உணவுகொணர்ந்து, பாசறையில் சேர்த்த வீடணன் களங்கண்டு மயங்கி
வீழ்தல்
8703.
போயினள் தையல்; இப்பால், ‘புரிக’ எனப் புலவர் கோமான்
ஏயின கருமம் நோக்கி, எய்திய இலங்கை வேந்தன்,
மேயின உணவு கொண்டு, மீண்டு, அவை உறையுள் விட்ட
ஆயின ஆக்கி, தான் வந்து, அமர்ப் பெருங் களத்தன்
ஆனான்.–1-
தையல்போயினள் – சீதை அசோகவனத்திற்குப் போய்ச்
சேர்ந்தாள்; இப்பால், ‘புரிக’ என – இங்கே, இராமபிரான்
‘செய்க’ என; புலவர் காமான் ஏயின கருமம் நோக்கி எய்திய –
தேவர்தலைவனாகிய இராமபிரான் தன்னை நோக்கி ஏவிய பணியைச்
செய்யக்கருதிச் சென்ற; இலங்கை வேந்தன் – வீடணன்; மேயின
உணவு கொண்டு மீண்டு – பொருந்திய உணவுப் பொருள்களைக்
கொண்டு திரும்பி; அவை உறையுள்விட்ட ஆயின ஆக்கி –
அவற்றைப் பாசறையுள் சேர்த்துவிட்டு; தான் வந்து, அமர்ப்பெருங்
களத்தன் ஆனான் – தான் பெரும் போர்க்களத்திற்கு வந்து
சேர்ந்தான்.
———–
8704.
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க
நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு
தீர்ந்தான்.–2-
பண்டு இவ்வுலகினைப் படைக்கநோற்றான்-(போர்க்களம் போந்த
வீடணன்) ஆதியில் இவ்வுலகங்களையெல்லாம் படைக்கும்
பேறுபெற்றவனாகிய பிரமதேவனுடைய; வாக்கினால் மாண்டார்
என்ன – சாபச்சொல்லால் இறந்து பட்டனர் என்னும்படியாக;
வானரவீரர் முற்றும் தாக்கினார் – வானரவீரர் அனைவரும்
(பிரம்மாத்திரத்தால்) தாக்கப்பெற்றவராய்; எல்லாம் பட்ட தன்மையை
நோக்கினான் கண்டான் – எல்லோரும் இறந்துபட்ட தன்மையைத்தன்
கண்களால் கண்டான்; விடத்தைத்தானே தேக்கினான் என்ன –
(கண்டு) நஞ்சினைத் தானே அருந்தினான் என்னுமாறு; நின்று,
தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – நின்று மயங்கியவனாய் உணர்வு
நீங்கினான்.
————–
8705.
விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்;
மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான், ‘ஆவி உண்டு, இலை’
என்ன, ஓய்ந்தான்;
வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங் கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில்
கண்டான்.-3-
விளைந்தவாறு உணர்கிலாதான் – (பிரம்மாத்திரத்தால்) நிகழ்ந்ததை
உணரமுடியாத வீடணன்; ஏங்கினான். வெதும்பினான மெய் உளைந்து
உளைந்து உயிர்த்தான் – ஏக்கங்கொண்டு, மனம் வெதும்பி உடம்பு
வருந்தி வருந்தி பெருமூச்சுவிட்டு; ‘ஆவிஉண்டு, இலை’ என
ஓய்ந்தான் – ‘உயிர் உண்டோ,’ இல்லையோ’ என்னும் படி
ஓய்வுற்றவனாய்; வளைந்த பேய்க்கணமும் நாயும் நரிகளும் இரிய –
(பின்புசற்று தேறி) பிணங்களைச் சூழ்ந்து கொண்டிருந்த பேய்க்
கணமும் நாய்க்கூட்டமும், நரிக்கூட்டமும் அஞ்சி ஓடுமாறு; வந்தான் –
(பிணங்களுக்கிடையே) நடந்துவந்து; இளங்கிளையோடும் சாய்ந்த
இராமனை இடையில் கண்டான் – இளையவனாகிய இலக்குவனோடும்
தரையில் சாய்ந்து கிடக்கும் இராமனை இடையே பார்த்தான்.
————
வீடணன், இராமன் மேனியில் வடு இன்மை கண்டு துயரம் தணிதல்
8706.
‘என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள்
எல்லாம்,
பின்பு என்ப அல்ல; என்றும் தம்முடை நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும்
தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும்
அறிந்ததுஅன்றே.–4-
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள
்எல்லாம்- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடியைந்த) உயிர்
என்பதும் ஆகிய இவையெல்லாம்; பின்பு என்ப அல்ல முன்பு –
(அன்பினை நோக்கப்) பிற்பட்டது என்பதல்லாமல், (அவ்வன்பு
விளங்கித் தோன்றுவதற்கேதுவாக, அதன்) முன்பே தோன்றி இயைந்து
நிற்பனவாகி; என்றும் தம்முடை நிலையின் பேரா – எக்காலத்தும்
(அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே
தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுத லின்றி நிற்கின்றன; என்றும் உளதென்றாலும் – இப்படிப்பட்ட
தொடர்பு (உடலுயிர் ஆகியன அன்பு தோன்றி விளங்குதற்குக்
காரணமாய் முன்தோன்றுவதும், பின்பு, அன்பு அவை மாட்டுத்
தோன்றி விளங்குவது மாகிய தொடர்பு) என்றும் உள்ள தென்றாலும்;
முழுவதும் தெரிந்தவாற்றால் – முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தால்;
அன்பு என்பது ஒன்றின் தன்மை – அன்பு என்பதாகிய ஒன்றனுடைய
(உடலுயிர் ஆகியவற்றைத் தளிர்ப்பச் செய்தலும்,
சிதைப்பச்செய்தலுமாகிய) இருவேறுபட்ட தன்மையினை; அமரரும்
அறிந்ததன்றே – தேவர்களும் அறிந்தவர் களல்லவே?
—————-
8707.
‘ஆயினும், இவருக்கு இல்லை அழிவு’ எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலால், தெரிய நோக்கி.
‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ என நடுக்கம் தீர்ந்தான்.–5-
ஆயினும் ‘இவருக்கில்லை அழிவு’ எனும் அதனால் – (வீடணன்
அத்தகைய) பேரன்புடையவனாயினும், “இவ்விராம இலக்குவர்க்கு
அழிவு இல்லை” என்கின்ற உறுதியான நம்பிக்கை இருந்தமையால்;
ஆவிபோயினது இல்லை – அவன் ஆருயிர் பிரியவில்லை; வாயால்
புலம்பலன் பொருமி பொங்கி – வாயால் பல சொல்லிப் புலம்பவும்
இல்லை, உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு துன்பம் கிளரப் பெற்று;
தீயினும் எரியும் நெஞ்சன் – நெருப்பினும் மிக்குக் கொதித்து எரிகின்ற
நெஞ்சினிடம் மிக்குத்தோன்றும் அச்சத்தால்; தெரியநோக்கி –
அவர்களுடைய வீ்ழ்ந்து கிடக்கின்ற உடலங்களைத் தெளிவாகப்
பார்த்துவிட்டு; ‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ – ‘தலைவனாகிய
இராமன் மேனிக்கு (அம்பினாலாய) வடு ஏற்படவில்லை’; என நடுக்கம்
தீர்ந்தான் – என அறிந்து மனநடுக்கம் நீங்கப் பெற்றவனானான்.
————
வீடணன் துயர்தீர்க்கும் வழி ஆராய்தல்
8708.
அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின்
நோக்கி,
சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம்
தேர்வான்.–6-
அந்தணன் படையால் வந்தது என்பதும் – (இராமலக்குவர்
முதலானோர் அடைந்த இத்துன்பம்) பிரம்மாத்திரத்தால் ஏற்பட்டது
என்பதனையும்; ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும் –
ஆற்றல்மிக்க இந்திரசித்தே அதனை எய்தவன் என்பதனையும்; இளவற்காக நொந்தனன் இராமன் என்னும்
நுண்மையும் – இலக்குவனுக்காக இராமன் வருந்தி
மூச்சற்றுக்கிடக்கின்றான் என்னும் நுட்பத்தையும்; நொய்தின் நோக்கிச்
சிந்தையின் எண்ணி, எண்ணி – விரைவில் அறிந்து கொண்டு
(இதனைத் தீர்த்தற்காம் உபாயம் பலவற்றையும்) சிந்தையினால்
எண்ணி எண்ணி; தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – இத்துயர்
தீர்வதற்குரிய உபாயம் ஒன்றனை ஆராய்வானானான்.
———–
8709.
‘உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென்
அன்றே;
வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்ளனோ வென்றான்?’ என்றான், மழை எனக் கலுழும்
கண்ணான்.–7-
உள்ளுறு துன்பம் ஊன்ற – “உள்ளத்தில் உற்ற பெருந்துயரம்
பதிந்துள்ளமையினால்; உற்றனன் உறக்கம் அன்றோ – இராமன்
மூர்ச்சை உற்றான் அன்றோ?; தெள்ளிதின் உணர்ந்த பின்னை –
தெளிவாக (அப்பிரான்) உணர்வு நிலைக்கு வந்த பின்னால்; சிந்தனை
தெரிவென் அன்றே – (அவ்விராமனுடைய) சிந்தனை (எத்தகையதாக
இருக்கும் என்பதனை) அறிவேன் அன்றோ! வள்ளலோ, தம்பிமாள
வாழ்கிலன் – வள்ளல் தன்மையுடைய இராமனோ தம்பி இறந்தபின்
தான் வாழமாட்டான் (இதுவே மூர்ச்சை தெளிந்தபின் அவனது
முடிவாக இருக்கும்); மாய வாழ்க்கைக் கள்ளனோ வென்றான் –
(அங்ஙனமாயின்) மாயத் தன்மையை உடைய கள்வனாகிய
இந்திரசித்தோ வெற்றி பெற்றவனாவான்?” என்றான் மழையெனக்
கலுழும் கண்ணான் – எனத் தனக்குள் கூறிக் கொண்டவனாகிய
வீடணன் (பெருந்துன்பமுற்று) மழைபோல் நீர்சொரியுங் கண்களை
உடையவனானான்.
————–
8710.
‘பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும்
இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை;
வீசும் போர்க் களத்து வீ்ழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ?’ என்று உளம் நிலையில்
நின்றான்.–8-
பாசம் போய் இற்றாற் போல – (முன்னம் இந்திரசித்து விடுத்த)
நாகபாசம் அழிந்து போனதுபோல; பதுமத்தோன்படையும் இன்னே
நாசம் போய் எய்தும் – பிரமதேவனுடைய கணையும் இப்பொழுதே
நாசமடையும்; நம்பிதம்பிக்கு நடுக்கம் இல்லை – இராமபிரானுடைய
தம்பிக்கும் அழிவில்லை; வீசும் போர்க்களத்து வீழ்ந்த சேனையும்
மீளும் – (படைக்கலங்கள்) எறியப்படும் போர்க்களத்திலே
வீழ்ந்துபட்ட சேனைகளும் உயிர்பெற்றெழும்; வெய்ய நீசன் போர்
வெல்வதுண்டோ – கொடியவனான அரக்கன் போரில்
வெற்றிபெறுவதுண்டாமோ? என்று உளம் நிலையில் நின்றான்- என்று
(எண்ணிய) வீடணன் மனம் தடுமாறாமல் ஒருநிலையில் நிற்கப்
பெற்றான்.
————-
இறவாதார் இருப்பரோ?’ என வீடணன் தேடுதல்
8711.
‘உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர்எனின் துருவித்
தேடிக்
கொணர்குவென், விரைவின்’ என்னா, கொள்ளி ஒன்று
அம்கைக் கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின்
போனான்.–9-
உணர்வதன் முன்னம் – “இராமன் உணர்வு வந்து எழுவதற்கு முன்;
இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த துணைவர்கள் – இப்பொழுது
துன்பம் உற்றபோது உதவுவதற்குரிய துணைவர்கள்; துஞ்சல் இல்லார்
உளர் எனின் – இறவாதவர்கள் உளராயின்; ‘துருவித் தேடிக்
கொணர்குவென் விரைவின்’ என்னா – ஆராய்ந்து தேடி
அழைத்துக்கொண்டு விரைவில் வருவேன்” என்று; கொள்ளி ஒன்று
அம்கைக் கொண்டான் – கொள்ளிக்கட்டை ஒன்றை கையிலே
கொண்டவனாகி; உதிரப் புணரியின் வெள்ளத்து -இரத்தக் கடற்பெருக்கிலே; ஒரு தனி விரைவிற்போனான் –
தன்னந்தனியனாய் விரைந்து போனான்.
————
வீடணன் அனுமனைக் காணல்
8712.
வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச்
செங்கண்
தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட
ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான்,
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக்
கண்டான்.-10-
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி – தன்வாயை மடித்துக்
கொண்டும், இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டும்; வயிரச்
செங்கண் தீ உக – பகைமை உணர்ச்சி கொண்ட சிவந்த
விழிகளிலிருந்து நெருப்புப் பொறி சிதற; கனகக்குன்றின் திரண்ட
தோள்மழையைத் தீண்ட – மேருமலையை ஒத்த திரண்ட புயம்
மேகமண்டலத்தைச் சென்றுதொட; ஆயிர கோடி யானைப் பெரும்
பிணத்து அமளி மேலான் – ஆயிரங்கோடி யானைகளின் மிக்க
பிணங்களாகிய படுக்கைமேல் கிடப்பவனாகிய; காய்சினத்து அனுமன்
என்னும் கடல் கடந்தானைக் கண்டான் – கொல்லுங்
கோபத்தையுடைய அனுமன் என்கின்ற கடல் கடந்த வீரனைக்
கண்டான்.
————
8713.
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார,
‘உண்டு உயிர்’ என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று
ஆக,
விண்டு உதிர் புண்ணின்நின்று மெல்லென விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச்
செய்தான்.–11-
கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார – (அங்ஙனம்
வீடணன் அனுமனை) கண்ணுற்று, (அவன் நிலையினை உணர்ந்து)
தனது விழிகளின் வழியாக மழை போன்று (கண்ணீர்ப்) பெருக் கெழுதலால்;
‘உயிர்உண்டு’ என்பது உன்னி – (இவனுக்கு) உயிர்
உள்ளது என்று அனுமானித்து; உடல் விண்டு உதிர் புண்ணின் நின்று
– உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகா நின்ற புண்களிலிருந்து; கணை
ஒன்று ஒன்று ஆக மெல்லென விரைவின் வாங்கி – அம்புகளை
ஒவ்வொன்றாக மென்மையாகவும், விரைவாகவும் எடுத்து; கொண்டல்
நீர் கொணர்ந்து கோலமுகத்தினைக் குளிரச் செய்தான் –
மேகத்தினின்றும் தண்ணீரைக் கொண்டுவந்து (அவ்வனுமனுடைய)
அழகிய முகத்தைக் குளிருமாறு செய்தான்.
————–
உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல்
8714.
உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப
ஊறி
வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப்
பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக,
அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர்
ஆர்த்தார்.–12
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப-சுவாசம்
முன்னே வந்தபின்பு மயிர்க்கூச்செறிய; ஊறிவியர்ப்பு உளதாக கண்கள்
விழித்தன – வியர்வை நீர் ஊறி வியர்வை உண்டாகக் கண்கள்
திறக்கப்பெற்றன; மேனிமெல்லப் பெயர்த்து வாய்புனல் வந்து ஊற –
உடல்மெல்ல அசைய வாயில் நீர் வந்து ஊறிட; விக்கலும் பிறந்த தாக
– விக்கலும் எழுந்ததாக; அயர்த்திலன் ‘இராம நாமம்’ வாழ்த்தினன்-
(அந்த நிலையிலும்) மறவாதவனாய் இராமநாமம் கூறி வாழ்த்தினான்;
அமரர் ஆர்த்தார் – அதுகண்டு தேவர்கள் ஆரவாரித்தனர்.
—————-
8715.
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர,
தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, ‘தக்கோய்!
வழுஇலன் அன்றே, வள்ளல்?’ என்றனன்; ‘வலியன்’
என்றான்;
தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும்
தூயான்.–13-
அழுகையோடு உவகை உற்ற வீடணன் – அழுகையோடு
மகிழ்ச்சியும் அடைந்த வீடணன்; ஆர்வம் கூர, தழுவினன் அவனை
– ஆர்வம் பொங்க அவ்வனுமனைத் தழுவிக்கொண்டான்; தானும்
அன்பொடு தழுவி – அனுமன் தானும் வீடணனை அன்போடு தழுவி;
‘தக்கோய்! வழு இலன் அன்றே வள்ளல்?’ என்றனன் –
‘தகுதியுடையோனே! வள்ளலாகிய இராமன் தீங்கில்லாது உளன்
அன்றே?’ என்று வினவினான்; ‘வலியன்’ என்றான் – (வீடணனும்)
‘வழுவின்றி வலியனாக உளன்’ என விடை கூறினான்; உலகம்
மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயோன் தொழுதனன் –
(அதுகேட்டு மகிழ்ச்சிப் பெருக்கால்) மூவுலகத்தோரும்
தலைமேற்கொண்டு போற்றத்தக்க தூய்மை உடைய அனுமன்
இராமனைத் தொழுதனன்.
————
இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல்
8716.
அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன்,
துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வுஇனித் தொடர்ந்த
பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!’ என்றலோடும்,
‘தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்?’
என்றான். –14-
தன் தம்பி மேல் அன்பு ஆத்து அறிவினை மயக்க- ‘தன் தம்பி
மேல் கொண்ட அன்பு தனது அறிவினை மயக்கியதால்; ஐயன்
துன்பொடு துயிலன் ஆனான் – இராமன் துன்பத்தோடு கலந்த
துயிலுடையவனாக (மூர்ச்சித்தவனாக) ஆனான்; இனி உணர்வு
தொடர்ந்த பின்னே – இனி அவனுக்கு உணர்வு வந்தபின்; என்புகுந்து
எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – என்ன நடக்கும்
என்பதனை அறியேன்’ என்று வீடணன் கூறியவுடன்; தன்
பெருந்தகைமைக்கு ஒத்த சாம்பன் எத்தலையன் என்றான் –
(அனுமன் வீடணனை நோக்கி) தன் பெருந்தகைமைக்கு ஒத்த
(மூப்பினை உடைய) சாம்பன் எவ்விடத்து உள்ளான்!’ என்று
வினவினான்.
———-
8717.
‘அறிந்திலென் அவனை; யாண்டும் கண்டிலென்; “ஆவி
யாக்கை
பிறந்திலன், உளன்” என்று ஒன்றும் தெரிந்திலென்,
பெயர்ந்தேன்’ என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல்,
‘இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி’ என்றான்.-15-
யாண்டும் கண்டிலென் அவனை அறிந்திலென் – அச்சாம்பனை
எவ்விடத்தும் கண்டிலேன், ஆதலால் அவனைப் பற்றி ஒன்றும்
அறிந்திலேன்; ‘ஆவி யாக்கை பிறிந்திலன்; உளன்’ என்று ஒன்றும்
தெரிந்திலென் பெயர்ந்தேன் – உயிர் உடம்பினின்றும் நீங்கப்
பெற்றானோ அன்றி உயிரோடு உளனோ என ஒன்றும்
தெரியாதவனாய் வந்துள்ளேன்; என்று செறிந்ததார் நிருதர் வேந்தன்
உரைசெய – என் நெருங்கிய மலர்மாலையை அணிந்த அரக்கர்
வேந்தனாகிய வீடணன் கூற! காலின் செம்மல், ‘இறும்திறம்
அவனுக்கு இல்லை,’நாடுதும், ஏகி,’ என்றான் – காற்றின்
மகனான அனுமன், ‘இறக்கும் தன்மை அவனுக்கு இல்லை. ஆதலால்,
நாம் சென்று அவனைத் தேடுவோம்’ என்று கூறினான்.
————
8718.
‘அன்னவன்தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு
எல்லாம்
மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்’
என்னலும், ‘உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்’ என்றான்;
சில் நெறி இருளில் சென்றார்; சாம்பனை விதியில்
சேர்ந்தார்.-16-
அரக்கர்க்கு எல்லாம் மன்னவா!-“அரக்கர்க்கு எல்லாம் அரசனே!;
அன்னவன் தன்னைக் கண்டால் – அந்த சாம்பனைக் கண்டால்;
ஈண்டு நம்மை வாழ்விக்கும் உபாயம் வல்லன் – இப்பொழுது நம்மை
வாழ்விக்கும் உபாயங் கூறுதலில் வல்லவன் அவனே; ஆணையே
என்னலும் – இது உறுதியே” என்று (அனுமன்) கூறியதும்; ‘ஐய!
உய்ந்தோம் ஏகுதும் விரைவின்’ என்றான் – (வீடணன்) ஐய,
வாழ்ந்தோம் விரைவாகச் செல்லுவோம் என்றான்; சில்நெறி இருளில்
சென்றார் – (இருவரும்) சிறிது தொலைவு இருளில் சென்றார்கள்;
சாம்பனை விதியில் சேர்ந்தார் – சாம்பனை ஆகூழ் கூட்டுவிக்கச்
சென்று சேர்ந்தனர்.
—————
8719.
எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும்,
அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும்
தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன்எனினும், வீரர்
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால்-வயிரத்
தோளான்.-17-
எரிகின்ற மூப்பினாலும் – வருத்தத்திற்குக் காரணமான
கிழத்தன்மையாலும்; ஏவுண்ட நோவினாலும் – அம்புகள்
தைத்ததனாலான துன்பத்தாலும்; அரிகின்ற துன்பத்தாலும் –
(நண்பர்களெல்லாம் இறந்துபட்டனரே என எண்ணுவதால்)
நெஞ்சம் புண்ணாகும் நெடுந்துயராலும்; ஆர் உயிர்ப்பு அடங்கி –
அருமையான மூச்சு அடங்கப் பெற்று; ஒன்றும் தெரிகின்றது இல்லா –
ஒன்றும் தெரியவியலாத; மம்மர்ச் சிந்தையன் எனினும் – மயக்கம்
மிக்க மனத்தான் என்றாலும்; வயிரத் தோளான் – வயிரம் போன்ற
தோள்களை உடைய சாம்பவன்; வீரர் வருகின்ற சுவட்டை
செவிகளால் ஓர்ந்தான் – வீரர் இருவர் வருகின்ற அடையாளத்தைக்
(காலடி ஓசையைக்) காதுகளால் ஓர்ந்து அறிந்தான்.
———
8720.
‘அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ?
அனுமன்தானோ?
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ?
வரக் கடவார்கள், அல்லர்; மாற்றலர், மலைந்து போனார்;
புரக்க உள்ளாரே!’ என்னாக் கருதினன், பொருமல்
தீர்ந்தான்.-18-
அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன
தானோ?-வீடணனோ அல்லது என்னை ஆட்கொண்ட இராமனோ?
அல்லது அனுமன்தானோ?; இரக்கம் உற்று அருள வந்த தேவரோ
முனிவரேயோ? – இரக்கங்கொண்டு (இத்துன்பத்தை நீ்க்கி) அருள்
செய்ய வந்த தேவரோ? முனிவர்களோ?; மாற்றலர் மலைந்து போனார்
வரக்கடவார்கள் அல்லர் – பகைவர்கள் போர் செய்து வெற்றியுடன்
சென்றார்களாதலின், அவர்கள் (இவ்விரவில்) வரமாட்டார்கள்; ‘புரக்க
உள்ளாரே’ என்னாக் கருதினன் பொருமல் தீர்ந்தான் – (எனவே)
‘இப்போது வருபவர்கள் எம்மைக் காப்பாற்றும் தன்மைஉள்ள
அன்பரே ஆவர்’ என எண்ணி மனத்துயர் நீங்கப் பெற்றவனானான்.
————-
அனுமன் வருகையால் சாம்பன் மகிழ்தல்
8721.
வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச்
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார்தம்மைத் தேற்றி,
‘அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?’ என்றான்;
‘ஐய!
உய்ந்தனம்; உய்ந்தோம்!, என்ற வீடணன் உரையைக
கேட்டான்.–19-
வந்து அயல்நின்று – வந்து தன்பக்கத்தில் நின்று கொண்டு;
குன்றின் வார்ந்து வீழ் அருவிமானச் சிந்திய கண்ணின் நீரர்-
குன்றிலுருகி வீழ்கின்ற அருவிபோலச் சிந்திய கண்ணீரை
உடையவராய்; ஏங்குவார் தம்மைத் தேற்றி -ஏங்குகின்றவர்களைத்
தேற்றி; ‘அந்தமில் குணத்திர் யாவிர் அணுகினிர்?’ என்றான் –
முடிவில்லாத குணத்தை உடையவர்களே! என்னன அணுகிய நீவிர்
யாவிர்? என வினவிய சாம்பவன்; ஐய, ‘உய்ந்தனம்! உய்ந்தோம்!!’
என்ற வீடணன் உரையைக் கேட்டான் – ‘ஐய’, வாழ்ந்தோம்,
வாழ்ந்தோம் என்ற வீடணன் சொல்லைக் கேட்டான்.
————–
8722.
‘மற்று அயல் நின்றான் யாவன்?’ என்ன, மாருதியும்,
‘வாழி!
கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்’ என்று
கூற,
‘இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தேம்!’
என்னா,
உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான்.-20-
‘மற்று அயல் நின்றான் யாவன்? என்ன – (வீடணனை அவன்
உரையால் அறிந்து கொண்ட சாம்பவன்)’ பின்பு, பக்கத்தில் நின்றவன்
யார்?’ என்று கேட்க, மாருதியும், கொற்றவ! வாழி! அனுமன் நின்றேன்;
தொழுதனென்’ என்று கூற – அனுமனும், ‘வெற்றியை உடையாய்!
வாழி! அனுமன் நிற்கின்றேன், தொழுதேன்’ என்று சொல்ல; ஐய!
இற்றனம் எல்லோம் எழுந்தனம், எழுந்தேம் என்னா – (சாம்பவன்)
ஐயா, இறந்துபட்ட எல்லோரும் உயிர் பெற்று எழுந்தோம், எழுந்தோம்
என்று கூறியவனாய்; உற்ற பேர் உவகையாலே, ஊற்றம்மிக்கான்
ஓங்கினான் – உள்ளத்தில் உற்ற பெருமகிழ்ச்சியாலே வலிமை
மிக்கவனாய்ப் பூரித்தான்.
————-
சாம்பன், மருத்துமலை கொணர வழிகூறி அனுமனை ஏவுதல்
8723.
‘விரிஞ்சன்தன் படை என்றாலும், வேதத்தின் வேதம
அன்ன
அரிந்தமன்தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்?
தெரித்தி’என்றான்;
‘பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!’
என்றான்.-21-
விரிஞ்சன்தன் படை என்றாலும் – பிரமனுடைய படைக்கலன்
(பிரமாத்திரம்) ஆனாலும்; வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன்
தன்னை – வேதத்திற்கும் மேலான வேதம் போன்றவனும் பகை வரை
அழிக்க வல்லவனுமான இராமனை; ஒன்றும் ஆற்றிலது என்னும்
ஆற்றல் முன்னே தெரிந்தனன் – ஒன்றும் செய்யாது என்பதற்குரிய
அவனுடைய ஆற்றலை முன்னமே தெரிந்திருக்கின்றேன்; அன்னான்
செய்தது என்? தெரித்தி என்றான் – ‘அப்பெருமான் செய்த செயல்
என்ன? தெரிவிப்பாயாக!’ எனச் சாம்பன் வினவினான்; ‘பெரும!
பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான் என்றான்-‘பெருமானே!
பெருந்தகையான இராமன் துன்ப வெள்ளத்தினால் தோன்றிய துயிலில்
இருக்கின்றான்’ (துன்பத்தினால் உணர்விழந்து கிடக்கின்றான்)
என்றான் (அனுமன்)
————
8724.
‘அன்னவன்தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே;
இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்;
இன்னது கிடைப்பத் தாழாது, இங்கு இனி
இமைப்பின்முன்னம்,
கொன் இயல் வயிரத்தோளாய்! மருந்து போய்க் கொணர்தி’
என்றான்.–22-
மூலத்து இருவரும் ஒருவரேயால் – இராமஇலக்குவர் ஆகிய
இருவரும் தமக்கு மூலமான தெய்வநிலையில் ஒருவரே ஆவர்;
ஆக்கை வேறே இன் உயிர் ஒன்றே – (இப்போதும்) உடம்பு மட்டும்
வேறு, இனிய உயிர் இருவருக்கும் ஒன்றாகும்; அன்னவன் தன்மை
கண்டால் ஆற்றுமோ – ஆதலால் அந்த இலக்குவன் இறந்து
கிடக்கும் நிலையைக் கண்டால் ஆற்றி இருப்பானோ? (ஆற்றாது
மூர்ச்சையுறல் இயல்பே); கொன்இயல் வயிரத்தோளாய் – வலிமை
பொருந்திய வயிரம் போன்ற தோள்களை உடையவனே! (அனுமனே);
இன்னது கிடைப்பத் தாழாது இங்கு இனி இமைப்பின் முன்னம்-
இத்துன்பநிலைக்கு மிகுதியும் தாழ்த்தல் செய்யாது இனி இங்கு
கண்ணிமைப் பொழுதிற்கு முன்னமேயே; ‘மருந்துபோய்க கொணர்தி’
என்றான் – (உயிர்கொடுக்கும்) மருந்து போய்க் கொண்டு வருக என்று
சாம்பன் கூறினான்.
————-
8725.
‘எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது
போதி.-23-
மைந்த! – வலிமையுள்ளவனே! (அனுமனே!) எழுபது
வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்- எழுபதுவெள்ளம்
வானரச் சேனையும், இராமனும், இலக்குவனும்; முழுதும் இவ்உலகம்
மூன்றும் நல் அற மூர்த்தி தானும் – இம் மூவுலகம் முழுவதும் நல்ல
தருமதேவதையும்; வழுஇலர் மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும்-
தவறுதல் இல்லாத வேதமும் உன்னால் (நீ மருந்து கொண்டு வந்தால்)
வாழ்ந்தன ஆகும்; இறைபொழுது தாழாது என்சொல் நெறிதரக்கடிது
போதி – ஆதலால் சிறிது போழ்தும் காலந்தாழ்த்தாது என்சொல்
நினக்கு வழியைக் கொடுக்க விரைந்து செல்வாயாக.
————-
8726.
‘பின்பு உளது இக் கடல் என்னப் பெயர்ந்ததற்பின்
யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால், இமயம் எனும்
குலவரையை உறுதி; உற்றால்,
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது
யோசனை; பின் தவிரப் போனால்,
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை, பொற்-
கூடம் சென்று உறுதி, மொய்ம்ப!–24-
மொய்ம்ப – வலிமையுடைய அனுமனே! இக்கடல் பின்பு உளது
என்னப் பெயர்ந்ததற்பின் – இத்தென்கடல் பின்புளது என்னுமாறு
கடந்து சென்றபின்; பேசநின்ற யோசனைகள் ஒன்பதினாயிரம்
கடந்தால் – கண்டோர் சொல்லும்படி நின்ற யோசனைகள்
ஒன்பதினாயிரம் கடந்தால்; இமயம் எனும் குலவரையை உறுதி;
உற்றால் – இமயம் என்கின்ற சிறந்த மலைக்கூட்டத்தை அடைவாய்;
அங்ஙனம் அடைந்தால்; தன் பெருமை ஓர் இரண்டாயிரம் யோசனை
உளது – அந்த இமயத்தின் பரப்பு இரண்டாயிரம் யோசனை உளது;
பின் தவிரப் போனால் – அது பின்நிற்க முற்பட்டுச் சென்றால்; முன்பு
உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி-
நின் முன்பு உள்ள யோசனைகள் எல்லாவற்றையும் கடந்து போனால்,
ஏமகூட மலையைச் சென்று அடைவாய்.
——
8727.
‘அம் மலைக்கும் ஓன்பதினாயிரம் உளதால்,
யோசனையின் நிடதம் என்னும்
செம் மலையம்; உளவாய அத்தனை யோசனை
கடந்தால், சென்று காண்டி,
எம் மலைக்கும் பெரிது ஆய வடமலையை;
அம் மலையின் அகலம் எண்ணின்,
மொய்ம் மலைந்த திண் தோளாய்! முப்பத்து ஈர்-
ஆயிரம் யோசனையின் முற்றும்;–25
மொய்ம் மலைந்த திண்தோளாய் – வலிமைமேவிய திண்மையான
தோளினை உடையவனே! அம்மலைக்கும் ஒன்பதினாயிரம்
யோசனையின் – அந்த ஏமகூட மலையிலிருந்து ஒன்பதினாயிரம்
யோசனைத் தொலைவில்; நிடதம் என்னும் செம்மலையம் உளதால்-
நிடதம் என்னும் செம்மலை உளது; உளவாய அத்தனை யோசனை
கடந்தால் – அச் செவ்விய நிடத மலையிலிருந்து ஒன்பதினாயிரம்
யோசனை கடந்து போனால்; எம்மலைக்கும் பெரிது ஆய
வடமலையை, சென்று காண்டி – எல்லா மலைகளுக்கும் பெரிதாகிய
மேருமலையைச் சென்று காண்பாய்; அம்மலையின் அகலம் எண்ணின் முப்பத்து ஈர்ஆயிரம்
யோசனையின் முற்றும் – அம்மேருமலையின் அகலம் எண்ணினால்
முப்பத்து இரண்டாயிரம் யோசனையில் முடிவு அடையும்.
————
8728.
மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம்
உள ஓசனையை விட்டால்,
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டா-
யிரம் உள யோசனையின் நிற்கும்;
மாருதி! மற்று அதற்கு யோசனை
நாலாயிரத்தின் மருந்து வைகும்,
கார் வரையைக் காணுதி; மற்று, அது காண,
இத் துயர்க்குக் கரையும் காண்டி;-26-
மாருதி – ‘அனுமனே! மேருவினைக் கடந்து – மேருமலையினைக்
கடந்து; அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் –
அப்பால் உள்ள ஒன்பதினாயிரம் யோசனையைக் கடந்தால்; நேர்
நீலகிரி அணுகும் – நினக்குநேராக நீலகிரி என்னும் மலைநெருங்கித்
தோன்றும்; தான் இரண்டாயிரம் உளயோசனையின் நிற்கும் –
அந்நீலகிரிதான் இரண்டாயிரம் ஆக உள்ள யோசனை அளவில் பரவி
நிற்கும்; மற்று அதற்கு யோசனை நாலாயிரத்தின் – அந்நீலகிரிக்கு
யோசனை நாலாயிரத்துக்கு அப்பால்; மருந்து வைகும் கார் வரையைக்
காணுதி – மருந்து தங்கியுள்ள கரிய மருத்துமலையைக் காண்பாய்;
மற்று, அதுகாண, இத் துயர்க்கும் கரையுங் காண்டி – அம்மலையைக்
காணவே இத் துயர்க்கு எல்லையுங் காண்பாய்’.
————
8729.
‘மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்
மருந்தும் உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி’ என அடையாளத்தொடும்
உரைத்தான், அறிவின் மிக்கான். –27-
அறிவின் மிக்கான்- அறிவில் மிக்கவனான சாம்பவன்; மாண்டாரை
உய்வி்கும் மருந்து ஒன்றும் – இறந்தவரை உயிர் பெறச்செய்யும்
மருந்து ஒன்றும்; உடல்வேறு வகிர்கள் ஆகக் கீண்டாலும்
பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் – உடம்பு வெவ்வேறு பிளவுகளாகக்
கிழிந்தாலும் முன்போலப் பொருந்தச் செய்யும் ஒரு மருந்தும்;
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும் – (உடம்பில் தைத்திருக்கும்)
படைக்கலங்களை வெளிப்படுத்தும் மருந்து ஒன்றும்; மீண்டேயும் தம்
உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள – மீண்டும் தம்
முன்னைய உருவையே கொடுக்கும் உண்மை மருந்தும் அங்கு
உள்ளன; வீர! நீ, ஆண்டு ஏகிக் கொணர்தி என
அடையாளத்தொடும் உரைத்தான் – வீரனே! நீ அங்கு சென்று
அவற்றைக் கொணர்வாயாக” என அவற்றின் அடையாளத்தோடும்
(அனுமனுக்குக்) சொன்னான்.
———
8730.
‘இன்ன மருந்து ஒரு நான்கும், பயோததியைக்
கலக்கிய ஞான்று, எழுந்த; தேவர்
உன்னி அமைத்தனர்; மறைக்கும் எட்டாத
பரஞ்சுடர், இவ் உலகம் மூன்றும்
தன் இரு தாள் உள் அடக்கிப் பொலி போழ்தின்,
யான் முரசம் சாற்றும் வேலை,
அன்னவை கண்டு, உயாவுதலும், தொல் முனிவர்
அவற்று இயல் எற்கு அறிவித்தாரால்;–28-
இன்ன மருந்து ஒரு நான்கும் – இத்தகைய வாயமருந்து ஒரு
நான்கும்; பயோததியைக் கலக்கிய ஞான்று எழுந்த –
பாற்கடலைக்கடைந்த காலத்து, அதிலிருந்து தோன்றின; தேவர் உன்னி
அமைத்தனர் – தேவர்கள் அவற்றின் பயனை நினைத்து அவற்றை
அம்மலையில் அமையுமாறு செய்தனர்; மறைக்கும் எட்டாத பரஞ்சுடர்
– வேதங்களுக்கும் எட்டாத திருமால்; இவ்உலகம் மூன்றும் தன்
இருதாள் உள் அடக்கிப் பொலிபோழ்தின் – இவ்வுலகம் மூன்றையும்
தன் இரண்டு அடிக்குள் அடக்கிக் கொண்டு நின்ற போது; யான்
முரசம் சாற்றும் வேலை – நான் வெற்றி முரசை அடிக்கையில்; அன்னவை கண்டு, உயாவுதலும் – அம்
மருந்தினைக் கண்டு அவற்றைப் பற்றிக் கேட்டபோது; தொல் முனிவர்
அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – பழமைசான்ற முனிவர்கள்
அவற்றின் பண்புகளை எனக்குத் தெரிவித்தனர். ஆல் – அசை.
————
8731.
‘இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்;
இரங்கா, யார்க்கும்;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமிப்
படையும் அவற்றுடனே நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லாதாய்! புரிகின்ற
காரியத்தின் பொதுமை நோக்கி,
கைம் மருங்கு உண்டாம்; நின்னைக் காவாய் என்று;
அப்புறம் போய்க் கரக்கும்’ என்றான்.-
இம் மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால்-இந்த
மருந்தைக் காத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் கணக்கிலாதன;
யார்க்கும் இரங்கா – அவை யார்க்கும் இரக்கம் கொள்ளமாட்டா;
நெய்ம் மருங்கு படரகில்லா நெடுநேமிப் படையும் அவற்றுடனே
நிற்கும் – நெய்பூசப் பெற்றதும், அருகில் செல்வதற்கும் இயலாததும்
ஆகிய நெடிய சக்கரப்படையும் அத்தெய்வங்களுடன் காத்து நிற்கும்;
பொய்ம் மருங்கின் நில்லாதாய் – பொய்யின் அருகில் கூட
நில்லாதமெய்மை உடையவனே! புரிகின்ற காரியத்தின்
பொதுமைநோக்கி – நீ செய்கின்ற செயலின் பொதுத்தன்மையினை
நோக்கி; கைம் மருங்கு உண்டாம் – நின் கையருகில் நிற்கும்;
நின்னைக் காவாய் என்று அப்புறம் போய்க்கரக்கும் என்றான் –
(மேலும்) உன்னை, ‘இம் மருந்தை மீட்டும் கொணர்ந்து கெடாமல்
காப்பாயாக’ எனக் கேட்டுக் கொண்டு அப்புறம் போய் மறைந்து
கொள்ளும்’. என்று கூறினான்.
————–
அனுமன் மருந்து கொணரப் பெருவடிவு கொண்டு எழுதல்
8732.
‘ஈங்கு இதுவே பணி ஆகில், இறந்தோரும்
பிறந்தோரே; எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்’
எனச் சொல்லி, அவரைத் தீர்ந்தான்-
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்; பொன்
தோள் இரண்டும் திசையோடு ஒக்க
வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே
என வளர்ந்தான்-வேதம் போல்வான்.–30-
‘ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தோரும் பிறந்தோரே –
“இப்பொழுது இதுவே (நான் செய்ய வேண்டிய) பணி ஆனால்
இறந்துகிடப்பவர்கள் அனைவரும் மீண்டும் இறப்பு நீங்கி எழுந்தவரே
ஆவர்” எம்கோமாற்கு யாதும் தீங்கு இடையூறு எய்தாமல் –
எம்கோமானாகிய இராமனுக்கு தீங்குவரத்தக்க இடையூறு ஏதும்
எய்தாதபடி; தெருட்டுதிர்போய் எனச் சொல்லி – போயத்
தெளிவுபடுத்துங்கள்” எனக் கூறி; அவரைத் தீர்ந்தான், வேதம்
போல்வான் – அவர்களை விட்டு நீங்கினவனாய்; வேதம்
போல்பவனாகிய அனுமன்; ஓங்கினன் வான் நெடுமுகட்டை
உற்றனன் – உயர ஓங்கி வானத்தின் நெடிய முகட்டை
அடைந்தான்; பொன்தோள் இரண்டும் திசையோடு ஒக்க வீங்கின-
அவன் தோள்கள் இரண்டும் திசைகளின் அளவோடு ஒக்கப்
பருத்தன; ஆகாயத்தை விழுங்கினனே என வளர்ந்தான் –
ஆகாயத்தை இடமில்லாமல் விழுங்கிவிட்டான் என்னுமாறு பேருரு
எடுத்து வளர்ந்தான்.
———
8733.
கோளோடு தாரகைகள், கோத்து அமைந்த
மணி ஆரக் கோவை போன்ற;
தோளோடு தோள் அகலம் ஆயிரம்
யோசனை அளவு சொல்ல ஒண்ணா;
தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது-
ஆயின இலங்கை; தடக் கை வீச,
நீளோடு திசை போதா; விசைத்து எழுவான்
உருவத்தின் நிலை ஈது அம்மா!–31-
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த- விண்ணில் விளங்கும்
நவகோள்களும் நட்சத்திரங்களும் (அனுமனது மார்பிற்கு அணியாகக்)
கோத்து அமைத்த; மணி ஆரக்கோவை போன்ற – மணியும் முத்தும்
கலந்த மாலை போன்று விளங்கின; தோளோடு தோள் அகலம் –
ஒருதோளிலிருந்து மற்றொரு தோளுக்கு உள்ள அகலம்; ஆயிரம்
யோசனை அளவு சொல்ல ஒண்ணா – ஆயிரம் யோசனை அளவு
எனவும் சொல்ல ஒண்ணாதவையாய் விரிந்திருந்தன; தாளோடு தாள் பெயர்க்க
இடம் இலது ஆயினது இலங்கை – ஊன்றிய அடியோடு மற்றொரு
அடியைப் பெயர்த்துவைக்க இடம் இல்லாததாகியது இலங்கை;
தடக்கைவீச, நீளோடு திசைபோதா;-அவன் பெரியகைகளை வீசநீண்டு
ஓடுகின்ற திசைகள் போதாவாயின; விசைத்து எழுவான் உருவத்தின்
நிலை ஈது அம்மா – (மருத்துமலை கொணர) விரைந்து எழுகின்ற
அனுமனது பேருருவத்தின் நிலை இதுவாகும்
————-
8734.
வால் விசைத்து, கைந் நிமிர்த்து, வாயினையும்
சிறிது அகல வகுத்து, மானக்
கால் நிலத்தினிடை ஊன்றி, உரம் நெருக்கி,
கழுத்தினையும் சுருக்கிக் காட்டி,
தோல் மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப, விசைத்து எழுந்தான்.
அவ் இலங்கை, துளங்கிச் சூழ்ந்த
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல்,
சுரித்து உலைய,-விசையத் தோளான்.–32-
விசயத்தோளான் – வெற்றிபொருந்திய தோளை உடைய அனுமன்;
வால்விசைத்து கைந்நிமிர்த்து வாயினையும் சிறிதகல வகுத்து – தன்
வாலினை விசைத்துக் கொண்டு, வாயினையும் சிறிது விரிந்திருக்குமாறு
செய்து கொண்டு; மானக்கால் நிலத்தினிடை ஊன்றி –
பெருமைபொருந்திய கால்களை நிலத்தில் ஊன்றிக்கொண்டு; உரம்
நெருக்கிக் கழுத்தினையும் சுருக்கிக் காட்டி-மார்பினை நெருக்கிக்
கொண்டு, கழுத்தினையும் சுருக்கிக்காண்பித்து; தோல்மயிர்க்குந்தளம்
சிலிர்ப்ப – தோலில் உள்ள மயிர்க்கூச்சுகள் சிலிர்க்க; அவ்விலங்கை
துளங்கிச் சூழ்ந்த வேலையில்புக்கு அழுந்தியது மரக்கலம் போல்-
அவ்விலங்கை, குலைந்து தன்னைச் சுற்றிய கடலில் நுழைந்து
அழுந்தப்பெற்ற ஒரு கப்பலைப் போன்று; சுரித்து உலைய விசைத்து
எழுந்தான் – சுழன்றுவருந்த விரைவுடன் கிளம்பினான்.
———-
அனுமன் வேகத்தால் நிகழ்ந்தவை
8735.
கிழிந்தன, மா மழைக் குலங்கள்; கீண்டது, நீண்டு
அகல் வேலை; கிழக்கும் மேற்கும்
பொழிந்தன, மீன்; தொடர்ந்து எழுந்த, பொருப்புஇனமும்,
தருக் குலமும், பிறவும், பொங்கி;
அழிந்தன, வானவர் மானம், ஆகாயத்து
இடையன பேர் அசனி என்ன
விழுந்தன, நீர்க் கடல் அழுந்த; ஏறின மேல்,
கீறின போய்த் திசைகள் எல்லாம்.–33-
மாமழைக்குலங்கள் கிழிந்தன – (அனுமன் விசைத்தெழவே) பெரிய
மேகக்கூட்டங்கள் கிழிந்தன; நீண்டகல் வேலை கிழக்கும் மேற்கும்
கீண்டது – நீண்டு அகன்றுள்ள தென்கடல் கிழக்கும் மேற்குமாக
பிரிந்து கிழிந்தது; மீன் பொழிந்தன; – விண்மீன்கள் உதிர்ந்தன;
பொருப்பு இனமும் தருக்குலமும் பிறவும், பொங்கி தொடர்ந்து
எழுந்த – மலைத்தொகுதிகளும், மரத்தொகுதிகளும், பிறவும் கிளர்ந்து
தொடர்ந்து எழுந்தன; வானவர் மானம் ஆகாயத்து இடையன
அழிந்தன – தேவர்களின் விமானம் ஆகாயத்தின் நடுவே
அழிந்தனவாய்; பேர் அசனி என்ன நீர்க் கடல் அழுந்த விழுந்தன
-பெரிய இடியைப் போல நீர்க்கடலில் அழுந்த விழுந்தன; மேல் ஏறின
போய்த்திசைகளெல்லாம் கீறின – அதனால் கடல்நீர் மேல் ஏறின
வாய்த் திசைகளெல்லாம் கிழிந்தன.
————
8736.
பாய்ந்தனன், அங்கு அப்பொழுதத்தே; பரு வரைகள்
எனைப் பலவும் வடபாகத்துச்
சாய்ந்தன; ‘பேர் உடல் பிறந்த சண்டமா-
ருதம் வீச, தாதை சால
ஓய்ந்தனன்’ என்று உரைசெய்ய, விசும்பூடு
படர்கின்றான், உரு வேகத்தால்,
காய்ந்தன வேலைகள்; மேகம் கரிந்தன; வெந்து
எரிந்த, பெருங் கானம் எல்லாம்.–34-
அப்பொழுதத்தே அங்கு பாய்ந்தனன் – அப்பொழுதே அங்கு
பாய்ந்தனன்; பருவரைகள் எனைப் பலவும் – பருத்தமலைகள் பலவும்;
பேர் உடல் பிறந்த சண்டமாருதம் வீச- பெரிய உடலிலிருந்து
தோன்றிய பெருங்காற்று வீசுதலால்; வடபாகத்துச் சாய்ந்தன –
வடக்குப் பக்கமாகச் சாய்ந்தன; தாதைசால ஓய்ந்தனன் என்று
உரைசெய்ய – தந்தையான வாயுதேவனும் மிகவும் தளர்ச்சியுற்றான்
என்று சொல்லுமாறு; விசும்பூடு படர்கின்றான் உருவேகத்தால் – விரைந்து விண்வழியே செல்கின்ற உருவத்தின்
வேக வெப்பத்தால்; வேலைகள் காய்ந்தன மேகம் கரிந்தன-கடல்கள்
வறண்டு காய்ந்தன; மேகங்கள் கரிந்து போயின; பெருங்கானம்
எல்லாம் வெந்து எரிந்த – பெரிய காடுகள் எல்லாம் வெந்து எரிந்தன.
————
8737.
கடல் முன்னே நிமிர்ந்து ஓட, கால் பின்னே
தொடர்ந்து ஓட, கடிதின் செல்வான்
உடல் முன்னே செல, உள்ளம் கடைக் குழையாய்ச்
செல, செல்வான் உருவை நோக்கி,
‘அடல் முன்னே தொடங்கிய நாள், ஆழ் கடல் சூழ்
இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீர்இடைப் படுத்து மறித்தலின்; நம்
துயர்’ என்றார், தேவர் எல்லாம்.–35-
கடல் முன்னே நிமிர்ந்து ஓட- கடல் முன்னால் நிமிர்ந்து ஓடவும்;
கால்பின்னே தொடர்ந்து ஓட-கால்கள் பின்னால் தொடர்ந்து ஓடவும்;
கடிதின்செல்வான் உடல் முன்னே செல – விரைந்து செல்லும்
பொருட்டு உடல் முன்னே செல்லவும்; உள்ளம் கடைக்குழையாய் செல
– மனம் கடைசியாக வேகங் குறைந்ததாகப் பின்னே செல்லவும்;
செல்வான் உருவை நோக்கி – செல்கின்றவனாகிய அனுமனின்
உருவத்தைப் பார்த்து; தேவர் எல்லாம் அடல்முன்னே தொடங்கிய
நாள் – தேவர்கள் அனைவரும் ‘அரக்கரைக் கொல்லும்
போர்த்தொழிலை முன்னே தொடங்கிய நாளில்; ஆழ்கடல் சூழ்
இலங்கை என்னும் – ஆழ்ந்த கடலால் சூழப் பெற்ற இலங்கை
என்னும்; அரக்கர் வாழும் திடல் முந்நீர் இடைப்படுத்து – அரக்கர்
வாழ்கின்ற தீவினை எடுத்துச் கடலிடை வீழ்த்தி; நம்துயர் மறித்திலன்
என்றார் – நம் துயரைத்தடுத்திலனே” என்று கூறினர்.
————-
விரைந்து செல்லும் அனுமனைக்கண்ட வானவர் கூற்று
8738.
மேகத்தின் பதம் கடந்து, வெங் கதிரும்
தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கு அப்பால், வானமீன்
குலம் விளங்கும் வரம்பு நீங்கி,
போகத்தின் நெறி கடந்தார் புகலிடங்கள்
பிற்படப் போய், ‘பூவின் வந்த
ஏகத்து அந்தணன் இருக்கை இனிச் சேய்த்து அன்-
றாம்’ என்ன, எழுந்து சென்றான்.–36-
மேகத்தின பதம் கடந்து – மேகமண்டலத்தைக் கடந்து;
வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும் – வெப்பம்மிக்க
கிரணங்களை உடைய சூரியனும், குளிர்ந்த கிரணங்களை உடைய
சந்திரனும் விரைந்து செல்லுகின்ற; மாகத்தின் நெறிக்கு அப்பால் –
வான வழிக்கு அப்பால்; வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி –
விண்மீன்களின் கூட்டம் இயங்குகின்ற நட்சத்திர மண்டலத்தையும்
கடந்து சென்று; போகத்தின் நெறிகடந்தார் புகலிடங்கள்
பிற்படப்போய்-மகளிரோடு கலந்து துய்க்கும் போகத்தின் நெறியையே
கடந்தவர்களான தவத்தினரின் தவலோகம் பிற்படுமாறு சென்று;
பூவின் வந்த ஏகத்து அந்தணன் இருக்கை – திருமாலின்
உந்திக்கமலத்தில் தோன்றியவனாகிய பிரமனது இருக்கையான
சத்தியலோகம்; இனிச் சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான்
– இனிச்சேயது அன்று (அண்மையதே) என்று கூறுமாறு உயர்ந்து
சென்றான். (அனுமன்)
———
8739.
வான நாட்டு உறைகின்றார், ‘வயக் கலுழன்
வல் விசையால், மாயன் வைகும்
தான் நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்,
சிலர்; சிலர்கள், ‘விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார்;
சிலர் சிலர்கள், ‘ஈசன் அல்லால்,
போன நாட்டிடை போக வல்லாரோ?
இவன் முக் கண் புனிதன்’ என்றார்.–37-
வானநாட்டு உறைகின்றார் சிலர்- வான நாட்டில் வாழ்கின்றவர்கள்
சிலர்; ‘வயக்கலுழன் வல்விசையால்’ – வலிமைமிக்க கருடன்
வலியவேகத்தோடு; மாயன்வைகும் தான நாட்டு எழுகின்றான்’ என்று
உரைத்தார் – திருமால் தங்கியுள்ள இடமாகிய வைகுந்தத்திற்குச்
செல்கின்றான்’ என்று சொன்னார்கள்; சிலர்கள் ‘விரிஞ்சன் தான்தன்
ஏனைநாட்டு எழுகின்றான்’ என்று உரைத்தார் – வேறுசிலர் ‘பிரமன்தான் தன்
நாட்டிலும் வேறாகிய நாட்டிற்குச் செல்ல எழுகின்றான்’ என்று
சொன்னார்கள்; சிலர்சிலர்கள் ‘ஈசன் அல்லால் போன நாட்டிடைப்
போகவல்லாரோ? – சிலர்சிலர், ‘சிவன் அல்லாதவர்கள், மிகவும்
உயர்ந்து போன நாட்டிடையே செல்லவல்லவர்களோ? (அல்லர்!
ஆதலின்); இவன் முக்கண் புனிதன்’ என்றார் – இவன், மூன்று
கண்களையுடைய தூயவனாகிய சிவனே’ என்று சொன்னார்கள்.
———-
8740.
‘வேண்டு உருவம் கொண்டு எழுந்து, விளையாடு-
கின்றான்; மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவன் அல்லாத திருமாலே
இவன்’ என்றார்; ‘“தெரிய நோக்கிக்
காண்டும்” என இமைப்பதன்முன், கட் புலமும்
கடந்து அகலும்; இன்னும் காண்மின்;
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம்
புகும்’ என்றார், மேன்மேல் உள்ளார்.–38-
மேன்மேல் உள்ளார் – மேல்மேல் உள்ள உலகத்தவர்கள் சிலர்;
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் இவன் –
விரும்பிய உருவந்தாங்கி விளையாடுகின்றவனாகிய இவன்;
மெய்வேதம் நான்கும் தீண்டு உருவன் அல்லாத திருமாலே
என்றார் – உண்மையான வேதங்கள் நான்கும் எட்டுதற்குரிய வடிவினன்
அல்லாத திருமாலே’ என்றார்; ‘தெரிய நோக்கிக் காண்டும்’ என
-(சிலர்) ‘தெளிவுற நோக்கிப் பார்ப்போம்’ என்று நினைக்க;
‘இமைப்பதன் முன்கட்புலமும் கடந்து அகலும் – (அவர்களின்)
இமைப்பொழுதிற்கு முன்னமே கட்புலத்தைக் கடந்து செல்லுவான்;
இன்னும் காண்மின் மீண்டு வரும் தரம் அல்லன் வீட்டுலகம் புகும்
என்றார்-(மற்றும் சிலர்) ‘இன்னும் பாருங்கள் இவன் திரும்பிவரும்
தன்மையன் அல்லன், வீட்டுலகத்திற்குச் செல்லுவான்’ என்றார்.
————-
8741.
‘உரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘ஒளி’ என்றார்,
சிலர் சிலர்கள்; ‘ஒளிரும் மேனி
அரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘அண்டத்துக்கு
அப் புறம் நின்று, உலகம் ஆக்கும்
கரு’ என்றார், சிலர் சிலர்கள்; ‘மற்று’ என்றார்,
சிலர் சிலர்கள்; கடலைத் தாவிச்
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார்-
உலகு அனைத்தும் தெரியும் செல்வர்.–39-
உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – உலகனைத்தையும்
தெரிந்துணர்ந்த ஞானச் செல்வராகிய பெரியோர்; கடலைத் தாவிச்
செருவென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் – கடலைத் தாண்டி
அரக்கரைப் போரில் வென்றவனாகிய அனுமனது நிலையைச் சிறிதும்
தெரியாதவர்களாயினர் ஆதலால்; சிலர் சிலர்கள் ‘உரு’ என்றார் -(மனோவேகத்தையும் விஞ்சிச் செல்லுகின்ற அனுமனை) சிற்சிலர்
உருவப்பொருளே என்றார்கள்; சிலர் சிலர்கள் ஒளிருமேனி ‘அரு’
என்றார் – மற்றும் சிலர் (தம்மைக் கடந்து விரைந்துசென்ற) அவனது
ஒளிரும் மேனியை அருவப் பொருள் என்று கூறினார்; சிலர் சிலர்கள்
அண்டத்துக்கு அப்புறம் நின்று உலகம் ஆக்கும் ‘கரு’ என்றார்
-இன்னும் சிலர் அண்டத்துக்கு அப்புறத்தில் நின்று உலகத்தைப்
படைக்கும் காரணப் பொருள் என்றார்கள்; சிலர் சிலர்கள் ‘மற்று’
என்றார் – மேலும் சிலர் (அவனை) இது வேறு ஒன்றுதான்’ எனக்
கூறினர்.
—————-
8742.
வாச நாள் மலரோன்தன் உலகு அளவும்
நிமிர்ந்தன, மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது
உருவிடையே கனகத் தோள்கள்
வீச, வான் முகடு உரிஞ்ச, விசைத்து எழுவான்
உடல் பிறந்த முழக்கம் விம்ம,
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார்;
விதிர் எறிந்தது, அண்டகோளம்.–40-
வாசநாள் மலரோன்தன் உலகு அளவும் நிமிர்ந்தன – மணம்
பொருந்திய அன்றலர்ந்த தாமரைமலரில் வாழ்கின்ற பிரமனுடைய
உலகத்தின் அளவும் உயர்ந்தனவாகி; மேல் வானம் ஆன காசம்
ஆயின எல்லாம் கரந்த தனது உருவினிடையே – அதன் மேலுள்ள
வானமான ஆகாயமெல்லாம் மறைத்த தன்னுடைய உருவத்தில் உள்ள;
கனகத் தோள்கள் வான்முகடு உரி்ஞ்ச வீச – பொன்னிறத்தோள்களை வானத்தின் உச்சியில் பட்டுத்
தேய்க்கும்படி வீசுதலால்; விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம்
விம்ம – விசையால் எழுகின்ற அவனது உடம்பில் பிறந்த முழக்கம
மிக; ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் – (அதனால்)
திசைக்காவலர்கள் தலைநடுக்கமுற்றனர்; அண்டகோளம் விதிர்
எறிந்தது – அண்டமாகிய உருண்டை விதிர் விதிர்ப்பு எய்தியது.
——
8743.
தொடுத்த நாள்மாலை வானோர், முனிவரே முதல
தொல்லோர்,
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால், அவுணர் வேந்தன்
கொடுத்த நாள், அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது-அண்ணல் எழுந்த நாள், உலகுக்கு
எல்லாம்.-41-
அண்ணல் எழுந்தநாள் உலகுக்கெல்லாம் – பெருமை
சான்றவனாகிய அனுமன் வளர்ந்து எழுந்த நாள், உலகங்கட்கெலாம்;
தொடுத்த நாள் மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் –
அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்த மாலையை அணிந்த தேவர்களும்
முனிவர் முதலாய பெரியோர்களும்; அடுத்த நான் மறைகள் ஓதி
வாழ்த்தலால் – தமக்குரிய நான்கு வேதங்களை ஓதிக் கொண்டு
வாழ்த்துக் கூறி நிற்க; அவுணர் வேந்தன் கொடுத்தநாள் – அவுணர்
வேந்தனாகிய மாபலி தாரைவார்த்துக் கொடுத்தநாளில்; அளந்து
கொண்ட குறளனார் குறிய பாதம் எடுத்த நாள் ஒத்தது- உலகத்தை
அளந்து கொண்ட வாமன மூர்த்தியின் குறுகிய அளவினை உடைய
பாதத்தை (பெரிதாக்கி) விண்ணின் மேல் எடுத்த நாளை ஒத்து
மகிழ்வூட்டியது.
—————–
8744.
தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகினுள்ளார், உவகையால் தொடர்ந்து
மொய்த்தார்;
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த,
பூவுடை அமரர் தெய்வத் தரு என, விசும்பில் போனான்.–42-
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் தெரிவைமாரும்-
தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் அவர்தம் மனைவிகளும்;
மூவகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார்-
மூவுலகத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சி மிகுதியால் தொடர்ந்து வானில்
நெருங்கியவர்களாய்த்; தூவின மணியும் சாந்தும் கண்ணமும் மலரும்
தொத்த – தூவிய மணிகளும், சந்தனமும், சுண்ணப்பொடியும்
மலர்களும் அனுமனின் உடல்மேல் தொத்தி நிற்க; பூவுடை அமரர்
தெய்வத் தருஎன விசும்பில் போனான்-தேவர்களுக்குரிய, மலர்கள்
நிறைந்ததெய்வத்தன்மையுடைய கற்பகத்தரு என வான்வழியே
சென்றான்.
————
கயிலையைக் கண்டு வணங்கி, அனுமன் செல்லுதல்
8745.
இமய மால் வரையை உற்றான்; அங்கு உள
இமைப்பிலோரும்,
கமையுடை முனிவர், மற்றும் அறன் நெறி கலந்தோர்,
எல்லாம்,
அமைக, நின் கருமம்!’ என்று வாழ்த்தினர்; அதனுக்கு
அப்பால்,
உமையொருபாகன் வைகும் கயிலை கண்டு, உவகை
உற்றான்.–43-
இமையமால் வரையை உற்றான் – அனுமன் இமயம் என்னும்
பெரிய மலையை அடைந்தான்; அங்குஉள இமைப்பிலோரும்
கமையுடை முனிவர் – அங்கு வாழும் இமையாக்கண்ணராகிய
தேவர்களும், பொறுமையுடைய முனிவர்களும்; மற்றும் அறன்நெறி
கலந்தோர் எல்லாம் – மேலும் அறநெறி வழுவாப் பெரியோரும்,
ஆகிய அனைவரும்; ‘அமைக, நின் கரும்ம!’ என்று வாழ்த்தினர் –
(அனுமனைப் பார்த்து) ‘நீ மேற்கொண்டுள்ள செயல் இனிது
நிறைவேறுவதாக’ என்று வாழ்த்தினார்கள்; அதனுக்கு அப்பால்
உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் –
அதன் பின்னர் உமையம்மையை இடப்பாகங் கொண்ட சிவ பெருமான் தங்கியுள்ள கயிலை மலையைக் கண்டு மகிழ்ச்சி
கொண்டான்.
————–
8746.
வட குண திசையில் தோன்றும், மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி, தாமரைக் கைகள் கூப்பி,
படர்குவான்தன்னை, அன்பால் பரமனும் விசும்பில்
பார்த்தான்;
தட முலை உமைக்குக் காட்டி, ‘வாயுவின் தனயன்’ என்றான்.–44-
வடகுண திசையில் தோன்றும் – வடகிழக்குத் திசையில்
தோன்றுகின்றதும்; மழுவலான் ஆண்டு வைகும் – மழுப்படையை
உடைய சிவபெருமான் தங்கி இருப்பதும் ஆகிய; தடவரை அதனை
நோக்கி தாமரைக் கைகள் கூப்பி – பெரிய மலையினை
(கயிலையை)ப்பார்த்துத் தாமரை போலச் சிவந்த கைகளைக் குவித்து
வணங்கி; படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில்
பார்த்தான் – செல்லுகின்ற அனுமனைப் பெருமையிற் சிறந்தவனாகிய
சிவபரம் பொருளும் விரும்பிப் பார்த்து; தடமுலை உமைக்குக் காட்டி
‘வாயுவின் தனையன்’ என்றான் – பருத்த தனங்களை உடைய
உமாதேவிக்குக் காண்பித்து, ‘வாயுதேவனுடைய மகன் அனுமன்’ என்று
கூறினான்.
——————
உமையின் வினாவும், ஈசனது உரையும்
8747.
‘என், இவன் எழுந்த தன்மை?’ என்று, உலகு ஈன்றாள்
கேட்ப,
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின்மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நன்னுதல்! நாமும் வெம் போர் காணுதும், நாளை என்றான்.–45-
‘இவன் எழுந்த தன்மை என்?’ என்று உலகு ஈன்றான் கேட்ப –
“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று
உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க; மன்னவன் இராமன் தூதன்
மருந்தின்மேல் வந்தான் – “மன்னவர் குலத்துத் தோன்றிய
இராமனின் தூதனாகிய இவன் மருந்தைக் கொண்டு போக
வந்திருக்கின்றான்’; ‘வஞ்சர் தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது
திண்ணம்!’ – “வஞ்சகராகிய அரக்கர்க் குரிய தென் இலங்கையினால்
உளதாகிய தீமை இனித்தீர்வது திண்ணம்’; நன்னுதல்! நாளை நாமும்
சேர்ந்து வெம்போர்காணுதும் என்றான் – “அழகிய நுதலை
உடையவளே! நாளை நாமும் (தேவர்களுடன்) சேர்ந்து கொடிய
போரைக் காண்போம்” என்று கூறினான் பரமன்.
———–
ஏமகூடத்தைத் தாண்டி, அனுமன் மேருமலைமீது போதல்
8748.
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி,
ஏமகூடத்தின் உம்பர் எய்தினன், இறுதி இல்லாக்
காமமே நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்;-
நேமியின் விசையின் செல்வான்-நிடதத்தின் நெற்றி உற்றான்.–46-
நேமியின் விசையின் செல்வான் – சக்கரப்படைபோல விரைவாகச்
செல்லுகின்ற அனுமன்; நாம ஆயிரம் யோசனைகள் கொண்டது நடுவு
நீங்கி – பெயர்பெற்ற (ஒன்பதின்) ஆயிரம் யோசனைத் தொலைவு
கொண்ட நடுவிடத்தைத் தாண்டி; ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் –
ஏம கூட மலையின் மேல் அடைந்து நின்று; இறுதி இல்லாக் காமமே
நுகரும் செல்வக் கடவுளர் ஈட்டம் கண்டான்- முடிவில்லாத
காமஇன்பத்தையே துய்க்கின்ற செல்வச் சிறப்பினை உடைய
தேவர்களின் கூட்டத்தைக் கண்டான்; நிடதத்தின் நெற்றி உற்றான் –
பின்பு நிடத மலையின் உச்சியை அடைந்தான்.
———
8749.
எண்ணுக்கும், அளவு இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும், கருதும் தெய்வ மனத்திற்கும், கடியன்
ஆனான்,
மண்ணுக்கும், திசைகள் வைத்த வரம்பிற்கும், மலரோன்
வைகும்
விண்ணுக்கும், அளவை ஆன மேருவின்மீது சென்றான்.–47-
எண்ணுக்கும் அளவு இலாத அறிவினோர் – (மனிதர்)
எண்ணத்திற்கும் அளவிட முடியாத அறிவினை உடைய ஞானிகள்;
இருந்து நோக்கும் கண்ணுக்கும் – இருந்தவாறே எல்லாவற்றையும்
நோக்குகின்ற ஞானக்கண்ணுக்கும்; கருதும் தெய்வ மனத்திற்கும்
கடியன் ஆனான் – எல்லாவற்றையும் கருதவல்ல தெய்வ மனத்திற்கும்
பின்பற்ற முடியாத வேகத்தை உடையவனான அனுமன்; மண்ணுக்கும்
திசைகள் வைத்த வரம்பிற்கும் – மண்ணுலகத்திற்கும்,
திசைகளுக்குரியவாகவைத்த எல்லைக்கும்; மலரோன் வைகும்
விண்ணுக்கும் – பிரமன் தங்கியுள்ள பிரமலோகமாகிய
விண்ணுலகத்திற்கும்; அளவை ஆன மேருவின் மீது சென்றான் –
அளவு கருவி போல் உளதான மேரு மலையின் மீது போனான்.
——————
பிரமன் முதலிய தேவர்களை வணங்கிச் செல்லுதல்
8750.
‘யாவதும் நிலைமைத் தன்மை இன்னது’ என்று, இமையா
நாட்டத்
தேவரும் தெரிந்திலாத வடமலைக்கு உம்பர்ச் சென்றான்;
நாவலம் பெருந் தீவு என்னா நளிர் கடல் வளாக வைப்பில்,
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தைக்
கண்டான்.–48-
இமையா நாட்டத் தேவரும் – இமையாத விழிகளைப் பெற்ற
தேவர்களும்; ‘நிலைமைத் தன்மை இன்னது’ என்று யாவதும்
தெரிந்திலாத – நிலையாக உள்ள தன்மையாவது எனச் சிறிதும்
தெரியவியலாத; ‘வடமலைக்கு உம்பர் சென்றான்’ – மேருமலைக்கு
மேலே சென்று; நளிர்கடல் வளாக வைப்பில் – குளிர்ந்த கடலால்
சூழப்பட்ட பூமியில்; நாவலம் பெருந்தீவு என்னா – நாவலம்
பெருந்தீவு என்று; காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா
மரத்தைக் கண்டான் – காவலை உடைய மூன்று உலகத்தாரும்
————-
8751.
அன்ன மா மலையின் உம்பர், உலகு எலாம் அமைத்த
அண்ணல்
நல் நெடு நகரம் நோக்கி, அதன் நடு நாப்பண் நாம
பொன் மலர்ப் பீடம்தன்மேல் நான்முகன் பொலியத்
தோன்றும்
தன்மையும் கண்டு, கையால் வணங்கினான்-தருமம்
போல்வான்.–49-
தருமம் போல்வான் – தருமதேவதை போன்றவனான அனுமன்;
அன்னமாமலையின் உம்பர் – அந்த மேருமலையின் உச்சியில்; உலகு
எலாம் அமைத்த அண்ணல் நல்நெடு நகரம் நோக்கி – உலகங்கள்
அனைத்தையும் படைத்த பிரம தேவனுடைய சிறந்த நகரைப்பார்த்து;
அதன் நடு நாப்பண் நாம பொன்மலர்ப் பீடம்தன்மேல் – அதன்
நட்ட நடுவில் புகழ்பெற்ற பொன்மலர்ப்பீடத்தின் மேல்; நான்முகன்
பொலியத் தோன்றும் – நான்முகக்கடவுள் பொலிவு பெற்றுத்
தோன்றும் தன்மையைக்; கண்டு கையால் வணங்கினான் – கண்டு
தன்கைகளால் வணங்கினான்.
—————
8752.
தரு வனம் ஒன்றில், வானோர் தலைத்தலை மயங்கித் தாழ,
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க,
மரு விரி துளவ மோலி, மா நிலக் கிழத்தியோடும்
திருவொடும் இருந்த, மூலத் தேவையும் வணக்கம்
செய்தான்.-50-
தருவனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கித்தாழ-
(பின்னர் அனுமன்) மரங்கள் நிறைந்துள்ள வனமொன்றில் தேவர்கள்
இடந்தொறும் இடந்தொறும் கலந்து வணங்கி நிற்க; பொரு அரு
முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க-ஒப்பற்ற முனிவர்கள்
வேத மந்திரங்களோடு புகழ்ந்து சொல்லும் ஒலி மிக்குத் தோன்ற;
மருவிரிதுளவ மோலி மாநிலக்கிழ்த்தியோடும் – மணம் வீசும் துளவமாலை அணிந்த முடியினை உடையனாய்ப்
பூதேவி யோடும்; திருவொடும் இருந்த மூலத்தேவையும் –
சீதேவியோடும் இருந்த எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ள
நாராயணனையும்; வணக்கம் செய்தான் – வணங்கினான்.
————-
8753.
ஆயதன் வட கீழ்ப் பாகத்து, ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி, ஐந்து கதிர் முகக் கமலம் காட்டி,
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த
சேயிழை பாகத்து, எண் தோள் ஒருவனை வணக்கம்
செய்தான்.–51-
ஆயதன் வடகீ்ழ்ப் பாகத்து – (பின்னர்) அம்மேருவின் வட
கிழக்கில்; ஆயிரம் அருக்கர் ஆன்ற காய்கதிர் பரப்பி – ஆயிரம்
சூரியர்களின் நிறைந்த ஒளிவீசும் கதிர்களைப் பரப்பிக் கொண்டு;
ஐந்து கதிர்முகக் கமலம் காட்டி – ஐந்து ஒளிவாய்ந்த முகங்களாகிய
தாமரைகளைக் காட்டிக் கொண்டு; தூயபேர் உலகம் மூன்றும் தூவிய
மலரின் சூழ்ந்த – தூயவான பெரிய உலகங்கள் மூன்றிலுள்ளோரும்
அருச்சனையாகத் தூவிய மலர்களால் சூழப் பெற்று; சேயிழை பாகத்து
எண்தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – செம்மையான
அணிகலன்களை அணிந்த மனோன்மணியை இடப்பாகத்தில்
கொண்டுள்ள எட்டுத் தோள்களை உடைய சதாசிவனைக் கண்டு
வணக்கம் செய்தான்.
——
8754.
சந்திரன் அனைய கொற்றத் தனிக் குடை தலையிற்று ஆக,
சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற,
அந்தர வான நாடர் அடி தொழ, முரசம் ஆர்ப்ப,
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து, இறைஞ்சிப்
போனான்–52-
சந்திரன் அனைய கொற்றத் தனிக்குடை தலையிற்று ஆக –
சந்திரனைப் போன்ற வெற்றிமைந்த ஒப்பற்ற குடை தலைமீது
நிழற்றவும்; சுந்தர மகளிர் அங்கைச் சாமரை தென்றல் தூற்ற –
அழகிய பெண்கள் தம் அழகிய கையில் தாங்கிய வெண்சாமரைகள்
தென்றல் (போலும்) இளங்காற்றை வீசவும்; அந்தரவானநாடர் அடி
தொழமுரசம் ஆர்ப்ப – ‘அந்தரம்’ எனப்படும் வான் நாட்டில் உள்ள
தேவர்கள் அடிவணங்கி நிற்க, முரசங்கள் ஆரவாரிக்க; இந்திரன்
இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சிப் போனான் – இந்திரன்
அரியணையில் இருந்த தன்மையைக் கண்டு மகிழ்ந்து வணங்கிப்
போனான்.
———
8755.
பூ அவர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும்
தேவர்தம் இருக்கையான் மேருவின் சிகர வைப்பில்,
மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான்.–53-
பூ அலர் மரத்தைப் போர்ப்ப அந்தரம் விரிந்து பொங்கும் –
மலர்கள் விரிந்து கற்பகத் தருவைச் சூழுமாறு போல விண்ணில்
விரிந்து உயர்ந்திருக்கின்ற; தேவர்தம் இருக்கை ஆன மேருவின் சிகர
வைப்பில் – தேவர்களின் இருப்பிடமான மேருமலையின்
சிகரங்களாகிய இடங்களில்; மூவகை உலகும் சூழ்ந்த முரண் திசை
முறையின் காக்கும் – மூவகையான உலகத்தைச் சூழ்ந்திருக்கின்ற
முரண்பட்ட திசைகள் எட்டையும் முறைமையாகக் காத்து நிற்கின்ற;
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரியக் கண்டான் – திசைக்
காவலர் எண்மரும் நிற்கின்ற தன்மையையும் தெளிவாகக் கண்டான்.
(அனுமன்).
————–
8756.
அத் தடங் கிரியை நீங்கி, அத் தலை அடைந்த வள்ளல்,
உத்தரகுருவை உற்றான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி,
செத்திய இருள் இன்றாக, விளங்கிய செயலை நோக்கி,
வித்தகன், ‘விடிந்தது!’ என்னா, ‘முடிந்தது, என் வேகம்!’
என்றான்.–54-
அத்தடங்கிரியை நீங்கி அத்தலை அடைந்த வள்ளல் – அந்தப்
பெரிய மேருமலையை விட்டு நீங்கி அப்பக்கத்தை அடைந்த
அனுமன்; உத்தரகுருவை உற்றான் – உத்தர குரு என்ற போக
பூமியை அடைந்தான்; ஒளியவன் கதிர்கள் ஊன்றி – அங்கு, ஒளியை
உடைய சூரியன் தன் கதிர்களைப் பரப்பி; செத்திய இருள் இன்றாக
விளங்கிய செயலை நோக்கி – நெருங்கிய இருள் இல்லையாம்படி
செய்து கொண்டு விளங்கிய செயலைப் பார்த்து; வித்தகன்,
“விடிந்தது!” என்னா, முடிந்தது, என்வேகம்!’ என்றான் –
திறமைமிக்கவனாகிய அனுமன், பொழுது விடிந்து விட்டது என்று
கருதி, ‘என் வேகம் முடிந்துவிட்டது’ என வருந்திக் கூறினான்.
———–
8757.
‘ஆதியான் உணராமுன்னம் அரு மருந்து உதவி, அல்லின்
பாதியால், அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச்
சோதியான் உதயம் செய்தான்; உற்றது ஓர் துணிதல்
ஆற்றேன்;
ஏது யான் செய்வது? என்னா, இடர் உற்றான், இணை
இலாதான்.–55-
இணை இலாதான் – ஒப்பற்றவனாகிய அனுமன்; ஆதியான் உணரா
முன்னம் அருமருந்து உதவி – ஆதிமூர்த்தியாகிய இராமன் மூர்ச்சை
தெளிதற்கு முன்பே அரிய மருந்தினைக் கொண்டு போய்க் கொடுத்து;
அல்லின்பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்குச் –
இரவின் பாதியிலேயே அத்துன்பத்தை நீக்க எண்ணி இருந்த எனக்கு;
சோதியான் உதயம் செய்தான் – பேரொளியை உடைய கதிரவன்
உதயஞ் செய்து விட்டான்; உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்- இனிப்
பொருந்திய செய்ல இன்ன தென்பதைத் துணிய இயலாதவனாக
இருக்கின்றேன்; ‘ஏது யான் செய்வது?’ என்னா இடர் உற்றான் –
(இப்போது) ‘யான் செய்ய வேண்டுவது எது?’ என்று
வருத்தமடைந்தான்.
————
8758.
கால் திசை சுருங்கச் செல்லும் கடுமையான்,-’கதிரின்
செல்வன்
மேல் திசை எழுவான்அல்லன்; விடிந்ததும் அன்று; மேரு
மாற்றினன், வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர்’ என்ன, துன்பம் தவிர்ந்தனன்-தவத்து மிக்கான்.–56-
தவத்து மிக்கான் – தவத்தாற் சிறந்தவனும்; கால் திசை சுருங்கச்
செல்லும் கடுமையான் – காற்றின் வேகம் குறையுமாறும் திசையின்
தொலைவு சுருங்குமாறும் செல்லுகின்ற விரைவினை உடையவனுமாகிய
அனுமன்; கதிரின் செல்வன் மேல் திசை எழுவான் அல்லன் –
கதிரினைச் செல்வமாக உடைய சூரியன் மேற்குத் திசையில் எழுகின்ற
இயல்புடையவன் அல்லன்; விடிந்ததும் அன்று; மேருமாற்றினன் –
இப்போது விடியற்காலமுமில்லை; மேருவில் தன் செலவை
மாற்றினவனாய்; வடபால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர்
சாற்றினர் – வடபுறத்தில் (உள்ளார்க்கு மேற்குத்திசையில்) தோன்றும்
என்பது, வேதம் பயின்றவர்கள் கூறியுள்ளனர்; என்ன, துன்பம்
தவிர்ந்தனன் – என்று எண்ணித் துன்பம் தணிந்தான்.
—————
உத்தர குரு நாட்டைக் கண்டு, அனுமன் அப்பால் போதல்
8759.
இருவரே தோன்றி, என்றும் ஈறு இலா ஆயுள் எய்தி,
ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி,
பொரு அரும் இன்பம் துய்த்து, புண்ணியம் புரிந்தோர்
வைகும்,
திரு உறை கமலம் அன்ன, நாட்டையும் தெரியக் கண்டான்.–57-
இருவரே தோன்றி, என்றும் ஈறுஇலா ஆயுள் எய்தி – (ஆண்
பெண் என்ற) இருவரே பிறந்து, என்றும் முடிவிலாத ஆயுளைப்
பெற்று; ஒருவரோடு ஒருவர், உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி –
ஒருவரோடு ஒருவர் உள்ளமும் உயிரும் ஒன்றே என்னுமாறு ஒற்றுமை
உடையராய்; பொரு அரு இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர்
வைகும் – ஒப்பற்ற இன்பம் துய்த்துக் கொண்டு, புண்ணியச்
செயல்களைச் செய்தோர் பொருந்தி இருப்பதான; திருஉறை கமலம்
அன்ன நாட்டையும் தெரியக் கண்டான் – திருமகள் வாழும் தாமரை
மலர்போன்ற உத்தர குரு நாட்டையும் கண்களால் தெரியக் கண்டான்.
—————–
8760.
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,
சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன்
தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை, புலன் கொள,
நோக்கிப்போனான்.–58-
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்-
வன்னி இலையைத் தரித்த பொன்னிறமான சடா மகுடத்தைத் தாங்கிய
சிவபெருமானும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவனும்;
கன்னிநாள் திருவைச் சேரும் கண்ணனும் – என்றும் மாறாக்
கன்னிமையுடைய திருமகளை மார்பிலே கொண்டுள்ள திருமாலும்;
ஆளும் காணி – ஆட்சி செய்கின்ற தலமாகி; சென்னி நாள்
தெரியல்வீரன் தியாக மா விநோதன் – தலையில் அன்றலர்ந்த
மலர்மாலையைப் புனைந்த வீரனும், தியாக மாவிநோதன் என்ற
சிறப்புப் பெயர் தாங்கியவனும் ஆகிய சோழனுடையதுமாகிய;
தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பை –
தெய்வத்தன்மையுடைய காவிரி பாயும் சோழ நாட்டுக்கு உவமையாகத்
தக்க அந்த உத்தரகுருவை; புலன் கொள நோக்கிப் போனான் –
அனுமன் கட்புலன் கொள்ளுமாறு கருத்தொடு நோக்கிச் சென்றான்.
தியாகமாவிநோதன்’ என்பது முதற்குலோத்துங்கன்
முதல் பல சோழ மன்னர்க்குப் பெயராக வருதலின் இதனைக்
கொண்டு கம்பனின் காலத்தை வரையறுத்தற்கியலாமற் போகின்றது.
————–
நீலமலைக்கு அப்பால் மருத்துமலையை அனுமன் காணுதல்
8761.
விரிய வன் மேரு என்னும் வெற்பினின்மீது செல்லும்
பெரியவன், அயனார் செல்வம் பெற்றவன், பிறப்பும்
போர்ந்தான்,
அரியவன், உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து
தோன்றும்
கரியவன் என்ன நின்ற, நீல மால் வரையைக் கண்டான்.–59-
வன்மேரு என்னும் வெற்பினின் மீதுவிரிய செல்லும் பெரியவன்
– வலிய மேரு என்னும் மலையின் மீது (வேகந்தாங்காது) பிளவுறுமாறு
செல்லும் பெரிய தோற்றத்தை உடையவனும்; அயனார் செல்வம்
பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் அரியவன் – பிரமனுடைய
பட்டத்தைப் பெறப் போகின்றவனும், பிறவித் துன்பத்தினின்றும்
நீங்கியவனும், குரங்கு வடிவினனுமாகிய அனுமன்; உலகம் எல்லாம்
அளந்தநாள் வளர்ந்து தோன்றும் – உலகம் அனைத்தையும் அளந்த
காலத்தில் பேருரு வினனாக வளர்ந்து தோன்றுகின்ற; கரியவன் என்ன
நின்ற நீல மால் வரையைக் கண்டான் – திருவிக்கிரமனாகிய கரியவன்
போல நின்ற பெரிய நீலமலையைக் கண்டான்.
———-
8762.
அல் குன்ற அலங்கு சோதி அம் மலை அகலப் போனான்,
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான்,
புலவன் சொன்ன
நல் குன்றம் அதனைக் கண்டான், உணர்ந்தனன்-’நாகம
முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம்’ என்ன.–60-
அல்குன்ற அலங்கு சோதி அம்மலை அகலப்போனான்-இருளும்
(தன் முன்னர்) ஒடுங்குமாறு (மிகக் கருநிறத்துடன்) விளங்கும்
சோதியையுடைய அம்மலை பின்னிடுமாறு கடந்து சென்றவனாகிய;
பொன்குன்றம் அனயை தோளான் நோக்கினான் –
பொன்மலைபோன்ற தோளினை உடைய அனுமன் கண்களால் நோக்கி;
புலவன் சொன்ன நல்குன்றம் அதனைக் கண்டான் – அறிஞனாகிய
சாம்பவன் சொன்ன நல்லமருந்துமலையைக் கண்டு; தெய்வமருந்து
அடையாளம் நாகம் முற்ற எல்குன்ற எறியும் என்ன உணர்ந்தனன்
-தெய்வத்தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும்
சூரியனுடைய ஒளி குறையுமாறு ஒளிவிடுவது என்ன ஊகித்துத்
தெரிந்து கொண்டான்.
———–
மருத்து மலையை அனுமன் பெயர்த்து எடுத்து மீளுதல்
8763.
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன, கடுத்து வந்து,
காய்ந்தது, ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்?
கழறுக!’என்ன,
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச்
சொன்னான்.–61-
பாய்ந்தனன் பாய்தலோடும் – (மருத்துமலையைத் தெரிந்த
அனுமன்) அந்த மலைமீது பாய்ந்தான், அங்ஙனம் பாய்ந்த உடனே;
அம்மலை பாதலத்துச் சாய்ந்தது – அம் மருத்துமலை பாதலத்தில்
சாய்ந்தது; காக்கும் தெய்வம்சலித்தன – (அம் மருந்துகட்குக்) காவலாக
இருந்த தேவதைகளும் மனம் தளர்ந்தன; கடுத்து வந்து காய்ந்தது –
(பிறகு தேறி) விரைந்துவந்து சினம் கொண்டு; ‘நீதான் யாவன்? கருத்து என்கொல்? கழறுக!’ என்ன –
(அனுமனைப் பார்த்து) ‘நீ யாவன்? (உன்) எண்ணம் யாது? சொல்லுக!’
என்று கேட்க; ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச்
சொன்னான் – ஆராயுந் தன்மை உள்ளவனாகிய அனுமன் தான்
வந்ததற்குரிய காரணத்தை அத்தேவதைகள் அறிந்து கொள்ளுமாறு
கூறினான்.
————
8764.
கேட்டு அவை, ‘ஐய! வேண்டிற்று இயற்றி, பின் கெடாமல்
எம்பால்
காட்டு’ என உரைத்து, வாழ்த்திக் கரந்தன; கமலக்கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி, மறைந்தது; மண்ணின்நின்றும்
தோட்டனன், அனுமன் மற்று அக் குன்றினை, வயிரத்
தோளால்–62-
கேட்டு அவை, ‘ஐய! வேண்டிற்று இயற்றி – அனுமன் கூறிய
வற்றைக் கேட்ட அத் தெய்வங்கள், ‘ஐயனே! (இம்மருந்துகளால்)
(உனக்கு ஆக) வேண்டுவனவற்றைச் செய்து முடித்துக் கொண்டு; பின்
கெடாமல் எம்பால் காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன-
‘பின்பு இம்மருந்து கெடாதபடி கொண்டு வந்து எமக்குக் காட்டுவாயாக!’
எனக்கூறி அவனை வாழ்த்திவிட்டு மறைந்தன; கமலக் கண்ணன் வாள்
தலை நேமி தோன்றி, மறைந்தது – (பின்பு) தாமரைமலர் போன்ற
கண்களை உடையவனான திருமாலின் கூரிய முனையை உடைய
சக்கரப்படை வந்து தோன்றி அதுவும் மறைந்தது; அனுமன், மற்று
அக்குன்றினை மண்ணின் நின்றும் வயிரத் தோளால் தோட்டனன்-
பின்பு அனுமன் அந்த மருந்து மலையை மண்ணில் நின்றும் தன்
வயிரம் போன்ற தோளினால் பெயர்தது எடுத்தான்.
———-
8765.
‘இங்கு நின்று, இன்னன மருந்து என்று எண்ணினால்,
சிங்குமால் காலம்’ என்று உணரும் சிந்தையான்,
அங்குஅது வேரொடும் அங்கை தாங்கினான்,
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான்.–63-
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் –
‘இவ்விடத்தில் நின்று இன்னவை நமக்குத் தேவையான மருந்துகள்
என்று ஆராய்வோமானால்; காலம் சிங்குமால் என்று உணரும்
சிந்தையான் – காலம் கழியும் என்று உணர்ந்த மனத்தினனான
அனுமன்; அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான்- அப்போது
அம்மலையினை வேருடன் அழகிய கரத்தில் தாங்கிக் கொண்டு;
பொங்கிய விசும்பிடைக் கடிது போகுவான் – விரிந்து பரந்த ஆகாய
வழியே விரைந்து செல்பவனானான்.
————-
8766.
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து,
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை,
‘ஏ’ எனும் மாத்திரத்து, ஒரு கை ஏந்தினான்.
தாயினன்-உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்.–64-
உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான்- உலகம் முழுமையும் பரவிய
புகழை உடையவனான அனுமன்; ஆயிரம் யோசனை அகன்று
மீஉயர்ந்து – ஆயிரம் யோசனை அளவு விரிந்தும், ஆயிரம்
யோசனை அளவுமேல் உயர்ந்தும்; ஆயிரம் யோசனை ஆழ்ந்தது
அம்மலை – ஆயிரம் யேசானை அளவு தரையில் ஆழ்ந்தும்
உள்ளதாகிய அச்சஞ்சீவி மலையை; ‘ஏ’ எனும் மாத்திரத்து, ஒரு கை
ஏந்தினான் தாயினன் – ‘ஏ’ எனும் காலத்திற்குள் ஒரு கையில் ஏந்திக்
கொண்டு தாவிச் சென்றான்.
————
அனுமனை அனுப்பிய பின், சாம்பனும் விடணனும் இராமனைச்
சென்று காணுதல்
8767.
அத் தலை, அன்னவன் அனையன் ஆயினான்;
இத் தலை, இருவரும் விரைவின் எய்தினார்,
கைத் தலத்தால் அடி வருடும் காலையில்,
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம் அரோ.–65-
அத்தலை, அன்னவன் அனையன் ஆயினான்-அவ்விடத்து அவ்
அனுமன் அத்தன்மையன் ஆயினான் (அக்காலத்தில்); இத்தலை,
இருவரும் விரைவின் எய்தினார் – இங்கே, (போர்க்களத்தில்) சாம்பன்
வீடணன் என்ற இருவரும், விரைவாக இராமனை அடைந்தவராய்;
கைத் தலத்தால் அடி வருடும் காலையில் – தம் கைகளால்
அவனுடைய திருவடிகளைப் பற்றி வருடும் போது; உத்தமற்கு
உற்றதை உணர்த்துவாம் அரோ – உத்தமனாகிய அவ்விராமனுக்கு
நிகழ்ந்ததைக் கூறுவோம்.
———–
8768.
வண்டு அன மடந்தையர் மனதை வேரொடும்
கண்டன, கொள வரும் கருணைதாம் எனக்
கொண்டன, கொடுப்பன வரங்கள், கோள் இலாப்
புண்டரீகத் துணை தருமம் பூத்தென;–66-
வண்டு ஆன மடந்தையர் மனத்தை வேரொடும் கண்டன –
(தம்மீது படிந்திருக்கும்) வண்டு எனும்படி, மகளிரின் உள்ளத்தை
வேரோடு கொண்டனவும் கொளவரும் கருணைதாம் எனக கொண்டன
– (எல்லா உயிர்களும் முகந்து) கொள்ளும்படி எழுகின்ற கருணையே
தாம் என்னும்படி அதனை நிரம்பக் கொண்டனவும்; வரங்கள்
கொடுப்பன – வரங்களைத் தருவனவும் ஆகிய; கோள்இலாப்
புண்டரீகத்துணை தருமம் பூத்தென – மாறுபாடில்லாத தாமரைமலர்
போன்ற விழியிணைகள் தருமம் போன்று மலர்ந்து திகழ்ந்தன.
———-
8769. நோக்கினன்-கரடிகட்கு அரசும், நோன் புகழ்
ஆக்கிய நிருதனும், அழுத கண்ணினர்,
தூக்கிய தலையினர், தொழுத கையினர்,
ஏக்கமுற்று, அருகு இருந்து, இரங்குவார்களை.–67-
கரடிகட்கு அரசும், நோன்புகழ் ஆக்கிய நிருதனும் – (அங்ஙனம்
மலர்ந்த கண்களை உடைய இராமன்) கரடிகட்கு அரசனாகிய
சாம்பவனும், மிக்க புகழ் பெற்ற வீடணனும்; அழுத கண்ணினர்,
தூக்கிய தலையினர் தொழுதகையினர் – அழுத கண்ணினராய்,
தூக்கிய தலையினை உடையராய், தொழுதகையினை உடையராய்;
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை நோக்கினன் –
துன்பமுற்றுத் தன்னருகில் இருந்து கொண்டு இரங்குகின்றவர்களைக்
கண்டான்.
—————
இராமன் அவர்களை உசாவுதல்
8770. ‘ஏவிய காரியம் இயற்றி எய்தினை?
நோவிலை? வீடணா!’ என்று நோக்கி, பின்,
தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன்தன்னை, ‘நீ
ஆவி வந்தனைகொல்?’ என்று அருளினான் அரோ.–68-
“வீடணா! ஏவிய காரியம் இயற்றி எய்தினை? – (கண் விழித்துப்
பார்த்த இராமன்)’ வீடணா யான் ஏவிய (உணவு கொணர்வதாகிய)
காரியத்தைச் செய்து வந்தாயோ?; நோவிலை? என்று நோக்கி –
(ஆகவே பிரமாத்திரத்தினால் எய்திய) நோவிலை யன்றோ? என
வீடணனை நோக்கி வினவியபின்; தா அரும் பெரும் புகழ்ச் சாம்பன்
தன்னை – குற்றமற்ற பெரும்புகழையுடைய சாம்பவன் தன்னையும்
பார்த்து; ‘நீ ஆவி வந்தனை கொல்?’ என்று அருளினான் அரோ-
‘நீ உயிர் வரப் பெற்றனையோ? என்று கேட்டருளினான் இராமன்.
——————
8771. ‘ஐயன்மீர்! நமக்கு உற்ற அழிவு இது ஆதலின்,
செய்வகை பிறிது இலை; உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர்; இனிச் செயற்கு உரியது உண்டுஎனின்,
பொய் இலீர்! புகலுதிர், புலமை உள்ளத்தீர்!–69-
‘ஐயன்மீர்! இது நமக்கு உற்ற அழிவு ஆதலின் – ‘ஐயன்மீர்! இது
நமக்கு நேர்ந்த அழிவேயாகலின்; செய்வகை பிறிது இலை – இதற்கு
மாறாகச் செய்யும் செயல்வேறு இல்லை; உயிரின் தீர்ந்தவர் உய்கிலர்
– உயிர் நீங்கினவர் மீண்டும் பிழைக்கமாட்டார்கள்; இனிச் செயற்கு
உரியது உண்டு எனின் – இனிச் செய்வதற்குரிய செயல் ஏதேனும்
இருப்பின்; பொய் இலீர்! புலமை உள்ளத்தீர் புகலுதிர்’ –
பொய்மையில்லாத அறிவுசான்ற மனத்தை உடையவர்களே கூறுங்கள்.
———–
8772. ‘சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய
பேதையேன், சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன்! உலகொடு ஈர்வுறாக்
காதை, வன் பழியொடும் நிறுத்திக் காட்டினேன்.
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – சீதை என்ற
ஒருத்தி காரணமாக மனம் வருத்திய; பேதையேன், சிறுமையால்
உற்றபெற்றியை – அறிவிலியாகிய யான் என் கீழ்மையால் அடைந்த
தன்மையை; யாது என உணர்த்துகேன்! – என்னவென்று
சொல்லுவேன்? உலகொடு ஈர்வுறாக் காதை – உலகத்தோடு
பொருந்தாத (இந்தஎன்) வாழ்க்கைக் கதையை; வன்பழியொடும்
நிறுத்திக் காட்டினேன் – கொடிய பழியோடும் பொருந்துமாறு
செய்து காண்பித்தேன்.
————-
8773. ‘“மாயை இம் மான்” என, எம்பி, வாய்மையான்,
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்,
போயினென்; பெண் உரை மறாது போகலால்,
ஆயது, இப் பழியுடை மரணம்-அன்பினீர்!–71-
அன்பினீர் – அன்புடையவர்களே! “மாயை இம்மான்” என எம்பி,
வாய்மையான் சொன்ன – ‘மாயமான்இது’ என என் தம்பி
உண்மையாகக் கூறிய; தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன்-
தூய்மையான உறுதிமிக்கவாகக் கூறிய சொற்களைக் கொள்ளாமல்;
பெண் உரைமறாது போயினென் – பெண் உரை மறுக்காமல் அந்த
மானின்பின்னே போயினன்; போகலால்,இப்பழியுடை மரணம் ஆயது – அங்ஙனம் போனதால்
இப்பழியுடைய மரணம் உண்டாயிற்று.
————–
8774.
‘கண்டனென், இராவணன்தன்னைக் கண்களால்;
மண்டு அமர் புரிந்தனென், வலியின்; ஆர் உயிர்
கொண்டிலென், உறவு எலாம் கொடுத்து, மாள, நான்,
பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால்.–72-
இராவணன் தன்னைக் கண்களால் கண்டனென் – ‘இராவணன்
தன்னை என் கண்களால் கண்டேன்; வலியின் மண்டு அமர்
புரிந்தனென் – அவனோடு வலிமையால் நெருங்கிய போரையும்
செய்தேன்; பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால் – (ஆனால்)
பழைய என் தீவினைப் பயனால்; உறவு எலாம் கொடுத்து நான் மாள
– என் உறவாக உள்ள எல்லோரையும் பறிகொடுத்து நான்மாளும்படி;
ஆர் உயிர் கொண்டிலென் – அவன் ஆருயிரைக் கொள்ளாது
விட்டேன்.
————-
8775. ‘“தேவர்தம் படைக்கலம் தொடுத்து, தீயவன்
சாவது காண்டும்” என்று இளவல் சாற்றவும்,
ஆவதை இசைந்திலென்,-அழிவது என்வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வெம்மையால்.–73-
இளவல், “தேவர் தம் படைக்கலம் தொடுத்து – என்தம்பி,
‘பிரமதேவர்தம் படைக்கலத்தைத் தொடுத்து; “தீயவன் சாவது
காண்டும்” என்று சாற்றவும் – தீயவனாகிய இந்திரசித்து
சாவதைக்காண்போம்” என்று கூறவும்; என்வயின் அழிவது மேவுதல்
உறுவது ஓர் விதியின் வெம்மையால் – என்னிடத்தில் அழிவு
பொருந்துதற்குக் காரணமான ஒரு விதியின் கொடுமையால்; ஆவதை
இசைந்திலென் – பொருத்தமான அச்செயலை உடன்படாது
போயினேன்.
———-
8776. ‘நின்றிலென், உடன், நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்;
பொன்றினர் நமர் எலாம்; இளவல் போனினான்;
வென்றிலென் அரக்கனை, விதியின் மேன்மையால்.–74-
உடன் நின்றிலென் – என் தம்பியுடன் போர்க்களத்தில்
நின்றிலேன்; எறிபடைக்கு நீதியால் ஒன்றிய பூசனை இயற்ற
உன்னினேன் – எறிகின்ற படைக்கலன்களுக்கு முறைமைப்படி
பொருந்திய பூசையைச் செய்யக் கருதினேன்; நமர் எலாம்
பொன்றினர் – நம்மவர் எல்லாம் இறந்தனர்; இளவல் வென்றிலென்
அரக்கனை விதியின் மேன்மையால் போயினன் – என் தம்பியும்
இந்திரசித்தனை வெல்லாமல் தீவினையின் மிகுதியால் இறந்து
போயினன்.
————-
8777. ‘ஈண்டு, இவண் இருந்து, இவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று; இனி, அமரின் வீடிய
ஆண் தகை அன்பரை அமரர் நாட்டிடைக்
காண்டலே நாம்; பிற கண்டது இல்லையால்.–75-
ஈண்டுஇவண் இருந்து இவை இயம்பும் ஏழைமை வேண்டுவது
அன்று – இப்போது இங்கே இருந்து இவற்றைச் சொல்லுகின்ற
பேதைமை வேண்டத் தகுவதன்று; இனி அமரின் வீடிய ஆண் தகை
அன்பரை – இனி போரில் இறந்துபட்ட ஆண் தகையாகிய
இலக்குவனையும், அன்பர்களையும்; அமரர் நாட்டிடைக் காண்டலே
நலம் பிற கண்டது இல்லையால் – (இறந்துபோய்) வீரசுவர்க்கத்தில்
காண்பதே நல்லது, இதைத் தவிரவேறு வழி தோன்றவில்லை.
————
8778. ‘எம்பியைத் துணைவரை இழந்த யான், இனி,
வெம்பு போர் அரக்கரை முருக்கி, வேர்அறுத்து,
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து,
உம்பருக்கு உதவி, மேல் உறுவது என்அரோ?–76-
எம்பியைத் துணைவரை இழந்தயான் – என் தம்பியையும்
துணைவரையும் இழந்துவிட்ட நான்; இனி வெம்புபோர் அரக்கரை
முருக்கி வேர் அறுத்து – இனிமேல் மனம் வெதும்பிச் செய்கின்ற
போரில் அரக்கரைக் கொன்று அடியோடு அழித்துவிட்டு; அம்பினின்
இராவணன் ஆவி பாழ்படுத்து – என் அம்பினால் இராவணன்
உயிரையும் ஒழித்துவிட்டு; உம்பருக்கு உதவி மேல் உறுவது என் – தேவர்களுக்கு உதவி செய்து யான் இனி அடையப்
போவது என்ன இருக்கின்றது? அரோ – அசை.
———–
8779. ‘இளையவன் இறந்தபின், எவரும் என் எனக்கு?
அளவு அறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்?
கிளை உறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்?
விளைவுதான் என்? மறை விதி என்? மெய்ம்மை என்?–77-
இளையவன் இறந்தபின் எனக்கு எவரும் என்? – என் தம்பி
இறந்தபின் எனக்கு எவராயிருந்தால் என்ன? அளவறு சீர்த்தி என்?
அறன் என்? ஆண்மை என்? – எல்லையற்ற புகழ் எதற்கு? அறம்
எதற்கு? ஆண்மை எதற்கு?கிளைஉறு சுற்றம் என்? அரசு என்?
கேண்மை என்? – பல்கித் தழுவும் சுற்றத்தார் எதற்கு? அரசாட்சி
எதற்கு? நண்பர்கள்தான் எதற்கு? விளைவுதான் என்? மறைவிதி
என்? மெய்மைஎன்? – (ஏற்படப் போகும்) விளைவுகள் பற்றி என்ன?
வேதவிதிகள் என்ன? மெய் நெறிதான் எதற்கு?
———-
8780. ‘இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு,
அரக்கரை வென்று நின்று, ஆண்மை ஆள்வெனேல்,
மரக் கண் வன் கள்வனே, வஞ்சனேன்; இனி,
கரக்குமது அல்லது, ஓர் கடன் உண்டாகுமோ?–78-
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறுகண்டு – இரக்கம் எனும் பண்பு
கெட்டொழியும்படி என்தம்பியின் இறுதியைக் கண்டபின்பும்;
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல் – அரக்கரை
வென்றுநின்று என்வீரத்தைப் பெரிது படுத்திக் காட்டுவேனாயின்;
வஞ்சனேன் மரக்கண் வன்கள்வனே! – வஞ்சகத் தன்மையை உடைய
யான் (அம்பினால்) சுரக்கும் தன்மையற்ற மரக்கண்ணை உடைய
கள்வனே!; இனி கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ? – இனி (உலகின் முன் தோன்றாது) ஒளிந்து
கொள்வதல்லாது வேறு ஓர் கடமை இருக்குமோ? (இராது).
———–
8781. ‘“தாதையை இழந்தபின், சடாயு இற்றபின்
காதலின் துணைவரும் மடிய, காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய, கோள் இலன்,
சீதையை உவந்துளான்” என்பர், சீரியோர்.–79-
தாதையை இழந்தபின் சடாயு இற்றபின் – தந்தையை இழந்த
பின்னும் அம்முறையினனாகிய சடாயு இறந்த பின்னும்; காதலின்
துணைவரும் முடிய – அன்புடைய நண்பரெல்லாம் உயிர் நீங்கப்
பெறவும்; காத்து உழல் கோது அறு தம்பியும் விளிய – (இரவு
பகலாக) என்னைப் பாதுகாத்து வருத்தமுற்ற குற்றம் இலாத தம்பியான
இலக்குவனும் இறந்துபடவும்; ‘சீதையை உவந்துளான், கோள் இலன்”
என்பர் சீரியோர் – (தான் மட்டும் இறவாது) சீதையை விரும்பி
இருக்கின்றான், (ஆதலால்) நல்ல கொள்கை இல்லாதவன் இராமன்
என்று சீர்மையுடையவர்கள் கூறுவர்.
————
8782. ‘வென்றனென், அரக்கரை வேரும் வீய்ந்து அறக்
கொன்றனென், அயோத்தியைக் குறுகினேன், குணத்து
இன் துணை எம்பியை இன்றி, யான் உளேன்;
நன்று அரசு ஆளுமா, சால நன்றுஅரோ.–80-
அரக்கரை வென்றனென் – அரக்கரை வெற்றிகொண்டு; வேரும்
வீய்ந்து அறக் கொன்றனென் – அவர்களை வேரும் அற்றுப்
போகுமாறு கொன்று; அயோத்தியைக் குறுகினேன் – அயோத்தியை
அடைந்து;குணத்து இன் துணை எம்பியை இன்றி – நற்பண்புகள்
நிறைந்த இனிய துணைவனான தம்பி இல்லாமல்; யான் உளேன்
நன்று! – நான் மட்டும் உயிர்வாழ்வதோ? நல்லதே! அரசு ஆளுமா
சாலநன்று – அரசும் ஆளுவதோ? மிகவும் நல்லதே!
————
8783. ‘படி இனது ஆதலின், யாதும் பார்க்கிலென்,
முடிகுவென், உடன்’ என முடியக் கூறலும்,
அடி இணை வணங்கிய சாம்பன், ‘ஆழியாய்!
நொடிகுவது உளது’ என நுவல்வதாயினான்:–81-
படி இனது ஆதலின் யாதும் பார்க்கிலென் – (என்) நிலைமை
இவ்வாறு இருப்பதினால், பின் விளைவுகளைப் பாராமல்; ‘உடன்
முடிகுவன்’ என முடியக் கூறலும் – ‘உடனே இறப்பேன்’ என்று
முடிவாகக் (இராமன்) கூறியபோது; அடி இணை வணங்கிய சாம்பன் –
(அவ் இராமனுடைய) திருவடிகளை வணங்கிய சாம்பவன்; ‘ஆழியாய்!
நொடிகுவது உளது’ என நுவல்வதாயினான் – ‘சக்கரப்படையை
உடையவனே! யான் சொல்லவேண்டுவது உளது’ என்று சொல்லத்
தொடங்கினான்.
————
8784. ‘உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன்; மொழிதல் தீது, அது;
என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்;
பின்னரே தெரிகுதி-தெரிவு இல் பெற்றியோய்!–82-
தெரிவு இல் பெற்றியோய் – எவராலும் தெரிந்துகொள்ள முடியாத
(அளத்தற்கரிய) தன்மையே! உன்னை நீ உணர்கிலை – உன்னை நீ
உணராமல் இருக்கின்றாய்; அடியனேன் உனை முன்னமே அறிகுவேன்
– அடியேன் உன்னை முன்னமே அறிவேன்; அது, மொழிதல் தீது
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – அதைக் கூறுதல்
நன்றன்று ஏனென்றால் வானவர் b எண்ணத்திற்குக் குறைவாகும்;
பின்னரே தெரிகுதி! – (உன்தன்மையை நீ) பின்னர் நீயே தெரிந்து
கொள்வாய்!
————-
8785. ‘அம்புயத்து அயன் படை ஆதல் தேறினேன்,
உம்பியை, உலப்பு அரும் உருவை ஊன்றிட,
வெம்பு போர்க் களத்திடை வீழ்த்த வென்றியால்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்;–83-
எம் பெருந் தலைவ! – எம்முடைய பெருமை சான்ற தலைவனே!
வெம்பு போர்க்களத்திடை – வெம்மை மிக்க போர்க்களத்தின்
கண்ணே; உலப்பு அரும் உருவை ஊன்றிட – அழிப்பதற்கரிய உடலில்
ஆழப் பதிந்து; உம்பியை வீழ்த்த வென்றியால் – உன் தம்பியாகிய
இலக்குவனை வீழ்த்திய வெற்றியினால்; அம்புயத்து அயன்படை
ஆதல் தேறினேன் – அது (இந்திரசித்தனால் ஏவப்பட்டது) அழகிய
புயங்களுடைய பிரமனுடைய கணை என்பதனை அறிந்தேன். ஈது
எண்ணம் உண்மையால் – இந்த என் எண்ணம் உண்மையானதாகும்.
————–
8786.
‘அன்னவன் படைக்கலம், அமரர் தானவர்-
தன்னையும், விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைத்திலது, ஒழிந்து நீங்கியது;
இன்னமும் உவமை ஒன்று எண்ண வேண்டுமோ?–84-
அன்னவன் படைக்கலம் விடின் – அந்தப் பிரமனுடைய
படைக்கலத்தைவிட்டால்; அமரர் தானவர் தன்னையும் உயிர்
குடிக்கும் – தேவர்கள் அசுரர்கள் ஆகிய எவர்களையும் உயிர்
குடிக்கும் தன்மையது; தற்பர, உன்னை ஒன்று இழைத்திலது –
(அத்தகையபிரமாத்திரம்) எல்லாப் பொருளுக்கும் மேலானவனே!
உன்னை ஒன்றுஞ் செய்யாது, ஒழிந்து நீங்கியது – விலகி நீங்கியது;
இன்னமும் உவமை ஒன்று எண்ண வேண்டுமோ? – (எனவே)
இன்னமும் (இதுபிரமாத்திரந்தான் என்பதற்கும், வலிமைமிக்கது
என்பதற்கும்) இந்தப்படைக்கு வேறு உவமை கருதற்குரியதோ?
—————-
8787. ‘பெருந் திறல் அனுமன், ஈண்டு உணர்வு பெற்றுளான்,
அருந் துயர் முடிக்குறும் அளவு இல் ஆற்றலான்,
மருந்து இறைப் பொழுதினில் கொணரும் வாய்மொழி
பொருத்தினன், வட திசைக் கடிது போயினான்.–85-
பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் –
பெருவன்மைபடைத்த அனுமன் இப்போது தன்னினைவு எய்தப்
பெற்றனன்;அருந்துயர் முடிக்குறும் அளவு இல் ஆற்றலான் –
(நமக்கு ஏற்பட்டுள்ள) நீக்குதற்கரிய துன்பத்தைத் தீர்த்து வைக்கக்
கூடிய அளவற்ற ஆற்றல்களை உடையவன் அவன்; மருந்து இறைப்
பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன் – (ஆதலால்
அவன் இறந்தவரை எழுப்புகின்ற) ”மருந்தினை இமைப்பொழுதில்
கொணர்வாயாக” என்ற என்னுடை மொழியை ஏற்றவனாய்; வடதிசை
கடிது போயினான் – வடதிசை நோக்கி விரைந்து போயிருக்கின்றான்.
————-
8788. ‘பனி வரை கடந்தனன், பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்,
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்!–86-
பனிவரை கடந்தனன் – (அனுமன் இப்போது)
இமயமலையைக்கடந்து; பருப்பதங்களின் தனிஅரசு அதன்புறம்
தவிர்ந்து – மலைகட்கெல்லாம் ஒப்பற்ற அரசாகியமேருமலையின்
புறத்தை நீங்கி; சார்ந்துளான் – அம்மருந்துள்ள மலையைச்
சார்ந்திருக்கின்றான்; இனி ஒரு கணத்தில்வந்து எய்தும் – இன்னும்
ஒரு கணப் போதில் வந்து சேர்ந்துவிடுவான்; தொல்லையோய் –
பழமையானவனே! ஈண்டுறும் துனிவருதுன்பம் நீ துறத்தி – இங்கு நீ
அடைகின்ற மனம் கலங்குதற்குக் காரணமான பெருந்துன்பத்தை
விடுவாயாக.
———
8789.
‘யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் –
தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய
கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,-
வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற.–87-
வேனிலான் மேனியாய் – வசந்தகாலத்திற்கிறைவனாகிய மன்மதன்
போன்ற மேனி அழகு உடையவனே! யான் அலால் எந்தையாய்
உலகை ஈன்றுளான் தான் அலால் – யான் அல்லது, என் தந்தையாய்
இவ்வுலகைப் படைத்தவனாகிய பிரமன் அல்லது; சிவன் அலால்,
நேமிதாங்கிய கோன் அலால் – சிவன் அல்லது, சக்கரப்படை தரித்த திருமால் அல்லது; எனைவரும்
மருந்தை மெய் உற உணரும் கோள் இலர் – மற்றுள்ள
எத்தன்மையோரும் அம்மருந்தை மெய்மையாக உணரும் தன்மையர்
அல்லர்.
———-
8790.
‘ஆர்கலி கடைந்த நாள், அமிழ்தின் வந்தன;
கார் நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;
மேருவின் உத்தரகுருவின்மேல் உள;
யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின;–88-
ஆர்கலி கடைந்தநாள் அமிழ்தின் வந்தன – (அம்மருந்துகள்)
திருப்பாற் கடலைக் கடைந்த காலத்தில் அமிழ்தினோடு தோன்றியவை;
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – மேக வண்ணனாகிய
திருமாலின் சக்கரப்படையால் பாதுகாக்கப்படுவன; மேருவின் உத்தர
குருவின் மேல் உள – மேருவின் வடபால் உள்ள உத்தரகுரு
நாட்டிற்கும் அப்பால் உள்ளன; யாரும் மற்று உணர்கிலா அரணம்
எய்தின – யாரும் நெருங்கி அறியவியலாத வண்ணம் பாதுகாவல்
பொருந்தியன.
———–
8791.
‘தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில்;
ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்;
மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள்,
ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால்.–89-
தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில் – (அம்மருந்துகள்
பாற்கடலில்) தோன்றிய நாள் முதல் யாராலும் தொடப்படாதவை;
ஆன்றபேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல்கேள் – விரிந்து புகழை
உடைய அண்ணலே! அம்மருந்துகளின் ஆற்றலைக் கேட்பாயாக;
மூன்று என ஒன்றிய உலகம் – மூன்று என்னுமாறு, பாதலம், பூதலம்,
மீதலம் என ஒன்றிய உலகங்களை; முன்னை நாள் ஈன்றவன்
இறப்பினும் ஆவி ஈயுமால் – பண்டு படைத்த பிரமன் இறந்தாலும்
அவனுக்கும் உயிரைக் கொடுக்க வல்லவை.
————
8792. ’சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள்
புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின
நல் உயிர் நல்குவது ஒன்று; நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்!–90-
தொல்லையோய் – பழமையானவனே! சல்லியம் அகற்றுவது
ஒன்று – (அம்மருந்துகளுள்) உடம்பில் பதிந்துள்ள அம்புகளை
அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று –
மூட்டுக்கள் பொருந்துமாறு பொருத்துவது ஒன்று; போயின நல்லுயிர்
நல்குவது ஒன்று – போன நல்லுயிரை மீட்டுக் கொடுப்பது ஒன்று;
நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று – பழைய நல்ல
நிறத்தை உண்டாக்குவது ஒன்று.
—————
8793. ‘வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி,
தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்;
அருமையது அன்று’ எனா, அடி வணங்கினான்;
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான்.–91-
‘வருவது திண்ணம்’ நீ வருந்தல் – ‘மருந்துகள் வருவது உறுதி! நீ
வருந்தாதே; மாருதி தருநெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன் –
அனுமன், கொண்டுவரும் வழியினைத் தருமதேவதையே காட்டக்காலம்
தாழ்க்காமல் கொண்டுதருவன்; ‘அருமையது அன்று’ எனா
அடிவணங்கினான் – அது அவனுக்கு அருமையுடையது அன்று’
என்று சொல்லிச் சாம்பவன் இராமனடியை வணங்கினான்; இருமையும்
துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – (தன்னை அடைந்தவர்களின்
இம்மை மறுமைகளை மாற்றி வீட்டின்பத்தைத்தருபவனாகிய) இராமன்
மகிழ்ச்சி அடைந்தான்.
————–
அனுமன் மலை கொண்டு வருதல்
8794.
‘“பொன்மலைமீது போய், போக பூமியின்
நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்’
என்னலும், விசும்பிடை எழுந்தது, அங்கு ஒலி,–92-
“பொன்மலை மீது போய் போக பூமியின் – “பொன் மலையாகிய
மேருவின் மேற்சென்று போக பூமிக்கு அப்பால் உள்ள; நல் மருந்து
உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு – நல்ல மருந்தை அனுமன் உதவுவான்” என்று நீ சொன்ன
நல்லசொல்லுக்கு; அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன்
அலேன் என்னலும் – பொருத்தம் இல்லை என்று யான் ஐயுறவு
கொள்ளவில்லை” என்று இராமன் சொல்லுதலும்; அங்கு விசும்பிடை
ஒலி எழுந்தது – அங்கே வானிடத்தே பேரொலி எழுந்தது.
————
8795. கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை
இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்டமாருதம்
வட திசை தோன்றிய மறுக்கம் வந்ததால்.–93-
கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர – கடல் பொங்கி எழுந்து கரை
கடந்து செல்லவும்; கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற – கரிய
மலைகள் நடுநடுவே பறியுண்டு இடையில் முறிந்து விண்மேல் ஏறவும்;
தடை இலது உடற்றுறு சண்டமாருதம் – தங்கு தடையில்லாமல்
வீசுகின்ற சண்டமாருதம்; வடதிசை தோன்றிய மறுக்கம் வந்ததால் –
வடதிசையில் தோன்றியதாலாகிய கலக்கம் உண்டாகியது.
————-
8796. மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை
மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான்,
தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால்.–94-
மீன்குலம் குலைந்து உக – (அனுமன் வரும் வேகத்தால் உண்டான
பெருங்காற்றால்) விண்மீன் கூட்டங்கள் நிலை தடுமாறிச் சிந்தவும்;
வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர்மதி தழுவ – வெயிலினை
உடைய சூரியமண்டலம் நிலை கலங்கி உயர்ந்த சந்திரனைத்
தழுவவும்; தன்னுழை மான்குலம் வெருக் கொள – அந்தச்
சந்திரனிடத்து உள்ள மான் அச்சங்கொள்ளவும்; வான் தேன்குலம்
கலங்கிய நறவின் மயங்கி மண்டி சென்றவால் – மேகக் கூட்டம்
தேன்கூட்டில் கலங்கி எழுந்த தேனீக்கள் போலக் கலங்கி நெருங்கிச்
சென்றன.
————
8797. வேர்த்துள தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல்
தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும்,
ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான்.–95-
வேர்த்துள தூரொடு விசும்பை மீச்செலப் போர்த்தன –
வேரோடு கூடிய புதரினோடும், வானத்தின் மேல் செல்லுமாறு
மூடிக்கொண்டுள்ள;மலையொடுமரனும் முன்பு போல் வேலையைத்
தூர்த்தன – மலையோடு மரமும் அணைகட்டிய காலத்தைப் போலக்
கடலைத் தூர்த்தன; காலின் தோன்றலும் – காற்றின் மகனான
அனுமனும்; அனையவர் அரந்தை ஆற்றுவான் ஆர்த்தனன் –
அங்குள்ள சாம்பவன் முதலானோரின் துன்பத்தை (முன்கூட்டியே
போக்குதற்காக) ஆரவாரித்தான்.
————
8798. மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும் மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.–96-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – புலிபோன்ற
கோபத்தையுடைய அனுமன் ஆரவாரித்த ஓசையானது; மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – தரையிடத்தனவும்,
வானிடத்தனவுமாய் ஒலி செய்தற்குரியனவாகிய; கடல்களும்
மழைகளும் மற்றும் முற்றும் – கடல்களும், மேகங்களும் மற்றும்
அவைபோல் ஒலி செய்தற்கு உரியனவாயுள்ள அனைத்தும்;
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால் – ஒன்று சேர்ந்தனவாய்
ஆரவாரித்த தன்மையைக் கொண்டன.
———
8799. எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
‘செறி சுடர் மந்தரம் தருதி, சென்று’ என,
‘வெறிதுகொல்!’ எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.–97-
எறிதிரைப் பெருங்கடல்கடைய ஏற்றநாள் – வீசுகின்ற அலைகளை
உடைய பெரிய திருப்பாற்கடலைக் கடைதற்கு (தேவர்களும்
அசுரர்களும்) ஏன்று கொண்ட நாளில்; ‘செறிசுடர் மந்தரம் தருதி சென்று’ என – ‘நெருங்கிய ஒளியையுடைய மந்தர
மலையைப் போய்க் கொணர்க’ என்று சொல்ல; ‘வெறிது, கொல்’ எனக்
கொடு விசும்பின் மீச்செலும் – ‘உள்ளீடு இல்லாததொரு எளிய
பொருளோ’ எனக் (கண்டோர்) கருதுமாறு (முயற்சி ஏதுமின்றி
விளையாட்டாக) எடுத்துக் கொண்டு விண்மீது சென்ற;
உறுவலிக்கலுழனே ஒத்துத் தோன்றினான் – மிக்க வலிமையையுடைய
கருடனையே போன்று (அனுமன்) தோன்றினான்.
————-
8800. பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன்,
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான்.–98-
பூதலத்து, அரவொடு மலைந்து போனநாள் – பூவுலகின் கண்ணே
ஆதிசேடனுடன் போர் செய்து சென்ற காலத்து; ஓதியவென்றியன்,
உடற்றும் ஊற்றத்தன் – சிறப்பித்துக் கூறப்படும் வெற்றியை
உடையவனும், போர் செய்யும் வலிமையுடையவனுமாகி; ஏதம்இல்
இலங்கை அம்கிரி கொடு எய்திய – குற்றமில்லாத இலங்கைக்கு
இடமாக உள்ளதிரிகூட மலையைப் பறித்துக்கொண்டு தென்திசை
எய்திய;தாதையும் ஒத்தனன் தற்கு உவமை இலான் – தன்
தந்தையாகிய வாயுதேவனையும் ஒத்து விளங்கினான் – தனக்கு
உவமை இல்லாதவனாகிய அனுமன்.
———–
வந்தான்’ என்பதற்குள்ளாக, அனுமன் வந்து நிலத்தில் அடி இடுதல்
8801.
‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான்
வான்தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.–99-
‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து –
(அனுமனது ஆர்ப்பொலி கேட்டு) சாம்பவன், அனுமன் வந்து
தோன்றினான்’ என்று சொல்லிய அச் சொல்லுக்கு முன்பே வந்து;
நிலத்து அடி ஊன்றினான் – (அனுமன்) நிலத்தில் அடியை
ஊன்றினான்; வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் – வஞ்சக அரக்கரின் ஊர்க்கு வர இசையவில்லை ஆதலால்; கடவுள்
ஓங்கல்தான் வான்தனில் நின்றது – தெயவ்த்தன்மையுள்ள
மருத்துமலை வானில் தனியே நின்றுவிட; அனுமன் எய்தினான் –
அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான்.
————
மருத்துமலையின் காற்றால் யாவரும் உயிர்பெற்று எழுதல்
8802. காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்-
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்.–100-
காற்று வந்து அசைத்தலும் – (வானில் நின்ற மருத்து மலையின்)
காற்று வந்து (தம் உடம்பின் மேல்) வீசுதலும்; கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – அமரர் நாட்டவர்கள்
போற்றுமாறு அவர்க்கு விருந்தாய் மகிழ்ந்து தங்கியிருந்த வானர
வீரர்களாகிய புண்ணியவான்கள்; ஏற்றமும் பெருவலி அழகொடு
எய்தினார்’ – உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்; கூற்றினை
வென்று தம் உருவும் கூடினார் – யமனை வெற்றி கண்டு தமது
பழையவானர உருவத்துடன் இயைந்தனர்.
———
8803. அரக்கர்தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன
மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ?–101-
அரக்கர் தம் ஆக்கைகள் – அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல்
ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய – அழிலில்லாத ஆழ்கடலில்
(மருத்தனால் எறியப்பட்டு) மறைந்து ஒழிந்தனபோக; கண்டன
மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – காணப்பட்டனவாகிய
(பட்ட) மரக்குலம் முதலிய ஓருயிர்ப் பொருள்களும் உயிர்பெற்று
வாழலாயின என்றால்;குரக்கு இனம் உய்ந்தது கூற வேண்டுமோ –
(ஐயறிவுயிராகிய) குரங்கினம் உயிர் பெற்றது பற்றிக் கூறவும்
வேண்டுமோ?
————
8804. கழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து
அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுவ; தொங்கலின்
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான்.-102-
கழன்றன நெடுங்கணை கரந்த புண் – உடம்பில் தைத்திருந்த
நீண்ட அம்புகள்தாமே கழன்று வீழ்ந்தன; அவற்றாலாகிய
புண்களெல்லாம் தாமே மறைந்தன; கடுத்து அங்கம் அழன்றில
குளிர்ந்தன – வலிமிகுந்திருந்த அங்கங்கள் அழற்சி இன்றிக்
குளிர்ந்தன; செங்கண்கள் சுழன்றன – (கோபத்தால்) சிவந்திருந்த
கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ – உலகனைத்தும்
தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு
கூடினான் – மாலை போன்று சுருண்ட அழகிய மயிர் முடியை
உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான்.
————
8805. யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல்
தாவரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,-
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான்
யோகம் நீங்கினன் என,-இளவல் ஓங்கினான்.–103-
யாவரும் எழுந்தனர் – வானரர் யாவரும் உயிர் பெற்று
எழுந்தனராய்; ஆர்த்த, ஏழ்கடல் தாவரும் பேர்ஒலி செவியில்
சார்தலும் – ஆரவாரித்த ஏழுகடலின் ஒலி போன்ற
கெடுதலில்லாதபெரிய ஆரவாரம் தன் செவியில் சேர்ந்தவுடன்;
தேவர்கள் வாழ்த்தொலிகேட்ட செங்கணான் – தேவர்களுடைய
வாழ்த்தொலியைக் கேட்ட சிவந்த கண்களை உடைய திருமால்;
யோகம் நீங்கினான் என இளவல் ஓங்கினான் – யோக
நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான்.
————
இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல்
8806. ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர்
நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில,
தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்.–104-
உயிர் வந்து உள் உற ஓங்கிய தம்பியை – உயிர் வந்து
உடம்பினுள் பொருந்தியதினால் உணர்வு பெற்ற எழுந்த தம்பி
இலக்குவனை; இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர்
நீங்கினான் – இராமனும் தன் பூரித்த தோள்களால் தழுவிக் கொண்டு
கொடிய துன்பம் நீங்கப் பெற்றான்; உலகில் உள தீங்கு நின்றில
– உலகில் தீங்காக உள்ளன எல்லாம் நில்லாமல் சென்றன; தேவரும்
மறுக்கம் தீர்ந்தனர் – தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள்.
———-
8807.
அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை,
நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே
நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா
பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்.-105-
அரம்பையர் ஆடினர் – அரம்பையர்கள் ஆடினர்; அமிழ்த
ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின –
அமிழ்தம் போன்ற இனிய ஏழிசையை யெழுப்புகின்ற
நரம்பினாலியன்ற கின்னர முதலிய இசைக்கருவிகளின் ஒலி
(உலகெலாம்) நிரம்பின;உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின –
உலகெங்கும் மகிழ்ச்சியால் செய்யும் நெய்யாடல் விழா பரவின;
முனிவரும் வேதம் பாடினார் – முனிவர்களும் வேதம் பாடினார்கள்.
———–
8808.
வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன;
ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன, தேவர் சிந்தனை.–106-
வேதம் நின்று ஆர்த்தன – வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று
ஆரவாரித்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன – வேதம்
பயின்ற அந்தணர் தம் அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும்
ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன – புகழும் ஆரவாரித்தன;
கடல்கள் நின்று ஒலி செய்தன; ஓத வேலையின் தேவர் சிந்தனை
சீதம் நின்று ஆர்த்தன – அலைகளோடு கூடிய கடலைப்போல்
தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன.
————-
அயன்படை அகலுதல்
8809. ‘உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும்
தந்தனை நீ; அது நினக்குச் சான்று’ எனா,
சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து,
அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால்.–107-
கொலை உந்தினபின் – கொலை நீங்கின பின் (யாவரும் உயிர்
பெற்றெழுந்தபின்); அந்தணன் படையும் சுந்தர வில்லியை சூழவந்து
தொழுது நின்று – பிரமாத்திரமும் அழகிய வில்லாளனான இராமனைச்
சுற்றி வந்து வணங்கி, எதிர்நின்று; நீ ஒழிவு இல் உண்மையும்
தந்தனை – நீ, நீங்குதலில்லாத சத்தியத்தையும் தந்தாய்; அது
நினைக்குச் சான்று எனா அகன்று போயதால் – அது உனக்குப்
பெருமையே எனக் கூறி நீங்கிச் சென்றது.
————-
8810. ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ,
தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி
நாயகன், பெருந் துயரம் நாம் அற,
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்.–108-
ஆயகாலையின் தனி நாயகன் – அது போழ்து ஒப்பற்ற
தலைவனாகிய இராமன்; பெருந்துயரம் நாம் அற – (முன்பிருந்த)
பெருந்துயரமும் அச்சமும் ஒழிதலால்; தூயகாதல் நீர் துளங்கு
கண்ணினான் – தூய்மையான அன்புக் கண்ணீர்தளும்பும் கண்களை
உடையவனாய்;தாயின் அன்பனை அமரர் ஆர்த்தெழத் தழுவினான்
– தாய் போன்ற அன்பனாகிய அனுமனைத் தேவர்கள்
மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழாநிற்கத் தழுவிக் கொண்டான்.
—————-
8811. எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான், உருகி, உள் உறத்
தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்
தொழுத மாருதிக்கு, இனைய சொல்லினான்:–109-
எழுது குங்குமத் திருவின் ஏந்துகோடு உழுதமார்பினான் –
(தொய்யிற்கோலமாக) எழுதிய குங்குமத்தினை உடைய திருமகளின்
அமிசமான சீதையின் உயர்ந்த யானைக் கொம்பு போன்ற
தனங்களால் உழப்பட்ட மார்பினை உடைய இராமன்; உருகி உள்உறத்
தழுவி நிற்றலும் – உருகி மனம் பொருந்தத் தழுவி நின்ற அளவில்;
தாள்உறத் தாழ்ந்து தொழுத மாருதிக்கு – அவன் பாதத்தில்
பொருந்துமாறு தாழ்ந்து வணங்கிய அனுமனுக்கு; இனைய
சொல்லினான் – இத்தன்மையான சொற்களைச் சொன்னான் (இராமன்).
————–
இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துக் கூறுதல்
8812. ‘முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!–110-
முன்னின் தோன்றினோர் முறையில் நீங்கலாது – முன் எம்
குலத்தில் தோன்றினோரது முறைமையினின்றும் நீங்காமலிருந்து;
என்னின் தோன்றிய துயரின் – என்னால் தோன்றிய துயரின்; ஈறுசேர்
மன்னின் முன்னம் தோன்றினோம் – இறந்த தசரத மன்னனிடத்தில்
முன்னம் தோன்றினோம்; மாண்டுளோம் – (பின்பு பிரமாத்திரத்தால்)
இறந்துபட்டோம்;நெறியின் தோன்றினாய் நின்னின் தோன்றினோம்
– நன்னெறியில் விளங்குபவனே! (இப்போது) நின்னால் மீண்டும்
பிறந்தவர்களானோம்.
————
8813. ‘அழியுங்கால் தரும் உதவி, ஐயனே!
மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?
பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை
வழியும் காத்தனை; நம் மறையும் காத்தனை.–111-
ஐயனே! அழியுங்கால் தரும் உதவி மொழியுங்கால் – ‘ஐயனே!
எல்லோரும் அழியுங்காலத்தில் நீதந்த உதவியைச் சொல்லுமிடத்து;
தரும் உயிரின் முற்றுமோ? – இப்போது தரப்பட்ட உயிரோடு முற்றுப்
பெற்றதாகுமோ (ஆகாது); பழியுங் காத்து அரும் பகையும் காத்து –
(நீ தந்த உதவியால்) எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து; அரிய
எம்பகையும் வலிமிக்கு உலகை அழிக்காமல் காத்து; எமை வழியும்
காத்தனை நம் மறையும் காத்தனை – எம்மரபையும் அழியாமல்
காத்து நமது வேத நெறியையும் அழியாமல் காப்பாற்றினாய்’.
———-
8814. ‘தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே,
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்
ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்
ஊழி காணும் நீ, உதவினாய்அரோ!–112-
தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே – எனக்கு நேர்ந்த
இத்தாழ்வும் இவ்விடத்தில் இன்னும் சிறிது போழ்து (நீக்கப்படாமல்)
தாழ்ந்திருக்குமாயின்; வாழி எம்பிமேல் அன்பு மாட்ட – நெடிது
வாழ்வதற்குரிய என் தம்பி மேல் எனக்கிருக்கும் அன்பானது அழிக்க;
வான் ஏழும் வீயும்; என் பகர்வது – மேலேழுகங்களும்
அழிந்திருக்கும் என்ன சொல்வது? ஊழி எல்லை நாள் காணும் நீ –
ஊழியின் இறுதி நாளையும் காணப்போகின்ற நீ; உதவினாய் –
அவ்வுலகங்கள் அழியாமலிருக்க உதவி செய்தாய்.
———–
8815.
‘இன்று வீகலாது, எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ
என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!’–113-
இன்று வீகலாது எவரும் எம்மோடு – (மேகநாதன் பிரமாத்திரம்
ஏவிய) இன்று எவரும் இறவாது எம்மொடு; நெடிது நின்று வாழுமா
நல்கினாய் – நெடிது காலம் நின்று வாழுமாறு உயிர் நல்கினாய்; என்
ஏவலால் நீ ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது – என்
கட்டளையினால் நீ சிறிதும் துன்பநோய் அடையாது; என்றும் இனிது
வாழ்தியால் – என்றும் இனிது வாழ்வாயாக.
————-
8816. மற்றையோர்களும், அனுமன் வண்மையால்,
பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான்.–114-
அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார் மற்றையோர்களும் –
அனுமனுடைய வள்ளல்தன்மையினால் ஆயுளைப் பெற்றவர்களாகிய
மற்றவர்களும்; பிறந்த காதலார் சுற்றும் மேவினார் தொழுது
வாழ்த்தினார் – அன்பு மிக்கவர்களாய் அவ்வனுமனைச் சுற்றிக்
கொண்டு தொழுது அவனை வாழ்த்தினார்கள்; உற்றவாறு எலாம்
உணரக் கூறினான் – அனுமனும் மருத்துமலையைக் கொண்டு வந்த
நிகழ்ச்சி எல்லாவற்றையும் அவர்கள் உணருமாறு கூறினான்.
————
மருத்துலையுடன் அனுமன் மீண்டு போதல்
8817. ‘உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதி பொய்க்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!’–115-
வரம்பு இல் ஆற்றலாய்! – எல்லையற்ற ஆற்றலை உடைய
அனுமனே!; உய்த்தமாமருந்து உதவ – நீ கொண்டு வந்த சிறந்த
மருந்து உதவுவதால்; பொய்த்த சிந்தையர் ஒன்னலார் இறுதி
பொய்க்குமால் – பொய் மனத்தவராகிய பகைவர் இறத்தல்
பொய்த்துவிடும். (இறந்த அரக்கர் மீண்டும் உயிர் பெறுவர் என்றபடி);
மொய்த்த குன்றை அம்மூல ஊழிவாய் வைத்து மீடியால் –
(ஆதலால்) மருந்துகள் நெருங்கி உள்ள இம்மலையினை அந்தப்
பழைய இடத்தில் வைத்து விட்டுத் திரும்புவாயாக.
என்று சாம்பவன் இயம்ப என அடுத்த செய்யுளில் முடியும்.
—————
8818. என்று சாம்பன் ஆண்டு இயம்ப, ‘ஈதுஅரோ
நன்று, சால!’ என்று, உவந்து, ‘ஒர் நாழிகைச்
சென்று மீள்வென்’ என்று எழுந்து, தெய்வ மாக்
குன்று தாங்கி, அக் குரிசில் போயினான்.–116-
என்று சாம்பவன் ஆண்டு இயம்ப – என்று சாம்பவன் அங்கு
சொல்ல; ஈது அரோ சால நன்று என்று உவந்து – ‘இது மிகவும்
நல்லது’ என்று மகிழ்ந்து;‘ஒர் நாழிகைச் சென்று மீள்வென்’ என்று
எழுந்து – ‘ஓர் நாழிகையிலே சென்று திரும்புவேன்’ என்று எழுந்து;
தெய்வமாக் குன்று தாங்கி அக்குரிசில் போயினான் –
தெய்வத்தன்மையுடைய பெரிய மருத்துமலையைத் தாங்கிக் கொண்டு
அந்த அனுமன் போயினான்.
————–
மிகைப் பாடல்கள்
மூன்று அரத் தாவொடும் புல்லின் முன்னம் வந்து,
ஊன்றின நிலத்து அடி, கடவுள் ஓங்கருள்;
வான் தனி நின்றது; வஞ்சர் ஊர் வர,
ஏன்றிலது; ஆதலால், அனுமன் எய்தினான். 97-1
அயன் சிவன் அறிவுறா ஆதி நாயகன்,
வியன் கர நேமி அம் படை அவ் வெற்பினை
நியங்கொடு தாங்கி விண் நின்றதால்; அதில்
இயங்கிய ஊதை வெங் களத்தின் எய்தவே. 99-1
வந்த நல் மருந்தினை மருத்து வானவன்
சிந்தையில் பெரு மகிழ் சிறப்பச் சேர்ந்து உறீஇ,
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர்
வந்து இரைந்து, ஆர்த்து, எழும்வகை செய்தான் அரோ. 99-2
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply