ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/22-சீதை களம் காண் படலம்–

வெற்றி விழாக் கொண்டாட இராவணன் கட்டளை இடுதல்

8671. பொய்யார் தூதர் என்பதனால்,
பொங்கி எழுந்த உவகையன் ஆய்,
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை
வெறுக்க வீசி, ‘விளைந்தபடி
கய் ஆர் வரைமேல் முரசு ஏற்றி,
சாற்றி, “நகரம் களி சிறப்ப,
நெய் ஆர் ஆடல் கொள்க!” என்று,
நிகழ்த்துக’ என்றான்;-நெறி இல்லான்.–1-

நெறி இல்லான் – நல்வழி மேற்கொள்ளாத இராவணன்; தூதர்
பொய்யார் என்பதினால் – தன் தூதுவர் பொய் சொல்ல மாட்டார்கள்
என்ற உறுதிப் பாட்டினால்; பொங்கி எழுந்த உவகையன் ஆய்-
(தன்) உள்ளத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சியை உடையவனாய்;
மெய்யார் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி-(அத்தூதுவர்க்கு)
தன் உடம்பின் கண் (அணிகளாக) அணிந்திருந்த நிதியாக பெரும் செல்வத்தை அவர் (மிக
அதிகமாகப் பெற்றமையால்) வெறுக்குமாறு கொடுத்துவிட்டு; கய் ஆர்
வரைமேல் முரசு ஏற்றி, சாற்றி – யானை மேல் முரசத்தை ஏற்றச்
சொல்லி; விளைந்தபடி – போர்க்களத்தில் கிடைத்த வெற்றியினை;
“நகரம் களி சிறப்ப நெய் ஆர் ஆடல் கொள்க”-இலங்கை மாநகரம்
களிப்பு மிகுமாறு நெய் தேய்த்து முழுகுவதாகிய நீராடல் மேற்
கொள்வதாக; என்று, நிகழ்த்துக என்றான்- என்று சொல்லுக என்று
கட்டளையிட்டான்.

————-

மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் தள்ளல்

8672. அந்த நெறியை அவர் செய்ய,
அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
அடங்கக் கடலினுள் இட்டான்.–2-

அந்த நெறியை அவர் செய்ய – (இராவணன் இட்ட)
அப்பணியினை அப்பணியாளர் இயற்ற; அரக்கன் மருத்தன் தனைக்
கூவி – இராவணன் மருத்தன் என்பவனை அழைத்து; முந்த நீ போய்
அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு – “முன்னே நீ சென்று,
இறந்து கிடக்கும் அரக்கரின் உடம்புகள் எல்லாவற்றையும் கடலில்
வீசுக”; நின் சிந்தை ஒழியப் பிறர் அறியின் -(இச்செய்தியை) நின்
மனந்தவிரப் பிறர் யாரேனும் அறிந்தால்; சிரமும்,வரமும் சிந்துவென்
என்று உந்த – (நின்) தலையையும் (நீ தவத்தால் பெற்றுள்ள)
வரத்தையும் சிந்தி விடுவேன் என்று கூறி அனுப்ப; அவன் போய்
அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான்- அந்த மருத்தன்
சென்று அரக்கர் உடல் முழுவதையும் கடலில் போட்டான்.

————-

சீதையைக் களத்திற்குக் கொணர்தல்

8673. ‘தெய்வ மானத்திடை ஏற்றி
மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை
நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார்.–3-

தெய்வ மானத்திடை ஏற்றி – (பின்பு இராவணன் சீதைக்குக்
காவலாய் அமைந்த அரக்கியரை அழைத்து, நீங்கள்) சீதையைத்
தெய்வத்தன்மையை உடைய புட்பக விமானத்தில் ஏற்றி; மனிசர்க்கு
உற்ற செயல் எல்லாம் -இராமலக்குமவராகிய மனிதர்க்கு நேர்ந்த கதி
எல்லாவற்றையும்; தய்யல் காணக் காட்டுமின்கள்-அவள் காணுமாறு
காட்டுங்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து,அய்யம் நீங்காள்-
தன் கண்ணால் கண்டால் அல்லது தன் மனத்தின் கண்ணுள்ள
ஐயப்பாடு நீங்கப்பெறாள்; என்று உரைக்க – என்று (அவ்விராவணன்)
கூற; அரக்க மகளிர் இரைத்து ஈண்டி -அரக்கியர்கள் ஆரவாரித்துக்
கொண்டு நெருங்கி; உய்யும் உணர்வு நீத்தாளை – இவ்வுலகில்
உய்ந்திருக்க வேண்டும் என்னும் உணர்ச்சியற்ற சீதையை; நெடும்
போர்க் களத்தின் மிசை உய்த்தார் – நெடிய போர்க்களத்துக்கு
மேலாக அழைத்துச் சென்றார்கள்,

———–

இராவணன் கண்ட சீதையின் துயர்

8674. கண்டாள் கண்ணால் கணவன் உரு;
அன்றி, ஒன்றும் காணாதாள்;
உண்டாள் விடத்தை என, உடலும்
உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப் பூ நெருப்புற்ற
தன்மை உற்றாள்; தரியாதாள்;
பெண்தான் உற்ற பெரும் பீழை
உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ!–4-

கணவன் உரு கண்ணால் கண்டாள் – கணவன் உருவைச் சீதை
கண்ணால் கண்டாள்; அன்றி ஒன்றும் காணாதாள் – அவ்வுருவத்தை
அன்றி வேறு ஒன்றும் காணாதவள் ஆயினாள்; உண்டாள் விடத்தை
என – (பின்பு) விடத்தை உண்டவள் போல; உடலும், உணர்வும்,
உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – உடம்பும், உணர்ச்சியும், உயிர்ப்பும்
ஒருங்கே ஓயப்பெற்றாள்; தண்டாமரைப் பூ நெருப்புற்ற தன்மை
உற்றாள் – குளிர்ந்த தாமரைப்பூ நெருப்பில்
வீழ்ந்தாற்போன்றதன்மையை அடைந்தாள்; தரியாதாள் பெண்தான்
உற்ற பெரும் பீழை – (பெருந்துயரைத்) தாங்கமாட்டாதவளான சீதை
என்னும் பெண் அடைந்த பெருந்துயரம்; உலகுக்கு எல்லாம்
பெரிதன்றோ? – உலகங்கள் எல்லாவற்றினும் பெரியதாகும் அன்றோ?

———–

8675. மங்கை அழலும்-வான் நாட்டு
மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்;
பதுமத்து இருந்த மாது அழுதாள்;
கங்கை அழுதாள்; நாமடந்தை
அழுதாள்; கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத
அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்.–5-

மங்கை அழலும் – (உயிரோய்ந்திருந்த) சீதை எழுந்து அழுதலும்;
வான் நாட்டு மயில்கள் அழுதார் – (அவளைக்கண்டு)
வானுலகத்திலுள்ள மயில் போன்ற சாயலை உடைய தேவமாதர்
அழுதனர்;மழவிடையோன் பங்கின் உறையும் குயில் அழுதாள் –
இளமையான எருதை ஊர்தியாகவுடைய சிவபிரானது இடப்பாகமமர்ந்த
குயில் போன்றவளான உமையவள் அழுதாள்; பதுமத்து இருந்த மாது
அழுதாள் – செந்தாமரை மலரில் தங்கியுள்ள திருமகள் அழுதாள்;
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் -கங்காதேவி அழுதாள், அயனார் நாவில் வீற்றிருக்கும் கலைமகள்
அழுதாள்; கமலத்தடங்கண்ணன் தங்கை அழுதாள்-தாமரைமலர்
போன்ற கண்களை உடைய திருமாலின் தங்கையான கொற்றவை
அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – இரங்காத
வன்னெஞ்சராகிய அரக்கிமாரும் தம் வன்மை தளர்ந்து அழுதார்.

———–

8676. பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற
பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய்
குழைந்து குழைந்து, விழுந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும் பாவம்
அழுத; பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்;
நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.–6-

பொன்தாழ் குழையாள் தனை ஈன்ற – பொன்னாற் செய்யப்
பெற்றுக் காதில் தொங்குகின்ற குழை என்னும் அணியை
அணிதற்குரியவளான சீதையைப் பெற்றதாயாகிய; பூமாமடந்தை புரிந்து
அழுதாள் – பூமாதேவி எனும் பெண் மனம் இரங்கி அழுதாள்;
குன்றாமறையும் தருமமும் – தன் இயல்பில் குன்றாது என்றும்
ஒருதன்மைத்தாக இருக்கும் வேதங்களும் தருமமும்; மெய்குழைந்து
குழைந்து விழுந்து அழுத – மெய் நெகிழ்ந்து, நெகிழ்ந்து விழுந்து
அழுதன; பின்றாது உடற்றும் பெரும் பாவம் – பிற்படாமல் முற்பட்டு
வந்து வருந்துகின்ற பெரும் பாவமும்; அழுதபின் என்பிறர் செய்கை-
அழுதபின்பு பிறர் செய்கையை என்னென்பது?; நின்றார் நின்றபடி
அழுதார் – ஆங்காங்கிருந்தவர் (மதிமயங்கி) நின்றது நின்ற வண்ணம்
புலம்பினர்; நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள் – (அப்போது பிராட்டி) நினைப்பும்,
உயிர்ப்பும் நீத்தவளானாள்.

———-

சீதை தெளிந்து துன்புற்று ஏங்குதல்

8677. நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை
நீரால் தெளித்து, நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள்
எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும்
கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச்
சிதையக் கையால் மேதினாள்.–7-

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை-நினைப்பும், உயிர்ப்பும் இன்றி
மூர்ச்சையுற்றிருந்த சீதையை; இனத்தின் அரக்கர் மடவார்கள் –
கூட்டமான அரக்கப் பெண்கள்; நெடும்பொழுதின் நீரால் தெளிந்து
எடுத்தார் – நெடிது நேரம் வரை நீர் தெளித்து தெளியச் செய்து,
எடுத்து அமரச் செய்தார்கள்; உயிர் வந்து ஏங்கினாள் – சீதை
அவர்தம் உதவியால் உயிர் வரப்பெற்று வருந்தினாள்; கனத்தின்
நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள் – மேக வண்ணனான
இராமனை மீண்டும் முன்கிடந்தவாறே கிடக்கக்கண்டாள்; கயலைக்
கமலத்தால் சினத்தின் அலைப்பாள் என – கயல் மீனைத் தாமரை
மலரால் கோபங்கொண்டு அடிப்பவள் போல; கண்ணைக் கையால்
சிதைய மோதினாள் – கண்களைக் கைகளால் சிதையுமாறு அடித்துக்
கொண்டாள்.

————-

8678. அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்;
அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச்
சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள்,-குயில் அன்னாள்.–8-

குயில் அன்னாள் – குயில் போன்ற இனிய குரலுடைய சீதை;
அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் – மார்பின்மேல்
அடித்துக்கொண்டாள், வயிற்றின்மேல் அறைந்தாள்; அழுதாள்;
தொழுதாள் – அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் – நெருப்பில் விழுந்த
கொடிபோல உடம்பு சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்;
குலைவுற்றாள் – மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்;
துடித்தாள், மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள் – துடித்தாள்,
மின்னல் தோன்றி மறைவதுபோல முன்வந்த உயிர்ப்பு மீண்டும்
மறையச் சோர்வுற்றாள்; சுழன்றாள்; துள்ளினாள் – மனம் சுழலப்
பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை,உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள் – கணவனை இழந்த துயரைத் தன்
உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள்.

———–

8679. விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;–9-

விழுந்தாள்,புரண்டாள், உடல்முழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்;
புரண்டாள், உடல்முழுதும் வியர்க்கப் பெற்றாள்; அயர்த்தாள்,
வெதும்பினாள் – பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்;
எழுந்தாள், இருந்தாள் – பின்பு எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
குளிர்க்கரத்தை நெரித்தாள்,சிரித்தாள், ஏங்கினாள்-தனது கரங்களை
நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை எண்ணிச்) சிரித்தாள், உடனே
ஏங்கினாள்; ‘கொழுந்தா’ என்றாள் – (இலக்குவனைப் பார்த்துக்
‘கொழுந்தா!’ என்று கூவினாள்; ‘அயோத்தியர்தங்கோவே!’ என்றாள்
– இராமனைப் பார்த்து, ‘அயோத்திநகரத்தவரின் அரசே!’ என்று விளித்தாள்;
‘எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ’ என்றாள்-‘எவ்வுலகத்தவரும்
வந்து தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ என்று
அழைத்தாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் –
(அப்பெருமானின் பெருமையை நினைத்துச்) சோர்ந்தாள், பின்பு வாய்
திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!

————

சீதை அரற்றுதல்

8680. ‘உற மேவிய காதல் உனக்கு உடையார்,
புறம் ஏதும் இலாரொடு, பூணலையோ?
மறமே புரிவார் வசமாயினையோ-
அறமே!-கொடியாய், இதுவோ, அருள்தான்?–10-

அறமே! – அறக்கடவுளே!; உனக்கு உறமேவிய காதல்
உடையார் – உன்னிடத்தில் மிகுதியாகப் பொருந்திய அன்புடையவராய்;
புறம் ஏதும் இலாரொடு பூணலையோ? – (உனக்குப்) புறம்பான பாவச்
செயல் சிறிதும் இல்லாதவராகிய என்கணவரோடு சேரவில்லையோ?;
மறமே புரிவார் வசம் ஆயினையோ? – பாவத்தையே விரும்பிச்
செய்கின்ற அரக்கர் வசம்? ஆய்விட்டாயோ?; கொடியாய்; இதுவோ
அருள்தான்? – கொடியவனே உனது அருள்தான் இத்தகையதோ?

————-

8681. ‘முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்,
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ?
மதியேன் மதியேன் உனை-வாய்மை இலா
விதியே!-கொடியாய், விளையாடுதியோ?–11-

வாய்மை இலா விதியே! – வாய்மை தவறிய விதியே!; முதியோர்
உணர் வேதம் மொழிந்த அலால் – அறிவினால் பெரியவர்கள்
எல்லாம் உணர்தற்குரிய வேதங்கள் சொல்லிய நெறியில் அல்லது; கதி
ஏதும் இலார் துயர் காணுதியோ? – வேறுபற்றுகோடு
ஏதுமில்லாதவர்களுடைய (இராமலக்குவர்) துன்ப நிலையைக் கண்டு
கொண்டுதான் இருக்கின்றாயோ?; கொடியாய் விளையாடுதியோ? –
அல்லது (என்னைச் சோதிக்கக்) கொடுமையுடையாய்
விளையாடுகின்றாயோ?; உனைமதியேன்! மதியேன்! –
(எங்ஙனமாயினும்) உனை (ஒருபொருட்டாக) மதிக்கமாட்டேன்!
மதிக்கமாட்டேன்!

————-

8682, ‘கொடியேன் இவை காண்கிலேன்; உயிர் கோள்
முடியாய், நமனே! முறையோ! முறையோ!
விடியா இருள்வாய் என வீசினையே?-
அடியேன் உயிரே! அருள் நாயகனே!–12-

கொடியேன் இவை காண்கிலேன் – கொடியவளாகியயான்
(இராமலக்குவர்க்கு நேர்ந்துள்ள) இந்த அவல நிலைமையைக்
காணப்பெறேன்; நமனே – கூற்றுவனே! அடியேன் உயிரே, அருள்
நாயகனே! – அடியேனுடைய உயிரே அருள் மிக்க என் நாயகனே!
உயிர்கோள் முடியாய் – (அப்படிப்பட்ட என் நாயகனும் தம்பியும்
வீழ்ந்து கிடக்கக் கண்டு கதறும் என்) உயிரைக் கொள்ளும் செயலை
முடிக்காமல்; விடியா இருள்வாய் எனை வீசினையே – விடிவில்லாத
இருளில் (முடிவில்லாத துன்பத்தில்) என்னை வீசிவிட்டாயே!
முறையோ முறையோ – இது முறையாகுமா? முறையாகுமா?
(முறையன்று).

————-

8683, ‘எண்ணா, மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ?-
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!

மண்ணோர் உயிரே! – மண்ணுலகத்தவர்க்கு உயிர் போன்றவனே;
இமையோர் வலியே! – தேவர்கட்கு பகைவெல்வதில்) வலிமையாக இருப்பவனே! கண்ணே, அமிழ்தே,
கருணாகரனே – என் கண் போன்றவனே என் உயிர்க்கு அமி்ழ்தம்
போன்றவனே, கருணையின் நிலையமே; எண்ணாமயலோடும் இருந்தது
– எனக்குற்ற துன்பங்களைச் சிறிதும் எண்ணாமல், யான் இது காறும்
அளவிட முடியாத காதல் மயக்கத்தோடு அரக்கர் ஊரில் உயிர்
வாழ்ந்திருந்தது; நின்புண்ணாகிய மேனி பொருந்திடவோ? – நின்
புண்ணான உடம்பைப் பொருந்திடத்தானோ?

————–

8684. ‘மேவிக் கனல் முன், மிதிலைத்தலை, என்
பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ்
தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே!–14-

அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே – செந்தாமரை மலரில் வாழ்கின்ற
திருமகளுக்கு அமிழ்தம் போன்றவனே! மறையின் தெளிவே! –
வேதத்தின் தெளிபொருளாக உள்ளவனே! பண்ணவ – கடவுளே!
மிதிலை மேவிக் கனல் முன் என் பாவிக் கைபிடித்தது – (நீ)
மிதிலைக்கு வந்து ஓமத்தீமுன்னர் பாவியாகிய என் கை பிடித்து
மணந்து கொண்டது; நின் ஆவிக்கு ஒரு கோள் வரவோ? – நின்
உயிருக்கு ஒரு தீமை நிகழ்தற்குத்தானோ?

———–

8685, ‘உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;
அய்யா! இளையோர் அவர் வாழ்கிலரால்;
மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்
கய்கேசி கருத்து இதுவோ?-களிறே!–15-

களிறே! ஐயா! – ஆண்யானைபோன்றவனே, தலைவனே உயர்
கோசலைதன் உயிரோடு உய்யாள் – (நின் நிலைமையைக் கேட்டால்)
உயர்ந்த பண்பினளான கோசலை தன் உயிர் உய்ந்திருக்க மாட்டாள்;
இளையோர் அவர் வாழ்கிலர் – (நினக்கு) இளையவர்களாகிய அப்பரத
சத்துருக்கர் (நின்னை இழந்து) உயிர் வாழ்ந்திருக்க மாட்டார்; வினை
எண்ணி விடுத்த – வஞ்சனை நினைந்து நின்னைக் காட்டிற்கு அனுப்பிய; கொடுங்கய்கேசி கருத்து
மெய்யே இதுவோ? – கொடிய தன்மையளான கைகேசியின் கருத்து
உண்மைாகவே இது தானோ?

———–

8686. “தகை வான் நகர் நீ தவிர்வாய்” எனவும்,
வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,
புகை ஆடிய காடு புகுந்து, உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்!

“தகைவான் நகர் நீ தவிர்வாய்” எனவும்-பெருமைசான்ற உயர்ந்த
அயோத்தி நகரில் நீ தங்கி இருப்பாயாக” என்று நீ கூறவும்; பரிவு
ஏதும் இலேன் – இரக்கம் சிறிதும் இல்லாத நான்; வகையாது
தொடர்ந்து – நின்னைப் பிரிந்திராமல் தொடர்ந்து; புகை ஆடிய காடு
புகுந்து – புகை மண்டியகானகத்தில் நின்னுடனே புகுந்து; ஒரு மான்
முதலா பகை ஆடியவா! – ஒரு மான் காரணமாக நின்னைக் கொல்லும்
பகையை உண்டாக்கியவாறு என்னே!

—————-

8687. “இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்
அன்று, ஈ” எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?

அன்று – அக்காலத்தில்; இன்றுமான் ஈகிலையேல் – இன்று
மானைப் பிடித்துக் கொடுக்கவில்லையானால்; இவ்விடை இறவு ஈ
எனவும் – இவ்விடத்து எனக்கு இறப்புத்தான்; (ஆதலால்)
அம்மானைப் பிடித்துக்கொடு என வேண்டவும்; பிரிவோடு அடியேன்
நின்று ஈவது – நிற்பிரிந்து அடியேன் தனித்து நின்றது; நின்னை
நெடுஞ் செருவில் கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ? –
நின்னை நெடிய போரில் கொல்வதோர் தீமை நினைத்தலினால்
தானோ?

—————-

8688. ‘நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;
மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் யான, என மேனி பொருந்துதலால்.–18-

நெய்யார் பெருவேள்வி நிரப்பி – (முடிசூட்டு விழாவில்
செய்தற்குரிய நெய் நிரம்பச் சொரியப் பெறும் பெரிய வேள்வியை
நிறைவுறச் செய்து; நெடுஞ் செய் ஆர் புனல் நாடு திதுத்துதியால்
– பின், வயல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க கோசல நாட்டை நீதி
வழுவாமல் அரசாண்டிருப்பாய்; என்மேனி பொருந்துதலால் –
(பாவியாகிய) என் உடம்பைத் தீண்டிய குற்றத்தால்; மெய் ஆகிய
வாசகமும் விதியும் பொய் ஆன – (நின்தந்தை நினக்கு முடி
சூட்டுவதாகக்கூறிய) மெய்யான சொல்லும், நீ முடி சூடுதற்குரியதாக
அமைந்த விதியும் பொய்யாயின!

————-

8689, ‘மேதா! இளையோய்! விதியார் விளைவால்,
போதா நெறி எம்மொடு போதுறுநாள்,
“மூது ஆனவன் முன்னம் முடிந்திடு” எனும்,
மாதா உரையின்வழி நின்றனையோ?–19-

மேதா! இளையோய்! – அறிவு நிரம்பியவனே! இளவரசே! விதியார்
விளைவால் – விதியின் விளைவாக; போதா நெறிஎம்மொடு
போதுறுநாள் – சொல்ல முடியாத காட்டு வழியில் எங்களோடு
வரப்புறப்படும் நாள்;”மூது ஆனவன் முன்னம் முடிந்திடு” எனும் –
“முன்னவனாகிய இராமன் இறக்கும் நிலை நேர்ந்தால், அவனுக்கு முன்
நீ முடிந்திடுவாயாக” எனக் கூறிய; மாதா உரையின் வழி
நின்றனையோ – நின்தாய் சுமித்திரையின் சொல்வழியே (நீ)
முன்னம் இறந்தனையோ?”

————–

8690. ‘பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில, தவிர்வாய்! கொடியார்
ஏவின்தலை வந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ?–20-

பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல் – மெல்லிய பூவும்,
தண்ணியதளிரும் நிறைந்துள்ள சிறந்த படுக்கையில்; கோவும் துயில,
தவிர்வாய் – இராமன் துயில் கொள்ளும்போது (அவனைக்
காத்துக்கொண்டு, தூக்கத்தை விடுத்து) விழித்திருப்பவனே! கொடியார்
ஏவின் தலைவந்த இருங்கணையால் – (இப்போது) கொடியவர்களாகிய
அரக்கர்தம் வில்லினிடத்திருந்து வெளிப்பட்டு வந்த பெரிய
அம்புகளால்; மேவும் குளிர்மெல் அணைமேவினையோ – அமைந்த
குளிர்ந்த மெல்லிய படுக்கையை விரும்பிப் படுத்து உறங்குகின்றாயோ?

—————–

திரிசடை சீதையின் மயக்கம் தீர்த்தல்

8691.
‘மழு வாள் வரினும் பிளவா மனன் உண்டு
அழுவேன்; இனி, இன்று இடர் ஆறிட, யான்
விழுவேன், அவன் மேனியின்மீதில்’ எனா,
எழுவாளை விலக்கி இயம்பினளால்:–21-

மழுவாள் வரினும் – மழு, வாள் என்கின்ற ஆயுதங்கள் வந்து
தாக்கினாலும்; பிளவாமனன் உண்டு அழுவேன் – பிளந்துபடாத
கடினமான மனம் (எனக்கு) உண்டு; எனவே என் கணவன்
உயிர்நீத்தமை கண்ட அளவிலேயே உயிர் விடாமல் வெற்று
அழுகையாக அழுவேன்; இனி, இடர் இன்று ஆறிட – இனி
(அவ்வெற்றெழுகையை விடுத்து இப்பெருந்துன்பத்தினின்றும்
இப்பொழுது ஆறுதல் பெற்றிட; யான் அவன் மேனியின் மீதில்
விழுவேன் – அப்பெருமானின் மேனியின் மேல் விழுந்து உயிர்
விடுவேன்; எனா எழுவாளை – என்று சொல்லி எழுபவளை; விலக்கி
இயம்பினளால் – தடுத்து (திரிசடை) கூறலானாள்.

————-

8692.
‘மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடு உற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள்-
தேடிய தவமே என்னத் திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள்.

தேடியதவமே அன்ன திரிசடை – சீதை முன்பு தேடிய தவப்பயன்
போன்ற திரிசடை; மறுக்கம் தீர்ப்பாள் – (அப்பிராட்டியின்)
மனக்கலக்கத்தை அகற்றுபவளாகி; மாடு உற வளைந்து நின்ற வளை
எயிற்று அரக்கி மாரை – அவள் பக்கத்தில் சுற்றி நின்ற வளைந்த
கோரப் பற்களை உடைய அரக்கியர்களை; பாடுஉற நீக்கி, நின்ற
பாவையைத் தழுவிக் கொண்டு – இருபக்கமும் பிரிந்து போகுமாறு
நீக்கிக்கொண்டு, (இராமன்மேல் விழும் நோக்கத்தோடு) நின்ற பாவை
போன்ற சீதையைத் தழுவிக்கொண்டு; கூடினள் என்ன நின்று
செவியிடை குறுகிச் சொன்னாள் – அவளோடு ஒன்றாயினாள்
என்னுமாறு நெருங்கி நின்று அவள் செவியிற் சென்று சொன்னாள்.

———

8693,
‘மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம்; ஒன்றும் அறிந்திலை, அன்னம் அன்னாய்!–23-

அன்னம் அன்னாய், அமா!- அன்னம் போன்ற தாயே!; மாயமான்
விடுத்தவாறும் – மாரீசனாகிய மாயமானை முன் விடுத்த தன்மையும்;
சனகனைவகுத்தவாறும் – மாயா சனகனை உண்டாக்கின தன்மையும்;
போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – சென்ற நாளில்
(இராமலக்குவன் முதலானோரை) பிணித்ததாகிய நாகபாசம்
அழிந்துபோன தன்மையும்; நினையாய் – எண்ணிப் பார்ப்பாயாக;
நெறி இலாரால் ஆய மா மாயம் ஒன்றும் அறிந்திலை – நல்ல
நெறியில் செல்லாதவர்களால் (அரக்கரால்) உண்டாய பெரிய மாயச்
செயல் ஒன்றையும் அறிகிலையாய்; மாளநினைதியோ? – மாண்டுபோக
நினைக்கின்றாயோ?

———–

8694.
‘கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்
அண்டர் நாயகர் தம் வீரத் தன்மையும், அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ, இறுதி, இப் புலையர்க்கு
அல்லால்?–24-

கண்ட அக் கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – நீ முன்
கண்டுள்ள கனவும் பெற்றுள்ள நன்னிமித்தங்களும், நின்னுடைய
கற்பின் திண்மையும்; தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் –
தண்டாயுதத்தையும், வாளையுமுடைய அரக்கர் தம் பாவச்
செய்கையும்; தருமம் தாங்கும் அண்டர் நாயகர் தம வீரத்தன்மையும்
– தருமத்தைத் தாங்குகின்ற இராமலக்குவரின் வீரத் தன்மையும்;
அயர்க்கலாமோ? – மறக்கலாகுமோ? (மறக்கலாகாதுகாண்);
இப்புலையர்க்கு அல்லால் புண்டரீகற்கும் உண்டோ இறுதி? –
இப்புலையர்களாகிய அரக்கர்க்கு அழிவு உண்டாவதல்லால் உந்திக்
கமலத்தை உடைய திருமாலின் அமிசமான இராமனுக்கும்
அழிவுண்டாகுமோ?

————

8695.
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-மண்ணில் வந்தாய்!–25-

மண்ணில் வந்தாய் – பூமியினின்றும் தோன்றியவளே! ஆழியான்
ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – சக்கரப்படைக்கு
உரியவனாகிய இராமனது உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை
என்பதை; ஏழைநீ காண்டி அன்றே – மென்மையான உள்ளமுடைய நீ
நேரே காண்கிறாயல்லவோ? இளையவன் வதனம் –
(அம்புபட்டிருந்தாலும்) இலக்குவனின் முகம்; இன்னும் ஊழி நாள்
இரவி என்ன ஒளிர்கின்றது – இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும்
சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை – எனவே நெடிதுநாள் வாழுந்தன்மையுள்ள
அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; வாளாமயங்கலை – (எனவே) அவர்கள்
இறந்தார்கள் என்று வீணாக மயங்காதே!

————-

8696.
‘ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்?
வீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல்,
அன்னை!
ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும்
உண்டால்.–26-

ஓய்ந்துளன், இராமன் என்னின் – இராமன் இறந்துளன் ஆயின்;
உலகம் ஓர் ஏழும் ஏழும் தீய்ந்துறும் – கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ்
உலகமும் தீய்ந்து போயிருக்கும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம்
என் ஆம்? – சூரியன் பின்னும் விண்ணில் திரிவானோ? ஊழாகிய
தெய்வம் என்ன பயனுடையதாகும்? விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்
வீய்ந்துறும் – பிரமன் முதலிய உயிர்கள் எல்லாம் அழிவுறும்;
ஆய்ந்தவை உள்ளபோதே அவர் உளர்; அறமும் உண்டால் –
மேற்கூறியவை அழியாமல் உள்ள போதே அவரும் இருக்கின்றனர்;
தருமமும் உண்டு; அன்னை வெருவல் – அன்னையே நீ அஞ்சாதே!

———–

8697,
‘மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே
ஆர் உயிர் நீங்கள்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே?
சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை
பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது
உண்டோ?–27-

மங்கை நின் வரத்தினாலே – மங்கையே! நீ கொடுத்த
வரத்தினாலே; மாருதிக்கு ஆருயிர் நீங்கல் இல்லை அன்றே –
அனுமானுக்கு அரிய உயிர் நீங்கப் பெறுதல் இல்லை அன்றோ?
நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமோ – (அனுமான் உயிர் நீங்கி
இருப்பின் நின் கற்பின் பெருமை குன்றும்) நின்பால் அமைந்த
கற்பிற்கும் அழிவு உளதாமோ? இது ஒன்றும் சீரியது அன்று –
இரவெல்லாம் மூர்ச்சையுற்றுக் கிடக்கின்ற இந்நிலை ஒன்றும்
பிறிதொன்றால் நீங்காத சிறப்பினதன்று; திசைமுகன் படையின்
செய்கை இப்பொழுதே பேரும் – இது பிரம்மாத்திரத்தின்
செய்கையாகும்; இது இப்போதே நீங்கும்; தேவர் எண்ணமும்
பிழைப்பது உண்டோ? – தேவர்களின் எண்ணமும் தவறு படுவது
உண்டோ? (இல்லை).

————

8698.
‘தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில்
சேர்த்தி,
மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை!
“கூவலில் புக்கு, வேலை கோட்படும்” என்று கொள்ளேல்.–28-

தேவரைக்கண்டேன் – விண்ணவர்களைப் பார்த்தேன்;
மூவரைக்கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி-(அவர்கள்)
திருமூர்த்திகளைக் காண்பார் போன்று (உயிர்சோர்ந்து கிடக்கின்ற)
இருவரையும் முறையாகப் பார்த்து; பைம்பொன் செங்கரம் சிரத்தில்
சேர்த்தி – பசும் பொன்னாற் செய்த அணிகலன் அணிந்த தம் சிவந்த
கைகளைத்தலைமேல் வைத்து; ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர்
– வணங்கிச் செருக்குற்றிருக்கின்றனர் துன்புறவில்லை; அன்னை!
அஞ்சல் – ஆதலால் அன்னையே, அஞ்சாதே! ‘வேலை கூவலில்புக்கு
கோட்படும்’ என்று கொள்ளல் – கடல் கிணற்றில் புகுந்து
அக்கிணற்றால் கொள்ளப்பட்டு விடும் என்று கொள்ளாதே!

————-

8699.
‘மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,
நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று
அன்றால்;
இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி’
என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள்.–29-

நங்கையே! இக்கடவுள் மானம் – பெண்களிற்சிறந்தவளே! இந்தத்
தெய்வத்தன்மை வாய்ந்த புட்பகவிமானம்; மங்கலம் நீங்கினாரை
ஆருயிர் வாங்கினாரை – மங்கலநாண் நீங்கப்பெற்ற கைம்
பெண்டிரையும், அரிய உயிர் நீங்கப்பெற்று பிணமானவரையும்;
தாங்குறும் நவையிற்று அன்றால் – தாங்குகின்ற குற்ற முடையதன்று;
‘இங்கு இவை அளவையாக இடர்க்கடல் கடத்தி’ என்றாள் – இங்கு
யான் கூறிய இக்கருத்துக்களை அளவையாகக் கொண்டு இராமன்
இறக்கவில்லை என்பதறிந்து துன்பக்கடலைக் கடப்பாயாக எனத்
திரிசடை கூறினாள்; சங்கையள் ஆயதையல் சிறிது உயிர்
தரிப்பதானாள் – (இராம லக்குவர் இறந்து விட்டார்களோ என)
ஐயம்கொண்டவளான சீதை (திரிசடை சொற்களால்) சிறிது உயிர்தாங்கி
இருப்பாளானாள்.

————-

சீதையின் மறுமொழி

8700.
‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம்
உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல்
என்பால்
முன்னமே முடிந்தது அன்றே ?’ என்றனள்-முளரி நீத்தாள்.–30-

முளரி நீத்தாள் – தாமரை மலரை விட்டுச் சனகன் மகளாகப்
பிறந்தவளாகிய திருமகளாகிய சீதை; அன்னை! நீ உரைத்தது
ஒன்றும் அழிந்திலது ஆதலானே – அன்னை போன்றவளே, நீ
இதுவரை சொன்னது ஒன்றும் பழுதுபட்டதில்லை ஆதலால்;
உன்னையே தெய்வமாக்கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் –
உன்னையே தெய்வமாகக் கொண்டு இவ்வளவு காலம் உயிரைப்
போக்கிக்கொள்ளாமல் உய்ந்திருந்தேன்; இன்னம் இவ்இரவு முற்றும்
இருக்கின்றேன் – இன்னும் (நின்சொல்லையே நம்பி) இந்த இரவு
முழுதும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது
அன்றே என்றனள் – இறப்பது என்பது என்னிடம் முன்னமே
முடிவானது அன்றோ என்று கூறினாள்.

—————

8701.
‘நாண் எலாம் துறந்தேன், இல்லின் நன்மையின் நல்லார்க்கு
ஏய்ந்த;
பூண் எலாம் ஆகி நின்ற என்தன் பொரு சிலை
மேகம்தன்னைக்
காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்;
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு’ எனவும்
சொன்னாள்’.–31-

இல்லின் நன்மையின் நல்லார்க்கு – இல்லறத்தின் நன்மையினை
உடைய கற்புடைய பெண்களுக்கு; ஏய்ந்தநாண் எலாம் துறந்தேன் –
பொருந்துதற்குரிய நாண் முதலிய குணங்களை எல்லாம் துறந்தேன்;
என் தன் பூண் எலாம் ஆகி நின்ற – என்னுடைய அணிகலன்கள்
அனைத்துமாகி நின்ற; பொருசிலை மேகம் தன்னை – (என்னுடைய
கணவனாகிய) போர் செய்யும் வில்லேந்திய மேகம் போல்வானை;
காணலாம் என்னும் ஆசை தடுக்க – காணலாகு மென்கின்ற ஆசை
தடுத்தலால்; என் ஆவிகாத்தேன் – என் உயிரை இதுவரையில்
காப்பாற்றிக் கொண்டிருந்தேன்; ஏண் இலா உடலம் நீக்கல் –
(உணவின்றி) வலிகுன்றியுள்ள உடலினின்றும் உயிர் நீங்குதல்; எனக்கு
எளிது எனவும் சொன்னாள் – எனக்கு எளிது; (அரிதன்று) என்றும்
சொன்னாள்.

————-

சீதையை மீண்டும் அசோகவனத்திற்குச் செலுத்துதல்

8702.
தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை,
கய்களின் பற்றிக் கொண்டார், விமானத்தைக்
கடாவுகின்றார்,-
மெய் உயிர் உலகத்து ஆக, விதியையும் வலித்து, விண்மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடைத் தூதர்
போன்றார்.–32-

தய்யலை, இராமன் மேனி தைத்தவேல் தடங்கணாளை –
கட்டழகுடைய சீதையை, இராமன் மேனியில் பாய்ந்த வேலைப்
போன்ற பெரியகண்களை உடையவளை; கய்களில் பற்றிக் காண்டார்
விமானத்தைக் கடாவு கின்றார்-தம் கைகளில் பற்றிக்கொண்டு புட்பக
விமானத்தைச் செலுத்துகின்ற அரக்கியர்; மெய் உயிர் உலகத்து ஆக
விதியையும் வலித்து – உண்மையான உயில் மண்ணுலகத்து ஆக
விடுத்து, முன்னை விதியையும் வற்புறுத்தி மாற்றி; விண்மேல்
பொய்யுடல் கொண்டு செல்லும் – விண்மேல் பொய்யான உடம்பைக்
கொண்டு செல்லுகின்ற; நமனுடைத் தூதர் போன்றார் – எமதூதரைப்
போன்றனர்.

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading