ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/29–படைக் காட்சிப் படலம்–

பல இடங்களிலும் இருந்த அரக்கர் சேனை இலங்கை அடைதல்

அத் தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், ‘இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை; பணி என்?’ என்றார்.–1-

அத்தொழில் அவரும் செய்தார் – (இந்திரசித்தின் உடலைத்
தயிலத் தோணியில் இடும்) அத்தொழிலை அந்த ஏவலாளரும்
செய்தனர்; ஆயிடை அனைத்துத்திக்கும் பொத்திய- அப்போது
எல்லாத் திசைகளிலும் நிரம்பியுள்ள; நிருதர் தானை காணரிய போய
தூதர்- அரக்கர் சேனையைக் கொண்டு வரச் சென்ற
தூதர்கள்; ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர்- ஒரு சேர
நெருங்கி வந்து வணங்கினராய்; இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அடைந்த – (அரசே!) இலங்கையாகிய உனது ஊரில்
வரிசையாக வந்து அமைந்த; தானைக்கு இடம் இலை; பணி
என்?’ என்றார்- சேனைக்கு இடம் இல்லை; இனி, யாம்
செய்யத்தக்க பணி என்ன?’ என்று வினவினார்கள்.

—————-

ஏம்பலுற்று எழுந்த மன்னன், ‘எவ் வழி எய்திற்று?’ என்றான்;
கூம்பலுற்று உயர்ந்த கையர், ‘ஒரு வழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை’ என்றார்.–2-

ஏம்பலுற்று எழுந்த மன்னன் ‘எவ்வழி எய்திற்று?’ என்றான்
– மகிழ்ச்சியுற்று எழுந்த இராவணன் (அப்படை) எவ்விடத்து வந்துளது?
என வினவினான்; கூம்பலுற்று உயர்ந்த கையர் – குவிந்து உயர்ந்த
கையை உடையவர்களாகிய தூதுவர்கள்; ‘ஒருவழி கூறலாமோ?
வாம்புனல் பரவை எழும்- (அச்சேனை இன்ன இடத்தில் இருந்தது
என்று சுட்டி) ஓரிடத்தைச் சொல்லுதல் கூடுமோ? அலைகள் தாவிச்
செல்லுகின்ற கடல்கள் ஏழும்; இறுதியின் வளர்ந்தது என்னா – ஊழி
இறுதியில் பொங்கிப் பரந்தது என்னுமாறு; தாம் பொடித்து எழுந்த
தானைக்கு உலகு இடம் இல்லை’ என்றார் – தாமே கிளர்ந்து எழுந்த
சேனை தங்குவதற்கு உலகம் இடமுடையதாக இல்லை என்று கூறினார்கள்.

————–

மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக, மேல் மேல்,
கண்ணுற அருமை காணாக் கற்பத்தின் முடிவில் கார்போல்,
எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. –3-

மண் உற நடந்த தானை வளர்ந்த மாத்தூளி மண்ட-
பூமியில் பொருந்த நடந்த சேனையால் பெருகிய துகள் மிகுந்து எழுந்து
நெருங்குதலால்; விண்ணுற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக –
விண்ணிற் பொருந்த நடக்கின்ற தேவர்களும் (மண்ணில் நடப்பது
போல) அத்துகளின் செறிவை மிதித்து நடக்க; கற்பத்தின் முடிவில்
கார் போல் எண்ணுற அரிய சேனை – யுக முடிவில் எழும் மேகம்
போன்று, கணக்கிட முடியாத அந்த அரக்கர் சேனை; கண்ணுற
அருமை காணா – (தூளிப் பரப்பினால்) பார்த்தற்கு அருமையாகக்
காணப்பட்டு; இலங்கை நோக்கி மேல் மேல் எய்தியது- இலங்கா
புரியை நோக்கி மேலும் மேலும் சென்றடைந்தது.

————–

வாள்தனின் வயங்க மின்னா; மழை அதின் இருளமாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடிப்பொடு முழக்கமாட்டா;
மீட்டு இனி உவமை இல்லை, வேலை மீச் சென்ற என்னின்-
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல. -4-

வாள்தனின் வயங்கமின்னா மழை அதின் இருள மாட்டா-
அரக்க சேனை ஏந்திய வாட்களைப் போல மின்ன மாட்டாதனவான
மேகங்கள் அப்படைஞரைப் போல (கடுமையால்) இருண்டிருக்கமாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பொடு முழக்கமாட்டா-
(மேலும் அப்படை) நெருக்கமாக அடித்துச் செல்லுகின்ற முரசங்களின்
ஆரவாரத்தை ஒப்ப அம் மேகங்கள் இடியொடு முழங்கமாட்டா;
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும்- இங்ஙனமாக ஒளி
மிகுமாறு தீட்டப் பெற்ற ஆயுதங்களையும், குதிரைகள் யானைகள் மற்றும் தேர்களுமாக;
வேலை மீச்சென்ற என்னின் – அச்சேனை (நிலத்தில்
நடத்தற்கு இடமின்மையால்) கடலின் மீது எழுந்து நடந்து
சென்றது என்றால்; செல்ல மீட்டு இனி உவமை இல்லை –
(அங்ஙனம்) செல்லுகின்ற சேனைக்கு (மேகத்தைத் தவிர) வேறு
இனி உவமை கூற ஏதுமில்லை.

———–

உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற,
தொலைவு அருந் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற;
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின, நிமிர்ந்து; நின்றான்,
அலரியும், முந்து செல்லும் ஆறு நீத்து, அஞ்சி, அப்பால்.–5-

தொலைவு அருந்தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து
சுற்ற – அழிவு இல்லாத சேனை மேலும் மேலும் எழுந்து தொடர்ந்து
வந்து சூழ்ந்து நிற்க; உலகினுக்கு உலகு போய்ப் போய் ஒன்றின்
ஒன்று ஒதுங்கலுற்ற- உலகத்திற்கு உலகம் ஒதுங்கி சென்று
ஓருலகத்தில் மற்றோருலகம் மறைந்து ஒதுங்கத் தொடங்கின;
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின- நிலவுக்குத் தலைவனாகிய
சந்திரனும் விண்மீன்களும் (அஞ்சி அப்பால்) நீங்கின; அலரியும்,
முந்து செல்லும் ஆறு நீத்து- சூரியனும் முன் செல்லுகின்ற வழியை
விடுத்து; அஞ்சி அப்பால் நிமிர்ந்து நின்றான்- அச்சமுற்று அப்பால்
உயர்ந்து நின்றான்.

—————–

மேற்பட விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, விண்ட
நாற் பெரு வாயிலூடும், இலங்கை ஊர், நடக்கும் தானை,-
கார்க் கருங் கடலை, மற்றோர் இடத்திடை, காலன்தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன.–6-

மேற்பட விசும்பை முட்டி மேருவின் விளங்கி- மேலிடம்
பொருந்த ஆகாயத்தை முட்டி மேருவைப் போல ஒளிர்ந்து; விண்ட
நாற்பெரு வாயிலூடும்- திறந்த நான்கு பெரிய வாயில் வழியாக;
இலங்கை ஊர் நடக்கும் தானை- இலங்கை மாநகரை நோக்கி
நடக்கின்ற அச்சேனையானது; காலன்தானே கார்க் கருங்கடலை
– யமனே கரிய நிறம் வாய்ந்த பெரிய கடலை; உலகம் யாண்டும்
சுமை பொறாது என்ன – உலகம் எவ்விடத்தும் சுமை தாங்காது
என்ற காரணத்தால்; மற்றோர் இடத்திடை சேர்ப்பது போன்றது
– பிறிதோர் இடத்தில் சேர்ப்பதைப் போன்றிருந்தது.

————

நெருக்குடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்தனையே’ என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற – அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக் கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன.–7-

நெருக்குடை வாயிலூடு புகும் எனின் – நெருக்கத்தை உடைய
வாயிலின் வழியாக உள்ளே நுழைவோம் என்றால்; நெடிது காலம்
இருக்கும் அத்தனையோ என்னா – ‘நெடிதுகாலம் காத்துக்
கொண்டிருக்கும் அவ்வளவே; (உள்ளே புகல் அரிது)’ என்று கருதி
மதிலினுக்கு உம்பர் எய்தி- மதிலுக்கு மேல் ஏறிச் சென்று;
அண்டங்கள் அனைத்தின் உள்ள- எல்லா அண்டங்களிலுமுள்ள;
கருக்கிளர் மேகம் எல்லாம் – கருக்கொண்ட மேகங்கள்
எல்லாம்; ஒருங்குடன் கலந்தது என்ன அரக்கனது இலங்கை உற்ற
– ஒருசேர உடன் கலந்தது என்னுமாறு வந்த சேனைகள் அரக்கனாகிய
இராவணனுடைய இலங்கை நகரை அடைந்தன.

———–

இராவணன் கோபுரத்தை அடைந்து சேனைகளை நோக்குதல்

அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொதுவுற நோக்கலுற்றான், ஒரு நெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான், வேலை ஏழும்
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 8-

அதுபொழுது அரக்கர் கோனும் அணிகொள் கோபுரத்தின்
எய்தி- அப்பொழுது அரக்கர் தலைவனாகிய இராவணனும் அழகு
மிக்க கோபுரத்தின் மேலே ஏறி; பொதுவுற நோக்கலுற்றான்-
அச்சேனையைப் பொதுவகையால் நோக்கத் தொடங்கினவன்;
வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும்- ஏழு கடல்களையும்
விரைவாக ஒருங்கு காண (ஆவல் கொண்ட); பேதையின் காதல்
கொண்டான் – அறிவிலி போல ஆசை கொண்டவனாய்; ஒரு நெறி
போகப் போக விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் –
தன் பார்வையை ஒரு நெறியே செல்லுமாறு செலுத்தி விதிமுறைப்படி
தனித்தனியே காண்பேன் என்னும் விருப்பத்தை உடையவனானான்.

—————-

மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி,
ஓத நீர் செல்வது அன்ன தானையை, உணர்வு கூட்டி,
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்போல்,
தூதுவர் அணிகள்தோறும் வரன்முறை காட்டிச் சொல்வார்: 9-

மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை மேல்- ஒரு
திசையில் நின்று மற்றொரு திசைமேல்; ஓதநீர் மண்டிச்
செல்வது அன்ன தானையை – கடல்நீர் விரைந்து செல்வது
போன்று இலங்கை நோக்கிச் செல்லுகின்ற சேனையை; தூதுவர்
உணர்வு கூட்டி- தூதுவர்கள் (கேட்கின்றவனாகிய) இராவணனுடைய
அறிவு கூடும்படி; வேதவேதாந்தம் கூறும் பொருளினை
விரிக்கின்றார் போல்- வேதங்களும் வேதாந்தங்களும் கூறும்
பரம் பொருளின் இயல்பினை விரித்துக் கூறுவோர் போல,; அணிகள்
தோறும் வரன் முறை காட்டிச் சென்றார் – அணிகள் தோறும்
உள்ளவர்களை வரன் முறையாக விளக்கிக் காட்டிச் சென்றார்கள்.

————

‘சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்
மோகத்தின் பட முடித்தவர், மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர்’ என விரித்தார். 10-

சாகத் தீவினின் உறைபவர்- இவர் சாகத் தீவில்
வாழ்பவர்; தானவர் சமைத்த யாகத்தில் பிறந்து இயைந்தவர்
– அரக்கர்களை செய்த வேள்வியில் தோன்றி அமைந்தவர்;
தேவரை எல்லாம் மோகத்தின் படமுடித்தவர் – தேவர்களை
எல்லாம் மோகத்தில் விழுமாறு மாயை செய்து முடித்தவர்;
மாயையின் முதல்வர் – மாயை செய்வதில் முதன்மை பெற்றவர்;
மேகத்தைத் தொடும் மெய்யினர்- (வானில் இயங்கும்)
மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள உடம்பினை உடையவர்;
‘இவர்’ என விரித்தார் – இவர்கள் என ஓரணியைக் காட்டி
விரித்துக் கூறினர் தூதர்கள்.

சாகம் – தேக்கு. அம்மரங்கள் மிகுந்திருந்தமையால்
அத்தீவு சாகத்தீவு எனப்பட்டது என்பர். இதனைத் தேக்கத்
தீவு எனவும் கூறுவர். இது ஏழுதீவுகளுள் ஒன்றெனவும் கூறுவர்.
ஏனையவை நாவலந்தீவு. இறலித்தீவு, இலவந்தீவு,கிரவுஞ்சத்தீவு,
குசைத்தீவு, புட்கரத் தீவு என்பனவாம்.

————-

‘குசையின் தீவினின் உறைபவர், கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர், வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு, இவரால்;
விசையம்தாம் என நிற்பவர், இவர் – நெடு விறலோய்! 11-

நெடு விறலோய்! இவர் குசையின் தீவினின் உறைபவர் –
நீண்ட வெற்றியை உடையவனே! இவர்கள் குசைத்தீவில்
வாழ்பவர்கள்; கூற்றுக்கும் விதிக்கும் வசையும் வன்மையும்
வளர்ப்பவர் – யமனுக்கும் பிரமனுக்கும் பழியையும் வலிமையையும்
வளர்க்கின்றவர்; வானநாட்டு உறைவார் இசையும் செல்வமும்
இருக்கையும் இழந்தது, இங்கு இவரால்- வானுலகில் வாழ்கின்ற
தேவர்கள் தம் புகழையும் செல்வத்தையும் இருப்பிடத்தையும்
இழந்தது இங்குள்ள இவராலேயாம்; விசையம் தாம் என நிற்பவர்
– வெற்றி என்றால் அதற்குப் பொருள் தாமே என்னுமாறு வெற்றியே
பெற்று நிற்கும் இயல்பினர் ஆவார்.

குசை – தருப்பைப்புல். அது நிறைந்திருந்தமை பற்றி
அத்தீவு குசைத்தீவு எனப் பெயர் பெற்றது.

—————

‘இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்;
உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12-

இவர்கள் இலவத்தீவினில் உறைபவர்- இவர்கள், இலவத்
தீவினில் வாழ்பவர்கள்; இமையாப் புலவர்க்கு இந்திரன்-
இமையா நாட்டமுடைய தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது;
பொன்னகர் அழிதரப் பண்டு பொருதார் – பொன்மயமான
அமராவதி நகரம் அழிவெய்துமாறு முன்பு போர் செய்தவர்கள்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார் –
பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் வைத்த சிவபிரான் வரம்
தந்தமையால் மேன்மை பெற்றவர்கள்; உலவைக் காட்டுஉறு தீஎன
வெகுளி பெற்றுடையார்- உலர்ந்த மரங்கள் நெருங்கிய
காட்டில் பற்றிய தீப்போல் பெருங்கோபம் கொண்டவர்கள்.

————–

‘அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக்
குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்
சென்று, ‘இத் தன்மையைத் தவிரும்’ என்று இரந்திடத் தீர்ந்தோர். 13-

இவர் அன்றில் தீவினின் உறைபவர்- இவர்கள் அன்றில்
தீவில் வாழ்பவர்கள்; அமரர்க்கு என்றைக்கும் இருந்து
உறைவிடம் என்றிட- தேவர்கட்கு எக்காலத்தும் இருந்து
வாழ்கின்ற இடம் இது என்று பிறர் கூறிய அளவில்; மேருக்குன்றைக்
கொண்டு போய் பண்டைக் குரைகடல் இட-
அம்மேருமலையினைப் பெயர்த்துக் கொண்டு போய்ப்
பண்டைக்காலத்தில் ஒலிக்கின்ற கடலில் இட முயலாநிற்க;
அறக்குலைந்தோர் சென்று- மிகவும் நிலை குலைந்தவர்களாகிய
அத்தேவர்கள் சென்று; இத்தன்மையைத் தவிரும் என்று
இரந்திடத் தீர்ந்தோர்- ‘இந்தச் செயலைக் கைவிடுங்கள்’ என்று
இரந்து கேட்டுக்கொள்ள அச்செயலை விடுத்த வீரமுடையவர்கள்.

அன்றில் தீவு – அன்றில் பறவைகள் நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர்.

————

‘பவளக் குன்றினின் உறைபவர்; வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் கூட,
அவளின் தோன்றினர், ஐ-இரு கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சில நாள். 14-

பவளக் குன்றினின் உறைபவர் – (இவர்கள்) பவளக்
குன்றினில் வாழ்பவர்கள்; வெள்ளி பண்பு அழிந்து ஓர்
குவளைக் கண்ணி – சுக்கிரன் குணங்கெட்டு (க்காமுகனாகி) ஒரு
குவளை மலர் போன்ற கண்களை உடையவளான; இராக்கதக்
கன்னியை அங்கு கூட- அரக்கர் குலக்கன்னிகையை
அவ்விடத்துப் புணர; அவளின் தோன்றினர் ஐ- இரு கோடியர்
– அவளிடத்துத் தோன்றியவர் பத்துக்கோடி என்னும்
தொகையினராவர்; திவளப் பாற்கடல் வறள்பட நொய்தின்
சிலநாள் தேக்கினர் – வெண்ணிறமுடைய பாற்கடல் வற்றுமாறு
எளிதாக சில நாட்களில் பருகினவர்கள்.

———-

‘கந்தமாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப் பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி; அதில் வாழ்வோர்,
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் – இறைவ! 15-

இறைவ! இந்த வாள் எயிற்று அரக்கர்- அரசே! இந்த வாள்
போன்ற கோரைப் பல்லினை உடைய அரக்கர்கள்; இக்கருங்கடற்கு
அப்பால் மந்த மாருதம் ஊர்வது- இந்தக் கரிய கடலுக்கு
அப்புறத்தே தென்றல் தவழ்கின்ற; கந்த மாதனம் என்பது ஓர் கிரி
அதில் வாழ்வோர் – கந்த மாதனம் என்பதோர் மலை, அம்மலையில்
வாழ்பவராவார்; அந்த காலத்து அவ்ஆல காலத்துடன் பிறந்தோர்
எண்ணிறந்தவர் – (பாற்கடல் கடையப் பெற்ற) அந்தக் காலத்து
ஆலகாலத்தோடு உடன் பிறந்தவர் என்று சொல்லத் தக்கவர்
எண்ணிக்கை இல்லாதவர்.

————-

‘மலயம் என்பது பொதிய மாமலை; அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்;
“குலையும் இவ் உலகு” எனக் கொண்டு, நான்முகன் கூறி,
“உலைவிலீர்! இதில் உறையும்” என்று இரந்திட, உறைந்தார். 16-

மலையம் என்பது பொதியமாமலை – மலையம் என்பது
பொதிய மாமலையாகும்; அதில் மறவோர் நிலையம் அன்னது
சாகரத் தீவிடை நிற்கும் – அதில் பிறந்த வீரராகிய இவர்
இருப்பிடம் கடலில் உள்ள தீவில் இருக்கின்றது; ‘இவ்உலகு குலையும்’
எனக் கொண்டு – (இவர்கள் இங்கிருந்தால்) இந்த உலகமே அழியும்’
என்று நினைந்து; உலைவிலீர்! இதில் உறையும் என்று நான்முகன் கூறி
இரந்திட உறைந்தார் – ‘அழிவில்லாதவர்களே! இதில் தங்கி இருங்கள்’
என்று கூறிப் பிரமன் இரந்து வேண்டியதனால் அத்தீவில் தங்கி
இருந்தனர்.

————-

‘முக்கரக் கையர்; மூ இலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்;
நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் – புகழோய்! 17-

புகழோய்! முக்கரக் கையர் மூஇலை வேலினர் – புகழினோய்
(இவர்கள்) மூன்று கைகளை உடையவர்கள் (அவற்றில்) மூன்று
இலைகளை உடைய வேலினை உடையவர்கள்; முசுண்டி சக்கரத்தினர்;
சாபத்தர்; இந்திரன் தலைவர்- முசுண்டி என்னும் ஆயுதத்துடன்
சக்கரத்தை உடையவர்கள், வில்லை ஏந்தியவர்கள், இந்திரனுக்கும்
மேலான தகுதி உடையவர்கள்; நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும்
நாதர்- முதலைகள் வாழுகின்ற ஏழு கடல்களுக்கும் இறைமை
பூண்டவர்கள்; புக்கரப் பெருந்தீவிடை உறைபவர்- (இத்தகைய
சிறப்பினரான இவர்கள்) புட்கரம் என்னும் பெரும் தீவிடை
வாழ்பவராவர்.

———-

‘மறலியை, பண்டு, தம் பெருந் தாய் சொல, வலியால்,
புற நிலைப் பெருஞ் சக்கர மால் வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந் தீவிடை உறைபவர் – இவர்கள். 18-

இவர்கள் இறலி அப்பெருந் தீவிடை உறைபவர்- இவர்கள்
இறலி என்கின்ற அந்தப் பெரிய தீவில் வாழ்பவர்கள்; பண்டு
பெருந்தாய் சொல தம் வலியால் மறலியை- முன்பு (தம்)
பெருமையுடைய தாய் சொல்லத்தமது வலிமையினால் எமனை;
புறநிலைப் பெருஞ்சக்கர மால்வரைப் பொருப்பின்-
(ஏழுலகங்கட்கும்) புறத்தே நிலைத்துள்ள பெரிய சக்கரவாளம்
என்கின்ற பெரிய மலையில்; விறல் கெடச் சிறையிட்டு அயன்
இரந்திட விட்டோர்- அவனுடைய வலிமை கெட வென்று
சிறைவைத்துப் பின்பு பிரமன் இரந்து வேண்டியதால் அவனை
விடுத்தவர்கள்;

——————

‘வேதாளக் கரத்து இவர், “பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு; எழு வகையாய் நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர்” என, நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால், இவண் நடந்தார். 19-

நாதா! வேதாளக் கரத்து இவர்- தலைவனே! வேதாளத்தின்
கையைப் போன்ற கையை உடைய இவர்கள்; நான்முகன் ‘பண்டு
உம் தமக்கு புவியிடம் விரிவு போதாது – நான்முகனாகிய
பிரமன் முற்காலத்து, ”உமக்கு இந்நிலவுலகத்தின் பரப்பு விரிவு
போதாது ஆதலால்; எழுவகையாய் நின்ற புவனம் பாதாளத்து
உறைவீர் எனப் பணிப்ப- ஏழு வகையாக நின்ற புவனங்களில்
பாதாளத்தில் தங்குவீர்களாக” எனக் கட்டளை இட; புக்கு இருந்து,
உனக்கு அன்பினால் இவன் நடந்தார்- அங்கு சென்று
வாழ்ந்திருந்து உன்பால் கொண்ட அன்பால் இங்கு வந்தவர்களாவர்.

————-

‘நிருதி தன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்;
“பருதி தேவர்கட்கு” எனத் தக்க பண்பினர்; பானக்
குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்தவர்; ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார். 20-

இருள் நிறத்தவர் நிருதி தன்குலப் புதல்வர்- இருள்
போன்ற நிறத்தினை உடைய இவர் நிருதி என்னும்
திசைக்காவலனது குலப் புதல்வர்கள்; நின் குலத்துக்கு
நேர்வர்- (தகுதிகளில்) நின் குலத்துக்கு ஒப்பானவர்கள்;
”தேவர்கட்குப் பருதி” எனத் தக்க பண்பினர்-
‘தேவர்கட்குச் சூரியன்’ என்னத் தக்க பண்புடையவர்கள்;
பானக் குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பர்-
பருகுவதற்கு உரிய உதிரம் பெறாமற் போவாரே ஆயின் ஏழு
கடல்களையும் பருகிவிடக் கூடியவர்; ஒருத்தர் ஏழ்
லையையும் எடுப்பர்- ஒருவரே ஏழு மலைகளையும் எடுக்கத்
தக்க மிடுக்குடையவர்.

———-

‘பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால்
பார்த்த காரணத்தினின், ஆதியின் பயந்த
பைங் கழலோர்; பூரணத் தடந் திசைதொறும்
இந்திரன் புலரா வாரணத்தினை நிறுத்தியே, சூடினர் வாகை. 21-

பார் அணைத்த வெம் பன்றியை- பூமிதேவி, தன்னை
அணைத்தெடுத்த வராக மூர்த்தியை; அன்பினால் பார்த்த
காரணத்தின்- அன்பினால் பார்த்த காரணத்தினால்; ஆதியின்
பயந்த பைங்கழலோர் – திருமாலாற் பெறப்பட்ட பசிய
பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை உடையவர்கள்; பூரணத்
தடந்திசை தொறும்- முழுமையான பெருந்திசைகள் தோறும்;
புலராவாரணத்தினை நிறுத்தியே இந்திரன் வாகை சூடினர்
– மதம் வற்றாத தம்முடைய யானைகளை (வென்றதற்கு
அடையாளமாக) நிறுத்தி இந்திரனை வென்ற வெற்றி மாலையைச்
சூடினர்.

————-

‘மறக் கண் வெஞ் சின மலை என இந் நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர்;
அறக் கண் துஞ்சிலன், ஆயிரம் பணந் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க. 22-

மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர்- கொடுங்
கண்ணையும் கடும் சினத்தையும் உடைய மலை போல இங்கு நின்ற
வீரர்கள்; இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர்
– (தன்னினும்) இறக்கமுடைய கீழிடம் இல்லாத, பாதலத்தில் வாழ்கின்ற
வலிமையுடையோராவர்; ஆயிரம் பணந்தலை அனந்தன் அறக்கண்
துஞ்சிலன் – ஆயிரம் படத்தோடு கூடிய தலைகளை உடைய
ஆதிசேடன் முழுவதும் கண் துஞ்சாமல்; உறக்கம் தீர்ந்தனன்.
உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க – உறக்கம் நீங்கினவனாய்த்
தங்கி இருப்பது இவ்வீரர் அவனைத் தொடர்ந்து வருத்துதலாலேயாம்.

———–

‘காளியைப் பண்டு கண்ணுதல் காட்டியகாலை,
மூள முற்றிய சினக் கொடுந் தீயிடை முளைத்தோர்,
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர்; -பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும் வருவார். 23-

பெருங்குழுவாய் வாள் இமைக்கவும், வாள் எயிறு
இமைக்கவும் வருவார் – பெருங் கூட்டமாக, வாள் ஒளி வீசவும்,
வாள் போன்ற பற்கள் ஒளி வீசவும் வருகின்றவர்களாகிய இவர்கள்;
கண்ணுதல் பண்டு காளியைக் காட்டிய காலை –
நெற்றிக்கண்ணை உடைய இவன் முற்காலத்தில் காளியை வெல்ல
ஊர்த்துவ தாண்டவம் செய்து காட்டிய காலத்தில்; மூள முற்றிய
சினக்கடுந் தீயிடை முளைத்தோர்- (அந்தக் காளியின்) மூளுமாறு முதிர்ந்த
சினமாகிய கடுமையான நெருப்பில் தோன்றியவர்கள்; கூளிகட்கு
நல்உடன் பிறந்தார் – பேய்கட்கு நல்ல உடன்பிறப்புப்
போன்றவர்கள்.

————

‘பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை எனத் தெறு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;-
சாலம் தோன்றிட, வட திசைமேல் வந்து சார்வார். 24-

சாவம் தோன்றிட வட திசை மேல் வந்து சார்வார்- வில்
கையில் தோன்றிட வடதிசைமேல் வந்து தோன்றுகின்ற இவர்கள்;
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்- பாவம்
தோன்றிய காலத்திலே தோன்றிய பழையவர்; தீவம் தோன்றிய
துணை முழை எனத் தறு கண்ணார் – விளக்கு மிளிர்கின்ற இரண்டு
குகைகளென்று சொல்லுமாறு (தோன்றி) பயம் விளைக்கின்ற விழிகளுடன்
கூடியவர்கள்; கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும்
கொடியோர்- கோபம் வந்தால் தாயையும் உயிர் உண்கின்ற
கொடியவர்கள் ஆவர்.

————-

‘சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்,
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை, கொடுமைக்கு
ஏற்றம் ஆக, பண்டு உதித்துளோர் என்பவர், இவரால். 25-

இவர் சீற்றம் ஆகிய ஐம்முகன்- இவர்கள், சீற்றம்
மிக்கவனாகிய ஐந்து முகங்களை உடைய சிவன்; உலகு எலாம்
தீப்பான் ஏற்றமாநுதல் விழியிடைத் தோன்றினர்- உலகம்
முழுவதையும் எரிக்கும்படி கொண்டுள்ள பெரிய நெற்றிக்
கண்ணில் பிறந்தவர்கள்; உவர், ஐம்பாலுடைக் கூற்றம் ஆகிய
கொம்பின்- அதோ அங்கிருப்பவர் கூந்தலைக் கொண்ட யமன்
என்று கூறத்தக்க ஓர் பெண்ணின், கொடுமைக்கு ஊற்றம் ஆகி,
பண்டு உதித்தனர் என்பவர்- கொடுமைக்கு ஊன்றுகோலாக
முற்காலத்தில் தோன்றியவர் எனப்படுவார்.

—————

‘காலன் மார்பிடைச் சிவன் கழல் பட, பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந் நின்ற தொகையார்,
ஆலகாலத்தின், அமிழ்தின், முன் பிறந்த போர் அரக்கர். 26-

சூலம் ஏந்தி முன் நின்றவர் – சூலம் ஏந்திக்கொண்டு
நம்முன் நின்ற இவர்; காலன் மார்பிடைச் சிவன் கழல் பட
– எமனுடைய மார்பில் சிவனது திருவடி படுதலால்; பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – முன்பு
அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தில் தோன்றிய வீரர்
ஆவார். இந்நின்ற தொகையார் ஆலகாலத்தின் அமிழ்தின்
முன் பிறந்தபோர் அரக்கர் – இங்கு நின்ற குழுவினர்
ஆலகாலத்தில் அமிழ்திற்கு முன்னாகப் பிறந்த போர்த்திறன்
மிக்க அரக்கராவார்.

———–

‘வடவைத் தீயினில், வாசுகி கான்ற மாக்
கடுவை இட, அத் தீயிடை எழுந்தவர், இவர்; கண மழையைத்
தடவ, தீ என நிமிர்ந்த குஞ்சியர், உவர், தனித் தேர்
கடவ, தீந்த வெம் புரத்திடைத் தோன்றிய கழலோர். 27-

இவர் வாசுகி கான்ற மாக்கடுவை- இவர்கள் (பாற்கடல்
கடைந்தபொழுது) வாசுகி என்னும் அரவம் கக்கிய கொடிய
நஞ்சினை; வடவைத் தீயினை இட, அத்தீயிடை எழுந்தவர்-
வடவா முகாக்கினியில் இட அத்தீயிடத்துத் தோன்றியவர்; இவர்
இன மழையைத் தடவ தீநிகர் குஞ்சியர்- இவர்கள்
தொகுதியான மேகத்தைத் தடவா நிற்கும் தீப்போலும் சிவந்த
குஞ்சியை உடையவராய்ப் பருத்துள்ளவர்கள்; உவர், தனித்தேர்
கடவ, தீந்த வெம்புரத்திடைத் தோன்றிய கழலோர்- அதோ
நிற்கின்ற அவர்கள் (பிரமனால் செலுத்தப் பெற்ற) ஒப்பற்ற தேரினை
செலுத்தியதினால் வெந்த முப்புரங்களினிடையில் தோன்றிய
கழலணிந்த வீரர்களாவர்.

————

‘இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் – ஐய! –
நினையவும், குறித்து உரைக்கவும், அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 28-

ஐய! இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் –
ஐயனே! இவர் இத்தன்மையர் என்று தனித்தனியே சொல்லுதற்குரிய
சிறிய அளவினர் அல்லர்; நினையவும், குறித்து உரைக்கவும்
அரிது – இவர்கள் தன்மை நினைப்பதற்கும், குறித்துச்
சொல்லுதற்கும் அரிது; இவர் நிறைந்த வினையமும் பெரு
வரங்களும் தவங்களும் விளம்பின் – இவர் தம் நிறைந்த
வஞ்சகங்களும், பெற்ற வரங்களும் அவ்வரங்களைப் பெற இவர்
செய்த தவங்களும் சொல்லத் தொடங்கின்; அனைய பேருகம் ஆயிரத்து அளவினும் அடங்கா-
அத்தன்மையான பெரிய ஊழிகள் ஆயிரத்தினும் அடங்காவாம்.

———–

‘ஒருவரே சென்று, அவ் உறு திறல் குரங்கையும்,
உரவோர் இருவர் என்றவர் தம்மையும், ஒரு கையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்? – வானவர்க்கு அரிய
நிருப!’ என்றனர், தூதுவர், இராவணன் நிகழ்த்தும்: 29-

வானவர்க்கு அரிய திருவ ! – தேவர்கட்கும் பெறுதற்கரிய
பெருஞ்செல்வத்தைப் பெற்றவனே! ஒருவரே சென்று அவ் உறு
திறல் குரங்கையும்- இப்படையில் உள்ள ஒருவரே சென்று அந்த
மிக்க திறமையுடைய குரங்கையும்; உரவோர் இருவர் என்றவர்
தம்மையும் – வலியவர் இருவர் என்ற இராம இலக்குவர்
தம்மையும்; ஒரு கையோடு ஏற்றி வருவர்- ஒரு கையினால்
தாக்கி அழித்து வருவர்; மற்று இனிப் பகர்வது என்? என்றனர்,
தூதுவர். இராவணன் செப்பும்- வேறு இனிச் சொல்லுவதற்கு
என்ன இருக்கிறது? என்று தூதுவர் சொல்லக் கேட்ட இராவணன்
சொல்லுவான்.

————–

சேனையின் அளவை இராவணன் வினாவ, தூதுவர் விடை பகர்ந்து, அகல்தல்

‘எத் திறத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத் திறத்தினை அறைதிர்’ என்று உரைசெய, அவர்கள்,
‘ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது’ என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு ‘எண் சிறிது’ என்றனர், பெயர்ந்தார். 30-

இதற்கு எண் எத்திறத்து எனத்தொகை வகுத்து இயன்ற-
இப்படைக்கு எண்ணிக்கை எனைத்து என்று தொகையை வகுத்துப்
பொருந்திய; அத்திறத்தினை அறைதிர்’ என்று உரை செய- அந்த வகையினைக் கூறுங்கள்’ என்று இராவணன் கேட்க;
அவர்கள், ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது’ என
உரைத்தார் பித்தர் – அத்தூதுவர்கள் ஒத்த அளவினை உடைய
வெள்ளம் ஓராயிரம் உளது’ எனக் கூறினார்கள், அவர் பித்தராவார்;
இப்படைக்கு ‘எண் சிறிது’ என்றனர், பெயர்ந்தார்-
இப்படையின் அளவிற்கு ‘அந்த எண் சிறிது’ என்று கூறினராய்ச்
சென்றார்கள்.

———

படைத்தலைவரை அழைத்து வருமாறு இராவணன் பணித்தல்

‘படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால் –
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி,
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், அமைவுற்று,
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற’ என்று உரைத்தான். 31-

நான் கிடைத்து அவர்க்கு உற்றுள பொருள் எலாம்
கிளத்தி – (இராவணன் தூதுவரை நோக்கி) நான் அவர்களை
நெருங்கி இருந்து இங்கு நிகழ்ந்துள்ள செய்திகள் எல்லாவற்றையும்
விளக்கி; அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய்,
அமைவுற்று – (என மனத்தே) பொருந்திய நல்ல இனிய
சொற்களைச் சொல்லி அளவளாவி மனம் நிறைவுற்று; உடைத்த
பூசனை வரன் முறை இயற்ற படைப்பெருங்குலத் தலைவரை
– அவர்களுக்கு உரித்தான பூசனையை வரன் முறையாகச் செய்யப்
படையிலுள்ள பெருஞ் சிறப்புடைய தலைவர்களை; கொணருதிர்,
என்பால் என்று உரைத்தான்- என்னிடம் கொணர்வீர்களாக
என்று சொன்னான்.

———-

தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. 32-

தூதர் கூறிட ஓத வேலையின் நாயகர் எவரும்- தூதுவர்
இராவணன் ஆணையைக் கூறவும் பெருக்கெடுத்த கடல்போற் பரந்த
சேனைத் தலைவர் எல்லோரும்; திசைதொறும் திசைதொறும்
தொடர்ந்தார் வந்து உற்றார்- திக்குகளிலெல்லாமிருந்து
அணி வகுத்து வந்தவராய்; இராவணன் பொலன்தாள் போது
தூவினர் – இராவணனுடைய அழகிய பாதங்களில் மலர்
தூவினவராய்; மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட
வணங்கினர் – மகுடத்தோடு மகுடம் மோதுவதால் உளதாய பெரிய
ஒலிவானை முட்டுமாறு ஒருவர்க்கு ஒருவர் முற்பட்டு வணங்கினர்.

————-

வணங்கிய வீரரின் நலனை இராவணன் உசாவுதல்

அனையர் யாவரும் அருகு சென்று, அடி முறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை;
‘நினையும் நல் வரவு ஆக, நும் வரவு!’ என நிரம்பி,
‘மனையும் மக்களும் வலியரே?’ என்றனன், மறவோன். 33-

அனையர் யாவரும் அருகு சென்று அடிமுறை வணங்கி-
(அவ்வாறு) அப்படைத்தலைவர் யாவரும் இராவணன் அருகிற் சென்று
அவனடிகளை முறையாக வணங்கி; வினையம் மேவினர் இனிதின்
அங்கு இருந்தது ஓர் வேலை- பணிவு பொருந்தினவராய் இனிதாக
அங்கு இருந்தபோது; மறவோன், நும் வரவு நினையும் நல்வரவு
ஆக! என நிரம்பி- பெருவீரனாகிய இராவணன் (அவர்களை நோக்கி)
நும் வரவு யான் நினைக்கின்றபடி நல்வரவு ஆவதாக! என்று
வரவேற்புச் செய்து முடித்து; ‘மனையும் மக்களும் வலியரே?’
என்றனன் – ‘நும் மனைவியும் மக்களும் மெலிவின்றி வலியராக
இருக்கின்றனரோ’ என நலம் உசாவினான்.
வினையம் – பணிவு. நினையும் நல்வரவாவது – இராம இலக்குவரை
வென்றழித்தலாம். வலியரே? என்றது நலமாக உள்ளனரோ? என
வினவியவாறாம்.

————

‘பெரிய திண் புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு?’ என்றனர், அவன் கருத்து அறிவார். 34-

அவன் கருத்து அறிவார்- அவ்விராவணனது கருத்தை
அறியும் நோக்கத்தினராய் (படைத்தலைவர் இராவணனை நோக்கி);
பெரிய திண்புயன் நீ உளை தவ வரம் பெரிதால்- பெரிய
வலிமையான தோள்களை உடைய தலைவன் நீ இருக்கின்றாய்;
யாங்கள் தவத்தினால் பெற்றுள்ள வரமும் மிகப்பெரிது; உரிய
வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ- நமக்கு
உரியனவாய் வேண்டியுள்ள காரியங்களை யெல்லாம் முடிப்பதற்கு
அரிதோ? தேவரை இரியல் கண்டனம் பகை பிறிது இல்லை-
தேவரைத் தோற்றோடச் செய்து விட்டோம்; வேறு பகையும்
இல்லை; அரியது என் எமக்கு என்றனர் – எமக்குச்
செய்தற்கரியது என் உளது என்றனர்.

———–

சேனைத் தலைவரின் வினாவும், இராவணன் தன் நிலைமையை விளக்குதலும்

‘மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள்’ என, அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான். 35-

நின் மருங்கு இருந்தார் மாதரார்களும் மைந்தரும்-
நின்பக்கத்து இருந்தவர்களாகிய பெண்டிர் பிள்ளைகளில்;
பேது உறாதவர் இல்லை நீ பெரிதும் வருந்தினை-
கலக்கமுறாதவர்கள் இல்லை நீ பெரிதும் வருந்திக்
கொண்டிருக்கின்றாய்; யாது காரணம்? அருள்” என
அனையவர் இசைத்தார்- யாது காரணம்? அருள் செய்க’
என அப்படைத் தலைவர் வினவினார்; சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – (இராவணன்)
சீதை மேல் வைத்த காதலால் உண்டான தன்மைகள்
எல்லாவற்றையும் அவர்கட்குத் தெரிவித்தான்.

———

சேனைத் தலைவர்கள் பகையை எள்ளி நகையாடுதல்

‘கும்பகன்னனோடு இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ் சினத்து அரக்கர்தம் குழுவையும், வென்றார்
அம்பினால், சிறு மனிதரே! நன்று, நம் ஆற்றல்!
நம்ப! சேனையும் வானரமே!’ என நக்கார். 36-

நம்ப- நமது தலைவனே! கும்பகர்ணனோடு இந்திரசித்தையும்;
குலத்தின் வெம்புவெஞ் சினத்து அரக்கர் தம் குழுவையும்-
நம் குலத்தில் பிறந்த மனம் வெதும்புகின்ற கொடிய
கோபத்தையுடைய அரக்கர் தம் கூட்டத்தையும்; அம்பினால்
வென்றார் சிறு மனிதரே! சேனையும் வானரமே!- அம்பினால்
வென்றவர்கள் சிறிய மனிதர்களா? அவர் சேனையும் குரங்கா?
நம் ஆற்றல் நன்று! என நக்கார் – நமது வலிமை நன்று! என்று
படைத்தலைவர்கள் சிரித்தனர்.

———–

உலகைச் சேடன் தன் உச்சி நின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரொடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது;
மலரோடு இலைகள் கோதும் அக் குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை?’ 37-

எம்மை அழைத்தது – (நீ) எம்மை இங்கு வரவழைத்தது; உலகைச்
சேடன்தன் உச்சி நின்று எடுக்க அன்று- உலகத்தை ஆதிசேடனது
உச்சியினின்றும் எடுப்பதற்கு அன்று; ஓர் ஏழ் மலையை வேரொடும்
வாங்க அன்று – ஒப்பற்ற ஏழு குலமலை மகளை வேரோடும் பறிக்க
அன்று; அங்கையால் வாரி அலைகொள் வேலையைக் குடிக்க
அன்று – உள்ளங்கையால் அள்ளி அலைகளைக் கொண்ட கடலைக்
குடிக்கவும் அன்று; மலரோடு இலைகள் கோதும் அக்குரங்கின்
மேல் ஏவக்கொல்?- மலர்களோடு இலைகளைக் கோதித்தின்னுகின்ற அந்தச் சிறிய குரங்கின் மேல்
ஏவுதற்குத்தானோ?

————–

என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன்,
‘அன்ன மானுடர் ஆர்? வலி யாவது?’ என்று அறைந்தான். 38-

என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு- என்று
கூறிக் கைதட்டி இடிக்கின்ற இடியேறு போலச் சிரித்த; மின்னும்
வாள் எயிற்று அரக்கரை அம்கையால் விலக்கி – மின்னுகின்ற
வெள்ளிய பல்லினையுடைய அரக்கர்களை (அவ்வாறு சிரிக்காமல்
இருக்கும்படி) தன் அகங்கையால் அமைத்து, விலக்கி விட்டு;
புட்கரத்தீவுக்கு மன்னன் வன்னி என்பவன் – புட்கரம்
என்னும் தீவினுக்கு அரசனாகிய வன்னி என்பவன்; அன்ன
மானுடர் ஆர்? வலி யாது? என்று அறைந்தான் – அந்த
மனிதர்கள் யார்? அவரது வலிமை எத்தகையது? என்று
(இராவணனை நோக்கிக்) கேட்டான்.

—————

மாலியவான் பகைவரின் வலிமையை எடுத்து உரைத்தல்

மற்று அ(வ்)வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து,
‘உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால்’ என்றனன், கிளத்துவான் துணிந்தான்: 39-

மற்று அவ்வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – (வன்னி
கூறிய) அச்சொல்லைக் கேட்டவுடனே மாலியவான் முன்வந்து;
உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும் – இது காறும் நடந்துள்ள
வற்றின் தன்மையையும், மனிதர்களின் வலிமையையும்; உடன்
ஆம் கொற்ற வானரத் தலைவர் தம் தகைமையும் –
அம்மனிதரோடு வந்துள்ள வெற்றி பொருந்திய வானரத் தலைவர்
தம் பெருமையையும்; கூறக்கிற்றும் கேட்டிரால் என்றனன்
கிளத்துவான் துணிந்தான்- சொல்லும் வல்லமையுடையேம்,
கேட்பீர்களாக என்று சொல்லத் துணிந்தான்.

————-

‘பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்;
கரிய மால் வரை நிகர் கர தூடணர், கதிர் வேல்
திரிசிரா, அவர் திரைக் கடல் அன பெருஞ் சேனை,
ஒரு விலால், ஒரு நாழிகைப் பொழுதினின், உலந்தார். 40-

ஒருவிலால் பரிய தோளுடை விராதன், மாரீசனும்
பட்டார்- (இராமனுடைய) ஒரே வில்லினால் பருத்த
தோள்களையுடைய விராதனும், மாரீசனும் இறந்து பட்டார்கள்;
கரிய மால்வரை நிகர் கரதுடணர், கதிர்வேல் திரிசிரா
– கரிய பெரிய மலையை ஒத்தவரான கரனும், தூடணனும், ஒளி
பொருந்திய வேற்படையை உடைய திரிசிராவும்; அவர்
திரைக்கடல் அன பெருஞ்சேனை – அவர்களுடைய
அலைகடல் போன்ற பெருஞ்சேனையும்; ஒரு நாழிகைப்
பொழுதினின் உலந்தார் – ஒரு நாழிகைப் பொழுதினில்
அழிந்துபட்டார்கள்.

————-

‘ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை, இந் நாள்,
பாழி மார்பு அகம் பிய்த்து, உயிர் குடித்தது, ஓர் பகழி. 41-

ஆழி அன்னநீர் கடல் அனைத்தையும் ஊழிக்கால் எனக் –
கடலைப்போன்று பரவியுள்ள நீங்கள், கடல்கள் எல்லாவற்றையும்
ஊழிக்காற்று போல விரைந்து; கடப்பவன் வாலி என்போனை
அறிதிர் அன்றே? – கடந்து செல்பவனாகிய வாலி என்பவனை
அறிவீரன்றோ? எழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை – ஏழு
குல மலைகளையும் எடுக்கவல்ல மிடுக்கினை உடைய அவ்வாலியை;
இந்நாள் ஓர் பகழி பாழி மார்பு அகம் பிளந்தது உயிர்
குடித்தது – இந்நாளில் இராமனுடைய ஓர் அம்பு வலிமை மிக்க
மார்பகத்தைப் பிளந்து உயிரைக் குடித்தது.

————–

‘இங்கு வந்து நீர் வினாயது என்? எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ?
கங்கைசூடிதன் கடுஞ் சிலை ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 42-

நீர் இங்கு வந்து வினாயது என்- நீர் (இரு மனிதரின்
ஆற்றலைப்பற்றி) இங்கு வந்து வினவியது என்? எறி திரைப்
பரவை அங்கு வெந்திலதோ?- இராமனுடைய அக்கினிக்கணையால்
அலை வீசுங்கடல் அங்கு வேகவில்லையோ? சிறிதும் அறிந்ததும்
இலிரோ?- அது இராமனால் நிகழ்ந்தது என்பதைச் சிறிதும்
அறிந்ததும் இல்லீரோ? கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த
அக்காலம் – கங்கையைச் சடையில் கொண்டுள்ள சிவனது
கடுமையான வில்லை (இராமன் சீதையை மணக்கும் பொருட்டு)
ஒடித்த அக்காலத்து; முழங்கு ஓதை உங்கள் வான் செவி
புகுந்திலதோ?- (அவ்வில் ஒடிந்ததாலாய) முழங்கும்
பேரொலியானது உங்களது சிறந்த செவியில் புகுந்திலதோ?

————

‘ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு, இலங்கையின் அளவில்,
தீயின் வெய்ய போர் அரக்கர் தம் சேனை; அச் சேனை
போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்,
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 43-

இலங்கையின் அளவில் தீயின் வெய்யபோர் அரக்கர்
தம் சேனை – இலங்கையின் எல்லையில் நெருப்பினும்
கொடியவர்களாய்ப் போராற்றும் அரக்கர் தம் சேனை; ஆயிரம்
பெரு வெள்ளம் உண்டு அச்சேனை போயது – ஆயிரம்
பெருவெள்ளம் உண்டு அச்சேனை அழிந்துபோயது; அந்தகன்
புரம்புக நிறைந்தது போலாம் – எமபுரத்தில் அது நிறைந்தது
போலும்! ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்தவில்
இரண்டால்- (இவ்வளவும் செய்தவை) முந்நூல் பொருந்திய
மார்பினர் ஆகிய இராம இலக்குவர் எய்த வில் இரண்டே ஆம்.

————-

‘கொற்ற வெஞ் சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;
இற்றை நாள் வரை, யானும் மற்று இவனுமே இருந்தோம். 44-

கொற்றை வெஞ்சிலைக் கும்பகன்னனும்- வெற்றியே
பெறுதற்குரிய கொடிய வில்லையேந்திய கும்பகன்னனும்; நுங்கள்
கோமான் பெற்ற மைந்தரும் – நும் அரசனாகிய இராவணன்
பெற்ற மைந்தரும்; பிரகத்தன் முதலிய பிறரும்- பிரகத்தன்
முதலிய பிறரும்; மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார்
– மற்றைய வீரர்களும், இந்திரசித்தோடு மடிந்தார்கள்; இற்றை
நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தேம்- இன்று
வரையில் யானும் இந்த இராவணனுமே மடியாதிருந்தோம்.

————-

‘மூலத் தானை என்று உண்டு; அது மும்மை நூறு அமைந்த
கூலச் சேனையின் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கை நீர் வந்துளீர்; இனி, தக்க கழலோர்
சீலச் செய்கையும், கவிப் பெருஞ் சேனையும், தெரிக்கில், 45-

மூலத்தானை என்று உண்டு- மூலபலப்படை என்ற ஒன்று
உண்டு; அது மும்மை நூறு அமைந்த கூலச்சேனையின்
வெள்ளம் – அது மூன்று நூறாக அமைந்த திரண்ட சேனையாகிய
வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த காலச்செய்கை நீர்
வந்துளீர்- அப்படைக்கு இன்று போர் செய்யுமாறு குறிக்கப்பெற்ற
காலத்தின் செயலால் (அதற்கு உதவியாக) நீவிர் வந்திருக்கின்றீர்கள்;
இனி, தக்க கழலோர் சீலச் செய்கையும் – இனித்தகுதி அமைந்த
கழல் களை அணிந்த வானரப் படைத்தலைவரின் ஒழுங்கமைந்த
செய்கையையும்; கவிப்பெருஞ்சேனையும் தெரிக்கில்- மிகுந்த
குரங்குப்படையின் தன்மையையும் கூற வேண்டின்.

—————-

‘ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி,
திருகு வெஞ் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, – அரக்கியர் புலம்ப,
கருது சேனையும் கொன்று, மாக் கடலையும் கடந்து. 46-

ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி- ஒரு
குரங்கு வந்து இலங்கையைக் கலங்குதற்குக் காரணமான தீயை மூட்டி;
திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து-
மாறுபட்ட சினத்தினை உடைய அக்க குமாரனையும் நிலத்தோடு
தேய்த்துக் கொன்று; பொருது, தூதுரைத்து அரக்கியர் புலம்ப –
போர் செய்து, தூது சொல்லி அரக்கியர் புலம்புமாறு; கருது
சேனையாம் கடலையும் கடலையும் கடந்து ஏகியது –
மதிக்கத்தக்க, சேனையாகிய கடலையும், பெரிய கடலையும்
கடந்து சென்றது.

————–

‘கண்டிலீர்கொலாம், கடலினை மலை கொண்டு கட்டி,
மண்டு போர் செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவுக்கு அப்புறம் குதித்து. 47-

மண்டு போர் செய, கடலினை மலை கொண்டு கட்டி-
நெருங்கிப் போர் செய்யும் பொருட்டு கடலினை மலை கொண்டு
அடைத்துக் கட்டி; வானரர் இயற்றிய மார்க்கம் கண்டிலீர்
கொலாம்- (நீவிர் இகழ்ந்து கூறிய) குரங்குகள் ஏற்படுத்திய
சேதுவாகிய வழியினைக் கண்டிலீரோ? ஓர் எழுபது வெள்ளம்
உண்டு – பகைவரிடம் (இந்த வல்லமையுள்ள குரங்குகள்
கொண்ட) ஓர் எழுபது வெள்ளம் சேனை உளது; மேருவுக்கு
அப்புறம் குதித்து மருந்து ஒரு நொடியில் கொண்டு வந்தது-
(அப்படையில் ஒரு குரங்கு) மேரு மலைக்கு அப்புறத்தே குதித்து
ஒரு நொடிப் பொழுதில் (உயிரைத் தருகின்ற) மருந்தினைக்
கொண்டு வந்தது.

மார்க்கம் – வழி. இங்கு சேதுவைக் குறித்தது

————

‘இது இயற்கை; ஓர் சீதை என்று இருந் தவத்து இயைந்தாள்,
பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது; அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லினென்’ என்று, உரை முடித்தான். 48-

இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து இயைந்தாள்
– இது பகைவர் தம் சேனையின் இயல்பு; ஒப்பற்ற சீதை என்று மிக்க
தவத்துடன் கூடியவளான; பொது இயற்கை தீர் கற்புடைப்
பத்தினி பொருட்டால் – பொது இயற்கையொழிந்த (பிறர் எவர்க்கும்
இல்லாது தனக்கே சிறப்பாக அமைந்த) கற்பினை உடைய ஒரு
பத்தினியை முன்னிட்டு; விதி விளைத்தது; அவ்வில்லியர் வெல்க,
நீர் வெல்க- விதியே (இத்தகு பகையை) விளைவித்தது. அந்த
வில்லாளர்களே வெற்றி பெறுக (அன்றி) நீர் வெற்றி பெறுக;
முதுமொழிப்பதம் சொல்லினென் என்று உரை முடித்தான்
– முதுவோர் மொழிதற்குரிய சொல்லைச் சொன்னேன் என்று
மாலியவான் தன் உரையை முடித்துக் கொண்டான்.

———–

இத்தனை நாள் போர் செய்யாத காரணத்தை வன்னி வினவ, இராவணன் ‘இழிவு நோக்கிக் குரங்குடன் பொருதிலேன்’ எனல்

வன்னி, மன்னனை நோக்கி, ‘நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாதிருந்தது?’ என்று, இசைத்தான்;
‘புன்மை நோக்கினென்; நாணினால் பொருதிலேன்’ என்றான்;
‘அன்னதேல், இனி அமையும் எம் கடமை அஃது’ என்றான். 49-

வன்னி, மன்னனை நோக்கி, இவர் எலாம் மடிய- வன்னி,
இராவணனை நோக்கி ‘இவரெலாம் மடிந்து போகவும்; நீ இகல்
செயாதிருந்தது என்ன காரணம்? என்று இசைத்தான் – நீ போர்
செய்யாதிருத்தற்கு என்ன காரணம்? என்று வினவினான்; புன்மை
நோக்கினன்; நாணினால் பொருதிலேன்’ என்றான்- (மனிதரையும்
குரங்குகளையும் எதிர்த்துப் போர் செய்தலாகிய) இழிவை நோக்கி,
வெட்கத்தால் போர் செய்யவில்லை’ என்று இராவணன் (அதற்குக்)
கூறினான்; ‘அன்னதேல், இனி எம் கடமை அஃது அமையும்’
என்றான்-அவ்வாறாயின் அவரோடு போர் செய்வது எம் கடமையாக
அமையும் என வன்னி கூறினான்.

—————-

‘பொருதலே தக்கது’ என வன்னி மொழிதல்

‘மூது உணர்ந்த இம் முது மகன் கூறிய முயற்சி
சீதை என்பவள் தனை விட்டு, அம் மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது; இனிச் செயல் அழிவால்,
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும்? 50-

மூது உணர்ந்த இம்முதுமகன் கூறிய முயற்சி – பழையனவற்றை
உணர்ந்த இம்முதியவன் மாலியவான் கூறிய முயற்சிப்பயன்; சீதை
என்பவன் தனைவிட்டு அம்மனிதரைச் சேர்தல் – சீதை
என்பவளைச் சிறையிலிருந்து விடுத்து அம்மனிதரைச் சேர்வது
என்பதாகும்; ஆதியின் தலை செயத்தக்கது- அது, முன்னமே
தொடக்கத்தில் செய்யத்தக்க செயல் ஆகும்; காதல் இந்திரசித்தையும்
மாய்வித்தல் கண்டும், இனிச் செயல் அழிவால் – அன்பிற்குரிய
இந்திரசித்தினையும் பகைவர் கொல்லக்கண்டும் இனி அவ்வாறு செய்வது
நமது புகழுக்கு இழிவாகும்.

—————

‘விட்டம் ஆயினும் மாதினை, வெஞ் சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலெம்; பெறுவது பழியால்;
முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் செயும் கடமை’ 51-

மாதினை விட்டம் ஆயினும் வெஞ்சமம் விரும்பி- சீதையை
விட்டு விட்டோம் எனினும், கொடிய போரை விரும்பிச் சென்று;
பட்ட வீரரைப் பெறுகிலம், பெறுவது பழியால் – இறந்துபட்ட
வீரர்களைத் திரும்பப் பெறமாட்டோம், அது மட்டுமின்றிப்
பெறப்போவது பழியேயாகும்; முட்டி, மற்றவர் குலத்தொடு
முடிக்குவது அல்லால் – பகைவரைத் தாக்கி, அவர்களை முற்றும்
அழித்து முடிப்பதே அல்லால்; அத்தொழில் கட்டம்; இனிச்
செயும் கடமை செருத்தொழில்- சமாதானத் தொழில் வருத்தம்
தருவதாகும், இனிச் செய்யத்தக்க கடமை போர்த் தொழிலை
மேற்கொள்வதே.

———–

பகைவரை வெல்ல, அரக்கர் விடை பெற்று எழுதல்

என்று, எழுந்தனர் இராக்கதர், ‘இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும்’ என்று உரைத்தனர், போனார். 52-

என்று, எழுந்தனர் இராக்கதர் நீ இருக்க யாமே சென்று-
என்று சொல்லிப் படைத் தலைவராகிய இராக்கதர்கள்
எழுந்தவர்களாய் (இராவணனை நோக்கி) நீ இங்கு இருப்பாயாக
யாங்களே சென்று; மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி
வென்று மீளுதும் – அப்பகைவரின் சிறிய உடலில் உள்ள
இரத்தத்தைக் குடித்து வென்று மீளுவோம்; வெள்குதுமேல்,
மிடல் இல்லாப் புன்தொழில் குலம் ஆதும்’- அவர்களுக்கு
நாணிப் பின்வாங்குவோமாயின் வலிமை இல்லாத சிறுதொழில்
செய்யும் குலத்தவர் ஆவோம்’ என்று உரைத்தனர் போனார்-
என்று கூறியவர்களாய்ப் போயினர்.

———-

மிகைப் பாடல்கள்

தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை வெள்ளம். 2-1

மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் – திண் திறலோய்! 22-1

சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்து ஐஞ்-
ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்;
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர். 25-1

சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூல பாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு விறலால்
கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் துரந்தோர். 27-1

ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடு போர்
மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் மனத்தோர்,
‘காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் காலாள்,
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி’ என்று உரைப்பார். 30-1

அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து உலகில்,
துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் –
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? 43-1

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading