மேகநாதனின் பிரமாத்திரத்தால் பகைவர் மடிந்தனர் எனக்
கேள்வியுற்ற இராவணன் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றான்.
அதன்விளைவாக மகளிரைக் கள்ளுண்டு களி வெறியோடு
ஆடவைத்துப் பார்க்க விரும்புகின்றான். அங்ஙனம் மகளிர் கள்ளை
உண்டு ஆடிய ஆடலைப் பற்றிக் கூறுகின்ற பகுதியாதலின் இது
களியாட்டுப் படலம் எனப் பெயர் பெறுகின்றது.
இப்படலப் பெயர், ‘களியாட்டப் படலம்’ எனவும் சில சுவடிகளில்
காணப்படுகின்றது. இப்பகுதி கம்பரே அமைத்துக்கொண்ட
பகுதியாகும், வான்மீகத்தில் இது இல்லை.
———-
பகை ஒழிந்தது என்று உவந்த இராவணன் மகளிரின் களியாட்டம்
காணுதல்
8819. இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி,
தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம்
கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக்
கன்னி நன் மயில் அன்னாரை நெடுங் களியாட்டம் கண்டான்.–1-
இன்னது இத்தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி –
இங்ஙனம் இராமன் சேனையில் இவ்வாறு நிகழாநிற்க, இராவணன்
(பகை அழிந்தது என்ற எண்ணத்தல்) எழுச்சி கொண்டு கிளர்ச்சிமிக்கு;
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – தன்னையும்
கடந்து பெருகிய மகிழ்ச்சியுடையவனாய் முறைப் படி அமைந்த
இசையை; கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டை
– கின்னரர் முதலியோர் பாடா நிற்க, முகத்தில் கிடந்த (கண்ணாகிய)
கெண்டை மீன்களை உடைய; கன்னி நன் மயில் அன்னாரை
நெடுங்களியாட்டம் கண்டான் – இளமையான நல்ல மயில் போன்ற சாயலை
உடையமகளிரை நெடிதாய களியாட்டம் ஆடுமாறு செய்தான்.
———
8820. அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர்,
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர்
கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள்,
வரம்பு அறு சும்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார்.–2-
அரம்பையர், விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் –
தேவமாதரும், வித்யாதரமகளிரும், அரக்கியரும், அசுரப் பெண்டிரும;
குரும்பை அம் கொங்கை நாகர்கோதையர், இயக்கர் – குரும்பை
போன்ற அழகிய தனங்களை உடைய நாககன்னியரும், இயக்க
மகளிரும்;கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம்
கன்னிமார்கள் – கோது நீக்கிய கரும்பினும்இனிய சொல்லை
உடையவர்களாகிய சித்தர் பெண்களும் ஆகிய; வரம்பு அறு
சும்மையோர்கள் மயில் குலம் மருள வந்தார் – எல்லையற்ற
கூட்டத்தினர் மயிற்குழாங்களும் மருட்சியுறுமாறு வந்தார்கள்.
———-
8821. மேனகை, விசய வாட்கண் திலோத்தமை, அரம்பை,
மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார்-சில் அரிச் சதங்கை பம்ப,
ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி.–3-
மேனகை விசய வாட்கண் திலோத்தமை அரம்பை – மேனகை,
வெற்றி பெற்ற வாளைப் போன்ற கண்ணையுடைய திலோத்தமை,
அரம்பை; மெல்லென் தேன் நகு மழலை இன்சொல் உருப்பசி –
மென்மையாக ஒலிக்கின்ற, தேனையும் பழித்துச் சிரிப்பதற்குரிய,
மழலையாகிய இனிய சொல்லினை உடைய ஊர்வசி; முதலாம் வானக
தெய்வமகளிர் – முதலாயவானுலகத்துத் தெய்வமகளிர்; ஆனகம்,
முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட – படகமும் முரசமும் சங்கும்
முருடு என்னும் வாத்தியத்தோடு முழங்க; சில் அரிச் சதங்கை பம்ப
ஆடி வந்தார் – தம் காலில் அணிந்த சிலவாகிய பரலை உடைய
சதங்கைகள் ஒலிக்க ஆடிக்கொண்டே வந்தார்கள்.
————-
8822.
தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருனின்
தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச்
செவ் வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச்
செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்ன, முனிந்தது-கறை
வெண் திங்கள்.–4-
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் – பனந்தோட்டின்
தன்மை பொருந்தியகாதணியாகிய பொற்சுருளும், தொங்குகின்ற
குழைகளும்; சுருளின் தோய்ந்த ஏடுஉண்ட பசும் பொன் பூவும்
திலகமும் – (ஐம்பாலில் ஒன்றாகிய) சுருள் என்ற முடிவகையில்
அமைந்த இதழ் பொருந்திய பசும் பொன்னாலியன்ற பூவும், திலகமும்;
இலவச் செவ்வாய் மூடுண்ட முறுவல் முத்தும் – இலவம் பூப்போன்ற
சிவந்த வாயால் மூடுண்டு கிடக்கின்ற பற்களாகிய முத்தும்; முள்ளுண்ட
முளரிச் செங்கண் காடுஉண்டு புகுந்தது என்ன – முட்கள்
பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்தகண்ணும்
ஆகியவற்றைக் கொண்ட (தனக்குப் பகையான முளரிக்காடு தன்னை
மறைக்கும் வண்ணம்) காடு புகுந்துள்ளது என்ற காரணத்தால;
கறைவெண்திங்கள் முனிந்தது – களங்கத்துடன் கூடய வெண்ணிறமான
சந்திரன் வெகுண்டது.தோடு உண்ட சுருள் – பனந்தோட்டின் தன்மை பொருந்திய
காதணி. சுருளில் தோய்ந்தபூ – ஐம்பால் முடிவகையில் ஒன்றான
சுருளில் அமைந்த பூ.
———-
8823.
முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும்,
மூரி
ஒளிப் பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண்
பொன்
விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர்ப் பரப்பும், வீச,
வளைத்த பேர் இருளும், கண்டோர் அறிவு என, மருளும்
மாதோ.–5-
முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண்நிலவும் –
தோன்றுகின்ற செழுமையான ஒளித்திரளைக் கொண்ட (பெண்களின்)
புன்சிரிப்பின் வெண்ணிறமான நிலவும்; மூரி ஒளிப்பிழம்பு ஒழுகும்
பூணின் உமிழ். இளவெயிலும் – பெரிய ஒளிப்பிழம்பை
வெளிப்படுத்துகின்ற அணிகலன்கள் வீசுகின்ற இளவெயிலும; ஒண்
பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர்கதிர்ப் பரம்பும்வீச –
ஒளிவாய்ந்த பொன்னைப் போன்று, விளக்கையும் விளக்குகின்ற
அவர்தம் மேனியினது விளங்குகின்ற ஒளிக்கதிர்ப் பரப்பும் வீசுதலால்;
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என, மருளும் மாதோ-
உலகத்தையே வளைத்துக் கொண்டிருந்த பெரிய இரவு இருளும்,
அப்பெண்களைக் கண்ட ஆடவர் அறிவு போல் மருண்டு நிலை
கெடுவதாயிற்று.
———-
கள்ளுண்டார் நிலை
8824. நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம்.
நல்பெருங்கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி –
நல்லதாகிய பெரிய கல்விச் செல்வத்தால் குற்றமற்றவழியைப்
பொருந்தி; முன்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி
முற்றி – முற்காலத்து அந்நெறியின் பயனை உணர்ந்த தூயோர்தம்
உபதேச மொழியோடு பழகி முதிர்ச்சியுற்று; பின்பயன் உணர்தல்
தேற்றாப் போதைபால் வஞ்சன் செய்த – பின்னால் அந்த உபதேச
மொழியினால் உளதாம்பயனை (உணரவேண்டி இருக்க, அதனை)
உணர்தல் இல்லாத பேதைபால் வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை
என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம் – கற்பனை, அப்பேதையின்
உள்ளத்தில் விரைந்த நம்பப்பட்டு பரவுவது போலக் கள்ளின் வேகம்
மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது.
———-
8825. பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த;
கொற்றச்
சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ்வாய்.–7-
பலபட முறுவல் வந்து பரந்தன மெய்வேர் பனித்த –
(கள்ளருந்திய மகளிர்க்கு) பல வகையாகச் சிரிப்பு வந்து பரவின.
உடம்பில் வேர்வைத் துளிகள் தோன்றின; இலவு இதழ்துடித்த;
முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – இலவமலர் போன்று சிவந்த
உதடுதுடத்தன; முல்லை அரும்பு போன்ற பற்கள் வெள்ளிய நிலவைச்
சொரிந்தன; கொலைபயில் நயன வேல்கள் கொழுங்கடை சிவந்த –
(ஆடவரை) வருத்துதலில் பழகிய கண்களாகிய வேற்படையின்
செழுமையான ஓரங்கள் சிவந்தன; கொள்ளச் சிலைநிகர் புருவம்
நெற்றிக்குனித்தன செவ்வாய்விளர்த்த – வெற்றி பொருந்திய
வில்லை நிகழ்த்த புருவங்கள் நெற்றியின் மீது வளைந்தன; சிவந்தவாய்
வெண்ணிறம் பெற்றன.
————-
8826. கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல்அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப்
பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட
மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச்
சொல்லார்.–8-
கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் –
கூந்தலாகிய – அழகிய சுமையான திரண்ட சுருள் தன்மையுடைய
அழகு செய்யப்பட்ட மேகம்; ஏந்து அகல் அல்குல்தேரை இகந்து
போய் இறங்க – பக்கம் உயர்ந்த விரிந்த அல்குல் ஆகிய தேரையும்
கடந்து கீழ் இறங்கவும்; யாணர்ப் பூந்துகிலோடும் பூசல் மேகலை –
புதிய பூந்துகிலோடு, ஆரவாரிக்கும் மேகலையும் (கழன்று); சிலம்பு
பூண்ட மாந்தளிர் எய்த மழலைச் சொல்லார் நொய்தின்
மயங்கினர் – சிலம்பு பூண்டுள்ள மாந்தளிர் போன்ற பாதத்தை
அடையவும் மழலை மொழியினை உடைய மகளிர் விரைவில்
மயங்கினார்கள்.
—————
8827. கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட,
காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு-
வேத்தவை, ‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்;
மேலோர்
சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார்’ என்ன.–9-
வேத்தவை – வேந்தனாகிய இராவணனின் அவையில் உள்ளோர்;
‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் – கீழ் உள்ளவர்கள்
கீழ்மையே செய்தார்கள்; மேலோர் சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே
செய்தார் என்ன – மேலுள்ளவர்கள் சிறந்தவர் செய்யத்தக்க
நற்செயலையே செய்தார்கள் என்று புகழுமாறு; மணிகோத்த
மேகலையினோடும் துகில் குறங்கைக் கூட – மணிகள் கோத்துள்ள
மேகலையினோடு இடையில் அணிந்துள்ள துகில் அவிழ்ந்து
அற்றங்காட்டித் துடையை அடைய; அத்தன்மை கண்டு கூந்தற்
கற்றை அற்றம் காத்தன – அத்தன்மை கண்டு (தலை மேலுள்ள)
கூந்தல் திரள் அவிழ்ந்து வீழ்ந்து அவர் அற்றத்தை மறைத்துக்
காத்தன.
—————–
பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட
நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் – அனங்க வேள்தன்
தூணியின் அடைத்த அம்பின் கொடுந் தொழில் துறந்த கண்ணார். 10
———-
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்,
சங்கை இல் பெரும் பாண் உற்ற துறைதொறும் திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன,
வெங் குரல் மடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க. 11-
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் –
புல்லாங்குழல் வழங்கும் இன்னிசை தன்னிடம் விளங்குகின்ற மழலைச்
சொல்லைப் பேசும் வாயினை உடைய மகளி்ர்; மயக்கம் வீங்க
– மயக்கம் ஏற்பட்டதனால்; சங்கையில் பெரும்பாண் உற்ற
நிறத்துறை நிரம்பித்தள்ள – குற்றமற்ற பெரும் பாணர்கள்
கண்டறிந்த விளக்கமானதுறை மிக்கு மாறுபட்டுப்போக; சிங்கல் இல்
அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – சுவை குன்றாத
இனிய அமிழ்தத்தோடு புளிப்புச் சுவை விரவிய கள்ளினைக்
கலந்தாற்போல; வெங்குரல் எடுத்தபாடல் விளித்தனர் – கடுங்குரல்
எடுத்துப்பாடும் பாடலைப் பாடினர்.
——————
8830. ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன,-
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை
சான்றோர்,-
மான் அவர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி, தேரை அபிநயத்து இயற்றி உற்றார்.–12-
கண்டார்க்கு இந்திர சாலம் என்ன – (தம் அபிநயத்தைக்)
கண்டோர்க்கு இந்திர சாலவித்தை போலத்தோன்றும்படி; ஏனைய
பிறவும் தான் அவை உருவில் தோன்றும் – தாமல்லாத பிற
உயிர்களாகிய அவையும் தம் உருவில் தோன்றுமாறு; பாவனைத்
தன்மை சான்றோர் – நடிக்கும் பாவனைத் தன்மை மிக்கோராகிய
நாடக மகளி்ர்; மான் அமர் நோக்கினாரை மைந்தரைக்காட்டி –
மான் போன்ற கண்ணினை உடைய பெண்டிரையும ஆடவரையுங்
காட்டி, (சைகையால் அவர்களைப் போல் அபிநயிக்கப் போவதாகக்
குறித்து); வாயால் ஆனையை விளம்பி தேரை அபிநயித்து இயற்றி
உற்றார் – (அதைமறந்து) வாயினால் ஆனையைக் காட்டப் போவதாகக்
கூறிவிட்டு (அதையும் மறந்து) அபிநயிக்கும்போது தேரை
அபிநயித்துக் காட்டினார்கள்.
—————
8831. அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய்
இன் தேன்
ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர்.–13-
அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; – (கள்ளுண்டமயக்கத்தால்)
அழுவார்கள்; பின்பு உடனே சிரிப்பார்கள்; பின்பு விரும்பியாங்கு
பாடிக்கொண்டு ஆடுவார்கள்; அயல் நின்றாரைத் தொழுகுவர்
துயில்வர்; துள்ளித்தூங்குவர் – பின்பு அருகில் நின்றவர்களைக் கை
கூப்பித் தொழுவார்கள்; உடனே உறங்குவார்கள்; உடனே துள்ளி
எழுந்து சோர்வார்கள்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர் ஒல்கி ஒல்கி
ஒருவர் மேல் ஒருவர்புக்கு முழுகுவர் – சிவந்தவாயில் உள்ள இனிய
தேன் போன்ற உமிழ்நீரை ஒழுகவிடுவர், உடனே தளர்ந்து தளர்ந்து
ஒருவர்மேல் ஒருவர்புகுந்து படிவார்கள்; குருதி வாட்கண் முகிழ்த்து,
இடை, மூரிபோவர் – இரத்தம் போன்று சிவந்த ஒளி வாய்ந்த
கண்ணை மூடிக்கொண்டு நெட்டை முரிப்பார்கள்.
————-
8832. உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், ‘உள்ளத்து
உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே; அது களியாட்டம் ஆக,
செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை
முனிவர்க்கேயும்,
மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தது, காம வாரி.–14-
‘உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே – ‘எம்
உள்ளத்தி்ல் உள்ள கருத்து (புணர்ச்சி விருப்பமே என்பது)
தெளிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்’ என்று; உயிர்ப்புறத்து
உற்றதன்மை உணர்த்தினார்கள் – தம் உடம்பில் பொருந்திய
செய்கையால் அப்பெண்கள் உணர்த்தினார்கள்; அது களியாட்டம்
ஆக – அக்குறிப்பு களியாட்டமாக வெளிப்பட; செயிர்ப்பு அறு
தெய்வச் சிந்தைத் திருமறை முனிவர்க்கேயும் – காமவெகுளி
மயக்கங்களின் நீங்கிய சிந்தையரான தெய்வத் தன்மை பொருந்திய
சிறந்த வேதமுணர்ந்த முனிவர்க்கும்; மயிர்ப்புறம் தோறும் வந்து காம
வாரி பொடித்தது – மயிர்க்கால் தோறும் காம உணர்ச்சியாகிய
வெள்ளம் தோன்றியது.
—————
8833. மாப் பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங் குவளை வாட் கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் கிடை வெண்மை சேர,
காப்பு உறு படைக் கைக் கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி
காட்டி,
பூப் பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர் தன்மை
போன்ற.–15-
மாப்பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங்குவளைவாட்கண் –
வண்டு பிறழ்வது போன்ற நோக்கத்தை உடைய கள்ளுண்ட
பெண்டிர்தம்கரிய நீண்ட குவளை மலர் போன்ற ஒளி பொருந்திய
கண்கள்; சேப்புற அரத்தச் செவ்வாய்ச் செங்கிடை வெண்மை
சேர – சிவக்கப்பெற்ற தன்மையும் செங்கழு நீர் மலர் போன்ற சிவந்த
வாயாகிய செங்கிடை வெண்ணிறம் சேரப் பெற்ற தன்னையும்;
கைப்படை காப்புஉறு கள்வநிருதர்க்கு ஓர் இறுதி காட்டி
– (அறத்தையன்றி) தம்கையகத்துள்ள படைக்கலன்களையே
காவலாகக் கொண்ட வஞ்சகராகிய அரக்கர்க்கு நேரவிருக்கின்ற
ஓரழிவினை முன்னர்த் தெரிவித்து; பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப்
பொலிந்தது ஓர்தன்மை போன்ற – மலர்கள் வேறுபட்டு வண்ணம்
வேறாக விளங்கியதோர் தன்மை போன்று தோன்றின.
—————–
8834. கயல், வரு காலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும்,
இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென்
கொங்கைத்
துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி,
புயல் வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார்.–16-
கயல் வருகாலன்வைவேல் காமவேள்கணை என்றாலும் –
கெண்டை மீனும், உயிரைக் கொள்ளவருகின்ற எமன் கையிலுள்ள
கூரிய வேற்படையும், மன்மதனுடைய கணையும் என உவமை
கூறினும்; இயல் வருகிற்கிலாத நெடுங்கணார் – ஒப்பமை
அமையாத நீண்ட கண்களையுடைய பெண்கள்; இணைமென்
கொங்கைத் துயல்வருகனக நாணும் காஞ்சியும், துகிலும் – தம்
இணையான மென்மை பொருந்திய தனங்களின் மேல் அசைகின்ற பொன் சரட்டையும், மேகலையையும், புடவையையும்;
வாங்கி, புயல்வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார் – கையில்
வாங்கி மேகம் போன்ற கூந்தலாகிய கனமுடைய கற்றையில் அணியத்
தொடங்கினார்கள்.
————-
வானரர் ஆர்ப்பொலியும் அதன் விளைவும்
8835. முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல்
நல்லார்,
இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை,
அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை
மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே.–17-
முத்து அன்மை மொழியில் ஆகா முகிழ் இளமுறுவல் நல்லார்
– முத்து அல்ல எனக்கூறமுடியாத (முத்துக்களே எனத்தகும்) பற்கள்
தோன்ற முகிழ்க்கின்ற புன்முறுவலையுடைய பெண்கள்; இத்தன்மை
எய்த நோக்கி அரசு வீ்ற்றிருந்த எல்லை – கள் மயக்கத்தால்
இத்தன்மை அடைதலை விருப்பத்தோடு நோக்கிக் கொண்டு
(இராவணன்) அரசு வீற்றிருந்தபோது; அத்தன்மை அரியின் சேனை
ஆர்கலி ஆர்த்த ஓசை – அங்ஙனம் (அனுமான் கொணர்ந்த
மருந்தால்) உயிர் பெற்றெழுந்த வானரசேனையாகிய கடல் ஆரவாரித்த
ஓசை;மத்தன் மெய்மயங்க வந்து செவிதொறும் மடுத்தது –
காமமயக்கம் கொண்ட அவ்விராவணன் உடல் தளருமாறு வந்து
அவன் செவிகள் தோறும் நுழைந்தன.
—————–
8836. ஆடலும், களியின் வந்த அமலையும், அமிழ்தின் ஆன்ற
பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும்,
எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த-ஆர்ப்பு ஒலி வருதலோடும்.–18-
பவளவாயார் ஆடலும், அமிழ்தின் ஆன்ற பாடலும் – பவளம்
போன்ற வாயினை உடைய பெண்களின் ஆடலும், அமுதினும்
இனிதாய் அமைந்த அவர் பாடலும்; முழவின் தெய்வப்பாணியும் –
அப்பாடலுக்கேற்ற மத்தளத்தின் தெய்வத்தன்மை வாய்ந்த ஓசையும்;
களியின் வந்த அமலையும் – அவற்றைக் காண்போரின் களிப்பால்
வந்த ஆரவாரமும்;ஊடலும், கடைக்கண் நோக்கும் – (அம்மகளிர்
மீது ஆசை கொண்டு நோக்குவோர்க்கு அம்மகளிர் காட்டும்) ஊடலும்,
(அவ்வூடலால் அவ்வாடவர் வருத்தம் கண்டு இரங்கி அம்மகளிர்தம்
இசைவைத் தெரிவிக்கும்) கடைக்கண் நோக்கமும்; மழலைவெவ்
உரையும் எல்லாம் – அவ்வாடவரிடத்து அம்மகளிர் பேசும் காம
வெப்பத்தை மிகுவிக்கும் மழலைத் தன்மையுடைய உரையும் ஆகிய
அனைத்தும்;ஆர்ப்பு ஒல வருதலோடும் வாடல் மென்மலரே ஒத்த
– வானரர்தம் ஆரவாரப்பேரொலி வந்தவுடன் வாடிய மலர்போலப்
பொலிவழிந்து போயின.
—————
8837. தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க,
துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க,
செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே-
எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன.–19-
தறி பொருகளி நல்யானை சேவகம் தள்ளி ஏங்க –
கட்டுத்தறியையும் முறிக்கின்ற மதக்களிப்பினையுடைய நல்ல
யானைகள் தாம் படுத்த விடங்களில் திடுக்குற்று வருந்தவும்; துறுசுவல்
புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க – நெருங்கிய பிடரி
மயிரினை உடைய குதிரைகள் துணுக்குற்றுச் சோரவும் காலாள்
வீரராகிய அரக்கர்கள் அஞ்சவும்; ஏறிகடல் கடைந்த மேல்நாள்
எழுந்தபேர் ஓசை என்ன – அலைகள் வீசுகின்ற பாற்கடலைக்
கடைந்த முந்காலத்து எழுந்த பேரொலி போல; செறிகழல் இருவர்
தெய்வச் சிலை ஒலி பிறந்தது – வீரக்கழல் அணிந்த
இராமஇலக்குவரின் தெய்வத்தன்மை வாய்ந்த வில்லினின்றும் நான்
ஒலி பிறந்தது. அன்றெ – அசை.நிலையும்” (தொல்-பொருள். புறத்12) இதற்கு, “குதிரையானன்றித்
தேர்தானே செல்லாமையின் தேர்க்கு மறம் இன்றென்று அது
கூறாராயினர்” என்ற நச்சினார்க்கினியர் குறிப்பும் இங்கு காணத்தகும்.
————
8838. முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண்
வேலால்
குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற,
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும்,
பைய.–20-
முழுக்கண் வேலால் குத்துவார் – இலக்கணம் முழுமையும் பெற்ற
வேற்படைபோன்ற கண்களால் குத்துகின்றவர்களாகிய; முத்துவாள்
முறுவல் மூரல் முகத்தியர் கூட்டம் எல்லாம் – முத்துக்களைப்
போன்ற பற்களைக் காட்டி ஒளி பொருந்திய சிரிப்பினைச் சிந்துகின்ற
நகைமுகத்தினை உடைய களியாட்டு மகளிர் கூட்டமெல்லாம்;
வானரக்குழுவின் தோன்ற – இப்போதுவானரக்கூட்டம் போல
(வெறுக்கத்தக்கனவாகத்) தோன்றவும்; மத்துவார்கடலின் உள்ளம்
மறுகுற – மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பெற்ற கடலைப்போல
உள்ளம் கலங்கவும்; வதனம் என்னும் பத்துவாள் மதிக்கும் –
இராவணனது முகம் என்கின்ற பத்து ஒளி வாய்ந்த மதிகளுக்கும்
அந்நாள் பகல் ஒத்தது இரவும் பைய – அந்நாள் இரவு
(பொலிவழியச் செய்த) பண்பினால் பகலை ஒத்தது.
————
8839. ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போய்
ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற
எல்லாம்;
‘தீதுஇலர், பகைஞர்’ என்ன, திட்கென்ற மனத்தன்,
தெய்வப்
போது உகு பந்தர்நின்று, மந்திரத்து இருக்கை புக்கான்.–21-
ஈது இடைஆக வேய்கள் வண்டின் உருவினார் வந்தார் –
இந்நிகழ்ச்சிக்கு இடையே ஒற்றர்கள் வண்டின் உருவம் உடையவராய்
வந்து;அலங்கல் மீது ஏறினார்போய் உற்ற எல்லாம் ஊதினார் –
இராவணன் மாலைமீது ஏறிப் போய்ப் போராட்டத்தில் நிகழ்ந்த
எல்லாவற்றையும் (அவன் செவியில்) கூறியவர்களாய்; ‘பகைஞர் தீது
இலர்’ என்ன திட்கென்ற மனத்தன் – ‘பகைவர்கள் மரணமென்னும்
தீது இலராயினர்’ என்று கூற ‘திக்’கென்ற மனத்தனாகிய இராவணன்;
தெய்வப்போது உகுபந்தர் நின்று மந்திரத்து இருக்கை புக்கான் –
கற்பகம் முதலிய தெய்வமலர்கள் சிந்துகின்ற பந்தலில் இரந்து
ஆலோசனைக்குரிய மண்டபத்தில் புகுந்தான்.
—————
மிகைப் பாடல்கள்
வடித்திடும் அமுதத் தேறல் மாந்தினர் எவரும்; உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி; பிறந்தது காம வேகம்;
எடுத்தனர், மகர யாழின் இன் இசை இனிமையோடு;
நடித்தனர், நங்கைமார்கள் நாடகத் தொகையின் பேதம். 3-1
—————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply