ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/31–வேல் ஏற்ற படலம்–

வானரத் தலைவர்களைத் தொடர்ந்து, குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்

‘பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; பெயர்ந்துபோய், நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்;
வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்’ என்னா,
இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். 1-

பெரும்படைத் தலைவர் யாரும் – பெருமையுடைய படையின்
தலைவர்கள் எல்லாரும்; பெயர்ந்திலர் – நீங்கினர்
அல்லர்; பெயர்ந்து போய் – படை வீரர் போர்க்களத்தை
விட்டு நீங்கி; நாம் விரும்பினம் வாழ்க்கை என்றால்-
நாம் மட்டும் உயிர் வாழ விரும்பினாம் என்றால்; இடை
விலக்கற்பாலார் யார் – இடையில் நின்று நம்மைத்
தடுப்பதற்குரியவர் யார்?; வரும் பழி துடைத்தும்-
(அதனால்) வருகின்ற பழியைத் துடைப்போம்; யாமும் வானில்
வைகுதும் என்னா- நாங்களும் துறக்கவுலகில் வாழ்வோம் என்று
உறுதி கொண்டு; இருங்கடல் பெயர்ந்தது என்ன- பெரிய கடல்
நிலை பெயர்ந்து வந்தது போன்று; இப்பால் தானையும் மீண்டது
– இப்பக்கம் வானரப்படையும் மீண்டு வந்தது.

————-

சேனைகள் புடை சூழ, இராவணன் போர்க்களம் செல்லுதல்

சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த,
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்,
செல்லும் தேர்மிசைச் சென்றனன் – தேவரைத் தொலைத்த
வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், விளங்க. 2-

சில்லி ஆயிரம்- ஆயிரம் சக்கரங்களோடும்; சில் உளைப்
பரியொடும் சேர்ந்த- சிலவாகிய பிடரி மயிருடைய ஆயிரம்
குதிரைகளோடும் சேர்ந்ததும்; எல்லவன் கதிர் மண்டலம்-
கதிரவன் செங்கதிர் மண்டலத்தோடு; மாறுகொண்டு இமைக்கும்
– ஒப்புமை பூண்டு ஒளி வீசுவதும்; செல்லும் தேர்மிசை –
விரைந்து போகும் செலவினையும் உடைய தேர் மீது ஏறி;
தேவரைத் தொலைத்த- வானவர்களையும் அழித்த; வில்லும்
வெங்கணைப் புட்டிலும்- கொடிய வில்லும் அம்பு நிறைந்த
அம்பறாத்தூணியும்; கொற்றமும் விளங்கச் சென்றனன்-
வீரமும் விளங்க (இராவணன் போர்க்களத்திற்குச்) சென்றான்.

————-

நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி,
ஆறு போல் மத மா கரி ஐ-இரு கோடி,
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி,
சீறு கோள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. 3-

அன்று சீறுகொள் அரிஏறு அனானுடன் – அப்போது சீறுகின்ற
வலிய ஆண் சிங்கம் போன்ற இராவணனுடன்; நூறு கோடி தேர்-
நூறு கோடி தேர்களும்; இருநூற்றுக் கோடி நொறில் பரி- இருநூறு
கோடி விரைந்து செல்லும் குதிரைகளும்; ஐயிரு கோடி- பத்துக்கோடி;
ஆறுபோல் மதமாகரி- ஆற்றுநீர் போல் ஒழுகும் மத நீரையுடைய
பெரிய யானைகளும்; இவற்று இரட்டி ஏறுகோள் உறு பதாதியும்-
இருபத்தாறு கோடி சிங்க ஏற்றைப் போன்ற காலாட்படையும்; சென்றன
– உடன் போயின.

———————–

‘மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், முனையின்
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!’ என்று இசைக்கும்
ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி
ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. 4-

மூன்று வைப்பினும்- விண்ணுலகு, மண்ணுலகு, பாதலம் எனும்
மூன்றுலகத்திலும்; அப்புறத்து உலகினும் – அவற்றிற்கு
அப்பாற்பட்ட உலகத்திலும் உள்ளவர்களாய்; முனையின் ஏன்று
கோளுறும் வீரர்கள் – போர்முனையில் எதிர்த்துப் போர்
புரியும் அரக்கவீரர்கள் யாவரும்; வம்மின் என்று இசைக்கும்
– வாருங்கள் என அழைப்பது போன்று ஒலிக்கும்; ஆன்ற
பேரியும்- பெரிய முரசுகளும்; அதிர் குரல் சங்கமும்- கேட்டாரை அதிரச் செய்யும்
குரலை உடைய சங்குகளும்; அசனி ஈன்ற காளமும்- இடி ஒலி
உண்டாக்கும் எக்காளமும் ஆகிய இசைக்கருவிகளின் ஒலி;
ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப- பதினான்கு உலகங்களிலும்
சென்று ஒலிப்பன ஆயின.

————-

இராவணனையும் அரக்கர் தானையையும் கண்ட வானரர் ஆரவாரித்தல்

அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர்
வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சினைச் சுடுவது ஓர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை, கண்டார். 5-

அனைய ஆகிய அரக்கர்க்கும்- அத்தன்மை கொண்டு வரும்
அரக்கர்களுக்கும்; அரக்கனை- அரக்கனாக இருப்பவனை; அவுணர்
வினைய- அவுணர்களின் தீவினையுடைய; வானவர் வெவ்வினைப்
பயத்தினை- தேவர்களின் கொடிய தீவினைப் பயனாகத் துன்பம்
செய்கின்றவனை; வீரர் நினையும் நெஞ்சையும்- தன்னை நினைக்கும்
போர் வீரர்களின் உள்ளத்தையும்; சுடுவது ஓர் நெருப்பினை- சுடுகின்ற
ஒப்பற்ற தீப்போன்றவனை; நிமிர்ந்து கனையும் எண்ணையும்-
எல்லையைக் கடந்து நிற்கும் அளவினையும்; கடப்பது ஓர் கடலினைக்
கண்டார்- கடந்து நிற்கின்ற ஒப்பற்ற கடல் போன்ற நிறமும் ஆற்றலும்
உடைய இராவணனைக் கண்டனர்.

—————-

கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ் கற்கள்
கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை கொட்டி,
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்-
‘மண்டு போரிடை மடிவதே நலம்’ என மதித்தார். 6-

கண்டு – இராவணனைப் பார்த்து; மண்டு போரிடை –
நெருங்கிச் செய்யும் போரிலே; மடிவதே நலம் என மதித்தார்
– சாவதே நல்லது என மதித்தவராய்; கைகளோடு அணி வகுத்து-
போர்க்களத்தில் பக்கங்களோடு முன்பின் வரிசையாக நின்று;
உரும் உறழ் கற்கள் கொண்டு – இடிபோல் பகைவர்க்குத்
துன்பம் செய்யும் கற்களைக் கொண்டு; கூற்றமும் நடுக்குற-
எமனும் நடுங்குமாறு; தோள்புடை கொட்டி- தோள்களைத்
தட்டிக் கொண்டு; அண்ட கோடிகள் – பல உலகின் பல்வேறு
மூலை முடுக்குகளும்; அடுக்கு அழிந்து- அடுக்குமுறை குலைந்து;
உலைவுற- வருந்துமாறு; ஆர்த்தார்- ஆரவாரம் செய்தார்.

———–

அரக்கன் சேனையும் குரக்குச் சேனையும் கைகலத்தல்

அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் அமைந்த
குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் கோத்து,
நெருக்கி நேர்ந்தன; நெருப்பு, இடை பொடித்தன;
நெருப்பின் உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது உதிரம். 7-

அரக்கன் சேனையும்- இராவணன் படையும்; ஆருயிர்
வழங்குவான் அமைந்த – தம் அரிய உயிரைப் போரில்
அழிக்குமாறு நின்ற; குரக்கு வேலையும் – குரங்கின் கடல்
போன்ற படையும்; ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் கோத்து-
ஒன்றுடன் ஒன்று எதிர் எதிராகக் கைகலந்து; நெருக்கி
நேர்ந்தன- நெருக்கியவாறு போர் புரிந்தன; நெருப்பு இடை
பொடித்தன- தாக்குவதால் இரு படைக்கும் இடையில் நெருப்புத்
தோன்றின; நெருப்பின் உருக்கு செம்பு என- தீயிலே
காய்ச்சி உருக்கிய செம்பு போல; உதிரம் அம்பரத்து ஓடினது
– இரத்தம் கடலை நோக்கி ஓடியது.

————–

அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, அண்டத்து
ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர,
சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப,
முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. 8-

அற்ற வன்தலை- அறுபட்ட வலிய தலை; அறுகுறை எழுந்து
எழுந்து – தலை அற்ற உடல் குறையிலிருந்து எழுந்தெழுந்து;
அண்டத்து ஒற்ற – மேலே போய் ஒற்றுதலால்; வானகம் உதய
மண்டிலம் என ஒளிர- விண்ணில் எழுகின்ற கதிரவன் போல ஒளி
வீச; சுற்றும் மேகத்தைத் தொத்திய- வானத்தில் மிதந்து
வரும் மேகத்தில் பதிந்துள்ள; குருதிநீர் துளிப்ப-
இரத்தநீர் மழையாகத் துளிர்க்க; வையகம் முற்றும்
போர்க்களம் ஆம் என முயன்ற- உலகம் முழுவதும்
போர்க்களம் போன்று தோன்றுமாறு காட்சி அளித்தன.

—————-

தூவி அம் பெடை அரி இனம் மறிதர, சூழி
தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப,
மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த,
மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த. 9-

அம்படைக் கடலிடை மேவி- (யானைகள்) சேனைக் கடலிடைச்
சேர்ந்து (இலக்குவன் அம்பு தொடுக்க எடுத்தலால்); தூவி
அம்பெடை அரியினம் மறிதர- சிறகுகளை உடைய அழகிய பெண்
வண்டோடு கூடிய அழகிய ஆண் வண்டுக் கூட்டம் மீண்டு போகுமாறு;
சூழி தூவி – முகபடாத்தை வீசி எறிந்து; சோர்ந்தன-
சோர்வடைந்தனவாய்; வியம்மே படைபடப் படர் குருதியின்
சொரியுடல் சுரிப்ப வீழ்ந்த – வியத்தற்குரிய அம்புப் படை
மேலே படப்பட பரந்து செல்லும் இரத்தத்தில் சுழன்று அமிழ்ந்து உடல்
வீழ; அம்பு எடை குடரொடு மிதந்த- அம்பின் மிகுதியால் பொருந்தி
வெளிப்பட்ட குடரொடு மிதப்பவாயின.

——————

கண் திறந்தனர் கணவர்தம் முகத்த அவர் முறுவல்
கண்டு இறந்தனர் மடந்தையர், உயிரொடும் கலந்தார்-
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப. 10-

பண்டு இறந்தன பழம் புணர்வு அகம்புக- முன்பு தம்
கணவருடன் கழித்த பழைய புணர்ச்சி நிகழ்ச்சிகளை நினைத்து; பன்னி
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப- பலவாறு
வாய்விட்டுப் பாடினாற் போன்று புலம்புகின்ற ஒலியும் சிலம்பின் ஒலியும்
கலந்து நடுங்கியவாறு ஒலிக்க; கணவர் கண் திறந்தன தம்
முகத்து- கணவர் தம் கண்கள் விழித்துள்ளனவாகிய
முகங்களில்; அவர் முறுவல் கண்டு இறந்த அன
மடந்தையர்- அவர்களுடைய சிரிப்பைப் பார்த்து
மகிழ்ந்து தம் உடலை விட்டுப் பிரிந்தவர் போன்ற
கற்புடை மகளிர்; உயிரொடும் கலந்தார்- தம் இறந்த
கணவருடைய உயிரொடு ஒன்றாய்க் கலந்தனர்

—————–

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும்
நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான் –
‘தாழ் இல் என் படை தருக்கு அறும்’ என்பது ஓர் தன்மை. 11-

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
– கீழ் ஏழு உலகம் மேல் ஏழு உலகம் எனச் சொல்லும் உலகங்கள்
பதினான்கும்; ஊழி பேர்வது ஒப்பது- ஊழிக்கால முடிவில்
நிலை பெயர்வது போன்ற; ஓர் உலைவுற உடற்றும்- ஒரு அழிவு
உண்டாகப் போரிடுகின்ற; நூழில் வெஞ்சமம் நோக்கி-
பகைவரைக் கொல்லும் கொடிய போர்க்களத்தைப் பார்த்து;
அவ்இராவணன்- அந்த இராவணன்; தாழி இல் என்படை தருக்கு
அறும் என்பது ஓர் தன்மை நுவன்றான் – தாழ்வு இல்லாத என்
சேனை இனிச் செருக்கு அழியும் என்ற ஒரு தன்மையைக் கூறினான்.

———–

அனுமனும் இலக்குவனும் அரக்கர் படையைச் சிதைத்தல்

மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம்,
அரமும், கல்லும், வேல், முதலிய அயில் படை அடக்கி,
சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, அச் சேனை;
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு பால். 12-

உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒருபால்-
வலிமையும் கல்வியறிவும் உள்ள அனுமான் போர் செய்யும் ஒரு
பக்கத்தில்; மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம்
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி-
வானரர்கள் வீசும் மரங்களும் கற்களுமே கொண்டு வில்லும்
வாளும் மழுவும் சூலமும் அரத்தையும் அழிக்கத்தக்க உறுதி
மிக்க வேல் முதலிய கூரிய படைகளையும் அடக்கிவிட்டு; சிரமும் கல் எனச்
சிந்தலின்- அரக்கர்களின் தலைகளையும் கற்கள் போல
உருளுமாறு சிந்துவதால்; என் சேனை சிதைந்தது – என்படை
அழிந்தது.

—————–

அழலும் கண் களிற்று அணியொடும், துணி படும்; ஆவி
சுழலும் பல் பரித் தேரொடு புரவியும், சுற்ற,
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்-
குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். 13-

குழலும் நூலும் போல் – நெய்கின்ற குழலும் அதைத்
தொடர்ந்து செல்லும் நூலும் போல; அனுமனும் தானும் அக்குமரன்
– ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அநுமனும் இலக்குமணனும்
போர் செய்தனர்; அழலும் கண் களிறு- சினம் மிக்க
கண்ணுடைய யானைகள்; அணியொடும் துணிபடும் – அணிந்த
அணிகலன்களோடு துண்டுபடும்; பல்படைத் தொகுதியும் ஆவி
சுழலும்- பலவகைப் படை வீரரின் கூட்டமும் உயிர் சுழன்று
நிற்கும்; சுடர்த்தேர் அன்னதே – ஒளிமிக்க தேர்களும்
சுழலும்; கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்
– இறந்து பட்ட உடம்பிலிருந்து இரத்தம் ஆற்று நீரோடு கலந்து
கடலிடையே சேரும்.

—————–

‘வில்லும் கூற்றுவற்கு உண்டு’ என, திரிகின்ற வீரன்
கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை பெருங் குழுவை;
ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். 14-

வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன்-
இயமனுக்குத் தண்டேயன்றி வில்லும் படையாக உண்டு எனக்
கூறும்படி போர்க்களத்தில் திரிகின்ற இலக்குவன்;
கொல்லும் கூற்று எனக் குறைக்கும் – கொல்லுவதைத்
தொழிலாக கொண்ட யமன் போல் அரக்கர் எண்ணிக்கையைக்
கொன்று குறைக் கின்றான்; இந்நிறை பெருங்குழுவை- இந்நிலையில் வானரர்
பெருங் கூட்டத்தை; ஒல்லும் கோள் அரி- வெல்லுதற்குரிய
வலிமையுடைய சிங்கமும்; உரும் அன்ன- இடியும் போன்ற;
குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற – அனுமனாம்
குரங்கின் நகமும் பல்லும் அரக்கர் படையை அழிக்கக்
கூர்மையுடையன; அரக்கர் தம் படைகள் கூர்க்கில-
அரக்கரின் படைகள் வானரங்களை அழிக்கக் கூர்மை
பெறவில்லை.

—————

இராவணன் கொதித்து, அம்பு தொடுக்க குரக்குச் சேனை நிலைகெடுதல்

‘கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின்,
உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை;
மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென், கொற்றம்’ என்று இராவணன் கொதித்தான். 15-

இறைப்பொழுது- சிறிது போழ்து இங்ஙனம்; கண்டு நின்று
இனிக் காலத்தைக் கழிப்பின்- இலக்குவன் அனுமன் புரியும்
போரைக் கண்டு காலத்தைக் கழிப்பேன் ஆனால்; நிருதர்
பேர் உயிரை உண்டு கை விடும் கூற்றுவன் – அரக்கரின்
பெருமை மிக்க உயிர்களை உண்டு போர்க்களத்தை விட்டுக்
கூற்றுவன் போய் விடுவான்; மண்டு வெஞ்செரு- வீரர்கள்
நெருங்கிப் புரியும் போரில்; நான் ஒரு களத்திடை மடித்தே
கொற்றம் கொண்டு மீள்குவென் – நான் ஒரு நொடிப்பொழுதில்
குரங்குகளைக் கொன்று வெற்றி பெற்று மீள்வேன்; என்று
இராவணன் கொதித்தான்- எனச் சொல்லி இராவணன்
வெதும்பினான்.

—————–

ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப்
பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப,
மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின்
தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். 16-

ஊதை போல்வன- காற்றைப் போல் வேகமாகச் செல்வனவும்;
உரும் உறழ் திறலன – இடிபோல் அழிக்கும் வலிமை
பெற்றனவும்; உருவிப் பூதலங்களைப் பிளப்பன- உலகின்
ஊடுருவிப் பிளப்பனவும்; அண்டத்தைப் பொதுப்ப- வானத்தைத்
துளைப்பன வும்; மாதிரங்களை அளப்பன- திசைகளை அளப்பனவும்;
மாற்றருங் கூற்றின் தூது போல்வன- மாற்றுதற்கு முடியாத
யமனின் தூதுவர்களைப் போல்வனவும்; சுடுகணை முறை முறை
துரந்தான் – தீய்க்கின்ற அம்புகளை முறை முறையாகப் பகைவர்
மீது (இராவணன்) செலுத்தினான்.

————

ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் களத்து அடைந்த
ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் அடைந்த
காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் புணரி. 17-

எதிர்ந்த போது ஆளி போன்று உளன்- (இராவணன்)
எதிரிட்டபோது சிங்கம் போல் விளங்கினான்; அமர்க்களத்து-
போர்க்களத்தில்; அடைந்த ஞாளி போன்று – (வானரப்படை)
அடைந்தபோது நாயைப்போல இருந்தது என்பதால் பயன் என்ன?;
இராவணன் நள்ளிருள் அடைந்த காளி போன்றனன் –
இராவணன் செறிந்த இருட்டிலே வந்த காளி தெய்வத்தைப்
போன்றான்; அப்பொரு சினத்து அரிகள் தம் புணரி – அந்தப்
போரிடும் கோபம் உடைய வானரர் படைக்கடல்; வெள்ளிடைக்
கரந்த பூனை போன்றது- வெற்றிடத்தில் பொருந்திய பூனைப்
பூக்கள் போன்றது.

——————

இலக்குவன் – இராவணன் பொருதல்

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி,
‘அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்’ என்று அருள் வழங்கி,
திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;
எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான். 18-

இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – தோற்று
ஓடுகின்ற வானர சேனையை இலக்குவன் தடுத்து; ‘அரிகள்!
அஞ்சன்மின், அஞ்சன்மின்’ என்று அருள் வழங்கி – ‘வானரர்களே!
பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்’ என்று அருள் மொழி
கூறி; திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்
– திரிகின்ற அனுமானின் தோள் என்னும் தேர் மேல் ஏறிச்
சென்றான்; எரியும் வெஞ்சினத்து இராவணன் எதிர் புகுந்து
ஏற்றான்- எரிகின்ற கொடிய கோபத்தை உடைய இராவணன்
எதிரே சென்று எதிர்த்தான்.

————–

ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி
நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க,
காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க,
வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். 19-

ஏற்றுக் கோடலும்- (அவ்வாறு இலக்குவன் எதிர் நின்று)
எதிர்த்த அளவில்; இராவணன் எரிமுகப் பகழி- இராவணன்
நெருப்பை முனையிலே கொண்ட அம்புகளை; நூற்றுக் கோடியின்
மேல் – நூறு கோடிக்கு மேலாக; செலச் சிலை கொடு நூக்க-
செல்லுமாறு வில்லால் எய்ய; காற்றுக்கு ஓடிய பஞ்சு என-
காற்றுக்கு எதிர் நிற்கமுடியாமல் ஓடிப் பறந்த பஞ்சுபோல்;
திசைதொறும் கரக்க- திசைகள் தோறும் சென்று மறையுமாறு;
இலக்குவன் வேற்றுக்கோல் கொடு விசையால் விலக்கினன்-
இலக்குவன் அவற்றிற்கு எதிரான அம்புகள் கொண்டு விசையால்
எதிர் விலக்கினான்.

—————

விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம்
உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து உருவக்
கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான்,
அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். 20-

விலக்கினான் தடந்தோளினும் மார்பினும் – அவ்வாறு
விலக்கியவனாம் இலக்குவனின் பெரிய தோளிலும் மார்பிலும்;
இராவணன் ஐந்தொடு ஐந்து விசிகம் உலக்க உய்த்தனன்-
இராவணன் பத்து அம்புகளை இலக்குவனின் வலிமை குறையுமாறு
விடுத்தான்; உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும்-உடம்பின் அவ்வம்புகள் ஊடுருவக் கலக்கம் கொள்ளாத
இலக்குவனும்; உள்ளத்தில் கனன்றான் – மனத்தில் கோபம்
கொண்டு; அடல் அரக்கனை – வலிமை மிக்க இராவணனை;
அம்பால் அலக்கண் எய்துவித்தான் – தன் அம்புகளால்
துன்பமுறச் செய்தான்.

—————

காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள்
நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், ‘நூழில்
ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்மா!
நீக்கி, என் இனிச் செய்வது?’ என்று இராவணன் நினைந்தான். 21-

காக்கல் ஆகலாக் கடுப்பினில் கணைகள் தொடுப்பன –
தடுத்தற்கு முடியாத விரைவொடு அம்புகளை (இலக்குவன்);
நூக்கினான் -செலுத்தினான்; கணை நுறுக்கினான் அரக்கனும்-
செலுத்திய அம்புகளை நுறுங்கச் செய்த இராவணனும்; நூழில்
ஆக்கும் வெஞ்சமத்து – கொன்று குவிக்கும் கொடிய போரில்;
இவன்தனை வெல்வது அரிது – இவனை வெற்றி காண்பது
முடியாது; அம்பால் நீக்கி – அம்பினால் போரிடுவதை விலக்கி;
இனி என் செய்வது – இனிமேல் என்ன செய்வது; என்று
இராவணன் நினைந்தான் – என இராவணன் ஆழமாகச்
சிந்தித்தான்.

——————

இராவணன் மோகப் படையை விட, வீடணன் கூற இலக்குவன் ஆழிப்படையை விடல்

‘கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை முற்றும்
கடக்க விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்;
தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச்
சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். 22-

கடவுள் மாப்படை தொடுக்கின் – பெரிய தெய்வ அம்புகளைத்
தொடுத்தால்; மற்று அவை முற்றும் கடக்கவிடவும் ஆற்றவும்
வல்லனேல்- அவ்வம்புகள் எல்லாவற்றையும் வெல்லவும்
தாங்கவும் வலிமை யுடையவன் ஆனால்; யாரையும் வெல்லும்-
எல்லாரையும் வெல்லுவான்; கூற்றையும் ஆற்றலைத் தடவும்-
கூற்றுவனையும், வலிமையை ஆராய்ந்து பார்க்கும்; தமையனைப்
போல- இராமனைப் போல்; எவ்வுலகையும் சுடவும் ஆற்றும்-
எல்லா உலகங்களையும் சுட்டெரிக்கவும் முடியும்; எவனுக்கும்
தோலான் – யார்க்கும் தோற்கமாட்டான்.

—————

‘மோக மாப் படை ஒன்று உளது; அயன் முதல் வகுத்தது;
ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது;
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்வயின் ஏவி,
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்’- 23-

மோகம் ஒன்று உண்டு – மோகம் என்பது ஒன்று உள்ளது;
முன்னாள் முதலவன் வகுத்தது – தொடக்க காலத்தில் முதற்
கடவுள் இயற்றியது; ஆகம் அற்றது- கண்ணால் காணும் வடிவம்
இல்லாதது; கொற்றமும் சிவன்தனை அழிப்பது – வெற்றியையும்
சிவனின் ஆற்றலையும் அழிக்கும் ஆற்றலுடையது; ஏகம் முற்றிய
விஞ்சையை – தனித்தன்மை பொருந்திய இந்த விஞ்சையை;
இவன் வயின் ஏவி – இலக்குவன் மீது செலுத்தி; காகம் உற்று
உழல் களத்தினில் – பிணந்தின்ன வரும் காகங்கள் திரியும்
போர்க்களத்தில்; கடிதின் கிடத்துவென் – விரைந்து கிடக்கச்
செய்வேன்.

————–

என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி,
முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி,
அன்பின் வீடணன், ‘ஆழியான் படையினின் அறுத்தி’
என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். 24-

என்பது உன்னி – என்பது எண்ணி; அவ்விஞ்சையை
மனத்திடை எண்ணி – அந்த மோகன விஞ்சையை மனத்தில்
நினைத்து; முன்பன் மேல் வரத்துரந்தனன் – வலியவனாம்
இலக்குவன் மேல் செல்ல விடுத்தான்; அன்பின் வீடணன் –
அன்புடைய வீடணன்; அது கண்டு முடுகி, ஆழியான் படையினின்
அறுத்தி – அதனைக் கண்டு விரைந்து சக்கரப் படையுடைய
நாராயணனது கணையால் இதனை அறுப்பாயாக; என்பது ஓதினன்
– என்பதைக் கூறினான்; இலக்குவன் அது தொடுத்து எய்தான்
– இலக்குவன் அந்த நாராயணன் அம்பைப் பூட்டி விடுத்தான்.

————-

வீடணன் உபாயத்தால் படை வலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்

வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான்,
மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான்,
‘மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த
கேடு நம்தமக்கு’ என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். 25-

வீடணன் சொல- வீடணன் சொல்ல; விண்டுவின் படைக்கலம்
விட்டான் – அவன் சொல்லியபடி நாராயணனது அம்பை
விட்டான்; மூடு வெஞ்சின மோகத்தை நீக்கலும்- தன்னை மூடி
மயக்கவந்த கொடிய சினத்தையுடைய மோகத்தை இலக்குவன்
விலக்கலும்; முனிந்தான் – இராவணன் வெகுண்டான்; மாடு
நின்றவன் உபாயங்கள் மதித்திட – பக்கத்திலிருந்த வீடணன்
உபாயங்களைச் சொல்லிட அதை இலக்குவன் மதித்து ஏற்றிட; கேடு
நம் தமக்கு வந்த – நமக்குக் கேடு வந்தன;என்பது மனங்கொண்டு
கிளர்ந்தான்- என்பதை உளத்தில் எண்ணிக் கிளர்ச்சியுற்றான்.

———

மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு
அனல் வேள்வி, அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும்
அனையது; உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின்,
சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். 26-

மகளொடு மயன் கொடுத்தது – (முன்னர், திருமணத்தின் போது
இராவணனுக்கு) மண்டோதரியாம் மகளொடு மயன் அளித்தது;
வயங்கு அனல் வேள்வி அயன் படைத்துளது – பிரமனால் யாகத்
தீயில் படைக்கப்பட்ட படையாம்; ஆழியும் குலிசமும் அனையது
– திருமாலின் சக்கரப்படையும் இந்திரனின் வச்சிரப்படையும் போன்றது;
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது – உயர்ந்த வெற்றி அளிப்பதிலும் ஊழிக்
காலத்தையும் கடந்துளதாகிய; உருமின் – இடி போன்ற
வேற்படையாலே; சயம் தனைப் பொரும் தம்பியை –
வெற்றியையே உவமை கூறத்தக்க வீடணனது; உயிர்கொளச்
சமைந்தான் – உயிரைக் கொள்வதற்குத் துணிந்தான்.

—————–

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்,
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்,
வட்ட வேல் அது வலம்கொடு வாங்கினன், வணங்கி,
எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். 27-

விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும்- வேலை எறிந்த
போது அந்த ஒரு பகைவனை வீழ்த்தி விட்டே திரும்பும்;
பட்டபோது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும்- மேலே பட்ட
போது தன்னைப் படைத்த பிரமனே ஆனாலும் கொல்லும்
தன்மையது; வட்டவேல் அது வலங்கொடு வாங்கினான் வாங்கி –
திருத்தமான வேலை வலந்திரிந்து எடுத்து வணங்கி; எட்ட
நிற்கலாத் தம்பிமேல் – தொலைவில் நிற்காத அருகில்
உள்ள தம்பி வீடணன் மேல்; வல் விசைத்து எறிந்தான்- மிகுந்த
வேகத்துடன் எறிந்தான்.

——————–

‘ஈது என் உயிர் அழிக்கும்’ என்று வீடணன் உரைக்க, இலக்குவன் ‘இதைப் போக்குவேன்; அஞ்சல் நீ’ எனல்

எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், ‘ஐய! ஈது என் உயிர் அழிக்கும்;
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை’ என்றலும், பெரியோன்,
‘அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!’ என்று இடை அணைந்தான். 28-

எறிந்த காலையில் – இராவணன் வேலினை எறிந்த போது;
அதன் நிலை எல்லாம் அறிந்த சிந்தையன் வீடணன் –
அவ்வேலின் திறம் முழுதும் அறிந்த அறிவுடையோனாகிய
வீடணன்; ஐய! ஈது என் உயிர் அழிக்கும்- ஐயனே! இவ்வேல்
என் உயிரை வாங்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை
என்றலும் – தடுத்துச் செய்தற்குரிய உபாயம் வேறு இல்லை என்று கூறியதும்;
பெரியோன் அறிந்து போக்குவல் – இதைப் போக்கும் திறம்
அறிந்து போக்குகின்றேன்; நீ அஞ்சல் – நீ பயப்படாதே;
என்று இடை அணைந்தான் – எனக் கூறி வீடணன் நின்ற
இடத்தில் வந்து நின்றான்.

————-

வேலைத் தானே மார்பில் ஏற்க, இலக்குவன் எதிர்தல்

எய்த வாளியும், ஏயின படைக்கலம் யாவும்,
செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன; ‘வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை’ என்று, உம்பரும் பெரு மனம் உலைந்தார். 29-

எய்த வாவியும் – இலக்குவன் எய்த அம்புகளும்; ஏவின
படைக்கலம் யாவும் – ஏவிய படைக்கருவிகள் எல்லாம்; செய்த
மாதவத்து ஒருவனை – சிறந்த தவத்தால் பெரியோனை; சிறு
தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன- கீழான ஏவல்
புரியும் தீயோன் சபித்த சாபம் பலிக்காது போயின போலப்
பயனின்றிப் போயின; வீடணன் மாண்டான் – வீடணன்
செத்தான்; உய்தல் இல்லை என்று – பிழைப்பது இனி இல்லை
என்று; உம்பரும் பெருமனம் உலைந்தோர் – தேவர்களும்
தம்முடைய பெருமை மிக்க மனம் அழிந்தனர்.

————–

‘தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்;
ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்?
நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்,- எற்பென், என்
தனி மார்பின்’ என்று, இலக்குவன் எதிர்ந்தான். 30-

தோற்பென் என்னினும் – (வீடணனைக் காக்க வேலை ஏற்று)
என் உயிரை இழந்தேன் என்றாலும்; புகழ் நிற்கும் – (அடைக்கலம்
காத்த) புகழ் நிலைத்து நிற்கும்; தருமமும் தொடரும் – அறமும்
என்னைத் தொடர்ந்து வரும்; நல்லவர் ஆர்ப்பர்- நல்ல மனிதர்கள்
மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர்; அடைக்கலம் புகுந்தவன்
அழியப் பார்ப்பது என் – அடைக்கலமாக அடைந்த வீடணன்
இறக்கப் பார்த்துக் கொண்டிருப்பது எதற்கு? நெடும் பழி
வந்து தொடர்வதன் முன்னம் – (அடைக்கலப் பொருளைக்
காவாமல் விட்டான் என்று) நெடுங்காலம் நிற்கும் பழி வந்து
தொடர்வதற்கு முன்னரே; என் தனி மார்பின் ஏற்பென்- எனது
ஒப்பற்ற மார்பில் அவ்வேலை ஏற்பேன்; என்று இலக்குவன்
எதிர்ந்தான் – என்று இலக்குவன் எதிர் நின்றான்;

————–

வேலை ஏற்க பலரும் முந்த, இலக்குவன் அவ் வேலைத் தன் மார்பில் ஏற்றல்

இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும்
விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி
கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்;
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? 31-

இலக்குவற்கு முன் வீடணன் புகும் – இலக்குவனுக்கு
முன்னர் வீடணன் செல்வான்; இருவரையும் விலக்கி அங்கதன்
மேற்செலும் – அவ்விருவரையும் விலக்கி விட்டு வாலி மகன்
அங்கதன் முன் புகுவான்; அவனையும் விலக்கி வானரக்
காவலன் கலக்கும்- அங்கதனை விலக்கிவிட்டு வானரர் அரசாம்
சுக்கிரீவன் முந்துவான்; அனுமன் முன் கடுகும் – அனுமன்
விரைந்து செல்வான்; அலக்கண் அன்னதை – அப்படிப்பட்ட
துன்பத்தை; இன்னது என்று உரை செயல் ஆமோ- இத்தகையது
என்று கூற முடியுமா?

———–

முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி,
‘நின்மின்; யான் இது விலக்குவென்’ என்று உரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக, 32-

முன் நின்றார் எலாம் பின் உற- முன்னே சென்றவர்கள்
எல்லாம் பின்னே நிற்க; காலினும் முடுகி – காற்றினும்
விரைந்து சென்று; நின்மின் யான் இது விலக்குவென் –
எல்லாரும் நில்லுங்கள் நான் இதை விலக்குவேன்; என்று உரை நேரா
மின்னும் வேலினை – என்று சொல்லிக்கொண்டே ஒளி வீசும்
வேலை; விண்ணவர் கண் புடைத்து இரங்க- தேவர்கள் கண்மேல்
மோதிக் கொண்டு வருந்த; பொன்னி்ன் மார்பிடை –
பொன்னிறமுள்ள மார்பில் பட்டு; முதுகிடைப்போக ஏற்றனன் –
முதுகுக்குள்ளே ஊடுருவிப் போக (அவ்வேலை) ஏற்றான் இலக்குவன்.

——————-

வீடணன் தண்டு கொண்டு இராவணனது தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல்

‘எங்கு நீங்குதி நீ?’ என வீடணன் எழுந்தான்,
சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில்
பொங்கு பாய் பரி சாரதியோடும் படப் புடைத்தான்,
சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். 33-

எங்கு நீங்குதி நீ என `வீடணன் எழுந்தான்-
(போர்க்களத்தை விட்டுப் புறப்படும் இராவணனைப் பார்த்து)
வீடணன், ‘நீ எங்கே செல்கிறாய் என்று எழுந்து; சிங்கஏறு
அன்ன சீற்றத்தான் – ஆண் சிங்கம் போன்ற கோபம்
உடையவனாய்; இராவணன் தேரில்- இராவணனுடைய தேரிலே;
பொங்குபாய் பரி சாரதியொடும் பட – கிளர்ந்து பாயும்
குதிரையொடு தேரோட்டியும் இறந்திட; சங்க வானவர் தலை
எடுத்திட நெடுந்தண்டால் புடைத்தான் – திரளாயுள்ள
தேவர்கள் மீண்டும் கிளர்ச்சி பெற்றுயரத் தன் நீண்ட
தண்டாயுதத்தால் அடித்தான்.

——————-

இராவணன் வீடணன்மேலும், அனுமன்மேலும் கணை தொடுக்க, அவனை வீடணன் வெகுண்டு, பின் தொடர்தல்

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி,
பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி,
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி,
போயினன், ‘செரு முடிந்தது’ என்று, இலங்கை ஊர் புகுவான். 34-

சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி –
தூரத்தே உள்ள வானில் உயரச் சென்று இராவணன் சீற்றம்
கொண்டு; அவன் உடல் புகப் பாய் கடுங்கணை பத்து பாய்ச்சி
– அவ்வீடணன் உடம்பிலே பாய்கின்ற கொடிய அம்புகள் பத்தை
அழுத்திவிட்டு; ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்த
– ஆயிரம் அம்புகளை அனுமனின் உடம்பில் பாய்ச்சிவிட்டு; செரு
முடிந்தது என்று- போர் முற்றுப் பெற்றது என்று; இலங்கை ஊர் புகுவான்
போயினன் – இலங்கை நகரில் புக, (இராவணன்) சென்றான்.

———–

‘தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென்’ என்று அரக்கன்மேல் வீடணன் வெகுண்டான். 35-

தேடிச் சேர்ந்த என் பொருட்டினால் – அடைக்கலமாகப்
புகுந்த என்னைக் காப்பதற்காக; உலகுடைச் செல்வன் வாடிப்
போயினன் – உலகம் எல்லாம் தன்னதாக உடைய இலக்குவன்
வாடிப் போனான்; இனி வஞ்சனை மதியால் ஓடிப் போகுவது
எங்கு? – இனிமேல் உன்னுடைய வஞ்சனை புத்தியால் நீ ஓடிப்
போவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென்
என்று- அடா உன்னோடு இப்போதே போர் செய்து உன்னைக் கொன்று
நானும் இறப்பேன் என்று; அரக்கன் மேல் வீடணன் வெகுண்டான்
– இராவணன் மீது வீடணன் கோபித்தான்.

————-

வீடணனைக் கொல்லாது இராவணன் இலங்கைக்கு மீள்தல்

‘வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக்
கொன்று, இனிப் பயன் இல்லை’ என்று இராவணன் கொண்டான்;
நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்;
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான். 36-

வென்றி என் வயம் ஆனது – வெற்றி என் வசம் ஆயிற்று;
வீடணப் பசுவைக் கொன்று இனிப் பயன் இல்லை என்று- பசுப்
போன்ற வீடணனைக் கொன்று இனிமேல் அடையும் நன்மை ஒன்றும்
இல்லை என்று; இராவணன் கொண்டான் – இராவணன் மனத்தில்
நினைத்தான்; நின்றிலன் – நிற்கவும் இல்லை; ஒன்றும்
நோக்கலன் – போர்க்களத்து எதையும் பார்க்கவில்லை;
முனிவு எலாம் நீத்தான்- கோபம் எல்லாம் விட்டவனாய்; பொன்
திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – அழகிய மதிலை
உடைய இலங்கை நகர்க்குள் சென்றான்.

—————–

வீடணன் துயரம் மிக்கவனாய், இலக்குவன் பாதத்தில் வீழ்ந்து, இறக்க முயல, சாம்பன் தடுத்தல்

அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி,
இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில்,
கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். 37-

அரக்கன் ஏகினன் – இராவணன் இலங்கைக்குள் சென்றான்;
வீடணன் வாய் திறந்து அரற்றி – வீடணன் வாய் திறந்து
புலம்பி; இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித்தலத்தில்
– இரக்கப் பண்பே உருவான இலக்குவனின் இரண்டு காலடியில்;
கரக்கல் ஆகலாக் காதலின் – அடக்க முடியாத அன்பினால்;
கலுழ்ந்தான் வீழ்ந்தனன் – கண்ணீர் சிந்தி விழுந்தான்;
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார்-
குரங்குச் சேனையும் அதன் தலைவர்களும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள்.

————

‘பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற,
என் இருந்து நான்? இறப்பென, இக் கணத்து; எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன்’ என்றவன் மறுக, ‘நில், நில்’
என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்: 38-

பொன் அரும்பு உறுதார்ப் புயப் பொருப்பினான் பொன்ற –
அழகு மிக்க அரும்பால் கட்டிய மாலையணிந்த தோள்களாம்
மலையை உடைய இலக்குவன் இறக்க; நான் இருந்து என்? – நான்
உயிரோடு இருந்து என்ன பயன்? இக்கணத்து இறப்பென்- இந்த
நொடியே இறப்பேன்; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன்
என்றனன் மறுக – என்னை அடைக்கலமாய்க் கொண்ட இராமன்
இனி உயிரோடு வாழான் என்று மனங்கலங்கி நிற்க;
சாம்பவான் ‘நில் நில்’ என்றனன்- சாம்பவான் அவனைத்
தடுத்து ‘நில் நில்’ என்று கூறி,; உரை ஒன்று நிகழ்த்தும்-
சொல் ஒன்று சொல்வான்.

—————

‘அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான்,
வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்;
தினையும் அல்லல் உற்று அழுங்கன் மின்’ என்று இடர் தீர்த்தான். 39-

அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ-
அனுமன் நம் பக்கம் இருக்கும் போது நாம் அரிய உயிர்
நீங்கியதற்கு வருந்துதல் அறிவுடைமை ஆகுமோ; நினையும்
அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – அனுமன்
எண்ணிய அளவில் உலகெலாம் நிமிர்கின்ற பேருருவுடையவனாய்;
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் – நம் புண்ணிய
வினையால் நல்ல மருந்தைக்கொண்டு அளிக்கின்றான்; வீரன்
உயிர்க்கின்றான் – அளித்தவுடன் இலக்குவன் உயிர்
பெற்றெழுகின்றான்; தினையும் அல்லல் உற்று அழுங்கன்மின்
என்று இடர் தீர்த்தான் – மிகச்சிறிய அளவும் துன்பமுற்று
வருந்தாதீர்கள் என்று சாம்பவான் கூறி வீடணன் முதலியோர்
துன்பம் தீர்த்தான்.

—————

சாம்பன் உரைப்படி அனுமன் மருந்து கொண்டு வந்து, இலக்குவனை உயிர்ப்பித்தல்

மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
‘இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்?’ என்னலும், அன்னான்
கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் கடந்தான். 40-

மருத்தின் காதலன் – வாயுமகனாகிய அனுமனின்; மார்பிடை
அம்பு எலாம் வாங்கி – மார்பில் தைத்த அம்பு எலாம்
வாங்கிவிட்டு; இருத்தியோ கடிது ஏகலை- நீ மருந்து கொண்டு
வராமல் இருப்பாயோ விரைந்து செல்ல மாட்டாயா; மன்னவன் இளவலை
இங்ஙனன் வருத்தம் காணுமோ – இராமன் தன் தம்பியாம்
இலக்குவனை இவ்வருத்த நிலையில் காண்பானா? என்னலும் –
என்று சாம்பவன் கூற; அன்னான் கருத்தை உன்னி –
அத்தகையோன் எண்ணத்தை நினைத்துப் பார்த்து; அம்மாருதி
உலகு எலாம் கடந்தான்- அவ்வனுமான் உலகங்களை எல்லாம்
கடந்து சென்றான்.

————-

உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் கொணர்ந்த வீரன்,
பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் உண்டோ ? 41-

உய்த்து ஒரு திசை மேல் ஓடி- (தன் கருத்தை மருந்தின்
மீது) செலுத்தி வட திசையில் ஓடி; உலகு எலாம் கடக்கப்
பாய்ந்து – உலகங்கள் எல்லாம் கடந்திடுமாறு பாய்ந்து
சென்று; மெய்த்தகு மருந்து தன்னை – மெய்ம்மையுடன்
பொருந்திய மருந்தை; வெற்பொடும் கொணர்ந்த வீரன்-
மருத்து மலையுடன் முன்னர் கொண்டு வந்த வீரனாம் அனுமான்;
பொய்த்தல் இல்குறி கெடாமே பொது அறநோக்கி –
பொய்யில்லாத அடையாளங்களை நன்கு பார்த்து; பொன் போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம்
உண்டோ?- பாதுகாப்பாக வைத்த பெருஞ்செல்வம் போல்
போற்றி வைத்ததை மீண்டும் கொண்டு வருவதில் துன்பம்
உண்டோ? (இல்லை)

————

தந்தனன், மருந்து தன்னை; தாக்குதல் முன்னே யோகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம்; உயிர் தரும் வலத்தது என்றால்,
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடிதல் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். 42-

தந்தனன் மருந்து தன்னை – அனுமன் தந்த நல்ல மருந்தை;
தாக்குதல் முன்னே யோகம் வந்தது- மருந்தின் வாசனை
வருமுன்னே நல்வினை கூடிற்று; மாண்டார்க்கு எல்லாம் உயிர்
தரும் வலத்தது என்றால்- செத்தவர் எல்லார்க்கும் உயிர்
அளிக்கும் வலிமையுடையது என்றால்; நொந்தவர் நோவு
தீர்க்கச் சிறிது அன்றோ – வேலால் துன்புற்றவரின்
துன்பம் தீர்ப்பது சிறிய சொல் அல்லவா? இந்திரன் உலகம்
ஆர்க்க – தேவர் உலகம் ஆரவாரம் செய்ய; நொடிதல் முன்னே
இளைய வீரன் எழுந்தனன்- நொடிப் பொழுதில் இலக்குவன்
உயிர் பெற்று எழுந்தான்.

———-

இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணனின் நலத்தை உசாவல்

எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால்
தழுவி, ‘எந்தாய்! விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!’ என்று, விம்மித்
தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி,
‘கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்’ என்று உவகை கொண்டான் 43-

எழுந்து நின்று- இலக்குவன் எழுந்து நின்று; அனுமன் தன்னை
இரு கையால் தழுவி – அனுமனைத் தன் இரு கைகளாலும்
தழுவிக்கொண்டு; எந்தாய் விழுந்திலன் அன்றோ மற்று
அவ்வீடணன் என்ன – எம் தந்தை போன்றவனே! அந்த வீடணன்
இறந்து பட வில்லை அல்லவா என்று கேட்க; விம்மித் தொழும்
துணையவனை நோக்கி – (அது கேட்டுத்) தேம்பித் தன்னை
வணங்கும் துணைவனைப் பார்த்து; துணுக்கமும் துயரும் நீக்கி-
மன நடுக்கமும் துன்பமும் தீர்ந்து; அரக்கன் பட்டான் –
இராவணன் இனி மாண்டான்; கொழுந்தியும் மீண்டாள் –
சீதையும் சிறை மீண்டாள்; என்று உவகை கொண்டான் – என
மகிழ்ச்சி கொண்டான்.

————-

வானரத் தலைவர்கள் இராமனிடம் சேர்ந்து வணங்க, இராமன், ‘விளைந்தது என்ன?’ என வினாவுதல்

‘”தருமம்” என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால்,
அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும்,
இருமையும் நோக்கின்’ என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். 44-

தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை-
அறம் என அறிஞர் கூறும் ஒப்பற்ற பொருளை; இன்னே கருமம்
என்று – இப்போதே செய்யத் தக்கது என்று; அனுமன் காட்டிய
தன்மை – அனுமன் நிரூபித்துக் காட்டிய தன்மை; கண்டால்
இராமற்கு அருமை என்- நோக்கினால் இராமனுக்கு செய்தற்கு
அரிய பொருள் எது? (ஒன்றுமில்லை); இருமையும் நோக்கின்-
இம்மை மறுமையை ஆராயின்; அறம் வெல்லும் பாவம் தோற்கும்
– அறம் வெல்லும் மறம் தோற்கும்; என்னா இராமன் பால்
எழுந்து சென்றார்- என்று கூறி இராமனிடத்து எழுந்து போனார்.

————–

ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர்
ஒன்று குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்,
வென்றியின் தலைவர்; கண்ட இராமன், ‘என் விளைந்தது?’ என்றான். 45-

ஒன்று அல பல என்று – ஒன்று அல்லாதன பல என்று கூறுமாறு;
உயர்பிணத்து குன்றுகள் பலவும் – உயர்ந்த பிணக் குன்றுகள்
பலவற்றையும்; சோரிக் குரைகடல் அனைத்தும் – ஒலிக்கும்
இரத்தக் கடல் அனைத்தும்; உம்பரோடும் தாவிச் சென்று,
அடைந்து – தேவர்களோடும் கடந்து சென்று சேர்ந்து; இராமன்
தன்னை திருவடி வணக்கம் செய்தார் – இராமனின் திருவடிகளை
வணங்கினார்கள்; வென்றியின் தலைவர்- வெற்றி கண்ட
தலைவர்கள்; கண்ட இராமன் – அவ்வாறு வணங்கக் கண்ட
இராமன்; விளைந்தது என் என்றான் – நடந்தது என்ன என்று கேட்டான்.

——-

இராமன் அனுமனைத் தழுவி ஆசி கூறுதல்

உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் ஊற,
சொற்றனன் சாம்பன், வீரன் அனுமனைத் தொடரப் புல்லி,
‘பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!’ என்றான். 46-

சாம்பன் உற்றது முழுதும் நோக்கி- (அது கேட்ட) சாம்பன்
நிகழ்ந்ததை முழுவதும் சிந்தித்து; ஒழிவு அற உணர்வுள் ஊறச்
சொற்றனன் – ஒன்று விடாமல் இராமனின் உணர்வில் பதியும்
வண்ணம் கூறினான்; வீரன் அனுமனைத் தொடரப்புல்லி –
வீரனாம் அனுமானை இராமன் நெருங்கத் தழுவி; பெரியோய்!
உன்னைப் பெற்றனன்- பெரியோனை! உன்னைப் பெற்று
விட்டேன்; என்னை பெறாதன் – இனிப் பெறாத பேறு என்ன
உளது? என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக
என்றான்- எக்காலத்தும் இடையறவு பட்டு முடியாத நீண்ட ஆயுளை
உடையவன் ஆகுக என வாழ்த்தினான்.

————-

இலக்குவனை இராமன் பாராட்டி உரைத்தல்

புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான்,
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி,
துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் போய், வந்த தொல்லைத்
தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். 47-

புயல் பொழி அருவிக் கண்ணன்- மேகம் போல் பொழியும்
கண்ணீர் அருவியை உடைய கண்களுடையவனும்; பொருமலன்
பொங்குகின்றான்- அழுது விம்முபவனும் மகிழ்ச்சி பொங்கும்
மனமுடையவனும்; உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன
உருவத்தம்பி – உயிர் பிரிந்து வெளியே நிற்க அதைப்
பிரிந்த உடம்பு போல வாடிய உருவமுடையவனும் ஆகிய தம்பி
இலக்குவன்; துயர் தமக்கு உதவி – தமக்குப் பிரிவாற்றாத்
துன்பம் கொடுத்து விட்டு; மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த
தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த – இறந்து மீண்டும் வராத
துறக்க உலகைப் பெற்றுயர்வுற்ற பழைய தயரதனை வரக்கண்டு
மகிழ்ந்தது போன்று; தம்முனைத் தொழுது சார்ந்தான்- தன்
அண்ணன் இராமனை வணங்கி வந்தடைந்தான்.

———–

இளவலைத் தழுவி, ‘ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற
அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வண்மைத்
துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால்,
அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே? 48-

இளவலை நோக்கி – தன்னைத் தொழுது வந்த தம்பியைப்
பார்த்து; ஐய! துளவு இயல் தொங்கலாய்!- ஐயனே!
துளவத்தால் கட்டிய மாலை அணிந்தவனே; இரவி தன் குலத்துக்கு
ஏற்ற அளவினம் – சூரிய குல இயல்புக்குத் தக்கபடி;
அடைந்தோர்க்கு ஆகி – தம்மை அடைக்கலமாக வந்தவர்க்கு
உதவுவோர் ஆகி; மன் உயிர் கொடுத்த வன்மை- நிலை பெற்ற
உயிர் கொடுக்கும் வலிய செயல்; அன்னது துணிந்தாய்
என்றால்- நீ அச்செயல் செய்யத் துணிந்தாய் என்றால்;
அளவியல் அன்று- அது நின் தகுதிக்கு மிகுதியான அளவினை
உடையதன்று; அடுப்பதே ஆகும் அன்றே – செய்தற்கு ஏற்ற
செயலே ஆகும் அல்லவா?

———-

புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள்
அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காண்கில்’ என்றான். 49-

ஐய! புறவு ஒன்றின் பொருட்டு – ஐயனே! தன்னிடம்
அடைக்கலம் புகுந்த புறாவிற்காக; இன்யாக்கை புண் உற
அரிந்த புத்தேள் அறவனும் – தன் இனிய உடம்பை புண்
உண்டாகத் தசை அரிந்தளித்த தெய்வத்தன்மையுள்ள அறவானாம்
சிபியும்; நின்னை நிகர்க்கிலன் – உனக்கு ஒப்பாக
மாட்டான்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே –
அதற்குப் பிறகு ஒழிந்த பிற செயல்களைக் கூறுவது என்ன பயன்?
பேர் அருளாளர் என்பார்- பெரிய அருளாளர் எனப்படுவோர்;
தமர்க்கு இடர் காணில் – தம்மைச் சார்ந்தவர்க்குத்
துன்பம் வரக் கண்டால்; கறவையும் கன்றும் ஒப்பார்
என்றான் – பசுவையும் கன்றையும் போல் விரைந்து சென்று
காப்பர் என்று கூறினான்.

—————-

இராமன் இளைப்பாறுதல்

சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி,
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல்
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான். 50-

சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்-
கவசம் முதலிய போர்க்கெனத் தாங்கிய பாரத்தை எல்லாம்;
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – நீல
நிறமுள்ள சூரியனைப் போல இராமன், இலக்குவன்
உடம்பிலிருந்து முறையாக நீக்கி; கோல் சொரி தனுவும் –
அம்புகளை எய்யும் வில்லையும்; கொற்ற அனுமன் கை
கொடுத்து- வெற்றிக்குரிய அனுமனின் கையில் கொடுத்துவிட்டு;
கொண்டல் மேல் நிறை குன்றம் ஒன்றில் – மேகங்கள்
நிறைந்த குன்றம் ஒன்றின்மேல்; மெய்ம்மெலிவு ஆற்றலுற்றான்
– இலக்குவன் உடல் மெலிவை ஆற்றச் செய்தான்.

———–

மிகைப் பாடல்கள்

அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, ‘அமரில்
துரக்க, மானுடர் தம்மை’ என்று, ஒருபுடை துரந்து,
வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி,
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான். 2-1

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading