்று
என்றால் அவனால் கொல்லப்பட்டவரின் எண்ணிக்கை பதுமம்
ஆக இருக்கலாம்; அன்று எனின் வெள்ளமா நின்றது- அதுவும்
இல்லையென்றால் வெள்ளம் அளவினதாக அமைந்திருக்கலாம்.
நின்று இனி நினைவது என் பிற- (அத்துணைப் பேரையும்
இழந்தபின்) வாளா நிற்பதால் இனிமேல் நினைத்து செய்யக்
கூடியது என்ன இருக்கிறது; ஒன்று என நினைக- செய்யத்தக்கது
ஒன்றுதான் என நினையுங்கள்; என வன்னி ஓதினான்- என்று
வன்னியாகிய அரக்கர் படைத் தலைவன் அரக்கரிடம்
பின்வருமாறு கூறினான்.

———–

ஒரு முகமாக இராமனை எதிர்க்குமாறு வன்னி அரக்கர்க்கு கூறுதல்

‘விழித்துமோ, இராவணன் முகத்து மீண்டு, யாம் –
பழித்துமோ, நம்மை, – நாம் படுவது அஞ்சினால்?
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம, யாம்
கழித்தும் இவ் ஆக்கையை, புகழைக் கண்ணுற. 176-

நாம் படுவது அஞ்சினால் – நாம் இறப்பதற்குப்
பயப்பட்டால்; மீண்டு இராவணன் முகத்து யாம் விழித்துமோ-
திரும்பச் சென்று இராவணன் முகத்திலே நாம் விழிப்போமா?;
நம்மைப் பழித்துமோ- (தோல்வியை நினைத்து) நம்மை நாமே
பழித்துக்கொண்டிருப்போமா? (இரண்டும் பெரிய பழிக்குரிய
செயல்கள்) புகழைக் கண்ணுற- புகழைக் காணுவதற்கு; அழித்தும்
ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம- மீண்டும் ஒரு
பிறப்பினை அடையாத வழியைச் சென்று நெருங்குவதற்காக; இவ்
ஆக்கையை- இந்த உடம்பினை; யாம் கழித்தும்- நாம்
விட்டு விடுவோமாக.

—————

‘இடுக்கு, இனிப் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்,
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி, யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர்’ என, ஒருமை கூறினான். 177-

இனி- இதற்குமேல்; இடுக்கு- இந்தச் சங்கடத்திலிருந்து;
பெயர்ந்து – நீங்கி; உறை எண்ணுவேம் எனின்-
தங்குவதற்குரிய வழிகளை எண்ணிப் பார்த்தோமானால்; அடுத்த- நம்மை
(இங்கே இப்போது) அடுத்துள்ளதாகிய; கூர் வாளியின் அரணம்
– கூர்மையான அம்பினாலாகிய மதிலுக்கு அப்பால்; நீங்கலோம்-
வெளியேற முடியாதவர்களாக இருக்கிறோம்; எடுத்து- ஊக்கம்
கொண்டு; ஒரு முகத்தினால் எய்தி- ஒருமுகமாக அடைந்து; யாம்
இனிக் கொடுத்தும் நம் உயிர்- இனி நாம் நம் உயிரைக்
கொடுப்போமாக; என- என்று; ஒருமை கூறினான்- ஒருதலையாக
(உறுதியாக)க் கூறினான்.

———-

அரக்கர் இராமனை வளைத்து அடர்த்தல்

இளக்க அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்தென, பதங்கம் ஆர் அழல்
விளக்கினில் வீழ்ந்தென, விதிகொடு உந்தலால்,
வளைத்து இரைத்து அடர்த்தனர், மலையின் மேனியார் 178-

இளக்க அரு நெடுவரை- அசைத்தலுக்கு அரிய பெரிய
மலைகளைக்கூட; ஈர்க்கும் ஆறு எலாம்- இழுத்துச் செல்லக்
கூடிய ஆறுகளெல்லாம்; அளக்கரின் பாய்ந்தென- கடலிலே
சென்று பாய்தல் போலவும்; பதங்கம்- விட்டிற் பூச்சிகள்;
ஆர் அழல் விளக்கினில் வீழ்ந்தென- நிறைந்த சுடரையுடைய
விளக்கிலே வீழ்வது போலவும்; விதி கொடு உந்தலால்-
ஊழ்வினை (பிடரியைப்) பிடித்துக்கொண்டு தள்ளியதால்; மலையின்
மேனியார் – மலைபோலப் பெரிய உடல் கொண்ட அரக்கர்கள்;
வளைத்து இரைத்து அடர்த்தனர் – சூழ்ந்து ஆரவாரம் செய்து
எதிர்த்து நெருக்கினர்.

———–

மழு, எழுத் தண்டு, கோல், வலயம், நாஞ்சில், வாள்,
எழு, அயில், குந்தம், வேல், ஈட்டி, தோமரம்,
கழு, இகல் கப்பணம், முதல கைப் படை,
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார். 179-

மழு… கப்பணம் முதல- மழு, எழுந்து மோதுகின்ற கதாயுதம்,
அம்பு, வலயம், கலப்பை, வாள், கணையம், கூர்மையான
குந்தம், வேல், ஈட்டி, தோமரம், கழு, வலிய கப்பணம்
முதலாகிய; கைப்படை- கையில் ஏந்திச் செலுத்தும்
படைக்கலங்களை; தொழுவினில் புலி அ(ன்)னான் உடலில்-
தொழுவத்தில் உள்ளே இருக்கும் புலி போன்றவனாகிய இராமன் உடல்மீது; தூவினார்-
(அரக்கர்கள்) வீசினார்கள்.

————-

காந்தருப்பம் என்னும் படையை இராமன் விடுதல்

காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை,
வேந்தருக்கு அரசனும், வில்லின் ஊக்கினான்;
பாந்தளுக்கு அரசு என, பறவைக்கு ஏறு என,
போந்து உருத்தது, நெருப்பு அனைய போர்க் கணை 180-

வேந்தருக்கு அரசனும்- (அரக்கர்கள் படைக்கலங்களை வீச)
அரசனுக்கு அரசனான இராமனும்; காந்தருப்பம் எனும் கடவுள்
மாப் படை – காந்தர்ப்பம் என்னும் பெயருடைய தெய்வீகம்
பொருந்திய பெருமை மிக்க படைக்கலத்தை; ஊக்கினான்-
விரைந்து செலுத்தினான்; நெருப்பு அனைய போர்க் கணை-
நெருப்பினைப் போன்ற அந்தப் போர் அம்பு; பாந்தளுக்கு
அரசு என- பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேடனைப் போலவும்;
பறவைக்கு அரசு என- பறவைகளுக்கு அரசனான கருடனைப்
போலவும்; போந்து உருத்தது- சென்று அச்சத்தை ஊட்டியது.

————-

மூன்று கண் அமைந்தன, ஐம் முகத்தன,
ஆன்ற மெய் தழலன, புனலும் ஆடுவ,
வான் தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின, புரம் சுடும் ஒருவன் தோற்றத்த. 181-

புரம் சுடும் ஒருவன் தோற்றத்த- முப்புரங்களை எரித்த
சிவபிரானின் தோற்றம் கொண்டனவாய்; மூன்று கண் அமைந்தன
– மூன்று கண் (முனை) பொருந்தியனவாகவும்; ஐம் முகத்தன-
ஐந்து முகம் (முனை) பொருந்தியனவாகவும்; ஆன்ற மெய் தழலன-
நிறைந்த தழல் உருவம் பொருந்தியனவாகவும்; புனலும் ஆடின-
நீரில் தோய்ந்தனவாகவும்; வான் தொட நிமிர்வன-
வானத்தைத் தொடுமளவுக்கு மேல் நோக்கி எழுவனவுமாக; வாளி
மா மழை தோன்றின- அம்பின் பெருமழைகள் தோன்றின.

———–

மூலச்சேனை கணத்தில் அழிதல்

ஐ-இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற,
‘எய்’ எனும் மாத்திரத்து, அவிந்தது என்பரால்-
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே. 182-

அய் இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்- பத்துக் கோடி
அரக்க அரசர்களும்; வலி மொய் வீரர்கள்- வலிமை செறிந்த
(அரக்க) வீரர்களும்; முற்றுற ஒழிய- முழுமையாக அழிந்திட; எய்
எனும் மாத்திரத்து- எய் என்று சொல்லும் (நொடி) அளவில்; செய்
தவத்து இராவணன்- செய்து சிறந்த தவங்களையுடைய
இராவணனது; மூலச்சேனை அவிந்தது என்பர் – மூல பலப் படை
அழிந்துவிட்டது என்று சொல்வார்கள்.

————-

மேலும் பல திசைகளிலிருந்து அரக்கர் படைகள் வருதல்

மாப் பெருந் தீவுகள் ஏழும், மாதிரம்,
பாப்பு அரும் பாதலத்துள்ளும், பல் வகைக்
காப்பு அரு மலைகளும் பிறவும் காப்பவர்,
யாப்புறு காதலர் இராவணற்கு அவர். 183-

மாப் பெரும் தீவுகள் ஏழும்- மிகப் பெரிய ஏழு தீவுகளையும்;
மாதிரம்- திசைகளையும்; அரும் பாப்பு பாதலத்துள்ளும்- அரிய
பாம்புகள் வாழும் பாதாளத்தையும்; காப்பு அரு பல்வகை மலைகளும்-
காவல் தொழிலால் அருமைப்பாடு உடைய பல்வகை மலைகளிலும்;
பிறவும்- மற்றும் பிற இடங்களையும்; காப்பவர் – காவல் புரிவோராய்; அவர் – அவ்வாறு
காக்கின்றவர்கள்; இராவணற்கு யாப்பறு காதலர்-
இராவணனிடம் பிணைப்புற்ற அன்பினராவார்.

————

மாத் தட மேருவை வளைந்த வான் சுடர்
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார்,
பூத் தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு
நாத் தழும்பு ஏறிய வரத்தர், நண்ணினார். 184-

மாத் தட மேருவை வளைந்த வான் சுடர்- மிகப் பெரிய
மேரு மலையைச் சுற்றி வருகின்ற வானத்துச் சுடர்களாகிய ஞாயிறு,
திங்கள், ஆகியவற்றை; கோத்து – சரத்திலே கோத்து; அகல்
மார்பிடை- தங்களுடைய அகலமான மார்பிலே; அணியும்
கொள்கையர் – அணிந்து கொள்ள வேண்டுமென்ற
கொள்கையுடையவர்கள்; பூத் தவிசு உகந்தவன்- மலராசனத்தை
விரும்பும் பிரமன்; புகன்ற- சொல்லி அருளிய; பொய் அறு –
பொய்ம்மையற்றதும்; நாத்தழும்பு ஏறிய – சொல்லிச்
சொல்லி உரம் ஏறியதுமான; வரத்தர் – வரம் பெற்றவர்கள்;
(ஆகிய இவர்களெல்லாம்) நண்ணினார் – (இராவணன்
விரும்பியபடி) வந்து சேர்ந்தனர்.

———-

‘நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்,
வெம் முனை, இராவணன் தனையும் வெல்லுமால்;
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ?
செம்மையில் தனித் தனிச் செய்துமோ செரு? 185-

ஈண்டு- இப்போர்க்களத்திலே; நம்முள் ஒருவனை – நமக்குள்
ஒருவனை; நன்கு வெல்லும் எனின்- நல்ல முறையிலே இராமன்
வெற்றி கொள்வானாயின்; வெம் முனை- கொடிய போர்
முனையிலே; இராவணன் தனையும்- இராவணனையும் வென்றிடுவான்;
இம்மென- உடனே; எடுத்து எழுந்து உடன் சேறுமோ-
கிளர்ந்தெழுந்து ஒன்றாக இணைந்து செல்வோமா? தனித்தனி-
(அவ்வாறு இல்லாமல்) தனித்தனியாக; செம்மையில் செருச்
செய்துமோ- செம்மையாகப் போர் செய்வோமா? (என வன்னி
என்ற தலைவனைக் கேட்டனர்).

————–

வன்னி சொல்ல, யாவரும் உடன்பட்டு, இராமனை வளைந்து, பொருதல்

‘எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து, இந் நெடியோனை
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல், வெல்லோம்
வெல்லோம்!’ என்றனன், வன்னி; மிடலோரும், ‘தொல்லோன்
சொல்லே நன்று’ என, அஃதே துணிவுற்றார் 186-

‘எல்லோம் எல்லோம்’- நாம் எல்லோரும் எல்லோரும்;
ஒன்றி வளைந்து- ஒன்றாகச் சூழ்ந்து கொண்டு; இந்நெடியோனை
– நெடியவனாகிய இவனை; வல்லே- விரைவிலே; வல்ல போர்
வலி முற்றி – திறமை கொண்ட போர் வலிமையாலே
சூழ்ந்துகொண்டு; மலையோமேல்- போர் செய்யாவிட்டால்;
வெல்லோம் வெல்லோம்- வெல்ல மாட்டோம் வெல்ல
மாட்டோம்; என்றனன் வன்னி – என்று வன்னி கூறினான்;
மிடலோரும் – வலிமை கொண்ட மற்ற வீரர்களும்;
தொல்லோன் சொல்லே நன்று என- பழமையான வீரனாகிய
வன்னி சொல்லியதே நல்லது என்று; அஃதே து ணிவுற்றார்-
அவன் சொன்னபடியே செய்யத் துணிந்தனர்.

————

அன்னார்தாமும், ஆர்கலி ஏழும் என, ஆர்த்தார்;
‘மின் ஆர் வானம் இற்று உறும்’ என்றே, விளி சங்கம்
கொன்னே ஊதி, தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார்;
என் ஆம், வையம்? என்படும் வானம்? திசை ஏதாம்? 187-

அன்னார் தாமும்- அங்ஙனம் துணிந்த அந்த அரக்கர்களும்;
ஆர்கலி ஏழும் என ஆர்த்தார்- கடல்கள் ஏழும் ஒன்றாக
முழங்கியது என்னும்படி ஆரவாரித்தனர் ; ‘மின் ஆர் வானம்
இற்று உறும்’ என்றே- மின்னல் பொருந்திய வானம் இற்று
(நிலத்தை) அடையும் என்று சொல்லுமாறு; விளி சங்கம்-
ஒலிக்கின்ற சங்குகளை; கொன்னே ஊதி- அச்சம் தோன்றுமாறு ஊதி;
தோள் புடை கொட்டிக்கொடு- தோள்களைப் பக்கமாகக்
கொட்டிக்கொண்டு; சார்ந்தார்- போர் செய்ய வந்து
சேர்ந்தனர்; வையம் என் ஆம்- நிலவுலகம் என்ன ஆகுமோ;
என் படும் வானம் – வானுலகம் என்ன பாடு படப்போகிறதோ;
திசை ஏதாம் – (நிலை பெற்றுள்ள) திசைகள்தான் என்ன
ஆகுமோ?

————

ஆர்த்தார் அன்னார்; அன்ன கணத்தே, அவர் ஆற்றல்
தீர்த்தானும் தன் வெஞ் சிலை நாணைத் தெறிப்புற்றான்;
போர்த்தான் பொன் – தோள்; முற்றும் அளந்தான் புகழ்ச் சங்கம்
ஆர்த்தால் ஒத்தது, அவ் ஒலி, எல்லா உலகுக்கும். 188-

அன்னார்- அந்த அரக்கர்கள்; ஆர்த்தார் – ஆரவாரம்
செய்தார்கள்; அன்ன கணத்தே- அந்தக் கணத்திலேயே; அவர்
ஆற்றல் தீர்த்தானும்- அவர்களின் ஆற்றலை அழித்தவனாகிய
இராமனும்; தன் வெஞ்சிலை நாணைத் தெறிப்புற்றான்-
தன்னுடைய கொடிய வில்லின் நாணைத் தெறித்தான்; அவ் ஒலி
– அப்போது எழுந்த ஒலியானது; பொன் தாள் பேர்த்தான்-
தன் பொற்கால்களைப் பெயர்த்தவனாய்; முற்றும் அளந்தான்
– எல்லா உலகங்களையும் அளந்தவனாகிய திருமால் (கரத்தில்
ஏந்தும்); பிறழ் சங்கம் – விளங்குகின்ற சங்கு; ஆர்த்தால்
ஒத்தது- ஆரவாரித்ததைப் போன்றிருந்தது.

—————-

பல் ஆயிர கோடியர்; பல் படை
நூல் வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க
வலார்; எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர்; அரக்கரின் மேதகையார். 189-

அரக்கரில் மேதகையார்- அரக்கரிலே மேம்பட்டவராகிய
அவர்கள்; பல் ஆயிர கோடியர்- பல ஆயிரம் கோடிப் பேர்;
பல் படை நூல் வல்லார்- பலவாகிய படைக்கலக் கலையில்
வல்லவர்கள்; அவர் மெய்ம்மை வழங்க வ(ல்)லார்-
அவர்கள் செம்மையான முறையில் (படைக்கலங்களைச்) செலுத்த
வல்லவர்கள்; எல்லா உலகங்களும் ஏறிய போர் வில்லாளர்-
அனைத்து உலகங்களிலும் சிறப்பால் ஓங்கிய போரில் வில்லை
ஆளும் திறம் உடையவர்கள்.

———-

வென்றார், உலகங்களை, விண்ணவரோடு
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம்;
கொன்றான் நிமிர் கூற்று என, எவ் உயிரும்
தின்றார்; – எதிர் சென்று, செறிந்தனரால். 190-

உலகங்களை- உலகங்களோடு; விண்ணவரோடு ஒன்றா உயர்
தானவர் யூகம் எலாம் – தேவர்களோடு இசைந்து வாழாமல்
உயர்ந்த தானவர்களின் சேனை அணிகளையெல்லாம்; வென்றார்
– வென்றார்கள்; நிமிர் கூற்று என- (தோல்வி அறியாமல்)
ஓங்கி நிற்கும் கூற்றுவனைப் போல; எவ் உயிரும் தின்றார் – எல்லா
உயிர்களையும் தின்றவராய்; எதிர் சென்று செறிந்தனர்- எதிராகச்
சென்று குழுமினார்கள்.

—————–

வளைத்தார் மத யானையை, வன் தொழுவில்
தளைத்தார் என, வந்து, தனித் தனியே
உளைத்தார் உரும் ஏறு என; ஒன்று அல போர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால். 191-

மத யானையை வளைத்தார்- மதங்கொண்ட யானைகளை
வளைத்தவர்களாய்; வன் தொழுவில் தளைத்தார் என வந்து-
வலிய தொழுவத்திலே கட்டி வைத்தவர் போல வந்து;
தனித்தனியே உறும் ஏறு என உளைத்தார் – தனித்தனியாகப்
பேரிடி போல ஆரவாரித்தனர்; ஒன்று அல பல போர்
விளைத்தார்- ஒரு வகைப்பட்டதாக அல்லாமல் பல வகையான
போர்களைச் செய்தார்கள்; இமையோர்கள் வெதும்பினர்-
தேவர்கள் (அதுகண்டு) வெதும்பினார்கள்.

————

விட்டீய வழங்கிய வெம் படையின்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும், கண்
தீயும், ஒருங்கு கலந்து எழலால், உள்
தீ உற வெந்தன, ஏழ் உலகும். 192-

விட்டீய- (பகைவர்கள் களத்தை) விட்டோடுமாறு; வழங்கிய
வெம்படையின் – செலுத்தப்பட்ட கொடிய படைக்கலங்கள்;
சுட்டீய- சுடும்படியாக; நிமிர்ந்த சுடர்ச் சுடரும்- ஓங்கி
வளர்ந்த சுடருடைய நெருப்பும்; கண் தீயும்- (கோபத்தால்)
கண்ணிலிருந்து தோன்றும் கோபத்தீயும்; ஒருங்கு கலந்து
எழலால்- ஒன்றாகச் சேர்ந்து மேல் எழுவதனால்; ஏழ் உலகும்
– ஏழு உலகங்களும்; தீ உள் உற வெந்தன- நெருப்பு உள்புகுந்து
மிகுவதால் வெந்தன.

————

தேர் ஆர்ப்பு ஒலி, வீரர் தெழிப்பு ஒலியும்,
தார் ஆர்ப்பு ஒலியும், கழல் தக்கு ஒலியும்,
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்,
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும். 193-

தேர் ஆர்ப்பு ஒலி- (ஓடும்) தேர்களின் ஆரவாரமான
ஒலியும்; வீரர் தெழிப்பு ஒலியும்- போர் வீரர்கள்
அதட்டுகின்ற ஒலியும்; தார் ஆர்ப்பு ஒலியும்- கிண்கிணி
மாலைகளின் ஆரவார ஒலியும்; கழல் தாக்கு ஒலியும்- வீரக்
கழல்கள் மோதுதலால் எழுகின்ற ஒலியும்; போர் ஆர் சிலை
நாணி புடைப்பு ஒலியும்- போருக்கெனப் பொருந்திய
வில்லின் நாணினைத் தெறித்தலால் எழுகின்ற ஒலியும்;
காரால் பொலியும் – கருநிறத்தோடு அழகாக விளங்குகின்ற;
களிறு ஆர்ப்பு ஒலியும்- யானைகளின் ஆரவார ஒலியும்
(போர்க்களத்திலே கலந்து ஒலித்தன;)

—————-

இராமனும் அம்பு மழை பொழிய, அரக்கர் சேனை அழிந்துபடுதல்

‘எல்லாரும் இராவணனே அனையார்;
வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்;
தொல்லார் படை வந்து தொடர்ந்தது’ எனா,
நல்லானும் உருத்து, எதிர் நண்ணினனால். 194-

எல்லாரும் இராவணனே அனையார் – எதிரே தோன்றும்
எல்லோருமே (தனித்தனியாக) இராவணனை நிகர்த்தவர்கள்;
வெல்லா உலகு இல்லவர்- வெற்றி கொள்ளாத உலகம் என
எதுவும் இல்லாதவர்கள் (அதாவது எல்லா உலகங்களையும் வென்றவர்கள்);
மெய் வலியார் – உடல் வலிமை கொண்டவர்கள்; எனா- என்று
எண்ணி; எதிர் நண்ணினன்- அரக்கருக்கு எதிராக (இராமன்)
நெருங்கினான்.

———-

ஊழிக் கனல் போல்பவர் உந்தின போர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல,
பாழிக் கடை நாள் விடு பல் மழைபோல்,
வாழிச் சுடர் வாளி வழங்கினனால். 195-

ஊழிக்கனல் போல்பவர்- உலக அழிவுக்குரிய பிரளய காலத்து
நெருப்பைப் போன்றவராகிய அரக்கர்கள்; உந்தின- செலுத்திய;
ஆழிப்படை அம்பொடும் அற்று அகல- சக்கராயுதமும் அம்பும்
சிதைந்து ஒழியும்படி; கடைநாள் விடு பல் மழை போல்- யுகாந்தத்தில்
(உலக இறுதிநாளில்) பெய்யும் பெருமழை போல; பாழி- வலிமைமிக்க;
சுடர் வாளி – ஒளி பொருந்திய அம்புகளை; வழங்கினன்- இராமபிரான்
எய்தான்.

—————

சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்,
தேரோடு மடிந்தனர், செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து, உரவோர். 196-

சூரோடு தொடர்ந்த- கொடுமையைப் பரப்பிக்கொண்டு வந்த;
சுடர்க் கணை- ஒளி கொண்ட (இராம) பாணங்கள்; தாரோடு
அகலங்கள் தடிந்திடலும்- மலைகளோடு அவற்றை அணிந்த
மார்புகளை அறுத்திடலும்; செங்கதிரோன்- சூரியன்; ஊரோடு
மறிந்தனன் ஒத்து- தன்னைச் சூழ்ந்த ஊர்கோளோடு விழுந்தவனைப்
போல; உரவோர்- வலிய அரக்கர்கள்; தேரோடு மடிந்தனர் –
தாங்கள் ஏறி வந்த தேரோடு மடிந்தார்கள்.

——-

கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்,
செல்லோடு எழு மா முகில் சிந்தினபோல்,
வில்லோடும் விழுந்த, மிடல் கரமே. 197-

கொல்லோடு சுடர்க்கணை- கொல்லுதல் தொழிலோடு கூடிய
ஒளிமிக்க அம்புகள்; கூற்றின்- யமனுடைய; நிணப் பல்லோடு
– கொழுப்புத் தசை படிந்த பல்லோடு; தொடர்ந்தன
பாய்தலினால் – தொடர்ந்து பாய்வதால்; மிடல் கரம்-
அரக்கரின் வலிமை வாய்ந்த கைகள்; செல்லோடு எழு- இடி
மின்னலோடு எழுகின்ற; மாமுகில்- பெரிய மேகங்கள்;
சிந்தின போல் – சிந்தியதைப் போல; வில்லோடும்
விழுந்த- பிடித்திருந்த வில்லோடு விழுந்தன.

————-

செம்போடு உதிரத் திரை ஆழியின்வாய்-
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த – குறைந்து,
அம்போடும் விழுந்த அடல் கரமே. 198-

குறைந்து அம்போடும் விழுந்த- துணிக்கப்பட்டு அம்போடு
விழுந்த; அடல் கரம்- வலிய கைகள்; செம்போடு உதிரத்
திரை ஆழியின் வாய்- சிவந்த நிறத்தோடு குருதியாகிய அலை
கடலிலே; மேல் நிமிரும் – மேல் நோக்கி வளர்கின்ற;
கொம்போடும் விழுந்தன – மரக்கிளைகளோடு
விழுகின்றனவாகிய; வெம்பு ஓடு அரவக்குலம் ஒத்த-
சினங்கொண்டு ஓடும் பாம்புக் கூட்டங்களை ஒத்தன.

————–

முன் ஓடு உதிரத் திரை, மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்,
மின்னோடும் விழுந்தன மேகம் என,
பொன் ஓடை நெடுன் கரி புக்கனவால். 199-

மூதுலகைப் பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்- பழமையான
உலகத்தைச் சூழ்ந்து வளைத்துக்கொண்ட கடலிலே; மின்னோடும்
– மின்னலோடும்; விழுந்தன மேகம் என- விழுந்தனவாகிய மேகம்
போல; முன் ஓடும் உதிரப் புனல்- முற்பட்டுப் பாய்கின்ற குருதி
வெள்ளத்திலே; பொன் ஓடை நெடுங் கரி புக்கன- பொன்மயமான
நெற்றிப்பட்டம் சூட்டப்பெற்ற பெரிய யானைகள் புகுந்தன.

———

மற வெற்றி அரக்கர் வலக் கையொடும்,
நறவக் குருதிக் கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன; மீது துடித்து எழலால்,
இறவு ஒத்தன, வாவும் இனப் பரியே. 200-

மற வெற்றி அரக்கர் – வீர வெற்றி (பெற்றுவந்த)
அரக்கரின்; வலக்கையொடும் – வலப்புறக் கையோடு; நறவக்
குருதிக் கடல்- மணம் கொண்ட இரத்தக் கடலிலே; வீழ்-
வீழ்கின்ற; நகை வாள்- ஒளியுடன் கூடிய வாள்கள்; சுறவு
ஒத்தன- சுறா மீன்களைப் போன்றிருந்தன; வாவும் இனப்
பரி – தாவிச் செல்லும், கூட்டமான குதிரைகள்; மீது துடித்து
எழலால்- மேலே துடித்து எழுவதால்; இறவு ஒத்தன- இறால்
மீன்களைப் போல் இருந்தன.

—————–

தாமச் சுடர் வாளி தடிந்து அகல,
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படு கேடகம், மால் கடல் சேர்
ஆமைக் குலம் எத்தனை அத்தனையால்! 201-

தாமச்சுடர் வாளி- பேரொளி வீசும் அம்புகளால்; தடிந்து
அகல- துணிபட்டு விழுவதால்; பாமக் குருதி படிகின்ற-
பரவிய குருதியில் படிகின்ற; படைச் சேமப் படர் கேடகம்-
படையைப் பாதுகாத்திடும் வீரர்கள் அணிந்த கேடயங்கள்;
மால் கடல் சேர் – பெரிய கடலைச் சேர்ந்த; ஆமைக்குலம்
அத்தனை ஒத்தன- ஆமைக் கூட்டம் எத்தனை உண்டோ
அத்தனையையும் ஒத்தன.

———–

காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால் –
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல,
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல். 202-

வாம் போர் நெடு வாடை மலைந்து- தாவும் போரிலே நெடிய
வாடையால் தாக்கப்பட்ட; கலம்- மரக்கலம்; கூம்போடு உயர்
பாய்கள்- கூம்பு என்னும் மரத்திலே கட்டப்பட்ட பாய்கள்;
குறைந்தன போல்- சிதைவுற்றனபோல்; காம்போடு பதாகைகள்
கார்- காம்போடு கொடிகள் சுமந்த முகில் போன்ற யானைகள்;
உதிரப் பாம்போடு கடல்- இரத்தமாகிய பரவியோடும்
கடலிலே; படிவுற்றன- படிந்தன.

————-

மண்டப் படு சோரியின் வாரியின் வீழ்
கண்டத் தொகை கவ்விய காலொடு தோள்,
முண்டக் கிளர் தண்டு அன முள் தொகு வன்
துண்டச் சுறவு ஒத்த, துடித்தனவால். 203-

மண்டப்படு சோரியின் வாரியின்- பெருகி வருகின்ற குருதி
வெள்ளத்திலே; வீழ்- துண்டிக்கப்பட்டு விழுந்துவிட்ட; கண்டத்
தொகை கவ்விய காலொடு தோள்- சதைத்துண்டுகள்
மிகுந்தனவாய்க் கவ்வப்பட்ட கால்களும் தோள்களும்;
முண்ட(க)த் திரி தண்டின் – தாமரையின் திரிக்கப்பட்ட
தண்டினைப் போல; முரட்டு ஒருவன் துண்டச்சுறவு- முரடான ஒரு
வலிய சதைப் பிண்டமாகவுள்ள சுறாமீன்களை; ஒத்தன-
ஒப்புடையனவாகி; துடித்தன-.

————

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள் தேர்
விளிவுற்றுக, வேறுற வீழ்வனதாம்,
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால். 204-

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி கொள் தேர்- ஒளித்
தெளிவு கொண்ட பளிங்கு போன்ற சக்கரங்களைக் கொண்ட
தேர்கள்; விளிவுற்று உக- அழிந்து சிதறுவதால்; வேறு உற
வீழ்வனதாம்- தனித்தனியே விழுகின்ற அந்தச் சக்கரங்கள்;
அளி முற்றிய- அம்புகள் நிரம்பிக் காணப்படுகின்ற; சோரியின்
வாரியின்- குருதிக் கடலிலே; ஆழ்- அமிழ்கின்ற; ஒளி முற்றிய
திங்களை ஒத்தன- ஒளி நிறைவுற்ற சந்திரனைப் போல்
காணப்பட்டன.

————–

நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின், மன் குறி கோளுறுமேல்,
சிலை கோடியதோறும் சிரத் திரள் வன்
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால். 205-

நிலை கோடல் இல் வென்றி- நிலைகொள்ளுதல் இல்லாத
வெற்றியை உடைய; அரக்கரை- அரக்கர்களை; நேர் கொலை
கோடலின்- நேராக எதிர்த்துக் கொலை செய்வதில்; மன்-
தலைவனாகிய இராமன்; குறிகோள் உறுமேல்-
குறிக்கொள்வானாதலின்; சிலை கோடியதோறும் – இராமனின்
வில் வளையும் போதெல்லாம்; சிரத்திரள் வன் மலை-
அரக்கர் தலைகளின் கூட்டமாகிய மலைத் திரள்; கோடியின்
மேலும் மறிந்திடும்- கோடிக்குமேல் விழும்.

————

திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின் –
கண், வாளி கடைச் சிறை காண நுழைந்து,
எண் வாய் உற மொய்த்தன, இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டுஇனம் ஒத்தனவால். 206-

திண் மார்பின் மிசை- திண்ணிய மார்பின்மீது; செறி –
செறிந்துள்ள; சாலிகையின் கண்- கவசத்திலே; வாளி –
அம்பினது; கடைச் சிறை- இறுதிப் பகுதியாகிய சிறகுகள்;
காண நுழைந்து- (தைத்தபிறகும் வெளியே) காணும்படியாக
உட்புகுந்து; எண் வாய் அற மொய்த்தன- (காலி இடம் உண்டா
என) எண்ணுதற்கு இடம் அற்றுப் போகும்படியாக மொய்த்தவை;
இன் நறை உற்று- இனிய தேனடையினை அடைந்து; உண் வாய்-
அதனை உண்ணும் வாயினை உடைய; வரி வண்டினம் ஒத்தன-
அழகிய வண்டுகளின் கூட்டத்தைப் போன்று இருந்தன.

———–

பாறு ஆடு களத்து, ஒருவன், பகலின்
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே,
நூறு ஆயின யோசனை, நூழில்கள் சால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால். 207-

பாறு ஆடு களத்து – பருந்துகள் பறக்கின்ற
போர்க்களத்தில்; பகலின் கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
– பகற் பொழுதின் நான்கில் ஒரு பங்காகிய காலப்
பகுதியிலே; நூறு ஆகிய யோசனை- நூறு யோசனைப் பரப்பினதாக
இருந்த; நூழில் களம் – பகைவரைக் கொன்று குவிப்பதற்கு
உரிய களத்திடையே; ஒருவன்- தனி ஒருவனாகிய இராமபிரான்;
மாறாது- பிறழ்ச்சி இல்லாமல்; உழல் சாரிகை வந்தனன்-
சுழலும் சாரிகை திரிந்தான்.

———

நின்றாருடன் நின்று, நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று, திரிந்திடலால்,
‘தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன்’ என்று கொள்வார். 208-

நின்றாருடன் நின்று- தன்னை எதிர்த்து நின்றவர்களுடன்
எதிர்த்து நின்றும்; நிமிர்ந்து- மேலோங்கி; அயலே சென்றார்
எதிர் சென்று- பக்கத்தே சென்றார்க்கும் எதிரே சென்றும்;
சிதைத்திடலால்- கொல்லுவதால்; ஓர்வு உறு தன் மகன் நேர்
– ஞானத்தால் உணர்வுறுகின்ற தன் மகனுக்கு முன்பாகவே; தன்
தாதையைக் கொன்றான் அவனே இவன் – தன் தந்தையைக்
கொன்றவனாகிய அந்த நரசிங்கனே இவன்; என்று கொள்வார்
– என அரக்கர்கள் இராமனைப் பற்றிக் கருதினார்கள்.

————–

‘இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன்’ என்று,
அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்,
வெங் கோப நெடும் படை வெஞ் சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர், எய்குவரால். 209-

இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று-
(இராமபிரான் விரைவாகச் சாரி சுழன்று இலங்குவதால், அவன்
எங்கும் இருப்பவனாய்த் தோற்றம் அளித்தான் அதனால்
இராமன் இங்கே இருக்கிறான் இதோ இருக்கிறான், இங்குத்தான்
இருக்கிறான் என்று); அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்-
அங்கங்கே இருப்பவனாக உணர்கின்ற கலக்கத்தால்; வெங்
கோப நெடும்படை- கொடிய கோபத்தால் பயன்படுத்துகின்ற
நெடிய வில்லாகிய படைக்கலத்திலிருந்து; வெஞ்சரம் விட்டு-
கொடிய அம்புகளை எய்து; எங்கேனும் வழங்குவர்- எந்தத்
திசையிலும் வழங்கினராய்; ஏகுவர்- (அத்திசையிலே இராமனைத்
தாக்க முடியாமல் வேறு பக்கம்) போவார்கள்.

—————

ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்,
‘இரவு அன்று இது; ஓர் பகல்’ என்பர்களால்;
‘கரவு அன்று இது; இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர்’ என்பர்களால். 210-

இரவு அன்று இது- (இது நிசாசரராகிய நமக்கு ஏற்ற) இரவு
அன்று இது; ஓர் பகல்- பகல் நேரமாகும்; என்பர்கள்-
என்று தமக்குள் சொல்லிக்கொள்வார்கள்; ஒருவன் என
உன்னும் உணர்ச்சி இலார்- தங்கள் அனைவரையும்
எதிர்த்துப் போர் செய்பவன் ஒருவன்தான் என்று கருதும்
உணர்ச்சி அற்றவர்களாய்; கரவு அன்று இது- இது வஞ்சனைப்
போர் அன்று; இராமர் கணக்கு இலர்- எத்தனை இராமர்கள்
என்று அளவிட முடியாத அளவுக்கு இராமர்கள் பலராவர்; பரவை
மணலின் பலர் என்பார்கள் – கடல் மணலை விட
அதிகமானவர்கள் இராமர்கள் என்று சொல்லிக்
கொள்வார்கள்.

—————-

ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்;
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்,
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ? 211-

ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்- அரக்கர்
சேனையில் உள்ள ஒவ்வொருவனும் மலைபோலப் பெரிய உருவம்
உடையவன்; ஒருவன் படை ஒப்பற்ற ஒருவனாகிய இராவணன்
கொண்ட படையோ வெள்ளம் ஓர் ஆயிரமே- ஓர் ஆயிர
வெள்ளமாகும்; ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – ஓர்
அரக்கன் மற்றோர் அரக்கனின் உயிரை உண்டான் என்பதல்லாமல்;
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ- இராமனாகிய ஒருவன்
உயிரை அவர் கொண்டனர் என உண்டா? (இல்லை)

—————

தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மா கடல் மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால் –
போர்மேலும் இராமர் புகுந்து அடர்வார். 212-

இராமர்… தேர்மேல் உளர்- தேரின்மேல் இருக்கிறார்;
மாவொடு- குதிரையோடு; செந்தறு கண் கார்மேல் உளர்-
செந்நிறங்கொண்டு அழிக்கின்ற கண்ணினையுடைய கரிய
மேகமனைய யானைமேல் இருக்கிறார்; மா கடல்மேல் உளர்-
பெரிய கடல்மேல் இருக்கிறார்; இப் பார் மேல் உளர்- இந்த
நிலத்தின்மேல் இருக்கிறார்; உம்பர் பரந்து உளர் – வானத்தில்
பரவி இருக்கிறார்; போர்மேலும் புகுந்து- (இத்தனை இடத்தில்
இருப்பதோடு) இந்தப் போரிலும் நுழைந்து தாக்குவார்; (தொடரும்)

———-

என்னும்படி, எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும், அருகும், உடலும், பிரியான் –
மன்னன் மகன்! வீரர் மயங்கினரால். 213-

என்னும்படி- என்று சொல்லும்படியாக; மன்னன் மகன்-
தசரதன் மகனாகிய இராமன்; எங்கணும் எங்கணுமாய்-
எங்கெங்குமாகி; துன்னும் – நெருங்குவான்; சுழலும்-
சுற்றுவான்; திரியும்- அலைவான்; சுடரும்- ஒளிர்வான்; பின்னும்
– பின்புறத்திலும்; அருகும் – பக்கத்திலும்; உடலும் –
உடலிலும்; பிரியான் – பொருதலை விட்டுப் பிரியான்; வீரர்
மயங்கினார்- (இந்த நிலை கண்டு) அரக்க வீரர் கலங்கினர்.

—————

இராமனது வில்-திறம்

படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் அவிந்தன;
விடு படை திசைகள் பிளந்தன; விரி கடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின;-
கடு மணி நெடியவன் வெஞ் சிலை, ‘கணகண, கணகண’ எனும்தொறும். 214-

நெடியவன் வெஞ்சிலை- இராமபிரான் கொடிய வில்லில்
உள்ள; கடுமணி- கடுமையான ஓசையை எழுப்பும் மணிகள்; கண
கண கண கண எனும்தொறும் – கண கண கணகணவென்று
ஓசை செய்யும்போதெல்லாம்; மதம் படு கரி, பரி சிந்தின-
மதம் பொழியும் யானைகளும் குதிரைகளும் அழிந்தன; பனி வரை
இரதம் அவிந்தன- பனி படியும் மலைபோல் உயர்ந்த தேர்கள்
அழிந்தன; விடு படை திசைகள் பிளந்தன – இராமன்
விடுக்கின்ற கணைகள் திசைகளைப் பிளந்தன; விரி கடல் அளறு
(அது)
எழுந்தன- அகன்ற கடலிலே சேறுகள் எழுந்தன; அடுபுலி
அவுணர்தம்- கொல்லும் புலிபோல்வராகிய அரக்கர்களின்;
மங்கையர் அலர் விழி – பெண்டிரின் மலர்ந்த விழிகளில்;
அருவிகள் சிந்தின- கண்ணீர் அருவிகளைச் சிந்தின.

————–

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே 215-

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி
சேனை காவலர், ஆயிரம் பேர் படின்- ஆயிரம் யானைகளும்
பதினாயிரம் தேர்களும், கொலை வல்லனவாகிய ஒரு கோடி
குதிரைகளும் ஆயிரம் சேனைத் தலைவர்களும் இறந்து
விழுந்தால்; கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்- ஒரு கவந்தம்
எழுந்து கூத்தாடும்; கானம்- சுடலையிலே; ஆயிரம் கவந்தம்
நின்று ஆடின்- ஆயிரம் கவந்தங்கள் ஆடினால்; கவின் மணி
கணின் என்னும்- (இராமன் வில்லில் கட்டிய) அழகிய மணி
ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; அன்று- போர் நடந்த அந்த
நாளில்; ஏனை அம் மணி – அந்த (வில்) மணி; ஏழரை நாழிகை
இனிது ஆடியது – ஏழரை நாழிகை நேரம் ஆடியது
(ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது)

—————

ஊன் ஏறு படைக் கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்தோறும்,
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்,
வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர் தேரும்,
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் – தனி ஏறு அன்னான் 216-

தனி ஏறு அன்னான்- ஒப்பற்ற சிங்க ஏறு போன்றவனாகிய
இராமன்; ஊன் ஏறு படைக்கை வீரர் எதிர் எதிர் ஊரும்
தோறும்- தசை ஏறியுள்ள போர்க்கருவியைக் கையில் கொண்ட
அரக்க வீரர்கள் எதிர்த்து எதிரில் ஊர்ந்து வரும்பொழுதெல்லாம்;
கூன் ஏறு சிலையும் தானும் – வளைவு கொண்ட வில்லும்
தானுமாக; குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்- குதிக்கின்ற
விரைவான சுழற்சியால்; வான் ஏறினார்கள் தேரும்- போரிலே
வீழ்ந்து வீரசொர்க்கம் அடைந்த அரக்கரின் தேர்களையும்;
மலைகின்ற வயவர் தேரும் – (இன்னும் சாகாமல்) தன்னோடு
போரிடுகின்ற அரக்க வீரர்களின் தேர்களையும்; தான் ஏறி வந்த
தேரே ஆக்கினான்- தான் இயங்கும் நிலம் என்ற தேராகவே
ஆக்கினான்.

இராமனுக்குத் தேர் இல்லை என்பதையும் அவன் தரையிலேயே
இயங்கிப் போர் செய்தான் என்பதையும் நினைவிலே கொண்டு
இந்தப் பாட்டின் பொருளை உணரவேண்டும்.

——————

காய் இருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூய் எழு பகழி மாரி மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங் கை;
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆனது அன்றே! 217-

காய் இருஞ்சிலை ஒன்றேனும் – பகைவரைச் சினக்கின்ற
பெரிய வில் ஒன்றே எனினும்; கணைப் புட்டில் ஒன்றதேனும்-
அம்பறாத் தூணியும் ஒன்றுதான் என்றாலும்; தூய் எழு பகழி
மாரி- எங்கெங்கும் தூவிப் பெருகுகின்ற அம்பு மழை; மழைத்
துளித் தொகையின் மேல- மழைத் துளிகளின் எண்ணிக்கைக்கு
மேலாக; அமலன் செங்கை- குற்றமற்றவனாகிய இராமனின்
செம்மைக் கைகள்; ஆயிரம் கைகள் செய்த செய்தன- ஆயிரம்
கைகள் கூடிச் செய்த செயல்களைச் செய்தன; ஆயிரம் கைகள்
கூடி இரண்டு கை ஆனது அன்றே- (திருமாலின்) ஆயிரம்
கைகளும் கூடி (இராமபிரானின்) இரண்டு கைகள் ஆயின
அல்லவோ!

இராமன் திருமாலே என்பதை மனங்கொண்டது இச்செய்யுளின்
கற்பனை. ஆயிரங்கை கொண்ட பரமனே இரண்டு கை இராமனாக
வந்தான் என்பது.

——————

பொய்; ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே?
ஐ-இருநூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் அம்மா! 218-

ஒரு முகத்தன் ஆகி- ஒரே முகம் உடையவனாய்; மனிதன்
ஆம் புணர்ப்பு இது அன்று – இது மனிதனாகக் காணும்
தோற்றம் அன்று; பொய்- (நாம் காணும் இத்தோற்றம்) பொய்யே;
மெய்யுற உணர்ந்தோம் – இந்த மெய்யை மிகுதியாக
உணர்ந்துவிட்டோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை-
ஆயிர வெள்ளம் அளவுக்குச் செறிந்துள்ள அரக்கர் சேனையானது;
செய்யுறு வினையம் எல்லாம் – செய்கின்ற (போர்ச்)
செயலையெல்லாம்; ஒரு முகம் தெரிவது உண்டோ- ஒரே முகம்
கொண்டவனால் தெரிந்து கொள்ள முடியுமா!
(முடிந்திருக்கிறதே!) அய் இரு நூறும் அல்ல- (இவனுக்கு உரிய
உண்மையான முகங்கள்) ஆயிரம் என்பதும் உண்மை அன்று;
முகங்கள் அனந்தம் ஆம் – (உண்மையில் இவனுக்குரிய
முகங்களுக்கு முடிவே இல்லை.)

————–

சிவன் முதலிய தேவர்களும் முனிவர்களும் இராமனது வில்லாண்மை கண்டு வியப்புறுதல்

கண்ணுதல் – பரமன் தானும், நான்முகக் கடவுள் தானும்,
‘எண்ணுதும், தொடர எய்த கோல்’ என, எண்ணலுற்றார்,
பண்ணையால் பகுக்க மாட்டார், தனித் தனிப் பார்க்கலுற்றார்,
‘ஒண்ணுமோ, கணிக்க?’ என்பார், உவகையின் உயர்ந்த தோளார். 219-

கண்ணுதல் பரமன் தானும்- கண்ணை நெற்றியில் கொண்ட,
பரமனாகிய சிவனும்; நான்முகக் கடவுள்தானும்- நான்முகனாகிய
கடவுளும்; தொடர எய்த கோல் எண்ணுதும் என- இராமபிரான்
தொடர்ந்து எய்கின்ற அம்புகளை எண்ணிக் கணக்கிடுவோம் என்று;
எண்ணலுற்றார்- கணக்கிடத் தொடங்கினவர்களாய்; பண்ணையால்
பகுக்க மாட்டார்- அம்புகள் தொகுதி தொகுதியாய்ப் பாய்தலால்
பிரித்து எண்ண முடியாமல்; உவகையின் உயர்ந்த தோளார்-
மகிழ்ச்சியால் ஓங்கிய தோள்களை உடையவர்களாய்; ‘ஒண்ணுமோ
கணிக்க’ என்பார்- கணக்கிட முடியுமோ என்று சொல்லினார்கள்.

————–

‘வெள்ளம் ஈர்-ஐந்து நூறே; விடு கணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம்’ என்று, ஓர் உரை கணக்கு உரைத்துமேனும்,
‘கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால்; கொற்ற
வள்ளலே வழங்கினானோ?’ என்றனர், மற்றை வானோர் 220-

மற்றை வானோர்- (மேலே குறிக்கப்பட்ட சிவன்,
நான்முகன் தவிர உள்ள) மற்றத் தேவர்கள்; வெள்ளம் ஈர்
ஐந்து நூறே- அரக்கரின் சேனை ஆயிரம் வெள்ளம் எண்ணிக்கை
கொண்டது; விடுகணை- இராமன் ஏவுகின்ற அம்புகள்; அவற்றின்
மெய்யே உளவாம் என்று- அந்த எண்ணிக்கையின் அளவாகவே
இருக்கும் என்று; ஓர் உரை கணக்கு உரைத்தமேனும்- ஒரு
பேச்சுக்கு அப்படி ஒரு கணக்குச் சொல்லுவோம் என்றாலும்;
கொள்ளை ஓர் உருவை- கூடிக் கிடக்கும் வீரர் கூட்டத்தில்
ஓர் உடம்பினை; நூறு கொண்டன பல- நூறு துண்டுகளாக ஆக்கிய
கணைகள் பலவாகும்; கொற்ற வள்ளலே வழங்கினானோ-
வெற்றிக்கு உரிய இராமன் தான் அத்துணை அம்புகளையும்
ஏவியிருப்பானோ; என்றனர்- என்று (வியந்து புகழ்ந்து) கூறினர்.

————-

‘குடைக்கு எலாம், கொடிகட்கு எல்லாம், கொண்டன குவிந்த கொற்றப்
படைக்கு எலாம், பகழிக்கு எல்லாம், யானை தேர் பரிமா வெள்ளக்
கடைக்கு எலாம், துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே?’ என்றனர் முனிவர், அப்பால் 221-

அப்பால் முனிவர்- தள்ளி அப்பால் நின்ற முனிவர்கள்;
குடைக்கு எலாம்- எல்லாம் குடைகளுக்கும்; கொடிகட்கு
எல்லாம் – எல்லாக் கொடிகளுக்கும்; கொண்டன- அவற்றைப்
பற்றிக் கொண்டிருந்தனவும்; குவிந்த – குவிந்தனவுமாகிய;
கொற்றப் படைக்கு எலாம்- வெற்றி (நாடும்)
படைக்கலங்களுக்கெல்லாம்; பகழிக்கு எல்லாம்- தன்னைத்
தாக்க வருகின்ற அம்புகளுக்கெல்லாம்; யானை தேர் பரிமா
ஆதி – யானைகள், தேர்கள், குதிரைகள் முதலான; கடைக்கு
எலாம் – எல்லாவற்றிற்குமாக; துரந்த வாளி – இராமன்
செலுத்திய அம்புகளை; கணித்து- அளவிட்டு; அதற்கு அளவை
காட்டி- அப்படி அளவிட்டதற்கு அளவு இதுதான் என்று காட்டி;
அடைக்கலாம் அறிஞர் யாரே?- முடிக்கக்கூடிய அறிஞர்கள்
யார் இருக்கிறார்கள்? (இல்லை) என்றனர்.

——————–

பத்துக் கோடி வீரர் பட, எஞ்சியோர் தெய்வப் படைகளை வீசிப் பொருதல்

கண்டத்தின் கீழும் மேலும், கபாலத்தும், கடக்கல் உற்ற,
சண்டப் போர் அரக்கர் தம்மைத் தொடர்ந்து, கொன்று அமைந்த தன்மை-
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களைப் பிரமன் தந்த
அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கியது அனையது ஆன 222-

கடக்கல் உற்ற- கடந்து போகின்ற; சண்டப்போர்
அரக்கர் தம்மை – கொடுமையாகப் போர் செய்யும்
அரக்கர்களை; தொடர்ந்து- பின் தொடர்ந்து; கண்டத்தும்
– அவர்களுடைய கழுத்திலும்; கீழும் மேலும்- அவர்தம்
உடம்பின் கீழும் மேலும்; கபாலத்தும்- தலை ஒட்டிலும்;
கோல் புணரும் தன்மை- அம்புகள் சென்று சேர்ந்த தன்மை; பிண்டத்தில் கருவாம் தன் பேர்
உருக்களை – பிண்டத்திலே கருவாகியுள்ள தன் பெரிய
படைப்புகளை; அண்டத்தை நிறையப் பெய்து- அண்டம்
நிறையும்படியாக இட்டு; குலுக்கியது அனைய ஆன- குலுக்கப்
பட்டவை போல அமைந்தன.

————–

கோடி ஐ-இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்,
‘வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை’ என்று, யாவரும் மூண்டு மொய்த்தார் 223-

ஐ இரண்டு கோடி தொக்க- பத்துக் கோடிப் பேராகக் கூடி
நின்ற; படைக்கல மள்ளர்- படைக்கலங்களை ஏந்திய வீரர்கள்;
கூவி – ஆரவாரித்து; ஓர் பக்கம் ஆக ஓடி – ஒரு
பக்கத்தில் ஓடிச் சென்று; உயிர் இழந்து உலத்தலோடும்-
உயிரை இழந்து அழிந்த நிலையில்; வீடி நின்று அழிவது
என்னே! விண்ணவர் படைகள் வீசி மூடுதும் இவனை என்று-
வீழ்ச்சி பெற்று அழிவது ஏன்? தேவர்களிடம் பெற்ற
படைக்கலங்களை எறிந்து இந்த இராமனை முற்றிலுமாக மறைத்து
விடுவோம் (மறைத்து அழித்திடுவோம்) என்று; யாவரும் மூண்டு
மொய்த்தார்- எஞ்சியிருந்த அரக்கர் எல்லாரும் பொங்கிச்
செறிந்தனர்.

——————-

தெய்வப் படைகளை தெய்வப் படைகளாலே இராமன் தடுத்தல்

விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக,
கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது அமரர் கூட்டம்;
அண்டமும் கீழ் மேலாக ஆகியது; அதனை அண்ணல்
கண்டு, ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் காத்தான். 224-

விண்டுவின் படையே ஆதி- திருமால் அஸ்திரம் முதலாக;
வெய்யவன் படை ஈறாக- நெருப்பிறைவன் அஸ்திரம் ஈறாக;
கொண்டு- (பல தெய்வ அத்திரங்களைக்) கைக்கொண்டு;
ஒருங்கு உடனே விட்டார்- ஒன்றாகச் சேர்ந்து விரைவாக
ஏவினார்கள் அமரர் கூட்டம் நடுங்கிற்று; அண்டமும் கீழ்
மேலாக ஆகியது- அண்டமும் கீழே மேலாக நிலை குலைந்தது;
அதனை- அவ்வாறு ஆகிவிட்டதை; அண்ணல்- இராமபிரான்;
கண்டு ஒரு முறுவல் காட்டி- ஒரு புன்சிரிப்பைக் காட்டி
அவற்றினை அவற்றால் காத்தான். அரக்கர் ஏவிய தெய்வப்
படைகளை தெய்வப் படைகளால் தடுத்தான்.

——————–

‘தான் அவை தொடுத்த போது, தடுப்ப அரிது; உலகம்
தானே பூ நனி வடவைத் தீயின் புக்கெனப் பொரிந்து போம்’ என்று,
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி அம்பால்
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் 225-

தான் அவை தொடுத்தபோது- தானே அந்தத் தெய்வப்
படைகளைத் தொடுத்தால்; தடுப்ப அரிது- எவராலும் தடுத்து
நிறுத்தல் அரிதாகும்; உலகம் தானே வடவைத் தீயின் பூ நனி
புக்கெனப் பொரிந்துபோம்- உலகம் வடவை (ஊழிக்கால)
நெருப்பிலே மலர் புகுந்தது போலப் பொரிந்து போகும்; என்று
ஆனது தெரிந்த வள்ளல்- என்ற அந்த உண்மையைத் தெரிந்த
வள்ளலாகிய இராமன்; அளப்ப அருங்கோடி அம்பால்- அளவிட
முடியாத கோடிக்கணக்கான அம்புகளால்; ஏனையர் தலைகள்
எல்லாம் – முன்னமே அழிந்தார்போக மற்றவர்களின்
தலைகளையெல்லாம்; இடியுண்ட மலையின் இட்டான்- இடியால்
தாக்கப்பட்ட மலை எப்படிச் சரியுமோ அப்படிக் குவித்தான்.

————-

பூமி தேவியின் பெரு மகிழ்ச்சி

ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார்;
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறைப் பாரம் நீங்கி,
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி வேலை நின்றும் போய்
ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி! 226-

ஆயிர வெள்ளத்தோடும்- ஆயிர வெள்ளம் அளவினதாகிய
அரக்கர்கள் யாவரும்; அடு களத்து- கொலைக் களத்திலே;
அவிந்து வீழ்ந்தார்- இறந்து வீழ்ந்தார்கள்; மா இரு
ஞாலத்தாள்- மிகவும் பெருமைக்குரிய நில மகள்; தன் வன்
பொறைப் பாரம் நீங்கி – தன்மீது இதுவரை இருந்துவந்த
கொடிய சுமையாகிய பாரம் நீங்கப்பெற்று; வீங்கு ஒலி வேலை
நின்றும்- பேரொலி செய்யும் கடலிலிருந்து; ஒருங்கு போய்
– ஒன்றாகச் சென்று; அண்டத்தோடும்-; கோடி யோசனைகள்
பொங்கி- கோடி யோசனை தூரத்துக்குப் பொங்கி; மீ உயர்ந்து
எழுந்தாள்- மேலோங்கி எழுந்தார்.

——————-

தேவர்கள் துயர் தீர்ந்து, இராமனை வாழ்த்துதல்

‘நினைந்தன முடித்தேம்’ என்னா, வானவர் துயரம் நீத்தார்;
‘புனைந்தனென் வாகை’ என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்தமாதோ;
அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அல்லல் தீர்ந்தான். 227-

நினைந்தன முடித்தோம் என்று- நாம் எண்ணியவை
எண்ணியபடியே முடித்துவிட்டோம் என்று; வானவர் துயரம்
நீத்தார் – தேவர்கள் கவலையை ஒழித்தார்கள்;
புனைந்தனென் வாகை என்னா- (வெற்றி பெற்று) வாகை மாலை
அணிந்தேன் என்று; இந்திரன் உவகை பூத்தான்- இந்திரன்
மகிழ்ச்சியால் மலர்ந்தான்; வனைந்தன அல்லா வேதம்-
எவராலும் செய்யப்படாதனவாகிய வேதங்கள்; வாழ்வு பெற்று
உயர்ந்த- உயிர் வாழ்வைப் பெற்று உயர்ந்தன.

——————-

தாய், ‘படைத் துடைய செல்வம் ஈக!’ என, தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி,
தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார், வணக்கம் செய்தார். 228-

தாய்- (சிறிய) தாயாகிய கைகேயி; ‘படைத்துடைய செல்வம்
ஈக’- உனக்கு உரியதாக வந்த செல்வத்தைக் கொடுத்துவிடு; என
– என்று சொல்ல; தம்பிக்கு ஈந்து- தம்பியாகிய பரதனுக்குத்
தந்துவிட்டு; வேய் படைத்துடைய கானம்- மூங்கில்கள்
வளர்ந்துள்ள காட்டுக்கு; விண்ணவர் தவத்தின் மேவி- தேவர்கள்
செய்த தவத்தால் வந்தடைந்து; தோய் படைத்தொழிலால்-
ஈடுபாடு கொண்ட படைக்கலத் தொழிலால்; யார்க்கும் துயர்
துடைத்தானை நோக்கி- எல்லாருடைய துயரத்தையும்
போக்கியவனைப் பார்த்து; வாய் படைத்துடையார் எல்லாம்- வாய்
படைத்தவர்கள் எல்லாரும்; வாழ்த்தினர் வணக்கம் செய்தார்-
வாழ்த்தி வணங்கினர்.

————

இராமனின் தோற்றம்

தீ மொய்த்த அனைய செங் கண் அரக்கரை முழுதும் சிந்தி,
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற, நின்றான் –
பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம் பிறங்கித் தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் 229-

தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை- தீச் செறிந்தது
போன்ற சிவந்த கண்கள் கொண்ட அரக்கர்களை; முழுதும்
சிந்தி- முற்றாக அழித்து; பூ மொய்த்த கரத்தர் ஆகி – பூ
நிறைந்த கைகள் உடையவராய்; விண்ணவர் போற்ற நின்றான்
– தேவர்கள் போற்றும் படியாக நின்ற இராமபிரான்; பேய்
மொய்த்து – பேய்கள் நிரம்பக் கூடியும்; நரிகள் ஈண்டி-
நரிகள் நிறையக் கூடியும்; பெரும் பிணம் பிறங்கித்
தோன்றும்- ஏராளமான பிணங்கள் விளங்கத் தோன்றுகின்ற;
ஈமத்துள்- சுடுகாட்டில்; தமியன் நின்ற – தனியனாக நின்ற;
கறைமிடற்று இறைவன் ஒத்தான்- கறையைக் கழுத்திலே கொண்ட
சிவபிரானைப் போல் இருந்தான்.

—————–

அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும் ஆக,
கொண்டது ஓர் உருவம் தன்னால், இறுதிநாள் வந்து கூட,
மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான். 230-

அண்டம் மாக் களமும்- இந்த அண்டமே பெரிய களமாகவும்;
வீந்த அரக்கரே உயிரும் ஆக- வீழ்ந்து விட்ட அரக்கர்களை
உயிர்க் கூட்டங்களாகவும் ஆக; கொண்டது ஓர் உருவம்
தன்னால் – மேற்கொண்ட ஒப்பற்ற உருவத்தால்; இறுதி நாள்
வந்து கூட மண்டும் நாள்- அழிவுக்காலம் வந்து சேர வரும்
கடைநாளிலே; மறித்தும் காட்ட- திரும்பவும் படைத்துக்
காட்டுவதற்காகவே; மன்னுயிர் அனைத்தும் வாரி உண்டவன்-
நிலைபெற்ற உயிர்கள் எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து
உண்டவன்; தானே ஆன- தானேயாகிய; தன் ஒரு மூர்த்தி
ஒத்தான்- தன் ஒப்பற்ற வடிவத்தை நிகர்த்து விளங்கினான்.

————-

இலக்குவன் இராவணனோடு பொரும் இடத்திற்கு, இராமன் செல்லுதல்

ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ளச் சேகு அறு
மலரும் சாந்தும் செருத் தொழில் வருத்தம் தீர்க்க, மா கொலை
செய்த வள்ளல், வாள் அமர்க் களத்தைக் கைவிட்டு ஏகினன்,
இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல் 231-

ஆகுலம் துறந்த தேவர்- துன்பம் நீங்கிய தேவர்கள்;
அள்ளினர் சொரிந்த- வாரிச் சொரிந்த; வெள்ளச் சேகு
அறு மலரும் – வெள்ளம் போல் நிறைந்த குற்றமற்ற
மலர்களும்; சாந்தும்- சந்தனமும்; செருத்தொழில் வருத்தம்
தீர்க்க – போர்ச் செயலினால் ஏற்பட்ட துன்பத்தைப்
போக்க; மா கொலை செய்த வள்ளல்- பெருங் கொலைகளைச்
செய்த வள்ளலாகிய இராமன்; வாள் அமர்க் களத்தைக்
கைவிட்டு- வாள் (விளையாடும்) போர்க் களத்தை நீங்கிச்
சென்று; இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல்-
தம்பியாகிய இலக்குவனோடு இராவணன் எதிர்த்து நின்ற
இடத்துக்கு; ஏகினன்- போனான்.

———–

இவ் வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து போன
தெவ் அழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செயலும், சென்ற
வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய வீரன்
எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம் இயம்பலுற்றாம் 232-

இவ் வழி- இராமன் மூலபலச் சேனையை எதிர்த்த இடத்தில்;
இயன்ற எல்லாம் இயம்பினாம்- நிகழ்ந்தவற்றையெல்லாம்
சொன்னோம்; இரிந்து போன – முதலில் அரக்கர் படையைக்
கண்டு அஞ்சி ஓடிப் போன; தெவ் அழி ஆற்றல்- பகைவரை
அழிக்கும் ஆற்றல் மிக்க; வெற்றிச் சேனையின் செயலும்-
வெற்றி பெறுவதற்கு உரிய (குரங்குச்) சேனையின் செயலையும்;
வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும்- கொடிய
வழிகளில் செயல்படுகின்ற அரக்கர் மன்னனாகிய இராவணன்
செயலையும்; இளைய வீரன் – இளையவனாகிய இலக்குவ வீரனின்;
எவ்வம் இல் ஆற்றல் போரும்- குற்றம் இல்லாத ஆற்றல்
மிக்க போர்ச் செயலையும்; நாம் முற்றும் இயம்பலுற்றாம்-
நாங்கள் முழுமையாகச் சொல்லத் தொடங்கினோம்.

———-

மிகைப் பாடல்கள்

போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை
சேர் ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத் தானை
தன்னையும், ‘எழுக’ எனச் சாற்றினர் – தறுகண் கோன்
உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர். 3-1

மூன்றின் நூற்றினோடு ஆயிரம் மூள்வன வெள்ளம்
ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி,
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது, அவ் இராமன்மேல், இராக்கதப் பரவை 23-1

‘தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும் முதல்வன்-
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ?
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும்
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத் தகுமோ? 26-1

‘நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர் வெருவல்;
இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி
கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும்’
என்று அமரர்க்கு அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு, அவர் உளம் தெளிந்தார். 26-2

வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம்
ஆன போது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத்
தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால். 26-3

வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச்
சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே
பாய்தல் உந்தின சில சில-படர் கவிப் படைகள். 29-1

அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார்,
‘கனியும் காய்களும் உணவு உள; மலை உள காக்க;
மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என், வையம்!’ 44-1

என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப,
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே,
‘நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர் கொண்டு,
ஒன்று வாழ்தலும் உரிமையதே?’ என உரைப்பான். 44-2

‘ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க
யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும் வெங் கண்
கூளி மா முகவர், ஆதி அளப்பு இல கோடி உள்ளார்;
ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம் உண்பார் 52-1

என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும்,
வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து, வெள்ளிக் குன்றிடை
நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண் குன்றில் நின்றவன்
அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான்: 54-1

‘இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும் இமைப்பின் வாரிப்
பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம்
இசைந்தது போலும்!’ என்று, ஆங்கு, அயன் சிவன் இருவர் தத்தம்
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி நின்றான் 69-1

மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர்,
‘கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீசு! குவலயத்து
உற்ற தீமை தீர்க, இன்றொடு!’ என்று கூறினார்; நிலம்
துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன சொல்லினார்: 72-1

அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல் கோடி ஆவி போய்த்
தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன் கை வில்
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, ‘இராம ராம!’ என்று
உரைக்கும் நாமமே எழுந்தது, உம்பரோடும் இம்பரே 76-1

சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப் படைக்
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம் வாழ்
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்;-மண்ணின்மீது அரோ 76-2

அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே,
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல்,
கொண்டல் ஏழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி பொழிவபோல்,
சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து தாக்கினார் 83-1

தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக்
காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காவின் வாவு மாத்
தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு இலாப்
பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்து பற்றினார். 83-2

துடி, தவண்டை, சங்கு, பேரி, துந்துமிக் குலங்கள், கைத்
தடி, துவண்ட ஞாண், இரங்கு தக்கையோடு பம்பை, மற்று
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லியக் குழாம்
படி நடுங்கவே, பகைக் களத்தின் ஓசை விஞ்சவே. 83-3

இரைந்து அடர்ந்து அரக்கர் வெள்ளம், எண் இல் கோடி,
இடைவிடாது உருத்தல் கண்டு, இராகவன் புன்முறுவல் கொண்டு,
ஒவ்வொருவருக்கு ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ,
சரத்தின் மாரி பெய்து, அரக்கர் தலை தரைக்கண் வீழ்த்தினான். 83-4

‘நுனித்திடத்திற்கு அருங் கடுப்பின் நொடிவரைக்குள் எங்குமாய்க்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால்,
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று’ எனா,
வினைத் திறத்து அரக்கர் விம்மிதத்தர் ஆய், விளம்புவார் 83-5

‘விண்ணின்மீது அனந்த கோடி வீரன்’ என்பர்; ‘அல்ல இம்
மண்ணின்மீது அனந்த கோடி மனிதன்’ என்பர்; அல்ல வெங்
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன்’ என்பர்; ‘அல்ல உம்
எண்ணமீது அனந்த கோடி உண்டு, இராமன்’ என்பரால் 83-6

இத் திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப, நின்று
எத் திறத்தினும் விடாது, இராமன் எங்கும் எங்குமாய்,
அத் திறத்து அரக்கரோடும், ஆனை, தேர், பரிக் குலம்,
தத்துறச் சரத்தின் மாரியால் தடிந்து, வீழ்த்தினான். 83-7

இடைவிடாது அளப்பு இல் வெள்ளம் இற்று இறந்து போகவும்,
படைவிடாது அரக்கர் ஆளிபோல் வளைந்து பற்றவும்,
கொடைவிடாதவன் பொருள் குறைந்திடாதும் வீதல்போல்,
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர்மீது தூவினான் 83-8

இன்னவாறு இராமன் எய்து, சேனை வெள்ளம் யாவையும்,
சின்னபின்னமாக, நீறு செய்தல் கண்டு, திருகியே,
மின்னு வாள் அரக்கர் வெள்ளம், எண்ணில் கோடி, வெய்தினின்
துன்னி, மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார். 96-1

வானின்மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார்;
ஆனைமீது அனந்த கோடி அடல் அரக்கர் அண்மினார்;
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார்,
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் 96-2

அடல் வார் சிலை அமலன் சொரி கனல் வெங் கணை கதுவி,
தொடர் போர் வய நிருதக் கடல் சுவறும்படி பருக,
படுமாறு அயல் வரு தீயவர் பல கோடியர் பலரும்
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார், புடை வளைந்தார் 101-1

கோல் பொத்திய நெடு நாணினில் கோமான் தொடை நெகிழ,
மேல் பொத்திய நிருதக் குலம் வேரோடு உடன் விளிய,
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய,
கால் பொத்திய கை ஒத்தன, காகுத்தன் வெங் கணையால் 102-1

அது போது அகல் வானில் மறைந்து, அரு மாயை செய் அரக்கர்,
எது போதினும் அழிவு அற்றவர், இருள் வான் உற மூடி,
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்;
சது மா மறை அமலன் அவை தடிந்தான், தழற் படையால் 108-1

அமலன் விடும் அனல் வெம் படை அடு வெம் பொறி சிதறி,
திமிலம்கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் பிமரம் கெட,
அவர்தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய, சமரம் புகும் அளவு
இல்லவர்தமை வென்றது, ஓர் நொடியின் 108-2

காலாள் எனும் நிருதப் படை வெள்ளம் கடைகணித்தற்கு
ஏலாதன பல கோடிகள் இமையோர் கரை காணார்;
பாலாழியின்மிசையே துயில் பரமன் சிலை பொழியும்
கோலால் அவர் குறைவுற்றனர்; குறையாதவர் கொதித்தார் 112-1

கொதித்தார் எழு கடல்போல் வளைவுற்றார்; கொடு முசலம்
குதித்து ஓடிய சிலை வாளிகள், கூர் வேல், கதை, குலிசம்,
விதைத்தார், பொரும் அமலன்மிசை வெய்தே; பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே, சரம் விதைத்தான். 112-2

கொள்ளை வெஞ் சமர் கோலும் இராக்கத
வெள்ளமும் குறைவுற்றது; மேடொடு
பள்ளம் இன்றிப் படும் குருதிக் கடல்
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால். 127-1

தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே,
மாய வஞ்சகர் மடிய, பிண மலை
போய் வளர்ந்து விசும்பொடும் புல்லிற்றால்;
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே, 127-2

கடல் எரிக்க் கனற் படை கார்முகத்து –
இடை தொடுத்து, அதை ஏவி, ‘இரும் பிணத்
திடல் அனைத்தையும் தீர்க்க’ எனச் செப்பினான்:
பொடி-படுத்தி இமைப்பில் புகுந்ததால். 127-3

அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு
உண்டு எனற்கு அரிது என்? உளது இச் செயல்,
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால். 127-4

இற்றது ஆக இராக்கத வீரர்கள் உற்று,
ஓர் ஆயிர வெள்ளம் உடன்று, எதிர்
சுற்றினார், படை மாரி சொரிந்துளார்;
வெற்றி வீரனும் கை வில் வணக்கினான். 127-5

தலை அறுந்தவரும், தடத் திண் புய
மலை அறுந்தவரும், வயக் கையொடு
சிலை அறுந்தவரும், திமிரத்தின் மெய்ந்
நிலை அறுந்தவரும், அன்றி, நின்றது ஆர்? 127-6

தேர் அளப்பு இல பட்ட; சிறு கண் மாக்
கார் அளப்பு இல பட்ட; கடும் பரித்
தார் அளப்பு இல பட்ட; தடம் புயப்
பேர் அளப்பு இலர் பட்டனர், பீடு இலார். 127-7

வானகத்தோடு, மா நிலம், எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும், அடுத்துறத்
தான் நெருக்கிய வஞ்சகர்தம் தலை,
போன திக்கு அறியாது, புரட்டினான். 127-8

சுடரும் வேல், கணை, தோமரம், சக்கரம்,
அடரும் மூஇலைச் சூலம், மற்று ஆதியாம்
படையின் மாரி பதகர் சொரிந்து, இடை தொடர,
வீரன் துணித்தனன் வாளியால். 127-9

ஏனமோடு, எண்கு, சீயம், எழு மத
யானை, ஆளி, புலி, என்று இவை
முகம் ஆன தீய அரக்கர் மடிந்திட,
வானவன் கணை மாரி வழங்கினான். 127-10

வடி சுடர்க் கணை மாற்ற, அங்கு ஆயிர
முடியுடைத் தலையோர் தலையும் முடிந்து
இடுவது இத் தலத்தே, இடி ஏற்றில் வான்
வட வரைச் சிகரங்கள் மறிவபோல். 127-11

இரதம், யானை, இவுளியொடு எண் இலா
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட,
சரதம் அன்னை சொல் தாங்கி, தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான். 127-12

கடு வைத்து ஆர் களன் கைப்
படு கார்முகம் ஒடியத் தாக்கும் ஒருவன் சிலையின்வாய்,
வடவைத் தீச் சொரி வாளியின் மா மழை
பட, மற்று ஆயிர வெள்ளமும் பட்டதால். 127-13

பால் ஒத்து ஆழியில் பாம்பு-அணைமேல்
துயில் சீலத்தான், இமையோர் செய்
தவத்தினின் ஞாலத்து ஆய இறைவன்,
இராவணன் மூலத் தானை முடிய முருக்கினான். 127-14

ஈது அவர் சொல, கயிலை ஈசனும் நகைத்து, ‘இமையவர்க்கும் ஒளி வான்
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணராப்
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது, பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றி விடுமோ? 149-1

பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட,
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர,
வேறு படர அடர் விரவு சுடர் வளையம்
மாறுபட, உலகின் மலைகள் அளறுபட. 154-1

திரிய அலகு இல் மலை, திரிய இரு சுடர்கள்,
திரிய ஒருவன், எதிர் சின விலோடும் அடர
வரி கை ஒரு களிறு திரிய, விடு குயவர்
திரிகை என உலகு முழுதும் இடை திரிய. 163-1

கரிய திலத மலை திரிய, வளி சுடர்கள்
இரிய, ஒரு விலுடை இரு கை ஒரு களிறு
திரிய, விடு குயவர் திரிகை என உலகு
தெரிய, எழு கடலும் முழுதும் முறை திரிய. 164-1

ஆய வல் அரக்கர், மற்று அளவு இல்லாதவர்,
தீ எழும் விழியினர், சினம் கொள் சிந்தையர்,
காயம் வெம் படையினர், கடலின் பொங்கியே
மேயினர், தம்தமில் இவை விளம்புவார். 170-1

‘அன்றியும், ஒருவன், இங்கு அமரில், நம் படை
என்று உள கரி, பரி, இரதம், ஈறு இல் போர்
வென்றிடும் பதாதியர், அனந்த வெள்ளமும்
கொன்றனன், கொதித்து, ஒரு கடிகை ஏழினே. 171-1

இவ் உரை வன்னி அங்கு இயம்ப, ‘ஈதுபோல்
செவ் உரை வேறு இலை’ என்று, தீயவர்
அவ் உரைக்கு அனைவரும் அமைந்து, அங்கு அண்ணலோடு
எவ் உரையும் விடுத்து, அமரின் ஏற்றுவார். 177-1

இன்னவர் ஐ-இரு கோடி என்று உள
மன்னவர் சதகமும் உடையவர்; மற்று அவர்
துன்னினர், மனத்து அனல் சுறுக் கொண்டு ஏறிட
உன்னினர், ஒருவருக்கு ஒருவர் ஓதுவார். 184-1

அடல் ஐ-இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார்;
கடை கண்டிலர், காய் கரி, தேர், பரி மாப்
படை கண்டிலர்; கண்டிலர், பட்ட திறம். 206-1

அங்கு அங்கு அவர்தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு,
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா,
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால். 212-1

ஏயும் ஐ-இரண்டு கோடி இறைவர் ஒவ்வொருவர் சேனை
ஆயிர வெள்ளம்தானும் அத் துணை வெள்ளம் ஆகி,
தூயவன் அவர்தம் சேனை தொலைத்தபின், இறைவர்
ஆவி போய் அறப் பகழி மாரி பொழிந்தனன், பொன்றி வீழ்ந்தான் 213-1

இட்டதோர் பேயரின் ஈர்-ஐயாயிரம்
பட்டபோது, ஆடும் ஓர் வடு குறைத்தலை
சுட்ட நூறாயிரம் கவந்தம் ஆடிடத்
தொட்டனன், சிலை அணி மணி துணிக்கென. 220-1

மாத்திரைப் போதினில், மணி தொனித்திட,
போர்த் தொழில் அரக்கர்மேல் பொருத பூசலில்,
ஏத்திடை இடைவிடாது, ஏழு நாழிகை
கீர்த்தியன் சிலை மணி கிணிகிணென்றதே. 220-2

மொய்த்தனர், நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்,
பத்து நூறு ஆய வெள்ளப் படையொடு மாயை பற்றி,
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி,
பத்து எனும் திசையும் மூடி, சொரிந்தனர் படையின் மாரி 222-1

யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனைத்
தூசி வந்து, அண்ணல் தன்னைப் போக்கு அற வளைத்துச் சுற்றி,
வீசின படையும் அம்பும் மிடைதலின், விண்ணோர் யாக்கை
கூசினர், பொடியர் என்றும் குமிழ்ந்தனர், ஓமக் கூடம் 222-2

முன்னவன் அதனை நோக்கி, முறுவலித்து, அவர்கள் ஏவும் பல்
நெடும் பருவ மாரிப் படை எலாம் பொடிபட்டு ஓட, தன் நெடுஞ்
சிலையின் மாரிதனக்கு எழு முகிலும் அஞ்சத் துன்னுவித்து,
அரக்கர் வெள்ளச் சேனையைத் தொலைத்தல் செய்தான். 222-3

கால வெங் கனலின் மாயக் கடும் படை சிலையில் பூட்டி,
மேலவன் விடுதலோடும், வெம் படை அரக்கர் வெள்ளம்
நாலும் மூ-இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி,
தாலமேல் படுத்து மீண்டது, அலன் சரம் தலைவர்த் தள்ளி 222-4

முடிந்தது மூலத்தானை; மூவுலகு இருண்ட தீமை
விடிந்தது; மேலை வானோர் வெந் துயர் அவரினோடும்
பொடிந்தது; புனிதன் வாளி போக்கு உறப் பொய்யர் ஆவி
படிந்தது, ககனம் எங்கும்; பலித்தது, தருமம் அன்றே 222-5

‘ஈது ஒரு விளையாட்டு; அன்பின், இத்துணை தாழ்த்தான்,
ஐயன்; ஏது அவன் துணியின் இப்பால்? நீசர் ஓர் பொருளோ?
இன்னும் போதுமோ? புவன கோடி போதினும், கணத்தில் பொன்றிப் போதும்’ என்று,
அயனோடு ஈசன் அமரர்க்குப் புகன்று நின்றான். 222-6

சேனை அம் தலைவர், சேனை முழுவதும் அழிந்து சிந்த,
தான் எரி கனலின் பொங்கி, தரிப்பு இலர், கடலின் சூழ்ந்தே வானகம் மறைய,
தம் தம் படைக் கல மாரி பெய்தார்; ஆனவை முழுதும்
சிந்த அறுத்தனன், அமலன் அம்பால் 222-7

பகிரண்டப் பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ளத் தொகை
மண்டும் அரக்கர் யாரும் துஞ்சினர், கருவும் துஞ்ச; செகம்
உண்ட ஒருவன் செங் கைச் சிலையுறு மணியின் ஓசை புக,
அண்டம் முழுதும் பாலின் பிரை எனப் பொலிந்தது அன்றே. 225-1

நணியனாய்த் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த காலக்
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை; அக் கடிகைவாய் வில்
மணி ஒலி எழுப்ப, வானோர் வழுத்திட, வள்ளல் நின்றான் 225-2

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading